ஐந்து கை ராந்தல் (7)
வையவன்
அவர்கள் ஹோசூர் போய்ச் சேர்ந்தபோது இரவு மணி இரண்டு அங்கிருந்து டெங்கனிக்கோட்டா ஒரு மணி நேரம். அதிலிருந்து அண்செட்டி ஒரு மணி.
ஹோசூரில் சாலை ஓரமாக வண்டியை நிறுத்தச் சொன்னான் வெற்றிவேல்.
“எதுக்கு?”
“இனிமே நீ ஓட்ட வேண்டாம். ஒனக்கு வழி தெரியாது. நான் ஓட்டறேன்.”
“நேத்தெல்லாம் நீ ஓட்டி வந்திருக்கே. களைப்பா இருக்கும். ரெண்டு மணி நேரம் காரிலேயே ரெஸ்ட் எடுப்போம்”
வெற்றிவெல்ஒப்புக் கொண்டான். முன் ஸீட்டில் சிவா படுத்தான். வெற்றிவேல் பின் ஸீட்டு.
வெற்றிவேல் சிவாவை எழுப்பியபோது மணி நாலே கால்.
அண்செட்டியை அடைந்தபோது பொழுது நன்கு விடிந்து விட்டது.
“இங்கிருந்து ஒன்றரை மைல். தேவனஹள்ளி என்று ஒரு கிராமம்” என்று வண்டியை அங்கே நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டே சொன்னான் வெற்றிவேல்.
வெற்றிவேல் வண்டியை நிறுத்திய இடம் ஆடுகளும் எருமைகளும் மேய்ந்து கொண்டிருந்த ஒரு குக்கிராமம். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வந்துவிட்டது போன்ற உணர்வை அனுபவித்தான் சிவா.
தாழ்ந்து குறுகிய குடிசைகள். புராதனமான ஓட்டு வீடுகள். ஆண்கள் கம்பளி போர்த்தியிருந்தார்கள். அல்லது பெட்ஷீட் போர்த்தியிருந்தார்கள். பெண்கள்தான் நடமாடினார்கள். முகங்களில் களங்கமற்ற கிராமீயக் களை.
வெற்றிவேலின் பின்னால் நடந்தான் சிவா.
ஓர் ஆறு ஓடிக் கொண்டிருந்தது. இடுப்பளவு தண்ணீர் என்பது ஆற்றைக் கடந்து வருபவர்களைப் பார்த்தால் புரிந்தது.
“இது என்ன ஆறு?”
“சின்னாறு”
தண்ணீர் பளிங்கு போல் தெளிந்திருந்தது.
‘குளிக்கலாம் போல இருக்கா”
சிவாவை வெற்றிவேல் கேட்டான்.
“அப்பாவைப் பார்த்துட்டு குளிப்போம்.”
ஆற்றின் இக்கரையில் ஓர் ஆலமரம். அக்கரையில் ஒரு சின்ன சிவன் கோயில்.
ஆலமரம் பிரம்மாண்டமாயிருந்தது, மழைக்கும் நிழலுக்கும் அந்த கிராமமே ஒதுங்கலாம் போல்.
தூரத்திலேயே மூன்று பேர் அதன் கீழே உனட்கார்ந்திருப்பது தெரிந்தது. செம்பட்டை முடியும் வெளுத்த தோலுமாக ஒரு அமெரிக்கன் – முப்பத்தைந்து வயது மதிக்கலாம். இடப்புறம் கீழ்ப்பாய்ச்சிய வேஷ்டியும் கை வைத்த மல் பனியனும் அதன் மீது ஒரு சால்வையுமாக அறுபது வயது தோன்றும் ஒரு கிராம பெருந்தனக்காரர்.
நடுவில் கைலாச கவுண்டர் சப்பணமிட்டு உட்கார்ந்திருந்தார். நøடிரத்த தாடி மார்பில் பாதியை மறைத்தது. தோளில் இருபுறமும் நரைத்த சிகை வந்து புரண்டது. மேலே ஆடையில்லை.
இடுப்பில் சாயம் போன ஒரு காவி வேட்டி. அது தான் ஆடை…
“வொட்ரீ வெல்… யூவ் கம் அகின்” என்ற யாங்கி உச்சரிப்பு இருவரையும் வரவேற்றது.
சிவா முதலில் அவனைப் பார்த்தான்.
பழுப்புக் கண்களில் அமெரிக்கப் பரபரப்பு. ஆறடி நீளத்துக்கு தோளிலும் கையிலும் கட்டுக் கட்டாக கட்டாக தசை தெரிய, வேட்டி உடுத்து நின்றான் அவன்.
சிவா தன் தந்தையைப் பார்த்தான்.
பெரிய நெற்றியில் நரைத்த அடர்ந்த புருவங்களில் அபூர்வமான அமைதி நிலவியதை அவன் கவனித்தான்.
பாபா ஓம்கார்நாத் அவனை நிமிர்ந்து பார்த்தார்.
“மீட் மை பிரண்ட் சிவா…”
வெற்றிவேல் ஏதோ மேற்கொண்டு சொல்லப் போனான். சிவா அவனைத் தடுத்தான்.
அவரது கண்கள் சிவாவைச் சந்தித்தன. அவை தெளிந்திருந்தன. குளிர்ந்த பார்வை. எதையும் கோராத, எதையும் விசாரியாத, எங்கும் பந்தப்படாத ஏதோ ஒரு விடுதலையை அந்தப் பார்வையில் சந்தித்தான்.
தொடர்ந்து அவர் புன்முறுவல் செய்தார். ஒரு குழந்தையின் புன்முறுவல் மனசில் காரணமற்ற களிப்பையும் நிறைவையும் ஏற்படுத்திய புன்முறுவல்.
உங்கள் மனைவி திருப்பத்தூரில் முதலியார் ரைஸ் மில்லில் தவிடு விட்டுக் கொண்டிருக்கிறார் கைலாச கவுண்டரே! உங்கள் மகனாகிய நான் பி.எஸ்ஸி., படித்து விட்டு வேலை தேடிக் கொண்டு ஒரு மெக்கானிக்குக்கு சமைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறேன்.
எப்படிப் படித்தேன் தெரியுமா?
பேப்பர் போட்டேன். டிம்பர் பாக்டரியில் கணக்கு எழுதினேன். ஒவ்வொரு டெர்ம் பீஸ் கட்டவும் ஏதோ கண்டம் வந்தது போல் திண்டாடினேன்.
வெற்றிவேல் அவர் பக்கத்தில் கை கட்டி நின்றான்.
சிவாவின் மனசிற்குள் கோபங்களும் குறைகளும் அவரோடு மானசீகமாக ஒரு சம்வாதம் தொடங்கின.
அவர் புன்முறுவல் செய்து கொண்டே இருந்தார்.
அது அவன் தந்தை மாதிரியே இல்லை.
நெற்றி மூக்கு வாய் மார்பு எல்லா உறுப்புகளும் கைலாச கவுண்டர்தான்.
அந்தப் புன்னகை… அந்தப் பார்வை.. அவை கைலாச கவுண்டர் இல்லை.
“என்னை அடையாளம் தெரியுதா?” என்று சிவா கேட்டான்.
“வோட்ஸ் ஹி ஆஸ்கின்?” அந்த அமெரிக்கன் கேட்டான். வெற்றிவேல் மொழி பெயர்த்தான்.
பாபா ஓம்கார்நாத் இமைகளை ஒருமுறை மூடித் திறந்தார். வெற்றிவேலைத் திரும்பிப் பார்த்தார். பின்பு அந்த அமெரிக்கனை.. அடுத்து அந்த பெருந்தனக் காரரை.. மீண்டும் சிவாவை. அவருக்குள் எந்த பேதமும் இருப்பதாகத் தெரியவில்லை.
அலைகடலும் ஓய்ந்த ஒரு நிமிஷத்தில் சாந்தி நிறைந்திருக்கும் ஒரு வேளையில்சந்திரோதயம் ஆனது மாதிரி சிவா ஓர் அகமகிழ்வை அனுபவித்தான்.
எந்தக் கேள்விக்கும் இங்கே அர்த்தமில்லை என்று அவனுக்கே உறைத்தது.
ஆதங்கங்களும் பந்தமும் இவர் முன்னால் அசட்டுத்தனம் என்று தோன்றியது.
“நீங்கள் கைலாச கவுண்டர் தானே?”
அவர் புன்னகை செய்தார். இப்போது அதில் ஒரு சிறிது வேடிக்கை கலந்திருந்தது.
