Blog

  • நாசாவின் புதுத் தொடுவான் விண்கப்பல் குள்ளக் கோள் புளுடோவை நெருங்குகிறது.

     

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LgzM-uV81YE

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=iQ_Wp4bcLFI

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KfODJpfS0fo

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KNJNaIoa5Hk

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=WUB7dRgClSQ

    http://www.youtube.com/watch?v=iPyRAmviIuE

    http://www.space.com/22752-voyager-1-goes-interstellar-solar-system-boundary-passed-video.html


    (NASA New Horizon Spaceship to Dwarf Planet Pluto)

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

    jay

     

    புதுத் தொடுவான் விண்கப்பல்
    பூதக்கோள்
    வியாழனைச் சுற்றி
    ஈர்ப்பு வீச்சில்
    வேகம் மிகையாகி
    விரைவாய் நெருங்கப் போகுது
    புளுடோ வையும்
    சாரன் என்னும்
    துணைக் கோளையும் !
    முதலிரு வாயேஜர்
    விண் கப்பல்கள் காணாத புது
    விந்தைகள் காணும் !
    புளுடோ வுக்கும் அப்பால் பறந்து
    கியூப்பர் வளையத்தின்
    கோள்களை உளவச் செல்லும் !
    சூரிய மண்டலத்து
    வால்மீன் மந்தைகளின்
    வளர்ப்பிடத்தை
    தெளிவாக
    ஆய்வுகள்  செய்யும் !
    வாயேஜர் விண்ணூர்தி போல்
    பரிதி மண்டல
    வரம்பைத் தாண்டி
    வரலாற்றிலே
    புதிய மைல் கல்லை நடும்
    நாசாவின்
    புதுத் தொடுவான் கப்பல் !

    +++++++++++

    Relative Sizes of Dwarf Planets

    நியூ ஹொரைசன் விண்ணுளவி புளுடோவின் புதிய சந்திரன்களையும், வளையங்களையும் கண்டுபிடிக்கும் என்று மெய்யான ஓர் எதிர்பார்ப்பு உள்ளது.  புளுடோவுக்கு ஏற்கனவே  அறிந்த ஐந்து சந்திரன்கள் [சாரன், நிக்ஸ், ஸ்டைக்ஸ்,  ஹைடிரா & கெர்பெரோஸ்].  கணனி எண்ணியல் உருவாக்கத்தில் [Numerical Simulations] விண் எறிகற்கள் சந்திரன்களை மோதித் தூளான துணுக்குகள் புளுடோவை வளைங் களாய்ச் சுற்றி வருவதாகத் தெரிகின்றன !  அந்த வளையங்கள் தோன்றி மறைகின்றன.  புலப்படாத புது விண்வெளி நோக்கிப் போகிறோம் !   பயணத்தில் என்ன காணப் போகிறோம் என்று அறியோம்.   அந்த எதிர்ப்பாடுகள் 2015 ஆண்டு ஜூலையில் இருக்கும் !

    அலன் ஸ்டெர்ன் [Alan Stern, Principal Investigator, New Horizon Mission to Pluto]

    ஹப்பிள் விண்ணோக்கியில் மங்கலாகத் தெரியும்  புளுடோவின் தளவியல் முற்றிலும் இதுவரைத் தேர்வு செய்யப் படாதது ! வானியல் விஞ்ஞானிகள் புளுடோவைக் குள்ளக் கோள் என்று ஒதுக்கினும், தள இயக்கங்கள் எவ்விதத்திலும் தாழ்ந்தவை அல்ல.   ஒரு கார் புளுடோவின் மத்திய ரேகையில் சுற்றி வந்தால் 5000 மைல் தாரம் என்று தொலைக் கருவி [Odometer] காட்டிவிடும்.    அது நியூயார்க் மன்ஹாட்டன் -மாஸ்கோ தூரம் ஆகும்.   அந்தப் பயணத்தில் ஒரு பயணி குளிர்ந்த நீரெழுச்சிகள், பள்ளக் குழிகள், முகில்கள் [Icy Geysers, Craters, Clouds] காண நேரிடலாம்.

    அலன் ஸ்டெர்ன்  [Alan Stern, Principal Investigator, New Horizon Mission to Pluto]

    Pluto Satellites

    புளுடோ குள்ளக் கோளின் ஐந்து துணைக்கோள்கள்

    புளுடோவில் அடிக்கடல் இருக்க வாய்ப்புள்ளதற்கு இரண்டு சார்பு அளவுகள் முக்கியம்  : முதலாவது அதன் பாறை உட்கருவில்  உள்ள கதிரியக்கப் பொட்டாசியத்தின் அளவு [Radioactive Potassium Quantity] [75 parts per billion]. இரண்டாவது  அதை மூடியுள்ள பனிக்கட்டியின் உஷ்ண அளவு [-230 டிகிரி C].  புளுடோவின் திணிவு [Density] கணிப்புப்படி 40% பாறைக் கொள்ளளவு.  தேவையான அளவு கதிரியக்கப் பொட்டாசியம் இருந்தால், தேய்வு வெப்பமே பனிக்கட்டி [Mixure of Nitrogen & Water] நீராக உருகத் தகுதி அளிக்கும்.

    கியில்லமேம் ரோபூச்சன் & ஃபிரான்சிஸ் நிம்மோ [காலிஃபோர்னியா பல்கலை கழகம்]

    “பூதக்கோள் வியாழன் ஈர்ப்பாற்றல் சுழற்சி விசையை வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொண்டது எமது பயங்கரக் கனவுகளுக்கு அப்பாற் பட்டது.  அது நமது புதுத் தொடுவான் விண்கப்பல் தயாரிப்பை மெய்ப்படுத்திய தோடு 2015 ஆண்டில் புளுடோவை நெருங்கி விடும் நேரிய விரைவுப் பாதையில் திருப்பப் பட்டது.  இதுவரைப் பிற விண்கப்பல்கள் புக முடியாத வியாழ மண்டலத்தைச் சீராக ஆராயப் புது யுக நவீனக் கருவிகளைக் கொண்டு போகும் அந்த விண்கப்பல் திருப்பம் ஓர் எதிர்பாராத நிகழ்ச்சியே !  மேலும் அப்பயணம் சூரிய மண்டலத்தின் மிகப் பெருங்கோள், அதன் துணைக் கோள்கள், வளையங்கள், சூழ்வெளியை ஆழ்ந்துளவித் தகவல் அனுப்பும் தகுதியும் கொண்டது.”

    அலன் ஸ்டெர்ன், நியூ ஹொரைஸன் பிரதம ஆய்வாளர், நாசா தலைமையகம், வாஷிங்டன். டி.சி.

    நாசாவின் விண்ணுளவி புது தொடுவான் இப்போது எங்கே பயணம் செய்கிறது ?

    2006 ஜனவரியில் ஏவப்பட்ட நாசாவின் விண்கப்பல் “நியூ ஹொரைசன்” இப்போது [மார்ச்சு 15, 2015] சூரிய மண்டலத்தின் கடைசிக் கோளான நெப்டியூன்  புறக்கோளை நெருங்கப் போகிறது.  நாளொன்றுக்கு ஒரு மில்லியன் மைல் வேகத்தில் பயணம் செய்து,  சுமார் 3 பில்லியன் மைல் கடந்து, அடுத்து 2015 ஜூலையில் முதன் முதலாய்க் குள்ளக் கோள் புளுடோவை மிக நெருங்கிப் படமெடுக்கும்.  பிறகு 2015 ஜூலை 15 புளுடோவை 6000 மைல் [10,000 கி.மீ] தூரத்தில் உளவு செய்து பூமிக்குத் தகவல் அனுப்பும்.

    புளுடோவின் தள உஷ்ணம் (-230 டிகிரி C) ஆக இருப்பதால், பனித் தரைக்குக் கீழே உள்ள நிரந்தர வெப்ப எழுச்சியால் நீர் மயக் கடல் ஒன்று இருக்குமா என்ற ஐயப்பாடு இருந்து வந்தது.  புளுடோ உட்கருவில் தொடர்ந்து வெப்பம் தர பாறையில் கதிரியக்கப் பொட்டாசியம் குறைந்தது [75 ppb] [parts per billion] அளவு இருக்க வேண்டும்.

    Eris and Moon

    இதுவரை குள்ளக் கோள் புளுடோ ஆழ்ந்து ஆராயப்பட வில்லை.  முன்பு நெருங்கிச் சென்ற வாயேஜர் விண்கப்பல்கள் [Voyager 1 & 2 Spaceships] இத்துணை அருகில் புளுடோவை நோக்கிச் செல்லவில்லை.  குள்ளக் கோள் புளுடோவில் பல மர்மங்கள் / புதிர்கள் உள்ளன வென்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.   புளுடோவின் பனிக்கடியில் கடல் ஒன்று இருக்கலாம் என்றும் நீரெழுச்சிகள் [Geysers] பல  இருக்கலாம் என்றும் யூகிக்கப் படுகின்றன.  இப்போது ஐந்து சந்திரன்களை [Charon, Styx, Nix, Kerberos & Hydra] புளுடோ கொண்டுள்ளதாக அறியப் படுகிறது.   மேலும் புதிதாகச் சந்திரன்கள் கண்டுபிடிக்கப் படலாம் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.   பல்லாண்டுகளாக, விண் எறிகற்கள் சந்திரன்களை மோதித் தெறித்த துணுக்குகள், தூசிகள் புளுடோவை வளையங்களாகச் சுற்றி வரலாம் என்றும் யூகிக்கப் படுகிறது !  2015-2016 ஆண்டுக்குப் பிறகு நாசாவின் நியூ ஹொரைசன் விண்ணுளவி வால்மீன்கள் தோன்றும் கியூப்பர் வளையத்தைப் படமெடுத்துக் கடந்து செல்லும்.   இறுதியாக 2020 ஆண்டுகளில் பரிதி மண்டலம் தாண்டி, முந்தி அனுப்பிய வாயேஜர் விண்கப்பல்கள் போல், புது சூரிய மண்டலத்தின் ஊடே பயணம் செய்யும் என்று திட்டமிடப் பட்டுள்ளது.

    New Horizon Travel Path

    இந்த சொற்பச் செலவு புறக்கோள் உளவு விண்வெளிக் குறித்திட்டம்  வெற்றிக் கதை சொல்வது.   நியூ ஹொரைஸன்  விண்கப்பல் கூட்டுறவுக் குழுவினர் புளுடோ  உளவு முயற்சியில் பெற்ற இரட்டை வெகுமதி இவை.   முதலாவது பூதக்கோள் வியாழனைச் சுற்றி ஈர்ப்பு விசை உதவியால்  புளுடோவின் உந்து வேகம் மிகைப்பாடு.   இரண்டாவது  பல மில்லியன் மைல்களுக்கு அப்பால் ஓய்வில் முடங்கிக் கிடக்கும் விண்கப்பலின் கருவிகள் சோதிப்பு இயக்க வெற்றி.   அதாவது “ஓய்வு முடக்கப் பயண விஞ்ஞான முத்திரைச் சான்றிதழ்”  (Certification of  Hibernation Cruise Science).   புளுடோவை நோக்கிப் பயணம் செய்வதில் பரிதிக் கோளப் பாதை நெடுவே என்னென்ன விந்தைகள் கண்டுபிடிக்கப் போகிறோம் என்று காத்திருக்கிறோம்.”

    அலன் ஸ்டெர்ன்  (Alan Stern, New Horizons Principal Investigator)

    “சூரிய மண்டலத்தின் தூசி உளவியான ( SDC – Student Dust Counter) கருவி விண்வெளித் தூசிகளை எண்ணித் தகவல்  அனுப்பும்.  இந்தத் தகவல் பரிதிச் சூழ்வெளித் தூசி மய அடுக்கின் பண்பாடுகளை அறிய உதவும்.   அதன் மூலம் மற்ற பரிதி மண்டலப் புதிர்களையும், மர்மங்களையும் விஞ்ஞானிகள் விடுவிக்க முடியும்.”

    ஜேம்ஸ் ஷாலே  (James Szalay, University of Colorado Graduate Student & SDC Instrument Leader )

     

    “சனிக்கோளுக்கு அப்பால் தீரச் சாதனை செய்த விண்வெளிக் கப்பல் சென்று 30 ஆண்டுகள் கடந்து, முதன்முதல் சூரிய மண்டலம் தாண்டிய வாயேஜர் 1 & 2 (Voyager 1 & 2) விண்ணுளவிகளுக்குப் பிறகு, தனித்துப்  புளுடோ கோளை உளவ நியூ ஹொரைசன் விண்ணுளவி அனுப்பப் படுகிறது.”

    “இப்போது சூரிய ஒளிப்பிழம்பு புயல்களின் (Solar Wind Plasma) மூலம் வெளிப்படும், கனல் வீச்சுகளையும் (Solar Flares), கதிர் நிறை வீச்சுகளையும் (Coronal Mass Ejections) முன்பை விடக் கருவிகளின் மூலம் தெளிவாக நோக்கப் படுகிறது.   சூரிய இயக்கங்கள் மிகை யாகும் இத்தருணத்தில் நியூ ஹொரைசன் விண்ணுளவியின் நவீன நுண்திறன் கருவிகள் பரிதி மண்டலத்தைக் கூர்ந்து நோக்குவது  அவசியப் படுகிறது.”

    மாத்யூ ஹில்  (New Horizon PEPSSI Instrument Scientist, Johns Hopkins University, Md)

    “இதற்கு முன்பு விண்வெளித் தேடல்களில் காணாமல் விட்டவற்றை அறிவதற்குக் கவனமாகக் கருவிகளைத் தயார் செய்து மேற்பட்ட விஞ்ஞான நோக்கங்களுக்கு வழி வகுத்தோம்.  வியாழ மண்டலம் தொடர்ந்து மாறி வருகிறது.  புதுத் தொடுவான் விண்கப்பல் மனத் துடிப்பு உண்டாக்கும் கண்டுபிடிப்புகளைக் காணச் சரியான காலத்தில் சரியான இடத்தில் பயணம் செய்துள்ளது.”

    ஜெஃப்ரி மூர், வியாழக் கோள் ஆய்வுக்குழுத் தலைவர், நாசா அமெஸ் ஆய்வகம், காலிஃபோர்னியா

    நியூ ஹொரைஸன் ஓய்வு முடக்கக் கருவிகள் பயணத்தின் போது தூண்டிச் சோதிக்கப் பட்டன

    2006 ஜனவரி மாதம் புளுடோவை நோக்கிப் பயணம் துவங்கிய நியூ ஹொரைஸன் விண்வெளிக் கப்பல் பல மில்லியன் மைல் கடந்து 2015 ஜூலை 14 ஆம் தேதி புளுடோவின் ஈர்ப்பு வலையில் நழுவிச் சுற்ற ஆரம்பிக்கும் என்று நாசாவின் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்.    தற்போது ஏறக்குறைய முக்கால் பங்கு தூரத்தைக் (22.65  AU) (1 AU =  One Earth Distance from Sun] [One AU = 150 million Kms or 90 millian miles]  கடந்து நியூ ஹொரைஸன் விண்கப்பல்  புளுடோவை நெருங்க இன்னும் 8.76 AU தூரம் உள்ளது.

    Pluto Surface

     

    விண்கப்பல் பயணத்தின் போது இடைத்தூரம் மில்லியன் கணக்கில் இருப்பதால் பல கருவிகள் தம் ஆயுளை நீடிக்க “ஓய்வு முடத்துவம்” [Hybernation ] செய்யப் படுகின்றன.   இப்போது அப்படி உறங்கும் கருவிகள் எழுப்பப் பட்டு இயங்கப் பூமியிலிருந்து தூண்டப் பட்டன.   இந்த விழிப்பு இயக்க நிலை 2013 ஜனவரி வரை நீடிக்கப் படும்.   அவை மீண்டும் இயங்கு நிலைக்கு மாறி அண்டவெளிச் சூழ்வெளியின் நிலைகளைப் பதிவு செய்யும்.

    சூரிய மண்டலம் அடக்கிக் கொண்டுள்ள பரிதிக் கோளம் [Heliosphere]  என்பது, அதி வேகச் சூரியப் புயல்  அடித்து உட்புறம் ஊதிய ஒரு வகையான பலூனே.    தூரம் மிகையானதால் நியூ ஹொரைஸன் விண்கப்பலின் மின்னியல் கருவிகள் நிறுத்த பட்டு பெரும்பாலும்  ஓய்வு முடக்க உறக்கத்தில் தணிந்த உஷ்ணத்தில் பயணம் செய்கின்றன.    அவ்விதம் நாசா செய்வதால் விண்கப்பல் கருவிகளின் ஆயுள் நீடிக்கப் படுகிறது.   அதுபோல் விண்கப்பலைத் திசை திருப்பிச் செலுத்தும் உந்துவிசை ஏவிகளும் (Thrusters) தணிந்த நிலையில் இயங்கி வருகின்றன.

    முதலில் திட்டமிடப் பட்ட நியூ ஹொரைஸன் ஒரே ஒரு கருவி [(SDC) Student Dust Counter in Heliosphere] மட்டும் இயங்கும் விண்கப்பலாய்த் தீர்மானிக்கப் பட்டது.   அந்த SDC  கருவியைத் தயாரித்தவர் கொலராடோ பல்கலைக் கழகத்தின் ஒரு மாணவரே.  முதன்முதல் அகிலவெளி ஆழத்தில் பணி புரிய அனுப்பப் பட்ட உளவுக் கருவியே அது.   ஓய்வு முடக்கத்தில் விண்கப்பல் பயணம் செய்யும் போது  SDC  கருவி சுயமாய் இயங்கிச் சூரிய மண்டலச் சூழ்வெளியில் தாக்கும் தூசிகளை  எண்ணிக் கணக்கிட்டுப் பில்லியன் மைல் தூரத்தில் இருக்கும் பூமிக்கு  அனுப்புகிறது.   பரிதி மண்டலத்தின் அந்தத் தகவல் பிற சூரிய மண்டலத்தின் மர்மங்களை விடுவிக்க உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    விண்கப்பல் கருவிகள் [SWAP -Solar Wind Around Pluto  &  PEPSSI – Pluto Energetic Particle Spectrometer Science Investigation] 1970 ஆண்டுகளில் அனுப்பப் பட்ட பயோனிர் 10 & 11,  வாயேஜர் 1 & 2 கருவிகளை விட நவீனமானவை,  சிறப்பானவை.  இந்தக் கருவிகள் பயண வழியில் மிதக்கும் சூரிய கதிரியக்க மின்னியல் துகள்களை எண்ணிக் கணக்கிடும்.    விநாடிக்கு 500 கி.மீ. வேகத்தில் (விநாடிக்கு 1 மில்லியன் மைல் வேகம்) வீசும் பரிதியின் புரோட்டான் புயலில் மாதிரி எடுக்கும்.  2012 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 80 நாட்கள் SDC, SWAP &  PEPSSI  ஆகிய மூன்று கருவிகளும் தகவல் பயிற்சியில் செம்மை யாகத் தகவல் அனுப்பியுள்ளன.

    New Horizon Spaceship

     

    புதுத் தொடுவான் விண்கப்பல் புளுடோக்கு அப்பால் பயணம்

    1977 ஆம் ஆண்டில் அனுப்பிய இரட்டை வாயேஜர் -1 & -2 விண்கப்பல் களைப் பின்பற்றி 2006 ஜனவரி 19 இல் ஏவப்பட்ட புதுத் தொடுவான் விண்கப்பல் (New Horizon Spaceship) முதன்முதல் புளுடோவைக் குறிவைத்து இப்போது பூதக்கோள் வியாழனையும், வளையக் கோள் சனியையும் தாண்டி முக்கால் தூரத்தைக்  கடந்து விட்டது.  2007 பிப்ரவரி 28 இல் வியாழனைச் சுற்றி அதன் ஈர்ப்பாற்றால் உந்தி விண்கப்பல் வேகம் மிகையாகி (Jupiter Flyby Swing) புளுடோவுக்குச் செல்லும் நேரிய பாதையில் திருப்பப் பட்டது.  அப்போது விண்கப்பல் வியாழக் கோளையும் அதன் துணைக் கோள் லோவையும் (Satellite Lo) புது யுக நவீனக் கருவிகள் மூலம் புது விபரங்களை உளவி அனுப்பியது.  நவீன வேக ராக்கெட் வசதிகள் அமைக்கப் பட்ட விண்கப்பல் வியாழனைக் குறுக்கிட 13 மாதங்கள் எடுத்துள்ளது.  விரைவான வேகத்தில் செல்லும் புதுத் தொடுவான் விண்கப்பல் புளுடோவை 2015 ஜூலை 14 ஆம் தேதியில் நெருங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  அத்துடன் பயணம் நிறுத்தம் அடையாது முதன்முறை விண்கப்பல் பனி அண்டங்கள் நிரம்பிய குயூப்பர் வளையத்தை (Kuiper Belt) நெருங்கி ஆராயும்.

     

    Inline image 1

    2006 ஜனவரி 19 ஆம் தேதி புதுத் தொடுவான் விண்கப்பல் பிளாரிடா கேப் கனாவரல் முனையிலிருந்து அட்லாஸ் -5 முதற்கட்ட ராக்கெட், சென்ட்டூர் இரண்டாம் கட்ட ராக்கெட், ஸ்டார் 48B மூன்றாம் கட்ட ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.  இதுவரை உந்தப்படாத ஓர் வேக ராக்கெட் விண்கப்பலாகக் கருதப்படுகிறது புதுத் தொடுவான்.  சின்னக் கோள் புளுடோவைக் குறிவைத்து ஏவப்பட்டாலும் திட்டப்படி அது பரிதி மண்டலத்தின் விளிம்பில் கியூப்பர் வளையத்தையும், வால்மீன்கள் வெளிவரும் ஓர்ட் முகில் கோளத்தையும் ஆராயப் போகிறது.  விண்கப்பல் பின்பற்றும் வீதி ‘பரிதி-புவி விடுவிப்புப் பாதை’ (Earth -Solar Escape Trajectory). எனப்படுவது.  விண்கப்பல் உந்தப்பட்ட வேகம் விநாடிக்கு 10 மைல் வீதம் (மணிக்கு 36,370 மைல் வேகம்) (16.3 கி.மீ/விநாடி) (மணிக்கு 58,500 கி.மீ வேகம்) என்று அறியப் படுகிறது.  இந்த வேகத்தில் பயணம் செய்து பூதக்கோள் வியாழனின் ஈர்ப்பாற்றலில் முடுக்கப்பட்டு புளுடோவையும் அதன் துணைக்கோள் சேரனையும் (Charon) முதன்முதல் நெருங்கி ஆராயும்.  வியாழக் கோளையும் அதன் துணைக்கோள் லோவையும் (Lo) மெல்லிய வளையங்களையும் இதுவரை உளவிப் புதுத் தகவலை அனுப்பியுள்ளது.  அடுத்து சனிக்கோளின் பாதையை 2008 ஜன் 8 ஆம் தேதி குறுக்கிட்டுக் கடந்து இப்போது யுரேனஸ் நெப்டியூன் கோள்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

    புதுத் தொடுவான் பயணத்தின் குறிக்கோள் என்ன ?

