-ரமணி

02. பரம்பொருளும் படைப்பும்

(குறும்பா)

[ரிக்வேதம் பத்தாவது மண்டலத்தில் 129-ஆவது சூக்தமாக உள்ளது ’நாஸதீய சூக்தம்.’ இப்பாடல் அதன் எளிய மொழிபெயர்ப்பு.]

இல்லையென்றோ உள்ளதென்றொ ஏதுமிலை
தொல்லுலகம் தொடுவானம் போதுமிலை
. மூடுபனி கூடியதோ
. கூடெனவே மூடியதோ
வல்லிருளோ வெள்ளமதோ பேதமிலை! … 1

மரணமென்றும் மோட்சமென்றும் இல்லாதே
இருள்தனியே பகல்தனியே செல்லாதே
. அதுவொன்றே மூச்சற்றே
. அதிர்ந்ததுவே பேச்சற்றே
உருவமென வேறெதுவும் கொள்ளாதே! … 2

இருளொன்றே இருளென்றே மூடியதே
உருவற்ற வெள்ளம்போல் கூடியதே
. ஒன்றெனவே ஓர்பொருளே
. தன்நிலையை ஓர்பொருளே
எரிதவத்தால் தன்னுள்ளே தேடியதே! … 3

உள்ளியதில் ஓராசை எழுந்ததுவே
உள்ளத்தின் மூலவித்தாய் விழுந்ததுவே
. தன்னிதயம் ஆயுமுனி
. உண்மையென மாயையென
உள்மனத்தின் உணர்வினிலே இழிந்ததுவே! … 4

கதிர்பலவாய்ச் சூனியத்தில் விரிந்ததுவே
அதிர்வாற்றல் அடியெனவே இருந்திடவே
. சந்ததிகள் உருவாக
. விந்தொன்றே கருவாக
அதிவேகம் உச்சியிலே திரிந்திடவே! … 5

யாரறிவார் எங்கிருந்து படைப்பிதுவே
யாருரைப்பர் இதுவென்ன புடைப்பெனவே
. கடவுளரும் தேவருமே
. படைத்தபினே மேவினரே
யாரறிவார் எங்கிருந்த உடைப்பிதுவே! … 6

படைப்பிதனைப் படைத்ததுவே புரப்பதுவோ
படைப்பிதனைப் படைத்ததுவே புரந்திலையோ
. பரவான வெளியினிலே
. அரசாளும் ஒளியவனே
படைப்புண்மை அறிவானோ அறிந்திலையோ? … 7 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தெய்வ தரிசனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *