மனித வடிவில்…… (சிறுகதை)

முனைவர் நா. தீபா சரவணன்
உதவிப்பேராசிரியர்
குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.
விடியற்காலை நான்கு மணி இருக்கும்… “மீனவர்கள் இன்றும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்”………. காவல்துறை வாகனம் எச்சரிக்கை விட்டுக்கொண்டு இருபக்கமும் மணல் நிறைந்த தார்ச்சாலை வழியாக வேகமாகச் சென்றது.
கீதாவுக்கு இது ஏழாவது மாசம் வயிற்றைத் தள்ளிக்கொண்டு கணவன் சுந்தரத்துடன் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஏங்க, மீனு இன்னும் கொஞ்சம் ஐஸ்கட்டில கெடக்கு. இன்னைக்கும் டூரிஸ்டுக்காரங்க வரலேன்னா அது நொஞ்சுரும். ஒலத்தவும் முடியாது. வெயிலடிக்குமானும் தெரியல”
“என்ன பண்ண நம்ம பொழப்பு இப்படி ஆயிப்போச்சு. தூக்கி வீசு. நமக்கு இந்த மீன் புடிக்கறதத் தவிர வேற ஒரு எழவுந்தெரியாது. ஏதோ கடலில போய் மீன் புடிச்சா மட்டு சாப்பாடு கெடச்சிடுமா?. எப்போ கடலுதண்ணி வந்து நம்ம ஊர அழிச்சுதோ அதோட நம்ம எனத்தோட வாழ்க்கெயும் முடிஞ்சு போச்சு.”
“ஏங்க புலம்புறிங்க. நா இப்ப என்ன கேட்டுட்டே”
“பொலம்பாம என்ன பண்ண. வருசத்துல நாலஞ்சு மாசம் மழக்காலமாப்போச்சு, கடலுக்கும் போக முடியல. மாசத்துல பாதி நாளு புயலு எச்சரிக்க. மீதி சில நாளு இலங்கக்காரங்களோட தாக்குதலு. தனுஷ்கோடினு ஒரு பகுதி இருந்துச்சு. அது அழிஞ்சு போய் இம்புட்டு வருசமாச்சு. அந்தப்பகுதி மக்களுக்கு ஏதாவது ஒரு பாதுகாப்பு இருக்கா. இல்ல, வீடுகதா நல்லா இருக்கா. ஏ… சுனாமி வந்த ஊரெல்லா மறுபடியும் பழைய நெலமக்கு வரல?. நம்ம ஊர மட்டும் பழய வரலாறா காமிச்சு சுத்துலா இடம்னு மாத்திட்டாங்க. இங்கே இருக்கறவங்க நெலமய யோசிச்சுப்பாரு. சுத்துலாக்காரங்கள நம்பித்தான நாம பொழப்பு நடத்துறோம். சுத்திப்பாக்க வர்றவிக எல்லாரு இங்க வந்து சாப்புடுறாங்களா?. யாரோ ஒரு சிலரு வராங்க. அதிலே பாதி நாளு அவங்களையும் விடறதில்ல. பொழுதுபோய் பொழுது விடிஞ்சா வயத்துப் பொயப்புக்கே வழியில்லாம இருக்கோ. வடக்கனுக ஒருத்த ஊர வுட்டுட்டு வந்தாப்போதும் அப்படியே அவ ஊரயே கூட்டிட்டு வந்து இங்கிட்டு தங்கிடறானுக. பொயப்புக்காக ஊருவிட்டு ஊரு போயிடறானுக. நாமதா சித்தப்பா, பெரியப்பா, மாமான்னு எல்லாரும் ஒன்னுக்குள்ள ஒன்னா கெடந்து இங்கேயே சாகுறோம். இதக்கடந்து நம்ம யோசனப் போகுதா? உரிமையோடு பழகுன இந்த மண்ண விட்டுட்டு எங்கிட்டுபோயி ஒண்டறது. வாழ்வோ? சாவோ? அது இந்த மண்ணோடு தா அப்படின்னு எங்கப்பங்கார சொல்லிப்புட்டு போய் சேந்துட்டா. மனசு கேட்க மாட்டேங்குது. நாளக்கு எம்புள்ளயும் இந்த சொந்த பந்தத்தை விட்டுப்புட்டுப் போக மனசில்லாம இங்கனயே தங்கிக்கினு, நம்ம பொழப்பு இப்படித்தா முடியப் போகுது .” என்று தலையில் தட்டினான்.
வங்காள விரிகுடாவும், இந்தியப்பெருங்கடலும் சங்கமிக்கின்ற அழகிய இடம். பல கிலோமீட்டர் தூரத்திற்குத் தார் சாலையின் இரு பக்கங்களிலும் கடல். ஒரு பக்கம் அமைதியானக் கடல். மறுபக்கம் அதிபயங்கர ஓசையை எழுப்பிக்கொண்டு அலைகளுடன் ஆர்ப்பரிக்கும் கடல். சுற்றுலா வழிகாட்டிகள் அமைதியானக் கடல் பரப்பைப் பெண் கடல் என்றும் ஆர்ப்பரிக்கும் கடல் பரப்பை ஆண் கடல் என்றும்தான் விளக்குகிறார்கள். திரும்பிய திசை எங்கும் கடல்நீர். ஆர்ப்பரிக்கும் அலை ஓசை. மிதமான ஈரக்காற்று. சுண்ணாம்பு போன்ற வெள்ளை மணல் படுகைகள். காற்றில் அடித்து வரும் அலைகளிலிருந்து நம்மீது தெளிக்கும் பன்னீர்த்துளிகளாய் நீர்த்துளிகள். கடலலைகளை இரசிக்கப்பிடிக்காத மனித மனமும் உள்ளதோ. அலையின் ஓசைகளில், அதன் ரம்மியங்களில் மூழ்கிப்போவது எத்தனை எத்தனை நினைவலைகள். ஆபத்துகள் நிறைந்தது என்று தெரிந்தும் கால்களை நனைக்காமல் மீள மனம் வருமா?.
“மத்தவங்களுக்கு அழகா இருக்கற கடலு நம்மளபோல இருக்கற அன்றாடங்காட்சிகளுக்கு ஒரு சாபமாப்போச்சு. அறுபது வருஷமாச்சு நாம எல்லாத்தயும் எழந்து”
என்று புலம்பலைத் தொடர்ந்தான் சுந்தரம். “நம்ம பொழப்பப்பாரு…… யாராவது சுத்துலாக்காரங்க வந்தா போய் ‘சாப்பிட வாங்க’. ‘சாப்பிட வாங்க’ன்னு கெஞ்சி கையப்புடிக்காத கொறயா இழுக்கணும். அவன் பக்கத்துக் கடைக்கு போயிட்டா அது மாமன் மச்சா கடையா இருந்தாலும் நமக்கு வியாபாரம் போச்சுன்னு அம்போன்னு இருக்க வேண்டியதுதா. அந்தி விழுந்தா வெளிச்சத்தில உட்கார வகுசு இருக்கா? பொழுதுபோக ஒரு டி.வி பொட்டி இருக்கா? ஊருக்கெல்லா கரண்டு இருக்கு. ஆனா நம்ம பொழப்பு இருட்டுக்குள்ளயே கெடக்கு. இங்க வர்றவனுகளப் பாக்கும்போது வயிறு பத்திகிட்டு வருது. அடுத்த ஜென்மத்துலயாவது நாம இவனுக வீட்டுல நாயாவாவது பொறக்க மாட்டோமான்னு தோணுது. என்னக்கோ ஊர சுத்திப்பார்க்க வர்றவனுக கடலுக்கு எல்லையே இல்லன்னு ஆசையா பாத்துகிட்டுப் போறானுங்க. ஆனா, நமக்கு இந்த ரெண்டு கடலுந்தானே எல்லையாவேப் போச்சு. ஒவ்வொரு பொழுதயும் பயந்துகிட்டே கழிக்க வேண்டியதா இருக்கு. இதில பாதி நாளு ஏதாவது மண்டபத்திலத் தங்க வெச்சர்றாங்க. கடல் தாயே….. ஒனக்குக் காது கேட்குமா……”
“போதும் மாமா.. நா ஒண்ணும் பேசல. சும்மா பெனாத்தாம போய் படு. நாளைக்குக் கடலுக்குப் போவியாமா.”
அடுத்தநாள் பொழுதுசாய சுந்தரம் வலைகளைத்தூக்கிப் படகில் போட்டுக்கொண்டு கடலை நோக்கிப் புறப்பட்டான். சாயுங்காலம் கிளம்பினால்தான் விடியற்காலம் மீனுடன் திரும்ப முடியும். இரவு அலைகள் அதிகமாக இருக்கின்ற நிலவொளியில்தான் மீனவர்களின் வேலையே ஆரம்பமாகிறது.
2
“ம்மா ரொம்பப் பசிக்குது மா…………. இன்னிக்காவது நம்மள யாராவது பாப்பாங்களாமா…….”
குலசேகரனோட வாயப்பொத்தினாள் இலட்சுமி.
இலங்கையிலிருந்து எப்படியோ தப்பித்து வந்து இராமேஸ்வரம்சென்று, மகனை அப்துல்கலாம்போல படிக்க வைக்கணும்ங்கிறது குலசேகரனுடைய அப்பா பூமிநாதனுடைய கனவு. பூமிநாதனோட அப்பாவின் குடும்பம் இராமேஸ்வரம் வழியாக மீன்பிடிக்க வந்தபோது எல்லை மீறினதால இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டவர்கள். அக்கைதிகளுள் ஒரு கூட்டத்தை உருவாக்கி அங்கேயே தங்கி விட்டார். அவரின் சண்டித்தனத்துக்குச் சரியானது இயக்கத்தில சேர்வதுதான் சரியென்று இணைந்து விட்டார். உடன் வந்த நாலு பேரையும் சேர்த்து விட்டு, அங்கேயே கல்யாணமும் முடித்து பூமிநாதனப் பெற்றெடுத்தார். இயக்கத்தோடப் போராட்டப் பயிற்சிக்காக பூமிநாதனையும் அழைச்சிட்டுப் போவார். மறைந்திருந்து தாக்கும் பயிற்சி அளிக்கும்போது கால்தவறி விழுந்து கல்லில் மண்டை அடி பட்டு இறந்திட்டார். மகனையும் அதே இயக்கத்துக்குத் தாரைவார்த்து கொடுத்துவிட்டார். ஆனா பூமிநாதன் வளர்ந்து பெரியவனானதும் தெளிவானவனாகிவிட்டான். ‘எக்காரணம் கொண்டும் தன் மகனை இந்த இயக்கத்தில சேர விடக்கூடாதுன்னு மனைவி இலட்சுமியையும் மகனையும் அவர் இயக்கத்தில சேர விடவே இல்லை. அவர் சாகும்போது கடைசியா ‘எம்புள்ளய எப்படியாவதுப் படிக்க வைன்னு’ சொல்லிவிட்டு கண்ண மூடினார்.’ என்று கூறிய அவருடைய நினைவுகளை அசைபோட்டாள் இலட்சுமி. ‘
‘அவருக்கு சத்தியம் செஞ்சுக் கொடுத்த வார்த்தைக்காக எம்புள்ளைய கூட்டிட்டு யாருக்குந்தெரியாம காட்டுவழியா இரவெல்லா நொழஞ்சு நொழஞ்சு ஒரு கடல் எல்லைக்கு வந்திருக்கே. ஏதாவது மீன் புடிக்கிறவங்க கண்ணுல பட்டாக்கூடப் போதும். அவங்ககிட்ட எப்படியாவது கேட்டு இராமேஸ்வரம் போயிடுவே. நேத்து இரவு முழுக்க இந்தக் குளுருலேயே உட்கார்ந்து கெடக்கோ. ஒரு படகெயாவது கண்ணுல காட்டு சாமி. என்று இலட்சுமி வானத்தைப் பார்த்துக் கும்பிட்டாள். ‘குலசேகர அப்படியே அவென்ட அப்பாவ உருச்சு வெச்சிருந்தா. அவ அப்பா எப்பவுமே இவனெ கலாம் கலாம்னுதா கூப்புடுவாரு. எப்படியாவது என்டெ தங்கத்தெ பள்ளிக்கொடத்தில சேத்தரணு. நானும் அவரும் ஜீவிச்ச வாழ்க்கக்கு என்னெ கண்ணோட மணியா வெச்சு பாத்ததுக்கு அவருக்காக நா இதக்கூட செய்யலேன்னா அவரோட ஆத்மா சாந்தி அடையாம அலயுமே.’ என்று புலம்பினாள்.
