சு. கோதண்டராமன்

20 வீரரும் சிற்பியும்

vallavan-kanavu12

இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா

றிதுவன்றே என்றனக் கோர் சேமம்- இதுவன்றே

மின்னுஞ் சுடருருவாய் மீண்டொயென் சிந்தனைக்கே

இன்னுஞ் சுழல்கின்ற திங்கு.

-அம்மையார்

மயிலாடுதுறையில் காவிரிக்கரையில் ஒரு சத்திரம். விடியற்காலை. அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஒரு இளைஞன் எழுந்து வெளியே வந்தான். சுக்கிரன் உதயமாகிவிட்டதா என்று கிழக்கு திசையைப் பார்த்தான். நிலம் தெளிந்துவிட்டது, புறப்படவேண்டியது தான் என்று உறுதிசெய்து கொண்டவனாக மீண்டும் தான் படுத்திருந்த இடத்திற்கு வந்தான். அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு சிறு துணி மூட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான்.

“தம்பி, வடக்குப் பக்கம் போறீங்களா?” என்று ஒரு குரல் வந்தது. திண்ணையில் படுத்திருந்த ஒருவர் கூப்பிட்டார். “ஆமாங்க” என்றான் இளைஞன். “கொஞ்சம் இருங்க, நானும் வரேன். சேர்ந்து போகலாம்” என்றார் அவர்.

எழுந்தார், தரையில் விரித்திருந்த துண்டை உதறினார், முண்டாசாகக் கட்டிக்கொண்டார். “சரி, வாங்க போவோம்” என்றார்.

இருவரும் வடக்குத் திசை நோக்கிப் புறப்பட்டனர்.

“தம்பி, எங்கே கொள்ளிடம் தாண்டியா, முன்னாடியா?”

“நான் காஞ்சிபுரம் வரைக்கும் போகணுங்க. தில்லையிலே இரண்டு நாள் தங்கிட்டு அப்புறம் போகலாம்னு இருக்கேன்.”

“சொந்த ஊரு காஞ்சிபுரமா அல்லது இந்தப் பக்கமா?”

“காஞ்சிபுரம் பக்கம் தாங்க சொந்த ஊரு. சிராப்பள்ளியிலே மூணு  வருசமா வேலை. இப்போ அது முடிஞ்சு வீட்டுக்குப் போறேங்க. தில்லையிலே புதுசா ஒரு உலோகச் சிலை செஞ்சிருக்காங்களாம். ரொம்ப ஒசத்தியா இருக்குன்னு பேசிக்கிட்டாங்க. அதைப் பார்க்கலாமின்னு தான் போறேன்.”

“உண்மை தான் தம்பி. நானும் அந்த ஆடலரசனைப் பார்க்கத்தான் போறேன். என்ன வேலை பாக்கிறீங்க?

“சிற்பிங்க. சிராப்பள்ளியிலே ஒரு பெரிய பாறை இருக்குங்க. அதிலே ரெண்டு இடத்திலே குடைஞ்சு அங்கே சிற்பம் செதுக்கினோங்க. என்னைப் போல இன்னும் இருபது பேர் வேலை செஞ்சாங்க. “

“யாரு ஏற்பாடு சோழராசாவா, பல்லவ ராசாவா?”

“சோழராசா கேட்டுக்கிட்டாராம். அதன் பேரிலே பல்லவ ராசா எங்களை அனுப்பிச்சு வேலை செய்யச் சொன்னாரு. சோழநாட்டிலே கருங்கல் வேலை தெரிஞ்ச சிற்பிகள் இல்லையாமே? நாங்க ஒரு இருபது பேருக்குப் பயிற்சி கொடுத்தோம்.“

“உண்மைதான் தம்பி. இங்கே எல்லாம் சுதை வேலை தான்.

“அண்ணன் இந்தப் பக்கத்து ஆளுங்களா?”

