இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (170)

0

–சக்தி சக்திதாசன்.

Cavell-1865-1915

அன்பினியவர்களே !
இனிய வணக்கத்துடன் அக்டோபர் மாத நடுப்பகுதியில் உங்களுடன் இந்த வார மடல் மூலம் உரையாடுவதில் மனம் மகிழ்கிறது.

இவ்வகிலத்தின் வயதைச் சரியாக அறிந்தவர் எவருமிலர். கால காலங்களாய், யுக யுகங்களாய் இம்மண்ணில் தோன்றி மறைந்தவர் எத்தனையோ !

இம்மண்ணில் விதையாக விழுந்து விட்டால் அதன் கால நியதிப்படி அதன் வாழ்வு நடந்து முடிவது உறுதி.

ஒரு தோட்டத்தில் வித்தியாசமான பல வர்ணங்களில் மலர்கள் மலர்வது போல, மலராமல் பச்சைச் செடியாகவே இருக்கும் செடிகளைப் போல இப்புவியில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் வித்தியாசமானவர்களே ! சிலர் வருவதும் தெரியாமல் போவதும் தெரியாமல் மறைந்து போகிறார்கள். வேறு சிலரோ ஆரவாரமாக வந்து விட்டு அடையாளம் இல்லாமல் அழிந்து போகிறார்கள். மற்றும் சிலரோ சேற்றில் முகிழ்த்த செந்தாமரை போல ஆரவாரமில்லாமல் உதித்து விட்டு தமக்கேயுரிய அடையாளத்துடன் மறைகிறார்கள்.

ஒரு சிலர் தவறான காரணங்களுக்காக காலமெல்லாம் நிலைக்கிறார்கள். வேறு சிலர் அற்புத மகத்தான காரியங்களை ஆற்றி விட்டு அதற்காக உலகம் உள்ளவரை நினைவு கூரப்படுகிறார்கள். மக்களின் மனதில் மங்காமல் நிலைத்திருப்போரில் அதிகமானோர் மனிதாபிமானத்தின் சிகரமாய் விளங்கியதால்தான் அத்தகைய புகழாரத்தை அடைந்திருக்கிறார்கள்.

இன்றைய உலகம் அறிவிற் சிறந்து பல தத்துவார்த்த உண்மைகளைப் புரிந்து கொண்டு இயங்கி வருகிறது. இருப்பினும் போர், அநீதி, மனித வதைகள், பேராசையினால் ஏற்படும் அழிவுகள் இவ்வறிவார்ந்த உலகிலும் தொடர்ந்து நடைபெறத்தான் செய்கிறது. இருப்பதில் மட்டும் நிறைவடையாமல், மதமோ அன்றி இறையுணர்வோ மனிதனுக்குப் போதிப்பது அடிப்படை மனித தர்மமே என்பதை அறியாமல் மதங்களின் பெயரால் மற்றவரை அழிப்பதை நியாயப்படுத்தும் பல நிகழ்வுகளை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

ஆனால் அதே நேரம் இத்தகைய கொடூர நிகழ்வுகளிலிருந்து மக்களைக் காப்பதற்காக தமது உயிரையே பணயம் வைத்து சேவை புரியும் நல்ல உள்ளங்களும் எம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர். எனது இந்த மடலின் வழியும் அவ்வழியே வாழ்ந்த ஒருவரைப் பற்றி அலசவே இவ்வழியேகிறது.

“ஈடித் காவெல்” (Edith Cavell), இங்கிலாந்திலுள்ள “நோரிச்” (Norwich) எனும் நகரை அண்மித்திருந்த “ஸ்வாரடஸ்டன்” (Swardeston) எனும் கிராமத்தில் 45 வருடங்களாக அங்கே மதகுருவாக இருந்த “வணபிதா ஃபிரடிரிக் காவெல்” (Reverend Fredrick Cavell) என்பவருக்கும் “லூசியா சோஃபியா” (Louisa Sophia) என்பவருக்கும் மூத்த குழந்தையாக1865ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் நாள் பிறந்தார்.

மதகுருவான தந்தையாலும், தாயாரினாலும் எப்போதும் இருப்பதை மற்றையோருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனும் மாண்பினை முக்கியப்படுத்தியே இவர் குழந்தைப் பிராயத்தில் வளர்க்கப்பட்டார். நோரிச் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஈடித் கல்வி பயின்றார். படிப்பை முடித்து 1890ம் ஆண்டு தொடக்கம் 5 வருடங்கள் “பிரஸ்ஸில்ஸ்”( Brussells ) நகரில் ஒரு குடும்பத்தினரின் இல்லத்தில் தாதியாகப் பணிபுரிந்தார். லண்டன் வைத்தியசாலையில் நர்ஸாகப் பயிற்சி பெற்ற ஈடித் இங்கிலாந்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் நர்ஸாகப் பணிபுரிந்தார்.

1907ம் ஆண்டு இவர் “டாக்டர் ஆண்டனி தேபேஜ்” (Dr. Antoine Depage) என்பவரால் புதிதாக பிரஸ்ஸில்ஸ் நகரில் ஆரம்பிக்கப்பட்ட நர்ஸிங் பள்ளியில் பயிற்சியாளராக பணியிலமர்த்தப்பட்டார். 1910ம் ஆண்டு இவர் தாதிகளுக்கான ஒரு சஞ்சிகையை ஆரம்பித்தார். முதலாவது உலக மகாயுத்தம் ஆரம்பிக்கும் போது விதவையான தன் தாயாரைப் பார்ப்பதற்காக இங்கிலாந்திலுள்ள நோரிச்சில் சிலகாலம் தங்கி இருந்தார். பிரஸில்ஸ் நகருக்கு இவர் திரும்பிய போது இவரது ஆஸ்பத்திரி செஞ்சிலுவைச் சங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டிருந்தது.

1914ம் ஆண்டு பிரஸ்ஸில்ஸ் நகர் ஜெர்மானியரால் கைப்பற்றப்பட்டிருந்தது. இவர் காயமடைந்த கூட்டுப் படையினருக்கும், எதிராகப் போரிட்ட ஜெர்மானிய வீரருக்கும் முன்னின்று சிகிச்சையளிக்க உதவினார். கூட்டுப்படையிலிருந்த பிரித்தானியம் பிரெஞ்சுப் படைவீரர்கள், ஜெர்மானிய கைப்பற்றலில் இருந்து தப்பி இங்கிலாந்து, பிரெஞ்சு நாடுகளுக்குத் திரும்புவதற்காக அப்போது நடுநிலை நாடாகவிருந்த நெதர்லாந்துக்கு இவர்கள் தப்பிப் போக ஈடித் உதவினார்.

போரின் நடுவே காயமடையும் வீரர்களை எப்படையினர் எனும் பேதம் காட்டாது, சேவையாற்றிக் கொண்டிருந்த ஈடித் மீது ஜெர்மானிய நிர்வாகம் சந்தேகம் கொண்டது. இச்சந்தேகத்திற்கு தன் மனதிருப்பதை அப்படியே உரைக்கும் பண்பை கொண்டிருந்த ஈடித்தும் உதவினார் என்பதுவே உண்மை. தன் சொந்த நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து, அயல்நாடொன்றில் யுத்தத்தின் நடுவே மனிதாபிமான அடிப்படையில் சேவையாற்றிக் கொண்டிருந்த ஈடித் ஜெர்மானிய இராணுவத்தினரால் 1915ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் நாள் கைது செய்யப்பட்டார். 10 வாரங்கள் சிறையிலடைக்கப்பட்ட இவர், இவருடன் சேர்ந்தியங்கிய காஸ்டன் குயின் என்பவரால் காட்டிக் கொடுக்கப்பட்டார்.

தான் பிரித்தானிய, பிரெஞ்சு, பெல்ஜியன் இராணுவ வீரர்கள் தப்பிப் போவதற்கு ஏதுவாக அவர்களைத் தன் வீட்டில் மறைந்து வைத்திருந்ததை ஏற்றுக்கொண்டார் ஈடித். இத்தகைய குற்றத்திற்கு அப்போதைய ஜெர்மானிய நிர்வாகத்தின் தண்டனை மரணமாகும். ஜெனிவா ஒப்பந்தத்தின் படி வைத்திய சிகிச்சை சம்பந்தப்பட்டவர்கள் இத்தகைய தண்டனைக்கு அப்பாற்பட்டவர்கள் என்று குறிப்பிட்டிருந்தாலும், இதைத் தேசத்துரோகம் எனும் அடிப்படையில் அவ்வொப்பந்தத்திற்கு அப்பாற்பட்டது என்று ஜெர்மானிய நிர்வாகம் செயற்பட்டது.

அப்போதைய பிரித்தானிய வெளிநாட்டமைச்சர் “ஹோரஸ் ரோலான்ட்” (Horrace Rowland) என்பவர், தாம் இந்தச்சூழலில் எதுவும் செய்யக்கூடிய அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரித்தானிய அரசின் எந்தத் தலையீடும் ஈடித்துக்கு பாதகமாகவே அமையும் என்பதே அவர்களின் நிலைப்பாடாக இருந்தது.

அப்போது முதலவது மகாயுத்தத்தில் ஈடுபட்டிருக்காத அமெரிக்க நாட்டின் பிரெஸ்ஸில்ஸுக்கான தூதுவர், ஜெர்மானிய நிர்வாகத்தின் இத்தகைய செயல் இருநாடுகளுக்கான விரிசல் கண்டிருந்த உறவை மேலும் அந்நியப்படுத்தும் என்று எச்சரித்ததும் குறிப்பிடத்தக்கது. எத்தனையோ இராணுவ வீரர்களின் வைத்திய உதவிகளுக்குக் காரணமாகவிருந்த ஈடித்தின் சேவையை ஜெர்மானிய அரசு நினைவுகூரவேண்டும் என்றும் அமெரிக்கத் தூதுவர் கோரியிருந்தார்.

அப்போது அங்கு ஜெர்மானிய நிர்வாகத்திற்குப் பொறுப்பாகவிருந்த ஆளுநர், ஈடித்தின் மரணதண்டனையை ஜெர்மானிய நாட்டின் நிலையைக் கருத்திற் கொண்டு உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது இவர் பிரெஞ்சு மொழியில் விசாரிக்கப்பட்டார். ஆனால் இவரது வாக்குமூலம் ஜெர்மானிய மொழியில் பதிவு செய்யப்பட்டது. இவர் கூறியவற்றைத் திரித்திருக்கலாம் என்று அப்போது ஒரு கருத்து நிலவியது என்று கூறப்படுகிறது.

நாட்டுத் துரோகம் எனும் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த 27 பேரில், ஐந்துபேருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஈடித் காவெலும் ஒருவர். மரண தண்டனை வழங்கப்பட்ட ஐவரில், ஈடித்தும் மற்றிருவருமே மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்கள். மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாளிரவு மதகுருவைச் சந்திக்கும் போது “நாட்டுப்பற்று மட்டும் போதாது, அனைத்து மக்களையும் சமமாக நோக்குவதோடு நான் எவர் மீதும் வன்மமோ, ஆத்திரமோ கொள்ள மாட்டேன்” என்று ஈடித் கூறியிருந்தாராம். இவ்வார்த்தைகள் இன்றும் லண்டனில் ‘ட்ராவெல்கார் ஸ்கொயர்’ எனும் இடத்திலமைந்துள்ள இவரது சிலையில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

மானிட சேவைக்கு உதாரணமாக விளங்கிய இந்த அற்புதப் பெண்மணி ஜெர்மானிய ராணுவத்தால் 1915ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது உடலை இங்கிலாந்துக்குக் கொண்டு வந்த புகையிரதப் பெட்டி இன்றும் இங்குக் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது இந்த நினைவுடன் நூற்றாண்டு வாரமாகிய இந்த வாரம் பலரும் இந்த புகையிரதப் பெட்டியைப் பார்த்துச் செல்கின்றனர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்றுணர்ந்த இப்பெண் மறைந்தும் வாழ்வது நிச்சயம்.

“வாழ்ந்தவர் கோடி
மறைந்தவர் கோடி
மக்கள் மனதில் நிற்பவர் யார் ?
மாபெரும் வீரர்
மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார் “

கவியரசரின் அற்புத வரிகள் காலமெலாம் நெஞ்சில் . . . . . .

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

குறிப்பு: படங்கள் இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்டன.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *