பொன்னாரம் பூவாரம் … கண்ணோரம் சிருங்காரம் …
–கவிஞர் காவிரிமைந்தன்.
பொன்னாரம்.. பூவாரம்……
கவிஞர்கள் ஆயிரமாயிரம் கவிதைகள் எழுதினாலும், திரைப்படப் பாடலாசிரியர்கள் ஆயிரமாயிரம் பாடல்கள் புனைந்தாலும், இந்தப் பாடல் இவரால் எழுதப்பட்டது என்று அந்தப் பாடலே அவர்களை அடையாளப்படுத்தும், முன்னிறுத்தும் அதிசயமும் இங்கு உண்டு. ஒரு முறை அத்திக்காய் காய் காய் பாடலை கவியரசு கண்ணதாசன் எழுதித் தந்த போது, இசையமைப்பாளர் என்னய்யா… கொத்தவால்சாவடி போல எல்லாம் ஒரே காயா இருக்குது… வேற பாடல் கொடுங்க… என்றதும்… கவிஞர் எத்தனையோ பாடல்களை நீங்க கேட்குற மாதிரி எழுதித் தரேன்.. . இது போன்ற பாடலை எனக்காக மெட்டமையுங்கள் என… ஒருவாறு அப்பாடல் வெளி வந்தது. கவிஞருக்கு ஏகோபித்த பாராட்டுதல்களை பெற்றுத்தந்தது.
அதே போல் கவியரசின் கை வண்ணத்தில் மற்றுமொரு பாடல். பகலில் ஒரு இரவு திரைப்படதிற்காக இசை ஞானி இளையராஜா இசையில் வடிவம் பெற்று எஸ். பி. பாலசுப்ரமணியம் குரலில் உருவானது. விஜயகுமார் ஸ்ரீதேவி இணைந்து திரையில் தோன்றும் இப்பாடல் இசையில் மிதக்கும் இன்ப வெள்ளம்….
https://youtu.be/yF58pBzAsLI
காணொளி: https://youtu.be/yF58pBzAsLI
படம்: பகலில் ஒரு இரவு
பாடல்: கண்ணதாசன்
இசை: இளையராஜா
குரல்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் சிருங்காரம்
பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி
வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டு வா
செந்தேன் நிலா ஒரு சீர் கொண்டுவா
(பொன்னாரம்)
மெதுவாகத் தாலாட்டு சொல் தென்றலே … சொல் தென்றலே …
மேலாடை சதிராட வா தென்றலே … வா தென்றலே …
அழகு ரதம் அசைகிறது ஊர்வலமாய் வருகிறது
வா….பண்பாடு மாறாத தென்பாங்குப் பூவே
காலமெல்லாம் தேனிலவு தான்..
(பொன்னாரம்)
சிந்தாத மணிமாலை உன் புன்னகை … உன் புன்னகை …
செவ்வான விண்மீன்கள் உன் கண்களே… உன் கண்களே …
சிறிய இடை கொடியளக்க அழகு நடை மணி ஒலிக்க
வா…… செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி
காலமெல்லாம் தேனிலவு தான்..
(பொன்னாரம்)
பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் சிருங்காரம்
பாடல் முழுவதும் இந்த ஓசை நயம் ரீங்காரம் செய்திருக்க அற்புத இசையும் பின்னணிக் குரல்களும் அதற்கேற்ப ஒத்துழைக்க… இனிய பாடல் வந்து நம் இதயத்தில் எதிரொலிக்கிறது!
தமிழ் மொழியில் உள்ள இனிமையான வார்த்தைகள் எத்தனை என்பதற்கு இதோ இந்தப் பாடலில் உள்ள வரிகள் எடுத்துக்காட்டு தருகின்றன. மொத்தத்தில் வார்த்தைகளில் உள்ள ‘ரம்’ தரும் மயக்கத்தில் சற்று நேரம் ஆழ்ந்துதான் போகலாமே!