இலக்கியம்கட்டுரைகள்நறுக்..துணுக்...

மனிதரில் மாணிக்கம்

பவள சங்கரி

393677
ஒல்லும் வகையான், அறவினை, ஓவாதே,
செல்லும்வாய் எல்லாம் செயல் – குறள்

உரை: செய்யக்கூடிய வகையால், எக்காரணம்கொண்டும் தவிர்க்காமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலையே செய்ய வேண்டும்.

ஒருவருடைய வாக்கும் மனமும் ஒன்றாக இருப்பது மட்டுமே சத்தியம் என்றும் அதைக் கடைபிடிப்பவரே சத்தியவான் என்பதும் பெரியோர் வாக்கு. எண்ணம், சொல் இரண்டும் முரண்படக் கூடாது. வாக்கும், மனமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பார் காஞ்சிப் பெரியவர். அந்த வகையில் மறைந்த நம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் ஒரு சத்தியவான் என்றே கூறலாம். அவர் தாம் குழந்தைகளுக்கு சொல்லும் அறிவுரைகள் அனைத்தும் தாம் என்றென்றும் கடைபிடிப்பவையே என்று பலமுறை நிரூபித்துள்ளார். அப்படிப்பட்ட சம்பவங்களில் ஒன்று சென்ற இரண்டாண்டுகளுக்கு முன்பு திரு கலாம் அவர்கள் ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவை நடத்திய புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்ள வந்திருந்தபோது நடந்தது.

மாவரைக்கும் இயந்திரம் (வெட் கிரைண்டர்) ஒன்று வாங்கவேண்டும் என்று எண்ணியவர், அன்றைய நிகழ்ச்சியின் ஆதரவாளராக இருந்த சௌபாக்கியா என்ற ஒரு பிரபலமான வெட் கிரைண்டர் நிறுவனத்தாரிடம் தாங்கள் வாடிக்கையாக விற்கும் உண்மையான தொகையைப் பெற்றுக் கொள்வதாக இருந்தால் நான் உங்களிடம் ஒரு கிரைண்டர் வாங்கிக்கொள்கிறேன் என்றாராம். அவர்கள் எவ்வளவோ வேண்டிக் கேட்டுக்கொண்டும் அதற்குரிய தொகையை கட்டாயப்படுத்தி காசோலையாகக் கொடுத்துவிட்டு வாங்கிச் சென்றாராம். கடைக்காரர், கலாம் அவர்கள் கொடுத்த காசோலையை அவர் நினைவாக அப்படியே பத்திரப்படுத்திக் கொண்டாராம், அதை வங்கியில் போட மனமில்லாமல். ஒரு சில மாதங்களில் கலாம் அவர்களின் உதவியாளரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாம். அவர்கள் அதுவரை கலாம் அவர்களின் காசோலையை வங்கியில் போட்டு பணம் எடுக்காததால், மேற்கொண்டு தாம் கிரைண்டரை வைத்திருப்பது சரியல்ல என்றும், உடனடியாக காசோலையை வங்கியில் செலுத்தி பணம் எடுக்கவில்லையென்றால் திருப்பி அனுப்ப வேண்டியிருக்கும் என்றும் சொன்னாராம். வேறு வழியில்லாமல் கடைக்காரர் அடித்துப்பிடித்து, அந்த காசோலையை நகல் எடுத்துக்கொண்டு வங்கியில் போட்டுவிட்டார்களாம்.. அந்த நகலை சட்டம் போட்டு நினைவுச் சின்னமாக மாட்டி வைத்திருக்கிறார்கள். என்ன ஒரு அற்புதமான தலைவர்! நம் கலாம் அவர்கள் மனிதரில் மாணிக்கம் அல்லவா…

‘நாட்டின் பாதுகாப்பை மனதில் வைத்து வேலை செய்த முன்னோடிகளான விஞ்ஞானிகளோடு வேலை செய்கிற அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. இந்தியாவோட ராக்கெட்டுகளை வானத்தில் ஏவுகிற இஸ்ரோ நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கு நான் வேலை பார்த்தேன். இந்தியாவோட முதல் ராக்கெட்டை ஏவுகிற திட்டத்தின் இயக்குநரா நான் இருந்தேன். அப்போதுதான் முதலாவது செயற்கைக்கோள் ரோகிணி வெற்றிகரமாக வானத்தில் ஏவப்பட்டது. அதுக்கப்புறம் நாட்டின் பாதுகாப்புக்கு அவசியமான ஏவுகணைகளை உருவாக்கும் பணியில் சேர்ந்தேன். இந்தியா இப்போ வளரும் நாடு அல்ல, வளர்ந்த நாடு என்று உலகத்துக்கு நிரூபிப்பது போல இருந்தன அந்தப் பணிகள். அப்போதுதான் ‘நான் ஒரு இந்தியன்’ என்ற பெருமிதம் எனக்கு அதிகமானது’- கலாம் அவர்கள் குழந்தைகளிடம் ஆற்றிய உரை. சத்திய வாக்கு! நன்றி : தமிழ் இந்து.

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comment here