மேகலா இராமமூர்த்தி

இடும்பைக் கஞ்சாது இன்னலில் துவளாது
நாட்டுக் குழைத்தனர் அன்று! – (தம்)
குடும்பம் செழிப்பதே கொள்கையென் றானபின்
மற்றோரை மறந்தனர் இன்று!

அரசியல் பிழைத்தோரை அறமே கூற்றமாய்
அழித்து ஒழித்தது அன்று!
அரசியல் என்றேநல் லறத்தைக் கொன்றிட்டுப்
பிழைப்புச் செய்கின்றார் இன்று!

விலங்கொன்று கேட்டதற் கேநீதி நல்கினான்
மனுநீதி மன்னனும் அன்று!
கலங்கிநின் றழுதிடும் மக்களே கேட்பினும்
எட்டாக் கனியது இன்று!

வெல்லமாய் இனித்திடும் நம்தமிழ் சிறந்திடக்
காவியம் பலகண்டார் அன்று!
கல்வியில் தமிழினிக் கூடாதென் றெண்ணியே
’சிலையினில் தமிழ்கண்டோம்’ இன்று!!!

உற்றாரும் பெற்றோரும் கூடியே யிருந்ததனால்
பிள்ளைகள் சிறந்தனரே அன்று!
சுற்றமும் நட்பும் கணினியென் றானபின் – (நற்)
பண்புகள் பறந்தனவே இன்று!

நாகரி கம்தனை உலகுக் குணர்த்தினர்
தமிழச் சாதியார் அன்று!
போகங்கள் மீதிலே மோகமென் றானபின்
ஒழுக்கத்தை மறக்கின்றார் இன்று!

அன்றும் இன்றுமே நாட்டின் நிலைதனைப்
பாட்டில் எழுதிட நீளும்….
நன்னெறி நின்றுநம் ’மொழியினைக் காத்தால்’
நாளைய வரலாறு போற்றும்!

தமிழன்னை படத்திற்கு நன்றி: http://www.thehindu.com/news/cities/Madurai/mother-tamil-statue-to-be-erected-in-madurai/article4715161.ece.

பதிவாசிரியரைப் பற்றி

10 thoughts on “அன்றும்…இன்றும்!

  1. ///கல்வியில் தமிழினிக் கூடாதென் றெண்ணியே
    ’சிலையினில் தமிழ்கண்டோம்’ இன்று!!!///

    அருமை..அருமை. மிகச் சரியான இடித்துரைக்கும்  கருத்து.  நல்ல கவிதை மேகலா. நன்று.  வாழ்க உங்கள் தமிழார்வம். 

    அன்புடன் 
    ….. தேமொழி  

  2. Superb!

    //கல்வியில் தமிழினிக் கூடாதென் றெண்ணியே’சிலையினில் தமிழ்கண்டோம்’ இன்று!!!//

    இந்த வரிகளைப் படித்த போது தோன்றியதை இங்கே பகிர்கிறேன்: 
    A few years later…
    “Hey, what’s the plan for the weekend dude?”
    “I propose that we go to Madrai to see Tamil Toy Statue”

    “That’s cool buddy. I game for it!”

  3. தங்கள் பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றிகள் தேமொழி!

  4. What you have envisaged is absolutely correct Elango. It will become a ‘painful’ reality in the near future, undoubtedly. ‘Tamizh Toy Statue’ will be a good place of public entertainment and our beloved Tamizh people may enjoy it!!

    இது எப்படி இருக்கிறதென்றால், “பெற்ற தாயைக் கவனியாது பட்டினி போட்டுக் கொன்றுவிட்டு அவளுக்கு முச்சந்தியில் சிலை வைத்து மாலை மரியாதை செய்வதுபோல!”. வாழ்க தமிழ் சிலையாகவேனும்!!

  5. எழுந்து நின்று கைதட்டத் தோன்றுகிறது. பளீரென மனதில் அறைகின்ற வரிகள். என்ன சொல்லிப் பாராட்டுவதெனத் தெரியவில்லை.