    புதுத் தொடுவான் திட்டம் நிறைவேற 15 ஆண்டுகளுக்கு (2001–2016) ஒதுக்கிய நிதிச் செலவு 650 மில்லியன் டாலர்.  இச்செலவில் விண்கப்பல் கட்டமைப்பு, கருவிகள், ராக்கெட் ஏவல், திட்டக் கண்காணிப்பு, திட்ட இயக்கம், தகவல் ஆய்வுகள், விளம்பரம், பயிற்சி ஆகியவை அடங்கும்.  புதுத் தொடுவான் விண்கப்பல் குறைந்த எடையில் தயாரிப்பாகி வேகமாகச் செல்ல டிசைன் செய்யப்பட்டது.  ஏவப்படும் போது விண் கப்பலின் எடை 478 கி.கி (1054 பவுண்டு). புதுத் தொடுவான் திட்டமிட்ட போது புளுடோ பரிதி மண்டலத்தின் ஒரு கோளாகக் கருதப் பட்டிருந்தது.  சமீபத்தில் அது ஒரு குள்ளக் கோள் (Dwarf Planet) என்று அகில வானியல் ஐக்கியப் பேரவை உறுப்பினரால் (International Astronomical Union) புறக்கணிப்பானது.  இதுவரை செய்த பயணத்தில் விண்கப்பல் பூதக்கோள் வியாழனையும், அதன் துணைக் கோளையும், சனிக் கோளையும் நவீனக் கருவிகளால் ஆராய்ந்துள்ளது.

    அடுத்து 2011 மார்ச்சில் யுரேனஸ் கோள் பாதையைக் கடக்கும்.  அதற்கு அடுத்து 2014 ஆகஸ்டில் நெப்டியூன் கோள் வீதியைத் தாண்டும்.  2015 இல் புளுடோவை நெருங்கியதும், அது புளுடோவையும் அதன் துணைக்கோள் சேரனையும் உளவித் தகவல் அனுப்பும்.  2015 ஆண்டு ஜூலை 14 இல் புளுடோவைத் தாண்டிச் செல்லும் புதுத் தெடுவான் விண்கப்பல் 5 மாதங்கள் அதையும் அதன் துணைக்கோள் சேரனையும் ஆராயும்.  பிறகு சுமார் 100,000 எண்ணிக்கை யுள்ள குள்ளப் பனிக் கோள் அகிலத்தையும் (Icy Dwarf Worlds) பில்லியன் கணக்கில் இருக்கும் வான்மீன் மந்தை களையும் கொண்ட கியூப்பர் வளையத்தை (Kuiper Belt Globe) விளக்கமாக நோக்கும் !

    பூதக்கோள் வியாழனில் விண்கப்பல் கண்டது என்ன ?

    முதன்முதலில் வியாழனை நோக்கிச் சென்ற கலிலியோ விண்ணுளவி ஆறு ஆண்டுகட்கு மேல் பயணம் செய்ய வேண்டியிருந்தது.  அதற்குப் பூமியால் இருதரம் ஈர்ப்பாற்றல் உந்தும், வெள்ளிக் கோளால் ஒருதர உந்தும் பெற்றது.  அதற்குப் பிறகு சென்ற காஸ்ஸினி விண்ணுளவி வியாழனை அண்ட வெள்ளிக் கோளால் இருமுறை ஈர்ப்பாற்றல் உந்தும், ஒருமுறை பூமியால் ஈர்ப்பாற்றல் உந்தும் பெற்று 3 வருடங்கள் எடுத்தது.  சனிக்கோளை நெருங்க மேலும் மூன்றரை ஆண்டுகளும் எடுத்தது.  ஆனால் வேகமாக உந்தப்பட்ட புதுத் தொடுவான் விண்கப்பல் பூமியிலிருந்து 13 மாதங்களில் (பிப்ரவரி 28, 2007) வியாழனை நெருங்கி ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் புரிந்தது.  அடுத்து 15 மாதங்களில் (ஜூன் 8, 2008) சனிக்கோளைக் கடந்ததும் அடுத்தோர் வரலாற்றுச் சாதனையே.

    வியாழனையும் அதன் நான்கு துணைக் கோள்களையும் விண்கப்பல் நெருங்கும் போது, பூமியிலிருந்து விண்கப்பலின் நவீனக் கருவிகள் ஆராய இயக்கப் பட்டன.  கலிலியோ விண்ணுளவி 2003 இல் ஓய்ந்த பிறகு அடுத்துப் புதுத் தொடுவான் 2007 இல் உளவி புதிய தகவலை அனுப்பியது.  வியாழனில் நிறம் மாறிவரும் ‘செந்நிற வடுவில்’ (Jupiter’s Red Spot) எழும்பும் ஒலிவேகத்தை மிஞ்சும் சூறாவளியை (Supersonic Winds) அளந்து அதன் போக்கை மிக்க விளக்கமாகப் படம் எடுத்தது.  2005 ஆண்டுவரை செந்நிற வடுக்களில் ஒரு வெள்ளை நீள்வட்ட முகில் (White Oval Cloud) தெரிந்தது.  மேலும் வியாழனின் மங்கிய வளையத்தைப் படம் பிடித்தது.  அந்த வட்ட வளைய அமைப்பில் வெகு சமீபத்தில் உண்டான மூன்று தூசிக் கொத்துகளைப் (Clumps of Fine Dust Particles) படம் எடுத்தது.

    Project Details

    வியாழன் துணைக்கோளில் விண்கப்பல் கண்டவை என்ன ?

    புதுத் தொடுவான் விண்கப்பலின் கூரிய காமிரா வியாழனின் எரிமலைத் துணைக்கோள் “லோவை” (Jupiter Moon Lo) சீரிய முறையில் முதன்முதல் ஆராய்ந்து தகவல் அனுப்பியது.  விண்கப்பலின் தொலை நீட்சி உளவுக் காமிரா ‘லோர்ரி படம் பிடிப்பி’ (LORRI – Long Range Reconnaissance Imager) வாஸ்தர் எரிமலைப் புகை கொதித்தெழும் (Tvashtar Volcano) காட்சியை விளக்கமாகப் படம் பிடித்து அனுப்பியது.  அதன் கோரப் புகை முகில் 200 மைல் (320 கி.மீ) உயரத்துக்கு எழுவதைக் காட்டியது.  அத்துடன் புதிய இரண்டு எரிமலைகளின் எழுச்சிகளையும், 20 மேற்பட்ட தளவியல் மாறுபாடுகளையும் கண்டுபிடித்தது.

    புதுத் தொடுவான் விண்கப்பல் பயணத்தில் இரண்டு முக்கிய விஞ்ஞானத் திட்டக் குறிக்கோள்கள் வெற்றி அடைந்தன.  முதலாவது ஓர் அண்டக் கோளின் ஈர்ப்பாற்றலைப் பயன்படுத்தி எப்படி நெருங்கிச் சென்று வேகத்தை விரைவாக்குவது என்று பயிற்சி மூலம் செய்தறிந்தது.  அதனால் விண்கப்பலின் வேகம் அதிகரித்துப் பயணக் காலம் குறைந்தது.  இரண்டாவது வியாழனுக்கு அருகில் ஈர்ப்புச் சுழல்வீச்சைப் பயன் படுத்தியதால், பேரளவு சுற்றியக்கச் சக்தியை (Jupiter’s Orbital Energy) விண்கப்பல் களவாடிக் கொள்ள முடிகிறது என்பது அறியப் பட்டது.  அவ்விதம் செய்ததில் பூதக்கோள் வியாழனின் ஈர்ப்பாற்றல் சுழற்சியால் (Gravitational Slingshot) விண் கப்பலின் வேகம் மணிக்கு 9000 மைல் (150000 கி.மீ/மணி) மிகையானது ! பூமி யிலிருந்து சமிக்கை அனுப்பி நாசா நிபுணர் புளுடோ கோளுக்குச் சீக்கிரம் செல்லும் வேகப் பாதையில் விண்கப்பலைத் திறமையாகத் திருப்பினர் !  வியாழக்கோளின் ஈர்ப்பாற்றல் உந்துசக்தி களவாடப் படவில்லை யென்றால் விண்கப்பல் புளுடோவை அண்ட மூன்று ஆண்டுகள் இன்னும் அதிகமாய் எடுக்கும் !

    (தொடரும்)

    படங்கள்:  Astronomy Magazine, BBC News, National Geographic News, NASA

    தகவல்:

    a)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206171&format=html (Jupiter)

    b)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206102&format=html (Saturn)

    c)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206231&format=html  (Uranus & Neptune)

    d)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=41005231&format=html (Voyager 1 & 2 Travel Beyond the Solar System.

    1.  National Geographic News – Voyager 1 at Solar System Edge By : Stefan Lovgren (June 2, 2005)

    2.  National Geographic News – Voyager Probes Send Surprises from Solar System Edge By : Richard A. Lovett (September 26, 2006)

    3.  NASA’s Golden Gift to the Aliens : 30 Years Later Voyager 1 & 2 By : Kevin Friedl (May 15, 2010)

    4.  NASA’s Voyager 2 Spaceship “Hijacked By Aliens’ By : Stephanie Dearing (May 15, 2010)

    5.  From Wikipedia – Voyager 2 (May 16, 2010)

    6.  Voyager 2 Journey By NASA (Updated on May 17, 2009)

    7.  NASA Report – Pluto-Bound New Horizon Spacecraft Sees Changes in Jupiter System (September 10, 2007)

    8.  Wikipedia Report : New Horizons Spacecraft (May 26, 2010)

    9.  Astronomy Magazine :  How We Will Explore Pluto ?  NASA’s New Horizon Probe By : Richard Talcott (July 2010)

    10.  Pluto-Bound NASA Spacecraft to Collect More Data When Hibernating During Travel  (July 9, 2012)

    11.  Outer Planets :  New Horizons Doing Science in its Sleep (July 10, 2012)

    12.  http://www.decodedscience.com/new-horizons-nasas-pluto-bound-spacecraft-keeps-going-going/39941  [December 4, 2013]

    13. http://www.redorbit.com/news/space/1113047356/new-horizons-approaching-pluto-011514/  [January 13, 2014]

    14.  www.dailygalaxy.com/my_weblog/2014/01/the-unexplored-planet-nasas-fastest-spaceship-on-approach-to-pluto-1.html?  [January 18, 2014]

    14 a.  http://www.davidreneke.com/hubble-to-search-beyond-pluto-for-a-new-horizons-target/#  [June 20, 2014]

    15. http://www.planetary.org/blogs/emily-lakdawalla/2015/02041311-new-horizons-returns-first.html  [February 4, 2015]

    16.  http://blogs.scientificamerican.com/observations/2015/03/06/dawn-spacecraft-arrives-at-ceres-becomes-first-to-orbit-a-dwarf-planet/ [March 6, 2015]

    17. http://www.nasa.gov/newhorizons/homes-on-pluto/  [March 10, 2015]

    18.  http://www.nytimes.com/interactive/2015/01/13/science/space/photos-of-pluto-from-nasa-new-horizons.html?_r=0   [March 11, 2015]

    19. http://en.wikipedia.org/wiki/New_Horizons, [March 24, 2015]

    20.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/03/naming-the-mysterious-features-of-pluto-and-charon-an-open-invitation-to-the-world-community.html?  [March 24, 2015]

    ********************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) March 27, 2015

    Attachments area
    Preview YouTube video Pluto the “Dwarf Planet” HD

    Pluto the “Dwarf Planet” HD

    Preview YouTube video Pluto on the Horizon: Anticipating our First Encounter with the Double Planet

    Pluto on the Horizon: Anticipating our First Encounter with the Double Planet

    Preview YouTube video Launch of NASA’s New Horizons Spacecraft

    Launch of NASA’s New Horizons Spacecraft

    Preview YouTube video ScienceCasts: Countdown to Pluto

    ScienceCasts: Countdown to Pluto

    Preview YouTube video Dr. Alan Stern: “New Horizons to Planet Pluto: Exploring the Frontier of Our Solar System”

    Dr. Alan Stern: “New Horizons to Planet Pluto: Exploring the Frontier of Our Solar System”
    Share
  • ஸ்ரீ ராமன் எங்கள் தோழன்

    மீ.விசுவநாதன்

    lord-sri-rama

     

    உள்ளொன்று வைக்காத உத்தமன் – இன்றும்images
    ஊர்போற்றும் மக்களின் காதலன் !
    சுள்ளென்று பேசாத சுந்தரன் – தீய
    சூழ்ச்சிகள் இல்லாத சோதரன் !
    அள்ளென்று சொல்கின்ற தர்மவான் – பகை
    அழுக்கினை நீக்குகிற புண்யவான் !
    புள்ளினைத் தந்தையாய்ப் போற்றினான் – குகப்
    புதையலை நண்பனாய்க் கூட்டினான் ! 

    தீதினை நன்மையாய்ச் செய்தவன் – வந்த
    திதியையும் தன்னாலே வென்றவன்
    மாதினைப் போற்றுகிற மானுடன் – வேறு
    மாதினைக் கொள்ளாத நெஞ்சினன்
    ஓதிய வார்த்தைக்காய் வாழ்ந்தவன் – ஊர்
    ஊதிய வார்த்தைக்கும் தாழ்ந்தவன்
    வேதியர் சொல்லினையும் கேட்டவன் – ஒரு
    வேடுவனின் பாடுபொரு ளானவன் ! 

    மானுட சாதியில் வந்தவன் – மக்கள்ram
    மண்ணிலே உற்றதுய ருற்றவன்
    மானுடன் மாயையில் ஓடினான் – பெண்
    மானுடச் சாயையில் வாடினான் !
    ஊனுடல் வற்றிடத் தேடினான் – லங்கை
    ஊரிலே வெற்றியும் கூடினான் !
    வானுயர் மாருதி நட்பினான் – நம்
    மனதிலே ராமனாய் அப்பினான் ! 

    (28.03.2015 சனிக்கிழமை ஸ்ரீராம நவமி)

     

     

     

     

     

    Share
  • பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் ஆடை அணிகலன்கள்

    முனைவர் ஜ.பிரேமலதா,
    தமிழ் இணைப் பேராசிரியர்,
    அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி),
    சேலம் -7

    முன்னுரை

    மனிதன் நிலைத்த ஒரு வாழ்க்கையைத் தேடிக் கொண்ட நிலையில், ஆடை அணிகலன்களையணிந்து தன்னை அலங்கரித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினான். இருபாலருக்கும் தன்னை அலங்கரித்துக் கொள்வது பொதுவான இயல்பாகும்.

    வேட்டைச் சமூகத்தில் குழுவாக வாழ்ந்த காலத்தில் காலத்தில் மனிதன் இலை, தழைகளை ஆடையாக உடுத்திக் கொண்டான். பூக்களை அணிகலன்களாக அணிந்து கொண்டான். இயற்கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு கழுத்திலும், தலையிலும், கைகளிலும், கால்களிலும் சூடி விதவிதமாக அலங்கரித்து மகிழ்ந்தான். பின்னர் விலங்கின் தோலையும், பஞ்சு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் பருத்தி ஆடையும் அணிந்தான். சங்கிலான அணிகலன்களை அணிந்தான். உலோகங்களின் கண்டுபிடிப்பு அணிகலன்களிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இரும்பு, வெள்ளி, பொன் உலோக அணிகலன்கள் பொருளாதார ஏற்றத்திற்கு ஏற்ப அணியப்பட்டன. ஆடைகளிலும் இலை, தழையாடை, பருத்தி, பட்டு ஆடை என பொருளாதார ஏற்றத்தாழ்விற்கு ஏற்ப உடுத்தப்பட்டன.

    புறநானூறு மன்னர்கள் அணிந்திருந்த ஆடை அணிகலன்கள் பற்றியும், ஏழையர் அணிந்திருந்த ஆடை அணிகலன்கள் பற்றியும் இவ்வாறு கூறுகிறது.

    வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும்
    விரவுமணி யொளிர் வரும் அரவு றாழாரமொடு
    புரையோன் மேனிப் பூந்துகிற் கலிங்கம் (புறம்.398)

    மலை போன்ற தோள்களில், விலை மதிப்புடைய பல மணி கோர்க்கப்பட்ட பாம்பு போன்று வளைந்திருக்கும் ஆரத்தை பூ வேலைப்பாடுடைய கலிங்கம் என்ற ஆடையை மன்னன் அணிந்திருந்ததாக இப்பாடல் கூறுகிறது.

    செல்வ மகளிர் பல வகை மணிக்கள் கோத்த பொன் வடங்கள், பொன்னால் செய்யப்பட்ட சிலம்பு, மேகலை பொன் வளையல் போன்றவற்றை அணிந்திருந்ததாக காரிக் கண்ணனார் (புறம்.253) குறிப்பிடுகிறார். செல்வ மகளிர் ‘மாணிழை மகளிர்’, ‘வாலிழை மகளிர்’ என அணிந்திருக்கும் அணிகலன்களை முன்னிறுத்திக் கூறப்பட்டுள்ளனர். பெரும்பாணாற்றுப்படையும் (327-335) பல்வகை மகளிர் அணிகலன்களைப் பற்றிக் கூறுகிறது.

    ஆனால் ஏழைப் பெண்களோ, பொன், வெள்ளி, இரும்பு அணிகலன்கள் அணியும் வாய்ப்பற்ற வறுமை நிலையில் வாடினர். எனவே வயலில் களையாகப் பறித்துப் போடப்பட்டிருந்த குவளை, ஆம்பல் ஆகியவற்றின் தண்டகளைக் கொண்டு வளையல் செய்து அணிந்து கொண்டனர். இதை, ‘கழனி ஆம்பல் வள்ளி தொடிக்கை மகளிர்’ எனப் புறநானூறு (352) கூறுகிறது. பவள வளையல் கிடைக்காத இவர்கள் களையாக தூக்கி எறியப்பட்ட தண்டுகளை அணிந்த காட்சியை
    ‘பவள வளை செறிந்தாட் கண்டு அணிந்தாள் பச்சைக் குவளை பசுந்தண்டு கொண்டு’ பரிபாடல் பரிவோடு பதிவு செய்துள்ளது. ஏழை ஆண்கள் இலை, தழைகளாலும் பூக்களாலும் மடலை, கண்ணி செய்து அணிந்து கொண்டதை

    ‘உவலைக் கண்ணி வன்சொல் இளைஞன்’
    ‘பாசிலை தொடுத்த உவைலக் கண்ணியன்’ (புறம்.54)
    ‘கோட்டவும் கொடியவும் விரை இக்காட்ட
    பல்பூமி டைந்த படலைக் கண்ணியன்’ (பெரும்.173) போன்ற சங்கப் பாடல்கள் காட்டுகின்றன.

    பிற்காலத்தில் தாம் அனுபவிக்கும் சுகவாழ்வு கடவுள் தங்களுக்குக் கொடுத்த வரம் என்ற எண்ணத்தில் கடவுளுக்கும் ஆடை அணிகலன்களை அவரவர் பொருளாதார சூழலுக்கேற்ப அணிவித்து மகிழ்ந்தனர். இதை பிற்கால பக்தி இலக்கியங்களிலும், சிற்றிலக்கியங்களிலும் காணலாம். குறிப்பாக பிள்ளைத்தமிழ் நூல்களில் கடவுளைக் குழந்தையாகப் பாவிக்கும் நிலையில் பல்வேறு ஆடை அணிகலன்கள் அணிவித்து புலவர்கள் மகிழ்ந்து கொண்டாடுவதைக் காண முடிகிறது.

    320970_469624646406535_1624382656_n
    தெய்வம், வள்ளல், அரசனைப் பாடுவதற்கான வரையறைகளில் பிள்ளைத்தமிழ் நூல்களில் பிற்காலத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இறைவன், இறைவி இறையடியவர்கள், வள்ளல்கள், தலைவர்கள், ஆசிரியர்கள் எனப் பாடுபொருள்( பாடப்படுவோர் )எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும் நிலையைக் காண முடிகிறது. பிள்ளைத்தமிழ் பாடும் முறையில் பருவங்களிலும், பாடல் எண்ணிக்கையிலும் கூட பல மாற்றங்கள் ஏற்பட்டன. பிள்ளைத்தமிழுக்கு மாற்றாக ‘முதுமைத் தமிழ்’ என்ற ஒரு சிற்றிலக்கியமும் உருவாகியுள்ளது.சிற்றிலக்கிய பெருக்கத்திற்கு இதுவும் ஒரு சான்று.

    பாடலமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் போல, பிள்ளைத்தமிழ் நூல்களில் ஆடை, அணிகலன்களிலும் கூட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கு இறைவன், இறைவி, இறையடியவர், தலைவர்கள் என்ற அடிப்படையில் பத்து பிள்ளைத்தமிழ் நூல்கள் ஆராயப்பட்டுள்ளன.

    1.பகழிக் கூத்தர் – திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
    2.குமரகுருபர அடிகள் – முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்
    3. கவி வீரராகவர் – கீழ்வேளுர்முருகன் பிள்ளைத்தமிழ்
    4. சிவசூரிய நாராயணன் – சிங்கபுரக் கண்ணன் பிள்ளைத்தமிழ்
    5. குமரகுருபர அடிகள் -மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
    6. காழி ஞானதேசிகர் – அழகிய மாமுலையம்மை பிள்ளைத்தமிழ்
    7.சிவஞான முனிவர் – அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
    8.த. கோவேந்தன் – திருவில்லபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்
    9. இரா. தேவா – அன்னை தெரசா பிள்ளைத்தமிழ்
    10. புலவர் இராமமூர்த்தி -மணிவேலனார் பிள்ளைத்தமிழ்

    வருணனை

    சங்க கால மாந்தர் குறித்த ஆடை,அணிகலன்கள் பற்றிய வருணனை பிற்கால இலக்கியங்களிலும் தொடர்ந்து வளர்ச்சி பெற்றன. பாட்டியல் நூல்கள் கேசாதி பாதம், பாதாதி கேசம் ஆகிய இரு சிற்றிலக்கிய வகைகளைப் பற்றிக் கூறுகின்றன. இவை மனிதர்களை வருணிக்கும் முறை, கடவுளரை வருணிக்கும் முறை குறித்து இலக்கணம் கூறுகின்றன. இவ்வாறு வருணிக்கும்பொழுது, பெரிதும் ஆடை அணிகலன்கள் பற்றிய வருணனைகளே இடம் பிடிக்கின்றன. தனித்த இலக்கியங்களாக இவை மாற்றம் பெற்றாலும் இன்று வரை அனைத்து வகை இலக்கியங்களிலும் ஒரு மனிதரையோ, கடவுளையோ அறிமுகப்படுத்தும் பொழுது அவர்கள் அணிந்திருக்கிற ஆடை அணிவகைகளைப் பற்றிய வருணனை இடம் பெறுவது தவிர்க்க இயலாததாகியுள்ளது.

    ‘‘பாதாதிகேசம், கேசாதிபாதம், அங்கமாலை 
    கடிதல் இல்லாக் கலிவெண்பா பகரும் அவயவங்கள் 
    முடிவது கேசம் அக்கேசம் முதலடி ஈறும் வந்தால் 
    படி திகழ் பாதாதி கேசமும் கேசாதி பாதமும் ஆம் 
    மடிதல் இல் வெண்பா விருத்தம் பல அங்கமாலை என்னே’’

    என்று நவநீதப்பாட்டியல் இரு சிற்றிலக்கியங்களுக்கும் இலக்கணத்தை வகுக்கின்றது.

    பொதுவாக மனிதர்களை கேசாதி பாத முறையிலும், தெய்வங்களை பாதாதிகேச முறையிலும் வர்ணிக்கிற மரபு தமிழிலக்கியத்தில் உண்டு. ஆனால் பிள்ளைத்தமிழ் தெய்வங்களை, குழந்தையாகப் பாவித்துப் பாடும் மரபுடையது ஆதலால், கவிஞர்கள் கடவுளாகிய குழந்தைகளை வர்ணிக்கும் முறையில் தலையிலிருந்தே வர்ணிக்கின்றனர். குமரகுருபரரின் ஆண்பாற் பிள்ளைத்தமிழில் மட்டும் முருகன் பாதாதிகேச முறையில் வருணிக்கப்படுகிறான். அவரே மதுரை மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழில் அம்மையை கேசாதிபாதமாகவே வருணிக்கிறார்.

    ஆண்பாற் பிள்ளைத்தமிழ்

    கீழ்வேளுர்முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் செங்கீரைப் பருவத்தில்,
    மணிகிளர் குஞ்சி முடித்திடு முச்சியின் வச்சிர வொளியாட
    மாசறு தேசுறு முத்தியல் சுட்டிறன் மதியுடு வென வாடக்
    கணிதம் லொளிதரு குண்டல மாறிரு கதிரவன் போலாடக்
    கண்ட சரத்தொடு மண்டிய வெழில்வளர் கண்டிகை சூளுமாடப்
    பணிதரு மரதனம் விரவிய கரவளை பலபல விதமாடப்
    பயில்மர கதமிடை யுறுமரை வடமிசை பகர்கிண் கிணியாட
    அணிகிளர் பரிபுர மாட வசைந்தினி தாடுக செங்கீரை (செங்.7)

    என்ற இந்தப் பகுதி முருகனின் கேசாதி பாத அழகைப் பாடுகின்றது. திருமுடிகள், ஆறு முகங்கள், கண்களின் திருவருள், மகரக்குண்டலம், தோள், திருக்கரம், உறைவாள், சிலம்பு, பாதங்கள் என்று கேசாதி பாத வருணனையில் முருகன் அணிந்துள்ள அணிகலன்களும் சுட்டப்படுகின்றன.

    ujiladevi.blogpost.com (3)

    தலை உச்சி – நெத்திச்சுட்டி (முத்தியல் சுட்டி)
    காது – ஒளிதரு குண்டலம்
    கண்டம் – கண்ட சரம் + கண்டிகை
    கை – வளையல்
    இடை – கிண்கிணி
    கேசாதிபாத வருணனை இடம்பெற்றுள்ளது.

    இதுபோல மற்றொரு பாடலில் சப்பாணிப்பருவத்தில் குழந்தை முருகனுக்கு தாய் அலங்காரம் செய்கின்றாள்.

    காதிலிடு வச்சிரக் குண்டலமு நெற்றியிற் கவினொழுகு பொற்சுட்டியுங்
    கரியகவூ சியின்வாய்ந்த முச்சியிற் சுற்றிவிடு கதிர் முத்த மிளிர்தொங்கலுஞ்
    சோதிமய மானதிரு மார்பிற் கிசைந்திலகு தூமணிப் பொன்னரமும்
    தோளிலண் பன்மணிக் கேயூர முஞ்சிறிய தொந்திசரி யரை நாணுடன்
    சீதுமுறு நாதமுரல் கிண்கித் தொகுதியுஞ் செந்தளி ரினுஞ்சிவந்த
    சீறடித் துணையிலணி செம்பொற் சதங்கையும் செய்யநூ புரமு மசையத்
    தாதுகமழ் பதரிவன நீதசிற் பரகுமர சப்பாணி கொட்டியருளே (சப்.5)

    காது – வச்சிரக் குண்டலம்
    நெற்றி – பொற்சுட்டி
    மார்பு – தூமணிப் பொன்னாரம்
    தோள் – பன்மணிக் கேடழரம்
    இடை – அரைஞாண்
    கால் – பொன் சதங்கை

    இதுவும் கேசாதி பாத வருணனையில் அணிகலன்களாக சொல்லப்பட்டுள்ளன.
    முருகன் அணிந்திருப்பதாகச் சொல்லப்படும் அணிவகைகளில் மற்றவை. ‘கடம்பிணி புயத்தன்’ (காப்பு-10) என முருகன் அணிகலனையொட்டிப் புகழப்படுகிறான்.

    ‘மலர்த்தொடை மைக்குழலிற் சூடி’ (சப்பாணி-9, ப.21)

    என குழந்தையின் உச்சியில் இடப்பட்ட கொண்டையிற் பூக்கசாக் கட்டி சூடியுள்ள அழகு சுட்டப்படுகிறது. சிற்றில் சிதைக்கும் பருவத்தில் கால்களில் அணிந்திருக்கும் ‘புனைசெய் சதங்கை’ (சிற்றில்-7) சுட்டப்படுகிறது. கழுத்தணி மாலைகளாக ‘தொடலை’ (சிற்றில்-4), ‘சங்குமணி’ (வருகை- 7),

    ‘நறுந்தெறியல்’ (சிறுதேர் – 6), ‘கண்டசரம்’ (செங்கீரை-18) போன்றவை குறிப்பிடப்படுகின்றன.

    தலையில் சூடுபவையாக ‘கொக்கின் இறகு’ (வருகை-3)
    ‘மலர்த்தொடை மைக்குழலிற்சூடி’ (சப்பாணி-9) போன்றவை குறிப்பிடப்படுகின்றன.
    பகழிக் கூத்தரின் திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழில்

    “தேட அரிய மணியரைஞாண்
    சேர்க்க வருக விரற்காழி
    செறிக்க வருக திலகநுதல்
    தீட்ட வருக மறுகில் விளை
    யாட வருக. . . “(வாராணை-3)

    பொன் அரைஞாணும், விரலுக்கு மோதிரமும் பூட்டிக்கொள்ள வருமாறு குழந்தை முருகன் அழைக்கப்படுகிறான்.

    “குடுமி திருத்தி மலர்சொருகிக்
    கோலம் புனைந்து கொண்டாடி” (சிற்றில் – 9)
    “பூட்டுங் கலன்கள் வகை வகையே” (சிற்றில்-10)

    பாதாதிகேச வருணனையில் முருகன் அழகினை குமரகுருபர அடிகள் முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் வாராணைப் பருவத்தில் படம் பிடிக்கிறார். முருகன் அழகு நடை பயில நின்ற காலத்தை அவன் அணிந்திருக்கும் அணிகலன்கள் அசைந்து அசைந்து ஒலி எழுப்புவதை இப்பாடல் அழகுற எடுத்துரைக்கிறது.

    செம்பொற் கருங்கழல் அரிக்குரற் கிண்கிணி
    சிலம்பொடு கலின்கலினெனத்
    திருவரையில் அரைமணி கிணின்கிணின் எனப் பொலந்
    திண்தோளின் வளை கவிப்ப
    அம்பொற் பகட்டு பார் பிற்சன்ன வீரமும்
    ஆரமும் திருவில் வீச (வென்றிமாலை)
    அணி மகர குண்டலம் பரிதி மண் மரமென்ன
    அலர்கதிர்க் கற்றை சுற்றப்
    பைம்பொற் சுடர்ச்சுட்டி கட்டுசூ ழியமுடன்
    பட்டமொளி விட்டெறியப்பப் (வருகை – 1)

    இங்கு
    காலில் – சிலம்பு
    இடையில் – அரைமணி (உடைமணி)
    கைகளில் – வளையல்
    மார்பில் – சன்னவீரமும், ஆரமும்
    காதில் – மகர மீன் வடிவிற் செய்யப்பட்ட குண்டலம்

    போன்றவற்றை முருகன் அணிந்திருந்த செய்திகள் பதிவாகியுள்ளன. மேற்கூறப்பட்ட பாடல்களினால் முருகன் சிலம்பு, அரைமணி, வளையல், சின்ன வீரம், ஆரம், மகர குண்டலம், பண்மணிக் கேயூரம், பொன் சதங்கை, நெற்றிச் சுட்டி, பொன்னாகரம், கண்ட சரம் போன்ற ஆபரணங்களை அண¨ந்திருந்ததாகக் கவிஞர்கள் பாடியுள்ளனர்.

    சிங்கப்பூரில் உள்ள கண்ணபிரான் மீது பிள்ளைத்தமிழ் சிங்கபுரக் கண்ணன் பிள்ளை இயற்றியர் சிவசூரிய நாராயணன். இயற்றியுள்ளார்.

    “பொன்னுலாவும் பட்டுலாவும் பூவுலாவும் மேனியா” (முத்தம்-9) பொன்னும் பட்டும் பூவும் திருமாலின் மேனியில் உலவுகின்ற அளவிற்கு நிறைந்திருந்தைதையே கவிஞர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

    “தண்டுலாவும் கடலுலாவும் சங்குலாவும் கரத்திலே
    தனுவுலாவும் சுழலுலாவும் பொருளுலாவும்
    மெழிலினம்” (முத்.8) என்று கண்ணன் உடலில் பொன் அணி, பூ மாலை இவற்றோடு பட்டாடை அணிந்திருப்பதாக வருணிக்கிறார்.

    சங்க கால இலக்கியங்களில் விறலியரை வருணிக்கப்படும் பாடல்கள் கேசாதிபாதமாக வருணித்தன. பின்னர் இறைவனைப் பாடும் முறையில் இறைவனை அவன் உருவத்தை வருணிப்பது என்ற நிலையில் இச்சிற்றிலக்கியம் கண்டு பாதாதிகேசமாக ஆகியது. பெண்களைப் பாடும் முறையான கேசாதிபாதம் பக்தி இலக்கிய சிற்றிலக்கியங்களில் கடவுளரைப் பாடும் நிலையில், காலிலிருந்துப் பாடும் முறையாக மாற்றம் பெற்றது.

    சிற்றிலக்கிய வளரச்சிக் காலத்தில் ஆண், பெண் தெய்வங்களைப் பாடும் இலக்கியமாக இது நிறை நிலைபெற்றது. என்றாலும் உருவ நலன் என்பது தெய்வீக அழகாக மாற்றம் பெற்ற நிலை என்பது கருதத்தக்கது.

    ஆடை வகைகள்

    கீழ்வேளுர்முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் முத்தப்பருவத்தில் குழந்தை முருகனை நீராட்டி அழகு படுத்தும் அலங்கார நிலை சுட்டப்படுகிறது.

    தொடுகை மனக்கு . . .பூசித்
    தூதுவரிட் டிள வெந் நீராட்டித்
    துகிலால் ஈரம் புலர்த்தி மஞ்சள்
    தோய்வேப் பிலநீர் சுற்றியபின்
    குடுமி திருத்தி நீறணிந்து
    குலவு நிலக்கப் பணிந்து முத்தங்
    கொள்ளக் கனிவாய் முத்தமரன்
    கொள்வான் குனியு மமையத்தின்(முத்தம்-4)

    இந்தப் பாடல் குழந்தையை, மணப் பொருட்களை இட்ட வாசனை வெந்நீரில் நீராட்டித் துகிலால் ஈரம் நீங்க உலர்த்தியதைக் குறிப்பிடுகிறது. பின் மஞ்சள் நீரில் வேப்பிலை இட்டு திருஷ்டி கழிக்கின்றனராம். பின் குடுமியைத் திருத்தி, நெற்றியில் திருநீறு அணிவித்து அலங்காரம் செய்ததைக் குறிப்பிடுகிறது. நிலத்திலுள்ள மண்ணை எடுத்து நெற்றியில் பூசியதை (முத்தம்-4) மற்றொரு பாடல் குறிப்பிடுகிறது.

    முத்து அனைவரையும் கவரும் ஒரு அணிகலனாகும். அந்த முத்துக்கள் பிறக்குமிடம் பற்றி ஒவ்வொரு பிள்ளைத்தமிழ் நூலும் குறிப்பிடுகின்றன.

    “உழுவை கருமா மருப்பு முத்தும்
    வனைக்கார் கமுகு கழை முத்தும்
    வன சங்கரும்பு மதிமுத்து
    மாதர் மிடற்றின் வருமுத்தும்”(முத்தம்-3)
    என பத்து வகையான முத்துக்களைப் பற்றிய செய்திகள் சொல்லப்பட்டுள்ளன.

    பெண்பாற் பிள்ளைத் தமிழ் நூல்கள்

    பெண்பாற் பிள்ளைத் தமிழ் நூல்களை எடுத்து ஆராய்ந்தபோது குமரகுரபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் முத்தப்பருவத்தில் தேவர்கள் அணியும் அணிகலன்களைப் பற்றிய குறிப்பு உள்ளது.

    இந்திரன், குபேரன், திருமால் முதலியோர் பெருஞ்செல்வர்கள் இவர்களில் சிந்தாமணி என்னும் அரியமணி இந்திரப் பதவிக்குரியது. அது இந்திரனிடம் உள்ளது. குபேர பதவிக்கு உரியது வான்மணி. அதை உடையவன் குபேரன். திருமால் பதவிக்கு உரியது கௌந்துப மணி. அது திருமாலுக்குரியது.

    வானத் தரசு கோயில் வலர்

    சிந்தாமணி, அலகையோர் கோன் நகரில் வளரும் வான்மணி, பதுமநாடன் மார்பில் வளர் பருதி மணி (முத்தம்-2)
    முதலான பதிவுகள் ஒவ்வொரு பதவிக்கும் உரியதாக ஒரு மணி இருந்ததைச் சுட்டுகிறது. குமரகுருபரரின் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில்அம்மையை பெற்றெடுத்த தாயாக பாண்டிமாதேவி சுட்டப்படுகிறாள்.

    அப்பாண்டிமாதேவி மயிர்ச்சாந்து பூசப்பட்டுக் குழைந்திருக்கும் கூந்தல் உடையவராகவும், (சிவபெருமான் காப்பு-3)

    நெற்றியில் திருநீறு மூன்று கோடுகளாக அமைந்திருக்க, முத்துச்சுட்டி, தலையில் உச்சிக் கொண்டை,
    தலையணி, காதில் குதம்பை அணி, பொன் கொப்பும் அணிந்தவளாக விளங்குகின்ற பாண்டிமா
    தேவியின் தோற்றம் கேசாதிபதமாக வருணிக்கப்படுகிறது.

    ‘நீராட்டி ஆட்டு பொற் சுண்ணந் திமிர்ந்தள்ளி’ (ம.மீ.அ.பி. செங்கீரை-1)

    மதுரை மீனாட்சியின் தோற்றமும் கேசாதி பாகமாகவே வருணிக்கப்படுகிறது. தலைமுடியில் அணிந்திருக்கும் உச்சிக் கொண்டை, நெற்றியில் அணிந்திருக்கும் நெற்றிச் சுட்டி, காதில் அணிந்திருக்கும் மகரக் குழைகள், திருவடிகளில் அணிந்திருக்கும் சிலம்புகள், மற்றும் கிண்கிணி இவற்றை அணிந்து செங்கீரை ஆட வருக என கவிஞர் அழைக்கிறார். (மு.மீ.அ.பி. செங்கீரை-6) பிற பாடல்களில் அம்மை, குதம்பை என்னும் காதணி (செங்-8) இடையில் மணிமேகலை என்னும் இடைஅணி (வருகை -1) கையில் வெண்மை நிறமான சங்கு வளையல்கள் (நீராடல்-2) அணிந்தவளாகக் காட்டப்படுகிறாள்.

    ஆடை-பொன் சரிகையால் செய்து உடுத்தப்பட்ட
    இடை ஆடை, மற்றும் முத்து அழுத்திச் செய்யப்பட்ட மேலாடை, ஒட்டியாணமாகிய
    இடை அணியும் அணிந்தவளாக (ஊசல்.10)

    அழகிய மாமுலையம்மை, சிந்தூரப் பொட்டை நெற்றியலிட்டு பொற்பட்டமும், திகழ்சுட்டியும் சூட்டி, அழகிய கொண்டையில் சிவாளி முத்தும், சூரியப் பிறையும், சந்திரப் பிறையும் சூடி, தங்க வளையல்களும், அமுதாரியும், சன்னவீரமும், மணிமேகலையும் அணிந்து நடந்து வர வேண்டுமென்று புலவர் (வருகை-1)

    கணித நூல் புலமை வல்லோர், கணக்கினுக்கும்
    அகப்படாததாகிய ஒப்பனை செய்பவளே

    “கணித இவர் புலமை வல்லோர்
    கணக்கினு மகப்படா ததாகியே ஒப்பனை செய்” (அம்மானை-4)

    அமுதாம்பிகை பிள்ளைத்தமிழில் ஊசல் பருவத்தில் அமுதாம்பிகை ஊசலாடும் பொழுது, ‘மகரக் குழைகளும ஊசலாட’ என மகரமீன் போன்ற குண்டலங்களும் ஆடியதாக பாடுகிறார். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் மீனாட்சியம்மை, அம்மானை ஆடுவதற்கு மரகதக் கல்லும், நீல மணிக் கல்லும், முத்து போன்றவற்றைப் பதித்த அம்மானைக் காய்களைக் கொண்டு நேர்த்தியாக அம்மானை ஆடிய சிறப்பு பாடப்பட்டுள்ளது. (அம்மானை – 10)

    “வள்ளொளி மரகதமும் முழுநீலமும்
    ஒண்தரளத் திரளும்
    ஒருகொளி பொங்க இழைத்திடும் அம்மானை”

    த. கோவேந்தன் பாடிய ஆண்டாள் பிள்ளைத்தமிழில் பலவகை அணிவகைகள் சொல்லப்பட்டுள்ளன.

    ஆண்டாள் ‘பூட்டிய சித்திரப் புரிவளையும், (சப்பாணி-57)’, மேலாடை அணிந்தவளாகவும், (சப்பாணி-64), மகிழ மலர் மாலை அணிந்தவளாகவும் (வாராணை 71) வெண்பட்டுடை, (காமநோன்பு-116) அணிந்தவளாகவும் காணப்படுகிறாள். நெற்றியில் திருமண் இட்டுக் கொள்ள முகம்பார்க்க கண்ணாடி உடையவள் (அம்புலி-83) இந்திர நீலத்தின் அருமணியை, பசுந் தகட்டில் பதித்த ஊசல் உயைவள் (ஊசல் 100) ஒளி சொரிகின்ற முத்துமணியும் முழு மணிகளில் ஆன மாலையையும் தோளில் அந்தவள் (ஊசல்-104), என்று ஆண்டாளின் ஆடை அணிகலனை ஆண்டாள் பிள்ளைத்தமிழ் எடுத்தியம்புகிறது.

    காழி ஞானதேசிகர் இயற்றிய அழகிய மாமுலையம்மை பிள்ளைத்தமிழில், மாமுலையம்மை முத்துச்சரமணிகளும், சங்கிலியும், விரலில் கணையாழியும், காதில் மகரக் குழைகளும் இருப்பில் பட்டினகப் பட்டங்களும் அணிந்து செங்கீரை ஆடியதாகக் குறிப்பிடப்படுகிறது. (அ.மா. செங்கீரை-6)

    பிள்ளைத்தமிழில் பிற தெய்வங்கள்

    சிவன் தோற்றம்

    1. வேழாடை (கி.வே.மு. சப்பாணி.2)
    2. இடையில் புலி அதள் உடையர் (ஆ.பி. தாலம்-47)
    3. கரி உரி உடுத்தவன் (ஆ.பி. சப்பாணி-48)
    4. அரவு அணி (ஆ.பி. தால்-47)
    5. முதுகெலும்பு மாலையை கோர்த்து கழுத்தில் அணிந்தவனாக (கி.வே.மு. செங்-8)
    6. சடைமுடியும் வளரும் இளம்பிறை, கங்கை நதி,
    7.வெள்ளெருகம்பூ சூடியவன் (அ.மா.பி. காப்பு-2)

    சிவன் திசை ஆடை அணிந்தவன் (ம.மீ.அ.பி. நீராடல்-4) இவ்வாறு சிவன் அணிந்திருக்கும் ஆடை அணிகலன்கள் சுட்டப்படுகிறது. இடையில் புலித்தோலையும், தோளில் யானைத் தோலையும் போர்த்துக்கொண்டு, சிவன் கழுத்தில் பாம்பு மாலையையும், முதுகெலும்பு மாலையையும் அணிந்தபடி சடைமுடியில் பிறை நிலவும் கங்கை நதியும் அணிந்திருக்கும் சிவனது தோற்றம் இவ்வாறு பிள்ளைத்தமிழ் நூல்களில் சுட்டப்படுகிறது.

    திருமாலின் தோற்றம்

    TM-7

    திருமாலின் தோற்றம் பற்றிய வருணனையில் அவதாரத்திற்கேற்ப ஆடை அணிகலன்கள் சுட்டப்படுகின்றன. இராமர் அவதாரத் தோற்றத்தில் ‘மரவுரி’ (ஆ.பி.தால-47) அணிந்தவராகவும், கண்ணன் அவதாரத் தோற்றத்தில் இடையில் சங்கு சக்கரம், வில், வாள், தண்டு இணைந்த பொன்மணி வடத்தை (ஆ.பி.வாராணை 71)யும், குண்டலங்கள் (காமநோன்பு-112) கௌத்துவ மாலை காமநோன்பு-114) பட்டாடை (ஆ.பி. வாராணை-68) அணிந்தவராகவும் சுட்டப்படுகிறார்.

    திருமால் தோற்றத்தில் துளசி மாலையும், காதில் மகர குண்டலங்களும் (அ.மா.பி. காப்புப்-1) அணிந்து பாம்பணையில் படுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

    கடவுளர் பற்றிய பிள்ளைத் தமிழ் நூல்களில் இடம்பெறும் பிற மகளிர் அணிந்த ஆடை அணிவகைகளும் குறிப்பிடப்படுகின்றன.

    மாமுலையம்மை பிள்ளைத்தமிழில், ஆய்ச்சியர் அணிந்துள்ள அணிகலன்களாக எளிய மலர்மாலைகளே சுட்டப்படுகின்றன.

