–ஆகிரா.

அறிமுகம்:
“வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?
மாபெரும் வீரர் மானம் காத்தோர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்.”

என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடலைப் பாடிக்கொண்டே அக்கால இளவரசு குதிரை வண்டியில் நண்பன் குலதெய்வம் ராஜகோபாலுடன் சவாரி செய்யும் “மன்னாதி மன்ன”னாக பவனி வந்த மக்கள் திலகம் அவர்களது நாட்டியத் திறமை அதே திரைப்படத்தில் நாட்டியப் பேரொளி பத்மினியுடன் அவர் போட்டி நடனம் புரிந்து வெல்வதாகப் படமெடுக்கப் பட்ட காட்சிகளில் தெளிவாயிற்று. நாட்டியத்தில் மட்டுமின்றி இசையிலும் அவர் திறமை மிக்கவர் என்பது அதே திரைப்படத்தில் அவர் பத்மினி ஆடும் நடனத்துக்குப் பத்துக்கும் மேற்பட்ட தாள வாத்தியக் கருவிகளைக் கொண்டு தாளம் போடுவதாக அமைந்த, டி.எம். சௌந்தரராஜன், எம்.எல். வசந்தகுமாரி குரல்களில் ஒலிக்கும் “ஆடாத மனமும் உண்டோ?” எனும் பாடல் காட்சியில் தெளிவானது. அதே திரைப் படத்திலும் அனேகமாக அவர் நடித்த அனைத்துத் திரைப் படங்களிலும் அவர் பங்கு பெற்ற சண்டைக் காட்சிகளைக் கண்டு பாராட்டாத ரசிகர் யாரும் இல்லை என்பது பிரசித்தம்.

பண்டைய பாரத மன்னர்களைப் போலவே யானையேற்றம், குதிரை சவாரி, வாட்போர், மற்போர், கம்பு சுழற்றுதல் மற்றும் பல்வேறு சாகசக் கலைகளில் தலைசிறந்து விளங்கினார் எம்.ஜி.ஆர். அவரது திரைப்படம் வெளியாகிறதென்றால் அத்திரையரங்குகளில் கூட்டம் வரலாறு காணாத அளவுக்குக் காணப்படும். 1964-ஆம் ஆண்டில் வெளிவந்த அவரது “எங்க வீட்டுப் பிள்ளை” திரைப் படத்தைத் திரையிட்ட கிராமப்புற ஓலைக் கொட்டகைத் திரையரங்குகளில் டிக்கட் கவுண்டர்களின் முன்னால் போடப்பட்ட தடுப்புகள் தவிடுபொடியாயின. அதுவரையில் வேறு எந்தத் திரைப்படத்திற்கும் அப்படிப்பட்ட கூட்டத்தைக் கண்டதில்லை, அதன் பிறகும் கண்டதில்லை. எம்.ஜி.ஆர். என்பது ஒரு தாரக மந்திரமாகவே விளங்கிற்று. அவர் பெயரைக் கேட்டால் “மயங்காத மனம் யாவும் மயங்கும்” எனக் “காஞ்சித் தலைவன்” திரைப்படத்தில் பானுமதி பாடும் பாடல் போலவே அனைவரது மனங்களும் மயங்கும். அவரது திரைப்படங்களைக் கண்டு மகிழாத மக்கள் மிகவும் குறைவே.

மக்களின் மனங்களில் மாறா இடம்:
தனது குணச்சித்திர நடிப்பினாலும் பல்வேறு வகையான பாத்திரங்களை ஏற்று, அப்பாத்திரங்களாகவே தான் மாறி ரசிகர்களைத் தன்பால் ஈர்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப் படங்களைக் காட்டிலும் எம்.ஜி.ஆர். அவர்களது திரைப் படங்கள் அதிகப் பொழுது போக்கு அம்சங்களுடன் காண வருவோர் மனங்களைக் குளிர்விக்கும் தன்மை கொண்டவையாய் இருந்ததுடன் வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டிய சீரிய அறிவுரைகள் நிறைந்திருந்தமையே எம்.ஜி.ஆர். மக்கள் திலகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்ததன் அடிப்படை ரகசியமாகும்.

கொடுக்குற காலம் நெருங்குவதால்
இனி எடுக்குற அவசியம் இருக்காது
இருக்குறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்குற வேலையும் இருக்காது
ஒதுக்குற வேலையும் இருக்காது
உழைக்குற நோக்கம் உறுதியாயிட்டாக்
கெடுக்குற நோக்கம் வளராது
மனம் கீழும் மேலும் புரளாது.”

எனக் கவிஞர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் எழுதிய,
“திருடாதே பாப்பா திருடாதே,
வறுமை நிலைக்கு பயந்து விடாதே,
திறமை இருக்கு மறந்து விடாதே”
எனும் “திருடாதே” படப் பாடலைக் கேட்டுத் திருந்தியவர்கள் ஏராளம்.

திரைப்படங்களில் நடித்ததுடன் நில்லாது மக்கள் திலகம் சமூக சேவையிலும் அதிக ஈடுபாடு கொண்டு பல்வேறு காரணங்களால் அவதியுற்ற மக்களின் துயர் நீங்க அரும்பாடு பட்டார். கை ரிக்ஷாக்கள் மற்றும் சைக்கிள் ரிக்ஷாக்கள் ஓட்டிப் பிழைப்போர், மீனவர்கள், ஏழைத் தொழிலாளிகள், விவசாயிகள் முதலானோர் வாழும் வாழ்க்கையினை விளக்கும் பல திரைப்படங்களைத் தந்ததோடு அவர்களது குறைகள் களைய நிஜ வாழ்வில் பெரும் பொருளுதவியும், வேறு பலவித உதவிகளையும் அவர் செய்தார்.

“கடல்நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ?
தனியாய் வருவோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ?
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்;
ஒரு ஜாண் வயிறை வளர்ப்பவர்
உயிரை ஊரார் நினைப்பது சுலபம்”
எனும் உயிர்த்துடிப்பு மிக்க வரிகளுடன் கவிஞர் வாலி எழுதிய

“தரை மேல் பிறக்க வைத்தாய்
எங்களைத் தண்ணீரில் திளைக்க வைத்தாய்,
கரைமேல் இருக்க வைத்தாய்
பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தாய்”
எனும் மீனவர்கள் படும் துயரத்தை விளக்கும் பாடலைப் “படகோட்டி” திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கக்கண்டு கண்ணீர் உகுக்காதவர் வெகு சிலரே.

“என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?
ஒழுங்காய்ப் பாடுபடு வயக்காட்டில்,
உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்”
எனும் வாலி பாடலை டி.எம்.எஸ். குரலில் பாடி கே.ஆர். விஜயாவுடன் அவர் நடித்த “விவசாயி” படம் விவசாயத்தின் பெருமையைப் பறைசாற்றிற்று. பேருந்து நடத்துனராகப் பணி செய்கையில் தன் தாய் வழியில் நிற்கக் கண்டும் அதிகம் பேரை ஏற்றக்கூடாது எனும் சட்டத்தை மதித்துத் தாய்க்கும் பேருந்தில் இடமளிக்காமல் நடத்தும் காட்சியும், பின் அதே பேருந்துக் கம்பெனியில் அதிகாரி பதவி பெற்று அதன் பின் முதலாளியின் மகள் கே.ஆர். விஜயாவின் காதலை ஏற்க மறுத்ததால் வேலையிழந்து கைவண்டி இழுத்துக் கொண்டு அவர் பாடுவதாக, “தொழிலாளி” படத்தில் அமைந்த
“ஆண்டவன் உலகத்தின் முதலாளி,
அவனுக்கு நானொரு தொழிலாளி,
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி”
என டி.எம்.எஸ். குரலில் அமைந்த பாடல் தொழிலாளியின் பெருமையை இனிமையான இசையுடன் விளக்குவதாகும்.

சென்னையை அடுத்த பரங்கிமலை எம்.ஜி.ஆர். அவர்கள் பல்லாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராய் விளங்கிய தொகுதியாகும். அங்கே எம்.ஜி.ஆர். தோட்டம் இன்னும் சிறப்புடன் விளங்குகிறது. அங்கே காது கேளாத குழந்தைகள் பலர் இலவசமாய்க் கல்வி பெற ஒரு அருமையான பள்ளிக் கூடம் எம்.ஜி.ஆர். அருளால் துவங்கப் பட்டு இன்றும் சீரும் சிறப்புமாய் நடந்து வருகிறது.

எல்லா அரசுப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ மாணவியருக்கு தினந்தோறும் மதிய உணவு வழங்கும் நோக்கில் பெருந்தலைவர் காமராஜர் துவக்கி வைத்துத் திறம்பட நடத்தி வந்த மதிய உணவுத் திட்டத்துடன் பள்ளிகளில் மட்டுமின்றி வேறு பல மையங்களிலும் ஏழைக் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கவும், அம்மையங்களில் அவர்களுக்குப் பாடங்கள் சொல்லித் தரவும் ஏற்ற வகையில் சத்துணவுத் திட்டம் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். தான் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கையில்.

எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்:
அகத்திய முனிவர் காவேரி நதியையே தன் சிறு கமண்டலத்தில் அடைத்தாரம். அது போன்றே எம்.ஜி.ஆர். குறித்த கட்டுரையை 1500 வார்த்தைகளுக்குள் அடக்குவதும் ஆகும். ஏனெனில், அவரது தனிமனித சிறப்பு குறித்தும் அவரது படங்கள் குறித்தும் எழுதத் துவங்கினால் மகாபாரதத்தையும் விட அதிகமான பக்கங்கள் நிறையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எனினும் என் மனதில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய விஷயங்களை மட்டும் முன்வைக்கிறேன்.

வி.என். ஜானகி, பானுமதி, சரோஜா தேவி, சாவித்திரி, மாலினி, கே.ஆர். விஜயா, ரத்னா, ஜெயலலிதா, மஞ்சுளா உட்படப் பல கதாநாயகிகளுடனும் சேர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் அன்றும் இன்றும் என்றும் பார்த்து இன்புறத் தக்க இனிய காவியங்களாகும். திரைப்படங்களில் கண்கவரும் பாடல் காட்சிகளும், செட்டிங்குகளும், சந்திரபாபு, எம்.ஆர். ராதா, டி.எஸ். பாலையா, நாகேஷ், மனோரமா, குமாரி சச்சு, ஐசரி வேலன் உட்படப் பல நகைச்சுவை நடிகர்கள் இடம்பெற்ற இனிய நகைச்சுவைக் காட்சிகளும் குறைவின்றி நிறைந்திருந்தன. கவிஞர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம், மருதகாசி, புலமைப் பித்தன், தஞ்சை ராமையா தாஸ், வாலி உட்படப் பல கவிஞர்கள் இயற்றிய அரிய பொருட்செறிவு மிக்க எம்.ஜி.ஆர். படப் பாடல்கள் திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் உட்படப் பல திறமைமிக்க இசையமைப்பாளர்களது இசையில் என்றும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கும் தன்மையவை. ஏ.எம். ராஜா, பி.பி. ஸ்ரீனிவாஸ், டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கே.ஜே. ஜேசுதாஸ் உட்படப் பல பிரபலப் பாடகர்கள் என்.ஜி.ஆருக்குக் குரல் கொடுத்துப் பாடியுள்ளனர்.

எம்.ஜி.ஆர். படங்களில் பி.எஸ். வீரப்பா, ஈ.ஆர். சகாதேவன், டி.எஸ். பாலையா, சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர், எம்.ஆர். ராதா, என்.என். நம்பியார், எஸ்.ஏ. அசோகன், ஆர்.எஸ். மனோகர் முதலானோர் முக்கிய வில்லன் பாத்திரங்களிலும் பிற குணச்சித்திரப் பாத்திரங்களிலும் தவறாமல் பங்கு பெற்றனர். நடிப்புத் திறமையில் புகழ்பெற்று விளங்கிய எந்த நடிகரையும் எம்.ஜி.ஆர். தன் படத்தில் பங்கேற்க வைப்பதில் மிக முனைப்புடன் இருந்தார். சிவகுமார், டி.கே. பகவதி, எஸ்.வி, சஹஸ்ரநாமம், எம்.வி. ராஜம்மா, பண்டரி பாய் முதலானோர் அவரது பல படங்களில் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். சின்னப்பா தேவர் எம்.ஜி,ஆர். அவர்ககளை வைத்துப் பல திரைப்படங்கள் தயாரித்துள்ளார்.

மாறுவேட மாமன்னன்:
எம்.ஜி.ஆர். மாறுவேடம் புனைந்து நடிப்பதில் தனித்திறமை வாய்ந்தவர். “குலேபகாவலி” திரைப்படத்தில் கிழவர் வேடம் பூண்டு டி.ஆர். ராஜகுமாரியும் தங்கவேலுவும் சேர்ந்து நடத்தும் ஏமாற்று பகடை விளையாட்டை வெளிச்சமாக்கும் காட்சிகளும், “பாக்தாத் திருடன்” படத்தில் அருவருப்பான கிழவர் வேடம் பூண்டு அடிமையாக விற்கப்படும் கதாநாயகி வைஜயந்திமாலாவை விலை கொடுத்து வாங்கி அவள் இரவில் திருட்டுத் தனமாகத் தன்னிடமிருந்து தப்ப முயல்கையில் பிடித்து, “யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பாக்குறே? எங்கே ஓடுறே? சொல்லு” எனும் பாடலைப் பாடும் காட்சிகளும், “மஹாதேவி” திரைப்படத்தில் குருடனாகத் தாயத்து விற்றுக்கொண்டே, “தாயத்து அம்மா தாயத்து” என்று பாடிச் சென்று மக்களூக்குத் தாயத்துகள் மூலம் ரகசிய செய்தி சொல்லும் காட்சிகளும், “படகோட்டி” படத்தில் வளையல் காரராக வேடம் பூண்டு எதிரிகளால் சிறை வைக்கப்பட்டிருக்கும் நாயகி சரோஜா தேவியை சந்தித்து, “கல்யாணப் பொண்ணு, கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்” என்று பாடி ஆடி தைரியமூட்டும் காட்சிகளும் “குமரிக்கோட்டம்” திரைப்படத்தில் மொட்டைத் தலையுடன் நெற்றி நிறையத் திருநீற்றுடன் அவர் செய்யும் கதாகாலக்ஷேபமும், “இதயவீணை” திரைப்படத்தில் சாமியார் வேடம் பூண்டு தன் சகோதரியின் திருமணம் நிகழும் மண்டபத்தில் வாயிலில் நின்று, “திருநிறைச் செல்வி, மங்கையர்க்கரசி திருமணம் கொண்டாள் இனிதாக” என்று பாடி மணமக்களை ஆசீர்வதிக்கும் காட்சிகளும் எம்.ஜி.ஆர். அவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்துகின்றன.

புரட்சித் தலைவர்:
“எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” எனும் பாடலை “மலைக்கள்ளன்” படத்தில் பாடி நடித்த எம்.ஜி.ஆர். புரட்சி நடிகர் என்று கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் புகழப் பட்டார் முன்பு. அதே பாடலில் வரும்,
“தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்,
கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்,
கருத்தாகப் பல தொழில் பயிலுவோம்,
ஊரில் கஞ்சிக்கில்லை எனும்
கொடுமையைப் போக்குவோம்”
எனும் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் தான் முதல்வரான பின்பு செயல்பட்டவர். புரட்சி நடிகர் புரட்சித் தலைவரான வரலாறு தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பம். இங்கே அரசியல் வேண்டாம் என்பதால் எழுதவில்லை.

பொன்மனச் செம்மல்:
திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அவரது சேவை மனப்பான்மையைப் பாராட்டிப் “பொன்மனச் செம்மல்” என்று பட்டம் சூட்டினார். அப்பெயர் இன்றளவும் நீடித்து நிற்கிறது, இனி என்றும் நிலைத்து நிற்கும். “பொன்மனச் செம்மலைப் புண்பட வைத்தது யாரோ?” எனும் தஞ்சை ராமையா தாஸ் அவர்கள் இயற்றிய பாடல் வாணி ஜெயராம் பாட, எம்.ஜி.ஆர்., லதா ஆகியோர் நடிக்க இடம்பெற்ற படம் “சிரித்து வாழ வேண்டும்”.

எம்.ஜி.ஆர். ரின் முதல் படம் “சதி லீலாவதி”. அதன் பின்னர் அவர் “ராஜகுமாரி” எனும் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பின்னர் அவரது இறுதிப் படமான, “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” வரை கதாநாயகனாகவே நடித்து வந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் அவர் இணைந்து நடித்த ஓரே திரைப்படம், “கூண்டுக் கிளி”. அதன் பின்னர் சிவாஜிக்குப் போட்டியாகத் தனியாக நடித்து வந்தாலும் தான் முதல்வரான பின்னர் கலைத்துறை தொடர்பான எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த போதும் சிவாஜியை அழைத்து மேடையில் அமர்த்தி உரிய மரியாதை செலுத்தத் தவறியதில்லை.

அடிமைப்பெண் திரைப்படத்தில் முதல் முதலாக எஸ்.பி. பாலசுப்பிரமணியம் எம்.ஜி.ஆர். அவர்களால் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப் பட்டார். பாடல் பதிவு செய்யும் நாளில் எஸ்.பி.பி. உடல்நலக் குறைவால் அவதிப்பட்டதால் பதிவு செய்யும் நாளைத் தள்ளி வைத்தார் எம்.ஜி.ஆர். பின்னர் பதிவு செய்யப்பட்டு ரசிகர்கள் மனங்களைக் கொள்ளை கொண்ட பாடலே,

“ஆயிரம் நிலவே வா,
ஓராயிரம் நிலவே வா,
இதழோரம் சுவை தேட,
புதுப் பாடல் விழி பாடப் பாட”
எனும் பாடல். அப்பாடலுடன் தன் தமிழ்த் திரையிசைப் பயணத்தைத் துவங்கிய எஸ்.பி.பி. இன்று சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறி நிற்கிறார்.

தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை கொண்ட பொன்மனச்செம்மலன்றோ எம்.ஜி.ஆர்!

“ஒளிவிளக்கு” திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். உயிருக்குப் போராடும் நிலையில் படுத்திருக்க, அவரது உயிரை மீட்டுத்தரக் கோரி சவுகார் ஜானகி அவர்கள் முருகனிடம் வேண்டுவதாக அமைந்த பி. சுசீலாவின் குரலில் ஒலித்த,

“ஆண்டவனே, உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன்,
இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன் முருகையா!”
எனும் பாடல் பிற்காலத்தில் 1984ஆம் ஆண்டு சிறுநீரகக் கோளாறினால் அவதியுற்று சென்னை அப்பொலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கையில் தமிழகமெங்கும் எல்லா ஊர்களிலும் ஆட்டோ ரிக்ஷாக்களிலும், வேறு பல இடங்களிலும் ஒலிபெருக்கிகள் வாயிலாகத் தொடர்ந்து ஒலிபரப்பப் பட்டது. எம்.ஜி.ஆர். பிழைத்து வர வேண்டும் என வேண்டாத உள்ளங்கள் அரிதாக இருந்தது அந்நாளில்.

தமிழ் மக்களின் பிரார்த்தனை பலித்தது. எம்.ஜி.ஆர். அவர்களை சகல வசதிகளுடன் ஒரு மருத்துவ மனையாகவே மாற்றப்பட்ட ஆகாய விமானத்தில் சென்னையிலிருந்து அமெரிக்காவில் இருக்கும் ப்ரூக்லின் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல அந்நாளில் பாரதப் பிரதமராக இருந்த திருமதி இந்திரா காந்தியவர்கள் ஏற்பாடு செய்தார். ப்ரூக்லின் மருத்துவமனையில் தன் அண்ணன் சக்கரபாணி அவர்களின் மகள் தானமாகக் கொடுத்த சிறுநீரகம் பொறுத்தப்பட்டு உடல்நலம் தேறிப் புத்துயிர் பெற்றார் எம்.ஜி.ஆர். ப்ரூக்லின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலத்திலேயே தமிழ்நாட்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிற்று அபார வெற்றியும் பெற்றுத் திரும்பி வந்து முதல்வர் பதவியில் தன் இறுதி மூச்சுள்ள வரை தொடர்ந்தார்.

எம்.ஜி.ஆர். எனும் ஒளிவிளக்கு இவ்வுலகை விட்டு மறைந்த பின்னர் கழுதை தேய்ந்து கட்டெறும்பானாற் போலத் தமிழகம் மீண்டும் இருளில் மூழ்கி மக்கள் சொல்லுணாத் துயருற்று விலைவாசி ஏற்றத்தாலும், சுற்றுச்சூழல் மாசுபாடு பெருகுவதாலும், தண்ணீர் தரும் ஆறுகள் சாக்கடைகளாகி ஓட, சாராய ஆறு கட்டுக்கடங்காமல் கரைபுரண்டு ஓடுவதாலும் இன்னும் பல முறைகேடுகளாலும் அவதியுறும் நிலை வந்துற்றது. அவர் அன்று பாடி நடித்த, “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?” எனும் பாடலை மீண்டும் பாடி நல்ல காலம் வருமா என ஏங்கும் உள்ளங்கள் விடை தெரியாமல் கலங்கி மடிகின்றன.

இன்னும் ஒரு பொன்மனச் செம்மல் தமிழ்நாட்டைக் காக்க வர வேண்டும். நம் துன்பங்கள் தீர வேண்டும். அதற்கு மக்கள் திலகத்தின் உயிரைக் காத்த முருகன் அருள்புரிய வேண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *