ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 21
–சி. ஜெயபாரதன்.
(1883-1931)
ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்
மூலம் : கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
நமது பூமி
நமது பூமி
____________________________
“முடங்கிக் கிடக்கும் பேரளவு அறிவை விடப் பயன்படும் சிறிதளவு அறிவு பெருமளவு தகுதி உடையது.”
“தூரத்தில் உள்ள ஒரு நண்பன் அருகில் இருக்கும் ஒருவனை விட மிக நெருங்கி இருக்கிறான். வெகு தொலைவில் காணப்படும் மலைச் சிகரம் அண்டைப் பள்ளத்தாக்கில் உள்ளதை விடத் தெளிவாகத் தெரிவதில்லையா ?”
கலில் கிப்ரான்.
___________________
நான் இல்லையேல் நீயில்லை புவியே
___________________
பரிதி ஒளி பழுக்க வைத்த
ஒரு கனியா நீ ?
நித்தியத்தில்
நீடித்த
நிலைப் பாட்டில்
கிளைகள் ஓங்கி உயர்ந்த
தனித்துவ ஞானத்தில்
முளைத்த மரமா நீ ?
___________
அண்ட வெளித் தளத்தின்
உள்ளங் கையில்
காலக் கடவுள் வடித்த
மேலான மணிக் கல்லா நீ ?
___________
யார் நீ புவியே ?
யார் நீயெனச் சொல் ?
“நான்” என்னும் புவியே
நீதான் !
____________
என் கண்ணொளி நீ !
என் தெளிவுத் தீர்மானம் நீ !
என் கனவு நீ !
என் அறிவு நீ !
என் வயிற்றுப் பசி நீ !
என் தாகம் நீ !
என் சுகம், துக்கம் நீ !
என் வெறுப்பில் லாமை நீ !
என் விழிப்புணர்ச்சி நீ !
என் கண்ணில் வசிக்கும் எழில் நீ !
என் இதய வேட்கை நீ !
என் ஆத்மாவில் நீடிக்கும்
நித்திய வாழ்வு நீ !
_____________
“நான்” என்னும் புவியே
நீதான் !
என் வசிப்பு இல்லா தாயின்
இங்கே தோன்றி யிருக்க
மாட்டாய் நீ !
_____________