ஆன்மீகமும் நானும் (13)
நடராஜன் கல்பட்டு
ஐயப்பன் வழிபாடு – 1
திருப்பதி, பழனி போன்ற தலங்களுக்கு மக்கள் கூட்டம் செல்வது போல, சபரி மலைக்குச் செல்லும் பக்தர்களின் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஒன்று. முன்னவற்றுக்கு வருடம் பூராவும் மக்கள் செல்வார்கள். ஆனால் சபரி மலைக்கோ பங்குனி / சித்திரையிலும், மார்கழி / தை மாதங்களில் மட்டுமே செல்வார்கள். மற்ற நாட்களில் சபரி மலையில் வீற்றிருக்கும் சுவாமி ஐயப்பனின் கோவில் திறந்திருக்காது. அப்படி இருந்தும் ஆண்டொன்றுக்கு சுமார் 5 கோடிக்கும் மேலான பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.
சபரி மலை, கேரள மாநிலம், மேற்குத் தொடர்ச்சி மலையில். பதனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஓரிடம்.
சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்கள் வம்சத்தில் வந்த குறுநில மன்னன் ராஜசேகரன் என்பவன் பந்தளம் என்ற இடத்தை, திருவிதாங்கூர் மன்னரின் கீழ் செயல் பட்டு, ஆண்டு வந்தான். அவன் பிள்ளை வேண்டி சிவனைத் துதித்து வந்தான். ஒரு நாள் அவன் காட்டில் வேட்டையாடி கொண்டிருந்த போது பமபை நதிக் கரையில் கழுத்தில் மணி மாலையுடன் ஒரு ஆண் குழந்தையைக் கண்டான். அப்போது அங்குதோன்றிய ஒரு சிவனடியார் அரசனை அக் குழந்தையை எடுத்துச் சென்று வளர்க்குமாறு கூறினார். அரசனும் அப்படியே அக் குழந்தையை எடுத்துச் சென்று, கழுத்தில் மணி மாலையோடு இருந்ததால், அதற்கு ‘மணிகண்டன்’ எனப் பெயரிட்டு வளர்க்கலானான். சில வருடங்களில் அவனை தக்க குருவிடம் சேர்த்து சகல கலைகளையும் கற்றுத் தரச் செய்தான். இதன் நடுவில் பந்தள ராஜன் மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது. தனக்கே ஒரு குழந்தை பிறந்ததும் ராணிக்கு மணிகண்டன் மீதிருந்த பாசமும், அன்பும் குறைய ஆரம்பித்தது.
மணி கண்டனுக்குப் பதிமூன்று வயது நிரம்பிய போது அரசன் அவனுக்கு பட்டம் சூட்ட ஏற்பாடுகள் செய்தான். ‘சொந்தக் குழந்தை இருக்கும் போது காட்டில் கண்டெடுத்த குழந்தைக்கு பட்டம் சூட்டுவதா?’ என்ற கேள்வி ராணியின் மனதில் எழுந்தது.
மணி கண்டன் பட்டத்துக்கு வராது சின்னவன் வந்தால் தனக்கே எல்லா அதிகாரமும் வந்து விடும். நாளடைவில் தானே அரசனாகி விடலாம் என்ற பேராசை கொண்ட மந்திரி ராணிக்கு துர்போதனை செய்தான், ‘நீங்கள் உடல் நலம் சரியில்லை என்று படுத்துக் கொண்டு விடுங்கள். நான் அரச வைத்தியரை வைத்து உங்கள் வியாதியைக் குணப் படுத்த புலிப்பால் கொடுத்தால் தான் முடியும் என்று சொல்ல வைக்கிறேன். அரசரும் நம்பி விடுவ்வார். மணிகண்டன் தானே சென்று புலிப்பால் கொண்டு வருகிறேன் என்று காட்டுக்குப் போவான். அங்கு கொடிய காட்டு விலங்குகளுக்கு இறையாகி விடுவான்’ என்று. ராணியும் ஒப்புக் கொண்டு பிணியால் அவஸ்தைப் படுவது போல நடித்தாள்.
மந்திரியும் ராணியும் எதிர்பார்த்த படியே மணிகண்டனும் காடடுக்குக் கிளம்பினான். பின் தேவர்களுக்குத் தொந்திரவு கொடுத்து வந்த மகிஷி என்ற அரக்கியை வதம் செய்தான்.
பின்னர் சிவபெருமான் வேண்டியபடி தேவேந்திரன் மணிகண்டனுக்கு உதவுவதற்காக ஒரு புலியாக உருவெடுத்து மணிகண்டன் முன் தோன்றினான். மணிகண்டன் அதன் மீதேறி அமர, கூடவே ஆண் பெண் தேவர்கள் எல்லாம் ஆண் பெண் புலிகளாக மாறி அவன் பின் கூட்டமாக வந்தனர். இந்தக் காட்சியைக் கண்ட அரசனும், ராணியும் மணிகண்டன் தெய்வக் குழந்தை என்பதை உணர்ந்து அவன் கால்களில் விழுந்து வணங்கினர்.
மணிகண்டன் தான் பூமியில் அவதரித்ததின் நோக்கம் நிறைவேறி விட்டது. ஆகவே இனி மறையும் நேரம் வந்து விட்டது என்று சொன்னான். பந்தள ராஜன் மணிகண்டனுக்கு அவன் நினைவாக ஒரு கோவில் கட்ட விரும்பி அதற்குத் தக்க இடம் காட்டுமாறு வேண்ட, மணிகண்டன் எய்த அம்பு சபரி மலை சென்று அதன் உச்சியில் குத்தி நின்றது.
ராமாயணத்தில் ராமனுக்கு ருசி பார்த்துக் கனி கொடுத்த் சபரி இருந்த இடம் அது என்று சொல்லப் படுகிறது.
பரசுராமரால் தயார் செய்யப் பட்ட மணிகண்டனின் (ஐயப்பனின்) சிலை ஒரு மகர சங்கராந்தி அன்று 18 படிகள் கொண்ட சபரி மலைக் கோயிலில் நிறுவப்பட்டது.
இன்றும் மகர சங்கராந்தியன்று பந்தளத்தில் இருந்து மணிகண்டனின் ஆபரணங்கள் தலைச் சுமையாகத் தூக்கி வரப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப் பட்டு பூசைகள் நடக்கின்றன. அவ்வாறு ஆபரணங்களை எடுத்து வரும் போது கூடவே ஆகாயத்தில் ஒரு கருடன் பறந்து வந்து பின் கோவிலை மும்முறை வலம் வந்து மறைகிறது. சற்று நேரத்திற்க்குள் கோவிலின் எதிரில் உள்ள அடர்ந்த காடுக
ள் நிறந்த மலைத் தொடரின் மேலாக ஒரு ஜோதி தோன்றி மறைவதையும் பார்க்க முடிகிறது.
ஐயப்பன் வழிபாடு ஜாதி, மதம், மொழி, இனம் இவற்றுக்கு அப்பாற்பட்ட ஒன்று. இவ் வழிபாட்டு முறையில் உள்ள சில விசேஷங்கள் பற்றி பார்ப்போம்.
(தொடரும்…..)