Blog

  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லை

    பழமொழி: மரம் போக்கிக் கூலிகொண்டார் இல்லை

     

    ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
    போற்று மெனவும் புணருமோ? – ஆற்றச்
    சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை
    மரம்போக்கிக் கூலிகொண் டார்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
    போற்றும் எனவும் புணருமோ?-ஆற்றச்
    சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லையே; இல்லை,
    மரம் போக்கிக் கூலி கொண்டார்.

    பொருள் விளக்கம்:
    (‘பசுமரத்தாணி போல’ எளிதாகக் கற்று நினைவில் கொள்வதற்கு) இயலும் இளம் வயதில் கல்வி கற்பதைத் தவறவிட்டவர், முதுமையில் கற்று வல்லவராவார் என்பது இயலுமா? (இயலாது). சுங்கச்சாவடியைக் கடந்து சென்றுவிட்டவரைத் தொடர்ந்து சென்று வரி பெறுவதும் இயலாது. ஓடத்தில் பயணித்து (மரம் என்பது இவ்விடத்தில் ஓடம்) கரை சேர்ந்துவிட்ட பயணியிடம் சரியான பயணச்சத்தம் பெறுவதென்பதும் இயலாது.

    பழமொழி சொல்லும் பாடம்: “இளமையில் கல்” என்ற முதுமொழிக்கேற்ப கற்க வேண்டிய இளமைக்காலத்தில் கல்வியைக் கற்கத் தவறிய பின்னர், முதுமையில் கற்க நினைப்பது மாட்டின் “தும்பை விட்டு, வாலைப் பிடித்து” கட்டுப்படுத்தும் கடினமான செயலை ஒத்தது. “காலத்தே பயிர் செய்” என்று கூறி தக்க நேரத்தில் அதற்கேற்ற செயலைச் செய்க என அறிவுறுத்தும் சொல்வழக்கும் இதே பொருளில் அமைந்ததே. இதனை வள்ளுவர்,

    பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
    தீராமை ஆர்க்குங் கயிறு. (குறள்: 482)

    காலத்தைத் தவறவிடாமல் காரியம் ஆற்றுவது, செல்வம் தம்மை விட்டு நழுவ விடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும் என்ற நேர்மறைப்பொருளில் உணர்த்துகிறார்.

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 8

    – புலவர் இரா. இராமமூர்த்தி.

    மனிதன் எப்போதும் இன்பத்தையே நாடுகிறான். இன்பம் – துன்பம் ஆகிய இரண்டுக்கும் இடையில் அவன் வாழ்க்கை அமைகிறது. ஓர் ஆங்கிலப் பழமொழி வாழ்க்கையைப் பற்றிக் கூறுகிறது; ”வாழ்க்கை என்ற பெண்டுலம், அழுகைக்கும் சிரிப்புக்கும் இடையில் ஊசலாடுகிறது!” என்பது அந்தப் பழ மொழியாகும்! ஒருபக்கத்தில் சிரிப்பும் மறு பக்கத்தில் அழுகையும் மாறி மாறி அமைந்துள்ளன! இவற்றுக்கிடையில் ஊசலாடும் வாழ்க்கைதான் எல்லாருக்கும் அமைகின்றது. துன்பநீக்கத்தையே இன்பமாகக் கருதும் மனப்பான்மை, இன்பதுன்பங்களை எடைபோடத் தவறி விடுகிறது! நல்ல இன்பம், நீடித்த இன்பம், எல்லாருக்கும் பொதுவான இன்பம் ஆகியவையே உண்மையான இன்பம் ஆகும். சொல்லப்போனால் இன்பம் என்பது மன நிறைவே! ”செல்வம் என்பது சிந்தையின் நிறைவே!” என்பது மூத்தோர் சொல்.

    இன்பம் எக்காலத்திலும் பிறரை, பிறவுயிர்களைத் துன்புறுத்துவதால் உண்டாகாது! ஒரு பொருளை அதுதரும் இன்பம் கருதி அடைவதும், அப்பொருளால் வரும் நன்மையை அனுபவிப்பதாகிய இன்பமும் எல்லாருக்கும் இயற்கையான விழைவாகும். விருப்பம் என்பதன் விரிந்த சொல்லே விழைவு! அதுவும் எல்லை கடக்குமானால் ஆசை, அவா என்ற பெயர்களை அடையும்! வாழ்க்கையில் ஐம்புல இன்பங்களையும் நேர்மை வழியில் அடைந்து தொடர்ந்து மகிழ்வதே இல்லறம் என்னும் இன்பப் பூங்கா ஆகும்!

    ”அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
    புறத்த புகழும் இல (39)

    அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
    தீதின்றி வந்த பொருள் (754)

    என்ற திருக்குறட்பாக்கள் இதனையே குறிக்கின்றன. நியாயமான இன்பம் தரும் பொருள்களும் காலப் போக்கில் நமக்குச் சிறுசிறு துன்பங்களைத் தரும் சமுதாய நலமாகிய இன்பத்தை விரும்பி அதனை அடைய முயலும் பொதுநலத் தொண்டர்கள் சிறுசிறு துன்பங்களை அடைதல் இயற்கையேயாகும்! இதனைத் திருவள்ளுவர் ,

    குடிசெய்வல் என்னும் ஒருவன் மடிசெய்து
    மானம் கருதக் கெடும்! (1023)

    என்ற குறட்பாவால் விளக்குகிறார்! தம் குடியை வாழ்விக்கக் கருதுபவனுக்குச் சோம்பலும், மான அவமானம் கருதுதலும் தேவையற்றவை என்பது இதன் கருத்து! ஆகவே தனக்கு வரும் தன்னல இன்பத்தை ஒருவன் நாடாமல், செய்யும் தொண்டுகளால் சமுதாயத்துக்கு வரும் இன்பத்தையே நல்ல தொண்டன் விரும்புவான் என்பது அவர் கருத்து! இதனை அவர்,

    இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
    துன்பம் துடைத்தூன்றும் தூண்! (615)

    என்ற திருக்குறளில் குறிப்பிடுகிறார்! ஆகவே இன்பத்தை நாடி ஒரு பொருளை அடைய விரும்புதல் நல்லறமே என்றாலும் , அந்தப் பொருளால் ஓர் உயிருக்கு அறத்தால் வரும் புண்ணியம், பொன்விலங்கு போல் நல்ல பிறவிக்குக் காரணம் ஆகும். நல்ல பிறப்பும் வாழ்க்கையின் பந்தமே யாகும். அதனால்தான் பற்று விடற்குப் பற்றற்றான் தாளினைப் பற்ற வேண்டும் என்று வள்ளுவர் கூறினார்! வாழ்க்கையின் இன்பத்துக்காக வேண்டியபொருள்களைப் பற்றிக் கொண்ட வர்களைத் துன்பங்கள் பற்றிக்கொள்ளும்; மேலும் அவை அவரை விடாமல் பற்றிக் கொள்ளும். இதனைத் திருவள்ளுவர் ,

    பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
    பற்றி விடாஅ தவர்க்கு. (347)

    என்று பாடுகிறார். “பற்று” என்ற சொல்லை நாம் சொல்லிப் பார்த்தால், முதலில் நம் இதழ்கள் மூடிக் கொள்ளும்; அதாவது பற்றிக் கொள்ளும்! ஆசை என்ற சொல்லும், அவா என்ற சொல்லும் நம் திறந்த வாயை மூட விடாமல் விரித்தே வைத்திருக்கும். இந்தப் பேராசையாகிய அவா உண்டானால், நமக்கு மன நிறைவு அதாவது திருப்தி உண்டாகாது. இதனைத் திருவள்ளுவர் ”ஆரா இயற்கை அவா” என்கிறார். இதனை நாம் நீக்கிவிட வேண்டும். அப்போது நமக்கு  உரிய வீடுபேறு கிட்டும். அதனால் எவ்வகையிலும் எப்பொருளின் மேலும் நம் பற்றினை நாம் நீக்கிக் கொள்ள வேண்டும். உணவின்மேல் ஆசை அதிகமானால் நோயில் கொண்டுபோய் நம்மை விட்டு விடும். உடலாசை அதிகமானால் பால்வினை நோய்கள் படை எடுத்து நம்மை வாட்டும்; ஐம்புல ஆசைகளே துன்பத்துக்குக் காரணம்! ஆதலால், எந்த எந்தப் பொருளிலிருந்து நம் அவாவை விலக்கிக் கொள்கிறோமோ, அந்த அந்தப் பொருளால் உண்டாகும் துன்பம் நமக்கில்லை! இதனையே …

    ”யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன் ” (341)

    என்று திருவள்ளுவர் கூறுகிறார்!

    ”ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள்
    ஆசை விடவிட ஆனந்தம் ஆமே ! ”

    என்பது திருமூலரின் திருமந்திரம் ! இந்தத் திருக்குறளின் தனிச் சிறப்பு என்னவென்றால், இதனை உரைக்கும்போது நம் வாயின் உதடுகள் ஒட்டவே மாட்டா! ஒட்டாமல் விலக விலக துன்பமும் விலகும்; இன்பம் வரும். இந்தச் செய்தியை நமக்குக் கூறும் திருக்குறளும் இதழ்கள் ஒட்டினால் துன்பமும் இதழ்கள் ஒட்டாமல் விலகினால் இன்பமும் வரும் என்பதைத் தாம் பாடும். ”துறவு” என்ற அதிகாரத்துக்கு ஏற்ப நுட்பமாகக் கூறும் இக்குறளின் பொருள் நம் உள்ளத்திலும் உடலிலும் துறவு மனப்பான்மையை உருவாக்கி, மனத்தாலும் துறவின் மாட்சியை விளக்குகிறது!

    Share
  • அறிந்துகொள்வோம்!

    -மேகலா இராமமூர்த்தி

    விருதுகளை விரும்பாத விந்தை மனிதர்!

    ஜார்ஜ் பெர்னார்ட் ஷா (George Bernard Shaw)

     

    NPG x81840; George Bernard Shaw by Elliott & Fryஅயர்லாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற நாடக ஆசிரியரான ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, அதன் தலைநகரான டப்ளின் (Duplin) எனும் பெருநகரில் 1856-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26-ஆம் தேதி பிறந்தவர்.

    அயர்லாந்தின் மெதாடிஸ்ட் தேவாலயத்தினரால்  (Methodist Church in Ireland) நடத்தப்பட்ட வெஸ்லி கல்லூரியில் (Wesley College, Dublin) சிலகாலம் கல்வி பயின்றார் பெர்னார்ட் ஷா. பின்பு வெவ்வேறு பள்ளிகளுக்கு அவருடைய படிப்பு இடம்மாறிக்கொண்டே இருந்திருக்கின்றது. பள்ளிக்கல்வியில் கசப்பான அனுபவங்கள் ஏதேனும் அவருக்கு ஏற்பட்டனவோ என்னவோ… கல்விக்கூடங்கள் மீதும் ஆசிரியர்கள் மீதும் அவர்கொண்டிருந்த வெறுப்பு கடைசிவரை அவரைவிட்டு அகலவில்லை.

    “கல்விக்கூடங்கள் சிறைச்சாலைகளாகவும் (prison), ஆசிரியர்கள் அதன் காவலாளிகளாகவும் (turnkeys) திகழ்ந்து (பிள்ளைகளால் பெற்றோருக்கு ஏற்படும் தொல்லைகளைத் தடுத்து) அப்பிள்ளைகளைக் கண்காணித்து வருகின்றனர்” என்று பள்ளிக்கல்வியை அவர் விமரிசித்திருக்கின்றார். அப்போதைய கல்வித் திட்டங்களின்மீதும் கடுமையான அதிருப்தி கொண்டிருந்த அவர், அவை மாணவர்களின் சிந்திக்கும் திறனை, சுய அறிவை மழுங்க வைப்பதைத் தவிர வேறொன்றையும் செய்யவில்லை” என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். 19-ஆம் நூற்றாண்டின் அயர்லாந்துக் கல்விமுறையைப் பற்றி பெர்னாட்ர்ட் ஷா கூறிய கருத்துக்கள் இன்றைய நம் கல்விமுறைக்கும் பொருந்துவதாகவே உள்ளன அல்லவா?

    இளமை முதலே புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஷா, தன்னுடைய பத்து வயதிலேயே விவிலியம் (Bible) தொடங்கி ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் வரை அனைத்தையும் படித்து முடித்திருந்தார் என்று கூறப்படுகின்றது.

    அயர்லாந்தில் வசித்துவந்த பெர்னார்ட் ஷா தம் 20-ஆவது வயதில் துடிப்புள்ள இளைஞராய் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்திருக்கின்றார். எழுதுவதில் அவருக்கிருந்த ஈடுபாட்டின் காரணமாக கதை, கட்டுரை என நிறைய எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பத் தொடங்கினார். ஆரம்பத்தில் அவருடைய எழுத்துக்களைப் பிரசுரிக்காது பத்திரிகைகள் திருப்பி அனுப்பிய போதிலும், அதற்காகச் சோர்ந்துவிடாது தம் எழுத்துக்களின்மேல் அசையாத நம்பிக்கை கொண்டவராய் அவர் தொடர்ந்து எழுதி அனுப்பிக்கொண்டே இருந்தார்.

    அவரது விடாமுயற்சி வீண்போகவில்லை. ஒருகட்டத்தில் பத்திரிகைகள் அவர் எழுத்தை உச்சிமீது வைத்துக் கொண்டாடத் தொடங்கின; அவர் எதையெழுதி அனுப்பினாலும் பிரசுரித்தன. அக்காலகட்டத்தில், நிறைய நாடகங்களை எழுதினார் பெர்னார்ட் ஷா. அவருடைய நாடகங்கள் 1890-ஆம் ஆண்டு முதல் அரங்கேற்றம் காணத்தொடங்கின. பத்தாண்டுகளுக்குள் புகழ்பெற்ற நாடக ஆசிரியராக அவர் வளர்ச்சியடைந்திருந்தார். 60-க்கும் மேற்பட்ட நாடகங்களை அவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதிகார வர்க்கத்தை எதிர்த்து உழைக்கும் வர்க்கத்துக்கு ஆதரவாகவே அவருடைய ஆக்கங்கள் அமைந்திருந்தன. சொல்லவந்த கருத்துக்களை ஆழமாகவும் அழகாகவும் சொல்வதில் வல்லவரான ஷா, தம் எழுத்துக்களில் எள்ளல் சுவையையும் துள்ளி விளையாடச் செய்வதில் கைதேர்ந்தவர்; அதுவே அவருடைய தனித்தன்மையாய் இன்றுவரை போற்றப்படுகின்றது.

    நாடகம், கதை, கட்டுரை, கடிதம், விமரிசனம் என எழுத்துத்துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் கோலோச்சிய பெர்னார்ட் ஷா, குறும்பு கொப்பளிக்கப் பேசும் நாவன்மையும் பெற்றிருந்தார். சான்றாக ஒரு நிகழ்வு…

    ஒருமுறை அவர் அமெரிக்கா சென்றிருந்தபோது அங்கே மக்களவைக் கூட்டத்தில் பேசுவதற்கு அழைக்கப்பட்டிருந்தார். அவையில் பேசத்தொடங்கியவர், எடுத்த எடுப்பிலேயே “இங்குள்ளவர்களில் பாதிபேர் முட்டாள்கள்” என்று ஒருபோடு போட்டிருக்கின்றார். அதனைக்கேட்டுக் கடுங்கோபம் கொண்ட மக்களவை உறுப்பினர்கள், ”பெர்னார்ட் ஷா தம் கருத்தைத் திரும்பப் பெறவேண்டும்” என்று கூச்சலிட்டனர். அந்தக் களேபரத்தைக் கண்டு சற்றும் கலங்காத ஷா புன்னகைத்தபடி, “சரி…இங்கிருப்பவர்களில் பாதிபேர் புத்திசாலிகள்” என்று சற்றும் தாமதியாமல் மாற்றிச்சொல்ல (இதுதான் மாற்றி யோசிப்பது என்பதோ!) உறுப்பினர்கள் வாயடைத்துப்போய் ஒன்றும்பேசாமல் அமர்ந்தனராம்.

    தம் வாழ்நாளில் மொத்தம் 2,50,000 கடிதங்களை அவர் எழுதியிருக்கின்றார் என்ற செய்தி நம்மை வியப்பிலாழ்த்துவதாய் உள்ளது.

    உலகமக்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் பண்பொன்றும் பெர்னார்ட் ஷாவிடம் இருந்திருக்கின்றது. அதுதான் விருதுகள், பட்டங்கள் எதற்கும் ஆசைப்படாத அவருடைய விந்தை குணம். ஆம்! நோபல் பரிசே தன்னைத் தேடிவந்தபோதும் அதனை வேண்டாம் என மறுத்தவர் பெர்னார்ட் ஷா என்றால் நம்ப முடிகின்றதா? ஆனால் அதுதான் உண்மை!

    அந்த அதிசய நிகழ்வு நடைபெற்ற ஆண்டு 1925. நோபல்பரிசுக் குழுவினர் பெர்னார்ட் ஷாவை அணுகி அவ்வாண்டிற்கான இலக்கிய நோபல் பரிசை (Nobel Prize in Literature) அவருக்கு வழங்க விரும்புவதாகத் தெரிவிக்க, அதுகேட்ட ஷா மகிழ்ச்சியில் துள்ளாட்டம் போடவில்லை. மாறாக, “இவ்வாண்டிற்கான நோபல்பரிசு எனக்கா…எதற்கு? இந்த ஆண்டுதான் நான் ஒன்றுமே எழுதவில்லையே” என்று பதில் கூறியிருக்கின்றார். பரிசுக் குழுவினரோ “நீங்கள் இந்த ஆண்டு எழுதாவிட்டால் என்ன? ஏற்கனவே நீங்கள் எழுதியதவைகளுக்காகத்தான் இந்த நோபல்பரிசு!” என்று கூறியிருக்கின்றனர். அதுகேட்டுக் கடகடவென நகைத்த பெர்னார்ட் ஷா, ”ஒருவன் நடுக்கடலில் தத்தளித்துச் சிரமப்பட்டுக் கரையேறியபின்பு அவனைக் காப்பாற்ற காற்றடித்த இரப்பர் குழாயைக் கொடுப்பது போலிருக்கின்றது இந்தப் பரிசு” என்று தமக்கே உரித்தான கிண்டலோடு சொல்லிவிட்டு, அப்பரிசை மறுத்திருக்கின்றார். அப்படியும் விடாது அந்த நோபல்பரிசு அவர் வீடுதேடிவந்துவிட, அதனை அப்படியே மற்றொரு எழுத்தாளரின் இலக்கியப் பணிகளுக்காகக் கொடுத்தவிட்டாராம் அந்த அதிசய மனிதர்!

    Pygmalion என்ற அவருடைய நாடகம் 1938-ஆம் ஆண்டு திரைப்படமாக்கப்பட்டபோது, அப்படத்தில் பணிபுரிந்ததற்காக அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. நோபல், ஆஸ்கர் ஆகிய இரண்டு மிகப்பெரிய விருதுகளைப் பெற்ற ஒரே மனிதர் பெர்னார்ட் ஷாவே! விருதுகளை வெறுத்த அவரை விருதுகள் வெறுக்கவில்லை; ’விலகிச் சென்றால் விரும்பிவரும்’ என்பது ஷாவின் விஷயத்தில் உண்மையானது!

    புரட்சிகரமான கருத்துக்களைத் துணிச்சலுடன் வெளியிட்டுவந்த பெர்னார்ட் ஷா, இல்லறம் குறித்த தன் கருத்துக்களையும் ஒளிவுமறைவின்றி உலகிற்கு விளம்பியவர். “மனையறம் மாட்சியோடு திகழ, மனைவிக்குக் கணவன்மார்கள் மதிப்பும் மரியாதையும்  தரவேண்டும்; மனையாளே கணவனை நன்னெறிக்கண் செலுத்துபவள்; அவளால்தான் அவன் வாழ்வு ஏற்றம் பெறுகின்றது” என்று கூறியிருக்கின்றார். இக்கருத்துக்களால் கவரப்பட்ட நம் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பெண்களைப் போற்றிய ஷாவைப் போற்றிக் கவியொன்று வடித்துவிட்டார்.

    புவிப்பெரியான் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவுரைத்த
    –பொன்மொழியைக் கேளுங்கள் நாட்டில் உள்ளீர்!
    உவந்தொருவன் வாழ்க்கைசரி யாய்நடத்த
    –உதவுபவள் பெரும்பாலும் மனைவி ஆவாள்!
    அவளாலே மணவாளன் ஒழுங்கு பெற்றான்!
    –அவளாலே மணவாளன் சுத்தி பெற்றான்!
    குவியுமெழிற் பெண்களுக்கே ஊறுசெய்யும்
    –குள்ளர்களே, கேட்டீரோ ஷாவின் பேச்சை!
    அவனியிலே ஒருவனுக்கு மனைவியின்றேல்
    –அவனடையும் தீமையை யார் அறியக்கூடும்?
    கவலையுற ஆடவர்கள் நாளும் செய்யும்
    –கணக்கற்ற ஊழல்களை யெல்லாம் அந்த
    நவையற்ற பெண்களன்றோ விலக்குகின்றார்?
    –நானிலத்தில் மார்தட்டும் ஆடவர்கள்
    சுவைவாழ்விற் கடைத்தேறத் தக்கதான
    –சூட்சுமமும் பெண்களிடம் அமைந்ததன்றோ!
    கல்வியில்லை உரிமையில்லை பெண்களுக்குக்
    –கடைத்தேற வழியின்றி விழிக்கின்றார்கள்!
    புல்லென்றே நினைக்கின்றீர் மனைவிமாரைப்
    –புருஷர்களின் உபயோகம் பெரிதென்கின்றீர்!
    வல்லவன்பே ரறிஞன்ஷா வார்த்தைகேட்டீர்
    –மனோபாவம் இனியேனும் திருந்தவேண்டும்.
    இல்லையெனில் எதுசெயலாம்! பெண்ஆண்என்ற
    –இரண்டுருளை யால்நடக்கும் இன்பவாழ்க்கை!

    என்பதே அந்தக் கவிதை!

    ஷேக்ஸ்பியருக்கு அடுத்தபடியாக ஆங்கில இலக்கிய உலகம் கண்டெடுத்த மிகச் சிறந்த நாடக ஆசிரியர் பெர்னார்ட் ஷா. The Devil’s Disciple, The apple cart, and the doctor’s dilemma போன்றவை அவருடைய புகழ்பெற்ற நாடகங்களில் சில.

    இனி, பெர்னார்ட் ஷாவின் சிந்தனைச் செறிவுமிக்க பொன்மொழிகள் சிலவற்றை ஈண்டுக் காண்போம்.

    1. இவ்வுலகத்திலிருந்து தாம் பெற்றதைவிட அதிகமாக யார் இந்த உலகிற்குத் திருப்பிக் கொடுக்கின்றார்களோ அவர்களே பண்புள்ள மனிதர்களாவர்.

    2. எதுவுமே செய்யாமல் வீணாகும் வாழ்க்கையைவிட, எதையாவது செய்யும்போது ஏற்படும் தவறுகள் பயனுள்ளதும், கண்ணியமானதும் ஆகும்.

    3. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத
    பெரிய சுமையாகிவிடும்.

    4. ஒரு மனிதன் புலியைக் கொன்றால் அது வீரம்; அதுவே ஒரு புலி மனிதனைக் கொன்றால் அது கொடூரம்.

    5. புரட்சிகள் என்றுமே கொடுங்கோன்மை எனும் சுமையை (சமுதாயத்திலிருந்து) அகற்றிவிடவில்லை; மாறாக அவை அச்சுமையை ஒரு தோளிலிருந்து இன்னொரு தோளுக்கு இடமாற்றும் வேலையையே செய்திருக்கின்றன.

    6. மனிதன் துன்பமாக இருப்பதற்குக் காரணம் தான் மகிழ்ச்சியாக இருக்கிறோமா இல்லையா என்று ஆராய்வதற்கு அவனுக்குக் கிடைக்கும் ஓய்வே!

    இவ்வாறு, சீர்திருத்தச் சிந்தனைகளையும் சீரிய கருத்துக்களையும் அஞ்சாமல் தம் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் எதிரொலிக்கச் செய்தவர் பெர்னார்ட் ஷா.

    ஆசைகளற்ற மனம், நகைச்சுவை உணர்வு, மது, புகை முதலிய தீயபழக்கங்கள் தவிர்த்த எளிய வாழ்க்கைமுறை ஆகியவற்றைக் கைக்கொண்டிருந்ததன் பயனாய், நீண்டகாலம் நல்ல உடல்நலத்தோடும் மனவளத்தோடும் வாழ்ந்த பெர்னார்ட் ஷா, 1950-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் நாள் தன்னுடைய 94-ஆம் அகவையில் முதுமை காரணமாக இயற்கை எய்தினார்.

    நண்பர்களே! அறிவுலக மேதையாய்த் திகழ்ந்த ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் ஆக்கங்களை நாமும் ஆர்வத்தோடு படிப்போம்; அறிவை விரிவு செய்வோம்!

     

    Share
  • காலம் (16)

    மீ. விசுவநாதன்

    vallamai111-300x15011111111

    குறைந்த சுடரொளியில் கோவில் சிலையை
    நிறைந்த மனதுடன் நின்று வணங்கினேன் !
    வண்ண விளக்குகள் வாரி இரைத்ததில்
    கண்ணன் அழகு களவு. (151) 30.05.2015

    கொஞ்சியும் கோபமாய்ப் பேசியும் அன்பிலே
    விஞ்சியும் சேர்த்தணைத்து வெற்றியின் பிஞ்சினை
    வஞ்சனை யின்றியே வாழ்த்தியும் வந்தஎன்
    நெஞ்சிலே காலம் நிறைவு. (152) 31.05.2015

    “முருகன்” பிறந்தநாள் ! முற்றிய தீமை
    உருவின்றித் தீர ஒருவன் கருவின்றி
    சக்தி சிவமாக சாந்தமாய் வந்தானே !
    பக்தியில் சேர்ந்தேன் பதம். (153) 01.06.2015

    (இன்று வைகாசி விசாகம். முருகனின் பிறந்தநாள்)

    மகிழ்ச்சி வெளியில் மழைபோல் பொழிய
    அகத்தில் அதுவும் அழகாய் முகத்தில்
    தெரிய இறைவன் திருவருள் வேண்டும் !
    புரியும் மெதுவாய் புதிர். (154) 02.06.2015

    துணிவும் , நடத்தையில் தூய்மை குணமும் ,
    பணிவும் , பிறர்பொருள் பார்த்துப் பிணியாய்
    நினைக்கும் தரமும், நிறைவாய் அருள
    எனைக்காக்கும் ஈசா இசை. (155) 03.06.2015

    காக்கை குருவி கழுகென அத்தனை
    போக்குப் பறவையும் பொல்லாத நாக்கு
    மனிதனும் என்றுமே மாசினைச் செய்ய ,
    புனித நதியென்றும் பொன். (156) 04.06.2015

    வாயார மற்றவரை வாழ்த்தும் மனத்துள்ளே
    போயமர்வான் கண்ணன் ! புதுப்புது நோய்வராது
    காப்பான் ! அதனாலே கட்டாயம் அன்புசெய்வோம் !
    பாப்பான் பறையில்லை பார். (157) 05.06.2015

    மெல்ல கவனித்து மேலேறிச் சென்றாலும்
    எல்லை கடந்தால் இருக்குமே தொல்லை !
    பொறுமை இருந்தால் பொலிவு தழைக்கும் !
    சறுக்காமல் வாழ்வு சதம். (158) 06.06.2015

    பொருளுக்கே ஆசையாய் பொய்கூறி விற்கும்
    திருவாளர் யாவரும் தீய கருவினர் !
    தேசத் துரோகிகள் ! தேர்ந்த திருடராம்
    நீசரை தர்மத்தால் நீக்கு. (159) 07.06.2015

    நாடு மொழியுடன் நம்முடன் வாழ்கிற
    வாடும் நலிந்தோர் வளத்தையும் தேடுற
    உன்னத எண்ணம் உளத்திலே உள்ளதே
    பன்முக பாரதப் பண்பு. (160) 08.06.2015

    Share
  • அவன்,அது,ஆத்மா (23)

    ஒரு எளிய மனிதனின் சுயசரிதை

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 23

    “ஆடிப்பட்டம் தேடி விதை”

    ஆடிமாதம் அவனுக்கு மிகவும் பிடித்த மாதம். நல்ல காற்று வீசும். வயல் வெளிகளில் புதிய நாற்று நடப்பட்டு இளம்பச்சை நிறத்தில் கண்களுக்குக் குளுமையாக அவை காற்றில் அசைவதைக் காணவே கண்கள் கோடி போதாது. கன்னடியன் கால்வாயிலும், தாமிரவரணி ஆற்றிலும் தண்ணீர் நிறையப் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும். அந்தச் சிறிய வயதில் அவனுக்கு நண்பர்களுடன் அவன் தண்ணீரில் நீந்தி விளையாட இந்த ஆடிமாதமே சுகமாக இருக்கும். ஆற்றில் குளித்து விட்டு வரும் பொழுதே மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து மென்மையாக வீசும் காற்றில் ஈர ஆடைகள் உலர்ந்து விடும். வயல் வரப்புகளில் புற்கள் மெத்து மெத்தென்றிருக்கும். ஆடி மாதமானதால் எங்கோ இருக்கும் “வடக்கு பார்த்த செல்வி” அம்மன் கோவிலில் இருந்து வருகிற பக்திப் பாடல்கள் காற்றில் பறந்து வந்து அவனது காதுகள் வழியாக மனத்தைக் குதூகலப் படுத்தும். அந்தப் பாடல்களை ரசித்துக் கொண்டே அந்த வயல் வரப்புகளில் நடந்தும், ஓடியும், அந்த நாற்றுகளின் தளிர்த் தலைகளைத் தடவியும் அவன் வீட்டிற்கு வந்த காலங்கள் பசுமையான அனுபவமாக இருக்கிறது. “ஆடிப்பட்டம் தேடி விதை” என்னும் பழமொழிக்கேற்ப அவனுக்கு அம்மா அவனிடம் வெண்டக்காய், அவரைக்காய் போன்ற செடிகளின் விதைகளை வீட்டின் பின்புறம் விதைக்கச் சொல்லுவாள். அவனும் அவனுக்கு அக்கா பாலாவும் விதைகளை நடுவார்கள். தண்ணீர் விடுவார்கள். சில நாட்களில் பூமியைப் பிளந்து கொண்டு அந்த விதைகள் முளைக்கும். செடியாகவும், கொடியாகவும் அவைகள் வீட்டின் கொல்லைப் புறத்தில் வளர்ந்து அழகுதருகின்ற காலம் இந்த ஆடிமாதம்.

    அவனுக்கு செடிகள் வளர்ப்பதில் ரொம்பவும் ஆசை உண்டு. சின்னம்பிச் சித்தாப்பாவுக்கும் செடிகள் வளர்ப்பதில் ஆசை அதிகம். அவர் நிறையப் பூச்செடிகளும், “குரோட்ரன்ஸ்” செடிகளும் நட்டிருந்தார். மனோரஞ்சிதம் பூ கொல்லைப் புறம் முழுதும் வாசம் பரப்பிக் கொண்டிருக்கும். அவன் ஒருமுறை கருவேப்பிலைச் செடியை நட்டுவிட்டு, மறுநாள் அந்தச் செடியை மெதுவாகத் தோண்டி எடுத்துப் பார்த்துக் கொண்டிருபதைப் பார்த்த சின்னம்பிச் சித்தப்பா,” என்னடா..கண்ணா செடிக்கு வேரோடிருக்கான்னு அதைப் பிடுங்கிப் பாக்கறயா ” என்று வேடிக்கையாகக் கேட்டார். அவன் செடிகள் நட்டாலும், விதைகள் ஊன்றினாலும் நன்றாக வளரும் என்று அவர் அவனை நடச்சொல்லுவார். ஏதோ செடிகளின் நல்ல நேரம் அவைகள் வளர்ந்து செழித்தன. நீல நிறப் பூக்களுடன் அவரைகொடி பந்தலில் படர்ந்திருக்கும். கொத்து கொத்தாகக் காய்த்து உலுப்பும். அவனும், அவனுக்கு அக்காவும்தான் அனேகமாக அந்தக் காய்களைப் பறிப்பார்கள். பல நேரங்களில் குரங்குக் கூட்டம் வந்து கும்மாளம் போடும். “குரங்குகளுக்குப் போக உள்ள மிச்சம்தான் நமக்கு” என்று அவனுக்கு அம்மா சொல்லுவாள். நந்தியாவட்டை, செம்பருத்தி போன்ற பூக்களைப் பறித்து, ஒவ்வொன்றாக அவனுடைய வீட்டின் ரேழியில் உள்ள பூஜை அறைப் படங்களில் வைப்பது ஒரு தனி அனுபவம். ஆடி மாதச் செவ்வாய்க் கிழமை, வெள்ளிக் கிழமைகள் விசேஷமாகக் கொண்டாடப்படும். ஆடிச் செவ்வாய்க் கிழமைகளில் அவனுக்கு அக்காவுக்குப் புதுப் பாவாடை, சட்டை எல்லாம் எடுத்துத் தருவார்கள். அவளும் அவளது தோழியர்களும் ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு அந்தப் புதிய ஆடைகளை அணிந்து, அழகாகத் தலையை வாரிப் பூச்சூட்டி அலங்கரித்துக் கொண்டு “ஆடிச் செவ்வாய்த் தேடிக்குளி, அரச்ச மஞ்சளப் பூசிக்குளி” என்ற நாட்டுப்புறப் பாடலைப் பாடிய படியே வீட்டிற்கு வரும் அழகை அந்த கிராமத்தில்தான் பார்க்க முடியும். ஆடி வெள்ளிக்கிழமை அன்று அவனுக்கு அம்மா “சர்க்கரைப் பொங்கல்” செய்து அம்பாளுக்கு சுலோகங்கள் சொல்லி நிவேதனம் செய்வாள். அவன் அந்த சர்கரைப் பொங்கலுக்காகக் காத்துக் கொண்டிருப்பான். அம்மா செய்த அந்த சர்கரைப் பொங்கலின் ருசியே தனிதான். ஆடி வெள்ளிக் கிழமைகளில் சின்னச் சந்கரன் கோவிலுக்குச் சென்று வரும்படி அவனுக்கு அம்மா சொல்லுவாள். அவனும் சென்று வருவான். காரணம் அங்குள்ள ஆற்றங்கரையில் நன்றாக நீந்திக் குளிக்கும்படியாக வசதியான படித்துறைகள் இருக்கும். அவனும் நண்பர்களும் அங்கேயும் நீண்டநேரம் குளித்து விட்டு அவசர அவசரமாகக் கோவிலில் “கோமதி அம்மனை” தரிசனம் செய்துவிட்டு வருவார்கள்.