காடு வழியாக நிமிர்ந்து நடக்காமல் நடு நடுவே முட்டிப்போட்டு மறைந்து மறைந்து நடந்து வந்ததில அவர்களுடைய உள்ளங்கைகளில் வலியின் கொடூரம். குலசேகரனின் தலமுடியைக் கைகளால் கோதிவிட்டு கண்களிலிருந்து வடிந்த கண்ணீரை புடவை முந்தானயால் ஒத்தினாள். திங்கட்கிழமைக் கெளம்பனது. இப்போ புதன்கிழமை. நடுராத்திரி ஆயிடுத்து. ‘தூரத்தில் ஒரு படகு தெரிந்தது. சாமி இந்தப் படகெயாவது காட்டிடு சாமி.’ மெதுவாக நகர்ந்து வந்த படகு இலட்சுமியைப் பார்த்து நகர்ந்து வந்தது.கடவுளுக்கு அவளது பிரார்த்தனை கேட்ட து.
திருமணமாகி நான்கு வருடத்திற்குப்பிறகு கருத்தரித்த கீதாவை நினைத்துக்கொண்டு படகை செலுத்திய சுந்தரத்தின் கண்களுக்கு, தூரத்தில் ஒரு சின்ன கை அசைவது தெரிந்தது. மீன்பிடி படகு என்பதால் கொஞ்சம் வேகமாகச் செல்லும். மனம் கேட்கவில்லை. அவர்களை நோக்கிப் படகை நகர்த்தினான். இன்னும் இரண்டு மீட்டர் போனால் இலங்கை எல்லைப்பகுதி வந்து விடும். அதற்குமுன் நீர் ஒழுகிப்போவது போன்ற அலைகள் குறைந்த பெரிய நீர் பரப்பு உள்ளது. சிறுவன் அந்தத் தண்ணீரில் குதித்துவிட்டான். யாரும் இல்லாமல் தத்தளிப்பானோ? மூழ்கி விடுவானோ?. அவனெக் காப்பாத்தப் போய் நமக்குச் சிக்கலாகி விடுமோ? பரவால்ல. சின்னப்பயனா தெரியுறா. நாலு வருடமா குழந்தை இல்லாத கவல என்னன்னு எனக்குத் தெரியும். படகு அவன் அருகில் செல்வதற்கு முன் அவன் கொஞ்சதூரம் நீந்தி வந்து விட்டான். அவனுடன் நாப்பது நாப்பத்தைந்து மதிக்கத்தக்க ஒரு பொண்ணும்.
‘எங்கள காப்பாத்தவந்த எங்குலசாமி, எங்கள எப்படியாவது கூட்டிட்டு போ சாமி! எம் பையனைப் படிக்க வைக்கணு. இங்கே இருந்தா இயக்கத்தில சேர்த்து விட்டுருவாங்க.” என்று சுந்தரத்தைப்பார்த்து கையெடுத்து கும்பிட்டாள்.
“ஐயோ! சாமிங்களா நீங்க இலங்கக்காரங்களோ. ஆளவிடுங்கப்பா கொழந்தப்பய தண்ணீல கெடக்கானேனு வந்தே. இந்த வேல நமக்காகாது. ஆள விடுங்க’ சாமி என்று துடுப்பைத் திருப்பினான்.
“மகனே ஒன்னய பாக்குறதுக்கு எனக்குப் பொறக்காத பையனாட்ட தெரியுற தங்கோ. எங்களுக்குக் கல்யாணமான வருசத்தில கொழந்த பொறந்திருந்தா ஒன்னய மாதிரி வளர்ந்திருப்பாஞ்சாமி. எட்டு வருஷம்கிட்ட கொழந்த இல்லாம எல்லாக்கடவுளையு வேண்டிதா கெடச்சது. ரெண்டு நாளா எங்களக் காப்பாத்த கடவுள் வடிவத்தில யாராவது வருவாங்கன்னு காட்டுக்குள்ளேயே கெடந்தோ மகனே. எப்படியாவது கருணை வையுப்பா. உங்குடும்ப நல்லா தழச்சு வளரு. என்று ஈரச்சேலையுடன் வணங்கினாள்.
“ம்மா இங்கன இருந்து, அங்க ஒருசிலர கூட்டிக்கினுப்போக வருவாங்க அப்ப வாங்க. இப்ப வந்தா சிக்கிருவீங்க.”
தாயின் கதறல், சிறுவனின் முகம், ‘என்டெ மகனாட்ட இருக்கேன்னு வெள்ளந்தியா சொன்ன வார்த்தைகள். அந்த நேரத்தில அவர்களை அப்படியொரு நிர்கதியில் விட்டுட்டுப்போக அவனுக்கு மனம் வரவுமில்லை. அவனை என்னமோ செய்தது.
“அம்மா நாமபோற வழியில போலீசுக்காரனுவ பாத்தாங்கன்னா என்னயும் சேத்து உள்ள வச்சிருவானுக.”
சுந்தரத்தின் மன எண்ணங்களை உணர்ந்தவளாய் “இல்லெ மகனே நான் ஒனக்கு ஒங்க குடும்பத்துக்கு எந்த தொந்தரவு கொடுக்கமாட்டே. என்னை நம்புப்பா. இது என்டெ வீட்டுக்காருமேல சத்தியம். எங்கள எப்படியாவது கரைகிட்ட வர கூட்டிக்கிட்டுப் போனாப் போதும். அதுக்கப்பறம் நாங்க கண்ணுலகூட படமாட்டோம். என்ன நம்புப்பா. இது என்டெ கடவுளா இருக்கற வீட்டுக்கார நெனச்சு சொல்றே. என்ன கரையில மட்டும் சேர்த்தாப் போதும்.
“நீங்க அங்கன போயி என்ன பண்ண முடியு?. நீங்க பேசுறதே ஒங்கள மாட்டிக்கொடுத்துரு.”
“இல்லையப்பா எனக்கு ரொம்ப குளிருது. குளிர்ல வாய் ஒளருது. எனக்கு வேற மாதிரியும் பேச வரும். என்ன பண்ண என்னோட வீட்டுக்காரோட மொழிய பேசும்போதெல்லா அவர்கூட இருக்கறதா நெனப்பு. நான் என்ன மாத்தி பேசிக்கடறே.”
அவனுக்கு விட்டுச்செல்லவும் மனமில்லை. சிக்கலில் மாட்டவும் விருப்பமில்ல. சிலநிமிட தயக்கத்திற்குப்பிறகு “சரி சீக்கிர ஏறுங்க. ஆனா நாஞ்சொல்றத நீங்க கேட்கணு. நல்லா குமிஞ்சுதா ஒட்காரோனு. போலீஸ் ரவுண்ட்சு போயிட்டு இருப்பாங்க. ஏறுங்க……… நானே சாப்பாட்டுக்கே வழியில்லாமதா மீன்புடிக்கவே வந்தே. கொஞ்சம் முன்னாடிதானே சரக்குவண்டி போச்சு, அதுல போயிருக்கலாமில்ல.”
“இல்லெ சாமி அதுல நெறெய பேரு இருந்தாங்க. எங்களக்காப்பாத்த உங்களாட்ட ஒரு கடவுள், ஒரே ஒரு கடவுள் வருவாருனு காத்துக்கெடந்தோ.”
இருவரையும் ஏறச்சொல்லி சைகைக் காட்டினான். இருவரும் சுந்தரத்துக்கு நேராக மீன் வலைக்கு அந்தப்பக்கம் உட்கார்ந்தனர், மீன்கள் வலைக்குள் துள்ளிக் கொண்டிருந்தன. வலைக்கு அந்தப்பக்கமாக இருவரும் அமர்ந்தனர். மௌனம் சிறிதுநேரம் நீடித்தது.
“இதா பாருங்கம்மா மணி ரெண்டுதா ஆகுது. நாம்போயி கரையில எறக்கி விட்டுடறே. அதுக்கப்புற என்னான்ட எதுவு கேட்டு தொந்தரவு பண்ணக்கூடாது.”
“இல்லை மகனே உங்களை ஒரு தொந்தரவும் செய்ய இயலாது என்னை நம்புங்கள்.”
சற்றுதூரம் சென்றதும் மோட்டார் படகில் போலீஸ்காரர்கள் ரோந்து வருவது தெரிந்தது. மீன்பிடித்து வருபவர்களை அவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள். சந்தேகத்திற்கு உரியப் படகுகள் ஏதாவது தென்படுகிறதானு பார்ப்பதுதான் அவர்கள் வேலை.
“அம்மோ போலீஸ் வண்டி வருது. அப்படியே படுத்துக்கோங்க.”
தனது சேலைக்குள் பொதிந்த உடம்போடு சேர்த்து இறுக்கி அணைத்திருந்த தனது மகனையும் சேர்த்து அப்படியே படுத்துக்கொண்டாள். சுந்தரம் சீக்கிரமாக தார்ப்பாயைத் தூக்கி அவர்கள் மேலே போட்டுவிட்டு அதற்கு மேல் மீன்வலையைத் தூக்கிப் போட்டான். மீன்கள் வலைக்குள் பிடைவது தார்ப்பாய் வழியாக அவர்கள் உணர்ந்தனர், முடியாமல் குலசேகரன் நெளிந்தான். அவனை மேலும் இறுக அணைத்துக்கொண்டாள். உயிரைப் பாதுகாத்து ஊர்ப்போய் சேருவது எண்ணமாக இருப்பதால் அவள் தன் ஆடையின் ஈரத்தைப்பற்றி யோசிக்கவில்லை. ஆடை முழுவதும் ஈரம். குளிர் நடுக்கியது. சுமார் அதிகாலை இரண்டரை மணி இருக்கும், படகு கரையை அடைந்தது. உடன்வந்த படகுகள் எல்லாம் கரைசேர்வதுவரை மெதுவாக துடுப்பிட்டான் சுந்தரம். “எல்லோரும் அரை மணி நேரத்தில் மீன மார்க்கெட்டுக்கு எடுத்துட்டுப்போயிடுவாங்க. அதுக்கப்புறம் யாருக்கும் தெரியாம எறங்கிப் போயிடனு சரியா…”
அவள் கையெடுத்துக் கும்பிட்டாள்
சுந்தரத்தின் மச்சினன் கடற்கரையில் சைக்கிளில் காத்து நின்றான். சுந்தரன் மச்சினனுடன் மீனை எடுத்துக் கொண்டு போனான். இலட்சுமி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, யாரும் இல்லாத சமயம் பார்த்து தலையைத்தூக்கி ஒருமுறை கடலைத் திரும்பி பார்த்தாள். ‘இவ்வளவு தூரம் கடந்து வந்து விட்டோம்! பிறந்த மண்ணை விட்டு! அடிமை மண்ணை விட்டு! தன் கணவன் வாழ்ந்த மண்ணை விட்டு. கண்ணீர் ததும்பி நின்றதால் கடல் எல்லை தண்ணீரின்றி சலனமற்று இருளாகத் தெரிந்தது. அமைதியான கடல். எல்லையில்லா நீர்ப்பரப்பு. மீண்டும் தான் வாழ்ந்த மறுகரையை நினைக்கவே கூடாது என்று குனிந்து கடல்நீரை எடுத்துத் தலையில் தெளித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டாள். குலசேகரன் தலை மீதும் தெளித்து விட்டாள். கண்களில் ஒத்தி கொண்டாள்.
கும்ம்ம்மிருட்டு. சாலை எது? ஓரக்கரை எது? என்று தெரியாமல் இருந்தது. அந்த ஊர் மக்களின் காவல்தெய்வம் சங்கிலிக்கருப்பனாக கடல் மட்டும் ஓயாமல் சிலம்பொலிகளாய் அலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது. தனுஷ்கோடியின் வளைவு நன்றாகத் தெரிந்தது, இரு கடலும் சங்கமிக்கின்ற பகுதியைக் கூர்ந்து கவனித்தாள், அவளின் இடதுகை பக்கமுள்ள கடலோ அலைகளை வேகமாக வீசியது, வலது பக்கக் கடல் அமைதியாக இருந்தது. துணியின் ஈரமும், காற்றின் வேகமும், யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயமும், அவர்களது நடையின் வேகத்தைக் குறைத்தது. குலசேகரனை இழுத்துக்கொண்டு முன்னோக்கி வேகவேகமாக நடந்தாள். ஆங்காங்கே சிலரின் நடமாட்டம் தெரிந்தது. ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை. இனியும் விடிவதற்கு நேரம் இருக்கு. ஓடிப்போய் பாதி பிய்ந்து தொங்குகின்ற ஓர் ஒற்றைக் குடிசையின் பின்புறமாகத் தஞ்சம் புகுந்தனர்.
“ம்மா எனக்கு ரொம்ப ஒறக்கமா வருது.” இரண்டு நாட்களாக அலைந்துவந்த களைப்பு உண்மையில் அவளையும் தளர்த்தவே செய்தது.
“ஒறங்கலாம் பா. நல்லாவெடியறவர இங்கதா இருக்கணு. வெடிஞ்சதுக்கப்பறோ டூரிஸ்டு வண்டிக வரத்தொடங்கனதும் கூட்டத்தோடு கூட்டமா இங்கன இருந்து போயிரலா.” என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, பிய்ந்துபோன கூரைக்கடியில் கிடந்த சில அட்டைகளை எடுத்து விரித்தாள். மகனை அதில் படுக்கச் சொன்னாள். அவன் படுத்ததும் உறங்கி விட்டான். காற்று பலமாக வீசியது. மணற்துகள்கள் குலசேகரனின் தலை முழுக்க ஒட்டியிருந்தன. அவனுடைய தலையை தட்டி விட்டுக்கொண்டும், தடவிக்கொண்டும், தூங்கிக்கொண்டிருந்த குலசேகரனை பார்த்துக்கொண்டே இருந்தாள். கன்னத்தில் அழுத்தி ஒரு முத்தமிட்டாள். ‘என் ராசா என்னோட அடிவயுத்தில பால்வார்க்க வந்தவ. நல்லா இருப்படா மகனே. உனக்கு எந்த துன்பமும் நேரக்கூடாது என்று மனதில் எண்ணியவளாய் குளிரில் நடுங்கிக்கொண்டு இரு தொடைகளுக்கிடையில் கைகளை வைத்துப் படுத்துக்கொண்டிருந்த தன் மகன்மீது கண்ணீர்த்துளிகள் விழாமல் புடவையால் துடைத்துக் கொண்டாள். பாதி கிழிந்த அரிசிப்பையொன்று அங்கு கிடந்தது. அந்த அரிசிப்பைக்குள் குலசேகரனின் கால்களைத் தூக்கி வைத்தாள். முட்டி வரை மூடியது. பாதி உடல் மணலிலும் பாதி உடல் அட்டைகளிலுமாகப் படுத்துக்கொண்ட அவள் மகனின் மேனியை சேலையால் இறுக மூடினாள். தலை மணலில் படாதவாறு தனது கையை நீட்டி அதன்மேல் தலையை மெதுவாகத் தூக்கிவைத்தாள். கொஞ்சம் குளிர் நின்றது.
3
அசதியில் நன்றாகத் தூங்கிவிட்டார்கள். குடிசைக்குப்பின்புறம் என்பதால் யாரும் கவனிக்கவும் இல்லை. விடியலின் வெளிச்சம் பளீரென இருந்தது. வண்டிகளின் இரைச்சல், மக்களின் பேச்சு சத்தம், பலமொழிகளின் கலவை, காதுகளில் விழுந்தன. நாம் தமிழ்நாட்டில் இருக்கிறோமா? இல்லை ஏதாவது வடக்குப் பகுதிக்கு வந்துவிட்டோமா எனும் அளவிற்கு இந்தி பேசுபவர்களின் கூட்டம் அதிகம், வயதான பெண்மணிகள் அரைக்கால் சட்டையில் வெள்ளைவெளேர் என்றிருக்கும் தொடைப்பகுதி தெரியும்படியான டிரௌசரும், பனியனும் போட்டிருந்தனர். பனியனில் மார்புக்கு நடுவில் மாட்டிய கூளிங்கிளாசுடன் நிறையப் பெண்கள். உடையில் ஆண்பெண் வித்தியாசமே தெரியவில்லை.
சுற்றுலாப்பயணிகளை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த இலட்சுமி ‘என்ட வீட்டுக்காரரும் என்ன எப்பவும் அழகா சிங்காரிச்சுக்கத்தா சொல்லுவாரு. வாடிப்போய் இருந்தா அவருக்கும் பிடிக்காது. என்ன வருத்தமானாலும் நாம உடையில காட்டக்கூடாதுங்கறது அவரு விருப்பமா இருந்துச்சு.” என்று பெருமூச்சு விட்டாள்.’
இரண்டு நாட்களாகப் புயல் எச்சரிக்கை காரணமாக தனுஷ்கோடிக்குச் சுற்றுலாப்பயணிகள் செல்ல இடப்பட்டிருந்த தடை நீங்கியது. அடுத்தநாள் நிறைய கூட்டம். கூட்டத்தோடு கூட்டமாக இலட்சுமியும் பையனுடன்சென்று தனுஷ்கோடியின் அழகைக் கண்டு ரசித்தாள். இரண்டு கடல்கள் சங்கமிக்கின்ற காட்சியைப்பார்க்க அவ்வளவு இரம்மியமாக இருந்தது. காலை உணவிற்கு நல்ல வேளை சுந்தரம் கொடுத்த பிஸ்கட் இருந்தது. தப்பிவந்து தமிழ்நாட்டை அடைந்ததில் உருவான மகிழ்ச்சி வயிற்றை அடைத்திருந்தது. எப்படியாவது இராமேஸ்வரம் கோயில் செல்லவேண்டும். அரசு பஸ்ஸில் ஏறினால் இடையில் செக்கிங் வந்தால் மாட்டிக்கொள்வோம், கையில் காசுவேறில்லை. இரவு முழுவதும் அமைதியாக இருந்த இடம் காலையில் சுற்றுலாப் பயணிகளின் வண்டிகளால் போக்குவரத்து நெரிசல் நிரம்பி வழிந்தது. வெள்ளரிக்காய், மாங்காய் விற்பவர்கள், வண்டிகளில் வேர்க்கடலை மற்றும் சோளம் விற்கும் வியாபாரிகள், சங்கினாலான அலங்கார பொருட்களைத் தூக்கி நடப்பவர்கள். புகைப்படம் எடுக்கும் கலைஞர்கள். வழியோரங்களில் சுடச்சுட மீன் வறுவல்களின் வாசம். கருவாட்டுக்கடை, குளிர்பானக்கடை, ஐஸ்க்ரீம் வண்டி என அவ்விடமே பரபரப்பாக விளங்கியது. அதிகாலையில் அமைதியாக இருந்த இடமா இது. இடையிடையே காக்கி உடை அணிந்த காவல்காரர்களின் அறிவிப்பு. யாராவது வண்டியின்டிக்கியைத்திறப்பார்களா என்று ஒவ்வொரு வண்டியாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். ரொம்ப நேரம் கழித்து ஒரு ஆம்னி பஸ்ஸின் டிக்கியைத் திறந்தவர் அதை சரியாக மூடாமல் போனதைப் பார்த்தாள். அதற்குள் ஏறி பெட்டிகளுக்கிடையில் அவனுடன் அமர்ந்துகொண்டாள்.
பஸ் இராமேஸ்வரம் நோக்கிச்சென்றது. பூனாரைமுனை வந்ததும் ஏதோ சந்தேகம் வண்டியை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கி டிக்கியைத்திறந்தார். இலட்சுமி கையெடுத்துக் கும்பிட்டாள். இவர்களை இப்போது நடுவில் இறக்கி விட்டால் நாம் சிக்கிவிடுவோம். உள்ளிருக்கும் பயணிகள் என்ன நினைப்பார்கள். பேசாமல் கதவை இழுத்து மூடிவிட்டுச் சென்றுவிட்டான். சந்தன மாரியம்மன் தெரு வந்ததும் டிரைவர் வண்டியை மறுபடியும் நிறுத்தினார். ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத அந்தப்பகுதியில் ஓட்டுநர் இறங்கி டிக்கியைத் திறந்து அவர்களை வெளியில் இறங்கும்படி சைகைக் காட்டினார். கையைப்பிடித்து இழுத்து வெளியில் இறக்கிவிட்டார். இருவரும் திசையற்று நின்றனர். இவ்வளவு நேரம் மூச்சடக்கி இருந்ததற்கு வெளிக்காற்று ஆசுவாசமாகத்தான் இருந்தது. ஏதோ லட்சியத்தை அடையப்போவதுபோன்ற உள்ளுணர்வு. மகனின் தலைமுடியைக் கோதிவிட்டு நெற்றியில் முத்தமிட்டாள். “பதினொரு வயசுல எவ்வளவு பொறுமை, எவ்வளவு சாந்தம், எதையும் பொறுமையாக எதிர்கொள்ளும் சகிப்புத்தன்மை உண்மையில் நான் கொடுத்துவெச்சவதா. பசிவந்தாக்கூட வாயத்திறந்து கேட்க மாட்டேங்கறா. என்னுடைய நெலம தெரிஞ்சு நடத்துகுறா எஞ்செல்லமே” என்று குலசேகரனை, நாதியற்றவளாய் கட்டி அணைத்தாள்.
இறக்கிவிட்ட பேருந்து சென்ற வழியிலேயே சிறிதுதூரம் நடந்தனர். அங்கேதான் அப்துல்கலாம் அவர்கள் பிறந்த வீடு, நினைவு மண்டபமாக இருந்தது, அவளுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அந்தஇடம் அவளுக்குக் கோயிலாகத் தெரிந்தது. நின்ற இடத்திலேயே நின்றுகொண்டு மண்ணைத் தொட்டு வணங்கினாள். மகனையும் தொட்டுக் வணங்க சொன்னாள். மனம் குளிர்ந்தது. கடல்வெப்பக்காற்று அவர்களைத் தென்றலாக வரவேற்றது. இராமேஸ்வரம் கோயிலுக்கு எப்படி போகவேண்டுமென்று வழிநெடுக விசாரித்து விசாரித்து, கோவில் வாயிலை அடைந்தனர்.
இராமாயணத்தில் இராமர், இராவணனைக் கொன்ற பாவத்தைத் தீர்ப்பதற்காக இலங்கையிலிருந்துத் திரும்ப வரும்போது இராமேஸ்வரம் மணலால் லிங்கம் உருவாக்கி பூஜித்து பாவத்தைக் கழித்த இடம் என்பது வரலாறு. இராமேஸ்வரம் கடலில் மூழ்கி நீராடினால் வாழ்க்கையில் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை. சின்ன வயதிலிருந்தே இதேபோன்ற புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தவள் இலட்சுமி. எனவே, தனது புதிய வாழ்க்கையைக் கடலில் நீராடி பாவங்களைக் கழுவிய பிறகு தொடங்கலாமென்று கடலை நோக்கி நடந்தாள்.
இராமேஸ்வரக் கடலில் அவ்வளவாக அலைகள் இல்லை. அமைதியாக இருந்தது. இராமர் பூசை செய்ததால் அவரைப்போலவே அமைதியாகிவிட்டதோ? இலட்சுமி மகனுடன் கடலில் மூழ்கி எழுந்தாள். பலராலும் அகற்றி விடப்பட்ட துணிகள், துண்டுகள், விட்டுப்போன சோப்புகள் என ஆங்காங்கே கிடந்தன. அவள் மனதிலும் புதிய எண்ணம் தோன்றியது. கடலில் நீராடியபிறகே கோயில் பிரகாரத்திற்குள் நுழைய வேண்டும். கோயிலிலுள்ள 22 தீர்த்தங்களில் நீராடினால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது ஐதீகம். ஆனால் சீட்டு எடுக்க வேண்டும். சீட்டு வாங்கக் காசில்லை. கோயிலுக்கு வெளியிலேயே பலர் வாளியை வைத்துக்கொண்டு அழைத்தனர்.
காற்றில் ஏதோ ஒரு சீட்டு பறந்துவந்து இலட்சுமியிடம் விழுந்தது. சீட்டை கையிலெடுத்து கண்களில் ஒத்தினாள். தீர்த்தமாடும் பகுதிக்கு நடையும் ஓட்டமுமாக விரைந்தாள். அன்றைக்குக் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. ஏனோ, மனதில் குளிர்ச்சி பொங்கியது. தீர்த்தத்தில் நீராட எங்கு முதலில் செல்லவேண்டும் எனற ஐயமின்றி ஒவ்வொரு கிணறுக்கருகிலும் ஒன்று இரண்டு என்று எழுதிவைக்கப்பட்டிருந்தது. முதல் தீர்த்தம் மகாலெட்சுமி தீர்த்தம். தன்பெயரில் முதல் தீர்த்தம் இருந்ததில் அவளுக்கு பூரிப்பு. கருங்கற்களாலான ஆழமான சின்னக் கிணறு அது. அதில் வாளி விட்டு தண்ணீர் முகந்து எடுக்கிறார்கள். கூட்டமாக நின்றால் அவர் எல்லார் மீதும் படும்படி அள்ளி வீசி ஊற்றுவார். வாளி மிகப்பெரியதொன்றுமில்லை. பெரிய மக் மாதிரி இருக்கும். ஓவ்வொரு கிணறுக்கும் கொஞ்சதூரம் நடக்க வேண்டும். சுற்றிலும் மதில். ஓயாமல் தண்ணீர் விழுந்துகொண்டே இருக்கிறது. ஆனால், கொஞ்சம்கூட வழுக்கவே இல்லை. கிணற்றுமேடுமீது நின்றுதான் அவர் முகர்ந்து ஊத்துகிறார். ‘நளதீர்த்தம்’. ‘சேதுமாதவதீர்த்தம்’, ‘நீலதீர்த்தம்’ என சில தீர்த்தங்கள் தள்ளித்தள்ளி இருக்கும். ஒரு கிணற்றினை இரண்டாக பகுத்ததுபோல. ‘சிவ தீர்த்தம்’. ‘சந்திர தீர்த்தம்’ ‘சர்வ காயத்ரி’, ‘சரஸ்வதி’, ‘சாவித்திரி தீர்த்தமும்’. ‘கங்கா’, ‘யமுனா’, தீர்த்தமும் அடுத்தடுத்து இருந்தது. தீர்த்தநீர் தலையில் விழ விழ அவளுக்கு புத்துணர்ச்சியும் புது எண்ணமும் பிறந்தது. இறுதியாக ‘கோடி தீர்த்தம்’. மற்ற தீர்த்தங்களை யாரோ ஊற்றுவார்கள். கோடிதீர்த்தத்தை அர்ச்சகர்தான் ஊற்றுவார். வாளியில் அல்ல சின்ன கமண்டலத்தில். ‘இராமன் லிங்கத்தை பிரதிஷ்டைசெய்யும்போது நீர் தேவைப்பட்டதால் தனது அம்பின் நுனியை, பூமிமீதுவைத்து அழுத்தியதால் பூமியைப்பிளந்துகொண்டு வந்த தீர்த்தமே இந்த ‘கோடி தீர்த்தம்’ என்று மகனுக்கு சொல்லிக்கொடுத்தாள்.’ கோயிலில் ராமநாதசுவாமி உட்பட அனைத்து சாமிகளுக்கும் இந்தக் கோடி தீர்த்தத்தில்தான் அபிஷேகம் செய்கிறார்கள். இருபத்தி இரண்டு தீர்த்தங்களிலும் நீராடிவிட்டு ஆடைமாற்றியப்பிறகு சிவபெருமானை தரிசிக்க வரிசையில் நிற்கவேண்டும். இலட்சுமியிடம் ஈர உடையை மாற்றி உடுத்த வேறு ஆடை கூட கிடையாது. குலசேகரனுக்கும் அதே நிலைதான். சிறிதுநேரம் வெயிலில் நின்றால் காய்ந்துவிடும் என்று வேகவேகமாக நடந்தாள். பெரிய பெரிய தூண்கள். தூண்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள். ஒரேமாதிரியான வளை வடிவில் அரண்மனைபோல அமைக்கப்பட்ட பிரகாரங்கள், கருங்கற்சுவர்கள் என ஒவ்வொன்றும் ஆச்சர்யம் தரும்விதமாக சினிமாக்களில் பார்ப்பதுப்போல இருந்தன.
“கடவுளே என்னை யாருமே அடையாளம் கண்டுக்கக் கூடாது. ஏங்கிட்ட எதுவு கேட்கவு கூடாது” என்று மனதுக்குள் புலம்பிக்கொண்டிருந்தாள் இலட்சுமி. ஊர், பெயர், வீடு, வேலை, குடும்பம்னு இப்படி எல்லாமும் இருக்கறவங்களே எதை எதையோ தேடி அலையும்போது எதுவும் இல்லாத அவளுக்கு வேறுவிதமான பதட்டம். கடவுளைத் தரிசிக்க வரிசையில் நிற்பதற்காக அவசரமாக நடந்துகொண்டிருக்கும்போது இடது பக்கம் ஒரு பெரிய விநாயகர் சிலை. அதை சிலர் நின்று வணங்கிச்செல்கிறார்கள். சிலர் போகின்ற போக்கில் வணங்குகிறார்கள். இலட்சுமியும் அதைக் கவனிக்காமல்தான் சென்றாள். அச்சிலைக்கு பூசைசெய்யும் வயதானப்பாட்டி ‘இங்கே வாம்மா’ என்று இலட்சுமியை அழைத்தாள். “ஐயோ ஏதோ சிக்கல் போல மாட்டிக்கொண்டோம்” என்று பயந்து பயந்து அருகில் போனாள்.
‘பாட்டி மூன்று விரல்களால் விபூதியைத்தொட்டு அவ்விருவர் நெற்றியிலும் பூசிவிட்டாள். மறுபடியும் விபூதியில் விரல்களை நெனைத்து ‘இனி ஒனக்கு எல்லா காரியமும் நல்லா நடக்கும்மா. கவலய விடு.’ என்று நெற்றியில் பூசினாள். கடவுள் நேரடியாகக் காட்சி தரமாட்டாரே இதுபோல வேறு வேறு உருவத்தில் காட்சி தருவது போலிருந்தது. இந்தப் பாட்டி மட்டுமல்ல கடவுள்? தப்பித்து, தனுஷ்கோடிக்கு வரத் துணையாக இருந்த சுந்தரனும் கடவுள்தான். அறிந்தோ அறியாமலோ பஸ்ஸில இவ்வளவு தூரம் வரஉதவின பேர் தெரியாத அந்த டிரைவரும் கடவுள்தான். இவ்வளவு நேரம் சந்தேகப்பட்டு எந்த கேள்வியும் கேட்காத இந்தப் பிரபஞ்சமே கடவுள்தான் என்று எண்ணிக்கொண்டாள். ஆனால் இவர்கள் மனித உருவில் வந்த கடவுள்கள். இலட்சுமி மயங்கி பாட்டியின் காலுக்கடியில் விழுந்துவிட்டாள். கண்விழிக்க சற்றுநேரம் ஆனது. கண்விழித்துப் பாத்தால் அவளைச்சுற்றி பலர் ‘உடோ உடோ னு’ சொல்ற வார்த்தைகள் மட்டும் அவள் காதில் விழுந்தது. கூட்டத்தில நின்றிருந்த பெரிய மீசைவைத்த செக்யூரிட்டி அவளது கண்களுக்குப் போலீசுக்காரராகத் தெரிந்தார். கூட்டத்தில குலசேகரனைக்காணவில்லை. அவளுக்கு ஓ ஓ என்று கத்தவேண்டும் போலிருந்தது. அவளது கண்கள் அவனையே தேடின. அவனை மட்டும் தேடின. குலசேகரா…….. குலசேகரா…… எதுவும் நினைவில் இல்லாதவளாய் நிலையற்றுத் தேடினாள்.