Blog
-
இந்த வார வல்லமையாளர் (289)
இந்த வார வல்லமையாளராக தென்னிந்தியாவின் பல பழைய வரலாற்று இடங்கள், கோவில் கலைகள், கல்வெட்டுகள் பற்றி விரிவாக வலைச்சுவடி எழுதும் ரா (ராமையா) முத்துசாமி அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. பெற்றோர்: இராமையா – பார்வதி அம்மாள்.
இரா முத்துசாமி புதுக்கோட்டை மாவட்டம் இராமசந்திரபுரத்தில் பிறந்து வளர்ந்தவர். பெற்றோரின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஒரு சிறு கிராமம். எனவே கொங்குநாட்டின் மீது ஒரு ஈர்ப்பும் பிடிப்பும் உண்டு. கல்லூரிப் பட்டப்படிப்பை காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், முதுகலைப் படிப்பை சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ. (டி.ஆர்.டி.ஓ), சென்னை, ஆவடியில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். 45 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை வாழ்க்கை. 2000 முதல் எழுதத் தொடங்கியுள்ளார். தமிழ் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வலைத்தளங்களில் எழுதி வருகிறார். தமிழ் இலக்கியம், சங்க இலக்கியம், வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், நாட்டுப்புறவியல், அறிவியல், மற்றும் நடப்புச்செய்திகளிலும் நாட்டம் உண்டு. விக்கிப்பீடியாவில் (தமிழ், ஆங்கிலம்) கட்டுரை தொடக்கம், மேம்படுத்துதல் மற்றும் மொழிபெயர்ப்புப் பணிகளையும் மேற்கொண்ட அனுபவம் உள்ளது. புகைப்படக்கலையிலும் ஆர்வமுண்டு. சென்னை ஃபோட்டோ வாக் குழுவினருடன் இணைந்து பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த மதராசப்பட்டிணத்தின் வரலாறு சார்ந்த இடங்களை புகைப்படங்கள் மூலமாக புகைப்படக் கதையாக வெளியிட்ட அனுபவமும் உண்டு.
https://agharam.wordpress.com/
http://know-your-heritage.blogspot.in/
https://www.facebook.com/muthusamy.ramaiah.5இந்த வாரம் சங்க கால இலக்கியத்தில் இரும்புத் தொழில்நுட்பம் என்று ஆராய்ந்து பதிந்துள்ளார்:(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )
-
படக்கவிதைப் போட்டி – 189
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
பார்கவ் கேசவன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (01.12.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
-
நலம் ..நலமறிய ஆவல் – 135
தலைவரும், அதிகாரியும்
நிறுவனமோ, குடும்பமோ, எந்த தலைவருக்கும் ஒரே நியதிதான். பிறர் சொல்வதைக் காதுகொடுத்து கேட்டுவிட்டு, சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி வேலையைப் பகிர்ந்தளித்துவிட்டு ஒதுங்கிவிட்டால் எந்தக் காரியமும் சிறப்பாக முடியும்.
நானே வல்லவன்!
பல பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களின் பொதுக்கூட்டம் நடைபெறும்போது, ஒரே குரல்தான் ஒலிக்கும் – தலைமை ஆசிரியரது. `பதவி கிடைத்துவிட்டது. இனி நான் கற்க வேண்டியது எதுவுமில்லை!’ என்ற அகங்காரம்! பாதிக்கப்படுபவர்கள் என்னவோ மாணவர்கள்தாம்.
தலையை நிமிர்த்திக்கொண்டு எல்லாரையும் விரட்டிக்கொண்டே இருக்கவேண்டும், அப்போதுதான் தம் பேச்சுக்கு மறுபேச்சே இருக்காது, தாம் நினைத்தபடி நடப்பார்கள் என்று எண்ணிய தலைவர்கள் நிலைப்பது கிடையாது. இவர்களுக்குத் தம் குறை நிறைகள் புரிவதில்லை.
எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் அடுத்த வகுப்பிற்கான மணி அடித்ததுமே ஆசிரியர்கள் அறைக்கு வெளியே நின்றுகொண்டு, சுழலும் கதவைப் பிடித்து நிற்பார். “Teachers! Go to class!” என்று ஆசிரியர்களை தத்தம் வகுப்பிற்குப் போகப் பணிப்பார்.
`நான் ஒரு பெரிய அதிகாரி!’ என்ற பெருமிதம் அவரை அப்படி நடக்க வைத்திருக்கலாம். ஆனால், ஒரு நல்ல தலைவர் இப்படி நடக்கமாட்டார். எல்லா அதிகாரிகளையும் `தலைவர்’ என்று ஏற்க இயலாது.
ஒவ்வொரு முறையும் இப்படியே அதிகாரம் செய்ய, எங்களுக்கு எரிச்சல் மூண்டது. நாங்கள் என்ன மிருகங்களா, ஓயாமல் ஒருவர் விரட்ட?
“நமக்காக கதவைத் திறந்துவிடுகிறாரே! அவர் கையில் ஆளுக்குப் பத்து காசு வைத்துவிட்டுப் போகலாமா?” என்று ஒரு ஆசிரியை கேட்க, அனைவரும் பெரிதாகச் சிரித்தோம். இயலாமையைத் தணித்துக்கொள்ள கேலி பேசுவதும் ஒரு வழி.
குறைகளைப் பெரிது பண்ணுகிற அதிகாரி
ஒரு தலைவரானவர் தன் கீழ் இருக்கும் ஒவ்வொருவரின் குணாதிசயத்தையும், குறை, நிறைகளையும் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். குறைகளையே பெரிதுபடுத்திக்கொண்டிருந்தால், யாருக்குத்தான் கடமை உணர்வுடன் செயலாற்றப் பிடிக்கும்! பிறரிடம் நல்லவிதமாக நடந்துகொண்டால்தானே நல்லெண்ணம் நீடித்திருக்கும்?
கதை
தலைமைப் பொறுப்பிலிருக்கும் ஒருவர் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவள் மஹானி.
எதிர்பாராத அல்லது நடக்கக்கூடாத சம்பவங்கள் நடந்துவிட்டால் அவைகளை எப்படிச் சமாளிப்பது என்று அமைதி குலையாது யோசிக்கும் திறமை அமைந்திருக்கவில்லை அவளுக்கு. சிபாரிசுதான் மஹானியை தலைமை ஆசிரியையாக உயர்த்தி இருந்தது. அதனால் பதவிக்கு ஏற்ற மனத்துணிவு இருக்கவில்லை.
ஒரு முறை, மாணவர்கள் புகை பிடிக்கக்கூடாது என்ற பள்ளி விதிமுறையை மீறிய மாணவர்களைத் திட்டப்போனாள் மஹானி. அவர்களோ, `அந்த ஆசிரியர், இந்த ஆசிரியர்,’ என்று சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டுவிட்டு, `அவர்கள் மட்டும் சிகரெட்டு பிடிக்கிறார்களே!’ என்று அவளையே திருப்பிக்கேட்டார்கள், திமிருடன்.
மஹானி தன் நிதானத்தை இழந்தாள். தனக்குக் கீழே வேலை பார்ப்பவர்களின் மரியாதையைக் காப்பது தன் கடமை என்று உணரத் தவறினாள்.
விளைவு?
பள்ளியெங்கும், ஏன், ஒவ்வொரு வகுப்பறையிலும், அவள் கத்தியது கேட்கும்படி ஒலிபெருக்கியில், மாணவர்கள் கூறியதைப் பரப்பினாள் – அந்த ஆசிரியர்களின் பெயர்களையும் மறவாது குறிப்பிட்டு! அதன்பின், பரிதாபத்துக்கு உரிய அந்த ஆசிரியர்கள் எந்த முகத்துடன் மாணவர்களை நிமிர்ந்து பார்ப்பார்கள்?
`தன்னையே பிறர் தட்டிக்கேட்கும்படி வைத்துவிட்டார்களே இந்த ஆசிரியர்கள்!’ என்ற பதட்டம்தான் ஏற்பட்டது.
`ஆசிரியர்கள் இங்கு மாணவர்கள் இல்லை. அவர்களும் உங்களைப்போல் இருக்க வேண்டிய அவசியமில்லை!’ என்று அடித்துச்சொல்லும் தைரியம் மஹானிக்கு இருக்கவில்லை.
முட்டாள்தனமாக தன் கீழ் வேலை பார்த்த ஆசிரியர்களைத் தாக்கி, அவர்களுடைய மரியாதையையும் இழந்தாள்.
நல்ல தலைவர் எந்நிலையிலும் நிதானம் தவறாது இருக்க முயலவேண்டாமா?
சொந்தக் கதை
மாணவர்கள் சட்டைக்காலர்வரை நீண்ட தலைமுடி வளர்த்துக்கொள்ளக்கூடாது என்ற விதி மலேசியப் பள்ளிகளில் உண்டு. அதை மீறிய ஒரு மாணவனை நான் கண்டித்தபோது, “நீங்கள் மட்டும் முடியை நீளமாக வளர்த்துக்கொண்டிருக்கிறீர்களே!” என்று சாடினான்
நான் நிதானமாக, “நான் ஆணுமில்லை, இங்கு படிக்க வந்த மாணவனுமில்லை,” என்று பதிலளித்தேன்.
என்னைக் கேவலப்படுத்துவதாக நினைத்து அவன் கூறியது அவனுக்கே அவமானத்தை விளைவித்தது. முகம் சிறுக்க அப்பால் போனான்.
மாற்றவேண்டியதை மாற்று!
ஒரே நிலையில் இருப்பது ஒருவருக்குப் பாதுகாப்பான உணர்வை அளிக்கலாம். ஆனால், `மாறுதல்’ என்பது பல சமயங்களில் நன்மை விளைவிக்கும். மாறும் காலத்திற்கேற்ப நாமும் மாறத் தயாராக இருக்கவேண்டும்.
எந்த மாறுதலையும் ஏற்கத் துணிவற்ற தலைவர்கள் பிறர் சொல்வதைக் கேட்பதில்லை. தம் சொற்படி கேட்காதவர்களுக்குத் தண்டனை அளிக்கவும் தயங்குவதில்லை. இப்போக்கினால் அவர்களுக்கும் நிம்மதி கிடையாது, அவர்கள் சொற்படி நடப்பவர்களுக்கும், ஏன், எதிர்ப்பவர்களுக்கும்கூட நிம்மதி பறிபோய்விடும்.
குறுக்கீடு எதற்கு?
எந்தக் காரியமும் செய்ய ஆரம்பிப்பதற்குமுன் அதன் நெளிவு சுளிவுகளைப்பற்றித் தெளிவாகச் சொல்லிவிட்டால் குழப்பம் வராது.
வேலையைப் பிறருக்குப் பகிர்ந்தளித்தபின் அடிக்கடி குறுக்கிடும் தலைவர்களைப்பற்றி என்ன சொல்ல! இப்போக்கினால் வேலையும் தாமதமாகும், செய்பவருக்கும் எரிச்சல் மூளும்.
தகுதி இருக்கிறதா என்று முதலிலேயே பார்த்துத்தானே வேலையை அளித்திருப்பார்கள்? பின் எதற்காக குறுக்கிடுவது?
மாறாக, அவர்களுடன் இணைந்து செய்தால் உறவு பலப்படும். விறைப்பாக நடந்துகொள்வதற்குப் பதில் தட்டிக்கொடுத்து வேலை வாங்கினால், இரு தரப்பினருக்கும் நிறைவாக இருக்குமே!
பிழைகளே பாடம்
ஒரு வேலையில் புதிதாக நியமனம் ஆனவுடன் தவறுகள் புரிவது இயற்கை. அதனால் மேலதிகாரி கண்டபடி தாக்கினால், முன்னேறுவது எப்படி? அறியாமல் செய்யும் பிழைகளைப் பாடமாக எடுத்துக்கொள்ளும் சுதந்திரம் இருந்தால், பொறுப்புகள் அதிகரிக்கும்போது மன உளைச்சலும் அதிகமாகாது தடுக்கலாம்.
அப்படியே ஒருவர் பிழை புரிந்தாலும், தலைவர் பலபேர் முன்னிலையில் அவரை அவமானப்படுத்தாது, தனியாக அழைத்துச் சொல்லலாமே!
ஒரு குடும்பத்தலைவியிடமிருந்து கற்ற பாடம்
“உன் தாய் உன்னை ஓயாமல் திட்டிக்கொண்டே இருக்கிறாளா! உன்னால் எப்படி பொறுக்க முடிகிறது?” ஒரு பெண் தன் தோழியைக் கேட்டாள், அதிசயத்துடன்.
“நான் சரியாக நடந்துகொள்ளாததால் திட்டுகிறாள். அதோடு, தனியாக அழைத்துத்தானே செய்கிறாள்!” என்ற பதில் வந்தது.
அந்த தாய் மகளைத் திருத்தும் நோக்கத்துடன் கடுமையாகப் பேசியிருக்கலாம். பிரச்னை என்று வந்தால், அதை எப்படி மாற்றுவது என்றும் வழி காட்டியிருக்கலாம். ஆனால், மகளுடைய நிலையில் தன்னை வைத்துப் பார்த்து, அவளுடைய தன்னம்பிக்கைக்குப் பங்கம் வராதபடி நடந்துகொண்டாள். அதனால் வருத்தம் உண்டானாலும், தாய்மீது கோபம் எழவில்லை மகளுக்கு.
ஒரு தலைவர் முறைகேடாக நடந்தால், பிறரும் அவ்வழியைத்தான் பின்பற்றுவார்கள். (`தலைவரே அடிக்கிறார், நாம் செய்தால் என்ன?’ – இது லஞ்ச ஊழல் பெருகியிருக்கும் நாட்டில் ஒருவர் தன்கீழ் வேலை பார்த்தவர்களுக்குக் கூறிய அறிவுரை!))
`நகத்தைக் கடிக்காதே!’ என்று ஓயாமல் மகளைக் கண்டிக்கும் தாய்க்கே அப்பழக்கம் இருந்தால், மகள் எப்படித் திருந்துவாள்?
பிறரிடம் தாம் எதிர்பார்ப்பதன்படி தாமும் நடப்பவர்களே சிறப்பான வழிகாட்டிகளாக அமைகிறார்கள்.
தொடருவோம்
-
வாழ்ந்து பார்க்கலாமே 44
க. பாலசுப்பிரமணியன்
தோல்விகள் தொடர்கதையானால் ..
“சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்; நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்” – தொலைக்காட்சியில் இந்தப்பாடல் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. கவியரசு கண்ணதாசனின் இந்தப்பாடலின் ஆழமான கருத்து மனோதத்துவ அடிப்படையில் அலசிப்பார்க்கும் பொழுது ஒரு மனதின் பல பரிமாணங்களையும் உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் துயரங்களையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது. வெற்றி – தோல்வி, மகிழ்ச்சி – துயரம், உயர்வு -தாழ்வு, வளமை -வறுமை ஆகிய அனைத்தும் பிணைந்ததுதான் வாழ்க்கை என்பதை எல்லோரும் அறிகின்றோம். ஆனாலும் தோல்விகளையும் துயரங்களையும் தாங்குகின்ற பக்குவம் நமது மனதிற்கு ஏற்படுவதில்லை.
“நீங்கள் சொல்வது சரிதான் அய்யா. தோல்விகளைத் தாங்குகின்ற பக்குவத்தை அடைய முயற்சிக்கின்றேன். ஆனால் துயரங்களும் தோல்விகளும் திரும்பத்திரும்ப வரும்பொழுது எப்படி சம்மாளிப்பது?. தோல்விகளின் தொடர்ச்சியில் மனம் துவண்டு விடுகின்றதே – என்ற கூற்று காதில் விழத்தான் செய்கின்றது. “பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும் “என்ற பழமொழி நினைவுக்கு வருகின்றதே !
ஆங்கிலத்தின் மிகப்பெரிய கவிஞர் செகப்பிரியர் (Shakespeare) ஓர் நாடகத்தில் கூறுகின்றார் : “துயரங்கள் வரும்பொழுது தனித்து வருவதில்லை. அணி அணியாக வருகின்றன” (When Sorrows come, they come not in a single spies, but in battalions) பலரும் அனுபவிக்கும் உண்மை இது! இதற்கு வழி என்ன? மன உறுதிதான் !
அமெரிக்காவின் மிகச் சிறந்த தலைவராக விளங்கிய ஆப்ரகாம் லிங்கன் ஒரு சாதாரண தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்து எத்தனையெத்தனை சோதனைகளைச் சந்தித்தார். எத்தனை தோல்விகள் அவரைப் பின்தொடர்ந்தன ! தளர்ந்தாரா அவர்? ஒவ்வொரு தோல்வியையும் ஒரு பாடமாக ஏற்றுக்கொண்டு அவற்றை தன் முன்னேற்றத்திற்கான அடிக்கல்லாக மாற்றிக்கொண்டாரே! மற்றவர்களைக் கவரும் வசீகரமும் உடல்வாகும் இல்லாதவராக இருந்தாலும் தன் திறன்களால், தன் தொண்டால், தன் முயற்சிகளால் எல்லோரையும் ஈர்க்கும் காந்த சக்தி படைத்த மனிதராக மாறினாரே ! தோல்விகள் அனைவருக்கும் வரும். ஆனால் தொடர்ந்த தோல்விகள் அனைவருக்கும் வருவதில்லை. அப்படி வரும்பொழுது துவண்டுவிடாமல் எழுந்து ஒரு சிங்கத்தைப் போல சீறு நடை போடுகின்ற தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ளலாமே!
ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் கதைகள் அவருடைய ஆரம்பக்காலத்தில் எத்தனை முறை திருப்பியனுப்பப்பட்டது. அவர் முயற்சியைக் கைவிடவில்லையே ! உலகம் தன்னை ஒரு மிகச் சிறந்த எழுத்தாளராகப் போற்றும் வரையில் அவர் தளரவில்லை! உலகின் பல முன்னோடிகள் பெர்னார்ட் ஷாவோடு பேசவும் கருத்து பரிமாறவும் துடித்தார்களே!
சர் ஐசாக் நியூட்டன் என்ன சொன்னார் “ஆயிரமாவது தடவை நான் ஒரு பல்பை கண்டுபிடித்த போது எவ்வாறு அதை 999 வழிகளில் செய்யக்கூடாது எனக் கற்றுக்கொண்டேன்”
சரித்திரம் என்ன சொல்கின்றது? – கீழே விழுந்தவர்கள் எழுந்து நின்றார்கள்; தடுக்கி விழுந்தவர்கள்- மீண்டும் எழுந்து நடக்க முயன்றார்கள்; தோல்வி அடைந்தவர்கள் – மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெற்றி அடைந்தார்கள். சாதனை படைத்தார்கள் ! இப்படி சரித்திரம் படைத்தவர்கள் ஒன்றல்ல-இரண்டல்ல-ஆயிரமாயிரம்பேர்கள் ! இவர்கள் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டாமா?
பல நேரங்களில் நமது தவறான முடிவுகளால் நாம் தோல்வியைச் சந்திக்கிறோம். அந்த நேரங்களில் நமது முடிவுகள் தவறு எனது தெரிந்துவிட்டால் அதை ஏற்று மாற்றிக்கொள்ள துணியவேண்டும். தொடர்ந்து நமது தவறான முடிவுகளோட வாழ நினைத்தாலோ அல்லது நம்முடைய அகந்தை ,தற்பெருமை காரணமாகவோ நமது முடிவுகளைத் தொடர்ந்து போற்றிவந்தாலோ எப்படி வெற்றிப்படிகள் மீது ஏற முடியும்?
அறிவியல் ஆராய்ச்சிகளில் “பிழை பகுப்பாய்வு” (Error Analysis) என்ற ஒரு முறை பல இடங்களில் நடத்தப்படுகின்றது. அதன் பொருள் என்ன? நமது கண்டுபிடிப்புக்கள் ஆராய்ச்சிகள் ஆகியவற்றில் பிழைகள் ஏற்படுவதும், பிழைகள் கண்டுபிடிக்கப்படுவதும் ஒரு சாதாரண நடப்பு. ஆனால் அந்தப் பிழைகள் ஏன் ஏற்பட்டன? அதற்கான மூல காரணங்கள் என்ன? அந்தப் பிழைகளை எப்படி சரி செய்யலாம்? என்ற ஆய்வு நடத்தப்படுகின்றது. இது தவறுகளை மறுமுறை வராமல் இருப்பதற்கான கற்றலையும் திறன்களையும் நமக்கு அளிக்கும். இந்தப் பழக்கத்தை நாம் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திக் கொள்ளவேண்டும். தோல்விகளை அலசி ஆராய்ந்து தவறுகளை ஏற்று அதற்கான மாற்று வழிகளை கண்டுபிடித்து மாற்றத்தைக் கொணருதல் வெற்றிக்கான அறிகுறிகளை நமக்கு காட்டும்.
மூளை-நரம்பியல் வல்லுநர்கள் தவறுகள் ஏற்படுவதற்கான காரணங்களிப் பற்றி செய்த ஆராய்ச்சியில் கவனக்குறைவுகளைத் தவிர மூளையில் ஒரு முறை ஏற்பட்ட கற்றலின் தாக்கங்கள் தொடர்வதாகவும் அவைகளுக்கான நியூரான்களின் வலைப்பின்னல்கள் வலுப்பட்டதால் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தாமதிப்பதாகவும் அதனால் தொடர் தவறுகள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். இந்த நிலையை மாற்றுவதற்கான சூழ்நிலைகளை புதிய கற்றல்களே உருவாக்கும். எனவே, தவறைத் தவறு என்று அறிந்து கொள்ளாத வரையில் தொடர் தவறுகள் ஏற்பட்டுக்கொண்டிருக்க வாய்ப்புக்கள் உண்டு.
இந்த மாதிரியான தொடர் தவறுகளால் ஏற்பட்ட தோல்விகளால் மூடப்பட்ட நிறுவனங்களும் உண்டு. பல்லாண்டு காலங்கள் மிகச் சிறந்ததாக இருந்த நிறுவனங்கள் தங்களுடைய மூளைகளைச் சலவை செய்து புதிய கற்றலுக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்த வில்லை ஒரு தனி மனிதனுக்கோ அல்லது ஒரு நிறுவனத்துக்கோ பல காலங்கள் சிறப்பான உயர்நிலை சமூக அந்தஸ்து கிடைத்ததாலும் எவ்வளவு நாட்கள் அவை தொடரும் என்பதற்கான எந்த உத்திரவாதமும் இல்லை. ஒரு காலத்தில் மிகச் சிறப்பான காமெராக்களை கண்டுபிடித்த கோலோச்சிய கோடக் என்னும் நிறுவனம் வருகின்ற மாற்றங்களைக் கண்டுபிடித்து அதற்கான தயாரிப்புகளில் ஈடுபடாததால் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
இந்த நிலைக்கு வந்த பல நிறுவனங்களின் வழக்கு ஆய்வுகள் ஒன்றை மட்டும் தெளிவாகத் தெரியப்படுத்துகின்றன. தோல்விகள் பெரும்பாலும் ஒரு கணத்தில் வருவதில்லை. அவை வருவதற்கான பல அறிகுறிகள் நமக்கு முன்னமே கிடைத்து விடுகின்றன. நாம் விழிப்புடன் இருத்தல் மிக்க அவசியம்.
நண்பர்களே ! தோல்வியையும் தொடர் தோல்விகளையும் கண்டு அஞ்சவேண்டியதில்லை… அவைகள் நமக்கு பின்னால் வரும் வெற்றிக்கு நிச்சயமான வழிக்காட்டல்களைக் கொடுக்கும்.
துணிந்து முயற்சிக்கலாமே!!.. இன்றைய தோல்விகளை நாளைய வெற்றிகளாக மாற்றலாமே!!
(தொடரும்)
-
சீனவேதம் அல்லது சகத்தின் சூட்சமம்
முனைவர் இரா.வெங்கடேசன்
உதவிப் பேராசிரியர்
இந்திய மொழிகள் மற்றும்
ஒப்பிலக்கிய பள்ளி
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் – 10
சீனநாட்டை நெப்போலியன் உறங்கும் யானை என்றான் இது உண்மையே. மங்கோலிய இனத்தைச் சேர்ந்த சீனர்களின் உயர்வுக்குக் காரணமாக இருப்பவை உழைப்பு, இலக்கியம், மதநம்பிக்கை என்று சொன்னால் அது மிகையாகாது என்று எண்ணுகின்றேன். உலகில் தொன்மையான நாகரிகத்தைக் கொண்ட சீனா தொன்மையான இலக்கிய வளத்தை தன்னகத்தே கொண்டதாகும். சீனச் சமுதாயம் தொடக்க காலத்தில் அறிஞர்கள், உழவர்கள், கைத்தொழில் செய்வோர், வணிகர் என்ற படிநிலையில் அமைந்திருந்தது. சீன ஞானி கன்பூசியசின் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்த மென்சிபசு சீனச் சமுதாயத்தை கற்றோர், கல்லாதவர் என இரண்டாகப் பாகுபடுத்தினார். இப்பிரிவு இன்றைய காலகட்டத்திலும் தொடர்கிறது. சீனத்தில் சீனம், மங்கோலியம், திபெத்தியம், கொரியம், தாய், உயிகுர், ஆங்கிலம் போன்ற மொழிகள் வழங்கப்பட்டாலும் சீனமொழி முதன்மை மொழியாக உள்ளது. சீனர்கள் கட்டுக்கோப்பாக வாழ்வதற்கு அடைப்படியாக இலக்கியங்களைக் கொண்டனர். சீன எழுத்து கி.மு.1250-1046 என்ற காலப் பகுதிக்குரிய எலும்பில் பொறிக்கப்பட்ட தேவ வாக்குகளிலும் வெண்கலப் பொறிப்புகளிலும் காணப்படுகின்றன. சீன எழுத்துக்களின் தரப்படுத்துதல் குவின் அரச மரபின் காலகட்டத்தில் நிகழ்ந்தது. சீனர்களைப் பண்படுத்தியது சீன இலக்கியங்களே. அப்படியான இலக்கியங்களில் முக்கியமானது சீனவேதம் அல்லது சகத்தின் சூட்சுமம் என்ற நூல் ஆகும். கன்பூசியஸ் முதலானோர் தம் காலத்தில் சொன்ன கருத்துக்களைத் திரட்டிய நூலாக இந்நூல் விளங்குகிறது. 1928 ஆம் ஆண்டு எம்.ஆர், ஜம்புநாதன் இந்நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சீனர்களின் ஒழுக்கம், கல்வி, பண்பாடு, உடை, இசை, மதம் போன்றவைகளை இந்நூல் ஒழுங்குபடுத்துகிறது.
இன்றைக்கு சீனர்கள் பண்பாடு, கல்வி, தொழில்நுட்பம், அரசியல், அறநிலை, அறிவுநிலை, சட்டம், இலக்கியம் போன்றவற்றில் உயர்ந்து நிற்பதற்குக் காரணம் அந்நாட்டில் வாழ்ந்த அறிஞர்களின் சிந்தனைகள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சீன நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் மைய உறுப்பாகக் கன்பூசியம் [Confucianism] விளங்கி வந்துள்ளது. இந்நெறி சீனஞானி கன்பூசியசினாலும் அவருக்குப்பின் தோன்றிய மென்சியசு (mencius) உள்ளிட்ட சான்றோர்களாலும் வளர்க்கப்பெற்றது. பின் வந்து சங்கு (sung) மிங்கு (ming) அரச மரபின் ஆட்சிக் காலங்களில் புதுக்கன்பூசியம் (Neo-confucianism) வளர்ச்சிபெற்றது. இந்த நெறியாளர்கள் தாவு மார்க்கம் மற்றும் பௌத்தம் ஆகிய இருபெரும் நெறிகளினின்றும் தேர்ந்தெடுத்த சிந்தனைகளைப் புதுக்கன்பூசியசியத்தில் புகுத்தி விட்டனர். (சோ.ந.கந்தசாமி, 2013:41)
சீனர்கள் தாவோ மார்க்கம், மோசியநெறி, இயற்கையியம், வினைமுறைக்கடைப்பியம், அல்லது சட்டவியம், பொதுவுடைமைவாதம், கன்பூசியிசம், பௌத்த மார்க்கம் போன்றவைகள் காணப்பட்டாலும் சைனர்களின் சிந்தனைகளில், இலக்கியங்களில் மேலோங்கி கன்பூசியிசம்2 நிற்கிறது. கன்பூசியசின் போதனைகள்யாவும் முற்ற முடிந்த அறிவுரை என்று மக்கள் ஒப்புதல் அளித்தனர். அளித்தபின் சீனப் பள்ளிகளில் எல்லாம் கன்பூசியசின் போதனைகள் பயிற்றுவிக்கப்பட்டன. கன்பூசியசு ஒரு சாமானிய மனிதர் என்ற மட்டில் சீனர்கள் கருதவில்லை. அவரை ஒரு பூரண மனிதர் என்று அவரை மதிப்பிட்டனர் (சோ.ந.கந்தசாமி, 2013:57) எனவேதான் சீனர்கள் கன்பூசியத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு இலக்கியங்கள் வழியாக அதனை மக்களுக்கு கடத்தினர். இந்த சிந்தனாமுறையென்பது சமூக விழிப்புடையதாக இருப்பதற்கானது. கன்பூசியசின் சிந்தனைகள் எப்பொழுதும் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
II
வடக்குச் சீனாவின் சேபூ என்ற இடத்தில் கி.மு.551-ஆம் ஆண்டு கன்பூஷியஸ் பிறந்தான். 3 வயதில் தந்தையை இழக்கிறான். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்ட கன்பூஷியஸ் சிறிய பள்ளிக்கூடம் தொடங்கிப் பின்னாளில் ராஜ்யத்தின் பிரதம மந்திரியாக உயர்ந்தான். பிரதம மந்திரி கன்பூஷியஸின் நிருவாகத்தின்கீழ் லூராஜ்யம் மற்ற ராஜ்யங்களுக்கு ஒரு முன்மாதிரியாயிருந்தது. விலைவாசி, முதலாளி-தொழிலாளி உயர்வு தாழ்வு, அறிவுக்கும் திறமைக்கும் தகுந்தாற்போல் வேலை போன்ற பல சீர்திருத்தங்களைச் செய்தான். சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட கன்பூஷியஸ் தன் சீடர்களுடன் நாடு முழுக்கப் பயணப்பட்டு மக்களைச் சந்தித்து நற்போதனைகள் செய்தார்.
“கன்பூஷியஸ் ஒரு சிந்தனையாளன், உபதேசிகன், தீர்க்கதரிசியல்ல காணாத கடவுளைப் பற்றி அவன் ஒன்றுஞ் சொல்லவில்லை. கண்முன்னே நடமாடும் மனிதர்களுக்கு தொண்டு செய்யாமல் காணாத பொருளுக்கு எப்படித் தொண்டு செய்ய முடியும் என்பது அவன் கேள்வி. உலகத்திலே பிறந்துவிட்டு உலக விவகாரங்களிலே ஈடுபடாமல் உலகத்தைவிட்டு ஓடிவிடுவதில் அர்த்தமென்ன இருக்கிறது என்று அவன் கேட்டான். இப்படி அவன் உலக ரீதியாக உபதேசிக்க வேண்டியது அந்தக் காலத்தில் அவசியமாய் இருந்தது. ஏனென்றால் அவனுடைய காலத்தில் தேச முழுமையிலும் அரசனுக்கும் குடிகளுக்குமுள்ள சம்பந்தம், உற்றார் உறவினர்களுக்குள்ள சம்பந்தம் முதலியவையெல்லாம் வரன் முறையின்றி ஒரே குழப்பமாய் இருந்தன. இதனாலேயே கன்பூஷியஸ் மனித வாழ்க்கைக்குத் தேவையான பல அமிசங்களைப் பற்றியும் கூறினான். கல்வி முறை, அரசியல் முறை, சடங்குகளைச் செய்யும் முறை, கலைகளை வளர்க்கும் முறை முதலிய பலவற்றைப் பற்றியும் அவன் திட்டங்கள் வகுத்திருக்கிறான்.” (வெ.சாமிசாதசர்மா, 2001: 50-51)
கன்பூஷியஸ் புதிய மதமொன்றையும் உருவாக்கவில்லை. புதிய தத்துவங்களையும் உற்பத்தி செய்யவில்லை. ஆனால் மனித மனங்களை நன்றாக அறிந்தவன். மனித வாழ்க்கை பண்படுவதற்கு சில வழிமுறைகளைச் சொன்னான். இவை அனுபவத்திற்கு ஏற்றதாக இருந்தது. மக்கள் ஏற்றுக்கொண்டனர். லாவோத்ஸே உலகத்தைத் துறந்து வாழச் சொன்னான். கன்பூஷியஸ் உலகத்திலிருந்து வாழச் சொன்னான். கன்பூஷியஸின் காலத்திற்குப் பின்னால் வந்த மோத்ஸேயின் உபதேசங்கள் மக்களுக்கு உபயோகமாயிருந்தன. இதன் பின்னால் வந்த மென்ஷியஸ் என்ற மற்றொரு ஞானி மக்களுக்கு நன்மைகளைப் போதித்தான். இந்த சிந்தனையாளர்கள் சீனாவை சீன மக்களை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு சென்றனர். இவர்கள் சொன்னவைகள் தொகுக்கப்பட்டன. இந்த நூல்கள் இன்றைய காலகட்டத்திலும் பயனுள்ளதாக உள்ளது சீனர்களுக்கு மட்டுமல்ல உலக மக்கள் அனைவருக்குமே.
III
சீனமக்களின் அறிவுச் செழுமை, ஒழுக்கம் என்பன நீதிபோதனைகளால் கட்டமைக்கப்பட்டது. எந்தவொரு சீன இலக்கியத்திலும் நீதிபோதனை எப்பொழுதும் இடம்பெற்றுள்ளது. இலக்கியம் மக்களுக்காக என்ற கோட்பாட்டினைச் சீன இலக்கியத்தில் காண்கிறோம். அழகியல் கூறுகளுக்கு இரண்டாம் நிலை இடம்தான் தரப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக அற இலக்கியங்களும் (Moral Treatises) செவியறிவுரைகளும் (Exhortations) கடிந்துரைகளும் (Admonitions) மிகப் பலவாகத் தோன்றின. நவீனத் திறனாய்வாளர்கள் அவற்றைக் குறைத்து மதிப்பிட்டபொழுதும்கூட சீனரின் மனத்திலும் ஒழுக்க நெறியதும் அவற்றின் ஆதிக்கம் மிகுதியானது மட்டுமன்றி தொடர்ச்சியுமுடையது.3 எனவே சீன இலக்கியங்கள் பெரும்பகுதி நீதிபோதனைகளை வெளிப்படுத்தி நிற்பவைகள். இந்த நீதிபோதனைகள்தான் சீனர்களை உலகில் தலைசிறந்தவர்களாக காட்டி நிற்கிறது.
கன்ஃபூசியஸ் மற்றும் அவரது சீடர்கள், சீனச் சமுதாயத்திற்கு வழிகாட்டும் கருத்துகளைக் கொண்டவையாக ஐந்து நூல்களை அடையாளம் காட்டினார்கள். இந்த ஐந்து நூல்களையுமே கன்ஃபூஷியஸ்தான் கொடுத்தார் என்றும் பலர் சொல்வார்கள். ஹான் வம்சத்தில் வந்த வு (Wu) பேரரசரின் காலத்தில் (கி.மு.141-கி.மு.87) கன்ஃபூஷியஸ் சொன்ன தத்துவங்களுக்கு அதிமுக்கியத்துவம் ஏற்பட்டது. கி.மு.136இல் கன்ஃபூஷியஸ்-இன் கருத்துகள் சீனாவின் தேசியக் கருத்துவாதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அன்று முதல் 20 ஆம் நூற்றாண்டு வரையில் இந்த ஐந்து நூல்களின் கருத்துக்கள் ஏதாவது ஒருவகையில் சீனாவின் அதிகாரபூர்வமான தேசியக் கருத்துகளாக இருந்து வந்தன. அந்த ஐந்து நூல்கள் எவை?
