இந்திய மண்ணின் இரண்டாம் இமயம் இன்று சரிந்ததே!

0

கவிஞர் காவிரிமைந்தன்

abdul
இந்திய மண்ணின் இரண்டாம் இமயம் இன்று சரிந்ததே!
இவர்போல் மனிதர் இதுவரை இங்கு பிறந்ததில்லையே!
வள்ளுவன் வாய்மொழி வகுத்தது பாதையென வாழ்ந்தவரல்லவா?
”சொல்’ எனும் சொல்லே உருதுமொழியில் ‘கலாம்’ ஆனதைச் சொல்லவா?
காலம் நமக்குத் தந்த கொடைதான் ‘அப்துல் கலாம்’ அல்லவா?
வாழும் நாள்வரை நாளும் பொழுதும் நாட்டிற்காய் உழைத்தவரல்லவா?
உலகம் போற்றும் உன்னதத் தலைவர்கள் எவரும் போற்றும் புகழ்மனிதர்!
மாணவ மாணவியர் மத்தியில் மட்டுமே – தன் வாழ்நாளைக் கழித்தவர்!
நாளைய இந்தியா வல்லரசாக நமக்கெல்லாம் கனவினைக் கொடுத்தவர்!
ஏழையும்கூட வாழ்வில் உயர்ந்திட முடியும் என்று வாழ்ந்துகாட்டியவர்!
எளிமை பணிவு இரண்டையும் கொண்டே ஏற்ற பதவியை அலங்கரித்தார்!
ஏவுகணையின் நாயகன் இவரென்று இந்தியா புகழ்ந்துரைக்கும்!
பொக்ரைன் குண்டுகள் வெடித்தபோது புத்தரே சிரித்தாரன்றோ?
போலியோ குழந்தைகள் அணியும்வண்ணம் குறையெடைஉலோகம் கண்டார்!
அடைந்திட்ட மகிழ்ச்சியின் உச்சமிதுவென உள்ளம் நெகிழ்ந்து சொன்னார்!
‘நம்பிக்கை’ என்கிற வார்த்தைக்கே நங்கூரமிட்டுக் கொடுத்தார்!
ஒட்டுமொத்த இந்தியாவும் வணங்கும் ‘தலைமகன்’!
ஒருவர்கூட புறம்கூறாத உத்தமமான மனிதன்!
அறிவுச்செல்வம் பெற்றுவிட்டால் அகிலம் நமதென்றார்!
ஆற்றல் பலவும் இளைஞரிடம் அதையே தினம் வளர்த்தார்!
போற்றுதலுக்குரிய ஆசிரியப் பணிக்கு மீண்டும் திரும்பிவந்தார்!
புகழ்வதற்கு புதிதாய் என்னிடம் வார்த்தைகளில்லை!
மண்ணில் தோன்றிய மனிதர்கள் மடிந்துதான் தீரவேண்டும்!
மக்கள் மனதில் ‘கலாம்’ என்பதற்கு மரணம் என்றுமில்லை!!
கண்ணீருடன்..
காவிரிமைந்தன்.. அபுதாபி..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *