Blog

  • நவராத்திரி நாயகியர்   (3)

    திருவானைக்கோவில் – அகிலாண்டேஸ்வரி

     

    நீரினில் சிலையெடுத்து

    நீலகண்டன் அருள்பெற்று

    சிவஞானம் கேட்டறிந்த

    சிவகாம சுந்தரியே !

     

    தாடங்கம் காதணிந்து

    தந்தமுகனை முன்கண்டு

    தாயன்பைத் தரணிக்குத்

    தந்தருளும் தயாநிதியே !

     

    தாம்பூலம் வாயில் தந்து

    தமிழினிலே சொல் தந்து

    காளமேகம் கவி சொல்லக்

    காவியம் படைத்தவளே !

     

    திருநீறுச் சித்தனவன்

    திண்ணமுடன் மதில்கட்ட

    திருக்கோயில் கொண்டவளே

    திருவரங்கன் சகோதரியே !

     

    பாலுண்ணும் குழந்தைகூடப்

    பாட்டெடுக்கும்  உனைக்கண்டால் !

    பள்ளியறை செல்லாத உன் காதல்

    பாடிடவே நாள்முழுதும் நவராத்திரி!

     

    காவிரி நதியினில் நீராடிக்

    கரையினில் வாழ்ந்திடுமுனைப் பாடிக்

    கலங்கிடும் நெஞ்சங்கள் பல கோடி,

    காத்தருள்,  தாயே!  நீ வாழி !

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 19

    – புலவர் இரா. இராமமூர்த்தி.

    திருவள்ளுவர் தம் திருக்குறளில் ஒரு குறிப்பிட்ட சொல்லையோ, தொடரையோ அடிக்கடி பயன் படுத்துவார்!

    அவற்றுள் நன்றி என்ற சொல் அறம் என்ற பொருளிலும் (97, 110, 117), உதவி என்ற பொருளிலும்(102, 104), நன்மை என்ற பொருளிலும் (108) வந்துள்ளது!

    அடுத்து, நன்று என்ற சொல், அறம் என்ற பொருளிலும்(38), நன்மை என்ற பொருளிலும்(108), அருள் என்ற பொருளிலும் (253), இன்பம் என்ற பொருளிலும் (328), வந்துள்ளது!

    அடுத்து, நயன் என்ற சொல், ஒப்புரவு என்ற பொருளிலும்(216), நீதி என்ற பொருளிலும்(97), அன்புள்ள செயலென்ற பொருளிலும்( 103), விருப்பம் என்ற பொருளிலும்(192) வந்துள்ளது!

    இவ்வாறே ஆற்றல் என்ற சொல், ஒத்தல் என்ற பொருளிலும்(101), வலிமை என்ற பொருளிலும் (225), பெருமை என்ற பொருளிலும்(287) வந்துள்ளது! இருள் என்ற சொல், அவிச்சை (5) , மயக்கம் (227), நரகம் (122), இழிபிறப்பு (352) என்ற பொருள்களில் வந்தது!

    இவ்வாறே சிறப்பு என்ற சொல், காரணத் திருவிழா (18), மோட்சம், வீடு (31, 358), துறக்கவின்பம் (75), யோகம் (313) ஆகிய பொருள்களில் வந்துள்ளது!

    இவ்வாறே பல சொற்களை நாமே கண்டறியலாம்!

    ஒருவர் நம்மிடம் ஒரு வினாவை வினவும்போது, நாம் நன்றாக அறிந்த விடையைத் தயக்கமின்றிச் சொல்வோம்! இத்தகைய வினாக்களையும், விடைகளையும் தமிழ் இலக்கணம் வரையறை செய்துள்ளது! வினாவகைகள் ஆறு என்றும், விடை வகைகள் எட்டு என்றும், நன்னூல் கூறுகிறது. நாம் வினவும் வினாவையே மீண்டும் நம்மிடம் கேட்பது போன்ற திருக்குறட்பாக்கள் சில உள்ளன! யானறிந்த வகையில் ஒன்பது குறட்பாக்களில், வினாவியவரையே வினாவும் அமைப்பு உள்ளது இவற்றுள் ஒரு குறட்பாவை விளக்கும் முயற்சியில் புதிய அணுகுமுறை புலப்பட்டது!

    ”வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    தீமை இலாத சொலல்”(291)

    என்பதே அந்தத் திருக்குறள்! இந்தத்திருக்குறள் வாய்மை என்ற உண்மை பேசுதல் குறித்த விளக்கத்தை அளிக்கிறது ஒரு சுவையான நிகழ்ச்சியை இத்துடன் சேர்த்து விளக்கலாம்! திருவள்ளுவரிடம் ஒருவர் வினா விடுப்பதாகவும், அவர் அதற்கு விடையளிப்பதாகவும் இந்தத் திருக்குறளுக்கு விளக்கம் கூறுவர்! அடியேன் குருநாதர், திருச்சி தேசியக்கல்லூரிப் பேராசிரியர் இரா.இராதாகிருஷ்ணன் கூறும் விளக்கமும் இப்படித்தான் அமைந்தது!

    அவர் இதனை விளக்கிக் கூறுகையில், ஒரு சிறுவனிடம் ”எட்டெட்டு எத்தனை?” என்று கேட்டால், அவனுக்கு உடனே விடை புலப்படாது! அவன் சற்றே தயங்கி, ஒரெட்டு எட்டு, ஈரெட்டு பதினாறு … என்று தனக்குள்ளேயே பெருக்கல் வாய் பாட்டைச் சொல்லிப் பார்ப்பான்! இடையில் அவன் நம்மிடமே ”எட்டெட்டுதானே?” என்று கேட்டுக் கொண்டு, சற்று நேரம் எடுத்துக் கொண்டு, மனத்துக்குள் எட்டெட்டு அறுபத்துநான்கு என்ற விடை வந்தவுடன், நம்மிடம் அறுபத்துநான்கு என்று சொல்லி மகிழ்வான்!” என்பார்! அவரே, இந்தச் சிறுவன் தனக்குப் புலப்படாத விடையைக் கூறுமுன் மனத்துக்குள் நினைத்துப் பார்த்து , நம்மையே கேட்டுக்கொண்டு, விடை கூறுவது போல், திருவள்ளுவரும், ”வாய்மை எனப்படுவது யாது?” என்று ஒருவன் கேட்டபோது, அதே வினாவை அவனிடம் மீண்டும் கேட்பது போல்,”வாய்மை எனப்படுவது யாது, எனின்” என்று வினவியபின், விடைதருகிறார்!” என்று விளக்கினார்!

    அதாவது, திருவள்ளுவர், ”வாய்மை என்றால் என்ன?” என்ற வினாவுக்கு, உண்மை பேசுதல் என்ற நேரான விடையைக் கூறிவிடலாம்! அவ்வாறு கூறாமல் சிந்திக்கிறார்! அவர் அந்த வினாவைக் கேட்டவரிடமே மீண்டும் கேட்கிறார்! ”வாய்மை என்றால்”, என்பதை ”வாய்மை எனப்படுவது” என்று சற்றே விரிவாக்கிக் கேட்கிறார்! வாய்மை எனப்படுவது என்ற தொடரில்,” வாய்மை என்று சான்றோரால் சிறப்பித்துச் சொல்லப்படுவது” என்ற புதிய பொருளுணர்ச்சியைக் கொள்கிறார்! அவ்வாறாயின், வாய்மை என்ற சொல்லினை விட, வாய்மை எனப் படுவது என்ற தொடருக்கு வேறுபட்ட பொருள் இருக்க வேண்டும்! அப்பொருள், திருவள்ளுவர் கூறும் மாறுபட்ட விடையினால் நமக்கு விளங்குகிறது! உண்மை பேசுதலே வாய்மை! எல்லாரும் அறிந்த இதனையே ஒருவன் வள்ளுவரிடம் வந்து கேட்கிறான் என்றால், அதற்குக் காரணம் இருக்க வேண்டும்! என்று சிந்திக்கிறார்!

    ஒரு பெண்ணைக் காமவெறி பிடித்த ஆண்மகன் தொடர்ந்து வந்து துரத்துகிறான்! அந்தப் பெண் விரைந்தோடித் தப்பி விடுகிறாள்! அங்கே வழியில் சான்றோர் ஒருவர் அமர்ந்திருக்கிறார்! அவரிடம் இக்கயவன், ”இங்கே ஒரு பெண் ஓடிவந்தாளே, அவளைப் பார்த்தீர்களா?” என்று கேட்டான். அவரும் ”ஆமாம் பார்த்தேன்” என்கிறார்! ”அவள் எந்தப்பக்கம் சென்றாள் ?” என்று கேட்கிறான். அவன் தோற்றத்தையும், ஓடிவந்த பெண்ணின் அச்சத்தையும் புரிந்து கொண்ட அவர், உண்மையை அப்படியே கூறுவதால் தீமை உண்டாகி விடுமே? என்று கருதுகிறார்! அவர் அந்தச் சூழ்நிலைக்கேற்ற வகையில் உண்மையைக் கூறத் தயங்கி அவனுடைய தீய எண்ணம் பலிக்காத வகையிலும், அந்தப் பெண்ணுக்குத் தீங்கு நேராத வகையிலும் வேறுதிசையைக் காட்டி அவனைத் திசை திருப்பி விடுகிறார்!

    இந்த வகையில்தான் திருவள்ளுவர் நேரான விடை கூறத் தயங்கி, நன்கு சிந்தித்து, ”தீமை பயவாத சொற்களைச் சொல்லுதலே வாய்மை!” என்கிறார்! அதனால் திருக்குறளுக்குப் புதிய கோணத்தில் விளக்கம் கிட்டிவிடுகிறது! உள்ளதை உள்ளவாறே பேசுவதாலும் தவறு நிகழ்ந்து விடலாம்! இதனை வள்ளுவர் நன்கு சிந்தித்தே இயற்றியுள்ளார் என்பதை அடுத்த குறட்பாவில்,

    ”பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கும் எனின்!” (292)

    என்று கூறுவதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்! புரைதீர்ந்த நன்மை பயக்கும் என்றால் மட்டுமே பொய்மை, வாய்மையின் இடத்தினைப் பெறுமென்ற சீரிய சிந்தனை, இதற்கு முதற்குறளில் ”யாதெனின்” என்ற வினாவால் நமக்குப் புலப்பட்டு, புதிய விளக்கத்தினை நமக்கு அளிக்கின்றது!

    இவ்வாறே, ”யாதெனின்” என்ற வினா அமைந்துள்ள 178, 254, 321, 789, 831, 844, 986,1041 ஆகிய குறட்பாக்கள், புதிய சிந்தனையுடன் அமைந்திருப்பதை அன்பர்கள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டுகிறேன்!

    Share
  • வளவன் கனவு (20)

    சு. கோதண்டராமன்

    20 வீரரும் சிற்பியும்

    vallavan-kanavu12

    இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா

    றிதுவன்றே என்றனக் கோர் சேமம்- இதுவன்றே

    மின்னுஞ் சுடருருவாய் மீண்டொயென் சிந்தனைக்கே

    இன்னுஞ் சுழல்கின்ற திங்கு.

    -அம்மையார்

    மயிலாடுதுறையில் காவிரிக்கரையில் ஒரு சத்திரம். விடியற்காலை. அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஒரு இளைஞன் எழுந்து வெளியே வந்தான். சுக்கிரன் உதயமாகிவிட்டதா என்று கிழக்கு திசையைப் பார்த்தான். நிலம் தெளிந்துவிட்டது, புறப்படவேண்டியது தான் என்று உறுதிசெய்து கொண்டவனாக மீண்டும் தான் படுத்திருந்த இடத்திற்கு வந்தான். அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு சிறு துணி மூட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான்.

    “தம்பி, வடக்குப் பக்கம் போறீங்களா?” என்று ஒரு குரல் வந்தது. திண்ணையில் படுத்திருந்த ஒருவர் கூப்பிட்டார். “ஆமாங்க” என்றான் இளைஞன். “கொஞ்சம் இருங்க, நானும் வரேன். சேர்ந்து போகலாம்” என்றார் அவர்.

    எழுந்தார், தரையில் விரித்திருந்த துண்டை உதறினார், முண்டாசாகக் கட்டிக்கொண்டார். “சரி, வாங்க போவோம்” என்றார்.

    இருவரும் வடக்குத் திசை நோக்கிப் புறப்பட்டனர்.

    “தம்பி, எங்கே கொள்ளிடம் தாண்டியா, முன்னாடியா?”

    “நான் காஞ்சிபுரம் வரைக்கும் போகணுங்க. தில்லையிலே இரண்டு நாள் தங்கிட்டு அப்புறம் போகலாம்னு இருக்கேன்.”

    “சொந்த ஊரு காஞ்சிபுரமா அல்லது இந்தப் பக்கமா?”