- மாற்றுத் தொகை (யீ சிங். Yi sing, Classic of Changes)
- வரலாற்றுத் தொகை (ஷு சிங், Shu sing, classic of History)
- கவித்தொகை (ஷிழ் சிங், Shi sing, classic of Songs)
- சடங்குத் தொகை (லீ சீ, Li ji, Collection of Rituals)
- வசந்தகால இலையுதிர் காலக் குறிப்புகள், (ச்சுன் ட்ச்சியு, Chun Qiu, Spring and Autumn Annals)”4
கன்பூசியஸ் சொன்ன தத்துவங்கள், நீதிபோதனைகள், உலகியல் நீதிகளைப் போதிப்பதற்கு இந்த நூல்கள் உதவியிருக்கலாம். எப்படியாயினும் கன்பூசியசின் சிந்தனைகள் மக்களுக்கு நற்போதனைகளைக் கூறுவதாக உள்ளன.
கன்பூசியஸ் முதலான சிந்தனையாளர்களின் தத்துவக் கருத்துக்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட சீனவேதம் அல்லது சகத்தின் சூட்சுமம் என்ற இந்நூல் 1928 ஆம் ஆண்டு நீடன் கோ பதிப்பகத்தின் வழியாக எம்.ஆர்.ஜம்புநாதன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலைத் தமிழில் மொழிபெயர்க்கவேண்டிய தேவை குறித்து எம்.ஆர்.ஜம்புநாதன் இதுவே அறநூலும் ராஜதந்திர சாஸ்திரமும் இன்பநூலுமாகும். கம்பூஷன் மகானின் மொழிகளோடு பல மெய்ப்புருடர்களின் மொழிகளும் கலந்துள. சீன பாஷையிலிருந்து பல பாஷைகளில் அவை பல தடவை மொழிபெயர்த்திருந்த போதிலும் இதுவரை தமிழில் தோன்றவில்லை. இது முக்கியமாய் பல ஆங்கில நூல்களைத் தழுவியே எழுதப்பட்டுள. மூல நூலில் சம்பாஷணை மூலமாயும் இன்றும் பல உதாரணங்களுடன் சொல்லியுள்ளவைகளைச் சுருங்கச் சொல்லி விளக்கமாய் எழுதியுள்ளோம். (எம்.ஆர்.ஜம்புனாதன் 1928:34-35) என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நூலில் 25 தலைப்புகள், 21 அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. 21 அத்தியாயங்களில் 499 சூட்சமங்கள் பேசப்பட்டுள்ளன. இந்நூலில் இடம்பெற்றுள்ள முன்னுரைகள் பல அரிய தகவல்களைக் கொண்டுள்ளன. இந்நூலாசிரியர் மூவரை மட்டுமே மகான்6 என்று ஏற்றுக்கொள்கிறார். இம்முன்னுரையில் மூன்று விசயங்களை மையப்படுத்தி விவாதிக்கின்றார். 1.புத்தமத மேன்மை, 2.இசை, 3.மொழி. இசையும் வசீகரமான மொழியும் தேவையில்லை என்கிறார். இந்துமதம், கிறித்தவமதம், இசுலாம் மதங்கள் பின்பற்றக்கூடிய போலியான நம்பிக்கைகளையும் இம்மதங்களைப் பின்பற்றியவர்களால் உண்டான அழிவுகளையும்7 பட்டியலிடுகின்றார். புத்தர், அசோகரின் பெருமைகளைக் கொண்டாடுகின்றார். பிற மதத்தினரைப் பேசும்பொழுது நாத்திகத்தை உயர்த்திப் பிடிப்பதாகத் தோன்றுகிறது. கடவுள் நாமத்தை உச்சரிப்பது, பாவமன்னிப்பு, தோத்திரங்கள் பாடுவது, அற்புத லீலைகள் புரிவது, இசை போன்றவையெல்லாம் அபத்தமானவைகள் என்று பதிவிடுகின்றார். இந்தப் பார்வை புத்தமத பார்வையை அடிப்படையாகக் கொண்டது.
இந்நூலில் சொல்லப்படும் சூட்சமங்களை கன்பூசியஸ் லீ முதலிய அறிஞர்கள் உரைத்ததாகக் குறிப்பிடுகிறார். தமிழில் இருக்கும் அறநூல்கள் மக்களுக்கு அறக்கருத்துக்களை எவ்வாறு போதித்தனவோ அவ்வகையிலே இந்நூல் கருத்துக்களும் மக்களுக்குத் தேவையான அறத்தை வலியுறுத்துகிறது. நடுநிலைமை, அறம், மொழி, ஒழுக்கம், மனம், இறைவன், மகன் கடமை, சான்றோர், குரு, கல்வி, அறிவு, உலகநீதி, சங்கீதம், நடனம், இசை, மொழி, மாணவர் அறம், ஆசான் அறம், வரி, அரசாங்க அறம், உலக இரகசியம் என்று பல பொருண்மைகளை உள்ளடக்கிய கருத்துக்களை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளது.
இந்த நூல் கூறுகின்ற அறக்கருத்துக்கள் அனைத்தும் சீன மக்களுக்கானது என்றாலும் உலகில் உள்ள அனைத்து மக்களும் பின்பற்றக்கூடிய பொதுமைகளைப் பெற்றுள்ளன. உலக மக்களுக்கானது எனும்பொழுது அறம் தலைதூக்கி நிற்பதையும் தனிமனித ஒழுக்கம் வலியுறுத்தப்படுவதையும் காணமுடிகிறது.
நல்லாரை நயந்து பொல்லாரைப் புறக்கணித்தால் நாட்டிலுள்ளோருக்குச் சந்தோஷம்; பொல்லாரைப் புகழ்ந்து, நல்லாரை இழந்தால், மாந்தர்களின் மனமிளைக்கும் (ப.42)
தரணியைத் தூய்மையாக்க, அன்பும், அமைதியும் தேவை. அகிலமெல்லாம் நிலவச் செய்யவும் (ப.42)
நன்மையைக் கண்டு, அதை நாடாமலிருப்பது பேடித்தனமாகும் (ப.43)
கைக்கூலியளித்து, கற்றோர்களை கைவசம் செய்ய இயலாது (ப.44)
காலையில் சத்தியத்தைச் செவியுற்றவன், மாலையில் மகிழ்வுடன் மரிக்கலாம் (ப.48)
பேராசையைப் பற்றுபவனுக்குப் பகைஞர்கள் பாரிலுண்டு (ப.48)
அறிஞனைக் கண்டால் அவனை அடைய விரும்பவும், அறிவிலியை அணுகினால் தன்னகத்தை ஆராயவும் (ப.49)
அரசர்களிடம் அதிகப்பழக்கம் அவமானத்தை விளைவிக்கும்; சிநேகிதர்களிடம் சகசமானது வெறுப்பில் முடியும் (ப.49)
மாந்தர்கள் தம்தம் நிலைக்கேற்றவாறு மாறுதலை அடைகிறார்கள். (ப.57)
அமைதி, அடக்கம், அரும்பணியோடமைந்த அச்சமற்றவனை அடைவது ஆனந்தம் (ப.74)
அறத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது மாணவர்களின் அறம், ஆசான் அறம், அரசாங்க அறம் உரைக்கிறது இந்நூல்.
