சுரேஜமீ

peak1

ஆளுமை

வாழ்க்கை ஒவ்வொரு நிலையிலும், நம்மை மெருகேற்றி, உரு மாற்றி, இன்னும் செல்லவேண்டும் தூரத்திற்குச் சற்றும் தோய்ந்து விடாது உற்சாகத்துடனும், உறுதியுடனும்,

இதோ ஒரு கை பார்த்து விடலாம் என அழைத்துச் செல்லும் ஒரு பண்புக்குப் பெயர்தான் ‘ஆளுமை’ என்றால் மிகையாகாது.

ஆளுமைப் பண்பு என்பது அடிதொட்டு வரலாம்; அறிவு கற்று வரலாம்;ஆனால் அவையெல்லாம் அனுபவம் என்ற ஆசானுக்கு இணையாகாது என்பதைக் கற்றவர்கள் கூட மறுக்க முடியாது!

அத்தகைய ‘ஆளுமை’ எனும் பதத்தை அறியாமலேயே பாதையை வகுத்தவர்கள் நம் மரபில் ஏராளம். அவர்கள் தம் வாழ்வே மற்றவர்க்கு ஒரு உந்துதலாக இருந்தது என்பதே தற்காலத் தமிழர்களுக்கு இலக்கியங்கள் சொல்லும் ஆதாரம்!

இன்றைய பதிவில் ‘ஆளுமையின்’ அடிப்படையை நம் இதயத்தின் ஆழத்தில் விதைக்க முயற்சிப்பதே நோக்கமாகும்!

ஆளுமை என்றால் என்ன? ஆளுமையின் ஆற்றல் எங்கு தொடங்குகிறது? ஆளுமையின் வெளிப்பாடு எப்படி இருக்கும்? ஆளுமையை எப்படி ஒரு சமூக வளர்ச்சிக்குப் பயனுள்ளதாக்க முடியும்? எனச் சுருக்கமாகப் பார்ப்போமா?

ஆளுமை என்றால் என்ன?

மிக எளிதில் ‘ஆளுமை’ எனும் சொல்லைப் புரிய வைக்கக் கவியரசரின் வரிகள்தாம் நமக்குச் சட்டென நினைவுக்கு வருகிறது;

மாபெரும் சபைதனில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழவேண்டும்;
ஒரு மாத்துக் குறையாத மன்னன்
இவனென்று போற்றிப் புகழ வேண்டும்!

ஆளுமையை மிக அருமையாகச் சில வார்த்தைகளில் வர்ணித்து விட்டார் கண்ணதாசன்!

ஆக, ஆளுமை என்பது ஒரு மனிதனை மிகச் சாதாரண நிலையில் இருந்து, சான்றோர்கள் நிறைந்த சபைக்கு அழைத்துச் செல்லும் உன்னத பண்பு மட்டுமல்ல;

கிஞ்சித்தும் அவனைப் பற்றிய இகழ்ச்சிக்கு வழிவிடாமல், அவனுக்கு நிகர் அவனே எனும் ஒப்பற்ற நிலையில் வைத்துப் புகழக் கூடியது என்று சொன்னால் மிகையாகாது!

ஒரு தனி மனிதப் பண்பு; ஒரு செயலில் அவனுக்கு இருக்கக் கூடிய வல்லமை; தன்னை இந்தச் சமூகத்திற்குக் காட்டக் கூடிய அடையாளம்; எல்லாவற்றுக்கும் மேலாக, அனைவரையும் அரவணைத்துச் செல்லக் கூடிய தலைமைப் பண்பு என அனைத்தும் ஒருங்கே பெற்றிருக்ககும்

ஒப்பற்ற அணிகலன்தான் ‘ஆளுமை’ !

என்ன ‘ஆளுமையை’ அறிய எத்தனையோ புத்தகங்களைப் படித்தோமே என யோசிக்கிறீர்களா?

வார்த்தையின் வலிமைகள் புத்தகத்தில் இருந்தாலும், வாழ்க்கையில் பயில்வதற்குத் தயாராக நமக்குப் புரியும் வகையிலும், நம் தாய்மொழியிலும் அறிந்தால் தானே முடியும்!

இதையே சற்று இலக்கிய நடையில் சொல்ல வேண்டும் எனில், அய்யன் திருவள்ளுவர் சொல்வதைக் கவனியுங்கள்!

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.

ஒரு செயலைச் செய்வதற்கான காலத்தையும்; அதனைச் செயல்படுத்தத் தேவையான சாதனம் அல்லது காரணிகள்; அச்செயலைச் செவ்வனே நிறைவேற்றக் கூடிய ஆற்றல்,

இவையெல்லாம் ஒருவனிடம் அமையப் பெற்றால்,

அதுதான் ‘ஆளுமை’ எனும் பண்பு என்று சொல்லலாம்! இதை ஒரு அமைச்சருக்கான பண்பு எனச் சொன்னலும்,

ஆளுமைக்கான இலக்கணம் எனக் கொள்வதில் இருவேறு கருத்து இருக்க வாய்ப்பில்லை!

ஆளுமையின் ஆற்றல் எங்கு தொடங்குகிறது?

நம்முடைய முதல் பள்ளிக்கூடமே நம் பெற்றவர்கள்தான் என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் தேவையில்லை. அத்தகைய பெற்றோர்களிடம்தான் ஆளுமைப் பண்பை முதன் முதலில் நாம் கற்று கொள்கிறோம்.

எந்த ஒரு பண்பிற்கும் அடிப்படைத் தேவை பழக்கம் என்பதை நாம் அறிவோம். ஆளுமையும் அதற்கு விதி விலக்கல்ல; நம் தாயின் அன்பிலும்; தந்தையின் கண்ணியத்திலும் தான் நாம் கற்றுகொள்கிறோம் ஆளுமையின் ஆற்றலை!

ஒவ்வொரு செயலையும் உற்று நோக்குவதிலும்; அதன் வடிவத்தைப் புரிந்து கொள்வதிலும்; முன் பின விளைவுகளை ஆராய்வதிலும், எத்தனை தடை வரினும்,

எடுத்த காரியத்தை முடிப்பேன் என்ற மன உறுதியிலும்தான் ஆளுமையின் ஆற்றல் தொடங்குகிறது!

மகாகவி பாரதியின் வரிகளில் சொன்னால்,

மனதில் உறுதி வேண்டும்;
வாக்கினிலே இனிமை வேண்டும்!
நினைவு நல்லது வேண்டும்;
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்!!

ஆம்! எண்ணிய எண்ணியாங்கு எய்திடச் செய்யும் ஒப்பற்ற பண்புதான் ‘ஆளுமை’!

ஆளுமையின் வெளிப்பாடு எப்படி இருக்கும்?

மிகச் சுலபமாக ஆளுமையின் வெளிப்பாட்டைப் புரிந்து கொள்ளா இயலும்; எடுத்துக் காட்டாக, நம் பள்ளிக் கூடங்களிலே ‘வகுப்பின் தலைவர்’ என்று ஒரு மாணவனை நியமிப்பார்கள். அதை எவ்வாறு தீர்மானிக்கின்றனர்?

எந்த ஒரு மாணவன் ஒழுக்கமாக இருக்கிறானோ; நன்றாகப் படிக்கிறானோ; பெற்றோர் மட்டும் பெரியவர்களிடத்தில் அன்பாக இருக்கிறானோ; ஒரு செயலில் சுயமாகச் சிந்தித்து அதை நேர்த்தியாகச் செய்வதோடு மட்டுமல்லாமல்

சக மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறானோ

அந்த மாணவனைத்தான் ‘வகுப்பின் தலைவர்’ எனும் பதவிக்கு நிர்ணயிக்கிறார்கள்!

ஆகவே, ஆளுமையின் வெளிப்பாடு என்பது ஒரு மனிதனின் தனிப் பட்ட பண்பு நலன்களில் உள்ள முதிர்ச்சி மற்றும் செயல்களின் வெற்றியில் அடங்கி இருக்கிறது என்றால் மிகையாகாது.

ஆளுமையை ஒரு சமூக வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்த முடியும்?

மண்ணில் புதையும் விதைகளெல்லாம் மீண்டு எழுவதில்லை; ஆனால், ஒரே ஒரு விதை மண்ணைப் பிளந்து வந்து ஒரு செடியாகி, வளர்ந்து மரமாகி, காயாகிப் பழமாகி எப்படி பல்லாயிரம் விதைகளுக்குக் காரணியாகிறதோ

அதைப் போலத்தான் இம்மண்ணில் வாழ்ந்த மாமன்னன் இராஜராஜன் முதல் இந்த நூற்றாண்டில் வாழ்ந்த காமராஜர், ராஜாஜி, வல்லபாய் பட்டேல், அம்பேத்கார் , அறிஞர் அண்ணா உள்பட,

அண்மையில் மறைந்த அப்துல் கலாம் வரை

காலம் நமக்கு எத்தனையோ சான்றோர்களின் ஆளுமையை பாடமாக்கி இருக்கிறது!

அவர்களின் வழியில் நம்மை பண்படுத்துவதில் தான் ஆளுமையின் வெற்றி அடங்கி இருக்கிறது; அடுத்த சமுதாயம் மலர்வதற்கு!!

வளர்ப்போம் நம்முள் ஆளுமையை; அன்னவர்களின் அடி பற்றி!

வெல்வோம் எண்ணிய செயல் யாவும்!

தொடரும்……..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *