Blog

  • ஒரு வீடும் அதைத்தேடும் கூடும்

     

    -தனுசு
    எனக்கொரு ஆசை
    இந்த நாட்டுக்கு ராஜாவாவது அல்ல!
    ஒரு வீட்டுக்கு
    சொந்தமாவது!
    அது
    சொந்த வீட்டின் ஆசையில் அல்ல
    வாடகை வீட்டின் இம்சையில்!

    இங்கு
    மின்சாரத்துக்கு ஒரு கட்டுப்பாடு
    நீருக்கும் அதே கூப்பாடு
    வாடகையில் மட்டும் குறி
    தாமதிக்கும் பொழுதெல்லாம்
    வீட்டுக்காரர் கண்ணில் தீப்பொறி!

    கூடி கும்மிபேச முடியாது
    பாடி பிள்ளையாட முடியாது
    சொந்தம் வந்தால்
    சொல்ல முடியாது
    பந்தமென்று தங்க முடியாது
    சத்தம் போட்டு சிரிக்க முடியாது
    சாவு விழுந்தால் அழவும் முடியாது.
    இத்தனை
    பற்றுதலை தவிர்க்க வேண்டும்
    அந்த
    பத்து தலை மனிதரால்!

    இந்த வீட்டுக்காரருக்கு சமம்
    பல சிங்கம் புலி கரடி!
    அவரின் கல்மனம்
    வள்ளுவனும் எழுத மறந்த ஈரடி!

    வீடு மாறி குடிபோனால்
    அடுத்த வீடும்
    அதே மாதிரி
    ஆண்டுக்கொரு வீடு பிடித்தும்
    அந்த மனிதரும் எதிரி!

    வீடு மாறும் வைபவம்
    நான் வாங்கி வந்த வரமோ?
    காடு மாறும் காலம் வரை
    எனக்கு நடக்கும் சாபமோ?

    ஓலை குடிசை ஒன்று
    சொந்தமாக்க
    கால் ஒத்ததடம் பதிக்க
    முடியாமல் போச்சு!
    அந்த
    வேதனைக்கு
    ஒத்தடம் கேட்டு தவிக்குது
    என் மூச்சு!

    Share
  • வார ராசி பலன்!…20-05-13 – 26-05-13

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்: பிறரிடம் உள்ள குறைகளை விடுத்து, நிறைகளை மட்டும் கணக்கில் கொள்ளுங்கள். நேசம் பாராட்டி உதவுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும். மாணவர்கள் வாகனம் ஓட்டும் போது சிந்தனையை சிதற விடாமலிருப்பது நல்லது. வரும் வாய்ப்புகளை தட்டிப் பறிப்பவரிடம் கலைஞர்கள் உஷாராக இருந்தால், உங்கள் திறமைகளை பிறர் எளிதில் கண்டு கொள்ள முடியும். அலுவலக அளவில் பொதுப் பிரச்னைகளுக்காக, நண்பர்கள் சிலரின் நட்பை முறித்துக் கொள்ள நேரிடும். முக்கிய பொறுப்புக்களில் இருப்பவர்களுக்கு எதிரிகளின் தொல்லை சற்று அதிகரிக்கலாம். எனவே கவனமாக செயல்படுவது அவசியம்.

    ரிஷபம்: வியாபார வாய்ப்புக்களில், சில சந்தர்ப்பங்களில், கைக்கெட்டிய பொருள் வாய்க்கெட்டவில்லை என்ற நிலை நேரிடும். எனினும் விடாமுயற்சியால் விரும்பியதை அடைந்து விடுவீர்கள். பெண்கள் உழைப்பிற்கு நேரம் ஒதுக்குவதை போல, ஆரோக் கியத்திற்கும் நேரம் ஒதுக்கினால், மருத்துவச்செலவுகள் கணிசமாக குறையும். வரவும் செலவும் சமமாக இருப்பதால், சேமிப்பு என்பது பெயரளவில்தான் இருக்கும். தம்பதிகள் மன வேற்றுமைகள் நீங்க மனம் விட்டுப் பேசுங்கள். குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சி மலர்ந்து விடும். பங்குச் சந்தையில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும், அதிக ஆசை யினால் அதிக பணம் முடங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஞாபக மறதியால் வரும் சிக்கல் களைத் தவிர்க்க, எதையும் உடனுக்குடன் குறித்து வைப்பது நல்லது.

    மிதுனம்: பொருட்களை வாங்கி விற்பவர்கள் தேடி வரும் வாய்ப்புகளை வியாபாரமாக, உங்கள் வாய்ச் சொல்லால் மாற்றி விடுவீர்கள். உங்கள் தொழில் தொடர்பான பிரச்னைகளை வளர விடாமல் உடனுக்குடன் சுமூகமான முறையில் முடித்துக் கொண்டால், தேக்க நிலை உருவாகாமலிருக்கும். மாணவர்கள் எந்த சூழலிலும், தவறான திசைப் பக்கம் திரும்பாமலிருங்கள்! வாழ்க்கை வசந்தமாகும். பண விவகாரங்களில் பிறர்க்கு சிபாரிசு செய்யும் முன் அவர்களின் பின்புலம் பற்றி அறிந்து செயல்பட்டால், சட்டச்சிக்கல்களுக்கு இடமிராது. நெருங்கிய நண்பர்களுடன் வாக்குவாதத்தில் இறங்குவதைத் தவிர்த்துவிட்டால், நட்பின் இழை விலகாமலிருக்கும்.

    கடகம்: பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவைகள் உங்களின் விருப்படியே நடைபெறும் . வீண் செலவுகளைக் குறைப்பதில் சற்று கவனமாக இருங்கள். சேமி ப்பதற்கான வழி வகைகள் மேலும் அதிகரிக்கும். வியாபாரிகளும், தொழிலதி பர்களும், பொருளாதாரத்தில் அகலக் கால வைக்காமல், கட்டுக் கோப்பாய் செயல் பட்டால், லாப த்தின் வரவில் குறைவிராது. பணி புரியும் இடங்களில் முரண்பட்ட கருத்துள்ளவர்களு டன் மோதுதலைத் தவிர்க்கவும். பெண்கள் கணவன் வழி உறவினர்களின் கோரிக்கைக ளை நிறைவேற்றுவதற்கு முதலிடம் கொடுத்து விடுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்!

    சிம்மம்: பெண்கள் எந்த நல்ல விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனடியாக செயலில் இறங்குங்கள். கிடைக்கும் பலனும், மகிழ்ச்சியும் இரட்டிப்பாகும். நண்பர்களின் சந்தோஷத்திற்காக அதிக பணம் செலவழித்து சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள்! வியாபார விரிவாக்க விவகாரங்களில், பங்குதாரர்களுடன் கலந்து பேசி செயல்படுதல் நல்லது. நீண்ட நாட்களாக பிரிந்த உறவுகள் மீண்டும் குடும்பத்தில் இணைவதால், மகிழ்ச்சிப் பூ மீண்டும் மலர்ந்து விடும். மாணவர்கள் தேவையில்லாமல் அதிக நேரம் கண் விழித்தலைக் குறைத்துக் கொண்டால், ஆரோக்கியம் சீராகத் திகழும்.

    கன்னி: பொது வாழ்வில் இருப்போர்கள், வீண் வதந்திகளை நம்பி செயலில் இறங்காமலிருந்தால், உங்களின் உயர்வு சீராக இருக்கும். கலைஞர்களுக்கு உங்கள் திறமைகளை மிளிரச் செய்யும் வாய்ப்புக்கள் பல தேடி வரும். அதனை நல்ல முறையில் பயன்படுத்துவது உங்கள் கையில்தான் உள்ளது! மாணவர்கள் புதிய இடங்களில் பழக்கமில்லாதவர்களிடம் அதிகம் ஒட்டி உறவாட வேண்டாம். பெண்கள் குடும்ப விஷ யங்களில் கோப தாபத்தை கட்டுக்குள் வைத்தால், எல்லோர் மனதிலும் இடம் பிடித்து விடலாம்! சிறிய சச்சரவுகளை பெரிதாக்காதவாறு சமாதானமாக நடந்துகொள்ளுங்கள். அலுவலகச்சூழலில் இருக்கும் இறுக்கமும் தானே விலகி விடும். வியாபாரிகள் எதிலும் நேர்மைக்கு இடம் கொடுக்க, வெற்றியோடு நல்மதிப்பும் உங்களுக்கே!

    துலாம்: வியாபாரிகளுக்கு முன்பிருந்த சுணக்கமான நிலை என்பது மறைந்து இணக்கமான சூழல் நிலவும். பெண்கள் வேலைப்பளு ஆரோக்கியத்தோடு மோதாமல் பார்த்துக் கொள்ளவும். மாணவர்கள் பிறரிடம் கைமாற்றாக பணம் பெற்று செலவழித்தால், வீண் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருக்கும். புதிதாக வேலையில் சேர்ந்திருப்பவர்கள் பேச்சில் கவனம் செலுத்தவதைக் காட்டிலும், பணியில் கவனம் செலுத்தினால், பாராட்டு பல வந்து சேரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் நடவடிக் கைகளில் தென்படும் மாறுதல்களை இதமாகச் சுட்டிக் காட்டுங்கள். உங்களை புரிந்து கொள்வார்கள்.

    விருச்சிகம்: இயன்ற வரை வீண் செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். வரவுக்குள் செலவுகள் அடங்கிவிடும். காரணமற்ற கோபம் மற்றும் எரிச்சலால் பெண்களுக்கு வேலைகள் தேங்கும் நிலை உருவாகலாம். போட்டிகள் மூலம் உங்கள் திறமை வெளி படும் வரை கலைஞர்கள் பொறுமையாய் இருப்பது நல்லது. வியாபாரிகள் ஆரோக் யமான போட்டி மூலம் வாடிக்கையாளர்களின் வரவைத் தக்க வைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனமாகும். முதியவர்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். சுறுசுறுப்புடன் திகழலாம். சொத்து விஷயங்களில் உங்களின் நேரடி கவனம் தேவை.

    தனுசு: புதுப்புது யுக்திகளை பயன்படுத்துவதன் மூலம், கூட்டுத் தொழிலில் இருக்கும் பிரச்னைகள் தீரும். பொருளாதார சிரமங்கள் குறைவதால், பெண்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள். இல்லத்தில்,கோபத்தைக் குறையுங்கள். பிரச்னைகளின் தாக்கமும் தானே குறைந்து விடும். சக மாணவர்களின் மனோபாவத்திற்கேற்றவாறு , உங்கள் அணுகு முறையை மாற்றிக் கொண்டால், கல்வி தொடர்பான வேலைகள் கடகடவென்று முடிந்து விடும். கடும் பணியில் உள்ளவர்கள் உழைப்பில் சலிப்பு சேராமல், பம்பரமாய் சுழல, சத்தான உணவு வகைகள் சாப்பிடுவது நல்லது. இது நாள் வரை எட்டியும், தட்டியும் சென்ற வாய்ப்புகள் மீண்டும் கலைஞர்களை நாடி வரும்.

    மகரம்: வாழ்க்கைத் துணையுடன் இணக்கமாக இருக்கும் தம்பதிகளுக்கு வாழ்வு இனிக்கும். மாணவர்கள் கல்லூரி விழா, போட்டிகள் ஆகியவற்றில் உற்சாகத்துடன் கலந்து கொள்வீர்கள்.சில நேரங்களில் உடன் பணி புரிபவர் ஏட்டிக்குப் போட்டியாக செயல் படுவர். முக்கிய பொறுப்புக்களை ஏற்றுள்ளவர்கள் பதவிக்குரிய அதிகாரம் வரம்பு மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நினைத்ததைவிட நல்ல பலன் நிறையவே கிடைக்கும். வியாபாரிகள் நிர்ப்பந்தத்தின் பேரில் சலுகைகளை வலுக்கட்டாயமாய் பெற முயற்சிப்பவர்களோடு கூட்டு முயற்சியில் இறங்க வேண்டாம்.சிறு உடல் உபாதைகளால், பெண்கள் அவதிப்பட நேரிடும்.

    கும்பம்: பெண்கள் பணச் செலவில் கட்டுப்பாடாய் இருந்தால்,கடன்களை கட்டுக்குள் வைத்துவிடலாம். பங்குச் சந்தை வியாபாரத்தில் இருக்கும் ஏற்றமும், இறக்கத்திற்கேற்ப வியாபாரிகள் செயல்படுவது அவசியம். வேலையில் இருப்போர்கள், பல சமயம் நேரம் காலம் பாராமல் உழைக்க வேண்டியிருக்கும் .சிலர் சொந்த வீடு வாங்குவதற்காக எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் சில இழப்புக்கள் சில லாபங்கள் இரண்டையும் பெறுவர். அன்புக் கட்டளையால், நண்பர்களுக்கு சில உதவிகளை மகிழ்வுடன் செய்து கொடுப்பீர்கள்.

    மீனம்: நிலுவையில் உள்ள பாக்கியெல்லாம் வசூலாகி விடுவதால், புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் இறங்குவீர்கள். பொதுவாழ்வில் இயங்கி கொண்டிருப்பவர்கள் தம்மு டைய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால், உங்கள் பணிகளில் எவரும் பழுது சொல்ல முடியாது. மாணவர்கள் புதிய சூழலில் வீண் வம்பு தும்புக்கு வேலை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அதிக உரி மைஎடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகிவருவது நல்லது. வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களைப் பெற, சில நெருக்கடிகளை தாண்டிச் செல்ல வேண்டியிருக்கும் .எனவே நிதானமாக செயல்படுவது அவசியம்.

    Share
  • அவ்யயாநந்தர்

                                                         உன்னை விட…..உன்னை விட…

                         ——————————

                           ராமஸ்வாமி ஸம்பத்      

    மோன நிலை நீங்கி கண் விழித்த அவ்யயாநந்த அடிகள் தன் முன் கிடத்தப்பட்டிருந்த வாலிபனை பாதாதிகேசம் நோக்கினார்.

    அவன் மயக்க நிலையில் இருப்பதைக் கண்டு, அங்கிருந்த சிஷ்யர்களில் ஒருவனான விஜயாநந்தனை அழைத்து அவன் செவியில் ஏதோ பணித்தார். அவன் உடனே பக்கத்தில் உள்ள அறைக்குச் சென்று ஒரு மூலிகையை எடுத்து வந்து குரு ஆணைப்படி அம்மூலிகையை சற்று நேரம் அந்த வாலிபனின் நாசியில்.வைத்து அவனை நுகரச்செய்தான்.

    தெளிவுபெற்ற அவ்வாலிபன் தான்கிடக்கும் இடத்தை கண்களால் ஒருமுறை சுழற்றிப் பார்த்தான். பின் மெல்ல எழுந்து, “நான் எப்படி இங்கு வந்து சேர்ந்தேன்? ஆற்றில் விழுந்த என்னை யார் மீட்டது?” என வியப்புடனும் சற்று கோபத்துடனும் வினவினான்.

    “குழந்தாய்! உன் பெயர் என்ன? எதற்கு ஆற்றில் விழுந்தாய்”?” வாழ்க்கைமீது அப்படி என்ன வெறுப்பு?” என்று கேட்டார் அவ்யயாநந்தர்.

    “தாங்கள் யாரோ எனக்குத் தெரியாது. என் பெயர் சந்திரன். உலகில் என்னை விட அபாக்கியசாலி இருக்க முடியாது. வாழ்க்கையின் முடிவு நோக்கிச் சென்று கொண்டிருந்த என்னை நீங்கள் ஏன் தடுக்கவேண்டும்?” என்றான் அவ்விளைஞன் உஷ்ணமாக.

    “ஒவ்வொரு ஜீவனும் வாழ்க்கையின் முடிவை நோக்கித்தான் செல்கிறது. பிறந்த உடனே இறைவன் நம் கையில் இறப்புக்கான ஒபன் டிக்கட்டை கொடுத்து விட்டிருக்கிறார்.  எந்த நாளில் நம் பயணம் என்பது அவரால் தான் நிர்ணயிக்கப் படவேண்டும். அதை மாற்ற நம்மால் இயலாது. அப்படி செய்யவும் கூடாது. ஏனெனில் அது ஒரு பாபமான செயல்.”

    “என்னுடைய வாழ்க்கை என்னுடைய உரிமை. அதனை நடத்துவதும் முடிப்பதும் என் கையில்தானே இருக்கவேண்டும்?”

    “சந்திரா, உன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும் நடத்துவதும் உன் கையில்தான் உள்ளது. ஆனால் அதன் முடிவு உன் கையில் இல்லை. இதுதான் இயற்கையின் நியதி.”

    ”அடிகளே! அப்படியென்றால் ஏமாற்றங்களோடும் என்மீது திணிக்கப்ப்ட்ட தாழ்வு மனப்பான்மையோடும் நான் ஒரு நடைப்பிணமாக வாழத்தான் வேண்டுமா? இப்படிப்பட்ட ஜீவனம் எனக்குத் தேவையா?”

    “குழந்தாய்! கண்ணன் கீதையில் கூறியபடி நாம் எந்த பலனையும் எதிர்பார்க்கக் கூடாது. வருவதை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். எதிர்பார்ப்பு இருந்தால் ஏமாற்றமே மிஞ்சும். தாழ்வு மனப்பான்மை என்றாய். உயர்வு தாழ்வு என்று இனம் பிரிப்பது கூட ஒருவிதத்தில் மனத்தின் கோளாறே. நீ எதற்கு உன்னைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் யாரோ உன்னை இளப்பமாக பேசினார் என்பதற்காக?”

    அடிகளின் தத்துவம் கலந்த பேச்சு சந்திரனை குழப்பத்தில் ஆழ்த்தியது. அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை. அவன் மெளனத்தைப் பயன் படுத்திக்கொண்டு அவர் விஜயநந்தனை நோக்கி ஒரு சமிக்ஞை செய்தார். சில நொடிகள் கழித்து அவன் ஒரு குவளைப் பாலுடன் அங்கு வந்தான்.

    “நீ மிகவும் சோர்வுற்றிருக்கிறாய். இப்போது உணர்ச்சிப்படுவது உனக்கு நல்லதல்ல. இதோ இந்தப் பாலைப் பருகிவிட்டு சற்று ஓய்வு எடுத்துக்கொள். மதிய உணவுக்குப் பின் நாம் பேசலாம்,” என்றார் அவ்யயாநந்தர்.

    விஜயாநந்தன் சந்திரனை தோளில் சாய்த்தவாறு தன் அறைக்கு அழைத்துச் சென்றான். சற்று நேர ஓய்வுக்குப் பின் சந்திரனுக்கு மதிய உணவு பரிமாறப் பட்டது. அதன்பின் அவன் அடிகளைக் காண விரும்பினான். ஆனால் அவர் மீண்டும் மோன நிலைக்குச் சென்றுவிட்டதால் அவரைச் சந்திக்க முடியவில்லை.

    “தங்களுக்கு இன்னும் ஓய்வு தேவை போலும். குருநாதரிடமிருந்து அழைப்பு வரும்வரை தயவு செய்து இந்த கட்டிலிலேயே ஓய்வு எடுங்கள்” என்றான் விஜயாநந்தன்.

    உடற்களைப்பும் மன உளைச்சலும் குறையாத நிலையில் சந்திரன் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தான். பிற்பகல் நான்கு மணி அளவில், களைப்பு நீங்கி கண் விழித்தான். எழுந்து முகத்தை அலம்பிக்கொண்டு கட்டிலில் அமர்ந்த அவன் முன் ஒரு குவளைப் பாலுடன் நின்றான் விஜயாநந்தன். “இப்பாலைப் பருகியவுடன் என்னுடன் வாருங்கள். குருநாதர் உங்களை அழைத்துவரச் சொன்னார்” என்றான். பின்னர் இருவரும் அடிகளின் அருகே சென்றார்கள்.

    இளநகை ததும்பும் அவ்யயாநந்தரின் வதனத்தைப் பார்த்த்தும் சந்திரனுக்கு ஒரு இனம்புரியாத உணர்வு மேலிட்டது. பாதங்களில் வீழ்ந்து வணங்கிய அவன் தலையை அவர் பரிவோடு கோதிவிட்டு, “இப்பொழுது சொல் உன் விருத்தாந்தத்தை.” என்றார்.

    “அடிகளே! பேரின்ப அனுபவத்தின் உச்சநிலையில் நிற்கும்  தங்களுக்கு இந்த உதவாக்கரை இளைஞனின் கதை தேவையில்லை என நினைக்கிறேன். என்னை என் வழியில் செல்ல விடுங்கள்.”

    “இந்த ஆசிரமத்தை நிருவியதன் நோக்கமே உன் போன்ற நொந்த உள்ளங்களுக்கு ஆறுதல் சொல்லத்தான். அம்முயற்சியில்தான் உன் கதையைக் கேட்க விரும்புகிறேன். உனக்கு விருப்பம் இல்லையென்றால் உன்னை நான் கட்டாயப்படுத்தப் போவதில்லை. ஆனால் உன் வழியில் மட்டும் உன்னை செல்ல விடமாட்டேன். ஏனென்றால் அது ஆபத்தான பாதை” என்றார் அவ்யயாநந்தர்.

    “ஐயா, என்னை மன்னித்து விடுங்கள். தாங்கள் என்மீது காட்டும் பரிவு என்னை மனம் நெகிழச் செய்கிறது. வாழ்க்கையின் எல்லையையே தொட்டுவிட்ட எனக்கும் யாரிடமாவது என் அவலங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற அவா உள்ளது. தங்களைத் தவிர வேறு யார் இதற்குத் தயாராக இருக்கமுடியும்” என்ற சந்திரன் அவ்யயாந்ந்தரின் பாதங்களில் மீண்டும் பணிந்து பேசலுற்றான்.

    ”அடிகளே! தங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். ஒருவனை உயர்த்த வேண்டுமென்றால் இன்னொருவனைத் தாழ்த்தித்தான் ஆகவேண்டுமா? இருவரை ஒப்பிடும்போது இப்படிப்பட்ட செயல் உலகில் சர்வசாதாரணமாகி விட்டதே. இது எந்த வகையில் நியாயம்?”

    ”சந்திரா, ஒப்பிட்டுப் பார்ப்பதென்பது மனிதனின் இயல்பு. ஏனெனில் உலகில் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கிறது. அறை வெப்பத்தோடுதான் உன் உடல் வெப்பம் சார்ந்திருக்கிறது. இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடே உனக்கு காய்ச்சல் இருக்கிறதா இல்லையா என்பதனைத் தெளிவு படுத்துகிறது. ஆகவே ஒப்பிடுதல் நியாயமே.”

    ”அடிகளே! நான் கூறமுயல்வது, ஒப்பிடும்போது ஒன்றைத் உயர்த்தி மற்றொன்றினை மட்டம்தட்டுவது அவசியம் தானா?”

    “ஓருவனை உயர்த்தும்போது மற்றொருவன் மட்டம்தட்டப்படுகிறான் என நினைப்பது உன் பிரமையே. ஒப்பிட்டு பேசுவோரின் மனப்பாங்குகூட அத்தகைய பிரமையை ஏற்படுத்தும். அப்படிப்பட்டவர் சொல்வதெல்லாம் உண்மையாகாது. அது போகட்டும். விளக்கங்களை பின்னர் பார்ப்போம். முதலில் உன் விஷயத்தைச் சொல்” என்றார் அவ்யயாந்ந்தர்.

    “எவ்விதமான காரணமும் இல்லாமல் என் மீது இரக்கம் காட்டும் அடிகளே! தாங்கள்தான் என் வாழ்க்கையில் எனக்கு முதல் முதல் உற்சாகமூட்டும் நபர். ஒருவன் நடுவனாக மட்டும் பிறக்கக்கூடாது. ஏனெனில் தந்தைக்கு மூத்தவன்மீது பரிவு. தாய்க்கோ கடைக்குட்டிமீது ஆசை. ஆக, மத்தியமன் அக்குடும்பத்தில் ஏனோதானோ என்றுதான் இருக்க வேண்டிய நிலை. எனக்குத் தாய்ப்பாசம் பூரணமாகக் கிடைக்கவில்லை. நாளடைவில் என் அன்னை எதற்கெடுத்தாலும் என்னைக் குறைகூற ஆரம்பித்தார்.

    “என் தந்தையாரின் வருமான முடக்கத்திற்கும், என் பிறப்புக்கும் என்ன சம்பந்தம்? ‘தரித்திரமே, நீ பிறந்த வேளை வீட்டையே வறுமையில் ஆழ்த்திவிட்ட்து’ என்று என்னை அடிக்கடி என் அன்னை சாடுவார். இந்நிலை வீட்டில் உள்ள அனைவரின் ஜாதகக் கோளாறினால் இருக்கக்கூடாதா? எதற்கு என்னை மட்டும் குறை சொல்வானேன்?”

    அவ்யயாநந்தர் வதனத்தில் ஒரு இளநகை மின்னலென இழையோடியது. ”இது கூட மனித சுபாவமே. தன் அங்கலாய்ப்பை யார்மீதாவது காட்டுவது எவர்க்கும் இயல்பே. உண்மையில் உன்மீது உள்ள அபரிமிதமான ஈடுபாட்டினால் இத்தகைய பழியை மிக்க எளிதாக உன் மேல் போட்டிருக்கலாம் அல்லவா?” என்றார் அவர்.

    “அடிகளே, வீட்டில் நிலவும் வறுமைக்கு என்னைப் பொறுப்பாக்கிய அன்னை, நாளடைவில் சீர்திருந்திய தந்தையின் வருமானத்திற்குப் பின்னும் அந்த பழைய மாவையே அரைத்துக் கொண்டிருப்பார்கள். என் பிஞ்சு மனம் எவ்வளவு பாடுபட்டிருக்கும் என்பதனை தங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.

    “அது தவிர நான் எது செய்தாலும் அதில் குற்றம் பார்க்கும் பாங்கினை நன்றாக வளர்த்துக் கொண்டார்கள் என் அன்னை. என் செய்கையால் ஏதேனும் நல்லது நடந்துவிட்டால், ‘இதில் என்ன இருக்கிறது. காக்கை உட்கார பனம் பழம் விழுந்தது என்று சொல்வது போல்தான்’ என்பார்கள். சிலசமயம் என்னைப் பாராட்டாமல் ‘இதே உன் தமையனாக இருந்தால் உன்னை விட சிறப்பாகச் செய்திருப்பான்’ என்பார்கள்.

    ” ஒரு சமயம், நான் பள்ளி இறுதித் தேர்வில் 90 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று, மகிழ்ச்சி த்தும்பும் முகத்தோடு அன்னையிடம் அந்த மதிப்பெண் அட்டையைக் காட்டினேன். நியாயமாக என்னைப் சிலாகிக்க வேண்டிய அன்னையார், ‘பார்த்துக்கொண்டே இரு. உன் தம்பி நூற்றுக்கு.நூறு மார்க்குகள் வாங்குவான்’ என்று சொல்லி அவனை அணைத்துக் கொண்டார். இவ்வாறு சொல்வதைவிட ’போடா நாயே, ரொம்பத்தான் பீற்றிக் கொள்கிறாயோ’ என்று சொல்லி இருக்கலாம். அடிகளே எனக்கு ஒரு விளக்கம் தேவை. வருங்காலத்தில் என் இளையவன் என்னை விட சிறப்பாக மதிப்பெண்கள் வாங்குவான் என்ற நம்பிக்கையால் என் தற்போதைய சாதனையைக் குறைவாக எடை போட வேண்டுமா?”

    கண்ணீர் பெருகி ஓடும் கன்னத்தோடும் தழதழக்கும் குரலோடும் சந்திரன் கூறியது, அவ்யயாநந்தரையும் கலங்க வைத்தது. பதிலேதும் சொல்லாமல், அவனை தொடர்ந்து பேசுமாறு சமிக்ஞை செய்தார்.

    “வீட்டில் தான் இந்த நிலை என்றால் வெளி உலகமும் என்னை ஏளனமாகத் தான் நோக்கியது. நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடும்போது நான் ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகிவிட்டால் குழுவின் காப்டன் முதல் இதர ஆட்டக்காரர்களும் பரிகசிப்ப்பார்கள். ‘இவனை டீமில் சேர்க்கவேண்டாம் என்று அப்போதே சொன்னேன்’ என்பார் ஒருவர். இன்னொருவர் ஆட்ட்த்திற்கு நான் லாயக்கில்லை என்பார். ஒருமுறை நான் சதம் அடித்தேன். என்னைப் பாராட்டுவதற்கு பதிலாக இது ஃப்ளூக்’ என்று கேலி செய்வார் காப்டன்.  ஓருமுறை மற்றொரு பக்கத்து ஆட்டக்காரரின் அசிரத்தையால் நான் ரன் அவுட் ஆகிவிட்டேன். ‘அவசர குடுக்கை, கவனம் வேண்டாம்? அந்த ஆட்டக்காரர் தயார் நிலையில் இருக்கிறாரா என்று நிச்சயிக்காமல் ரன் எடுக்கலாமா?’ என்று என்னைக் கடிந்து கொண்டார் காப்டன். அடுத்த இன்னிங்க்சில் என்னுடைய பார்ட்னர் ரன் அவுட் ஆனபோது மீண்டும் என்னையே குறை கூறினார்கள். இது எந்த வகையில் நியாயம் அடிகளே!” என்றான் சந்திரன்.

    அவ்யயாநந்தர், மீண்டும் அதே இளநகையோடு, அவனைத் தொடருமாறு பணித்தார்.

    ”இப்படியாக நான் வளர்ந்த கதையைக் கேட்டால், ஒவ்வொரு நிலையிலும் நான் மற்றவருடன் ஒப்பிடப்பட்டு ’ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி’ போல் தாழ்ந்த மதிப்பீட்டிற்கு பலியாகி வந்திருக்கிறேன். கல்வி முடிந்து அலுவலகம் சேர்ந்த்தும் இதே அவல நிலை தொடர்ந்தது. நான் பணிபுரிந்த பிரிவின் தலைவர் என்மீது காரணமில்லாமல் வெறுப்பினைக் கக்குவார். ‘கண்டகண்ட உதவாக்கரைகளை என் தலையில் கட்டி மேய்க்கச் சொல்கிறார்கள்’ என்று அடிக்கடி என்னைக்காட்டி கத்துவார். ‘அய்யாசாமியைப் பார், எப்படி உன்னை விட சிறப்பாக பணி புரிகிறான். இங்குள்ள எல்லாரும் உன்னை விட வேலையில் சூரர்கள்’ என்று சொல்லி என்னை மட்டம் தட்ட வேண்டும் என்பதில் குறியாக இருப்பார். ஒருமுறை அலுவலகத்தில் உட்தணிக்கை நடந்தது. தணிக்கையாளர் ஒருவர் என்னால் சுட்டிக்காட்டப்பட்ட தவற்றினை அனைவர் முன்னிலையில் பாராட்டியபோது, என் பிரிவுத் தலைவர், ’ஹும். இவனுக்கு என்ன தெரியும். எல்லாம் நான் கொடுத்த ட்ரெயினிங்க்’ என்று பறை சாற்றிக்கொண்டார். மனதார அவ்ருக்கு நான் எந்த வகையிலும் தீங்கு நினைத்ததில்லை. பின் ஏன் என்மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சி?

    “என்னால் இதுபோன்ற இன்னும் பல நிகழ்வுகளை சொல்ல முடியும். அந்த எல்லாவற்றிலும் ‘உன்னை விட’ எனும் சொற்றொடர் அத்தகைய ஒப்பிடும் வாக்கியங்களில் அழுத்தம் திருத்தமாக இடம்பெறும். அவ்வப்போது நான் யோசிப்பதுண்டு: இந்த ‘உன்னை விட’ என்ற் சொற்றொடரை தமிழ் மொழியிலிருந்தே நீக்கிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!”

    சந்திரனின் வதனத்தில் கண்ணீர் பெருகிய வண்ணம் இருந்த்து.

    “அடிகளே! இதை எல்லாவற்றையும் விட என் உள்ளத்தை சுக்கல் சுக்கலாக உடைத்த சம்பவத்தையும் கூறித்தான் ஆக்வேண்டும். நான் ஒரு பெண்ணை உளமாரக் காதலித்தேன். அவளும் என்னை மணம்புரிய விரும்பினாள். தன் தந்தையிடம் இது விஷயமாக பேசுமாறு பணித்தாள். அவள் தந்தையிடம் பேசினேன். அவர் என் தாய்தந்தையரின் அனுமதியைப் பெற்று வருமாறு கூறினார். எனக்குத் தயக்கம். வீட்டில் எப்படி அனுமதி பெறுவது? ’உன்னை விட் வயதில் மூத்தவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. உனக்கென்ன அவசரம்?’ என்பார்கள் அல்லவா? காலம் கடத்தினேன். அவள் என்னை வற்புறுத்த முனைந்தாள். ’கொஞ்சம் பொறு. என் தமையனுக்கு மணமான அடுத்த் முகூர்த்தத்தில் உன் கழுத்தில் தாலி கட்டுகிறேன்’ என்று அவளிடம் கெஞ்சினேன்.

    “அவள் பொறுக்கவில்லை. ஒருநாள் என்னிடம் ஒரு அழைப்பிதழை நீட்டினாள். அது அவளது திருமண அழைப்பிதழ். பேரிடி தாக்கியதுபோல் ஓர் அதிர்ச்சி. கண்களில் நீர்மல்க, ‘நம் காதலை மறந்து விட்டாயா?” என்று கேட்டேன். அதற்கு அவள் ‘புரோகிதர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா? நீ கால தாமதம் செய்வது என் தந்தையாருக்குப் பிடிக்கவில்லை. ஆகவே இந்த ஏற்பாட்டினை அவர் செய்துவிட்டார்’ என்றாள். ‘உனக்கு இதில் உடன்பாடு உண்டா?’ என்றேன். ‘தந்தையின் சொல்லை என்னால் தட்ட முடியவில்லை’ என்றாள் அவள் சுருக்கமாக.

    “மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு அவளை வாழ்த்தினேன். ‘உன் வருங்கால கணவனைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா?’ என வினவினேன். ’தாராளமாக.. அவர் உன்னை விட அழகானவர்; உன்னை விட உயரமானவர். உன்னை விட உயர்ந்த பதவி வகிப்பவர்; உன்னை விட செல்வச் செழிப்பு படைத்தவர்; உன்னை விட……………………………..’ என்று அடுக்கிக் கொண்டே போனாள்.

    “அடிகளே! ’உன்னை விட…உன்னை விட…’ என்னும் சவுக்கடிகள் மேலும் மேலும் என் மீது விழ, நான் நிலை குலைந்தேன். காதல் தோல்வி ஒரு புறம் இருக்க, என்னை விட எல்லாரும் உயர்வாக விளங்கும்போது நான் மட்டும் ஏன் பூமிக்கு பாரமாகத் திகழவேண்டும் என்று என்னையே நொந்து கொண்டு ஆற்றில் விழுந்தேன். என்னை ஏன் காப்பாற்றினீர்கள?” என்று கொட்டித்தீர்த்தான் சந்திரன்.

    அவ்வறையில் சற்று ம்வுனம் நிலவியது. அவ்யயாநந்தர் பரிவுடன் அவன் முதுகைத் தடவியவாறு, “சந்திரா, உன் வாழ்க்கை அனுபவங்கள் உண்மையிலேயே வினோதமானவை. அதற்காக உயிரைத் துறப்பது என்பது கோழைத்தனம். சவால்கள் இல்லாத வாழ்க்கை உலகத்தில் எங்கேனும் உள்ளதா? அவற்றோடு போரடுவதுதான் நமது இலக்காக இருக்க வேண்டும்…….”

    “ஆனால் என் வாழ்க்கை அவலங்கள்….” என்று இடைமறித்த சந்திரனை, அடிகள், “சற்று பொறுமையாக நான் சொல்வதைக் கேள். நீ சொன்னவற்றை நான் கேட்டேன் அல்லவா?” என்றார். சந்திரன் மவுனமானான்.

    “ஆரம்பத்தில் ’என்னை விட அபாக்கியசாலி உலகில் இருக்க முடியாது’ என்றாய். உண்மையிலேயே நீதான் பாக்கியசாலி. எல்லோருக்கும் உன் திறமையைப் பற்றித் தெரியும். ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்ல அவர்களுக்குப் பிடிக்கவில்லை. காரணம் பொறாமையாக இருக்கலாம் அல்லது நீ செருக்கடையக் கூடாது என்ற மனோபாவமாகவும் இருக்கலாம். ‘உன்னை விட இன்னொருவன் புத்திசாலி, வேலையில் கெட்டிக்காரன், அழகானவன்’ என்றெல்லாம் சொல்லும்போது நீ புத்திசாலி, கெட்டிக்காரன், அழகானவன் என்பதை அவர்கள் சொல்லவில்லையே தவிர மறுக்கவில்லை. அவர்களுடைய் ஓப்பீடு உன்னைவைத்து இன்னொருவனை மதிப்பீடு செய்யும் செய்கை என்றே கொள்ளவேண்டும். அவர்களுக்கு நீ ஒரு அளவுகோல் ஆகிவிட்டாய். நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை, முகத்தல் அளவை இவையெல்லாம் எவ்வளவு முக்கியமான அவசியமான சாதனங்கள். அவற்றை ஒதுக்கிவிட முடியுமா?

    “நீ கம்ப ராமாயணம் படித்திருப்பாய் என நினைக்கிறேன். அதில் அயோத்யா காண்டத்தில், படகோட்டிகளின் தலைவனான குகன், அரண்யத்திற்கு ஏகிவிட்ட அண்ணன் ராமபிரானைக் காண வரும் தம்பி பரதனைக் காண்கிறான். முதலில் அவனுக்கு பரதன் மேல் சந்தேஹம்: ‘இவன் எதற்கு இங்கு வருகிறான்? ஒருவேளை எதேனும் தீயநோக்கு இருக்குமோ?’ பரதன் அருகில் நெருங்ககியதும் அவன் ஐயம் நீங்குகிறது. பரதனின் படியிற்குணத்தை மெச்சி குகன் சொல்வான்:

                  ’தாய் உரைகொண்டு தாதை உதவிய தரணிதன்னை

                  தீவினை என்ன நீத்து சிந்தனை முகத்தில் தேக்கி

                  போயினை என்றபோழ்து புகழினோய் தன்மை கண்டால்

                  ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா’

    “ராமபிரானைப் முதல்முதலாகப் பார்த்தபோது தந்தை சொல் காக்கவேண்டும் என்ற ஒரே நோக்கோடு மகுடத்தைத் தியாகம் செய்த பண்பு குகனை வெகுவாகக் கவர்ந்தது. ஆயினும் ராமனாவது தன் உரிமையைத்தான் தியாகம் செய்தான். ஆனால் பரதனோ தனக்கு எள்ளளவும் உரிமையில்லாத எவ்வகையிலோ கிடைத்த பேற்றினைத் தீவினை என்று திரஸ்கரித்தான். ஆகவே ஆயிரம் ராமர்கள் பரதனுக்கு ஒப்பாக மாட்டார்கள் என்று குகன் உணர்ந்தான். அங்கு குகனுக்கு ராமன் ஒரு அளவுகோலாகத்தான் பயன்பட்டான். குகன் ராமனை மட்டம் தட்டியதாகப் பொருள் கொண்டால் எவ்வளவு தவறோ அதேபோல் உன்னை ஒரு அளவையாக உபயோகித்ததை  உன்னை சிறுமைப் படுத்தியதாக நினைப்பதும் அவ்வளவு தவறு. ஆகவே சந்திரா, நீ மட்டம் தட்டப் படவில்லை என்பதை உணர்ந்து கொள்” என்றார் அவ்யயாநந்தர்.

    அடிகளின்  ஆணித்தரமான விளக்கம் சந்திரனை சிந்தையில் ஆழ்த்தியது. ’அவசரப்பட்டு என்ன தவறு செய்து விட்டோம். தேவைப்பட்டபோது போற்றுவதும் மற்ற சமயங்களில் தூற்றுவதும் மனித இயல்பே அல்லவா. இதை உணராது நிந்தனையையே நினைத்து வருந்துவது எவ்வளவு கேவலமான செயல்’ என அவன் எண்ண அலைகள் ஓடின.

    “என்னை மன்னித்து விடுங்கள் அடிகளே! தாங்கள் என் கண்களைத் திறந்து விட்டீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதனை உணத்திவிட்டீர்கள். இனி ஒருநாளும் இத்தகைய கோழையாக இருக்கமாட்டேன்” என்று கூறி அவ்யயாநந்தர் அடிபணிந்தான் சந்திரன்.

    அடிகள் விஜயாநந்தனை விளித்து, “இன்று காலை நம் குடிலுக்கு வந்த மூதாட்டியை அழைத்து வா” என்றார். விஜயாநந்தன் திரும்பி வருவதற்குள் ”சந்திரா, இப்போது உன் அன்னையே வரப்போகிறாள்” என்றார். அவன் வியப்பின் எல்லைக்கே சென்றுவிட்டான்.

    சந்திரனின் அன்னை வந்ததும அவ்யயாநந்தர் அவரை நோக்கி, “பார்த்தீர்களா அம்மா உங்களுடைய பாரபட்சம் எப்பேற்பட்ட நிலைக்குத் தங்கள் மகனைத் தள்ளிவிட்டிருக்கிறது. ஒரு தாய் தன் சேயை எப்போதும் இன்னாச் சொற்களால் சாடக்கூடாது. கண்டிப்பாக இருக்கலாம் ஆனால் தலை குனியச் செய்யக்கூடாது.

    “சந்திரா, உன் அன்னை உன்னை இரண்டு நாட்களாகக் காணாமல் மனம் நொந்து இன்று காலை என்னிடம் வந்து முறையிட்டார்.  இறை அருளால் தாயையும் சேயையும் சேர்த்து வைக்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது” என்றார்.

    இருவரும் அடிகள் அடி பணிந்து அவரிடம் ஆசி பெற்றனர். ”வாழ்க வளமுடன்” என்று கூறி அவ்யயாநந்தர் அவர்களுக்கு பிரியா விடை கொடுத்தனுப்பினார்.*

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (12)

    பவள சங்கரி

    அந்த அனுபவத்திற்கு உங்களால் நன்றி சொல்ல முடியும்போது மட்டுமே அது உண்மையான மன்னிப்பு என்பதாகிறது.
    – ஓப்ரா வின்ஃப்ரே

    ‘நன்றி’ என்ற மந்திரச் சொல்!

    அன்றாடம் நாம் படுக்கையை விட்டு எழுந்ததிலிருந்து, மீண்டும் இரவு தூங்கப்போகும் வரை நம் பொழுது சரியாக கழிவதற்கு எத்தனையோ பேருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். நம்மைப் படைத்த இயற்கை அன்னையிலிருந்து, நம் வீட்டுக் கழிவுகளை அப்புறப்படுத்தும் கடைநிலை சுகாதார ஊழியர் வரை எத்தனையோ பேருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். அந்த நன்றியை மனதார வாய்விட்டு சொல்லும்போது ஏற்படுகிற நிம்மதியே அலாதிதான். ‘கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பார் கம்பர். கடன்பட்ட நெஞ்சத்தின் வேதனைக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது என்பதுதான் உண்மை. நன்றிக் கடனும் ஒரு வகையில் இதையேச் சாரும். அந்த நன்றியை பாரபட்சம் இன்றி, முழு மனதுடன், முகமலர்ச்சியுடன் அளித்துப் பார்த்தால் அதன் சுகமே தனிதான். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அடுத்த மேசையில் ஒரு கணவனும் மனைவியும் தங்கள் ஐந்து வயது குழந்தையுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாப்பிட்டு முடித்து பில் வந்தவுடன் கணவர் அதற்குரிய பணமும், அந்த பரிமாறுபவருக்கு உரிய சிறிய ஊக்கத் தொகையும் சேர்த்து வைத்துவிட்டுக் கிளம்புகிறார். ஆனால் அந்தக் குழந்தை பெற்றோருடன் கிளம்பாமல் காத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் எவ்வளவு கூப்பிட்டும் தங்களுக்குப் பரிமாறிய அந்த ஊழியர் அடுத்த மேசையில் இருப்பவர்களுக்கு வேண்டியதைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு வரும்வரை காத்திருந்து, ‘தேங்க்ஸ் அங்கிள், பை’ என்று மிக யதார்த்தமாகச் சொல்லிவிட்டுக் கிளம்பியபோது அந்த ஊழியரின் முகத்தில் 1000 வாட்ஸ் விளக்கு எரிந்தது என்னவோ உண்மைதான். ஊக்கத் தொகையாக தந்தை வைத்த அந்தப் பணத்தைக் காட்டிலும், குழந்தை மனதார நன்றி என்று சொன்ன அந்த வார்த்தை ஏற்படுத்திய மகிழ்ச்சியைக் கண்டபோது அத்தனை நாட்கள் நாங்கள் செய்யத் தவறிய விசயத்தை உணர்ந்தோம். இப்பொழுதெல்லாம் அப்படி நன்றி சொல்லும்போது மனதிற்குள் ஒரு நிம்மதி வருவதை உணர முடிகிறது. நாம் எத்தனையோ பெரிய அறிஞராகவோ அல்லது உயர் பதவி வகிப்பவராகவோ இருக்கலாம். நமக்காக ஒரு துரும்பை எடுத்துப் போட்ட மிகச் சாதாரண மனிதராக இருந்தாலும் அவருக்கு நன்றி சொல்லும் கடமையை சரிவர செய்வதால் நம்முடைய கௌரவம் ஒருபடி உயருமே தவிர அதனால் எந்த பாதிப்பும் வந்துவிடாது. மனித மனம் தம்முடைய சின்னச் சின்ன செயல்களுக்குக்கூட அங்கீகாரம் தேடும் இயல்புடையது. அந்த வகையில் ‘நன்றி’ என்ற இந்த சிறிய வார்த்தை பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது என்பது அன்றாட வாழ்வில் நாம் காணும் யதார்த்தம்.

    மன பாரத்தைக் குறைக்கும் ‘மன்னிப்பு’

    பழைய சுமைகளில்
    திணறிக் கொண்டிருக்கிற மனம்
    புதிதாய் ஒன்றைக் காண்பது
    சாத்தியமல்ல.
    ஜே. கிருஷ்ணமூர்த்தி

    வாழ்க்கையில் தவறு செய்யாத மனிதர் என்று இதுவரை ஒருவர் பிறந்திருக்க முடியாது. தவறு செய்வது இயற்கை. ஆனால் அந்தத் தவறுக்காக வருத்தம் கொள்ளாமல் இருப்பது மேலும் தவறு செய்ய தூண்டக்கூடியது. இயந்திரமாக வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கும்போது நாம் செய்த சிறு தவறுகளோ அல்லது அதன் பின் விளைவுகளோ நம் கண்ணில் படுவதில்லை. ஆனால் ஓய்ந்து உட்காரும்போது என்றோ செய்த அந்த சிறிய தவறின் பாதிப்பு ஏதோ ஒரு உருவில் வந்து உறுத்தலாம். அன்று அதனைச் சரிக்கட்ட நினைத்தாலும் அது முடியாமல் போகலாம்….. இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி செய்த தவறை எண்ணி வருந்தி ‘மன்னிப்பு’ என்ற ஒரு சொல்லை சம்பந்தப்பட்டவரிடம் உடனே உதிர்ப்பதுதான். அதன் பிறகு காட்சிகள் மாறலாம் அல்லது மாறாமலும் போகலாம். ஆனாலும் நம் அகம் குற்ற உணர்வால் வேகாமலாவது இருக்கக்கூடும். அகம் குளிர ஆரம்பித்தால் புறப்பணிகள் தொய்வில்லாமல் போகும் அல்லவா. செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதால் சுய கௌரவம் ஒரு நாளும் பாதிக்காது. மாறாக அது நல்ல பண்பின் வெளிப்பாடாகத்தான் இருக்கும். எதிராளியின் கோபம் பஞ்சாய்ப் பறக்கும் வாய்ப்புகளும் அதிகம். நம்மைவிட உயர்ந்தவர்களோ அல்லது தாழ்ந்தவர்களோ எவராக இருப்பினும் நாம் ஒரே விதமாக நடந்து கொள்வதிலேயே நம் சுதந்திரமும் அடங்கியிருக்கிறது.

    நாம் நம் அக வாழ்க்கையில் சில நல்ல தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம், புற வாழ்க்கையில் விரும்பத்தக்க மாற்றங்கள் தானே வந்தமையும் அல்லவா?

    படத்திற்கு நன்றி:

    http://inspirational-images.tumblr.com/

    Share
  • எரிதழல் கொண்டு வா.. கையினை சுட்டிடுவோம்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    இன்றைய காலகட்டங்களில் ஊடகம் என்றாலே அது பெரும்பாலும் நடிகர்கள் சம்பந்தப்பட்ட விசயமாகவே இருக்கிறது. தேசியத் தலைவர்கள் பிறந்த நாளோ, தேசிய விழாக்களோ அல்லது பாரம்பரிய விழாக்களோ எதுவாக இருந்தாலும் திரைப்படங்களையோ அல்லது திரைப்பட நடிகர்களையோ முன்னிலைப்படுத்தி நிகழ்ச்சி நடத்துவதே வழமையாக உள்ளது. நாட்டிற்காக உழைத்த விஞ்ஞானிகளையோ அல்லது பெருந்தலைவர்களையோ உற்சாகப்படுத்தி நன்றி பாராட்டுவதை விட்டு, தங்கள் வருமானத்தை மட்டும் குறியாகக் கொண்டு, ‘செல்லுலாய்ட் உலகம்’ என்று சொல்லக்கூடிய திரைப்படத்துறையினரை மட்டும் முன்னிலைப்படுத்தி வியாபாரத்தைப் பெருக்கக்கூடிய சூழலே உள்ளது. சுதந்திரப் போராட்டங்களில் நேரடியாக பங்கு பெற்றவர்களை மறைத்து அந்த கதாப்பாத்திரமாக நடித்தவர்களை விளம்பரப்படுத்துகிற உலகத்தில், விளையாட்டுத் துறை சிறிதளவேனும் ஈர்க்கப்படுகிறது என்பது பாராட்டுதலுக்குரியது. ஆனாலும் 130 கோடி மக்கள் வாழும் நம் இந்திய நாட்டில் ஒலிம்பிக்கில் எத்தனை தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் பெற்றுவிட்டோம் நாம். மிகக் குறைந்த மக்கள் தொகை உள்ள அமெரிக்கா, உருசியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்டவர்கள் கூட பல தங்க மெடல்களைத் தட்டிச் செல்வதைப் பார்க்க முடிகிறது. இங்கிலாந்திற்குப் பிறகு தென் கொரியா, சப்பான் போன்ற நாடுகளோடு போட்டிப் போட்டு வியாபாரத் துறையில் முன்னேறி வருகிறது இந்தியா என்பது மகிழ்ச்சியான செய்தி என்றாலும், இன்று விளையாட்டின் ஒரு பிரிவான கிரிக்கெட்டையும், அதை நிர்வகிக்கக் கூடியவர்கள் தன்னுடைய வியாபாரத்தன்மையைப் புகுத்தி பல ஆயிரம் கோடி சம்பாதிக்கின்றனர் என்பது அதிர்ச்சியான விசயம். திரை மறைவாக நடைபெறக்கூடிய இது போன்ற நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. இந்தியாவில் நடக்கக்கூடிய இந்த கிரிக்கெட் திருவிழாவை மையமாக்கி, மற்ற நாடுகளின் பின்னணியில் இருந்தும் சூதாட்ட நிகழ்வுகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமிகவும் கவலைக்குரிய விசயம். கிரிக்கெட்டிற்கு தனிப்பட்ட மதிப்பை அளிப்பதைத் தவிர்த்து கால்பந்து, ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், போன்ற அனைத்து விளையாட்டுகளுக்கும், அனைத்து வீரர்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளித்தால் தனிப்பட்ட இது போன்ற சூதாட்டம் குறைந்து அனைத்து விளையாட்டுகளும் முக்கியத்துவம் பெற்று சமமாக வளர்ந்து தங்க பதக்கங்கள் நோக்கி முன்னேற முடியும். இன்று சூதாட்டத்தில் மட்டுமே தங்கப் பதக்கம் வாங்குவதை எண்ணி வேதனை மட்டுமே மேலோங்குகிறது. இளைய சமுதாயம் தடுமாறக்கூடாது. மன உறுதியுடன், தெளிவான சிந்தையுடன், புத்தி பேதலிக்காமல் நாட்டின் பேரும் புகழும் மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று நம் பாரதத் தாய் கண்ணீரோடு காத்துக் கொண்டிருக்கிறாள். அன்னையின் கண்ணீரைத் துடைப்பதற்காக மட்டுமே கையை நீட்ட வேண்டுமே தவிர மாற்றானிடம் கை நீட்டும் அவலத்தை விட்டு நேர்மையாக வெற்றியை நாடி நெஞ்சு நிமிர்ந்து செல்ல வேண்டும். அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுக்கும்போது பெற்ற தாயும், உற்ற சொந்தங்களும் கூட வெறுத்து ஒதுக்கும் நிலைமைக்கு ஆளாக வேண்டிவரும். நாட்டிற்காக நேர்மையாக உழைத்த தலைவர்கள், இன்னுயிர் ஈந்த தியாகிகள், நாட்டின் மேன்மைக்காக உழைக்கும் விஞ்ஞானிகள், உயிர் காக்கும் சிறந்த மருத்துவர்கள் இப்படி எத்தனையோ பேர் பாராட்டப்பட வேண்டியவர்கள் இருக்க, கதாநாயகர்கள், கதாநாயகிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என தனிமனித துதி பாடுவதினாலேயே இது போன்ற சூதாட்டங்கள் பெருகுகின்றன. விளையாட்டை முன்னிலைப்படுத்துவதை விட்டு விளையாட்டு வீரர்களுக்குத் துதி பாடுவதால்தான் இத்தகைய ஜனநாயகக் கொலை நடக்கிறதோ என்ற எண்ணம் வருகிறது. நாட்டின் எதிர்காலத்தையே பாதிக்கக்கூடிய இத்தகையத் தவறுகள் முற்றிலும் களையப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Share
  • குடுமியான்மலைக் கோயில்- ரதி

     

    சு. ரவி

    வணக்கம், வாழியநலம்,

    உயிர்ச்சங்கிலியின் தொடர்ச்சிக்கு ஆதார தேவதை.

    காதலுக்கு அதிபதியான தேவனையே காதலில் வீழ்த்தும் நாயகி.
    பரமனின் விழிவெப்பத்தால் ” புறாவின் கழுத்துத் தூவிகள்” போல ( நன்றி:உவமைக் கவிஞன் காளிதாஸன்)
    சாம்பலாகிப் பறந்த மன்மதனை அனங்கனாகவேனும் உயிர்ப்பித்த உத்தமி.
    அன்னவாகனத்தில் வீற்றிருக்கும் அழகுத் தெய்வம்.
    குடுமியான்மலைக்கோயிலில் காட்சி தரும் ரதிதேவியின் ஒயில் வடிவம்.

    Share
  • அன்றும்…இன்றும்!

    மேகலா இராமமூர்த்தி

    இடும்பைக் கஞ்சாது இன்னலில் துவளாது
    நாட்டுக் குழைத்தனர் அன்று! – (தம்)
    குடும்பம் செழிப்பதே கொள்கையென் றானபின்
    மற்றோரை மறந்தனர் இன்று!

    அரசியல் பிழைத்தோரை அறமே கூற்றமாய்
    அழித்து ஒழித்தது அன்று!
    அரசியல் என்றேநல் லறத்தைக் கொன்றிட்டுப்
    பிழைப்புச் செய்கின்றார் இன்று!

    விலங்கொன்று கேட்டதற் கேநீதி நல்கினான்
    மனுநீதி மன்னனும் அன்று!
    கலங்கிநின் றழுதிடும் மக்களே கேட்பினும்
    எட்டாக் கனியது இன்று!

    வெல்லமாய் இனித்திடும் நம்தமிழ் சிறந்திடக்
    காவியம் பலகண்டார் அன்று!
    கல்வியில் தமிழினிக் கூடாதென் றெண்ணியே
    ’சிலையினில் தமிழ்கண்டோம்’ இன்று!!!

    உற்றாரும் பெற்றோரும் கூடியே யிருந்ததனால்
    பிள்ளைகள் சிறந்தனரே அன்று!
    சுற்றமும் நட்பும் கணினியென் றானபின் – (நற்)
    பண்புகள் பறந்தனவே இன்று!

    நாகரி கம்தனை உலகுக் குணர்த்தினர்
    தமிழச் சாதியார் அன்று!
    போகங்கள் மீதிலே மோகமென் றானபின்
    ஒழுக்கத்தை மறக்கின்றார் இன்று!

    அன்றும் இன்றுமே நாட்டின் நிலைதனைப்
    பாட்டில் எழுதிட நீளும்….
    நன்னெறி நின்றுநம் ’மொழியினைக் காத்தால்’
    நாளைய வரலாறு போற்றும்!

    தமிழன்னை படத்திற்கு நன்றி: http://www.thehindu.com/news/cities/Madurai/mother-tamil-statue-to-be-erected-in-madurai/article4715161.ece.

    Share
  • அறுமுகநூறு (14)

     

    -சச்சிதானந்தம்

    வாழைக் குருத்தாகச் சுருண்டிருக்கும் மனதை,

    வாடைக் காற்றாக மென்மையாய்த் தீண்டி,

    விரிந்தகன்ற வாழ்வாக மெல்லமெல்ல விரித்து,

    வாரிக் கருணை வழங்கிடும் வேலன்!                                                                              66

     

    ஆமணக்குக் காய்போல முட்கள் முளைத்து,

    ஆந்தைகளின் அலறல்கள் அகத்தை அறுத்து,

    ஆரிருளுக் கடிமையாகிப் பேரிருளில் வாழ்ந்தவனை,

    ஆறுமுகன் அரவணைத்து அருளளித் தானே!                                                                                   67

     

    இச்சை என்னும் பறவையின் சிறகை,

    இம்மைப் பிறவியில் முழுதாய் உதிர்த்துப்,

    பிச்சை பெற்றுப் பெற்ற பிறவியைப்,

    பெற்றவ னிடமே பணிவுடன் படைப்போம்!                                                                    68

     

    வாழ்வை வெறுத்துத் தோற்றுத் துவண்டு,

    வாழும் வழிமுறை தெரியா தவர்க்கு,

    வாழும் வாய்ப்பை மீண்டும் கொடுத்து,

    வையகக் கடைமை செய்திடச் செய்வான்!                                                                     69

     

    வாழ்வை முழுதாய் வாழ்ந்து களித்து,

    வாழ்வின் பொருளை உணர்ந்த மனிதரை,

    வாழ்த்திப் போற்றி வாவென் றழைத்து,

    வேலவன் தன்னுள் கலந்திடச் செய்வான்!                                                                      70

     

    Share
  • வாழ்க்கை நலம் – 9

    குன்றக்குடி அடிகள்


    9. வாழ்க்கைத் துணை நலம்


    வாழ்க்கை ஒரு நெடிய பயணம். இந்த நெடிய பயணத்தை, தனியே நடந்து இனிதே முடித்தல் இயலா. வழி நடைப் பயணத்துக்குத் துணை தேவை. ஆன்ம முதிர்ச்சியுடையவர்கள் கடவுளை மட்டுமே துணையாகக் கொள்ளவர். கடவுளை வழித்துணையாகக் கொள்ளுதலுக்கு, துறவியல் வாழ்கை – இல்லறவியல் வாழ்க்கை என்ற வேறுபாடு இல்லை. இவ்விரு வகையினருமே கடவுளை வாழ்க்கைத் துணைவராகக் கொண்டு பயன் பெற்றுள்ளனர்.

    சுந்தரர் இல்லறவியலில் நின்று வளர்ந்தவர். ஆயினும் அவர் இறைவனையே துணையாகப்பற்றியவர். இறைவன்-சுந்தரர் தொடர்பு தோழமை வகையது.இந்த நெறி எல்லோருக்கும் இயன்று வராது.

    பொதுவாக மானிட வாழ்வியலில் தேக்கம் அதிகம்; நாள்தோறும் வளர்ச்சி காண்பதரிது. நுகர்தலில் கூட ஒன்றிலேயே சுழித்து மையமிட்டு நின்றுவிடுவார்கள் பலர். அதனினும் வளர்ந்து நுகர்தல் பாங்கும் இன்புற திறனும் அடைவதில்லை ஏன்? நிறை நலமே வாழ்க்கையின் குறிக்கோள் என்று உணர்வதில்லை. “கண்டதே காட்சி! கொண்டதே கோலம்” என்ற பழமொழி இந்தச் சூழ்நிலையில்தான் பிறந்தது.

    வள்ளுவம் மனிதனின் நெடிய வாழ்க்கைப் பயணத்திற்குத் துணையாக – இல்லை, துணை நலமாகவே பெண்ணைக் கூறுகிறது. சிலர் பெண்ணைப் “பேய்” என்றும் “காதல், ஆண்டவனின் சாபம்” என்றும் கூறுவார். இல்லற வாழ்க்கையையும் துன்பம் நிறைந்த கடல் என்றும் கூறுவர். இயற்கைக்கு மாறான இந்தக் கருத்துக்களை வள்ளுவம் ஏற்பதில்லை; இந்திய தத்துவ ஞானமும் ஏற்பதில்லை, மனையறத்தைத் துறத்தல் என்ற கொள்கை, பெண்ணின்பால் ஏற்பட்ட வெறுப்பால் தோன்றியதன்று. தமது ஆற்றலை ஒரு சிறு எல்லைக்குள் முடக்கிக் கொள்ளாமல் பெரிய எல்லையில் வாழ்ந்திட எடுத்துக் கொண்ட உத்தி. ஒரு சிலர் மனையறத்தில் வாழ்ந்தாலும் சமுதாய வாழ்வின் எல்லை வரையிலும் சென்று பணிகள் செய்துள்ளனர். இஃது அவரவர்களின் மனப்பாங்கினையும் வளர்ச்சிப் போக்கினையும் ஒட்டியது.

    ஆனால், வாய்க்கும் காதலி, வாழ்க்கைத் துணை நலமாக அமைய வேண்டுமே! ஒவ்வொரு பெரிய மனிதனின் வாழ்க்கையின் பின்னாலும் அந்த பெரிய மனிதனை உருவாக்கிய பெண் இருப்பாள் என்பது ஓர் அனுபவ வாக்கு. மாமுனிவர் மார்க்சுக்கு வாய்த்த மனைவி ஜென்னியைப் போல உலகில் வாழ்க்கை துணை வாய்க்கப் பெற்றவர்கள் எண்ணிக்கையில் பலர் அல்லர். இது மறுக்கமுடியாத உண்மை.

    ஒருவர் வாழ்க்கையில் ஒருவர்  ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, தோழமையாக இருந்து உதவி செய்வது எளிதன்று. அதற்கு நிறையப் பயிற்சி தேவை; பொறுத்தாற்றும் பண்பு தேவை. குறை, குணங்களைக் கடந்து அன்பு பாராட்டல் வேண்டும். உயிர்த்துடிப்புள்ளதாக அதாவது வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் உந்து சக்தியை வழங்குவதாக அமைய வேண்டும்.

    ஒரு பெண் தன் துணைவருக்கு – பரிவிலும் உணவளிப்பதிலும் தாயாகவும், தக்க ஆலோசனைகள் கூறி வழிநடத்துவதில் தமக்கையாகவும், குறை குணங்களைக் கடந்த நிலையில் அன்பு பாராட்டி எடுக்கும் காரியம் யாவினும் கை கொடுத்து நிற்பதால் தோழியாகவும், உடல் நலம் கருதிப் பேணுவதில் மருத்துவச்சியாகவும் காதலின்பத்தை அளிப்பதில் மனைவியாகவும், இடையூறு உண்டான நேரத்தில் தக்க நெறிமுறைகள் காட்டுவதில் அமைச்சராகவும் விளங்கவேண்டும் என்று ஆன்றோர் கூறுவர். இந்தக் கருத்தை வள்ளுவம்,

    “தற்காத்துத் தற்கொண்டார் பேணித் தகைசான்ற
    சொற்காத்துச் சோர்விலாள் பெண்”

    என்று மொழிகிறது.

    ஒரு பெண்ணுக்குரிய முதற்கடமை தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுதல்! ஆம்; கணவனுக்குப் பின் வாழ்க்கைத் துணையல்ல. வாழ்க்கைத் துணை நலமே முதலிடம் வகிக்கிறது. அதாவது பொறுப்புக்களை எடுத்து நிறை வேற்றுவோர் நலமுடன் இருந்தால்தான், தாம் துணை நிற்பாருக்கு உரிய நலன்களைச் செய்ய முடியும், அது மட்டுமல்ல. கற்பு, அன்பு, ஒழுக்கம் ஆகியன உடற் சார்புடையன மட்டுமல்ல; உயிர்ச் சார்புடைய பண்புகள்.  இவற்றில் தடுமாற்றம் வருதல் கூடாது. அதனால் தற்காத்து ‘தற்காத்து’ என்றது குறள். அடுத்து ‘தற்கொண்டாற் பேணுதல்’ ஆதலால் தலைமகனுடைய ஒழுக்கத்திற்கும் செயல் திறனுக்கும் பெண்ணே பொறுப்பேற்க வேண்டும் என்பது வள்ளுவத்தின் திரண்ட கருத்தாகும்.

    அடுத்து வாழ்க்கையின் குறிக்கோள் புகழ் பெறுதலாகும், புகழ் வேறு விளம்பரம் வேறு. விளம்பரம் வேண்டுவதன்று; புகழே வேண்டற்பாலது. அஃதாவது மற்றவர்கள் பாராட்டும் சொற்களைப் பெறுவது. பெற்ற சொற்களைப் பாதுகாப்பது.மற்றவர்கள் பழி தூற்றாமல் பார்த்துக்கொள்வது; குடும்பத்தின் செய்திகள் அயலறியா வண்ணம் பாதுகாப்பது, கண்ணகி ‘பீடன்று’ என்று கூறிய நெறியைப் போற்றி வாழ்வது ஆகும். இத்தகு நலன்களுடைய வாழ்க்கைத்துணை நலம் அமையின் இன்புற்று வாழலாம்.

    இத்தகு நலன்கள் பெண்ணினத்திற்கு அமைய வேண்டுமாயின் அவர்கள் கல்வி நலத்தில் சிறந்து விளங்க வேண்டும். உறுதியும் உத்தரவாதமும் உடைய வாழ்நிலை அவர்களுக்கு வழங்கப் பெறுதல் வேண்டும்.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!……(57)

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    கைவிரல்களின் வளைவுகள் உங்கள் நலத்தினை அறியும் வரிகளை விதைத்திடும் வகையில் வரைந்திடும் இம்மடலுடன் உங்கள் முன்னே !

    காலச் சக்கரத்தின் சுழற்சியினூடாக வாழ்க்கைத் தேர் விரைவாக அகவைகள் எனும் பாதையினூடாக பயணித்துக் கொண்டிருக்கிறது.

    இப்பயணம் வெவ்வேறு கால கட்டங்களினூடக பயணித்துக் கொண்டிருப்பதால் அக்காலகட்டத்தின் தேவைகளுக்கேற்ப மனிதனது தேடல்களும் மாறிக் கொண்டேயிருக்கின்றன.

    இன்றைய இந்தச் சூழலிலே மனிதர்களின் வாழ்வில் அவர்களால் கணிக்கப்படும் பல விடயங்களின் அடிப்படை உடமைகளிலேயே தங்கியுள்ளது.

    ஒவ்வொரு மனிதரது தேவைகளும் வித்தியாசப்படுகிறது. அவரவருடைய பார்வைகளுக்கேற்ப அவர்களுடைய தேவைகளின் முக்கியத்துவம் வரிசைப்படுத்தப்படுகிறது.

    இது மாற வேண்டும், மனிதர்கள் பொருளாசையில் இருந்து விடுபட வேண்டும்.வாழ்வின் நிலையாமையை உணர்ந்து இவ்வாசைகளில் இருந்து தம்மை அந்நியப் படுத்தி வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்திப் பல ஆன்மீகவாதிகள் ,பல ஆன்மீக கருத்துக்கள் காலத்துக்குக் காலம் மனித சமூகங்களுக்கிடையில் பரவிக் கொண்டே வந்திருக்கின்றது,, வருகின்றது.

    ஆனால் இவை எந்த வகையில் யதார்த்தமானவை என்பதைச் சிறிது நோக்கினால் மிகவும் வியப்பான விளக்கங்கள் எம் மனங்களை அலைக்கழிக்கும் என்பதுவே உண்மை.

    மனிதர்களுடைய ஆசைகளின் வித்தியாசங்களின் அடித்தளத்திலேதான் உலகத்தின் பொருளாதாரம் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

    மனித சமூகம் இத்தகைய பொருளாசைகளிலிருந்து என்றுமே தம்மை அந்நியப்படுத்திக் கொள்ள முடியாது எனும் நம்பிக்கையே இவுலகத்தின் பொருளாதர வளர்ச்சியின் மீதான நம்பிக்கையின் வலிமைக்கு ஆதாரமாகிறது.

    உலகத்தின் இயக்கம் நன்ம்மை, தீமை ஆகிய இரண்டு நிகழ்வுகளினாலுமே இயங்கிக் கொண்டிருக்கிறது.

    உலகில் உள்ள அனைவருமே புத்தர்களாகி விட்டால் இன்று புத்தர் எனும் ஒருவரினது அதியுயர் போதனைகளை நாம் போற்றிக் கொண்டிருக்க முடியாது.

    அதே போல உலகில் உள்ள அனைவருமே துரியோதனர்களாக இருந்து விட்டால் பாஞ்சாலிக்கு நடந்த அநீதியின் மூலம் வாழ்க்கையின் தர்மத்தை நாம் போதித்துக் கொண்டிருக்கவும் முடியாது.

    ஒவ்வொரு மனங்களிலேயும் நன்மைகளும் தீமைகளும் குடி கொண்டிருக்கிறது.நன்மையின் கை ஓங்கியவர்கள் நன்மை செய்பவர்களாகவும், தீமையின் கை ஓங்கியவர்கள் தீமை புரிபவர்களாகவும் உருவகம் பெறுகிறார்கள்.

    வாழ்க்கையின் வெற்றிக்கு வழி உண்மையான உழைப்பே. இந்த உண்மையான உழைப்பை மூலதனமாகக் கொடுத்த யாருமே தம் வாழ்வில் தோற்றதாகச் சரித்திரமே இல்லை.

    என்ன இதை எவ்வாறு உன்னால் அடித்துக் கூற முடிகிறது ? எனும் கேள்வி உங்கள் மனங்களில் எழுவது எனக்குப் புரிகிறது.

    வாழ்வின் “வெற்றி” என்பதன் உண்மையான அர்தத்தைப் புரிந்து கொண்டால் என் வாதத்திலுள்ள ஆணித்தரமும் புரியும். வெறும் பணமும், உடமையாயுள்ள பொருட்களும் மட்டும் ஒருவருடைய வாழ்வின் வெற்றிக்குச் சான்றுகளல்ல.

     நான் எனது இளமையான வயதில் (18) இங்கிலாந்துக்குள் கால் பதித்தவன். எமது பின்புல நாடுகளில் பணி புரிந்த அனுபவமற்றவன் ஆனால் இங்கிலாந்தில் எனது உழைப்பின் அனுபவத்தின் அடிப்படையில் பல உண்மைகளை உள்வாங்கிக் கொண்டவன்.

    பெரும்பான்மை வெள்ளை இனத்தவர் நிறைந்த நாட்டிலே தாய்மொழியல்லாத ஆங்கிலத்தை நன்கு பேசக் கற்றுக் கொள்ள வேண்டிய காட்டாயத்தின் நடுவில் எனது புலம்பெயர் வாழ்வினை ஆரம்பித்தவன்.

    ஆங்காங்கே வெள்ளை இனத்தவருள் சில காடையர் மத்தியில் நிறவேற்றுமை காரணமாக சில தாக்கங்களைக் கண்டேனேயொழிய உண்மையான உழைப்பிற்கு அவர்கள் கொடுத்த மரியாதையைக் கண்கூடாக கண்ட அனுபவம் எனக்குண்டு.

    பேராசைகளின் வழி குறுக்கு வழியில் செல்வந்தர்களாகும் எண்ணம் கொண்டு அலையும் பேர்வழிகள் இகத்தினில் என்றுமே இருக்கத்தான் போகிறார்கள். அதே போல இப்பேராசைகளின் வழி நடந்தால் இறுதியில் அடையப் போகும் அழிவுகளை வாழ்வின் நிலையாமையின் உதாரணங்களின் மூலம் விளக்கும் ஆன்மீகச் சித்தர்களும் இருக்கத்தான் போகிறார்கள்.

    இவர்கள் இரண்டுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் எனும் தண்டவாளத்தில் தான் உலகம் எனும் ரயில் தனது பயணத்தைத் தொடரப் போகிறது. இவற்ரில் ஒன்று இல்லையென்றாலும் உலகின் பயணம் ஆட்டம் கண்டு விடும்.

    இவை இரண்டுக்கும் நடுவே தாமரை இலைமேல் உருளும் தண்ணீர்த்த துகளைப் போல வாழப் பழகிக் கொள்ளும் திறமை கொண்டவர்கள் தமது வாழ்வை அமைதியாக வாழ்ந்து விடுவார்கள் என்பதுவே உண்மையாகும்.

     மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • ஒரு தாயின் ஏக்கம்

     

    பி.தமிழ் முகில் நீலமேகம்

     

    காலமெல்லாம் கழனிக்காட்டில்

    காத்து மழையும் பாராம

    கனலா சுட்டெரிக்கும் சூரியனையும் மதியாம

    களை பறிச்சி காசு சேத்து

    கண்ணான இராசா உன்ன

    கருத்தா நானும் படிக்க வெச்சேன்

    கடல் கடந்து நீயும் காசு சேர்க்க

    கழனிக் காட்டையும் தான்

    கடனுக்கு குடுத்தேன் !!!

    கடனுந்தான் தீந்து போச்சு

    காசுந்தான்  உனக்கு சேந்து போச்சு

    கண்ணசர மறந்து காத்துக் கிடக்கும்

    கருவுல சுமந்தவ நினைப்பும்

    கனவுல வந்துபோற ஒன்னாச்சு !!!

    கருக்கல்லுல வந்துடுவியோ – இல்ல

    கண் தொறந்தா விடியல்ல வந்துடுவியோன்னு

    கண்ணு ரெண்டும் பூத்துப் போயி

    கண்ணான புள்ளை உன்ன

    காணக் காத்துக் கிடக்குறேன் உன் ஆத்தா

    கண் மூடுமுன்ன சுருக்குன்னு வந்துடனும் என் இராசா !!! 

    Share
  • மதுரையம் பதி காளி

     

    – சு.ரவி

     

    வணக்கம், வாழியநலம்

    மதுரையம்பதியில் காளிமாதாவின் ஆக்ரோஷக் கோலம்…

    ஆடலில் வென்றான் ஐயன்

     

    அம்மை நீ தோற்றாய் அல்லை!

    கூடலில் போலே இங்கும்

    தோற்றவர் வென்றார் அன்றோ?

    கூடலில் கோயில் கொண்டு

    குறையறக் காக்கும் காளீ!

    தேடலில் அடியேன் வெல்ல

    தேவி நீ அருளல் வேண்டும்!

     

    மாடமா மதில்கள் சூழும்

    மதுரையம் பதிவாழ் தேவி!

    காடுவாழ் சிவனைக் கண்டு

    காதலுற் றாயோ, காளீ!

    வீடு நான் வேண்டேன்; வேறு

    விழுமிய செல்வம் வேண்டேன்!

    பாடலால் உந்தன் பாதம்

    பரவிடும் சுகமே போதும்!

     

    கண்ணனோ(டு) இடத்தை மாற்றிக்

    கம்ஸனைக் கலங்க வைத்தாய்!

    எண்ணெழுத் தறியா மூடன்

    இலக்கியம் படைக்கச் செய்தாய்!

    மண்ணிலே உயிர்கள் வாழ

    மாரியாய்ப் பொழிந்து நின்றாய்!

    உள்நினைந் துருகிப் பாடும்

    ஒருகவி போதும் தாயே!

     

    எட்டய புரத்துக் காரன்

    எம் தமிழ்ப் பாட்டுக் காரன்

    கொட்டிய கவிதைக் குள்ளே

    கொழுந்துவிட் டெரியும் தேனே!

    மட்டவிழ் மலர்கள் சூடி

    மதுரையை ஆளும் தாயே!

    பட்டமும், பரிசும் வேண்டேன்

    பதமலர் தருவாய் காளீ!

     

    பண்டரி பரத்தில் விட்டல்

    பக்தரோடி ழைந்ததைப் போல்

    பண்டொரு நாளில் சொக்கன்

    பலவிளை யாடல் செய்த

    மண்ணினை, மதுரை ஆளும்

    மரகத வல்லித் தாயே!

    திண்ணமாய் நின்னைப் பற்றத்

    திருவுளம் செய்வாய் காளீ!

     

    Share
  • கவியின் காதல்!

     

    -புவனேஷ்வர்

     

    நல்ல புகழுடைய வீணை யதன்

    நாதமெ னக்குச்சுவை யில்லை – அரும்

    மெல்லியலே திருக் குவையே! உயிர்ச்

    சோதியு னக்குவய மானேன்!

     

    கொல்லைப் பசுகொடுத்த பாலும் நல்ல

    மாமி தந்தஉண வேதும் – மிக

    நல்ல தாய்கொடுத்த பாகும் எனக்கு

    சிந்தை மகிழ்வுதர வில்லை;

     

    நல்ல நினைப்புடைய தோழர் அவர்

    சொல்லில் எரிச்சலுமுண் டாச்சு – ஒரு

    கள்வெறி போலிது வாச்சு வந்து

    தெள்ளமு தேயருள் வாயோ?

     

    சோலை மரநிழலில் மாந்தர் மகிழ்

    சோடி யாச்செல்லற் கண்டா லுன்

    னோடி ணைந்திடற் கெங்கும் எனக்

    கோடி தள்ளுதற் செய்வாய்?

     

    ஓய்வு ஒழிதலில் லாமல் லுன்றன்

    உறவைநி னைந்திரங்கு வேனோ – ஓர்

    வாழுமு றைமையறியேன் நான் வந்

    திருந்தென் கலிதொலைத் திடாயோ?

     

    அஞ்சு மானொத்த பெண்ணே இது

    வஞ்சக மன்று நீ கண்டாய் – இனி

    நெஞ்ச மறப்பதில்லை யுன்னை யொரு

    தஞ்சமென் பேன்மறுக் காதே!

     

    அருளில் பெரியவராம் மாதர் என்று

    நாலும றைசொல்லக் கேட்டேன் – தனி

    யிருளுன் னவனென்னை கொண்டால் அது

    ஏலா துனக்கது சொல்வேன்;

     

    திங்கள் முகம்பதிந்த நெஞ்சில் சிறு

    தீப்பொறி தங்கிடு மோடீ? உனைக்

    கண்டு மணந்திடவே வந்தேன் – இது

    பண்டைமு றைமையடி கண்ணே!

     

    வண்டு லாவுசோ லையில்நாம் இனிக்

    கண்டுமனம் கலந்தே யிணைவோ மணம்

    கொண்டு மறைவழி நின்றே புகழ்

    மண்டு மனையறம் செய்வோம்!

     

     

    Share
  • எதிர்காலம் மண்ணாகலாமா?

    -வே.ம. அருச்சுணன் – மலேசியா

     

    நடந்து முடிந்த
    பதின்மூன்றாவது தேர்தலில்
    மூவினத்தின்
    அடையாளம் தெரிந்தது…..!

    மூன்று வந்தேறிகளுக்கும்
    நிலைமை தெரியவில்லை
    ஆட்டத்தை நிறுத்தவில்லை
    வயிற்றுக்காக வாடிய மக்கள்
    வந்த இடத்தில்
    வகை தெரியாமல் வாழ்கின்றன…..!

    இங்கே
    ஏற்றம் தராது மந்திரத்தை
    துணிவாய் முழங்குவதும்
    ஒருவரைவொருவர்
    தின்று ஏப்பமிட எண்ணுவதும்
    வீண் வம்பு
    சொன்னால் நம்பு…..!

    எடுப்பது பிச்சை
    பேசுவதோ கொச்சை
    பேச்சில் ஒற்றுமை
    நடப்பில் வேற்றுமை
    அகம்பாவம்
    தனக்கே எல்லாமென்ற
    குறுகிய உள்ளம்
    சிறக்குமா இந்த பெருநிலம்….?

    கேடு கெட்ட உள்ளமே
    துன்மார்க்கனே
    சுனாமி
    எந்த உருவில்
    வருமென்று தெரியுமா….?

    முதுகொடிந்த
    தமிழனுக்கு இன்னுமா
    சோதனைகளும்….வேதனைகளும்……?

    ஒரு சொல் கேளீர்
    சீன சமூகம்
    அவர்களோடு கூடிப்பழகு
    ஒற்றுமையின் உச்சம் தெரியும்
    போராடும் வல்லமை புரியும்
    அவர்கள்
    மொழி….பண்பாடு
    கணமும் மறந்ததில்லை
    எழுச்சியைக் கிஞ்சிற்றும்
    துறந்ததில்லை…….!

    யதேச்சயாய் எதையும் நம்புவதில்லை
    யாரையும் ஏற்பதும் இல்லை
    சுயமாய் சிந்திப்பதும்
    செயல்படுவதும்
    அவர்களின் வெற்றிக் கவசங்கள்……!

    உண்மை உணர்வீர்
    இனிய வாழ்வு
    மாலையுடன் காத்திருக்கிறது ஏற்பீர்…..!

    இளையோரே முன்வருவீர்
    தமிழர் வாழ்வுக்கு வழிகாண்பீர்
    அடிமை வாழ்வைத் துறந்தே
    சுயமாய் வாழ்வு சிறக்க
    சொந்தத் தொழில் புரிவோம்
    அடிமைத்தொழிலை மறந்து
    செல்வச் சீமானாகத் திகழ்வோம்……!

    கையேந்தும் சமூகம் நாமில்லை என்றே
    உரக்கக்கூறுவோம்

    ஒரே குரலில்……!

    Share
  • “பகல் மின்னல்கள்”

    செல்வரகு

    “பகல் மின்னல்கள்”

    (தினமும் நண்பகல் 12 மணி முதல் 1 மணிவரை)

    சத்தியம் தொலைக்காட்சியில் தினமும் நண்பகல் 12 மணி முதல் 1 மணிவரை “பகல் மின்னல்கள்” என்ற நேரடி செய்தித் தொகுப்பு சிறப்புப் பார்வையாக ஒளிபரப்பாகி வருகிறது .

    அன்றாடம் நடக்கும் நாட்டின் முக்கியப் பிரச்சனைகள் திறமையான செய்தியாளர்களின் நேரடித் தொடர்பில் விவாதிக்கப்படுகின்றன.

    சட்டம் – ஒழுங்கு – அரசியல் – பொருளாதாரம் என்று, நடப்பு நாள் தகவல்களின் சரியான புள்ளி விவரங்களை இந்தப் பகல் மின்னல்கள் பதிவாக்கி வருகின்றன.

    செய்தியறையிலிருந்து அன்றைக்குரிய செய்திகள் மக்கள் குரலாக எடுத்து வரப்பட்டு , ஒளிபரப்பாகி வரும் பகல் மின்னல்களைக் காணத்தவறாதீர்கள் .

    Share