“ஆமாம் தம்பி. நான் சோழநாட்டுக்காரன். ராசா இருக்காரே பழையாறை அங்கே தான் வீடு இருக்கு. படையிலே முப்பது வருசம் இருந்தேன். வயசாயிட்டுது. போதும்னுட்டு இப்போ விவசாயத்தைக் கவனிச்சிக்கிட்டு இருக்கேன். “

“நிறைய சண்டையெல்லாம் போட்டிருப்பீங்க?”

“ஆமாம் தம்பி. சின்ன வயசிலே என்னை உறையூருக்கு அனுப்பிச்சாங்க. அதிலேருந்து அங்கேயே இருந்துட்டேன். இப்போ பழையாறையிலே ராசா இருக்காரே, புண்ணிய வளவன் அவரோட தம்பி புகழ் வளவன் உறையூரிலே இருந்தாரு. அவரோட தலைமையிலே கருவூருக்குப் போய்ச் சண்டை போட்டு ஜெயிச்சோம். களப்பிர மன்னர்களை ஒவ்வொருத்தரா ஜெயிச்சு சேரநாடு முழுக்க சோழராசாவுக்குச் சொந்தமா ஆயிடிச்சி.”

“கடைசியா எப்போ போருக்குப் போனீங்க?”

“கடைசியா நாலு வருசம் முந்தி. உறையூர் புகழ்ச்சோழ ராசா கப்பம் கட்டாத சின்ன ராசாவோட எல்லாம் சண்டை போட்டுக் கப்பம் கட்ட வெச்சாரு. அதிலே பாருங்க, மலையரண் அப்படின்னு ஒரு சின்ன குறுநிலம். அதிலே அதிகன்னு ஒருத்தரு இருந்தாரு. அவரு கப்பம் கட்டமாட்டேன்னு சொன்னதிலே சோழராசாவுக்குக் கோவம் வந்து, “அவன் நாட்டுக்குள்ளே புகுந்து எதிரிப் படை வீரர்கள் தலையை வெட்டிக் கொண்டுவாங்க”ன்னுட்டார். நாங்களும் போனோம். தலைகளைக் கொண்டுவந்து ராசா காலடியிலே வெச்சோம். ஒண்ணு ஒண்ணாப் பார்த்துக்கிட்டே வந்தாரு. ஒரு தலையிலே   சடை முடி இருந்தது. ராசாவுக்கு மனசு கலங்கிப் போச்சு. இது சிவனடியாரா இருக்குமோன்னு நினைச்சாரு. ஐயோ தப்புப் பண்ணிட்டேனேன்னு கதறினாரு. மந்திரியைக் கூப்பிட்டு, “என் பிள்ளைக்கு முடி சூட்டுங்க. நான் இனிமே உயிர் வாழ விரும்பல்லை”ன்னு சொல்லித் தீ வளர்த்து அதிலே இறங்கிட்டாருங்க.* நாம் செய்த தப்புக்கு அவரு உயிரை விடும்படியா ஆயிடிச்சேன்னு எங்களுக்கெல்லாம் ரொம்பக் கஷ்டமாயிடிச்சி.  அதுவே கடைசியா இருக்கட்டும்னு நான் படையிலேருந்து விலகிட்டேன்.”

“படைவீரர்களைத்தானே நீங்க கொன்னீங்க? சும்மா இருந்த சிவனடியாரைக் கொல்லல்லியே?”

“படைவீரர் தான். எதிரியா இருந்தாலும் சிவனடியாரைக் கொல்லக் கூடாதுங்கிற அளவுக்கு ராசாவோட சிவபக்தி இருந்தது.”

“அப்படித்தாங்க எங்க பல்லவ நாட்டிலே காளத்திங்கிற ஊரிலே மலை மேலே லிங்க வடிவிலே ஒரு பாறை இருந்திச்சு. அதை சிவலிங்கமா நினைச்சு ஒரு ஐயர் பூசை பண்ணிக்கிட்டு இருந்தார். அதைப் பார்த்துட்டு ஒரு காட்டு வேடன் தானும் பூசை பண்றேன்னு ஆரம்பிச்சாருங்க. ஒரு நாளைக்கு சாமி கண்ணிலேருந்து ரத்தம் வருதுன்னு சொல்லி தன் கண்ணையே புடுங்கி அப்பிட்டாருங்க.” *

“அதே மாதிரி பாருங்க. புகழ்த்துணையார் என்கிறவர் சோழநாட்டிலே செருவிலிபுத்தூர் என்ற ஊரிலே இருந்தாரு. அப்போ அந்த ஊரிலே பஞ்சம் வந்தது. எல்லாரும் ஊரை விட்டு வெளியூருக்குப் போயிட்டாங்க. அவர் பசியில் வாடினார். நானும் ஊரை விட்டுப் போயிட்டா கோயில்லே உள்ள சாமி பட்டினி கிடப்பாரேன்னு அங்கேயே இருந்தார். ஒரு நாள் பசியிலே  மயக்கம் வந்து லிங்கத்தின் தலைமேலேயே திருமஞ்சனக் குடத்தைப் போட்டுட்டு விழுந்தார். *

“இதே சோழநாட்டிலே சண்டேசர்னு ஒருத்தர். மாடு மேய்ச்சுக்கிட்டிருந்த அவர் மணல்லே லிங்கம் செஞ்சு பூசை பண்ணிக்கிட்டு இருந்தாரு. மாட்டுப் பாலை எல்லாம் அதுக்கு அபிஷேகம் பண்ணிட்டாரு. அதனாலே அவங்க அப்பாவுக்குக் கோவம் வந்து அந்த மணல் லிங்கத்தை கலைச்சுட்டார். சண்டேசர் என்ன செஞ்சார் தெரியுமா? அரிவாளை எடுத்து வந்து அப்பா காலையே வெட்டிட்டாரு.”*

“பக்தி மிகுதியாலே இவங்க  சாதாரண சனங்க செய்ய முடியாத வேலையைச் செஞ்சு புகழ் அடைஞ்சுட்டாங்க.”

“இங்கே காழிலே ஆழிப்பேரலை வந்தபோது இளம் புள்ளைங்க எல்லாம் தென்னைமர உச்சியிலே லிங்கத்தைக் கொண்டு வெச்சுக்கிட்டு இருந்தாங்க. எல்லாரும் உசிரு போனாலும் இந்த லிங்கத்தைக் காப்பாத்தியே தீருவோம்னு புடிவாதமா இருந்தாங்க. நல்ல காலம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. அதிலே தொடங்கி சனங்க லிங்கத்தையே கடவுளா நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒசந்த பக்தர்களுக்கு இது சரி. ஆனா சாதாரண சனங்களுக்கு இது சரி வராது தம்பி. அடையாளம் அடையாளமாத் தான் இருக்கணும். அதுக்கு ஒரு எல்லை உண்டு. அடையாளத்தையே கடவுளா நினைச்சா, உண்மையான கடவுளை மறந்துடுவாங்க. பிற்காலத்திலே பல அடையாளங்களுக்கு இடையிலே சண்டை பூசல் வரும். “

“புரியல்லீங்களே.”

“கடவுளுக்கு லிங்கம்ங்கிறது ஒரு அடையாளம். இப்போ புதுசா வந்திருக்கிற ஆடலரசன் சிலை ஒரு அடையாளம். படுத்திட்டிருக்கிற கோவிந்தராசா சிலையும் அதே கடவுளுக்கான இன்னொரு அடையாளம். அடையாளத்தையே கடவுளா நினைச்சா என் கடவுள் உன் கடவுள்னு அடிச்சுக்குவாங்க. உண்மையிலே கடவுள் ஒண்ணு தான். அதைக் காணணும்னா அடையாளங்களைக் கடந்து உள்ளே போகணும் தம்பி.

