Blog

  • கழல் தொழுதல் முறையல்லவா !

    கழல் தொழுதல் முறையல்லவா !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், அவுஸ்திரேலியா

    உண வூட்டும் கையதனை
    உதறி நிற்கும் உள்ளங்களே
    மன முடைந்து நிற்கின்ற
    நிலை யுமக்குத் தெரியலையா
    தின மும்மை கண்விழித்து,
    கண நேரம் பிரியாமல்
    பிணி யனைத்தும் தான்சுமந்த
    சுமை தாங்கி நினைவிலையா!

    அணி மணிகள் கண்டாலோ
    துணி வகைகள் பார்த்தாலோ
    வகை வகையாய் வாங்கிவந்து
    வடி வாக்கும் மனமல்லவா
    இரவு பகல் தெரியாது
    எதையும் தனக் காக்காது
    நில வுலகில் உமைமட்டும்
    நினைத்த மனம் கலங்கலாமா!

    கண் இருந்து நீர்வடிந்தால்
    புண் ணாகிப் போம்மனது
    தண் நீரும் பருகாமல்
    தான் உருகும் மனதங்கே
    மண் மீது வந்தசெல்வம்
    என் றெண்ணி வாழுமந்த
    கண் கண்ட தெய்வத்தின்
    கழல் தொழுதல் முறையல்லவா!

    (குறிப்பு: ஆஸ்திரேலியாவிலுள்ள முதியோர் அமைப்பு ஒன்றின் விழாவுக்குச் சென்று உரை ஆற்றிய வேளை, என் மனத்தில் எழுந்த எண்ணமே இக்கவிதை. அவர்களின் முன்னால் கண்களில் நீர்முட்ட உரையாற்றும் நிலை ஏற்பட்டது. அந்த உள் உணர்வினால் உடனே எழுதியதே இக்கவிதை.)

    Share
  • மொழியறிஞர்களின் கவனத்திற்கு

    மொழியறிஞர்களின் கவனத்திற்கு

    அண்ணாகண்ணன்

    முகநூலில் நோக்கர் என்ற மொழி ஆய்வுக் குழுவை நான் நடத்தி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்தக் குழுவில், மொழியைப் பயன்படுத்தும்போது நிகழும் பிழைகளைச் சுட்டிக் காட்டித் திருத்தங்களைப் பரிந்துரைக்கிறோம். சிறப்பான மொழிப் பயன்பாடுகளைப் பாராட்டுகிறோம். அண்மையில் தினகரன் நாளிதழில் வெண்ணை உருண்டை கல் என இருந்த தலைப்பினை வெண்ணெய் உருண்டைக் கல் எனத் திருத்தப் பரிந்துரைத்தேன். அதன் மீது நண்பர்கள் கருத்துரை வழங்கியிருந்தார்கள்.  வெண்ணெய் உருண்டைக் கல் எனப் பிரித்து எழுதக் கூடாது, வெண்ணெயுருண்டைக்கல் எனச் சேர்த்து எழுத வேண்டும் என்று வலியுறுத்திய அன்பர்களுக்கு எனது பதிலை இங்கே தொகுத்து வழங்குகிறேன்:

    நாம் பண்டிதர் கண்ணோட்டத்திலிருந்து, இலக்கணத்தை நிலைநாட்ட நோக்கரை நடத்தவில்லை. அனைவருக்கும் எளிதில் புரியும்படியாக, சரியாக எழுத வேண்டும் என்பதற்காகவே நடத்துகிறோம். அவ்வாறு அது இல்லையெனில், எழுதியவரும் அதை ஏற்றுப் பதிப்பித்தவருமே முதல் பொறுப்பாளிகள். இதை அவர்களின் தோல்வியாகவே நான் மதிப்பிடுவேன்.

    சரியாகப் பொருள் உணர்த்துவதற்காகவே இலக்கணம். அதை இயன்ற வரை எளிமைப்படுத்தியே எடுத்துச் செல்ல வேண்டும். இல்லாவிடில், இலக்கணமே கடினமானது என மக்கள் கருதுவர். அது தமிழுக்கே கேடாக முடியும்.

    யாப்பில் சீர்கள் அமைந்திருப்பதால் எல்லாப் பெரிய சொற்களும் இயல்பாகவே வகையுளிக்கு ஆட்பட்டிருக்கும். எனவே பிரித்துப் பிரித்தே படிப்பார்கள். அது சீரான மூச்சு ஓட்டத்திற்கும் உதவும்.

    உரைநடைக்கு என வரும்போது தேவைக்கு ஏற்ப, பிரித்தே எழுத வேண்டும், படிக்க வேண்டும். சேர்த்துப் படிப்பதற்கு மூச்சை அதிகம் இழுக்க வேண்டும். இது, வாசகரை எளிதில் சோர்வடையச் செய்யும். மொழியை அறிவியல் அடிப்படையில் அணுக வேண்டும். எந்திரத்தனமாக இலக்கணத்தைத் திணிக்கக் கூடாது.

    அடிப்படையில் இலக்கணம், மிகுந்த நெகிழ்வுத்தன்மை உடையது. இலக்கணத்தின் ஒவ்வொரு விதியும் ஒவ்வொரு தேவைக்காகவே உருவாக்கப்பெற்றவை. எல்லா விதிகளும் எல்லா இடங்களுக்கும் பொருந்தா. தமிழில் உரைநடைக்கு எனத் தனித்த விதிகள் உருவாகவில்லை. செய்யுள் இலக்கணத்தை அடியொற்றியே இது தீர்மானிக்கப் பெறுகிறது. காலந்தோறும் எழும் தேவைகளுக்கு ஏற்ப, இதை இற்றைப்படுத்த வேண்டும்.

    புதிய புதிய திசைச்சொற்களை, ஒலிக்குறிப்புகளை, நீண்ட சொற்களை அணுகுவதற்குப் பண்டித நோக்கை விட, பாமர நோக்கு வேண்டும். அவர்கள் கோணத்திலிருந்து, அவர்கள் இடத்திலிருந்து அதைப் பார்க்க வேண்டும், பயன்படுத்த வேண்டும். அவர்கள் அறிந்த இடத்திலிருந்தே, அறிந்த ஒலியிலிருந்தே, புதிய சொற்கள் பிறக்க வேண்டும். இது தொடர் சங்கிலி போன்றது. இந்தத் தொடர்பைத் துண்டித்துப் புதிய இடத்திலிருந்து தொடங்குவோர், தீவாகச் சுருங்கிவிடுவர். மொழியைச் செம்மையுறச் செய்ய விரும்புவோர், மைய நீரோட்டத்திலிருந்து விலகவே கூடாது.

    ஒரு விதியையோ, சொல்லையோ, நெறிமுறையையோ வழங்குவோர், தாம் முதலில் சொல்லிப் பார்த்து, தம் சுற்றத்தில் சிலரிடம் சொல்வதற்குக் கேட்டுக்கொண்டு, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, அதன் பிறகே ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும். சந்தையில் ஒரு புதிய பொருளை அறிமுகப்படுத்த, எவ்வளவு மெனக்கெடுவார்களோ, அந்த அளவுக்கும் மேலே இதில் மெனக்கெட வேண்டும்.

    மேலும், ஒரு விதி அல்லது சொல் பரந்தேற்பு பெறும் முன்னர், அது குறித்து வைக்கப்படும் அனைத்துக் கருத்துகளும் பரிந்துரைகளே. அவை தீர்மானங்கள் அல்ல. நான் சொல்கிறேன், நீ பின்பற்று என அதிகாரத்துடன் இதைச் சொல்லக் கூடாது. உனக்கு இதுகூடத் தெரியவில்லையே என்ற ஏளனமும் கூடாது. இவையனைத்தும் மொழிப் பயனாளரை நம்மிடமிருந்து மேலும் மேலும் விலக்கி வைத்துவிடும். இந்தத் தெளிவு இருந்தால், நமது அணுகுமுறையில் பெரிய மாற்றம் உண்டாகும்.

    மொழியில் நமது பரிந்துரையை ஒருவர் கேட்பது, ஒரு மேசையில் பேச்சுவார்த்தைக்குச் சமநிலையில் உள்ள இருவர் கூடுவது போன்றது. அங்கே இருவருக்கும் ஒத்திசைவு பிறக்க வேண்டும். பயனாளரின் அனைத்து வினாக்களுக்கும் விடை கிடைக்க வேண்டும். ஒவ்வொரு சிக்கலையும் நுணுக்கமாகக் கேட்டு, அதைத் தீர்க்க முயல வேண்டும். அதன் பிறகே ஏற்பு என்ற நிலை உருவாகும். இந்தப் பொறுமையும் அணுக்கமும் தாமுறவாக்கலும் இல்லாவிட்டால், மொழி மேலும் மேலும் சிக்கலுக்கு உள்ளாகும். இந்தச் சிக்கலுக்கு மொழியறிஞரின் இயல்பே அடிப்படைக் காரணம். பயனாளரை அதட்டி, மிரட்டி, விரட்டியவர் அவரே.

    மொழிக்கு அதைப் பயன்படுத்துபவரே முதன்மைத் தேவை. மொழியறிஞர் இங்கே உதவியாளர் மட்டுமே. தாமே மொழியை ஆக்கியவர், தாமே சொல்லை ஆக்கியவர், தாமே இலக்கணம் கற்றவர், தாமே பிஸ்தா என்ற எண்ணத்தை மொழியறிஞர் அறவே விட்டொழிக்க வேண்டும். தாயுள்ளம் கொண்ட தொண்டரின் மனநிலைக்கு அவர் வர வேண்டும். அப்போதுதான், அந்தச் செயலில் இருந்தே பிறர் ஊக்கம் பெறுவர். அப்போதுதான் பிறருக்கும் பற்றுதல் பிறக்கும். அலங்கார நடையும் அலட்டலும் புகழ் வேட்கையும் மமதையும் அவருக்கு மட்டுமின்றி, மொழிக்கும் பெரும் பின்னடைவைத் தந்துவிடும். ஏனெனில் அவர் அந்த மொழியின் பிரதிநிதியாகத் தம்மைக் காட்டிக்கொள்வதால், அவரது பெருமையும் சிறுமையும் அந்த மொழியையும் பாதிக்கும்.

    இவற்றைக் கவனத்தில் கொள்வது, மொழியறிஞர்களுக்கு நலம் பயக்கும்.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 237

    படக்கவிதைப் போட்டி – 237

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    லோகேஷ் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (22.12.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 236-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 236-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த நிழற்படமிது. இதனை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டி 236க்கு வழங்கியவர் திருமதி. சாந்தி மாரியப்பன். நிழற்பட நிபுணருக்கும் தெரிவாளருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

    பட்டாசுச் சுற்றிக்கொண்டே மத்தாப்புப் புன்னகையைச் சிதறவிடும் இவ் ஆரணங்குகள், ஆபத்தான தொழிலையும் அச்சமின்றி ஆனந்தத்தோடு செய்வதைக் காணும்போது, வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் துயரெனும் பகைவெல்ல, முகத்திலே மலரும் நகை பெரிய ஆயுதம் என்ற உண்மை புரிகின்றது.

    இனி, கவிதைச் சரவெடிகளைக் கொளுத்திப்போடக் காத்திருக்கும் கவிஞர் பெருமக்களைக் கனிவோடு அழைக்கிறேன்.

    *****

    தெய்வங்களும் வெடிவிபத்திலிருந்து எம்மைக் காப்பதில்லை; இத்தொழிலை விட்டால் பிழைப்புக்கு வேறு வழியுமில்லை என்று வேதனையோடு சிரிக்கும் மாதரிவர் என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வெடிக்கும் உண்மைகள்…

    செய்யும் வேலை சிரமந்தான்
    சிரித்தே அதையும் செய்கின்றோம்,
    உய்யும் வழிதான் வேறில்லை
    உயிரைப் பணயமாய் வைக்கின்றோம்,
    தெய்வ மெல்லாம் வெடிகளிலே
    தீயில் எம்மைக் காப்பதில்லை,
    பெய்யும் மழையால் பிழைப்பில்லை
    பெரிதிலை பெற்றிடும் துன்பங்களே…!

    *****

    ”வீட்டின் வறுமையால் பெண்கள் வெடி தயாரிக்கும் பணிசெய்வது நாட்டின் வறுமைக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு” என்று வருந்துகின்றார் திரு. கோ. சிவகுமார்.

    நலிவுற்ற பொருளாதாரம்

    அடுப்பங்கரையில்
    சமையல் பணி
    செய்யும் வேளையில்
    ஆபத்தான வெடிகள் தயாரிக்கும் வேலையில்
    வீட்டுப் பெண்கள்!
    வேலை முடிந்ததென்று வெளியே சிரித்தாலும்
    நாளைய பொழுதுகளைப் பற்றிய பயம்
    இருக்கத்தான் செய்யும் இதயத்தின்
    எங்கோ ஓர் மூலையில்!
    வீட்டின் வறுமையும்
    வாட்டும் வேதனைகளும்
    கூட்டி வந்து
    விட்டதோ வேலைக்கு
    என்றால்
    நாட்டின் பொருளாதாரம்
    நலிவுற்றிருக்கிறது
    என்று தானே பொருள்!

    *****

    ”வெடித் தயாரிப்பால் சுற்றுப்புறத்துக்குச் சீர்கேடு” என்று வெற்றுமுழக்கம் செய்வோரால் வயிறு நிறைவதில்லை. திரியினில் வைத்த தீயால் வறுமை கருகுமென்றால் முகத்தில் முறுவல் பூக்கும் என்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    வெடிச்சிரிப்பு

    சுற்றுப்புறத்தைப் பாழ்படுத்தும் என
    வெற்றுக் கோஷம் போட்டிடுவார்
    மாற்றுத்துணிக்கோர் வழிசெய்யார்;
    தேற்று நிலையும் தானுரையார்!
    குளிர்பதனப் பெட்டியிலும்
    குளிர்சாதனச் சூட்டினிலும்
    பாழுறும் சீதளச் சூழ்நிலையைக்
    கண்டும் காணாமல் ஒதுங்கிடுவார்!

    பணம்படைத்தோர் பாழாக்கும் நிகழ்வெல்லாம்
    தினந்தினந்தான் நடந்தாலும் சிந்தைசெய்யார்!
    வலியோர் தம் வாய்ச்சொல்லும் சட்டமாகும்
    எளியார் தம் வாழ்க்கையையார் எண்ணிடுவார்?!

    சுற்றும் வெடிக்கட்டினிலே
    வெற்று வயிறு நிரம்பிடுமே…
    கட்டும் தீப்பெட்டியிலே
    கிட்டிய சில்லறை கொண்டிங்கே
    வாடிய வயிறும் குளிர்ந்திடுமே…

    திரிதனில் வைத்திட்ட தீயினாலே
    வறுமை நீங்கி வயிறு நிறைந்தால்
    இறுகிய முகத்திலும் வெடிச்சிரிப்பு
    மத்தாப்புப் பூவாய்ப் பூத்திடுமே…

    *****

    மணமாலை கழுத்தில் ஏறச் சரவெடி மாலை தொடுத்துப் பணம் சேர்க்கும் கன்னியவள் என்கிறார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ். மணமுடிக்க ஆடவர்க்குத் தட்சிணை கொடுக்கும் அவலநிலை இந்திய மாதர்க்கு என்று தீரும்? ஆடவர் மனம் என்று மாறும்?

    இனி எல்லாம் சுகமே!

    கழுத்தில் பூ மாலை விழக்
    காத்திருக்கும் கன்னி இவள்!
    காளையர் வீட்டில்
    கட்டணம் கேட்கச்
    சிக்கனமாய் இவள்
    சில்லறையைச் சேர்த்தாள்
    கொட்டிச் கிடந்த வெடிகளைப்
    பூ மாலையாய்க் கட்டியே!

    பூவாய் இந்தப்
    பூவை சிரித்துப் பேசச்
    சோர்வின் களைப்பும்
    நெஞ்சின் கவலையும்
    கலைந்து போனதே!
    கொடுத்த வேலையை
    விரைந்து முடித்திட
    புது வேகம் பிறந்ததே!

    சரம் சரமாய் வீதியில்
    வெடித்து மகிழ்ந்திடும்
    மழலைகளின் முகம் கண்டு
    மகிழ்ந்திடும் அன்னை தந்தையர்
    இவர்களின் அன்பு உள்ளம் கண்டு
    தான் தொடுத்த பூ மாலை
    இறைவனடி சேர்ந்த
    இன்பம் பொங்கும் இவர்கள் நெஞ்சில்
    அதில் பஞ்சாய்ப் பறந்து மறந்து போகும்
    தான் பட்ட துன்பம் எல்லாமே!

    *****

    எழுதுகோல் ஏந்தும் வயதில் ஏழ்மையை ஏந்தியது ஏனடா? புன்னகைப் பூக்கள் தொழிற்சாலையில் கருகுதல் கொடுமையடா! என்று ஏந்திழையரின் பரிதாபநிலை கண்டு இரங்குகின்றார் திரு. ராவணா சுந்தர்.

    ஏழ்மையின் புன்னகை

    பாரடா பாரடா
    பைந்தமிழ் நாட்டைப் பாரடா!
    பயிலும் பருவத்தில்
    சிறுமியின் சிரங்களைப் பாரடா!
    எழுதுகோல் ஏந்தும் வயதில்
    ஏழ்மையை ஏந்தியது ஏனடா?
    மலர்கள் தொடுக்கும் விரல்களில்
    பட்டாசு திரள்வது கேடடா!
    புன்னகையின் பூக்களெல்லாம்
    தொழிற்சாலையில் கருகுவது கொடுமையடா!
    நாளைய பாரதம் மலர்வதற்கு
    இன்றைய விதைகள் பலிகளா?
    சட்டங்கள் இயற்றுவது
    வெறும் கண்துடைப்புத் தானடா?
    சூழ்ச்சியின் அரசியலில்
    இளஞ்சிறகுகளைப் பறிப்பது பாவமடா!
    பணமுதலைகளும் பதவி வெறியர்களும்
    உலவும் பூவுலகில் பிறந்தது விதியடா!
    பள்ளிகளின் பட்டறையில்
    உன்னை மெருகேற்றாமல்
    ஏழ்மை இருளை அகற்றமுடியாது!

    ******

    நிழற்படத்துக்குப் பொருத்தமான விழிப்புணர்வுக் கவிதைகளைத் தீட்டித் தந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுபெற்றிருப்பது இனி…

    கந்தக மலர்!

    ஏன் கந்தகபூமியில் இவள் பிறந்தாள்?
    எந்த வறுமையிலும் வளமாய்ச் சிரிப்பாள்!
    வெடிகளை, மருந்து என்பதை மறந்தாள்!
    மருதாணியாய் விரல் முழுக்கத் தரித்தாள்!

    வெடி மலர்களைக் கொட்டிக் குவித்துவிட்டால்
    அறியாமையிலே கட்டிக் கட்டிக் கோத்துவிட்டால்
    சரம்சரமாய் விஷப்பூக்களைச் சேர்த்துவிட்டால்
    தகதகவென எரிந்திடுமே தீக்குச்சி தலைப்பட்டால்!

    வேறு தொழில்கள் அரசு கொண்டுவந்தால்
    அல்லது பயிருக்காவது கொஞ்சம் நீர்தந்தால்
    உயிருக்கும் வயிற்றுக்கும் பசி தீர்ந்திடாதா?
    வாழ்வைப் பணயமாக்கும் இத்தொழில் மாய்ந்திடாதா?

    இந்தப் பூவுடன் சேர்த்தால் நாரும் எரியும்
    சில சமயத்தில் நாருடன் சேர்ந்து ஊரும் எரியும்!

    வெடி மருந்துகளை மருதாணியாய்த் தரித்து, சரம்சரமாய் விஷப்பூக்களைக் கோக்கும் வறுமையிலும் வளமாய்ச் சிரிக்கும் வனிதையரின் நிலைகண்டு, ஏழையர் வாழ்வைப் பணயமாக்கும் இத்தொழில் மாய்ந்திடாதா? என்று வேதனையில் நனைந்த சொல்மலர்களால் கவிமாலை தொடுத்திருக்கும் திருமிகு. புவிதா அய்யாதுரையை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 2

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 2

    தி. இரா. மீனா   

    வசன இலக்கியமென்பதை ஒர் இலக்கியவகை என்று சொல்வதை விட அதை ஒரு பரம்பரை எனக் கூறலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இலக்கியவகை என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற் குட்பட்டது. ஆனால் பரம்பரை என்பது காலத்தைத் தாண்டி நிற்பதாகும். வகை என்பதற்குப் பின்னால் குறிப்பிட்டதொரு முறை இருக்கும். அது முழுமை அடையும் போது  முறை அல்லது வகை என்பது முற்றுப்பெறும். ஆனால் பரம்பரை என்பது எல்லாக் காலங்களுக்கும் ஏற்றவகையில் தன் பாணியை மொழியோடு இணைத்துக்  கொண்டு  தொடரும் என்பது அதற்கு அவர்கள் தரும் விளக்கமாகும். வசனங்கள் வெறும் வடிவமாக மட்டுமின்றி முன்னோக்கிச் செல்லும் தன்மையுடைய பரம்பரையாக வளர்வதற்குக் காரணம், சரணர்கள் ’இயற்கைக்கு அழிவுண்டு; ஜங்கமத்துக்கு அழிவில்லை” என்ற எண்ணமுடையவர்களாக இருந்ததேயாகும்.

    ஏற்றத்தாழ்வற்ற சமூகநிலையைப் பற்றி பலர்  பேசியிருந்தாலும் வெகுஜன சமூக சித்தாந்த நிலை என்பது வசனக்காரர்களால் உருவாக்கப்பட்டது. அதனால் அவர்கள் தொழில் சித்தாந்தத்தை தாம் வாழும் சமூகத்தில் நிலைநாட்டினர். அவர்கள் காட்டும் அதன் தொழில் சித்தாந்த இயல்புகளென்பது கட்டாயக் காயகம், தொழிலே தெய்வம், தொழில் வேறுபாடின்மை, விருப்பமான தொழில், அதிகபலனை விரும்பாத தன்மை, உணவோடு கூடிய காயகம் ஆகியவையாகும். உணவு தேவனாகும் போது உணவைத் தேடித்தரும் தொழில் தெய்வமாக வேண்டியுள்ளது. ”உழைப்பில்லாத சரணன் முட்டாள்” என்ற சென்ன பசவன் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. சரணர் கொள்கையானது மனிதனு்க்கு தீட்சை வழங்கும் போது லிங்கத்துக்கு ஒரு பெயரையும் [முத்திரை] பக்தனுக்கு ஒரு தொழிலையும் கட்டாயப்படுத்தித் தருவதாகும் .அவரவர்  விருப்பத்திற்கு ஏற்றபடி தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதால், தொழில் ஏற்றத்தாழ்வைப் போக்கிய காரணத்தால் தம்மைத் தொழிலின் பெயரால் அறிமுகம் செய்து கொள்வது  அவர்களுக்கு மிகப் பெருமையாக இருந்தது. சான்றாகத் துணி ‘நெய்யும் தாசிம்மையா, என்று இயற்பெயரோடு தொழில் பெயரையும் சேர்த்து அறிமுகப்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

    இரண்டாவதான தொழில் தெய்வம் என்பதில் தொழில் என்பது வெறும் வேலையை மட்டும் குறிப்பதில்லை. வெளியில் வேலை, ஆத்மாவிற்குள் அறிவு என்ற பார்வையில் தொழில் செய்பவன் ஒன்றிணைந்து செய்ய வேண்டும். அந்த ஒன்றிணைப்பு வழிபாட்டை மறக்கச் செய்தாலும் அதில் தவறில்லை. அதனால் ’காயகவே கைலாசா [உழைப்பே கைலாசம்] என்பது அவர்கள் கொள்கையானது.

    தொழில் வேறுபாடில்லாத தன்மை உருவாக வேண்டுமெனில் பொருளை வைத்துச்செய்யும் தொழில் உயர்வானது; உடலுழைபபு இழிவானது என்ற எண்ணம் நீங்க வேண்டும் என்ற சிந்தனையில் உழைப்புச் சமன்பாட்டை சரணர் உருவாக்கினர்.” தறி போட்டு நெசவாளியானான்”, வெளுத்து சலவைத் தொழிலாளியானான்” என்று அறிவார்ந்த உழைப்பை முன்னிறுத்திச் சமன்பாட்டை ஏற்படுத்தினர்.

    பரம்பரையான தொழிலைச் செய்து வந்ததால் சமுதாயத்தில் சாதி வேறுபாடு ஆழமானதாக இருந்தது. சரணர்கள் இந்த சாதிக்கொடுமையை அழித்தனர். சரணர்கள் அவரவர் வசதி, விருப்பத்திற்கு ஏற்றபடி எந்தச் சாதியானாலும் எந்தத் தொழிலானாலும் தாம் விரும்பியதைச் செய்தனர். சான்றாக மோளிக மாரையா என்ற சரணர் நாட்டை ஆள்வதை விட்டுவிட்டு மரம் வெட்டுவதைத் தன் தொழிலாகக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    “சரியான கூலியைத் தரும் தின நித்தியத் தொழில் மகிழ்ச்சி வேண்டும்” என்று [நுலிய சந்தய்யா] சொல்லி வசனக்காரர்கள் புது தர்மத்தை அறிமுகம் செய்தனர். பன்னிரண்டாம் நூற்றாண்டில் வசனக்காரர்கள் கூறிய புதுதர்மம் உயர்ந்த சிந்தனையாகும்.

    உழைப்பு உணவோடு  கூடியது என்ற பார்வையை சரணர்கள் வலியுறுத்துகின்றனர். குருவிற்கு உடலாலும், லிங்கத்திற்கு மனத்தாலும், ஜங்கமனுக்குப் பொருளாலும் தானம் செய்ய வேண்டுமென்று  சரணர்கள் வழிகாட்டுகின்றனர். செல்வத்தில் சமன்பாடு வந்துவிட்டால் சமுதாயச் சமன்பாடு தானாகவே ஏற்படும் என்ற கருத்தை ஆழமாக வலியுறுத்துகின்றனர். இவ்வகையில் அவர்களின் தொழில் சித்தாந்தம் மிக உயர்வானது.

    வசன இலக்கிய கர்த்தாக்களாக இருநூறுக்கும் மேற்பட்டோர் இருந்திருக்கின்றனர். இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்கள் கிடைத்திருக்கின்றன. வசன இலக்கிய ஆசிரியர்கள் தாங்கள் சார்ந்த இடம், தெய்வம், ஆளுமை அடிப்படையில் தங்கள் வசனங்களுக்கான முத்திரையை [அடையாளம்] அமைத்துக் கொண்டனர், பொதுவாக நான்கு அடி தொடங்கி பதினைந்து அடி வரையில் வசனங்கள் அமையும். ஒவ்வொரு வசமும் படைப்பாளியான சரணர் வாழுமிடக் கடவுளின் முத்திரையை அடையாளமாகக் கொண்டிருக்கும்.

    ஆனந்தய்யா :

    வசனக்காரர்கள் வரிசையில் முதலாவதாக இடம் பெறும் ஆனந்தய்யா என்னும் சரணர் ஆனந்தசிந்து  ராமேஸ்வரன் என்னும் முத்திரையில் சிவனை வழிபட்டவர். இரண்டு வசனங்கள் அவருடைய பெயரில் இடம் பெற்றிருப்பினும் ஒரு வசனம் முழுமையானதாகக் கிடைத்திருக்கிறது.

    “கல்லைப் பிடித்து மாரியுடன் நட்புக் கொள்வீர்
     துன்பப்பட்டுப் பல பிறவிகள் எடுப்பீர்.
     சிவனைக் கண்டேன் என்று  சொல்வது வெற்றாசைதான்.
     அவ்வகை குற்றமுடைய மனிதர்களை வெறுப்பவன்
     ஆனந்தசிந்து ராமேஸ்வரன் “

    ஆயதக்கி மாரையா:

    ஆயதக்கி மாரையா ராய்ச்சூர் மாவட்டம் லிங்காசுரு தாலுகாவைச் சேர்ந்தவர். லக்கம்மா அவருடைய மனைவி. கல்யாண் நகர வீதிகளில் சிதறிக் கிடக்கும் தானியங்களைப் பொறுக்குவது அவர் தொழிலாகும். உடல் உழைப்பு மற்றும் சிவ வழிபாட்டிற்காகத் தம்மை அர்ப்பணம் செய்து கொண்டவர்களில் மிக முக்கியமானவராகப் போற்றப்பட்டவர். உழைப்பே தெய்வம் என்பது அவர் வாழ்வின் குறிக்கோள். உழைப்பின் தத்துவத்தைப் பேசுவதாக அவர் வசனங்கள் அமைகின்றன. அங்குள்ள அமரேஸ்வரர் அவருடைய வசனங்களின் முத்திரையாகும். இவருடைய வசனங்கள் காயகத்தின் தத்துவத்தை பெரிய அளவில் பேசுகின்றன. சில வசனங்கள் இங்கே;

    1. “உழைப்பில் ஈடுபட்டிருக்கும் ஒருவன்
         குருவைப் பார்ப்பதை மறந்து விடவேண்டும்
         லிங்கத்தை வணங்குவதைக் கூட மறந்து விடவேண்டும்
         ஜங்கமர்  காத்திருப்பினும் கவலைப்படக்கூடாது
         உடலுழைப்பே  கைலாசம் என்பதால்.
         அமரேஸ்வரலிங்கர் கூட உடலுழைப்பிற்குட்பட்டவர்.”

     2. “சந்திரகாந்தக் கற்சிலையில் நீர்த்துளிஅடங்கி்யிருப்பது போல
          பசுக்களில் கோரோசனை அடங்கி்யிருப்பது போல
          கல் விறகுகளில் நெருப்பு அடங்கியிருப்பது போல
          உண்மையுடையோரின் நெஞ்சங்களில்
          நீரின் முத்துபோல அடங்கியிருக்கின்றாயன்றோ
          அமரேஸ்வரலிங்கமே”

    3. “அழியாத செல்வத்தைத் திரட்டுவோருக்கு
          களஞ்சியத்தின் தயவேன்?
          பற்றற்றவனைப் பாதுகாப்போருண்டோ?
          தொழில் செய்பவரை அந்தணர் துன்புறுத்துவதேன்?
          அக்குணம் அமரேஸ்வரலிங்கத்துக்குத் தொலைவானதாம்”   

    4. “கனியும்வரை பழம் வேரின் விருப்பப்படியிருக்க வேண்டும்
         அதுபோல மனிதனாக இருந்து வாழ்ந்து முடிக்கும்வரை
         உண்மைச் சரணரின் நட்பும் ஜங்கமரின் சேவையும்
         தொடரும்போதுதான் அமரேஸ்வரலிங்கரை அறியமுடியும்”

    5. “சபதமேற்று காயகம் விட்டு
         பக்தரின் வீடு சென்று
         பொன்னும் பொருளும் இரப்பது
         உயர் பக்தனுக்கு நற்செயலன்று
         அக்குணம் அமரேஸ்வரலிங்கருக்குத் தொலைவானதாம்”

    6. “பிச்சை எடுத்துக் கொண்டு வந்த உணவை வைத்து
          வழிபாடு செய்வதென்பது முடவனின் பயணம் போன்றது
          பக்தன் பிச்சைக்காரனாக இருக்க முடியுமா?
          பக்தனாகப் பிறந்து வழிபாட்டிற்காகப் பிச்சையெடுப்பது
          மோட்சத்தைத் தேடும் வழியல்ல. அவ்வகை
          முயற்சிகளில் அமரேஸ்வரனை அடைய முடியாது.”

    7. “பக்தனுக்கு வறுமையுண்டோ?
         உண்மையுடையோருக்கு வினையுண்டோ?
         மனமொன்றிச் செயல்படும் தொண்டனுக்கு
         மண்ணுலகு விண்ணுலகு என்றுண்டோ?
         அவனிருக்கும் இடம் புனிதமானது
         அவனுடல் அமரேஸ்வரலிங்கத்துடன் சங்கமமாகும்.’

    8. “சிறியதொரு பணிசெய்து பெரியதொரு
         கூலி கேட்பது நேர்மையான காயகமாகுமா?
         குறைத்துக் கொடு என பக்தன் சொல்வது
         அமரேஸ்வரலிங்கத்துக்கு தூய்மையின் காயகமாம்”

                                                                                                                                         – தொடரும்       

    Share
  • சேக்கிழார் பா நயம் – 59 (மன்பெரும்)

    சேக்கிழார் பா நயம் – 59 (மன்பெரும்)

    திருச்சி  புலவர்  இராமமூர்த்தி

    திருவாரூரில் பரவை நாச்சியாரைச்  சந்தித்து மகிழ்ந்த  சுந்தரர், இறைச் சிந்தனையுடன் ஆரூர்ப்  பெருமானின் திருக்கோயில் நோக்கி நடந்தார். அத்திருக்கோயில் வாயிலில் அடியார்கள் விளங்கும் தேவாசிரிய மண்டபம் விளங்கியது! பெருமானாகிய தேவதேவரை அடியார்கள் ஆசிரயித்த தேவாஸ்ரய மண்டபம் அது. அங்கிருந்த அடியார்களை வணங்கி, அவர்களின் தொடர்பைப்  பெறுவது  என்றோ, என்றெண்ணி  மிகுந்த பணிவுடன் அவர்களைக் கடந்து திருக்கோயிலுள் புகுந்தார்.

    ‘நான் இந்த அடியார்களுக்கு அடியேனாவேன்’ என்னும் அன்பு தமது திருவுள்ளத்திலே மேலிட்டெழக், கொடிகள் கட்டியதாய், நெடியதாய், வெற்றியேதருவதாய் உள்ள உட்கோபுரத் திருவாயிலைப் பணிந்து, கைகளைச் சிரமேற் கூப்பிக்கொண்டு, திருக்கோயிலினுள்ளே நம்பிகள் புகுந்தார். அப்போது  அழகிய, மணமிக்க கொன்றை மாலையை அணிந்த தோற்றத்துடன் தியாகேசர், சுந்தரர் எதிர்க்காட்சி காணும் வகையில் எழுந்தருளினார். கண்ணெதிரே காட்சி யருளிய பெருமானின் திருப்பாதங்களைக் கண்கொண்டு கண்ட மகிழ்ச்சியில் திளைத்த சுந்தரர், அவற்றைச்  சிரமேற்கொண்டு நான்கு  திருப்பாடல்களால் துதித்தார். அவற்றுள்  முதல்  திருப்பாட்டு,

    மன்பெ   ருந்திரு   மாமறை   வண்டுசூழ்ந்து
    அன்பர்    சிந்தை   அலர்ந்தசெந்   தாமரை
    நன்பெ   ரும்பர   மானந்த    நன்மது,
    என்த   ரத்தும்  அளித்துஎதிர்  நின்றன.

    என்பதாகும். சிவனடியாரின்  உள்ளமாகிய தாமரையைச்  சுற்றி வண்டுகள் சூழ்ந்து வேதங்களை ஒலித்து  ரீங்காரம் செய்யும். அப்போது அவர்களின் உள்ளக் கமலத்தில்  பரமானந்தமாகிய  தேன் ஊறித் ததும்பும். அத்தகைய தகுதியைப் பெறாத எளியேனுக்கும் அதனை வழங்க என் கண்முன் இறைவனின் திருப்பாதங்கள் தாமாக எதிரே வந்து காட்சியளிக்கின்றன.

    விளக்கம் :

    உலகியற் செல்வங்கள் எல்லாம் மிகுந்த முயற்சியால் கிட்டலாம். அவை நம்மை அறவழியில் செலுத்தமாட்டா. விரைவில் அழியும். ஆனால் இறைவன் திருவருளாகிய, அளவிடற்கரிய நிலைத்த பெருஞ் செல்வத்தை தகுதியால் பெரிய வேதங்கள் எளிதாக நமக்கு அளிக்கும்! வேதம் அளிக்கும் செல்வம் செம்மைக்கு ஏதுவான செல்வமாகும். இதனை தேவாரம் ‘’சென்றடையாத திரு‘’ என்று போற்றும். விரிந்த மறை, நிலைத்த மறை, பெருந்திருவைத் தருகின்ற மறை, அளவில்லாத மறை என்ற நான்கு அடைமொழிகள் நான்கு மறைகளைக் குறித்தன. யசுர் வேதத்தின் இடையில் ‘சிவ’ என்னும் அட்சரத் துவயமாகிய தேன் விளங்குவதாகப் பெரியோர் கூறுவர். அவற்றை வண்டுகள் சூழ்ந்து ஒலிக்கின்றன. சூழ்ந்து என்பதற்கு ஆராய்ந்து என்றும் பொருள்.

    பாதத் தாமரையை எண்ணி மகிழும் மனத்துள் சிவத்தேன் தானாக ஊறிப் பெருக, மனம் அதனையே உண்ணும். வண்டுகளோ புறத்தில் சூழ்ந்து கிடக்கும். இதனைச் சேக்கிழார்,

     “மன்று ளாடும்மது வின்னசை யாலே
      மறைச்சு ரும்பறைபுறத்தின் மருங்கே“   

    என்று  முன்னரே  பாடினார். பட்டினத்தடிகள் ,

    “கீழ்மையில்   தொடர்ந்து கிடந்த என் சிந்தைப்
    பாழ்  அறை உனக்குப் பள்ளியறை ஆக்கிச்
    சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசு
    எந்தை நீயிருக்க விட்டனன்..”

    என்று பாடினார். மேலும் அப்பர் பெருமான்,

    “அன்புடைத் தொண்டர்க்கு  அமுதருத்தி, இன்னல் களைவன“
    “சிந்திப் பவர்க்குச் சிறந்து செந்தேன், முந்திப் பொழிவன“

    என்று பாடியுள்ளார். இவ்வலர்ந்த தாமரையிலே ஊறுவது இறைவனது திருவடியாகிய மது – தேன். அது தருவது பரமானந்த அநுபவமாம். இவ்வாறன்றிச் சிந்தையிலே அலர்ந்த செந்தாமரை எனக் கொண்டு சிந்தையை அந்தத் தாமரைபூக்கும் நீர் நிலையாகக் கூறுவாருமுளர். அவர்கள்,

    “……..அன்பர் இதய மென்னும், செழுமலரோ டையின்மலர்ந்து
    சிவானந்தத் தேன்றதும்பு தெய்வக் கஞ்சத், தொழுதகு சிற்றடி…..“ (விருத்தகுமார பாலரான படலம்)  என்று திருவிளையாடற் புராணமுடையார் இதற்குப் பொருள் கூறியிருத்தலைக் கூறுவர்; அன்றியும் மது தாமரையினுட்கலந்து அது அலர, அலர உள்ளே ஊறுவதுபோலச் சிந்தையுட் கலந்த திருவடியே அன்பு முதிர முதிர ஆனந்தமாய் ஊற்றெடுப்பதாம். எனவே திருவடியையே மதுவாகக் கூறினர் என்பது.

    நன் பெரும் பரமானந்த நன்மது – வேதத்திலே ஏனைத் தேவர்கள் பெயரோடு சேர்த்து விஷ்ணுவானந்தம் – அக்கினியானந்தம் – இந்திரானந்தம் முதலியன கேட்கப் பெறாமையானும், சிவானந்தம் ஒன்றே கேட்கப்பெறுதலானும், சிவானந்தமே பரமானந்தம் என்க. ஆதலின் பிரமானந்தம் என்பதிற் பிரமசத்தமானது பிரமனைக் குறிக்காது பரப்பிரமமாகிய சிவத்தையே குறிப்பதாம் என்றுங் காண்க. நல் – என்ற இரண்டில் முன்னையது ஆனந்தத்திற்கும், பின்னையது மதுவுக்கும் அடைகளாம். பரமானந்தமாவது – உயர்வு ஒப்பு இல்லாததும் அழிவில்லாததும் ஆகிய சிவத்துவ விளக்கமாம். அதனை அழுந்தியறிதலே அநுபவமெனப்படும். “இன்பமே எந்நாளுந் துன்பமில்லை“ என்றது திருவாக்கு. பெருமானது அருளிப்பாடுகள் தம்மிடம் வெளிப்பட நிகழக் கண்டபோது தமது சிறுமையையும், அவரது அளவிறந்த பெருமையையும் எண்ணி எண்ணி ஆராமைப்பட்டு அநுபவித்தல் பெரியோரியல்பு. ஆகவே பெறச் சிறிதும் தரம் இல்லாத என்னிடத்திலேயும், கருணையினால் கொடுத்து எனவும் குறிப்பிட்ட அழகு நினைந்து மகிழ்தற்கு உரியது

    ‘’இத்தனையும் எம்பரமோ ஐய, ஐயோ
    எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே ‘’
    என்ற அப்பர் பெருமான் தேவாரமும்,
    ‘’யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்
    யாவர்க்கும் கீழாம் அடியேனை – யாவரும்
    பெற்றரியா இன்பத்துள் வைத்தாய்க்கு …..’’

    என்ற திருவாசகமும் காண்க . இனி முழுப்பாடலையும்  படித்துப் பயன் பெறுவோம்.

    மன்பெ ரும்திரு மாமறை வண்டுசூழ்ந்து
    அன்பர் சிந்தை அலர்ந்தசெந் தாமரை
    நன்பெ ரும்பர மானந்த நன்மது
    என்த ரத்தும் அளித்தெதிர் நின்றன!

    இத்திருவடிச் சிறப்பை  அடுத்த  வரும் பாடல்கள் கூறும்.

    Share
  • எழுத்து – 13

    எழுத்து – 13

    வேதா. இலங்காதிலகம் (பா வானதி)
    டென்மார்க்.

    என்னுள் குமிழியிடும் திமிர்  எழுத்து.
    தென்றலும் வெட்கத்தோடு தாண்டி நடந்தது.
    நெஞ்சத் தண்டவாளத்தில் எழுத்து ரயில்
    நெடுந்துயிலின்றுp கவனமாக ஓடுகிறது
    மூங்கிலில் மறைந்த புல்லாங்குழலாக
    மேகத்துள் முடிந்த மழையாகத்
    தாகமாக ஓடுகிறது என்னுள்ளே எழுத்து
    மோகமாக இதைக் கவிதை ஆக்குகிறேன்.

    தமிழில் முழமையான பழைய இலக்கண
    நூல் தொல்காப்பியமே! முழவதும் படித்திட
    நிழலும் எனக்குத் தடை இடாது
    விழவிடாத கருவியே எழுத்தும் எழுத்தாணியும்.
    எழுத்து, சொல், பொருளாம் மூவிலக்கண
    முழு இலக்கணமும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
    எழத்து இலக்கணம் இரு வகையான
    முதல் எழத்து சார்பு எழுத்தாம்.

    சொல்லில் உயர்வு தமிழ் சொல்லாம்
    நல்ல பாரதியாரின் ஒரு கூற்று.
    எ – உச்சரிப்பைக் காதால் கேட்கிறோம்
    எ   யை கண்ணால் விழிக்க எழுதுகிறோம்.
    உயிரெழுத்து மெய்யெழுத்து  உயிர்மெய் எழுத்தாகி
    வல்லினம், மெல்லினம் இடையினமும் ஆகும்
    முதல், கடை, ஈற்று கூட்டெழுத்தாகும்
    சொல்வளம் எழுதினால் பெரும் கட்டுரையாகும்.

    Share
  • தனிமை

    தனிமை

    முனைவர். இரா. பேபி
    மடத்துக்குளம்

    நீர்த்துப் போகாத
    தனிமைத் தவம்
    மனத்துக்குள் இறங்கி
    மௌனத்தின் பாஷையை
    அறிவதற்கு இயலாமல்
    காலம் சுழல்கின்றது
    யாரோடும் எப்பொழுதும்
    ஒட்டமுடியாமல்
    பரிதவிக்கின்றது
    அதனைக் கடந்துபோக
    முயன்றாலும் நிழல்போல
    பின்தொடர்கிறது
    தாமரையிலைத் தண்ணீர்போல
    ஒட்டாமல்
    வாழ்விலும்
    கேட்பாரற்றுக் கிடக்கிறது.
    இருத்தலுக்கும் வாழ்தலுக்குமான
    இடைவெளியில் வந்து
    ஒட்டிக்கொள்கிறது
    இருப்புக் கொள்ளாமல்
    துடிக்கும்போதும்
    விடமறுக்கிறது
    எப்போதும் தன்
    வலிய கரங்களால்
    இறுக்கி  நெருக்கி
    மரண அவஸ்தையை
    தந்து ஒவ்வொரு
    நொடியிலும்
    தன்இருப்பை
    உணர்த்துகின்றது.
    ஆயாசத்துடன்
    ஏற்கும்போது
    தன் இருத்தலுக்கான
    அடையாளத்தை அழித்துவிடும்
    என்றெண்ணி இருக்கும்போது
    அழுத்தமாகப் பதித்துவிட்டுச்
    செல்கிறது என்னுள்…..

    Share
  • ஐஸ்பாய்

    ஐஸ்பாய்

    பாஸ்கர் சேஷாத்ரி

    இதோ கடைசிப் பறவையும் இருட்டில் கூட்டைத் தேடி விரைகின்றது .
    ரஸ்தாவின் வண்டியும் நின்று போய் இருட்டாய்த் தெரிகிறது .
    சுவர்க்கோழிகள் கும்மாளம் இடுகின்றன
    மின்மினிப் பூச்சிகள் ஒன்றின் வெளிச்சத்தில் ஒன்றைக் காண்கின்றன .
    இங்கு மட்டும் நக்ஷத்ரங்கள் பிரகாசமாய்த் தெரிகின்றன.
    ஊர் சுற்றப் போன நிலா, இன்று காணவில்லை
    புற அமைதி திகில் ஊட்டுகின்றது. ஆனாலும் பயம் ரசிப்பு தான்.
    ஏதோ ஆலையின் சங்கு எனக்கு மட்டும் முடியவில்லை .
    பூமியின் ஒரே ஆத்மா நான் மட்டும்தான்.
    எங்கு உட்கார்ந்தாலும் உலகை முற்றிலுமாய்க் காண முடியவில்லை .
    எனக்குள் ஓர் உலகம் நிர்மாணித்தேன்.
    அதில் என்னைத் தவிர எல்லோரும் உலா வருகிறார்கள்
    கடைசி வரை என்னை நான் கண்டுபிடிக்க முடியவில்லை.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 88

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 88

    நாங்குநேரி வாசஸ்ரீ

    88. பகைத்திறம் தெரிதல்

    குறள் 871:

    பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
    நகையேயும் வேண்டற்பாற் றன்று

    பகைன்னு சொல்லுத தீய கொணத்த ஒருத்தன் பொழுதுபோக்கா வெளையாட்டுக்குக் கூட ஆசப்படக் கூடாது.

    குறள் 872:

    வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
    சொல்லேர் உழவர் பகை

    வில்ல வச்சிருக்குத வீரர் கிட்ட கூட பகையக் காணிக்கலாம். சொல்தெறம இருக்க புத்திசாலிங்க கிட்ட காணிக்கக் கூடாது.

    குறள் 873:

    ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
    பல்லார் பகைகொள் பவன்

    தனிச்சு நின்னு பல பகையாளியத் தேடிக்கிடுதவன் கூறுகெட்ட பைத்தியக்காரன்.

    குறள் 874:

    பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
    தகைமைக்கண் தங்கிற் றுலகு

    பகையாளியக் கூட சேக்காளியா மாத்துத பெருந்தன்மையான கொணத்த இந்த ஒலகம் போற்றிப் புகழும்.

    குறள் 875:

    தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்
    இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று

    தனக்கு ஒதவி செய்ய ஆளில்லாத நெலமயில ரெண்டு பகையாளிங்க இருந்தாகன்னா அவுகள்ள ஒருத்தன சேக்காளியாக்கி தொணையாக்கிக்கிட வேண்டியதுதான்.

    குறள் 876:

    தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்
    தேறான் பகாஅன் விடல்

    இதுக்குமுன்ன ஒருத்தனப் பத்தி தெரிஞ்சிருந்தாலும் தெரியலன்னாலும் நெருக்கடி வருதப்போ அவன்கிட்ட நெருங்காம சேக்க வச்சிக்கிட்டும் அவனவிட்டுப் பிரியாம பகையக் காணிச்சிட்டும் இருக்கது நல்லது.

    குறள் 877:

    நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
    மென்மை பகைவர் அகத்து

    தான் துன்பப்பட்டத தெரிஞ்சிக்கிடாத சேக்காளிக்கிட்ட அதப்பத்தி சொல்லக்கூடாது. . நம்ம பலவீனத்த பகையாளிகிட்ட காட்டிக்கிடக் கூடாது.

    குறள் 878:

    வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
    பகைவர்கண் பட்ட செருக்கு

    வழிவகைய உணந்து தன்னயும் பலப்படுத்திக்கிட்டு தற்காப்பும் தேடிக்கிட்டா நம்மள எதித்துநிக்க நெனச்ச பகையாளியோட அகராதி தானா அழிஞ்சு போவும்.

    குறள் 879:

    இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
    கைகொல்லும் காழ்த்த இடத்து

    முள்ளு மரம் எளசா இருக்கும்போதே வெட்டிப்போடணும். அது முத்திப்போச்சுன்னா வெட்டுதவுக கைக்கு வெனையா வந்து நிக்கும்.

    குறள் 880:

    உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
    செம்மல் சிதைக்கலா தார்

    பகையாளியோட அகராதிய ஏளனமா நெனச்சி அழிக்காம விடுதவன் மூச்சுவிடுத காரணத்தாலேயே உசிரோட இருக்கதா சொல்ல முடியாது.

