Blog

  • காப்புரிமை  (PATENT RIGHT)

    பொதுவாக நாம் சொத்துகள் என்று குறிப்பிடும்போது அது அசையும் சொத்து பற்றியும், அசையாச் சொத்து பற்றியும் மட்டுமே எண்ணத் தோன்றுகிறது. ஆனால் அறிவுசார் சொத்துகளையும் அதைப்போன்றே உயர்வாகவே மதிப்பிடப்படவேண்டியுள்ளது. காரணம் மற்ற
    சொத்துகளைப்போன்று அறிவுசார் சொத்துகளையும் பரிமாற்றமும், பரிவர்த்தனையும் செய்ய இயலும். அதாவது ஒருவர் தமது அறிவைப் பயன்படுத்தி ஒன்றை கண்டுபிடித்தாலோ அல்லது தயாரிப்பைச் செய்தாலோ அது அவருடைய சொத்தாகிவிடுகிறது. அது எத்துணை சிறிய கண்டுபிடிப்பாக இருந்தாலும், சிறிய மாற்றங்கள் கொண்ட தயாரிப்புகளாக இருந்தாலும் அவை அறிவுசார் சொத்துகளாக அங்கீகரிக்கப்படுகின்றன.

    பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்த நாட்டின் நிலம், மூலதனம் போன்றவைகளின் அடிப்படைகளில் மட்டுமே கணக்கிடப்படுவதில்லை. மாறாக அறிவுத் திறனே முக்கிய காரணி என்ற கருத்து, தற்போது உலகம் முழுவதும் வெகு விரைவாகப் பரவி வருவதைக்
    காணமுடிகின்றது.

    உலக வர்த்தக அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் இடையிலான “TRIPS” – Trade-Related Aspects of Intellectual Property Rights எனப்படும் வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தம் அறிவுசார் சொத்துரிமை சார்ந்த குறைந்தபட்ச தரநிலைகளைக் கட்டுப்படுத்துகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய நவீனமயமான காலகட்டங்களில் அறிவுசார் சொத்துகளின் மதிப்புகள் கூடிக்கொண்டே வருவதால் அதற்குரிய விழிப்புணர்வும் அத்தியாவசியமாகிறது. நாம் நம் அறிவுசார் சொத்துகளை பதிவு செய்வதன் மூலம் அதனைப் பயன்படுத்துவதற்கான முழுமையானதும், முதன்மையானதுமான உரிமையைப் பெறுகின்றோம் என்பது முக்கியம். அதைவிட, நம்முடைய படைப்புகளைப் பதிவு செய்வதன் மூலம் நம்மை பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதோடு அதற்குண்டான அதிகாரத்தையும், அங்கீகாரத்தையும் பெற முடிகின்றது. நம்முடைய அறிவு வளத்தைப் பயன்படுத்தி பொருள் வளத்தை மேம்படுத்திக்கொள்வதோடு, அதன் மூலம் பொது மக்களுக்கும் அவர்தம் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான வழியமைக்க உதவுகிறோம். அறிவுசார் சொத்துகளை அவற்றின் தன்மைக்கேற்ப பல வகைகளாகப் பிரிக்கலாம். அதில் முக்கியமான முதல் வகையான காப்புரிமை அதாவது PATENT RIGHT என்பது பற்றித்தான் இன்று விவரமாக அறிய உள்ளோம்.

    காப்புரிமை என்றால் என்ன?

    காப்புரிமை என்பது அறிவுசார் சொத்துரிமையின் உரிமையாளரின் சட்டப்பூர்வ உரிமையைக் குறிக்கிறது. ஒரு விளைபொருளை அல்லது கண்டுபிடிப்பை தயாரிப்பதற்கான, பயன்படுத்துவதற்கான அல்லது விற்பனை செய்வதற்கான தனி உரிமை தான் காப்புரிமை என்பது. எளிமையான சொற்களில், இதன் பொருள், தயாரிப்புகளின் அசல் படைப்பாளர்களுக்கும் அவர்கள் அங்கீகாரம் வழங்கும் எவருக்கும் மட்டுமே அந்த படைப்பை மீண்டும் உருவாக்குவதற்கான தனிப்பட்ட உரிமை உள்ளது. பொருளுக்கு மட்டுமின்றி பொருள்களின் வடிவமைப்புக்கும் (டிசைன்) காப்புரிமை பெறலாம் என்பதும் முக்கியமான செய்தி. காப்புரிமை ஒரு கண்டுபிடிப்பாளருக்கு வழங்கப்பட்டுவிட்டால் அதுபோன்ற பொருளை உற்பத்தி செய்யவோ, உபயோகப்படுத்தவோ, சந்தைப்படுத்தவோ வேறு யாருக்கும் உரிமை கிடையாது. இந்தியாவைப் பொறுத்தவரை அறிவுசார் சொத்துரிமை தொடர்பான முதன்மைச் சட்டம் இந்திய காப்புரிமைச் சட்டம், 1957 ஆகும். இந்தச் சட்டத்தின் விதிமுறைகள்படிதான் இன்றளவும் இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமைகள் செயல்படுகின்றன. 1970, 1999, 2002, 2005களில் இச்சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சொத்துரிமை பாதுகாக்கப்படுவது போன்று அறிவுசார் சொத்துரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சட்டத் திருத்தம் மிகப்பயனுள்ளது.

    புதியதொரு பொருட்களுக்கு அல்லது அவற்றின் உற்பத்திக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் கண்டுபிடிப்புகளுக்கு அதன் விண்ணப்பித்த நாளிலிருந்து 20 வருடங்களுக்கு காப்புரிமை வழங்கப்படுகிறது. அதற்குப் பிறகு அந்தக் கண்டுபிடிப்பு பொது பயன்பாட்டிற்கு வந்துவிடும். கண்டுபிடிப்பாளர் தனியாகவோ, குழுவாகவோ அல்லது நிறுவனம் பெயரிலோ தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு அறிவுசார் காப்புரிமை வேண்டி விண்ணப்பிக்க முடியும். இந்த முறையையே அனைத்து நாடுகளும் பின்பற்றுகின்றன. கண்டுபிடிப்பாளரை தவிர வேறு யாரும் இதில் உரிமை கொண்டாட முடியாது. வணிக நிறுவனங்கள் யாரேனும் கண்டுபிடித்த கண்டுபிடிப்பை தயாரித்து சந்தைப்படுத்தி இலாபம் ஈட்டும்பட்சத்தில் இலாபத்தில் ஒரு தொகையை கண்டுபிடிப்பாளர்களிடம் கொடுத்தே ஆகவேண்டும். குறைந்தபட்சமாக ஒரு சதவீதத்தில் ஆரம்பித்து 50 சதவீதம் வரை வணிக நிறுவனம் ஈட்டும் இலாபத்தில் கண்டுபிடிப்பாளருக்கு பங்குத்தொகை கொடுத்தே ஆக வேண்டும். ஒன்றிற்கும் அதிகமான புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஒருவரே காப்புரிமை பெற முடியும். காப்புரிமைக்குத் தேவையான அடிப்படைக் காரணிகள் என்றால் அவை, கண்டுபிடிப்பு புதுமையானதாகவும், உலகில் வேறு யாரும் அறிந்திராத வகையிலும் இருக்க வேண்டும். கண்டுபிடிப்புத் தன்மையைப் பொறுத்தவரை, கண்டுபிடிப்பு தற்போது இருக்கும் அறிவைவிட கூடுதல் தொழில்நுட்ப மேம்பாடு கொண்டிருக்க வேண்டும். பொருளாதார முக்கியம் கொண்டிருக்க வேண்டும் அல்லது மேற்கூரிய இரண்டையும் கொண்டிருக்க வேண்டும். தொழில்துறைப் பயன்பாட்டைப் பொருத்தவரை, கண்டுபிடிப்பு தொழில்துறையால் உற்பத்தி செய்யக் கூடியதாகவும், அல்லது தொழில்துறையால் பயன்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.

    முதல் பதிவு செய்யப்பட்ட காப்புரிமை ஒரு தொழில்துறை சார்ந்த கண்டுபிடிப்புக்காக 1421இல் புளோரன்ஸ் (Florence) நகர கட்டிடக் கலைஞரும் பொறியாளருமான பிலிப்போ ப்ரூனெல்லெஸ்ஸிக்கு (Filippo Brunelleschi) வழங்கப்பட்டது. பளிங்குக் கற்களை ஏற்றிச் செல்லப்
    பயன்படும் சக்கரங்களுடன் கூடிய ஒரு விசைப்படகு தயாரிப்பதற்கு அவருக்கு மூன்று வருட ஏகபோக உரிமை வழங்கப்பட்டது.

    உலகத்திலேயே அதிக காப்புரிமை கொண்டவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுன்பையமாசகி என்பவர். இவர் தனியாகவும், குழுவாகவும் இதுவரை 5,460 கண்டுபிடிப்புகளுக்கு அறிவுசார் காப்புரிமை பெற்றுள்ளார்.
    அமெரிக்காவை சார்ந்த அறிவியல் வல்லுனரான தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரத்து தொன்னூற்று மூன்று கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார்.

    நம் உரிமையை ஏன் காக்க வேண்டும் என்ற வினாவும் எழத்தானே செய்கின்றது. புதிய கண்டுபிடிப்புகள் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானதாக இருப்பதோடு, அதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகின்றன. புதியவற்றைக் கண்டுபிடிப்பதில் உள்ள ஆர்வம் அதைப்
    பதிவு செய்வதில் இருக்க வேண்டும் என்பதும் அவசியம். அதைப்போல பழைய உரிமைகளைப் புதுப்பிப்பதிலும் ஆர்வம் கொள்ள வேண்டியதும் அவசியம். புதிய பொருளில், புதிய கண்டுபிடிப்புகள் / புதிய உத்திகள் தங்களிடம் இருந்தால் அதற்கு அறிவுசார் சொத்துரிமைக்கோரி விண்ணப்பிப்பது அதைப் பாதுகாப்பதே நாம் நம் நாட்டிற்குச் செய்யும்
    முக்கிய கடமையாகவும் இருக்கும்.

    கோவை, ஈரோடு பகுதிகளின் நூற்பாலைகளில் பார்த்தீர்களானால் அன்றாடம் ஏதோவொரு சிறிய சிறிய அல்லது பெரிய கண்டுபிடிப்புகளை போகிற போக்கில் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கெல்லாம் அனைத்திற்கும் காப்புரிமை பெற்றிருக்கிறார்களா என்பது ஐயமே.. பின்னலாடை என்கிற ஹொசைரி பல நேரங்களில் திரைப்பட வட்டாரங்களில் அடிக்கடி நாம் கேட்கும் வசனங்கள், “என் கதையை சுட்டுட்டாங்க .. என் பெயர் கூட குறிப்பிடப்படாமல் வேறு ஒருவர் பெயரைப் போட்டிருக்கிறார்கள். இதுவே ஒருவரின் புதிய அறிவியல் கண்டுபிடிப்பையோ அல்லது புதிய தொழில்நுட்பத்தையோ மற்றொருவர் எடுத்து தங்களுடையதைப் போன்று பயன்படுத்தினாலோ அல்லது வணிகம் செய்தாலோ எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நாம் அறிவோம். இதுபோன்ற அறிவுத் திருட்டுகளைத் தடுப்பதற்காகவே பேடன்ட் எனப்படும் காப்புரிமை வசதி இருக்கிறது. ஆனாலும் அது பற்றிய விழிப்புணர்வு இன்னும் அதிகம் இல்லை என்பதும் உண்மை.

    டிரேட் மார்க் எனப்படும் வணிக முத்திரைகள், கண்டுபிடிப்புகளின் டிசைன் எனும் வடிவங்கள், புவிசார் குறியீடுகள், காப்பிரைட் எனப்படும் படைப்பாக்க உரிமை, பேடன்ட் எனப்படும் காப்புரிமை ஆகியவை அறிவுசார் சொத்துரிமையின் கீழ் வரும் முக்கியமான விடயங்கள். சென்னை அலுவலகம் காப்புரிமை, வணிக முத்திரைகள் மற்றும் புவிசார் குறியீடுகளுக்கானது.
    காப்புரிமை என்பது ஒரு கண்டுபிடிப்புக்கு வழங்கப்படுகின்ற தனிப்பட்ட உரிமை ஆகும். இது சர்வதேச முறையிலும் தேசிய முறையிலும் என்ற அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம்.
    காப்புரிமை முக்கியமாக
    1. பயன்பாட்டு காப்புரிமை
    2. வடிவமைப்பு காப்புரிமை
    3. தாவர காப்புரிமை
    4.  மென்பொருள் காப்புரிமை
    என்று வகைப்படுத்தப் படுகின்றன.

    முதலில் காப்புரிமை ஒன்றை குறித்த கண்டுபிடிப்புக்காகப் பெற்றுக்கொள்ள முன்னர் குறித்த கண்டுபிடிப்பானது காப்புரிமைக்கு தகுதி உடையதா? ஏற்கனவே அவ்வாறன கண்டுபிடிப்பு சந்தையில் உள்ளதா? அதற்கு காப்புரிமை பெறப்பட்டதா போன்ற சில அடிப்படை பரிசோதனைகளை நிகழ்த்துவது அவசியம். பின்னர் சட்டத்தரணி ஒருவர் மூலமாக காப்புரிமை விதிகளுக்கேற்ப காப்புரிமை வழங்கும் நிறுவனத்திற்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் அதனை பதிவு செய்துகொள்ள முடியும். சர்வதேச முறையில் காப்புரிமம் பெற்றுக்கொள்ள Switzerland இல்
    அமைந்துள்ள International Bureau of the World Intellectual Property Organization (WIPO)க்கு விண்ணப்பிப்பதன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
    அண்ணாமலை பல்கலைகழகத்தில் காப்புரிமை பெறுவதற்கான பயிற்சி மையம் வைத்திருக்கிறார்கள். காப்புரிமை சட்ட மசோதா 1999-ம் ஆண்டில்தான் கொண்டு வரப்பட்டது.

    காப்புரிமை அலுவலகம் மத்திய தொழில் வர்த்தக அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றது. எந்த ஒரு பொருளுக்கும் 20 ஆண்டுகளுக்குக் காப்புரிமை வழங்கப்படும். காப்புரிமை பெற கண்டுபிடிப்பைப் பற்றிய இருவகையான குறிப்பேடுகள் வழங்கப்பட வேண்டும்.

    அவை:
    1. தற்காலிக குறிப்பேடுகள்
    2. முழுமையான குறிப்பேடுகள்

    1. தற்காலிக குறிப்பேடுகள்

    தற்காலிக குறிப்பேடுகள் என்பது முன்னுரிமைக்காக ஆராய்ச்சியை முடிக்கும் முன்னரே பதிவு செய்து வைப்பதாகும். இந்த ஆய்வு பற்றியும் கண்டுபிடிப்பு பற்றியும் முழுமையானத் தகவல் தரவேண்டியதில்லை. எனினும் தற்காலிக குறிப்பேடுகள் காப்புரிமை ஏதும் வழங்காது. இது ஒரு
    கண்டுபிடிப்புப் பற்றிய முன்னுரிமையைப் பெற மட்டுமே வழிவகுக்கிறது. தற்காலிகக் குறிப்பேடு பதிவு செய்த 12 மாதங்களுக்குள் முழுமையான குறிப்பேடு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இயலாத பட்சத்தில் மேலும் 3 மாதங்கள் கால அவகாசம் நீட்டிக்கப்படும். ஒரு கண்டுபிடிப்பை முடித்துவிட்டால் நேரடியாக முழுமையான குறிப்பேட்டிலும் பதிந்து கொள்ளலாம். தற்காலிகக் குறிப்பேடு பெற்றிருத்தல் என்பது கட்டாயம் இல்லை.

    2. முழுமையான குறிப்பேடுகள்

    காப்புரிமை பெற கண்டுபிடிப்பு அல்லது தொழில்நுட்பம் பற்றிய முழுமையான குறிப்பேடு காப்புரிமை அலுவலகத்தில் சமர்பிக்கப்படுதல் அவசியம். ஒரு முழுமையான குறிப்பேட்டில் கீழ்க்காணும் அம்சங்கள் கட்டாயமாக இருத்தல் வேண்டும்.

    1. கண்டுபிடிப்பின் பெயர் / தலைப்பு
    2. அக்கண்டுபிடிப்பு எந்தத் துறையைச் சேர்ந்தது
    3. அக்கண்டுபிடிப்பு பற்றிய முழு வரலாறு. அத்துறையில் கண்டுபிடிப்புடன் தொடர்புடைய முந்தைய கண்டுபிடிப்புகள் பற்றிய விவரம்.

    4. கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி பற்றிய முழு ஆராய்ச்சி முடிவுகள்.
    5. கண்டுபிடிப்பை புரிந்து கொள்ள படங்கள்
    6. கோரப்படும் உரிமைகள் பற்றிய விவரம் தெளிவாக இருத்தல் அவசியம். என்னென்ன பண்புகளுக்குக் காப்புரிமை தேவைப்படுகிறது, காப்புரிமை விண்ணப்பதாரர் பெயரில் மட்டும்
    வழங்கப்பட்டால் போதுமா அல்லது வேறு நபருடன் சேர்த்துக் கோருகிறாரா என்பன போன்ற தகவல்கள் சரியாக இருத்தல் வேண்டும்.

    உலக அளவில் (சர்வதேச தரத்தில்) காப்புரிமை பெறுவது எவ்வாறு?

    இன்றைய நடைமுறை அளவில் உலக அளவில் காப்புரிமை பெற வழியில்லை.  பொதுவாக நாம் எந்த நாட்டில் பயன்படுத்துகிறோமோ அந்நாட்டில் உள்ள வழிமுறைப்படி காப்புரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும். சில நாடுகளில் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது வட்ட அளவில் காப்புரிமை பெறுவதற்கான ஐரோப்பிய காப்புரிமை அலுவலகம் அல்லது ஆப்ரிக்க வட்டார அறிவு சார்ந்த காப்புரிமை அலுவலகம் என்ற நிறுவனங்கள் ஆங்காங்கு தோன்றியுள்ளன. இவை அக்குறிப்பிட்ட நாடுகள் / பகுதிகளுக்கான காப்புரிமைகளை வழங்குகின்றன. கூட்டுறவுக் காப்புரிமை உடன்பாடு உலக அளவில் (சர்வதேச தரத்தில்) காப்புரிமைகளை வழங்குகிறது. எனினும் அவை ஒரு நாட்டு காப்புரிமை போலவே பயன்பாடு உடையவை. இந்தியாவில் காப்புரிமை செய்தால் அது இந்தியாவில் மட்டுமே செல்லுபடியாகும். உங்களுடைய தயாரிப்பைப் போல் மற்றவர்கள் அப்படியே செய்து விற்க முடியாது. வேறு நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய விரும்பி காப்புரிமை பெற விரும்பினால் இந்தியாவில் பதிவு செய்த ஓராண்டுக்குள் எந்த நாட்டில் காப்புரிமை பெற விரும்புகிறோமோ அந்த நாட்டில் காப்புரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் நாற்பதாயிரம் விண்ணப்பங்கள் புதிய கண்டுபிடிப்புகளுக்கான உரிமை கோரி வருகின்றன. அதில் சென்னை அலுவலகத்துக்கு மட்டுமே சுமார் 16 ஆயிரத்துக்கும் மேல் வருவதாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனாலும் இந்தியாவில் இப்படி வரும் விண்ணப்பங்களில் சுமார் 85 சதவீதம் வெளிநாட்டினருடையவை என்ற வேதனையான செய்திகளும் வருகின்றன.
    பொதுவாக தாராளமயமாக்கல் வந்தபிறகு பல நாடுகளுக்கும் தங்கள் தயாரிப்புகளை அனுப்புவதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் எளிதாகிவிட்டன. 1990-ம் ஆண்டிலிருந்தே இந்தியா தாராளமயமாக்கல் கொள்கையைக் கடைப்பிடித்தாலும், காப்புரிமைச் சட்ட மசோதா 1999-ம்
    ஆண்டில்தான் கொண்டு வரப்பட்டது. கடின உழைப்பினாலும், சீரான முயற்சியினாலும் உங்களுடைய தயாரிப்புகளை நீங்கள் தரமானதாகத் தயாரித்து விற்பனை செய்து அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம்.

    உங்கள் பொருளுக்கு அதிக கிராக்கி நிலவும் இந்த நிலையில் அதை கவனம் கொள்ளும் மற்றவரும் அதே போல தயாரிக்க முற்படலாம். இதனால் உங்களது உழைப்பு வீணாவதோடு சந்தையில் இலாபமும் குறையக்கூடும். இதைத் தவிர்க்கவே காப்புரிமை பெறுவது அவசியமாகிறது. மத்திய தொழில் வர்த்தக அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் காப்புரிமை அலுவலகத்தின் தலைமையகம் கொல்கத்தாவிலும், அதன் கிளை அலுவலகங்கள் புதுடெல்லி, மும்பை, சென்னையிலும் உள்ளன. தமிழ் நாட்டில் இருப்பவர்கள் சென்னையிலேயே காப்புரிமை பெறலாம். புதிதாகத் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பத் தயாரிப்புகளுக்கும், ஏற்கனவே உள்ள பொருள்களில் புதிய மாறுதல்கள் செய்யப்பட்டிருந்தாலும் அவற்றிற்கு காப்புரிமை பெறலாம். ஒரு பொருளுக்கு 20 ஆண்டுகளுக்குக் காப்புரிமை வழங்கப்படுகிறது என்றாலும் அப்பொருளை கண்டுபிடித்த ஓராண்டுக்குள் அதற்கு காப்புரிமை பெற வேண்டியது கட்டாயம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். பொதுவாகக் கண்டுபிடிப்பு என்பது தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சனைக்கான தீர்வுதான். இதுவரை யாராலும் முன்னெடுக்கப்படாத புதிய கண்டுபிடிப்புகளே காப்புரிமைக்குத் தகுதியானவை. அந்த வகையில் ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்துவதற்கு முன்பே அது ஏற்கனவே புழக்கத்தில் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

    நீங்கள் தயாரித்த பொருளுக்கு காப்புரிமை பெறப்பட்டிருக்கிறதா என்பதை இணையதளத்தில் தேடி தகவல்களைப் பெறலாம். அதனைத் தெரிந்து கொள்வதற்கான இணையதளம் உள்ளது. (www.ipindia.nic.in) சென்னை அலுவலகம் பற்றிய விவரத்தை chennai-patent@nic.in என்ற இணையதளத்திலும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டும் பெறலாம். wipo என்ற இணையதள தேடுதல் மூலம் பிற நாடுகளில் எந்தெந்த பொருள்கள் காப்புரிமை செய்யப்பட்டுள்ளன என்ற விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள பல்வேறு காப்புரிமை அலுவலகங்களின் இணையதளங்களும் காணக்கிடைக்கின்றன. பாரம்பரிய மருந்துகள் சார்ந்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கோருவோர், இந்திய அரசின், பாரம்பரிய அறிவு எண்ணிம நூலகம், அதாவது டிரடிஷனல் நாலெட்ஜ் டிஜிட்டல் லைப்ரரி என்ற அமைப்பில் அது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஆனாலும்
    எந்த ஒரு கண்டுபிடிப்பும் மனித சமூகத்துக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுவதாக இருக்க வேண்டியது அவசியம்.

    இந்தியர்களுக்கு படைப்பாற்றல் அதிகம் இருந்தாலும் அறிவுசார் சட்டத்தை பயன்படுத்துவதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் இந்தியா பல இக்கட்டான சூழ்நிலைகளைச் சந்தித்துள்ளது. நம் முன்னோர்கள் கண்டுபிடித்த பாரம்பரிய முறைகளுக்கு மற்றொரு நாட்டில்
    காப்புரிமை வழங்கி இருப்பின் இந்திய நாடு தகுந்த ஆதாரங்களைக் காட்டி அங்கு கொடுக்கப்பட்ட காப்புரிமையை நிரந்தரமாக இரத்து செய்யலாம். ஒருமுறை இரு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மஞ்சள் உடலில் ஏற்படும் காயங்களை ஆற்றும் வல்லமை படைத்தது எனக் கண்டுபிடித்துள்ளதாக கூறி காப்புரிமை பெற்றனர். இதை எதிர்த்து இந்திய தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மருத்துவ கழகம் “பழங்காலக்கலை” என்ற அடிப்படையில் ஆதாரங்களுடன் வாதிட்டதால் மஞ்சளுக்கான அமெரிக்க காப்புரிமை ரத்து செய்யப்பட்டது. இதன் கூற்றுப்படி மஞ்சளின் காயங்களைக் குணப்படுத்தும் திறன் பழங்காலத்திற்கு முன்பே கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரமாக இந்திய மருத்துவக் கழகம் 1953 – ல் வெளியிட்ட ஒரு சஞ்சிகையையும் சமர்ப்பித்தது. பின்பு அமெரிக்க காப்புரிமை மஞ்சளுக்கான காப்புரிமையை இரத்து செய்தது. ஏனெனில் கண்டுபிடிப்பு என்பது,
    1. தனித்தன்மை உடையதாகவும், புதியதாகவும், பயன்படக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
    ஆனால் மஞ்சள் வழக்கு தனித்தன்மை உடையதாகவும் புதியதாகவும் இல்லை என்பதால் இரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் பாரம்பரியமாகப் பயன்பாட்டில் உள்ள பொருட்களுக்கு, ஐக்கிய நாடுகள் காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை அலுவலகம் (யுஎஸ்பிடிஓ) வழங்கிய மஞ்சள் மற்றும் பாசுமதி அரிசி  காப்புரிமைகளும் 1990களின் பிற்பகுதியில் ஐரோப்பிய காப்புரிமை அலுவலகம் வழங்கிய வேம்பின் காப்புரிமையை இந்திய அரசு வெற்றிகரமாகப் போராடி இரத்து செய்தது நினைவு கூறத்தக்கது. ஐரோப்பிய காப்புரிமை நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த யுஎஸ்டிஏ என்ற உர நிறுவனத்திற்கு வேம்பின் கொட்டையிலிருந்து பூஞ்சாணக்கொல்லி தயாரிக்கும் முறைக்கு உரிமம் வழங்கியது. பாரம்பரிய முறையை ஆதாரங்களுடன் வாதிட்டதால் இந்திய அரசு இதிலும் வெற்றி கண்டது. இந்தியாவில் காப்புரிமை செய்தால் அது இந்தியாவில் மட்டுமே செல்லுபடியாகும். இந்தியாவில் உங்களுடைய தயாரிப்பைப் போலவே
    இன்னொருவர் தயார் செய்து விற்க முடியாது. அதே சமயம் உங்கள் தயாரிப்புகளை வேறு நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய விரும்பி காப்புரிமை பெற விரும்பினால் இந்தியாவில் பதிவு செய்த ஓராண்டுக்குள் எந்த நாட்டில் காப்புரிமை பெற விரும்புகிறோமோ அந்த நாட்டில் காப்புரிமைக்கு
    விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் சுமாராக 40 ஆயிரம் பேர் காப்புரிமைக்காக விண்ணப்பிக்கின்றனர். இவர்களில் 85 சதவீதம் பேர் வெளிநாட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தங்களது தயாரிப்புகளை இந்தியாவில் விற்பதற்காக இவர்கள் காப்புரிமை பெறுகின்றனர்.

    இந்தியாவில் காப்புரிமை செய்வோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்குக் காரணம் அது குறித்த விழிப்புணர்வு இங்கு அதிகம் இல்லாததே காரணம் என்கின்றனர் சென்னை அலுவலகத்தின் காப்புரிமை மற்றும் வடிவமைப்புப் பிரிவு இணை ஆணையர் ஆர். தேவன் அவர்கள். இந்தியா உயர்கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ள நாடு. ஒரு வருடத்திற்கு பல இலட்சம் மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி போன்ற இடங்களில் இருக்கும் இந்திய அரசின் அறிவுசார் காப்புரிமை அலுவலகத்திற்கு ஒவ்வொரு மாணவரும் ஏதோ ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தி காப்புரிமை கோரினாலே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பன்மடங்காக பெருகும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.
    தமிழகத்தில் மட்டுமே 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஆண்டுக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் கண்டுபிடிப்புகளை தங்களது துறைகளில் மேற்கொள்கின்றனர். இவற்றை பதிவு செய்து காப்புரிமை பெற்றால், அந்த தயாரிப்பால் பயன் பெறும் நிறுவனங்கள் அதற்கு ராயல்டி தொகை அளிக்கும். இதன் மூலம் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் பயனைடையும். வெளிநாடுகளில் காப்புரிமை பெறும் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு இதுவே காரணம். இந்தியாவிலும் இந்த நடைமுறை வந்தால் காப்புரிமை பெறுவது அதிகரிக்கும். நமது தயாரிப்புகளுக்கு சர்வதேச அங்கீகாரம் எளிதில் கிடைக்கும். பொதுவாகவே, காப்புரிமை பெறுவதற்கும் அதற்கான விண்ணப்பம் செய்வதற்குமான கட்டணம் மிகவும் அதிகமாக இருக்குமோ என்ற ஐயம் அனைவருக்கும் வருவது இயல்புதான். ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அதற்குரிய கட்டணம் சொற்பம்தான்.  காப்புரிமைக்கு
    விண்ணப்பிக்க இந்திய அரசு தனிநபருக்கு ரூ. 700/-, குழுக்கள், நிறுவனங்கள், போன்றவைகளுக்கு ரூ.4000/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு விண்ணப்பதாரர் விண்ணப்பித்த 48 மாதங்களுக்குள் பரிசோதனைக்கு வருமாறு பரிசோதனைக் குழுவிற்கு வேண்டுகோள் விடுக்கவேண்டும். இதற்கு நபர் ஒருவருக்கு ரூ. 1000/- ம் நிறுவனங்களுக்கு  ரூ. 3000/- ம் செலுத்தப்பட வேண்டும். அதோடு பதிவுசெய்வதற்கென தனிநபர் ரூ. 1500/- ம் நிறுவனங்கள் ரூ. 5000/- ம்  காப்புரிமை பெறும் சமயத்தில் செலுத்த வேண்டும். ஆனால் திட்டப்பணி வரைவை எழுதி, தட்டச்சு செய்து அச்செடுத்து சமர்ப்பிப்பதுதான் சற்று சிரமமான காரியம் என்பதோடு செலவு சற்று அதிகம் பிடிப்பதும் அதற்குத்தான். ஒரு தனி நபரின் கண்டுபிடிப்புக்கான விண்ணப்பத்திற்கு சுமார் இரண்டாயிரத்திலிருந்து ஏழாயிரம் ரூபாய் வரை
    செலவாகும். ஒரு நிறுவனத்தின் கண்டுபிடிப்பு என்றால் அதற்கு இதைவிட நான்கு மடங்கு செலவாகும் என்கிறார்கள். அப்படி ஒரு கண்டுபிடிப்புக்காகப் பெற்ற காப்புரிமைக்கு 20 வருடம்தான் மதிப்பு இருக்கும். அதன்பின் அதை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். உரிமையாளர்கள் தங்கள் கண்டுபிடிப்பையும் அதற்கான காப்புரிமையையும் எவருக்கு வேண்டுமானாலும் விற்கவோ அல்லது அடமானம் வைக்கவோ செய்யலாம். வெளிநாடுகளில் கண்டுபிடிப்பாளர்களை பெரும்பாலான நிறுவனங்கள் ஆதரிக்கும் அளவிற்கு இங்கே இல்லையென்றாலும் அகமதாபாத்திலுள்ள ‘இண்டியன் இன்னொவேஷன் ஃபவுண்டேஷன்’
    போன்ற ஒரு சில அமைப்புகள் புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
    தமிழ்நாட்டில் மட்டும் எடுத்துக்கொள்வோமானால் ஒவ்வொரு ஆண்டுக்கும் சுமார் 5 இலட்சம் பொறியாளர்களாவது உருவாகிறார்கள். அதேபோலபௌதிகம், நுண்ணுயிரியல் போன்ற அனைத்துத் துறை சார்ந்த மாணவர்களும் தங்கள் இறுதியாண்டு ப்ராஜெக்ட் எனும் திட்டப்பணி
    வரைவுகளில் பத்து சதவீதம் மட்டுமே கூட காப்புரிமை அலுவலகத்துக்கு வந்தாலே போதும், மிகக் குறைந்தபட்சமாக 50,000க்கும் அதிகமான கண்டுபிடிப்புகள் தொழிலுக்கும் அறிவியல் வளர்ச்சிக்கும் உதவும் வகையில் வெளிவரக்கூடும். ஆனால், பெரும்பாலான மாணவர்கள் தங்கள்
    ப்ராஜெக்டுகளையே விலைக்கு வாங்கித்தான் சமர்ப்பிக்கிறார்கள் என்கிற வருத்தமான தகவல்களை மட்டுமே காப்புரிமை அளிக்கும் அதிகாரிகள் அளிக்கின்றனர். அந்த வகையில் இளைஞர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை சரியாகத் திட்டமிட்டு மேற்கொண்டு காப்புரிமை பெற்றால் பெரியளவில் சாதிக்கக்கூடும் என்பதையும் நினைவில் கொண்டு மாணவர்களுக்கு சரியான வழியில் பயிற்சி அளிக்கவேண்டியதும் ஆசிரியர்கள், பேராசிரியர்களின்
    முக்கிய கடமை. பொறியியல் மாணவர்கள் காப்பீடு தொடர்பான ஆலோசனைகளை வழங்கலாம். காப்புரிமை ஆய்வாளராக பணியாற்றுவதற்கான வாய்ப்பும் உள்ளது. காப்பீடு முகவர் போன்று இவர்கள் செயல்படலாம் என்றும் தேவன் அவர்கள் குறிப்பிட்டுள்ளதும் கவனம் கொள்ளத்தக்கது.
    காப்புரிமையை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம். முதலில் ஒரு கண்டுபிடிப்பின் முழுமையான திட்டப்பணி வரைவாக உருவாக்கி சமர்ப்பிக்க வேண்டும். பின் பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு அவர்களது இணையவெளியில் அதுபற்றிய முழுமையான விவரங்கள் வெளியிடப்படும். இந்த நேரத்தில் இந்தத் திட்டப்பணி தொடர்பாக மற்றவர்களுக்கு ஏதேனும்
    எதிர்ப்பு இருந்தால் தெரிவிப்பார்கள். ஒரு காப்புரிமைக்கு யாரேனும் எதிர்ப்புத் தெரிவிக்க விளைந்தால் 4 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும். ஒரு மாதம் நீட்டிக்கலாம். இவ்வாறு எதிர்ப்புத் தெரிவிப்பவர் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் அவர் எதற்காக, என்னென்ன பண்புகளை எதிர்க்கிறார் என்ற முறையான விளக்கங்கள் கொடுக்க வேண்டும். இந்த விளக்கம் எழுத்து வடிவத்தில் என்னென்ன குறிப்புகளை தெரிவிக்கிறார் என ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். கட்டுப்பாட்டு அலுவலர் இவ்விளக்கம் மற்றும் ஆதாரங்களைப் பார்த்துக் காப்புரிமை அளிப்பு பற்றி முடிவு செய்வார். காப்புரிமை பெறுவதற்கு படிவம் -2 ஐ பூர்த்தி செய்ய வேண்டும். இது தவிர படிவம் -1 மற்றும் படிவம் -18-ஐ பூர்த்தி செய்ய வேண்டும். அப்படி ஏதும் எதிர்ப்பு இல்லாத நிலையில்தான் அது காப்புரிமைக்குத் தகுதியானதாகக் கருதப்படும். ஆனாலும் காப்புரிமைக்குத் தகுதியானதுதான் என்று உறுதி செய்த பிறகும் அடுத்த கட்ட சோதனைக்குத் தயாராக வேண்டும். அதாவது காப்புரிமைக்கு விண்ணப்பித்திருக்கும் அந்த நபர்தான் இந்த கண்டுபிடிப்பைச் செய்தவரா, அல்லது வேறு எவருடையதாவது அபகரிக்கப்பட்டுள்ளதா என சோதிக்கப்படும். இதற்காக அந்த திட்டப்பணி தொடர்பான ஐயங்களையும், தொழில்நுட்பம் சார்ந்த விவரங்களையும் அதற்குரிய நிபுணர்கள் நேர்காணல் மூலம் கேட்டறிவார்கள். பின்னர் எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் அனைத்தையும் சரிபார்த்து, அவர்கள் எடுக்கும் முடிவின் அடிப்படையிலேயே காப்புரிமை வழங்கப்படும்.

