எரிதழல் கொண்டு வா.. கையினை சுட்டிடுவோம்!

3

பவள சங்கரி

தலையங்கம்

இன்றைய காலகட்டங்களில் ஊடகம் என்றாலே அது பெரும்பாலும் நடிகர்கள் சம்பந்தப்பட்ட விசயமாகவே இருக்கிறது. தேசியத் தலைவர்கள் பிறந்த நாளோ, தேசிய விழாக்களோ அல்லது பாரம்பரிய விழாக்களோ எதுவாக இருந்தாலும் திரைப்படங்களையோ அல்லது திரைப்பட நடிகர்களையோ முன்னிலைப்படுத்தி நிகழ்ச்சி நடத்துவதே வழமையாக உள்ளது. நாட்டிற்காக உழைத்த விஞ்ஞானிகளையோ அல்லது பெருந்தலைவர்களையோ உற்சாகப்படுத்தி நன்றி பாராட்டுவதை விட்டு, தங்கள் வருமானத்தை மட்டும் குறியாகக் கொண்டு, ‘செல்லுலாய்ட் உலகம்’ என்று சொல்லக்கூடிய திரைப்படத்துறையினரை மட்டும் முன்னிலைப்படுத்தி வியாபாரத்தைப் பெருக்கக்கூடிய சூழலே உள்ளது. சுதந்திரப் போராட்டங்களில் நேரடியாக பங்கு பெற்றவர்களை மறைத்து அந்த கதாப்பாத்திரமாக நடித்தவர்களை விளம்பரப்படுத்துகிற உலகத்தில், விளையாட்டுத் துறை சிறிதளவேனும் ஈர்க்கப்படுகிறது என்பது பாராட்டுதலுக்குரியது. ஆனாலும் 130 கோடி மக்கள் வாழும் நம் இந்திய நாட்டில் ஒலிம்பிக்கில் எத்தனை தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் பெற்றுவிட்டோம் நாம். மிகக் குறைந்த மக்கள் தொகை உள்ள அமெரிக்கா, உருசியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்டவர்கள் கூட பல தங்க மெடல்களைத் தட்டிச் செல்வதைப் பார்க்க முடிகிறது. இங்கிலாந்திற்குப் பிறகு தென் கொரியா, சப்பான் போன்ற நாடுகளோடு போட்டிப் போட்டு வியாபாரத் துறையில் முன்னேறி வருகிறது இந்தியா என்பது மகிழ்ச்சியான செய்தி என்றாலும், இன்று விளையாட்டின் ஒரு பிரிவான கிரிக்கெட்டையும், அதை நிர்வகிக்கக் கூடியவர்கள் தன்னுடைய வியாபாரத்தன்மையைப் புகுத்தி பல ஆயிரம் கோடி சம்பாதிக்கின்றனர் என்பது அதிர்ச்சியான விசயம். திரை மறைவாக நடைபெறக்கூடிய இது போன்ற நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. இந்தியாவில் நடக்கக்கூடிய இந்த கிரிக்கெட் திருவிழாவை மையமாக்கி, மற்ற நாடுகளின் பின்னணியில் இருந்தும் சூதாட்ட நிகழ்வுகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமிகவும் கவலைக்குரிய விசயம். கிரிக்கெட்டிற்கு தனிப்பட்ட மதிப்பை அளிப்பதைத் தவிர்த்து கால்பந்து, ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், போன்ற அனைத்து விளையாட்டுகளுக்கும், அனைத்து வீரர்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளித்தால் தனிப்பட்ட இது போன்ற சூதாட்டம் குறைந்து அனைத்து விளையாட்டுகளும் முக்கியத்துவம் பெற்று சமமாக வளர்ந்து தங்க பதக்கங்கள் நோக்கி முன்னேற முடியும். இன்று சூதாட்டத்தில் மட்டுமே தங்கப் பதக்கம் வாங்குவதை எண்ணி வேதனை மட்டுமே மேலோங்குகிறது. இளைய சமுதாயம் தடுமாறக்கூடாது. மன உறுதியுடன், தெளிவான சிந்தையுடன், புத்தி பேதலிக்காமல் நாட்டின் பேரும் புகழும் மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று நம் பாரதத் தாய் கண்ணீரோடு காத்துக் கொண்டிருக்கிறாள். அன்னையின் கண்ணீரைத் துடைப்பதற்காக மட்டுமே கையை நீட்ட வேண்டுமே தவிர மாற்றானிடம் கை நீட்டும் அவலத்தை விட்டு நேர்மையாக வெற்றியை நாடி நெஞ்சு நிமிர்ந்து செல்ல வேண்டும். அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுக்கும்போது பெற்ற தாயும், உற்ற சொந்தங்களும் கூட வெறுத்து ஒதுக்கும் நிலைமைக்கு ஆளாக வேண்டிவரும். நாட்டிற்காக நேர்மையாக உழைத்த தலைவர்கள், இன்னுயிர் ஈந்த தியாகிகள், நாட்டின் மேன்மைக்காக உழைக்கும் விஞ்ஞானிகள், உயிர் காக்கும் சிறந்த மருத்துவர்கள் இப்படி எத்தனையோ பேர் பாராட்டப்பட வேண்டியவர்கள் இருக்க, கதாநாயகர்கள், கதாநாயகிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என தனிமனித துதி பாடுவதினாலேயே இது போன்ற சூதாட்டங்கள் பெருகுகின்றன. விளையாட்டை முன்னிலைப்படுத்துவதை விட்டு விளையாட்டு வீரர்களுக்குத் துதி பாடுவதால்தான் இத்தகைய ஜனநாயகக் கொலை நடக்கிறதோ என்ற எண்ணம் வருகிறது. நாட்டின் எதிர்காலத்தையே பாதிக்கக்கூடிய இத்தகையத் தவறுகள் முற்றிலும் களையப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “எரிதழல் கொண்டு வா.. கையினை சுட்டிடுவோம்!

  1. உங்கள் கனல் வரிகள் சுடுகின்றன! எரிதழலே தேவையில்லை!
    சில நாட்களுக்கு முன்னால் நான் இவ்வாறு எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது –  
    ..சினிமா பின்னால் ஒருகூட்டம்கிரிக்கெட் பின்னால் மறுகூட்டம்அரசியல் பின்னால் தெருக்கூட்டம்இம்மூன்றின் பின்னால் ஊடகக் கூட்டம்!…

    இது எப்போது மாறும்?

  2. நானொரு மாஜி விசிறி, கிரிக்கெட்டுக்கு. பல வருடங்களுக்கு முன்னால், கிரிக்கெட் சூதாடிகள் தலையெடுத்தவுடன், விளையாடும் நபர்கள் (வீரர்கள் அல்ல) அவர்களுக்கு இறையானதும், முழுக்குப்போட்டுவிட்டேன். இன்றைய ஹிந்து இதழை பாருங்கள். சூதாடிகள் தான் ராஜா. இது மாறாது. 

  3. நடப்பு செய்தியை நையப்புடைத்திருக்கும் கட்டுரை. குறிப்பிட்ட ஒரு விளயாட்டு வீரரின் லட்சனத்தை பார்க்கும் போது ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் போதும் ஆனால் இங்கு வெந்து போவது ரசிகன். ரசிகன் மாறவேண்டும் ஆனால் மாறமாட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.