Advertisements
Featuredஇலக்கியம்பத்திகள்

அவன்,அது,ஆத்மா (34)

ஒரு எளிய மனிதனின் சுயசரிதை

மீ.விசுவநாதன்

அத்யாயம்: 34

“கல்லிடைக்குறிச்சியில் கவிஞர்கள்”

கல்லிடைக்குறிச்சியின் சுற்றுப்புறச் சூழலும், தெளிந்த தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரும் அருமையான கவிஞர்களை உருவாக்கியிருந்ததை அவன் படித்தும், நேரில் கண்டு அனுபவித்தும் இருக்கிறான். அந்த ஊரில் குடியிருக்கும் ஸ்ரீ ஆதிவராகப் பெருமாளைப் பற்றியும், தாமிரபரணி, கன்னடியன் கால்வாய் பற்றியும் தொண்ணூற்றி ஆறு வகை தமிழ்ப் பிரபந்தங்களில் ஒன்றான அகத்துறையில் எழுதிய “திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக் கோவை” என்ற கவிதை நூலை நம்மூர்க் கவிஞர் இயற்றி இருக்கிறார் என்று பேங்க் கிருஷ்ணமூர்த்தி மாமா, அவன் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அவனிடம் கூறியதோடு மட்டுமல்லாது, அவனுக்கு அதுபோன்ற கவிதைகளைப் படிப்பதில் ஆர்வம் இருப்பதை அறிந்ததால் அவரிடம் இருந்த அந்த நூலைத் தந்து படிக்கச் சொன்னார். அந்தக் கவிதை நூல் அவனுக்குப் புது அனுபவமாக இருந்தது.

கிருஷ்ணமூர்த்தி மாமாவே அந்த நூலில் இருக்கும் சில இடங்களுக்கு விளக்கமும் சொன்னார். வடமொழி வல்லுனரான ஸ்ரீ சங்கர சர்மா என்பவர் எழுதிய ஸ்ரீவராக பஞ்சரத்ன ஸ்துதி , ஸ்ரீ பூவராக ஸ்துதி போன்ற சுலோகங்களையும், வடமொழி வல்லுனரான ஸ்ரீமதி மீனாக்ஷி அம்மாள் எழுதிய “ஸ்ரீ பூவராக சுப்ரபாதம்”, “ஸ்ரீ பூவராகப்ரபத்தி”, “ஸ்ரீ பூவராக மங்களம்” போன்ற சுலோகங்களை சன்னதித் தெருவில் குடியிருந்த ஸ்ரீ மீனாக்ஷி அம்மாளின் இல்லத்தில் அந்த ஊரின் பெண்களுக்கு அவரே சொல்லித் தருவதை அவன் பார்த்திருக்கிறான்.

ஸ்ரீமதி மீனாக்ஷி அம்மாள் எழுதிய “:ஸ்ரீ பூவராக சுப்ரபாதம்” போன்ற சுலோகங்களை ஒலிநாடாவில் பதிவு செய்ததை , ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் கோவிலுக்கு 1987ம் வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற மகாசம்ப்ரோக்ஷணம் தினத்தில் சிருங்கேரி ஸ்ரீ சங்கராச்சார்யாள் அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாசன்னிதானம் அவர்கள் வெளியிட்டார்கள். பாம்பே சகோதரிகள் பாடிய அந்த சுப்ரபாத ஒலிநாடாவை அவன் இன்னும் வைத்திருக்கிறான். ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் கோவிலின் தலவரலாற்று நூலை கல்லிடைகுறிச்சி “குளத்து ஐயர்” தொகுத்திருந்தார். அவரின் இளைய மகன் பாரதி காவலர் கு.இராமமூர்த்தி ஒரு நல்ல கவிஞர். பாரதியார் பக்தர். அவர் பாரதியார் பற்றிய கவிதைகளும், சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் மீது கவிதைகளும், நிறைய கட்டுரைகளும், நூல்களும் எழுதியிருக்கிறார். “பாரதீ தீர்த்தர் புண்ணிய தீர்த்தர்” என்ற பாடல் மலேசிய வாசுதேவன் இசையில் கேட்க மிக அருமையாக இருக்கும். அவனுக்கு பாரதிகாவலர் நெருங்கிய நண்பர். அவரது தொடர்பு பற்றி இத்தொடரில் பின்பு எழுதுவான்.