    Share
  • அமெரிக்க நெவேடா: புதிய சூரியக்கனல் மின்சக்தித் திட்டம்

    அமெரிக்க நெவேடா: புதிய சூரியக்கனல் மின்சக்தித் திட்டம்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    Public Utility Commission Nevada, Approves 1190 MW of New Solar Energy and 590 MW of Additional Energy Storage [December 9, 2019]

    Renewable energy developer offers 125MW and 300MW solar farm projects in Texas [December 10, 2019]

    image

    https://us.sunpower.com/commercial-solar

    ++++++++++++++++++

    சூரியக்கதிர் மின்சக்தி பரிமாற
    முந்நூறு மெகாவாட் ஆற்றல் உள்ள
    ஓரரும் பெரும் மின்சார நிலையம்
    தாரணியில் உருவாகி வருகிறது,
    வாணிபப் படைப்புச் சாதனமாய் !
    தட்டாம்பூச்சி போல் பறக்க
    வானூர்திக்குப் பயன்படப் போகுது !
    பரிதி சக்தியால் பறக்கும் !
    எரி வாயு இல்லாமல் பறக்கும் !
    பகலிலும் இரவிலும் பறக்கும் !
    பசுமைப் புரட்சியில் பிறக்கும்  !
    பாதுகாப்பாய் இயங்குவது !
    நாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில் 
    நான்கு காற்றாடி உந்துது !
    பனிரெண் டாயிரம் சூரியச் செல்கள்
    பரிதிச் சக்தி ஊட்டும்  !
    ஒற்றை விமானி ஓட்டுவார் !
    ஒருநாள் பறந்த ஊர்தி
    இருபது நாட்களில்  உலகைச் சுற்றியது.
    சூரியக்கதிர் தட்டுகள்  அனுதினம்
    பராமரிக் கப்பட வேண்டும்.  
    நூறாண்டு முன் பறந்த
    ரைட் சகோதரர் முதல் ஊர்தி போல்
    வரலாற்று முதன்மை பெறுவது !

    +++++++++++++++++++++++

    Image result for solar power commercial installations

    COMMERCIAL SOLAR INSTALLATION ACROSS CHICAGO LAND

    Related image

    +++++++++++++++++++++
    அமெரிக்க நகரங்களில் சூரியக்கனல் மின்சார நிலையங்கள் அமைக்கத் திட்டங்கள்
    நெவேடா மின்சார வாரியம் மேலும் இணைக்க 1190 மெகா வாட் சூரியக்கனல் மின்சக்தித் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது.  இந்த மேலடுக்கு மின்சாரம் சுமார் 230,000 வீடுகளுக்குப் பயன் படும்.  அடுத்து மேலும் மின்கலத்தில் சேமித்து வைக்க  590 மெகா வாட் அபாய / அவசர நிலைத் தேவைகளுக்கு அமைக்கப் படும்.
    வாரியத்தின் குறிக்கோள் 2030 ஆண்டுக்குள் 50% மின்சாரத் தேவையை மீள் பயன்பாடு, பச்சை எரிசக்தி [Renewable Green Energy]  பரிமாறி வரும். இத்திட்டங்கள் நிறைவேற 3000 பேருக்கு வேலை கிடைக்கும்.
    ஜிங்கோ சூரியசக்தி நிறுவகம் [JinkoSolar Holding Company]  சைனா வில் உள்ள கிங்கை மாநிலத்தில் [Qinghai Province]  300 மெகாவாட் சூரியக்கனல் மின்சக்தி நிலையம் கட்டப் போகிறது.  முதன் முதல் திட்டமிடும் அந்த அசுர நிலையத்தில் சூரிய சக்தியின்
    திறனாற்றல் [Module Efficiency]  20.4%.
    டெக்சஸ் நகரம் 2020 ஆண்டில் 125 மெகாவாட் சூரிய சக்தி நிலையம் ஒன்றையும், அடுத்து 2021 இல் மாபெரும் 300 மெகாவாட் நிலையம் ஜோன்ஸ் மாவட்டத்தில் [Jones County] நிறுவப் போகிறது.
    Image result for solar power commercial installations
    Related image
    Trina Solar Company Supplies Solar Power Modules to
    Ukraine’s Largest Solar Power Plant

     

     

    See the source image
    இந்திய சூரியக்கதிர் மின்சக்தி விருத்திக்கு வெளிநாட்டு நிறுவகங்கள் சாதனங்கள்  உற்பத்தி செய்யும்.
    2022 ஆண்டுக்குள் மொத்த 100,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் மிகப்பெரு சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் இந்தியாவில் நிறுவ, வெளிநாட்டு சூரியக்கதிர் நிறுவகங்கள் பங்கெடுக்கும் என்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோதி 2015 ஜூன் முதல் தேதி டெல்லியில் அறிவித்தார்.   உள்நாட்டு நிறுவகங்கள் தமது தொழிற் சாதனங்களை, மேல்நாட்டு நிறுவகங்கள் மூலமாய் மேம்படுத்த  முன்வந்துள்ளன.  இன்னும் ஓராண்டுக்குள் மூன்று அல்லது நான்கு வெளிநாட்டு நிறுவகங்கள் இந்தியாவில்  ஆரம்பிக்கத் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  2015 நவம்பரில் தற்போதுள்ள சிறு திட்டமான 3000 மெகாவாட் நிறுவகத்திலிருந்து, 100,000 மெகாவாட் பெருந் திட்டத்துக்கு விரிவு படுத்தினார்.
    See the source image
    2015 ஆண்டில் மொத்த சூரியக்கதிர் மின்சக்தி நிலைய நிறுவகம் :  2700 மெகாவாட்.
    இந்திய  உற்பத்தி தகுதி : 2000 மெகாவாட் சூரியக்கதிர்ச் சாதன தட்டுகள் [Solar Power Modules]
    சூரியக் கதிர் மூலவிகள் [Solar Power PV Cells]   : 500 மெகவாட்.
    உள்நாட்டு சூரியக் கதிர் மூலவிகள் [PV Cells], வெளிநாட்டு விலையை விட 15 cents மிகையான விலையில் உள்ளன.  வெளிநாட்டு இறக்குமதி சூரியக் கதிர்ச் சாதனங்கள் நிதிச் செலவு, 7% – 8% குறைவாகவே உள்ளது.   சோலார் எனர்ஜி நிறுவகம் [SunEdison] இந்தியாவில் கட்டுமானம் செய்ய ஆகும் செலவு  [2015 நாணய மதிப்பு]  சுமார் 4 பில்லியன் டாலர்.
    indian solar industry
    Trina Solar Company to Invest $500 Million in Indian Solar Industry
    [December 4, 2017]
    See the source image
    See the source image
    ராஜஸ்தான் மாது சூரிய கதிர்த் தட்டுகளைத்
    துப்புரவு செய்கிறார்

    ++++++++++++

     

    magazine
    ++++++++++++++++++++++++++++
    இந்தியச்  சூரிய ஒளிக்கதிர் மின்சக்திச் சாதன ஏற்பாடுகளில் பராமரிப்புக் குறைபாடுகள்
     சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி விருத்தி செய்து கட்டும்  உலக தொழிற்துறை நிறுவனங்களுக்கு “ஒளிக்கதிர் மின்னழுத்தம்”  [Photovoltaics (PV)] மூலம் இந்திய தேசம், செல்வம் ஈட்டும் ஓர் உயர்ந்த வாய்ப்பளிப்பு நாடாக உள்ளது.  தற்போதைய  பெருத்த அளவு 100 மெகாவாட் ஒளிக்கதிர் மின்னழுத்தச் சாதனங்களை இந்தியாவுக்கு விற்பது ஏதுவானாலும்,  அந்த பாதையில் உலக நிறுவகங்களுக்குக் காலநிலை, சீர்கெட்ட கட்டுமானம், பராமரிப்பு புறக்கணிப்பு  [Climate, Improper Installation, Lack of Maintenance]  ஆகிய வற்றால் எதிர்பார்க்கும் இழப்புகள் [Risks] மிகப்பல !
    இந்தியக் குறைபாடுகளை உளவி நீக்க ஜெர்மனியிலிருந்து  [National Meteorology Institute of Germany] ஓர் ஆய்வுக்குழு இந்தியத்  ஒளிக்கதிர் மின்சக்தித் திட்டங்களை 2017 ஜூலை 3 தேதி முதல் 14 தேதிவரை  வரை ஆராய்ந்து தீர்வுகள் கூற வந்தது.  ஆறு திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன.  அதற்கு  புதிய & மீள் புதுவிப்பு அமைச்சகம் & தேசீய சூரிய கதிர்ச்சக்தி ஆய்வுக்கூடம்  [Ministry of New & Renewable Energy (MNRE)]  &   [Indian National Institute of Solar Energy (NISE)] உழைக்க உடன்பட்டன.
    ஜப்பான் 28 மெகாவாட் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி தட்டுகள் வரிசை
    +++++++++++++++++++
    உலக நிறுவன அரங்குகளில்  சூரிய ஒளிக்கதிர் மின்னழுத்தத் திட்டங்களில்  [PV Projects] முதன்மையாகப் பருவகால அடிப்புக் கொந்தளிப்புகளான, காற்றில் உப்பு, இரசாயன மாசுகள், மிகையான புறவூதாக் கதிர்வீச்சு, மிகுந்த ஈரடிப்பு, வெக்கை, மணல் படிவு, பெருமழை, புயல்காற்று    [Climatic Stress Factors such as Salt in Air, High Ultra Violet Radiation, High Humidity, Heat, Sand, Heavy Rain, Strong Winds]  யாவும் ஒரே சமயத்தில் பாதிப்பதைத் தவிர்ப்பது பெருஞ்ச வாலாக உள்ளது என்று ஆசியர் உக்கார் [Asier Ukar, Senior Consultant at PI Berlin]  கூறுகிறார்.  குறிப்பாக இந்தியாவில் பெருவெப்ப & பெருங்குளிர் பாலைவன ராஜஸ்தான் மாநிலம் இப்புகாருக்கு முதன்மை இடம் பெறுகிறது.  இந்த இழப்புப் பேரிடர்களைச் சூரிய ஒளிக்கதிர் சாதனங்கள் எதிர்கொள்வது, ராஜஸ்தானில்  சிரமாக உள்ளது.
    சூரியக் கதிரொளி மின்சார நிறுவகங்களில் அடிக்கடி நேரும் தடைப்பாடுகளைக் குறைக்கவோ, நீக்கவோ, பராமரிக்கவோ, ஆரம்பத்திலிருந்தே நல்வினைச் சாதனங்கள், மின்சாரத் தட்டு இணைப்புகள் / புவிச் சேர்ப்புகள் [Earthing & Normal Cable Connections] துருப்பிடிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  கடும் வெயில் அடிப்பு, குளிர்க் காற்றோட்டத்தால் சாதனச் சிதைவுகள் சீக்கிரம் நேராமல் பாதுகாக்க வேண்டும். சூரியக் கதிர் மின்சாரத் தடைப்பாடுக் குறைவே சூரிய சக்தியைப் பெருக்கிக் கொள்ள ஒளிமயமான எதிர்காலத்தைக் காட்டும்.
    கூரையில்’ ஒளித்தட்டுகள் அமைப்பு
    +++++++++++++
    +++++++++++++++++

     சூரியக்கதிர் மின்சக்திப் பயன்பாடு மிகுந்து வருகிறது.
    2013 -2014 ஆண்டுகட்கு  இடையே சூரியக்கதிர் மின்சக்திச் சாதனங்கள் அமைப்பு 51% அதிகரித்துள்ளதாக சூரிய சக்தி தொழிற்துறைக் கூட்டணி   [Solar Energy Industries Association ]  அறிவித்துள்ளது.  அதாவது கங்கு கரையற்று எங்கும் நிறைந்து வற்றாத சூரிய மின்சக்தி ஆக்கத்துக்கு இப்போது உலகில் பெரு வரவேற்பு கிடைத்து வருகிறது.  மீள் பயன்பாடு கனல் எருவுக்கு
    மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட அரசு, மற்றும் தனி நபர் ஆர்வமும், முழு மூச்சு முயற்சியும், நிதி உதவி கிடைத்தும்  தொழில் நுணுக்கம் பெருகி, சூரிய மின்சக்தி மலிவாகி வருகிறது.  இதனால் சூழ்வெளிச் சுத்தக் கட்டுப்பாடு ஆவதோடு, மலிவான சூரிய மின்சக்திப் பயன்பாடும் அதிகரிக்கிறது.
     
    அதற்கு மலிவான சூரியக்கதிர் அறுவடை ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாடு  [Solar-Harvesting Photo Voltaic Cell Arrays (PV System)]  தயாராகி வருகின்றன.  2010 ஆண்டிலிருந்துசூரிய ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாட்டில் விலை 45% குறைதுள்ளது.  பல்வேறு முறை சூரிய சக்தி ஏற்பாடுகளில் இப்போதுள்ள பி.வி. அமைப்பு   [PV Sytem] நேரடியாக கதிர்ச்சக்தியை மின்சக்தியாக மாற்றுவதால் இடைச் சாதனங்கள் குறைவாய்த் தேவைப்படும்.  2000 -2500 சதுரடி வீட்டுக்கு 20 – 40 PV தட்டுகள் போதுமானவை.  அத்துடன் நேரோட்ட மின்சக்தி, எதிரோட்ட மின்சக்திக்கு தேவைக்கு வேண்டிய ஆட்சி / மாற்றிச் சாதனங்கள் [Controllers & Inverters]
    விலைகளும் சேர்க்கப் படவேண்டும்.
    உதாரணமாக 2013 ஆண்டில்  ஒர் சராசரி அமெரிக்க குடிநபர் ஆண்டுக்கு 11,000 kwh  மின்சார யூனிட் , அமெரிக்க எரிசக்தி ஆணையக  [U.S. Energy Information Administration ] அறிவிப்புப் படி பயன்படுத்தி உள்ளார்.  அப்படி 11 kwh மின்சாரம் அனுப்பு ஓர் இல்லத்துக்கு சுமார் 7 kW – 10.5 kW பி.வி. அமைப்பு வேண்டி யுள்ளது.  அதற்கு விலை மதிப்பு சுமார் 26,000 – 39,000 டாலர் என்று கணிக்கப் பட்டுள்ளது.  அந்த அமைப்புகள் கட்ட மத்திய அரசும், மாநில அரசும் [New England Home in the USA] நிதி உதவி செய்து விலை மதிப்பு 12,000 – 16,000 டாலராகக் குறைகிறது.  அதனால் 25 ஆண்டுகட்டு  சுமார் 70,000 டாலர் சேமிப்பு ஒரு இல்லத்தாருக்கு மிஞ்சுகிறது.

    World’s Largest Lithium Ion Battery Banks

    By Tesla

    ++++++++++++++++++++

    மிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது.

    2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலியாவின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார்.  2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலியாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும்  மின்கலன் ஒன்றைத் தயாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார்.  2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது  100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார்.  அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேறு உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம்.

    A close-up of Musk's face while giving a talk
    Elon Musk 
    Space X Falcon Heavy Rocket Pioneer
    BORN Elon Reeve Musk
    June 28, 1971 (age 46)
    Pretoria, Transvaal (now Gauteng), South Africa
    RESIDENCE Bel Air, Los Angeles, California, U.S.[1][2]
    CITIZENSHIP
    • South Africa (1971–present)
    • Canada (1989–present)
    • United States (2002–present)
    ALMA MATER
    OCCUPATION Entrepreneur, engineer, inventor, and investor
    KNOWN FOR SpaceX, PayPal, Tesla Inc., Hyperloop, SolarCity, OpenAI, The Boring Company, Neuralink, Zip2
    NET WORTH US$20.8 billion (October 9, 2017)[6]
    TITLE
    Share
  • இயற்கையில் எழுந்த இசை – பகுதி 1

    இயற்கையில் எழுந்த இசை – பகுதி 1

    நிர்மலா ராகவன்

    முன்னுரை

    “நாட்டியத்திற்குப் பாட்டு எழுதிக்கொடேன்!’ மகள் ஷீலா என்னைக் கெஞ்சினாள். அதற்கு முன்பே, இரண்டு வருடங்களாகப் பலமுறை கேட்டிருந்தாள்.

    விடாமல், மறுபடியும் கேட்டபோது, “பாட்டா!’’ என்று முதலில் அயர்ந்தேன். “எனக்குப் பாட்டெல்லாம் எழுதத் தெரியாது. ஏதோ, கதை, கட்டுரை. நாடகம், நாட்டிய விமரிசனம் என்று எழுதிக்கொண்டிருக்கிறேன். வேறு யாரையாவது கேட்டுப்பார்!”

    “அம்மாவே மறுத்தால், நான் யாரைக் கேட்பது?” என்றாள், பரிதாபகரமாக முகத்தை வைத்துக்கொண்டு.

    அதில் பொதிந்திருந்த லாஜிக் என்னைச் சம்மதிக்கவைத்தது.

    முதல் பாடல் எழுத ஆரம்பிக்கும்போது அச்சமும் கூடவே எழுந்தது. விக்னமில்லாமல் என் முயற்சியில் வெற்றிபெற பிள்ளையாரை மனத்துள் துதித்தேன். அடுத்து, `நீயே வந்து எழுதிக்கொடு,’ என்று கலைக்கடவுளான ஸரஸ்வதியை வேண்டினேன். பின்பு, என் இசைக் குரு பத்மஸ்ரீ T.S.கல்யாணராமன். (`எப்படி எழுதறது, ஸார்?’) பின்னர், பல பாடல்களில் இவரது பரிந்துரைகள் உண்டு. (நான் பாட்டெழுத ஆரம்பிக்குமுன்னரே அவர் இவ்வுலகைவிட்டுப் போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது).

    இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்ப்பாடல்களை இயற்றி, அவற்றில் சிலவற்றை வாத்தியங்களுடன் பதிவு செய்திருக்கிறேன். இவை பெரும்பாலும் பரதநாட்டியத்திற்கான பாடல்களாகும்.

    ஒவ்வொரு பாடலும் இயற்கையுடன் நான் ஒன்றியிருந்த சமயம் தானாக அமைந்தவை.  ஓர் இந்துக் கடவுளின்மேல், அவரை ஒட்டிய கதை ஒன்றுடன் இருக்கும். (இப்படியாக அடிக்கடி என் “மேதாவித்தனத்தைக்” காட்டிக்கொள்வேன். எல்லாம் தலபுராணங்கள் மற்றும் ஆன்மிகப் புத்தகங்களின் உபயம் என்று யாருக்குத் தெரியப்போகிறது!).

    பாடல்கள் எங்கே, எப்படிப் பிறந்தன என்ற சிறு குறிப்பை இத்தொடரில் எழுத உத்தேசித்திருக்கிறேன். பிள்ளையாரிலிருந்து ஆரம்பிப்போமா? (நான் எழுதிய முதல் பாடல் இதுவல்ல. அந்தக் கதை பிறகு).

    விக்ன விநாயகனே

    கோலாலம்பூரின் கிழக்குப் பகுதியில், 280 கிலோமீட்டர் தூரத்தில் செராடிங் (CHERATING) என்ற இடம் இருக்கிறது, கடலோரத்தில். நீர்நிலைகளைக் காணும்போது என் மனம் உற்சாகம் அடையும். கடலைப் பார்த்தபடி, அலையோசையை ரசித்தபடி பாடிக்கொண்டிருப்பேன்.

    ஒரு முறை, செராடிங்கில் சில தினங்களைக் கழித்துவிட்டு, நானும் என் இளைய மகள் சித்ராவும் வாடகைக் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, பிறந்த பாடல் இது.

    காரின் ஜன்னலை சரியாக மூட இயலாத நிலையில், போக்குவரத்து சப்தம் காதைத் துளைத்தது. நிம்மதியாக பாடலைப் புனைய ஒரு வழி கிடைத்தது: ஒரு தினசரியை என் உடல் முழுவதிலும் கூடாரம்போல் கவிழ்த்துக்கொண்டு, எழுத ஆரம்பித்தேன். அனுபல்லவியில், சிவனார் பிள்ளையாரை துதிப்பதாக வருகிறது. முப்புரங்களை எரிக்க சிவன் புறப்பட்டபோது, கணபதியை வணங்காததால் தேரின் அச்சு உடைந்ததாக அருணகிரிநாதர் பாடியிருக்கிறார். பிள்ளையாரை வணங்கியதும் தடை நீங்கியது.

    சரணம்: பாற்கடலைக் கடையுமுன், தேவர்களும் அசுரர்களும் விநாயகரை வணங்காததால், மத்தாக இருந்த மேருமலை சாய்ந்துவிட்டது. தம் தவற்றை உணர்ந்து, கிளிஞ்சல்களுடன் கடல் நுரையைச் சேர்த்து கணபதியாக்கி வணங்கினர். விக்னமும் விலகியது.

    (திருவலஞ்சுழியில் வெள்ளை வெளேரென்று இருக்கிறது ஸ்வேத விநாயகர் விக்கிரகம். ஸ்வேதா என்றால் வெள்ளை).

    ஒரு நிகழ்ச்சியின் முதல் அங்கமாகப் பலர் இணைந்து, நாட்டிய நாடகமாக ஆட ஏற்ற பாடல். இப்பாடலைக் கேட்க: https://www.youtube.com/watch?v=bfv-BuDciVM

    Youtube: Mahavidya Dance Theatre

    Share
  • ஈழத்தில் திருப்பாவையும் ஆண்டாளும் ஒரு நோக்கு

    ஈழத்தில் திருப்பாவையும் ஆண்டாளும் ஒரு நோக்கு

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, 
    மெல்பேண், அவுஸ்திரேலியா. 
    முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர். 
    
    

    “மாதங்களில் நான் மார்கழி” என்று கீதையில் கண்ணன் கூறுகிறான். அந்த வாக்கை வைணவர்கள் மனங்கொண்டு மார்கழி முழுவதையும் வழிபாட்டுக்கு உரிய மாதமாக்கி விட்டார்கள் என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. மார்கழி என்றதும் சுப நிகழ்ச்சிகளைச் செய்வதை பொதுவாகவே இந்துக்கள் தவிர்த்துக் கொள்ளுகிறார்கள். இந்த நிலை ஈழத்திலும் காணப்படுகிறது. திருமணம், வீடு குடுபுகுதல், காதுகுத்தல், ஏடுதொடக்குதல் முதலான சுப விஷயங்களை மார்கழியில் செய்வதை தவிர்த்து விடுகிறார்கள். அப்படித் தவிர்ப்பதற்கு அவர்கள் கூறும் காரணம் – மார்கழி பீடை பிடித்த மாதம் என்பதே ஆகும். ஆனால் உண்மையில் மார்கழி பீடுடைய மாதமே என்பதை மனமிருத்தத் தவறி விடுகின்றனர்.

    மார்கழி தேவ வழிபாட்டுக்கு உகந்த மாதம் என்பதாலேயே அதில் மக்களுக்கான விழாக்களைத் தவிர்த்தார்கள் என்பதுதான் உண்மையாகும். மார்கழியில்த்தான் திருப்பாவை, திருவெம்பாவை, பாடப்படுகிறது. ஆருர்த்தா தரிசனம், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறத்தல், போன்ற முக்கிய தெய்வ வழிபாடுகள் இடம்பெறுகின்றன. இந்தவகையில் மணிவாசகப் பெருமானும் ஆண்டாள் நாச்சியாரும் சைவர்களாலும், வைணவர்களாலும் ஏற்றிப் போற்றி வணங்குதலுக்கு ஆளாகி இருப்பதையும் காண்கின்றோம்.

    மணிவாசகப் பெருமானின் திருவெம்பாவை பற்றி ஈழத்தவர்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும். ஈழத்தில் இருக்கும் சைவக் கோவில்கள் பெரியனவாக இருந்தாலும், சிறியனவாக இருந்தாலும், அங்கெல்லம் மார்கழியில் திருவெம்பாவை மிகவும் பக்திபூர்வமாக அனுஷ்டிக்கப்படும். காலையில் அதுவும் மிகவும் அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சியுடன் ஆரம்பித்து திருவெம்பாவை பாடல்முழுவதும் பாடி கோவிலில் பூஜை வழிபாடு நிறைவு பெறும்.

    சைவ ஆலயங்களான அனைத்து ஆலயங்களிலும் இந்த நடை முறை நீண்ட காலமாகவே நடைபெற்று வருவதை யாவரும் அறிவர். அதேவேளை விஷ்ணு ஆலயங்களில் திருவெம்பாவைக்குப் பதிலாக திருப்பாவை பாடப்படும் முறை காணப்படுகிறது. திருவெம்பாப் பாடல்களை பெரும்பாலான சைவர்கள் அறிந்தளவும் திருப்பாவையினை அறிந்தவர்களாக இல்லை என்பது முக்கிய விஷயமாகும். அதேநேரம் மணிவாசப் பெருமானை அறிந்ததுபோல் ஆண்டாள் நாச்சியார் அதிகளவில் அறியப்படவில்லை என்பதும் நோக்கத் தக்கதாகும்.

    ஈழத்தில் பல பாகங்களிலும் விஷ்ணு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அங்கெல்லாம் பூஜைகளை ஆற்றுகின்றவர்கள் பெரும்பாலும் சிவப்பிராமணர்களே என்பது இங்கு முக்கியமாக நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஈழத்தில் சைவமே நிறைந்து காணப்படுகிறது. வைஷ்ணவம் என்னும் பெயர் படித்தவர்கள் மட்டத்தில் தெரிந்தளவு பாமர்களிடம் சென்றடையவில்லை என்றுதான் கொள்ளவேண்டி இருக்கிறது. வைஷ்ணவ சம்பிரதாயங்கள் இந்தியாவில் இருப்பது போன்று ஈழத்தில் இல்லை என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். வடகலை, தென்கலை, நாமம் இடுதல், என்றால் பெரும்பாலான ஈழத்தவர்களுக்கு விளங்குமா என்பது ஐயமேயாகும். இந்த நிலையில் வைஷ்ணவ அடியவாராய் விளங்கும் ஆண்டாள் நாச்சியார் பற்றியும் அநேகம் பேர் அக்கறை காட்டும் நிலையிலும் இல்லை என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. மணிவாசகப் பெருமானை அறிந்து வைத்திருக்கும் அளவுக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடியை அறிந்திருப்பவர் மிகவும் குறைவாகவே காணப்படுகிறார்கள்.

    பல்கலைக்கழகத்தில் தமிழை, இந்துநாகரிகத்தைப் படிக்கும் மாணவர்களும் படிப்பிக்கும் ஆசிரியர்ளும் பாடத்துக்காக ஆண்டாள் நாச்சியாரையும் அவரது திருப்பாவையும் அவரின் படைப்புக்களையும் அவர்பற்றிய வரலாற்றையும் அறிந்து வைத்திருக்கிறார்களே அன்றி மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு மிகவும் அரிதாகவே இருக்கிறது என்பது மிகவும் முக்கிய விஷயமாகும்.

    யாழ்ப்பாணம் முழுவதும் நாவலர் கலாசாரம், கநதபுராண கலாசாரம் நிறைந்த இடமாகும். இங்குள்ள கோவில்கள் பெரும்பாலும் ஆகமவிதிப்படி பூஜைகள் நடைபெறும் சைவக் கோவில்களேயாகும். ஆனால் பொன்னாலை வரதராஜப் பெருமாள், வல்லிபுர ஆழ்வார், யாழ்நகரில் உள்ள பெருமாள் கோவில், தற்பொழு இணிவிலில் புதிதாக அமைக்கப்பட்ட இணுவில் திருப்பதி கோவில் யாவும் விஷ்ணு கோவில்களே ஆகும். விஷ்ணு கோவிலாக இருந்தாலும் வைஷ்ண பட்டாச்சாரியார்கள் இங்கு பூஜை ஆற்றுவதில்லை. இங்கு பூஜை ஆற்றுகிறவர்கள் யாவருமே சிவப் பிராமணர்களே என்பது நோக்கத்தக்கதாகும்.

    ஈழத்திலுள்ள விஷ்ணு ஆலயங்களில் சிவப்பிராமணர்களும், சைவர்களும் இருந்தாலும் மார்கழியில் அங்கெல்லாம் ஆண்டாள் நாச்சியாரின் வடிவங் கொண்ட சிலை உள்வீதியில் பக்தியுடன் வலம் கொண்டுவரப்பட்டு ஸ்ரீரங்க நாதர் முன்னே வைக்கப்பட்டு திருப்பாவை இன்றளவும் காலைப் பூஜையின் பொழுது பாடப்பட்டு வருகிறது என்பது முக்கிய அம்சம் எனலாம்.

    வைஷ்ணவம் என்பது சமயபாடப் புத்தகத்தில் படிக்கும் அளவுக்கு ஈழத்தில் இருக்கிறதே அல்லாமல் சைவம் போன்று மக்களால் கடைப்பிடிக்கும் அளவுக்கு இல்லை என்பது மனங் கொள்ளத்தக்கதாகும்.

    திருமுறைகளும், நாயன்மார்களும் அறியப்பட்டளவுக்கு ஆழ்வார்களும் அவர்களது பாசுரங்களும் பொதுமக்களிடம் சென்றடையவில்லை என்றுதான் கருதவேண்டி இருக்கிறது. அதற்குக் காரணம் ஈழத்தில் சைவம் பெற்ற முக்கியத்துவமே எனலாம். அறுபத்து மூன்று நாயன்மார் பெற்ற முக்கியத்துவத்தை பன்னிரு ஆழ்வர்களும் ஈழத்துப் பெரும்பாலான மக்களிடம் பெற்றிருக்கிறார்களா என்பது ஐயத்துக்கு உரியதாகவே இருக்கிறது. பெரிய புராணம் கோலோச்சிய அளவுக்கு, கந்தபுராணம் போற்றப்படும் அளவுக்கு  வைஷ்ணவ ஆழ்வார்களும் அவர்களது திருப்பாசுரங்களும் அறியப்பட்டிருப்பது மிகவும் குறைவென்றே கொள்ள வேண்டி இருக்கிறது.

    சமயச் சொற்பொழிவாற்றுகின்ற பெரியவர்கள்கூட சைவ இலக்கியங்களையும், சைவ மேன்மைகளையும் எடுத்துச் சொல்லுவார்களே அன்றி வைஷ்ண சம்பிரதாயங்களையோ அல்லது வைஷ்ணவ ஆழ்வார்களையோ பற்றியோ சொல்லுவது மிகவும் அரிதாகும். மணிவாசகர் மன்றம், மணிவாசகர் சபை என்றெல்லாம் அமைத்து அதன்மூலம் போட்டிகளும் பரிசுகளும் அளித்து மார்கழியில் வீதிகளில் மணிவாசகரின் திருப்பள்ளி எழுச்சி திருவெம்பா பாடல்களைப் பாடும் அளவுக்கு – ஆண்டாள் நாச்சியாரோ அவரது திருப்பவையோ இடம்பெற்றதாகத் தெரியவில்லை.

    நாயன்மார்களைப் போற்றும் முகமாக குருபூசைத்தினம் என்று அமைத்து கோவில்களிலும், பாடசாலைகளிலும், சிறப்பான பூஜை வழிபாடு செய்யும் அளவு வைஷ்ணவ ஆழ்வார்களுக்கோ குறிப்பாக ஆண்டாள் நாச்சியாருக்கு ஈழத்தில் செய்யப்படுவது அரிதென்றே சொல்லலாம்.

    யாழ்ப்பாணத்தில் புதிதாக இணிவிலில் திருப்பதி என்னும் பெயரில் விஷ்ணுவுக்கு பெரியதொரு கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு விநாயகர் தொடக்கம் விஷ்ணுவரை மிகவும் பிரமாண்டமான சிலா விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. இக்கோவிலில் ஆண்டாள் நாச்சியாரிக்கும் ஒரு சன்னிதானம் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு செல்லும் அடியவர்கள் ஆண்டாள் நாச்சியாரையும் வணங்கியே செல்லுகிறார்கள்.

    விஷ்ணு ஆலயங்களில் ஆண்டாள் நாச்சியார் வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் வழிபடச் செல்லும் அடியார்களுக்கு சரியான விளக்கம் இல்லாத காரணத்தால் விஷ்ணு கோவில் செல்பவர்கள் ஆண்டாள் பற்றிக் கவனம் செலுத்தத் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பதும் நோக்கத்தக்கது. வல்லிபுரக் கோவிலில் திருமண்ணும் திருநீறும் வழங்கப்படுகிறது. விஷ்ணு ஆலயமாக இருந்தாலும் சிவனும் விஷ்ணுவும் இங்கு பிரித்துப் பார்க்கும் விதத்தில் வழிபாடு அமையவில்லை என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது.

    ஆண்டாள் நாச்சியாரின் தமிழ் அமுதத் தமிழ். அவரின் பக்தி அளவிடமுடியாத பக்தி. ஈழத்தில் சைவத்தின் உச்சத்தால் வைஷ்ணவ அடியரான ஆண்டாள் நாச்சியாரை சாதாரண மக்கள் அறியும் வாய்ப்புக் கிட்டவில்லை என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது.

    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
           நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
    தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
            ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
    பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
          தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
    வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
        நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

     

    Share
  • நெஞ்சம் மகிழ வைக்கும் அவ்வையார் என்னும் நாமம் கொண்ட பெண்பாற் புலவர்கள்

    நெஞ்சம் மகிழ வைக்கும் அவ்வையார் என்னும் நாமம் கொண்ட பெண்பாற் புலவர்கள்

    கெளசி, ஜெர்மனி

    இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னமே புகழ்பெற்ற பல பெண்பாற் புலவர்கள் தமிழுக்கும் சமயத்திற்கும் சேவையாற்றியுள்ளார்கள். சங்ககாலத்தில் சுமார் 37 பெண்புலவர்கள் இருந்திருக்கின்றார்கள். அவர்கள் பாடிய சுமார் 185 பாடல்கள் கடல்கோள்களுக்கு அகப்படாது எமக்குக் கிடைக்கின்றன. அவர்கள் ஆதிமந்தையார், பொன்முடியார், நக்கண்ணையார், அவ்வையார், ஒக்கூர் மாசாத்தியர், வெள்ளிவீதியார் போன்றோர் என அறியக் கிடக்கின்றது.

    அதில் அணு என்பது பிளக்க முடியாத அளவு மிகச் சிறியதுகள். அவ் அணுவைப் பிளக்கும் போது பிரமாண்டமான ஒரு சக்தி தோன்றும். அதாவது ஏழுகடல் அளவு சக்தி தோன்றும். ஒரு கடலின் ஆழமே அறிய முடியாது இருக்கும் போது 7 கடல் அளவு சக்தியை புகட்டிய குறள் என்னும் விளக்கத்தை

    “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
    குறுகத் தரித்த குறள்”

    என்று திருக்குறளின் பெருமையை அறிவுபூர்வமாக எடுத்துக் கூறிய அவ்வையார் என்னும் பெண்பாற்புலவர் பாடிய பல பாடல்கள் பல எமக்குக் கிடைக்கப் பெறுகின்றன.

    முருகக் கடவுளிடம் நாவற்கனி பறித்துத் தரும்படி கேட்ட போது சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று வினாவிய முருகக் கடவுளை “பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா தமிழ்ஞானப் பழம் நீயப்பா” என்று பாடிப் புகழ்ந்த அவ்வையார் பாடல்களையும், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், பாடிய அவ்வையார் பாடல்களையும், குறுநிலமன்ன அதியமான் காலத்தில் வாழ்ந்த அவ்வையார் பாடல்களையும் எடுத்து ஆராயப் புகுந்தால், பாடல்வரிகளில் தன்மையை நோக்கும் போது அவ்வையார் என்பவர் ஒருவரே என்று திட்டவட்டமாகக் கூறமுடியாது உள்ளது.

    உதாரணமாக “அறஞ்செய்ய விரும்பு, ஆறுவது சினம்” என்று தொடருகின்ற ஆத்திசூடிப் பாடல்களையும்,

    “இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்
    கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து”

    என்னும் புறநானூறு பாடல்வரிகளையும் எடுத்து நோக்கினால், வேறுபட்ட கவித்துவத்தைக் காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே அவ்வையார் என்னும் பெயருடைய வெவ்வேறு பெண் புலவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பது உண்மையென ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

    திருமணம் செய்யாமல் கல்வி கற்று சமூகப்பணிகளுக்குத் தம்மை அர்ப்பணித்தவர்களே அவ்வை என்னும் பெயரால் அக்காலத்தில் அழைக்கப்பட்டனர். அவ்வழியில் சங்ககாலத்தில் வாழ்ந்த அவ்வையார், குறுநில மன்னன் பாரி வள்ளல் பிள்ளைகளான அங்கவை சங்கவை காலத்தில் வாழ்ந்த அவ்வையார், சோழர் காலத்தில் கம்பர் ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்த அவ்வையார். பிற்கால ஆத்திசூடி கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நீதி நூல்களைத் தந்த அவ்வையார் என அவ்வையார்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.

