கல்யாணமே வேண்டாம்! (சிறுகதை)

0

நிர்மலா ராகவன்

பல வருடங்களுக்குப்பின் அன்று சாயங்காலம்தான் அவளைப் பார்த்தேன். நாகரிகமான தோற்றம். ஆனால், முகத்தில் ஏதோ கோபம், இல்லை, வருத்தம். தெரிந்த முகமாக இருந்தது. ஆனால் உடனே பிடிபடவில்லை. ஏன்தான் வயதாகிவிட்டதோ என்ற அர்த்தமற்ற எரிச்சல் பிறந்தது.

எப்போதும்போல் விளையாட்டு மைதானத்தில் பார்த்ததால், சற்று பொறுத்துத் தெளிவு பிறந்தது.

நோர்லேலா! என் மகளின் பால்யத் தோழி.

என்னைப் பார்த்தவுடனே அடையாளம் கண்டுகொண்டாள். “ஆன்ட்டி!” என்று கூவியபடி சிமெண்டு பெஞ்சில் என் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டாள்.

என் மகள் சுந்தரியைப்பற்றி விசாரித்தாள்.

“அதோ, ஊஞ்சல்ல ஒக்காந்து, சிவப்பு கவுன் போட்டிருக்கே, அவளோட பொண்ணுதான். இப்போ ரெண்டாவது பிரசவத்துக்கு வந்திருக்கா,” என்று தகவல் தெரிவித்துவிட்டு, “ஒனக்கு எத்தனை குழந்தைங்க?” என்று விசாரித்தேன்.

“நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லே,” என்றாள், சிரிக்காமல்.

“என்னது?”

“எனக்கு கல்யாணம் ஆகல,” என்று அலட்சியமாகச் சொன்னவள், “பண்ணிக்கவே போறதில்ல,” என்றாள் உறுதியாக.

மேலே ஏதும் கேட்டுவிடப்போகிறேனோ என்று பயந்தவள்போல், , “சும்மா காத்தாட நடந்துவந்தேன். ஒங்களைப் பாத்ததில சந்தோஷம்,” என்றபடி எழுந்து நடந்தாள்.

நான் மௌனமாக இருந்தேன்.

“யாரு பாட்டி?” என்று விசாரித்தாள் பேத்தி.

“ஒன்னைமாதிரி குட்டியா இருந்தப்போ, ஒங்கம்மாவோட ஃப்ரெண்ட்,” என்றேன்.

அப்போது அச்சிறுமிகள் இருவரும் சேர்ந்து விளையாடினாலும், நட்பு இருக்கவில்லை. அவ்வளவு ஏன், நோர்லேலாவுக்கு எவருடனும் இணைந்து விளையாடக்கூடத் தெரியவில்லை.

`நான்தான் ஃபர்ஸ்ட்  வந்தேம்மா. நோர்லேலா என்னை இடிச்சுத் தள்ளிட்டு, ` நான்தான் ஃபர்ஸ்ட்!’ அப்படின்னு பொய் சொல்றா!” அழுகைக்குரலில் சுந்தரி கூறியது உண்மைதான் என்று அவர்கள் விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கும் தெரிந்திருந்தது.

“போனாப்போறா, பாவம்!” என்று சமாதானப்படுத்தினேன்.

“பொய் சொல்றது தப்புதானேம்மா?” நான் சொல்லிக்கொடுத்த பாடத்தை எனக்கே புகட்டினாள் என் எட்டு வயதுப்பெண்.

“அவகூட தினமும் வராளே ஆரிஸ், அவ நோர்லேலாவை ரொம்ப அடிக்கறா, பாவம்!” அதற்குமேல் என்னால் சொல்ல முடியவில்லை.

நோர்லேலாவின் பெற்றோரை அங்கு எவரும் பார்த்தது கிடையாது. அந்த இந்தோனீசிய வேலைக்காரிதான் அவளுக்கு ஒரே துணை.

ஒருமுறை, நோர்லேலா ஓடிவர, என்மேல் மோதிக்கொண்டாள். நான் புன்னகைத்தேன். பின்னால் வந்துகொண்டிருந்த ஆரிஸ் அவள் கையைப் பிடித்திழுத்து ஒரு வயதே நிரம்பிய அந்தக் குழந்தையின் முதுகில் அடிக்க ஆரம்பித்தாள்.

“விடு, விடு,” என்று நான் அலறியபோது, “ஒங்களுக்குத் தெரியாது, ஆன்ட்டி. இவ ரொம்ப நாட்டி!” என்றாள். அடியை நிறுத்தவில்லை.

இந்த வன்முறை அடுத்த பத்து வருடங்கள் தொடர்ந்தது. `நமக்கெதற்கு வம்பு!’ என்று என்னைப்போலவே பல தாய்மார்களும், பாட்டிகளும் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.

அதற்கும் முடிவு வந்தது.

`வீட்டுக்குப் போகலாம், வா!’ என்று ஆரிஸ் அழைத்ததைச் சட்டைசெய்யாது நோர்லேலா விளையாடிக்கொண்டே இருக்க, `என்னையா அலட்சியம் செய்கிறாய்!’ என்று ஆத்திரத்துடன், அவள் முடியைக் கொத்தாகப் பிடித்து இழுத்தாள் ஆரிஸ். சிறுமியின் அலறல் மைதானம் முழுவதும் கேட்டது.

ஐந்து வயதே ஆகியிருந்த சீ சூனை அவனைப் பார்த்துக்கொள்ளவென்று நியமிக்கப்பட்டிருந்தவள் `உப்புமூட்டை’ தூக்கிக்கொண்டு வருவாள், அருமையாக. இப்போது அவன் நோர்லேலாவின் நிர்கதியைப் பார்த்து, பெரிதாக அழ ஆரம்பித்தான்.

ஒரு குழந்தைக்கு இருந்த மனிதாபிமானம்கூட நமக்கில்லையே என்று வெட்கமாகப்போயிற்று எனக்கு. இந்தக் கொடுமைக்கு எப்படி முடிவு கட்டுவது?

சற்று இருட்டியதும், நோர்லேலாவின் வீட்டுக்குப் போய், அழைப்பு மணியை அழுத்தினேன்.

“எஸ்?” கதவைத் திறந்தவளிடம், “நான் தினமும் பார்க்கில் உங்கள் மகளைப் பார்க்கிறேன். அந்தக் குழந்தையை வேலைக்காரி சித்திரவதை செய்கிறாள். உங்களிடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்றுதான்,” நான் முடிப்பதற்குள் உள்ளேயிருந்து வந்தவர் நோர்லேலாவின் தந்தையாக இருக்கவேண்டும். வயதானவராக தோற்றமளித்தார்.

“என்ன விஷயம்?” என்று விசாரித்தவுடனே, “உள்ளே வாங்களேன்!” என்று உபசரித்தார்.

“சும்மா பார்த்துட்டுப் போகலாம்னுதான் வந்தேன்,” என்றபடி நடையைக் கட்டினேன்.

இவர்களிருவரையும் நான் பார்த்ததே இல்லையே என்று என் யோசனை போயிற்று. அதுதான் ஆயிரக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறோமே, இனி வேலைக்கு வந்தவள் பாடு என்று விட்டுவிட்டார்கள்!

அடுத்த சில நாட்கள் நோர்லைலா விளையாட வரவில்லை. அவள் வந்தபோது, அப்பா உடன் வந்தார். என்னைப் பார்த்ததும், முகம் சிறுத்துப்போயிற்று.

வாயை வைத்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. “ஆரிஸ் வரலியா?”

அவர் கையை வீசினார். “போயிட்டா!” குரலில் வெறுப்புடன் நிம்மதியும் கலந்து வந்தது.

பெற்ற குழந்தையைச் சரியாகப் பராமரிக்கத் தெரியவில்லையே என்று பிறர் கேலி செய்யும் அளவுக்கு நடந்துகொண்டுவிட்டோமே என்ற அவமானம். விரைவில் என்னைக் கடந்துபோனார்.

அதன்பின்னர் இருவரையுமே காணவில்லை. அப்பெண்ணை ஹாஸ்டலில் விட்டுவிட்டார்கள் என்று யாரோ சொன்னார்கள்.

நோர்லேலா கூச்சல் போட்டபடி விளையாடும் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கண்களில் ஏக்கம் என்று என் கற்பனை போயிற்று. அவள் என்று அப்படி மகிழ்ச்சியுடன் இருந்திருக்கிறாள்?

நான் பேச்சை ஆரம்பித்தேன். “கல்யாணம்தான் வேண்டாங்கிறே. ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாமே!”

“ஐயோ! வேண்டவே வேண்டாம். நான் வேலைக்குப்போறப்போ, எவகிட்டேயாவது விட்டுட்டுப் போகணும். அவ அடிச்சுக் கொல்வா!” சிறுவயதில் பட்ட துன்பங்கள் அவளை எவ்வளவு தூரம் காயப்படுத்தியிருக்கிறது!

பிறகு, மெல்லிய குரலில் சொன்னாள்: “ஆன்ட்டி! அன்னிக்கு நீங்க மட்டும் எங்க வீடு தேடி வந்து, அந்த அம்மாகிட்ட நான் அனுபவிச்ச கொடுமையைப்பத்தி சொல்லியிருக்காட்டி, என்னைக் கொன்னே போட்டிருப்பா அந்தப் பழிகாரி!”

அதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குப் புரியவில்லை. ஏன் பல வருடங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தீர்கள் எல்லாரும் என்கிறாளோ? உங்கள் குழந்தையை யாராவது படுத்தினால், பொங்கி எழமாட்டீர்களா என்கிறாளோ?

“குழந்தைங்க பாரம்னு நினைக்கிறவங்க தத்து எடுத்துக்கக் கூடாது”. அவள் குரலில் ஏக்க இறக்கம் இல்லை. இயந்திரம் பேசுவதுபோல் இருந்தது.

இவள் யாரைச் சொல்கிறாள்?

அவளே விளக்கமும் அளித்தாள். “நான் யாரோ அனாதையாம். எங்கேயிருந்து பொறுக்கினாங்களோ! சாப்பாடு போட்டு, படிக்கவும் வெச்சா அவங்க கடமை முடிஞ்சுட்டதுன்னு நெனைச்சாங்க எங்க வீட்டிலே!” அவள் குரலில் அளப்பற்ற வெறுப்பு. “நான் அன்பா வளரலே. சின்ன வயசில எனக்குக் கிடைக்காததை இன்னொரு குழந்தைக்கு என்னால எப்படி ஆன்ட்டி குடுக்க முடியும்?”

கண்கள் சொருகியிருந்தன. “எப்பவாவது, வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தா நம்பகூட பேச ஒருத்தன் இல்லியேன்னு இருக்கும். ஆனா, அவனும் அடிக்க ஆரம்பிச்சா? எனக்கு வழிகாட்ட யாரும் இல்லியே! அதான் கல்யாணமும் வேண்டாம், குழந்தையும் வேண்டாம்னு இப்படியே இருக்கேன்!”

சம்பந்தம் இல்லாமல், “வீட்டுக்கு வாயேன், லேலா. சுந்தரி ஒன்னைப் பாத்தா சந்தோஷப்படுவா!” என்று ஏதோ சொன்னேன். மனம் கனத்திருந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.