பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: தம்மை யுடைமை தலை
எண்ணக் குறைபடாச் செல்வமும் இற்பிறப்பும்
மன்ன ருடைய உடைமையும் – மன்னரால்
இன்ன ரெனல்வேண்டா இம்மைக்கும் உம்மைக்கும்
தம்மை யுடைமை தலை.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
எண்ணக் குறைபடாச் செல்வமும், இல் பிறப்பும்,
மன்னர் உடைய உடைமையும், மன்னரால்
இன்னர் எனல் வேண்டா; இம்மைக்கும் உம்மைக்கும்
தம்மை உடைமை தலை.
பொருள் விளக்கம்:
எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட குறைவற்ற செல்வ வளமும், சிறந்த குடியில் பிறந்தவர் என்ற பெருமையும், மன்னருக்கு நெருக்கமானவர் என்ற செல்வாக்கு உடையவராக இருத்தலும், மன்னரால் திறமையானவர் இவர் எனப் பாராட்டிப் புகழப்படும் வாழ்க்கையை உடையவராக இருக்கும் தகுதியும் விரும்பத்தக்கவை அல்ல. இன்றும் என்றும் சான்றோர் எனப் பாராட்டும்படி தம்மைக் கட்டுப்படுத்தி வாழும் ஒழுக்கம் உடையவராய் வாழ்வதே தலைசிறந்தது.
பழமொழி சொல்லும் பாடம்: பேரும் புகழும் பெரும் செல்வமும் பெற்று பெருமையுடன் வாழ்வதையும் விட, சான்றோர் எனப் பிறர் மதிக்கும் நிலையில் என்றும் ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கையே வாழ்வதே சிறந்தது. இக்கருத்தையே வள்ளுவரும்,
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று. (குறள்: 982)
சான்றோரின் குணநலம் என்று கூறப்படுவது அவருடைய நற்பண்பு மட்டுமே, வேறு எத்தகைய தகுதியும் பெருமைதராது என்கிறார். இதை மேலும் வலியுறுத்த,
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். (குறள்: 131)
ஒருவருக்கு மேன்மையைத் தரும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாக மதிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.