    சங்ககாலத்து அவ்வை தற்போது மலையாளம் என்று சொல்லப்படுகின்ற சேரநாட்டிலே தர்மபுரி என்று தற்போது அழைக்கப்படும் தகடூர் எனப்படும் தலைநகரத்திலே யாளிதத்தனுக்கு மகளாகப் பிறந்தாள். பிள்ளை 3 வயதாக இருக்கும் போது தாய் இறக்கும் தறுவாயில் கலங்கி நிற்க

    “இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி
    விட்டசிவனுஞ் செத்து விட்டானோ – முட்ட
    முட்டப்பஞ்ச மேயானாலும் பாரமவ னுக்கன்னாய்
    நெஞ்சமே அஞ்சாதே நீ”

    என்று பாடியதாகவும். அக்கணமே கவலை நீத்த தாய் உயிர்நீத்தாள். தந்தையும் உறவினர் வசம் பிள்ளையை ஒப்படைத்துவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். இவர் கல்வி, சமயப்பற்று அத்தனையும் பெற்றவராய் சமுதாய சமயப்பணிக்காய்த் தன்னை ஒப்படைத்து நல்லறிவாற்றலுள்ள பெண்ணாய் வளர்ந்தாள் என வரலாற்று நூல்கள் எடுத்துக் காட்டுகின்றன. இக்காலம் கி.மு.300 – கி.பி 250 வரையுள்ள காலப்பகுதிகளாகும். இவர் பாடல்கள் சங்கப் பாடல்களான அகநானூறு, புறநானூறு, நற்றிணை குறுந்தொகை ஆகியவற்றிலே தொண்டைமான், பாரி, அதியமான், எழினி, பாண்டியன் உக்கிரப்பெருவழுதி, சோழன் பெருநற்கிளி, சேரன் மாரி வெண்கோ போன்ற மன்னர்களைப் பற்றிய பாடல்களில் காணக்கிடக்கின்றன.

    இவர் அக்கால குறுநில மன்னன் அதியமான் புகழ்பாடிப் பரிசில்கள் பெற்றுள்ளார். அவர் பெருமை கண்ட மன்னனும், அவரை அரசவைப் புலவராக அமர்த்தினார். இம்மன்னனிடம் சிறப்புப் பொருந்திய 12 ஆண்டுக் கொருமுறை காய்க்கின்ற கருநெல்லிக்கனியைப் பொதிகைமலை வாழ்ந்த தவமுனிவர் வழங்க அக்கனியை நீண்ட காலம் வாழ வேண்டிய ஒளவைக்கு அதியமான பரிசாகக் கொடுத்தான்.

    அதியமானுடன் தொண்டைமான் போர் புரிய ஆயத்தமான போது, போர் நடக்காதவண்ணம் தடுப்பதற்காக தொண்டைமானிடம் ஒளவையார் தூது சென்றார். தொண்டைமான் படைக்கலக் கொட்டிலைக் காட்டியபோது

    “இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்
    கண்திரழ் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து
    கடியுடை வியனகரவ்வே, அவ்வே
    பகைவர்க் குத்திக் கோடுனுதி சிதைந்து
    கொல்துறைக் குற்றிலமாதோ”

    மன்னனே உன்னுடைய அரண்மனையிலேயுள்ள படைக்களங்கள் யாவும் போர்க்களத்தைக் காணாததால் மயில்பீலி அணியப்பெற்று, மாலை சூட்டப்பெற்று, நெய்பூசப்பெற்று அழகுடன் காணப்படுகின்றன. ஆனால், அதியமானின் வேல்கள் நாளும் பகைவர்களைப் போரில் குத்துதலால், முனைகள் முறிந்து சிதைந்து கொல்லன் உலைக்களத்திலே குவிந்து கிடக்கின்றன என்று அதியமான் பெருமையைப் பாடி தொண்டைமான் போரை நிறுத்தினார்.

    12ம் நூற்றாண்டில் (சோழர்காலம்) வாழ்ந்த ஒப்பற்ற புலவர்களான கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, பொய்யாமொழி போன்றோர்க்கு ஒப்பாக அருங்கவியாற்றிய அற்புதத் தமிழ் புலவர் அவ்வையார் பற்றிய ஓர் சம்பவத்தை எடுத்து வருகின்றேன். மன்னர்களைப் புகழ்ந்து பாடலும் அப்பாடலுக்கு மனமுவந்த மன்னர்கள் பரிசில் வழங்கலும் அக்காலத் தமிழ் பற்றுக் கொண்ட மன்னர்களின் மனப்பாங்கு. ஒரு மாமன்னனைக் காண அவ்வையார் செல்கின்றார். அம்மையே நீவீர் எந்த ஊர் என்று மன்னன் கேட்க

    காலொந்தே னொந்தேன் கடுகி வழிநடந்தேன்
    யான்வந்த தூர மெளிதன்று கூனல்
    கருந்தேனுக் கண்ணாந்த காவிரிசூழ் நாடா
    இருந்தேனுக் கெங்கே யீடம்

    வளைந்த சங்கு தேனையுண்பதற்காக வாய் திறந்துள்ள நாட்டுக்கு வல்லவனே! காவிரி நதி சூழ்ந்த நாட்டின் மன்னனே! உன்னைக் காண்பதற்காக நெடுந்துரம் பரபரப்போடு நடந்து வந்தேன். அதனால், கால் நொந்தேன், ஆங்காங்கே தங்கினேன். அதனால், எந்த ஊர் எனக்குச் சொந்த ஊர் என்பது, என்று கூறுகின்றார்.

    அதைக் கேட்ட மன்னனும் அரியணை காட்டி அமரச் செய்ய, அவ்விடத்தில் கம்பர் பாடல் ஒன்று படிக்கப்படுகின்றது. மன்னனும் கம்பருக்கு நிகர் யாருண்டு என்று புகழ்ந்துரைக்க

    “விரக ரிருவர் புகழ்ந்திடவே வேண்டும்
    விரனிறைய மோதிரங்கள் வேண்டும் – அரையதனில்
    பஞ்சேனும் பட்டேனும் வேண்டு மவர்கவிதை
    நஞ்சேனும் வேம்பேனு நன்று”

    சூழ்ச்சிக்காரர் இருவர் தன்னைப் புகழ்வதற்காக வேண்டும், எல்லா விரல்களிலும் மோதிரங்கள் வேண்டும், பஞ்சால் அல்லது பட்டால் ஆடை அணிந்திருக்க வேண்டும், அவர்கள் எழுதிய கவிதை வேம்பாக இருந்தாலும் நல்லது என்று அவ்வையார் எழுந்து அவ்விடத்தில் பாடுகின்றார்.

    இதைகேட்ட மன்னன் உலகத்து உண்மை இதுவாகிலும் அம்மையே! கம்பர் சிறப்பான கவி புனையும் ஆற்றல் மிக்கவர் என்று கூற

    வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்
    தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் – யாம்பெரிதும்
    வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாங்காண்
    எல்லோர்க்கு மொவ்வொன்று றெளிது

    தூக்கணாங்குருவியின் கூடு, கரையான் புற்று, தேன்கூடு, சிலந்திக்கூடு, ஆகியவை யாராலும் இலகுவாகச் செய்து முடிக்கக் கூடியதல்ல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிது. அதனால், யாம் பெரிதும் வல்லோம் என்று வலிமை சொல்ல வேண்டாம் என்று பாடினார். அத்துடன் எவ்வாறு புலமை கம்பருக்கு வந்திருக்கும் என்பதை எடுத்துக்காட்ட

    சித்திரமுங் கைப்பழக்கம் செந்தமிழு நாப்பழக்கம்
    வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
    நடையு நடைப்பழக்க நட்புந் தயையும்
    கொடையும் பிறவிக் குணம்

    என்று கூறி

    காணாமல் வேணதெல்லாம் கத்தலாங் கற்றோர்முன்
    கோணாமல் வாய்திறக்கக் கூடாதே – நாணாமல்
    பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தாக்கால்
    கீச்சுக்கீச் சென்னுங் கிளி

    என படிப்பு என்னவென்று அறியாதவர்கள் படித்தவர்கள் முன்னே வெட்கப்படாமல் நினைத்ததெல்லாவற்றையும் கூறலாம் ஆனால், படித்தவர்கள் முன்னே பணியாமல் இருக்கக் கூடாது. அது எப்படியென்றால் கிளி பெரும் பூனை வந்தால் கீச்சுக்கீச்சென்று கத்துவதைப் போன்றது. இவ்வாறு பாட அவ்வை மதிநுட்பம் அறிந்த மன்னனும் அம்மையே! தங்கள் பெயர் எதுவென்று உரைக்க அவ்வை என்கின்றார். ஆ… அவ்வையா! என்று துடிதுடித்த மன்னனும் அவரை அரியாசனத்தின் தன் பக்கத்தில் இருத்துகின்றார்.

    இவ்வாறு கல்வி ஆற்றல் மிக்க தைரியமான அவ்வையார் சோழர்காலத்தில் வாழ்ந்திருக்கின்றார். பிற்கால அவ்வையார் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற சமுதாய சீர்திருத்த சிந்தனைகளை விதைக்கும் இலகுதமிழ் பாக்களை யாத்திருக்கின்றார் என்று அறியக்கூடியதாக இருக்கின்றது.

    எப்போது வாழ்ந்த அவ்வை என்று காலக்கணிப்பீட்டில் மயக்கம் இருந்தாலும் அவ்வையார் என்ற பெயரிலே எமக்குக் கிடைக்கும் அத்தனை பாக்களும் எமது உள்ளத்தை மகிழ்ச்சிப்படுத்துவதாகவே உள்ளன.

     

    உசாத்துணை நூல்களும் இணையப்பக்கங்களும்

    1. தனிப்பாடல் நகைச்சுவை – வே.ந.கபிலர்
    2. ஒளவையார் வாழ்வும் வாக்கும் – பேராசிரியர் தி. முத்து
    3. https://mayadigimedia.blogspot.com/2015/06/blog-post_37.html
    4. http://tamilcause.blogspot.com/2010/06/blog-post_16.html

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 87

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 87

    நாங்குநேரி வாசஸ்ரீ

    87. பகை மாட்சி

    குறள் 861:

    வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
    மெலியார்மேல் மேக பகை

    பகையாளி நம்மளவிட பலசாலியா இருந்தா எதுக்கக் கூடாது. பலமில்லாத எளச்சவன சட்டுனு எதித்து நின்னுடணும்.

    குறள் 862:

    அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான்
    என்பரியும் ஏதிலான் துப்பு

    கூட இருக்கவங்க மேல நேசம் வைக்காம, பலமுள்ள தொணையில்லாம, தானும் பலம் இல்லாம இருக்குதப்போ பகையாளிய எங்ஙன செயிக்க ஏலும்?.

    குறள் 863:

    அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
    தஞ்சம் எளியன் பகைக்கு

    ஒருத்தன் தொட நடுங்கியாவும், கூறுகெட்டவனாவும், மத்தவங்களோட சேந்து பழகுத கொணம் இல்லாதவனாவும், கஞ்சாம்பட்டியாவும் இருந்தாம்னா பகையாளி அவன சுளுவா தோக்கடிச்சிடுவான்.

    குறள் 864:

    நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
    யாங்கணும் யார்க்கும் எளிது

    கோவத்தையும், மனசையும் கட்டுக்குள்ள வைக்க ஏலாதவன யார் வேணும்னாலும், எப்பம்னாலும், எங்குட்டுன்னாலும் சுளுவா தோக்கடிச்சிப்போடுவாக.

    குறள் 865:

    வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
    பண்பிலன் பற்றார்க் கினிது

    நல்ல வழிய நாடாம, பொருத்தமானத செய்யாம, பொல்லாப்புக்கு அஞ்சாம, நல்ல கொணமும் இல்லாம ஒருத்தன் இருந்தாம்னா அவன் பகையாளியால சுளுவா செயிக்கப்படுவான்.

    குறள் 866:

    காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
    பேணாமை பேணப் படும்

    யோசிக்காம கோவப்படுதவனாவும், பேராசக்காரனாவும் இருக்கவனோட பகைய ஏத்துக்கிட்டு எதித்து நிக்கலாம்.

    குறள் 867:

    கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
    மாணாத செய்வான் பகை

    தான் கூட இருந்துக்கிட்டே தனக்கு வேண்டாத வேலயச் செய்யுதவன பொருள் கொடுத்தாது பகையாளியா ஆக்கிக்கிடணும்.

    குறள் 868:

    குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்
    கினனிலனாம் ஏமாப் புடைத்து

    ஒருத்தன் கொணங்கெட்டவனாவும், தப்புதண்டா செய்யுதவனாவும் இருக்குதப்போ அவன் பக்கத்தொணை இல்லாமப் போவுத நெலம பகையாளிக்கு பலமா ஆகிப்போவும்.

    குறள் 869:

    செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
    அஞ்சும் பகைவர்ப் பெறின்

    கூறுகெட்ட தொடநடுங்கியா பகையாளிங்க இருந்தாகன்னா அவுகள எதித்து நிக்கவங்கள விட்டு மகிழ்ச்சி வெலகாம இருந்துக்கிடும்.

    குறள் 870:

    கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
    ஒல்லானை ஒல்லா தொளி

    போர் செய்யுத மொறையப் படிச்சுத் தெரிஞ்சிக்கிடாம இருக்க பகையாளிய எதித்து நிக்குத சுளுவான காரியத்த செய்யத் தயங்குதவுகள புகழ் அண்டாம எட்டத்துலயே நின்னுக்கிடும்.

    Share