    கொன்றை நறுங் குழலையும், முல்லையின் அரும்பையும், செழித்த மலர்களையும் கூந்தலில் கட்டி முடித்தவர்களாக ஆய்ச்சியர் குறிப்பிடப்படுகின்றனர். (அ.மா.செங்கீரை-5)

    ஆண்டாள் பிள்ளைத்தமிழில் கற்களை பொன்னில் பதிக்கும் முறை பற்றி ஒரு பாடல் குறிப்பிடுகிறது. ஒருமணியானது பேராற்றினுள்ளே சேறிடத்தே அணு அளவினதாகத் தோன்றி, சிவப்பு நிறமுற்றுப் பதினாறு ஊழிக்காலம் கடந்த பின்னரே முழுமை பெறும் தன்மையுடையது. ஆந்த மணி மிகப் பருத்தது. அதனைச் சாணை தீட்டுவோர் சாணை தீட்டி, தக்க அளவு செய்து, அணிகலன்ற குழி செய்து பதித்து நகை செய்வர் (வருகை 76) என மணி மண்ணில் உருவாகும் முறை குறிப்பிடப்படுகிறது.

    அடியவர் தோற்றத்தில் ஆடை அணிகலன்கள்

    அழகிய மாமுலையம்மை பிள்ளைத்தமிழில், திருநாவுக்கரசரின் எளிய தோற்றம் காட்டப்படுகிறது. காதில் குழையும், மேனி முழுதும் திருவெண்ணீரும் அணிந்தவராகச் சுட்டப்படுகிறார் (சப்பாணி-7)

    சேக்கிழார் பெரியபுராணத்தில் திருஞான சம்பந்தர் புராணத்தில் பிள்ளைத்தமிழ் சார்ந்த காப்புப் பருவத்தில் திருஞானசம்பந்தரின் பெற்றோர் அவருக்கு திருநீற்றுக் காப்போ உண்மையான அணிகலன் என அவருக்கு திருநீற்றை மட்டும் நெற்றியில் அணிவித்ததாகப் பாடுகிறார்.

    “வேறுபல காப்பும் மிகை என்றவை விரும்பார்
    திருநீறு நெற்றியில் நிறுத்தி நிறைவித்தார்”

    பொதுவாக குழந்தைக்கு மந்திரித்த காப்பு கட்டுதல், ஏடெழுதிக் கட்டுதல், ஐம்படைத்தாலி கட்டுதல் முதலான காப்புகளை அணிவிப்பார். ஆனால் சேக்கிழார் திருநீறே சிறந்த காப்பு எனக் கருதியதை இங்கு ஞான சம்பந்தர் வாழ்க்கைமூலம் காட்டுகிறார்.

    தலைவர்கள் பற்றிய பிள்ளைத்தமிழ் நூல்கள்

    கவிஞர் இராதே எனப்படுகின்ற இரா. தேவா, அன்னை தெரசா பிள்ளைத்தமிழ், இயற்றியுள்ளார். இதில் அன்னை தெரசாவை பாட்டுடைத் தலைவியாக்கி இப்பிள்ளைத் தமிழ் இயற்றப்பட்டிருந்தாலும், குழந்தை தெரசாவிற்கு ‘வெள்ளுடை’ மட்டும் அணிவித்து ‘வெள்ளுடையம்மை’ (பாடல்-14) என்று வெள்ளையாடை அணிந்த தோற்றத்தையே தருகிறார். ஆடை அணிகலன்களை வருணிப்பதற்குப் பதில்,

    “வெள்ளுடை யம்மை குமிழ் சிரிப்பின்
    விளைவில் வறியோர் வாழ்வுயரும்
    வெற்றிச் செல்வி சிரிப்பழகி”” (பாடல்-14)

    அன்னை தெரசாவின் பொன் நகை அவளுடைய புன்னகையே என்று பாடுகின்றார். தருமபுரி மாவட்டதைச் சார்ந்த கவிஞர் மணிவேலனார். இவர் மீது பாடப்பட்ட நூலே பாவலர்மணிவேலனார் பிள்ளைத்தமிழ். மணிவேலனார் காலில் அணிந்ததாகச் சிலம்பு(வருகை-4) மட்டுமே கூறப்பட்டுள்ளது.

    முடிவுரை

    சங்க நூல்களில் பாடினி, விறலி பாத்திரங்கள் ( பதிற்றுப் பத்து, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை) கேசம் முதல் பாதம் வரை வருணனை செய்யப்பட்டுள்ளன. சங்ககால செல்வந்தர்,ஏழையர் குறித்த பதிவுகளிலும் நிலைக்கேற்ப ஆடை அணிகலன்கள் இடம் பெற்றுள்ளன. இவ்வருணனை பிற்காலத்தில் சிற்றிலக்கியங்களிலும் தொடர்ந்துள்ள திறத்தை பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் காணமுடிகிறது. கடவுளர் பற்றிய வருணனையில் அதிகமாக இடம் பெறும் ஆடை அணிவகைகள், காலம் செல்லச் செல்லச் செல்ல அருகி பக்தி இலக்கியக் காலத்தில் அடியவருக்கு எளிய தோற்றமும் திருநீறுமே அணிகலன் என்று கருதப்பட்டுள்ளது. தலைவர்கள் குறித்த இலக்கியங்களில் அவையும் அருகி காலத்திற்கேற்ப நகையணிதல் தவிர்க்கபட்டுள்ளதைக் காண முடிகிறது.

    துணைநின்ற நூல்கள்

    1. இராமமூர்த்தி மா. கவிஞர், பாவலர் மணிவேலனார் பிள்ளைத்தமிழ்,கோதை பதிப்பகம்,பாப்பிரெட்டிப்பட்டி,தருமபுரி மாவட்டம்,636 905. முதற்பதிப்பு 2009
    2. கவிவீரராகவர் – கீழ்வேளுர்முருகன் பிள்ளைத்தமிழ், உ.வே.சா நூல்நிலையம் -600 090 . முதற்பதிப்பு 1985
    3.காழி ஞானதேசிகர், அழகியமாமுலையம்மை பிள்ளைத்தமிழ்,தஞ்சைபெரியகோயில் வார வழிகாட்டு மன்றம்,தஞ்சாவூர் 613 009. முதற்பதிப்பு 2013
    4.குமரகுருபரர்,முத்துக்குதாரசுவாமி பிள்ளைத்தமிழ்,கழக வெளியீடு,சென்னை -1972.
    5.குமரகுருபரர்,மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், சாரதா பதிப்பகம்,சென்னை600 014 5ம்பதிப்பு 2013.
    6. கோவேந்தன். த. – திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்,ராஸ்வரி புத்தக நிலையம், சென்னை -600 017. பதிப்பு 2000
    7. சிவஞான முனிவர் – அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் பதிப்பு, கழக வெளியீடு,சென்னை – பதிப்பு 1972.
    8. சிவசூரிய நாராயணன் – சிங்கபுரக் கண்ணன் பிள்ளைத்தமிழ், இணையதளம்
    9.பகழிக் கூத்தர் – திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்,கழக வெளியீடு,சென்னை – 2ம்பதிப்பு 1972

    படங்களுக்கு நன்றி

    https://www.facebook.com/saivaneri

    Share
  • தேகமும் யோகமும்..பகுதி-2

    கவியோகி வேதம்

    yoga

    மனித மனத்தின் உளவியல் (எண்ணங்கள்)_தத்துவத்தை முழுதும் ஆராய்ச்சி செய்த ‘ஹேன்ஸ் சைல்’ என்பார் என்ன சொல்கிறார் தெரியுமா?

    முற்கால மனிதர்களைவிடவும் இப்போதைய மனிதர்கள்தாம் சுமைகளை வீணாக மனத்தில் ஏற்றிப் போட்டுக்கொண்டு மகா அவஸ்தைப்படுகின்றோம் என்பார்.அவர் சொல்கிறார்.

    “ மனித வாழ்க்கை என்பது எல்லோர்க்கும் இறைவன் அளித்த ஒரு நன்கொடை.

    எது இயற்கையோ, எது இயல்பாக நம்முள்ளே மனத்திற்குள் இன்பமாக விதைக்கப்பட்டிருக்கிறதோ, அதை நாம் அழகாக முழுதும் ‘உணர்ந்து’ பிறர்க்குத் தொந்தரவில்லாமல் அனுபவித்தால் அதைவிட நமக்குச் சிறந்த அனுபவம் இருக்க முடியாது.ஆனால் இன்றைய விஞ்ஞான வசதி நிறைந்த உலகில் அதை நாம் அழகாக உணர்ந்து அனுபவிக்கிறோமா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எது எதற்கோ வீணாக ஆசைப்பட்டு, வாழ்க்கையைச் சுமையாக ஆக்கிக்கொண்டிருக்கிறோம்..இயற்கையை உணரத்தவறுகிறோம்,’ என்பார்..

    இந்தப் புதிய கருவி அல்லது புதிய வசதி நமக்கு உண்மையான இன்பம் தருமா? அல்லது நாளடைவில் சுமையாக மாறிவிடுமா? என்று ஆராயாமலே அதை எவ்வளவு விலை கொடுத்தேனும், (பேராசை எண்ணங்களால்!)- வாங்கத் தவிக்கிறோம்.

    முதல் டென்ஷன் நமக்கு அப்போதுதான் ஆரம்பிக்கிறது.. சரி, அதை மிக சிரமப்பட்டு, உழைத்து,வாங்கியபின் கொஞ்சநாள் நமக்கு இன்பமாக இருக்கிறது.அது மகிழ்ச்சி கொடுப்பதாக உணர்கிறோம்.

    ..கருவியா மகிழ்ச்சி கொடுக்கிறது? என்பதை நாம் ஆராய்வதில்லை.. கொஞ்சநாளுக்குப்பின் அக்கருவியே, அல்லது அந்தப் புது வசதியே பல ரிப்பேர்களுக்கு உட்பட்டு நம் நிம்மதியைக் குலைக்கிறது. மீண்டும் டென்ஷன்!

    வேறு ஒரு புதிய கருவி, அல்லது வசதி உங்களுக்கு இன்னும் நிறைய இன்பம் தரும் என்று வியாபார தந்திரம் சொல்கிறது.. மனம் சபலப்படுகிறது.வாங்கத் துடிக்கிறது. மீண்டும் டென்ஷனுடன் உழைத்து, காசு சேர்த்து அதை வாங்கி அது புதிய இன்பம் தருவதாக மகிழ்ச்சியில் திளைக்கிறோம். அதுவும் ரிப்பேர் ஆகிறவரை. ஆக, இயற்கையான மகிழ்ச்சி மனத்துள்ளேதான் என்று அறியாமலே காசையும், நிம்மதியையும் தொலைத்து மனத்தில் ஒரு ‘ஒற்றைக்காளை ’
    பெரிய வண்டியைச் சுமப்பதுபோல் (நம் கிராமங்களில் பார்த்துள்ளோமே!!) பாரத்தை அனாவசியமாக ஏற்றி, “ என் வாழ்க்கையே ஒரு பெரிய சுமைதாங்கி சார்!,” என்று வீட்டுக்கு வருபவர் எல்லோரிடமும் ‘பீற்றிக்’ கொள்வதில் பெருமையடைகிறோம்..இந்த ஒரு ‘வண்டிச்சுமையை’ இயற்கையினின்றும் விலகி ஏதோ ஒரு மாயையில் சிக்குகிற மாயாமனம் அறிகிறதா, உணர்கிறதா என்றால் இல்லை..

    எனக்குத் தெரிந்த ஒரு அறிஞர், நல்ல பேச்சாள நண்பர் இதுவரை ஒரு டெலிபோன் வசதிகூடச் செய்து கொள்ளவில்லை.செல்- கூட வைத்துக்கொள்வதில்லை. ஆனாலும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை இலக்கியக்கூட்டங்களில் பேச அழைக்கப்படுகிறார்.நகைச்சுவையும், கிண்டலும், அற்புதமான புதிய புதிய கருத்துக்களும் அவர் பேச்சில் அருவிபோல வந்து கொட்டும்.. அதனால் அவருக்கு எங்கும், எந்த ஊரிலும் பலத்த வரவேற்பு.

    எப்படி சார் ஒரு டெலிபோனோ, அல்லது காரோ இல்லாமல் இத்தனைக் கூட்டங்களுக்கும் போய் அனாயாசமாகப் பேசுகிறீர்கள் என்று அவரைக்கேட்டேன்.

    இருக்கிற இத்தனூண்டு மீசையைத்திருகியபடி அவர் சொல்வார்;- வேதம் சார்! சொல்லுங்கள்! இந்த செல்.. அல்லது டெலிபோனா போய்ப் பேசுகிறது?. …

    நான்..;- ‘இல்லை ஐயா!’..

    .. அவர்..;– ‘இவற்றை நான் ஒரு சுமையாகக் கருதுகிறேன்..சார்! அதுகளை வைத்துக்கொண்டால் அனாவசியச் செலவு மாசாமாசம் எனக்கு…எவனாவது சும்மாவானாலும் தொடர்பு கொண்டு வீண் சந்தேகம் கேட்டுக்கொண்டிருப்பான்.என் நேரமும் வேஸ்ட்!.அந்த நேரத்தில் நான் ஒரு புதிய நூலைப் படிப்பேனே! ஏராளமான கருத்துள்ள நூலாக நான் தேர்ந்தெடுத்துப்படிப்பதால்தானே, சுவையுறத் தொகுத்துச் சொல்வதால்தானே சார்!என்னைக் கூப்பிடுகிறார்கள்..இல்லையா? ஆர்வமுள்ளவர்கள் அவசியம் நேரில் என்னிடம் வருவார்கள். ஒப்புதல் தருவேன்.காரில் என்னை அழைத்துப்போனால்தான் பேசுவேன் என்பேன்.பேசவோ குறைந்த கட்டணம் தான் வாங்குவேன்.

    அதனால் மற்றவர்களைவிட என்னை அழைத்துப் பேசவைத்தால் அவர்களுக்கும் லாபம். தொலைபேசித்தொல்லைகட்கு நான் பணம் கட்டாததால் எனக்கும் அவர்களுக்கும் ஒரு நேரடித் தொடர்பு கிட்டுகிறது.. நெருக்கம் அதிகமாகி எனக்கு இப்போ தமிழ்நாடு முழுதும் ஏராளமான நண்பர்கள்.

    ஆக நான் விஞ்ஞானக் கருவிகளைச் சுமையாகக் கருதுவதால் அவற்றிலிருந்து ஒதுங்கி, தேவையானது மட்டும் வைத்துக்கொண்டு(அதாவது டி.வி மட்டும் அவர் வீட்டில் உண்டு- அதுவும் மனைவிக்காக,) காசையும் மிச்சப்படுத்துகிறேன். நேரத்தையும் கூட….

    என்னை அழைக்க வருபவர்கள் இயற்கையான உண்மையான இலக்கியத் தாகத்துடன் வருவார்கள். அவர்களை நான் ஏமாற்றுவதேயில்லை.. என்ன வேண்டுமோ கொடுப்பேன். இதனால் நான் எக்காலத்திலும் டென்ஷனை மனத்தில் ஏற்றிக் கொள்வதில்லை.. என்மனைவியும் அப்படித்தான். இப்போதும் அவள் மிக்ஸி என்றால், க்ரைண்டர் என்றால் எத்தனை கிலோ கனம்? எவ்வளோ செலவு? எவ்வளோ மின் ஆபத்து?என்பாள்.

    நீங்களே பார்த்தீர்கள் அல்லவா? அவள் பக்கத்து வீட்டுக்காரிகளை விட கட்டு குண்டாய் இருக்கிறாள். ஆரோக்கியமாயும் உள்ளாள். ஒரு தலைவலி என்றுகூட அவள் படுத்ததில்லை. என்று சொல்லி கடகட எனச் சிரித்தார்… உண்மை !அவர் வீட்டில் இன்னும் கிராமத்திலிருந்து கொண்டுவந்த அயனான அம்மியும், ஆட்டுக்கல்லும்தான்.

    ….அவரது பதிலைக் கேட்டு ஆச்சர்யமும், பலத்த மகிழ்ச்சியும் அடைந்து என்னை அறியாமலே ‘சப்பாஷ்’ என்று கைதட்டினேன்… தெரிகிறதா இப்போது? அவர் உண்மையாக இயற்கையுடன் கைகோர்த்துக்கொண்டே வாழ்க்கையை மிக அழகாக, அமைதியாகக் கொண்டுபோகிற தூய தமிழ் அறிஞர் என்று..! அதனால் வீண் தொந்தரவுகளை அவர் விலை கொடுத்து வாங்குவதில்லை.. அவரை நெருங்கிய நண்பர்கள் ‘சுமை வேண்டா சுப்பன்’ என்று ரகசியமாக அழைப்பர்.
    … இவ்வளவு ஏன்? அண்மையில் மறைந்த திரு. காஞ்சிமகான் கூட ஒரு காரையோ, செல் போனோ பயன்படுத்தியதே இல்லை.. அவரிடம் பேசணும் என்றால் பக்தர்கள் நேரில்தான் போய்ப் பேசுவர்.

    எங்கு போக வேண்டும் என்றாலும் அவர் கால்நடையாகத்தான் செல்வார். அந்த அளவுக்கு அந்த மகான் இயற்கையோடு கலந்து வாழ்ந்திருந்தார்…இறுதிவரை.

    .. உங்களுக்கு இன்னொன்று தெரியுமா? நம் எல்லோரது மனப்பான்மையையும் உற்றுக்கவனித்தீர்களானால், சுமைகளை மனத்தில் ஏற்று வீணாக டென்ஷன் படுகின்றோம். அதேசமயம் இந்த டென்ஷனை அனாவசியமாகப் பிறர்மேலும் திணிக்கின்றோம்.. சொகுசுக்கு ஆசைப்பட்டு என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் விலையுயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கிவந்து போகிறவர் வருபவர் எல்லோரிடமும் கொஞ்சநாள் காட்டிப்பெருமைப்பட்டுக்கொண்டிருந்தார்..வாங்கிய பிறகு அதை எப்படி முறையாகப்பயன்படுத்துவது என்று தெரியவில்லை.. ஓரமாய் வைத்துவிட்டார்!அவரது மனைவியும் வீண்செலவு செய்துவிட்டீர்களே!

    சரியான புடவை இல்லாமல் பழசைக்கட்டிக்கொண்டு அவஸ்தைப்படுகிறேனே. எனக்கு இரண்டு நல்ல புடவையாவது நீங்க அநாவசியமாகச் செலவழித்த காசில் எடுத்துக்கொடுத்திருக்கலாம்.. மனசில ஒரு சந்தோஷமாவது இருந்திருக்கும் என்று அடிக்கடி குத்திக்காட்டினாள்.

    அவ்வளவுதான்! அவருக்கு டென்ஷன் ஏறிவிட்டது. பலநாட்கள் அவரால் நிம்மதியாகவே இருக்கமுடியவில்லை. எப்படியாவது அந்த வேண்டாத ஆண்ட்ராய்டு செல்லை வேறு ஒருவர்க்கு கொஞ்சம் விலைதள்ளியாவது விற்கப் படாது பட்டார்.அது அடுத்த டென்ஷன்… கடைசியில் அவரது அண்ணன் மகனே{கல்லூரியில் படிப்பவன்} ஒரு விலை சொல்லி எடுத்துக்கொண்டபின் தான் அவர் மனம் அமைதியுற்றது. ஆக தான் பட்ட அவஸ்தையை இன்னொருவரிடம் தள்ளினால்தான் மனம் நிம்மதி அடைகிறது.… அதனால்தான் ‘ஸைல்’ சொல்கிறார்.

    “உள் மனத்திலிருந்தோ, அல்லது பிறர் மனம் மூலமாகவோ வருகிற ஒரு வேண்டாத, கெட்ட தூண்டுதலே மன அமைதியை இழக்கச் செய்து டென்ஷன் என்னும் பரபரப்பு எண்ணம் உண்டாகிறது.அது தற்காலிகமாகவோ இல்லை நிரந்தரமாகவோ கூட இருக்கலாம்.ஒன்று ..ஜாக்கிரதையாக இருந்து ‘அது’ ஏற்படாமல் உங்கள் மனத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.. இல்லையாயின் வந்தபின் பிராணாயாமம், தியானம் மூலம் நிச்சயம் அதிலிருந்து விடுபடுங்கள்.

    இறைவன் கொடுத்த அழகிய சுதந்திர மனம் என்னும் பாத்திரத்துள் நீங்களே வேண்டாத குப்பையைப் போட்டீர்களாயின், நீங்களே தான் இறைத்தியானம் மூலம் அதனை வெளியே எடுத்து எறியவேண்டும்’ என்கின்றார்.எவ்வளவு உண்மையான பாஸிடிவ் ஆன உபதேசம் பாருங்கள்!

    … எனவே அவர் சொல்கிற பிரகாரம் வெளித்தூண்டுதல்கள் ஆன அதிக வெய்யில், அதிகக்குளிர், அதிக மழை அல்லது பிறர் மனம் மூலம் வருகிற ‘ஸ்ட்ரெஸ்’ (மன அழுத்தம்) போன்றவற்றை மனோபலம், தியானம், எப்போதும் சாந்தமான எண்ணங்கள் முதலியவற்றால் போக்கிக்கொள்வோம்.அதே சமயம் நாமே வீணாக சஞ்சல மனத்தால் உண்டாக்கிக்கொள்கின்ற கோபம், காமம், பேராசை,அதீத பாசம், ‘தான்’ எனும் அகந்தையின் மூலம் செய்யும் வேண்டாத செய்கைகள் இவற்றை மகான்களின் உபதேசம், அவர்தம் வரலாற்றை எப்போதும் படித்தல்,நல்ல நல்ல இலக்கியநூல்களை, கவிதைகளைப் படித்து அனுபவித்தல் போன்றவற்றால் மனம் என்னும் நல்ல தெய்வீகப்பாத்திரத்துள் பிரகாசத்தை(தெய்வ ஒளியை)ஏற்றிவைப்போமாக!. இவை நாம் யோகா மற்றும் தியானம் கற்கும் முன் நெஞ்சில் கொள்ளவேண்டிய பயிற்சி முறை.. சரியா?

    ..(தொடரும்)

    Share
  • துப்புரவு தொழிலாளர் சட்டத்தின் நிழலும், நிஜமும்

    ஞா. ஜார்ஜ்,
    ஆராய்ச்சியாளர்
    அரசியல் அறிவியல் மற்றும் வளர்ச்சி நிர்வாகத் துறை
    காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகம்
    காந்திகிராமம்
    திண்டுக்கல்

    இந்தியா பொருளாதார வளர்ச்சி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னோக்கியும் சமூகம் வளர்ச்சி மற்றும் ஒற்றுமையில் பின்னோக்கியும் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு சாதி மற்றும் மதம் சார்ந்த வேற்றுமைகளே காரணம். “மதம் உன்னை மிருகமாக்கும், சாதி உன்னை சாக்கடையாக்கும்” என்ற தந்தை பெரியாரின் வார்த்தைகளின் அர்த்தம் இன்று நமக்கு புரிகிறதா என்பது தெரியவில்லை. ஒரு வேளை புரிந்திருந்தால் அந்த பகுத்தறிவு பகலவனின் கனவு நிஜமாகி இருக்கும். சாதி மத பேதமின்றி அனைவரும் சமம் என்ற உணர்வு நமக்குள் ஏற்பட்டிருக்கும், சமுதாயத்தில் தீண்டாமை வளர்ந்திருக்காது, தலித்துகளும் தீண்டாமையினால் அடிமைப்பட்டிருக்கமாட்டார்கள். சாதியப் பாகுபாடு சார்ந்த தீண்டாமை ஒரு நாட்டின் சமூக வளர்ச்சிக்கும் அதன் முன்னேற்றத்திற்கும் பெரும் தடையாக இருக்கும் என்பதற்கு இந்தியாதான் சிறந்த உதாரணமாக இருக்க முடியும். தீண்டாமையினால் நாடும், தீண்டப்படாதாரும், தீண்டத்தக்கவரும் அடைந்துள்ள ஒட்டுமொத்த இழிவையும், பின்னடைவையும், ஏற்றத்தாழ்வையும், சமூக இயலாமைகளையும் படம் பிடித்து காட்டும் வகையில் அமைந்துள்ள பாரதிதாசனின் பாடல் வரிகள் நமக்கு உணர்த்துவது.

    “தீண்டாமையென்னுமொரு நோய் இந்தத்
    தேசத்தினில் மாத்திரம் திரியக்கண்டோம்-
    எனில் ஈண்டு பிற நாட்டில் இருப்போர்
    செவிக் கேறியதும் இச்செயலைக் காறியுமிழ்வார்
    பல ஆண்டாண்டு தோறுமிதனால்- நாம்
    கூண்டோடு மாய்வதறிந்தும்- இந்தக்
    கோணலுற்ற செயலுக்கு நா-ணுவதில்லை”.

    இப்பாடல் வரிகளில் கூறப்பட்டுள்ளதை உண்மையாக்கும் வகையிலேயே இன்றளவும் சாதியையும் அதனைச் சார்ந்த தீண்டாமையையும் கடைபிடித்துவருவதை என்பதை எண்ணி நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும். கடந்த 2007 ல் அமெரிக்க செனட் சபையில் மார்டின் லூதர் கிங்கின் 50-வது ஆண்டு நினைவாக கொண்டுவரப்பட்டதுதான் 110-பில். அதில் இந்தியாவின் வளர்ச்சியையும், சமூக முன்னேற்றத்தையும் பாதித்துக் கொண்டிருப்பதும், இன்றளவும் தீர்வு காண முடியாததாகவும் இருப்பதுதான் தீண்டாமை என்ற சாதியப்பாகுபாடு. (United States should address the ongoing problem of Untouchability in India) என்ற ஆய்வு அறிக்கையை தீர்மானமாக கொண்டுவந்தது. இதில் சிந்திக்க வேண்டியது அமெரிக்க காந்திய சிந்தனையான அகிம்சை என்னும் ஆயுதத்தைக் கொண்டு தானே பல நூறு ஆண்டுகள் அடிமை மற்றும் தீண்டாமைத்தனத்தில் இருந்த கருப்பின மக்களின் விடுதலை பெற வழிகோலியது. ஆனால் இந்தியாவில் முற்போக்கான சிந்தனைவாதிகள் இல்லையா, முற்போக்கு சிந்தனைக்குத்தான் பஞ்சமா, அனைத்தும் இருந்தும் மதம் சார்ந்த சாதியத் தீண்டாமைக்கு விடையில்லையே. 21 ஆம் நூற்றாண்டில் பயணிக்கும் நாம் உணவு, உடை மற்றும் பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்கும்போது சாதி என்ற சாக்கடையை உள்மனதில் ஓடவிட்டு சமத்துவம், சகோதரத்துவத்தை வளர்க்க நினைப்பது முட்டாள்தனமான செயலல்லவோ. இவ்வாறு சாதியப் பாகுபாடும், ஏற்றத்தாழ்வும் மிக்க ஒரு நாடு எந்தவிதத்தில் வளர்ச்சியை எட்ட முடியும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    மலம் என்ற சொல்லை கூட நாலுபேருக்கு மத்தியில் உச்சரிக்கத் தயங்கும் போது தான் கழித்த மலத்தை கொஞ்சமும் அருவருப்பின்றி சக மனிதனை அள்ளச் சொல்லுவதுதான் தீண்டாமையின் உச்சம். இப்படிப்பட்ட சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை மறுப்பதற்கில்லை. மலத்தை தீண்டுவதில்லை, அதனை தீண்டி சுத்தம் செய்வோரையும் தீண்டுவதில்லை, அப்படி தீண்டினால் தீட்டு என்று கூறும் சாதி இந்துக்களும் மற்ற உயர்வகுப்பினரும் ஒன்றை மறந்துவிடக்கூடாது, ஒவ்வொரு மனிதனும் குறைந்தது இரண்டு முறையாவது தன் மலத்தைத்தானே தொட்டுக் கழுவும் தோட்டியாக உள்ளான். ஆனால் மற்றவர்களின் மலத்தை சமூக நலன் கருதி அப்புறப்படுத்தியவனைச் சமூகத்திலிருந்தே தூர ஒதுக்கி விடுகிறான் தலித் மக்களை தீண்டப்படாதவனென்று. தீட்டு என்று மலத்தைத் தொடா மனிதன் உண்டா? என்று முனைவர் சீனிவாசன் தீண்டாமைக்கு தீயிடு புத்தகத்தில் கூறும் விளக்கம் சரியே.

    கையால் மலம் அள்ளுவது ஒரு தேசத்தின் அவமானம் என்று கூறும் பொது நலவாதிகளாகட்டும், அரசியல்வாதிகளாகட்டும் மற்றும் மக்கள் பிரதிநிதிகளாகட்டும் தங்களுக்குள்ளாகவே கேட்க வேண்டிய கேள்வி, தேசத்தின் அவமானத்தை அகற்றும் பொறுப்பு அனைவருக்குமே உண்டு, நம்மில் எத்தனை பேர் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் மற்றும் தங்களின் பகுதியில் உள்ள சாக்கடையில் அடைப்பு எற்பட்டு துர்நாற்றம் வீசும்போது அதை சமூக அக்கறையுடன் சுத்தப்படுத்த முன்வருகின்றோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். சாக்கடை நீரில் கால் பட்டுவிடக்கூடாது என்பதற்காக பார்த்துப் பார்த்து ஒதுங்கி நடக்கும் நாமும் மனிதர்கள் தான், பல்லாயிரக்கணக்கான மக்களின் மலமும், சிறுநீரும் மற்றும் செத்துப்போன மிருகங்களின் உடல்களும் மிதந்து வரும் சாக்கடையை புனித ஆறாகக் கருதி எந்தவித சலனமும் இல்லாமல் உள்ளே இறங்கி தொழில் தர்மத்தைக் காக்க துன்பத்தை நாளும் அனுபவிக்கும் அவனும் மனிதன்தானே. அசுத்த நீரில் தலை நனைந்து, வாய், காது, மூக்கு வாழியாக நீர் நுழைய சாக்கடைப் புழுவைப் போலத் துடித்து சமூகத்தின் சுத்தத்தைக் காக்க தன்னையே அர்ப்பணிக்கும்போது அவர்களுக்கு நேரும் துன்பத்தை நம்மில் எவரேனும் உணர்ந்ததுண்டா? போற்ற வேண்டிய அவர்களை நம் சமூகம் மனிதனாகக்கூட பார்ப்பதில்லையே!

    இன்றைய விளம்பரம் தேடும் உலகில் சுய விளம்பரங்களுக்கு எவரும் விதிவிலக்கல்ல, அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பிரபலங்கள் என அனைத்துத் தரப்பினருமே விளம்பரம் என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர் என்பது மிகையான ஒன்று. எடுத்துக்காட்டாக தனிநபர் சுகாதாரம் பேணப்பட வேண்டும் மற்றும் சமூக சுகாதாரம் காக்கப்படவேண்டும் என்று துடைப்பத்துடன் ஊடக விளம்பரத்திற்காக போஸ் கொடுக்கும் தலைவர்கள் சுயநலவாதிகளா அல்லது பொதுநலவாதிகளா என்ற கேள்வி எழுகிறது. கறைகளையே பார்த்திராத வெண்ணிற ஆடை, கையிலோ துடைப்பத்தை எடுத்தாலே போதும் அவர்களை சமூக சுகாதாரத்தை காக்கிற சமூகவாதிகள் என்கிறது ஊடகங்கள் அதுவே நாளை வரப்போகிற காலரா மலேரியா போன்ற எண்ணற்ற நோய்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற நினைத்து சாக்கடையானாலும் சரி, அது கழிவுகளின் தொட்டியானாலும் சரி சமூக அக்கறையுடன் சுத்தம் செய்யும் சமூகவாதிக்கு உடுத்த நல்ல ஆடைகள் இல்லை, சமூகத்தில் மரியாதை இல்லை ஏன் சமூக சுகாதாரத்தை பேணுபவனுக்கே சமூகத்தில் மக்களோடு மக்களாக வசிக்கக்கூட இடமில்லையே. பணம் மற்றும் அதிகாரம் இரண்டிற்காக மக்கள் முன் நடிக்கும் கறைபடியா சட்டைகாரர்களுக்கு பத்திரிக்கைச் செய்தியில் முதல் பக்கமும் எதையும் எதிர்பாராது சமூக நலனுக்காக தீண்டாமைக் கொடுமையை கறைபடிந்த ஆடையாக அணிந்து உழைப்பவனுக்கு பத்திரிக்கைச் செய்தியில் கடைசி பக்கத்தில் கூட இடமில்லையே ஏன்? சமூகவாதிக்கும் பொதுநலவாதிகளுக்கு விளம்பரம் தேவையில்லையோ?

    மனித மலத்தை மனிதனே அகற்றும் முறை ஆங்கிலேயர்களின் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. நாம் அடிமைப்பட்டு இருந்தபோதே தலித்துகளும் அடிமைப்பட்டிருந்தனர் என்பது ஒன்றும் வியப்பதற்கில்லை. ஆனால் சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் தலித்துகள் மனித மலத்தை அள்ளப் பணிக்கப்படுவதுதான் நாம் பெற்ற உண்மையான சுதந்திரமா என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு தலித்துகளை, இதுதான் நம் பரம்பரைத் தொழில் என்று அவர்களுக்குள்ளாகவே எண்ணம் வரும் அளவுக்கு அடிமைப்படுத்தியுள்ளோமே இதுவா சுதந்திரம்? தலித் மக்களின் ஒட்டுமொத்த சுதந்திரத்தையுமே பரித்துவிடு, இன்று ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம், மற்றும் தனிமனித சுதந்திரம் பற்றிப் பேச நமக்கு என்ன அருகதை இருக்கிறது என்றெண்ணிப் பார்க்க வேண்டும். எல்லோரும் எல்லாத் தொழில்களையும் செய்யலாம் என்று கூறும் அரசியல் சட்டம்கூட, தலித்துகள் என்றாலே துப்புரவு மற்றும் மனித மலத்தை அகற்றுவது என்ற சமூக நடைமுறை ஆதரித்து வருவதாகத்தான் தோன்றுகிறது. எல்லாத் துறைகளிலும் இட ஒதுக்கீடு செய்து பணி அமர்த்தும் மத்திய மாநில அரசுகள் ஏனோ துப்புரவு மற்றும் கடைநிலை தொழிலாளர்களை பணியமர்த்தும்போது மட்டும் இடஒதுக்கீட்டை கடைபிடிப்பதில்லை, அரசே பாரபட்சமாக நடந்து கொள்கிறதுதானே, தீண்டப்படாதவர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டாத துறை துப்புரவுப் பணிதான். இதில் பாரபட்சத்திற்கு இடமில்லை, ஏனென்றால் துப்புரவுப் பணி முழுவதும் தீண்டப்பாடாதவராக கருதப்படும் தலித்துகளின் வசமே என்று சொல்லும் அளவுக்கு சமூக ஏற்றத்தாழ்வை அரசே ஆதரித்து வந்திருக்கிறது என்று தானே அர்த்தம்.

    தலித் மக்கள் தீண்டாமையின் உச்சமான மனிதக்கழிவை அகற்ற பணிக்கப்படுவது இந்திய அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமை சரத்துக்களான 14, 17, 21 மற்றும் 23 க்கு எதிரானது. தலித் மக்கள் தங்களுக்கான ஒட்டுமொத்த மனித உரிமையையே இழந்து சமூகத்தில் அடிமட்டத்தில் இருக்கின்றனர். இந்தியாவில் தலித் சமுதாய மக்கள் அடிமைப்பட்டு இருப்பது மேம்பட்ட சமுதாய வளர்ச்சிக்கும் வித்திடமுடியும் என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி  நாட்டில் 2.6 மில்லியன் உலர் கழிப்பறைகள் உள்ளன. இவற்றில் 13,14,652 கழிப்பறைகள் சாக்கடையில் நேரடியாகவே கலந்துவிடுவதாகவும், 7,94,390 உலர் கழிப்பறைக் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்வதாகவும் ஆய்வு கூறுகிறது. உலர் கழிப்பறைகளில் உள்ள மனிதக் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறையில் 73% உலர் கழிப்பறைகள் கிராமப்புறங்களிலும் மீதமுள்ள 27% உலர் கழிப்பறைகள் நகர்ப்புறங்களிலும் செயல்படுவதாக ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 1.3 மில்லியன் மக்கள் மனிதக் கழிவை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் அதிகப்படியானவர்கள் பெண்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்று நம் நாட்டில் கிராமங்களே அதிக அளவில் உள்ளதால்தான் காந்தி கூட கிராமப்புறங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நம் நாட்டின் வளர்ச்சி அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனாலேயே, கிராமம் உயர நாடு உயரும் என்று குறிப்பிட்டார். கிராமப்புறங்களின் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டி எண்ணற்ற திட்டங்களை வகுத்துள்ள மத்திய மாநில அரசுகள் அதை முறையாகச் செயல்படுத்த தவறிவிட்டது. துப்புரவு தொழிலாளர் நலனுக்காகவும், கிராமப்புற சுகாதாரத்துக்காகவும் கொண்டுவரப்பட்ட சட்டம்தான் மலம் நீக்குவதற்கு மனிதனை பயன்படுத்துதல் மற்றும் உலர் கழிப்பறைகளைக் கட்டுதல் (தடுப்புச்) சட்டம் 1993.  இச்சட்டத்தின் மூலம் உலர் கழிப்பறைகளை நவீன கழிப்பறைகளாக மாற்றுவதற்கு அரசு மானியம் மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் கட்டுவதற்கான் திட்டம் கொண்டுவரப்பட்டது. மனிதக் கழிவை மனிதனே அகற்றும் இழிநிலையை சமூகத்தில் இருந்து முற்றிலும் அகற்றிவிடுவோம், அத்துடன் திறந்தவெளியில் மலம் கழிப்பதை முற்றிலும் ஒழித்துவிடுவோம் என்று கூறி அதிகப்படியான கிராமங்களில் தண்ணீர் வசதிக்கோ, பராமரிப்பு வசதிக்கோ முறையான ஏற்பாடுளைச் செய்யாமல் பொதுக் கழிப்பிடம் மற்றும் சுகாதார வளாகம் என்று கட்டிடங்கள் கட்டப்பட்டு மக்கள் பணம் வீணடிக்கப்பட்டது, கிராமப்புறங்களில் 90% மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலை உள்ளதை அறிந்தாவது மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த அரசுகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை கூட பல பொதுக் கழிப்பிடங்கள் கட்டியது முதலே பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதை நாம் காணமுடியும். இப்படி பல செயல்பாடுகள் சிறப்பாக இல்லாத காரணத்தால், சில மாற்றங்களுடன் 2013-ல் புதிய சட்டதிருத்தத்தை உருவாகியது மத்திய அரசு.

    மனித கழிவு அகற்றும் தொழிலாளர் தடை மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வுச் சட்டம் 2013-ன் முக்கிய அம்சங்கள்:

    · மலம் அள்ளுதல், செப்டிக் தொட்டிகளை வாருதல், சாக்கடைகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை இனியும் எவரும் தொடரக்கூடாது என்பதுதான் சட்டத்தின் முதற்நோக்கம்.

    · மலம் அள்ளுதல், செப்டிக் தொட்டிகளை வாருதல், சாக்கடைகளைச் சுத்தம் செய்யப் பணிப்பதும், செய்வதும் சட்டப்படி குற்றம் என்றும் மீறினால் இரண்டு வருடம் சிறைத் தண்டணை மற்றும் இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மறுபடியும் இதே குற்றத்தைச் செய்தால் ஐந்து வருடம் சிறை, ஐந்து லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    · இச்சட்டம் நடைமுறைக்கு வந்து ஒன்பது மாதங்களுக்குள் நாடு முழுவதும் மனிதர்கள் மலம் அள்ளும் வடிவிலான உலர் கழிப்பறைகளை கண்டறிந்து முற்றிலும் அகற்றிவிட வேண்டும், அல்லது நிதியுதவி பெற்று தண்ணீர் வசதியுடன் கூடிய நவீன கழிப்பறைகளாக மாற்ற வேண்டும்.

    · சட்டத்தின் கீழ்தண்டனை பெற்றவர் அதை எதிர்த்து எந்த நீதிமன்றங்களுக்கும் செல்லமுடியாது (non-bailable)

    · மனித கழிவு அகற்றும் தொழிலாளர்களின் கணக்கெடுப்புப் பணியை துறை வாரியாக தயாரித்து சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் கண்காணித்து மத்திய வேலைவாய்ப்பு மற்றும் சமூக நீதித் துறைக்கு சமர்பிக்கவேண்டும்.

    · மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளாக
    o அடையாள அட்டை வழங்க வேண்டும்
    o முதற்கட்ட நிவாரணத்தொகை வழங்க வேண்டும்
    o மனித கழிவு அகற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்
    o மனித கழிவு அகற்றும் தொழிலாளர்களுக்கு நிலம் மற்றும் வீடு கட்ட உதவித் தொகை வழங்க வேண்டும் அல்லது உதவித்தொகையுடன் வீடு வழங்க வேண்டும்.
    o மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தில் குறைந்தது ஒருவருக்காவது உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி அளிக்க வேண்டும்
    o மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தில் குறைந்தது ஒருவருக்காவது மாற்றுத் தொழில் செய்வதற்கான மானியம் மற்றும் வங்கியின் மூலம் கடன் வழங்க வேண்டும்.

    · கண்காணிப்பு அமைப்புகள்:

    நிலைகள்
    நிர்வாக தலைமை
    வட்டம்
    வட்டாட்சியர்
    மாவட்டம்
    மாவட்ட ஆட்சியர்
    மாநிலம்
    மாநில முதல்வர்
    மத்தியில்
    மத்திய வேலைவாய்ப்பு மற்றும் சமூக நீதித் துறை

    கடந்த மார்ச் 27, 2014-ல் உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்தது, அதில் அனைத்து மாநில அரசுகளும் உடனடியாக மனிதக் கழிவு மனிதர்களால் அகற்றப்படுவதை தடை செய்ய வேண்டும், அவர்களின் மறுவாழ்விற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். அதே போல மத்திய வேலைவாய்ப்பு மற்றும் சமூக நீதித் துறையின் உத்தரவுப்படி மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களில் உள்ள மனிதக்கழிவு அகற்றும் பணியாளர்களை கணக்கெடுத்து அதன் முடிவை சமர்பிக்க வேண்டும். அந்த பட்டியலின் மூலம் பயனாளிகளுக்கு முதற்கட்ட நிவாரணத்தொகை மற்றும் மறுவாழ்விற்கான பணிகள் தொடரப்படும் என்று அறிவித்திருக்கிறது.

    2013 சட்டப்படி துறைவாரியாக கணக்கெடுக்கப்படும் போது மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் துப்புரவுத் தொழிலாளர்களே மனிதக் கழிவை அகற்றும் வேலையையும் சேர்த்து செய்கின்றனர் அப்படிப்பட்ட நிலையில் சம்மந்தப்பட்ட நகராட்சியே கணக்கெடுப்பின் போது இந்த பணியாளர்களை பயனாளிகளின் பட்டியலில் சேர்க்காமல் விட்டிருப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதற்குக் காரணம் அவர்கள் துப்புரவு மற்றும் மனிதக்கழிவுகள் ஆகியவற்றை சேர்த்து செய்வதனால் அவர்களை துப்புரவாளர் பட்டியலிலேயே வைத்துவிட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி கழிவு அகற்றும் தொழிலாளர்கள் அதிகமாக படித்தவர்கள் அல்ல அதனால் அரசு விளம்பரங்களை படித்து புரிந்து கொள்வது கடினம். இப்படி இருக்கும் சூழ்நிலையில் அந்தந்த ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் கணக்கெடுப்பின் போது எப்படி செயல்பட்டன என்பது தெரியவில்லை, அதற்கான விழிப்புணர்வையும், அவர்களுக்கு உதவ அரசு எப்படிப்பட்ட நடவடிக்கைளை எடுத்தது என்பது தெரியவில்லை.

    சட்டப் பிரிவு 2 (1) (e)-ன் படி உலர் கழிப்பறையை அதிகமாக பயன்படுத்துவது இரயில்வே துறைதான் ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு கழிவறை என்று கணக்கிட்டால் 2013 திருத்தச் சட்டத்தை முதலில் மீறுவது இரயில்வே துறைதான். அதிகப்படியான மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் இன்றுவரையும் இரயில் பாதைகளில் மனிதமலத்தை சுத்தம் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். உச்ச நீதிமன்றம் கூட இரயில்வே துறை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் இந்தப் பிரச்சனைக்கு முடிவுகட்டவும். இரயில் பாதையில் உள்ள மனிதக்கழிவுகளை கையால் சுத்தம் செய்யக்கூடாது மாறாக அதிகப்படியான வேகத்தில் தண்ணீரை உந்தித்தள்ளும் high speed water jet ஐ பயன்படுத்த வேண்டும் என ஆணை பிறப்பித்தது. மற்ற மேலை நாடுகளில் பயன்படுத்தப்படும் இரயில் வண்டிகளில் உள்ள கழிப்பறைக் கழிவுகள் இரயில் வண்டிகளிலேயே சேமிக்கப்பட்டு மனிதனின் கைபடாமலேயே சுத்தம் செய்யப்படுகிறது. இந்த செயல் திட்டத்தை ஏன் இரயில்வேத் துறை செயல் படுத்தக்கூடாது.

    சட்டப் பிரிவு 4(1) –ன் படி உலர் கழிப்பறைகளை கணக்கெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரி பட்டியல் இட இரண்டு மாதங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது, உலர் கழிப்பறை என்பதற்கு விளக்கமும் தரப்பட்டுள்ளது. அதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் மக்கள் பொது இடங்களிலும் ஊரின் ஒதுக்குப்புறங்களிலும்தான் மலம் கழிக்கும் நிலையில், வெரும் உலர் கழிப்பறைகளை மட்டுமே சட்டத்தில் குறிப்பிட்டுவிட்டு, திறந்தவெளியில் மலம் கழிக்கும் இடங்களை சேர்க்காமல் விடுபட்டுள்ளது. உலர் கழிப்பறை என்று கூறும் சட்டம் ஏன் திறந்தவெளி கழிப்பிடங்களை கணக்கில் கொள்ளவில்லை.

    நகப்ர்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள உலர் கழிவறைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறது அரசு, இன்றும் பல நகரங்களில் உள்ள வீடுகளின் கழிப்பறைகள் தெருச்சாக்கடையுடனும், பாதாளச் சாக்கடையுடனும் இணைக்கப்பட்டுள்ளதை நம்மால் காணமுடியும். இப்படி மனிதக்கழிவுகளை தனியாக சேமிக்க தொட்டி அமைக்காமல் சாக்கடை கால்வாயில் கலக்கும்படி அமைக்கப்படுவதால் சாக்கடை முழுவதும் மனித மலம் அதை சுத்தம் செய்ய இறங்க வேண்டியதென்னவோ சாதியால் அடக்கப்பட்ட மனிதன். வீட்டு கழிப்பறை என்ற போர்வையில் பயன்படுத்தப்படும் இந்த உலர் கழிப்பறையைத் தடுக்க நகராட்சிகளும் மாநகராட்சிகளும் என்ன திட்டம் வைத்துள்ளன, இதை செயல்படுத்த அரசு என்ன மாதிரியான திட்டத்தை கையில் எடுக்கப் போகிறது.

    2013 சட்டத்தில் மனிதக்கழிவு அகற்றுபவர் என்பதற்கு ஓர் விளக்கவுரை தந்துள்ளது, அதில் எந்த விதமான உபகரணங்களும் இன்றி மனிதக் கழிவை சுத்தம் செய்கிறவன் தான் உண்மையான மனிதக்கழிவு அகற்றும் தொழிலாளி என்று, இதுதான் இந்த சட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஓட்டை, காரணம் ஆரம்பக்காலத்தில் இருந்தே சில உபகரணங்களை கையாண்டு வந்துள்ளனர் ஆனால் தற்போது அதனுடன் கையுறை, முகவுறை, மற்றும் சிலவற்றை தந்துவிட்டு அவர்களை மனிதக்கழிவு அகற்றும் தொழிலாளர்கள் இல்லை என்று கூறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. கையுறை மற்றும் முகவுறை அணிவதால் மட்டும் அவர்களின் இழிநிலை மாற்றம் பெற்றுவிடுமா? அல்லது முழுமனதுடன் கழிவை அகற்ற முன்வருவான் என்று எவ்வாறு எண்ண முடியும்?

    மனித கழிவு அகற்றும் தொழிலாளர் தடை மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வுச் சட்டம் 2013 சரியாக செயல்படுத்தப்படுமா பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பலன் கிட்டுமா என்று பாதிக்கப்பட்ட மக்கள் ஒருபுறமும் சமூக ஆர்வலர்கள் மறுபுறமும் எண்ணும் வேளையில், முழுக்க முழுக்க அரசு இதற்கான செயல் வடிவத்தைத் தான் நல்குமே தவிர சட்டம் முறையாக நடைமுறைப்படுத்துவது அதிகாரிகளின் கையிலும், மக்கள் பிரதிநிதிகளின் கையிலும் கடைசியாக மக்களின் கையிலும் தான் உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் எவ்வாறு மக்களை நல்வழிபடுத்தியும் சமூக சுகாதாரத்தையு எப்படி அதற்கான மாற்றத்தை மக்களிடமிருந்தே உருவாக்க வேண்டும். இதற்கு உதாரணமாக, கர்நாடக மாநிலத்தில், பெக்கினாகேரி என்ற கிராமத்தினர், பொது இடம் ஒன்றில் மலம் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனராம். அவ்வாறு செய்ய வேண்டாம் என கிராம கவுன்சில் கேட்டுக் கொண்டும், அதற்கு யாரும் செவிசாய்க்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த கிராம கவுன்சில் உறுப்பினர்கள், ஒவ்வொரு நாளும், கிராமத்தின் மலம் கழிக்கும் அந்த பொது இடத்தில், அதிகாலையிலேயே போய் நின்று கொள்வார்களாம். மலம் கழிக்க வரும் ஒவ்வொருவரையும் பார்த்து, குட் மார்னிங் சொல்வார்களாம். தர்ம சங்கடத்திற்கு ஆளாகும் மக்கள், மலம் கழிக்காமல் வீட்டிற்கு சென்று விடுவார்காளாம். இதனால் கிராம பொது இடத்தில் மலம் கழிப்பது படிப்படியாக நின்று, தற்போது கிராமமே மாறிவிட்டதாம். இப்போது, கிராம கவுன்சில் உறுப்பினர்கள் குட் மார்னிங்கிற்கு குட்பை சொல்லிவிட்டார்கள் அத்தோடு மக்கள் பனியை செய்த திருப்தியும் ஏற்பட்டுவிட்டதாம் (தினமலர், குட் மார்னிங் மூலம் மலம் கழிப்புக்கு குட்பை, நவம்பர் 21, 2014). ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் பிரதிநிதிகள் இதே போன்று செய்ய வேண்டியதில்லை, மாறாக தங்கள் பகுதியில் செயல்படாமல் உள்ள பொது கழிப்பறைகளை சரி செய்து அதை முறைப்படுத்த வேண்டும், பொது இடத்தை அசுத்தம் செய்யாமல் முழுச் சுகாதாரம் உள்ள பகுதியாக மாற்ற மக்கள் பிரதிநிதிகள் தங்களால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு தனிநபர் மற்றும் பொது சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வை தர முன்வரவேண்டும் அத்தோடு அதற்கான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்.

    மக்களும் தங்களுக்கான சுகாதாரத்தை எப்படிப் பேணுவது அவசியமோ அதுபோல சமூக சுகாதாரத்திலும் அக்கறை உள்ளவராக மாற்ற வேண்டும். முடிந்தவரையில் கழிவறையை வீடுகளில் கட்டியும் பொது கழிப்பறைகளை பயன் படுத்தியும் வாழ்வது மிகவும் முக்கியம் என்பதை உணர வேண்டும். எதற்கெடுத்தாலும் அரசையும் அரசு அதிகாரிகளையும் குறை கூறுவதை விடுத்து தங்களுக்கான மாற்று சிந்தனையை தாங்களே உருவாக்க முன்வரவேண்டும். அரசுதான் கழிவறையை கட்டித்தர வேண்டும் என்று எண்ணாமல் தாங்களே முன்வந்து அரசுதிட்டத்தின் உதவியுடன் தங்கள் சுகாதாரத்தையும் சமூக சுகாதாரத்தையும் காக்கும் பொருட்டு கழிவறைகளை வீடுதோரும் கட்டி பயன்படுத்த வேண்டும். மனித நேயம் மற்றும் மனித உரிமை காக்கப்பட வேண்டும் என்று வாய்வார்த்தையாகக் கூறிவிட்டால் மட்டும் போதாது மாறாக அதை உணர்வுப்பூர்வமாக உணர வேண்டும். திறந்தவெளியில் மலம் கழித்துவிட்டுச் செல்பவன் ஒருவன் அதேமலத்தை கைகளால் அள்ளி சுத்தம் செய்வது என்பதுதான் நம் சமூகத்தில் மனித நேயமா? மனித மாண்பா? அல்லது மனித உரிமையா? தனி மனித உரிமை கூட மற்றவரின் உரிமையை பறிப்பதற்கு உரிமையில்லாத போது ஒருவன் செய்த தவறுக்காக மற்றொருவனை சாதியின் பெயரால் தண்டிப்பதா என்ற எண்ணம் மனதில் உருவாகியுள்ளாது. அப்படி என்றால் நமது சட்டப் புத்தகத்தில் முகப்புரையில் கூறப்பட்டுள்ள சுதந்திரம், தனிமனித சுதந்திரம், சமூக நீதி மற்றும் சகோதரத்துவம் என்பது எல்லாம் வெறும் எழுதப்பட்ட வார்த்தைகள் மட்டும் தானா என்றெண்ணத் தோன்றுகிறது. திறந்தவெளியில் மலம் கழிப்பது மற்றும் மனித கழிவு அகற்ற தொழிலாளர்களை பணிப்பது என்பது இரண்டுமே சட்டத்திற்கு புறம்பானது. இதைத்தடுக்க கடுமையான சட்டங்கள் இருந்தாலும் சமூக கட்டமைப்பை மாற்ற சட்டத்தினால் முடிவதில்லை, சமூக கட்டமைப்பை மாற்ற வேண்டுமானால் மக்களின் மனங்கள் மாறவேண்டும். இது மட்டுமே சாத்தியம், சமூகம் முன்னேற்றப் பாதையில் பயணிக்க வைக்க……………

    Share
  • என்ன வைத்தோம்?

    -பாவலர் கருமலைத் தமிழாழன்

    முன்னோர்கள்   தூய்மையாக   வைத்தி   ருந்த
       மூச்சிழுக்கும்   காற்றினிலே   நஞ்சைச்   சேர்த்தோம்
    முன்நின்று   காற்றிலுள்ள   அசுத்தம்   நீக்கும்
       முதலுதவி   மரங்களினை   வெட்டிச்   சாய்த்தோம்   Tamizhazhan
    பொன்கதிரை   வடிகட்டி ஒளிய   னுப்பும்
       பொற்கவச   ஓசோனை   ஓட்டை   செய்தோம்
    என்னவைத்தோம்   சந்ததிக்கே   தன்ன லத்தால்
       எல்லாமும்   கலப்படத்தால் கெடுத்து   வைத்தோம்!

    ஆயிரமாம்   ஆண்டுகளாய்   சேர்த்து   வைத்த
       அடிநீரைக்   குழாய்வழியே   காலி   செய்தோம்
    பாய்மரம்போய்   கடல்நீரில்   எண்ணெய்   குண்டால்
       பரிதவிக்க   மீன்களினைச்   சாக   டித்தோம்
    தாய்மண்ணில்   உரங்களினைப்   போட்டுப்   போட்டுத்
       தரும்விளைச்சல்   எனஉறிஞ்சிச்   சக்கை   செய்தோம்
    சேய்களுக்கே   என்னவைத்தோம்   தன்ன   லத்தால்
       செழித்திருந்த   இயற்கையினைக்  கெடுத்த   வைத்தோம்!

    அரணாக   நமைக்காத்த   காட்டை   வெற்பை
       அறுத்துடைத்தே   மழைவளத்தை   மலடு   செய்தோம்
    வரமாகப்   பெற்றவயல்   தோப்பை   வீடாய்
       வடிவமைத்து   விளைச்சலுக்கு   முடிவு   செய்தோம்
    கரமாக   உதவிவந்த   ஆற்று   நீரில்
       கழிவுசேர்த்து   நோய்பெருக்கி   முடமாய்ச்   செய்தோம்
    சிரமிழந்த   உடலாகச்   சந்த திக்கே
       சீர்இயற்கை   தனைமாய்த்தே   அழிவை   வைத்தோம்!

     

    Share
  • இறைவா! இறைவா! இறைவா!

    இசைக்கவி ரமணன்

    images

     

     
    எங்கும் நீயே நிறைந்தாலும்
    எங்கோ இருப்பது போலிருப்பாய்
    எதிரில் ஒருமுறை வருவாயா?
    என்னுள் சிரிக்கும் இறைவா?
    என்னுயிர் ஆளும் தலைவா?

    நீயும் நானும் ஒன்றென்றால்
    யாரே யாரைத் தேடுவது
    நானும் நீயும் வேறென்றால்
    எங்கே உன்னைச் சேருவது?
    நாயேன் ஒன்றும் அறியவில்லை, இந்த
    நரகத்தின் காரணம் புரியவில்லை
    நீயாய்த் திரையை நீக்காமல்
    நெஞ்சினில் நிம்மதி வருவதில்லை

    கண்ணோ உன்னைக் காணாது
    மனமோ உன்னை மறவாது
    எண்ணம் உன்னைத் தீண்டாது, உன்னை
    எண்ணாதிருக்க முடியாது
    இறைவா! இறைவா! இறைவா!

    தவறுகளே என் தவமேடை
    தவிப்பே எந்தன் ஆராதனை
    வருவாய் வருவாய் என்றேதான்
    நம்பி நம்பி தினம் ஏங்குகிறேன்
    கண்ணீர்த் துளிகள் மலராகி
    கணந்தோறும் உன்னைப் பூசிக்கிறேன்\
    கருணைக் கடலே உன் முன்னே, ஒரு
    கவளம் ஏழை யாசிக்கிறேன்
    இறைவா! இறைவா! இறைவா!

    ஏதோ வந்ததைப் பாடுகிறேன்
    இமைகளை மெதுவாய் மூடுகிறேன்
    மடியில் ஓரிடம் தேடுகிறேன், நான்
    மரணமில்லாமல் வாடுகிறேன்
    இறைவா! இறைவா! இறைவா!

     
    25.03.2015 / புதன் / 09.

    Share
  • சுடர்மிகு அறிவு!

    -சரவணன்

    தனி ஒருவனுக்கு…
    வேண்டாம் பாரதி..
    ஜகமே உணவில்லாமல்தான்
    அழியப் போகிறது…

    அக்கினிக் குஞ்சொன்று…
    நானும் கண்டேன்…
    ஐ பேட் ஆங்கிலத்தில் நான்
    ஆங்ரி பேர்ட் என்றது…

    தேடிச் சோறு நிதந் தின்று….
    வாக்கு பலித்தது..
    சுற்றிலும் பீட்சா பாஸ்தாக்
    கடைகள்…

    சாதிகள் இல்லையடி…
    நீக்கிவிட்டுப் புத்தகத்தில்
    காயத்திரி மந்திரம்
    வைக்காலாமெனப் பரிந்துரைக்கப்படுமோ…?
    உப்பு சர்க்கரை
    அளவு குறையுமாமே…

    வல்லமை இழந்திட்டேன்…
    சொல்லடி சிவசக்தி
    சுடர்மிகு அறிவு… இன்னும்
    என்னுள் இருக்கிறதா…?

     

    Share
  • ஏக்கத்தோடு எதிர்பார்ப்பு

    -ஆர். எஸ். கலா

    உண்மையை  உரைத்து
    நன்மையைப் புரிந்து
    நெஞ்சை நிமிர்த்தி நின்றுவிடு!
    ஊக்கத்தைக்  கையில் எடுத்து
    உன் வெற்றியை அடைந்துவிடு!

    உன்னையும் உண்மையையும்
    உணராத நட்பைத் தட்டிவிடு!
    முயற்சியை முடிவாக்காமல்
    உலகத்தில் உலாவவிடு!

    சிறுக சிறுகச் சிந்தித்துச்
    செயல் பட்டுவிடு!
    மறக்க முடியாத சோகத்தையும்
    மாற்ற எண்ணி வென்றுவிடு!

    நல் அறிவுரைகளை
    ஏற்று விடு!
    தீய வழி தானாகவரும்
    தீன்டாமல் விலகிவிடு!

    கடமை கண்ணியம்
    மறவாத ஆட்சி புரிந்துவிடு!
    பலநாடு வியக்கும் வண்ணம்
    நாட்டின்  நலத்தையும் வீட்டின்
    வளத்தையும் வளர்த்துவிடு!

    நல்லவையை நாசம்
    பண்ணிவிடும் செயலுக்குத்
    தடை பிறப்பித்துவிடு!
    நல்ல பல திட்டங்களை
    அறிவித்து விடு!

    செல்வமும் புகழும் போதும்
    என்று நினைக்கும் அரசியலை
    மறந்து விடு!
    சென்ற இடமெல்லாம் சிறப்பான
    மனிதன் என்னும் புகழைப்
    பெற்று வென்றுவிடு!

    ஏழை எளியோரை மதித்து
    மனித நேயத்தை வளர்த்திடு!
    ஏற்றுமதி இறக்குமதி எனப்
    பல அபிவிருத்தி மூலம்
    ஏழை மக்களையும் சிரிப்போடு
    வாழவழி வகுத்திடு!

    உன் மக்கள் மனதில்
    மட்டும் இல்லை உலக
    மக்கள் மனதிலும்
    உன் நினைவை நிரந்தரமாகப்
    பதிய வைத்துவிடு!

     

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 49

    –சு. கோதண்டராமன்.

     

    வேதம் அபௌருஷேயமா?

    619px-Rigveda_MS2097

     

    வேதம் அபௌருஷேயம் (மனிதரால் இயற்றப்படாதது) என்பது ஒரு நம்பிக்கை. வேத மந்திரங்களின் பொருளை ஒரு முறையாவது படித்துப் பார்த்தவர்கள் அது மனிதரால்தான் இயற்றப்பட்டது என்பதை ஒப்புக் கொள்வார்கள். “ப்ரஹ்ம அகாரி”- “நான் இந்த பிரார்த்தனையை இயற்றியிருக்கிறேன்” என்ற தொடர் வேதத்தில் பல இடங்களில் வருகிறது. (உதாரணம் 4.6.11, 4.16.20, 21) எனவே வேதம் ரிஷிகளால் இயற்றப்பட்டதுதான்.

    ஆனால் வேதம் அபௌருஷேயம் என்பதை மூட நம்பிக்கை என்றும் சொல்ல முடியாது. வேதப் பாடல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம் என்று முன் சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். சில பாடல்கள் சாதாரணப் புலமை நிலையில் பாடப்பட்டவை. சில அருள் நிலையில் பாடப்பட்டவை. மேலும் சில பேரருள் நிலையில் பாடப்பட்டவை. சில, தன்னையே பரம்பொருளாக உணரும் அத்வைத நிலையில் பாடப்படவை.

    உதாரணமாக, ஆபோஹிஷ்டா மயோபுவ: என்ற மந்திரத்தைப் பார்ப்போம். 10.9.1 முதல் பாடலில், தண்ணீரே மகிழ்ச்சி தருகிறீர்கள் என்று கூறும்போது ரிஷி சாதாரணப் புலமை நிலையில் இருக்கிறார். தாய் போல என்னை நேசிக்கிறீர்கள். பாவத்தைப் போக்கி எனக்குக் குழந்தைப் பேற்றை அளிக்கும் உங்களிடம் நாங்கள் விரைந்து வருகிறோம். தெய்விகமான தண்ணீர் எங்களது வழிபாட்டுக்கும் குடிப்பதற்கும் இனியதாக இருக்கட்டும் எங்களைச் சுற்றி ஓடட்டும், நலம் தரட்டும். விலை மதிப்புள்ள பொருட்களின் ராணியே, மனிதரைக் கட்டுப்படுத்துபவர்களே, எங்களுக்கு மருந்துகள் தருக….. என்று இவ்வாறு பேசும்போது அவர் நீரைத் தெய்வமாகக் கருதுகிறார். இது அருள் நிலை.

    தண்ணீர் எப்படி மனிதர்களை நேசிக்கும், அது எப்படி மனிதரைக் கட்டுப்படுத்தும் என்று கேட்கும் பகுத்தறிவு வாதிகளால் இந்த அருள் நிலை வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முடியாது.

    அருட்செல்வம் மிகுந்த தண்ணீரே, எல்லாச் செல்வங்களும் உங்கள் கையில். நற்செயல்களும் அமரத்துவமும் கொண்டு தருபவர்கள் நீங்களே (10.30.12) என்று சொல்லும்போது அவர்கள் நீரை அமரத்துவம் அளிக்க வல்ல பரம்பொருளாகவே கருதுகிறார்கள்.

    இதற்கு மேற்பட்டதான நான்காவது நிலையில், காற்றும் புனலும் கடலுமே நான் என்று கூறிய பாரதி போலத் தன்னை எல்லாவற்றுடனும் ஐக்கியப்படுத்திக் கொள்கிறார் ரிஷி. நானே அக்னி, நானே ஹவிஸ் என்று கூறும் 3.26.7 போன்ற பாடல்களும் சில வேதத்தில் உண்டு.

    இத்தகைய அருள் நிலைகளில் தோன்றிய பாடல்களைத் தெய்வ அருளால் தோன்றிய பாடல்கள் என்று கூறுவது உபசார வழக்கு. நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகனின் வார்த்தை அன்றி நான் உரைக்கும் வார்த்தை அல்ல என்று வள்ளலார் கூறுவதை ஒப்பிட்டுப் பார்க்க.

    மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள் மனோன்மணி என் மாசக்தி வையத்தேவி என்று பாரதி கூறியதையும் நோக்குக.

    இத்தகைய அருட்கவிகள் கோடியில் ஒருவர் எப்பொழுதாவது தானே பிறப்பர். எனவே அவர்களது கவிதைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல விரும்பிய மக்களால் இவை மனப்பாடம் செய்யப்பட்டன. சிலர் எழுதியும் வைத்திருக்கலாம்.

    காலப்போக்கில் இவற்றில் பாடபேதங்கள் தோன்றின. காரணம் மனிதர்களின் இயல்பான மறதி தான். ஏதோ ஒரு எழுத்தோ, சொல்லோ மறந்துவிட்டால் அதை வேறு ஒன்றைக் கொண்டு நிரப்பி விடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பர் என்று தெரிகிறது. உதாரணமாக, கீழ்க் கண்டவற்றை ஒப்பிடுக.
    ஸோமானம் ஸ்வரணம் க்ருணுஹி ப்ரஹ்மணஸ்பதே கக்ஷீவந்தம் ய: ஔஷிஜ: ரிக் 1.18.1
    ஸோமானம் ஸ்வரணம் க்ருணுஹி ப்ரஹ்மணஸ்பதே கக்ஷீவந்தம் ய: ஔஷிஜம் தைத்திரீய ஸம்ஹிதை 1.5.6
    கடைசியில் விசர்க்கத்திற்குப் பதிலாக ‘ம்’ வருகிறது.

    கீழ்க் கண்டதையும் ஒப்பிடுக.
    உத்வயம் தமஸஸ்பரி ஜ்யோதி: பச்யந்த: உத்தரம் தேவம் தேவத்ரா ஸூர்யமகன்ம ஜ்யோதிருத்தமம் – ரிக் 1.50.10
    உத்வயம் தமஸஸ்பரி பச்யந்த: ஜ்யோதி: உத்தரம் தேவம் தேவத்ரா ஸூர்யமகன்ம ஜ்யோதிருத்தமம் – தை.ஸம் 4.1.7
    இதில் இரு வார்த்தைகள் முன் பின்னாக இடம் மாறியுள்ளன.

    இந்த மாற்றங்கள் வேண்டுமென்று செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. கவனக் குறைவால் ஏற்பட்டதாகத் தான் தெரிகிறது. இது போன்று நிறைய உள்ளன.

    தான் குருவிடமிருந்து கற்றுக் கொண்டதோடு கூட தன் சொந்தக் கவிதைகளையும் சேர்த்துத் தன் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் வழக்கமும் சிலருக்கு இருந்திருக்கும். நாளடைவில் இத்தகைய பாடபேதங்கள் அளவில் பெருகிய நிலையில் அவரவரும் தத்தம் பாடமே உண்மையான பாடம் என்று வாதிட்டிருப்பர். எதையும் தள்ள முடியாது. அந்த நிலையில் தான் பாடபேதங்களைப் பிரித்துத் தனிப் பெயரிட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ரிக் வேதத்தின் சுருங்கிய வடிவம் தான் என்ற போதிலும் பல பாட பேதங்கள் இருந்ததால் சாம வேதம் தனி வேதமாகப் பெயரிடப்பட்டது. வேள்விக்கான மந்திரங்களும் உரைநடைப் பகுதிகளும் கலந்த பாடபேதம் யஜுர்வேதமாகப் பெயரிடப்பட்டது. இதை ஒரு தனி மனிதர் செய்திருந்தால் அது எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்குமா என்பதும் நாடு முழுவதும் பரவி இருக்குமா என்பதும் சந்தேகமே. நாடு முழுவதும் உள்ள அறிஞர்கள் ஒன்று கூடி இதைச் செய்திருக்க வேண்டும். அந்தக் குழுவின் தலைவராக வியாசர் இருந்திருப்பார்.

    இனி மேலும் இத்தகைய பாடபேதங்கள் ஏற்படக் கூடாது என்ற எண்ணம் அந்த அறிஞர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அதற்காகத் தான் ஸ்வர முறையையும் க்ரமம், பதம், ஜடா, கனம் போன்ற பாட முறைகளையும் ஏற்படுத்தி வார்த்தைகள் இடம் மாறாதபடியும் உரு மாறாதபடியும் ஏற்பாடு செய்தனர். வேதத்தை எழுதிப் படிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் அப்பொழுது தான் ஏற்பட்டிருக்க வேண்டும். வேதம் ஈச்வரனின் மூச்சுக் காற்று என்ற நம்பிக்கையையும் அப்பொழுது அவர்கள் பரப்பி இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை தான் வேதங்களை உரு மாறாமல் இன்று வரை காப்பாற்றி வந்திருக்கிறது. வேதக் கல்வி சிரத்தையுடன் கற்பிக்கப்பட்டதற்கும் அதுவே காரணமாக அமைந்து. வேதக் கல்வி தந்த சிரத்தை காரணமாக, பாரத சமுதாயம் பல துறைகளில் முன்னேற்றம் கண்டது.

    இந்தக் கட்டுப்பாடுகள் ஏற்படுவதற்கு முன்னே வேதத்தில் ஏற்பட்ட இடைச் செருகல்களை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் விட்டிருக்க வேண்டும். அதனால் தான் வேதத்தின் சில பகுதிகள் மையக் கருத்துக்கு மாறான வகையில் செல்கின்றன. பிற்காலத்தில் வேத இலக்கியம், தர்ம சாஸ்திரம், புராணம் என்ற பெயரில் எழுந்த இலக்கியங்களில் சில இந்த மையக் கருத்துக்கு மாறானதாகச் செல்கின்றன. பாரதி அவற்றைத் தான் பொய் வேதங்கள் என்கிறார்.

    வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே
    கோத்தபொய் வேதங்களும் –
    அவள்புனைந் தாள்; …… பாரதி

     

     

     

     

     

    படம் உதவி – விக்கிபீடியா:  http://commons.wikimedia.org/wiki/File:Rigveda_MS2097.jpg

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(145)

    —சக்தி சக்திதாசன்.

     

    அன்பினியவர்களே!
    இனிய வணக்கங்களுடன் இவ்வார மடலில் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன்.

    சில வருடங்களுக்கு முன்னால் நடந்து முடிந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்வுகளையே மறந்து ஓடிவிடும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    வாழ்க்கையின் சிக்கல்கள் பல கோணத்தில் நம்மைச் சூழ்ந்து கொண்டு இருக்கின்றன. அடுத்தவேளை உணவுக்காக அல்லல் படும் சமூகங்களை இப்போதும் அகிலத்தில் காண்கிறோம்.

    ஆனால் ஒருநாடு தன் சுயத்தை இழந்து விடாதிருப்பது எப்படி? அது தன் அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வது எப்படி?

    இக்கேள்விகளுக்கான விடை இங்கிலாந்தில் நடைபெறும் பல நிகழ்வுகளில் கண்கூடு. தமது கலாச்சார அடையாளங்களைப் பேணுவதை இந்நாட்டு மக்கள் மிகவும் முக்கியமானதொன்றாகக் கருதுகிறார்கள்.

    மக்களின் பெரும்பான்மையான அபிலாஷைகளை உள்வாங்கிக் கொள்ளும் அரசாங்கங்களும் இத்தகைய கலாச்சார அடையாளங்களை, காலாச்சார விழுமியங்களைப் பேணுவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் தொகையை ஒதுக்குகிறார்கள்.

    சரித்திரத்தை ஒதுக்கி விட்டு மனிதர்களால் வாழ்ந்து முடிந்து விட முடியாது அச்சரித்திரம் ஏதாவது ஒரு சந்தியில் அவர்களின் முன்னே வந்து அவர்களிடம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும்.

    சரி எனது இந்த மடலின் பின்னனியைப் பார்ப்போமா?

    richardIII-v4வட இங்கிலாந்தில் உள்ள “லெஸ்டர் (Leicester)” எனும் இடத்தில் ஒரு கார் பார்க் அமைப்பதற்காக நிலத்தைத் தோண்டினர்கள்.

    அப்போது அங்கே ஒரு மனித எலும்புக்கூடு கண்டு பிடிக்கப்பட்டது. என்னே ஆச்சரியம் அது இங்கிலாந்தை ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்னர் அரசாண்ட மன்னன் ரிச்சார்ட் 3 இனுடைய எலும்புக்கூடு என்று அறியப்பட்டது.

    தொடர்ந்து அவ்வெலும்புக்கூட்டை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் எனும் கோஷம் எழுந்தது.

    எங்கே அடக்கம் பண்ணுவது என்பதை தீர்மானிக்கும் இழுபறி ஐகோர்ட் வரை சென்று லெஸ்டர் சர்ச்சில் அடக்கம் பண்ணுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

    சரி யார் இந்த ரிச்சார்ட் 3 ?

    Richard the thirdரிச்சார்ட் இங்கிலாந்தின் வட பகுதியில் உள்ள ” போதரிங்கே கோட்டையில் ” 1452ம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் திகதி பிறந்தார். இந்த இடம் லெஸ்டரிலிருந்து சுமார் 30 மைல் தூரத்திலுள்ளது.

    ரிச்சார்ட்டும் அவரது அண்ணன் எட்வேர்டும் , எட்வேர்ட் 3 எனும் மாபெரும் மன்னனின் கொள்ளுப் பேரன்களாவார்கள்.

    இராஜ வரிசையின் பிரகாரம் ரிச்சார்ட்டின் அண்ணன் எட்வேர்ட் மன்னனாக 1461ம் ஆண்டிலிருந்து 1483 ம் ஆண்டு மரணமடையும் வரையில் அரசாண்டார்.

    அவரின் மரணத்தின் பின்னர் எட்வேர்ட்டின் 12 வயது மகன் தனது சித்தப்பா ரிச்சார்ட்டின் பாதுகாப்போடு முசடிசூட்டி அரசாண்டான்.

    அவனும், அவனது சகோதரனும் லண்டன் டவர் என்றழைக்கப்படும் கோட்டைக்கு இடம் பெயர்ந்தார்கள். தற்போது அது அந்நாளைய அரசர்கள் தமது அரசியல் கைதிகளை சிறைவைக்கும் இடமாகத்தான் அறியப்பட்டாலும் அப்போது அது ஒரு ராஜமாளிகையாகவே இருந்தது.

    அப்பன்னிரண்டு வயது மன்னனின் பெற்றோரின் திருமணம் செல்லுபடியாகாது என்று தீர்ப்பளிக்கப்பட்டதும், இராஜ வரிசையின் படி மறைந்த எட்வேர்ட் மன்னனின் தம்பியாகிய ரிச்சார்ட் முடிசூடிக் கொண்டார்.

    அதைத் தொடர்ந்து அப்பன்னிரண்டு வயதுப் பையனினதும் அவனது சகோதரினதும் நடமாட்டமே அற்றுப் போனது. அப்போதைய கூற்றுக்களின்படி எங்கே தனது இராஜபதவிக்கு போட்டியாக வந்து விடுவார்களோ என்று மன்னன் ரிச்சார்ட் அவர்களைக் கொலை செய்து விட்டான் எனும் வதந்தியே நிலவுகிறது.

    1483ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு புரட்சியை அடக்கிய ரிச்சார்ட் இரண்டு வருடங்களின் பின்னர் “போஸ்வேர்த்” எனும் இடத்திற்கு வந்தான்.

    அங்கே அவனது கொள்ளுத் தாத்தாவழியில் இராஜ உரிமை கோரும் மற்றொரு “டியுடோர்” மன்னனுடன் போரிட்டு 1485ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் திகதி மரணமடைந்தான்.

    அப்போது அவ்விடத்திலிருந்து அவனது உடல் லெஸ்டருக்கு கொண்டுவரப்பட்டு அங்கே புதைக்கப்பட்டது.

    அந்த உடலின் எலும்புக்கூடு தான் சுமார் 500 வருடங்களின் பின்னர் இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்தை ஆண்ட மன்னர்களில் ரிச்சார்ட் என்பவனுக்கு ஒரு கொடூரமான மன்னன் எனும் பெயர் உண்டு ஏனெனில் தனது அரசாட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பாரபட்சம் இன்றிப் பல கொலைகளைப் புரிந்துள்ளான்.

    இப்போது அம்மன்னனினது எலும்புக்கூட்டை எடுத்து ஒரு மன்னனுக்குரிய சகல மரியாதைகளுடனும் லெஸ்டர் சார்ச்சில் மார்ச் 26ம் திகதி அடக்கம் செய்துள்ளார்கள்.

    நான்கு நாட்கள் காட்சிக்காக வைக்கப்பட்ட இம்மன்னனினது எலும்புக்கூடு அடங்கிய பெட்டியைப் பார்த்து தமது மரியாதையைச் செலுத்துவதற்காக பல்லாயிரக் கணக்கான மக்கள் வரிசையில் மணிக்கணக்காக நின்றார்கள்.

    இவரை அடக்கம் பண்ணுவதற்கான பெட்டியை கனடாவைச் சேர்ந்த இம்மன்னனின் பரம்பரையில் வந்த ஒரு தச்சுத் தொழிலை மேற்கொள்பவர் உருவாக்கியது குறிப்பிடத் தக்கது.

    இம்மன்னனின் உடலுக்கு மரியாதை செலுத்தும் முகமாக தற்போதைய இங்கிலாந்து ராணியின் கடைசி மைந்தன் அங்கு சென்றிருந்தார்.

    கொடூரமான மன்னன் என்று பெயரெடுத்திருந்தவருக்கு ஏன் இத்தனை கெளரவம் எனும் வாதம் ஒருபக்கத்தில் இருந்து ஒலிக்க, அவனது கொடூரமான செயல்கள் அக்காலகட்டத்தில் மற்றைய மன்னர்களினாலும் கடைப்பிடிக்கப்பட்டதே ஆகவே அவருக்குரிய கெள்ரவத்தைக் கொடுப்பது தவறாகது எனும் வாதம் மறுபக்கத்தில் ஒலிக்கிறது.

    என்ன இருந்தாலும் தற்போதைய எலிசபெத் மகராணியாரின் குடும்பம் பங்கு பற்றியிருக்க வேண்டுமா? எனும் கேள்வியும் ஆங்காங்கே ஒலிக்கிறது.

    ஒன்று மட்டும் உண்மை, காலங்கள் எத்தனை கசந்தாலும் தமது நாட்டின் சரித்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்நாட்டு மக்களினது பண்பு பாராட்டப் படவேண்டிய ஒன்றே!

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • மத நம்பிக்கை தந்த சோகம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நியூயார்க் நகரிலுள்ள ப்ருக்ளின் என்னும் பகுதியில் வசித்துவந்த ஒரு யூதக் குடும்பத்தின் ஏழு குழந்தைகள் ஒரே நேரத்தில் தீக்கிரையாகி இறந்திருக்கிறார்கள். யூதர்களுக்கு ஒவ்வொரு வார சனிக்கிழமையும் ஓய்வு நாள். வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனத்திலிருந்து சனிக்கிழமை சூரிய அஸ்தமனம் வரை யூதர்கள் முழு ஓய்வெடுக்க வேண்டும் என்பது யூத மதத்தின் விதி. அன்று எந்த விதமான வேலையும் செய்யக் கூடாது. மின்சாரத்தில் இயங்கும் எந்தக் கருவியையும் உபயோகப்படுத்தக் கூடாது. அமெரிக்காவில் உள்ள அடுக்குமாடிக் கட்டடங்களில் வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனத்திலிருந்து சனிக்கிழமை சூரிய அஸ்தமனம் வரை (24 மணி நேரம்) லிப்ட் கீழ் தளத்திற்கும் மேல் தளத்திற்கும் இடையே ஓடிக்கொண்டே இருக்குமாம். அங்கு வசிக்கும் யூதர்கள் லிப்டில் உள்ள பட்டனைத் தொட்டு அமுக்கி அதை இயக்கக் கூடாதாகையால் இந்த ஏற்பாடு. அவர்களுடைய தளத்திற்கு வரும்போது அதில் ஏறிக்கொள்வார்கள்; போக வேண்டிய தளத்தில் இறங்கிக்கொள்வார்கள். அதை யூதர்கள் அன்று இயக்குவதில்லை. அந்த லிப்ட் அந்த இருபத்து நாலு மணி நேரமும் மேலும் கீழும் போய்க்கொண்டிருப்பதோடு ஒவ்வொரு தளத்திலும் சிறிது நேரம் நின்று கதவைத் திறந்துவிட்டு, மறுபடி மூடிக்கொண்டு மறுபடி இயங்க ஆரம்பிக்கும்.

    புராதன நம்பிக்கைகளைக் கடைப்பிடிக்கிற ஒவ்வொரு யூதரும் அன்று தொலைபேசியில் யாரோடும் பேசுவதில்லை. எந்தவித தீயையும் மூட்டுவதில்லை. இந்த மாதிரியான கட்டுப்பாடுகளோடு ஒவ்வொரு சனிக்கிழமையும் வாழ்ந்துவந்த ஒரு சநாதன யூதக் குடும்பம்தான் மேலே சொன்ன ஏழு குழந்தைகளை இழந்து தவிக்கும் குடும்பம். சனிக்கிழமை முழுவதும் மின் அடுப்பை மூட்டிச் (அதாவது அதிலுள்ள பட்டன்களை இயக்கி) சமைக்க முடியாததால் நிறைய உணவு சமைத்து அதை எப்போதும் சூடாக வைத்திருக்கும் ஹாட் பிளேட் (hot plate) என்னும் அடுப்பில் வைத்துவிட்டு அன்று இரவு தாய் உறங்கச் சென்றிருக்கிறார். இந்த சாதனத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டு அதில் தீப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. தாயும் அவருடைய எட்டுக் குழந்தைகளும் மேல் மாடி அறையில் தூங்கிகொண்டிருந்திருக்கிறார்கள். தந்தை மட்டும் மத சம்பந்த வேலை நிமித்தமாக வெளியில் சென்றிருக்கிறார்.

    பற்றி எரிந்த தீ தூங்கிக்கொண்டிருந்தவர்களில் யாரும் எழுந்திருக்கும் முன் அவர்கள் தூங்கிக்கொண்டிருந்த அறைக்குத் தாவியிருக்கிறது. தாயும் இரண்டாவது மகளும் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு கீழே குதித்திருக்கிறார்கள். மற்ற ஏழு குழந்தைகளும் விழித்தெழுந்து உதவி கேட்டுக் கதறிய சில நிமிடங்களிலேயே தீ அவர்கள் அனைவரையும் காவுகொண்டுவிட்டது. ஜன்னல் வழியே வெளியே குதித்த தாயும் மகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். செல்போனை அன்று இயக்க மாட்டார் என்பதால் தனது ஏழு குழந்தைகளை இழந்த தந்தைக்கு பல மணி நேரம் கழிந்த பின்னரே செய்தி கிடைத்திருக்கிறது. அப்போது அவர் ஒரு யூதக்கோவிலில் இருந்திருக்கிறார். காவல் துறையினர் அவருடைய இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அவரிடம் செய்தி சொல்ல அத்தனை நேரம் பிடித்திருக்கிறது. இறந்துபோன ஏழு குழந்தைகளில் நான்கு பையன்கள், மூன்று பெண்கள். இந்த எட்டுக் குழந்தைகளும் 16-லிருந்து 5-வரை வயதுடையவர்கள்.

    இந்தத் தாய் நியூயார்க்கில் பிறந்து வளர்ந்தவர். திருமணத்திற்குப் பின் இஸ்ரேலில் குடியேறியிருக்கிறார். அங்கு அந்தத் தம்பதிகளுக்கு எட்டுக் குழந்தைகள் பிறந்த பிறகு ஒட்டு மொத்தக் குடும்பமும் பதினெட்டு மாதங்களுக்கு முன் அமெரிக்காவுக்குக் குடியேறியிருக்கிறது. (இஸ்ரேலிய யூதர்கள் அனைவருக்கும் எளிதாக அமெரிக்காவுக்குக் குடிபெயர அமெரிக்கா விசா கொடுக்கிறது. அமெரிக்காவில் மட்டுமின்றி உலகின் எந்தக் கோடியில் பிறந்த யூதருக்கும் இஸ்ரேலில் குடியேற எளிதாக அனுமதி கிடைக்கும்.) தந்தை இஸ்ரேலில் என்ன செய்தார், அமெரிக்காவில் என்ன செய்யத் திட்டம் வைத்திருந்தார் என்பது பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆனால் புதிய நம்பிக்கைகளோடு தன் குழந்தைகள் இருந்ததாகத் தந்தை குழந்தைகளுக்கான இரங்கல் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

    இறந்த ஏழு குழந்தைகளின் உடல்களையும் புனித பூமியான ஜெருசலேமுக்குக் கொண்டுபோய் அங்கு நல்லடக்கம் செய்திருக்கிறார்கள். மதத்தின் பாரம்பரியக் கொள்கைகளில் நம்பிக்கையுடைய யூதர்கள் தாங்கள் இறந்த பிறகு தங்களுடைய உடல்கள் ஜெருசலேமில் புதைக்கப்பட்டால்தான் தங்களுடைய கடவுள் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பூமிக்கு வரும்போது தங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வார் என்று நம்புகிறார்கள். இப்படித்தான் இந்தத் தந்தையும் நம்புவதால் அவருடைய குழந்தைகளின் உடல்கள் ஜெருசலேமுக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த ஈமச் சடங்குகளின் போது பேசிய தந்தை ‘இறைவன் கொடுத்ததை அவரே எடுத்துக்கொண்டுவிட்டார்’ என்று பேசியிருக்கிறார். இன்னொரு மதத் தலைவர் ‘இது கடவுளின் தீ’ என்று கூறியிருக்கிறார்.

    யூத மதத்தில் மட்டுமல்ல, எல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட நிறைய மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. ஒரு மூட நம்பிக்கையே இந்தக் குடும்பத்தின் மிகப் பெரிய சோகத்திற்கு ஆதாரமாக அமைந்துவிட்டதே என்பதை நினைக்கும்போது இம்மாதிரியான பாரம்பரிய மத நம்பிக்கைகள் உடையவர்கள் எப்போதுமே மாறப் போவதில்லையா என்ற ஆதங்கம்தான் உண்டாகிறது. மூவாயிரம், நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாங்களும் தங்கள் மதமும் தோன்றியதாகக் கூறிக்கொள்ளும் யூதர்கள் தங்கள் மூதாதையர் என்ன செய்தார்களோ அதை அப்படியே பின்பற்ற வேண்டுமா? ஒவ்வொரு வார சனியன்றும் ஓய்வெடுக்க வேண்டும் என்பதுதான் இந்த விதியின் அடிப்படை. பூமியை ஆறு நாட்களில் படைத்த இறைவன் சனிக்கிழமை ஓய்வெடுத்தாராம். அதைப்போல் யூதர்களும் அன்று முழு ஓய்வு எடுக்க வேண்டுமாம். அதை லிப்டை இயக்காமலும் மின் அடுப்பை உபயோகிக்காமலும் இருப்பதன் மூலம்தான் கடைப்பிடிக்க வேண்டுமா? அவர்கள் மூதாதையர் காலத்திற்கும் இவர்கள் காலத்திற்கும் எவ்வளவோ வேறுபாடுகள் இருக்கின்றன. காலத்திற்குத் தகுந்தவாறு மாறிக்கொண்டு வேறு வகையில் சனிக்கிழமை விரதத்தை அனுசரிக்கலாமே.

    Share
  • பெண்ணே கேளாயோ!

    -திருக்குவளை மீ.லதா

    உடைக்கப்பட்டன
    பெண்கையில்  விலங்கென்று
    பெருமை கொள்பவனே உடைத்தும் எதற்கு
    உன்னிடம் சாவி?
    உனக்குப் பின்னால்
    பெண் என்பதாலோ?
    உன்னைவிட எதில் குறைந்தவள்?
    அன்பும் பண்பும் அங்கத்தில் அவள் பூட்டியுள்ள
    நகையல்லவோ!
    விட்டுகொடுத்து வாழ்பவள்-
    ஆனால் விட்டுதரமாட்டாள்
    அவள் உரிமைகளை!
    பூவானவள்
    வாடும்வரை வாழ வைக்கிறாள் தன்னை நம்பினோர் கைவிடப்படாரென!
    புதையும் வரைப் புரட்சிப்பெண்ணாக இரு பூவையே!
    மடிந்து விடாதே மண்ணுக்குள் உரமாக!

     

    Share
  • ராமன் எத்தனை ராமனடி!

    -ரா.பார்த்தசாரதி

    ராமன் பிறந்ததும்  நவமியிலே
    கிருஷ்ணன் பிறந்ததும் அஷ்டமியிலே       Rama
    இரண்டும் கடவுளின் அவதாரங்களே
    இராமாயணம், மகாபாரதத்தின் நடுநிலை  நாயகர்களே!

    ராமாயணயத்தின் காவியத் தலைவன் ராமனே
    பிறன்மனை நோக்குபவனைத் தண்டித்தவனும் ராமனே
    நட்புக்கு இலக்கணமாய்  இருந்தவனும்  ராமனே
    ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்தவனும் ராமனே!

    ராம நாமமே  நலம் தரும் நாமமே
    அனுதினம் சொன்னாலே நன்மை அடைவதும் திண்ணமே!
    யாவருக்கும்  நன்மை அளிக்கும்  நாமமே
    ஈசன் வாயுரைத்த சிறப்புமிக்க நாமமே!

    பங்குனி உத்திரத்து  வரும்  ராம நவமியே
    பானகமும், பருப்பும், மோரும் நிவேதனமே
    ராமன் எத்தனை  ராமனாய்  இருந்தாலும்
    அவரது  கல்யாணகுணங்கள் சிறப்புடையதே!

     

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    –ஆகிரா.

    அறிமுகம்:
    “வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்?
    மாபெரும் வீரர் மானம் காத்தோர்
    சரித்திரம் தனிலே நிற்கின்றார்.”

    என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடலைப் பாடிக்கொண்டே அக்கால இளவரசு குதிரை வண்டியில் நண்பன் குலதெய்வம் ராஜகோபாலுடன் சவாரி செய்யும் “மன்னாதி மன்ன”னாக பவனி வந்த மக்கள் திலகம் அவர்களது நாட்டியத் திறமை அதே திரைப்படத்தில் நாட்டியப் பேரொளி பத்மினியுடன் அவர் போட்டி நடனம் புரிந்து வெல்வதாகப் படமெடுக்கப் பட்ட காட்சிகளில் தெளிவாயிற்று. நாட்டியத்தில் மட்டுமின்றி இசையிலும் அவர் திறமை மிக்கவர் என்பது அதே திரைப்படத்தில் அவர் பத்மினி ஆடும் நடனத்துக்குப் பத்துக்கும் மேற்பட்ட தாள வாத்தியக் கருவிகளைக் கொண்டு தாளம் போடுவதாக அமைந்த, டி.எம். சௌந்தரராஜன், எம்.எல். வசந்தகுமாரி குரல்களில் ஒலிக்கும் “ஆடாத மனமும் உண்டோ?” எனும் பாடல் காட்சியில் தெளிவானது. அதே திரைப் படத்திலும் அனேகமாக அவர் நடித்த அனைத்துத் திரைப் படங்களிலும் அவர் பங்கு பெற்ற சண்டைக் காட்சிகளைக் கண்டு பாராட்டாத ரசிகர் யாரும் இல்லை என்பது பிரசித்தம்.

    பண்டைய பாரத மன்னர்களைப் போலவே யானையேற்றம், குதிரை சவாரி, வாட்போர், மற்போர், கம்பு சுழற்றுதல் மற்றும் பல்வேறு சாகசக் கலைகளில் தலைசிறந்து விளங்கினார் எம்.ஜி.ஆர். அவரது திரைப்படம் வெளியாகிறதென்றால் அத்திரையரங்குகளில் கூட்டம் வரலாறு காணாத அளவுக்குக் காணப்படும். 1964-ஆம் ஆண்டில் வெளிவந்த அவரது “எங்க வீட்டுப் பிள்ளை” திரைப் படத்தைத் திரையிட்ட கிராமப்புற ஓலைக் கொட்டகைத் திரையரங்குகளில் டிக்கட் கவுண்டர்களின் முன்னால் போடப்பட்ட தடுப்புகள் தவிடுபொடியாயின. அதுவரையில் வேறு எந்தத் திரைப்படத்திற்கும் அப்படிப்பட்ட கூட்டத்தைக் கண்டதில்லை, அதன் பிறகும் கண்டதில்லை. எம்.ஜி.ஆர். என்பது ஒரு தாரக மந்திரமாகவே விளங்கிற்று. அவர் பெயரைக் கேட்டால் “மயங்காத மனம் யாவும் மயங்கும்” எனக் “காஞ்சித் தலைவன்” திரைப்படத்தில் பானுமதி பாடும் பாடல் போலவே அனைவரது மனங்களும் மயங்கும். அவரது திரைப்படங்களைக் கண்டு மகிழாத மக்கள் மிகவும் குறைவே.

    மக்களின் மனங்களில் மாறா இடம்:
    தனது குணச்சித்திர நடிப்பினாலும் பல்வேறு வகையான பாத்திரங்களை ஏற்று, அப்பாத்திரங்களாகவே தான் மாறி ரசிகர்களைத் தன்பால் ஈர்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப் படங்களைக் காட்டிலும் எம்.ஜி.ஆர். அவர்களது திரைப் படங்கள் அதிகப் பொழுது போக்கு அம்சங்களுடன் காண வருவோர் மனங்களைக் குளிர்விக்கும் தன்மை கொண்டவையாய் இருந்ததுடன் வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டிய சீரிய அறிவுரைகள் நிறைந்திருந்தமையே எம்.ஜி.ஆர். மக்கள் திலகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்ததன் அடிப்படை ரகசியமாகும்.

    “கொடுக்குற காலம் நெருங்குவதால்
    இனி எடுக்குற அவசியம் இருக்காது
    இருக்குறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
    பதுக்குற வேலையும் இருக்காது
    ஒதுக்குற வேலையும் இருக்காது
    உழைக்குற நோக்கம் உறுதியாயிட்டாக்
    கெடுக்குற நோக்கம் வளராது
    மனம் கீழும் மேலும் புரளாது.”

    எனக் கவிஞர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் எழுதிய,
    “திருடாதே பாப்பா திருடாதே,
    வறுமை நிலைக்கு பயந்து விடாதே,
    திறமை இருக்கு மறந்து விடாதே”
    எனும் “திருடாதே” படப் பாடலைக் கேட்டுத் திருந்தியவர்கள் ஏராளம்.

    திரைப்படங்களில் நடித்ததுடன் நில்லாது மக்கள் திலகம் சமூக சேவையிலும் அதிக ஈடுபாடு கொண்டு பல்வேறு காரணங்களால் அவதியுற்ற மக்களின் துயர் நீங்க அரும்பாடு பட்டார். கை ரிக்ஷாக்கள் மற்றும் சைக்கிள் ரிக்ஷாக்கள் ஓட்டிப் பிழைப்போர், மீனவர்கள், ஏழைத் தொழிலாளிகள், விவசாயிகள் முதலானோர் வாழும் வாழ்க்கையினை விளக்கும் பல திரைப்படங்களைத் தந்ததோடு அவர்களது குறைகள் களைய நிஜ வாழ்வில் பெரும் பொருளுதவியும், வேறு பலவித உதவிகளையும் அவர் செய்தார்.

    “கடல்நீர் நடுவே பயணம் போனால்
    குடிநீர் தருபவர் யாரோ?
    தனியாய் வருவோர் துணிவைத் தவிர
    துணையாய் வருபவர் யாரோ?
    ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
    ஒவ்வொரு நாளும் துயரம்;
    ஒரு ஜாண் வயிறை வளர்ப்பவர்
    உயிரை ஊரார் நினைப்பது சுலபம்”
    எனும் உயிர்த்துடிப்பு மிக்க வரிகளுடன் கவிஞர் வாலி எழுதிய

    “தரை மேல் பிறக்க வைத்தாய்
    எங்களைத் தண்ணீரில் திளைக்க வைத்தாய்,
    கரைமேல் இருக்க வைத்தாய்
    பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தாய்”
    எனும் மீனவர்கள் படும் துயரத்தை விளக்கும் பாடலைப் “படகோட்டி” திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கக்கண்டு கண்ணீர் உகுக்காதவர் வெகு சிலரே.

    “என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
    ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?
    ஒழுங்காய்ப் பாடுபடு வயக்காட்டில்,
    உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்”
    எனும் வாலி பாடலை டி.எம்.எஸ். குரலில் பாடி கே.ஆர். விஜயாவுடன் அவர் நடித்த “விவசாயி” படம் விவசாயத்தின் பெருமையைப் பறைசாற்றிற்று. பேருந்து நடத்துனராகப் பணி செய்கையில் தன் தாய் வழியில் நிற்கக் கண்டும் அதிகம் பேரை ஏற்றக்கூடாது எனும் சட்டத்தை மதித்துத் தாய்க்கும் பேருந்தில் இடமளிக்காமல் நடத்தும் காட்சியும், பின் அதே பேருந்துக் கம்பெனியில் அதிகாரி பதவி பெற்று அதன் பின் முதலாளியின் மகள் கே.ஆர். விஜயாவின் காதலை ஏற்க மறுத்ததால் வேலையிழந்து கைவண்டி இழுத்துக் கொண்டு அவர் பாடுவதாக, “தொழிலாளி” படத்தில் அமைந்த
    “ஆண்டவன் உலகத்தின் முதலாளி,
    அவனுக்கு நானொரு தொழிலாளி,
    அன்னை உலகின் மடியின் மேலே
    அனைவரும் எனது கூட்டாளி”
    என டி.எம்.எஸ். குரலில் அமைந்த பாடல் தொழிலாளியின் பெருமையை இனிமையான இசையுடன் விளக்குவதாகும்.

    சென்னையை அடுத்த பரங்கிமலை எம்.ஜி.ஆர். அவர்கள் பல்லாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராய் விளங்கிய தொகுதியாகும். அங்கே எம்.ஜி.ஆர். தோட்டம் இன்னும் சிறப்புடன் விளங்குகிறது. அங்கே காது கேளாத குழந்தைகள் பலர் இலவசமாய்க் கல்வி பெற ஒரு அருமையான பள்ளிக் கூடம் எம்.ஜி.ஆர். அருளால் துவங்கப் பட்டு இன்றும் சீரும் சிறப்புமாய் நடந்து வருகிறது.

    எல்லா அரசுப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ மாணவியருக்கு தினந்தோறும் மதிய உணவு வழங்கும் நோக்கில் பெருந்தலைவர் காமராஜர் துவக்கி வைத்துத் திறம்பட நடத்தி வந்த மதிய உணவுத் திட்டத்துடன் பள்ளிகளில் மட்டுமின்றி வேறு பல மையங்களிலும் ஏழைக் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கவும், அம்மையங்களில் அவர்களுக்குப் பாடங்கள் சொல்லித் தரவும் ஏற்ற வகையில் சத்துணவுத் திட்டம் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். தான் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கையில்.

    எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்:
    அகத்திய முனிவர் காவேரி நதியையே தன் சிறு கமண்டலத்தில் அடைத்தாரம். அது போன்றே எம்.ஜி.ஆர். குறித்த கட்டுரையை 1500 வார்த்தைகளுக்குள் அடக்குவதும் ஆகும். ஏனெனில், அவரது தனிமனித சிறப்பு குறித்தும் அவரது படங்கள் குறித்தும் எழுதத் துவங்கினால் மகாபாரதத்தையும் விட அதிகமான பக்கங்கள் நிறையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எனினும் என் மனதில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய விஷயங்களை மட்டும் முன்வைக்கிறேன்.

    வி.என். ஜானகி, பானுமதி, சரோஜா தேவி, சாவித்திரி, மாலினி, கே.ஆர். விஜயா, ரத்னா, ஜெயலலிதா, மஞ்சுளா உட்படப் பல கதாநாயகிகளுடனும் சேர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் அன்றும் இன்றும் என்றும் பார்த்து இன்புறத் தக்க இனிய காவியங்களாகும். திரைப்படங்களில் கண்கவரும் பாடல் காட்சிகளும், செட்டிங்குகளும், சந்திரபாபு, எம்.ஆர். ராதா, டி.எஸ். பாலையா, நாகேஷ், மனோரமா, குமாரி சச்சு, ஐசரி வேலன் உட்படப் பல நகைச்சுவை நடிகர்கள் இடம்பெற்ற இனிய நகைச்சுவைக் காட்சிகளும் குறைவின்றி நிறைந்திருந்தன. கவிஞர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம், மருதகாசி, புலமைப் பித்தன், தஞ்சை ராமையா தாஸ், வாலி உட்படப் பல கவிஞர்கள் இயற்றிய அரிய பொருட்செறிவு மிக்க எம்.ஜி.ஆர். படப் பாடல்கள் திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் உட்படப் பல திறமைமிக்க இசையமைப்பாளர்களது இசையில் என்றும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கும் தன்மையவை. ஏ.எம். ராஜா, பி.பி. ஸ்ரீனிவாஸ், டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கே.ஜே. ஜேசுதாஸ் உட்படப் பல பிரபலப் பாடகர்கள் என்.ஜி.ஆருக்குக் குரல் கொடுத்துப் பாடியுள்ளனர்.

    எம்.ஜி.ஆர். படங்களில் பி.எஸ். வீரப்பா, ஈ.ஆர். சகாதேவன், டி.எஸ். பாலையா, சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர், எம்.ஆர். ராதா, என்.என். நம்பியார், எஸ்.ஏ. அசோகன், ஆர்.எஸ். மனோகர் முதலானோர் முக்கிய வில்லன் பாத்திரங்களிலும் பிற குணச்சித்திரப் பாத்திரங்களிலும் தவறாமல் பங்கு பெற்றனர். நடிப்புத் திறமையில் புகழ்பெற்று விளங்கிய எந்த நடிகரையும் எம்.ஜி.ஆர். தன் படத்தில் பங்கேற்க வைப்பதில் மிக முனைப்புடன் இருந்தார். சிவகுமார், டி.கே. பகவதி, எஸ்.வி, சஹஸ்ரநாமம், எம்.வி. ராஜம்மா, பண்டரி பாய் முதலானோர் அவரது பல படங்களில் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். சின்னப்பா தேவர் எம்.ஜி,ஆர். அவர்ககளை வைத்துப் பல திரைப்படங்கள் தயாரித்துள்ளார்.

    மாறுவேட மாமன்னன்:
    எம்.ஜி.ஆர். மாறுவேடம் புனைந்து நடிப்பதில் தனித்திறமை வாய்ந்தவர். “குலேபகாவலி” திரைப்படத்தில் கிழவர் வேடம் பூண்டு டி.ஆர். ராஜகுமாரியும் தங்கவேலுவும் சேர்ந்து நடத்தும் ஏமாற்று பகடை விளையாட்டை வெளிச்சமாக்கும் காட்சிகளும், “பாக்தாத் திருடன்” படத்தில் அருவருப்பான கிழவர் வேடம் பூண்டு அடிமையாக விற்கப்படும் கதாநாயகி வைஜயந்திமாலாவை விலை கொடுத்து வாங்கி அவள் இரவில் திருட்டுத் தனமாகத் தன்னிடமிருந்து தப்ப முயல்கையில் பிடித்து, “யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பாக்குறே? எங்கே ஓடுறே? சொல்லு” எனும் பாடலைப் பாடும் காட்சிகளும், “மஹாதேவி” திரைப்படத்தில் குருடனாகத் தாயத்து விற்றுக்கொண்டே, “தாயத்து அம்மா தாயத்து” என்று பாடிச் சென்று மக்களூக்குத் தாயத்துகள் மூலம் ரகசிய செய்தி சொல்லும் காட்சிகளும், “படகோட்டி” படத்தில் வளையல் காரராக வேடம் பூண்டு எதிரிகளால் சிறை வைக்கப்பட்டிருக்கும் நாயகி சரோஜா தேவியை சந்தித்து, “கல்யாணப் பொண்ணு, கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்” என்று பாடி ஆடி தைரியமூட்டும் காட்சிகளும் “குமரிக்கோட்டம்” திரைப்படத்தில் மொட்டைத் தலையுடன் நெற்றி நிறையத் திருநீற்றுடன் அவர் செய்யும் கதாகாலக்ஷேபமும், “இதயவீணை” திரைப்படத்தில் சாமியார் வேடம் பூண்டு தன் சகோதரியின் திருமணம் நிகழும் மண்டபத்தில் வாயிலில் நின்று, “திருநிறைச் செல்வி, மங்கையர்க்கரசி திருமணம் கொண்டாள் இனிதாக” என்று பாடி மணமக்களை ஆசீர்வதிக்கும் காட்சிகளும் எம்.ஜி.ஆர். அவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்துகின்றன.

    புரட்சித் தலைவர்:
    “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” எனும் பாடலை “மலைக்கள்ளன்” படத்தில் பாடி நடித்த எம்.ஜி.ஆர். புரட்சி நடிகர் என்று கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் புகழப் பட்டார் முன்பு. அதே பாடலில் வரும்,
    “தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்,
    கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்,
    கருத்தாகப் பல தொழில் பயிலுவோம்,
    ஊரில் கஞ்சிக்கில்லை எனும்
    கொடுமையைப் போக்குவோம்”
    எனும் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் தான் முதல்வரான பின்பு செயல்பட்டவர். புரட்சி நடிகர் புரட்சித் தலைவரான வரலாறு தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பம். இங்கே அரசியல் வேண்டாம் என்பதால் எழுதவில்லை.

    பொன்மனச் செம்மல்:
    திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அவரது சேவை மனப்பான்மையைப் பாராட்டிப் “பொன்மனச் செம்மல்” என்று பட்டம் சூட்டினார். அப்பெயர் இன்றளவும் நீடித்து நிற்கிறது, இனி என்றும் நிலைத்து நிற்கும். “பொன்மனச் செம்மலைப் புண்பட வைத்தது யாரோ?” எனும் தஞ்சை ராமையா தாஸ் அவர்கள் இயற்றிய பாடல் வாணி ஜெயராம் பாட, எம்.ஜி.ஆர்., லதா ஆகியோர் நடிக்க இடம்பெற்ற படம் “சிரித்து வாழ வேண்டும்”.

    எம்.ஜி.ஆர். ரின் முதல் படம் “சதி லீலாவதி”. அதன் பின்னர் அவர் “ராஜகுமாரி” எனும் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பின்னர் அவரது இறுதிப் படமான, “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” வரை கதாநாயகனாகவே நடித்து வந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் அவர் இணைந்து நடித்த ஓரே திரைப்படம், “கூண்டுக் கிளி”. அதன் பின்னர் சிவாஜிக்குப் போட்டியாகத் தனியாக நடித்து வந்தாலும் தான் முதல்வரான பின்னர் கலைத்துறை தொடர்பான எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த போதும் சிவாஜியை அழைத்து மேடையில் அமர்த்தி உரிய மரியாதை செலுத்தத் தவறியதில்லை.

    அடிமைப்பெண் திரைப்படத்தில் முதல் முதலாக எஸ்.பி. பாலசுப்பிரமணியம் எம்.ஜி.ஆர். அவர்களால் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப் பட்டார். பாடல் பதிவு செய்யும் நாளில் எஸ்.பி.பி. உடல்நலக் குறைவால் அவதிப்பட்டதால் பதிவு செய்யும் நாளைத் தள்ளி வைத்தார் எம்.ஜி.ஆர். பின்னர் பதிவு செய்யப்பட்டு ரசிகர்கள் மனங்களைக் கொள்ளை கொண்ட பாடலே,

    “ஆயிரம் நிலவே வா,
    ஓராயிரம் நிலவே வா,
    இதழோரம் சுவை தேட,
    புதுப் பாடல் விழி பாடப் பாட”
    எனும் பாடல். அப்பாடலுடன் தன் தமிழ்த் திரையிசைப் பயணத்தைத் துவங்கிய எஸ்.பி.பி. இன்று சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறி நிற்கிறார்.

    தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை கொண்ட பொன்மனச்செம்மலன்றோ எம்.ஜி.ஆர்!

    “ஒளிவிளக்கு” திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். உயிருக்குப் போராடும் நிலையில் படுத்திருக்க, அவரது உயிரை மீட்டுத்தரக் கோரி சவுகார் ஜானகி அவர்கள் முருகனிடம் வேண்டுவதாக அமைந்த பி. சுசீலாவின் குரலில் ஒலித்த,

    “ஆண்டவனே, உன் பாதங்களை நான்
    கண்ணீரில் நீராட்டினேன்,
    இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இன்று
    உன்னிடம் கையேந்தினேன் முருகையா!”
    எனும் பாடல் பிற்காலத்தில் 1984ஆம் ஆண்டு சிறுநீரகக் கோளாறினால் அவதியுற்று சென்னை அப்பொலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கையில் தமிழகமெங்கும் எல்லா ஊர்களிலும் ஆட்டோ ரிக்ஷாக்களிலும், வேறு பல இடங்களிலும் ஒலிபெருக்கிகள் வாயிலாகத் தொடர்ந்து ஒலிபரப்பப் பட்டது. எம்.ஜி.ஆர். பிழைத்து வர வேண்டும் என வேண்டாத உள்ளங்கள் அரிதாக இருந்தது அந்நாளில்.

    தமிழ் மக்களின் பிரார்த்தனை பலித்தது. எம்.ஜி.ஆர். அவர்களை சகல வசதிகளுடன் ஒரு மருத்துவ மனையாகவே மாற்றப்பட்ட ஆகாய விமானத்தில் சென்னையிலிருந்து அமெரிக்காவில் இருக்கும் ப்ரூக்லின் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல அந்நாளில் பாரதப் பிரதமராக இருந்த திருமதி இந்திரா காந்தியவர்கள் ஏற்பாடு செய்தார். ப்ரூக்லின் மருத்துவமனையில் தன் அண்ணன் சக்கரபாணி அவர்களின் மகள் தானமாகக் கொடுத்த சிறுநீரகம் பொறுத்தப்பட்டு உடல்நலம் தேறிப் புத்துயிர் பெற்றார் எம்.ஜி.ஆர். ப்ரூக்லின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலத்திலேயே தமிழ்நாட்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிற்று அபார வெற்றியும் பெற்றுத் திரும்பி வந்து முதல்வர் பதவியில் தன் இறுதி மூச்சுள்ள வரை தொடர்ந்தார்.

    எம்.ஜி.ஆர். எனும் ஒளிவிளக்கு இவ்வுலகை விட்டு மறைந்த பின்னர் கழுதை தேய்ந்து கட்டெறும்பானாற் போலத் தமிழகம் மீண்டும் இருளில் மூழ்கி மக்கள் சொல்லுணாத் துயருற்று விலைவாசி ஏற்றத்தாலும், சுற்றுச்சூழல் மாசுபாடு பெருகுவதாலும், தண்ணீர் தரும் ஆறுகள் சாக்கடைகளாகி ஓட, சாராய ஆறு கட்டுக்கடங்காமல் கரைபுரண்டு ஓடுவதாலும் இன்னும் பல முறைகேடுகளாலும் அவதியுறும் நிலை வந்துற்றது. அவர் அன்று பாடி நடித்த, “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?” எனும் பாடலை மீண்டும் பாடி நல்ல காலம் வருமா என ஏங்கும் உள்ளங்கள் விடை தெரியாமல் கலங்கி மடிகின்றன.

    இன்னும் ஒரு பொன்மனச் செம்மல் தமிழ்நாட்டைக் காக்க வர வேண்டும். நம் துன்பங்கள் தீர வேண்டும். அதற்கு மக்கள் திலகத்தின் உயிரைக் காத்த முருகன் அருள்புரிய வேண்டும்.

    Share