புலவர் இரா. இராமமூர்த்தி.

மனிதன் எப்போதும் இன்பத்தையே நாடுகிறான். இன்பம் – துன்பம் ஆகிய இரண்டுக்கும் இடையில் அவன் வாழ்க்கை அமைகிறது. ஓர் ஆங்கிலப் பழமொழி வாழ்க்கையைப் பற்றிக் கூறுகிறது; ”வாழ்க்கை என்ற பெண்டுலம், அழுகைக்கும் சிரிப்புக்கும் இடையில் ஊசலாடுகிறது!” என்பது அந்தப் பழ மொழியாகும்! ஒருபக்கத்தில் சிரிப்பும் மறு பக்கத்தில் அழுகையும் மாறி மாறி அமைந்துள்ளன! இவற்றுக்கிடையில் ஊசலாடும் வாழ்க்கைதான் எல்லாருக்கும் அமைகின்றது. துன்பநீக்கத்தையே இன்பமாகக் கருதும் மனப்பான்மை, இன்பதுன்பங்களை எடைபோடத் தவறி விடுகிறது! நல்ல இன்பம், நீடித்த இன்பம், எல்லாருக்கும் பொதுவான இன்பம் ஆகியவையே உண்மையான இன்பம் ஆகும். சொல்லப்போனால் இன்பம் என்பது மன நிறைவே! ”செல்வம் என்பது சிந்தையின் நிறைவே!” என்பது மூத்தோர் சொல்.

இன்பம் எக்காலத்திலும் பிறரை, பிறவுயிர்களைத் துன்புறுத்துவதால் உண்டாகாது! ஒரு பொருளை அதுதரும் இன்பம் கருதி அடைவதும், அப்பொருளால் வரும் நன்மையை அனுபவிப்பதாகிய இன்பமும் எல்லாருக்கும் இயற்கையான விழைவாகும். விருப்பம் என்பதன் விரிந்த சொல்லே விழைவு! அதுவும் எல்லை கடக்குமானால் ஆசை, அவா என்ற பெயர்களை அடையும்! வாழ்க்கையில் ஐம்புல இன்பங்களையும் நேர்மை வழியில் அடைந்து தொடர்ந்து மகிழ்வதே இல்லறம் என்னும் இன்பப் பூங்கா ஆகும்!

”அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல (39)

அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள் (754)

என்ற திருக்குறட்பாக்கள் இதனையே குறிக்கின்றன. நியாயமான இன்பம் தரும் பொருள்களும் காலப் போக்கில் நமக்குச் சிறுசிறு துன்பங்களைத் தரும் சமுதாய நலமாகிய இன்பத்தை விரும்பி அதனை அடைய முயலும் பொதுநலத் தொண்டர்கள் சிறுசிறு துன்பங்களை அடைதல் இயற்கையேயாகும்! இதனைத் திருவள்ளுவர் ,

குடிசெய்வல் என்னும் ஒருவன் மடிசெய்து
மானம் கருதக் கெடும்! (1023)

என்ற குறட்பாவால் விளக்குகிறார்! தம் குடியை வாழ்விக்கக் கருதுபவனுக்குச் சோம்பலும், மான அவமானம் கருதுதலும் தேவையற்றவை என்பது இதன் கருத்து! ஆகவே தனக்கு வரும் தன்னல இன்பத்தை ஒருவன் நாடாமல், செய்யும் தொண்டுகளால் சமுதாயத்துக்கு வரும் இன்பத்தையே நல்ல தொண்டன் விரும்புவான் என்பது அவர் கருத்து! இதனை அவர்,

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்! (615)

என்ற திருக்குறளில் குறிப்பிடுகிறார்! ஆகவே இன்பத்தை நாடி ஒரு பொருளை அடைய விரும்புதல் நல்லறமே என்றாலும் , அந்தப் பொருளால் ஓர் உயிருக்கு அறத்தால் வரும் புண்ணியம், பொன்விலங்கு போல் நல்ல பிறவிக்குக் காரணம் ஆகும். நல்ல பிறப்பும் வாழ்க்கையின் பந்தமே யாகும். அதனால்தான் பற்று விடற்குப் பற்றற்றான் தாளினைப் பற்ற வேண்டும் என்று வள்ளுவர் கூறினார்! வாழ்க்கையின் இன்பத்துக்காக வேண்டியபொருள்களைப் பற்றிக் கொண்ட வர்களைத் துன்பங்கள் பற்றிக்கொள்ளும்; மேலும் அவை அவரை விடாமல் பற்றிக் கொள்ளும். இதனைத் திருவள்ளுவர் ,

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு. (347)

என்று பாடுகிறார். “பற்று” என்ற சொல்லை நாம் சொல்லிப் பார்த்தால், முதலில் நம் இதழ்கள் மூடிக் கொள்ளும்; அதாவது பற்றிக் கொள்ளும்! ஆசை என்ற சொல்லும், அவா என்ற சொல்லும் நம் திறந்த வாயை மூட விடாமல் விரித்தே வைத்திருக்கும். இந்தப் பேராசையாகிய அவா உண்டானால், நமக்கு மன நிறைவு அதாவது திருப்தி உண்டாகாது. இதனைத் திருவள்ளுவர் ”ஆரா இயற்கை அவா” என்கிறார். இதனை நாம் நீக்கிவிட வேண்டும். அப்போது நமக்கு  உரிய வீடுபேறு கிட்டும். அதனால் எவ்வகையிலும் எப்பொருளின் மேலும் நம் பற்றினை நாம் நீக்கிக் கொள்ள வேண்டும். உணவின்மேல் ஆசை அதிகமானால் நோயில் கொண்டுபோய் நம்மை விட்டு விடும். உடலாசை அதிகமானால் பால்வினை நோய்கள் படை எடுத்து நம்மை வாட்டும்; ஐம்புல ஆசைகளே துன்பத்துக்குக் காரணம்! ஆதலால், எந்த எந்தப் பொருளிலிருந்து நம் அவாவை விலக்கிக் கொள்கிறோமோ, அந்த அந்தப் பொருளால் உண்டாகும் துன்பம் நமக்கில்லை! இதனையே …

”யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் ” (341)

என்று திருவள்ளுவர் கூறுகிறார்!

”ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே ! ”

என்பது திருமூலரின் திருமந்திரம் ! இந்தத் திருக்குறளின் தனிச் சிறப்பு என்னவென்றால், இதனை உரைக்கும்போது நம் வாயின் உதடுகள் ஒட்டவே மாட்டா! ஒட்டாமல் விலக விலக துன்பமும் விலகும்; இன்பம் வரும். இந்தச் செய்தியை நமக்குக் கூறும் திருக்குறளும் இதழ்கள் ஒட்டினால் துன்பமும் இதழ்கள் ஒட்டாமல் விலகினால் இன்பமும் வரும் என்பதைத் தாம் பாடும். ”துறவு” என்ற அதிகாரத்துக்கு ஏற்ப நுட்பமாகக் கூறும் இக்குறளின் பொருள் நம் உள்ளத்திலும் உடலிலும் துறவு மனப்பான்மையை உருவாக்கி, மனத்தாலும் துறவின் மாட்சியை விளக்குகிறது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.