பழமொழி கூறும் பாடம்

தேமொழி.

 

பழமொழி: சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லை

பழமொழி: மரம் போக்கிக் கூலிகொண்டார் இல்லை

 

ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்று மெனவும் புணருமோ? – ஆற்றச்
சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை
மரம்போக்கிக் கூலிகொண் டார்.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

 

பதம் பிரித்து:
ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ?-ஆற்றச்
சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லையே; இல்லை,
மரம் போக்கிக் கூலி கொண்டார்.

பொருள் விளக்கம்:
(‘பசுமரத்தாணி போல’ எளிதாகக் கற்று நினைவில் கொள்வதற்கு) இயலும் இளம் வயதில் கல்வி கற்பதைத் தவறவிட்டவர், முதுமையில் கற்று வல்லவராவார் என்பது இயலுமா? (இயலாது). சுங்கச்சாவடியைக் கடந்து சென்றுவிட்டவரைத் தொடர்ந்து சென்று வரி பெறுவதும் இயலாது. ஓடத்தில் பயணித்து (மரம் என்பது இவ்விடத்தில் ஓடம்) கரை சேர்ந்துவிட்ட பயணியிடம் சரியான பயணச்சத்தம் பெறுவதென்பதும் இயலாது.

பழமொழி சொல்லும் பாடம்: “இளமையில் கல்” என்ற முதுமொழிக்கேற்ப கற்க வேண்டிய இளமைக்காலத்தில் கல்வியைக் கற்கத் தவறிய பின்னர், முதுமையில் கற்க நினைப்பது மாட்டின் “தும்பை விட்டு, வாலைப் பிடித்து” கட்டுப்படுத்தும் கடினமான செயலை ஒத்தது. “காலத்தே பயிர் செய்” என்று கூறி தக்க நேரத்தில் அதற்கேற்ற செயலைச் செய்க என அறிவுறுத்தும் சொல்வழக்கும் இதே பொருளில் அமைந்ததே. இதனை வள்ளுவர்,

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு. (குறள்: 482)

காலத்தைத் தவறவிடாமல் காரியம் ஆற்றுவது, செல்வம் தம்மை விட்டு நழுவ விடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும் என்ற நேர்மறைப்பொருளில் உணர்த்துகிறார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.