    “ஆடித் தவசு”

    adii

    ஆடித்தவசுத் திருவிழா திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவிலிலும், அம்பாசமுத்திரம் தாலுக்காவில் கோடரங்குளம் பகுதியில் இருக்கும் சின்னச் சங்கரன் கோவிலிலும்தான் மிகவும் விசேஷமாக நடைபெரும். அவன் அம்மசமுத்திரம் பகுதியில் இருக்கும் சின்னச் சங்கரன் கோவிலில் நடைபெறும் ஆடித் தவசு விழாவைதான் பலவருடங்கள் பார்த்திருக்கிறான். அவனுக்குச் சிறிய வயதில், ஏன் அவன் நான்காம் வகுப்புப் படிக்கும் வரை அவனை ஆடித்தவசு திருவிழாவுக்கு அவனுக்கு அப்பாத்தான் கூட்டிச் சென்றிருக்கிறார். எப்படி, அவனை நடக்க வைக்காமல் தன் இருதோள்களிலும் தூக்கி வைத்துக் கொண்டு சென்று வருவார். அவனது வீட்டில் இருந்து அந்தக் கோவில் சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவாவது இருக்கும். அவனைச் சுமந்து கொண்டு மாலை ஐந்து மணிக்கு தொந்திளிளாகம் தெரு வழியாக, திம்மராஜபுரம் ரயில்வே லைன் தாண்டி அணைக்கட்டு வழியாக சங்கரன்கோவிலுக்குச் செல்வார். அணைக்கட்டில் அவனை இறக்கி வைத்து, அவனுக்கு அந்தச் சூழலின் அழகைக் காட்டுவார். மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளில் இருந்து வருகின்ற தாமிரபரணித் தண்ணீர் இங்கே ஒரு பெருங்கடல் போன்ற தோற்றத்தில் இருக்கும். இங்கிருந்துதான் கன்னடியன் கால்வாய்க்கும், தாமிரபரணி ஆற்றுக்கும் தண்ணீர் பிரிந்து செல்கின்றது. அதைப் பிரிக்கும் நீண்ட பாதை கருங்கற்களினால் அமைக்கப்பட்டிருக்கும். அதில் தண்ணீர் வழிந்தோடும். கால் பாதங்களுக்கு மேல் ஒரு அரையடித் தண்ணீர் சென்று கொண்டிருந்தால் மெதுவாகக் கடந்து கோவிலுக்குச் சென்று விடலாம். தண்ணீர் அதிகம் இருந்தால் அம்பாசமுத்திரம் சுற்றி வண்டிமறிச்சம்மன் கோவில் வழியாகத்தான் வரவேண்டும். அவனுக்கு அப்பா அவனைத் தோளில் சுமந்து கொண்டு மெதுவாக அந்த நீர்ப்பாதை வழியாக அக்கரைக்குச் சென்று விடுவார். அப்பாவுக்கு அந்தப் பாதைகள் எல்லாம் அத்துப்படி. அனேகமாக கல்லிடைகுறிச்சியில் இருந்து சின்னச் சங்கரன் கோவிலுக்கு வருபவர்கள் இந்த அணைக்கட்டுப் பாதையாகத்தான் வருவார்கள். “தவசு”த் திருநாள் காணக் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் மாலை ஆறரை மணிக்கெல்லாம் அலைமோதும். அதுசரி. ஆடித்தவசு என்றால் என்ன? என்று அவனுக்கு அப்பாவிடம் அவன் கேட்டான். “தனது சகோதரன் ஸ்ரீமன் நாராயணனையும், தன் கணவன் ஸ்ரீ சங்கரலிங்கரையும் ஒரு சேரக் காணவேண்டும் என்று கோமதி விரும்பினாள். விருப்பம் நிறைவேற அவள் தவம் இருந்தாள். “தவம்” என்பதைத் திருநெல்வேலி மாவட்டத்தில் “தவசு” என்று அழைப்பது வழக்கம். இறைவி தவம் செய்ய பூலோகம் வந்தாள். அவளுக்குத் துணையாக தேவர்கள் எல்லோரும் “பசுக்களாக” வந்தனர். பசுவை “கோ” வென அழைப்பர். அதனால் பசுக்களாகிய அந்த தேவர்கள் தொழுகின்ற அழகிய “மதி” போன்றவள், பூர்ண நிலவு போன்றவள் என்ற பொருளில் “கோமதி” என்று இறைவி அழைக்கப் பட்டாள். அந்த கோமதி தவசு செய்கிறாள். அதனால் தவசுக் கோலத்தில் தாமிரபரணி நதிக்கரையில் ஒரு மண்டபத்தில் இருக்கிறாள். தவத்தின் பயனாக முதலில் “சங்கர நாராயணராக”வும், பின்பு “சங்கரலிங்கமாகவும்” இறைவன் காட்சி தருகிறான். அந்த இறைவனை தவம் முடித்த “கோமதி” அம்மை மூன்று முறை வலம் வந்து, ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டு கல்யாணக் கோலத்தில் கோவிலுக்குள் செல்வார்கள்.

    avan1

    இதன் உட்பொருள் “சிவன் விஷ்ணு என்ற பேதம் கிடையாது. தவமிருந்தால், அதாவது மனதை ஒருநிலைப் படுத்தி அனைத்தும் இறைவன் உருவே என்ற எண்ணத்தில் இருந்தால் மனதில் “சாந்தி” என்ற கல்யாண குணம் கிடைக்கும்” என்பதாகும்.

    இறைவி கோமதி, இறைவன் ஸ்ரீ சங்கரரை மூன்று முறை வலம் வரும் பொழுது, பக்தர்கள் தங்களின் பிராத்தனையாக உப்பு, மிளகு, காய்கறிகள், வாழப்பழம் போன்ற பொருட்களை அந்த இறைவியும், இறைவனும் உறையும் அழகிய “சப்பரத்தை” நோக்கி வீசுவார்கள். அது அங்கிருக்கும் கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்தில் விழும். அந்தக் காய்களோ, கனிகளோ அவன் மீது விழுந்து விடாதபடி அவனுக்கு அப்பா அவனைத் தன் தோள்களின் மீது வைத்துத் தன் கைகளால் அவனை அணைத்தபடி இருப்பார். சுவாமிக்கு தீபாராதனைகள் நடக்கும் நேரம்,” கண்ணா..கும்புட்டுக்கோ…சுவாமி நன்னாத் தெரியறாரா பாரு” என்று கேட்டு மெல்ல மெல்லக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு “சப்பரத்தின்” பக்கம் சென்று அந்தக் கற்பூரத்தை அவனுக்குக் கண்ணில் ஒற்றி விடுவார். வீபூதி வாங்கி அவன் நெற்றியில் இடுவார். இடி, மிதி, அடி எல்லாம் தான் வாங்கிக் கொண்டு அவனுக்கு “ஆடித்தவசு” தரிசனம் செய்து வைத்த அந்த அப்பாவுக்கு அவனால் என்ன கைமாறு செய்து விடமுடியும். அப்படிப்பட்ட பெற்றோர்களை மறக்காமல் இருக்கக் கூடிய நல்ல புத்தியை இறைவன் அவனுக்குக் கடேசி மூச்சு இருக்கும் வரை அருளவேண்டும் அவளவே.

    சின்னச் சங்கரன்கோவிலின் வரலாறு

    avanசின்னச் சங்கரன் கோவிலில் இருக்கும் சிவலிங்கம் சுயம்பு. அதற்கொரு கதை சொல்லக் கேட்டிருக்கிறான். முன்னொரு காலத்தில் சிவபக்தர் ஒருவர் ஒவ்வொரு நாளும் தன் பூஜை முடிந்தவுடன், நிவேதனப் பொருளான “சாதத்தை”க் காக்கைக்கு வைத்து வந்தார். அந்த சாதத்தைக் கவ்விக் கொண்டு அது பறந்து விடும். ஒரு நாள் அவர் அந்தக் காகம் ஏன் சாதத்தைச் சாப்பிடாமல் எங்கோ பறந்து செல்கிறதே, அது எங்கு செல்கிறது என்று கவனித்தார். அந்தக் காகம் அந்தக் காட்டுப் பகுதியில் ஒரு இடத்தில் அந்த சாதத்தை வைத்து விட்டு பக்கத்தில் ஓடுகின்ற தாமிரபரணித் தண்ணீரைத் தன் வாயில் எடுத்து வந்து சாதம் வைத்த இடத்தில் வாயில் உள்ள நீரைத் தெளித்தது. ஒரு செடியில் உள்ள பூவை அலகால் எடுத்து அதன் மீது வைத்தது. அதன் பின் அந்த சாதத்தை அந்த இடத்தில் வைத்து வழிபட்டது. அதன் பின் அந்தக் காகம் பறந்து சென்று விட்டது. இதைத் தள்ளி இருந்து பார்த்துக் கொண்டிருந்த அந்த சிவபக்தர், காகம் வழிபட்ட இடத்தைத் தோண்டிப் பார்த்தார். அங்கே ஒரு சுயம்பு லிங்கம் இருப்பதைக் கண்டார். அதற்கு தினமும் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தார். ஒருநாள் அவர் வராததைக் கண்ட ஊர் மக்கள் அவர் பூஜை செய்து வந்த இடத்திற்க்குச் சென்று பார்த்தனர். அப்பொழுது அவர் இந்த இடத்தில் சிவன் இருக்கிறார் என்று கூறி, அந்த லிங்கத்திலேயே மறைந்து விட்டார். அதனால் அந்த லிங்கத்திற்கு “சங்கரலிங்கம்” என்று பெயர் வந்தது. இன்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் வாழும் மக்கள் தங்கள் வம்சத்திற்கு சங்கரன், சங்கரநாராயணன், சங்கரலிங்கம், தவசுப் பிள்ளை, உமையொருபாகன், கோமதி என்ற பெயர்களால் அழைப்பதைக் காணலாம்.

    இந்தக் கோவிலின் மூலவர் சங்கரலிங்கம். வடக்கு நோக்கி இருக்கிறார். அவரது மேனியில் ராகு, கேது என்ற நாக தேவதைகள் இருக்கின்றனர். அதனால் இந்தக் கோவிலின் மூலவரை மனதில் பிராத்தனை செய்துகொண்டு பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களின் விஷக்கடியில் இருந்து சுகம் பெறுகின்ற பக்தர்கள் இன்றும் இருக்கின்றனர். கோமதியை வேண்டிக்கொண்டு வெள்ளியில் செய்த கண்மலர்கள்,கை,கால்கள் எல்லாம் காணிக்கையாகச் செலுத்துவதுண்டு. அதற்குப் பலனும் உண்டு. நம்பினோர்க்கு தெய்வம்.

    அவனுடைய வீடு ஓட்டு வீடாக இருந்தது. அப்பொழுதெல்லாம் அதிகச் சூட்டின் காரணமாக ஓடுகளின் இடைவெளியில் இருந்து தேள், பாம்புகள் எல்லாம் வீட்டிற்குள் வரும். அது அனேகமாக அவனுக்கு அம்மாவின் கண்களில் படும். அதைப் பார்த்த உடனேயே அம்மா “கோமதி” “கோமதி” காப்பாத்து என்று சொல்லிக் கொண்டே இடுக்கியால் மெல்ல அதைப் பிடித்து வாய்க்கால் புறத்தில் கொண்டுப் போட்டு வருவாள். கொல்ல மாட்டாள். 1972ம் வருடம் அவனுக்குப் பூநூல் (உபநயனம்) போடுகின்ற தினத்திற்கு முந்தயநாள் அதிகாலையில் அவன் அவனுடைய வீட்டுச் சிறிய திண்ணையில் படுத்துக் கொண்டு கால்களை வீட்டின் வாசலில் உள்ள “சாயப்பட்டை கம்பி”க் கதவுகளில் நீட்டி வைத்துப் படுத்திருந்தான். காலையில் அவனுக்கு அம்மா அந்தக் கதவைத் திறக்க வந்த பொழுது ஒரு கட்டுவிரியன் பாம்பு அவன் காலுக்கு மிக அருகில் இருப்பதைப் பார்த்து, “கோந்தே..கண்ணா..கால மொள்ளத் தூக்கிக்கோ ..கோமதிமேல பட்டுடாதே…கோமதி …கோமதி” என்று மெல்லக் குரல் கொடுத்தாள். அவனும் மெதுவாகக் காலைத் தூக்கிக் கொண்டு எழுந்து உட்கார்ந்து கொண்டு அந்தப் பாம்பையே பார்த்துக் கொண்டிருந்தான். அது அந்தக் கதவின் பட்டைக் கம்பியில் நன்றாகச் சுருண்டு இருந்தது. அதற்குள் அவனுக்கு அம்மா இடுக்கியைக் கொண்டுவந்து அந்தப் “பாம்பை” மெல்ல லாவகமாகப் பிடித்துக் கொண்டுபோய் வாய்க்கால் கரையில் விட்டு வந்தாள். அந்த விஷப்பாம்பை அவனுக்கு அம்மா அடித்துக் கொல்ல வில்லை. அவனுக்கு உறவினர் ஒருவர் அந்தப் பாம்பைக் கொல்லாம விட்டுட்டயே என்று அம்மாவிடம் கேட்டபொழுது, “கோமதி என்கொழந்தைய காப்பாத்தினா..நான் அவ கொழந்தையக் கொல்லலாமோ…” என்று பதில் சொன்னதை அவன் கேட்டான். அன்றிலிருந்து அவன் பாம்புகளைக் கொல்லுவதில்லை. ஏன் அவனறிந்து எந்த ஜீவராசிகளுக்கும் துன்பம் தருவதில்லை. அவன் பள்ளிக் காலங்களில் எத்தனையோ பாம்புகளின் வாலைப் பிடித்து இழுத்து மிக வேகமாகச் சுழற்றி வானில் வீசுவான். அது “சொத்”தென பூமியில் விழுந்து இறந்து போகும். நாய்கள் மீதும், குரங்குகள் மீதும் கல்லெறிந்து மகிழ்வான். அப்பொழுதெல்லாம் அவனுக்கு அம்மா அவனை வீட்டிற்குள் வைத்து ஒரு பிரம்பால் அடிப்பாள். அவன் கத்துவான். அழுவான். அப்பொழுது ,”ஒன்னபோலத்தானே அந்தப் பாம்புக்கும், நாய்க்கும் வலிக்கும்…ஏன் பாவத்தைப் பண்ணறாய்” என்று சொல்லிச் சொல்லி அடிப்பாள். அப்படி அடித்து அடித்தே அவனுக்குப் பாவத்தைப் போக்கி அந்தப் பாவத்தை எல்லாம் தான் வாங்கிக் கொண்டாள் அந்த அம்மா. அவனுக்கு அவளே கோமதி.