    “காஞ்சிபுரம் பக்கம் தாங்க சொந்த ஊரு. சிராப்பள்ளியிலே மூணு  வருசமா வேலை. இப்போ அது முடிஞ்சு வீட்டுக்குப் போறேங்க. தில்லையிலே புதுசா ஒரு உலோகச் சிலை செஞ்சிருக்காங்களாம். ரொம்ப ஒசத்தியா இருக்குன்னு பேசிக்கிட்டாங்க. அதைப் பார்க்கலாமின்னு தான் போறேன்.”

    “உண்மை தான் தம்பி. நானும் அந்த ஆடலரசனைப் பார்க்கத்தான் போறேன். என்ன வேலை பாக்கிறீங்க?

    “சிற்பிங்க. சிராப்பள்ளியிலே ஒரு பெரிய பாறை இருக்குங்க. அதிலே ரெண்டு இடத்திலே குடைஞ்சு அங்கே சிற்பம் செதுக்கினோங்க. என்னைப் போல இன்னும் இருபது பேர் வேலை செஞ்சாங்க. “

    “யாரு ஏற்பாடு சோழராசாவா, பல்லவ ராசாவா?”

    “சோழராசா கேட்டுக்கிட்டாராம். அதன் பேரிலே பல்லவ ராசா எங்களை அனுப்பிச்சு வேலை செய்யச் சொன்னாரு. சோழநாட்டிலே கருங்கல் வேலை தெரிஞ்ச சிற்பிகள் இல்லையாமே? நாங்க ஒரு இருபது பேருக்குப் பயிற்சி கொடுத்தோம்.“

    “உண்மைதான் தம்பி. இங்கே எல்லாம் சுதை வேலை தான்.

    “அண்ணன் இந்தப் பக்கத்து ஆளுங்களா?”

    “ஆமாம் தம்பி. நான் சோழநாட்டுக்காரன். ராசா இருக்காரே பழையாறை அங்கே தான் வீடு இருக்கு. படையிலே முப்பது வருசம் இருந்தேன். வயசாயிட்டுது. போதும்னுட்டு இப்போ விவசாயத்தைக் கவனிச்சிக்கிட்டு இருக்கேன். “

    “நிறைய சண்டையெல்லாம் போட்டிருப்பீங்க?”

    “ஆமாம் தம்பி. சின்ன வயசிலே என்னை உறையூருக்கு அனுப்பிச்சாங்க. அதிலேருந்து அங்கேயே இருந்துட்டேன். இப்போ பழையாறையிலே ராசா இருக்காரே, புண்ணிய வளவன் அவரோட தம்பி புகழ் வளவன் உறையூரிலே இருந்தாரு. அவரோட தலைமையிலே கருவூருக்குப் போய்ச் சண்டை போட்டு ஜெயிச்சோம். களப்பிர மன்னர்களை ஒவ்வொருத்தரா ஜெயிச்சு சேரநாடு முழுக்க சோழராசாவுக்குச் சொந்தமா ஆயிடிச்சி.”

    “கடைசியா எப்போ போருக்குப் போனீங்க?”

    “கடைசியா நாலு வருசம் முந்தி. உறையூர் புகழ்ச்சோழ ராசா கப்பம் கட்டாத சின்ன ராசாவோட எல்லாம் சண்டை போட்டுக் கப்பம் கட்ட வெச்சாரு. அதிலே பாருங்க, மலையரண் அப்படின்னு ஒரு சின்ன குறுநிலம். அதிலே அதிகன்னு ஒருத்தரு இருந்தாரு. அவரு கப்பம் கட்டமாட்டேன்னு சொன்னதிலே சோழராசாவுக்குக் கோவம் வந்து, “அவன் நாட்டுக்குள்ளே புகுந்து எதிரிப் படை வீரர்கள் தலையை வெட்டிக் கொண்டுவாங்க”ன்னுட்டார். நாங்களும் போனோம். தலைகளைக் கொண்டுவந்து ராசா காலடியிலே வெச்சோம். ஒண்ணு ஒண்ணாப் பார்த்துக்கிட்டே வந்தாரு. ஒரு தலையிலே   சடை முடி இருந்தது. ராசாவுக்கு மனசு கலங்கிப் போச்சு. இது சிவனடியாரா இருக்குமோன்னு நினைச்சாரு. ஐயோ தப்புப் பண்ணிட்டேனேன்னு கதறினாரு. மந்திரியைக் கூப்பிட்டு, “என் பிள்ளைக்கு முடி சூட்டுங்க. நான் இனிமே உயிர் வாழ விரும்பல்லை”ன்னு சொல்லித் தீ வளர்த்து அதிலே இறங்கிட்டாருங்க.* நாம் செய்த தப்புக்கு அவரு உயிரை விடும்படியா ஆயிடிச்சேன்னு எங்களுக்கெல்லாம் ரொம்பக் கஷ்டமாயிடிச்சி.  அதுவே கடைசியா இருக்கட்டும்னு நான் படையிலேருந்து விலகிட்டேன்.”

    “படைவீரர்களைத்தானே நீங்க கொன்னீங்க? சும்மா இருந்த சிவனடியாரைக் கொல்லல்லியே?”

    “படைவீரர் தான். எதிரியா இருந்தாலும் சிவனடியாரைக் கொல்லக் கூடாதுங்கிற அளவுக்கு ராசாவோட சிவபக்தி இருந்தது.”

    “அப்படித்தாங்க எங்க பல்லவ நாட்டிலே காளத்திங்கிற ஊரிலே மலை மேலே லிங்க வடிவிலே ஒரு பாறை இருந்திச்சு. அதை சிவலிங்கமா நினைச்சு ஒரு ஐயர் பூசை பண்ணிக்கிட்டு இருந்தார். அதைப் பார்த்துட்டு ஒரு காட்டு வேடன் தானும் பூசை பண்றேன்னு ஆரம்பிச்சாருங்க. ஒரு நாளைக்கு சாமி கண்ணிலேருந்து ரத்தம் வருதுன்னு சொல்லி தன் கண்ணையே புடுங்கி அப்பிட்டாருங்க.” *

    “அதே மாதிரி பாருங்க. புகழ்த்துணையார் என்கிறவர் சோழநாட்டிலே செருவிலிபுத்தூர் என்ற ஊரிலே இருந்தாரு. அப்போ அந்த ஊரிலே பஞ்சம் வந்தது. எல்லாரும் ஊரை விட்டு வெளியூருக்குப் போயிட்டாங்க. அவர் பசியில் வாடினார். நானும் ஊரை விட்டுப் போயிட்டா கோயில்லே உள்ள சாமி பட்டினி கிடப்பாரேன்னு அங்கேயே இருந்தார். ஒரு நாள் பசியிலே  மயக்கம் வந்து லிங்கத்தின் தலைமேலேயே திருமஞ்சனக் குடத்தைப் போட்டுட்டு விழுந்தார். *

    “இதே சோழநாட்டிலே சண்டேசர்னு ஒருத்தர். மாடு மேய்ச்சுக்கிட்டிருந்த அவர் மணல்லே லிங்கம் செஞ்சு பூசை பண்ணிக்கிட்டு இருந்தாரு. மாட்டுப் பாலை எல்லாம் அதுக்கு அபிஷேகம் பண்ணிட்டாரு. அதனாலே அவங்க அப்பாவுக்குக் கோவம் வந்து அந்த மணல் லிங்கத்தை கலைச்சுட்டார். சண்டேசர் என்ன செஞ்சார் தெரியுமா? அரிவாளை எடுத்து வந்து அப்பா காலையே வெட்டிட்டாரு.”*

    “பக்தி மிகுதியாலே இவங்க  சாதாரண சனங்க செய்ய முடியாத வேலையைச் செஞ்சு புகழ் அடைஞ்சுட்டாங்க.”

    “இங்கே காழிலே ஆழிப்பேரலை வந்தபோது இளம் புள்ளைங்க எல்லாம் தென்னைமர உச்சியிலே லிங்கத்தைக் கொண்டு வெச்சுக்கிட்டு இருந்தாங்க. எல்லாரும் உசிரு போனாலும் இந்த லிங்கத்தைக் காப்பாத்தியே தீருவோம்னு புடிவாதமா இருந்தாங்க. நல்ல காலம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. அதிலே தொடங்கி சனங்க லிங்கத்தையே கடவுளா நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒசந்த பக்தர்களுக்கு இது சரி. ஆனா சாதாரண சனங்களுக்கு இது சரி வராது தம்பி. அடையாளம் அடையாளமாத் தான் இருக்கணும். அதுக்கு ஒரு எல்லை உண்டு. அடையாளத்தையே கடவுளா நினைச்சா, உண்மையான கடவுளை மறந்துடுவாங்க. பிற்காலத்திலே பல அடையாளங்களுக்கு இடையிலே சண்டை பூசல் வரும். “

    “புரியல்லீங்களே.”

    “கடவுளுக்கு லிங்கம்ங்கிறது ஒரு அடையாளம். இப்போ புதுசா வந்திருக்கிற ஆடலரசன் சிலை ஒரு அடையாளம். படுத்திட்டிருக்கிற கோவிந்தராசா சிலையும் அதே கடவுளுக்கான இன்னொரு அடையாளம். அடையாளத்தையே கடவுளா நினைச்சா என் கடவுள் உன் கடவுள்னு அடிச்சுக்குவாங்க. உண்மையிலே கடவுள் ஒண்ணு தான். அதைக் காணணும்னா அடையாளங்களைக் கடந்து உள்ளே போகணும் தம்பி.

    “அம்மையார் கடவுளுடைய உருவத்தைப் பல வகையிலே வருணிக்கிறாங்க. தலையிலே சடை, கழுத்திலே பாம்பு, இடுப்பிலே புலித்தோலு, காலிலே கழல்னு எல்லாம் சொல்றாங்க. இந்த உருவ வர்ணனை எல்லாம் குழந்தைகளுக்கு மனசிலே பதியறதுக்காக சொல்லுறது. கடவுளோட உண்மையான வடிவம் சோதி வடிவம்தான். பக்குவம் அடைய அடைய உருவத்தை விட்டு, கண்ணுக்குத் தெரியற சோதிக்கு நகரணும். அப்புறம் அதையும் விட்டு மனசாலே பார்க்கிற சோதிக்கு நகரணும். அது தாங்க அவங்க சொல்ற பத்திமை. “மின்னும் சுடருருவாய் மீண்டாய் என் சிந்தனைக்கே இன்னும் சுழல்கின்றது இங்கு” அப்படின்னு சொல்றாங்க.

    “சரியாச் சொன்னீங்க அண்ணே. அம்மையார் பாட்டெல்லாம் நல்லா ஆழ்ந்து படிச்சிருக்கீங்கன்னு தெரியுது.  தமிழ்நாட்டிலே சமணம் குறைஞ்சு சைவம் வளர்ந்ததுக்கு முதல் காரணம் அம்மையார்னு சொல்றாங்க, உண்மையா?”

    “உண்மை தான் தம்பி. சமணர்கள் பல பேர் சைவர்கள் ஆயிட்டாங்க ஆனாலும் சமணம் இன்னும் முழுசா அழியல்லே. சைவம் வளரணும்னா கண்ணப்பர், சண்டேசர் போல உணர்ச்சிவசப்பட்ட பக்தியா  இல்லாம அம்மையாரைப் போல ஆழ்ந்த நிதானமான பக்தி உள்ளவங்களா நிறைய மகான்கள் பொறக்கணும்.“

    “எங்க பல்லவ நாட்டிலே ஒரு மகான் தோன்றி இருக்காருங்க. அவர் முதல்லே சமண சாமியாரா இருந்தவர், அறுபது வயசுக்கு மேலே சைவத்துக்கு வந்து சேர்ந்தாருங்க. அவராலே எங்க ராசா மகேந்திர பல்லவரும் சைவத்துக்கு வந்திட்டாரு. அதனாலே தான் சிராப்பள்ளிலே குகை அமைச்சு சிவனோட சிலையைச் செதுக்கச் சொல்லி ஏற்பாடு செஞ்சாருங்க.”

    “நானும் கேள்விப்பட்டேன். ஊர் ஊராப் போயி பாட்டெல்லாம் பாடறாராம்.”

    “ஆமாங்க. கையிலே உழவாரத்தை வெச்சுகிட்டு கோயில்கள்லே உள்ள முள் புதரெல்லாம் சுத்தம் பண்றாரு. எல்லாரும் கோவிலுக்கு வாங்க, சிவனைக் கும்பிடுங்கன்னு சொல்றாரு. சனங்க கூட்டம் கூட்டமா அவர் பின்னாடி போறாங்க.”

    “நம்ம தமிழ்ச் சமூகத்துக்கு நல்ல காலம் வந்திடிச்சின்னு தோணுது. இந்தக் காழி ஒரு புண்ணிய பூமி தம்பி. இங்கே ஒரு மகான் பிறப்பார்னு எங்க சோழராசாவோட முன்னோர் ஒருத்தர் கனவு கண்டாராம். அதிலேருந்து தான் சோழநாடு வர வர முன்னேறி வருதுன்னு சொல்றாங்க. பார்ப்போம், அந்த மகானும் பிறந்து சைவத்தை அதன் உண்மையான பொருளில் மக்கள் கடைப்பிடிக்கிறாப்பலே செய்வார்னு நம்பிக்கை இருக்கு, தம்பி.