ஐயங்கார் சார் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கக் கூடிய “ஸ்ரீமான் சுந்தர்ராஜன்” அவர்களின் மகன் ஸ்ரீநிவாசன். “கல்லிடை வாசன்” என்ற பெயரில் கவிதைகள், இசைப்பாடல்கள் எழுதி வருபவர். நல்ல ரசிகர். பிரபந்தங்களை ஸ்ரீ ஆதிவராகர் கோவிலில், ஆதிமூலத்தின் சன்னதியில் தினசரி பாடிவருவதை அவன் நேரிலேயே கேட்டு மகிழ்திருக்கிறான். அவர் பாடல்களுக்கு அவரே கர்நாடக சங்கீதத்தில் மெட்டமைத்துப் பாடுவார். இளைய தலைமுறைக்கும் அதைக் கற்றுத் தந்திருக்கிறார். அந்தப் பாடல்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார். அவரைப் போலவே அவரது பாடல்களில் பக்தி இருக்கும். எளிமை இருக்கும். கேட்டால் மனம் அமைதி பெரும். ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் கோவிலுக்கு 4.7.2014 அன்று நடைபெற்ற மகாசம்ப்ரோக்ஷணம் சமயத்தில் தயாரிக்கப் பட்ட மலரில் அவர் பெருமாள் மீது இயற்றிய பாடல் ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். அதை அவன் உங்களுக்காக இங்கே பதிவிடுகிறான்.

ராகம்: சுருட்டி
பல்லவி

கல்லிடைத் தலைமுறை புவிமகளே – எங்கள்
கற்பனைக் கெட்டாத எழிலுருவே, நன்றாய்

அனுபல்லவி
வில்லினைப் புருவமாய்க் கொண்டவளே – எங்கள்
தொல்லைகளைக் களையும் வல்லமை தன்னுடன்

சரணம்
இடக்கரமதால் உன் திருமுதுகினைத் தாங்கி
வலக்கரம் கொண்டுன் பதமலரினைப் பற்றி
திருமடியினுள் வைத்த கருமாமுகில் வண்ணன்
திருவடியினை நாங்கள் துரிதமுடன் நாட (கல்லிடைத்…….)

ஸ்ரீ சோமசுந்தரம் சார்

1972ம் வருடத்தில் சுமார் ஒரு எட்டு மாதகாலம் ஸ்ரீ சோமசுந்தரம் சாரிடம் அவன் “அக்கௌன்டன்சி” (Accountancy) கற்றுக் கொண்டான். அவர் திலகர் வித்யாலயம் மேல் நிலைப் பள்ளியில் அக்கௌன்டன்சி, வர்த்தகம் போன்ற பாடங்களைக் கற்றுத்தரும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அவன் குடியிருக்கும் அதே தெருவில்தான் அவரும் இருந்தார். அவரிடம் மாலை வேளையில் தினமும் ஒரு மணிநேரம் அவன் பாடம் கற்றான். மிகத் தெளிவாகக் கற்றுத்தரும் ஆற்றல் அவருக்கு இருந்தது. அவனுக்கு Accountancy யில் ஆர்வம் வரச் செய்தவரே அவர்தான். எத்தனை முறை அவன் தவறுகள் செய்தாலும் அவற்றையெல்லாம் அவர் மிகுந்த பொறுமையுடன் திருத்தி அவனுக்குக் கற்றுத்தருவார். அதற்கும் மேலாக அவனுடைய குடும்பச் சூழலைச் சொல்லி “கண்ணா..நீ இனிமே விளையாட்டுப் பிள்ளையாக இருக்கக் கூடாது..நல்ல விஷயங்களை நன்றாகக் கற்றுக்கொள். கவனித்துப் படி. நிச்சயம் முன்னுக்கு வருவாய்” என்று தன் சொந்தப் பிள்ளையைப் போல எண்ணி, மிகுந்த வாஞ்சையுடன் சொல்லுவார். அவரும், அவனுக்கு அப்பாவும் ஒரே பள்ளியில் வேலை செய்யும் சிநேகிதர்கள். அப்பாவின் மீது அவருக்கு மிகுந்த அன்பு உண்டு. அவன் வேலைக்காகச் சென்னைக்கு வந்த பொழுது அவர் அவனுக்கு மூன்று நான்கு கடிதங்கள் தொடர்ந்து எழுதி அவனுக்கு ஊக்கம் கொடுத்தார். அந்தக் கடிதங்களை அவன் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறான். அவர் சென்னைக்கு வந்த பொழுது அவரையும், அவரது குடும்பத்தினர்களையும் அவன் நேரில் சென்று பார்த்து வந்தான். அப்பொழுது அவர்கள் மயிலாப்பூரில் ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தின் புத்தகக் கடைக்கு அருகில் உள்ள அவருக்கு உறவினர் ஒருவரின் வீட்டு மாடியில் தங்கி இருந்தனர். அவர் தனக்குத் தெரிய வில்லை என்றால் அதை “இது எனக்குத் தெரியவில்லை..நாளைக்கு அதைத் தெரிந்து கொண்டு உனக்குச் சொல்லித்தருகிறேன்” என்று சொல்லும் நல்லாசிரியர். இப்படி அவர் சொன்னது, அதே போன்ற ஒரு அனுபவத்தைப் பெற்ற இன்னொரு ஆசிரியரையும், அவருக்குள் இருந்த கலைஞரையும் அவன் சென்னையில் சந்தித்தான்.

H. சகஸ்ரநாமன்

அவர் பெயர் H. சகஸ்ரநாமன். அவரை “போடோ சாத்து” என்றும் ஊரில் அழைப்பார்கள். அவர், அவனுக்கு மனைவி சீதலக்ஷ்மியின் அத்தைவழி அத்திம்பேர். அவன் சென்னையில் விடுதியில் தங்கி இருந்த காலத்தில் அவரை அவரது அபிராமபுரம் இல்லத்திற்குச் சென்று சந்திப்பான். அவருக்குள் ஆசிரியரும், எழுத்தாளரும், புகைப்படக் கலைஞரும் இருந்ததை அவன் அவருடன் பழகியதில் இருந்து அறிந்து கொண்டான். அவர் “பல்லி விநாயகர்” என்ற நகைச்சுவைக் கதையை எழுதி அவனிடம் தந்தார். அவன் அதை அவனது விடுதி நண்பரான பிரபல நிருபரும், எழுத்தாளருமான பாளிவள்ளளிடம் கொடுத்தான். கதை நன்றாக இருப்பதாகவும், “சாவி”யில் வெளியிடக் கொடுக்கிறேன் என்றும் சொன்னார். ஆனால் அந்தப் “பல்லி விநாயகர்” எங்கோ தொலைந்து போய் விட்டார். ஒரு முறை அவனுடைய விடுதி அறைக்கு வந்திருந்த சாத்துமாமாவுக்கு நண்பர் பாரிவள்ளலை அறிமுகப்படுத்தினான். நண்பரிடம் ,” என்னோடு பல்லி விநாயகர்” எங்கயோ கோவில் கொண்டுட்டார் போலிருக்கு” என்று நகைச்சுவையாகச் சொன்னார். அவரது இளைய மகன்தான் “நாணு”. காத்தாடி இராமமூர்த்தி நாடகக் குழுவின் சிறந்த நாடக ஆசிரியரும், நடிகருமாக இருக்கிறார்.

“சாத்து மாமா” கல்கத்தாவுக்கு வேலைக்குச் செல்வதற்கு முன்பாக கல்லிடைக்குறிச்சி “லலிதா எலிமெண்டரி” ஆரம்பப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். இரண்டாவது, மூன்றாவது, நான்காவது வகுப்புகளுக்கு ஆங்கிலப் பாடம் எடுத்திருக்கிறார். ஒரு நாள் அவர் மரங்களுக் கெல்லாம் ஆங்கிலத்தில் என்ன பெயர் என்று கற்றுக் கொடுக்கும் பொழுது திடீர் என்று ஒரு பெண் குழந்தை “சார்..அரசமரத்துக்கு…இங்கிலீஷ்ல என்ன பேரு” என்று கேட்டதாம். அவருக்குத் தெரிய வில்லை. அந்தக் குழந்தையிடம் ” கோந்தே…லண்டன்ல அரசமரம் இருக்காதோ என்னமோ..அதனால இந்த புத்தகத்துல அது இல்லை…நாளைக்கு வரும்போது உங்களுக்கு அரசமரத்துக்கு என்ன பெயர் என்று தெரிந்து கொண்டு சொல்லித்தருகிறேன்” என்று சொன்னாராம். உடனே ஊரில் உள்ள சங்கர ஐயரிடம் “மாமா அரசமரத்துக்கு…இங்கிலீஷ்ல என்ன பெயர்…இன்னிக்கு ஒரு குழந்தை என்னிடம் கேட்டாள்…எனக்குத் தெரிய வில்லை. நாளைக்குத் தெரிந்து கொண்டு உனக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டேன்…” என்ற பொழுது , சங்கர ஐயர் “சாத்து…ஸமிஸ்கிரத்தத்துல அரசமரத்துக்கு பிபல விருக்ஷம் என்று சொல்லுவார்கள். அதைத்தான் இங்கிலீஷ்ல “பீபல்ட்ரீ” ( Peepal tree) என்கின்றனர்” என்று சொன்னாராம். மறுநாள் அதைக் குழந்தைகளுக்குச் சொல்லித் தந்ததாகவும், அதனால் தெரியாததைத் தெரியவில்லை என்று சொல்லி, தெரிந்து கொண்டு வந்து கற்றுத் தருவதுதான் ஒரு ஆசிரியரின் கடமை என்றும், அது மாணவர்களிடம் ஆசிரியரின் மதிப்பை உயர்த்தும் என்று சாத்துமாமா அவனிடம் கூறினார்.

16.10.2015

அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comment here