படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 35

முனைவர் ச. சுப்பிரமணியன்
இன்னிசையில் பண்ணிசைக்கும் பொன்மணியின் வெண்பாக்கள்
முன்னுரை
கோட்பாடுகளை முன்னிறுத்தி அவற்றிற்கு இயைய இலக்கியத்தையோ கவிதைகளையோ நோக்குவது ஒன்று. படைப்பிலக்கியங்களில் மூழ்கிப் படைப்பாளன் அனுபவத்தோடு உள்ளார்ந்து ஒன்றி அவற்றினின்றும் பெறப்படும் கோட்பாடுகளை நிரல்படுத்தி நிறுத்துவது வேறொன்று. ஒரு சாதாரண கவிதைத் திறனாய்வாளன் என்ற வகையில் நான் பின்னதையே என் திறனாய்வுக் கோட்பாடாகக் கொள்கிறேன். எனவே யாப்பினை முன்னிறுத்திக் கவிதைகளை நோக்குவதையோ கோட்பாடுகளை முன்னிறுத்தி இலக்கியங்களை ஆராய்ச்சி செய்வதையோ நான் ஆதரிக்கவில்லை. ஆதரிப்பாரை நான் எதிர்க்கவும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. ஆனால் கவிதையின் வெற்றி பொதுவானது. வெறும் எட்டாம் வகுப்பு மட்டுமே நெறிசார் கல்வி பயின்று முகநூலில் விரல்விட்டு எண்ணத்தகும் கவிஞர் சிலருள் ஒருவராகவும் சொல் எளிமை, பொருள் ஆழம், அழகியல் முதலியவற்றைப் புற அழகாகவும் சமுதாயச் சிந்தனைகளை அடிநாதமாகவும் நவரசங்களையும் கவியில் கொண்டு வந்து கவிதையைச் சிறக்கச் செய்த சிறந்தவருள் ஒருவராகவும் திகழ்பவர் நாகை பொன்மணிதாசன். அவர் படைத்துள்ள ‘இன்னிசையில் என் வெண்பா’ என்னும் நூல் பற்றிய ஒரு சுருக்கத் திறனாய்வாக இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.
தலைப்பு – தெளிவுக்காக ஒரு விளக்கம்
விட்ட ஆகுபெயர் விடாத ஆகுபெயர் என்றெல்லாம் தமிழிலக்கணக்காரர்கள் சொல்வார்கள். ஆகுபெயரின் பொதுவான இலக்கணத்தோடு அவை எவ்வாறு முரண்படுகின்றன என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் ஆராயமாட்டார்கள்., கவலைப்படமாட்டார்கள்.. அது பற்றிய ஆராய்ச்சி இங்கில்லை. ‘இன்னிசை’ என்பது இன்னிசையைக் குறிக்காமல் இன்னிசை வெண்பாவைக் குறித்தது. இன்னிசை வெண்பா என்பதனாலேயே இது ஒரு ராகம் தழுவிச் செவிக்கு இன்பம் நல்கும் என்று பொருளில்லை. நேரிசை வெண்பாவின் இலக்கணக் கூறுகளில் பலவகைகளில் வழுவி வருவனவெல்லாம் இன்னிசை வெண்பாக்கள். அவ்வளவுதான். இந்த வழுவுதலில் எழுபத்தைந்து விழுக்காடு தனிச்சொல் இன்றி வருவது. அதனாலேயே பாட்டெழுதும் பலரும் அதுதான் இன்னிசை வெண்பாவின் இலக்கணம் என்று கருதிவிடுகிறார்கள். அது மட்டுமன்று குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, பஃறொடை வெண்பா என்னும் மூவகை வெண்பாக்களின் பெயர்க்காரணம் கொஞ்சம் புலப்படுவது போல ஏனைய நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா என்பவற்றிற்கான பெயர்க்காரணம் புலப்படுமாறு அமையவில்லை. இவையிரண்டுக்குமான காரணமே புலப்படாத போது நேரிசைச் சிந்தியல், இன்னிசைச் சிந்தியல்களுக்கான காரணம் எப்படிப் புலப்படும்? ‘சிந்தியல்’ என்னும் சொல் மூன்றென்னும் எண்ணைக் குறிப்பதால் கொழு சென்ற நெறியே குத்தூசியும் செல்லுமாறு போல நான்கடியில் அமையும் நேரிசை வெண்பா மூன்றடியில் வந்தால் நேரிசைச் சிந்தியல் எனவும் தனிச்சொல் இன்றி நான்கடியால் அமையும் இன்னிசை வெண்பா மூன்றடியில் வந்தால் இன்னிசைச் சிந்தியல் வெண்பா எனவும் சொல்வது வழக்கானது. தந்தையின் பெயரே தெரியாத போது தனயனுக்கு நாம் முன்னெழுத்தைப் போட்டுக் கொண்டு வருகிறோம்.
வெண்பாக்களைப் பற்றி இங்கே பதிவிடப்படும் கருத்துக்களெல்லாம் என் கருத்துக்களோ நானே உருவாக்கிய புத்திலக்கணக் கருத்துக்களோ அல்ல. அளப்பரும் புலமைக்கடல் அமிதசாகரர் எழுதிய யாப்பருங்கலக்காரிகை என்ற நூலையும் அதற்குக் குணசாகரர் என்னும் சான்றோர் எழுதிய உரையையும் அடிப்படையாக வைத்தே பதிவிடப்படுகின்றன. காரணம் பொதுவெளியில் இந்தக் கட்டுரையைக் காணும் அன்பர் பலர், ஒரு பாட்டுக்கான இலக்கண அமைதிக்காக நான்கு நூல்களைச் சான்றாக்குவார்கள். அவர்களோடு இந்த வயதான காலத்தில் நான் மல்லுக்கட்ட முடியாது, எனவே காரிகை அடிப்படையில் இந்தக் கருத்தினைப் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றுள் ஏதும் ஐயமிருப்பினும் எடுத்துரைக்கலாம்.
அளவடி நான்கும் சிந்தடி ஒன்றுமாக அமைந்து முதலடியின் முதற்சீருக்கு ஏற்ப இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று நாள் என்னும் ‘நேரசை’ வாய்பாட்டானும் ‘மலர்’ என்னும் நிரையசை வாய்பாட்டானும், ‘காசு’, ‘பிறப்பு’ என்னும் குற்றியலுகர வாய்பாட்டானும் நிறைவடைவது நேரிசை வெண்பா எனப்படும். வெண்பாவின் ஈற்றடி பற்றிய மாற்றங்களும் ஆராய்ச்சிகளும் தனி.
அப்படியானால் இரண்டாவது அடியில் தனிச்சொல் இன்றி வருவதுதான் இன்னிசை வெண்பா என்றால்,
- முதலடியின் ஈற்றில் தனிச்சொல் வந்தால் அது என்ன பா?
- மூன்றாவது அடியின் ஈற்றில் தனிச்சொல் வந்தால் அது என்ன பா?
- அடிதோறும் ஒரூஉத் தொடை பெற்றுவந்தால் அது என்ன பா?
- நான்கடிகளுள் எங்காவது கனிச்சீர் வந்துவிடின் அது என்ன பா?
- ஒரு விகற்பம் இரு விகற்பம் என்றமையாமல் நான்கடியும் நான்கு வகையாக அமைந்தால் அது என்ன பா?
நேரிசை வெண்பாவிலிருந்து விலகி நிற்கும் மேற்சுட்டிய ஐந்து வேறுபாடுகளோடு வேறுசில வேறுபாடுகள் இருந்தாலும் அவையெல்லாம் இன்னிசை வெண்பாக்களே. இந்த விரிவாக்கவுரை யாது நோக்கியதோவெனின் யாப்பிலக்கணத்தையோ கோட்பாடுகளையோ அடி நரம்புகளில் தன்மயப்படுத்திக் கொள்ளாமல் கவிதை செய்தால் அந்தக் கவிதையின் செப்பமும் அழகும் கெடும் என்பதை விளக்குவதற்காகத்தான். அது பற்றி இந்தக் கட்டுரையில் அவ்வப்போது விளக்கப்படும்.
சந்தத்தைச் சொந்தங் கொண்ட கண்ணதாசனும் பொன்மணிதாசனும்
யாப்பிலக்கணத்தை ஓரளவு அறிந்தவராயினும் கண்ணதாசன் சந்தத்தை முன்னிறுத்தியே தன் கவிதைத் தொழிலைச் செய்திருக்கிறார். அவருடைய புகழ் பெற்ற காப்பியமான ‘மாங்கனி’ முழுமையான கட்டுமானச் சிறப்பைக் கொண்டதன்று. இதில் என்ன சிறப்பு என்றால் மெட்டுக்குப் பாட்டு என்னும் புதிய தொழில்நுட்பத்திலும் அவர் இந்தக் கோட்பாட்டையே பின்பற்றியிருக்கிறார். “சந்தம் நிறைந்த தமிழ் சங்கீதம் பாடும் தமிழ் சிந்துபல கொண்ட தமிழ் வெல்லும் வெல்லும்! இந்தத் தேச முற்றும் ஆண்ட கதை சொல்லும்” என்பது கண்ணதாசன் எழுதிய ஒரு திரையிசைப்பாடல் அவர் தமிழைச் சந்தம் நிறைந்த தமிழாகவும் சங்கீதம் பாடும் தமிழாகவுமே நோக்கியிருக்கிறார்.
“செவ்வரி ஓடிய கண்களில் இரண்டினில்
சேலொடு வேலாட – இரு
கொவ்வை இதழ்களும் கொத்து மலர்களும்
கொஞ்சி மகிழ்ந்தாட”
பாடலை மேம்போக்காகப் படிப்பவர்கள் இது குற்றாலக் குறவஞ்சியின் சாயல் என்றோ நகல் என்றோ சொல்லிக்கொண்டே கடந்து போய்விடுவார்கள். அவர்கள் பயணங்கள் முடிவதில்லை!. நல்ல கவிஞனைப் பாராட்ட மறக்கலாம். நல்ல கவிதையை அடையாளம் காணத் தவறிவிடக்கூடாது என்பதில் நான் மிகுந்த கவனமாகவும் பொறுப்புடனும் இருக்கிறேன்.
“என்ன மன வேதனையும் என்ன ளவில் மாறிடுமே
என்னருகில் மதுவிருந்தால் போதும்!
உண்ணுகிற இரவி லென்னை ஊக்குகிற மது குடித்தால்
திண்ண மெனக்கில்லையேது தீதும்!
முன்னுக்குப் பின் முரணாக மூச்சு வரும் என்றாலும்
கண்ணுனக்குள் காணுகிறேன் சொர்க்கம்!
பெண்ணுனக் குள் காணுகிற பெரிதொரு இன்பமிது
பேசயிலை இதனிடையோர் தர்க்கம்!”
என்று ஒரு பாடலை எழுதியிருக்கிறார் பொன்மணிதாசன். சந்தத்தை உள்வாங்கி விருத்தம் போல ஒரு நாலடிச் சிந்தினைக் காவடி சிந்து போல் எழுதியிருப்பதைக் காணலாம். ஈரடிக்கு ஓர் இயைபாய் அமைந்த சந்தத்தை நெஞ்சில் நிறுத்தி அவரால் இப்படி எழுதப்படும் கவிதைகள் காலத்தைக் கடந்து நிற்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. எனவே பொன்மணிதாசன் கவிதைகளைச் சுவைத்துத் திறனாய்வு செய்து ஆராய்கிறபோது யாப்பிலக்கணம் பின்னிறுத்தப்பட்டுச் சந்தத்தை முன்னிறுத்தும் உண்மையான கவிதைக் கொள்கையே எடுத்தோதப்படுகிறது. இதனால் கவிதைக்கு யாப்பு இன்றியமையாத ஒன்றன்று என்பது பொருளன்று. யாப்புக்குள் கவிதையைத் தேடுவது பிண அறையில் மணமகனைத் தேடுவது போல! கவிதைக்குள் யாப்பமைதியைத் தேடுவது சொந்தத்திற்குள் மாப்பிள்ளை தேடுவது போல!
இன்னிசையில் என் வெண்பாவின் பாடுபொருள்
இந்நூற் கவிதைகளை நன்கு உள்வாங்கி உளத்திருத்தி அணிந்துரை அளித்திருக்கும் அன்பர் தமிழ்ச்செம்மல் திரு.இராம.வேல்முருகன் அவர்கள் இதன் உள்ளடக்கத்தைப் பட்டியலிட்டுக் காட்டியிருப்பது படிப்பவர்க்குப் பேருதவியாக இருக்கிறது, எனக்கும் சேர்த்து. “நட்பு, காதல், பசி தீர்த்தல், நுண்ணறிவு, நோய்தீர்த்தல், பிணி, சான்றோர் துணை, களவு, வறுமை, இறை நம்பிக்கை, தமிழ்ப்பற்று, உலகப்பற்று, தாய்மை, ஆண்மை, கொடைத்தன்மை, நூல் மற்றும் நூலைப்படித்தல்” என ஒரு கதம்ப மலர்க்கூட்டாக உள்ளது. நகைச்சுவை, இறைப்பற்று, நாட்டுப் பற்று, மொழிப்பற்று நீதி நெறிகளைப் போற்றுதல், பெற்றோரைப் போற்றுதல்’ என அறுசுவை உணவை நமக்கு அள்ளித் தருகிறது” என்னும் குறிப்பு பயனுள்ளதாகும். அதே நேரத்தில் பொன்மணியின் வெண்பா ஆற்றலைப் புகழ்வதற்காக “வெண்பா எழுதுவாருடைய வாய்ச்சொல் பலிக்கும்” என்றெல்லாம் இட்டுக்கட்டி உரைப்பது கெட்டிக்காரன் புளுகாகவே முடிந்து போய்விடுகிறது. அப்படி ஒரு காலம் இருந்திருக்கலாம் என்பது கூட ஒரு அனுமானமே தவிர வரலாற்று உண்மை கிடையாது. உண்மையாகவே இருந்தாலும் மீண்டும் வர வாய்ப்பில்லை., வழியில்லை. மக்கள் தொகை குறைப்புக்கு இப்படியொரு வழி இருப்பதாகப் பன்னாட்டு மன்றம் அறிவிக்கவில்லை. நூலின் உள்ளடக்கத்தில் காணும் சில பொருள் பற்றிய சிறப்புக்களை இனித் தொடரலாம்.
பாடுபொருள் வறட்சியும் காலநிலை மாற்றமும்
இன்றைய கவிதைகளில் காணப்படும் பாடுபொருள் வறட்சி பொன்மணிக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவருடைய கவிதைத் தொகுப்புக்களானாலும் நாளும் வெளிவரும் முகநூல் கவிதைகளானாலும் தன்னைப் பாதிப்பனவற்றைக் கவிதையாக்கும் இயல்பான ஆற்றல் இவருக்கு உண்டு. காலநிலை மாற்றம் என்பதும் அதனால் பெருகும் வெள்ளமும் காயும் வறட்சியும் மக்களைப் பாதிக்கிறது. ஆனால் கவிஞர்களை அவ்வளவாகப் பாதித்ததாகத் தெரியவில்லை. தலைவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து, தங்கள் மணநாள் வாழ்த்து முதலியனவற்றை எழுதிக்கொண்டும் தேடிப் பெறும் கவியரங்கங்களில் எதனையாவது எழுதி அதனைக் கவிதையென்று சொல்லும்படி வற்புறுத்தியும் பொழுது போகவில்லை என்றால் காதல் கவிதை என்ற பெயரில் குறுங்கவிதை எழுதுவதுமாக இன்றைய படைப்பாளர்களின் பொழுது கழிகிறது. அன்பர் பொன்மணிதாசனை இயல்பிலேயே கவித்துவம் துளிர்க்கப் பெற்றவராதலால் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் புவியியல் வறட்சியைப் பாடுபொருளாக்கியிருக்கிறார்.
“கோடை யிடியில்லை! கொட்டும் மழையில்லை!
ஓடையில் நீரில்லை! ஓடநீர் ஆறில்லை!!
தேடிக் கிடையாத் தெளிநீரைத் தேடியினும்
வாடி அலைய வலி!”
என்று ஒரு காலத்தில் நடந்த நதியைப் படுத்த நதியாகப் பார்த்திருக்கிறார் பொன்மணிதாசன். இரண்டாவது அடியின் மூன்றாவது சீரான ஓட நீர் என்பதை இரண்டாகப் பிரித்து “நீர் ஓட ஆறில்லை” எனப் படிக்க. கவிதையில் நதி நடப்பதைக் காணலாம். இந்தப் பாடலின் ஈற்றடியைக் கவனித்தால் ‘வாடி அலைய வலி’ என்று யாப்பிலக்கணம் காப்பாற்றப்பட்டு இருப்பதைக் காணலாம். அதாவது இன்னிசை வெண்பாவில் வெண்டளை மட்டுமே வரவேண்டும் என்னும் தவறான புரிதலால் இந்த நிலை. இந்த அடியை வாடி அலைவதே வலி! என்று மாற்றிப் படித்தால் கவிதையும் இனிக்கும்!
அந்தக் கால இலக்கண ஆசிரியர்கள் நூலுள் வரக்கூடாத குற்றங்கள் பத்து என வகுத்து அவற்றுள் கூறியது கூறலையும் ஒன்றாக்கினர். இன்றைக்கு அறிவியலின் வளர்ச்சி எல்லாரும் அறிந்ததே. தட்டச்சுப் பிழை என்பதே இல்லை. இருக்கக் கூடாது. இப்போது அழிதிறன் கூடிய போனைப் பயன்படுத்துகிறோம். கணினியைப் பயன்படுத்துகிறோம். இருந்தாலும் கூறியது கூறிவிடுகிறோம். ஆம். இந்த நூலின் எழுபத்தைந்தாம் (76) பாடலாக உள்ள இதே பாட்டு இதே நூலின் நூற்று அறுபத்தேழாவது (167) பாடலாகவும் அச்சேறியுள்ளது. எனின் இந்தத் தவறு கணிப்பொறியின் தவறா? நம்முடைய தவறா? சிந்திக்க வேண்டாமா? செய்தித் தொகுப்புக்கள் தொலைக்காட்சிக்கு உரியன. கவிஞர்களுக்கு அல்ல. அண்ணாவைப் பற்றிக் கவிதை எழுதச் சொன்னால் நம் கவிஞர்கள் உடனே தொடங்கிவிடுவார்கள். “காஞ்சியிலே நமதண்ணா பிறந்தார் அன்று”. அண்ணா காஞ்சியிலே பிறந்தாரா? இல்லையா? என்பது காஞ்சி வட்டாட்சியர் செய்ய வேண்டிய ஆராய்ச்சி. தமிழ்நாட்டுக் கவிஞர்கள் அண்ணாவுக்கு இருப்பிடச் சான்று வழங்கத் தேவையில்லை. இந்தச் செய்தியைக் கவிஞன் எழுதுகிறபோது “நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று” என்று எழுதுவான். அதுபோல ஓடாத நதியைப் பாடிய கவிஞன் அது ஓடுவதற்கான வழியை இன்னொரு பாடலிலே பாடுகிறான்.
“நல்லனசெய்! மறவாதே! நாம்வாழும் ஊருக்குள்
உள்ள குளம் வார, ஓடும் வடிகால்கள்!
செல்ல வழிகாட்டு! சீர்படுத்து ஏரியினை!
வெள்ளமெனில் வேண்டாம் பயம்”
தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தின் ஒட்டுமொத்த நலனைக் கண்காணிப்பதும் கவலைப்படுவதும் உண்மைக் கவிஞனின் பணி. அந்தப் பணியை வெகு திறம்படச் செய்திருக்கிறார் பொன்மணிதாசன். நூலின் ஆறாவது பாடலாகச் செய்ய வேண்டியனவற்றையும் செழிப்பையும் பாடிய தாசன், எழுபத்தாறாம் பாடலில்தான் வறட்சியைப் பாடியிருக்கிறார். இது ஒரு தொகுப்பு நூல்தான் என்றாலும் இந்தச் சிந்தனையைத் தவிர்க்க இயலவில்லை.
மரபுத் தடம் பயிலும் பொன்மணிதாசன்
அறிவைப் பற்றிப் பத்துக்கும் மேற்பட்ட குறட்பாக்களில் ஆராய்ந்தவர் திருவள்ளுவர். அதுபற்றிய பொருட்பால் ஆராய்ச்சி போதாதென்று கருதிய அவர், ‘அறிதொறும் அறியாமை கண்டற்றால்’ என உவம அளவையால் காமத்துப்பாலிலும் ஆராய்ந்திருப்பதைக் காணமுடிகிறது. அறிவு இரண்டு கூறுகளை உடையது. ஒன்று கற்றறிதல். மற்றொன்று கேட்டறிதல். இவ்விரண்டு சொற்களுக்கும் விகுதியாக அமைந்திருப்பது அறிதல். அறிதல் என்றால் என்ன? கற்றாலும் கேட்டாலும் உன்னுடைய அறிவையே நம்பு என்பதே. நண்பன் தீய வழிகாட்டலும் உண்டு. பகைவன் ஆக்கத்திற்கு வழிகாட்டுவதும் உண்டு. மனிதனுக்கு மூவகைப் பண்புகள் மாறிமாறி வரும். இந்தப் பண்பு மாற்றம் சொல்லின்கண் சோர்வு உண்டாக்கக் கூடும். எனவேதான் யார் எதனைச் சொன்னாலும் அச்சொல்லில் உள்ள மெய்ப்பொருளைக் காண்பது அறிவு என்கிறார். சொல்கிறவன் பொருளைச் சொற்களால் கூறுகிறான். கேட்பவன் சொல்லில் மறைந்துள்ள பொருளைக் காண்கிறான். இந்த நுண்ணியத்தை வள்ளுவரைத் தவிர வேறு யார் சொல்ல முடியும்? இந்த ஆழமான மரபினை வழிமொழிந்திருக்கிறார் பொன்மணிதாசன்.
“சொல்வார் சொல்தன்னைச் சொன்னாலும் நம்பாதே!
உள்ளாய்ந்த உண்மைகள் உள்ளதா? நோக்கிப்பின்
நல்லதெனில் நாம் கொள்ளல் நன்மை பயக்குமாம்!
சொல்லுணர் சொல்லேற்றுச் செய்”
சொல் கருவி. கருத்து பொருள். சொல்பவன் சொல்லாள்கிறான். கேட்பவன் பொருள் கொள்கிறான். திருவள்ளுவர் சொல்லைக் கருதாது பொருளைக் கருதியவர்.
“எண்பொருள வாகச் செலச் சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு”
“பயன்கருதிச் சொற்கேள்!” என்னும் பாங்குடைய பொன்மணிதாசன் ‘பெரியாரைத் துணைக்கோடல்’ என்னும் அதிகாரச் சாரத்தை ஒரு இன்னிசை வெண்பாவில் பதிவு செய்திருக்கிறார்.
“மிக்கதொரு பட்டறிவால் மேன்மை அடைந்தோர்கள்
தக்க தகஉரைப்பர்! தவறுகளும் நேராவே!
சிக்கல் தவிர்க்கச் சிறந்தோர்கள் சொல்லுவதை
ஒக்க உயரலாம் ஓர்!”
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்பது ஔவை மொழி. மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்காயும் முன் கசக்கும். பின் இனிக்கும் என்பது வழக்கியல் மரபு. இந்த நீண்ட மரபியல் தொடர்ச்சியை பொன்மணிதாசன் பாடலில் காணமுடிகிறது. இதுதான் மரபுக்கவிதை!
“ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட்டு ஒன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் ஒன்றை
நினையாது முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்”
விதி, முறை, ஊழ், பால், தெய்வம், நியதி என்பன ஒருபொருட் கிளவி. எனவே தெய்வத்தின் பால் நம்பிக்கை வைத்த ஔவை பாடிய நல்வழி பாடல் இது. இந்த மரபு பொன்மணி வாக்கில் எப்படி வந்திருக்கிறது என்றால்,
“வேண்டாத ஒன்று வேண்டுதல் வேண்டிவரும்
தீண்டாத ஒன்றுமோர் தீண்டிடவே வேண்டிவரும்
ஈண்டிடும் கல்வியில் இல்லை பொறாமையும்
காண்டிடல் வெற்றி கடுகு”
“ஒன்றை நினைக்கின் அஃதொழிந்திட்டு ஒன்றாகும்” என்னும் ஔவை வாக்கு இப்படிப் பதிவாகியிருக்கிறது. “நல்லோர் மனத்தை நடுங்கச்செய்தனோ!? என்பார் வள்ளலார். அடக்கத்தின் மறு உருவம் வள்ளலார்.
“மற்றோர் வருந்த மனங்கோணச் செய்தல் ஓர்!
சிற்றறிவுச் சிந்தை சினமும் செய்யாதே
உற்றவரும் ஊடே உயரம் மறவா நீ
கற்றது கைம்மண் அறி!”
தமிழ்ப் பனுபவல்களின் சாரமே அறம்! அன்பு! அடக்கம்! என்னும் மூன்றுமேயாகும். இந்த மண்ணோடு கலந்த பண்புகள் அவை. அதனால் அவை மரபாயின. இந்த இன்னிசை வெண்பாவில் அடக்கத்தை முன்னெடுக்கும் ஒரு மரபியல் கவிஞரைக் காணுகிறோம்.
தத்துவத்தில் மிதக்கும் தாசன்
எந்தப் பாடலை எழுதினாலும் அதனுள் மானுட வாழ்வியல் தத்துவத்தைப் பொதிந்து வைக்கும் மரபினைத் தொடங்கி வைத்தவர் கண்ணதாசன். கண்ணதாசனைத் தன் வழிபடு குருவாகக் கொண்டிலங்கும் பொன்மணிதாசன் தான் எழுதும் பாடல்களில் தத்துவத்திற்குத் தனியிடம் கொடுத்தும் பாடல்களில் தத்துவ முத்திரை பதித்து வந்திருப்பதை, வருவதை அறிய முடிகிறது.
“விடிந்தது போலப் பிறப்பெனச் சொன்னான்
விந்தையிலையே இறப்பினி லெதுவும்
நடிக்க வந்த பின் நாணங் கொண்டால்
நாடக மெப்படி நன்றாய் நடக்கும்?”
அண்மைக்காலக் கவிஞரிடையே இத்தகைய இயல்பான தத்துவப் பார்வை காண்பது அரிது என்பது என் கருத்து.
“என்னுள் எனைத்தேடி என்னைநான் காண்கிலனோ?
என்னுள்ள ஏக்கத்தில் என்றேனும் ஓர்நாளில்
கண’ணுள வருமந்த காட்சியதில் நிச்சயமாய்
என்னையே காண்பேன் இனிது”
“தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே – ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே” என்பார் வள்ளலார்.
“மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா? தன்னை
தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா?”
என்பார் கண்ணதாசன். இந்த மரபியல் சிந்தனை பொன்மணிதாசனின் பாடல்களில் எதிரொலிப்பதைக் கேட்கலாம்.
“நானெழுதும் பாட்டுதனை நானெழுத வில்லையெனில்
தானெழுதிக் காட்டுகிறான் தம்பிரானும் யாரறிவார்?
நானெழுதேன் என்னுமுண்மை நானறிந்த போதினிலும்
நானென்ன சொல்வேன் சொல்!”
‘தத்துவம்’ என்பது மானுடத்தை விரக்தியை நோக்கி இழுத்துச் செல்லும் வெள்ளமன்று. மறைந்து கிடக்கும் உண்மையினைத் துல்லியமாகக் காட்டும் தனிப்பார்வை. “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்னும் ஒரு வரி மானுடத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் உள்ளடக்கியது என்பதைப் புரிந்து கொண்டால் நீண்ட நெடிய தமிழ்மரபைப் புரிந்து கொள்ள முடியும்.
காதலெனும் தீவினிலே
தற்காலக் கவிஞர்கள் சந்திக்கும் பெரிய சவாலே பாடுபொருள்தான். இராமனைப் பாடுபொருளாக்கிய கம்பனையும் கண்ணகியைப் பாடுபொருளாக்கிய இளங்கோவையும் சீவகனைப் பாடுபொருளாக்கிய தேவரையும் கொஞ்சம் தள்ளிவைத்து அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பாடுபொருளாக்கிக் காவியம் பாடியவர் சேக்கிழார். இதனை வேறு வகையாகச் சொன்னால் தனிமனித உணர்வுகளைப் பாடுபொருளாக்கிய பழந்தமிழ் கவிதை, அக்கோட்பாட்டிலிருந்து சற்று ஒதுங்கி மக்களுள் சிறந்தாரையும் கடவுளரையும் பாடிய ஒரு நிலை வந்தது. பின்னர் அதனின்றும் விலகிப் பல்லோரைப் பாடுபொருளாக்கிய சூழலுக்குள் தன்னை இணைத்துக் கொண்டது. பக்தி இலக்கியக் காலத்துள் பலரும் சேர்ந்து ஒருவனைப் பாடும் நிலை வந்தது. பன்னிரு ஆழ்வார்கள் பெருமாளைப் பாடியதும் நால்வர் பாடிய பதிகங்களும் இதற்கு எடுத்துக்காட்டு. இந்த நிலைதான் பெரும்பாலும் வள்ளலார் காலம் வரை நீடித்து வந்தது. அவருக்குப் பின்னாலே தோன்றிய மகாகவி பாரதி நாட்டு விடுதலைக்காகப் பாடினான். இது அவன் விரும்பிப் பாடிய பாடுபொருள். ஆனால் வேறுசில பாடுபொருள்களும் எட்டையபுரக் கவிஞன் தோட்டத்தில் பதியம் போட்டுக் கொண்டன. அவருடைய தோழர் பாவேந்தர் பகுத்தறிவையும் மொழியையும் இனத்தையும் பாடல் யாத்தார். பாரதியைப் போலவே இவரிடத்தும் பல பாடுபொருள்கள் பதியம் போட்டுக் கொண்டன. அப்படிப் பதியம் போட்டுத் தழைத்த பாடுபொருள்களில் ஒன்றுதான் காதல். பக்குவக் காதலைப் பாவேந்தர்போல் வேறு யாரும் பாடியிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அழகியலும் நெகிழ்ச்சியும் பின்னிப் பிணைந்த காதல் கவிதைகளுக்குச் சொந்தக்காரர் பாவேந்தர். பாவேந்தருக்குப் பிறகு, காதலை மென்பொருளாகப் பாடியவர் கண்ணதாசன்.
“வையம் சிலிரித்தது நற் புனிதை ஏகி
மலைபோன்ற நீர்க்குடத்தை ஒதுங்கிச் சென்று
கையலுத்துப் போகுதென்று மரத்தின் வேர் மேல்
கடிதுவைத்தாள்! “அத்தான் நீர் மறந்தீர் என்று
மெய்யாக நான் நினைத்தேன்!” என்றாள். அன்னோன்
வெடுக்கென்றுதான் அணைத்தான் “விடாதீர்” என்றாள்
கையிரண்டும் மெய்யிறுக இதழ் நிலத்தில்
கனஉதட்டை ஊன்றினான் விதைத்தான் முத்தம்
உச்சிமுதல் உள்ளங்கால் வரைக்கும் உள்ள
உடலிரண்டின் அணுவனைத்தையும் இன்பம் ஏறக்
கைச்சரக்கால் காணவொண்ணாப் பெரும்பதத்தில்
கடையுகமட் டும்பொருந்திக் கிடப்ப தென்று
நிச்சயித்த மறுநொடியே பிரிய நேர்ந்த
நிலைநினைந்தார் “அத்தான்” என்றழுதாள்! அன்னோன்
வைச்சேன் உன்மேல் உயிரைச் சுமந்து போவாய்!
வரும் என்றன் தேகம் இனிப் பிரியா” தென்றான்
நீர் மொண்டு வருபவர் நெருங்குகின்றார்
நினைப்பாக நாளைவா என்று சொன்னான்
காரிகையாள் போகலுற்றாள் குடத்தைத் தூக்கிக்
காலடி ஒன்றெடுத்து வைப்பாள் திரும்பிப் பார்ப்பாள்
ஓரவிழி சிவப்படைய அன்னோன் பெண்ணின்
ஒய்யார நடையினிலே சொக்கி நிற்பான்
தூரமெனும் ஒரு பாவி இடையில் வந்தான்
துடித்ததவர் இருவர் நெஞ்சும் இதுதான் லோகம்”
தலைவி, தலைவன் ஒருசில நிமிடச் சந்திப்பை அழியா இலக்கியமாக மாற்றிக் காட்டும் படைப்பாளுமை பாவேந்தருக்கே இருந்திருக்கிறது என்பதற்கு இதனை விட வேறு என்ன சான்று வேண்டும்? நம் கவிஞர்கள் இதனை உணரவேண்டும். தாம் எழுதியனவே கவிதை என்று அடம்பிடிக்கக் கூடாது. நீங்கள் எழுதியது கவிதை என்றால் பாவேந்தர் எழுதியதை என்னவென்று சொல்லலாம்.? படைப்பில் கவிஞன் ஒளிந்திருக்கக் கூடாது. மறைந்துவிட வேண்டும். இங்கே பாருங்கள் கண்ணதாசன் செய்யும் அட்டகாசத்தை!
“சிறுகுன்றை வெண்மேகம் மூடல் போலும்
சிலை தன்னை முகில்கொண்டு மறைத்தல் போலும்
இருகுன்றம் தலைகீழாய்க் கவிழ்ந்து பூமி
இடைசெல்ல முயல்கின்ற காட்சி போலும்
மருவொன்றும் இல்லாத தந்தப் பேழை
வைரத்துட் புதைந்துள்ள தன்மைபோலும்
ஒருஅன்றில் மற்றொன்றைச் சிறகு கொண்டே
ஒருவர்க்கும் தெரியாமல் மறைத்தல் போலும்
இரைகொண்ட கோழிதன் மூக்கைக் கல்லில்
இப்படியும் அப்படியும் தேய்த்தல் போலே”
பாவேந்தரும் கண்ணதாசனும் முத்தக்காட்சியைத்தான் சித்திரித்துக் காட்டியிருக்கிறார்கள். எவ்வளவு நளினம்? எவ்வளவு மென்மை? எத்தகைய உவமங்கள்? எத்தகைய எளிய சொல்லாட்சி! காட்சி கண்ணுக்குள்! இயல்பாகவே விரிகிறதே காட்சி! இத்தகைய நீண்ட நெடிய மரபில் வந்த காதல் என்னும் பாடுபொருள் தற்காலக் கவிஞர்கள் கையில் கொத்துப்புரோட்டாவாக மாறிப் போயிருக்கிறது என்பது என்ன ஒரு அவலம். இவர்கள் உருவகங்களே காதலை வெளிப்படுத்துவதற்குப் போதும் என்று கருதிவிடுகிறார்கள். யாப்பில் காதலைக் கொண்டு வர இயலாதவர்கள் குறுங்கவிதை, புதுக்கவிதை என்று விரிந்து பரந்து ஆழ்ந்த காதலைக் குறுக்கிவிடுகிறார்கள். “மார்பைத் தா” என்று மனைவி கேட்கிறாளாம்! “மடியைத் தா” என்று மணாளன் கேட்கிறானாம். இது நடப்பியல். ஆனால் கவிதையாகுமா? ராஜபாட்டையாகச் சென்றிருக்க வேண்டிய காதல் இன்றைக்கு ஒற்றையடிப் பாதையில் அஞ்சிக் கொண்டே நடப்பதை நான் காண்கிறேன். இது என் பார்வை. அந்தப் பழைய ராஜபாட்டையில் பயணிக்க எத்தனிக்கும் கவிஞர் சிலருள் பொன்மணிதாசனும் ஒருவர்.
வெண்பாவில் வைத்த விருந்து
குறள் வெண்பாவில் காதலைச் சித்திரித்துக் காட்டுவது அரிசியில் செதுக்குவது போல. அந்த வித்தையைத் திருவள்ளுவரைத் தவிர வேறு எவராலும் செய்ய முடியவில்லை. பதினெண் கீழ்க்கணக்கில் சில காதல் வெண்பாக்கள். அவை வெற்றிபெற்றனவா என்பது விடைகாண முடியாத வினா. புகழேந்தி நள தமயந்தி காதலைப் பாடிய பிறகுதான் வெண்பாவுக்கே ஒரு வெளிச்சம் வந்தது. என்றாலும் நளவெண்பாவைப்போல ஒரு முழுமையான நூலையோ காப்பியத்தையோ யாராலும் செய்ய முடியவில்லை, பாவேந்தரின் மணிமேகலை வெண்பாவைத் தவிர. உதிரிப்பாடல்களாகவே வெண்பாக்கள் இன்றைக்கும் இயற்றப்படுகின்றன. காரணம் பாடுபொருள் செறிவின்மை, கற்பனை வறட்சி, சொற்களஞ்சிய வறுமை முதலியனவே. இருந்தாலும் ஒரு இருநூற்றுப் பதினாறு இன்னிசை வெண்பாக்களில் பல்வகைப் பாடுபொருளைப் பாடியிருக்கும் பொன்மணிதாசன் கொஞ்சம் வேறுபடுகிறார்.
“தேனூறும் மாலையிலே தெள்ளமுது பொன்னுடலில்
நானூர நங்கையவள் நற்றமிழாய்க் கையசைக்க
பானூறு பாடுகிறேன் பாவையவள் மேனியிலே
பூநூறு பூத்திடும் போது”
பாட்டுக்கு உரைசொல்வது மலரைக் கசக்கி மோந்து பார்ப்பது போல. பூவைச் சூடிப் பார்க்க வேண்டும். வாடிப் பார்க்கக் கூடாது. இந்தக் கவிதை அத்தகையது. “பானூறு பாடுகிறேன் பாவையவள் மேனியிலே” கொஞ்சம் சிக்கலான இடந்தான். மிகக் கவனமாகத் தாண்டியிருக்கிறார். மேனியில் பாடியவர் இவராகத்தான் இருக்க முடியும். இந்தப் பாடலில் உள்ள தொடை விகற்பங்கள் பொறுக்கி எடுத்துப் போட்டவையல்ல. வழிகேட்டு வந்து தங்களுக்கான வாழ்வை அமைத்துக் கொண்டவை. முதலடியில் பொழிப்பு மோனை, அடுத்த மூன்றடிகளிலும் கூழை வந்து நெஞ்சை குளிர்விக்கிறது. சந்திப்பின் இனிமையைப் பொழுதின் மேல் ஏற்றிப் பாடியிருக்கும் கற்பனை வீச்சு அருமை மற்றும் இனிமை!
இன்னிசையில் நாட்டார் மரபு
கணக்கிலடங்காக் கம்பர்கள் வந்தாலும் எண்ணிலடங்காக் கவிப்பேரரசுகள் வந்தாலும் பேரரசுகளின் அடுத்த நிலையில் இருக்கும் கவிக்கோக்கள் என்னும் சிற்றரசர்கள் வந்தாலும் மரபுப்பாமணிகள் வந்தாலும் ஒரு சங்க இலக்கிய அகப்பாடலின் சித்திரிப்புக்கு அவர்கள் படைப்பு ஈடாகாது. அந்தச் சங்க யாப்பும் ஒரு நாட்டார் பாடல் கற்பனைக்கு ஈடு கொடுக்க இயலாது. சங்க இலக்கியம் கவிதைப் புனைவு. அன்றிலிருந்து இன்றுவரை நாட்டார் வழக்கு என்பது கவிதைப் புறப்பாடு.
“அறுபத்தி நாலு மொழம்
அள்ளி முடிச்ச கொண்டை
அவுந்த விபரம் பின்னாடி
ஏகுட்டி வேடுவப் பெண்ணே
அத எனக்குச் சொல்ல வேணும் வேடுவப் பெண்ணே”
தலைவி தன் காதலை வெளிப்பட உரைக்கக் கூடாது என்னும் அகத்திணை மரபை உடைத்து நொறுக்கிய பெருமை நாட்டார் மரபிற்கு உண்டு. இங்கே சிலர் எதற்கு மீறுகிறோம் என்று தெரியாமலேயே மீறிக் கொண்டிருப்பார்கள். மீற வேண்டியது எது என்பதும் அவர்களுக்குத் தெரிவதில்லை.
“மாரு படர்ந்தவரே! மனக்கவலை வச்சவரே!
தேமல் படர்ந்தவரே செல்லையா!
இப்ப தேத்தாதிங்க எம்மனசச் செல்லையா”
என்று பாடுகிறாள். என்ன ஒரு எளிமை? ஒப்பனை செய்யாத உணர்ச்சிகளின் ஊர்வலம். மாரு படர்ந்தவரே என்பதில் ஒளிந்திருக்கும் எழுவாய் ஆயிரம் அவையல்கிளவி விதிகளைக் கற்பிக்கிறது. இத்தகைய தூய்மையான உணர்ச்சி வெளிப்பாடுகளைப் பொன்மணிதாசன் கவிதைகளில் காணுகிறபோது “துள்ளாத மனமும் துள்ளும்”
“செப்பு நீ ஈயாவேன் செவ்விதழில் தங்கிடுவேன்!
ஒப்பினால் தேன்குடிப்பேன்! ஒப்பலையேல் ஓய்வெடுப்பேன்!
தப்பாது சொல்லுக நீ தாமதமும் வேண்டாமே!
எப்போது சேதி வரும் எனக்கு?”
எப்போது சேதி வரும் எனக்கு? என்னும் ஏக்கம் ஆணுக்கு வந்ததுதான் மரபு மீறல். இது மீறப்பட வேண்டும் என்று மீறியதன்று. தானாகவே மீறியது. காதல் தடையுடைக்கும் வெள்ளம் என்பதால். “சென்ற இடம் காணேன்! சிந்தை வாடலானேன்! சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்” என்னும் ஏக்கம் ஆதிமந்திக்குரியது. காதலுக்குப் பால் ஏது? திணை ஏது?
“கண்ணில் குடியேறிக் காதல்தீ பற்றவைக்கும்
வண்ணநிலா வந்தேறும் வாசல் திருவிளக்கே!
என்னாசைத் தீவுக்குள் எண்ணெயையும் வார்ப்பவளே!
எந் நாளில் என் ஆவாய்ச் சொல்?”
காமனவன் வில்லேந்திக் காத்திருக்கும் நேரம்பார்!
சாமம் வருமுன்னே சந்திப்போம் நல்லிரவை!
ஓமத்தீ நெஞ்சுள்ளே ஓங்குதடி மென்மேலும்
மாமன் மடி சாய மலர்ந்து”
வண்ணநிலா வந்தேறும் வாசல் திருவிளக்காம் காதலி. அடடா! நள்ளிரவு அல்ல நல்லிரவாம்! கவித்துவம் வெளிப்படும் மையம் இது. ‘காமனவன் வில்லேந்திக் காத்திருக்கும் நேரம் பார்” கற்பனையின் உச்சம்! கவிதை உத்திகளால் சிறப்பது. காதல் ஐந்தாண்டுத் திட்டத்திற்கு உட்பட்டதன்று தும்மல்போல் வந்து விக்கல் போல் மறைவது. அதனை எவ்வளவு நளினமாகச் சொல்கிறார் பாருங்கள்!
பசி பாடிய பாவலர்
“ஈன்றாள் பசி காண்பான் ஆயினும்” என்பதால் திருவள்ளுவர் பசியின் கொடுமையை எதிர்மறையில் பாடியிருக்கிறார். அது தீர்க்க வேண்டிய கடமை என்பதையும் குறிப்பாக உணர்த்தியிருக்கிறார். பசிப்பிணி போக்கிய அறச்செல்வியாக மணிமேகலையைச் சாத்தனர் படைத்துக்காட்டியிருக்கிறார். இவர்கள் வழித்தோன்றலாக வடலூரார் “உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர்., அவர் புறவினத்தார் மற்றவர்க்குப் பயிர்ப்புறுமோர் பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக” என்று அருள் செய்திருக்கிறார். “பாலென வருவோர்க்குப் பால் தருவோம்! பசுங் கூழென வருவோர்க்குச் சோறிடுவோம்” என்பார் கண்ணதாசன். இது மரபின் தொடர்ச்சி. இதுதான் கவிதை மரபு. இந்த மரபில் வந்த பொன்மணி பாடுகிறார்.
“உண்ணுதல் கேடில் ஒருவருக் கேனும் நீ
உண்ணப் பகிர்ந்தினிது உண்ண நலம்பயக்கும்!
தன்பசி தீருமுன் தாளாப் பசியுடையார்
வன்பசி தீர்த்தலே வாழ்வு”
‘தாளாப் பசி’ என்பதனாலே அது ‘வன் பசி’ எனப்பட்டது. வன்பசி தீர்த்தலே வாழ்வு என்னும் தீர்க்கம் சமுதாயச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் கவிஞனின் உள்ளத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
நிறைவுரை
இதுவரை கூறிய சில எடுத்துக்காட்டுக்களால் இன்னிசை வெண்பாவின் இலக்கணம் தெளிவாகியிருக்கலாம். பதினெண் கீழ்க்கணக்குப்போல ஒரு முழு நூலையும் இன்னிசை வெண்பாவினாலே யாத்த அரிய முயற்சியைக் கண்டிருக்கலாம். சமுதாய நோக்கும் கவித்துவமும் ஊறிக் கொண்டே இருக்குமானால் பன்முகப் பாடுபொருளும் கவிதையாக்கத்திற்குப் பயன்படும் என்னும் உண்மை அறிந்திருக்கலாம். பொன்மணிதாசனின் படைப்பாற்றல் புலப்பட்டிருக்கலாம். சந்தத்தை உள்வாங்கி இலக்கணம் பிசகாமல் எழுதும் அவரது புதிய முயற்சி புலப்பட்டிருக்கலாம். நாட்டுப்புற அழகியலைக் கவிதையில் கொண்டு வருவதிலும் காதலைப் பாடுவதில் மென்மையான அவரது அணுகுமுறையின் வீச்சையும் அனுபவித்திருக்கலாம். எல்லாவற்றையும் விட மரபு பற்றிய மயக்கம் களையப்பட்டிருக்கலாம். இத்தகைய வல்லமை உடைய கவிஞர் பொன்மணிதாசனை, அவருடைய கவிதைகளை என்வழி அறிமுகப்படுத்துவதில் வல்லமை பெருமை கொள்கிறது. வல்லமையின் பெருமையில் எனக்கும் பங்குண்டு.
(தொடரும்………)