தமிழ் நெடுகிலும் ஒலிக்கும் குறளின் குரல்!

0

-மேகலா இராமமூர்த்தி

திருக்குறள் ஒப்புயர்வற்ற அறநூல்; நிலவுலக மாந்தர்கள் அனைவர்க்கும் பொருந்தக்கூடிய வாழ்வியல் கருத்துக்களை, உயர்ந்த விழுமியங்களைத் தன்னகத்தே தாங்கிநிற்கும் அரிய நூல். அதனால்தான்,

 ”வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
 வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று போற்றினார் மகாகவி பாரதியார்.

வள்ளுவர்செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்த தமிழ்ப்புலவோர் பலர் தம் நூல்களில் குறட்கருத்துக்களைப் பொன்னேபோல் போற்றியுள்ளமையைக் காணமுடிகின்றது. தமிழிலக்கிய நெடும்பரப்பில் குறட்கருத்துக்கள் ஓங்கி ஒலிப்பதனைச் சில தமிழ்நூல்களைச் சான்றுகாட்டி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

புறநானூறு: சங்க நூலான புறநானூற்றின் 34ஆவது பாடல் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது. அப்பாடலில்,

”…செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென
அறம்பா டிற்றே ஆயிழை கணவ…”
(புறம்: 34) எனும் அடிகள் இடம்பெற்றுள்ளன. ஈண்டு ’அறம்’ என்பது திருக்குறளைக் குறிப்பதாகும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

இக்கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் திருக்குறளில்,
”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.”
(குறள்: 110) எனும் குறட்பா அமைந்திருக்கின்றது.

சிலப்பதிகாரம்: இளங்கோவடிகள் இயற்றிய, கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாய்க் கருதப்படும், சிலப்பதிகாரத்தில் திருக்குறள் கருத்துக்கள் பரக்கப் பேசப்பட்டிருக்கின்றன.

’வழக்குரை காதையில்’ தன் கணவன் கோவலன் கொலையுண்டதைப் பற்றித் தன்முன்னே ஆவேசமாய் எடுத்துரைக்கும் கண்ணகியைப் பார்த்துப் பாண்டிய மன்னன்,
“கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று
வெள்வேற் கொற்றம் காண்”
(சிலப்: வழக்குரை காதை: 64-65) என்கிறான்.

இச்செய்தி,
”குடிப்புறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.” (குறள்: 549) என்னும் குறட்கருத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கின்றது.

நாலடியார்: திருக்குறளுக்கு அடுத்தநிலையில் வைத்தெண்ணப்படும் அறநூல் நாலடியார். ’நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ என்பர் சான்றோர். நாலடியாரில் குறட்கருத்துக்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

திருப்பிக்கொடுக்க இயலாத ஏழைகட்கு ஈவதே கடன்; வாங்கிய கடனைத் திருப்பிக்கொடுக்க இயலுவோர்க்கு ஈதல் அனைவரும் அறியும் வகையில் செய்யும் உதவி (பொலி கடன்) என்கின்றது நாலடியார்.

”ஏற்றகைம் மாற்றாமை என்னானும் தாம்வரையாது
ஆற்றாதார்க்கு ஈவதாம் ஆண்கடன் – ஆற்றின்
மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க்கு ஈதல்
பொலிகடன் என்னும் பெயர்த்து.”
 (நாலடி – 98)

இதே சிந்தனையை நாம்,
”வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.”
(குறள்: 221) எனும் குறளிலும் காண்கின்றோம்.

பெருங்கதை: கோசாம்பி நகர வேந்தனாகிய உதயணனைக் கதைத்தலைவனாகக் கொண்டு கொங்குவேளிர் எனும் சமணர் எழுதியது பெருங்கதையாகும். இதற்குக் ’கொங்குவேள் மாக்கதை’ என்ற பெயருமுண்டு. இந்நூலில் குறள்மணிகள் பலவிடங்களில் மின்னுகின்றன; அவற்றுள் ஒன்று:

”நன்றாய் வந்த ஒருபொருள் ஒருவற்கு
நன்றே யாகி நந்தினும் நந்தும்
நன்றாய் வந்த ஒருபொருள் ஒருவற்கு
அன்றாய் மற்றஃது அழுங்கினும் அழுங்கும்
தீதாய் வந்த ஒருபொருள் ஒருவற்குத்
தீதே யாகித் தீயினும் தீயும்
தீதாய் வந்த ஒருபொருள் ஒருவற்கு
ஆசில் பெரும்பொருள் ஆகினும் ஆமெனச்
சேயவர் உரைத்ததைச் செவியிற் கேட்கும்”
 (பெருங்: 2.1: 57-66) என்கிறது பெருங்கதை.

இந்நயவுரைகள்,

”நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.”
 (குறள்: 375) எனும் குறளுக்கான விளக்கமே அல்லவா?

கம்பராமாயணம்: வடமொழியில் வால்மீகி இயற்றிய இராமாயணத்தை அடியொற்றித் தமிழில் கம்பர் படைத்த காப்பியமிது. ”பிறனில் விழைவோர் கிளையொடும் கெடுப” என்பது இக்காப்பியத்தின் முதன்மையான பாவிகமாகும். மருந்து உருண்டைகளாய் வள்ளுவர் தந்த கருத்துக்களைத் தம் கதையமுதிலே தோய்த்துத் தித்திக்கத் தித்திக்கத் தந்தவர் கம்பர். கம்பனின் காப்பியத்தில் குறள்மணிகள் மிளிர்கின்ற இடங்கள் பலவாகும். சான்றாய் ஒன்று:

பரதன் அரசுரிமை பெறாததால் அவனுடைய அறிவும் ஆற்றலும் பாழாயின எனக் கைகேயியிடம் கண்ணீர் வடிக்கின்ற அவள் பணிப்பெண்ணான கூனி,

”கல்வியும் இளமையும் கணக்கில் ஆற்றலும்
வில்வினை உரிமையும் அழகும் வீரமும்
எல்லையில் குணங்களும் பரதற்கு எய்திய
புல்லிடை உக்கநல் அமுதம் போலுமால்.”
(கம்ப: 1557) என்று புலம்புகின்றாள்.

இதில் இடம்பெற்றுள்ள, ’புல்லிடை உக்கநல் அமுதம்’ என்ற உவமை, ’அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்’ (குறள்: 720) என்ற வள்ளுவத்தின் மறுவடிவந்தானே?

மகாகவியும் பாவேந்தரும்:

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்களான மகாகவி பாரதியும், பாவேந்தர் பாரதிதாசனும் குறட்கருத்துக்களை உச்சிமேல் வைத்துப் போற்றியுள்ளனர் தம் பாக்களில்.

”தனியொருவனுக் குணவில்லை யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்”
என்றார் மகாகவி ஆவேசத்தோடு. இந்த ஆவேசத்தின் ஆணிவேர்,

”இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.”
(குறள்: 1062) எனும் வள்ளுவமன்றோ?

வள்ளுவர் படைத்த குறட்தலைவி,

”செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.”
(குறள்: 1151) என்று தலைவனிடம் சொல்வதை,

”இருப்பதாய் இருந்தால் என்னிடம் சொல்க – நீ
போவதாய் இருந்தால் என் கட்டைக்குச் சொல்”
(பன்மணித்திரள்) என எளிய தமிழில் வெட்டு ஒன்று துண்டு இரண்டாய்ச் சொல்லிவிடுகிறாள் பாவேந்தர் படைத்த கவிதைத் தலைவி.

வள்ளுவர்காலப் புலவர்கள், அவருக்குப் பின்வந்தவர்கள் என அனைவரிடத்தும் அப்பேரறிஞரின் சிந்தனைகளின் தாக்கமும், அவற்றை மீண்டும் தமிழ்மக்களிடம் வலியுறுத்தவேண்டும் எனும் ஊக்கமும் தென்படுவதனை மேற்கண்ட சான்றுகள் அங்கை நெல்லியென நமக்கு அறியத் தருகின்றன. இத்துணைச் சிறப்பு வாய்ந்த திருக்குறளை நம் தாய்மொழியான தமிழில் பெற்ற நாம் பேறுபெற்றோரே. அமுதென நமக்கு வாய்த்திருக்கும் அருங்குறளைப் போற்றுவோம்; அது செப்பும் உயரிய கருத்துக்களைப் பின்பற்றிப் பண்பில் உயர்ந்த மானுடராய் வாழ்வோம்.

*****

கட்டுரைக்கு உதவியவை:
1. திருக்குறள் தெளிவுரை – டாக்டர் மு. வரதராசனார், சைவசித்தாந்த   நூற்பதிப்புக் கழகம்.
2. புறநானூறு மூலமும் ஔவை சு. துரைசாமிப் பிள்ளை உரையும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
3. சிலப்பதிகாரம் மூலமும் நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
4. நாலடியார் மூலமும் மகாதேவ முதலியார் அரும்பொருள் விளக்கமும்.
5. பெருங்கதை மூலமும் பெருமழைப் புலவர் திரு. பொ.வே. சோமசுந்தரனார்  விளக்கவுரையும்.
6. கம்பராமாயணம் – கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
7. பாரதியார் கவிதைகள் – வானவில் பிரசுரம்.
8. பாரதிதாசன் கவிதைகள் – அருள்சுடர் பதிப்பகம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.