    ////நன்னெறி நின்றுநம் ’மொழியினைக் காத்தால்’
    நாளைய வரலாறு போற்றும்!/////

    நிச்சயம். அருமையானதொரு பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் மேகலா.

  6. சுற்றமும் நட்பும் கணினியென்றானபின் – (நற்)பண்புகள் பறந்தனவே இன்று!…..என்ற வரிகளைப் படிக்கும்போது, நான் சந்தித்த சம்பவம் ஒன்றைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.                                                                                                
    பண்டைக்காலத்தில் எதெல்லாம் படாடோபம் (luxury) என்று வர்ணிக்கப் பட்டதெல்லாம் இன்று அத்தியாவசியமாகிவிட்டது (essential).  ஒரு காலத்தில் மின்விசிரி இல்லாமல் தரையில் படுத்தால் நிம்மதியான தூக்கம் வந்தது, இப்போது ஏசி, பட்டுமெத்தை இருந்தாலும் தூக்கம் வரவில்லை. கார், பங்களா இத்யாதி இவையெல்லாம் இன்று அத்தியாவசியம். குடும்பம், குட்டிகள் இருக்கிறதோ இல்லையோ கணினி இருக்கும். செல்போன் இல்லையென்றால், மற்றவர் மத்தியில் செல்லாக்காசாகி விடுகிறோம். மடியில் குழந்தை தவழுகிறதோ இல்லையோ, மடிக்கணினி எப்போதும் இருக்கும். ஒரு முறை நான் ஒருவர் வீட்டிற்குப் போயிருந்தபோது, அவர் மடிக்கணினியில் மூழ்கி இருந்தார், அவருடைய 2 வயதுக்குழந்தை ஏதோ விளையாடிக்கொண்டிருந்ததைக் கூடக் கண்டுகொள்ளவில்லை. அச்சமயத்தில் ஒருவர் கல்யாணப்பத்திரிகை கொடுக்க வந்திருந்தார். இவரோ யாரையுமே கண்டுகொள்வதாகத் தெரியவில்லை, வந்தவர் மேஜையில் பத்திரிகையை வைத்து விட்டுச் சென்று விட்டார். போகும்போது ‘வீட்டுக்கு வந்தவரை மதிக்கத்தெரியாதவருக்கெல்லாம் பத்திரிகை கொடுக்காதே’ என்று தனது மனைவிக்கு எச்சரிப்பது என்காதில் விழுந்தது. சிறிது நேரம் கழித்து குழந்தை அலறும் சப்தம் கேட்க, நம்மவர் அங்கே சென்று பார்த்தபோது, குழந்தை அயர்ன் பாக்சில் கைவித்து சுட்டுக் கொண்டு பிறகு ஆஸ்பத்திரிக்கு ஓடியதை நினைத்துப் பார்க்கிறேன். இவையெல்லாவற்றிற்கும் காரணம், அவர் மடிக்கணினியில் மூழ்கியிருந்து மற்றதை கவனியாமல் கோட்டை விட்டதுதான். இச்சம்பவத்திற்கு தங்களது பாடல் வரிகள் சரியாகப் பொருந்துகின்றன.

  7. தங்கள் மனம்திறந்த பாராட்டுரைக்கு என் பணிவான நன்றிகள் பார்வதி.

  8. கவிதை வரிகளுக்குப் பொருத்தமான சம்பவம் ஒன்றை இங்கே பகிர்ந்துகொண்டுள்ள அன்பு நண்பர் ‘நல்வழிகாட்டி’ பெருவை பார்த்தசாரதி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

  9. அருமை. வரிக்கு வரி பாராட்ட தோன்றுகிறது. “அட ஆமா தப்பாத்தான் செய்றோம்” என்று உள் உணர்வு நம்மை கேட்க செய்கிறது கவிதை.

  10. கவிதைக்குப் பாராட்டுரை வழங்கிய நண்பர் தனுசுவுக்கு நன்றிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.