    “பாருங்க, பேசிக்கிட்டே வந்ததிலே நடந்து வந்ததே தெரியல்லே. காழி வந்திடிச்சி. இங்கே தங்கி குளிச்சு, சாப்பிட்டு விட்டு வெய்யில் தாழ்ந்ததும் புறப்பட்டா இரவுச் சாப்பாட்டுக்கு தில்லைக்குப் போயிடலாம்.”

    —————————– ————————— —————————————————–

    * இந்தக் கதைகள் பெரியபுராணத்தில் உள்ளன.

    Share
  • அவன்,அது,ஆத்மா (34)

    ஒரு எளிய மனிதனின் சுயசரிதை

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 34

    “கல்லிடைக்குறிச்சியில் கவிஞர்கள்”

    கல்லிடைக்குறிச்சியின் சுற்றுப்புறச் சூழலும், தெளிந்த தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரும் அருமையான கவிஞர்களை உருவாக்கியிருந்ததை அவன் படித்தும், நேரில் கண்டு அனுபவித்தும் இருக்கிறான். அந்த ஊரில் குடியிருக்கும் ஸ்ரீ ஆதிவராகப் பெருமாளைப் பற்றியும், தாமிரபரணி, கன்னடியன் கால்வாய் பற்றியும் தொண்ணூற்றி ஆறு வகை தமிழ்ப் பிரபந்தங்களில் ஒன்றான அகத்துறையில் எழுதிய “திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக் கோவை” என்ற கவிதை நூலை நம்மூர்க் கவிஞர் இயற்றி இருக்கிறார் என்று பேங்க் கிருஷ்ணமூர்த்தி மாமா, அவன் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அவனிடம் கூறியதோடு மட்டுமல்லாது, அவனுக்கு அதுபோன்ற கவிதைகளைப் படிப்பதில் ஆர்வம் இருப்பதை அறிந்ததால் அவரிடம் இருந்த அந்த நூலைத் தந்து படிக்கச் சொன்னார். அந்தக் கவிதை நூல் அவனுக்குப் புது அனுபவமாக இருந்தது.

    கிருஷ்ணமூர்த்தி மாமாவே அந்த நூலில் இருக்கும் சில இடங்களுக்கு விளக்கமும் சொன்னார். வடமொழி வல்லுனரான ஸ்ரீ சங்கர சர்மா என்பவர் எழுதிய ஸ்ரீவராக பஞ்சரத்ன ஸ்துதி , ஸ்ரீ பூவராக ஸ்துதி போன்ற சுலோகங்களையும், வடமொழி வல்லுனரான ஸ்ரீமதி மீனாக்ஷி அம்மாள் எழுதிய “ஸ்ரீ பூவராக சுப்ரபாதம்”, “ஸ்ரீ பூவராகப்ரபத்தி”, “ஸ்ரீ பூவராக மங்களம்” போன்ற சுலோகங்களை சன்னதித் தெருவில் குடியிருந்த ஸ்ரீ மீனாக்ஷி அம்மாளின் இல்லத்தில் அந்த ஊரின் பெண்களுக்கு அவரே சொல்லித் தருவதை அவன் பார்த்திருக்கிறான்.

    ஸ்ரீமதி மீனாக்ஷி அம்மாள் எழுதிய “:ஸ்ரீ பூவராக சுப்ரபாதம்” போன்ற சுலோகங்களை ஒலிநாடாவில் பதிவு செய்ததை , ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் கோவிலுக்கு 1987ம் வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற மகாசம்ப்ரோக்ஷணம் தினத்தில் சிருங்கேரி ஸ்ரீ சங்கராச்சார்யாள் அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாசன்னிதானம் அவர்கள் வெளியிட்டார்கள். பாம்பே சகோதரிகள் பாடிய அந்த சுப்ரபாத ஒலிநாடாவை அவன் இன்னும் வைத்திருக்கிறான். ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் கோவிலின் தலவரலாற்று நூலை கல்லிடைகுறிச்சி “குளத்து ஐயர்” தொகுத்திருந்தார். அவரின் இளைய மகன் பாரதி காவலர் கு.இராமமூர்த்தி ஒரு நல்ல கவிஞர். பாரதியார் பக்தர். அவர் பாரதியார் பற்றிய கவிதைகளும், சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் மீது கவிதைகளும், நிறைய கட்டுரைகளும், நூல்களும் எழுதியிருக்கிறார். “பாரதீ தீர்த்தர் புண்ணிய தீர்த்தர்” என்ற பாடல் மலேசிய வாசுதேவன் இசையில் கேட்க மிக அருமையாக இருக்கும். அவனுக்கு பாரதிகாவலர் நெருங்கிய நண்பர். அவரது தொடர்பு பற்றி இத்தொடரில் பின்பு எழுதுவான்.

    ஐயங்கார் சார் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கக் கூடிய “ஸ்ரீமான் சுந்தர்ராஜன்” அவர்களின் மகன் ஸ்ரீநிவாசன். “கல்லிடை வாசன்” என்ற பெயரில் கவிதைகள், இசைப்பாடல்கள் எழுதி வருபவர். நல்ல ரசிகர். பிரபந்தங்களை ஸ்ரீ ஆதிவராகர் கோவிலில், ஆதிமூலத்தின் சன்னதியில் தினசரி பாடிவருவதை அவன் நேரிலேயே கேட்டு மகிழ்திருக்கிறான். அவர் பாடல்களுக்கு அவரே கர்நாடக சங்கீதத்தில் மெட்டமைத்துப் பாடுவார். இளைய தலைமுறைக்கும் அதைக் கற்றுத் தந்திருக்கிறார். அந்தப் பாடல்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார். அவரைப் போலவே அவரது பாடல்களில் பக்தி இருக்கும். எளிமை இருக்கும். கேட்டால் மனம் அமைதி பெரும். ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் கோவிலுக்கு 4.7.2014 அன்று நடைபெற்ற மகாசம்ப்ரோக்ஷணம் சமயத்தில் தயாரிக்கப் பட்ட மலரில் அவர் பெருமாள் மீது இயற்றிய பாடல் ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். அதை அவன் உங்களுக்காக இங்கே பதிவிடுகிறான்.

    ராகம்: சுருட்டி
    பல்லவி

    கல்லிடைத் தலைமுறை புவிமகளே – எங்கள்
    கற்பனைக் கெட்டாத எழிலுருவே, நன்றாய்

    அனுபல்லவி
    வில்லினைப் புருவமாய்க் கொண்டவளே – எங்கள்
    தொல்லைகளைக் களையும் வல்லமை தன்னுடன்

    சரணம்
    இடக்கரமதால் உன் திருமுதுகினைத் தாங்கி
    வலக்கரம் கொண்டுன் பதமலரினைப் பற்றி
    திருமடியினுள் வைத்த கருமாமுகில் வண்ணன்
    திருவடியினை நாங்கள் துரிதமுடன் நாட (கல்லிடைத்…….)

    ஸ்ரீ சோமசுந்தரம் சார்

    1972ம் வருடத்தில் சுமார் ஒரு எட்டு மாதகாலம் ஸ்ரீ சோமசுந்தரம் சாரிடம் அவன் “அக்கௌன்டன்சி” (Accountancy) கற்றுக் கொண்டான். அவர் திலகர் வித்யாலயம் மேல் நிலைப் பள்ளியில் அக்கௌன்டன்சி, வர்த்தகம் போன்ற பாடங்களைக் கற்றுத்தரும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அவன் குடியிருக்கும் அதே தெருவில்தான் அவரும் இருந்தார். அவரிடம் மாலை வேளையில் தினமும் ஒரு மணிநேரம் அவன் பாடம் கற்றான். மிகத் தெளிவாகக் கற்றுத்தரும் ஆற்றல் அவருக்கு இருந்தது. அவனுக்கு Accountancy யில் ஆர்வம் வரச் செய்தவரே அவர்தான். எத்தனை முறை அவன் தவறுகள் செய்தாலும் அவற்றையெல்லாம் அவர் மிகுந்த பொறுமையுடன் திருத்தி அவனுக்குக் கற்றுத்தருவார். அதற்கும் மேலாக அவனுடைய குடும்பச் சூழலைச் சொல்லி “கண்ணா..நீ இனிமே விளையாட்டுப் பிள்ளையாக இருக்கக் கூடாது..நல்ல விஷயங்களை நன்றாகக் கற்றுக்கொள். கவனித்துப் படி. நிச்சயம் முன்னுக்கு வருவாய்” என்று தன் சொந்தப் பிள்ளையைப் போல எண்ணி, மிகுந்த வாஞ்சையுடன் சொல்லுவார். அவரும், அவனுக்கு அப்பாவும் ஒரே பள்ளியில் வேலை செய்யும் சிநேகிதர்கள். அப்பாவின் மீது அவருக்கு மிகுந்த அன்பு உண்டு. அவன் வேலைக்காகச் சென்னைக்கு வந்த பொழுது அவர் அவனுக்கு மூன்று நான்கு கடிதங்கள் தொடர்ந்து எழுதி அவனுக்கு ஊக்கம் கொடுத்தார். அந்தக் கடிதங்களை அவன் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறான். அவர் சென்னைக்கு வந்த பொழுது அவரையும், அவரது குடும்பத்தினர்களையும் அவன் நேரில் சென்று பார்த்து வந்தான். அப்பொழுது அவர்கள் மயிலாப்பூரில் ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தின் புத்தகக் கடைக்கு அருகில் உள்ள அவருக்கு உறவினர் ஒருவரின் வீட்டு மாடியில் தங்கி இருந்தனர். அவர் தனக்குத் தெரிய வில்லை என்றால் அதை “இது எனக்குத் தெரியவில்லை..நாளைக்கு அதைத் தெரிந்து கொண்டு உனக்குச் சொல்லித்தருகிறேன்” என்று சொல்லும் நல்லாசிரியர். இப்படி அவர் சொன்னது, அதே போன்ற ஒரு அனுபவத்தைப் பெற்ற இன்னொரு ஆசிரியரையும், அவருக்குள் இருந்த கலைஞரையும் அவன் சென்னையில் சந்தித்தான்.

    H. சகஸ்ரநாமன்

    அவர் பெயர் H. சகஸ்ரநாமன். அவரை “போடோ சாத்து” என்றும் ஊரில் அழைப்பார்கள். அவர், அவனுக்கு மனைவி சீதலக்ஷ்மியின் அத்தைவழி அத்திம்பேர். அவன் சென்னையில் விடுதியில் தங்கி இருந்த காலத்தில் அவரை அவரது அபிராமபுரம் இல்லத்திற்குச் சென்று சந்திப்பான். அவருக்குள் ஆசிரியரும், எழுத்தாளரும், புகைப்படக் கலைஞரும் இருந்ததை அவன் அவருடன் பழகியதில் இருந்து அறிந்து கொண்டான். அவர் “பல்லி விநாயகர்” என்ற நகைச்சுவைக் கதையை எழுதி அவனிடம் தந்தார். அவன் அதை அவனது விடுதி நண்பரான பிரபல நிருபரும், எழுத்தாளருமான பாளிவள்ளளிடம் கொடுத்தான். கதை நன்றாக இருப்பதாகவும், “சாவி”யில் வெளியிடக் கொடுக்கிறேன் என்றும் சொன்னார். ஆனால் அந்தப் “பல்லி விநாயகர்” எங்கோ தொலைந்து போய் விட்டார். ஒரு முறை அவனுடைய விடுதி அறைக்கு வந்திருந்த சாத்துமாமாவுக்கு நண்பர் பாரிவள்ளலை அறிமுகப்படுத்தினான். நண்பரிடம் ,” என்னோடு பல்லி விநாயகர்” எங்கயோ கோவில் கொண்டுட்டார் போலிருக்கு” என்று நகைச்சுவையாகச் சொன்னார். அவரது இளைய மகன்தான் “நாணு”. காத்தாடி இராமமூர்த்தி நாடகக் குழுவின் சிறந்த நாடக ஆசிரியரும், நடிகருமாக இருக்கிறார்.

