படித்தேன்! சுவைத்தேன்!! பகிர்ந்தேன்!!! – 36

முனைவர் ச. சுப்பிரமணியன்
பின்னூட்டத்தை இலக்கியமாக்கிய பெருமாட்டி!
முன்னுரை
முகநூல் பதிவுகளில் அதாவது கவிதைப் பகுதிகளுள் மூழ்கிக் கிடப்பது இந்த எண்பது வயது முதியவனின் பணி. பணி செய்து கிடந்தவர் திருநாவுக்கரசர். கிடப்பதையே பணியாகக் கொண்டவன் நான். முகநூல் கவிதைப் பகுதிகள் சிறப்பதற்கான காரணிகளுள் அவற்றுக்கு அளிக்கப்படும்; பின்னூட்டங்களே தலையாயது என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை. படைப்பாளனுக்கு அது உத்வேகத்தைக் கொடுக்கிறது, இன்னும் படைக்க வேண்டும் என்னும் பேராவலைத் தூண்டுகிறது, எதிர்மறையாக நோக்கினால் தனது பிழைகளை அறிந்து திருத்திக் கொள்ளும் அரிய வாய்ப்பு. படைப்பாளனுக்குக் கிட்டுகிறது. நடைமுறை அப்படியில்லை. பின்னூட்டங்களைக் கடந்து போய்விடுகிற பெருங்கவிஞர்களும் ‘அருமை’ ‘வாழ்த்துக்கள்’ ‘செம’ என்னும் பொருளற்ற சொற்களால் போடப்படும் பொருளற்ற பின்னூட்டங்களின் எண்ணிக்கையிலேயே பிறவிப்பயனை அடைந்துவிடும் படைப்பாளர்களும் நிரம்பி வழிகிறது. இன்றைய முகநூலுக்குஇது ஒரு ‘களைவளர்’ காலமே படைப்பினைச் சுவைத்து மகிழ்ந்து இடப்படும் பின்னூட்டங்கள் ஒரு சில நேரங்களில் அரிய இலக்கியமாகவே மாறிவிட முடியும் என்பதை நான் அறிந்து கொள்ளும் சூழல் வந்தது. அந்தச் சூழல் எது என்பதையும் அதற்குக் காரணமானவர் யார் என்பதையும் பின்னூட்டத்தை இலக்கியமாக்கிய அந்தப் பெருமாட்டியின் பெருமை பற்றியும் இந்தச் சிறிய கட்டுரை சுருக்கமாக ஆராய்கிறது.
அந்தச் சூழல்
‘வல்லமை’யால் அறிமுகம் செய்யப்பட்டுப் பெருமை பெற்ற கவிஞர்கள் சிலருள் மாதவரம் கவிக்கோ துரை வசந்தராசனும் ஒருவர். ‘காட்டு மூலிகைபோல் கண்டெடுக்க முடியாமல் ஓட்டைக் குடிசையில் ஒளிந்து கிடந்த’ அவரை ‘வல்லமை அறிமுகம் செய்தது. தொடர்ந்து அவரைப் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டு ஊக்கப்படுத்தியும் வருகிறது, போலிப் புகழ்ச்சியில் மயங்கிக்; கிடந்த அவருக்குப் பொருள் சேர்புகழ்த் தடத்தினைக் காட்டிய பெருமை வல்லமைக்கு உண்டு. ஆற்றல் மிகு படைப்பாளர். கவிதையைக் கவிதையாகவே கட்டமைக்கத் தெரிந்தவர். கவிதை மாதிரி எழுதத் தெரியாதவர். வல்லமையால் அறிமுகம் செய்யப்பட்ட அவர் இந்த ஐந்தாண்டுக் காலத்தில் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளிவரச் செய்திருக்கிறார். அந்த நூல்களில் ஒன்றுதான் ‘தற்பாவை’ என்பதாகும். தன்னையே பாட்டுடைத் தலைவனாக்கிப் படைத்திருக்கும் அந்தப் பாவை இலக்கியம் தமிழ்க்கவிதையிலக்கிய வரலாற்றில் புதுத்தடம் காட்டியது, அதே நேரத்தில் தனக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்னும் ஆதங்கமும் அந்த முப்பது பாடல்களிலும் இழைந்தது, அந்த இலக்கியம் முகநூலில் வெளிவந்தபோது அதற்கு அளிக்கப்பட்ட பின்னூட்டங்களில் ஒன்றுதான் திருமதி கிருட்டிணதிலகா அவர்கள் எழுதிய அம்மானை இலக்கியமாகும்.
கிருட்டிண திலகாவும் வசந்தராசன் அம்மானையும்
கிருட்டிணதிலகா முறையாகத் தமிழ் படித்தவர். (இனி இந்தக் கட்டுரையில் அவர் ‘திலகம்’’ என்றே அறியப்படுவார்) அறிவார்ந்த பட்டங்களை உண்மையான பல்கலைக் கழகங்களில் பெற்றவர். யாப்பிலக்கணப் பயிற்சியும் கவிதையுள்ளமும் இயல்பாகவே அமையப் பெற்றவர். வாழ்க்கைக் கவலைகளில் இவர் விட்ட பெருமூச்சுக்களால் கவிழ்ந்துபோன கப்பல்கள் எண்ணிக்கையில் அடங்கா. ‘துன்பம் உறவரினும் செய்க, துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை’ எனத் தேர்ந்தெடுத்துக் கொண்ட வினைகள் இரண்டு. ஒன்று இறைப்பணி. இரண்டு கவிதைப் பணி. கவிதைப் பணி என்றாலும் அதனை ஓர் உள்ளுணர்வு தூண்டவே எழுதிவருகிறார் என்பதற்கு அவருடைய கவிதைகளே சான்று. இவர் கலந்து கொள்ளாத கவியரங்குகள் களையிழந்து நிற்கும். பேசாத பட்டிமன்றங்கள் அஞ்சலிக் கூட்டங்களாய் அமைதியாகும். எவ்வளவோ சொல்லலாம். அத்தகைய சிறப்புக்களைத் தனியுடைமையாகக் கொண்ட திலகம், வசந்தராசன் எழுதிய தற்பாவைக்கு எழுதிய பின்னூட்டத்திற்குப் பெயர் ‘வசந்தராசன் அம்மானை’ என்பதாகும். இது வசந்தராசன் படைப்புக் கிட்டிய பாராட்டு!
பின்னூட்டப் பதிவுகளில் திலகம் பெறுமிடம்
பொதுவாகப் பின்னூட்டம் என்பது நட்பு கருதி இடப்படும் கடமை வெளிப்பாடு. விரல் விட்டு எண்ணக் கூடிய அன்பர்களே படைப்பினை உள்வாங்கிச் சுவைத்து நல்ல வரிகளில் ஒன்றிரண்டைச் சுட்டித் தங்கள் சுவைத்திறனை வெளிப்படுத்துவார்கள். வழக்கமான இந்த நடைமுறையை வசந்தராசனின் தற்பாவை முரியடித்திருக்கிறது. அவருடைய பழைய பதிவுகளை நான் நோக்கியபோது தற்பாவை இலக்கியத்திற்குத் தனியாகச் சிலர் இலக்கியம் படைத்திருக்கிறார்கள் பின்னூட்டம் என்ற பெயரில்! திருமதி திலகம்ம அவர்கள் அம்மானை பாடியும் பாவலர் தென்பசியார் பாவைக்குப் பாவை பாடியும், திரு முருகுபாண்டியன் வெண்பாக்களாலும் தாரமங்கலம் முத்துசாமி (இவரும் வல்லமையால் அறிமுகம் செய்யப்பட்ட கவிஞர்) கலிவிருத்தத்தாலும் தங்கள் பின்னூட்டங்களைக் கவியால் அணி செய்திருந்தனர். அன்பர் திரு செந்தில் குமார் ஒரு அரிய ஆய்வுக்கட்டுரையையே பின்னூட்டமாக இட்டிருந்தார்.
ஒரு பதிவைப் படிப்பதே பெரிது. அதுவும பொருளுணர்ந்து படிப்பது அதனினும் பெரிது, ஓரசையில் பின்னூட்டம் இடுவதற்குப் பல மணிநேரக் காத்திருப்பு என்ற நடப்பியல் சூழலில் ஒரு இலக்கியத்தையே பின்னூட்டமாகப் படைக்க வேண்டுமென்றால் அதற்கு முதலில் பரந்த மனப்பான்மை வேண்டும்! சுவைத்திறன் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் விட ‘வயிற்றெரிச்சல்’ என்னும் அழுக்காறு இருக்கவே கூடாது, வசந்தராசனின் தற்பாவை இலக்கியத்திற்குக் கிட்டியிருக்கும் பின்னூட்டப் பதிவுகள் எண்ணிக்கையால் அல்ல இதயத்தால் அளக்கப்படுகின்றன. “என் பதிவுக்கு இன்று இருநூறு விருப்பக் குறியீடுகள் வந்தன” என்று வெந்ததைத் தின்று விதிவந்தால் சாகின்றவர்கள் நிரலில் வசந்தராசன் அடங்கிவிடக்கூடாது என்பதற்கான எச்சரிக்கையாகவும் இதனைக் கொள்ள முடியும்.
இந்தப் பின்புலத்தில்தான் திலகத்தின் அம்மானைப் பின்னூட்டம் என்னைக் கவரந்தது. கவர்ந்தது என்பதைவிட, ‘ஈர்த்தது’ (FASCINATED) என்பதுதான் பொருத்தமாக இருக்கும் ‘நான் கவர்ந்து கொண்டேன்’ என்று எழுதலாம். ‘நான் ஈர்த்துக் கொண்டேன்’ என்று எழுத முடியாது. காரணம் அந்தச் சொல் செயப்பாட்டு வினைக்கு மட்டுமே வரும். அதனால் நான் கவரப்பட்டேன் ஈரக்கப்பட்டேன் என்பதுதான் சரி. அதனால்தான் சம்பந்தர் பாடுகிறபோது என் ‘உள்ளங்கவர் கள்வன்’ என்று இறைவனின் வினையாகக் கூறுகிறார். அதாவது கவர்தல் என்ற சொல்லை ‘ஈர்த்தல்’ என்ற பொருளில் கையாள்கிறார். இறைவனை நாம் ஈரக்க முடியாது. அவன் நம்மை ஈர்ப்பான். அவனால் நாம் ஈர்க்கப்பட வேண்டும்.
மரபார்ந்த ஒரு இலக்கிய வடிவத்தைப் பற்றிய முழுமையான புரிதல் அவரிடம் இருந்திருக்கிறது. அதனை வெளிப்படுத்தும் இலக்கிய உத்தியினை அவர் அறிந்திருக்கிறார். கொச்சகக்கலி பற்றிய யாப்பறி புலமையில் தெளிவு பெற்றிருக்கிறார். அம்மானையின் அடியளவு பற்றித் தெரிந்திருக்கிறது. ஒரு பின்னூட்டத்தை இலக்கியமாகச் செய்தால் என்ன? என்கிற புதுமை நோக்கும் இருந்திருக்கிறது. அந்தப் புதுமையைத் தம்மையொத்த ஒரு படைப்பாளனுக்குச் செய்தால் என்ன பரந்த மனப்பான்மையும் கொண்டிருக்கிறார். தற்பாவைக்கு ஒரு மாற்று இலக்கியமாகவே வசந்தராசன் அம்மானையைப் பாடியிருக்கிறார்.
அம்மானைப் பாடல்கள் ஒரு சுருக்க விளக்கம்
பொதுவாக என்னுடைய கட்டுரைகளில் கட்டுரைப் பொருளைப் பற்றிய கூடுதல் தகவல் மற்றும் விளக்கம் இடம் பெறச்செய்வதை ஒரு திறனாய்வுக் கொள்கையாக வைத்திருக்கிறேன். அதாவது வசந்ததராசன் அம்மானை பற்றியும் திலகம் பற்றியும் எழுதுகிறபோது அம்மானை பற்றிய புரிதலையும் நான் என் கவனத்திற் கொள்கிறேன். கட்டுரையின் மையப் பொருளுக்குத் தொய்வு தரும் செயலாக இருந்தாலும் இதனை ஒரு இலக்கிய வரலாற்று அறிமுகப் பணியாகவே செய்து வருகிறேன். தற்பாவைக்கு நான் எழுதிய கடடுரையிலும் பாவை இலக்கியம் பற்றிக் கொஞ்சம் ஆராய்ந்திருக்கிறேன். பாவைக்குத் திலகம் பாடிவைத்த அம்மானையின் வரலாறு பற்றிக் கொஞ்சம் இங்கே சிந்தித்திருக்கிறேன்.
அம்மானை வந்த கதை
அம்மானைப் பற்றிய குறிப்புக்கள் தொல்காப்பியத்தில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் வள்ளைப்பாட்டு பற்றிய குறிப்புக்கள் கலித்தொகையில் காணப்படுகிறது, இதற்கும் அம்மானைப்பாட்டுக்கும் தொடர்பில்லையெனினும் மகளிர் விளையாட்டு என்பதிலும் நாட்டார் வழக்கு என்பதிலும் ஒற்றுமைப்படலாம். அம்மானைப் பாட்டுக்கு ‘அம்மானை வரி’ என்றும் ‘பல்வரிக் கூத்து’ என்றும் பெயர் வழக்கு உண்டு, நாடோடிப் பாடல்களை ‘வரிப்பாடலகள்’ என்பதும் தமிழ் மரபே.
“பவள உலக்கை கையால் பற்றித்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
குவளை அல்ல கொடிய! கொடிய!”
“சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்!
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்!
ஊர்திரை நீர்வேலி உழக்கித் திரிவாள்பின்
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்!”
“பூவர் சோலை மயிலாலப் புரிந்து குயில்கள் இசை பாடக்
காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி
காமர் மாலை அருகசைய நடந்த வெல்லாம் நின்கணவன்
நாம வேலின் திறங்கண்டே அறிந்தேன் வாழி காவேரி.”
என்னும் சிலப்பதிகார வரிகள் ஓரு உண்மையை நமக்குக் காட்டுகின்றன. அதாவது வரிகள் மடங்கிவரும் தொடைப்பாங்கு தமிழ்க்கவிதைகளில் தொன்றுதொட்டு அமைந்து வந்திருக்கிறது என்பதுதான். மேலே சொன்ன வரியையே அனுவதித்துச் சொல்லுகிற போக்கு அம்மானைக்குத் தொடக்கமாக இருந்திருக்கலாம். முந்தைய அடி ஒரு ஐயத்தைக் கிளப்புவதாகவும் அடுத்த அடி அந்த ஐயத்தைப் போக்கும் விளக்கமாகவும் விடையாகவும் அமைகின்ற போக்கு இருந்திருக்கிறது.. அம்மானைப் பாடல்களின் எழுபத்தைந்து விழுக்காடு திருந்திய வடிவம் சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதையில் வந்துள்ளதைக் காணமுடிகிறது. சிலப்பதிகார வாழ்த்துக் காதையில் பெண்கள் அம்மானை ஆடிச் சோழன் புகழைப் பாடுவதாக அம்மானை வரிப் பாடல்கள் நான்கு உள்ளன. மூன்று பெண்கள் சேர்ந்து அம்மானை ஆடும்போது, ஒரு பெண் ஒரு வினாவைத் தொடுப்பதும் மற்றொருத்தி அதற்கு விடையிறுப்பதும், மூன்றாமவள் சோழன் புகார் நகரைப் பாடும்படி சொல்வதுமாக அந்தப் பாடல்கள் அமைந்திருக்கின்றன.
“கோவலன் தன்னைக் குறுமகன் கோளிழைப்பக்
காவலன் தன்னுயிர் நீத்ததுதான் கேட்டேங்கிச்
சாவதுதான் வாழ்வென்று தானம் பலசெய்து
மாசாத்து வான்துறவும் கேட்டாயோ அன்னை?
மாநாய்கன் தன்துறவும் கேட்டாயோ அன்னை?
காவியத்தின் பின்பகுதிச் சுருக்கத்தைச் சிலப்பதிகாரம் வாழ்த்துப் பகுதியில் அமைந்துள்ள இந்த அம்மானைப் பாடல் காட்டுகிறது. மேலும் இதில் ‘அன்னை’ என்ற வழக்கே காணப்படுவதன்றி ‘அம்மானை’ என்னும் வழக்கு பயின்று வந்ததாகத் தெரியவில்லை. அம்மானைப் பருவப் பாடல்களைப் பிள்ளைத்தமிழ் என்னும் பிரபந்த வகையில் பெண்பாற் பிள்ளைத் தமிழ் இலக்கியங்களில் எட்டாம் பருவமாக அமைப்பர். சிலம்பிற்குப் பின்னாலே தமிழ்ப் பிரபந்த வகையுள் ஒன்றாகிய கலம்பகத்தில் அம்மானை என்ற உறுப்பு ஒன்று உண்டு. இந்த வகையில் புலவர்கள் சிலர் தனித்தனியே பல அம்மானைப் பாடல்கள் பாடினார்கள்.
மூவர் அம்மானை
இரட்டையர், பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் முதலிய புலவர்கள் ஈற்றடியில் சிலேடை நயம் அமைய அம்மானைப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். அத்தகைய பாடல்களையெல்லாம் தொகுத்தமைத்து, ‘மூவர் அம்மானை’ என்ற பெயருடன் ஒரு திரட்டு நூல் வழங்குகிறது. மூன்று பெண்கள் பாடுவதாக இருப்பதனால், அதற்கு மூவர் அம்மானை என்ற பெயர் வந்தது. அதில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் தெய்வங்களைப் பற்றியனவே. சிலப்பதிகாரத்தில் வரும் அம்மானை வரியும், கலம்பகங்களிலும் மூவரம்மானையிலும் வரும் பாடல்களும் கலித்தாழிசை என்னும் பாவினத்தால் அமைந்தவை; தரவு கொச்சகமாகவும் கொள்ளலாம். ‘அம்மானை’ என்று முடியும் மூன்று தொடர்கள் ஒவ்வொரு பாடலிலும் உள்ளன. .
வினா விடை கட்டுப்பாடு
பொதுவாக அம்மானை என்றால் ஒருவர் வினவ மற்றொருவர் வடையிறுப்பதாக அமையும் என்பது நமது பொதுபுத்தியில் பதிந்து போன பொய். மூவர் ஆடாமல் ஒரு பெண்ணே ஆடுவதாகவும் அமைந்த பாடல்கள் உண்டு. திருவாசகத்தில் உள்ள திருவம்மானை என்ற பகுதியிலுள்ள இருபது செய்யுட்களும் இத்தகையனவே. ‘அம்மானாய்’ என்ற முடிவையுடையது ஒவ்வொரு பாட்டும் ஆறு அடிகளையுடைய தரவு கொச்சகக் கலிப்பாவாகும். இவற்றையன்றி நாடோடிப் பாடல்களில் கதையைத் தழுவி வரும் நெடும்பாடல்கள் பல அம்மானை என்ற பெயரோடு வழங்கி வருகின்றன. புகழேந்திப் புலவர் சோழனால் சிறைப்பட்டிருந்தபோது அல்லியரசாணி மாலை பாடியதாக வழக்கமான ஒரு கதை தமிழ்நாட்டில் வழங்கி வருகிறது. அல்லியரசாணி மாலை, பவளக்கொடி மாலை என்பன போன்ற எல்லாக் கதைப் பாட்டுக்களும் அம்மானைப் பாட்டைச் சார்ந்தனவே. அவற்றிற் சில பாட்டுக்களுக்கு ‘அம்மானை’ என்ற பெயரே அமைந்துள்ளது. கள்ளழகர் அம்மானை, வைகுந்த அம்மானை என்பன போல!
அம்மானை ஒரு மகளிர் விளையாட்டு
நந்திக் கலம்பகத்தில் ஒரு பாட்டு ஊசல், அம்மானை முதலிய விளையாட்டுக்களை பிழையாக ஆடினாலும் என் மகள் நந்திவர்மன் மார்பை அணிசெய்யும் மாலை பாட மறவாளே என்று செவிலி புலம்புவதுபோல் அமைந்த பாட்டு அது.
“ஊசல் மறந்தாலும், ஒண்கழல் அம்மானை
வீசல் மறந்தாலும், மெல்லியல் என்பேதை
பூசல் இலங்கிலை வேல் பொற்கழல் நந்திநின்
பாசிலை அந்தொண்டை அல்லது பாடாளே’.
மரபு மாமணிகளே! இதுதான் மரபுக்கவிதை! இந்த நீண்ட நெடிய விளக்கம் எதற்காகத் தேவைப்படுகிறது என்றால் திலகம் எத்தகைய சிறந்ததொரு மரபுக்கவிதை வடிவத்தை இலக்கியமாக்கியிருக்கிறார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இது அவ்வளவு எளிதான பணியன்று. வல்லாரக்கே கைந்த கலை!
மரபுக்கவிஞர்களில் திலகத்தின் இடம்!
முகநூலில் பதிவாகும் கவிதைகளை அவை எந்த வடிவத்தில் எந்த பொருண்மை பற்றிதாக இருந்தாலும் என் பார்வைக்கு வராமல் போவதில்லை. அவற்றுள் என்னைக் கரைக்கின்ற பாடல்களோடு நான் கரைந்து போகிறேன் அப்படிக் கரைக்கின்ற பாடல்களை எழுதுகின்ற அன்பர்களில் தம்பி விக்டர்தாஸ், தம்பி வசந்தராசன் ஆகியோர் என் இதயத்தின் இடவலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறாரகள். தம்பி மீனாட்சிசுந்தரம், தம்பி முருகானந்தம் தம்பி முத்துசாமி ஆகியோர் இனமான மொழியுணர்வை என் குருதிக்குள் வற்றாமல் கண்காணித்துக் கொண்டிருக்கிறாரகள். ஆய்வை முடித்தவர்களுக்கு மட்டுமன்று ஆய்வுத் தரவுகளுக்காக உழைப்பவர்களும் முனைவர்ப் பட்டத்திற்குத் தகுதியானவர்களே என்பது அறிஞர் தமிழண்ணலின் கருத்து, முன்னவர் இருவரும் ஆய்வுப் பட்டம் பெற்றவர்கள். பிந்தய மூவரும் தரவுகளைச் சேகரிக்கும் கடும் உழைப்பில் கரைந்து கொண்டிருப்ப்வர்கள்.
இவர்கள் அனைவருமே முனைப்பு அறியாதவர்கள். தங்களுக்கு முன்னாலே கவிதை நடை பயின்ற கவிவேழங்களை எப்போதும் கருத்தில் வைத்துக் கவிதை நெய்வதால் .ஆணவம் இவர்களைக் கண்டு அஞ்சி ஓடிவிடுகிறது. தங்கை திலகத்தின் தனித்தன்மையை நான் அறியேன். தம்பி வசந்தராசன் சொலலித்தான் அவர்களைப் பற்றித் தெரியும். ஆனால் வசந்தராசன் எழுதிய தற்பாவைக்குத் திலகம் எழுதிய பின்னூட்டத்தால் அவரைப் பற்றி உசாவியது நான்தான். அந்தக் கவிதைப் பின்னூட்டத்தைப் பாரத்தபின் என் மனத்துள் வந்த எண்ணம் இதுதான்! திலகம் தம் கவிதைப் பயணத்தில் பல சாதனைகளைச் செய்திருக்க வேண்டுமே! என்ன ஏமாற்றம்? அவரும் பட்டங்களுக்காகவும் பட்டங்களுக்காகவும் விருதுகளுக்காகவும் ஏங்கிய ஒரு சராசரி கவிஞராகவே வாழ்ந்து முடிந்திருக்கிறார் என்பது காலத்தின் சோகம் இந்த வகையில் தம்பி விக்டர்தாஸ் கொஞ்சம் மாறுபட்டவராக என் கண்களுக்குத் தெரிகிறார். அவருடைய கவிதைகள் அவற்றின் ரசிகர்களை இந்த முகநூலில் தாழ்வாரத்தில் தேடிக் களைத்துப போய்விட்டன. அரிய கருத்து. எளிய சொற்கள். அழகியல் சார்ந்த கற்பனைகள், .எளிதில் யாராலும் கையாளமுடியாத சொல்லாட்சிகள் வழக்கு சார்ந்த வடிவங்கள் இவைகள் எல்லாம் விக்டர்தாஸிற்கு கைவந்த கலை. போகிற போக்கில் கவிநெய்யும் சிலருள் ஒருவர்., சிறந்தவர். அந்த நிலையை என் தங்கை திலகா எட்டுவதற்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். இந்தப் பத்தியில் கண்ட கருத்துக்கள் எல்லாம் என்னுடையவை. இது என் பார்வை. பிறருக்காக என்பார்வையை நான் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது.
தற்பார்வை பின்னூட்டமும் திலகாவும்
இந்தப் பின்புலத்தில்தான் தற்பாவை இலக்கியத்திற்குத் திலகம் எழுதிய ஒன்றிரண்டு பாடல் வரிகளை எடுத்துக்காட்டிப் பாராட்டுவது என் கடமைகளில் ஒன்றாகிறது. நல்ல மரபுக்கவிஞர்களாக வரவேண்டும் என்று எண்ணுகிறவர்கள் சிவபுராணம். திருவம்மானை, திருச்சாழல், திருவெம்பாவை, திருப்பாவை பெருமாள் திருமொழி, பாவேந்தர் கவிதைகள் பொன்னிவளவன் கவிதைகள், சுரதாவின் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகள் முருகுசுந்தரத்தின கவிதைகள் வசந்தராசன் கவிதைகள், விகடர்தாஸின் கவிதைகள் முதலியவற்றில் சில நூறு வரிகளையாவது மனப்பாடமாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கவிதை எழுதவே தெரியாத எனக்கு இவர்களிடமிருந்து தலா நு{று வரிகளாகவது தெரியும்.. தொடைவிகற்பங்களுக்குச் சொற்பஞ்சம் ஏற்படாமல் இருப்பதற்கும் உத்திகள் தாமாக வந்து உதவி செய்வதற்கும் இதுதான் வழி.
தற்பாவையைப் பாராட்டும் தமிழ்த் திலகம்!
எட்டடிக் கொச்சகத்தில் பாடியிருக்கிறார் வசந்தராசன். ஒப்புமை பற்றி வந்த ஐந்தடிக் கொச்சகத்தால் அவரைப் பாடியிருக்கிறார் திலகம்.. அவரைப் பாடியிருக்கிறார் என்றால் அவர் கவிதைகளைப் பாடியிருக்கிறார் பண்புக்காக வசந்தராசனைப் பாடியிருக்கிறார்.
“மாதவரம் பால்பண்ணை மாதவத்தால பெற்ற வரம்!
ஆதவனாய் நற்றமிழை ஆக்குவர்யார் அமமானை?
சாதனையால் வாழ்வைச் சரித்திரமாய் மாற்ற
பேதமறி யாக்கவிதான் பேர்சொல்வேன் அம்மானை!
தீதறியாத் தேன்கவி நம் வசந்தன் அம்மானை!!”
முதன்மைப் பதிவு ஒரு தனி இலக்கியம் என்றால் பின்னூட்டமும் ஒரு தனி இலக்கியமாக அமைந்திருக்கிறது. இது பின்னூட்டக்காரரின் ரசிகத்தன்மையும் பரந்த மனப்பான்மையும் கவிதைச்சுவையுணர்வு ஆற்றலையும ஒருங்கே காட்டும் கண்ணாடியாம். ‘மாற்ற’ என்னும் எதிர்கால வினையெச்சம் வசந்தராசனும் இன்னும் சரித்திரமாய் மாறவில்லை என்பதையே காட்டுகிறது. விரைவில் வரலாறாய் மாறும் வசந்தராசனின் கவிதைப் பயணம்!
நான் முதன்முதலில் வசந்தராசனின் கவிதைகளில் ஆழந்தபோது அவரது நடை அதாவது வழக்கமான எண்சீர் விருத்தங்களின் நடை எனக்குப் பொன்னிவளவனை நினைவூட்டியது, எண்சீர் விருத்தங்களில் நிரல்படும் வாய்பாடுகளை விட அறுத்துக் கட்டும் வாய்பாடுகள் சுவையுடையவை. அந்த வகையில் பாவேந்தருக்கு அடுத்தபடியாக நிற்பவர் பொன்னிவளவன். அவர் நீதிமன்றத்தின் வழங்கிய விருத்த வாக்குமூலம் இதனை உறுதி செய்யும். “மார்கழியின் நுண்துளியாய் மாசடையா நெஞசுரத்தால் பார்மிசையில் இவரைப் போல் பாரத்ததுண்டா அம்மானை? என்னும் வினாவிற்கு விடையாக
“வேர்விடும் சொல்யாவும் வெம்பகையை வேரறுக்கும்
பார்காணும் இன்னுமோர் பாவேந்தர் அமமானை!”
என்று எழுதுகிறார் திலகம். கவிஞர்களும் மனிதர்களே! எனவே அவர்கள் கவிஞராய்; இருப்பதற்கு முன்னால் மனிதராக இருக்க வேண்டும். மனிதனுக்கு இருக்கக் கூடாத அல்லது அவனைத் தாழ்த்தக்கூடிய எதிர்மறைப் பண்புகள் தேங்கி நாறும் குப்பைத் தொட்டியாக அவன் மனம் மாறிவிடக் கூடாது, மானுடச் சாதியை ஆட்டிவைப்போன் மாசடைந்தால் எப்படி? “பேதமறியாக் கவி’ மார்கழியின் நுண்துளியாய் மாசடையா நெஞ்சம் என்றெல்லாம் நூலாசிரியரின் பண்பு நலன்களை முன்னிறுத்துவதைக் காணமுடிகிறது.
பாவலனைப் பாடுவதும் படைப்பைப் பாடுவதும் ஒன்றா?
பாவை இலக்கியத்தின பாடுபொருள் பலவாகும். ஆனால் அம்மானை இலக்கியத்தின் பாடுபொருள் ஒருவனே. மனிதனைப் பாடுவது கவிதையாகுமா எனின் ஆகாது என்பதுதான் விடை. ஆனால் அந்த மனிதனைப் பாடுகிறபோதே அவனைப் பாடுதற்கான காரணத்தைப் பாடுகிறபோது பாடுபொருளின் பரிமாணம் இன்னும் விரிவடைவதைக் காணலாம். வசந்தராசனைப் பாடி என்ன ஆகப்போகிறது திலகத்திற்கு? அவர் கவிதையைப் பாடுவதால் அவரைப் பாடுகிறார். அவரைப் பாடுவதால் அவர் கவிதையைப் பாடுகிறார்.
வசந்தராசன் அம்மானையில் தொடை விகற்பங்கள்
மரபுக்கவிஞர்கள் எனத் தம்மைத் தாமே அழைத்துக் கொள்வார் பலர் யாப்பில் செலுத்திய கவனத்தைத் தொடை விகற்பங்களில் செலுத்தியிருக்கிறார்களா என்றால் எதிர்மறை விடையைத்தான் நான் காண்கிறேன். மரபுக்கவிதை என்கிறார்கள். ஆனால் நாற்பத்து மூன்று தொடைவிகற்பங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டாமா? அவை தம் கவிதையுள் அமைந்துள்ள பாங்கினை வெளிப்படுத்த வேண்டாமா? அவையெல்லாம் மரபின் கூறுகள் அல்லவா? திறனாய்வு செய்கின்ற அல்லது படைப்பாளர்களைப் பாராட்டுகின்ற அன்பர்கள் அத்தகைய தொடைவிகற்பக் கூறுகளையும அவைதரும் இன்பத்தையும் எடுத்துரைக்க வேண்டாமா? தமிழ்க் கவிதைக் கடடுமானத்தில் அவற்றின் பங்குதான் என்ன? என்பது தெரியாமலேயே போய்விடலாமா? திலகம் பாடியிருக்கும் இந்தப் பின்னூட்ட அம்மானையில் தொடையழகு சொல்லி மாளாது,
“மார்கழியின் நுண்துளியாய் மாசடையா நெஞ்சுரத்தால்
பாரமிசையே ஈங்கிவர் போல் பாரத்ததுண்டோ அம்மானை?
வேர்விடும் சொல்யாவும் வெம்பகையை வேரறுக்கும்!
பார்காணும் இன்னுமோர் பாவேந்தர் அம்மானை!
காரிடி தோன்றும் கவிக்கோயில் அம்மானை!”
என்னும் பாடல் முழுவதும் பொழிப்பு மோனையால் பொலிவு பெறுவதைச் சொல்லுவேனா?
“கண்ட கனியமுது கற்கண்டு கள்ளுறறு”
“நாதமாய் நற்றமிழை நாளும நாடுவாரே”
“வாசகர் வட்டம் வளைய வருவதால்”
என்றெல்லாம் எழுதிக்காட்டும் முற்றுமோனையை விட்டுவிடலாமா?
‘ஒன்றுக்குள் ஒன்றிருக்கும் ஒன்றுக்குள் பலவிருக்கும்’
நன்றென்றே நற்பொருளை நல்குவர்யார் அம்மானை?
என்றென்றும் ஏற்றிடுவார் எந்தமிழை சொற்றிறத்தால்
சூழ்காற்றைச் சூடேற்றும் சூரியன்தான் அம்மானை!
வாழ்வாங்கு வாழ வசந்தராசன் அம்மானை!
பாடல் முழுவதும் கூழை மோனை பயின்று வந்துள்ளதை நான் வியப்புடன் நோக்க வேண்டாமா? ”சிற்றில் நற்றூண் பற்றி” என கூழை எதுகையைச் சங்க இலக்கியத்தில் படித்தவன் நான்.
இதயம் கவர்ந்த தரவுகள்
தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறு உறுப்புக்களையும் பெற்றுவருவது கலிப்பா. பலவகையாக் பிரிந்திசைக்கும் கலிப்பாவில் கொச்சகக்கலி என்பதும் ஒன்று. அது ஐந்து வகைப்படும். அவற்றுள் ஒன்று தரவு கொச்சகக்கலிப்பா. அந்தப் பாவகையில்தான் பாவை மற்றும் அம்மானை இலக்கியங்கள் அமைக்கப்படுகின்றன. தரவுகள் மூன்றடிச் சிறுமையாகவும் பதிமூன்றடிப் பெருமையாகவும் அமைக்கப்படுவதால் அவற்றுள் எதுகை, எதுகையாக இலலாமல் வேறு வகையாக அமையும். விகற்பம் என்பது மாறுபாடு. அதற்கு இரண்டு அடிகள் வேண்டும். ஒரு மூன்றடித் தரவில் இரண்டு விகற்பம் என்பது சுவை குன்றும். அது ஒரே விகற்பமாக அமைதல் வேண்டும். இதனைத்தான் ஒப்புமை என்ற சொல்லால் சான்றோர் வழங்கினார். திருவம்மானைப் பதிகத்தில் பார்த்தால் ஒப்புமை பற்றி வந்த ஆறடித் தரவு கொச்சகக்கலிப்பா என்றுதான் இருக்கும். எனவே தரவு கொச்சகக் கலிப்பாக்களில் ஒரே எதுகைதான் நிற்கும் (உண்மையில் இது எதுகை அன்று – ஒப்புமை)
“திண்ணைத் திருடர்கள் தீய்க்கின்ற பாட்டாளன்!
எணணம் போல் பாடும் எரிமலை யார் அம்மானை?
விண்ணப்பம் செய்து விருதுபெறாத் தீரனிவர்!
விண்ணெ எதிர்த்தாலும் வீழாரே அம்மானை!
பண்ணைத் தமிழ்ச்சங்க பாக்கடலே அம்மமானை!
இது மடடுமன்று இந்த அம்மானையில் உளள பெரும்பாலான ஒப்புமை பற்றி வந்த ஐந்தடித் தரவுகளே! இந்தத் தரவுகள் தமிழ்த்தாகம் தணிக்கும் தரவுகள். மரபு இன்னும் மாய்ந்துவிடவில்லை என்னும் நம்பிக்கை நட்சத்திரங்கள்
சிந்தை குடிகொண்ட செந்தமிழ்த் தொடர்கள்
“நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்” என்பது சிலப்பதிகாரம் தமிழுக்குத் தந்த சீதனத் தொடர். ஒரு மாபெரும் காவியத்தின் மூலமே அந்தத் தொடரில் ஒளிந்து கொண்டிருக்கிறது, ‘இப்படைத் தோற்கின் எப்படை ஜெயிக்கும்?” என்று சுநதரம் பிள்ளை தமிழுக்குத் தந்த தொடர் தமிழின் வீரகாவியங்களையெலலாம் தொகுத்துச் சொன்ன சதுரப்பாடு. அதுபோலத் திலகம் தந்திருக்கும் சில தொடர்கள் காலங்கடந்து நிற்கும். நிற்க வேண்டும்.
- மின்னல் வரியெடுக்கும் மேகம்”
- பொன்புதையல் வேணடாத புத்தர்”
- ஏசப் பிறந்தார் எவருமிலர்”
- விற்பனைக்கு வாராத வீராப்பு”
- பண்ணைத் தமிழ்ச் சங்கம் பாவலரின் தாய்வீடு”
- சந்தனத் தென்றலைச் சந்தத்தில் தந்திடுவார்
- தீயேந்தும் பாட்டெல்லாம் தெள்ளமுது”
- “புத்துணர்வுத் தாள்பாடிப் பூக்களையும் தான்பேசி”
- “நாவேந்தி நாத்திகமும் நற்றிமிழில் பாடிடுவார்”
- கண்ட கனியமுது! கற்பனையின் கள்ளூற்று!
- ஒன்றுக்குள் ஒன்றிருக்கும் ஒன்றில் பலவிருக்கும்”
- சூழ்காற்றைச் சூடேற்றும் சூரியன்”
- “ஊற்றாகும் கந்தகத்தின் உள்ளம்”
- “செங்கவியாய்ச் சீர் தூக்கச் செந்தமிழும் சேர்ந்துழைக்க”
- “பாமகளின கைப்பொருளாய்ப் பாவடிப்பார்”
ஒரு இலக்கியம் வெற்றி பெறுவதற்கு இத்தகைய தொடர்கள் போதாவா? சொல்லிப் பாருங்கள்! சொர்க்கம் அருகில் வரும்!
அலைவரிசைக் கவிஞர்கள்
உள்ளங்கவர்ந்த ஒரு கவிதையின் கட்டுமானமும் உள்ளடக்கமும் உணர்ச்சியும் கற்பனையும் உத்தியும் சொற்பயன்பாடும் தொடர்ந்து மரபுவழியாகப் பின்பற்றப்பட்டு வருமானால் அதுதான் மரபுக்கவிதை. மரபின் தொடர்ச்சி என்பது யாப்பின் தொடர்ச்சி என்பதல்ல. அது அரைகுறையான கருதுகோள். ஆய்ச்சியர் குரவையில் ஒரு பாட்டு இப்படி அமைந்திருக்கிறது,
பெரியவனை மாயவனைப் பேருலகமெல்லாம்,
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே?
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே?
பெண்களெல்லாம் இணைந்து குழுப்பாட்டு பாடுகிறார்கள். இந்தக் குழுப்பாட்டு இடைமடக்காய் அமைந்துள்ளது. பெரியவன், மாயவன், விண்ணவன், கரியவன் என்றெல்லாம் பெருமாளாகிய திருமாலைப் பாடுகிறார்கள். இந்தப் பாட்டின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கிக் கொண்டோ இயல்பாகவோ மணிவாசகப் பெருமான் பாடுகிறார்
ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானை
சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்
மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை
நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்
தாயான தத்துவனைத் தானே உலகேழும்
ஆயானை ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய்!
உள்ளிருக்கும் உள்ளான், சேயான், சேவகன், தென்னன், பெருந்துறையில் மேயான், வேதியன், மாதிருக்கும் பாதியன், நாயகன், தத்துவன் ஆயான் ஆள்வான் என்றெல்லாம் ஆயிரம் திருநாமம் சொல்லித் தேள்ளேணம் கொட்டுகிறார் மணிவாசகர்.
“கூர்மதியன் நெஞ்சத்துக் குற்றாலப் பேரருவி
சீர்மனத்தன் நட்புக்குச் சீலப் பெருந்தொகையன்!
நேர்மறையன்! கொள்கை நிலைமனத்தன்! தோப்பாகி
ஊருண்ண ஓங்கி வளர்ந்திருக்கும் ஒப்புரவு!
வார்த்தெடுதத உண்மை! வளர்த்தெடுத்த பேராண்மை!
நாராகிப் பூககளையே நாளும் இணைக்கின்ற
பேராளன்!”
என்று வசந்தராசன் தன்னுடைய திருநாமங்களைத் தாமே பட்டியிலிடுகிறார். வாழையடி வாழையென வந்த திருக்கூட்டக் கவிமரபைச் சார்ந்த திலகம் வசந்தராசன் திருநாமங்களை அடுக்கிக் காட்டுகிறார்.
“ஈர உளமுடையார் ஈரக்கும் கவிவேந்தர்
சூரக் கவிபடைக்கும் சுந்தரன்! (யார் அம்மானை)?
வீர நடையுடையார் வெற்றித் தமிழ்மறவர்!
மாரன் உருக்கொண்ட மாத்தமிழர் அம்மானை!
வேராய் விழுதிறக்கும் வேங்கையன்றோஅம்மானை!
“ஈர உளமுடையார், கவிவேந்தர், சுந்தரன், வீர நடையுடையார், வெற்றித் தமிழ் மறவர், மாத்தமிழர், வேராய் விழுதிறக்கும் வேங்கை” என்றெல்லாம் பாட்டுடைத் தலைவனைப் பரவிப் பாராட்டும் இந்தக கவிதைத் தொடரியில் மரபு மணக்கிறதா இல்லையா? நானும் எவ்வளவோ சொல்லிவிட்டேன். எத்தனையோ முறை எழுதிவிட்டேன். இன்னும் இரண்டு விளம் நாலு காய் மூன்று கனி என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்களே தவிர கவிதை எழுதிய பாடில்லை. எப்படித் தமிழ்க்கவிதை சிறக்கும்? வளரும்?
மணிவாசகர் பாடுவார் என்று இளங்கோவடிகளுக்குத் தெரியாது, வசந்தராசன் பாடுவார் என்று மணிவாசகர் அறியமாட்டார். திலகம் பாடுவார் என்று வசந்தராசன் சிந்தித்திருக்கவே மாட்டார். இளங்கோ திருமாலைப் பாடுகிறார். சிவபெருமானைப் பாடுகிறார் மணிவாசகர். தன்னைப் பாடிக் கொள்கிறார் வசந்தராசன். அவரைப் பாடுகிறார் திலகம். இந்த அலைவரிசையின் ஒரு வரி நோக்கமே பாராட்டி மகிழ்தல், பரவிப் புகழ்தல் என்றானதால் கவிதைகளில் அமைந்துள்ள சொற்கள் எளிமை, இனிமை கலந்து இனிக்கின்றன. மீண்டும் வலியுறுத்துகிறேன் இதுதான், இப்படி அமைவதுதான் மரபுக்கவிதை. ஒரு மரபுக்கவிதையின் யாப்பின் பங்களிப்பு வெறும் ஐந்து விழுக்காடுதான். யாப்பு ஒழிபியலைப் பங்காளியாகக் கொண்டதால் மரபுக்கவிதையின் பெருமையில் அதன் பங்கு அவ்வளவு உயர்ந்ததன்று.
நிறைவுரை
‘திலகம்’ என என்னால் அழைக்கப்படும் திருமதி கிருட்டிணதிலகாவை யாரென்றே எனக்குத் தெரியாது, யாரைப்பற்றியும் எதனைப் பற்றியும் எதுவும் தெரியாது என்பது தனிக்கதை. முகநூலைப் பொருத்தவரையில் ஒருவருடைய கவிதைக்கான என்னுடைய பின்னூட்டத்திற்குப் பிறகுதான் படைப்பாளர் எனக்கு அறிமுகமாகிறார். வசந்தராசன் உட்பட. வசந்தராசன் எழுதிய தற்பாவைக்குப் பின்னூட்டமாக ஒரு முப்பது கொச்சகக் கலிப்பாக்களில் அம்மானை எழுதிய தற்பாவைக்கு அணி சேர்த்திருக்கிறார். ‘பாவை’ ராசன் எழுதியது. ‘அம்மானை’ திலகம் எழுதியது, உண்மையில் இது தமையனின் தற்பாவைக்குத் தங்கை வைத்த திலகம்! மிகச் சிறந்த திறனாய்வை என்னால் இந்த அம்மானைக்கு எழுத முடியும். காரணம் அம்மானை சிறந்தது. என் உடல் நிலை இடந்தரவில்லை. என் தம்பி எழுதிய பாவைக்கு அம்மானை பாடிய அந்த அம்மாவிற்கு அண்ணன் செலுத்தும் நன்றி! . அதனால் இந்தச் சுருக்கப் பதிவு! இது பெண்ணளித்த பின்னூட்டமன்று. பெண்பாடிய அம்மானை! ஆணைப் பெண் பாடியது. அன்று புனிதவதி பாடினார்! இன்று திலகவதி பாடியிருக்கிறார். இதுவும் ஒரு மரபின் தொடர்ச்சியே!
“வெல்லுஞ்சொல் ஏதுமின்றி வெல்லத்தில் சொல்லெடுத்துக்
குள்ளக் கவிஞன் குருவையான்மேல் “அம்மானை”
கள்ளமனம் இன்றிக் கவிபுனைந்தார் யார் தோழி?
தில்லை நடராசன் செந்தூர் திருமுருகன்
பல்லாரைப் பாடிப் பழுத்ததமிழ் வாய்மணக்கக்
கொல்லி மலைத்தேனில் புள்ளிவைத்துப் பாட்டெழுதி
உள்ளம் உருக உயிருருக நீர்பெருக
நல்லகவி நூல்செய்தார் நம்திலகம்! ஆம் தோழி!!”
என்று வல்லமையுடன் இணைந்து நாமும் அவரை வாழ்த்துகிறோம்!
(தொடரும்)