ஆன்மீகமும் நானும் (11)
நடராஜன் கல்பட்டு
மாயை
இவ்வுலகில் நாம் கண்ணால் காண்பதெல்லாம் மாயை என்கிறார்கள் ஆன்மீகவாதிகள். ‘மாயை என்பது என்ன சற்று விளக்க முடியுமா?’ என்று கேட்டார் ஒருவர் சுவாமி தயானந்தாவை. மாயையை விளக்க ஒரு குட்டிக் கதை சொன்னார் சுவாமிகள்.
முன்னொரு காலத்தில் மலையாளப் பிரதேசத்தில் ஒரு தனவந்தர் இருந்தார். சாகும் தருவாயில் இருந்த அவர் தனது மூன்று மகன்களையும் அருகில் அழைத்து, ‘பிள்ளைகளே நான் இன்னும் எவ்வளவு நாட்கள் இருப்பேன் என்று தெரியாது. அதனால்தான் ஒரு உயில் பத்திரம் எழுதி இருக்கிறேன். அதன் நகல்களை உங்களிடம் தருகிறேன். நான் இறந்த பின் நீங்கள் மூவரும் அந்த உயிலில் கண்டுள்ளபடி எனது சொத்துக்களைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் சண்டை சச்சரவு ஏதுமின்றி. உங்கள் அம்மாவை நீங்கள் அன்புடன் ஆதரித்து அவள் கண்களில் என்றுமே கண்ணீர் வராது பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று சொல்லிய அவர் சற்று நேரத்தில் கண் மூடினார்.
ஈமச் சடங்குகள் நடந்து முடிந்தன. அதன் பின் அந்த மூவரும் தங்களிடம் இருந்த உயிலின் நகல்களைப் பிரித்துப் பார்த்தனர்.
அதில் பின் வருமாறு கண்டிருந்தது.
‘என் குடும்பம் வசிக்கும் இந்த வீடு எனது முதல் மகனுக்குச் சேரவேண்டும். எனது கடையும் வியாபாரமும் என் இரண்டாவது மகனுக்குச் சேர வேண்டும். மூன்றாவது மகனுக்கு எனது நெல் விளையும் நிலங்களும், தென்னந்த் தோப்பும் சொந்தமாக வேண்டும்.’
தனவந்தரிடம் பதினேழு யானைகள் இருந்தன. அவற்றையும் பங்கு போட வேண்டுமே? அவர் மனதிலே உள்ளூர ஒரு எண்ணம், ‘நான் எனது சொத்துக்களை எல்லாம் விற்று மூவரும் சமமாகப் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்று எழுதி இருந்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் கஷடப் பட்டு சேர்த்த சொத்துக்கள் பிறர் கைகளுக்கல்லவா போய்விடும். ஆனால் அதே சமயம் நான் நினைத்துள்ள படி பிரித்தால் முதல் மகனுக்கு மிகக் குறைந்த மதிப்புள்ள சொத்தும் மூன்றாம் மகனுக்கு மிக அதிகமான மதிப்புள்ள சொத்தும் அல்லவா போய்ச் சேர்ந்து விடும். அதனால் யானைகளைப் பிரிக்க்கும் போது அதை சரி செய்திடல் வேண்டும்.’ இப்படி எண்ணிய அவர் உயிலில் எழுதி இருந்தார், ‘எனது பதினேழு யானைகளில் அரை (1/2) பாகம் பெரிய மகனைச் சேர வேண்டும், மூன்றில் ஒரு பங்கு (1/3) இரண்டாவது மகனுக்கும், ஒன்பதில் ஒரு பங்கு (1/9) மூன்றாவது மகனுக்கும் ஆகும்’ என்று.
முதல் மகன் சொன்னான், ‘பதினேழில் பாதி எட்டரை. ஆகவே எனக்கு ஒன்பது யானைகள் வேண்டும்.’
இரண்டாமவன் சொன்னான், ‘அது ஞாயமில்லை. நான் ஒத்துக்கொள்ள முடியாது.’
மூன்றாவது மகன் சொன்னான், ‘பதினேழில் ஒன்பதில் ஒரு பங்கு ஒன்றும் எட்டின் கீழ் ஒன்பதும் (1 and 8/9) ஆகும். 8/9 என்பது 1/2யயை விடப் பெரியது. ஆகவே ஒண்ணும் எட்டின் கீழ் ஒன்பது என்பதை இரண்டு என்று எடுத்துக் கொள்ள வேண்டும். ஆக எனக்கு இரண்டு யானைகள் தரப் பட வேண்டும்.’ சண்டை வலுத்தது. சத்தமும் பெரிதாகியது.
அவ்வழியே மந்திரி தன் யானை மீது சென்று கொண்டிருந்தார். இவர்கள் மூவரும் போடும் சண்டையைப் பார்த்தது என்ன வென்று விசாரித்தார்.
“கவலைப் படாதீர்கள் எனது யானையையும் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி, “பதினெட்டில் பாதி 9. இது பெரிய மகனுக்கு. 18ல் மூன்றில் ஒரு பகுதி 6. இது இரண்டாவது மகனுக்கு. 18ல் ஒன்பதில் ஒரு பங்கு 2. இது மூன்றாவது பிள்ளைக்கு” என்றார் மந்திரி. ஆக 17 யானைகளை இறந்தவரின் உயில் படிப் பிரித்து (9+6+2 = 17) அவர்களிடம் சேர்த்து விட்டுத் தான் வந்த ய்னையின் மீதேறித் தன் வழிச் சென்றார் அவர்.
பங்கு போடும் போதிருந்த பதினெட்டாவது யானை பங்கு போட்ட பின் மறைந்ததே அது தான் மாயை என்றார் சுவாமீஜீ.
வேளியே சென்று விட்டு வீடு திரும்புகிறோம். தெரு விளக்கின் மங்கலான ஒளியில் நம் வீட்டு வாசலில் வளைந்து வளைந்து ஒரு பொருள் கிடக்கிறது. இதோ வால் சற்று ஆடுவது போல் இருக்கிறதே. இந்தப் பக்கம் தலை கூட சற்றே எழும்புகிறதே. நெஞ்சு பட படக்கிறது. பயத்தில் நாக்கு வறண்டு போகிறது. கால்கள் சற்றே நடுங்க ஆரம்பிக்கின்றன. சத்தம் செய்யாமல் மெதுவாகக் கையை நம் பைக்குள் விட்டுக் கை விளக்கை எடுத்து இயக்குகிறோம். அடச் சே. கீழே கிடப்பது கயிறு. நாம் அதைப் பாம்பென்று எண்ணிப் பயந்ததை நினைத்து நாமே சிரித்துக் கொள்கிறோம்.
கயிறு பாம்பானது மாயை. அம் மாயையைப் போக்கிப் பாம்பைக் கயிறாக மாற்றியது இருளை நீக்கிய விளக்கின் வெளிச்சம். இதைப் போலத்தான் நம் மனம் காணும் மாயைகளை நீக்கத் தேவை மெய்ஞான ஒளி. அவ்வொளியினை அளிப்பதே ஆன்மீகம்.
(தொடரும்….)
நடராஜன் கல்பட்டு
–
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே