இசைக்கவி ரமணன்

BAJNATH

 

 

ஆடா மரங்கள் அணிவகுத்து நின்றிருக்கும்
மூடாத வானில் முகடு முளைத்துவரும்
நாடா நலம்யாவும் நாடி நமையழைத்து
வீடாய் விளங்கும் வியன்மிகுஜா கேச்வரத்தில்

கோடானு கோடி கொடியவினை யால்பட்ட
பாடாவும் தூளாகிப் பாட்டாகப் பல்கிவர
ஈடேது மில்லாத இன்பத் தனிமையிலே
ஓடெல்லாம் வானாய் உருகி இனிக்குதம்மா!

காயாத பிஞ்சு கனியாவ தென்றென்றே
வேயாத வானை வெறித்தபடிப் பார்த்தவன்தான்
தாயத்தே தோற்றதெல்லாம் தான்மீண்டும் பெற்றதாய், ஓர்
மாயத் தலைவி மடியில் விழுந்தெழுந்தேன்

மாயத் திரைநீக்கி, மன்னவனாய் என்னையாக்கி
நேயத் தறியினிலே நெய்ததெல்லாம் நெஞ்சாக்கி
காயைக் கனியாக்கி, சாறாக்கி, கிண்ணத்தே
தோய அதையூற்றித் தூக்கினாள் வான்சிலிர்க்க!
வெட்ட வெளியெங்கும் விந்தை மிகுநீலம்
கொட்டிக் கிடக்க, குளிர்மலையின் கூர்முடியைத்
தொட்டுவந்த காற்று துளைக்கும் உயிர்மீது
பட்ட கரத்தைப் பராசக்தி என்பேனா?

கொட்ட மடிக்கின்ற கூத்தன்கை என்பேனா?
பட்ட மறுந்த பரவசம் என்பேனா?
நட்டநடு நெஞ்சில் நமச்சிவா யன்வந்து
தொட்டுச் சிரிக்கின்ற தூயவுண்மை என்பேனா?

நாள்முடிந்து, ஓடை கருத்த இரவினிலே
தாள்பதித்து சம்போ நடமாடும் பூமியிது
தோள்தொட்டுப் பின்னே முறுவலித்து, பேச்சுக்குச்
சூள்கொட்டிச் சூலமுடன் கூடவரும் சாமியிது

நிற்பனவெல் லாம்வெறும் நெட்டை மரங்களல்ல
விற்பனர்கள்! வேத விழிதிறந்தோர்! சத்தியத்தைச்
சொற்பட வைத்துச் சுருதி இசைத்தவர்கள்!
முற்பட்ட மாமனிதர்! முன்னோர்கள்! மாமுனிவர்!

பண்டை உமையரசி பாதச் சதங்கையெனத்
தண்டை குலுங்கச் சடகங்கா செல்கிறது
உண்மையினைக் கண்டுரைத்த ஒப்பற்ற சங்கரன்
தண்டுவைத்த கோயிலைத் தான்தழுவி நீள்கிறது

கண்ணெதிரே தேவியின் கன்னம் வியர்க்கிறது
விண்குலவும் பாதத்தில் வெள்ளிநகம் பூக்கிறது
மண்ணதிர மாதேவன் மத்தநடை கேட்கிறது
பண்ணவொன்று மின்றிப் பரநிலை வாய்க்கிறது

வேந்தரும் யோகியரும் வித்தகரும் தாமுவந்து
சார்ந்த தவநிலையம்! சார்ந்தோர்க்கு முக்தியை
ஏந்தி வழங்க எமதுசிவன் கால்நடந்து
பூந்துகள் காற்றில் பொலியும்ஜா கேச்வரத்தில்

ஏழையைப் பிள்ளையென ஏற்ற குருநாதன்
வாழவைத்துத் தான்மகிழ வையத்தில் தானிறங்கிச்
சூழ்ந்த வினைமலையைச் சுண்டுவிரல் தட்டியவன்
ஆழ்ந்த தவம்கலையா தாசி மழைபொழிவோன்

கூட்டிவந்தான்; தானாய்க் கொலுவிருக்கும் தேவனுடன்
கூட்டிவைத்தான்; நான்முயன்று கூடாத இன்பத்தைக்
கூட்டுக்குள் கொட்டிவைத்தான் கூடாமல் எட்டிநின்றான்
கூட்டுக்குள் வீட்டைப்போய்க் குந்தி இருக்கவைத்தான்

எந்தைத் திருவருளால் ஏகாந்த வாசத்தில்
சிந்தை தெளிவாச்சு; சித்தம் ஒளியாச்சு;
முந்தை வினையோ முற்றும் விழுந்தாச்சு
மொந்தைக்கள் ளின்தயவில் மொத்தமும் நேராச்சு

தேகம் வசப்பட்டு சிந்தை உருப்பட்டோர்
யோகம் ஒருப்பட்டு ஞானம் வெளிப்பட்டு
சோகச் சுவடுமின்றி, சொல்லாய் அமர்ந்துள்ளேன்
ஜாகேச் வரத்தில் தனித்து.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.