“இவர்கள் ஓம்கார்நாத் என்று கூப்பிடுகிறார்கள்.”
குரலில் அதைக் கூர்ந்து கேட்க வேண்டும் என்ற குறுகுறுப்பை ஏற்படுத்தும் வசீகரமான இனிமை இருந்தது.
அந்த அமெரிக்கன் புரியாமல் விழித்தான்.
“தெ கால் இட் ஓம்கார்நாத்” என்று அவனுக்காக ஸ்பஷ்டமான ஆங்கிலத்தில் சொன்னார் அவர், சொல்லிவிட்டு அவர் மெதுவாய் இதழ் மலர்ந்து சிரித்தார்.
பற்கள் ஆரோக்கியமாயிருந்தன.
என்னை என்பதற்குப் பதில் ஆங்கிலத்தில் அவர் இதனை என்று சொல்வதை சிவா கவனித்தான். இவர் எப்போது இவ்வளவு தெளிவான ஆங்கிலம் கற்றார்?
இது கைலாச கவுண்டர் அல்ல. அடையாளம் மறைந்து, பேதங்கள் மரித்து, போராட்டங்கள் மாண்டு போன ஆத்மா.
அவர் இரண்டு கைகளையும் விரித்துவிட்டு சாந்தமாக அவனைப் பார்த்தார்.
எனக்கு ஆட்சேபமில்லை.
எனக்குத் தெரியாது.
நான் அதுவல்ல.
அவரவர் விருப்பம்.
அந்த கைவிரித்த சைகையில் இப்படி சிவாவுக்கு நாலு அர்த்தங்கள் தெரிந்தன.
சிவாவுக்கு அந்த மரத்தடியில் உட்கார வேண்டும் போலிருந்தது.
அவன் சட்டென்று எவர் நிற்பதையும் பொருட்படுத்தாது உட்கார்ந்து விட்டான்.
மற்ற மூவரும் அனிச்சை செயல் மாதிரி உட்கார்ந்தனர்.
அப்போது ஆலமரத்திலிருந்து நாலைந்து பழுத்த இலைகள் அவருக்கு முன்பாக உதிர்ந்தன. அவர் அதை உற்றுப் பார்த்தார். பின்பு மரத்தை நிமிர்ந்து நோக்கினார்.
உதிர்ந்த இலைகளில் ஒன்றை எடுத்து மெதுவாக நீவினார். பின்பு சிவாவைப் பார்த்தார். அதன் காம்பை வருடிவிட்டு பொருள் பொதிந்த பார்வையோடு அவனை நோக்கினார்.
“நான் மெட்ராஸிலே இருக்கேன்..வேலை கெடைக்கலே” சிவாவுக்குத் தன்னை மீறிக் கொண்டு அதைச் சொல்ல தோன்றிற்று.
“இவன் எழுத்தாளனாகியிருக்கிறான்” என்று குறுக்கிட்டான் வெற்றிவேல்.
அவர் பார்வை நிர்ச்சிந்தையாக இருவரையும் கவனித்தது. அதை அவர் கேட்டமாதிரியும் தெரிந்தது. கேட்காத மாதிரியும் தோன்றிற்று. உதடும் கண்களும் ஒரே விதமாய் மலர்ந்து தோன்றின.
சிவாவுக்கு திடீரென்று மார்பு விம்பியது. ஒரு தந்தையை இழந்துவிட்ட சோகம் தோன்றியது.
“நீங்க ஏன் இப்படி ஆனீங்க?” அவன் வாய்விட்டுக் கேட்டான்.
பாபா அவனை நிமிர்ந்து பார்த்தார். அவர்கள் அனைவர் முகத்தையும் நோக்கினார். திரும்பி ஆற்றைக் காட்டினார்.
“நதி ஓடுகிறது” என்று ஒரு வாக்கியம் சொன்னார் பாபா. எல்லோரும் முகம் மலர்ந்தனர்.
அது ஓடும்; பிறகு கடலை அடையும்.
எங்கோ பிறந்தது இங்கே ஓடுகிறது.
எல்லோரும் ஓடுவோம். ஒன்றைவிட்டு மற்றொன்றிற்கு ஓடுவோம்.
நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். நீயும் ஓடிவிடுவாய். சிவாக்கு அந்த ஒரு சின்ன வாக்கியத்தில், என்னென்னவோ புரிந்தது.
மீண்டும் அவனுள் இவர் என் தந்தை என்ற உத்வேகம் உதைத்து எழுந்தது. மனசில் வந்து கூடிய சாந்தியை நிறைவை ஒரு கல்விட்டுக் கலைத்துக் கொண்டு அவன் கேட்டான்.
“நதிதான் ஓடும். நதி ஓட வேண்டும். மனிதன் அல்ல” என்றான்.
அமெரிக்கனுக்கு சிவா ஏதோ வாக்குவாதம் செய்கிறான் என்று புரிந்தது. அவன் ஆவலுடன் பாபாவைப் பார்த்தான்.
அவர் பாதிக்கப்படவில்லை. விழிகளில் கருணை நிலவியது.
“நீங்கள் சொல்லாமல் ஓடி வந்து விட்டீர்கள்.”
சட்டென்று அவன் சினமுற்றிருக்கிறான் என்று தவறாக நினைத்த பெருந்தனக்காரர் அவன் கையைப் பிடித்தார். அவ்விதம் அவனைப் பிடிக்க வேண்டாம் என்று பாபா சைகை செய்தார்.
அங்கே ஓர் அசந்தர்ப்பமான மௌனம் நிலவியது பாபாவின் முகத்தில் பரம சாந்தம் சிவா தொடர்ந்தான்.
“தப்பியோடுவது ஞானம் அல்ல.”
அவனைப் புன்னகையோடு பார்த்துவிட்டு பாபா, உதிர்த்த இலைகளில் ஒன்றை மீண்டும் எடுத்தார்.
“இலை பழுத்தால் உதிர்ந்து விடும்” என்றார்.
“உங்கள் மனைவியை… உங்கள் பிள்ளையை விட்டு விட்டு ஓடி வந்து விட்டீர்கள்.”
“கேட்டு வந்த விடுதலை” பாபா சொன்னார்.
“யாரிடம்?” சிவா விடவில்லை.
“பெற வேண்டியவரிடம்.”
அப்படி ஒன்று நடந்ததா? தன் தாய் இவர் துறவி யாவதற்கு விடுதலை வழங்கினாளா? சிவா நிசப்தமானான்.
அதுவரை அவன் அதைக் குறித்து அம்மாவிடம் விசாரிக்க முனைந்த போதெல்லாம் அவள் அதைத் தவிர்த்துத் தவிர்த்து வந்ததை நினைத்தான்.
இப்படி ஒன்று நடக்க முடியுமா?
தன் கணவன் துறவியாவதற்கு மனமார ஒரு மனைவி அனுமதி வழங்க முடியுமா?
அவனால் ஒன்றும் பேச முடியவில்லை.
அப்படி ஒரு விடுதலை வாங்கி வருமளவு இந்த மனிதர் என்ன கல்நெஞ்சர் என்று அவர் மீது அவனுக்கு ஒரு வெறுப்பு தோன்றியது.
ஆனால் வெறுப்பது விரும்புவது இந்த எல்லைக் கோட்டை அவர் கடந்து விட்டவர். கனிந்து நின்ற அந்த தோற்றமே அவனுக்கு உணர்த்தியது.
இவரிடம் தனக்குள்ள எல்லா வழக்குகளும் ரத்தாகி விட்டன. ஓடும் நீர் போல, உதிர்ந்த இலை போல இவர் தனக்குப் புறம்பானவர்.
ஒரு மகன் பார்ப்பதைப் போல அவன் பாபாவைப் பார்த்தான்.
இந்த உருவம் தன் தந்தை!
எனினும் இதற்கும் தனக்கும் இங்குள்ள மூவருக்கும் என்ன சொந்தமோ அந்த சொந்தம் தான் மிஞ்சியிருப்பது.
அவனால் முதலில் அதை ஏற்க முடியவில்லை. ‘இதைத் தேடி, இதைக் கண்டுபிடிக்கவா நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் பயணம் செய்து நான் இங்கு வந்தேன்?’
பாபா அவனையே குறுகுறுவென்று சற்று நேரம் பார்த்தார்.
அந்த அமெரிக்கனுக்கு சட்டென்று எல்லாம் விளங்கி விட்டது.
“மிஸ்டர் கங்கப்பா… வொட்ரீ வேல்… லெட்ஸ் ஹாவ் எ மூவ்…”
அவரைத் தான் தனியாகச் சந்திக்க அவன் வசதி செய்து தருகிறான் என்பதை சிவா உணர்ந்தான்.
“தேர் ஈஸ் நதிங் பெர்ஸனல் பிட்வீன் மீ அண்ட் ஹிம்.”
தனக்கும் தன் தந்தைக்கும் மத்தியில் நெருக்கமாக ஒன்றுமில்லை என்று அவன் கூறியதை கங்கப்பாவும் அந்த அமெரிக்கனும் கூர்ந்து கவனித்தனர்.
“வோட்ஸ் ஹி?” என்று சிவாவின் தொழிலைப் பற்றி அந்த அமெரிக்கன் கேட்டான்.
வெற்றிவேல் பதிலளித்தான்.
“எ ரைட்டர்.”
பாபா மீண்டும் சிவாவைப் பார்த்தார்.
“கேன் யூ கம் டு த ஸ்டேட்ஸ்.. வித் மீ?”
சிவா தன்னை அமெரிக்காவிற்கு அழைத்த அவனை ஏறிட்டு நோக்கினான்.
“நோ.. ஐ காண்ட்.. தாங்யூ” என்று பளிச்சென்று தன் மறுப்பைத் தெரிவித்தான்.
தன் தந்தையின் மீது அந்த அமெரிக்கன் வைத்துள்ள மதிப்பு தனக்கு ஒரு வாழ்வு அளிக்க முயற்சிப்பதை அவன் சுயமரியாதை எதிர்த்தது.
தன்னை மீறி அது வெளிப்பட்டு விட்டது. அவன் அதற்கு ஒரு சாட்சியாகத் தன் தந்தையே இருக்க நேர்ந்து விட்டதைக் குறித்து அவன் மகிழ்ந்தான்.
அவனைப் பரிவுடன் பார்த்தார் பாபா.
“விடுதலை பெறுக” என்றார்.
அவனுக்குச் சொல்ல வேண்டியது யாவும் அதில் அடங்கிவிட்டது என்பதுபோல் அவர்.
முகத்தில் ஒரு நிறைவு.
இனி அங்கிருப்பதில் அர்த்தமில்லை என்று சிவா உணர்ந்தான். சென்னையும் தாமுவும் உடனே புறப்படு என்று கூப்பிட்டனர்.
திரும்பி வரும்போது வெற்றிவேல் கூட வந்தான்.
அவர்கள் ஆற்றில் இறங்கிக் குளித்தனர். வெற்றிவேல் வைத்திருந்த துண்டில் தலை துவட்டிக் கொண்டே கரையேறினான் சிவா.
“என்னடா நீ பேசலே?” என்றான் வெற்றிவேல்.
“நோ கமெண்ட்ஸ். எங்க அப்பா ஒரு நாள் ஓடிப் போனார். இன்னைக்கு நான் அவரை இழந்து விட்டேன் தட்ஸ் ஆல்”
“அதைத் தவிர?”
“வாழ்க்கை நிற்கிறது. தன்னந் தனியாக எதிர்தாதுப் போராடு என்று கேட்டுக் கொண்டு”
“நல்லது.”
அண்செட்டியில் ஒரு டீக்கடை ஹோட்டலில் இட்லி வடை சாப்பிட்டு விட்டு வெற்றிவேலிடம் விடை பெற்றான் சிவா.
அவன் சட்டைப் பையில் ரூபாய் நோட்டுக்களை வைத்து மடித்த கவரைச் செருகினான் வெற்றிவேல்.
“இந்த ‘ட்ரிப்’ ஒனக்கு நல்லா இருந்திருக்காது.. ஐ’ம் ஸாரி சிவா.”
“நோ… இல்லே வெற்றிவேல். இது எனக்குப் பலம் தந்திருக்கு.
“எப்படி?”
“நான் தனி…தன்னந் தனி. ஐ ஹாவ் டூ மீட் லைஃப்.”
பஸ் ஹாரன் கேட்டது. சிவாவின் கையைப் பிடித்துக் குலுக்கினான் வெற்றிவேல்.
“ஆல் த பெஸ்ட்”
தொடரும்