    ஆடிப்பெருக்கு

    ஆடிப்பெருக்கு அவனுக்கும் அவனது நண்பர்களுக்கும் ரொம்ப குஷியான பண்டிகை. அவனுக்கு அம்மா வீட்டில் சர்கரைப் பொங்கல், புளியோதரை, தேங்காய்ச்சாதம், எளிமிச்சம்பழச் சாதம், எள்ளுஞ்சாதம், தயிர் சாதம் , வடகம் எல்லாம் சுவையாகச் செய்து வைப்பாள். அன்று பள்ளிக்குக் கூட விடுமுறைதான். காலையில் தாத்தா, அப்பா, அக்கா எல்லோருடனும் வீட்டில் சாப்பிடுவான். மாலையில் அவனுக்கும், அவனுக்கு அக்காவுக்கும் ஒரு பெரிய “காரியரில்” இந்த சித்ரானங்களை வைத்து இலைகளும் தந்து அவனுக்கு அம்மா ஆற்றங்கரைக்கு அனுப்பி வைப்பாள். கிராமத்தில் எல்லோரும் மாலை நாலரை மணிக்கே ஆற்றங்கரைக்குக் கிளம்பி விடுவார்கள். தெருவெல்லாம் “கலகல” வென்றிருக்கும். அம்மா வரமாட்டாள். அப்பா அவருடைய நண்பர் எம்.ஆர்.ஆதிவராகன் குடும்பத்தினருடன் அணைக்கட்டுக்குச் சென்று வருவார். தாத்தா ஆத்தங்கரைக்கு வந்து , பௌண்டரிக மண்டபத்தில் அவருடைய நண்பர்களுடன் இருப்பார். எங்களைக் கவனித்துக் கொண்டிருப்பார். அவருக்கு எங்களின் மீது எப்பொழுதுமே ஒரு தனிப் பிரியம் இருந்தது. ” சாப்பிடரத்துக்கு முன்னால மீனுக்குப் போட்டுட்டுச் சாப்புடுங்கோ” என்று சொல்லுவார். அவனுக்கு அக்கா அம்மா கொடுத்தனுப்பிய வெத்தலை, பாக்கு, பழங்கள் எல்லாம் ஒரு தட்டில் வைத்து தாமிரபரணியைப் பிராத்தனை செய்து அந்தத் தாம்பூலத்தைத் தண்ணீரில் கலப்பாள். பிறகு அம்மா கொடுத்தனுப்பிய உணவுகளில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து மீனுக்குப் போடுவாள். பிறகு ஒரு பாறையில் அமர்ந்து கொண்டு, கால்களைத் தண்ணீரில் தொங்கவிட்ட படியே அவன் இருப்பான். அவனுக்கு ஒரு இலையில் அக்கா உணவுகளைத் தருவாள். சந்தோஷமாகச் சாப்பிடுவான். நண்பர்கள் வீட்டு மனிதர்களுடன் கொண்டுவந்த உணவைப் பகிர்ந்து கொண்டு உண்ணுகின்ற ஆனந்தத்திற்கு எல்லையே கிடையாது. கபாலி, குட்டிச்சங்கர், பிரபு, சன்னதித்தெரு கண்ணன் போன்ற நண்பர்களுடனும் ஆற்று மணலில் விளையாடுவான். ஆற்றங்கரையில் எங்கு பார்த்தாலும் மக்கள் தண்ணீரின் அருகில் மணற்பரப்பில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அழகே அழகுதான். இருள் சூழத் துவங்கி விட்டதென்றால் மெல்ல மெல்ல எல்லோரும் வீடு திரும்பத் தயாராவார்கள். தாத்தா சந்தியாவந்தனம் முடித்துத் தயாராக இருப்பார். வீடு திரும்பும் பொழுது எல்லோரும் ஒரே குடும்பமாகச் சிரித்துப் பேசிக் கொண்டு கூட்டங்க்கூட்ட்டமாக வருவார்கள். தாமிரபரணி தன் குழந்தைகளைக் கண்ட மகிழ்ச்சியில் சிலிர்த்து சங்கீத ஒலியோடு அலையடித்து அலையடித்து மெல்லச் சென்று கொண்டிருப்பாள்.

    அவன் பத்தாவது படித்துக் கொண்டிருந்த வருட ஆடிப்பெருக்கன்று மாலையில் ஆற்றங்கரையில் உணவு உட்கொண்டு விட்டு நண்பர்களோடு விளையாடிக் கொண்டே வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்பொழுது மனநிலை சரியில்லாத ஒரு பெரியவர் அவனுக்கு முன்பாகத் தனக்குத்தானே பேசியபடி சென்று கொண்டிருந்தார். அவர், அவன் வசிக்கும் தெருவில் உள்ள ஒரு நல்லாசிரியரின் உறவினரும் கூட. அவன் அந்தப் பெரியவரைக் கேலி செய்தான். அவர் மெல்ல ஓடி ஓடிச் சென்றார். அவனும், அவனுக்கு நண்பன் ஒருவனும் அந்த மனநிலை சரியில்லாத பெரியவரைத் தொடர்ந்து கேலி செய்துகொண்டே வந்தனர். சிதம்பரேஸ்வரர் கோவில் வாசல் வந்ததும் அந்தப் பெரியவர் அங்கிருக்கும் அரசமரத்தடியில் உள்ள பிள்ளையாரை வணங்கிகொண்டிருந்த அவனுக்குத் தாத்தாவிடம் சென்று,” ஒய்..விஸ்வநாதையர்…ஒம்மோட பேரன் என்னக்கேலி பண்ணிண்டே வரான்…நீர்தான் அவனக் கேக்கணும்…” என்று சொல்லிவிட்டு வேகமாக சிவன் கோவிலுக்குள் சென்று விட்டார். அவனுக்குத் தாத்தா,” டேய்..கண்ணா…அந்தப் பெரியவர நீ கேலி பண்ணலாமா..அவர் மனசு சரியில்லாதவர்…அவரைக் கஷ்டப் படுத்தலாமா…அவர் நன்னாப் படிச்சவர்…ஏதோ அவரோட போறாத காலம் இப்படி இருக்கார்…இப்படி நீ கேலி பண்ணறது பாவம் இல்லையா…நம்மாத்துக் கொழந்தை இப்படிச் செய்யலாமா…அந்தப் பெரியவரக் கேலி பண்ணினது தப்புன்னு சொல்லி இப்ப இந்தப் புள்ளையார் முன்னாடி மூணு தோப்புக்கரணம் போடு..நமஸ்காரம் பண்ணு ” என்று சொல்லித் திருத்தினார். அன்று முதல் அவன் வேடிக்கையாகக் கூட யாரையும் கேலி செய்வதில்லை. அவனுடைய நல்ல காலம் அவனுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவர் வந்து அவனை நல்வழிப் படுத்துகின்றனர்.

    அப்படி அவனிடம் உயிராக இருந்து நல்வழிப் படுத்திய அவனுக்கு அப்பாவழித் தாத்தா விஸ்வநாதையர் அடுத்த வருட ஆடிபெருக்கிற்கு முன்பாகவே கார்த்திகை மாதத் தொடர் மழையில் ஒருநாள் இரவு சாப்பாட்டிற்கு பின்பு, அவரது நண்பர் கடலை ராமலிங்கமையரிடம் பேசிவிட்டு வரும் வழியில் சகதியில் சறுக்கிக் கீழே விழுந்தவர் இரண்டு நாட்களில் இறைவனடி சேர்ந்து விட்டார். நல்ல ஆத்மா. அவரை அவன் மறக்கவே மாட்டான்.

    30.07.2015

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(159)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடனும் துயரம் நிறைந்த மனதுடனும் உங்களிடம் இம்மடல் மூலம் மனம் திறக்கிறேன்.

    இருவாரங்களுக்கு முன்னால் தமிழ்த் திரையுலகின் இசைவேந்தனாக திகழ்ந்த மெல்லிசை மன்னன் எம்.எஸ்.வி அவர்களை இறைவன் தன்னுடன் அழைத்துக் கொண்ட நிகழ்வின் போது என் உள்ளத்து உணர்ச்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

    இதோ இருவாரங்களில் மீண்டும் ஒரு மாமனிதனின் மறைவின் தாக்கங்கள் கொடுத்த உணர்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் வகையில் மீண்டுமொரு நிகழ்வு.

    இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்ட துயரமான செய்தியைத் தாங்கி வந்தது கடந்த செவ்வாய்க்கிழமை.

    இதற்கு முன்னால் இந்திய தேசம் எத்தனையோ ஜனாதிபதிகளைச் சந்தித்துள்ளது. அவர்களும் திறமையில் ஒன்று சளைத்தவர்களல்ல.

    அப்படியாயின் டாக்டர் அப்துல் கலாம் அவர்களில் இருந்து எப்படி வேறுபட்டவர் ?

    மக்களின் ஜனாதிபதி எனும் மாபெரும் மதிப்பை, கெளரவத்தை அவர் நேசித்த மக்களிடமிருந்தே பெற்றுக்கொண்ட ஒரு அரசியல் கலக்காத உன்னதமான “மனிதர்” என்பதே அவருடைய தனிப்பெரும் விசேடத் திறமையாகும்.

    தான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் என்பதை அவர் தான் வாழ்வில் எந்த நிலையை அடைந்த போதும் மறக்கவில்லை.

    தான் தன்னுடைய மதத்தை மதித்த அதே சமயம் தன்னை மதத் தீவிரவாதி எனும் முத்திரை குத்தி என்றுமே அடையாளைப் படுத்தியவரில்லை.

    அதற்கு மேலாக மற்றைய மதங்களின் சிறப்பம்சங்களை அறிந்து அவற்றையும் மதித்தார் என்பதுவே அவரது மனிதத்தன்மை மதங்களைக் கடந்த ஒரு மகத்துவம் வாய்ந்தது என்பதற்கு உதாரணமாகிறது.

    ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி அதன் முதுகெலும்பாகிய மாணவ சமுதாயம் தம்முடைய நாட்டின் முன்னேற்றத்தில் எத்தனை தூரம் ஆர்வம் கொண்டிருக்கிறது என்பதிலேயே தங்கியுள்ளது என்பதில் முழு நம்பிக்கை வைத்திருந்தார்.

    தாம் எத்தனை வறுமை நிலையிலிருந்தாலும் தமது கனவுகளை, லட்சியங்களை இளைஞர்கள் தொலைத்து விடக்கூடாது என்பதில் அவர் முனைப்பாக இருந்தார்.

    இந்தியா 2020இல் வல்லரசாக மாறும் என்பதில் நம்பிக்கை வைத்திருந்த அவர், அந்நம்பிக்கை கொண்டதோடு மட்டுமல்லாமல் அந்நம்பிக்கையை நிஜமாக்க இளைய சமுதாயத்தை எழுச்சி மிக்க ஒரு சமுதாயமாக மாற்ற தன்னாலான முழு முயற்சிகளையும் எடுத்து பாரத தேசத்தின் பட்டி தொட்டியெல்லாம் சென்று இளைஞர்களின் உணர்வைச் சரியான பாதையில் கூர்மைப்படுத்தினார்.

    இத்தனைக்கும் மேலாக அவர் தமிழ் மீதும் இலக்கியத்தின் மீதும் கொண்டிருந்த காதல் அளப்பரியது.

    ஒரு மனிதன் வாழ்வில் எத்தனை பெரிய சிகரத்தைத் தொட்டாலும் தான் ஒரு மனிதன் என்பதை எப்போதும் மறந்து விடக்கூடாது என்பதை வாழ்ந்து காட்டிய அவரது எளிமை போற்றத்தக்கது.

    தனது 83வது வயதிலும் தான் கொண்ட நம்பிக்கையை நிஜமாக்க மாணவ சமுதாயத்தின் முன்னே உரையாற்றிக் கொண்டிருந்த போது உயிர்நீத்த அவருக்கு இத்தகைய ஒரு மகத்தான இறுதி நேரத்தை அளித்து இறைவன் தான் அவரது மகத்துவத்தை இரட்சித்தேன் என்று கூறிவிட்டான்.

    இந்த அரும் பெரும் மனிதன் வாழ்ந்த காலத்தில் அவன் உதித்த தமிழகத்தின் மண்ணில் எனது கால்களும் பதிந்தது என்பதே எனது வாழ்வின் பாக்கியமென்பேன்.

    இதோ அம்மாமனிதனுக்கு இச்சிறியேனின் அஞ்சலிக் கவிதை …

    புண்ணியர் பூமி என
    போற்றிப் பாடிடும்
    தென்கோடிக் கரையதுவாம்
    ராமேஸ்வரம் தனிலே
    விழுந்த ஒரு விதை
    வித்தாகிச் செடியாகி
    பொன்னெழில் பொங்கிடும்
    ஆலமரமாக ஓங்கியெழுந்ததுவே !

    ஐயா ! அப்துல் கலாம்
    ஐக்கியமாகியிருக்கலாம் நீ
    ஆண்டவனுடன்
    ஆனால்
    அழியாமல் பதிந்து விட்டாய்
    அகிலத்தோர் நெஞ்சங்களில்

    சிந்தி விளையாடும் சிகையுடன்
    சிரிப்பினை அள்ளி வீசிடும்
    சிங்கார வதனத்துடன்
    சிந்தனைச் சிற்பியாய் நீ
    வலம் வந்தனையே !

    தூக்கத்தில் காணும்
    கனவல்ல கனவு
    இளைஞனே ! உன்னைத்
    தூங்க விடாமல்
    வைத்திருக்கும் இலட்சியக்
    கனவுகளை வளர்த்திடு
    அவற்றை நோக்கி
    அயராமல் உழைத்திடு
    எனும் உனது ஊக்கமிகு
    வார்த்தைகள் எத்தனை
    இளந்தலைமுறையினரை
    எழுச்சி கொள்ள வைத்தது

    இந்திய தேசத்தினை
    உலகின் விஞ்ஞான வரைபடத்தில்
    வரைந்து வைத்த வித்தகனே !
    விரைந்து நீ சென்றாயே !
    வேகுதய்யா எம் மனது

    கல்வியின் மகத்துவத்தை
    பட்டி தொட்டியெலாம்
    எடுத்துச் சென்று
    வள்ளுவன் வகுத்த வகை
    வாழ்ந்து காட்டிய
    வாழ்க்கைச் சிற்பி ஐயா நீ !

    மாணவ சமுதாயமே !
    ஒரு நாட்டின் முதுகெலும்பென
    ஓயாமல் ஓங்கி ஒலித்தது
    உந்தன் ஓங்காரமான குரல்

    ஏழ்மையில் அவதரித்து
    கல்வியெனும் ஏணியில் ஏறி
    விஞ்ஞானத்தின் உச்சியை
    அஞ்சாமல் தொட்டவன் நீ !

    எளிமையின் மறு உருவமாய்
    மனிதாபிமானத்தின் மொத்த வடிவாய்
    பண்பெனும் மகத்துவத்தின்
    மாபெரும் உதாரணம் நீ !

    அன்பு நிறைந்தவனே ஐயா
    அப்துல் கலாம்
    நீ காலமாயிருக்கலாம்
    ஆனால் உன் தாய்த்திருநாட்டின்
    மாற்றத்தைப் பற்றி
    நீ கண்ட கனவுகள்
    கால காலமாய் கலாம்
    எனும் ஓசையோடு பாரத தேசத்து
    இளைய சமுதாயம் மட்டுமின்றி
    பாரெங்கும் வாழும் தமிழர்களின்
    இதயங்களில் வாழ்ந்து கொண்டுதானிருக்கும்

    ஆண்டவனுக்கு உந்தன்
    ஆலோசனை தேவைப்பட்டது போலும்
    அழைத்துக் கொண்டான் உன்னை
    அவசரமாக . . .
    அங்கிருந்து கொண்டே
    உந்தன் மணிச் சிரிப்பின் மூலம்
    மனித நேயத்தை மேலும்
    வளர்த்தெடுக்க ஊக்குவிப்பாய்

    ஐயா உந்தன்
    கடைசி மணித்துளி மூச்சு
    உள்ளவரை
    எந்த மாணவர் சமுதாயத்திற்காக
    உழைத்தாயோ
    அந்த மாணவ சமுதாயத்தின்
    முன்றலில் உந்தன் இறுதி மூச்சி
    விடைபெற்றதய்யா !

    ஆண்டவன் உன்னை
    அந்தரிக்க விடவில்லை
    நோயில் அழுந்தி நீயும்
    கட்டிலில் விழவில்லை
    உழைத்துக் கொண்டே
    உயிர் விட்டாய்
    உயர்த்தி விட்டாய்
    உன் இலட்சியத்தை

    உன் ஆத்ம சாந்திக்காய்
    லட்சோப லட்ச தமிழர்களோடு
    இணைந்து நானும் பிரார்த்திக்கின்றேன்

    அஞ்சலிகளுடன்
    சக்தி சக்திதாசன்

    மீண்டும் அடுத்த மடலில்
    துயரத்துடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • மாமனிதர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்

    -ரா. பார்த்தசாரதி

     

    kalam

     

     

     

     

     

     

     

    வையகம் போற்றும் சிறந்த விஞ்ஞானியே !
    தன்னலம் கருதாத  தலைவனும் நீயே !
    விருதுகள் பல பெற்ற  மாமேதையே !
    தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த ஜனாதிபதியே !

    இளைய சமுதாயத்தைக்  கனவு கொண்டு இலட்சியத்தை அறிவுறுத்தினாய் !
    இந்தியா வல்லரசு  ஆகும் என மக்களிடையே  எடுத்துரைத்தாய் !
    மாற்றுத் திறனாளிக்கு  எடை குறைவான காலணி  செய்துகொடுத்தாய்!
    மெய்ஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் திறம்படத் தெளியவைத்தாய் !

    அரசியலையும், விஞ்ஞானத்தையும் ஒருங்கே போற்றினாய் !
    ஏவுகணைகளின்  நாயகன் எனப் போற்றப்பட்டாய் !
    யாதும் ஊரே  யாவரும் கேளிர் என்பதை அகிலத்தில் உரைத்தாய் !
    எளிமையும் பணிவும்  கொண்டு  பதவி வகித்தாய் !

    தமிழினமே  உன்  இழப்பால்  கலங்கியதே !
    நரம்பிழந்த வீணையாக  இன்று காணப்பட்டதே !
    உன்  பிறப்பு  ஓர்  சம்பவமாக  இருந்ததே !
    உன் இறப்பு  ஓர்  சரித்திரமாய் மாறியதே !

     

     

    Share
  • பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் …

    — கவிஞர் காவிரிமைந்தன்.  

     

    பாடுவோர் பாடினால்3பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் …

    இம் என்னும் முன்னும், உம் என்னும் முன்னும் இசை பிறக்கும் மெல்லிசை மன்னரின் ஆர்மோனியத்தில்! அவரின் இசை சாம்ராஜ்ஜியத்தில் பூத்த பாடல்கள் என்றும் வாடதவை. நம்மை முணுமுணுக்க வைப்பவை. எம்.ஜி.ஆர். என்னும் கதாநாயகனுக்காக அவர் இசைத்த கானங்கள் காலங்களைத் தாண்டி வாழுபவை. எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை.

    அவர் அடிக்கடி சொல்லுகின்ற வார்த்தை, இறக்கும் மனிதர்கள் இறவாப் பாடல்கள்…

    இன்று அவர் நம்மிடம் இல்லை. அவர் அமைத்த இசை, அவர் கொடுத்த பாடல்கள், தமிழ் உலகம் உள்ளவரை உயிரோடு உலவி வரும். இதோ இந்தப் பாடல் கவிஞர் ஆலங்குடி சோமு அவர்கள் இயற்றியது. கண்ணன் என் காதலன் திரைப்படத்திற்காக வரைந்த இசையோவியம். செந்தமிழ் சீர் கொண்டு கவிஞர் தர, மெல்லிசை இசையாலே எம்.எஸ்.வி. உயிர் கொடுக்க, அற்புதக் குரலாலே நம்மை வயப்படுத்தும் டி.எம்.சௌந்தரராஜன்.

    பாடுவோர் பாடினால்பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்… கதையின்படி நடக்க முடியாத நாயகி, இந்த இசை கேட்டு, கால்கள் குணம்பெற்று ஆடத் தொடங்குகிறாள். ஏற்ற பல்லவி இசையை சுமந்து வர, எம்.ஜி.ஆர். அவர்களின் முக பாவங்கள் அடடா… அடடா… போட வைக்கும். நாயகியாக செல்வி ஜெயலலிதா. பாடல் வரிகளை உச்சரித்து இது மெட்டுக்கு இடப்பட்ட வரிகளா அல்லது இயற்றிய வரிகளுக்கு இடப்பட்ட மெட்டா என்று பட்டிமன்றம் வைக்கச் சொல்கிற பாடல்.

    கலைகளைத் தெய்வமாய் காண வேண்டும் என்கிற வைர வரியும் பாடலில் மின்ன…

    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
    பாலுடன் தேன்கனி சேர வேண்டும்

    நம்மையும் அறியாமல் இப்பாடல் கேட்கும்போதெல்லாம் ஆடத் தோன்றுகிற ரகசியம் … இசையல்லவா?

