சு.கோதண்டராமன்

பாடலிபுரம்*

 vallavan-kanavu11111

உரிந்தகூறை யுருவத் தொடுதெரு வத்திடைத்
திரிந்துதின்னுஞ் சிறுநோன் பரும்பெருந் தேரரும்
எரிந்துசொன்னவ் வுரைகொள் ளாதேயெடுத் தேத்துமின்
புரிந்தவெண் ணீற்றண்ணல் பாதிரிப்புலி யூரையே

                                                                  -சம்பந்தர்

மாணவர்களுக்கு அன்றைய பாடத்தை முடித்து வீட்டுக்கு அனுப்பி விட்டு, அவர்கள் கொண்டு வந்திருந்த உணவை உண்டார் ஜினசேனர். குண்டிகையிலிருந்து நீரை எடுத்துக் குடித்துவிட்டு நமோ அரிஹந்தானம் என்று சொல்லிக் கொண்டே தூணில் சாய்ந்து உட்கார்ந்தார். வயதாகிவிட்டது, அவரால் முன்பு போல இருக்க முடியவில்லை. இன்னும் எத்தனை நாள் இந்த உடம்பைத் தூக்கிக் கொண்டு திரிய வேண்டுமோ, தெரியவில்லை. சல்லேகனம் (வடக்கிருந்து உயிர்நீத்தல்) செய்து கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு முன் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன.

மாலை கொஞ்சம் கொஞ்சமாக மங்கி வந்தது. தூணில் சாய்ந்தபடியே சற்றுக் கண்ணயர்ந்தார். காலடிச் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டார். நன்றாக இருட்டிவிட்டது. கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை. யார் என்று கேட்டார். ‘நமோ அரிஹந்தானம், வணங்குகிறேன் மஹாமுனியே’ என்று பதில் வந்தது.

“தர்மமித்ரரா, வாருங்கள். உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன். யாத்திரை எல்லாம் எப்படி இருந்தது? தர்மம் நன்றாகப் ப்ரவர்த்திக்கிறதா?” என்று கேட்டார்.

தர்மமித்ரர் படியேறிப் பள்ளிக்குள் வந்தார். மயிற் பீலியால் தரையைத் தடவிவிட்டுக் கையிலிருந்த தடுக்கையும் உறியுடன் கூடிய குண்டிகையையும் கீழே ஒரு புறமாக வைத்தார். பின் மஹாகுருவின் முன்பு உள்ள இடத்தையும் பீலியால் கூட்டிவிட்டு உட்கார்ந்தார்.

“இந்தச் சோழதேசம் இனி நாம் வசிக்க ஏற்றதல்ல, மகா குருவே.”

“ஏன், என்ன ஆயிற்று?”

“காலம் கெட்டுப் போய்விட்டது. பெரியவர்கள் சொல்வதை சிறியவர்கள் கேட்பதில்லை. குரு சொன்னதைச் சீடர்கள் கேட்பதில்லை.”

“இது எக்காலத்திலும் உள்ளது தானே, இப்பொழுது புதிதாக என்ன நடந்தது? சொல்லுங்கள்.”

“யாத்திரை போயிருந்த இடத்தில் எல்லாம் கெட்ட செய்திகளாகவே காதில் விழுந்தன. மக்களுக்கு வர வர தர்மத்தின் மீது பிடிப்பு விட்டுப் போய்விட்டது. குருவையே எதிர்த்துக் கேள்வி கேட்கிறார்கள்.”

“விவரமாகச் சொல்லுங்கள்.”

“அதிகை என்ற ஊரில் பிட்சைக்குப் போயிருந்தேன். அங்கு பள்ளியில் தங்கியிருந்த சிரமணர் (சமணத் துறவி) ஒருவரும் வந்திருந்தார். ஒரு சிராவகர் (சமண இல்லறத்தார்) வீட்டின் முன் நின்றோம். எங்களைக் கண்டதும் அந்த வீட்டு அம்மாள் உள்ளே சென்று கஞ்சி கொண்டு வந்தார். அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்த அவரது கணவர் வந்தார். அவர் கையில் ஆட்டு மாமிசம் இருந்தது.

“இது சிராவகர் வீடு என்றல்லவா நினைத்து வந்தோம்? நீங்கள் சிராவகர் இல்லையா?

“சிராவகர்தான்.”

“மாமிசம் சாப்பிடுவதுண்டா? அப்படியாயின் நாங்கள் இங்கே பிட்சை வாங்கக் கூடாது என்றேன்.

“நீங்கள் எல்லோரும் ரகசியமாக மீன் பிடித்து உண்கிறீர்கள், அகிம்சை உபதேசம் எல்லாம் ஊருக்குத் தானா, உங்களுக்கு இல்லையா என்று கேட்டார்.

“நாங்கள் மீன் பிடித்ததும் இல்லை, உண்டதும் இல்லையே என்றேன்.

“நீங்கள் என்றால் உங்களைப் போன்ற சிரமணர்கள் என்று பொருள். பள்ளியில் தங்கும் சில சிரமணர்கள் அருகிலுள்ள வாய்க்காலில் மேலே வரும் மீன்களைக் கம்பால் அடித்துக் கொன்று தின்கிறார்கள். நானே என் கண்ணால் பார்த்தேன். இப்படிச் சில பேர் இந்த ஊருக்கு வந்து போயிருக்கிறார்கள் என்றார். நாங்கள் பிட்சை வாங்காமல் வந்துவிட்டோம்.”

“அப்படிச் சிலர் இருப்பது பற்றி நானும் கேள்விப்பட்டேன். இவர்களால் நம் தர்மத்தின் பெயர் கெடுகிறது.”

“இன்னொரு ஊரில் பள்ளியில் தங்கியிருந்தபோது நான்கு சிராவகர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் ஆசாரக் கோவையைப் பாடம் சொல்லவேண்டும் என்று கேட்டு ஓலைச்சுவடியுடன் வந்திருந்தார். நான் சொல்லிக் கொண்டிருந்தபோது ஒருவர் இந்த ஆசாரங்கள் எல்லாம் எதற்கு என்றார்.

“ஏன், நாம் நல்ல கதி அடையத்தான் என்றேன்.

“இறந்த பிறகு நாம் எங்கே போகிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா, நிர்வாணம் என்ற மோட்ச நிலை ஒன்று உண்டு என்பதை எப்படி நம்புவது, நீங்கள் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டார்.

“நாம் ஒவ்வொருவரும் அதை நேரடியாக அறியமுடியாது. நமக்காக ஜினர் தவம் செய்து ரத்தினம் போன்ற இந்த உண்மைகளைக் கண்டறிந்தார். அவரைப் பூரணமாக நம்புவதுதான் இதற்கெல்லாம் நிரூபணம் என்றேன்.

“கடவுளை நேரடியாக அறியமுடியாது என்பதால் கடவுள் இல்லை என்கிறீர்கள். ஒருவர் தவம் செய்து அறிந்து கடவுள் உண்டு என்று சொல்கிறார். அவரைப் பூரணமாக நம்புவதற்கும் ஜினரை நம்புவதற்கும் என்ன வித்தியாசம், எல்லாமே நம்பிக்கைகள்தான்,  எது உண்மை என்றார். எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.

“ஜினரை நம்பினால் கடைத்தேறுவீர்கள். இல்லாவிட்டால் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து உழல்வீர்கள் என்றேன்.

“அதற்கு அவர், எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இறைவனுக்கே ஆட்பட்டு இருப்போம். இறைவனிடம் அன்பு செய்வதாக இருந்தால் மீண்டும் பிறப்பது தவறல்ல என்று காரைக்கால் அம்மையார் கூறுகிறார். அவரும் எங்களைப் போலச் சிராவகியாக இருந்தவர்தான். உங்கள் வறட்டு வாதங்கள் எங்களுக்கு மன அமைதி தரவில்லை. என்றோ எங்கோ கிடைக்கப் போகிற முத்தி நிலைக்காக, இன்றைய வாழ்க்கையை இனிமை இல்லாத பாலைவனமாக ஆக்கிக் கொள்ள நாங்கள் சித்தமாக இல்லை என்றார்.”

“கவலைப்பட வேண்டிய நிலைதான்.”

“இன்னொரு ஊரில் பிட்சை எடுக்கும்போது, கிட்டே வராதே ஐயா, காலையில் கண் விழித்ததும் பல் கூட விளக்காமல் பிட்சைக்கு வந்து விட்டீர்கள். துர்நாற்றம் வீசுகிறது. மகாவீரர் உங்களைக் குளிக்க வேண்டாம் என்றா சொன்னார். உடம்புக்கு முக்கியத்துவம் கொடுக்காதே என்று அவர் சொன்னதற்கு இதுதான் பொருளா? இரண்டு வேளையும் வயிற்றுக்குக் கொட்டிக் கொள்கிறீர்களே, இது மட்டும் உடம்புக்கு முக்கியத்துவம் கொடுக்காத செயலா என்று கேட்டார்.

“நாடு எங்கிலும் இது போன்று நம்பிக்கைக் குறைவு ஏற்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் காரணம் வடதேசத்திலிருந்து வந்திருக்கின்ற சில பிராமணர்கள்தான். அவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பட்டுப் போன வேதத்தை மீண்டும் துளிர்க்கச் செய்ய முயல்கிறார்கள்.”

“தர்மமித்ரரே, நாம் தர்மத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுள்ளோம். இது போன்ற போக்கை முளையிலேயே கிள்ள வேண்டும். நீங்களும் இந்த மடத்தைச் சேர்ந்த மற்ற சிரமணர்களும் தீவிரமாகத் தர்மப் பிரசாரம் செய்யவேண்டும். ஒவ்வொரு சிராவகரையும் சந்தித்து தர்மத்தை வலியுறுத்த வேண்டும். முன்பு போல பிட்சை வாங்கி உண்டுவிட்டு பள்ளியில் படுத்து உறங்குவது கூடாது. வழியில் சந்திக்கும் அத்தனை சிரமணர்களிடமும் சொல்லுங்கள். நாம் இந்த முயற்சியில் வெற்றி பெறும் வரை நான் என் சல்லேகனத்தை ஒத்தி வைக்கிறேன்.”

தர்மமித்ரர் சோழநாட்டில் சூறாவளிப் பயணம் செய்தார். சிராவகர்களிடம், “நமது சமயம் ஆபத்தில் இருக்கிறது. இதற்குக் காரணமான வடமர்களை விரட்டுங்கள்” என்றார். வடமருக்கு மான்யம் கொடுத்து வந்த நில உடமையாளர்களிடம் வந்து, “அரசருக்குக் கொடுக்க வேண்டிய வரியை இவர்களுக்குக் கொடுக்கிறீர்களே. இவர்கள் என்ன அரசருக்குச் சமமானவர்களா? இவர்கள் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். அடிமைப்பட்ட அரசர்கள் கைகட்டி நின்று கப்பம் செலுத்துவது போல இவர்களுக்கு நீங்கள் உங்கள் தானியத்தைச் செலுத்துகிறீர்களே, இது தன்மானத்துக்கு இழுக்கு இல்லையா?” என்று உசுப்பிவிட்டார். சோழியப் பிராமணர்களையும் அவர் தன் வலையில் வீழ்த்தினர். “உங்களுக்கு வேலை செய்ததற்குத்தான் ஊதியம் கொடுக்கப்படுகிறது. வடமர்களுக்கோ ஒரு வேலையும் இல்லாமல் மிகுதியான மானியம் கொடுக்கப்படுகிறது” என்றார்.

சோழநாடு ஒரு சமயப் போருக்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டது.

——- ——————————————- ———————————– —————————————

*பாடலிபுரம் என்பது திருப்பாதிரிப்புலியூர் (இன்றைய கடலூர் புதுநகர்)

Leave a Reply

Your email address will not be published.