    “சாத்து மாமா” கல்கத்தாவுக்கு வேலைக்குச் செல்வதற்கு முன்பாக கல்லிடைக்குறிச்சி “லலிதா எலிமெண்டரி” ஆரம்பப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். இரண்டாவது, மூன்றாவது, நான்காவது வகுப்புகளுக்கு ஆங்கிலப் பாடம் எடுத்திருக்கிறார். ஒரு நாள் அவர் மரங்களுக் கெல்லாம் ஆங்கிலத்தில் என்ன பெயர் என்று கற்றுக் கொடுக்கும் பொழுது திடீர் என்று ஒரு பெண் குழந்தை “சார்..அரசமரத்துக்கு…இங்கிலீஷ்ல என்ன பேரு” என்று கேட்டதாம். அவருக்குத் தெரிய வில்லை. அந்தக் குழந்தையிடம் ” கோந்தே…லண்டன்ல அரசமரம் இருக்காதோ என்னமோ..அதனால இந்த புத்தகத்துல அது இல்லை…நாளைக்கு வரும்போது உங்களுக்கு அரசமரத்துக்கு என்ன பெயர் என்று தெரிந்து கொண்டு சொல்லித்தருகிறேன்” என்று சொன்னாராம். உடனே ஊரில் உள்ள சங்கர ஐயரிடம் “மாமா அரசமரத்துக்கு…இங்கிலீஷ்ல என்ன பெயர்…இன்னிக்கு ஒரு குழந்தை என்னிடம் கேட்டாள்…எனக்குத் தெரிய வில்லை. நாளைக்குத் தெரிந்து கொண்டு உனக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டேன்…” என்ற பொழுது , சங்கர ஐயர் “சாத்து…ஸமிஸ்கிரத்தத்துல அரசமரத்துக்கு பிபல விருக்ஷம் என்று சொல்லுவார்கள். அதைத்தான் இங்கிலீஷ்ல “பீபல்ட்ரீ” ( Peepal tree) என்கின்றனர்” என்று சொன்னாராம். மறுநாள் அதைக் குழந்தைகளுக்குச் சொல்லித் தந்ததாகவும், அதனால் தெரியாததைத் தெரியவில்லை என்று சொல்லி, தெரிந்து கொண்டு வந்து கற்றுத் தருவதுதான் ஒரு ஆசிரியரின் கடமை என்றும், அது மாணவர்களிடம் ஆசிரியரின் மதிப்பை உயர்த்தும் என்று சாத்துமாமா அவனிடம் கூறினார்.

    16.10.2015

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • முத்து

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    உயர்முத்தின் தாய் முசெலினங்களில் முத்துச்சிப்பி.
    உயிர் சிப்பியுள் திண்மப்பொருள் (நுண்துகள்) நுழைவால்
    உறுத்தலடையும் சிப்பியில் எபிதீலியம் படிவம்
    உருவாகி நுண்துகளைச் சுற்றிப் பொதிகிறது.
    சிப்பியின் சுரப்பு நீர்ப் படிவம்                                            pearl
    சிப்பிக்குள் கசியும் கெட்டியான பசை
    சிப்பியின் பாதுகாப்புப் பசைநேக்கர் படையாக
    அப்புதலால் உருவாகிறது நவரத்தினத்திலொரு முத்து.

    விலங்கின வகையாம் முத்துச் சிப்பி.
    விலைமதிப்பு இல்லா விநோத சீவன்.
    அரிய வகைக் கடல் வாழுயிரினம்.
    விரிவாக நூற்றுக்குமதிகமான சிப்பி இனங்களுண்டு.
    பட்டை தீட்டத் தேவையற்றது முத்து.
    பட்டொளியாம் இயற்கைப் பொலிவுரு நேக்கரால்.
    முத்தின் மறுபெயர் நித்திலம் தூமணி.
    முத்துக்களில் சிறப்புடையது ஆணி முத்து.

    இயற்கை முத்து அவிகுலிடி என்ற
    இனமான சிப்பியிலும், யூனியனி என்ற
    மட்டிகளிலும் உருவாகிறதாம்.
    முத்துகள் நீலம் மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்புகளில் உண்டு.
    முத்துகளில் கறுப்பினம் அந்தமான் தீவிலுண்டாம்.
    முத்திற்குப் பிரபலமானது பாண்டிய நாடாம்.
    முத்துநகர் தூத்துக்குடியாம்.
    மூழ்கி முத்துச் சிப்பியெடுத்தல் ‘முத்துக்குளிப்பு’ என்பார்.

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (170)

    –சக்தி சக்திதாசன்.

    Cavell-1865-1915

    அன்பினியவர்களே !
    இனிய வணக்கத்துடன் அக்டோபர் மாத நடுப்பகுதியில் உங்களுடன் இந்த வார மடல் மூலம் உரையாடுவதில் மனம் மகிழ்கிறது.

    இவ்வகிலத்தின் வயதைச் சரியாக அறிந்தவர் எவருமிலர். கால காலங்களாய், யுக யுகங்களாய் இம்மண்ணில் தோன்றி மறைந்தவர் எத்தனையோ !

    இம்மண்ணில் விதையாக விழுந்து விட்டால் அதன் கால நியதிப்படி அதன் வாழ்வு நடந்து முடிவது உறுதி.

    ஒரு தோட்டத்தில் வித்தியாசமான பல வர்ணங்களில் மலர்கள் மலர்வது போல, மலராமல் பச்சைச் செடியாகவே இருக்கும் செடிகளைப் போல இப்புவியில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் வித்தியாசமானவர்களே ! சிலர் வருவதும் தெரியாமல் போவதும் தெரியாமல் மறைந்து போகிறார்கள். வேறு சிலரோ ஆரவாரமாக வந்து விட்டு அடையாளம் இல்லாமல் அழிந்து போகிறார்கள். மற்றும் சிலரோ சேற்றில் முகிழ்த்த செந்தாமரை போல ஆரவாரமில்லாமல் உதித்து விட்டு தமக்கேயுரிய அடையாளத்துடன் மறைகிறார்கள்.

    ஒரு சிலர் தவறான காரணங்களுக்காக காலமெல்லாம் நிலைக்கிறார்கள். வேறு சிலர் அற்புத மகத்தான காரியங்களை ஆற்றி விட்டு அதற்காக உலகம் உள்ளவரை நினைவு கூரப்படுகிறார்கள். மக்களின் மனதில் மங்காமல் நிலைத்திருப்போரில் அதிகமானோர் மனிதாபிமானத்தின் சிகரமாய் விளங்கியதால்தான் அத்தகைய புகழாரத்தை அடைந்திருக்கிறார்கள்.

    இன்றைய உலகம் அறிவிற் சிறந்து பல தத்துவார்த்த உண்மைகளைப் புரிந்து கொண்டு இயங்கி வருகிறது. இருப்பினும் போர், அநீதி, மனித வதைகள், பேராசையினால் ஏற்படும் அழிவுகள் இவ்வறிவார்ந்த உலகிலும் தொடர்ந்து நடைபெறத்தான் செய்கிறது. இருப்பதில் மட்டும் நிறைவடையாமல், மதமோ அன்றி இறையுணர்வோ மனிதனுக்குப் போதிப்பது அடிப்படை மனித தர்மமே என்பதை அறியாமல் மதங்களின் பெயரால் மற்றவரை அழிப்பதை நியாயப்படுத்தும் பல நிகழ்வுகளை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

    ஆனால் அதே நேரம் இத்தகைய கொடூர நிகழ்வுகளிலிருந்து மக்களைக் காப்பதற்காக தமது உயிரையே பணயம் வைத்து சேவை புரியும் நல்ல உள்ளங்களும் எம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர். எனது இந்த மடலின் வழியும் அவ்வழியே வாழ்ந்த ஒருவரைப் பற்றி அலசவே இவ்வழியேகிறது.

    “ஈடித் காவெல்” (Edith Cavell), இங்கிலாந்திலுள்ள “நோரிச்” (Norwich) எனும் நகரை அண்மித்திருந்த “ஸ்வாரடஸ்டன்” (Swardeston) எனும் கிராமத்தில் 45 வருடங்களாக அங்கே மதகுருவாக இருந்த “வணபிதா ஃபிரடிரிக் காவெல்” (Reverend Fredrick Cavell) என்பவருக்கும் “லூசியா சோஃபியா” (Louisa Sophia) என்பவருக்கும் மூத்த குழந்தையாக1865ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் நாள் பிறந்தார்.

    மதகுருவான தந்தையாலும், தாயாரினாலும் எப்போதும் இருப்பதை மற்றையோருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனும் மாண்பினை முக்கியப்படுத்தியே இவர் குழந்தைப் பிராயத்தில் வளர்க்கப்பட்டார். நோரிச் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஈடித் கல்வி பயின்றார். படிப்பை முடித்து 1890ம் ஆண்டு தொடக்கம் 5 வருடங்கள் “பிரஸ்ஸில்ஸ்”( Brussells ) நகரில் ஒரு குடும்பத்தினரின் இல்லத்தில் தாதியாகப் பணிபுரிந்தார். லண்டன் வைத்தியசாலையில் நர்ஸாகப் பயிற்சி பெற்ற ஈடித் இங்கிலாந்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் நர்ஸாகப் பணிபுரிந்தார்.

    1907ம் ஆண்டு இவர் “டாக்டர் ஆண்டனி தேபேஜ்” (Dr. Antoine Depage) என்பவரால் புதிதாக பிரஸ்ஸில்ஸ் நகரில் ஆரம்பிக்கப்பட்ட நர்ஸிங் பள்ளியில் பயிற்சியாளராக பணியிலமர்த்தப்பட்டார். 1910ம் ஆண்டு இவர் தாதிகளுக்கான ஒரு சஞ்சிகையை ஆரம்பித்தார். முதலாவது உலக மகாயுத்தம் ஆரம்பிக்கும் போது விதவையான தன் தாயாரைப் பார்ப்பதற்காக இங்கிலாந்திலுள்ள நோரிச்சில் சிலகாலம் தங்கி இருந்தார். பிரஸில்ஸ் நகருக்கு இவர் திரும்பிய போது இவரது ஆஸ்பத்திரி செஞ்சிலுவைச் சங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டிருந்தது.

    1914ம் ஆண்டு பிரஸ்ஸில்ஸ் நகர் ஜெர்மானியரால் கைப்பற்றப்பட்டிருந்தது. இவர் காயமடைந்த கூட்டுப் படையினருக்கும், எதிராகப் போரிட்ட ஜெர்மானிய வீரருக்கும் முன்னின்று சிகிச்சையளிக்க உதவினார். கூட்டுப்படையிலிருந்த பிரித்தானியம் பிரெஞ்சுப் படைவீரர்கள், ஜெர்மானிய கைப்பற்றலில் இருந்து தப்பி இங்கிலாந்து, பிரெஞ்சு நாடுகளுக்குத் திரும்புவதற்காக அப்போது நடுநிலை நாடாகவிருந்த நெதர்லாந்துக்கு இவர்கள் தப்பிப் போக ஈடித் உதவினார்.

    போரின் நடுவே காயமடையும் வீரர்களை எப்படையினர் எனும் பேதம் காட்டாது, சேவையாற்றிக் கொண்டிருந்த ஈடித் மீது ஜெர்மானிய நிர்வாகம் சந்தேகம் கொண்டது. இச்சந்தேகத்திற்கு தன் மனதிருப்பதை அப்படியே உரைக்கும் பண்பை கொண்டிருந்த ஈடித்தும் உதவினார் என்பதுவே உண்மை. தன் சொந்த நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து, அயல்நாடொன்றில் யுத்தத்தின் நடுவே மனிதாபிமான அடிப்படையில் சேவையாற்றிக் கொண்டிருந்த ஈடித் ஜெர்மானிய இராணுவத்தினரால் 1915ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் நாள் கைது செய்யப்பட்டார். 10 வாரங்கள் சிறையிலடைக்கப்பட்ட இவர், இவருடன் சேர்ந்தியங்கிய காஸ்டன் குயின் என்பவரால் காட்டிக் கொடுக்கப்பட்டார்.

    தான் பிரித்தானிய, பிரெஞ்சு, பெல்ஜியன் இராணுவ வீரர்கள் தப்பிப் போவதற்கு ஏதுவாக அவர்களைத் தன் வீட்டில் மறைந்து வைத்திருந்ததை ஏற்றுக்கொண்டார் ஈடித். இத்தகைய குற்றத்திற்கு அப்போதைய ஜெர்மானிய நிர்வாகத்தின் தண்டனை மரணமாகும். ஜெனிவா ஒப்பந்தத்தின் படி வைத்திய சிகிச்சை சம்பந்தப்பட்டவர்கள் இத்தகைய தண்டனைக்கு அப்பாற்பட்டவர்கள் என்று குறிப்பிட்டிருந்தாலும், இதைத் தேசத்துரோகம் எனும் அடிப்படையில் அவ்வொப்பந்தத்திற்கு அப்பாற்பட்டது என்று ஜெர்மானிய நிர்வாகம் செயற்பட்டது.

    அப்போதைய பிரித்தானிய வெளிநாட்டமைச்சர் “ஹோரஸ் ரோலான்ட்” (Horrace Rowland) என்பவர், தாம் இந்தச்சூழலில் எதுவும் செய்யக்கூடிய அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரித்தானிய அரசின் எந்தத் தலையீடும் ஈடித்துக்கு பாதகமாகவே அமையும் என்பதே அவர்களின் நிலைப்பாடாக இருந்தது.