    ____________________________________________________________________________
    பாடல்: பாடுவோர் பாடினால்
    திரைப்படம்: கண்ணன் என் காதலன் (1968)
    இயற்றியவர்: கவிஞர் ஆலங்குடி சோமு
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
    காணொளி: https://youtu.be/qBFIb_2iChc
    ____________________________________________________________________________

    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
    பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
    பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
    கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
    கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்… ம்…
    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

    பாட்டில் சுவையிருந்தால் ஆட்டம் தானே வரும்
    கேட்கும் இசைவிருந்தால் கால்கள் தாளம் இடும்
    தன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமை
    தன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமை
    நூலளந்த இடைதான் நெளிய நூறு கோடி விந்தை புரிய
    நூறு கோடி விந்தை புரிய
    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

    பாதம் சிவந்திருக்கும் பாவை செந்தாமரை
    பார்வை குனிந்திருக்கும் புருவம் மூன்றாம் பிறை
    புத்தம் புது மலர்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டு
    புத்தம் புது மலர்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டு
    மேடை வந்த தென்றல் என்றேன்
    ஆடை கொண்ட மின்னல் என்றேன்
    ஆடை கொண்ட மின்னல் என்றேன்

    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
    பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
    கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
    கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் ம்
    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

    ____________________________________________________________________________

    https://youtu.be/qBFIb_2iChc

    ____________________________________________________________________________

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    “ஞானேஸ்வரி” பாவார்த்த தீபிகா(பகவத் கீதைக்கு ஞானதேவரின் உரை) படிக்கையில் தோன்றியது….

    crazy
    விஸ்வரூபம் கண்டு பயந்த பார்த்தனை,
    எள்ளி நகையாடி, பழையபடி க்ருஷ்ணரூபம் காட்டி
    சமாதானம் செய்விக்கிறார்….எனக்கென்னமோ
    கேசவின் இந்தப் பசுதான் பார்த்தன்….பதி பகவான்….
    பாசம் பிரேமை…..

    ‘நிஜத்தினை விட்டு நிழலைப் பிடிக்க,
    புஜத்தினை நீட்டுகிறாய் பார்த்தா !, -அசத்துநீ,
    விஸ்வரூபம் கண்டு வெலவெலத்தாய், வந்துசெல்லும்
    க்ருஷ்ணரூபத் தில்குளிர் காய்’ ….கிரேசி மோகன்….

    Share
  • உம் வழியில் பயணிக்கும்…….!

    abdul k
    (முன்னாள் கு​டியரசுத் த​லைவருக்கு இரங்கற் பா)
    மு​னைவர் சி.​சேதுராமன் தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.
    sethuramansingaram@yhoo.com

    அன்பான அருளான பண்பான
    பாரதத்தின் த​லைமக​னே!
    பிறப்​பைச் சரித்திரமாக்கிய
    இந்தியாவின் பிரபஞ்ச​மே!
    எம்மில் கலந்து எம் கண்ணில் கலந்து
    உள்ளில் கலந்து எம் ஊனில் கலந்து
    விண்ணில் கலந்தாய் இன்று….!

    மண்ணில் பிறந்தாய்!
    மனிதரி​லே உயர்வானாய்!
    விண்ணில் விதி பறக்க
    விதி உன்​னை அ​​ழைத்தது​வோ…?
    எண்ணத்தில் கருவானாய்!
    இ​ளைஞர்களின் எண்ணத்தில் கருவானாய்…!
    ஏ​ழையரின் ஏந்தலானாய்!
    கண்களி​லே நீர் வழிய
    எம்​மைக் கலங்கடித்து விட்டா​யே!
    ஏவுக​ணை நீ ஏவிப் பாரில்
    பாரதத்​தை உயர்த்திவிட்டாய்!
    பாரதத்தின் த​லைமக​னே!
    தமிழ்த்தாயின் திருமக​னே!
    நீர் வி​தைத்த எண்ணங்கள்
    நிதமும் எம்​மை வழி நடத்தும்
    நீர்நி​னைத்த எண்ணங்கள்
    நிச்சயம் நி​றை​வேறும்!
    பார் புகழப் பாரத​மோ – என்றும்
    உம் வழியில் பயணிக்கும்…..!

    Share
  • மகான் அப்துல் கலாம்

    பி. சுவாமிநாதன்

    11220140_1123504214343953_8318872397092579954_n

    ‘ஒரு மனிதன் இருக்கும்போது பேசப்படுவதை விட, இறந்த பின்தான் அதிகம் பேசப்படுவான்’ என்பதை நன்றாகவே அறிவோம். அனுபவபூர்வமாகப் பார்த்தும் வருகிறோம்.

    ஆனால், இருக்கும்போதும் இறந்த பின்னும் – இன்று அதிகம் பேசப்பட்டு – வணங்கப்பட்டு வருபவர் உலக மேதை டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்.

    ஒரு மகனின் மறைவுக்காகத் தாயாகப்பட்டவள் அழுது அரற்றி அனுதாபம் தெரிவித்தால், அவன் ஒரு நல்ல மகனாக இருந்துள்ளான் என்று அறியலாம்.

    ஒரு கணவனின் மறைவுக்கு மனைவியாகப்பட்டவள் கண்ணீர் விட்டுக் கதறி, சடலத்தின் அருகிலேயே இருந்து பழங்கதைகளை நினைவு கூர்ந்தால், அவன் நல்ல கணவனாக வாழ்ந்துள்ளான் என்று அறியலாம்.

    ஒரு குடும்பத் தலைவரின் மறைவுக்கு ஒட்டுமொத்த வாரிசுகளும் அமர்ந்து ஓயாது கண்ணீர் விட்டால் அவர் ஒரு நல்ல தந்தையாக விளங்கி உள்ளார் என்று அறியலாம்.

    ஒரு குடிமகனின் மறைவுக்காக ஒட்டுமொத்த தேசமே கண்ணீர் சிந்தினால், அந்தக் குடிமகனை ‘தேசத் தந்தை’ என்று சொல்லலாம்.

    ஆம்! அப்துல் கலாம் ஐயா அவர்கள் நம் தேசத் தந்தை ஆகி விட்டார்!

    கலாமின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு தெருவிலும் அவரது திருவுருவப் படம் வைக்கப்பட்டு, ஃப்ளெக்ஸ் அமைக்கப்பட்டு மலர்கள் தூவப்படுகின்றன.

    மெழுகுவத்திகள் ஏற்றப்படுகின்றன.

    குழந்தைகள் படங்களின் முன்னால் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

    உலகமே இரங்கல் தெரிவிக்கிறது.

    ஒவ்வொரு பள்ளி – கல்லூரிகளிலும் அனுதாபம் தெரிவிக்கப்படுகிறது.

    ரயில் நிலையங்கள் உட்பட பொதுமக்கள் அதிகம் நடமாடுகின்ற இடங்களில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

    இரங்கல் தெரிவித்து அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடைகள் இயங்காது என்று பிரதான வணிகர் சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

    தியேட்டர்களில் சில காட்சிகள் ரத்து என்று அறிவிப்பு.

    ராமேஸ்வரத்தில் அஞ்சலிக்காக வந்து கூடும் அன்பர்களுக்கு இலவச இடம், இலவச உணவு என்கிற தனியார் அமைப்புகளின் அறிவிப்புகள்…

    அஞ்சலி செலுத்துவதற்கு ராமேஸ்வரம் செல்ல வசதியாக சென்னையில் இருந்து சிறப்பு இலவசப் பேருந்துகள்…

    இவை போல் இன்னும் எத்தனை எத்தனையோ…

    – மேலே சொன்ன எதுவும் யாரோ வலுக்கட்டாயமாகச் சொல்லி அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.

    உணர்வுபூர்வமாக – உருக்கமாக வெளியான அறிவிப்புகள்.

    உண்மையாக நடந்தால் –

    ஒழுக்கத்துடன் இருந்தால் –

    மனிதாபிமானம் கொண்டிருந்தால் –

    தேச பக்தியும் அமைந்திருந்தால் –

    திக்கெட்டும் உன்னை வாழ்த்தும்.

    அப்துல் கலாம் அவர்கள் வாழ்ந்து காட்டினார்.

    இப்போது நிகழ்ந்தது ஒரு மனிதனின் மறைவல்ல…

    ஒரு மகானின் விடைபெறுதல்…

    மக்களின் வாழ்வுக்காக மகான்கள் அருளினார்கள்.

    அப்துல் கலாமும் அதையேதான் செய்தார்.

    மகான் ஆனார்!

    இன்று தேசமே கண்ணீர் சிந்துகிறது.

    ஒரு நல்ல குழந்தையை இழந்து தவிக்கிறாள் பூமாதேவி.

    என் ஆழ்ந்த அஞ்சலி.

    – பி. சுவாமிநாதன்

    Share
  • இந்திய மண்ணின் இரண்டாம் இமயம் இன்று சரிந்ததே!

    கவிஞர் காவிரிமைந்தன்

    abdul
    இந்திய மண்ணின் இரண்டாம் இமயம் இன்று சரிந்ததே!
    இவர்போல் மனிதர் இதுவரை இங்கு பிறந்ததில்லையே!
    வள்ளுவன் வாய்மொழி வகுத்தது பாதையென வாழ்ந்தவரல்லவா?
    ”சொல்’ எனும் சொல்லே உருதுமொழியில் ‘கலாம்’ ஆனதைச் சொல்லவா?
    காலம் நமக்குத் தந்த கொடைதான் ‘அப்துல் கலாம்’ அல்லவா?
    வாழும் நாள்வரை நாளும் பொழுதும் நாட்டிற்காய் உழைத்தவரல்லவா?
    உலகம் போற்றும் உன்னதத் தலைவர்கள் எவரும் போற்றும் புகழ்மனிதர்!
    மாணவ மாணவியர் மத்தியில் மட்டுமே – தன் வாழ்நாளைக் கழித்தவர்!
    நாளைய இந்தியா வல்லரசாக நமக்கெல்லாம் கனவினைக் கொடுத்தவர்!
    ஏழையும்கூட வாழ்வில் உயர்ந்திட முடியும் என்று வாழ்ந்துகாட்டியவர்!
    எளிமை பணிவு இரண்டையும் கொண்டே ஏற்ற பதவியை அலங்கரித்தார்!
    ஏவுகணையின் நாயகன் இவரென்று இந்தியா புகழ்ந்துரைக்கும்!
    பொக்ரைன் குண்டுகள் வெடித்தபோது புத்தரே சிரித்தாரன்றோ?
    போலியோ குழந்தைகள் அணியும்வண்ணம் குறையெடைஉலோகம் கண்டார்!
    அடைந்திட்ட மகிழ்ச்சியின் உச்சமிதுவென உள்ளம் நெகிழ்ந்து சொன்னார்!
    ‘நம்பிக்கை’ என்கிற வார்த்தைக்கே நங்கூரமிட்டுக் கொடுத்தார்!
    ஒட்டுமொத்த இந்தியாவும் வணங்கும் ‘தலைமகன்’!
    ஒருவர்கூட புறம்கூறாத உத்தமமான மனிதன்!
    அறிவுச்செல்வம் பெற்றுவிட்டால் அகிலம் நமதென்றார்!
    ஆற்றல் பலவும் இளைஞரிடம் அதையே தினம் வளர்த்தார்!
    போற்றுதலுக்குரிய ஆசிரியப் பணிக்கு மீண்டும் திரும்பிவந்தார்!
    புகழ்வதற்கு புதிதாய் என்னிடம் வார்த்தைகளில்லை!
    மண்ணில் தோன்றிய மனிதர்கள் மடிந்துதான் தீரவேண்டும்!
    மக்கள் மனதில் ‘கலாம்’ என்பதற்கு மரணம் என்றுமில்லை!!
    கண்ணீருடன்..
    காவிரிமைந்தன்.. அபுதாபி..

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    யாமறிந்து கண்ணனுக்கு பிறகு எட்டாவது அதிசயம் ‘’மதுரகவி ஸ்ரீனிவாச அய்யங்கார்’’ பாடல்கள்….கம்பராமாயணம், பாரதம், வேதாந்த தேசிகரின் ‘’பாதுகா சஹஸ்ரம்’’, நாரதீயம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்….ஆசுகவி மேலும் மகான்….நிமிஷத்திற்கு நாலு வெண்பா எழுத வல்லவர்….அவரது புத்தகங்கள் எனது பூஜா விக்ரகங்கள்….அவருடைய ‘’பாதுகை ஆயிரம்’’ படித்து நப்பாசையில் அடியேனும் முன்பு பெருமாளின் பாதுகையைப் பாட ஆரம்பித்தேன்….பாதிகைதான் வந்தது….வேதாந்த தேசிகர் பாதுகையைப் பாடினார்….ஆனால் நம் கேசவ் பசு ‘’அதையும் தாண்டி புனிதமாக’’ கண்ணன் பாதத்தை வருடிப் போற்றுகிறது….கீழ் கண்ட அடியேன் பாடல்கள் கேசவ்வின் பசுவுக்கு சமர்ப்பணம்….

     crazy

    பாதுகா வெண்பாக்கள்
    —————————-
    அதர்மமே யானாலும் அஞ்சாது செய்யும்
    சுதர்மம் சுதந்திர சொர்கம் -பதமுறும்
    பாதுகையே போய்ச்சொல் தூதுவனாய்க் கண்ணனிரு
    காதுகளில் காத்திருப்பே னென்று….(1)….

     
    அகங்காரம் ஆசை பயம்கோபம் என்றும்
    சுகம்காணும் சொந்த நலத்தில் -புகுந்தாடும்
    மால்கட்டு நீங்கிட மாலோலன் பங்கயக்
    கால்கட்டும் பாதுகாய் காப்பு….(2)….

     
    அகஸ்மாத்தாய்க் கேட்டோர் அதிசயிக்கும் வண்ணம்
    சகஸ்ரம் எழுதிய சிங்கம் -நிகமாந்த
    தேசிகர் பாதுகையை யாசகமாய்ப் பெற்றுத்தா
    கேசவன் காலணியே காப்பு….(OR)
    வாசகனென் தோஷம் விடுத்து….(3)….

    சாவடி ஆவிற்கு பாவடி ஆழ்வார்க்கு
    காவடி ஐவர்க்கு , மாபலிக்கு -மூவடி
    நீவடி வாவது நெஞ்சமர் ராதைக்கு
    சேவடி உன்கால் அணிக்கு….(4)….

    வேத புராண இதிகாச சாத்திரம்
    ஓதும் உபநிடதம் ஓங்காரம் -ஆதிகள்
    நூலணி நான்முகன் தோளணி சம்புதொழும்
    காலணி பாதுகையே காப்பு….(5)….

    வானத்து கங்கை வருடிடும், அன்று
    தானத்தை தோழர்க்குத் தந்திடும் -தூணித்துச்
    சாய்ந்திட தூர்த்திடும் ஸ்ரீரங்கன் கால்களை
    காய்ந்திடாது காப்போனே காப்பு….(6)….

    நின்றாலும் நீண்டு வளர்ந்தாலும் எங்கு
    சென்றாலும் சேவடி சேவகரே -அன்றாலில்
    கண்ணுறங்கும் போது கழற்றி இருப்பானே
    எங்கிருந்தீர் சொல்லும் எமக்கு….(7)….

    சேதாரம் இல்லாது செங்கட் திருமாலின்
    பாதார விந்தத்தைப் பாதுகாக்கும் -ஆதாரமே
    தூதுபோய்க் கண்ணன் ஏதுதான் கூறினான்
    பாதுகாய் பகர்வாய் புகன்று….(8)….

    நூபுரம் தண்டை நொறுங்கப் பிரபஞ்ச
    கோபுரம் தாண்டிக் கிளர்ந்தவன் -மாபரம்பொருள்
    மாதவ னோடு மகோன்னதத்தில் பங்குற்ற
    பாதுகா சாகசனைப் போற்று….(9)….

    மூவா முகுந்தரின் பாதாதி கேசத்தை
    நோவாமல் தாங்கி நடத்துவோய் -சேவா
    கணத்தில் உமக்கு அனந்தனின் காலை
    தினம்தினம் சேவிக்கும் வாய்ப்பு….(10)….

    வாளி,சங்கு, சக்கரம், வாள்தண்டு கேடயம்
    தோளணி வில்லும் துயரறுக்கும் -கோளரி
    மாதவன்கை ஆயுதங்கள் ஆனாலும் பாதுகாக்கும்
    மாதவன்கை ஆயுதங்கள் பாதுகாப்ப தென்னவோ
    பாதுகையே காலணிந்த கை….(11)….

    தூணுதைத்தான் பின்னர் வானளந்தான் ராம,
    மானுடனாய் காட்டில் அலைந்தான் -தானுகந்த
    நாளாலில் சேயாக வாளாய் இருந்தவன்
    காலளவு பாதுகாய் கூறு….(12)….28-6-2008

    காதலில் ராதையைக் காண ரகசியம்
    சீதையை மீட்க அவசரம் -கோதையைப்
    பெண்ணெடுக்கப் போகையில் பின்னைடைந்தீர் பக்தியில்
    பெண்ணுருகும் பாசுரம் கேட்டு….(13)….

    பதம்வரையும் வானுமுற்ற பாகவதக் காரன்
    பதவுறையாய் சென்ற கதையை -பதவுரையாய்
    கூறவல்ல காலணியே வேறுதுணை ஏனெமக்கு
    நீரிருக்க நிர்பயமா னேன்….(14)….

    தோளணி பூந்துழாய் மேலணி பீலியென
    மாலணி ஆபரணம் ஆயிரம் -காலணி
    பாதுகைக்கு ஈடாய் படிதாண்டி ஓடிவர
    ஏதுகை நெஞ்சே நமக்கு….(15)….

    கண்ணிரெண்டால், விண்ணளந்தோன் காணாது போனாலும்
    கண்ணிரெண்டு கொண்டோய் குமிழ்களாய் -மண்ணிருந்து
    போற்றும் அடியார்கள் புகழ்செலவம் கல்விபெற
    சாற்றுன் எஜமான் செவிக்கு….(16)….

    வாயுள்ள பிள்ளை வரிசங்கும், ஓயாமல்
    கையாலா காதுசுழல் சக்கரமும் -பாயாம்
    அரவணையும், வாயில் கரமணைக்கும் சப்த
    மரவடியைக் காதால் மடுத்து….(17)….

    சகியின் வெளுத்து வளைந்த கழுத்தின்
    மகிமையால் சங்கை மறந்தான் -திகிரியை
    வாய்க்களித்தான் வேழனுக்கு, வாய்ப்பளித்தான் காலணியே
    ஆய்க்குலத்தோன் என்றும் அணிந்து….(18)….

    விதுரன் அகத்தில் வினயமும், யுத்த
    சதுரங்கத்தில் கீதையும், ராதை -மதுரம்
    சுதாமன் சினேகிதம், சந்தித்த தெல்லாம்
    பதாம்புயத்துப் பாதுகாய் பேசு….(19)….

    காலன் எதிர்வரும் காலம் அணுகிட
    மாலன் மலர்த்தாள் முகர்ந்திடும் -காலன்
    சகஸ்ரம் உரைத்திட சித்திர குப்தன்
    புகஸ்ரமம் கொள்வான் பயந்து….(20)….5-7-2008

    கர்ணனின் தாராளம் குபேரன் ஏராளம்
    நர்மதை நீர்வேகம் நின்னருளே -வர்ணணை
    செய்து வரவழைக்க சொற்களை தேசிகர்போல்
    பெய்திட வாக்கைப் பெருக்கு….(21)….

    நிற்கையில் மெத்தை நடக்கையில் வாகனம்
    வெற்பெடுக்கும் போது வரைதாங்கி -தெற்குநோக்கித்
    தூங்கும் அரங்கன் துயிலெழுவ தற்குள்சொல்
    தாங்கிய யோகத் தெளிவு….(22)….

    சாமா னியரை சதுர்வேதி ஆக்கிஹரி
    நாமா வளியயை நவிலவைத்த -ராமா
    னுஜனே முழுமுதல் நாரணனைத் தாங்கும்
    புஜனே நிஜத்தில் புகுத்து….(23)….

    பைகொண்ட பாம்பில் படுத்த பரம்பொருள்
    வைகுண்ட நாதர் வடிவத்தை -கைகொண்டு
    ஏந்தும்கால் பாதுகையே நீந்திவா பாற்கடலில்
    ஏந்திச்செல் என்னை எடுத்து….(24)….

     

    இது வெண்பா அல்ல வேறு….
    ————————————————————–

    தென்னிலங்கை செல்கையில், தூதுசென்(று) ஐவர்க்காய்
    மண்ணளந்து கேட்கையில், மாவலிதன் வரமேற்று
    விண்ணளந்த வேளையில், விரகத்தில் ராதைக்காய்
    கண்ணலைந்த காலத்தில், காலிருந்த பாதுகாய்
    மண்ணளைந்து உண்டவனை என்னகத்திற்(கு) இழுத்துவா….(25)….கிரேசி மோகன்….

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ’’ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’
    (இசைக்கவி ரமணனின்)பில்வாஷ்டகம் படித்த பாதிப்பில் முயன்றது….
    —————————————————————————

    crazy
    ‘’சங்குசக்ரம் சாரங்கம் தெண்டம்வாள் நந்தகி
    அங்கையேந்தும் அவதார விஷ்ணு
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(1)

    ‘’மூணுமோர் மறைகள் மீட்க மீனமாய்க் கடலுள் சென்ற
    வானவைகுந்தனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(2)

    கடல்கடைந்த போதன்று வடவரையை வழுவிடாது
    உடல்சுமந்த ஆமையே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம் ….(3)

    கொம்பிலே குவலயத்தை கால்சிலம்பில் கோள்குலுங்க
    நெம்பிய வராகரே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம் ….(4)

    தானாடும் துட்டனைத் தரைமட்டம் ஆக்கிட
    தூணாடும் துரைசிங்கனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம் ….(5)

    வந்தபின் வரம்வாங்கி அந்தவான் உலகளந்த
    அந்தணன் வாமனனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம் ….(6)

    ராமபரசு ராமஅரசு ராமபல ராமனாய்
    நாமமொன்று நடிப்புவேறு
    ஏக தெய்வம் ஜனார்த்தனம் ….(7)

    பூபாரம் போக்கவன்று பாரதப் போர்முடித்த
    கோபாலக் கண்ணனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம் ….(8)

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: தம்மை யுடைமை தலை

     

    எண்ணக் குறைபடாச் செல்வமும் இற்பிறப்பும்
    மன்ன ருடைய உடைமையும் – மன்னரால்
    இன்ன ரெனல்வேண்டா இம்மைக்கும் உம்மைக்கும்
    தம்மை யுடைமை தலை.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    எண்ணக் குறைபடாச் செல்வமும், இல் பிறப்பும்,
    மன்னர் உடைய உடைமையும், மன்னரால்
    இன்னர் எனல் வேண்டா; இம்மைக்கும் உம்மைக்கும்
    தம்மை உடைமை தலை.

    பொருள் விளக்கம்:
    எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட குறைவற்ற செல்வ வளமும், சிறந்த குடியில் பிறந்தவர் என்ற பெருமையும், மன்னருக்கு நெருக்கமானவர் என்ற செல்வாக்கு உடையவராக இருத்தலும், மன்னரால் திறமையானவர் இவர் எனப் பாராட்டிப் புகழப்படும் வாழ்க்கையை உடையவராக இருக்கும் தகுதியும் விரும்பத்தக்கவை அல்ல. இன்றும் என்றும் சான்றோர் எனப் பாராட்டும்படி தம்மைக் கட்டுப்படுத்தி வாழும் ஒழுக்கம் உடையவராய் வாழ்வதே தலைசிறந்தது.

    பழமொழி சொல்லும் பாடம்: பேரும் புகழும் பெரும் செல்வமும் பெற்று பெருமையுடன் வாழ்வதையும் விட, சான்றோர் எனப் பிறர் மதிக்கும் நிலையில் என்றும் ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கையே வாழ்வதே சிறந்தது. இக்கருத்தையே வள்ளுவரும்,

    குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
    எந்நலத்து உள்ளதூஉம் அன்று. (குறள்: 982)

    சான்றோரின் குணநலம் என்று கூறப்படுவது அவருடைய நற்பண்பு மட்டுமே, வேறு எத்தகைய தகுதியும் பெருமைதராது என்கிறார். இதை மேலும் வலியுறுத்த,

    ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப் படும். (குறள்: 131)

    ஒருவருக்கு மேன்மையைத் தரும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாக மதிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

    Share