“அம்மையார் கடவுளுடைய உருவத்தைப் பல வகையிலே வருணிக்கிறாங்க. தலையிலே சடை, கழுத்திலே பாம்பு, இடுப்பிலே புலித்தோலு, காலிலே கழல்னு எல்லாம் சொல்றாங்க. இந்த உருவ வர்ணனை எல்லாம் குழந்தைகளுக்கு மனசிலே பதியறதுக்காக சொல்லுறது. கடவுளோட உண்மையான வடிவம் சோதி வடிவம்தான். பக்குவம் அடைய அடைய உருவத்தை விட்டு, கண்ணுக்குத் தெரியற சோதிக்கு நகரணும். அப்புறம் அதையும் விட்டு மனசாலே பார்க்கிற சோதிக்கு நகரணும். அது தாங்க அவங்க சொல்ற பத்திமை. “மின்னும் சுடருருவாய் மீண்டாய் என் சிந்தனைக்கே இன்னும் சுழல்கின்றது இங்குஅப்படின்னு சொல்றாங்க.

“சரியாச் சொன்னீங்க அண்ணே. அம்மையார் பாட்டெல்லாம் நல்லா ஆழ்ந்து படிச்சிருக்கீங்கன்னு தெரியுது.  தமிழ்நாட்டிலே சமணம் குறைஞ்சு சைவம் வளர்ந்ததுக்கு முதல் காரணம் அம்மையார்னு சொல்றாங்க, உண்மையா?”

“உண்மை தான் தம்பி. சமணர்கள் பல பேர் சைவர்கள் ஆயிட்டாங்க ஆனாலும் சமணம் இன்னும் முழுசா அழியல்லே. சைவம் வளரணும்னா கண்ணப்பர், சண்டேசர் போல உணர்ச்சிவசப்பட்ட பக்தியா  இல்லாம அம்மையாரைப் போல ஆழ்ந்த நிதானமான பக்தி உள்ளவங்களா நிறைய மகான்கள் பொறக்கணும்.“

“எங்க பல்லவ நாட்டிலே ஒரு மகான் தோன்றி இருக்காருங்க. அவர் முதல்லே சமண சாமியாரா இருந்தவர், அறுபது வயசுக்கு மேலே சைவத்துக்கு வந்து சேர்ந்தாருங்க. அவராலே எங்க ராசா மகேந்திர பல்லவரும் சைவத்துக்கு வந்திட்டாரு. அதனாலே தான் சிராப்பள்ளிலே குகை அமைச்சு சிவனோட சிலையைச் செதுக்கச் சொல்லி ஏற்பாடு செஞ்சாருங்க.”

“நானும் கேள்விப்பட்டேன். ஊர் ஊராப் போயி பாட்டெல்லாம் பாடறாராம்.”

“ஆமாங்க. கையிலே உழவாரத்தை வெச்சுகிட்டு கோயில்கள்லே உள்ள முள் புதரெல்லாம் சுத்தம் பண்றாரு. எல்லாரும் கோவிலுக்கு வாங்க, சிவனைக் கும்பிடுங்கன்னு சொல்றாரு. சனங்க கூட்டம் கூட்டமா அவர் பின்னாடி போறாங்க.”

“நம்ம தமிழ்ச் சமூகத்துக்கு நல்ல காலம் வந்திடிச்சின்னு தோணுது. இந்தக் காழி ஒரு புண்ணிய பூமி தம்பி. இங்கே ஒரு மகான் பிறப்பார்னு எங்க சோழராசாவோட முன்னோர் ஒருத்தர் கனவு கண்டாராம். அதிலேருந்து தான் சோழநாடு வர வர முன்னேறி வருதுன்னு சொல்றாங்க. பார்ப்போம், அந்த மகானும் பிறந்து சைவத்தை அதன் உண்மையான பொருளில் மக்கள் கடைப்பிடிக்கிறாப்பலே செய்வார்னு நம்பிக்கை இருக்கு, தம்பி.

“பாருங்க, பேசிக்கிட்டே வந்ததிலே நடந்து வந்ததே தெரியல்லே. காழி வந்திடிச்சி. இங்கே தங்கி குளிச்சு, சாப்பிட்டு விட்டு வெய்யில் தாழ்ந்ததும் புறப்பட்டா இரவுச் சாப்பாட்டுக்கு தில்லைக்குப் போயிடலாம்.”

—————————– ————————— —————————————————–

* இந்தக் கதைகள் பெரியபுராணத்தில் உள்ளன.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க