    அப்போது முதலவது மகாயுத்தத்தில் ஈடுபட்டிருக்காத அமெரிக்க நாட்டின் பிரெஸ்ஸில்ஸுக்கான தூதுவர், ஜெர்மானிய நிர்வாகத்தின் இத்தகைய செயல் இருநாடுகளுக்கான விரிசல் கண்டிருந்த உறவை மேலும் அந்நியப்படுத்தும் என்று எச்சரித்ததும் குறிப்பிடத்தக்கது. எத்தனையோ இராணுவ வீரர்களின் வைத்திய உதவிகளுக்குக் காரணமாகவிருந்த ஈடித்தின் சேவையை ஜெர்மானிய அரசு நினைவுகூரவேண்டும் என்றும் அமெரிக்கத் தூதுவர் கோரியிருந்தார்.

    அப்போது அங்கு ஜெர்மானிய நிர்வாகத்திற்குப் பொறுப்பாகவிருந்த ஆளுநர், ஈடித்தின் மரணதண்டனையை ஜெர்மானிய நாட்டின் நிலையைக் கருத்திற் கொண்டு உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது இவர் பிரெஞ்சு மொழியில் விசாரிக்கப்பட்டார். ஆனால் இவரது வாக்குமூலம் ஜெர்மானிய மொழியில் பதிவு செய்யப்பட்டது. இவர் கூறியவற்றைத் திரித்திருக்கலாம் என்று அப்போது ஒரு கருத்து நிலவியது என்று கூறப்படுகிறது.

    நாட்டுத் துரோகம் எனும் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த 27 பேரில், ஐந்துபேருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஈடித் காவெலும் ஒருவர். மரண தண்டனை வழங்கப்பட்ட ஐவரில், ஈடித்தும் மற்றிருவருமே மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்கள். மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாளிரவு மதகுருவைச் சந்திக்கும் போது “நாட்டுப்பற்று மட்டும் போதாது, அனைத்து மக்களையும் சமமாக நோக்குவதோடு நான் எவர் மீதும் வன்மமோ, ஆத்திரமோ கொள்ள மாட்டேன்” என்று ஈடித் கூறியிருந்தாராம். இவ்வார்த்தைகள் இன்றும் லண்டனில் ‘ட்ராவெல்கார் ஸ்கொயர்’ எனும் இடத்திலமைந்துள்ள இவரது சிலையில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

    மானிட சேவைக்கு உதாரணமாக விளங்கிய இந்த அற்புதப் பெண்மணி ஜெர்மானிய ராணுவத்தால் 1915ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது உடலை இங்கிலாந்துக்குக் கொண்டு வந்த புகையிரதப் பெட்டி இன்றும் இங்குக் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது இந்த நினைவுடன் நூற்றாண்டு வாரமாகிய இந்த வாரம் பலரும் இந்த புகையிரதப் பெட்டியைப் பார்த்துச் செல்கின்றனர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்றுணர்ந்த இப்பெண் மறைந்தும் வாழ்வது நிச்சயம்.

    “வாழ்ந்தவர் கோடி
    மறைந்தவர் கோடி
    மக்கள் மனதில் நிற்பவர் யார் ?
    மாபெரும் வீரர்
    மானம் காப்போர்
    சரித்திரம் தனிலே நிற்கின்றார் “

    கவியரசரின் அற்புத வரிகள் காலமெலாம் நெஞ்சில் . . . . . .

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    குறிப்பு: படங்கள் இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்டன.

    Share
  • தெய்வ தரிசனம்

    -ரமணி

    02. பரம்பொருளும் படைப்பும்

    (குறும்பா)

    [ரிக்வேதம் பத்தாவது மண்டலத்தில் 129-ஆவது சூக்தமாக உள்ளது ’நாஸதீய சூக்தம்.’ இப்பாடல் அதன் எளிய மொழிபெயர்ப்பு.]

    இல்லையென்றோ உள்ளதென்றொ ஏதுமிலை
    தொல்லுலகம் தொடுவானம் போதுமிலை
    . மூடுபனி கூடியதோ
    . கூடெனவே மூடியதோ
    வல்லிருளோ வெள்ளமதோ பேதமிலை! … 1

    மரணமென்றும் மோட்சமென்றும் இல்லாதே
    இருள்தனியே பகல்தனியே செல்லாதே
    . அதுவொன்றே மூச்சற்றே
    . அதிர்ந்ததுவே பேச்சற்றே
    உருவமென வேறெதுவும் கொள்ளாதே! … 2

    இருளொன்றே இருளென்றே மூடியதே
    உருவற்ற வெள்ளம்போல் கூடியதே
    . ஒன்றெனவே ஓர்பொருளே
    . தன்நிலையை ஓர்பொருளே
    எரிதவத்தால் தன்னுள்ளே தேடியதே! … 3

    உள்ளியதில் ஓராசை எழுந்ததுவே
    உள்ளத்தின் மூலவித்தாய் விழுந்ததுவே
    . தன்னிதயம் ஆயுமுனி
    . உண்மையென மாயையென
    உள்மனத்தின் உணர்வினிலே இழிந்ததுவே! … 4

    கதிர்பலவாய்ச் சூனியத்தில் விரிந்ததுவே
    அதிர்வாற்றல் அடியெனவே இருந்திடவே
    . சந்ததிகள் உருவாக
    . விந்தொன்றே கருவாக
    அதிவேகம் உச்சியிலே திரிந்திடவே! … 5

    யாரறிவார் எங்கிருந்து படைப்பிதுவே
    யாருரைப்பர் இதுவென்ன புடைப்பெனவே
    . கடவுளரும் தேவருமே
    . படைத்தபினே மேவினரே
    யாரறிவார் எங்கிருந்த உடைப்பிதுவே! … 6

    படைப்பிதனைப் படைத்ததுவே புரப்பதுவோ
    படைப்பிதனைப் படைத்ததுவே புரந்திலையோ
    . பரவான வெளியினிலே
    . அரசாளும் ஒளியவனே
    படைப்புண்மை அறிவானோ அறிந்திலையோ? … 7 

     

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 22

    –சி. ஜெயபாரதன்.

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    பூரணம் அடைவது
    ____________________________

    “ஒரு கண்ணுக்கு ஒரு கண் பழிவாங்கப் பட்டால் உலகம் பூராவும் குருடாகிவிடும்.”
    கலில் கிப்ரான்.

    “முன்னேறு ! ஒருபோதும் நில்லாதே ! ஏனெனில் முன்னேறுவது முழுமை பெற்றது. முன்னேறிச் செல் ! பாதையில் உள்ள முட்களுக்குப் பயப்படாதே ! காரணம் அவை லஞ்சக் குருதியைத்தான் உறிஞ்சும்.”
    கலில் கிப்ரான்.
    ___________________

    பூரணம் அடைதல் எப்போது ?
    ___________________

    எப்போது பூரணம் அடைவான்
    மனிதன் என்று நீ
    எனைக் கேட்டாய் சகோதரா !
    கேள் எனது பதிலை :
    எல்லை யற்ற வெளியிலே
    கரை யில்லாக் கடலிலே
    முடிவில்லாத் தீயிலே
    தடுக்க முடியா ஒளியிலே
    மௌனக் காற்றிலே
    அல்லது
    பாய்ந் தடிக்கும் புயலிலே
    இடி முழக்கும் வானிலே
    அல்லது
    மழை பெயும் சொர்க் கத்திலே
    சிரித்தோடும்
    சிற்றோ டையிலே
    வசந்த காலப் பூ மரத்திலே
    வானோங்கும்
    மாமலைச் சிகரத்திலே அதன்
    ஆழ்குழிப் பள்ளத்திலே
    செழித்து வளரும் நிலத்திலே
    பாலை வனத்திலே
    தான் ஒருவன் என்று
    எப்போது உணர்வானோ
    அப்போது !
    ___________________

    “பூமியில் தோன்றிய மனித இனம் உன்னத இறைவனின் ஆன்மாவே. அந்த மகத்தான கடவுள் பேரன்பையும் நன்னெறியையும் உபதேசிக்கிறது. ஆனால் மக்கள் அப்போதனைகளைக் கேலி செய்கிறார். நாஸரத் ஏசு நாதர் அவற்றை ஏற்றார். அதற்காக அவர் சிலுவையில் அறையப் பட்டதே அவருக்கு வெகுமதி. சாக்ரடிஸ் அக்குரலைக் கேட்டார். அவரும் பலியானார். ஏசுவையும், சாக்ரடிஸையும் பின்பற்றி வருகிறார் எண்ணற்ற அவரது சீடர்கள்.”

    பைத்தியம் என்று சொல்லும் அளவுக்கு மீறி வெறி கொண்டவர் அவர். அவர் ஒரு பூரணவாதி (Idealist) ஆன போதிலும் அவரது இலக்கியக் குறிக்கோள் வாலிப இதயங்களில் நஞ்சிட்டுப் பாழாக்குவதே !
    திருமணம் பற்றி மனிதரும், மாதரும்.
    கலில் கிப்ரான்

    Share
  • சாமியே சரணம்!

                              ஐயப்ப வழிபாட்டின் முக்கியத்துவம்

                      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    lord-ayyappa-hindu-god-of-sabarimala-temple

          [  எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா ]

          ஐயப்பனது வழிபாடு இன்று யாவராலும் மேற்கொள்ளப்படும் வழிபாடாக விளங்குகிறது.இந்த வழிபாடு இடைவிட்டு வந்த ஒன்றா அல்லது தொன்று தொட்டு வந்த ஒன்றா என்னும் வாதப்பிரதி வாதங்களும் சர்ச்சைகளும் நடந்து கொண்டு இருக்கின்றன.ஆனாலும் ஐயப்ப வழிபாடு மட்டும் தனது நிலையில் உயர்வு பெற்று எல்லோராராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வழிபாடாக வளர்ந்து வருவதையே காணமுடிகிறது.அதுமட்டுமல்ல யாவரும் இந்த வழிபாட்டில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதில் பெரிதும் விருப்புடையவர்களாக இருப்ப தையும் கண்டுகொள்ள முடிகின்றது.

         கந்தபுராணம், விஷ்ணு புராணம், பத்மபுராணம் , யாவும் ஐயப்ப வழிபாடு பற்றி எடுத்துச் சொல்லுகின்றன.இப்புராணங்கள் தெய்வத் தன்மை மிக்கன. இவற்றில் ஐயப்பன் பற்றிய குறிப்பும் அவரது தோற்றம் பற்றிய விளக்கங்க ளும் இருக்கின்ற காரணத்தால் ஐயப்ப வழிபாட்டை இடைநடுவில் வந்தது என்று வாதிடுவதோ விமர்சிப்பதோ பொருத்தமற்றதாகி விடுகிறது. இதனால் ஐயப்ப வழிபாடானது தொன்று தொட்டே வந்திருக்கிறது என்றே கருதவேண்டி இருக்கிறதல்லவா?

          ஐயப்பனை தர்மசாஸ்த்தா என்றும் பெயரிட்டும் வழிபடுவர். சாத்தன் என்பது காவலுக்குரிய தெய்வமாகாக விளங்கியிருக்கிறது. சாஸ்த்தா என்பது சமஸ்கிருதத்தில் வழங்கப்பட அதுவே தமிழில் சாத்தா எனமருவி பின்னர் சாத்தனார் ஆகியது எனவும் வராலாற்றால் அறியமுடிகிறது.

        காவல் தெய்வமாக விளங்கினார் என்பதற்கு அவரின் மற்றொரு பெயரான பூதநாதன் என்பதும் பொருந்துவதாக இருப்பதாக வரலாறு சுட்டி நிற்கிறது. விநாயகப் பெருமானை கணங்களுக்கு அதிபதி என்ற நிலையில் ” கணபதி ” என்கிறோம். தேவசேனைகளின் அதிபதியாக விளங்குவதால் முருகப்     பெருமானை” தேவசேனாபதி” என்கின்றோம். ஐயப்பன் பூதகணங்களுக்குத் தலமை தாங்குவதால் அவரை ” பூதநாதன் ” எனப் போற்றுகின்றோம்.

         இதில் இன்னுமொரு அர்த்தத்தையும் நாம் கண்டுகொள்ளலாம்.இந்த மனித சரீரமானது பஞ்சபூதங்களால் ஆனது. எனவே பஞ்சபூதங்களும்  எந்த நேரமும் மனிதர்களை ஆட்டிப்படைக்கும் வல்லமை பெற்றிருக்கும் அல்லவா?அப்படிப் பட்ட மனிதர்களை அந்தப்பூதங்களிடமிருந்து காத்து ரட்சிக்கும் ஆற்றல் பூத நாதனாகிய ஐயப்பனால் மட்டுமே முடியும் அல்லவா? இதனாலும் பூதங்களை ஆளும் வல்லமை பெற்றவன் என்ற வகையிலும் பூதநாதன் என்பது பொருத்த மாகி நிற்கிறதுதானே !

          ஐயப்ப வழிபாட்டில் பல முக்கிய அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.அதன் காரணமாகவும் அந்த வழிபாட்டை அனைவரும் கைக்கொள்ளுகின்றனரோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது.

         ஒரு மண்டலம் என்பது சாதாரணவிஷயமல்ல.அந்த ஒரு மண்டலமும் எந்தவிதமான கெட்ட பழக்க வழக்கங்களையும் மனத்தாற்கூட நினையாமல் கைவிட்டே ஐயப்ப வழிபாடு நடத்தப்படுகின்றது.இங்கு மனம் தூய்மை அடைவதோடு வாழ்வும் வெளிச்சம் பெறமுடிகிறது எனலாம்.

     ” உற்ற நோய் நோற்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை ” என்னும் வள்ளுவர்

    வாக்கு இங்கு போற்றப் படும் நிலையே காணப்படுகின்றது. கடைப்பிடிப் பார்கள் செவ்வனே கடைப்பிடித்தால் சிறப்புத்தான் வந்து நிற்கும். இது ஐயப்ப வழிபாட்டின் முக்கியத்துவம் எனலாம்.

       கடவுளர்களில் பிரம்மச்சாரியாக ஐயப்பன் இருக்கின்றார்.அதுமட்டு மல்ல அவரது கைகளிலே எந்தவித ஆயுதங்களும் இல்லை. இது அற்புதமான அமைப்பு அல்லவா? அவரது குழந்தை வடிவமும் புன்சிரிப்புத் தவழும் முகலாவண்யமும் பார்ப்பவர் மனத்தைப் பக்குவவப் படுத்திவிடும் அல்லவா ?

    உலகிலே எங்கு பார்த்தாலும் சண்டையும் அழிவுகளுமே ! ஆயுதக்கலாசாரம் பெருகி அமைதியைக் குலைத்துவிட்டது. இந்த நிலையில் ஆயுதமே கையில் ஏந்தாது அமைதியாயும் சிரிப்போடும் ஐயப்பன் காணப்படுவது அகில உலக அமைதிக்கும் உலகம் தழுவிய சமாதானத்துக்கும் நல்ல ஒரு எடுதுக்காட்டு அல்லவா ? இதனாலும் இந்த வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

         காமம் என்பதுதான் யாவற்றுக்கும் மூலகாரணமாகும்.ஐயப்பன் பிமச்சாரி யாக விளங்கும் நிலையும், அவரது வழிபாட்டை மேற்கொள்ளும் நிலையில் பிமச்சரியம் கடைப்பிடிக்கும் நிலையும் எம்மிடையே உள்ள சிற்றின்பங்கள் அனைத்தையும் போக்கிவிடும் தன்மையை ஏற்படுத்திவிடும் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.காம எண்ணங்கள் எம்மைவிட்டுப் போய்விட்டால் உலகிலே காணும் யாவுமே ஆனந்த மயமாகவே தோற்றமளிக்கும். அந்த ஆனந்தமும் அற்பம் ஆனதல்ல.அது இறைத்தன்மை மிக்கதாகவே இருக்கும். இவையெல்லாம் ஐயப்ப வழிபாட்டின் முக்கியத்துவங்கள் எனலாம்.

         எமக்குள்ளே இறைவன் இருக்கின்றான்.அந்த இறைவனை நாங்கள் முயன்றால் கண்டுவிடலாம் என்று ஆன்றோர்கள் கூறுவார்கள்.அதற்கு நல்ல தேடல் வேண்டும்.

       ” தேடிக் கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும்

           தேடிக் காணொனா தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன் “

    என்று அருளாளர் ஒருவர்கூறுகின்றார். இது முற்றிலும் உண்மையானதாகும். இந்த அரிய தத்துவத்தை ஐயப்பன் வழிபாடு மிகவும் இலகுபடுத்தி இருக்கிறது.

        ஐயப்ப விரதம் இருக்கும் ஐயப்ப பக்தர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வேளை ஒருவராவது மற்றயவரை பெயர்சொல்லி அழைப்பது வழக்கம் அல்ல.

    ஒருவரை ஒருவர் ” சாமி ” என்றுதான் அழைப்பார்கள். இதுதான் ஐயப்ப வழி பாட்டின் அதியுச்ச நிலை எனலாம்.சாதாரண நிலையில் இருக்கும் ஒருவர் சாமி என்னும் நிலைக்கு வருவதை வேறு எந்த வழிபாட்டிலும் காணவே முடியாது.அதனை ஐயப்ப வழிபாடு ஒன்றே தந்து நிற்கிறது என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

         மனிதர்கள் பல பிறவிகளிலும் செய்த பாவங்களும் , புண்ணியங்களும் அவர்களுக்குப் பெரும் பாரமாகவே பிறவி தோறும் வந்து கொண்டிருக்கும்.

    இவை இரண்டையும் விடும் பொழுதுதான் பிறவியென்னும் பிணி அகலும்.

    இதனையே சைவ சித்தாந்தம் இருவினை ஒப்பு, மலபரிபாகம், சத்தினிபாதம் என்றெல்லாம் சொல்லும். இவை எமக்கும் விளங்குவது சற்றுக் கடினம்தான்.ஆனால் ஐயப்ப வழிபாட்டில் இதனை இலகுவாக்கி ” இருமுடி ”  கட்டுதல் என்று வைத்துவிட்டார்கள். இருமுடியில் ஒன்றில் இறைவனுக்கான நிவேதனப் பொருட்களும் மற்றயதில் அடியவர்களுக்கான பொருட்களுமே  அடங்கியிருக்கும். இங்கே இறைவனுக்கானவற்றை புண்ணிய மூட்டை என்றும் மற்றயதை பாவ மூட்டை என்றும் கொள்ளலாம் அல்லவா ? இந்த ஆன்மா ஆனது பாவத்தையும் புண்ணியத்தையும் சுமந்த படியேதான் இருக்கும். இறைவனிடம் போகும்பொழுது அதுவும் பக்தியுடன் பக்குவமாகப் போகும் பொழுது பாவத்தின் நிலை குறைந்து புண்ணியம் மேலோங்க ஆன்மாவின் பாரம் குறைவடையும். இந்த அரிய கருத்தே இருமுடித் தத்துவம் என்று ஐயப்ப வழிபாட்டில் காணப்படுகின்றது என்பது மனத்தில் கொள்ள வேண்டிய கருத்தாகும்.

          பகவத்கீதையில் பதினெட்டு அத்தியாயங்கள் இருக்கின்றன. ஐயப்ப தரிசனத்திலும் பதினெட்டுப் படிகள் இருக்கின்றன. பாரதப் போரில் அர்ஜ்ஜுனன் கலங்கிய கலக்கத்தைத் தெளிவாக்கி இறைதத்துவத்தையும் வாழ்க்கைத் தத்து வத்தையும் பகவான் கண்ணன் காட்டியதுவே கீதையென்னும் வேதமாக வந்தது.

        அதே போன்றதுதான் ஐயப்ப வழிபாட்டிலும் பதினெட்டுப் படிகளின் தத்துவம்.முதல் ஐந்து படிகளும் கர்மேந்திரியங்களாகவும் அடுத்த ஐந்து படிகளும் ஞானேந்தியங்களாகவும் அடுத்த நான்குபடிகளும் அந்தக்கரணங்க ளாகவும் மிகுதி மூன்று படிகளும் முக்குணங்களாகவும் உருவகப்படுத்தப் படுகின்றன. இவற்றைக் கடந்தால் பதினெட்டாம் படியானது இறைதரிசனத்தை காட்ட வல்லது என்னும் அதியுன்னத தத்துவத்தை படிகளைக் கொண்டே ஐயப்ப வழிபாடு உணர்த்தி நிற்கிறது என்பது மிகவும் முக்கியமானதாகும்.

        தேங்காயினுள் நெய்விட்டு அதனை ஐயப்ப தரிசனத்தின் பொழுது கொண்டு செல்லும் வழக்கம் இருக்கிறது.தேங்காயில் மூன்று கண்கள் இருக்கின்றன. இவற்றில் ஒருகண்ணை மட்டுமே திறந்து நெய்யினை விடுவார்கள். இங்கே கூட மிகச்சிறந்த தத்துவத்தை ஐயப்ப வழிபாடு காட்டிநிற்கிறது.மனிதர்களுக்கு புறத்தே தெரிவது இரண்டுகண்களே.அதே வேளை மூன்றாவது கண்ணும் இருக்கின்றது.அதனையே அகக்கண் என்கிறார்கள்.நெய் என்பது ஆன்ம ஞானம் அதனை உடம்பாகிய தேங்காயினுள் செலுத்த வேண்டுமானால் அதற்கு அகமாகிய கண்ணின் வழியேதான் செலுத்தமுடியும் எனவேதான் தேங்காயின் ஒருகண்ணைத் திறத்தல் என்பது இங்கே ஏற்படுத்தப் பட்டது.இதனை அனைவரும் விளங்கி வழிபட்டால் நல்லதே.

           ஐயப்ப வழிபாட்டில் அரனும் அரியும் இணையும் தன்மை காணப்படு கிறது.அரியும் அரனும் சேர்ந்த வடிவமானதால்த்தான் அரகரசுதன் ஐயன் ஐயப்பன் என்று போற்றப் படும் நிலை இந்தவழிபாட்டில் ஏற்பட்டது எனலாம்.

    இதனால் சைவ வைஷ்ணவ ஒற்றுமையின் வடிவமாகவும் ஐயப்பனும் அவரது வழிபாடும் அமைந்திருப்பதும் இந்த வழிபாட்டின் மிக மிக முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது என்றும் கொள்ளலாம்

          ஆடுதல், பாடுதல், ஒன்று சேருதல், உணவிட்டு உபசரித்தல், சாதி, மத, ஏற்றத் தாழ்வுகள் பாராமை, சமரசம் என்னும் தரரகமந்திரமே மேலோங்கி இருத்தல், தீவிர வைராக்கியம், இன்முகம் காட்டுதல், இன்சொல்பேசுதல், பெரியவரைக் கனம் செய்யுதல், இப்படிப் பல நிலைகளில் ஐயப்ப வழிபாடு விளங்குகின்ற காரணத்தாலும் இன்றைய உலக நிலையில் மிகவும் முக்கி யத்துவம் மிக்க வழிபாடாக ஐயப்ப வழிபாடு திகழ்கின்றது.

            சாமியே சரணம் ஐயப்பா ! சாமியே சரணம் ஐயப்பா ! என்னும் ஒலியானது உலகையே ஒன்று கூட்டும் சக்திமிக்கதாக விளங்கி ஐயப்ப வழிபாட்டை உலக வழிபாடாக மாற்றிவிடும் சக்திபெற்றதாக இன்று பிரவாகித்து நிற்கிறது என்பது நிதர்சனமாகும்.

            சரணம் சரணம் ஐயப்பா சாமிசரணம் ஐயப்பா !

    Share
  • பாடும்போது நான் தென்றல்காற்று …

    –கவிஞர் காவிரிமைந்தன்.

    பாடும்போது நான் தென்றல்காற்று …

    ‘நேற்று இன்று நாளை’ திரைப்படத்தில் மக்கள் திலகம் பாடுகின்ற முதல் பாடலாக, மென்மையை மேன்மையாக்கிக்காட்டும் பிரத்தியேக முயற்சியில் புலவர் புலமைப்பித்தனும் மெல்லிசை மன்னரும் ஒருசேர வெற்றி பெற்றிருக்கிறார்கள். பாடும் நிலா பாலு பாடிய இசை அமுதமிது! எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது! மஞ்சள் நிறத்தில் தன் மன்னவன் தோன்ற, கதையின் நாயகி அவனது அன்பில் மலர்ந்த பூவாய் அவன் கரங்களில் தவழ, எண்ணங்களில் எல்லாம் எழுதிவைத்த வரிகள்போல் இதமான வார்த்தைகளால் இங்கே தவழும் தென்றல் காற்று இது!

               பாடும் போது நான் தென்றல் காற்று2       பாடும் போது நான் தென்றல் காற்று

    பாடும்போது நான் தென்றல்காற்று
    பருவமங்கையோ தென்னங்கீற்று
    நான் வரும்போது ஆயிரம் பாடல்
    பாடவந்ததென்ன
    நெஞ்சம் ஆசை கொண்டதென்ன?
    பாடும்போது நான் தென்றல்காற்று
    பருவமங்கையோ தென்னங்கீற்று

    மெல்லிய பூங்கொடி வளைத்து
    மலர்மேனியைக் கொஞ்சம் அணைத்து
    இதழில் தேனைக்குடித்து
    ஒரு இன்பநாடகம் நடித்து
    எங்கும் பாடும் தென்றல் காற்றும்
    நானும் ஒன்றுதானே இன்ப நாளும் இன்றுதானே
    பாடும்போது நான் தென்றல்காற்று
    பருவமங்கையோ தென்னங்கீற்று

    எல்லைகள் இல்லா உலகம்
    என் இதயமும் அதுபோல் நிலவும்
    புதுமை உலகம் மலரும்
    நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்
    யாரும் வாழப் பாடும் காற்றும்
    நானும் ஒன்றுதானே
    இன்ப நாளும் இன்றுதானே

    நம்பிக்கையை நாளும் மக்கள் நெஞ்சில் விதைக்க ஒரு கலைஞன் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டான் என்றால் அது மக்கள்திலகமாகத்தான் இருக்க முடியும்! ஆம், காதல் பாடலில்கூட ‘புதுமை உலகம் மலரும் நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்’ என்று வாய்மொழிகின்றானே புலவரின் கைவண்ணத்தில்!

    காணொளி: https://www.youtube.com/watch?v=N_-1NVU1fqo

    https://www.youtube.com/watch?v=N_-1NVU1fqo

    Share
  • எழுந்து வா கலாம்! 

    -சரஸ்வதி ராசேந்திரன்

    தமிழ்  நாட்டின்
    கோடியில் பிறந்தாலும்
    கோடிக்கு ஆசைப்படாத கோமானே!           abdul-kalam
    உன் நாடி  நரம்பெல்லாம்  இந்திய
    நாட்டின் நலம் மட்டும்தானே!

    ஜனாதிபதியானாலும்  நீ
    மாடி வீட்டுக்கு  ஆசைப்படவில்லை
    தேடித் தேடி அலைந்தாலும்  உனைப்போல
    தெய்வமகன்  எங்களுக்குக்  கிடைப்பாரா?

    கூடிக்கூடி அழுதாலும் உன்னைக்
    கூற்றுவன்  திரும்ப விடுவானா?
    ஆடிப் பாடி  ஆண்டவனைத் தொழுதாலும்
    ஆட்கொண்டவன் விடுவிப்பானா?
    எத்தனையெத்தனை பதவிகள் ஏற்றாலும்
    புகழ்போதை என்றுமே  உனக்குப்
    பொய்முகம்  அணிவித்ததில்லை

    மாணவர்களுக்கு  வழிகாட்டியாய்
    மக்களுக்கு  நல்ல தலைவனாய்
    அரசியல்வாதிகளுக்குப்   பாடமாய்க்
    குழந்தைகளுக்குப்  பிடித்தவராய்
    அனைவரையும்  நல்ல மனத்தால்
    ஆட்கொண்டாய் அன்பனே!
    அப்துல்கலாமே! உன்னைக் காலனுக்குக்
    காவு கொடுத்துவிட்டுக்
    கையறு நிலையில் இந்தியாவே
    கலங்கி  நிற்கிறது

    எழுந்து வா கலாமே…!

    Share
  • மனிதரில் மாணிக்கம்

    பவள சங்கரி

    393677
    ஒல்லும் வகையான், அறவினை, ஓவாதே,
    செல்லும்வாய் எல்லாம் செயல் – குறள்

    உரை: செய்யக்கூடிய வகையால், எக்காரணம்கொண்டும் தவிர்க்காமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலையே செய்ய வேண்டும்.

    ஒருவருடைய வாக்கும் மனமும் ஒன்றாக இருப்பது மட்டுமே சத்தியம் என்றும் அதைக் கடைபிடிப்பவரே சத்தியவான் என்பதும் பெரியோர் வாக்கு. எண்ணம், சொல் இரண்டும் முரண்படக் கூடாது. வாக்கும், மனமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பார் காஞ்சிப் பெரியவர். அந்த வகையில் மறைந்த நம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் ஒரு சத்தியவான் என்றே கூறலாம். அவர் தாம் குழந்தைகளுக்கு சொல்லும் அறிவுரைகள் அனைத்தும் தாம் என்றென்றும் கடைபிடிப்பவையே என்று பலமுறை நிரூபித்துள்ளார். அப்படிப்பட்ட சம்பவங்களில் ஒன்று சென்ற இரண்டாண்டுகளுக்கு முன்பு திரு கலாம் அவர்கள் ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவை நடத்திய புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்ள வந்திருந்தபோது நடந்தது.

    மாவரைக்கும் இயந்திரம் (வெட் கிரைண்டர்) ஒன்று வாங்கவேண்டும் என்று எண்ணியவர், அன்றைய நிகழ்ச்சியின் ஆதரவாளராக இருந்த சௌபாக்கியா என்ற ஒரு பிரபலமான வெட் கிரைண்டர் நிறுவனத்தாரிடம் தாங்கள் வாடிக்கையாக விற்கும் உண்மையான தொகையைப் பெற்றுக் கொள்வதாக இருந்தால் நான் உங்களிடம் ஒரு கிரைண்டர் வாங்கிக்கொள்கிறேன் என்றாராம். அவர்கள் எவ்வளவோ வேண்டிக் கேட்டுக்கொண்டும் அதற்குரிய தொகையை கட்டாயப்படுத்தி காசோலையாகக் கொடுத்துவிட்டு வாங்கிச் சென்றாராம். கடைக்காரர், கலாம் அவர்கள் கொடுத்த காசோலையை அவர் நினைவாக அப்படியே பத்திரப்படுத்திக் கொண்டாராம், அதை வங்கியில் போட மனமில்லாமல். ஒரு சில மாதங்களில் கலாம் அவர்களின் உதவியாளரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாம். அவர்கள் அதுவரை கலாம் அவர்களின் காசோலையை வங்கியில் போட்டு பணம் எடுக்காததால், மேற்கொண்டு தாம் கிரைண்டரை வைத்திருப்பது சரியல்ல என்றும், உடனடியாக காசோலையை வங்கியில் செலுத்தி பணம் எடுக்கவில்லையென்றால் திருப்பி அனுப்ப வேண்டியிருக்கும் என்றும் சொன்னாராம். வேறு வழியில்லாமல் கடைக்காரர் அடித்துப்பிடித்து, அந்த காசோலையை நகல் எடுத்துக்கொண்டு வங்கியில் போட்டுவிட்டார்களாம்.. அந்த நகலை சட்டம் போட்டு நினைவுச் சின்னமாக மாட்டி வைத்திருக்கிறார்கள். என்ன ஒரு அற்புதமான தலைவர்! நம் கலாம் அவர்கள் மனிதரில் மாணிக்கம் அல்லவா…

    ‘நாட்டின் பாதுகாப்பை மனதில் வைத்து வேலை செய்த முன்னோடிகளான விஞ்ஞானிகளோடு வேலை செய்கிற அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. இந்தியாவோட ராக்கெட்டுகளை வானத்தில் ஏவுகிற இஸ்ரோ நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கு நான் வேலை பார்த்தேன். இந்தியாவோட முதல் ராக்கெட்டை ஏவுகிற திட்டத்தின் இயக்குநரா நான் இருந்தேன். அப்போதுதான் முதலாவது செயற்கைக்கோள் ரோகிணி வெற்றிகரமாக வானத்தில் ஏவப்பட்டது. அதுக்கப்புறம் நாட்டின் பாதுகாப்புக்கு அவசியமான ஏவுகணைகளை உருவாக்கும் பணியில் சேர்ந்தேன். இந்தியா இப்போ வளரும் நாடு அல்ல, வளர்ந்த நாடு என்று உலகத்துக்கு நிரூபிப்பது போல இருந்தன அந்தப் பணிகள். அப்போதுதான் ‘நான் ஒரு இந்தியன்’ என்ற பெருமிதம் எனக்கு அதிகமானது’- கலாம் அவர்கள் குழந்தைகளிடம் ஆற்றிய உரை. சத்திய வாக்கு! நன்றி : தமிழ் இந்து.

    ‘

    Share
  • ஆன்மீகமும் நானும் (13)

    நடராஜன் கல்பட்டு

    ஐயப்பன் வழிபாடு – 1

    ​

    திருப்பதி, பழனி போன்ற தலங்களுக்கு மக்கள் கூட்டம் செல்வது போல, சபரி மலைக்குச் செல்லும் பக்தர்களின் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஒன்று. முன்னவற்றுக்கு வருடம் பூராவும் மக்கள் செல்வார்கள். ஆனால் சபரி மலைக்கோ பங்குனி / சித்திரையிலும், மார்கழி / தை மாதங்களில் மட்டுமே செல்வார்கள். மற்ற நாட்களில் சபரி மலையில் வீற்றிருக்கும் சுவாமி ஐயப்பனின் கோவில் திறந்திருக்காது. அப்படி இருந்தும் ஆண்டொன்றுக்கு சுமார் 5 கோடிக்கும் மேலான பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.

    சபரி மலை, கேரள மாநிலம், மேற்குத் தொடர்ச்சி மலையில். பதனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஓரிடம்.

    சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்கள் வம்சத்தில் வந்த குறுநில மன்னன் ராஜசேகரன் என்பவன் பந்தளம் என்ற இடத்தை, திருவிதாங்கூர் மன்னரின் கீழ் செயல் பட்டு, ஆண்டு வந்தான். அவன் பிள்ளை வேண்டி சிவனைத் துதித்து வந்தான். ஒரு நாள் அவன் காட்டில் வேட்டையாடி கொண்டிருந்த போது பமபை நதிக் கரையில் கழுத்தில் மணி மாலையுடன் ஒரு ஆண் குழந்தையைக் கண்டான். அப்போது அங்குதோன்றிய ஒரு சிவனடியார் அரசனை அக் குழந்தையை எடுத்துச் சென்று வளர்க்குமாறு கூறினார். அரசனும் அப்படியே அக் குழந்தையை எடுத்துச் சென்று, கழுத்தில் மணி மாலையோடு இருந்ததால், அதற்கு ‘மணிகண்டன்’ எனப் பெயரிட்டு வளர்க்கலானான். சில வருடங்களில் அவனை தக்க குருவிடம் சேர்த்து சகல கலைகளையும் கற்றுத் தரச் செய்தான். இதன் நடுவில் பந்தள ராஜன் மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது. தனக்கே ஒரு குழந்தை பிறந்ததும் ராணிக்கு மணிகண்டன் மீதிருந்த பாசமும், அன்பும் குறைய ஆரம்பித்தது.

    மணி கண்டனுக்குப் பதிமூன்று வயது நிரம்பிய போது அரசன் அவனுக்கு பட்டம் சூட்ட ஏற்பாடுகள் செய்தான். ‘சொந்தக் குழந்தை இருக்கும் போது காட்டில் கண்டெடுத்த குழந்தைக்கு பட்டம் சூட்டுவதா?’ என்ற கேள்வி ராணியின் மனதில் எழுந்தது.

    மணி கண்டன் பட்டத்துக்கு வராது சின்னவன் வந்தால் தனக்கே எல்லா அதிகாரமும் வந்து விடும். நாளடைவில் தானே அரசனாகி விடலாம் என்ற பேராசை கொண்ட மந்திரி ராணிக்கு துர்போதனை செய்தான், ‘நீங்கள் உடல் நலம் சரியில்லை என்று படுத்துக் கொண்டு விடுங்கள். நான் அரச வைத்தியரை வைத்து உங்கள் வியாதியைக் குணப் படுத்த புலிப்பால் கொடுத்தால் தான் முடியும் என்று சொல்ல வைக்கிறேன். அரசரும் நம்பி விடுவ்வார். மணிகண்டன் தானே சென்று புலிப்பால் கொண்டு வருகிறேன் என்று காட்டுக்குப் போவான். அங்கு கொடிய காட்டு விலங்குகளுக்கு இறையாகி விடுவான்’ என்று. ராணியும் ஒப்புக் கொண்டு பிணியால் அவஸ்தைப் படுவது போல நடித்தாள்.

    மந்திரியும் ராணியும் எதிர்பார்த்த படியே மணிகண்டனும் காடடுக்குக் கிளம்பினான். பின் தேவர்களுக்குத் தொந்திரவு கொடுத்து வந்த மகிஷி என்ற அரக்கியை வதம் செய்தான்.

    பின்னர் சிவபெருமான் வேண்டியபடி தேவேந்திரன் மணிகண்டனுக்கு உதவுவதற்காக ஒரு புலியாக உருவெடுத்து மணிகண்டன் முன் தோன்றினான். மணிகண்டன் அதன் மீதேறி அமர, கூடவே ஆண் பெண் தேவர்கள் எல்லாம் ஆண் பெண் புலிகளாக மாறி அவன் பின் கூட்டமாக வந்தனர். இந்தக் காட்சியைக் கண்ட அரசனும், ராணியும் மணிகண்டன் தெய்வக் குழந்தை என்பதை உணர்ந்து அவன் கால்களில் விழுந்து வணங்கினர்.

    மணிகண்டன் தான் பூமியில் அவதரித்ததின் நோக்கம் நிறைவேறி விட்டது. ஆகவே இனி மறையும் நேரம் வந்து விட்டது என்று சொன்னான். பந்தள ராஜன் மணிகண்டனுக்கு அவன் நினைவாக ஒரு கோவில் கட்ட விரும்பி அதற்குத் தக்க இடம் காட்டுமாறு வேண்ட, மணிகண்டன் எய்த அம்பு சபரி மலை சென்று அதன் உச்சியில் குத்தி நின்றது.

    ராமாயணத்தில் ராமனுக்கு ருசி பார்த்துக் கனி கொடுத்த் சபரி இருந்த இடம் அது என்று சொல்லப் படுகிறது.

    பரசுராமரால் தயார் செய்யப் பட்ட மணிகண்டனின் (ஐயப்பனின்) சிலை ஒரு மகர சங்கராந்தி அன்று 18 படிகள் கொண்ட சபரி மலைக் கோயிலில் நிறுவப்பட்டது.

    இன்றும் மகர சங்கராந்தியன்று பந்தளத்தில் இருந்து மணிகண்டனின் ஆபரணங்கள் தலைச் சுமையாகத் தூக்கி வரப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப் பட்டு பூசைகள் நடக்கின்றன. அவ்வாறு ஆபரணங்களை எடுத்து வரும் போது கூடவே ஆகாயத்தில் ஒரு கருடன் பறந்து வந்து பின் கோவிலை மும்முறை வலம் வந்து மறைகிறது. சற்று நேரத்திற்க்குள் கோவிலின் எதிரில் உள்ள அடர்ந்த காடுக

    ள் நிறந்த மலைத் தொடரின் மேலாக ஒரு ஜோதி தோன்றி மறைவதையும் பார்க்க முடிகிறது.

    ஐயப்பன் வழிபாடு ஜாதி, மதம், மொழி, இனம் இவற்றுக்கு அப்பாற்பட்ட ஒன்று. இவ் வழிபாட்டு முறையில் உள்ள சில விசேஷங்கள் பற்றி பார்ப்போம்.

    (தொடரும்…..)

    Share
  • ஆன்மீகமும் நானும் (12)

    நடராஜன் கல்பட்டு 

    பூசையும் பூனையும்

    பக்தியும் சிரத்தையும் கொண்ட ஒருவர் தன் வீட்டில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் கிரமமாகப் பூசைகள் செய்வார். அவருக்கு மூன்று மகன்கள். மூத்தவனுக்கு வயது பத்திருக்கும் போது அவரும் அவர் மனைவியும் ஒரு சாலை விபத்தில் சிக்கி இறந்து விட்டனர். அவரது உறவினர்கள் ஆளுக்கு ஒரு பிள்ளையாக எடுத்துச் சென்று வளர்த்து வந்தனர்.

    மூத்தவன் படித்து முடித்து வேலைக்குப் போக ஆரம்பித்ததும் தனது இரு தம்பிகளையும் தன்னுடனே அழைத்துக் கொண்டான். மூவருமாக மீண்டும் செர்ந்து சந்தோஷமாக இருந்தனர்.

    அப்போது ஒரு நாள் மூத்தவன் சொன்னான், ‘நமது அப்பா ஒவ்வொரு பண்டிகையின் போதும் அழகாகப் பூஜைகள் செய்வார். நாமும் இனி பூஜைகள் செய்ய வேண்டும் நம் வீட்டில்’ என்று. ‘ஆமாம்’ ‘ஆமாம்’ என்று மற்ற இருவரும் தங்கள் தலைகளை ஆட்டினர்.

    விநாயக சதுர்த்தி வந்தது. பெரியவன் கடைக்குப் போய் பூ, பழங்கள், கரும்பு, வாழை இலை இவற்றை வாங்கி வந்தான். இரண்டாமவன், கணிமண் பிள்ளையார், பிள்ளையார் குடை, மஞ்சள் பொடி, சந்தனம், கற்பூரம், ஊதுவத்தி, சாம்பிராணி இவற்றை வாங்கி வந்தான்.

    வீட்டின் ஒரு அறையில் சுவரோரமாக பெருக்கி, தணீர் தெளித்துத் துடைத்து, கோலம் போட்டு, ஒரு கோலம் போட்ட பலகை மீது பிள்ளையாரை வைத்து அவருக்கு மலர் மாலை அலங்காரங்கள் செய்தார்கள் மூவருமாக.

    ‘பூஜையை ஆரம்பிக்கலாமா?’ என்று பெரியவன் கேட்க, கடைசீ பையன் சொன்னான், ‘ஒரு நிமிஷம். அப்பா பூசைகள் செய்யும் போது எப்போதும் ஒரு கருப்புப் பூனையை அந்தத் தூணில் கட்டி விட்டுத் தான் பூசையை ஆரம்பிப்பார். இதோ வந்து விடுகிறேன்’ என்று சொல்லி வெளியே ஓடி சென்று ஒரு கருப்புப் பூனைக் குட்டியுடன் திரும்பினான்.

    அப்பா செய்தது வீட்டில் இருக்கும் பூனை பூசைகள் செய்து கொண்டிருக்கும் போது குறுக்கும் நெடுக்குமாக ஓடி எதையேனும் கொட்டிக் கவிழ்த்து விடாமல் இருக்க வேண்டுமே என்பதற்காத் தான். ஆனால் பிள்ளைகள் நினைத்தார்கள் பூசைக்குப் பூனைக் குட்டி அவசியம் என்று.

    இது ஒரு கதை தான். அனால் இது நிஜமாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை. காரணம் நாம் செய்யும் பூசைகள் பற்றியோ, செய்யும் செயல்களின் காரணங்கள் பற்றியோ அடுத்த தலை முறைக்கு நாம் விளக்குவது இல்லை.

    பூசைகள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் தான் அவை செய்யப் படுவதின் பின்னணியைக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதும்.

    (தொடரும்……)

    Share
  • ஆன்மீகமும் நானும் (11)

    நடராஜன் கல்பட்டு

    மாயை

    இவ்வுலகில் நாம் கண்ணால் காண்பதெல்லாம் மாயை என்கிறார்கள் ஆன்மீகவாதிகள். ‘மாயை என்பது என்ன சற்று விளக்க முடியுமா?’ என்று கேட்டார் ஒருவர் சுவாமி தயானந்தாவை. மாயையை விளக்க ஒரு குட்டிக் கதை சொன்னார் சுவாமிகள்.

    முன்னொரு காலத்தில் மலையாளப் பிரதேசத்தில் ஒரு தனவந்தர் இருந்தார். சாகும் தருவாயில் இருந்த அவர் தனது மூன்று மகன்களையும் அருகில் அழைத்து, ‘பிள்ளைகளே நான் இன்னும் எவ்வளவு நாட்கள் இருப்பேன் என்று தெரியாது. அதனால்தான் ஒரு உயில் பத்திரம் எழுதி இருக்கிறேன். அதன் நகல்களை உங்களிடம் தருகிறேன். நான் இறந்த பின் நீங்கள் மூவரும் அந்த உயிலில் கண்டுள்ளபடி எனது சொத்துக்களைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் சண்டை சச்சரவு ஏதுமின்றி. உங்கள் அம்மாவை நீங்கள் அன்புடன் ஆதரித்து அவள் கண்களில் என்றுமே கண்ணீர் வராது பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று சொல்லிய அவர் சற்று நேரத்தில் கண் மூடினார்.

    ஈமச் சடங்குகள் நடந்து முடிந்தன. அதன் பின் அந்த மூவரும் தங்களிடம் இருந்த உயிலின் நகல்களைப் பிரித்துப் பார்த்தனர்.

    அதில் பின் வருமாறு கண்டிருந்தது.

    ‘என் குடும்பம் வசிக்கும் இந்த வீடு எனது முதல் மகனுக்குச் சேரவேண்டும். எனது கடையும் வியாபாரமும் என் இரண்டாவது மகனுக்குச் சேர வேண்டும். மூன்றாவது மகனுக்கு எனது நெல் விளையும் நிலங்களும், தென்னந்த் தோப்பும் சொந்தமாக வேண்டும்.’

    தனவந்தரிடம் பதினேழு யானைகள் இருந்தன. அவற்றையும் பங்கு போட வேண்டுமே? அவர் மனதிலே உள்ளூர ஒரு எண்ணம், ‘நான் எனது சொத்துக்களை எல்லாம் விற்று மூவரும் சமமாகப் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்று எழுதி இருந்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் கஷடப் பட்டு சேர்த்த சொத்துக்கள் பிறர் கைகளுக்கல்லவா போய்விடும். ஆனால் அதே சமயம் நான் நினைத்துள்ள படி பிரித்தால் முதல் மகனுக்கு மிகக் குறைந்த மதிப்புள்ள சொத்தும் மூன்றாம் மகனுக்கு மிக அதிகமான மதிப்புள்ள சொத்தும் அல்லவா போய்ச் சேர்ந்து விடும். அதனால் யானைகளைப் பிரிக்க்கும் போது அதை சரி செய்திடல் வேண்டும்.’ இப்படி எண்ணிய அவர் உயிலில் எழுதி இருந்தார், ‘எனது பதினேழு யானைகளில் அரை (1/2) பாகம் பெரிய மகனைச் சேர வேண்டும், மூன்றில் ஒரு பங்கு (1/3) இரண்டாவது மகனுக்கும், ஒன்பதில் ஒரு பங்கு (1/9) மூன்றாவது மகனுக்கும் ஆகும்’ என்று.

    முதல் மகன் சொன்னான், ‘பதினேழில் பாதி எட்டரை. ஆகவே எனக்கு ஒன்பது யானைகள் வேண்டும்.’

    இரண்டாமவன் சொன்னான், ‘அது ஞாயமில்லை. நான் ஒத்துக்கொள்ள முடியாது.’

    மூன்றாவது மகன் சொன்னான், ‘பதினேழில் ஒன்பதில் ஒரு பங்கு ஒன்றும் எட்டின் கீழ் ஒன்பதும் (1 and 8/9) ஆகும். 8/9 என்பது 1/2யயை விடப் பெரியது. ஆகவே ஒண்ணும் எட்டின் கீழ் ஒன்பது என்பதை இரண்டு என்று எடுத்துக் கொள்ள வேண்டும். ஆக எனக்கு இரண்டு யானைகள் தரப் பட வேண்டும்.’ சண்டை வலுத்தது. சத்தமும் பெரிதாகியது.

    அவ்வழியே மந்திரி தன் யானை மீது சென்று கொண்டிருந்தார். இவர்கள் மூவரும் போடும் சண்டையைப் பார்த்தது என்ன வென்று விசாரித்தார்.

    “கவலைப் படாதீர்கள் எனது யானையையும் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி, “பதினெட்டில் பாதி 9. இது பெரிய மகனுக்கு. 18ல் மூன்றில் ஒரு பகுதி 6. இது இரண்டாவது மகனுக்கு. 18ல் ஒன்பதில் ஒரு பங்கு 2. இது மூன்றாவது பிள்ளைக்கு” என்றார் மந்திரி. ஆக 17 யானைகளை இறந்தவரின் உயில் படிப் பிரித்து (9+6+2 = 17) அவர்களிடம் சேர்த்து விட்டுத் தான் வந்த ய்னையின் மீதேறித் தன் வழிச் சென்றார் அவர்.

    பங்கு போடும் போதிருந்த பதினெட்டாவது யானை பங்கு போட்ட பின் மறைந்ததே அது தான் மாயை என்றார் சுவாமீஜீ.

    வேளியே சென்று விட்டு வீடு திரும்புகிறோம். தெரு விளக்கின் மங்கலான ஒளியில் நம் வீட்டு வாசலில் வளைந்து வளைந்து ஒரு பொருள் கிடக்கிறது. இதோ வால் சற்று ஆடுவது போல் இருக்கிறதே. இந்தப் பக்கம் தலை கூட சற்றே எழும்புகிறதே. நெஞ்சு பட படக்கிறது. பயத்தில் நாக்கு வறண்டு போகிறது. கால்கள் சற்றே நடுங்க ஆரம்பிக்கின்றன. சத்தம் செய்யாமல் மெதுவாகக் கையை நம் பைக்குள் விட்டுக் கை விளக்கை எடுத்து இயக்குகிறோம். அடச் சே. கீழே கிடப்பது கயிறு. நாம் அதைப் பாம்பென்று எண்ணிப் பயந்ததை நினைத்து நாமே சிரித்துக் கொள்கிறோம்.

    கயிறு பாம்பானது மாயை. அம் மாயையைப் போக்கிப் பாம்பைக் கயிறாக மாற்றியது இருளை நீக்கிய விளக்கின் வெளிச்சம். இதைப் போலத்தான் நம் மனம் காணும் மாயைகளை நீக்கத் தேவை மெய்ஞான ஒளி. அவ்வொளியினை அளிப்பதே ஆன்மீகம்.

    (தொடரும்….)

    நடராஜன் கல்பட்டு

    –
    இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

    நடராஜன் கல்பட்டு

    எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
    வேறொன் றறியேன் பராபரமே

    Share