    காப்புரிமைக்குத் தகுதியில்லாத கண்டுபிடிப்புகள் என்று வரையறுக்கப்பட்டவை பலவும் உள்ளன என்றாலும், அதில் முக்கியமான சிலவற்றைக் காணலாம். இயற்கை விதிகளுக்கு முரணான கண்டுபிடிப்புகள் பொதுமக்களின் அமைதி, சுமுக நிலைமை போன்றவற்றைப் பாதிக்கும்
    கண்டுபிடிப்புகள். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் அல்லது சுகாதாரம், சுற்றுச்சூழலுக்கு எதிரான கண்டுபிடிப்புகள். வேளாண்மை அல்லது தோட்டக்கலையின் முறைகள்
    மூளையின் செயல்பாடுகள் குறித்த திட்டம் மற்றும் முறைகள், விளையாட்டு முறைகள் தகவல்களை வழங்குதல் குறைக்கடத்தி ஒருங்கிணைந்த சுற்றுகள் பற்றிய வரைபட விளக்கம்
    பாரம்பரியமாக அறியப்பட்ட ஒன்றின் கூட்டமைப்புகள், அவற்றின் மறுபடிவங்கள் சார்ந்த கண்டுபிடிப்புகள் அணுசக்தி தொடர்பான கண்டுபிடிப்புகள் பொது நலன், மனிதநேயத்தின் கொள்கைகள் மற்றும் அறநெறிக்கு முரணான முடிவுகள். போன்றவைகள் உள்ளிட்டவைகள் காப்புரிமைக்கு தகுதியில்லாதவையாக கருதப்படுகின்றன. பல நாடுகளில், குளோனிங் துறையில் ஆராய்ச்சிக்கு காப்புரிமை பெறுவது தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது.

    காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தை வர்த்தகமயமாக்கல் பற்றி பார்த்தால், காப்புரிமை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் உற்பத்தியானது சந்தையில் மதிப்பளித்தால் மட்டுமே காப்புரிமை வணிகத்திற்கு உறுதியான பலனை அளிக்கும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். காப்புரிமையிடப்பட்ட கண்டுபிடிப்பை சந்தைக்கு கொண்டு செல்வதற்கான வழிகள் எவை என்று பார்க்கலாம்.
    காப்புரிமையிடப்பட்ட கண்டுபிடிப்பினை நேரடியாக வர்த்தகமயமாக்கலாம்.
    காப்புரிமையை வேறொருவருக்கு விற்கலாம்.

    காப்புரிமையின் உரிமையை மற்றவர்களுக்குக் கொடுக்கலாம்.
    இணைந்த உடன்பாட்டு வியாபாரத்தை, அதாவது கூட்டு சேர்ந்து வணிகம் மேற்கொள்ளலாம்.
    காப்புரிமை தலையீட்டிற்கான தீர்வு பற்றியும் அறியவேண்டும். அதாவது தங்களது காப்புரிமையில் மற்றவர்கள் தலையீடு செய்கின்றனர் என்று நம்பினால் முதலாவது நடவடிக்கையாகத் தலையீடு செய்பவர்களின் உற்பத்தி அல்லது படிமுறையைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து, அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, பின்பு அவர்களுக்கு, ‘நிறுத்து அத்துடன் தவிர் கடிதம் அனுப்ப வேண்டும். இதனால் தலையீட்டாளர் நடவடிக்கைகளை நிறுத்தி விடுவர் அல்லது உரிமமிடல் ஒப்பந்த பேச்சிற்கு இணங்கி வருவர். இவ்வாறு நடைபெறாத சமயத்தில் நீதிமன்றத்தை நாடி இடைக்கால தடைச்சட்டத்தினைக் கேட்டுப் பெறலாம். பின்னர் தலையீட்டாளர் நடவடிக்கைகளைப் பொறுத்து நீதிமன்றம், தலையீட்டாளர் நடவடிக்கைகளை நிறுத்துமாறு பணிக்கலாம். அல்லது காப்புரிமை உரிமையாளருக்கு நட்டஈட்டினை அளிக்க தீர்மானிக்கலாம்.

    இந்தியாவில் காப்புரிமையும் பதிப்புரிமை பதிவு முறை மிகவும் எளிமையாகி வருவதும் கருத்தில் கொள்ளத்தக்கது. வலிமையும் துடிப்பும் மிக்க அறிவுசார் சொத்துரிமை உள்கட்டமைப்பை நிறுவுவதற்கான வழிகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. காப்புரிமைகள், வடிவமைப்புகள், பதிப்புரிமைகள் மற்றும் வர்த்தகம் முத்திரைகளை ஆராய்வதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து இந்த ஆய்வுகள் திருப்தி அளிக்கின்றன. புதுமைகளின் மையமாக இந்தியா உருவாவதற்கு வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல் பெரிய அளவில் உதவும். புது நிறுவனங்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பெண் தொழில் முனைவோருக்கான கட்டணங்கள் 80 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளன. அறிவுசார் சொத்துரிமை செயல்முறை முன்பை விட எளிமையாகவும் முறைப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அலுவலர்கள் காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தின் அலுவலர்கள், பதிவு செய்தல் மற்றும் சேவைகளை பெறுவதை எளிமைப்படுத்துவதற்காக முடிவெடுப்பதற்கான கால அளவையும் டிஜிட்டல் முறைக்கு மாறுதல் உள்ளிட்ட ஒட்டுமொத்த செயல்முறையும்
    மறுசீரமைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.உதாரணத்திற்கு, வர்த்தக முத்திரை விதிகளின் கீழ் முன்பிருந்த 74 படிவங்கள் 8 ஒருங்கிணைந்த படிவங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பிப்பது எளிதாகிறது. வர்த்தக மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு வழங்கும் உலகின் மிகச் சிறந்த முதலீட்டு மேம்பாடு விருது இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.

    காப்புரிமை பெறுவதன் பயன்கள்

    1. காப்புரிமை உரிமையாளரின் கண்டுபிடிப்பிற்கு பாதுகாப்பளிக்கிறது.
    2. அதன் பயனை அவர் முழுமையாக அடைய உதவுகிறது.
    3. பிறர் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது.
    4. உரிமையாளரின் பொருளாதாரத்தை உயர்த்துகிறது.

    காப்புரிமை பெறப்படாத பொருட்களை யார் வேண்டுமானாலும் வணிக முறையில் பயன்படுத்த முடியும்.
    1. கண்டுபிடிப்பாளர்கள் தமது கண்டுபிடிப்பால் பொருளாதார முறையில் பலன் பெறாவிடில், அவர் தமது கண்டுபிடிப்பை பிறர்க்குப் பயன்படும் வகையில் ஏதேனும் தனியார் நிறுவனத்திலோ அல்லது வேறொருவரிடமோ விற்று விட காப்புரிமையில் அனுமதியுண்டு.
    2. காப்புரிமை புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் தொழில்வளர்ச்சிக்கு அடிகோலுகிறது.
    3. காப்புரிமையில் இடம்பெறும் சிறப்பம்சங்கள் மேலும் பல ஆராய்ச்சிகள் செய்ய அடிப்படையாக அமையும்.
    4. இந்த காப்புரிமையானது மேலும் பல ஆராய்ச்சிகள், முன்னேற்றக் கண்டுபிடிப்புகளை செய்யத் தூண்டுகோலாக அமையும்.
    5. காப்புரிமை வர்த்தகத் தொழில்துறைக்கு ஒரு சொத்தாக அமைகின்றது. அதிகக் காப்புரிமை பெற்ற நிறுவனங்கள் பொருளாதார அளவில் வசதி படைத்ததாக கருதப்படுகிறது.
    6. குறிப்பிட்ட காப்புரிமைக் காலம் முடிந்த உடன் அக்காப்புரிமை பெற்ற பொருள் அல்லது தொழில் நுட்பம் பொது உபயோகத்திற்கு வந்துவிடுகிறது.

    இவ்வளவு பயன்பாடுகள் உள்ள வகையில் எந்த ஒரு சிறு கண்டுபிடிப்பாக இருந்தாலும் அதற்குரிய காப்புரிமையை விரைவில் பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் நம் கடமை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(516)

    குறளின் கதிர்களாய்…(516)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(516)

    ஏவவுஞ் செய்கலான் தான்தேரா னவ்வுயிர்
    போஅ மளவுமோர் நோய்.

    -திருக்குறள் -848(புல்லறிவாண்மை )

    புதுக் கவிதையில்…   

    நலம்தரும் செயலைப்
    பிறர்
    ஏவினாலும் செய்யாதவனாய்,
    தானாகவும் உணர்ந்து
    தெளியாதவனாய் உள்ளவன்
    தாங்கியிருக்கும் உயிர்
    போகும் வரை
    தரணிக்கு அவனொரு
    தாக்கும் நோயே…!

    குறும்பாவில்…

    அடுத்தவர் சொல்லியும் செய்யாமல்
    அவனாகவும் அறிந்து கொள்ளாத அறிவிலி
    உயிருள்ளவரை புவிக்கொரு நோயே…!

    மரபுக் கவிதையில்…

    நலமே யளிக்கும் செயலதனை
    நல்லோர் சொல்லிச் செயாதவனாய்,
    சுலப மென்றே தானறிந்து
    சுற்றி யுள்ளோர் வியந்திடவே
    பலவும் செய்யா அறிவிலிதான்,
    பாரி லுள்ள நாள்வரையில்
    உலகுக் கவன்தான் ஆவானே
    ஊறு நல்கும் நோயெனவே…!

    லிமரைக்கூ…

    சொல்லியும் செய்யாத ஒருவனாய்
    தானாய் அறிந்தும் செயல்படாத அறிவிலி
    உயிருள்ளவரை உலகுக்குப் பெரியநோய்…!

    கிராமிய பாணியில்…

    வேணும் வேணும்
    நல்ல அறிவு வேணும்
    நல்லதாப் பாத்து செய்ய
    நல்ல அறிவு வேணும்..

    நல்ல செயல செய்யிறதுக்கு
    நாலுபேர் சொல்லியும் செய்யாமயும்
    தானே ஒணர்ந்து
    அறிஞ்சியும் செய்யாத
    அறிவு கெட்டவன்,
    அவன் உயிரோட இருக்கிறவர
    ஒலகத்துக்கு
    ஒரு நோயிதான்..

    அதால
    வேணும் வேணும்
    நல்ல அறிவு வேணும்
    நல்லதாப் பாத்து செய்ய
    நல்ல அறிவு வேணும்…!

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்!! பகிர்ந்தேன்!!! – 37

    படித்தேன்! சுவைத்தேன்!! பகிர்ந்தேன்!!! – 37

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    வங்கனூரார் இசைப் பாடலில் வசமிழந்த தருணம்!

    முன்னுரை

    “பண்ணென்னாம் பாடற்கு இயைபின்றேல்” என்னும் திருக்குறளால் பாடல் என்பது இசையோடு கலந்தது என்பது பெறப்படும். பாடலும் இசையும் பொருந்தியிருக்க வேண்டும் என்பதும் கருதப்பட வேண்டிய ஒன்று. எதுகை மோனை இயைபு என்னும் தொடைகள் சிறந்து நிற்கும் இசைப்பாடல்களை நாம் சிந்துப்பா வகையில் கேட்டு மகிழ்கிறோம். பாவேந்தர் மகாகவியைச் “சிந்துக்குத்தான் தந்தை” என்று அழைக்கிறார். பாரதி நொண்டி சிந்து எழுதிய பிறகுதான் தமிழ் எழுந்து நடந்தது என்பர்.  பாரதிக்கு இணையாக சிந்து பாடியவர் பாவேந்தர். மனித மனம் இசையோடு பின்னிப் பிணைந்தது. முணுமுணுத்தல் என்பது இசைக்குப் பொருந்துகிற அளவுக்குப் பேச்சுக்குப்; பொருந்தி வராது. ஒருவன் தனியாகப் பாடலை முணுமுணுப்பதற்கும் தனக்குத்தானே பேசிக் கொள்வதற்கும் வேறுபாடு உண்டு. விருத்தங்களையும் வெண்பாக்களையும் ஹைக்கூகளையும் கண்டு களைத்துப்போன எனக்குக் கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகைகிடைத்த குளிர்தருவாய் நிற்பவர் எண்பது வயது இளைஞர் வங்கனூர் மோகனன் அவர்கள். முகநூலை இசைவண்ணமாக்கிய பெருமை இவருக்கு உண்டு. இவர் முகநூலில் எழுதிய சில பாடல்களைப் பற்றிய என் அனுபவத்தை வெளிப்படுத்துவதையே இந்தச் சிறிய கட்டுரை நோக்கமாகக் கொள்கிறது.

    தமிழும் இசையும்

    “குழல் இனிது யாழினிது என்ப தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்” என்று உவம அளவையால் இசைக் கருவிகளை முன்னெடுப்பார் திருவள்ளுவர். “தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்” என்பார் திருநாவுக்கரசர்.  “நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தன்” என்று சம்பந்தரைப் பாராட்டுவார் சுந்தரமூர்த்தி நாயனார். “ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் இருப்பவன் என்று இறைவனைப் பாடுகிறார் சுந்தரர். “ஓங்கு மனத்து எண் கருவி ஐந்து ஈன்று இடு நூற்று மூன்றான பண்களும் பின் கல்யாணப் பாவையரா” என்பார் தமிழ் விடுதூது ஆசிரியர். “இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை” என்பார் கண்ணதாசன். “இசையாய்த் தமிழாய் இருப்பவனே” என்றும் அவர் பாடுவார். இசைப்பாடல்கள் என்பன மரபுப் பாடல்களே என்பதை அறிதல் வேண்டும். வெறும் யாப்பமைப் பாடல்களை மரபுப் பாடல்களென்றும் அவற்றை எழுதுவாரைப் மரபுப்பாவலர் என்றும் பரவிவிட்ட வெற்றுக் கூச்சலை நான் என்றும் எப்போதும் எதிர்த்து வந்திருப்பதற்குத் தமிழ்மரபின் விரிவையும் ஆழத்தையும் புரிந்ததனாலேயே. சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை பரிபாடல் முதலியவற்றில் இசைபற்றிய குறிப்புக்கள் உள்ளன. சிலப்பதிகாரத்தில் ஊள்ள வரிப்பாடல்கள் ;இசைப்பாடல்களே. சீவகன் யாழைத் தன் கையில் வாங்கித் தரம் பார்த்து வாசித்த நிகழ்வைச் சீவகசிந்தாமணி விளக்கிக்காட்டுகிறது. குடுமியான் மலை உட்பட்ட பல திருக்கோயில்களில் இசைத்தூண்கள்; இன்றும் இருக்கின்றன.  பரிபாடல்களில் மறையோர் பாடல், உழிஞை பாடல், தமிஞ்சிப் பாடல், விறற்களப் பாடல், வெறியாட்டப் பாடல், துணங்கைப் பாடல், வேதப் பாடல், வள்ளைப் பாடல் ஆகியனவெல்லாம் இசைப்பாடல்களே. பெருநாரை, பெருங்குருகு, முதுநாரை, முதுகுருகு பஞ்ச பாரதீயம் பதினாறு படலம், வாய்ப்பியம் என்னும் பெயருடைய இசைத் தமிழ் நூல்களைப் பற்றி அறிய முடிகிறது.  தேவாரத்தில் பண்முறை என்றும் தலமுறை என்றும் இரண்டு தொகுப்புக்கள் உண்டு.  தியாகராசர், சியாமளா சாஸ்திரியார், முத்துசாமி தீட்ஷிதர் ஆகிய மூவருக்கும் முனனாலேயே அருணாசலக் கவிராயர், முத்துத்தாண்டவர்  மாரியப்பாப் பிள்ளை ஆகிய மூவரும் 17ஆம் நூற்றாண்டுகளில் இசைத்தமிழ் வளர்த்த போராளிகளாக வரலாறு குறித்து வைத்திருக்கிறது. இவர்களுக்கும் பின்னாலே கோபாலகிருஷ்ண பாரதியார், வள்ளற் பெருமான் முதலியோரும் அவர்களைத் தொடர்ந்து மகாகவி பாரதியாரும் பாவேந்தரும் இசைத்தமிழ் வளர்த்த பெருமக்களாகக் கருதப்படுகின்றனர். “வாழையடி வாழையென வந்த இந்தத் திருக்கூட்ட மரபில் வந்தவர்தான்” வங்கனூரார்.

    இன்றைய தமிழிசையின் நிலை

    முத்தமிழ் என முழங்குகின்ற கவிஞர்கள் கூட ‘இசைத்தமிழ்’ என ஒன்றிருப்பது பற்றிச் சிந்திக்கிறார்களா எனத் தெரியவில்லை. வருத்தமளிக்கும் விருத்தங்களிலும் வாய் நுழையாத ஹைக்கூவிலும் தங்கள் மதிப்புமிக்க காலத்தைக் கடத்திக் கொண்டு விருது கிடைக்கவில்லையே என்னும் வேதனைக் கண்ணீருடன் திரிந்:து கொண்டிருக்கும் பலரை நான் முகநூலில் காணுகின்றேன்.  ஆம்பல் பண், காஞ்சிப் பண் காமாரம், குறிஞ்சிப் பண், செவ்வழி , நைவனம், பஞ்சுரம், படுமலைப்பண், பாலைப்பண், மருதப்பண், விளரிப்பண் ஆகிய  பண்கள்  முழுமையாகவும் அவற்றின் பிரிவுகளாகவும் இசைக்கப்பட்ட நாடு இது. பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொரு  இராகங்களைச்  சிலப்பதிகாரம் கூறுகிறது. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்றெல்லாம் இசையைச் செழிக்க வைத்திருந்த இனம் தமிழினம். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை சுந்தரேசனார் பேசினால் இசையாராய்ச்சி இசை மழையாகவே பெய்யும். ஆற்றல் மிகு கவிஞர்கள் இசைத்தமிழ் பற்றிக் கவலைப்பட்டிருந்தால் திருவையாறு தியாகராசர் பஞ்சரத்தின திருவிழாவை விஞ்சக் கூடிய அளவுக்குத் தமிழிசை வளர்ந்திருக்கும். நாம் குறைசொல்லுவதிலேயே காலம் கழிக்கிறோம்.

    தமிழ் மூவர் பாடிய இசைப்பாடல்கள்

    வங்கனூரார் இசைப்பாடல்களைக் காண்பதற்கு முன் தமிழிசைப் பாடல்களின் முதல் மூவரான முத்துத்தாண்டவர்; மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோர்தம் இசைப்பாடல்களை நினைவுக்குக் கொண்டு வருவது நினைவைச் சுகந்தமாக்கும்.

    “ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கைக் காணக்
    கண் ஆயிரம் வேண்டாமோ
    நாடித் துதிப்பவர் பங்கில் உறைபவர் நம்பர்
    திருச்செம்பொன் அம்பலவாணர் (ஆடிக்கொண்டார்)

    என்னும் முத்துத் தாண்டவர் பாடலும்

    காலைத் தூக்கி ஆடும் தெய்வமே எனைக்
    கைதூக்கி ஆள் தெய்வமே!

    வேலை தூக்கும் பிள்ளை தனைப்பெற்ற தெய்வமே
    மின்னும் புகழ்சேர் பொன்னம்பலத்தில் ஒரு (காலை)

    செங்கையில் மான்தூக்கிச் சிவந்த மழுவும் தூக்கி
    அங்கத்தில் ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கிக்
    கங்கையைத் திங்களைக் கதித்த சடைமேல் தூக்கி
    இங்குமங்குமாய்  தேடி இருவர்  கண்டறியாத (காலை)

    என்னும் மாரிமுத்தாப் பிள்ளை பாடலும்

    “ஏன் பள்ளி கொண்டீர் ஐயா
    ஶ்ரீரெங்க நாதா!
    ஏன்பள்ளி கொண்டீர் ஐயா?
    ஆம்பல் பூத்த சய பருவத மடுவினிலே
    அவதரித்த இரண்டு ஆற்று நடுவினிலே

    கௌசிகன் சொல் குறித்தற்கோ?
    அரக்கிக் குலையில் அம்பு தெறித்தற்கோ?
    ஈசன்வில்லை முறித்தற்கோ?
    பரசுராமன் உரம் பறித்ததற்கோ?

    என்னும் அருணாசலக் கவிராயரின் பாடலும் காலம் உள்ளளவும் நிலைக்கும். நின்று புகழ் பாடும். இந்த மரபு தொடர்ந்திருந்தால் தமிழ்நாட்டு இசைமேடைகள் தமிழிசைப் பாடல்களால் நெகிழ்ந்து போயிருந்திருக்கும். நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!

    இசைப்பாடல்களில் பாரதி — பாவேந்தர் — சுரதா பங்களிப்பு

    இயற்றமிழ் பாடல் வகைகளில் கோலோச்சி நின்ற பாரதியும் பாவேந்தரும் சுரதாவும் பெரியசாமி தூரனும் திருச்சி தியாகராசனும் தங்களால் இயன்ற அளவுக்கு இசைத் தமிழைக் கருத்திற் கொண்டிருந்திருக்கிறார்கள். இதற்குப் பல சான்றுகள் உண்டு. யாப்பின் பல பரிமாணங்களையும தன் கவிதைகளில் கொண்டு வந்த மகாகவி, இசைப்பாடல்களாகிய கீர்த்தனைகளிலும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார் அவர் எழுதிய இசைப்பாடல்கள் பலவாயினும் புகழ் பெற்ற இசைப்பாடல்

    “கண்ணன் மனநிலையைத் தங்கமே
    தங்கம் அடிதங்கமே தங்கம்
    கண்டு வரவேணுமடி தங்கமே தங்கம்
    எண்ணம் உரைத்துவிடில் தங்கமேதங்கம்
    ஏதேனிலும் செய்வமடி தங்கமே தங்கம்”

    என்னும் பல்லவியோடு தொடங்கும் அந்தப் பாடல் முழுமையும் இசைக்கண்ணிகளால் ஆனது. பினனாலே வருகிறவர்கள் தங்களுக்கு விருப்பமான ராகங்களில் பாடி பாட்டின் இனிமையைக் கெடுத்துவிடுவார்களோ என்னும் அச்சத்தின் காரணமாகவும் கெடுத்துவிடக் கூடாது என்னும் கொள்கை காரணமாகவும் பாட்டுக்கான தாளத்தையும் ராகத்தையும் அவரே பதிவிட்டுச் சென்றிருக்கிறார். “தங்கப்பாட்டு மெட்டு” என்றும் “சிங்காரம் ரௌத்ரம்” என்னும் மெய்ப்பாடுகளை வெளிப்படுத்துவது என்றும் தெளிவாக்கிச் சென்றிருக்கிறார் பாரதியார். அவரைத் தொடர்ந்து வந்த பாரதிதாசன் இசைப்பாடல்களில் தனித்த முத்திரையைப் பதித்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்பதற்கு அவருடைய இசையமுது தொகுதி ஒன்று மற்றும் இரண்டு  ஆகிய நூல்கள் சான்றாகி நிற்கின்றன.

    துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
    இன்பம் சேர்க்க மாட்டாயா? எமக்
    கின்பம் சேர்க்க மாட்டாயா?

    என்னும் பல்வியை முன்னிறுத்தி அதனோடு இணைத்து அனுபல்லவியைத் தொடங்குகிறார் பாவேந்தர்.

    நல் அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி
    அலலல் நீக்க மாட்டாயா? கண்ணே
    அலலல் நீக்க மாட்டாயா?

    சஞ்சய் சுப்பிரமணியன் ;இந்தப் பாட்டை மிகச் சிறப்பாகப் பாடியிருக்கிறார்

    என்பது தகவலுக்காக இங்குப் பதிவு செய்யப்படுகிறது,

    “தித்திக்கும் தமிழிலே முத்து முத்தாய்
    எண்ணம் தந்தவர் திருவள்ளுவர் தேன் போலே

    கத்தும் கடல் பிரத காலத்திலே பிறந்தும்
    கன்னிப் பருவத்தோடு இன்னும் இருந்து வரும் (தித்திக்கும்)

    உழைக்காதவன் வாழ்வில் முன்னேற்றம் கிடையாது!
    உலகினில் புகழ் இன்றி எதுவுமே நிலைக்காது!
    உயிரினும் மேலாம் மனிதர்க்கு தன்மானம்!
    அதுவே பெருமை தருமென
    அருமையாம் குறளிலே அமுதமெனவே…(தித்திக்கும்)

    இசைப்பாடல்களின் அனுபல்லவி மற்றும் சரணம் இவற்றின் ஈற்றுச் சீர்கள் பல்லவியின் தொடக்கச் சீர்களோடு இயைந்தால்தான் பொருட் பரிமாணம் கூடும். அதனால்தான் தமிழில் அவற்றை எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்கிறார்கள்.  “கத்தும் கடல் பிறந்த காலத்திலே பிறந்தும் கன்னிப் பருவத்தோடு இன்னும் இருந்து வரும் தித்திக்கும் தமிழிலே” என்று இயைத்துப் பாடினால் பாட்டின் பயணம் தரும் இன்பம் பலவாகும். இந்த இசைப்பாடலில் “அருமையாம் குறளிலே அமுதமெனவே என்னும் சரணத்தின் முடிப்பு தித்திக்கும் தமிழிலே” என்னும பல்லவியின் தொடக்கத்தொடு இயைந்தது காண்க.

    வங்கனூராரும் பாடுபொருளும்

    தற்காலக் கவிஞர்கள் ஒரு விஷயத்தில் மட்டும் மரபினை விட்டுத் துளியும் விலகாமல் மரபைப் பின்பற்றி வருகிறார்கள். அதனால் வேண்டுமானால் அவர்கள் மரபுக்கவிஞர்கள் என்று போட்டுக் கொள்ளலாம். அது எதுவெனில் காதல் என்னும் பாடுபொருள். பாதிப்புத்தான் கவிதைக்குக் காரணம் என்பதில் முரண்படும் தற்காலக் கவிஞர்கள் அத்தனைப் பேரும் ஒற்றுமைப்படும் ஒரே புள்ளி காதல். காதல் உணர்வே சிறிதுமில்லாமல், அங்கங்களைப் பாடுவதையே காதல் என்று யார் இவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்களோ தெரியவில்லை.  காதலைப் பாடுவார்கள். ஆனால் அந்தப் பாட்டு பல்லிளிக்கிறபோது கண்டு கொள்ளலாம் இது பாசாங்குக் காதல் என்பதை!. கேட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா? தமீழிலக்கியத்தின் பெரும்பகுதி காதல்தானே! இதனை வைத்துக் கொண்டே காதலையும் காதற் கவிதைகளையும் சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  வங்கனூரார் அறுபதுக்கு நாற்பது என்ற விகிதத்தில் பிற பாடுபொருள்களையும் பாடியிருக்கிறார் என்பதுதான் சொல்ல வந்த சேதி. பாடுபொருள் கவிஞன் பாதிப்புக்கு அடுத்தபடியாகத் தேவையைக் கருதி வருகின்றன. பாரதிதாசன் இந்தியை எதிர்த்தார் என்றால் இந்தியால் அவர் என்ன பாதிக்கப்பட்டார்? ஆனால் சமுதாயத்தின் தேவை அதனை எதிர்ப்பது. அதனால்தான் குருதி கொப்பளிக்கும் பாடல்களை அவரால் எழுத முடிந்தது, கவிவன்மை இன்மையால் அல்லது பற்றாக்குறையால் இன்றைய சமுதாயத்தின் தேவைகளைப் பாடுவதில் கவிஞர்கள் பெரும் பின்னடைவுக்கு ஆளாகியிருக்கிறார்கள். காரணம் பொதுநோக்கின்மை அல்லது பற்றாக்குறை! வங்கனூரார் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது என் கருத்து,

    “நல்ல நினைப்பிருந்தால் – வாழ்வில்
    நலம்பல சேராதோ ?
    அல்லல்கள் மாய்ந்துவிட – உன்றன்
    அவலங்கள் தீராதோ ?

    கொடுமை விளைக்கின்ற – சாதிக்
    கொள்கையை வேரறுப்போம் !
    அடிமைத் தளையறுத்து – நாட்டில்
    அன்பு பயிர்வளர்ப்போம் !

    அருள்வழி நாம்நடந்து – நெஞ்சின்
    ஆணவத்தை ஓட்டிடுவோம் !
    இருள்வழி மாய்ந்திடவே – ஆங்கோர்
    இன்னொளி காட்டிடுவோம் !

    எண்ணங்கள் நன்றானால் – வாழ்வை
    எதிர்த்துநாம் வெற்றிகொள்வோம் !
    மண்ணில் பலநாட்டு – மக்கள்
    மனங்களை நாம்வெல்வோம் !”

    எல்லாருக்கும் தெரிந்த வாழ்வியல் உண்மைகளே! தனிமனித ஒழுக்கங்களே சமுதாய ஒழுங்கினைத் தீர்மானிக்கின்றன என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையின் பின்னனியில் இந்தப் பாட்டை நோக்க வேண்டும். “நல்ல மனமிருந்தால்” என்னும் ஒரு தொடரைப் பாடலின் ஒவ்வொரு கண்ணியிலும் பொருத்திப் பாரத்தால் பாரதியை மீண்டும் காணலாம். அன்புக் கவிஞர்களே1 உங்களில் எத்தனைப் பேர் இந்த மனநிலையில் இந்த வகை யாப்பில் சமுதாய நலம் சார்ந்த பாடலை எழுத எத்தனித்தீர்கள் என்பதை எண்ணிப் பாருங்கள், வங்கனூரார் கவிதைகளின் ;அருமை புரியும்!

    வங்கனூராரின் வருவானடி

    அலங்காரச் சொற்களை இடுவதானாலேயே இசைப்பாடல் சிறந்துவிடாது என்பதைக் கவிஞர் மோகன் புரியாதவர் அல்லர். பல்லவி, அனுபல்லவி, சரணம் என்பதைப் பின்னாலே வந்தவர்கள் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்று மாற்றினார்கள். அந்த மாற்றத்தால் கவிதை சிறந்ததா என்றால் இல்லை. எடுப்பு – தொடுப்பு – முடிப்பு என்பதை வங்கனூரார் மொட்டு – மலர் – மணம் என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார். பொதுவாகப் பேராற்றல் உள்ள பெருங்கவிஞர்களுக்குப் பட்டங்கள் தேவையில்லை. பகட்டுக்கள் பயனளிக்காது. வஙகனூரார் ஆற்றல் மிக்க கவி வல்லாளர். இத்தகைய  மாற்றங்களை நான் அவரிடம் எதிர்பார்க்கவில்லை.. இந்த மொட்டு, மலர் மணம் என்னும் சொற்களால் கவிதை அல்லது இசைப்பாடல் சிறக்கிறதா என்று பார்க்க வேண்டும். பயனற்ற முயற்சியைத்தான் திருவள்ளுவர் ‘செய்தக்க அல்ல’ என்கிறார். பானை ஓட்டையைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். கொழுக்கட்டையில் பூரணம் நிறைந்திருக்கிறதா என்று பாருங்கள். இதுதான் என் பணிவான வேண்டுகோள். பல்லவி – அனுபல்லவி – சரணம் என்று இருந்திருந்தாலும் இந்தப் பாடல் சிறந்திருக்கும்1 ஒரு அருமையான பாடல். மரபின் இழையால் பின்னப்பட்டிருக்கும் அருமையான படைப்பு.

    “வருவானடி இன்பம்  தருவானடி!

    அவ்வளவுதான் பல்லவி!. பழந்தமிழ் காதல் மரபு. நம்பிக்கையின் வெளிப்பாடு. பொருள் தேடச் சென்றிருக்கும் தலைவனின் வருகையை எதிர்நோக்கியிருக்கியிருக்கும் நெய்தல் தலைவியின் ஒரு நீலாம்பரி.

    “வாழ்வென்னும் பயிருக்கு வளம் சேர்க்கவே – உடன்
    மழைமேகம் போல்வந்து துயர் தீர்க்கவே (வருவானடி)

    இது அனுபல்லவி. தலைவனுடைய வருகை நோக்கத்தைத் தலைவி வெளிப்படுத்தும் பாங்கு இது, வாடி நிற்கும் பயிர் தான் என்பதையும் தலைவன் அன்புக்குக் குறைவில்லை என்பதையும் இசைத்தமிழலால் வங்கனூரார் பதிவு செய்யும் பாங்கினை நோக்குவீர்! சங்க இலக்கியத்தின் சாயல் தென்படவில்லையா?

    “சோலைக்குள் எனைக்கண்டு
    தூய நெஞ்சுள் சிறைவைத்தவன் “

    வாயிலிருந்து என்ன சொல்லை இவள் கேட்க வேணடுமாம்? அதனைச் சொல்கிறாள் தலைவி!

    “குயில் பாடும் பாட்டில் உன்
    குரல்தன்னைக் கேட்கின்றேன்” என்று
    நயமாக என் காதில்
    நலம் பாய்ச்சவே!

    தன்னுடையது குயில் மொழி என்று தலைவன் சொல்ல வேண்டுமாம். அவன் வாயில் இவள் குரல் நலம் பெறவேண்டுமாம். அருமை!

    “மதயானை நடையோடு
    வந்தென்னை வளைக்கின்றவன் – ஒரு
    நதிபோலப் பாய்ந்தென்றன்
    மனச்சோலை நனைக்கின்றவன்!”

    என்ன அருமையாகத் தலைவி தலைவனை எண்ணி மருகுகிறாள்? மதயானை நடை என்பது மரபு. இராமனின் அசைவை யானையின் அசைவாகச் சீதை பார்க்கவில்லையா? “போதகம் நடப்ப நோக்கிப் புதியதோர் முறுவல் பூத்தாள்” என்பது கம்பராமாயணம்!. “தேக்குமரம் உடலைத் தநதது! சின்ன யானை நடையைத் தந்தது” என்பார் கண்ணதாசன் அவன் நடையால் இவள் வளைந்தாளாம்! அடடா! அவனை எண்ணியே வெப்பத்தால் காய்ந்து போன தன் மனச்சோலையை நனைத்து ஈரமாக்கும் நதியாக தலைவன் வருவானாம். கழிந்ததற்கு இரங்கல்! தன்னுடைய  குரலை அவன் பாராட்ட வேண்டுமாம்! எததனைப் பேர் பாராட்டி என்ன பயன்? தலைவன் பாராட்டினால்தான் தலைவிக்குக் குளிர்ச்சி? “மழைமேகம் போல் வந்து துயர் தீர்ப்பதும், நதிபோல பாய்ந்தென்றன் மனச்சோலை நனைப்பதும்” ஒரே பாடடின் இருவேறு மனச் சூழலை வெளிப்படுத்தும் நுண்ணியம். மழை காலம் நேரம் பாராது வரும். தலைவன் வருகையும் அப்படியே! நதி எப்போதும் ஓடும். அதனால் மனம் ஈரமாகும். முன்னது எதிர்காலம். பின்னது நிகழ்காலம். வெகு நுண்ணியம். இந்தக் காலத்தில எழுதுவார்கள்

    அவள் வருவாளா?
    கண்ணோடு நான் கண்ட
    வண்ணங்கள் போக
    சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க
    அவள் வருவாளா?

    என்று அருவெறுப்பான மரபு மீறிய கொச்சையான பாடல்களைக் கேட்டுவரும் இந்த இளைஞர் சமுதாயத்தின் பார்வைக்குச் செல்ல வேண்டிய பாடல். தலைவியைத் தேடித் தலைவன் செல்லுவதுதான் மரபு. அவனைத் தேடி அவள் செல்லுவது மரபல்ல. “சுடிதாரில் மூடாத பாகங்களைப்” பாடுவதுதான் இந்தக் காலத்துக் கவிதை! மூடிய உள்ளத்துணர்ச்சிகளைப் பாடியது மரபு. மூடாத உடற்பாகங்களைப் பாடுவது புதுமை! வெட்கக் கேடு! இசைப்பாடல் என்றால் அதற்குள் ஒரு நாடகத்தன்மை இருக்க வேண்டும் எனவேதான் பழந்தமிழ் இசைப்பாடல்கள் எலலாம நாடகம் என்னும் பெயர் தாங்கி நிற்கின்றன. சீதக்காதி நொண்டி நாடகம்,  திருச்செந்தூர் நொண்டி நாடகம், சாத்தூர் அய்யன் நொண்டி நாடகம், திருவிடைமருதூர் நொண்டி நாடகம், ஞான நொண்டி நாடகம், திருக்கச்சூர் நொண்டி நாடகம், ஐயனார் நொண்டி நாடகம் கள்வன் நொண்டிச் சிந்து பெருமான் நொண்டி நாடகம திருவனந்தபுரம் நொண்டி நாடகம் யானைமேலழகர் நொண்டிச்சிந்து என்றெல்லாம் இசைப்பாடல்கள் நாடகமாகவே கருதப்பட்டன.

    கண்ணை இமை வெறுக்குமா?

    இசைப்பாடல்களுக்கும் மற்ற வகை இயற்றமிழ்ப் பாடல்களுக்கும் உள்ள வேறுபாடு இசைபபாடல்களில் எளிதாக வெளிக்கொணரும் முயற்சி மற்ற பாடல்களில் அவ்வளவாக வெளிப்படுவதற்கு வாயப்பில்லை. இசைப்பாடல்களில் பெரும்பாலும் படைப்பாளன் தன்னைப் பாடுகின்ற தலைவியாகவோ தலைவனாகவோ உருவகம் செய்து கொள்வதால் அங்கே பாவனை தவிர்க்க இயலாததாகிவிடுகிறது, திரைப்பாடல்களின் அளவிறந்த வெற்றிக்கு இதுதான் காரணம். “நீ வருவாய் என நான் இருந்தேன் ! ஏன் மறந்தாய் என நான் அறியேன்!”  என்று தலைவி பாடுகிறபோது கேட்கிற ஒவ்வொருவனும் தலைவனாகிவிடுகிறான். படைப்பாளன் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பான பாதிப்பை ரசிகர்களிடம் அந்தப் பாடல் ஏற்படுத்திவிடுிறது,  நவரச இசைப்பாடல்களிலும் இந்த நிலை இருந்து வந்திருக்கிறது,

    “கண்ணை இமை வெறுக்குமா ?
    காட்சிக் கிளி பறக்குமா ?
    பெண்ணே உனை மறப்பதா ?
    பேதை இனி இறப்பதா ?

    பொன்னிநதிக் கரையினிலே அன்று – நான்
    பூவிரியும் சோலைக்குள் சென்று
    தன்னைமறைந் திருந்தநிலை யுண்டு! – உன்றன்
    தமிழிசையைச் செவிகுளிர உண்டு!

    மனக்கதவை எனக்கெனத் திறந்தாய்! – அங்கு
    மன்னனெனைக் குடிவைத்தி ருந்தாய்!
    இனப்பெருமை நாம்கெடுத்தல் ஆகா -மண்ணில்
    இழிவுக்குள் இன்பத்தின் பாகா?

    இப்படித் தலைவன் பாடுவது மரபில்லையெனினும் மேடைக் கச்சேரிகளில் இது போன்ற பாடல்களைப் பாடுகிறபோது கேட்போர் உள்ளம் உருகிவிடுவர் என்பது உறுதி. ஓர் ஆண் பாடுவதாக அமைத்துக்காட்டும் இந்தப் பாடலில் மரபு மாற்றமும் நிகழ்ந்திருக்கிறது. பொன்னி நதித் தீரத்தில் பூஞ்சோலையில் நடந்த நிகழ்ச்சி நிரலைத் தலைவன் சிந்தித்துப் பாடுகிறபோது ஒரு நாடகப்பாங்கு அரங்கேறுவதைக் காணமுடிகிறது,

    மறந்ததும் ஏனடி தோழி?

    தலைவனும் தலைவியை மறப்பதில்லை. தலைவியும் தலைவனை மறப்பதில்லை. ஆனால் இருவரும் ஒருவரை யொருவர் மறந்துவிட்டதாக எண்ணி மருகுவது ஒரு புலனெறிவழக்கம். இலக்கியம் சுவைப்பது கற்பனையால். அந்தக் கற்பனைக்கு இத்தகைய சூழல் களமாகிறது, துணை செய்கிறது. அவ்வளவுதான். எலலாம் வல்ல தலைவனை எல்லாம் உளள தலைவி எண்ணி ஏங்குவதில் ஒரு தனிச்சுவை இருக்கிறது, சுகம் இருக்கிறது.. தமிழிலக்கியம் இந்த நுண்ணியத்தைப் புரிந்து கொண்டது. பாலை பற்றிய பாடல்கள் தமிழைப்போல பிறமொழிகளில் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை. வங்கனூரார் இந்த அலைவரிசையில்  இசைப்பாடல் ஒன்றினை எழுதியிருக்கிறார்.

    “மறந்ததும் ஏனடி தோழி?, என்னை
    மறந்ததும் ஏனடி தோழி?”

    தோழியிடம் வினவப்படட வினாவிற்கு விடைகிடைப்பதற்கு முன்பே தொடர்ந்து பாடுகிறாள்.

    பறந்துவந்து பாழும் நெஞ்சைப்
    பறித்துக் கொண்ட மன்னன் இன்று!
    மறந்ததும் ஏனடி தோழி?

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இந்தத் தகவலைத் தோழி கேட்கவில்லை. தலைவியின் உள்ளம் எப்படிப் பறிபோனது என்று தோழி கேட்டாளா? வந்தவனிடம் சென்று விட்டதால் வளர்த்த பாசம் தாங்காமல் தன் நெஞ்சைப் பாழும் நெஞ்சு என்று கூறிக் கொள்வது ஒரு வகை கையறுநிலை!. அடுத்த சரணத்தில் ஒரு புதுமை செய்கிறார் பிரிவு தலைவனுக்கு உரியது, பிரிவால் பாதிக்கப்படுபவள் தலைவி. இலக்கியங்கள் அவளுக்காகத்தான் செய்யப்படும். ஆனால்
    என்னைப்
    பாலைப்பயணம் போகவிட்டுப்
    பதுங்கி மறைந்தவன்

    என்று பிரிவைத் தலைவிக்காக்குகிறாள். இவளைப் பயணம் போகவிட்டு அவன் பதுங்கியிருக்கிறானாம். இப்படித் தன்னையும் அறியாமல் மரபு மாறிய தடத்தில் கவியெழுதும் வங்கனூரார் அதே மரபினை அதே பாடலில் பின்பற்றியிருப்பதையும் காணமுடிகிறது, காதலுக்கு நேர்வழி கண்கள். “கண்ணொடு கண்ணிணை நோக்கு ஒக்கின்” என்பார் திருவள்ளுவர் “கண்ணேறி உயிரேறி கலந்து கொண்டான் என்பார்’ பாவேந்தர். ‘கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மவுனம்?” என்று எழுதுவார் மருதகாசி “கண்ணிலே இருப்பதென்ன கன்னி இள மானே! என்பார் கண்ணதாசன். விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே என்பார் வைரமுத்து.

    அமுத ஊற்றைச் சுவைக்குமுன்பே
    அகன்று விட்டவன் என்றன்
    இமைக்கும் விழியைத்தாண்டிச் சென்று
    இமயம் தொட்டவன்”

    “மற்றவர்களெல்லாம் கண்வழியே நுழைந்தவர்கள் .வங்கனூரார் காதலி மட்டும் விழியைத் தாண்டியவள்  காரணம் இவள் இமைத்தாள் அல்லவா? தடை உடைத்து உள்ளே நுழைந்தானாம் என்பது குறிப்பு.

    இனிக்கும் கனவு

    மேற்கண்ட இசைப்பாடலில் ஒரு சரணக் கண்ணியில் அவர் பயன்படுத்தியிருக்கும் ஒரு சொல் கவனத்தை ஈர்க்கிறது. ஒரு இயல்பான கவிஞனுக்குத்தான் அமைய முடியும். இயல்பாகப் புதுக்கவிதை எழுதுவதாகச் சொல்லிக் கொள்பவர்கள் முரண்பட்ட இரண்டு சொற்களை இணைத்துப் புதியதொரு படிமத்தை உருவாக்குவார்கள். ஆனால் இங்கே மரபு சார்ந்த இசைப்பாடல் எழுதுகின்ற ஒருவர் பாடலில் இப்படியொரு சொல் பயிலப்பட்டு வந்திருக்கிறது,

    “மணக்கும் மலரை குழலில் சூட்டி
    மகிழந்து நின்றவன்  நாளும்
    இனிக்கும் கனவை எனக்குள் நடத்தும்
    என்றன் மன்னவன்”

    கனவு நாக்குச் சுவைக்குரிய பொருளன்று. கனவு உண்மையில் ஒரு அருவப்போருள். கனவைச் செயப்படுபொருளாக்கித் தலைவன் நாடகம் நடத்துகின்றானாம். மிகவும் பொறுமையாகச் சிந்தித்து அனுபவிக்க வேண்டிய பகுதி. தொடர்.

    காலமகளின் நாட்டியங்கள் கண்ணைப் பறிக்குதே!

    சங்க இலக்கியம் இயற்கையின் கண்காட்சி மையம். அதற்குப் பின்னாலே வந்த தமிழிலக்கியங்களில் பெரும்பான்மை இயற்கையை வாய்ப்பு கிட்டியபோதெல்லாம் வளர்ப்புப் பிள்ளைகளாகக் கொண்டிருந்தன. அவற்றுக்குப்பின்னாலே நாம் இயற்கையை பாவேந்தர் படைப்பக்களில்தாம் சங்க இலக்கிய அளவுக்குக் காணமுடிகிறது. இடையில் வந்த மகாகவி குயில்பாட்டு; போன்ற ஒரு சில பதிவுகளில் தாம் இயற்கை மீது கொண்ட வற்றாக் காதலைப் பாடியிருக்கிறார். மற்றவர்களுக்கும் வங்கனூராருக்கும் ஒரு வேறுபாடு மற்றவர்கள் எல்லாம் இயற்றமிழ் பாடல்களில் பாடிய இயற்கையை வங்கனூரார் இசைத்தமிழ் பாடல்களில் பாடியுள்ளார்.

    “மாலை நேர மல்லி கையின்
    சிரிப்பைப் பாராடி ! – அதன்
    மணத்தை வாங்க தென்றல் பாடும்
    பாட்டைக் கேளடி !

    கோல நிலவும் வானில் வந்து
    குடும்பம் நடத்துது ! – ஒரு
    கோடி விண்மீன் கூட்டத் திற்கு
    விருந்து படைக்குது !

    சோலைக் குள்ளே அருவி என்னும்
    மங்கை நடக்கிறாள் ! – என்
    தூய நெஞ்சைச் சொந்தங் கொண்டு
    கவிதை வடிக்கிறாள் !

    கால மகளின் நாட்டி யங்கள்
    கண்ணைப் பறிக்குதே ! – அவள்
    காட்டு கின்ற காட்சி மண்ணில்
    அழகை விரிக்குதே !

    பொதுவாக இசைப்பாடலில் முதலில் பண்ணும் அதற்கு அடுத்தபடியாக இயற்றுவார் கருத்தும் பார்வையும்; மனத்தைக் கவரும். இயற்கை வண்ணனை அவ்வளவாகக் கவனத்திற்கு ஆளாவதில்லை. ஆனால் வங்கனூரார் இயற்கையைத்  தனியொரு பாடுபோருளாகக் கொண்டு பாடியிருப்பது தனிச்சிறப்புக்குரியது, பிறரால் முடியாதது என்பதன்று முயன்று தோற்றது, தமிழின் இசைப்பாடல் எண்ணிக்கையில் வங்கனூராரின் பங்களிப்பு செம்பாகம் அன்று பெரிது,  தத்துவக் குறிப்போடு நிறைவுற்றிருக்கும் மேற்கண்ட பாடலில்

    1. மல்லிகையின் மணத்தை வாங்கத் தென்றல் படும் பாடு
    2. ஒற்றைநிலா விண்மீன் ;கூட்டத்திற்கு விருந்து படைத்தல்
    3. அருவி என்னும் மங்கை நடக்கிறாள்

    என்றெல்லாம் அழகியல் சார்ந்த கற்பனைகளைத் தொடர்ந்து “காலமகளின் நாட்டியங்கள் கண்ணைப் பறிக்குதே“ என முத்தாய்ப்பு வைத்திருப்பது இப்பாடலின் வெற்றியைத் தீர்மானிக்கும் புள்ளியாகும்..

    ஓவியத்தைப் ‘பேசாக் கவிதை’ என்றும் கவிதையைப் ‘பேசும் ஓவியம்’ என்றும் சொல்வது மரபு. கண்வழி ரசிக்கப்படும் ஓவியம் மனத்தைக் கிளறுமானால் அங்கே அந்த ஓவியம் கவிதையாகும்! காரணம் கவிதைக்குத்தான் கிளர்ச்சி பண்ணத் தெரியும்! செவிவழி நுகரப்படும் கவிதைச் சித்திரிப்பு மனம் காண  இயலுமாறு படைக்கப்படுமானால் அந்தக் கவிதை ஓவியமாகும். கவிதைச் சித்திரிப்பு என்பது இதுதான்! இவைதாம் புலன் மாற்றிப் போடுவது என்கிறார்கள்

    பெரியவர் கவிஞர் தமிழாசிரியப் பெருமகனார் வங்கனூரார் இசைத் தமிழ்ப் பாடல்களில் நான் வசமிழந்த தருணங்கள் பல.  எண்சீர் விருத்தங்களில் ஆன இட்டளியையும் தோசையையும் மட்டுமே மாறி மாறிச் சாப்பிட்டு வந்த நான் ஏதாவது மாற்று கிடைக்காதா என ஏங்கிய பொழுது எண்ணில் அடங்காது. பொதுவாகக் காதல் பாடுபொருளை நான் விரும்புவதில்லை. காரணம் அதற்கான உணர்வுகள் பாரதிதாசனோடு முடிந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன். அப்துல்ரகுமானும் மீராவும் கொஞ்சம் உணர்ந்தார்கள் பாடினார்கள்! வைரமுத்து என்னதான் முயன்றிருந்தாலும் அவர் காமத்தையே காதலாகப் பாடினார்! பிற போலிக்கவிஞர்கள் அசைக்கு ஆடை அணிவித்து அழகு பார்த்தார்கள். அவர்களுக்குக் காதலியும் கிட்டவில்லை! கவிதையும் பிடிபடவில்லை!.  இவர்கள் எழுதிய காதல் பாடல்களுக்கு நான் வடித்த கண்ணீர் அரபிக்கடலில் அரைப்பங்கு இருக்கும்!

    காதல் ஒரு நாடகம். இதுபற்றிய இசைத்தமிழ்ப் பாடல்களில் ஒரு நாடகத்தன்மை இருத்தல் வேண்டும் என்பது முன்பே சுட்டப் பெற்றது. தன்மைக்கும் முன்னிலைக்கும் உரியது. படர்க்கைக்கு உரியதன்று. இந்த  அடிப்படையையே பலர் உணர்ந்ததாகத் தெரியவில்லை!  வங்கனூரார் உணர்ந்து பாடுகிறார்!

    “விழியோடு விழிசேர்க்கவே – நீ
    விளையாடி உடனோடிவா !
    மொழியற்ற மோனத்திலே – ஒளி
    முத்தான கவிபாடிவா !”

    ஒரு மரபுக் கவிதை எப்படி அமைய வேண்டும் என்பதைத் தம்மை அறியாமலேயே பதிவிட்டிருக்கிறார் பெரியவர்! மோனைகள் முந்துகின்றன. இயைபு இடையசைவாய் நெளிகின்றன. பாடுபொருள் காதல்! தலைவன் தலைவியை முன்னிறுத்திப் பாடுகிறான். எல்லாமே எளிமை! எனவே கவிதை தூய்மையாகிவிடுகிறது. “எளிமையுடையோர் பேறு பெற்றார்!”

    “எழில்பொங்கும் மலர்ச்சோலையில் – நம்
    இளநெஞ்சம் இணைந்தாடுமே !
    வழிந்தோடும் பெருவெள்ளமாய் – நம்மை
    மயக்கங்கள் வரவேற்குமே !

    “எழில்பொங்கும் மலர்ச்சோலையில் – நம் இளநெஞ்சம் இணைந்தாடுமே !” இந்த வரியை விருதுக் கவிஞன் யாராவது எழுதியிருந்தால் நெஞ்சத்தை இணைந்தாட வைத்திருக்கமாட்டான்!. வேறொன்றை ஆட வைத்திருப்பான்! காரணம் அவனுக்கு மார்பு, இடை, கண், தோடு, தொங்கட்டான் என்னும் இந்த உறுப்புக்களின் அசைவுகள்தாம் காதல்!  “அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே” என்பதெல்லாம் பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய்க் கற்பனையாய்ப் போனவை!

    ‘நெஞ்சம்’ என்னும் ஒருமை தாம் என்னும் பன்மை விகுதியாலும் கலந்தன என்னும் பன்மை வினைமுற்றாலும் பன்மையாவது காண்க. சங்க இலக்கிய நுட்பம் இது. புலவன் நெஞ்சங்கள் என்று எழுதவில்லை என்பதை அறிக. கலக்கின்ற நெஞ்சங்கள் இரண்டாயினும் உயிர் ஒன்றாதலின் நெஞ்சத்திற்குப் பன்மை கிடையாது. நம் போலிக் கவிஞர்கள் ‘கண்ணீர்கள்’ என்றும் எழுதுவார்கள். ‘நன்றிகள்’ என்றும் எழுதுவார்கள். ‘தவறாயிற்றே’ என்றால் கடந்து போய் விடுவார்கள்!

    “மயக்கங்கள் வரவேற்குமே” என்பதற்கு உரையில்லை. உரை கூற முடியாது. இயலாது. பாவேந்தர் எழுதுவார் “வாழ்தலும் சாதலும் அற்ற இடம்” என்று. அப்படியோர் இடம் எங்காவது உண்டா? அது போன்றது இது! எண்ணிப் பார்த்து சுவைக்க வேண்டிய தொடர்!

    “தென்காற்றின் அலைதன்னிலே – நீ
    சிரிக்கின்ற மலரல்லவோ ?
    பொன்னூற்றின் இசையாவுமே – உன்
    வளையோசை தனைவெல்லுமோ ?”

    கடலுக்கு அலையுண்டு! காற்றுக்கு அலையுண்டா? உண்டு! எங்கே? வங்கனூரார் கண்ட தலைவன் பாடலில்! காற்றில் சிரிக்கின்ற மலர் என்றால் காற்றில் தள்ளாடும் மலர். காற்றின் அலைகள் காற்றினும் மென்மையானவை. அதில் ஆடும் மலரென்றால் மலரின் மென்மை எப்படி இருந்திருக்கும்? “மலரினும் மெல்லிது காமம்” என்னும் குறட்பா அடிக்கு இது உரையாகலாம்.

    “கருமேகம் உன்கூந்தலோ ? – உயர்
    கலையாவும் உன்சாயலோ ?
    பருவத்துச் செந்தேனெலாம் – உன்
    பார்வைக்குள் குடிவந்ததோ ?”

    ‘அலைகூந்தல்’ ‘நறுங்கூந்தல்’ ‘இருங்கூந்தல்’ ‘வெறுங்கூந்தல்’ என்று கேட்டுப் புரையோடிப் போன காதுகளுக்குக் ‘கருமேகம் உன் கூந்தலோ’ என்னும் ஐயம் இனிமை சேர்ந்தது. உவமையைப் புறந்தள்ளி உருவகத்தை முன்னிறுத்தும் இயற்கையான கவித்துவம் இங்கே வெளிப்படுவதைக் காணலாம்.

    இரட்டுற மொழிதல் என்றால் காளமேகத்தைத்தான் நாடுவார்கள் தமிழ்நாட்டுப் பாடநூற் குழுவினர். தமிழாசிரியர் பலருக்கும் இரட்டுற மொழிதல் என்றால் தெரியாது. சிலேடை என்றால்தான் சிக்கெடுப்பார்கள். “உயர் கலையாவும் உன்சாயலோ ?” உயர்கலை என வினைத்தொகையாகக் கொண்டு கவிதையை அனுபவிப்பது என்பது ஒன்று. கலையைப் பெயர்ச்சொல்லாகக் கொண்டு அனுபவிப்பது மற்றொன்று. கலை என்பது ஆகுபெயராய் மானினத்தைக் குறிக்கும்.  “மானென அவளைச்சொன்னால் மருளுதல் அவளுக்கில்லை” என்பது நாமக்கல் இராமலிங்கம் எழுதிய அடி.

    “மானினமெல்லாம் இவள் சாயல் பெற்றதாம்!”

    எல்லாக் கலைகளிலும் நீயிருக்கிறாய் என்பது ஒரு நோக்கு! கலைமானின் சாயல் உன்னிடம் இருக்கிறதே என்பது மற்றொரு நோக்கு! இதுதான் இரட்டுற மொழிதல். சிலேடை! கவனித்துப் பாருங்கள்! ‘வா’ என்னும் முன்னிலை வினையையும் இயைபாக்கியிருப்பார். ‘ஓ’ ;ஏ’ என்னும் இடைச்சொற்களையும் இயைபாக்கியிருப்பார்! ஒன்றினைப் பற்றிப் பாடுவது கவிதையாகாது. ஒரு அனுபவத்தின் மொழிவழிப் பகிர்வதுதான் கவிதை.

    பாவேந்தரும் வங்கனூர் கவிஞரும்

    வள்ளற்பெருமான் தொடங்கித் தொடர்ந்துவரும் சாதியொழிப்புச் சிந்தனைகள் ஒவ்வொரு படைபபாளருக்கும் பல உத்திககளைச் சிறக்கச் செய்கிறது.

    “சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
    சாத்திரச் சண்டைகளிலு சமயகோத்திரச் சண்டையிலே
    ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
    அலைந்தலைந்து நீவிர் அழிதல் அழகலவே”

    என்று புலம்பினார் வள்ளற்பெருமான். ஒரு சமயவழிப்பட்ட சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வினை ஒழிக்கும் முனைப்பு வள்ளற் பெருமான் பாடலில் எதிரொலிப்பதைக் காணலாம். பின்னாலே வந்த பாரதியார் வள்ளற் பெருமானின் அடியொட்டியே சிந்திக்க முடிந்தது, “சாதிகள் இலலையடி பாப்பா!” என்று அவரும் அதனையொழிக்கும் வழியறியாது குழந்தைகளிடம் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பின்னாலே பாரதிதாசன்தான் சாதியினை ஒழிப்பதற்குச் சரியான வழி கலப்புத் திருமணமே என்னும் தெளிவு பெற்றிருந்தார்.  தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் அரசியல் மற்றும் சமுதாயத் தளத்தில் அதே கொள்கையில் இயங்கினாலும் இலக்கியமாகிய கவிதைத் தளத்தில் பாவேந்தர் காதலைப் பாடுகிறபொழுதெல்லாம் சாதிமறுப்பைப் பாடினார். விதவைத் திருமணத்தைப் பாடினார் “இதயமலர் நீதான் என்னும் இசைப்பாடலில் பாவேந்தரின் சாரத்தையே காணமுடிகிறது,

    “இனக்கொடுமை கடலலைபோல்
    எழுந்துவந்து மோதும் !
    உனது மனம் தாங்கவேண்டும்
    எதுநடந்த போதும் !

    என்மனத்தை உன்மனத்தில்
    சங்கமித்து விட்டேன் !– இனி
    என்னதுன்பம் வந்தபோதும்
    நான்கலங்க மாட்டேன் !

    சாதியற்ற ஓர்உறவைச்
    சமைப்பதற்குக் கண்ணே ! — நல்ல
    பாதையொன்று அமைப்பதென
    உறுதிகொள்வோம் பெண்ணே !

    பெண் : மனிதயினம் காதலுக்கு
    மதிப்பளிக்கும் போது ! — நம்
    புனிதஎண்ணம் வெல்வதற்குத்
    தடைகள் கிடையாது !

    சமுதாயச் சீர்திருத்தத்தில் முதலிடம் வகிபப்து கலப்பு மணம். அந்தக் கலப்புமணத்தை இசைப்பாடலில வைத்துப் பாட முடியும என்பதை நிரூபித்திருக்கிறார் வங்கனூரார்.  விருத்தங்களிலேயே படிந்து வேதனையைத் தின்ற சில இதயங்கள் இது போன்ற இசைப்பாடலகளில் இளைப்பாறுவதும் தமிழ்த்தாயின் அருளே!

    நெஞ்சையள்ளும் கற்பனை

    கவிதை சிறக்கும் காரணிகளுள் கற்பனை தலையாயது. அணிகளெல்லாம் கற்பனைக்குள் அடங்கும். அடக்கம். இந்தக் கற்பனையோடு உத்தி கைகோக்கிறபோது கவிதை கொடிகட்டிப் பறக்கும்.

    “தாமரையின்இதழ்களுக்கு
    நீ கொடுத்தாய் சிவப்பு – வானில்
    தவழும் அந்த முகில்களுக்கு
    உன்கூந்தல் நினைப்பு”

    வெள்ளி நிலா உன்முகத்தைப்
    பார்க்க வரும் அழகு – அந்த
    வேளையிலே நிலவுக்குநீ
    ஒளி கொடுத்துப் பழகு!

    எத்தகைய கற்பனை பார்த்தீர்களா?  ‘கார்கூந்தல்’ என்பதுதான் மரபுவழிச் சிந்தனை.  இவரே அப்படி இன்னொரு இடத்தில் பாடியிருக்கிறார். இந்தச் சிந்தனை வெளிப்பாட்டினை “அந்த முகில்களுக்கு உன் கூந்தல் நினைப்பு” என்று வெளிப்படுத்தும் கவித்துவம் சிறந்த ஒன்று. நிலவுக்கு ஒளிகொடுப்பது கதிரவன் என்பது அறிந்தது. ஆனால் வங்கனூரார் கதிரவன் செய்ய வேண்டிய பணியைக் கன்னியைச் செய்ய வைக்கிறார் தலைவன் மூலம். இதில் நுண்ணியம் என்னவென்றால் பெண்முகத்தை கதிரவனோடு ஒப்பிடுவது மரபன்று. ஆனால் வங்கனூரார் இந்த மரபை மாற்றுகிறார். “ நிலவுக்கு நீ  ஒளி கொடுத்துப் பழகு”! இவள் முகம் நோக்க நிலவு மங்கித் தோன்றுகிறதாம். இது பாரதி கண்ட மரபு. “மங்கியதோர் நிலவினிலே” என்பார் பாரதியார். காதலிக்கு முன்னால் நிலவொளி குன்றும் குறையும். அதுவரை இது மரபுதான். ஆனால் நிலவுக்கு ஒளி கொடுக்க வேண்டும் என்கிறபோதுதான் மரபு மீறப்படுகிறது கவிஞனையும் அறியாமல்! இன்னும் சொல்லலாம்! மேகம் நினைக்கிறதாம் இவள் கூந்தல் போல இல்லையே என்று! அஃறிணையை உயர்திணையாக்கிக் கவலைப்பட வைத்த கவித்துவம்!

    எதனைப் பாடினாலும்இசைப்பாடலே!

    இறைவனையும் காதலையும் தாண்டிப் பாடப்பட்ட இசைப்பாடல்கள் தமிழில் எண்ணிக்கையில் குறைவு. ஒட்டு மொத்த சமுதாயக் கருத்துக்களையும் உள்ளடக்கமாகக் கொண்டு வந்து அந்தக் குறையை நீககி நிவர்த்தி செய்திருக்கிறார் வங்கனூரார்.

    “உனக்காக என்எழுத்து
    வளையாது ! – அது
    ஒருபோதும் தலைகுனிந்து
    நெளியாது !
    எனக்கான பாதைவிட்டு
    விலகாது ! – எவர்
    எதிர்வரினும் மனக்கூடு
    கலையாது !”

    என்று தன்னிலைக் கொள்கை முழக்கமாகட்டும்

    “கொடுமை விளைக்கின்ற – சாதிக்
    கொள்கையை வேரறுப்போம் !
    அடிமைத் தளையறுத்து – நாட்டில்
    அன்பு பயிர்வளர்ப்போம் !”

    என்று சாதியொழிப்பு, அடிமைத் தளையறுப்பு முதலியவற்றைப் பாடும் போதாகட்டும்

    “வயல்களில் உழவர்
    தமிழிசை கேட்கும் !
    மாடுகள் எல்லாம்
    மணியோசை கூட்டும் !
    மயக்கிடும் வண்ணம்
    குளங்களில் தண்ணீர்
    மாற்றுக் குறையாத
    தங்கமாய் மின்னும் !”
    முகிலெனும் வேலியிட்டு — அதை
    மூடுவ தாரடியோ ?
    அகிலம் நடுங்கிடவே — மின்னல்
    அதிர்வதும் ஏனடியோ ?

    என்னும் இயற்கை வண்ணனையாகட்டும்

    “விண்ணில் நடம்புரியும்
    மின்னல் கொடியதனைப்
    பெண்உன்னில் காணுகின்றேன் !-உயர்
    பண்ணின் இசைஇனிமை
    பாவைஉன் பேச்சினிலே
    பயில்வதைக் கேட்கின்றேன் “

    என்னும் தமிழ்த்தாய் வாழ்த்தாகட்டும் எந்தப் பாடுபொருளானாலும் அதனை இசைவடிவமாகவே காணும் பேராற்றலை இயல்பாகப் பெற்றிருக்கிறார் வங்கனூரார். காய்முன் நேரையும் விளம் முன் நேரையும் வேதனைப் பூங்காவிற்குள் நுழைவுச் சீட்டு இல்லாமலேயே விருந்து வைக்கும் எண்சீர் விருத்தங்களும் மட்டுமே சந்தை மயக்கமாக்கப்பட்டிருக்கும் தற்காலத் தமிழ்ககவிதையுலகில் “என் வழி தனி வழி” என்னும் தனித்தடம் கண்டிருக்கிறார் வங்கனூரார். கோனார் குறிப்பேட்டோடு தமிழையும் பணிக்கால்ததையும் முடித்துக் கொள்ளும் தமிழாசிரியர் இடையே தமிழை இந்த எண்பது வயதிலும் ஊன்று கோலாகக் கொண்டு நடப்பவர் வங்கனூரார். விருத்தங்கள் என்னும் விரைவுச் சாப்பாடடையே உண்டு வந்த எனக்கு வங்கனூராரரின்  இசைபபாடல்கள் தந்த சுகம் இளநீர் சுகம்! இதமான சுகம்

    இன்னும் இனித்திருக்கலாம்

    வங்கனூரார் உட்பட இசைப்பாடல்களை எழுதுகிற பலரும் அதன் நுண்ணிய கூறுகளை உள்வாங்காமல் சொல்லினிமைக்கும் இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதுவது மரபாகிப் போனது, அப்பெருமக்கள் கவனிக்கத் தவறிய நுண்ணியங்களில் ஒன்று அனுபல்லவிக்கும் பல்லவிக்குமான தொடர்பு, சரணத்திற்கும பல்லவிக்குமான தொடர்பு. இந்தக் கட்டுரையின் தொடக்கப்பத்திகளில் குறிக்கப்பட்ட இசைப்பாடலாசிரியர்கள் இதனை நன்கு கையாண்டுள்ளனர். பொன்னையா பிள்ளை எழுதிய இசைப்பாடல் ஒன்று இப்படித் தொடங்குகிறது.

    “தந்தை தாயிருந்தால் உமக்கிந்த
    தாழ்வெலலாம் வருமோ ஐயா

    இந்தப் பல்லவி தனித்து நிற்காது, அனுபல்லவியின் இறுதிச் சொல்லோடு இணைந்து நிற்பதைக் காணலாம். அனுபல்லவி எப்படி அமைந்திருக்கிறது?

    “அந்தமில் நடம் செய்யும் அம்பலவாணரே!
    அருமையுடனே பெற்றுப் பெருமையுடன் வளர்த்த

    என்று அமைகிறது, ‘வளர்த்த’ என்னும் அனுபல்லவியின் பெயரெச்சம், பல்லவியின் தொடக்கத்தோடு இணைக்கப்பட்டுப் பாடுகிறபோது பாட்டின் கனஅளவு கூடுகிறது என்பதை உணரக்கூடும். “வளர்த்த தந்தை தாய் இருந்தால்” என்று இருக்க வேண்டும். இனி சரணத்தின் இறுதிச் சீரும் பல்லவியின் தொடக்கமும் இணைவதைக் காணலாம். எலலாருக்கும் தெரிந்த பாட்டு. சுரதா எழுதியது.

    அமுதும் தேனும் எதற்கு? நீ
    அருகினில் இருக்கையிலே எனக்கு!

    என்னும் பல்லவியின் தொடக்கச் சொல்லைப் பலரும் வெறும ‘அமுது என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறாரகள் அவர்களில் பலருக்கும் சரணம் தெரியாத காரணத்தால். சரணம் இப்ப்டி அமைந்திருக்கிறது.

    “நிலவின் நிழலோ உன் வதனம்
    புது நிலைக்கண்ணாடியோ?
    மின்னும் கன்னம்
    மலையில் பிறவா மாமணியே நான்
    கொய்யும் கொய்யா… கனியே
    வா! ன் அமுதும் தேனும் எதற்கு?

    சுரதாவின் பாடலை செரித்துக் கொண்ட இசைமணி சீர்காழி “கனியே! வா! என ஒரு நொடியில் நிறுத்தி வானமுதும் எனத் தொடங்கி முடிப்பார். இப்போதும் கேட்கலாம். எனவே பாட்டின் பல்லவி “அமுதும்” என்பதிலிருந்து “வானமுது” என்ற நிலைக்கு உயர்ந்துவிடுகிறது என்பதை அறிந்து சுவைக்கலாம். பொதுவாகப் பல்லவி, அனுபல்லவி, சரணம் இவற்றின் ஈற்றுச் சீர்கள் பல்லவியின் தொடக்கச் சீர்களோடு இணைந்து பாடப்படுகிறபோது கிட்டும் இனபம் அலாதியானது, இது போன்ற பாட்டுக் கோவை வங்கனூராரிடம் அருகியே காணப்படுகிறது என்பதும் திறனாய்வு நோக்கில் சுட்டப்படுகிறது

    நிறைவுரை

    வங்கனூரார் இசைப்பாடல்களை நான் படித்துப் பாட எத்தனிக்கிறபோது வானத்தில் பறப்பது போன்ற உணர்வு எனக்கு. எழுபதுகளில் வானொலி அலைவரிசைகளைத் தம் இசைப்பாடல்களால் வசப்படுத்திய வல்லாளர். இன்று என் இதய சிம்மாசனத்தில் வழிபடு பொருளாகத் திகழ்கின்றார். எவ்வளவு பெரிய வல்லாளர்! எத்தகைய படைப்பாளி! உண்மைத் தமிழும் ஊராண்ட இசையும் இன்றைக்கு வங்கனூரில் முகாமிட்டிருக்கிறது. அவர் மீது எனக்குப் பாசம் உண்டு. அவர் பாடல்களில் எனக்கு நேசம் உண்டு. இறைவனையும் காதலையும் பாடுபொருள்களாகக் கொண்டிருந்த இசைப்பாடல் களத்தில் அனைத்து வகையான பாடுபொருள்களையும் அறிமுகம் செய்து வைத்ததில் வங்கனூர் மோகனுக்கு வாழ்த்துக்களைச் சொல்லத் தமிழ் தயாராயிருக்கிறது, “படித்தேன் சுவைத்தேன் பகிர்ந்தேன்” தொடரில் இதுவரை என் தம்பிகளுக்கு வாழ்த்துச் சொன்னேன். இந்தக் கட்டுரையில் என் தமையனை வணங்கி நிற்கிறேன் வாழ்த்துக்களை வேண்டி!

    “வங்கனூரார்இசைப் பாடல் சொன்னால் — சொன்ன
    வாயினிக்கும்! அவர் வாழ்வினிக்கும்!
    தெங்கினிக்கும்! மலை தேனினிக்கும்! — தெற்குத்
    செந்தமிழின் இசை சேர்ந்தினிக்கும்!

    (தொடரும்)

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (302)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (302)

    சக்தி சக்திதாசன்

    அன்பானவர்களே !

    மிக நீண்ட இடைவெளியின் பின்னால் மீண்டும் இங்கிலாந்தின் நாட்டு நடப்புகளின் அலசலோடு உங்களின் முன்னால் வல்லமையூடு பயணிக்கிறேன்.

    வாரம் ஒரு மடல் என்று முன்பு நான் வரைந்த மடலின் இடைவெளி இப்போது மாதம் ஒன்றாக மாறும் என்பதை அன்புடன் இனிய வாசக உள்ளங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனது கடைசி மடலுக்கும், இந்த மடலுக்கும் இடையே பல வருடங்கள் உருண்டோடி விட்டன.

    வருடங்கள் பறந்தது மட்டுமல்ல அந்த வருடங்கள் தமக்குள் அமுக்கிக் கொண்ட நிகழ்வுகள் ஒராயிரம்.

    அவற்றினில் உலகம் பூராவும் ஒட்டு மொத்தமாக அனுபவித்தது கொரோனா எனும் ஒரு கொடிய நிகழ்வு.

    நான் வாழ்ந்து கொண்டிருக்கும், என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் இங்கிலாந்து தேசமும் தன் பங்கிற்கு கொரோனாவின் பாதிப்பிற்குள்ளாகியது.

    அத்தனை வருட இடைவெளியில் நிகழ்ந்த நிகழ்வுகளை அலசுவது முடியாத காரியம் அது என் நோக்கமும் அல்ல.

    இன்றைய நிலையில், இன்றைய இங்கிலாந்தின் நடப்புகளின் அடிப்படையில் அதை நோக்கிய ஒரு புலம்பெயர் தமிழனின் கோணப் பார்வையிலேயே எனது இம்மடல் மீண்டும் பிறப்பெடுக்கிறது.

    இவ்வருடம் அதாவது 2025 ஜனவரி மாதம் 30 ம் தேதி நான் இங்கிலாந்தில் கால்பதித்த 50வது வருடத்தினுள் நுழைகிறேன்.

    18 வயது இளைஞனாக, இயந்திரவியற் பொறியியல் துறை மாணவனாக ஈழத்திலிருந்து இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்தேன்.

    இன்று எனது 68 இன் நடுப்பகுதியில் , ஓய்வு பெற்ற பொறியியலாகனாக, ஒரு டாக்டரின் தந்தையாக , எட்டு வயதுப் பேத்தியின் தாத்தாவாக இம்மடலை வரைந்து கொண்டிருக்கிறேன்.

    இந்த ஐம்பது வருடங்களில் நான் இங்கிலாந்தில் கண்ட மாற்றங்கள் எனது அனுபவப் புத்தகத்தின் அத்தியாயங்களாகப் பதியப் பட்டுள்ளன.

    என்னுடைய இங்கிலாந்தின் நிகழ்வுகளை நோக்கிய பார்வையும் அந்தக் கோணத்திலேயே அமையப் போகிறது.

    இது ஒரு மதிநுட்பம் நிறைந்த அறிவாளியின் தீர்ப்பு அல்ல.

    ஒரு சாதாரணப் பாமரனின் வாழ்வை நோக்கிய பார்வை.

    சரி இனி இந்த மடலின் நோக்கத்திற்குள் பிரவேசிப்போம்.

    அதற்கான முன் விளக்கம் பூர்த்தியாகி விட்டது என்றே எண்ணுகிறேன்.

    இங்கிலாந்து இதுவரை காலமும் இல்லாத ஒரு புது அலகிற்குள் கால் பதித்திருக்கிறது என்றே கூறவேண்டும்.

    2010 இலிருந்து 2024 வரை அரசியல் அதிகாரம் தமது ஏகபோக உரிமை எனும் வகையில் அரசமைத்திருந்த கன்சர்வேடிவ் கட்சியின் அரசியல் அதிகாரம் 2024 நடந்த தேர்தலின் மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

    தேர்தலில் அதீத பெரும்பான்மை பெற்று அமோக வெற்றியீட்டியது லேபர் – தொழிற் கட்சி.

    லேபர் கட்சி தேர்தலில் வெற்றியீட்டியது என்பதை விட கன்சர்வேடிவ் கட்சி தோல்வியைத் தேடிக் கொண்டது என்பதே உண்மையாகும்.

    அதை எப்படிச் சொல்ல முடியும் என்று கேட்கிறீர்களா ?

    தொடர் வெற்றிகளைக் கண்டு வந்த கன்சர்வேடிவ் கட்சி தேர்தல் வெற்றி தமக்கேயுரியது எனும் பாங்கில் நடக்கத் தொடங்கினார்கள்.

    கொரோனா கொடுத்த தாக்கமும், ப்ரெக்ஸிட் எனும் பெயரில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும் ஒன்றாகத் தாக்கின.

    அந்தத் தாக்கங்கள் மக்களின் வாழ்வாதாரத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கியது.

    கன்சர்வேடிவ் கட்சியில் பிரதமர் பொரிஸ் ஜான்சன் உட்பட பல முன்னனி உறுப்பினர்கள் தாம் சட்ட வரம்பிற்கு அப்பாற்பட்டவர்கள் எனும் பாணியில் செயற்பட்டார்கள்.

    மக்களின் மனங்களில் விளைந்த விரக்தியின் விகிதத்தைக் கணக்கிடத் தவறினார்கள்.

    இந்த இடைப்பட்ட காலத்தில் அமேரிக்க அரசியல் தளத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் அவர்களின் அரசியல் ஏற்படுத்திய தாக்கங்களின் விளைவைக் கணக்கிலெடுக்கத் தவறினார்கள்.

    பொரிஸ் ஜான்சனின் வீழ்ச்சியை அடுத்து பதவிக்கு வந்த லிஸ் ட்ரஸ் என்பவரின் கண்மூடித்தனமான பொருளாதாரக் கொள்கையின் வீழ்ச்சி அவரை மிகக்குறைந்த காலம் பதவி வகித்த பிரதமர் எனும் முத்திரையுடன் வெளியேற வைத்தது.

    தொடர்ந்து இங்கிலாந்தின் முதலாவது ஆசியப் பிரதமர் எனும் சாதனையுடன் பதவிக்கு வந்தார் பிரித்தானிய ஆசியரான ரிஷி சுனாக்.

    லிஸ் ட்ரஸ் எடுத்த பொருளாதார நகர்வுகளின்  எதிர்மறை விளைவுகளை சரியாகக் கணித்தவர் ரிஷி சுனாக்.

    பொருளாதாரக் கொள்கைகளில் நிபுணத்துவம் கொண்டிருந்து பணவீக்கத்தைக் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தார்.

    இருப்பினும் அடுத்த தேர்தல் காலத்துக்கு முன்னால் பொருளாதாரத்தை அவரால் சீர் செய்ய போதுமான அவகாசம் இருக்கவில்லை.

    விளைவு !

    2024 இல் நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி படு தோல்வியடைந்தது.

    கியர் ஸ்டாமர் தலைமையில் புதிய அணுகுமுறைகளுடன் தேர்தல் களத்தில் குதித்த லேபர் கட்சி அமோக வெற்றியடைந்தது.

    நான் முன்னர் குறிப்பிட்டதைப் போல இவ்வெற்றி லேபர் கட்சியின் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி என்பதை விட மக்களின் விரக்தியின் வெளிப்பாடு என்றே கூற வேண்டும்.

    பதவிக்கு வந்த லேபர் கட்சியின் முன்னால் மிகப்பெரிய சவால்கள் காத்துக் கிடந்தன.

    பொருளாதார ஏணியின் அடிமட்டத்தில் இருக்கும் இங்கிலாந்தின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டிய தேவையிருந்தது.

    உழைக்கும் மக்களின் உயர்வினை பிரதானக் கொள்கையாக லேபர் கட்சி கொண்டுள்ளது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

    ஆனால் பொருளாதாரத்தைச் சீர் செய்வதற்கு தேவைப்படும் நிதியை பொறுப்பான முறையில் கண்டெடுத்து செயற்பட வேண்டிய தேவை லேபர் கட்சிக்கு இருந்தது.

    அதற்காக பல அரசாங்க திணைக்களங்களுக்கான செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையிருந்தது.

    அதன் பொருட்டு லேபர் கட்சியின் நிதியமைச்சர் எடுத்த பல செயற்பாடுகள் லேபர் கட்சி உழைக்கும் மக்களின் கட்சி எனும் அபிப்பிராயத்துக்கு முரணாக இருந்தது.

    நாட்டின் பொருளாதார வளத்தைச் சீர் செய்வதற்கு இவை அவசியமானவை என்னையும் , எனது அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் அடுத்த தேர்தலுக்கு முன்னால் கணிப்பீடு செய்யுங்கள் எனும் வாதத்தை முன் வைக்கிறார் பிரதமர் கியர் ஸ்டாமர்.

    அவரது செல்வாக்கின் கருத்துக் கணிப்பு பெருமளவில் வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது.

    எனக்கு எனது மீதான மக்களின் கருத்துக் கணிப்பை விட என் நாட்டின் முன்னேற்றமே முக்கியமானது என்கிறார் பிரதமர்.

    இதற்கிடையில் சர்வதேச அளவிலான பிரச்சனைகளில் பிரித்தானியாவின் நிலைப்பாட்டைப் பற்றிய செயற்பாடுகளும் முன் நிற்கின்றன.

    உக்ரைன், ரஸ்யாவுக்கிடையிலான மூன்று வருட யுத்தம்.

    இஸ்ரேல் , பாலஸ்தீன மக்களுக்கிடையிலான போர் எனும் நிகழ்வுகள் துருத்திக் கொண்டிருக்கின்றன.

    இந்த நிலையில் தான் அமேரிக்காவில் மீண்டும் ட்ரம்ப் ஜனாதிபதியாகியுள்ளார்.

    பல அதிரடி கொள்கைகளை விளைவுகளை எண்ணாமல் அடுத்தடுத்து அள்ளி வீசுகிறார் ட்ரம்ப்.

    பக நாடுகளுக்கெதிராக வர்த்தக யுத்தத்தை ஆரம்பிக்கும் ட்ரம்ப் அவர்களின் இங்கிலாந்துப் பொருட்களின் மீதான வரிவிதிப்பை மட்டுப்படுத்த வேண்டிய தேவை கியர் ஸ்டாமருக்கு உண்டு.

    அதன் நிமித்தம் அதிபர் ட்ரம்ப் அவர்களின் செயற்பாடுகள் லேபர் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளோடு முரண்பட்டாலும் அமேரிக்க ஜனாதிபதியோடு மேவிப் போக வேண்டிய தேவையுள்ளது.

    இந்நிலையில் தான் அதிபர் ட்ரம்ப் உக்ரைன் – ரஸ்ய யுத்தத்தை நிறுத்த எடுத்த முயற்சிதில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அவர்களுடன் எழுந்த பிரச்சனையை தீர்க்கும் நடுவராக கியர் ஸ்டாமர் செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டது.

    அந்த பாத்திரத்தைச் செவ்வனே நிறைவேற்றினார் எமது பிரதமர் என்றே சொல்ல வேண்டும்.

    அத்தோடு உக்ரைன் நாட்டின் அதிபருக்கு சார்பாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஐரோப்பிய நாடுகளை ஓரணியில் ஒன்று திரட்டுவதில் தலைமைப் பொறுப்பெடுத்துச் செயலாற்றினார்.

    இவரது செயற்பாட்டினால் உக்ரைன் நாட்டின் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கு இவ்வணியில் இப்போது 25 நாடுகள் இணைந்திருப்பது குறிப்பிடத் தக்கது.

    இவரது இந்த தலைமைத்துவ செயற்பாடு இங்கிலாந்தில் சரிந்து போயிருந்த இவரது செல்வாக்கை மக்களிடையே உயர்த்தியுள்ளது என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

    அடுத்து உள்நாட்டில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருந்த தேசிய மருத்துவ சேவை – என்.எச்.எஸ் மறுசீரமைக்கப்படுவது லேபர் கட்சியின் தேர்தல் பிரகடனங்களில் ஒன்றாக இருந்தது.

    அதனை நோக்கிய செயற்பாடாக தேசிய மருத்துவ சேவை உலுக்கப்பட்டு வேரோடு மாற்றங்களுக்குள்காக்கபடும் என்று பிரதமர் அறிவித்திருக்கிறார்.

    இந்த அறிவிப்பும் மக்களிடையேயும், அரசியல் அவதானிகளிடமும் கணிசமான ஆதரவைப் பெற்றுள்ளது.

    அடுத்து சமூக திட்டமான நலிவுற்ற மக்களுக்கான அரசாங்க உதவிகளை மறு சீரமைக்கும் திட்டங்கள் பிரஸ்தாபிக்கப்படுகின்றன.

    இதைப்பற்றிய உத்தியோகபூர்வமான அறிக்கைகள் வெளிவராத நிலையில் வதந்திகளின் அடிப்படையில் பல ஊகங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்த வண்ணமிருக்கிறது.

    இதில் பல எதிர்மறையான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.

    இதையெல்லாம் கடபதற்கு எதிர்நீச்சலடிக்கும் வல்லமை கியர் ஸ்டாமருக்கு இருக்கிறதா ?

    இதைப்பற்றிய அடுத்தடுத்த நகர்வுகளை இனிவரும் மடல்களில் பார்க்கலாமே!

    Share
  • அறுபதில் கல்யாணமா! (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    வேதாவும் தினகரனும் ஒரே இடத்தில் வேலைபார்த்தவர்கள். குடும்ப பாரத்தைச் சுமப்பதால், அவளுக்குக் `கல்யாணம்’ என்ற எண்ணமே எழவில்லை என்றவரை அவருக்குத் தெரியும்.

    அரசியல், சினிமா என்று பொது விஷயங்களைப்பற்றிப் பேசி நண்பர்கள் ஆனபோது, `நம் மனைவிக்கு இவளைப்போல் புத்திசாலித்தனமாகப் பேசத் தெரியவில்லையே!’ என்ற சிறு ஏக்கம் எழும். உடனே அடக்கிவிடுவார்.

    “நான் எங்கம்மாவோட போயிடப்போறேன்,” என்றுவிட்டு, வேலைமாற்றம் வாங்கிக்கொண்டு வேதா போனபோது, `இவளுக்கு நம்மிடம் பிடித்தம் கிடையாதா!’ என்ற ஏமாற்றம் எழுந்தது.

    ஒரு வாரம் சென்றபின், வேதா தொலைபேசியில் அழைத்தாள். “பொழுதே போகலே,” என்றாள்.

    அப்படியே அவர்கள் தொடர்பு சில வருடங்கள் நீடித்தது. நோய்வாய்ப்பட்ட மனைவி கோகிலாவைப் பார்த்துக்கொள்வதைப்பற்றி தினகரன் விவரிக்க, ஆறுதலாக ஏதாவது கூறுவாள் வேதா.

    மனைவி இறந்தபின்னும் இப்படியே பேசியபோதுதான் தினகரனுக்கு அந்த எண்ணம் எழுந்தது.

    அவளை நேரில் சந்தித்தபோது, “நாம்ப ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா, வேதா மேடம்?” என்று கேட்டேவிட்டார்.

    அவள் வெட்கப்படுவாள், குனிந்த தலை நிமிராது என்றெல்லாம் யோசித்து வைத்திருந்தவருக்கு ஏமாற்றம்.

    “யோசிச்சுச் சொல்லட்டா?” என்று பதில் கேள்விதான் வந்தது.

    `வருகிற வெள்ளிக்கிழமை நான் வேதாவைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளப்போகிறேன்,’ என்று ஈ-மெயிலில் தெரிவித்ததோடு சரி. அதற்குப்பின் அப்பாவிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. அழைப்பெல்லாம் கிடையாது.

    “இந்த வயசிலே அப்பாவுக்கு இப்படிப் புத்தி போக வேண்டாம்!” பொறுமினான் எம்.லிங்கம்.

    “அறுபதாம் வயசில ரெண்டாவது கல்யாணம் நடக்காத அதிசயமா என்ன!” என்று அப்பாவுக்குப் பரிந்து பேசினான் அவனுடைய தம்பி எம்.தேவன். அண்ணன், தம்பி இருவருமே தம் பெயரின் முதல் எழுத்தான `மகா’வைச் சுருக்கி விட்டிருந்தார்கள்.

    “அப்படி ஒரு கல்யாணம் மொதல் சம்சாரத்தோட நடக்கிற சமாசாரமில்ல? இந்த மனுசரோ, எப்ப நம்ப அம்மா சாகப்போறாங்கன்னு காத்துக்கிட்டு, இப்படி ஒரு காரியத்தில எறங்கிட்டாரு! அம்மா இருந்த எடத்திலே இன்னொருத்தி!“

    புற்றுநோயால் அம்மா அவதிப்பட்டபோது அப்பாதானே கவனித்துக்கொண்டார்!

    `இந்த வீட்டிலே நிம்மதியே இல்லே!’ என்றுவிட்டு, மனைவி, இரு குழந்தைகளுடன் வேற்றூருக்கு வேலை மாற்றம் வாங்கிக்கொண்டு, தனிக்குடித்தனம் போனவனுக்கு இந்தக் கரிசனம் எப்படி வந்தது?

    “ஏண்டா, தேவா? அம்பது வயசுக்குமேல ஆனவளுக்கு குழந்தை பிறக்காது. இல்லே?” அண்ணன் சந்தேகத்தை வெளிப்படுத்தியபோது, தேவனுக்குச் சிரிப்பு வந்தது. அப்பாவின் சொந்த வீடு, வங்கியில் ரொக்கம்—இதற்கெல்லாம் பங்கு கேட்க இன்னொரு வாரிசு வந்துவிடப்போகிறதே என்ற பயம் இவனுக்கு!

    “வயசான காலத்திலே அப்பாவுக்கு பேச்சுத்துணைக்கு ஒருத்தர் வேண்டியிருக்குபோல!”

    “பேச ஆள் வேணுமானா, ஏதாவது கிளப்புக்குப் போறது!”

    அயல்நாட்டில் குடியுரிமையுடன் வேலை பார்த்துவந்த இளையவனுக்கு அலுப்புத்தட்டியது. “என்ன இருந்தாலும், வீட்டிலே ஒருத்தர் கூடவே இருக்கிறமாதிரி ஆகுமா? யாருமில்லாத வீடு `ஹோ’ன்னு இருக்கும். உள்ளே நூழையவே அலுப்பா இருக்கும். அதோட, தலைவலி, காய்ச்சலுன்னு வந்தா, `இப்போ தேவலியா?’ன்னு அனுசரணையா கேக்க..”. தன் சொந்த அனுபவத்தை வார்த்தைகளாக வடித்தான்.

    “அப்பாவை விட்டுக்குடுக்க மாட்டியே! எப்பவுமே நீதான் அவரோட செல்லப்பிள்ளை! ஒன்கூடப் பேச வந்தேன் பாரு!” வெறுப்புடன், தொலைபேசி இணைப்பைத் துண்டித்தான் லிங்கம்.

    கடந்த இரண்டு நாட்களாக குழம்பியிருந்த மனதிற்குச் சற்று ஆறுதல் அளிப்பான் என்று தம்பியை அழைத்தது தண்டம்.

    `யாரோ, எப்படியோ தொலையட்டும்!’ என்று, தொலைக்காட்சியை முடுக்கி, அதில் ஆழ்ந்துபோனான்.

    `மணப்பெண் மாதிரியா வந்திருக்கிறாள்!’ முகம் சுளித்தது. பண்டிகை நாட்களில் பட்டுப்புடவை உடுத்திக்கொண்டு, அவர் காலில் விழுந்து நமஸ்கரித்த கோகிலா மனதில் வந்துபோனாள்.

    “ரெடி?” என்ற வேதாவின் முகத்தில் ஆர்வமோ, துடிப்போ இல்லை. ஏதோ காரியத்தை முடிக்கும் அவசரம்தான் தெரிந்தது.

    கசங்கிய காட்டன் புடவை. எப்போதும்போல், கழுத்தில் ஒரு சிறு சங்கிலி. கையில் கடிகாரம்.  வளை இல்லை. என்ன நாகரீகமோ!

    அதற்குமேல் அவரால் சும்மா இருக்க முடியவில்லை. “அழகா, கல்யாணப்பொண்ணா லட்சணமா பட்டுப்புடவை, தங்க வளையலுன்னு நீ வரக்கூடாதா, வேதா?”

    `நீங்க மட்டும் ஜரிகைக்கரை போட்ட பட்டு வேஷ்டியிலேயா வந்திருக்கீங்க? பேண்ட்-சட்டைதானே! ஒங்க லட்சணத்துக்கு இது போதும்!’ வாய்வரை வந்த வார்த்தைகளை விழுங்கிக்கொண்டாள் வேதா.

    தான் எது சொன்னாலும், செய்தாலும் புன்னகையுடன் ஆமோதித்த நீண்டகால நண்பன் இல்லை இவர். `மனைவி என்றால் தனது ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்டவள்’ என்று நம்பி நடக்கும் ஒரு சராசரி கணவர்.

    `ஏமாந்துவிட்டேன்!’ என்றெழுந்த எண்ணத்தை ஒரு பெருமூச்சுடன் வெளியேற்றிவிட்டு, அவருக்குப்பின் நடந்தாள் புதுமனைவி.

    Share
  • அறிவியலுக்குத் தடையாய் நின்ற மதம்!

    -மேகலா இராமமூர்த்தி

    மாந்தர்களாகிய நாம் வாழ்ந்துவரும் இந்தப் புவியானது சூரியக் குடும்பத்திலுள்ள (Solar System) எட்டுக் கோள்களுள் ஒன்றாகும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை மற்ற கோள்களாகும். புளூட்டோ எனும் சிறிய கோளும் சூரியக் குடும்ப உறுப்பினராகத்தான் கடந்த காலத்தில் இருந்தது; ஆனால் வானியலாளர்கள் வரையறுத்த கோளுக்கான அளவைவிட அது சிறியதாக இருந்தபடியால் கோள் எனும் தகுதியை இழந்து, 2006ஆம் ஆண்டு ஆகஸ்டு 24 அன்று, சூரியக் குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டது.

    இப்போது ’சூரியக் குடும்பம்’ எனும் சொல்லாட்சி அனைவரும் அறிந்த ஒன்றாக இருப்பினும் உலகம் அதனை அத்தனை எளிதில் கண்டடைந்துவிடவில்லை; அதற்குப் பன்னூறாண்டுகள் ஆயின என்பதுதான் வரலாறு காட்டும் உண்மை.

    புவி மையக் கோட்பாடு (Geocentrism):

    தொடக்க காலத்தில் பேருலகம் (Universe) புவியை மையமாகக் கொண்டது என்றும், ஏனைய கோள்கள் புவியையே சுற்றிவருகின்றன என்றும்தான் எண்ணியிருந்தனர் மக்கள். இந்தக் கருத்துருவுக்கு புவி மையக் கோட்பாடு என்று பெயர்.

    பிளேட்டோ (Plato): கி.மு. 4ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கிரேக்கத் தத்துவ அறிஞரும் கருத்துமுதல்வாதியுமான பிளேட்டோ விண்மீன்கள், கோள்கள், பருப்பொருள்கள் அனைத்தையும் உள்ளடக்கிய பேருலகிற்கு மையமாக இருப்பது புவியே எனும் கருத்தைக் கொண்டிருந்தார்.

    அரிஸ்டாட்டில் (Aristotle): பிளேட்டோவின் புகழ்வாய்ந்த மாணவரும் சிந்தனையாளருமான அரிஸ்டாட்டிலும் புவியானது நிலையாக இந்தப் பேருலகின் மையத்தில் அமைந்திருக்க, ஏனைய கோள்கள் வட்ட வடிவில் அதனைச் சுற்றிவருகின்றன என்று வாதிட்டார்.

    கிளாடியஸ் தாலமி (Claudius Ptolemy): அரிஸ்டாட்டிலின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையிலும் புவி மையக் கோட்பாட்டை ஆழமாக நிறுவும் வகையிலும் எகிப்தைச் சேர்ந்த வானியல் அறிஞரும் கணிதவியலாளருமான கிளாடியஸ் தாலமி, கி.பி.150இல் தம் வானியல் ஆய்வுகள் குறித்த விவரங்களை ’Almagest’ (Meaning: The Great Compilation – பெருந்தொகுப்பு) எனும் பெயரில் நூலாக வெளியிட்டார். அதில் பேருலகின் மையமாகப் புவியே விளங்குகின்றது என்றும் சூரியன், நிலவு, கோள்கள், உடுக்கள் அனைத்தும் புவியையே சுற்றிவருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

    பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோரின் தத்துவார்த்த அவதானிப்புகளைப்போல் அல்லாமல் தாம் வடிவமைத்த கணித மாதிரியை (mathematical model) அடிப்படையாகக் கொண்டு தாலமி புவி மையக் கோட்பாட்டை வரையறுத்திருந்தாலும் அவரின் சிந்தனைக்கு அடிப்படையாக அமைந்தது அவ்விருவரின் சிந்தனையோட்டமே. தொலைநோக்கிகள் கண்டுபிடிக்கப்படாத அக்காலத்தில், புழக்கத்திலிருந்த வானியல் கருவிகளான ஆஸ்ட்ரோலேப் Astrolabe, நோமோன் (Gnomon) போன்றவற்றின் உதவியோடும், வெறும் கண்களால் தாம் இரவு வானில் கண்டறிந்த வான்வெளி உண்மைகளை அடிப்படையாகக் கொண்டும் தம் கணித மாதிரியைத் தாலமி உருவாக்கினார். கிட்டத்தட்ட ஆயிரத்து நானூறு ஆண்டுகட்குத் தாலமியின் நூலான ’Almagest’ புவி மையக் கோட்பாட்டுக்கு வலுவான ஆதாரமாய்த் திகழ்ந்தது.

    தாலமிக்குப் பிறகும் நீண்டகாலத்துக்குப் புவி மையக் கோட்பாடே நிலைபெற்றிருந்தது; அதற்கு முதன்மையான காரணம் மதங்களின் செல்வாக்கே. விவிலியத்தின் ஆதியாகம நூலானது (Book of Genesis), புவியின் படைப்பு கடவுளால் வேண்டுமென்றே செய்யப்பட்ட செயலென்றும், புவியே அவரது படைப்பின் அசையாத மையப்புள்ளியென்றும் (Psalm 104:5) விவரித்தது. இசுலாமிய சமயத்தின் புனிதநூல் கோட்பாடுகளும் புவியை மையப்படுத்தியதாகவே அமைந்திருந்தன; ஆதலால் இவ்விரு சமயத்தினரும் புவி மையக் கோட்பாட்டை ஆதரித்தனர். எனவே, கி.பி. 15ஆம் நூற்றாண்டுவரை புவி மையக் கோட்பாடே உலகோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

    சூரிய மையக் கோட்பாடு (Heliocentrism):

    அரிஸ்டார்கஸ் (Aristarchus of Samos): அரிஸ்டாட்டிலுக்குக் காலத்தால் சற்று முற்பட்டவரும் (310–230 BCE) கிரேக்கத் தீவான சாமோஸில் வாழ்ந்தவருமான வானியலாளரும் கணிதவியல் வல்லுநருமான அரிஸ்டார்கஸ், சூரிய மையக் கோட்பாட்டை முன்மொழிந்தவர் என்பது நமக்கு வியப்பளிக்கக்கூடிய செய்தியே. புவி, தன்னுடைய அச்சில் சுழல்கின்றது என்பதையும் இரவும் பகலும் மாறிமாறித் தோன்றுவதற்கு அதுவே காரணம் என்பதையும் கண்டறிந்துரைத்த அறிஞர் அவர். சூரியனானது புவி, நிலவு ஆகியவற்றைவிட அளவில் பெரியதாகத் தோன்றுவதையும், அவையிரண்டையும்விட அதிகத் தொலைவில் இருப்பதையும் கவனித்த அரிஸ்டார்கஸ், சூரியனே சூரிய மண்டலத்தின் மையமாக இருக்கவேண்டும் எனும் தம் கருத்தைத் தெரிவித்தார். எனினும், அரிஸ்டாட்டில், தாலமி ஆகியோரின் கருத்துக்களுக்குப் பொதுமக்களிடமும், மக்களை வழிநடத்திய மதங்களிடமும் இருந்த செல்வாக்கால் அவரின் கருத்து எடுபடாமல் போனது.

    நிக்கோலஸ் கோப்பர்னிகஸ் (Nicolaus Copernicus): அரிஸ்டார்கஸின் கருத்து விதை, அவர் காலத்தில் முளைவிடாமல் போனாலும் கி.பி. 15/16ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த போலந்து நாட்டைச் சார்ந்த கணிதவியலாளரும் வானியலாளருமான நிக்கோலஸ் கோப்பர்னிகஸ் மூலமாக முளைவிட்டு எழுந்தது. அவரும் அரிஸ்டார்கஸைப் போலவே புவி மையக் கோட்பாட்டை மறுத்துச் சூரிய மையக் கோட்பாட்டையே முன்வைத்தார். 1543ஆம் ஆண்டு வெளிவந்தDe revolutionibus orbium coelestium’ (’On the Revolutions of the Celestial Spheres’வான்கோளங்களின் சுழற்சி) எனும் தம் நூலில், சூரியனே இப்பேருலகின் மையம்; புவி அன்று எனவும், புவியும் பிற கோள்களும் சூரியனைச் சுற்றிவருகின்றன’ எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்தை அவர் கணிதவியல் அடிப்படையில் விளக்கிக் கோள்களின் இயக்கங்களுக்குக் குறிப்பாக அவற்றின் பின்னோக்கிய இயக்கங்களுக்கு (retrograde motion) எளிய விளக்கங்களைத் தந்திருந்தார்.

    சூரிய மையக் கோட்பாட்டைக் கோர்ப்பனிகஸ் கண்டறிந்தது எப்படி?

    தாலமியின் புவி மையக் கோட்பாட்டு வரைபடத்தைக் கண்ட கோப்பர்னிகஸ், அதில் கோள்களின் முன்னோக்கிய பின்னோக்கிய சுழற்சிகளை விவரிக்கச் வட்டத்துக்குள் வட்டமிடும் சிக்கலான முறைகள் கையாளப்பட்டிருந்ததைக் கவனித்தார். செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்கள் சில நேரங்களில் பின்னோக்கி நகர்வதை விளக்குவதில் தாலமியின் புவி மைய வரைபட மாதிரி இத்தகு சிக்கலை எதிர்கொள்வதைக் கோப்பர்னிகஸ் உணர்ந்தார்.

    கோள்களின் இயக்கம் அவற்றின் வேகம் குறித்த விவரங்களைத் தாலமி, அவருக்கு முற்பட்ட வானியலாளரான ஹிப்பார்கஸ் (Hipparchus) ஆகியோரின் வரைபடங்கள், மாதிரிகள், கணிதவியல் கருத்துக்கள் ஆகியவற்றின் வாயிலாக அறிந்த கோப்பர்னிகஸ், கோள்களின் இயக்கம் குறித்துத் தாம் கண்டறிந்த விவரங்களோடு அவற்றை ஒப்பிட்டுப்பார்த்து, புவியைப்போல் சூரியனுக்கு அருகிலுள்ள கோள்கள், தொலைவிலுள்ள கோள்களைக் காட்டிலும் வேகமாகச் சுழல்வதையும், புவி மெதுவாக இயங்கும் வேறொரு கோளை முந்திச்செல்லும்போது அந்தக் கோள் பின்னோக்கிச் செல்வதுபோன்ற மாயத்தோற்றம் ஏற்படுவதனையும் புரிந்துகொண்டார். [சான்றாக நாம் மகிழுந்தில் வேகமாகச் செல்வதாக வைத்துக்கொள்வோம்; நாம் செல்லும் திசையிலேயே நம்மைவிடக் குறைந்த வேகத்தில் செல்லும் மற்றொரு மகிழுந்தை நாம் கடக்கும்போது முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கும் அம்மகிழுந்து பின்னோக்கி நகர்வதுபோல் நமக்குத் தோற்றமளிக்கும்; இதே நிகழ்வுதான் கோள்களின் வேறுபட்ட வேகச் சுழற்சியின்போதும் நிகழ்கின்றது.]

    எனவே, புவி உட்பட அனைத்துக் கோள்களும் சூரியனைச்சுற்றி இயங்குவதாகக் கொண்டால், கோள்களின் இயக்கத்தை இயல்பாக – எவ்விதச் சிக்கலுமின்றி விளக்கமுடியும் என்றார் கோப்பர்னிகஸ்.

    வானியல் ஆய்வில் தாம் கண்டுணர்ந்த சூரிய மையக் கோட்பாட்டை வெளிப்படுத்தி நூலெழுதியவரான கோப்பர்னிகஸ், திருச்சபை மதகுருமாராக (Clergy) இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது போலந்து நாட்டுத் திருச்சபையும் கத்தோலிக்கக் கிறித்தவத்தைச் சார்ந்ததுதான்; அதனால், தாம் கண்டறிந்து ஆவணப்படுத்திய உண்மைகளை அவர் தீவிரமாகப் பரப்புரை செய்யவில்லை; அத்தோடு கத்தோலிக்கத் திருச்சபை, இறைவனின் படைப்புக் கோட்பாட்டுக்கு எதிரான சூரிய மையக் கோட்பாட்டையும் அதனை முன்மொழிந்தவர்களையும் முழுவீச்சில் ஆராய்ந்து தண்டிப்பதற்கு முன்பாகவே அவர் இயற்கை எய்திவிட்டார்.

    ஜார்ஜ் ஜோச்சிம் ரெட்டிகஸ் (Georg Joachim Rheticus): கோப்பர்னிகஸின் மாணவரான ரெட்டிகஸ் சூரிய மைய மாதிரியை ஆதரித்தவராவார். கோப்பர்னிகஸ் தம்முடைய De revolutionibus orbium coelestium’ நூலை வெளியிடுவதற்குப் பேரூக்கம் தந்தவர் இவர்.

    ஜியோர்டானோ புருனோ (Giordano Bruno): வானியலில் மிகுந்த ஆர்வம்கொண்ட மெய்யிலாளரான புருனோ, சூரியனை மையமாகக் கொண்டே புவியும் பிற கோள்களும் இயங்குகின்றன எனும் கோப்பர்னிகஸின் கோட்பாட்டை வழிமொழிந்தார். சூரியன் என்பது உடுக்களுள் ஒன்று, எண்ணிறந்த உடுக்களையும் கோள்களையும் கொண்ட இந்தப் பேருலகம் எல்லையற்றது என்பவை இவரின் கண்டுபிடிப்புகளாகும்.

    புருனோ கிறித்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் ஏசுநாதரின் தெய்வீகத்தன்மை, திருப்பலியின்போது உரொட்டியும் மதுவும் முறையே ஏசுநாதரின் உடலாகவும் குருதியாகவும் மாறும் என்பன போன்ற கருதுகோள்களையும், நரகம் குறித்த கிறித்தவ மத நம்பிக்கையையும் அறிவுக்குப் பொருந்தாதவை என ஏற்க மறுத்து அவற்றை வினாக்களுக்கு உட்படுத்தினார்.

    சூரிய மையக் கோட்பாட்டை ஆதரித்ததற்காகவும் கிறித்தவ மத நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்ததற்காகவும் சிறையிலடைக்கப்பட்டுத் தம் கருத்துக்களைத் திரும்பப் பெறுமாறு கத்தோலிக்கத் திருச்சபையால் சித்திரவதை செய்யப்பட்டார் புருனோ; அப்படியும் அவர் தம்முடைய கருத்துக்களைத் திரும்பப்பெற மறுத்ததால் திருச்சபையின் உத்தரவின்பேரில் பிப்ரவரி 17, 1600இல் கழுமரத்தில் கட்டப்பட்டு உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டார்.

    ”அன்பே வடிவான ஏசுகிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றுபவர்கள் நாங்கள்” என்று மார்தட்டிக்கொண்ட கத்தோலிக்கத் திருச்சபையின் செயற்பாடு, அவர்களின் பரப்புரைக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளி மலைக்கும் மடுவுக்குமானது என்பதைத் தெளிவாய்ப் பறைசாற்றுகின்றதல்லவா?

    ஜோஹன்னஸ் கெப்ளர் (Johannes Kepler): ஜெர்மானிய வானியலாளரான இவர், கோப்பர்னிகஸின் சூரிய மையக் கோட்பாட்டை ஆதரித்ததோடு, அக்கோட்பாட்டை விரிவுபடுத்திக் கெப்ளரின் கோளியக்க விதிகளை (Kepler’s Laws of Planetary Motion) உருவாக்கிய சிறப்புக்குரியவராவார். கோள்கள் வட்டவடிவச் சுற்றுப்பாதையில் சூரியனைச் சுற்றிவருகின்றன எனும் கோப்பர்னிக்கஸின் கருத்தை மறுத்து, அவை நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றிவருகின்றன எனும் உண்மையைத் தம் கணிதவியல் கணக்கீடுகளின் அடிப்படையில் முதன்முதலில் வெளியிட்டவர் இவரே.

    துல்லியமான கணிதத்தை அடிப்படையாகக் கொண்ட கெப்ளரின் ஆய்வுப் பணியானது ஊக அடிப்படையிலான முந்தைய மாதிரிகளிலிருந்து வேறுபட்டிருந்தது.

    கெப்ளர் ஜெர்மானியராக இருந்ததாலும், கத்தோலிக்கப் பிரிவைச் சாராது லூத்தரனாக (Lutheran – a major branch of Protestant Christianity) இருந்ததாலும் கத்தோலிக்கத் திருச்சபையினரின் அடக்குமுறைகளிலிருந்தும் கொலைத் தண்டனையிலிருந்தும் தப்பித்தார்; இல்லையேல் அவரையும் கழுவேற்றியிருப்பர் திருச்சபையினர்.

    கலிலியோ கலிலி (Galileo Galilei): இத்தாலிய வானியலாளரும் இயற்பியலாளருமான கலிலியோ, தாம் செம்மைப்படுத்திய தொலைநோக்கியின் உதவியோடு வானியல் ஆய்வுகள் மேற்கொண்டு சூரிய மையக் கோட்பாட்டை உறுதிப்படுத்தினார். வியாழனின் நிலவுகளை அவர் கண்டறிந்தார் (இவற்றைக் கலிலியோவின் நிலவுகள் என்றழைத்தார் அவர்); இக்கண்டுபிடிப்பானது வானிலுள்ள கோள்கள் புவியைச் சுற்றிவரவில்லை என்பதற்கான சான்றாக அமைந்தது. அவ்வாறே வெள்ளிக்கோளில், நிலவையொத்த, வளர்நிலை தேய்நிலைகள் இருப்பதனை அவதானித்த அவர், வெள்ளி, சூரியனைச் சுற்றிவந்தால் மட்டுமே இவை சாத்தியம் என்பதனை உணர்ந்தார். பால்வீதியை ஆய்வுசெய்த அவர், அது நெபுலாவால் (nebula – a cloud of gas and dust) ஆனது எனும் முந்தைய கருதுகோள் உண்மையன்று; மாறாக எண்ணற்ற உடுக்களால் ஆனது என்பதனையும் கண்டுபிடித்தார்.

    தம் வானியல் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தி அவரெழுதிய நூலான ’Sidereus Nuncius’ (’நட்சத்திரத் தூதர்’) 1610இல் வெளியீடு கண்டது. இந்நூல், வானியல்துறையில் ஒரு புரட்சிகரமான படைப்பு எனில் மிகையில்லை.

    திருச்சபையினர் தம் மதவாதச் சிந்தனையை மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து சூரிய மையக் கோட்பாட்டுக்கு எதிரானவர்களாகவே இருப்பதனை அறிந்த கலிலியோ தம்முடைய ’Dialogue Concerning the Two Chief World Systems’ எனும் நூலில் அறிவியலை ஏற்க மறுக்கும் அறிவிலிகள் என்று திருச்சபையினரை மறைமுகமாகச் சித்திரித்தார்.

    கலிலியோவின் செயற்பாடுகளால் எரிச்சலடைந்த திருச்சபை, அவர் தம்முடைய கருத்துக்களைத் திரும்பப்பெற வேண்டும் எனும் நெருக்கடியைத் தொடர்ந்து அளித்துவந்தது. அவர் அதனை ஏற்கமறுக்கவே, அவருடைய நூல்களைத் தடைசெய்து 9 ஆண்டுகள் அவரை வீட்டுக்காவலில் வைத்தது. அப்போதும் அவர் தம் அறிவியல் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டும், நூல்களை எழுதிக்கொண்டுமே இருந்தார். அக்காலக்கட்டத்தில் அவரெழுதிய நூல்தான், ’Two New Sciences.’ நவீன இயற்பியலுக்கு (modern physics) அடித்தளம் அமைத்துத்தந்த நூலாக அது கருதப்படுகின்றது; அதன் காரணமாக கலிலியோ, ’நவீன அறிவியலின் தந்தை’ (Father of Modern Science) என்றழைக்கப்படுகின்றார்.

    தொடர்ந்து வானியல் ஆய்வுகள் மேற்கொள்ள இயலாதபடி கண்புரை நோய் (Cataracts) கலிலியோவைப் பாதித்து அவரின் பார்வையைப் பறித்தது. எனினும், தம் உதவியாளர்களை வைத்து அவர் தம் எழுத்துப் பணிகளை மேற்கொண்டதாகத் தெரிகின்றது. வீட்டுக் காவலில் இருந்த சூழலிலேயே தம்முடைய 77ஆவது அகவையில் அவர் மரணமடைந்தார்.

    சர் ஐசக் நியூட்டன் (Sir Isaac Newton): கெப்ளர், கலிலியோ ஆகியோருக்குப்பின் வந்த அறிவியலாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் நியூட்டன். இயற்பியல், கணிதம், வானியல்சார் ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். இயற்பியலாளராக இயக்க விதிகளையும், ஈர்ப்பு விதியையும் (the laws of motion and gravity) உருவாக்கினார். கணிதவியலாளராக கால்குலஸ் (calculus) எனும் கணிதப் பிரிவை அறிமுகப்படுத்தினார். வானியலாளராக தமக்கு முன்பு புழக்கத்திலிருந்த, கலிலியோ பயன்படுத்திய தொலைநோக்கியைப் புதுப்பித்தார். அந்தத் தொலைநோக்கியின் உதவியோடு அவர் மேற்கொண்ட ஆய்வுகள் சூரிய மையக் கோட்பாட்டுக்கு வலுசேர்ப்பனவாக அமைந்தன.

    17ஆம் நூற்றாண்டின் இறுதியில் கெப்ளரின் கோளியக்க விதிகளும், நியூட்டனின் ஈர்ப்பு விதிகளும் சூரிய மையக் கோட்பாட்டின் உண்மைத்தன்மையை ஐயத்திற்கிடமின்றி நிறுவியபிறகு அக்கோட்பாடு அறிவியலாளர்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    கத்தோலிக்கத் திருச்சபை 1822ஆம் ஆண்டு கலிலியோவின் புத்தகங்களுக்கு விதித்திருந்த தடையை நீக்கி அவற்றை வெளியிட அனுமதித்தது. எனினும் கலிலியோவை நடத்திய விதத்தில் தன் தவற்றை உணர்ந்து அது மன்னிப்புக் கேட்டதென்னவோ அவர் இறந்து 350 ஆண்டுகளுக்குப் பிறகுதான். ஆம், கலிலியோ இறந்தது 1642இல்; கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப் இரண்டாம் ஜான் பால் (Pope John Paul II) கலிலியோ விசயத்தில் திருச்சபை தவறிழைத்துவிட்டது என்று தம் உரையினிடையே குறிப்பிட்டது 1992இல்.

    இன்று சூரிய மையக் கோட்பாடும், அதன் நீட்சியான சூரியக் குடும்பமும் (Solar System) அனைவரும் அறிந்த ஒன்றாகிவிட்டது.

    மதவாதச் சிந்தனைகள் அறிவியல் வளர்ச்சிக்குப் பெருந்தடையாக இருந்ததோடல்லாமல் அறிவியலாளர்களின் உயிருக்கே ஊறு விளைவித்தன என்பதனைக் கடந்தகால வரலாறுகள் தெளிவாய் நமக்கு அறியத்தருகின்றன. அறிவியலில் மத நம்பிக்கைகளைக் கலவாமலிருப்பதே அறிவியல்துறையின் வளர்ச்சிக்கும், மாந்தகுலத்தின் அறிவு வளர்ச்சிக்கும் துணைசெய்யும் என்பதே காலம் நமக்குணர்த்தும் பாடம்.

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. https://en.wikipedia.org/wiki/Geocentric_model#:~:text=In%20the%204th%20century,Eudoxus%27%20system.&text=and%20planets%20were%20carried,Eudoxus%27%20system.&text=celestial%20sphere.%20In%20his,Eudoxus%27%20system.&text=worked%20with%20Plato%2C%20developed,Eudoxus%27%20system.
    2. https://futurism.com/from-geocentrism-to-heliocentrism
    3. https://en.wikipedia.org/wiki/Aristarchus_of_Samos#:~:text=Like%20Anaxagoras%20before%20him%2C,heliocentric%20theory.%5B7%5D%5B8%5D&text=the%20Sun%2C%20albeit%20farther,heliocentric%20theory.%5B7%5D%5B8%5D&text=of%20the%20geocentric%20theories,heliocentric%20theory.%5B7%5D%5B8%5D&text=%27moving%20Earth%27%20theory%2C%20although,heliocentric%20theory.%5B7%5D%5B8%5D
    4. https://en.wikipedia.org/wiki/Copernican_heliocentrism#:~:text=Copernican%20heliocentrism%20is%20the,of%20the&text=model%20developed%20by%20Nicolaus,of%20the&text=published%20in%201543.%20This,of%20the&text=positioned%20the%20Sun%20at,of%20the
    5. https://earthobservatory.nasa.gov/features/OrbitsHistory#:~:text=Galileo%20discovered%20evidence%20to,Beginning%20on&text=support%20Copernicus%27%20heliocentric%20theory,Beginning%20on&text=when%20he%20observed%20four,Beginning%20on&text=moons%20in%20orbit%20around,Beginning%20on
    6. https://newsroom.ucla.edu/releases/the-truth-about-galileo-and-his-conflict-with-the-catholic-church#:~:text=Sixteen%20years%20after%20his,Roman%20Inquisition.&text=published%20his%20%E2%80%9CDialogue%20on,Roman%20Inquisition.&text=and%20the%20pope%2C%20Urban,Roman%20Inquisition.&text=This%20time%20he%20was,Roman%20Inquisition.
    7. https://en.wikipedia.org/wiki/Isaac_Newton#:~:text=In%20the%20Principia%2C%20Newton,by%20experiment.%5B18%5D&text=gravity%20to%20derive%20Kepler%27s,by%20experiment.%5B18%5D&text=introduced%20the%20three%2Dbody%20problem.%5B17%5D,by%20experiment.%5B18%5D&text=confirmed%20by%20the%20geodetic,by%20experiment.%5B18%5D

     

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்!! பகிர்ந்தேன்!!! – 36

    படித்தேன்! சுவைத்தேன்!! பகிர்ந்தேன்!!! – 36

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    பின்னூட்டத்தை இலக்கியமாக்கிய பெருமாட்டி!

    முன்னுரை

    முகநூல் பதிவுகளில் அதாவது கவிதைப் பகுதிகளுள் மூழ்கிக் கிடப்பது இந்த எண்பது வயது முதியவனின் பணி. பணி செய்து கிடந்தவர் திருநாவுக்கரசர். கிடப்பதையே பணியாகக் கொண்டவன் நான். முகநூல் கவிதைப் பகுதிகள் சிறப்பதற்கான காரணிகளுள் அவற்றுக்கு அளிக்கப்படும்; பின்னூட்டங்களே தலையாயது என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை. படைப்பாளனுக்கு அது உத்வேகத்தைக் கொடுக்கிறது, இன்னும் படைக்க வேண்டும் என்னும் பேராவலைத் தூண்டுகிறது, எதிர்மறையாக நோக்கினால் தனது பிழைகளை அறிந்து திருத்திக் கொள்ளும் அரிய வாய்ப்பு. படைப்பாளனுக்குக் கிட்டுகிறது. நடைமுறை அப்படியில்லை. பின்னூட்டங்களைக் கடந்து போய்விடுகிற பெருங்கவிஞர்களும்  ‘அருமை’ ‘வாழ்த்துக்கள்’ ‘செம’ என்னும் பொருளற்ற சொற்களால் போடப்படும் பொருளற்ற பின்னூட்டங்களின் எண்ணிக்கையிலேயே பிறவிப்பயனை அடைந்துவிடும் படைப்பாளர்களும் நிரம்பி வழிகிறது. இன்றைய முகநூலுக்குஇது ஒரு ‘களைவளர்’ காலமே  படைப்பினைச் சுவைத்து மகிழ்ந்து இடப்படும் பின்னூட்டங்கள் ஒரு சில நேரங்களில் அரிய இலக்கியமாகவே மாறிவிட முடியும் என்பதை நான் அறிந்து கொள்ளும் சூழல் வந்தது. அந்தச் சூழல் எது என்பதையும் அதற்குக் காரணமானவர் யார் என்பதையும் பின்னூட்டத்தை இலக்கியமாக்கிய அந்தப் பெருமாட்டியின் பெருமை பற்றியும் இந்தச் சிறிய கட்டுரை சுருக்கமாக ஆராய்கிறது.

    அந்தச் சூழல்

    ‘வல்லமை’யால் அறிமுகம் செய்யப்பட்டுப் பெருமை பெற்ற கவிஞர்கள் சிலருள் மாதவரம் கவிக்கோ துரை வசந்தராசனும் ஒருவர். ‘காட்டு மூலிகைபோல் கண்டெடுக்க முடியாமல் ஓட்டைக் குடிசையில் ஒளிந்து கிடந்த’ அவரை ‘வல்லமை அறிமுகம் செய்தது. தொடர்ந்து அவரைப் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டு ஊக்கப்படுத்தியும் வருகிறது, போலிப் புகழ்ச்சியில் மயங்கிக்; கிடந்த அவருக்குப் பொருள் சேர்புகழ்த் தடத்தினைக் காட்டிய பெருமை வல்லமைக்கு உண்டு. ஆற்றல் மிகு படைப்பாளர். கவிதையைக் கவிதையாகவே கட்டமைக்கத் தெரிந்தவர். கவிதை மாதிரி எழுதத் தெரியாதவர். வல்லமையால் அறிமுகம் செய்யப்பட்ட அவர் இந்த ஐந்தாண்டுக் காலத்தில் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளிவரச் செய்திருக்கிறார். அந்த நூல்களில் ஒன்றுதான் ‘தற்பாவை’ என்பதாகும். தன்னையே பாட்டுடைத் தலைவனாக்கிப் படைத்திருக்கும் அந்தப் பாவை இலக்கியம் தமிழ்க்கவிதையிலக்கிய வரலாற்றில் புதுத்தடம் காட்டியது,  அதே நேரத்தில் தனக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்னும் ஆதங்கமும் அந்த முப்பது பாடல்களிலும் இழைந்தது, அந்த இலக்கியம் முகநூலில் வெளிவந்தபோது அதற்கு அளிக்கப்பட்ட பின்னூட்டங்களில் ஒன்றுதான் திருமதி கிருட்டிணதிலகா அவர்கள் எழுதிய அம்மானை இலக்கியமாகும்.

    கிருட்டிண திலகாவும் வசந்தராசன் அம்மானையும்

    கிருட்டிணதிலகா முறையாகத் தமிழ் படித்தவர். (இனி இந்தக் கட்டுரையில் அவர் ‘திலகம்’’ என்றே அறியப்படுவார்) அறிவார்ந்த பட்டங்களை உண்மையான பல்கலைக் கழகங்களில் பெற்றவர். யாப்பிலக்கணப் பயிற்சியும் கவிதையுள்ளமும் இயல்பாகவே அமையப் பெற்றவர். வாழ்க்கைக் கவலைகளில் இவர் விட்ட பெருமூச்சுக்களால் கவிழ்ந்துபோன கப்பல்கள் எண்ணிக்கையில் அடங்கா. ‘துன்பம் உறவரினும் செய்க, துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை’ எனத் தேர்ந்தெடுத்துக் கொண்ட வினைகள் இரண்டு. ஒன்று இறைப்பணி. இரண்டு கவிதைப் பணி. கவிதைப் பணி என்றாலும் அதனை ஓர் உள்ளுணர்வு தூண்டவே எழுதிவருகிறார் என்பதற்கு அவருடைய கவிதைகளே சான்று. இவர் கலந்து கொள்ளாத கவியரங்குகள் களையிழந்து நிற்கும். பேசாத பட்டிமன்றங்கள் அஞ்சலிக் கூட்டங்களாய் அமைதியாகும். எவ்வளவோ சொல்லலாம். அத்தகைய சிறப்புக்களைத் தனியுடைமையாகக் கொண்ட திலகம், வசந்தராசன் எழுதிய தற்பாவைக்கு எழுதிய பின்னூட்டத்திற்குப் பெயர் ‘வசந்தராசன் அம்மானை’ என்பதாகும். இது வசந்தராசன் படைப்புக் கிட்டிய பாராட்டு!

    பின்னூட்டப் பதிவுகளில் திலகம் பெறுமிடம்

    பொதுவாகப் பின்னூட்டம் என்பது நட்பு கருதி இடப்படும் கடமை வெளிப்பாடு. விரல் விட்டு எண்ணக் கூடிய அன்பர்களே படைப்பினை உள்வாங்கிச் சுவைத்து நல்ல வரிகளில் ஒன்றிரண்டைச் சுட்டித் தங்கள் சுவைத்திறனை வெளிப்படுத்துவார்கள். வழக்கமான இந்த நடைமுறையை வசந்தராசனின் தற்பாவை முரியடித்திருக்கிறது. அவருடைய பழைய பதிவுகளை நான் நோக்கியபோது தற்பாவை இலக்கியத்திற்குத் தனியாகச் சிலர் இலக்கியம் படைத்திருக்கிறார்கள் பின்னூட்டம் என்ற பெயரில்! திருமதி திலகம்ம அவர்கள் அம்மானை பாடியும் பாவலர் தென்பசியார் பாவைக்குப் பாவை பாடியும், திரு முருகுபாண்டியன்  வெண்பாக்களாலும் தாரமங்கலம் முத்துசாமி (இவரும் வல்லமையால் அறிமுகம் செய்யப்பட்ட கவிஞர்) கலிவிருத்தத்தாலும்  தங்கள்  பின்னூட்டங்களைக் கவியால் அணி செய்திருந்தனர். அன்பர் திரு செந்தில் குமார் ஒரு அரிய ஆய்வுக்கட்டுரையையே பின்னூட்டமாக இட்டிருந்தார்.

    ஒரு பதிவைப் படிப்பதே பெரிது. அதுவும பொருளுணர்ந்து படிப்பது அதனினும் பெரிது, ஓரசையில் பின்னூட்டம் இடுவதற்குப் பல மணிநேரக் காத்திருப்பு என்ற நடப்பியல் சூழலில்  ஒரு இலக்கியத்தையே பின்னூட்டமாகப் படைக்க வேண்டுமென்றால் அதற்கு முதலில் பரந்த மனப்பான்மை வேண்டும்! சுவைத்திறன் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் விட ‘வயிற்றெரிச்சல்’ என்னும் அழுக்காறு இருக்கவே கூடாது, வசந்தராசனின் தற்பாவை இலக்கியத்திற்குக் கிட்டியிருக்கும் பின்னூட்டப் பதிவுகள் எண்ணிக்கையால் அல்ல இதயத்தால் அளக்கப்படுகின்றன. “என் பதிவுக்கு இன்று இருநூறு விருப்பக் குறியீடுகள் வந்தன” என்று வெந்ததைத் தின்று விதிவந்தால் சாகின்றவர்கள் நிரலில் வசந்தராசன் அடங்கிவிடக்கூடாது என்பதற்கான எச்சரிக்கையாகவும் இதனைக் கொள்ள முடியும்.

    இந்தப் பின்புலத்தில்தான் திலகத்தின் அம்மானைப் பின்னூட்டம் என்னைக் கவரந்தது. கவர்ந்தது என்பதைவிட, ‘ஈர்த்தது’ (FASCINATED) என்பதுதான் பொருத்தமாக இருக்கும்  ‘நான் கவர்ந்து கொண்டேன்’ என்று எழுதலாம். ‘நான் ஈர்த்துக் கொண்டேன்’ என்று எழுத முடியாது. காரணம் அந்தச் சொல் செயப்பாட்டு வினைக்கு மட்டுமே வரும். அதனால் நான் கவரப்பட்டேன் ஈரக்கப்பட்டேன் என்பதுதான் சரி. அதனால்தான் சம்பந்தர் பாடுகிறபோது என் ‘உள்ளங்கவர் கள்வன்’ என்று இறைவனின் வினையாகக் கூறுகிறார். அதாவது கவர்தல் என்ற சொல்லை ‘ஈர்த்தல்’ என்ற பொருளில் கையாள்கிறார். இறைவனை நாம் ஈரக்க முடியாது. அவன் நம்மை ஈர்ப்பான். அவனால் நாம் ஈர்க்கப்பட வேண்டும்.

    மரபார்ந்த ஒரு இலக்கிய வடிவத்தைப் பற்றிய முழுமையான புரிதல் அவரிடம் இருந்திருக்கிறது. அதனை வெளிப்படுத்தும் இலக்கிய உத்தியினை அவர் அறிந்திருக்கிறார். கொச்சகக்கலி பற்றிய யாப்பறி புலமையில் தெளிவு பெற்றிருக்கிறார். அம்மானையின் அடியளவு பற்றித் தெரிந்திருக்கிறது.  ஒரு பின்னூட்டத்தை இலக்கியமாகச் செய்தால் என்ன? என்கிற புதுமை நோக்கும் இருந்திருக்கிறது. அந்தப் புதுமையைத் தம்மையொத்த ஒரு படைப்பாளனுக்குச் செய்தால் என்ன பரந்த மனப்பான்மையும் கொண்டிருக்கிறார். தற்பாவைக்கு ஒரு மாற்று இலக்கியமாகவே வசந்தராசன் அம்மானையைப் பாடியிருக்கிறார்.

    அம்மானைப் பாடல்கள் ஒரு சுருக்க விளக்கம்

    பொதுவாக என்னுடைய கட்டுரைகளில் கட்டுரைப் பொருளைப் பற்றிய கூடுதல் தகவல் மற்றும் விளக்கம் இடம் பெறச்செய்வதை ஒரு திறனாய்வுக் கொள்கையாக வைத்திருக்கிறேன். அதாவது வசந்ததராசன் அம்மானை பற்றியும் திலகம் பற்றியும் எழுதுகிறபோது அம்மானை பற்றிய புரிதலையும் நான் என் கவனத்திற் கொள்கிறேன். கட்டுரையின் மையப் பொருளுக்குத் தொய்வு தரும் செயலாக இருந்தாலும் இதனை ஒரு இலக்கிய வரலாற்று அறிமுகப் பணியாகவே செய்து வருகிறேன். தற்பாவைக்கு நான் எழுதிய கடடுரையிலும் பாவை இலக்கியம் பற்றிக் கொஞ்சம் ஆராய்ந்திருக்கிறேன். பாவைக்குத் திலகம் பாடிவைத்த அம்மானையின் வரலாறு பற்றிக் கொஞ்சம் இங்கே சிந்தித்திருக்கிறேன்.

    அம்மானை வந்த கதை

    அம்மானைப் பற்றிய குறிப்புக்கள் தொல்காப்பியத்தில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் வள்ளைப்பாட்டு பற்றிய குறிப்புக்கள் கலித்தொகையில் காணப்படுகிறது, இதற்கும் அம்மானைப்பாட்டுக்கும் தொடர்பில்லையெனினும் மகளிர் விளையாட்டு என்பதிலும் நாட்டார் வழக்கு என்பதிலும் ஒற்றுமைப்படலாம். அம்மானைப் பாட்டுக்கு ‘அம்மானை வரி’ என்றும் ‘பல்வரிக் கூத்து’ என்றும் பெயர் வழக்கு உண்டு, நாடோடிப் பாடல்களை ‘வரிப்பாடலகள்’ என்பதும் தமிழ் மரபே.

    “பவள உலக்கை கையால் பற்றித்
    தவள முத்தம் குறுவாள் செங்கண்
    தவள முத்தம் குறுவாள் செங்கண்
    குவளை அல்ல கொடிய! கொடிய!”

    “சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்!
    சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்!
    ஊர்திரை நீர்வேலி உழக்கித் திரிவாள்பின்
    சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்!”

    “பூவர் சோலை மயிலாலப் புரிந்து குயில்கள் இசை பாடக்
    காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி
    காமர் மாலை அருகசைய நடந்த வெல்லாம் நின்கணவன்
    நாம வேலின் திறங்கண்டே அறிந்தேன் வாழி காவேரி.”

    என்னும் சிலப்பதிகார வரிகள் ஓரு உண்மையை நமக்குக் காட்டுகின்றன. அதாவது வரிகள் மடங்கிவரும் தொடைப்பாங்கு தமிழ்க்கவிதைகளில் தொன்றுதொட்டு அமைந்து வந்திருக்கிறது என்பதுதான். மேலே சொன்ன வரியையே அனுவதித்துச் சொல்லுகிற போக்கு அம்மானைக்குத் தொடக்கமாக இருந்திருக்கலாம். முந்தைய அடி ஒரு ஐயத்தைக் கிளப்புவதாகவும் அடுத்த அடி அந்த ஐயத்தைப் போக்கும் விளக்கமாகவும் விடையாகவும் அமைகின்ற போக்கு இருந்திருக்கிறது..  அம்மானைப் பாடல்களின் எழுபத்தைந்து விழுக்காடு திருந்திய வடிவம் சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதையில் வந்துள்ளதைக் காணமுடிகிறது. சிலப்பதிகார வாழ்த்துக் காதையில் பெண்கள் அம்மானை ஆடிச் சோழன் புகழைப் பாடுவதாக அம்மானை வரிப் பாடல்கள் நான்கு உள்ளன. மூன்று பெண்கள் சேர்ந்து அம்மானை ஆடும்போது, ஒரு பெண் ஒரு வினாவைத் தொடுப்பதும்  மற்றொருத்தி அதற்கு விடையிறுப்பதும், மூன்றாமவள் சோழன் புகார் நகரைப் பாடும்படி சொல்வதுமாக அந்தப் பாடல்கள் அமைந்திருக்கின்றன.

    “கோவலன் தன்னைக் குறுமகன் கோளிழைப்பக்
    காவலன் தன்னுயிர் நீத்ததுதான் கேட்டேங்கிச்
    சாவதுதான் வாழ்வென்று தானம் பலசெய்து
    மாசாத்து வான்துறவும் கேட்டாயோ அன்னை?
    மாநாய்கன் தன்துறவும் கேட்டாயோ அன்னை?

    காவியத்தின் பின்பகுதிச் சுருக்கத்தைச் சிலப்பதிகாரம் வாழ்த்துப் பகுதியில் அமைந்துள்ள இந்த அம்மானைப் பாடல் காட்டுகிறது.  மேலும் இதில் ‘அன்னை’ என்ற வழக்கே காணப்படுவதன்றி ‘அம்மானை’ என்னும் வழக்கு பயின்று வந்ததாகத் தெரியவில்லை. அம்மானைப் பருவப் பாடல்களைப்  பிள்ளைத்தமிழ் என்னும் பிரபந்த வகையில் பெண்பாற் பிள்ளைத் தமிழ் இலக்கியங்களில் எட்டாம் பருவமாக அமைப்பர். சிலம்பிற்குப் பின்னாலே தமிழ்ப் பிரபந்த வகையுள் ஒன்றாகிய கலம்பகத்தில் அம்மானை என்ற உறுப்பு ஒன்று உண்டு. இந்த வகையில்  புலவர்கள்  சிலர் தனித்தனியே பல அம்மானைப் பாடல்கள் பாடினார்கள்.

    மூவர் அம்மானை

    இரட்டையர், பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் முதலிய புலவர்கள் ஈற்றடியில் சிலேடை நயம் அமைய அம்மானைப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். அத்தகைய பாடல்களையெல்லாம் தொகுத்தமைத்து, ‘மூவர் அம்மானை’ என்ற பெயருடன் ஒரு திரட்டு நூல் வழங்குகிறது. மூன்று பெண்கள் பாடுவதாக இருப்பதனால், அதற்கு மூவர் அம்மானை என்ற பெயர் வந்தது. அதில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் தெய்வங்களைப் பற்றியனவே. சிலப்பதிகாரத்தில் வரும் அம்மானை வரியும், கலம்பகங்களிலும் மூவரம்மானையிலும் வரும் பாடல்களும் கலித்தாழிசை என்னும் பாவினத்தால் அமைந்தவை; தரவு கொச்சகமாகவும் கொள்ளலாம். ‘அம்மானை’ என்று முடியும் மூன்று தொடர்கள் ஒவ்வொரு பாடலிலும் உள்ளன.  .

    வினா விடை கட்டுப்பாடு

    பொதுவாக அம்மானை என்றால் ஒருவர் வினவ மற்றொருவர் வடையிறுப்பதாக அமையும் என்பது நமது பொதுபுத்தியில் பதிந்து போன பொய். மூவர் ஆடாமல் ஒரு பெண்ணே ஆடுவதாகவும் அமைந்த பாடல்கள் உண்டு. திருவாசகத்தில் உள்ள திருவம்மானை என்ற பகுதியிலுள்ள இருபது செய்யுட்களும் இத்தகையனவே. ‘அம்மானாய்’ என்ற முடிவையுடையது  ஒவ்வொரு பாட்டும் ஆறு அடிகளையுடைய தரவு கொச்சகக் கலிப்பாவாகும். இவற்றையன்றி நாடோடிப் பாடல்களில் கதையைத் தழுவி வரும் நெடும்பாடல்கள் பல அம்மானை என்ற பெயரோடு வழங்கி வருகின்றன. புகழேந்திப் புலவர் சோழனால் சிறைப்பட்டிருந்தபோது அல்லியரசாணி மாலை பாடியதாக வழக்கமான ஒரு கதை தமிழ்நாட்டில் வழங்கி வருகிறது. அல்லியரசாணி மாலை, பவளக்கொடி மாலை என்பன போன்ற எல்லாக் கதைப் பாட்டுக்களும் அம்மானைப் பாட்டைச் சார்ந்தனவே. அவற்றிற் சில பாட்டுக்களுக்கு ‘அம்மானை’ என்ற பெயரே அமைந்துள்ளது. கள்ளழகர் அம்மானை, வைகுந்த அம்மானை என்பன போல!

    அம்மானை ஒரு மகளிர் விளையாட்டு

    நந்திக் கலம்பகத்தில் ஒரு பாட்டு ஊசல், அம்மானை முதலிய விளையாட்டுக்களை பிழையாக ஆடினாலும் என் மகள் நந்திவர்மன் மார்பை அணிசெய்யும் மாலை பாட மறவாளே என்று செவிலி புலம்புவதுபோல் அமைந்த பாட்டு அது.

    “ஊசல் மறந்தாலும், ஒண்கழல் அம்மானை
    வீசல் மறந்தாலும், மெல்லியல் என்பேதை
    பூசல் இலங்கிலை வேல் பொற்கழல் நந்திநின்
    பாசிலை அந்தொண்டை அல்லது பாடாளே’.

    மரபு மாமணிகளே! இதுதான் மரபுக்கவிதை! இந்த நீண்ட நெடிய விளக்கம் எதற்காகத் தேவைப்படுகிறது என்றால் திலகம் எத்தகைய சிறந்ததொரு மரபுக்கவிதை வடிவத்தை இலக்கியமாக்கியிருக்கிறார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.  இது அவ்வளவு எளிதான பணியன்று. வல்லாரக்கே கைந்த கலை!

    மரபுக்கவிஞர்களில் திலகத்தின் இடம்!

    முகநூலில் பதிவாகும் கவிதைகளை அவை எந்த வடிவத்தில் எந்த பொருண்மை பற்றிதாக இருந்தாலும் என் பார்வைக்கு வராமல் போவதில்லை. அவற்றுள் என்னைக் கரைக்கின்ற பாடல்களோடு நான் கரைந்து போகிறேன் அப்படிக் கரைக்கின்ற பாடல்களை எழுதுகின்ற அன்பர்களில் தம்பி விக்டர்தாஸ், தம்பி வசந்தராசன் ஆகியோர் என் இதயத்தின் இடவலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறாரகள். தம்பி மீனாட்சிசுந்தரம், தம்பி முருகானந்தம் தம்பி முத்துசாமி ஆகியோர் இனமான மொழியுணர்வை என் குருதிக்குள் வற்றாமல் கண்காணித்துக் கொண்டிருக்கிறாரகள்.  ஆய்வை முடித்தவர்களுக்கு மட்டுமன்று ஆய்வுத் தரவுகளுக்காக உழைப்பவர்களும் முனைவர்ப் பட்டத்திற்குத் தகுதியானவர்களே என்பது அறிஞர் தமிழண்ணலின் கருத்து, முன்னவர் இருவரும் ஆய்வுப் பட்டம் பெற்றவர்கள். பிந்தய மூவரும் தரவுகளைச் சேகரிக்கும் கடும் உழைப்பில் கரைந்து கொண்டிருப்ப்வர்கள்.

    இவர்கள் அனைவருமே முனைப்பு அறியாதவர்கள். தங்களுக்கு முன்னாலே கவிதை நடை பயின்ற கவிவேழங்களை எப்போதும் கருத்தில் வைத்துக் கவிதை நெய்வதால் .ஆணவம் இவர்களைக் கண்டு அஞ்சி ஓடிவிடுகிறது. தங்கை திலகத்தின் தனித்தன்மையை நான் அறியேன். தம்பி வசந்தராசன் சொலலித்தான் அவர்களைப் பற்றித் தெரியும். ஆனால் வசந்தராசன் எழுதிய தற்பாவைக்குத் திலகம் எழுதிய பின்னூட்டத்தால் அவரைப் பற்றி உசாவியது நான்தான். அந்தக் கவிதைப் பின்னூட்டத்தைப் பாரத்தபின் என் மனத்துள் வந்த எண்ணம் இதுதான்! திலகம் தம் கவிதைப் பயணத்தில் பல சாதனைகளைச் செய்திருக்க வேண்டுமே! என்ன ஏமாற்றம்? அவரும் பட்டங்களுக்காகவும் பட்டங்களுக்காகவும் விருதுகளுக்காகவும் ஏங்கிய ஒரு சராசரி கவிஞராகவே வாழ்ந்து முடிந்திருக்கிறார் என்பது காலத்தின் சோகம் இந்த வகையில் தம்பி விக்டர்தாஸ் கொஞ்சம் மாறுபட்டவராக என் கண்களுக்குத் தெரிகிறார். அவருடைய கவிதைகள் அவற்றின் ரசிகர்களை இந்த முகநூலில் தாழ்வாரத்தில் தேடிக் களைத்துப போய்விட்டன. அரிய கருத்து. எளிய சொற்கள். அழகியல் சார்ந்த கற்பனைகள், .எளிதில் யாராலும் கையாளமுடியாத சொல்லாட்சிகள் வழக்கு சார்ந்த வடிவங்கள் இவைகள் எல்லாம் விக்டர்தாஸிற்கு கைவந்த கலை. போகிற போக்கில் கவிநெய்யும் சிலருள் ஒருவர்., சிறந்தவர். அந்த நிலையை என் தங்கை திலகா எட்டுவதற்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். இந்தப் பத்தியில் கண்ட கருத்துக்கள் எல்லாம் என்னுடையவை. இது என் பார்வை. பிறருக்காக என்பார்வையை நான் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது.

    தற்பார்வை பின்னூட்டமும் திலகாவும்

    இந்தப் பின்புலத்தில்தான் தற்பாவை இலக்கியத்திற்குத் திலகம் எழுதிய ஒன்றிரண்டு பாடல் வரிகளை எடுத்துக்காட்டிப் பாராட்டுவது என் கடமைகளில் ஒன்றாகிறது. நல்ல மரபுக்கவிஞர்களாக வரவேண்டும் என்று எண்ணுகிறவர்கள் சிவபுராணம். திருவம்மானை, திருச்சாழல், திருவெம்பாவை, திருப்பாவை பெருமாள் திருமொழி, பாவேந்தர் கவிதைகள் பொன்னிவளவன் கவிதைகள், சுரதாவின் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகள் முருகுசுந்தரத்தின கவிதைகள் வசந்தராசன் கவிதைகள், விகடர்தாஸின் கவிதைகள் முதலியவற்றில் சில நூறு வரிகளையாவது மனப்பாடமாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கவிதை எழுதவே தெரியாத எனக்கு இவர்களிடமிருந்து தலா நு{று வரிகளாகவது தெரியும்.. தொடைவிகற்பங்களுக்குச் சொற்பஞ்சம் ஏற்படாமல் இருப்பதற்கும்  உத்திகள் தாமாக வந்து உதவி செய்வதற்கும் இதுதான் வழி.

    தற்பாவையைப் பாராட்டும் தமிழ்த் திலகம்!

    எட்டடிக் கொச்சகத்தில் பாடியிருக்கிறார் வசந்தராசன். ஒப்புமை பற்றி வந்த ஐந்தடிக் கொச்சகத்தால் அவரைப் பாடியிருக்கிறார் திலகம்.. அவரைப் பாடியிருக்கிறார் என்றால் அவர் கவிதைகளைப் பாடியிருக்கிறார் பண்புக்காக வசந்தராசனைப் பாடியிருக்கிறார்.

    “மாதவரம் பால்பண்ணை மாதவத்தால பெற்ற வரம்!
    ஆதவனாய் நற்றமிழை ஆக்குவர்யார் அமமானை?
    சாதனையால் வாழ்வைச் சரித்திரமாய் மாற்ற
    பேதமறி யாக்கவிதான் பேர்சொல்வேன் அம்மானை!
    தீதறியாத் தேன்கவி நம் வசந்தன் அம்மானை!!”

    முதன்மைப் பதிவு  ஒரு தனி இலக்கியம் என்றால் பின்னூட்டமும் ஒரு தனி இலக்கியமாக அமைந்திருக்கிறது. இது பின்னூட்டக்காரரின் ரசிகத்தன்மையும் பரந்த மனப்பான்மையும் கவிதைச்சுவையுணர்வு ஆற்றலையும ஒருங்கே காட்டும் கண்ணாடியாம். ‘மாற்ற’ என்னும் எதிர்கால வினையெச்சம் வசந்தராசனும் இன்னும் சரித்திரமாய் மாறவில்லை என்பதையே காட்டுகிறது. விரைவில் வரலாறாய் மாறும் வசந்தராசனின் கவிதைப் பயணம்!

    நான் முதன்முதலில் வசந்தராசனின் கவிதைகளில் ஆழந்தபோது அவரது நடை அதாவது வழக்கமான எண்சீர் விருத்தங்களின் நடை எனக்குப் பொன்னிவளவனை நினைவூட்டியது, எண்சீர் விருத்தங்களில் நிரல்படும் வாய்பாடுகளை விட அறுத்துக் கட்டும் வாய்பாடுகள் சுவையுடையவை. அந்த வகையில் பாவேந்தருக்கு அடுத்தபடியாக நிற்பவர் பொன்னிவளவன்.  அவர் நீதிமன்றத்தின் வழங்கிய விருத்த வாக்குமூலம் இதனை உறுதி செய்யும். “மார்கழியின் நுண்துளியாய் மாசடையா நெஞசுரத்தால் பார்மிசையில் இவரைப் போல் பாரத்ததுண்டா அம்மானை? என்னும் வினாவிற்கு விடையாக

    “வேர்விடும் சொல்யாவும் வெம்பகையை வேரறுக்கும்
    பார்காணும் இன்னுமோர் பாவேந்தர் அமமானை!”

    என்று எழுதுகிறார் திலகம். கவிஞர்களும் மனிதர்களே! எனவே அவர்கள் கவிஞராய்; இருப்பதற்கு முன்னால் மனிதராக இருக்க வேண்டும்.  மனிதனுக்கு இருக்கக் கூடாத அல்லது அவனைத் தாழ்த்தக்கூடிய எதிர்மறைப் பண்புகள் தேங்கி நாறும் குப்பைத் தொட்டியாக அவன் மனம் மாறிவிடக் கூடாது, மானுடச் சாதியை ஆட்டிவைப்போன் மாசடைந்தால் எப்படி? “பேதமறியாக் கவி’ மார்கழியின் நுண்துளியாய் மாசடையா நெஞ்சம் என்றெல்லாம் நூலாசிரியரின் பண்பு நலன்களை முன்னிறுத்துவதைக் காணமுடிகிறது.

    பாவலனைப் பாடுவதும் படைப்பைப் பாடுவதும் ஒன்றா?

    பாவை இலக்கியத்தின பாடுபொருள் பலவாகும். ஆனால் அம்மானை இலக்கியத்தின் பாடுபொருள் ஒருவனே. மனிதனைப் பாடுவது கவிதையாகுமா எனின் ஆகாது என்பதுதான் விடை. ஆனால் அந்த மனிதனைப் பாடுகிறபோதே அவனைப் பாடுதற்கான காரணத்தைப் பாடுகிறபோது பாடுபொருளின் பரிமாணம் இன்னும் விரிவடைவதைக் காணலாம். வசந்தராசனைப் பாடி என்ன ஆகப்போகிறது திலகத்திற்கு? அவர் கவிதையைப் பாடுவதால் அவரைப் பாடுகிறார். அவரைப் பாடுவதால் அவர் கவிதையைப் பாடுகிறார்.

    வசந்தராசன் அம்மானையில் தொடை விகற்பங்கள்

    மரபுக்கவிஞர்கள் எனத் தம்மைத் தாமே அழைத்துக் கொள்வார் பலர் யாப்பில் செலுத்திய கவனத்தைத் தொடை விகற்பங்களில் செலுத்தியிருக்கிறார்களா என்றால் எதிர்மறை விடையைத்தான் நான் காண்கிறேன். மரபுக்கவிதை என்கிறார்கள். ஆனால்  நாற்பத்து மூன்று தொடைவிகற்பங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டாமா? அவை தம் கவிதையுள் அமைந்துள்ள பாங்கினை வெளிப்படுத்த வேண்டாமா? அவையெல்லாம் மரபின் கூறுகள் அல்லவா? திறனாய்வு செய்கின்ற அல்லது படைப்பாளர்களைப் பாராட்டுகின்ற அன்பர்கள் அத்தகைய தொடைவிகற்பக் கூறுகளையும அவைதரும் இன்பத்தையும் எடுத்துரைக்க வேண்டாமா? தமிழ்க் கவிதைக் கடடுமானத்தில் அவற்றின் பங்குதான் என்ன? என்பது தெரியாமலேயே போய்விடலாமா? திலகம் பாடியிருக்கும் இந்தப் பின்னூட்ட அம்மானையில் தொடையழகு சொல்லி மாளாது,

    “மார்கழியின் நுண்துளியாய் மாசடையா நெஞ்சுரத்தால்
    பாரமிசையே ஈங்கிவர் போல் பாரத்ததுண்டோ அம்மானை?
    வேர்விடும் சொல்யாவும் வெம்பகையை வேரறுக்கும்!
    பார்காணும் இன்னுமோர் பாவேந்தர் அம்மானை!
    காரிடி தோன்றும் கவிக்கோயில் அம்மானை!”

    என்னும் பாடல் முழுவதும் பொழிப்பு மோனையால் பொலிவு பெறுவதைச் சொல்லுவேனா?

    “கண்ட கனியமுது கற்கண்டு கள்ளுறறு”

    “நாதமாய் நற்றமிழை நாளும நாடுவாரே”

    “வாசகர் வட்டம் வளைய வருவதால்”

    என்றெல்லாம் எழுதிக்காட்டும் முற்றுமோனையை விட்டுவிடலாமா?

    ‘ஒன்றுக்குள் ஒன்றிருக்கும் ஒன்றுக்குள் பலவிருக்கும்’
    நன்றென்றே நற்பொருளை நல்குவர்யார் அம்மானை?
    என்றென்றும் ஏற்றிடுவார் எந்தமிழை சொற்றிறத்தால்
    சூழ்காற்றைச் சூடேற்றும் சூரியன்தான் அம்மானை!
    வாழ்வாங்கு வாழ வசந்தராசன் அம்மானை!

    பாடல் முழுவதும் கூழை மோனை பயின்று வந்துள்ளதை நான் வியப்புடன் நோக்க வேண்டாமா? ”சிற்றில் நற்றூண் பற்றி” என கூழை எதுகையைச் சங்க இலக்கியத்தில் படித்தவன் நான்.

    இதயம் கவர்ந்த தரவுகள்

    தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறு உறுப்புக்களையும் பெற்றுவருவது கலிப்பா. பலவகையாக் பிரிந்திசைக்கும் கலிப்பாவில் கொச்சகக்கலி என்பதும் ஒன்று. அது ஐந்து வகைப்படும். அவற்றுள் ஒன்று தரவு கொச்சகக்கலிப்பா. அந்தப் பாவகையில்தான் பாவை மற்றும் அம்மானை இலக்கியங்கள் அமைக்கப்படுகின்றன.  தரவுகள் மூன்றடிச் சிறுமையாகவும் பதிமூன்றடிப் பெருமையாகவும் அமைக்கப்படுவதால் அவற்றுள் எதுகை, எதுகையாக இலலாமல் வேறு வகையாக அமையும். விகற்பம் என்பது மாறுபாடு. அதற்கு இரண்டு அடிகள் வேண்டும். ஒரு மூன்றடித் தரவில் இரண்டு விகற்பம் என்பது சுவை குன்றும். அது ஒரே விகற்பமாக அமைதல் வேண்டும். இதனைத்தான் ஒப்புமை என்ற சொல்லால் சான்றோர் வழங்கினார். திருவம்மானைப் பதிகத்தில் பார்த்தால் ஒப்புமை பற்றி வந்த ஆறடித் தரவு கொச்சகக்கலிப்பா என்றுதான் இருக்கும். எனவே தரவு கொச்சகக் கலிப்பாக்களில் ஒரே எதுகைதான் நிற்கும் (உண்மையில் இது எதுகை அன்று – ஒப்புமை)

    “திண்ணைத் திருடர்கள் தீய்க்கின்ற பாட்டாளன்!
    எணணம் போல் பாடும் எரிமலை யார் அம்மானை?
    விண்ணப்பம் செய்து விருதுபெறாத் தீரனிவர்!
    விண்ணெ எதிர்த்தாலும் வீழாரே அம்மானை!
    பண்ணைத் தமிழ்ச்சங்க பாக்கடலே அம்மமானை!

    இது மடடுமன்று இந்த அம்மானையில் உளள பெரும்பாலான ஒப்புமை பற்றி வந்த ஐந்தடித் தரவுகளே! இந்தத் தரவுகள் தமிழ்த்தாகம் தணிக்கும் தரவுகள். மரபு இன்னும் மாய்ந்துவிடவில்லை என்னும் நம்பிக்கை நட்சத்திரங்கள்

    சிந்தை குடிகொண்ட செந்தமிழ்த் தொடர்கள்

    “நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்” என்பது சிலப்பதிகாரம் தமிழுக்குத் தந்த சீதனத் தொடர். ஒரு மாபெரும் காவியத்தின் மூலமே அந்தத் தொடரில் ஒளிந்து கொண்டிருக்கிறது, ‘இப்படைத் தோற்கின் எப்படை ஜெயிக்கும்?” என்று சுநதரம் பிள்ளை தமிழுக்குத் தந்த தொடர் தமிழின் வீரகாவியங்களையெலலாம் தொகுத்துச் சொன்ன சதுரப்பாடு. அதுபோலத் திலகம் தந்திருக்கும் சில தொடர்கள் காலங்கடந்து நிற்கும். நிற்க வேண்டும்.

    1. மின்னல் வரியெடுக்கும் மேகம்”
    2. பொன்புதையல் வேணடாத புத்தர்”
    3. ஏசப் பிறந்தார் எவருமிலர்”
    4. விற்பனைக்கு வாராத வீராப்பு”
    5. பண்ணைத் தமிழ்ச் சங்கம் பாவலரின் தாய்வீடு”
    6. சந்தனத் தென்றலைச் சந்தத்தில் தந்திடுவார்
    7. தீயேந்தும் பாட்டெல்லாம் தெள்ளமுது”
    8. “புத்துணர்வுத் தாள்பாடிப் பூக்களையும் தான்பேசி”
    9. “நாவேந்தி நாத்திகமும் நற்றிமிழில் பாடிடுவார்”
    10. கண்ட கனியமுது! கற்பனையின் கள்ளூற்று!
    11. ஒன்றுக்குள் ஒன்றிருக்கும் ஒன்றில் பலவிருக்கும்”
    12. சூழ்காற்றைச் சூடேற்றும் சூரியன்”
    13. “ஊற்றாகும் கந்தகத்தின் உள்ளம்”
    14. “செங்கவியாய்ச் சீர் தூக்கச் செந்தமிழும் சேர்ந்துழைக்க”
    15. “பாமகளின கைப்பொருளாய்ப் பாவடிப்பார்”

    ஒரு இலக்கியம் வெற்றி பெறுவதற்கு இத்தகைய தொடர்கள் போதாவா? சொல்லிப் பாருங்கள்!  சொர்க்கம் அருகில் வரும்!

    அலைவரிசைக் கவிஞர்கள்

    உள்ளங்கவர்ந்த ஒரு கவிதையின் கட்டுமானமும் உள்ளடக்கமும் உணர்ச்சியும் கற்பனையும் உத்தியும் சொற்பயன்பாடும் தொடர்ந்து மரபுவழியாகப் பின்பற்றப்பட்டு வருமானால் அதுதான் மரபுக்கவிதை.  மரபின் தொடர்ச்சி என்பது யாப்பின் தொடர்ச்சி என்பதல்ல. அது அரைகுறையான கருதுகோள். ஆய்ச்சியர் குரவையில் ஒரு பாட்டு இப்படி அமைந்திருக்கிறது,

    பெரியவனை மாயவனைப் பேருலகமெல்லாம்,
    விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
    திருவடியும் கையும் திருவாயும் செய்ய
    கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே?
    கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே?

    பெண்களெல்லாம் இணைந்து குழுப்பாட்டு பாடுகிறார்கள். இந்தக் குழுப்பாட்டு இடைமடக்காய் அமைந்துள்ளது. பெரியவன், மாயவன், விண்ணவன், கரியவன் என்றெல்லாம் பெருமாளாகிய திருமாலைப் பாடுகிறார்கள். இந்தப் பாட்டின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கிக் கொண்டோ இயல்பாகவோ மணிவாசகப் பெருமான் பாடுகிறார்

    ஓயாதே உள்குவார்  உள்ளிருக்கும் உள்ளானை
    சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்
    மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை
    நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்
    தாயான தத்துவனைத் தானே உலகேழும்
    ஆயானை ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய்!

    உள்ளிருக்கும் உள்ளான், சேயான், சேவகன், தென்னன், பெருந்துறையில் மேயான், வேதியன், மாதிருக்கும் பாதியன், நாயகன், தத்துவன் ஆயான் ஆள்வான் என்றெல்லாம் ஆயிரம் திருநாமம் சொல்லித் தேள்ளேணம் கொட்டுகிறார் மணிவாசகர்.

    “கூர்மதியன் நெஞ்சத்துக் குற்றாலப் பேரருவி
    சீர்மனத்தன் நட்புக்குச் சீலப் பெருந்தொகையன்!
    நேர்மறையன்! கொள்கை நிலைமனத்தன்! தோப்பாகி
    ஊருண்ண ஓங்கி வளர்ந்திருக்கும் ஒப்புரவு!
    வார்த்தெடுதத உண்மை! வளர்த்தெடுத்த பேராண்மை!
    நாராகிப் பூககளையே நாளும் இணைக்கின்ற
    பேராளன்!”

    என்று  வசந்தராசன் தன்னுடைய திருநாமங்களைத் தாமே பட்டியிலிடுகிறார்.  வாழையடி வாழையென வந்த திருக்கூட்டக் கவிமரபைச் சார்ந்த திலகம் வசந்தராசன் திருநாமங்களை அடுக்கிக் காட்டுகிறார்.

    “ஈர உளமுடையார் ஈரக்கும் கவிவேந்தர்
    சூரக் கவிபடைக்கும் சுந்தரன்! (யார் அம்மானை)?
    வீர நடையுடையார் வெற்றித் தமிழ்மறவர்!
    மாரன் உருக்கொண்ட மாத்தமிழர் அம்மானை!
    வேராய் விழுதிறக்கும் வேங்கையன்றோஅம்மானை!

    “ஈர உளமுடையார், கவிவேந்தர், சுந்தரன், வீர நடையுடையார், வெற்றித் தமிழ் மறவர், மாத்தமிழர், வேராய் விழுதிறக்கும் வேங்கை” என்றெல்லாம் பாட்டுடைத் தலைவனைப் பரவிப் பாராட்டும் இந்தக கவிதைத் தொடரியில் மரபு மணக்கிறதா இல்லையா? நானும் எவ்வளவோ சொல்லிவிட்டேன். எத்தனையோ முறை எழுதிவிட்டேன். இன்னும் இரண்டு விளம் நாலு காய் மூன்று கனி என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்களே தவிர கவிதை எழுதிய பாடில்லை. எப்படித் தமிழ்க்கவிதை சிறக்கும்? வளரும்?

    மணிவாசகர் பாடுவார் என்று இளங்கோவடிகளுக்குத் தெரியாது, வசந்தராசன் பாடுவார் என்று மணிவாசகர் அறியமாட்டார். திலகம் பாடுவார் என்று வசந்தராசன் சிந்தித்திருக்கவே மாட்டார். இளங்கோ திருமாலைப் பாடுகிறார். சிவபெருமானைப் பாடுகிறார் மணிவாசகர். தன்னைப் பாடிக் கொள்கிறார் வசந்தராசன். அவரைப் பாடுகிறார் திலகம். இந்த அலைவரிசையின் ஒரு வரி நோக்கமே பாராட்டி மகிழ்தல், பரவிப் புகழ்தல் என்றானதால் கவிதைகளில் அமைந்துள்ள சொற்கள் எளிமை, இனிமை கலந்து இனிக்கின்றன. மீண்டும் வலியுறுத்துகிறேன் இதுதான், இப்படி அமைவதுதான் மரபுக்கவிதை. ஒரு மரபுக்கவிதையின் யாப்பின் பங்களிப்பு வெறும் ஐந்து விழுக்காடுதான். யாப்பு ஒழிபியலைப் பங்காளியாகக் கொண்டதால் மரபுக்கவிதையின் பெருமையில் அதன் பங்கு அவ்வளவு உயர்ந்ததன்று.

    நிறைவுரை

    ‘திலகம்’ என என்னால் அழைக்கப்படும் திருமதி கிருட்டிணதிலகாவை யாரென்றே எனக்குத் தெரியாது, யாரைப்பற்றியும் எதனைப் பற்றியும் எதுவும் தெரியாது என்பது தனிக்கதை. முகநூலைப் பொருத்தவரையில் ஒருவருடைய கவிதைக்கான என்னுடைய பின்னூட்டத்திற்குப் பிறகுதான் படைப்பாளர் எனக்கு அறிமுகமாகிறார். வசந்தராசன் உட்பட. வசந்தராசன் எழுதிய தற்பாவைக்குப் பின்னூட்டமாக ஒரு முப்பது கொச்சகக் கலிப்பாக்களில் அம்மானை எழுதிய தற்பாவைக்கு அணி சேர்த்திருக்கிறார். ‘பாவை’ ராசன் எழுதியது. ‘அம்மானை’ திலகம் எழுதியது, உண்மையில் இது தமையனின் தற்பாவைக்குத் தங்கை வைத்த திலகம்! மிகச் சிறந்த திறனாய்வை என்னால் இந்த அம்மானைக்கு எழுத முடியும். காரணம் அம்மானை சிறந்தது. என் உடல் நிலை இடந்தரவில்லை. என் தம்பி எழுதிய பாவைக்கு அம்மானை பாடிய அந்த அம்மாவிற்கு அண்ணன் செலுத்தும் நன்றி! . அதனால் இந்தச் சுருக்கப் பதிவு! இது பெண்ணளித்த பின்னூட்டமன்று. பெண்பாடிய அம்மானை! ஆணைப் பெண் பாடியது. அன்று புனிதவதி பாடினார்! இன்று திலகவதி பாடியிருக்கிறார்.  இதுவும் ஒரு மரபின் தொடர்ச்சியே!

    “வெல்லுஞ்சொல் ஏதுமின்றி வெல்லத்தில் சொல்லெடுத்துக்
    குள்ளக் கவிஞன் குருவையான்மேல் “அம்மானை”
    கள்ளமனம் இன்றிக் கவிபுனைந்தார் யார் தோழி?
    தில்லை நடராசன் செந்தூர் திருமுருகன்
    பல்லாரைப் பாடிப் பழுத்ததமிழ் வாய்மணக்கக்
    கொல்லி மலைத்தேனில் புள்ளிவைத்துப் பாட்டெழுதி
    உள்ளம் உருக உயிருருக நீர்பெருக
    நல்லகவி நூல்செய்தார் நம்திலகம்! ஆம் தோழி!!”

    என்று வல்லமையுடன் இணைந்து நாமும் அவரை வாழ்த்துகிறோம்!

    (தொடரும்)

    Share
  • அரட்டைக் கச்சேரி (சிறுகதை)

    அரட்டைக் கச்சேரி (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    பெண்களிடம் ஒரு விசேஷம். `பிரச்னை’ என்று எதையாவது சொல்ல ஆரம்பித்த உடனேயே அதற்குத் தீர்வு காணும் வழிகளை எடுத்துக் கூறமாட்டார்கள். தீர்வு காணவா பிரச்னைகளைப் பிறரிடம் கூறுகிறோம்? ஒரு விஷயத்தையே பலரிடமும் பலமுறை பகிர்ந்துகொண்டால் ஏதோ ஆறுதல். அவ்வளவுதான்.

    பெண்களின் இந்த மனோபாவம்கூட ஆண்களுக்குப் புரிவதில்லை. மனைவியோ, பிற பெண்களோ அரைகுறையாக எதையாவது கூற ஆரம்பித்த உடனேயே அதை எப்படிச் சமாளிப்பது என்று லெக்சர் அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

    அந்த இடைநிலைப் பள்ளியில் நாற்பது பேரில் இரண்டே இரண்டு ஆண்கள்தாம். அவர்களைப்பற்றி நமக்கென்ன! விடுங்கள்.

    ஆசிரியர்கள் அறையில் பெண்களின் குமுறல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.  அங்கிருந்த சுவர்களுக்கு வாயிருந்தால், கதறி அழும்.

    பிறரது வாழ்க்கையைப்பற்றித் தெரிந்துகொள்ள எல்லா ஆசிரியைகளும்  ஆர்வம் காட்டினார்கள். நாளைக்கே அவர்களுடைய பிரச்னைகளுக்கு அனுதாபம் காட்ட யாராவது வேண்டாமா? பத்து பேராவது வகுப்பிற்குப் போகாத நேரமெல்லாம் வாய் ஓயாது பேசினார்கள். அனுதினமும்.

    திங்கட்கிழமை

    “நீ ஒண்ணும் எனக்குப்புத்தி சொல்லவேண்டாம். நீதான் என்னை வளர்க்கலியே!” கோகிலாவின் குரல் கீச்சென்று ஒலித்தது. அவளுடைய மகள் அப்படித்தான் இரைந்திருப்பாளோ, என்னவோ!

    சிறுவயது முதல் பாட்டி வீட்டில் அருமை பெருமையாக வளர்ந்திருந்தாலும், பெற்றவள் தன்னைக் கைகழுவி விட்டதாகத்தான் தாரா நினைத்தாள். அந்த வருத்தம்தான் கோபமாக வெளிப்பட்டது.

    இடைநிலைப் பள்ளிக்கு வந்தபின், பெற்றோரிடம் திரும்ப வந்தது ஏதோ தண்டனைபோல்  இருந்தது அவளுக்கு. தான் எது செய்தாலும் பாராட்டிய பாட்டி, தாத்தா எங்கே, எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்கும் அம்மா எங்கே!

    `நீ ஒண்ணும் எனக்குப்புத்தி சொல்லவேண்டாம். நீதான் என்னை வளர்க்கலியே!’ என்று அழுகைக் குரலில் கத்தத்தான் அவளால் முடிந்தது.

    கோகிலா மகளைப் பற்றிய  அதே கதையைச் சக ஆசிரியைகளிடம் எத்தனையோ முறை சொல்லிவிட்டாள். அவர்களும் குறுக்கே பேசாமல் கேட்டுக்கொண்டார்கள்.

    “பாட்டி-தாத்தாகிட்ட வளர்ந்திருந்தா, அருமையாக இருந்திருப்பாங்க,” பொதுவாகக் கூறினாள் பூமா. “என் மகனுக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் இல்லே. வேலைக்காரி போட்டிருந்தேன், பிறந்ததிலிருந்தே அவனை வளர்க்க!”

    “ரொம்ப அடிச்சாளா?” கம்மிய குரலில் யாரோ கேட்டார்கள்.

    அவள் பதில் சொல்வதற்குள் இருவர் குறுக்கிட்டுப் பேசினார்கள்.

    “பிள்ளை பெத்து லீவு முடிஞ்சதும் நாம்ப வேலைக்கு வந்துடணும். வீட்டிலே குழந்தையைப் பாத்துக்க சொந்தக்காரங்க இல்லாட்டி என்ன செய்யறது?”

    “நாப்கின் மாத்தற வேலையை அடிக்கடி வைக்கிறதுன்னு ஒரு சின்னக் குழந்தையைக் கொன்னுட்டாளாமே ஒரு ராட்சசி! பேப்பரில பாத்தீங்கல்லே?”

    “கடவுள் புண்ணியத்திலே எங்க வீட்டிலே அப்படி எதுவும் நடக்கலே,” என்ற பூமாவின் குரலில் நிம்மதியோ, மகிழ்ச்சியோ ஒலிக்கவில்லை. “குழந்தையை அடித்தோ, திட்டியோ செஞ்சா வேலை போயிடும்னு பயம் அவளுக்கு. வீட்டுக்குள்ளே காமெரா போட்டிருந்தோமா! அதனால அவன் பெரியவன் ஆனதும்கூட என்ன தப்பு செஞ்சாலும் கண்டுக்கமாட்டா”.

    சிறிது மௌனம்.

    வேலைக்காரிகளிடம் வளர்ந்த பிள்ளைகளின் போக்கு எப்படி இருக்கும் என்பது அவர்கள் உத்தியோகத்தில் அறிந்ததுதான். இப்போது எல்லா மாணவ மாணவிகளும் அதனால்தானே யாருக்கும் அடங்காமல் இருந்தார்கள்!

    “அன்னிக்கு க்ளினிக்கில பாத்தேன். ஒரு ஆறு வயசுப் பையன் ஹாண்ட்ஃபோனில் என்னவோ விளையாடிக்கிட்டு இருந்தானா! அவங்கம்மா அதைப் பிடுங்கப் பாத்தப்போ அவ கையைக் கடிச்சுட்டான்!”

    `ஒன் பிள்ளையும் அப்படித்தானோ!’ என்ற ஏளனம் அந்தச் சமாசாரத்தில் தொக்கி இருந்தது.

    சண்டை ஆரம்பமாவதற்குள் மணி அடிக்கவே, அவர்கள் கலைந்தார்கள்.

    செவ்வாய்

    “தோளெல்லாம் ஒரே வலி!” முனகலுடன் அரட்டைக் கச்சேரி ஆரம்பித்தது.

    “என்ன ஆச்சு, லாய்?” அனுதாபத்தைவிட உண்மையை அறிந்துகொள்ளும் ஆர்வமே அக்கேள்வியில் தொக்கி இருந்தது.

    முதல் நாள் இரவு, கணவர் குடித்துவிட்டு, வீட்டு வாயிலிலிருந்த சாக்கடையில் விழுந்துவிட, நாலடி ஆழத்துக்குள் இறங்கி அவரைத் தன் தோளில் தாங்கியபடி மாடிவரை தூக்கிப் போனதை விவரித்தாள், தோளைப் பிடித்துவிட்டுக்கொண்டபடி, மிஸஸ் லாய் என்ற சீன ஆசிரியை.

    `நானாக இருந்தால், அந்தக் குடிகாரரை அப்படியே விட்டுத் தொலைத்திருப்பேன்!’ என்று தமக்குள் எழுந்த எண்ணத்தை யாரும் வெளியிடத் துணியவில்லை.

    “ஆண்கள் வளர்ந்துவிட்ட சிறுகுழந்தைகள்!” கசந்து வந்தது ஒரு குரல். “என் கணவர் எப்போதும் நண்பர்களுடன் கிளப்பில் குடித்துக்கொண்டு இருப்பார். அபூர்வமாக ஒருநாள் வீட்டில் தங்குவார். ஒரே இடத்தில் உட்கார்ந்துகொள்வார், எதையோ எதிர்பார்த்தபடி. அப்போது குழந்தைகள் அவரைக் கண்டுகொள்வதேயில்லை என்று ஆத்திரப்படுவார்”. அவள் அனுபவம் சிரிப்பில் முடிந்தது.

    “பசங்களை வெளியில கூட்டிட்டுப் போய், நாலு விஷயத்தைப் பத்திக் கலந்துபேசி – இப்படியெல்லாம் செஞ்சாத்தானே அவங்களுக்கு நம்பளை மதிச்சுப் பேசத் தோணும்!”

    “பெண் குழந்தைகள் ரொம்ப மோசம்!” என்றபடி மிஸஸ் கூ தன் கதையை ஆரம்பித்தாள். “நேத்து ராத்திரி என் மகளைப்பிரம்பால் அடிச்சேன். ராத்திரி பூராவும் `ஙொய் ஙொய்’னு அழுகை. சரியான நியூசன்ஸ். என் மகன் அப்படி இருந்ததே இல்லே. என்ன அடிச்சாலும் அழமாட்டான். சமர்த்து!”

    பதினைந்து வயதான மகனுக்குப் பிறகு, அல்லோபதி, அக்யூபங்க்சர் என்று பல சிகிச்சைகளுக்குப் பிறகு கடந்த வருடம் பிறந்தது! ஒரே வயதான பச்சைப் பாலகியைப் பிரம்பால் அடிப்பார்களா!

    இந்திய ஆசிரியைகள் அதிர்ச்சியுடன் எதுவும் பேசாதிருக்க, அது புரியாது, “பிரம்பால் அடிக்காத குழந்தை ஒழுங்கா வளராது,” என்று தன் வளர்ப்புமுறையைப் பாராட்டிக்கொண்டாள் மிஸஸ் கூ.

    `நாம் நல்ல தாயாக இருக்கிறோமா?’ என்ற கேள்வி ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் எழ, அன்றைய கும்பல் கலைந்தது.

    புதன்

    “என் பொண்ணுக்கு மூணு வயசாகுது. நேத்து மத்தியானம் படத்துக்குக் கூட்டிப் போறதா இருந்தேன். `மழை வந்துடும். இல்லாட்டி வெயில் காயும். நம்ப காரை டிரைவரோட அனுப்பறேன்,’ அப்படின்னாரு ஹஸ்பண்ட்”. மூச்சு விட்டுக்கொண்டாள் நர்மதா.

    எல்லாரும் சுவாரசியமாகக் கேட்டபடி இருந்தார்கள், அவர்கள் முன்னால் வைத்திருந்த நூடுல்ஸ் ஆறியதைப் பொருட்படுத்தாது.

    “எப்பவும் காரிலேயே போனா, ஏழைபாழைங்க படற கஷ்டத்தை அவளுக்கு எப்படிப் புரிய வைக்கிறது? பஸ்ஸுக்காக வெயில்லே காத்துக்கிட்டு நிக்கறப்போ, `நான் பாவம்!’னு திரும்பத் திரும்பச் சொன்னா. `பாவம் இல்லே!’ன்னு நல்லா திட்டிட்டேன்”.

    “நீ ஒரு நல்ல அம்மா!” மிஸஸ் லாய் சிலாகிக்க, அதை ஆமோதித்து, எல்லாரும் தலையாட்டினார்கள் – வயிற்றெரிச்சலை மறைக்க ஒரு சிறு புன்னகையுடன்.

    வியாழன்

    “நேத்து எனக்கும், ரவிக்கும் ஒரே சண்டை,” ஆரம்பமே சூடு பிடித்தது. கணவன்-மனைவி சண்டை பூசலென்றாலே சுவாரசியம்தான்.

    “எதுக்கு?”

    “பின்னே என்ன? சமையல், வீட்டு வேலை, பசங்களுக்குப் பாடம் சொல்லிக் குடுக்கறது எல்லாம் என் தலையிலதான். புதன்கிழமை அவரோட முறை — குப்பையை வெளியே கொட்ட. அந்த ஒரு வேலைகூடச் செய்யாம டி.வி பாத்துக்கிட்டு இருந்தா? வந்த கோபத்திலே நல்லா கத்திட்டேன்”.

    “திரும்பக் கத்தினாரா?”

    “அதான் இல்லே. `இஸ்மயில் சொன்னான், இந்தப் பெண்களால எப்பவும் தொல்லைதான்’ அப்படின்னார், என்னை மட்டம் தட்டறதா நினைச்சுக்கிட்டு. `ரெண்டு பொண்டாட்டி கட்டினவனுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்’னு பதிலடி குடுத்தேன்!”

    அப்போது எழுந்த சிரிப்போசையில் சுவர்கள் நிமிர்ந்தன. `நாம்ப இப்படி பேசறமாதிரி, ஆம்பளைங்களும் நம்பளைப்பத்திப் பேசுவாங்களா?’ என்று அப்பெண்கள் மனத்தில் எழுந்த கேள்விக்கு விடையும் கிடைத்தது.

    Share
  • குறளின் கதிர்களாய்…(515)

    குறளின் கதிர்களாய்…(515)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(515)

    கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை
    யுள்ளினு முள்ளஞ் சுடும்.

    – திருக்குறள் – 799 (நட்பாராய்தல்)

    புதுக் கவிதையில்…

    கேடு வரும் காலத்தில்
    கூட இருக்காமல்
    கைவிட்டு
    ஓடுகின்றவரின் நட்பு,
    நமக்குச்
    சாவு வரும்போது
    சற்று நினைத்தாலும்
    சுட்டிடுமே நெஞ்சை…!

    குறும்பாவில்…

    கெடும்போது நம்மைக் கைவிட்டோர்
    நட்பினை நாம் சாகும்போது நினைத்தாலும்
    சுட்டிடும் நமது நெஞ்சை…!

    மரபுக் கவிதையில்…

    கேடு வாழ்வில் வந்தேதான்
    கெட்டுப் போகும் காலத்தில்
    நாடும் துணையாய் இல்லாமல்
    நம்மைத் தனியாய்த் தவிக்கவிட்டே
    ஓடும் ஒருவர் நட்பினையே
    ஒடுங்கி நமதின் னுயிரதுதான்
    கூடு விடுங்கால் நினைத்தாலும்
    கொடிதாய் நெஞ்சில் சுட்டிடுமே…!

    லிமரைக்கூ…

    கெடும்போது நமைக்கை விட்டிடும்
    நட்பினை நாம் சாகும்போது நினைப்பினும்
    நமது நெஞ்சைச் சுட்டிடும்…!

    கிராமிய பாணியில்…

    ஆகாது ஆகாது
    அணுவளவும் ஆகாது,
    ஆபத்தில உட்டுப்போற நட்பு
    ஆகவே ஆகாது..

    கேடு நமக்கு வரும்போது
    கூட இருக்காம
    நம்மத் தனியா தவிக்கவுட்டு
    ஓடிப்போற நட்ப
    நாம சாகிற நேரத்தில
    நெனச்சாலும் சங்கடத்தில
    நம்ம மனசு
    நொந்து போயிடுமே..

    அதால
    ஆகாது ஆகாது
    அணுவளவும் ஆகாது,
    ஆபத்தில உட்டுப்போற நட்பு
    ஆகவே ஆகாது…!

    Share
  • கல்யாணமே வேண்டாம்! (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    பல வருடங்களுக்குப்பின் அன்று சாயங்காலம்தான் அவளைப் பார்த்தேன். நாகரிகமான தோற்றம். ஆனால், முகத்தில் ஏதோ கோபம், இல்லை, வருத்தம். தெரிந்த முகமாக இருந்தது. ஆனால் உடனே பிடிபடவில்லை. ஏன்தான் வயதாகிவிட்டதோ என்ற அர்த்தமற்ற எரிச்சல் பிறந்தது.

    எப்போதும்போல் விளையாட்டு மைதானத்தில் பார்த்ததால், சற்று பொறுத்துத் தெளிவு பிறந்தது.

    நோர்லேலா! என் மகளின் பால்யத் தோழி.

    என்னைப் பார்த்தவுடனே அடையாளம் கண்டுகொண்டாள். “ஆன்ட்டி!” என்று கூவியபடி சிமெண்டு பெஞ்சில் என் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டாள்.

    என் மகள் சுந்தரியைப்பற்றி விசாரித்தாள்.

    “அதோ, ஊஞ்சல்ல ஒக்காந்து, சிவப்பு கவுன் போட்டிருக்கே, அவளோட பொண்ணுதான். இப்போ ரெண்டாவது பிரசவத்துக்கு வந்திருக்கா,” என்று தகவல் தெரிவித்துவிட்டு, “ஒனக்கு எத்தனை குழந்தைங்க?” என்று விசாரித்தேன்.

    “நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லே,” என்றாள், சிரிக்காமல்.

    “என்னது?”

    “எனக்கு கல்யாணம் ஆகல,” என்று அலட்சியமாகச் சொன்னவள், “பண்ணிக்கவே போறதில்ல,” என்றாள் உறுதியாக.

    மேலே ஏதும் கேட்டுவிடப்போகிறேனோ என்று பயந்தவள்போல், , “சும்மா காத்தாட நடந்துவந்தேன். ஒங்களைப் பாத்ததில சந்தோஷம்,” என்றபடி எழுந்து நடந்தாள்.

    நான் மௌனமாக இருந்தேன்.

    “யாரு பாட்டி?” என்று விசாரித்தாள் பேத்தி.

    “ஒன்னைமாதிரி குட்டியா இருந்தப்போ, ஒங்கம்மாவோட ஃப்ரெண்ட்,” என்றேன்.

    அப்போது அச்சிறுமிகள் இருவரும் சேர்ந்து விளையாடினாலும், நட்பு இருக்கவில்லை. அவ்வளவு ஏன், நோர்லேலாவுக்கு எவருடனும் இணைந்து விளையாடக்கூடத் தெரியவில்லை.

    `நான்தான் ஃபர்ஸ்ட்  வந்தேம்மா. நோர்லேலா என்னை இடிச்சுத் தள்ளிட்டு, ` நான்தான் ஃபர்ஸ்ட்!’ அப்படின்னு பொய் சொல்றா!” அழுகைக்குரலில் சுந்தரி கூறியது உண்மைதான் என்று அவர்கள் விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கும் தெரிந்திருந்தது.

    “போனாப்போறா, பாவம்!” என்று சமாதானப்படுத்தினேன்.

    “பொய் சொல்றது தப்புதானேம்மா?” நான் சொல்லிக்கொடுத்த பாடத்தை எனக்கே புகட்டினாள் என் எட்டு வயதுப்பெண்.

    “அவகூட தினமும் வராளே ஆரிஸ், அவ நோர்லேலாவை ரொம்ப அடிக்கறா, பாவம்!” அதற்குமேல் என்னால் சொல்ல முடியவில்லை.

    நோர்லேலாவின் பெற்றோரை அங்கு எவரும் பார்த்தது கிடையாது. அந்த இந்தோனீசிய வேலைக்காரிதான் அவளுக்கு ஒரே துணை.

    ஒருமுறை, நோர்லேலா ஓடிவர, என்மேல் மோதிக்கொண்டாள். நான் புன்னகைத்தேன். பின்னால் வந்துகொண்டிருந்த ஆரிஸ் அவள் கையைப் பிடித்திழுத்து ஒரு வயதே நிரம்பிய அந்தக் குழந்தையின் முதுகில் அடிக்க ஆரம்பித்தாள்.

    “விடு, விடு,” என்று நான் அலறியபோது, “ஒங்களுக்குத் தெரியாது, ஆன்ட்டி. இவ ரொம்ப நாட்டி!” என்றாள். அடியை நிறுத்தவில்லை.

    இந்த வன்முறை அடுத்த பத்து வருடங்கள் தொடர்ந்தது. `நமக்கெதற்கு வம்பு!’ என்று என்னைப்போலவே பல தாய்மார்களும், பாட்டிகளும் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.

    அதற்கும் முடிவு வந்தது.

    `வீட்டுக்குப் போகலாம், வா!’ என்று ஆரிஸ் அழைத்ததைச் சட்டைசெய்யாது நோர்லேலா விளையாடிக்கொண்டே இருக்க, `என்னையா அலட்சியம் செய்கிறாய்!’ என்று ஆத்திரத்துடன், அவள் முடியைக் கொத்தாகப் பிடித்து இழுத்தாள் ஆரிஸ். சிறுமியின் அலறல் மைதானம் முழுவதும் கேட்டது.

    ஐந்து வயதே ஆகியிருந்த சீ சூனை அவனைப் பார்த்துக்கொள்ளவென்று நியமிக்கப்பட்டிருந்தவள் `உப்புமூட்டை’ தூக்கிக்கொண்டு வருவாள், அருமையாக. இப்போது அவன் நோர்லேலாவின் நிர்கதியைப் பார்த்து, பெரிதாக அழ ஆரம்பித்தான்.

    ஒரு குழந்தைக்கு இருந்த மனிதாபிமானம்கூட நமக்கில்லையே என்று வெட்கமாகப்போயிற்று எனக்கு. இந்தக் கொடுமைக்கு எப்படி முடிவு கட்டுவது?

    சற்று இருட்டியதும், நோர்லேலாவின் வீட்டுக்குப் போய், அழைப்பு மணியை அழுத்தினேன்.

    “எஸ்?” கதவைத் திறந்தவளிடம், “நான் தினமும் பார்க்கில் உங்கள் மகளைப் பார்க்கிறேன். அந்தக் குழந்தையை வேலைக்காரி சித்திரவதை செய்கிறாள். உங்களிடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்றுதான்,” நான் முடிப்பதற்குள் உள்ளேயிருந்து வந்தவர் நோர்லேலாவின் தந்தையாக இருக்கவேண்டும். வயதானவராக தோற்றமளித்தார்.

    “என்ன விஷயம்?” என்று விசாரித்தவுடனே, “உள்ளே வாங்களேன்!” என்று உபசரித்தார்.

    “சும்மா பார்த்துட்டுப் போகலாம்னுதான் வந்தேன்,” என்றபடி நடையைக் கட்டினேன்.

    இவர்களிருவரையும் நான் பார்த்ததே இல்லையே என்று என் யோசனை போயிற்று. அதுதான் ஆயிரக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறோமே, இனி வேலைக்கு வந்தவள் பாடு என்று விட்டுவிட்டார்கள்!

    அடுத்த சில நாட்கள் நோர்லைலா விளையாட வரவில்லை. அவள் வந்தபோது, அப்பா உடன் வந்தார். என்னைப் பார்த்ததும், முகம் சிறுத்துப்போயிற்று.

    வாயை வைத்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. “ஆரிஸ் வரலியா?”

    அவர் கையை வீசினார். “போயிட்டா!” குரலில் வெறுப்புடன் நிம்மதியும் கலந்து வந்தது.

    பெற்ற குழந்தையைச் சரியாகப் பராமரிக்கத் தெரியவில்லையே என்று பிறர் கேலி செய்யும் அளவுக்கு நடந்துகொண்டுவிட்டோமே என்ற அவமானம். விரைவில் என்னைக் கடந்துபோனார்.

    அதன்பின்னர் இருவரையுமே காணவில்லை. அப்பெண்ணை ஹாஸ்டலில் விட்டுவிட்டார்கள் என்று யாரோ சொன்னார்கள்.

    நோர்லேலா கூச்சல் போட்டபடி விளையாடும் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கண்களில் ஏக்கம் என்று என் கற்பனை போயிற்று. அவள் என்று அப்படி மகிழ்ச்சியுடன் இருந்திருக்கிறாள்?

    நான் பேச்சை ஆரம்பித்தேன். “கல்யாணம்தான் வேண்டாங்கிறே. ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாமே!”

    “ஐயோ! வேண்டவே வேண்டாம். நான் வேலைக்குப்போறப்போ, எவகிட்டேயாவது விட்டுட்டுப் போகணும். அவ அடிச்சுக் கொல்வா!” சிறுவயதில் பட்ட துன்பங்கள் அவளை எவ்வளவு தூரம் காயப்படுத்தியிருக்கிறது!

    பிறகு, மெல்லிய குரலில் சொன்னாள்: “ஆன்ட்டி! அன்னிக்கு நீங்க மட்டும் எங்க வீடு தேடி வந்து, அந்த அம்மாகிட்ட நான் அனுபவிச்ச கொடுமையைப்பத்தி சொல்லியிருக்காட்டி, என்னைக் கொன்னே போட்டிருப்பா அந்தப் பழிகாரி!”

    அதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குப் புரியவில்லை. ஏன் பல வருடங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தீர்கள் எல்லாரும் என்கிறாளோ? உங்கள் குழந்தையை யாராவது படுத்தினால், பொங்கி எழமாட்டீர்களா என்கிறாளோ?

    “குழந்தைங்க பாரம்னு நினைக்கிறவங்க தத்து எடுத்துக்கக் கூடாது”. அவள் குரலில் ஏக்க இறக்கம் இல்லை. இயந்திரம் பேசுவதுபோல் இருந்தது.

    இவள் யாரைச் சொல்கிறாள்?

    அவளே விளக்கமும் அளித்தாள். “நான் யாரோ அனாதையாம். எங்கேயிருந்து பொறுக்கினாங்களோ! சாப்பாடு போட்டு, படிக்கவும் வெச்சா அவங்க கடமை முடிஞ்சுட்டதுன்னு நெனைச்சாங்க எங்க வீட்டிலே!” அவள் குரலில் அளப்பற்ற வெறுப்பு. “நான் அன்பா வளரலே. சின்ன வயசில எனக்குக் கிடைக்காததை இன்னொரு குழந்தைக்கு என்னால எப்படி ஆன்ட்டி குடுக்க முடியும்?”

    கண்கள் சொருகியிருந்தன. “எப்பவாவது, வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தா நம்பகூட பேச ஒருத்தன் இல்லியேன்னு இருக்கும். ஆனா, அவனும் அடிக்க ஆரம்பிச்சா? எனக்கு வழிகாட்ட யாரும் இல்லியே! அதான் கல்யாணமும் வேண்டாம், குழந்தையும் வேண்டாம்னு இப்படியே இருக்கேன்!”

    சம்பந்தம் இல்லாமல், “வீட்டுக்கு வாயேன், லேலா. சுந்தரி ஒன்னைப் பாத்தா சந்தோஷப்படுவா!” என்று ஏதோ சொன்னேன். மனம் கனத்திருந்தது.

    Share
  • குறளின் கதிர்களாய்…(514)

    குறளின் கதிர்களாய்…(514)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(514)

    உறினுயி ரஞ்சா மறவ ரிறைவன்
    செறினுஞ்சீர் குன்ற லிலர்.

    – திருக்குறள் – 778 (படைச்செருக்கு)

    புதுக் கவிதையில்…

    அமர் வரின்
    ஆருயிர் பொருட்டு
    அஞ்சாமல்
    போரிடத் துணிந்திடும்
    படைவீரர்,
    அப்போர் வேண்டாமென
    அரசன் சினந்து தடுத்தாலும்,
    தம் வீரத்தில் என்றும்
    தரம் குறையமாட்டார்…!

    குறும்பாவில்…

    போர்வரின் தம்முயிர்க்கு அஞ்சாது
    செல்லும் படைவீரர், அரசன் சினந்தாலும்
    சிறப்பில் குறைய மாட்டார்…!

    மரபுக் கவிதையில்…

    போரில் வெல்லத் துணிந்தேதான்
    பொன்னாம் உயிருக் கஞ்சாமல்
    நேரில் செல்ல விரும்பிநிற்கும்
    நெஞ்சி லுறுதி கொண்டுள்ள
    பாரி லுயர்ந்த படைவீரர்,
    பாரை யாளும் மன்னவனும்
    நேரில் சினந்தே தடுத்தாலும்
    நேர்மைச் சிறப்பில் குறையாரே…!

    லிமரைக்கூ…

    போர்வரின் உயிர்க்கஞ்சி மறையார்
    போகத்துணியும் படைவீரர், அரசன் சினந்தாலும்
    படைச்சிறப்பில் அணுவும் குறையார்…!

    கிராமிய பாணியில்…

    படவீரன் படவீரன்
    பழுதில்லாதவன் பயமில்லாதவன்,
    அவந்தான் படவீரன்..

    நாட்டுல போரு வந்தா
    உயிருக்குப் பயந்து
    ஒளிச்சிக்காம
    உறுதியா
    போருக்குப் போகத்
    துணியிற படவீரன்,
    ராசா கோவிச்சிக்கிட்டாலும்
    அவனோட
    படச்செறப்புல ஒருநாளும்
    கொறஞ்சி போயிடமாட்டான்..

    தெரிஞ்சிக்கோ,
    படவீரன் படவீரன்
    பழுதில்லாதவன் பயமில்லாதவன்,
    அவந்தான் படவீரன்…!

    Share
  • ஜனநாயகன்

    ஜனநாயகன்

    பாஸ்கர் சேஷாத்ரி

    நடிகர் விஜய் தனது கட்சியை ஆரம்பித்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகப் போகிறது. இந்த நிலையில் அவர் இதுவரை சுமார் இரண்டு அல்லது மூன்று இடங்களில் மட்டுமே கூட்டம் என்ற ரீதியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

    மற்றபடி அவர் பெரிய பொதுக்கூட்டத்தை மக்கள் மத்தியில் நடத்தி, ஒரு வெகுஜன ரீதியான தலைவராக, கட்சியின் முகமாகத் தன்னைக் காண்பித்துக்கொள்ள எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை.

    அவர் தான் இன்னும் படப்பிடிப்புக்காக ஒரு கேரவனில் அமர்ந்துகொண்டு அல்லது பனையூரில் தனது இல்லத்தில் அமர்ந்துகொண்டு கட்சியை நடத்தினால் அவர் பிரபலத்திற்கு ஏற்றவாறு அவரது தேர்தல் வெற்றி அமையாது.

    அவர் முதலில் தனது பங்களாவை விட்டு வெளியே வர வேண்டும். அதற்கு முதல் வளையமான தனது பவுன்சர்களை அகற்ற வேண்டும். அதற்கு அடுத்தபடியாக தனக்கு வாரி வழங்கப்பட்டிருக்கும் மத்திய அரசுப் பிரிவின் பாதுகாப்பை விலக்கிக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் செய்தால் இன்றி அவருக்கும் மக்களுக்கும் எந்த வகையில் நெருக்கமும் ஏற்படாது.

    எந்தக் கட்சியின் தலைவராக இருந்தாலும் சரி, அவர்களின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெரும் உழைப்பு இருந்து இருக்கிறது . குறைந்தபட்சம் அவர் மாதாமாதம் பல கூட்டங்களில் பல இடங்களில் கலந்துகொள்ள வேண்டும் . இது மக்களிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கை அழகாகக் கவரும் புத்தி. எம்ஜிஆரும் கலைஞரும் ஜெயலலிதாவும் இதைத்தான் செய்தார்கள்.

    இன்றைய சூழலில் அவர் இப்போது போலவே தேர்தல் நேரங்களிலும் நடந்துகொண்டால் கிட்டத்தட்ட அவர் சீமான் அளவு தான் வளர முடியும் அல்லது தமிழக பாஜக போல் பெரிய வளர்ச்சி கிட்டாமல் ஒரு தேக்க நிலைக்குச் செல்லும் அபாயம் தான் மிஞ்சும்.

    விஜய்க்கு விஜயகாந்த் போல ஒரு நல்ல பிரபல பிம்பம் இருக்கிறது. அதைத் திறம்படக் கையாண்டால் குறைந்தபட்சம் அடுத்த ஆட்சியில் அவரது பங்களிப்பு இல்லாமல் எந்தக் கட்சியும் அரசு அமைக்க முடியாது என்ற நிலை உருவாக வாய்ப்பு இருக்கிறது.

    அளவுக்கு அதிகமான பணம் மட்டும் பெரிய வெற்றிகளைத் தேடித் தராது . இன்று இந்தியாவில் பாஜக போல் செல்வம் கொண்ட கட்சி வேறு ஏதும் இல்லை ஆனாலும் சில மாநிலங்களில் அதன் வளர்ச்சி சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதுபோல பலர் பல உபாயங்களை வளர வைத்திருப்பார்கள் இதையெல்லாம் அவரிடம் கொண்டு செல்ல, தோதான வழியில்லை.

    ஒரு தலைவர் எல்லாவற்றையும் முழுமையாக உட்கொள்ள முடியாது. ஆனாலும் தினசரி நிகழ்வுகளை, கட்சியின் போக்கை அறிந்துகொள்ள ஒரு சில உண்மையான காரியதரிசிகளை அவர் வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களும் கள நிலவரத்தை அவரிடம் தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது.

    இந்தத் தேர்தலை அவர் கோட்டை விட்டால் இன்னும் ஐந்து வருடத்திற்கு அவரால் அரசியலில் தாக்குப் பிடிக்க முடியுமா எனத் தெரியவில்லை ஆனாலும் இது இல்லாவிட்டால் திரைப்படம் இருக்கிறது என்ற ரீதியில் அவர் கட்சி நடத்தினால் நமக்கு மீண்டும் தளபதி விஜய் தான் கிடைப்பார். இதைத் தாண்டி இன்று அவர் கூட்டணி வியூகம் வைக்கப் போகும் உத்தியை எல்லா கட்சித் தலைவர்களும் உற்று நோக்குகிறார்கள்.

    நாளை திருமா அங்கு சேரலாம் காங்கிரஸ் கட்சி மேலும் அவமானப்பட்டால் விஜய் அதை வரவேற்கக் காத்திருப்பார்.

    சில உதிரி கட்சிகளும் சுலபமாக அவர் வலையில் விழக்கூடும். அலுவலகத்திற்கு நல்ல நிர்வாகி போல் அவருக்கு குறைந்தபட்சம் ஐந்து பிரபல நிர்வாகிகள் அமைந்து அவர்களிடம் அவர் கருத்து கேட்க வேண்டும்.

    பின்பு அதன்படி நடக்க வேண்டும். ஆதவ் அர்ஜுனாவிடம் பணம் இருக்கிறது. பிரசாந்த் கிஷோர் பலமான யோசனைகளைத் தரலாம்.

    இவை எல்லாம் ஒரு கட்டத்திற்கு மேல் பெரிதாக உதவாது. அவர் செய்ய வேண்டியது எல்லாம் தன்னை மக்களோடு மக்களாகக் கலந்து கொள்ளும் வழிகளை ஆராய வேண்டும். சுமார் இன்னும் ஒன்னேகால் வருடம் நேரம் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் மிக மிகத் தீவிரமாக அணுக அவருக்கு நேரம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

    இன்று தி மு க, விஜயைக் கண்டு அஞ்சுகிறது என்றால் ஒரு பெரிய பலம் அவருக்கு உண்டு என்பதை அந்தக் கட்சி நன்றாக உணர்ந்து இருக்கிறது . வேதநாயகம் என்றால் பயம் என்பது போய் விஜய் என்றால் பயம் என்று வரவேண்டும். அவரின் இந்த முயற்சிக்கு அவர் தான் ஆக்க்ஷன் என்று சொல்ல வேண்டும் .

    Share
  • தமிழ் நெடுகிலும் ஒலிக்கும் குறளின் குரல்!

    -மேகலா இராமமூர்த்தி

    திருக்குறள் ஒப்புயர்வற்ற அறநூல்; நிலவுலக மாந்தர்கள் அனைவர்க்கும் பொருந்தக்கூடிய வாழ்வியல் கருத்துக்களை, உயர்ந்த விழுமியங்களைத் தன்னகத்தே தாங்கிநிற்கும் அரிய நூல். அதனால்தான்,

     ”வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று போற்றினார் மகாகவி பாரதியார்.

    வள்ளுவர்செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்த தமிழ்ப்புலவோர் பலர் தம் நூல்களில் குறட்கருத்துக்களைப் பொன்னேபோல் போற்றியுள்ளமையைக் காணமுடிகின்றது. தமிழிலக்கிய நெடும்பரப்பில் குறட்கருத்துக்கள் ஓங்கி ஒலிப்பதனைச் சில தமிழ்நூல்களைச் சான்றுகாட்டி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

    புறநானூறு: சங்க நூலான புறநானூற்றின் 34ஆவது பாடல் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது. அப்பாடலில்,

    ”…செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென
    அறம்பா டிற்றே ஆயிழை கணவ…”
    (புறம்: 34) எனும் அடிகள் இடம்பெற்றுள்ளன. ஈண்டு ’அறம்’ என்பது திருக்குறளைக் குறிப்பதாகும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

    இக்கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் திருக்குறளில்,
    ”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்ந்நன்றி கொன்ற மகற்கு.”
    (குறள்: 110) எனும் குறட்பா அமைந்திருக்கின்றது.

    சிலப்பதிகாரம்: இளங்கோவடிகள் இயற்றிய, கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாய்க் கருதப்படும், சிலப்பதிகாரத்தில் திருக்குறள் கருத்துக்கள் பரக்கப் பேசப்பட்டிருக்கின்றன.

    ’வழக்குரை காதையில்’ தன் கணவன் கோவலன் கொலையுண்டதைப் பற்றித் தன்முன்னே ஆவேசமாய் எடுத்துரைக்கும் கண்ணகியைப் பார்த்துப் பாண்டிய மன்னன்,
    “கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று
    வெள்வேற் கொற்றம் காண்”
    (சிலப்: வழக்குரை காதை: 64-65) என்கிறான்.

    இச்செய்தி,
    ”குடிப்புறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
    வடுவன்று வேந்தன் தொழில்.” (குறள்: 549) என்னும் குறட்கருத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கின்றது.

    நாலடியார்: திருக்குறளுக்கு அடுத்தநிலையில் வைத்தெண்ணப்படும் அறநூல் நாலடியார். ’நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ என்பர் சான்றோர். நாலடியாரில் குறட்கருத்துக்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

    திருப்பிக்கொடுக்க இயலாத ஏழைகட்கு ஈவதே கடன்; வாங்கிய கடனைத் திருப்பிக்கொடுக்க இயலுவோர்க்கு ஈதல் அனைவரும் அறியும் வகையில் செய்யும் உதவி (பொலி கடன்) என்கின்றது நாலடியார்.

    ”ஏற்றகைம் மாற்றாமை என்னானும் தாம்வரையாது
    ஆற்றாதார்க்கு ஈவதாம் ஆண்கடன் – ஆற்றின்
    மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க்கு ஈதல்
    பொலிகடன் என்னும் பெயர்த்து.”
     (நாலடி – 98)

    இதே சிந்தனையை நாம்,
    ”வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம்
    குறியெதிர்ப்பை நீர துடைத்து.”
    (குறள்: 221) எனும் குறளிலும் காண்கின்றோம்.

    பெருங்கதை: கோசாம்பி நகர வேந்தனாகிய உதயணனைக் கதைத்தலைவனாகக் கொண்டு கொங்குவேளிர் எனும் சமணர் எழுதியது பெருங்கதையாகும். இதற்குக் ’கொங்குவேள் மாக்கதை’ என்ற பெயருமுண்டு. இந்நூலில் குறள்மணிகள் பலவிடங்களில் மின்னுகின்றன; அவற்றுள் ஒன்று:

    ”நன்றாய் வந்த ஒருபொருள் ஒருவற்கு
    நன்றே யாகி நந்தினும் நந்தும்
    நன்றாய் வந்த ஒருபொருள் ஒருவற்கு
    அன்றாய் மற்றஃது அழுங்கினும் அழுங்கும்
    தீதாய் வந்த ஒருபொருள் ஒருவற்குத்
    தீதே யாகித் தீயினும் தீயும்
    தீதாய் வந்த ஒருபொருள் ஒருவற்கு
    ஆசில் பெரும்பொருள் ஆகினும் ஆமெனச்
    சேயவர் உரைத்ததைச் செவியிற் கேட்கும்”
     (பெருங்: 2.1: 57-66) என்கிறது பெருங்கதை.

    இந்நயவுரைகள்,

    ”நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்
    நல்லவாம் செல்வம் செயற்கு.”
     (குறள்: 375) எனும் குறளுக்கான விளக்கமே அல்லவா?

    கம்பராமாயணம்: வடமொழியில் வால்மீகி இயற்றிய இராமாயணத்தை அடியொற்றித் தமிழில் கம்பர் படைத்த காப்பியமிது. ”பிறனில் விழைவோர் கிளையொடும் கெடுப” என்பது இக்காப்பியத்தின் முதன்மையான பாவிகமாகும். மருந்து உருண்டைகளாய் வள்ளுவர் தந்த கருத்துக்களைத் தம் கதையமுதிலே தோய்த்துத் தித்திக்கத் தித்திக்கத் தந்தவர் கம்பர். கம்பனின் காப்பியத்தில் குறள்மணிகள் மிளிர்கின்ற இடங்கள் பலவாகும். சான்றாய் ஒன்று:

    பரதன் அரசுரிமை பெறாததால் அவனுடைய அறிவும் ஆற்றலும் பாழாயின எனக் கைகேயியிடம் கண்ணீர் வடிக்கின்ற அவள் பணிப்பெண்ணான கூனி,

    ”கல்வியும் இளமையும் கணக்கில் ஆற்றலும்
    வில்வினை உரிமையும் அழகும் வீரமும்
    எல்லையில் குணங்களும் பரதற்கு எய்திய
    புல்லிடை உக்கநல் அமுதம் போலுமால்.”
    (கம்ப: 1557) என்று புலம்புகின்றாள்.

    இதில் இடம்பெற்றுள்ள, ’புல்லிடை உக்கநல் அமுதம்’ என்ற உவமை, ’அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்’ (குறள்: 720) என்ற வள்ளுவத்தின் மறுவடிவந்தானே?

    மகாகவியும் பாவேந்தரும்:

    இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்களான மகாகவி பாரதியும், பாவேந்தர் பாரதிதாசனும் குறட்கருத்துக்களை உச்சிமேல் வைத்துப் போற்றியுள்ளனர் தம் பாக்களில்.

    ”தனியொருவனுக் குணவில்லை யெனில்
    ஜகத்தினை அழித்திடுவோம்”
    என்றார் மகாகவி ஆவேசத்தோடு. இந்த ஆவேசத்தின் ஆணிவேர்,

    ”இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
    கெடுக உலகியற்றி யான்.”
    (குறள்: 1062) எனும் வள்ளுவமன்றோ?

    வள்ளுவர் படைத்த குறட்தலைவி,

    ”செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
    வல்வரவு வாழ்வார்க் குரை.”
    (குறள்: 1151) என்று தலைவனிடம் சொல்வதை,

    ”இருப்பதாய் இருந்தால் என்னிடம் சொல்க – நீ
    போவதாய் இருந்தால் என் கட்டைக்குச் சொல்”
    (பன்மணித்திரள்) என எளிய தமிழில் வெட்டு ஒன்று துண்டு இரண்டாய்ச் சொல்லிவிடுகிறாள் பாவேந்தர் படைத்த கவிதைத் தலைவி.

    வள்ளுவர்காலப் புலவர்கள், அவருக்குப் பின்வந்தவர்கள் என அனைவரிடத்தும் அப்பேரறிஞரின் சிந்தனைகளின் தாக்கமும், அவற்றை மீண்டும் தமிழ்மக்களிடம் வலியுறுத்தவேண்டும் எனும் ஊக்கமும் தென்படுவதனை மேற்கண்ட சான்றுகள் அங்கை நெல்லியென நமக்கு அறியத் தருகின்றன. இத்துணைச் சிறப்பு வாய்ந்த திருக்குறளை நம் தாய்மொழியான தமிழில் பெற்ற நாம் பேறுபெற்றோரே. அமுதென நமக்கு வாய்த்திருக்கும் அருங்குறளைப் போற்றுவோம்; அது செப்பும் உயரிய கருத்துக்களைப் பின்பற்றிப் பண்பில் உயர்ந்த மானுடராய் வாழ்வோம்.

    *****

    கட்டுரைக்கு உதவியவை:
    1. திருக்குறள் தெளிவுரை – டாக்டர் மு. வரதராசனார், சைவசித்தாந்த   நூற்பதிப்புக் கழகம்.
    2. புறநானூறு மூலமும் ஔவை சு. துரைசாமிப் பிள்ளை உரையும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
    3. சிலப்பதிகாரம் மூலமும் நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
    4. நாலடியார் மூலமும் மகாதேவ முதலியார் அரும்பொருள் விளக்கமும்.
    5. பெருங்கதை மூலமும் பெருமழைப் புலவர் திரு. பொ.வே. சோமசுந்தரனார்  விளக்கவுரையும்.
    6. கம்பராமாயணம் – கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    7. பாரதியார் கவிதைகள் – வானவில் பிரசுரம்.
    8. பாரதிதாசன் கவிதைகள் – அருள்சுடர் பதிப்பகம்.

    Share
  • மங்களச் செம்பொருள் சிவனார் விரதம் !

    மங்களச் செம்பொருள் சிவனார் விரதம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஆதியும் அந்தமும் காணா ஒளியாய்
    பேரொளி ஒன்று தோன்றியே நின்றது
    அடிமுடி காணென அசரீரி ஒலித்தது
    அயனும் மாலும் ஓடினார் தேடினார்

    ஆணவ நிலையில் தேடிய அவர்கள்
    அடிமுடி காணா அலமந்தி நின்றனர்
    தேவ தேவனாம் சிவனும் தோன்றி
    தெளிவினைக் கொடுத்து தரிசனம் காட்டினர்

    சிவனின் தரிசனம் தெளிவினைக் கொடுக்க
    அயனும் மாலும் ஆணவம் அகன்றனர்
    ஆணவம் அகன்றிட அமைந்த நன்னாளே
    மாநிலம் போற்றிடும் மகத்துவம் பெற்றது

    மகத்துவம் பெற்ற மகா சிவராத்திரி
    மக்கள் மனத்தினைப் பக்குவம் ஆக்கிடும்
    பசித்திரு என்றும் தனித்திரு என்றும்
    விழித்திரு என்றும் விளம்பிடும்  ராத்திரி

    சிவமே செம்பொருள் சிவமே இன்பம்
    சிவமே அன்பு சிவமே கருணை
    அனைத்தும் ஆகியே இருப்பது சிவமே
    அகத்தில் அமர்த்தினால் அது பேரின்பம்

    பற்பல கதைகள் பரவியே இருக்குது
    நற்கரு உணர்த்தவே அக்கதை வந்தது
    கதைகளை விமர்சனம் செய்வதை விட்டு
    கருவினைத் தேடுவார் கண்களைத் திறப்பார்

    சமயக் கதைகள் தத்துவம் பொதிந்தன
    உள்ளே நுழைந்தால் உண்மை விளங்கும்
    அறிவியல் இருக்கும் ஆன்மீகம் இருக்கும்
    அகத்தில் அமர்த்தினால் வெளிச்சம் கிடைக்கும்

    மாசி மாதம் மகத்தான மாதம்
    மாபெரும் விரதம் அமைந்த நல்மாதம்
    பூதலம் சக்தி பொலிந்திடு மாதம்
    ஆதலால் விரதமாய் ஆக்கிய மாதம்

    ஈதர் என்பது இயக்கிடும் சக்தி
    எங்கும் நிறைந்து இருக்கும் சக்தி
    பூதல மாந்தர் உள்ளே நுழைந்தால்
    ஆதாரம் ஆகிடும் அனைத்தும் சிறக்கும்

    மாசி மாத சிவராத்திரி வேளை
    ஈதர் சக்தியின் ஈர்ப்பு பெருகிடும்
    பெருகிடும் சக்தியை உடலுனுள் செலுத்திட
    அமைந்த நல்லொழுங்கே விரதமாய் மலர்ந்தது

    மெய்ஞ்ஞானத் துடனே விஞ்ஞானம் இணையுது
    அஞ்ஞானம் அகன்றிட மெய்ஞ்ஞானம் விரியுது
    அஞ்ஞானம் அகலவே ஆண்டவன் தெரிவான்
    ஆண்டவன் தெரிந்திட ஆணவம் அழிந்திடும்

    சிவராத்திரி என்பது சிறப்புடை விரதம்
    உயர்வுடை யாவும் அளித்திடும் விரதம்
    மனத்தைச் செம்மை ஆக்கிடும் விரதம்
    மங்களச் செம்பொருள் சிவனார் விரதம்

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 35

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 35

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    இன்னிசையில் பண்ணிசைக்கும் பொன்மணியின் வெண்பாக்கள்

    முன்னுரை

    கோட்பாடுகளை முன்னிறுத்தி அவற்றிற்கு இயைய இலக்கியத்தையோ கவிதைகளையோ நோக்குவது ஒன்று. படைப்பிலக்கியங்களில் மூழ்கிப் படைப்பாளன் அனுபவத்தோடு உள்ளார்ந்து ஒன்றி அவற்றினின்றும் பெறப்படும் கோட்பாடுகளை நிரல்படுத்தி நிறுத்துவது வேறொன்று. ஒரு சாதாரண கவிதைத் திறனாய்வாளன் என்ற வகையில் நான் பின்னதையே என் திறனாய்வுக் கோட்பாடாகக் கொள்கிறேன். எனவே யாப்பினை முன்னிறுத்திக் கவிதைகளை நோக்குவதையோ கோட்பாடுகளை முன்னிறுத்தி இலக்கியங்களை ஆராய்ச்சி செய்வதையோ நான் ஆதரிக்கவில்லை. ஆதரிப்பாரை நான் எதிர்க்கவும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. ஆனால் கவிதையின் வெற்றி பொதுவானது. வெறும் எட்டாம் வகுப்பு மட்டுமே நெறிசார் கல்வி பயின்று முகநூலில் விரல்விட்டு எண்ணத்தகும் கவிஞர் சிலருள் ஒருவராகவும் சொல் எளிமை, பொருள் ஆழம், அழகியல் முதலியவற்றைப் புற அழகாகவும் சமுதாயச் சிந்தனைகளை அடிநாதமாகவும் நவரசங்களையும் கவியில் கொண்டு வந்து கவிதையைச் சிறக்கச் செய்த சிறந்தவருள் ஒருவராகவும் திகழ்பவர் நாகை பொன்மணிதாசன். அவர் படைத்துள்ள ‘இன்னிசையில் என் வெண்பா’ என்னும் நூல் பற்றிய ஒரு சுருக்கத் திறனாய்வாக இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

    தலைப்பு – தெளிவுக்காக ஒரு விளக்கம்

    விட்ட ஆகுபெயர் விடாத ஆகுபெயர் என்றெல்லாம் தமிழிலக்கணக்காரர்கள் சொல்வார்கள். ஆகுபெயரின் பொதுவான இலக்கணத்தோடு அவை எவ்வாறு முரண்படுகின்றன என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் ஆராயமாட்டார்கள்., கவலைப்படமாட்டார்கள்.. அது பற்றிய ஆராய்ச்சி இங்கில்லை. ‘இன்னிசை’ என்பது இன்னிசையைக் குறிக்காமல் இன்னிசை வெண்பாவைக் குறித்தது. இன்னிசை வெண்பா என்பதனாலேயே இது ஒரு ராகம் தழுவிச் செவிக்கு இன்பம் நல்கும் என்று பொருளில்லை. நேரிசை வெண்பாவின் இலக்கணக் கூறுகளில் பலவகைகளில் வழுவி வருவனவெல்லாம் இன்னிசை வெண்பாக்கள். அவ்வளவுதான். இந்த வழுவுதலில் எழுபத்தைந்து விழுக்காடு தனிச்சொல் இன்றி வருவது. அதனாலேயே பாட்டெழுதும் பலரும் அதுதான் இன்னிசை வெண்பாவின் இலக்கணம் என்று கருதிவிடுகிறார்கள். அது மட்டுமன்று குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, பஃறொடை வெண்பா என்னும் மூவகை வெண்பாக்களின் பெயர்க்காரணம் கொஞ்சம் புலப்படுவது போல ஏனைய நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா என்பவற்றிற்கான பெயர்க்காரணம் புலப்படுமாறு அமையவில்லை. இவையிரண்டுக்குமான காரணமே புலப்படாத போது நேரிசைச் சிந்தியல், இன்னிசைச் சிந்தியல்களுக்கான காரணம் எப்படிப் புலப்படும்? ‘சிந்தியல்’ என்னும் சொல் மூன்றென்னும் எண்ணைக் குறிப்பதால் கொழு சென்ற நெறியே குத்தூசியும் செல்லுமாறு போல நான்கடியில் அமையும் நேரிசை வெண்பா மூன்றடியில் வந்தால் நேரிசைச் சிந்தியல் எனவும் தனிச்சொல் இன்றி நான்கடியால் அமையும் இன்னிசை வெண்பா மூன்றடியில் வந்தால் இன்னிசைச் சிந்தியல் வெண்பா எனவும் சொல்வது வழக்கானது. தந்தையின் பெயரே தெரியாத போது தனயனுக்கு நாம் முன்னெழுத்தைப் போட்டுக் கொண்டு வருகிறோம்.

    வெண்பாக்களைப் பற்றி இங்கே பதிவிடப்படும் கருத்துக்களெல்லாம் என் கருத்துக்களோ நானே உருவாக்கிய புத்திலக்கணக் கருத்துக்களோ அல்ல. அளப்பரும் புலமைக்கடல் அமிதசாகரர் எழுதிய யாப்பருங்கலக்காரிகை என்ற நூலையும் அதற்குக் குணசாகரர் என்னும் சான்றோர் எழுதிய உரையையும் அடிப்படையாக வைத்தே பதிவிடப்படுகின்றன. காரணம் பொதுவெளியில் இந்தக் கட்டுரையைக் காணும் அன்பர் பலர், ஒரு பாட்டுக்கான இலக்கண அமைதிக்காக நான்கு நூல்களைச் சான்றாக்குவார்கள். அவர்களோடு இந்த வயதான காலத்தில் நான் மல்லுக்கட்ட முடியாது, எனவே காரிகை அடிப்படையில் இந்தக் கருத்தினைப் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றுள் ஏதும் ஐயமிருப்பினும் எடுத்துரைக்கலாம்.

    அளவடி நான்கும் சிந்தடி ஒன்றுமாக அமைந்து முதலடியின் முதற்சீருக்கு ஏற்ப இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று நாள் என்னும் ‘நேரசை’ வாய்பாட்டானும் ‘மலர்’ என்னும் நிரையசை வாய்பாட்டானும், ‘காசு’, ‘பிறப்பு’ என்னும் குற்றியலுகர வாய்பாட்டானும் நிறைவடைவது நேரிசை வெண்பா எனப்படும். வெண்பாவின் ஈற்றடி பற்றிய மாற்றங்களும் ஆராய்ச்சிகளும் தனி.

    அப்படியானால் இரண்டாவது அடியில் தனிச்சொல் இன்றி வருவதுதான் இன்னிசை வெண்பா என்றால்,

    1. முதலடியின் ஈற்றில் தனிச்சொல் வந்தால் அது என்ன பா?
    2. மூன்றாவது அடியின் ஈற்றில் தனிச்சொல் வந்தால் அது என்ன பா?
    3. அடிதோறும் ஒரூஉத் தொடை பெற்றுவந்தால் அது என்ன பா?
    4. நான்கடிகளுள் எங்காவது கனிச்சீர் வந்துவிடின் அது என்ன பா?
    5. ஒரு விகற்பம் இரு விகற்பம் என்றமையாமல் நான்கடியும் நான்கு வகையாக அமைந்தால் அது என்ன பா?

    நேரிசை வெண்பாவிலிருந்து விலகி நிற்கும் மேற்சுட்டிய ஐந்து வேறுபாடுகளோடு வேறுசில வேறுபாடுகள் இருந்தாலும் அவையெல்லாம் இன்னிசை வெண்பாக்களே. இந்த விரிவாக்கவுரை யாது நோக்கியதோவெனின் யாப்பிலக்கணத்தையோ கோட்பாடுகளையோ அடி நரம்புகளில் தன்மயப்படுத்திக் கொள்ளாமல் கவிதை செய்தால் அந்தக் கவிதையின் செப்பமும் அழகும் கெடும் என்பதை விளக்குவதற்காகத்தான். அது பற்றி இந்தக் கட்டுரையில் அவ்வப்போது  விளக்கப்படும்.

    சந்தத்தைச் சொந்தங் கொண்ட கண்ணதாசனும் பொன்மணிதாசனும்

    யாப்பிலக்கணத்தை ஓரளவு அறிந்தவராயினும் கண்ணதாசன் சந்தத்தை முன்னிறுத்தியே தன் கவிதைத் தொழிலைச் செய்திருக்கிறார். அவருடைய புகழ் பெற்ற காப்பியமான ‘மாங்கனி’ முழுமையான கட்டுமானச் சிறப்பைக் கொண்டதன்று. இதில் என்ன சிறப்பு என்றால் மெட்டுக்குப் பாட்டு என்னும் புதிய தொழில்நுட்பத்திலும் அவர் இந்தக் கோட்பாட்டையே பின்பற்றியிருக்கிறார். “சந்தம் நிறைந்த தமிழ் சங்கீதம் பாடும் தமிழ் சிந்துபல கொண்ட தமிழ் வெல்லும் வெல்லும்! இந்தத் தேச முற்றும் ஆண்ட கதை சொல்லும்” என்பது கண்ணதாசன் எழுதிய ஒரு திரையிசைப்பாடல் அவர் தமிழைச் சந்தம் நிறைந்த தமிழாகவும் சங்கீதம் பாடும் தமிழாகவுமே நோக்கியிருக்கிறார்.

    “செவ்வரி ஓடிய கண்களில் இரண்டினில்
    சேலொடு வேலாட – இரு
    கொவ்வை இதழ்களும் கொத்து மலர்களும்
    கொஞ்சி மகிழ்ந்தாட”

    பாடலை மேம்போக்காகப் படிப்பவர்கள் இது குற்றாலக் குறவஞ்சியின் சாயல் என்றோ நகல் என்றோ சொல்லிக்கொண்டே கடந்து போய்விடுவார்கள். அவர்கள் பயணங்கள் முடிவதில்லை!.  நல்ல கவிஞனைப் பாராட்ட மறக்கலாம். நல்ல கவிதையை அடையாளம் காணத் தவறிவிடக்கூடாது என்பதில் நான் மிகுந்த கவனமாகவும் பொறுப்புடனும் இருக்கிறேன்.

    “என்ன மன வேதனையும் என்ன ளவில் மாறிடுமே
    என்னருகில் மதுவிருந்தால் போதும்!
    உண்ணுகிற இரவி லென்னை ஊக்குகிற மது குடித்தால்
    திண்ண மெனக்கில்லையேது தீதும்!
    முன்னுக்குப் பின் முரணாக மூச்சு வரும் என்றாலும்
    கண்ணுனக்குள் காணுகிறேன் சொர்க்கம்!
    பெண்ணுனக் குள் காணுகிற பெரிதொரு இன்பமிது
    பேசயிலை இதனிடையோர் தர்க்கம்!”

    என்று ஒரு பாடலை எழுதியிருக்கிறார் பொன்மணிதாசன். சந்தத்தை உள்வாங்கி விருத்தம் போல ஒரு நாலடிச் சிந்தினைக் காவடி சிந்து போல் எழுதியிருப்பதைக் காணலாம். ஈரடிக்கு ஓர் இயைபாய் அமைந்த சந்தத்தை நெஞ்சில் நிறுத்தி அவரால் இப்படி எழுதப்படும் கவிதைகள் காலத்தைக் கடந்து நிற்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. எனவே பொன்மணிதாசன் கவிதைகளைச் சுவைத்துத் திறனாய்வு செய்து ஆராய்கிறபோது யாப்பிலக்கணம் பின்னிறுத்தப்பட்டுச் சந்தத்தை முன்னிறுத்தும் உண்மையான கவிதைக் கொள்கையே எடுத்தோதப்படுகிறது. இதனால் கவிதைக்கு யாப்பு இன்றியமையாத ஒன்றன்று என்பது பொருளன்று. யாப்புக்குள் கவிதையைத் தேடுவது பிண அறையில் மணமகனைத் தேடுவது போல! கவிதைக்குள் யாப்பமைதியைத் தேடுவது சொந்தத்திற்குள் மாப்பிள்ளை தேடுவது போல!

    இன்னிசையில் என் வெண்பாவின் பாடுபொருள்

    இந்நூற் கவிதைகளை நன்கு உள்வாங்கி உளத்திருத்தி அணிந்துரை அளித்திருக்கும் அன்பர் தமிழ்ச்செம்மல் திரு.இராம.வேல்முருகன் அவர்கள் இதன் உள்ளடக்கத்தைப் பட்டியலிட்டுக் காட்டியிருப்பது படிப்பவர்க்குப் பேருதவியாக இருக்கிறது, எனக்கும் சேர்த்து.  “நட்பு, காதல், பசி தீர்த்தல், நுண்ணறிவு, நோய்தீர்த்தல், பிணி, சான்றோர் துணை, களவு, வறுமை, இறை நம்பிக்கை, தமிழ்ப்பற்று, உலகப்பற்று, தாய்மை, ஆண்மை, கொடைத்தன்மை, நூல் மற்றும் நூலைப்படித்தல்” என ஒரு கதம்ப மலர்க்கூட்டாக உள்ளது. நகைச்சுவை, இறைப்பற்று, நாட்டுப் பற்று, மொழிப்பற்று நீதி நெறிகளைப் போற்றுதல், பெற்றோரைப் போற்றுதல்’ என அறுசுவை உணவை நமக்கு அள்ளித் தருகிறது” என்னும் குறிப்பு பயனுள்ளதாகும். அதே நேரத்தில் பொன்மணியின் வெண்பா ஆற்றலைப் புகழ்வதற்காக “வெண்பா எழுதுவாருடைய வாய்ச்சொல் பலிக்கும்” என்றெல்லாம் இட்டுக்கட்டி உரைப்பது கெட்டிக்காரன் புளுகாகவே முடிந்து போய்விடுகிறது. அப்படி ஒரு காலம் இருந்திருக்கலாம் என்பது கூட ஒரு அனுமானமே தவிர வரலாற்று உண்மை கிடையாது. உண்மையாகவே இருந்தாலும் மீண்டும் வர வாய்ப்பில்லை., வழியில்லை. மக்கள் தொகை குறைப்புக்கு இப்படியொரு வழி இருப்பதாகப் பன்னாட்டு மன்றம் அறிவிக்கவில்லை. நூலின் உள்ளடக்கத்தில் காணும் சில பொருள் பற்றிய சிறப்புக்களை இனித் தொடரலாம்.

    பாடுபொருள் வறட்சியும் காலநிலை மாற்றமும்

    இன்றைய கவிதைகளில் காணப்படும் பாடுபொருள் வறட்சி பொன்மணிக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவருடைய கவிதைத் தொகுப்புக்களானாலும் நாளும் வெளிவரும் முகநூல் கவிதைகளானாலும் தன்னைப் பாதிப்பனவற்றைக் கவிதையாக்கும் இயல்பான ஆற்றல் இவருக்கு உண்டு. காலநிலை மாற்றம் என்பதும் அதனால் பெருகும் வெள்ளமும் காயும் வறட்சியும் மக்களைப் பாதிக்கிறது. ஆனால் கவிஞர்களை அவ்வளவாகப் பாதித்ததாகத் தெரியவில்லை. தலைவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து, தங்கள் மணநாள் வாழ்த்து முதலியனவற்றை எழுதிக்கொண்டும் தேடிப் பெறும் கவியரங்கங்களில் எதனையாவது எழுதி அதனைக் கவிதையென்று சொல்லும்படி வற்புறுத்தியும் பொழுது போகவில்லை என்றால் காதல் கவிதை என்ற பெயரில் குறுங்கவிதை எழுதுவதுமாக இன்றைய படைப்பாளர்களின் பொழுது கழிகிறது. அன்பர் பொன்மணிதாசனை இயல்பிலேயே கவித்துவம் துளிர்க்கப் பெற்றவராதலால் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் புவியியல் வறட்சியைப் பாடுபொருளாக்கியிருக்கிறார்.

    “கோடை யிடியில்லை! கொட்டும் மழையில்லை!
    ஓடையில் நீரில்லை! ஓடநீர் ஆறில்லை!!
    தேடிக் கிடையாத் தெளிநீரைத் தேடியினும்
    வாடி அலைய வலி!”

    என்று ஒரு காலத்தில் நடந்த நதியைப் படுத்த நதியாகப் பார்த்திருக்கிறார் பொன்மணிதாசன். இரண்டாவது அடியின் மூன்றாவது சீரான ஓட நீர் என்பதை இரண்டாகப் பிரித்து “நீர் ஓட ஆறில்லை” எனப் படிக்க. கவிதையில் நதி நடப்பதைக் காணலாம். இந்தப் பாடலின் ஈற்றடியைக் கவனித்தால் ‘வாடி அலைய வலி’ என்று யாப்பிலக்கணம் காப்பாற்றப்பட்டு இருப்பதைக் காணலாம். அதாவது இன்னிசை வெண்பாவில் வெண்டளை மட்டுமே வரவேண்டும் என்னும் தவறான புரிதலால் இந்த நிலை. இந்த அடியை வாடி அலைவதே வலி! என்று மாற்றிப் படித்தால் கவிதையும் இனிக்கும்!

    அந்தக் கால இலக்கண ஆசிரியர்கள் நூலுள் வரக்கூடாத குற்றங்கள் பத்து என வகுத்து அவற்றுள் கூறியது கூறலையும் ஒன்றாக்கினர். இன்றைக்கு அறிவியலின் வளர்ச்சி எல்லாரும் அறிந்ததே. தட்டச்சுப் பிழை என்பதே இல்லை. இருக்கக் கூடாது. இப்போது அழிதிறன் கூடிய போனைப் பயன்படுத்துகிறோம். கணினியைப் பயன்படுத்துகிறோம். இருந்தாலும் கூறியது கூறிவிடுகிறோம். ஆம். இந்த நூலின் எழுபத்தைந்தாம் (76) பாடலாக உள்ள இதே பாட்டு இதே நூலின் நூற்று அறுபத்தேழாவது (167) பாடலாகவும் அச்சேறியுள்ளது. எனின் இந்தத் தவறு கணிப்பொறியின் தவறா? நம்முடைய தவறா? சிந்திக்க வேண்டாமா?  செய்தித் தொகுப்புக்கள் தொலைக்காட்சிக்கு உரியன. கவிஞர்களுக்கு அல்ல. அண்ணாவைப் பற்றிக் கவிதை எழுதச் சொன்னால் நம் கவிஞர்கள் உடனே தொடங்கிவிடுவார்கள். “காஞ்சியிலே நமதண்ணா பிறந்தார் அன்று”. அண்ணா காஞ்சியிலே பிறந்தாரா? இல்லையா? என்பது காஞ்சி வட்டாட்சியர் செய்ய வேண்டிய ஆராய்ச்சி. தமிழ்நாட்டுக் கவிஞர்கள் அண்ணாவுக்கு இருப்பிடச் சான்று வழங்கத் தேவையில்லை. இந்தச் செய்தியைக் கவிஞன் எழுதுகிறபோது “நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று” என்று எழுதுவான். அதுபோல ஓடாத நதியைப் பாடிய கவிஞன் அது ஓடுவதற்கான வழியை இன்னொரு பாடலிலே பாடுகிறான்.

    “நல்லனசெய்! மறவாதே! நாம்வாழும் ஊருக்குள்
    உள்ள குளம் வார, ஓடும் வடிகால்கள்!
    செல்ல வழிகாட்டு! சீர்படுத்து ஏரியினை!
    வெள்ளமெனில் வேண்டாம் பயம்”

    தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தின் ஒட்டுமொத்த நலனைக் கண்காணிப்பதும் கவலைப்படுவதும் உண்மைக் கவிஞனின் பணி. அந்தப் பணியை வெகு திறம்படச் செய்திருக்கிறார் பொன்மணிதாசன். நூலின் ஆறாவது பாடலாகச் செய்ய வேண்டியனவற்றையும் செழிப்பையும் பாடிய தாசன், எழுபத்தாறாம் பாடலில்தான் வறட்சியைப் பாடியிருக்கிறார். இது ஒரு தொகுப்பு நூல்தான் என்றாலும் இந்தச் சிந்தனையைத் தவிர்க்க இயலவில்லை.

    மரபுத் தடம் பயிலும் பொன்மணிதாசன்

    அறிவைப் பற்றிப் பத்துக்கும் மேற்பட்ட குறட்பாக்களில் ஆராய்ந்தவர் திருவள்ளுவர். அதுபற்றிய பொருட்பால் ஆராய்ச்சி போதாதென்று கருதிய அவர், ‘அறிதொறும் அறியாமை கண்டற்றால்’ என உவம அளவையால் காமத்துப்பாலிலும் ஆராய்ந்திருப்பதைக் காணமுடிகிறது. அறிவு இரண்டு கூறுகளை உடையது. ஒன்று கற்றறிதல். மற்றொன்று கேட்டறிதல். இவ்விரண்டு சொற்களுக்கும் விகுதியாக அமைந்திருப்பது அறிதல். அறிதல் என்றால் என்ன? கற்றாலும் கேட்டாலும் உன்னுடைய அறிவையே நம்பு என்பதே. நண்பன் தீய வழிகாட்டலும் உண்டு. பகைவன் ஆக்கத்திற்கு வழிகாட்டுவதும் உண்டு. மனிதனுக்கு மூவகைப் பண்புகள் மாறிமாறி வரும். இந்தப் பண்பு மாற்றம் சொல்லின்கண் சோர்வு உண்டாக்கக் கூடும். எனவேதான் யார் எதனைச் சொன்னாலும் அச்சொல்லில் உள்ள மெய்ப்பொருளைக் காண்பது அறிவு என்கிறார். சொல்கிறவன் பொருளைச் சொற்களால் கூறுகிறான். கேட்பவன் சொல்லில் மறைந்துள்ள பொருளைக் காண்கிறான். இந்த நுண்ணியத்தை வள்ளுவரைத் தவிர வேறு யார் சொல்ல முடியும்? இந்த ஆழமான மரபினை வழிமொழிந்திருக்கிறார் பொன்மணிதாசன்.

    “சொல்வார் சொல்தன்னைச் சொன்னாலும் நம்பாதே!
    உள்ளாய்ந்த உண்மைகள் உள்ளதா? நோக்கிப்பின்
    நல்லதெனில் நாம் கொள்ளல் நன்மை பயக்குமாம்!
    சொல்லுணர் சொல்லேற்றுச் செய்”

    சொல் கருவி. கருத்து பொருள். சொல்பவன் சொல்லாள்கிறான். கேட்பவன் பொருள் கொள்கிறான். திருவள்ளுவர் சொல்லைக் கருதாது பொருளைக் கருதியவர்.

    “எண்பொருள வாகச் செலச் சொல்லித் தான்பிறர்வாய்
    நுண்பொருள் காண்ப தறிவு”

    “பயன்கருதிச் சொற்கேள்!” என்னும் பாங்குடைய பொன்மணிதாசன் ‘பெரியாரைத் துணைக்கோடல்’ என்னும் அதிகாரச் சாரத்தை ஒரு இன்னிசை வெண்பாவில் பதிவு செய்திருக்கிறார்.

    “மிக்கதொரு பட்டறிவால் மேன்மை அடைந்தோர்கள்
    தக்க தகஉரைப்பர்! தவறுகளும் நேராவே!
    சிக்கல் தவிர்க்கச் சிறந்தோர்கள் சொல்லுவதை
    ஒக்க உயரலாம் ஓர்!”

    மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்பது ஔவை மொழி. மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்காயும் முன் கசக்கும். பின் இனிக்கும் என்பது வழக்கியல் மரபு. இந்த நீண்ட மரபியல் தொடர்ச்சியை பொன்மணிதாசன் பாடலில் காணமுடிகிறது. இதுதான் மரபுக்கவிதை!

    “ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட்டு ஒன்றாகும்
    அன்றி அதுவரினும் வந்தெய்தும் ஒன்றை
    நினையாது முன்வந்து நிற்பினும் நிற்கும்
    எனையாளும் ஈசன் செயல்”

    விதி, முறை, ஊழ், பால், தெய்வம், நியதி என்பன ஒருபொருட் கிளவி. எனவே தெய்வத்தின் பால் நம்பிக்கை வைத்த ஔவை பாடிய நல்வழி பாடல் இது. இந்த மரபு பொன்மணி வாக்கில் எப்படி வந்திருக்கிறது என்றால்,

    “வேண்டாத ஒன்று வேண்டுதல் வேண்டிவரும்
    தீண்டாத ஒன்றுமோர் தீண்டிடவே வேண்டிவரும்
    ஈண்டிடும் கல்வியில் இல்லை பொறாமையும்
    காண்டிடல் வெற்றி கடுகு”

    “ஒன்றை நினைக்கின் அஃதொழிந்திட்டு ஒன்றாகும்” என்னும் ஔவை வாக்கு இப்படிப் பதிவாகியிருக்கிறது. “நல்லோர் மனத்தை நடுங்கச்செய்தனோ!? என்பார் வள்ளலார். அடக்கத்தின் மறு உருவம் வள்ளலார்.

    “மற்றோர் வருந்த மனங்கோணச் செய்தல் ஓர்!
    சிற்றறிவுச் சிந்தை சினமும் செய்யாதே
    உற்றவரும் ஊடே உயரம் மறவா நீ
    கற்றது கைம்மண் அறி!”

    தமிழ்ப் பனுபவல்களின் சாரமே அறம்! அன்பு! அடக்கம்! என்னும் மூன்றுமேயாகும். இந்த மண்ணோடு கலந்த பண்புகள் அவை. அதனால் அவை மரபாயின. இந்த இன்னிசை வெண்பாவில் அடக்கத்தை முன்னெடுக்கும் ஒரு மரபியல் கவிஞரைக் காணுகிறோம்.

    தத்துவத்தில் மிதக்கும் தாசன்

    எந்தப் பாடலை எழுதினாலும் அதனுள் மானுட வாழ்வியல் தத்துவத்தைப் பொதிந்து வைக்கும் மரபினைத் தொடங்கி வைத்தவர் கண்ணதாசன். கண்ணதாசனைத் தன் வழிபடு குருவாகக் கொண்டிலங்கும் பொன்மணிதாசன் தான் எழுதும் பாடல்களில் தத்துவத்திற்குத் தனியிடம் கொடுத்தும் பாடல்களில் தத்துவ முத்திரை பதித்து வந்திருப்பதை, வருவதை அறிய முடிகிறது.

    “விடிந்தது போலப் பிறப்பெனச் சொன்னான்
    விந்தையிலையே இறப்பினி லெதுவும்
    நடிக்க வந்த பின் நாணங் கொண்டால்
    நாடக மெப்படி நன்றாய் நடக்கும்?”

    அண்மைக்காலக் கவிஞரிடையே இத்தகைய இயல்பான தத்துவப் பார்வை காண்பது அரிது என்பது என் கருத்து.

    “என்னுள் எனைத்தேடி என்னைநான் காண்கிலனோ?
    என்னுள்ள ஏக்கத்தில் என்றேனும் ஓர்நாளில்
    கண’ணுள வருமந்த காட்சியதில் நிச்சயமாய்
    என்னையே காண்பேன் இனிது”

    “தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே – ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே” என்பார் வள்ளலார்.

    “மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
    மான் என்று சொல்வதில்லையா? தன்னை
    தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள்
    தலைவர்கள் ஆவதில்லையா?”

    என்பார் கண்ணதாசன். இந்த மரபியல் சிந்தனை பொன்மணிதாசனின் பாடல்களில் எதிரொலிப்பதைக் கேட்கலாம்.

    “நானெழுதும் பாட்டுதனை நானெழுத வில்லையெனில்
    தானெழுதிக் காட்டுகிறான் தம்பிரானும் யாரறிவார்?
    நானெழுதேன் என்னுமுண்மை நானறிந்த போதினிலும்
    நானென்ன சொல்வேன் சொல்!”

    ‘தத்துவம்’ என்பது மானுடத்தை விரக்தியை நோக்கி இழுத்துச் செல்லும் வெள்ளமன்று. மறைந்து கிடக்கும் உண்மையினைத் துல்லியமாகக் காட்டும் தனிப்பார்வை. “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்னும் ஒரு வரி மானுடத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் உள்ளடக்கியது என்பதைப் புரிந்து கொண்டால் நீண்ட நெடிய தமிழ்மரபைப் புரிந்து கொள்ள முடியும்.

    காதலெனும் தீவினிலே

    தற்காலக் கவிஞர்கள் சந்திக்கும் பெரிய சவாலே பாடுபொருள்தான். இராமனைப் பாடுபொருளாக்கிய கம்பனையும் கண்ணகியைப் பாடுபொருளாக்கிய இளங்கோவையும் சீவகனைப் பாடுபொருளாக்கிய தேவரையும் கொஞ்சம் தள்ளிவைத்து அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பாடுபொருளாக்கிக் காவியம் பாடியவர் சேக்கிழார். இதனை வேறு வகையாகச் சொன்னால் தனிமனித உணர்வுகளைப் பாடுபொருளாக்கிய பழந்தமிழ் கவிதை, அக்கோட்பாட்டிலிருந்து சற்று ஒதுங்கி மக்களுள் சிறந்தாரையும் கடவுளரையும் பாடிய ஒரு நிலை வந்தது. பின்னர் அதனின்றும் விலகிப் பல்லோரைப் பாடுபொருளாக்கிய சூழலுக்குள் தன்னை இணைத்துக் கொண்டது. பக்தி இலக்கியக் காலத்துள் பலரும் சேர்ந்து ஒருவனைப் பாடும் நிலை வந்தது. பன்னிரு ஆழ்வார்கள் பெருமாளைப் பாடியதும் நால்வர் பாடிய பதிகங்களும் இதற்கு எடுத்துக்காட்டு. இந்த நிலைதான் பெரும்பாலும் வள்ளலார் காலம் வரை நீடித்து வந்தது. அவருக்குப் பின்னாலே தோன்றிய மகாகவி பாரதி நாட்டு விடுதலைக்காகப் பாடினான். இது அவன் விரும்பிப் பாடிய பாடுபொருள். ஆனால் வேறுசில பாடுபொருள்களும்  எட்டையபுரக் கவிஞன் தோட்டத்தில் பதியம் போட்டுக் கொண்டன. அவருடைய தோழர் பாவேந்தர் பகுத்தறிவையும் மொழியையும் இனத்தையும் பாடல் யாத்தார். பாரதியைப் போலவே இவரிடத்தும் பல பாடுபொருள்கள் பதியம் போட்டுக் கொண்டன. அப்படிப் பதியம் போட்டுத் தழைத்த பாடுபொருள்களில் ஒன்றுதான் காதல். பக்குவக் காதலைப் பாவேந்தர்போல் வேறு யாரும் பாடியிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அழகியலும் நெகிழ்ச்சியும் பின்னிப் பிணைந்த காதல் கவிதைகளுக்குச் சொந்தக்காரர் பாவேந்தர். பாவேந்தருக்குப் பிறகு, காதலை மென்பொருளாகப் பாடியவர் கண்ணதாசன்.

    “வையம் சிலிரித்தது நற் புனிதை ஏகி
    மலைபோன்ற நீர்க்குடத்தை ஒதுங்கிச் சென்று
    கையலுத்துப் போகுதென்று மரத்தின் வேர் மேல்
    கடிதுவைத்தாள்! “அத்தான் நீர் மறந்தீர் என்று
    மெய்யாக நான் நினைத்தேன்!” என்றாள். அன்னோன்
    வெடுக்கென்றுதான் அணைத்தான் “விடாதீர்” என்றாள்
    கையிரண்டும் மெய்யிறுக இதழ் நிலத்தில்
    கனஉதட்டை ஊன்றினான் விதைத்தான் முத்தம்

    உச்சிமுதல் உள்ளங்கால் வரைக்கும் உள்ள
    உடலிரண்டின் அணுவனைத்தையும் இன்பம் ஏறக்
    கைச்சரக்கால் காணவொண்ணாப் பெரும்பதத்தில்
    கடையுகமட் டும்பொருந்திக் கிடப்ப தென்று
    நிச்சயித்த மறுநொடியே பிரிய நேர்ந்த
    நிலைநினைந்தார் “அத்தான்” என்றழுதாள்! அன்னோன்
    வைச்சேன் உன்மேல் உயிரைச் சுமந்து போவாய்!
    வரும் என்றன் தேகம் இனிப் பிரியா” தென்றான்

    நீர் மொண்டு வருபவர் நெருங்குகின்றார்
    நினைப்பாக நாளைவா என்று சொன்னான்
    காரிகையாள் போகலுற்றாள் குடத்தைத் தூக்கிக்
    காலடி ஒன்றெடுத்து வைப்பாள் திரும்பிப் பார்ப்பாள்
    ஓரவிழி சிவப்படைய அன்னோன் பெண்ணின்
    ஒய்யார நடையினிலே சொக்கி நிற்பான்
    தூரமெனும் ஒரு பாவி இடையில் வந்தான்
    துடித்ததவர் இருவர் நெஞ்சும் இதுதான் லோகம்”

    தலைவி, தலைவன் ஒருசில நிமிடச் சந்திப்பை அழியா இலக்கியமாக மாற்றிக் காட்டும் படைப்பாளுமை பாவேந்தருக்கே இருந்திருக்கிறது என்பதற்கு இதனை விட வேறு என்ன சான்று வேண்டும்? நம் கவிஞர்கள் இதனை உணரவேண்டும். தாம் எழுதியனவே கவிதை என்று அடம்பிடிக்கக் கூடாது. நீங்கள் எழுதியது கவிதை என்றால் பாவேந்தர் எழுதியதை என்னவென்று சொல்லலாம்.? படைப்பில் கவிஞன் ஒளிந்திருக்கக் கூடாது. மறைந்துவிட வேண்டும். இங்கே பாருங்கள் கண்ணதாசன் செய்யும் அட்டகாசத்தை!

    “சிறுகுன்றை வெண்மேகம் மூடல் போலும்
    சிலை தன்னை முகில்கொண்டு மறைத்தல் போலும்
    இருகுன்றம் தலைகீழாய்க் கவிழ்ந்து பூமி
    இடைசெல்ல முயல்கின்ற காட்சி போலும்
    மருவொன்றும் இல்லாத தந்தப் பேழை
    வைரத்துட் புதைந்துள்ள தன்மைபோலும்
    ஒருஅன்றில் மற்றொன்றைச் சிறகு கொண்டே
    ஒருவர்க்கும் தெரியாமல் மறைத்தல் போலும்
    இரைகொண்ட கோழிதன் மூக்கைக் கல்லில்
    இப்படியும் அப்படியும் தேய்த்தல் போலே”

    பாவேந்தரும் கண்ணதாசனும் முத்தக்காட்சியைத்தான் சித்திரித்துக் காட்டியிருக்கிறார்கள். எவ்வளவு நளினம்? எவ்வளவு மென்மை? எத்தகைய உவமங்கள்? எத்தகைய எளிய சொல்லாட்சி! காட்சி கண்ணுக்குள்! இயல்பாகவே விரிகிறதே காட்சி!    இத்தகைய நீண்ட நெடிய மரபில் வந்த காதல் என்னும் பாடுபொருள் தற்காலக் கவிஞர்கள் கையில் கொத்துப்புரோட்டாவாக மாறிப் போயிருக்கிறது என்பது என்ன ஒரு அவலம். இவர்கள் உருவகங்களே காதலை வெளிப்படுத்துவதற்குப் போதும் என்று கருதிவிடுகிறார்கள். யாப்பில் காதலைக் கொண்டு வர இயலாதவர்கள் குறுங்கவிதை, புதுக்கவிதை என்று விரிந்து பரந்து ஆழ்ந்த காதலைக் குறுக்கிவிடுகிறார்கள். “மார்பைத் தா” என்று மனைவி கேட்கிறாளாம்! “மடியைத் தா” என்று மணாளன் கேட்கிறானாம். இது நடப்பியல். ஆனால் கவிதையாகுமா? ராஜபாட்டையாகச் சென்றிருக்க வேண்டிய காதல் இன்றைக்கு ஒற்றையடிப் பாதையில் அஞ்சிக் கொண்டே நடப்பதை நான் காண்கிறேன். இது என் பார்வை. அந்தப் பழைய ராஜபாட்டையில் பயணிக்க எத்தனிக்கும் கவிஞர் சிலருள் பொன்மணிதாசனும் ஒருவர்.

    வெண்பாவில் வைத்த விருந்து

    குறள் வெண்பாவில் காதலைச் சித்திரித்துக் காட்டுவது அரிசியில் செதுக்குவது போல. அந்த வித்தையைத் திருவள்ளுவரைத் தவிர வேறு எவராலும் செய்ய முடியவில்லை. பதினெண் கீழ்க்கணக்கில் சில காதல் வெண்பாக்கள். அவை வெற்றிபெற்றனவா என்பது விடைகாண முடியாத வினா. புகழேந்தி நள தமயந்தி காதலைப் பாடிய பிறகுதான் வெண்பாவுக்கே ஒரு வெளிச்சம் வந்தது. என்றாலும் நளவெண்பாவைப்போல ஒரு முழுமையான நூலையோ காப்பியத்தையோ யாராலும் செய்ய முடியவில்லை, பாவேந்தரின் மணிமேகலை வெண்பாவைத் தவிர. உதிரிப்பாடல்களாகவே வெண்பாக்கள் இன்றைக்கும் இயற்றப்படுகின்றன. காரணம் பாடுபொருள் செறிவின்மை, கற்பனை வறட்சி, சொற்களஞ்சிய வறுமை முதலியனவே. இருந்தாலும் ஒரு இருநூற்றுப் பதினாறு இன்னிசை வெண்பாக்களில் பல்வகைப் பாடுபொருளைப் பாடியிருக்கும் பொன்மணிதாசன் கொஞ்சம் வேறுபடுகிறார்.

    “தேனூறும் மாலையிலே தெள்ளமுது பொன்னுடலில்
    நானூர நங்கையவள் நற்றமிழாய்க் கையசைக்க
    பானூறு பாடுகிறேன் பாவையவள் மேனியிலே
    பூநூறு பூத்திடும் போது”

    பாட்டுக்கு உரைசொல்வது மலரைக் கசக்கி மோந்து பார்ப்பது போல. பூவைச் சூடிப் பார்க்க வேண்டும். வாடிப் பார்க்கக் கூடாது. இந்தக் கவிதை அத்தகையது. “பானூறு பாடுகிறேன் பாவையவள் மேனியிலே” கொஞ்சம் சிக்கலான இடந்தான். மிகக் கவனமாகத் தாண்டியிருக்கிறார். மேனியில் பாடியவர் இவராகத்தான் இருக்க முடியும். இந்தப் பாடலில் உள்ள தொடை விகற்பங்கள் பொறுக்கி எடுத்துப் போட்டவையல்ல. வழிகேட்டு வந்து தங்களுக்கான வாழ்வை அமைத்துக் கொண்டவை. முதலடியில் பொழிப்பு மோனை, அடுத்த மூன்றடிகளிலும் கூழை வந்து நெஞ்சை குளிர்விக்கிறது. சந்திப்பின் இனிமையைப் பொழுதின் மேல் ஏற்றிப் பாடியிருக்கும் கற்பனை வீச்சு அருமை மற்றும் இனிமை!

    இன்னிசையில் நாட்டார் மரபு

    கணக்கிலடங்காக் கம்பர்கள் வந்தாலும் எண்ணிலடங்காக் கவிப்பேரரசுகள் வந்தாலும் பேரரசுகளின் அடுத்த நிலையில் இருக்கும் கவிக்கோக்கள் என்னும் சிற்றரசர்கள் வந்தாலும் மரபுப்பாமணிகள் வந்தாலும் ஒரு சங்க இலக்கிய அகப்பாடலின் சித்திரிப்புக்கு அவர்கள் படைப்பு ஈடாகாது. அந்தச் சங்க யாப்பும் ஒரு நாட்டார் பாடல் கற்பனைக்கு ஈடு கொடுக்க இயலாது. சங்க இலக்கியம் கவிதைப் புனைவு. அன்றிலிருந்து இன்றுவரை நாட்டார் வழக்கு என்பது கவிதைப் புறப்பாடு.

    “அறுபத்தி நாலு மொழம்
    அள்ளி முடிச்ச கொண்டை
    அவுந்த விபரம் பின்னாடி
    ஏகுட்டி வேடுவப் பெண்ணே
    அத எனக்குச் சொல்ல வேணும் வேடுவப் பெண்ணே”

    தலைவி தன் காதலை வெளிப்பட உரைக்கக் கூடாது என்னும் அகத்திணை மரபை உடைத்து நொறுக்கிய பெருமை நாட்டார் மரபிற்கு உண்டு. இங்கே சிலர் எதற்கு மீறுகிறோம் என்று தெரியாமலேயே மீறிக் கொண்டிருப்பார்கள். மீற வேண்டியது எது என்பதும் அவர்களுக்குத் தெரிவதில்லை.

    “மாரு படர்ந்தவரே! மனக்கவலை வச்சவரே!
    தேமல் படர்ந்தவரே செல்லையா!
    இப்ப தேத்தாதிங்க எம்மனசச் செல்லையா”

    என்று பாடுகிறாள். என்ன ஒரு எளிமை? ஒப்பனை செய்யாத உணர்ச்சிகளின் ஊர்வலம். மாரு படர்ந்தவரே என்பதில் ஒளிந்திருக்கும் எழுவாய் ஆயிரம் அவையல்கிளவி விதிகளைக் கற்பிக்கிறது. இத்தகைய தூய்மையான உணர்ச்சி வெளிப்பாடுகளைப் பொன்மணிதாசன் கவிதைகளில் காணுகிறபோது “துள்ளாத மனமும் துள்ளும்”

    “செப்பு நீ ஈயாவேன் செவ்விதழில் தங்கிடுவேன்!
    ஒப்பினால் தேன்குடிப்பேன்! ஒப்பலையேல் ஓய்வெடுப்பேன்!
    தப்பாது சொல்லுக நீ தாமதமும் வேண்டாமே!
    எப்போது சேதி வரும் எனக்கு?”

    எப்போது சேதி வரும் எனக்கு? என்னும் ஏக்கம் ஆணுக்கு வந்ததுதான் மரபு மீறல். இது மீறப்பட வேண்டும் என்று மீறியதன்று. தானாகவே மீறியது. காதல் தடையுடைக்கும் வெள்ளம் என்பதால். “சென்ற இடம் காணேன்! சிந்தை வாடலானேன்! சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்” என்னும் ஏக்கம் ஆதிமந்திக்குரியது. காதலுக்குப் பால் ஏது? திணை ஏது?

    “கண்ணில் குடியேறிக் காதல்தீ பற்றவைக்கும்
    வண்ணநிலா வந்தேறும் வாசல் திருவிளக்கே!
    என்னாசைத் தீவுக்குள் எண்ணெயையும் வார்ப்பவளே!
    எந் நாளில் என் ஆவாய்ச் சொல்?”

    காமனவன் வில்லேந்திக் காத்திருக்கும் நேரம்பார்!
    சாமம் வருமுன்னே சந்திப்போம் நல்லிரவை!
    ஓமத்தீ நெஞ்சுள்ளே ஓங்குதடி மென்மேலும்
    மாமன் மடி சாய மலர்ந்து”

    வண்ணநிலா வந்தேறும் வாசல் திருவிளக்காம் காதலி. அடடா! நள்ளிரவு அல்ல நல்லிரவாம்! கவித்துவம் வெளிப்படும் மையம் இது. ‘காமனவன் வில்லேந்திக் காத்திருக்கும் நேரம் பார்” கற்பனையின் உச்சம்! கவிதை உத்திகளால் சிறப்பது. காதல் ஐந்தாண்டுத் திட்டத்திற்கு உட்பட்டதன்று தும்மல்போல் வந்து விக்கல் போல் மறைவது. அதனை எவ்வளவு நளினமாகச் சொல்கிறார் பாருங்கள்!

    பசி பாடிய பாவலர்

    “ஈன்றாள் பசி காண்பான் ஆயினும்” என்பதால் திருவள்ளுவர் பசியின் கொடுமையை எதிர்மறையில் பாடியிருக்கிறார். அது தீர்க்க வேண்டிய கடமை என்பதையும் குறிப்பாக உணர்த்தியிருக்கிறார். பசிப்பிணி போக்கிய அறச்செல்வியாக மணிமேகலையைச் சாத்தனர் படைத்துக்காட்டியிருக்கிறார். இவர்கள் வழித்தோன்றலாக வடலூரார் “உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர்., அவர் புறவினத்தார் மற்றவர்க்குப் பயிர்ப்புறுமோர் பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக” என்று அருள் செய்திருக்கிறார்.  “பாலென வருவோர்க்குப் பால் தருவோம்! பசுங் கூழென வருவோர்க்குச் சோறிடுவோம்” என்பார் கண்ணதாசன். இது மரபின் தொடர்ச்சி. இதுதான் கவிதை மரபு. இந்த மரபில் வந்த பொன்மணி பாடுகிறார்.

    “உண்ணுதல் கேடில் ஒருவருக் கேனும் நீ
    உண்ணப் பகிர்ந்தினிது உண்ண நலம்பயக்கும்!
    தன்பசி தீருமுன் தாளாப் பசியுடையார்
    வன்பசி தீர்த்தலே வாழ்வு”

    ‘தாளாப் பசி’ என்பதனாலே அது ‘வன் பசி’ எனப்பட்டது. வன்பசி தீர்த்தலே வாழ்வு என்னும் தீர்க்கம் சமுதாயச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் கவிஞனின் உள்ளத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

    நிறைவுரை

    இதுவரை கூறிய சில எடுத்துக்காட்டுக்களால் இன்னிசை வெண்பாவின் இலக்கணம் தெளிவாகியிருக்கலாம். பதினெண் கீழ்க்கணக்குப்போல ஒரு முழு நூலையும் இன்னிசை வெண்பாவினாலே யாத்த அரிய முயற்சியைக் கண்டிருக்கலாம். சமுதாய நோக்கும் கவித்துவமும் ஊறிக் கொண்டே இருக்குமானால் பன்முகப் பாடுபொருளும் கவிதையாக்கத்திற்குப் பயன்படும் என்னும் உண்மை அறிந்திருக்கலாம். பொன்மணிதாசனின் படைப்பாற்றல் புலப்பட்டிருக்கலாம். சந்தத்தை உள்வாங்கி இலக்கணம் பிசகாமல் எழுதும் அவரது புதிய முயற்சி புலப்பட்டிருக்கலாம். நாட்டுப்புற அழகியலைக் கவிதையில் கொண்டு வருவதிலும் காதலைப் பாடுவதில் மென்மையான அவரது அணுகுமுறையின் வீச்சையும் அனுபவித்திருக்கலாம். எல்லாவற்றையும் விட மரபு பற்றிய மயக்கம் களையப்பட்டிருக்கலாம். இத்தகைய வல்லமை உடைய கவிஞர் பொன்மணிதாசனை, அவருடைய கவிதைகளை  என்வழி அறிமுகப்படுத்துவதில் வல்லமை பெருமை கொள்கிறது. வல்லமையின் பெருமையில் எனக்கும் பங்குண்டு.

    (தொடரும்………)

    Share