ஒரு மாணவனுக்கு மேன்மையான மதிப்பு அளிக்கப்பட்ட பொழுது நான் இதற்கருகனல்லன் எனச் சொல்லியதைச் செவியுற்று, சிறந்தவர் சந்தோஷமானார்” (ப.51)
பாரிலுள்ள பெரியாரைப் பணிவதுபோல் பலரோடும் பாங்குடன் பழக வேண்டும். தரணியின் திருத்தொண்டே திருப்பணியெனத் தெளியவும். அயலான் ஆத்திரத்தினின்று நீங்க, நீ, வெறுப்பதை அவர்களுக்கு விரும்பாதே (ப.77)
கசடறக் கற்றோன் கபடமற்றவனாகும் (ப.85)
என்று மாணவர்களுக்கான அறம் போதிக்கப்படுகிறது. அரசாங்க அறம் பற்றிக் குறிப்பிடும்போது,
பஞ்சகாலத்தில் அரசனுக்குப் பத்திலொன்று அளிப்பதே அரிது. தரணி தவிக்குங்கால், அரசன் ஆநந்தத்தில் அமிழ்வது அநீதியாகும். மாநிலத்தாரின் செல்வமே மன்னரின் சிறப்பாகும் (5.77)
பயிற்சியற்ற பிரஜைகளைப் போருக்கனுப்புவது படுகொலையாகும் (ப.83)
பக்தி நெறியையும் பலவந்தமாய் பாரில் வற்புறுத்தாதே (ப.85)
அரச ஊழியத்தைவிட தேசத் தொண்டே திருப்பணியாகும் (ப.85)
என்று பல இடங்களில் அரச அறம் பேசப்படுகிறது. இதைப் போல் நடுநிலை, ஒழுக்கம், மனம், இறைவன் என்று பல்வேறு விடயங்களை மையப்படுத்தி அறமாக விளக்கிக் கூறியிருப்பது முக்கியமானதாகும்.
இகலோக இரகசியம் என்று சொல்லப்படும் அனைத்தும் உலக இரகசியமாக உள்ளன. இவற்றைப் பின்பற்றினால் உலகைப் புரிந்துகொள்ளமுடியும். அதாவது உலகத்தின் சூட்சமமாக இக்கருத்துக்களே இருக்கின்றன.
இராஜ தந்திரத்தைவிட இராஜ நிர்வாகமே இணையற்ற செல்வமாகும். பெரியார், பேராபத்திலும் பொறுமையுடனுமுளார்கள். சிறியோர் செல்வச் சீலத்தைச் சிதைக்கின்றார்கள் (ப.89)
பாரிலுள்ள எல்லாப் பணிகளும் நீதிநிலைகளையே நாடியுள (ப.89)
சீலம் சிரத்தையுடன் சொல்லி; மனம், மெய்யோடு மொழிந்து; நலம், நட்பு காட்டி; உணர்வு உயிரோடு செய்தால்; நாடும் காடும் நம்மை நாடும் இல்லையேல் காடும் நம்மை யழிக்கும். இவையே வாழ்க்கையின் ஜோதியாகும் (ப.89)
முன் நினைவுற்றவன் துரிதமாய்த் துன்பத்தை அடைவான் (ப.90)
அழகில் ஆசையாவதுபோல் அறத்தில் அன்புடனாவது அரிது (ப.90)
அகத்திலே அதிகம் பெற்று, புறத்திலே குறைவாய் பற்றுபவன், பகைமையுனின்று பிரிகின்றான் (ப.90)
தீரர்கள் தன்னகத்திலிருந்தே துலங்குவார்கள்; தாழ்ந்தோர் அயலார் புகழ விரும்புவார்கள் (ப.90)
அயலார் எனச் செய்ய நீ விருப்பாயோ அதை அவர்களுக்குச் செய்யாமலிருத்தலே வாழ்க்கைத் துணையாகும் (ப.91)
கல்வியைக் கற்பதே சித்த சுத்தி நெறியாகும். உணவு உபவாசத்தாலில்லை (ப.91)
கற்றோரே குறுக்கு நின்றாலும் கல்வியைக் கற்கவும் (ப.91)
மொழியில் தெளிவே யாவுமாகும் (ப.92)
இயற்கையின் இரகசியமறியாதவன் அறிஞனாகான். நன்மையான நடத்தையற்றவன், அறமணுகான் (ப.102)
என்று இந்த உலகில் வெற்றிபெற்று வாழ்வதற்கான உலக இரகசியங்களை நுட்பமாகப் பதிவுசெய்துள்ளது இந்நூல்.
எந்தவொரு நாட்டில் பன்மைத் தன்மைகள் இருக்கின்றனவோ அங்கிருந்துதான் தலைசிறந்த அறநூல்கள் தோன்றும். நீதிபோதனை என்பதும் தவிர்க்முடியாது. சீன இலக்கியம் அதற்கு விதிவிலக்கானது அல்ல. எனவே சீன இலக்கியங்களில் பெரும்பாலானவை நீதியைப் போதிப்பதாக அமைந்துள்ளது. சீனவேதம் அல்லது சகத்தின் சூட்சமம் நூலும் நீதியைப் போதிப்பதாக உள்ளது. அரசன், உழவர், மாணவர், ஆசிரியர், நடனம், இசை, மொழி, கல்வி, இறைவன் போன்றவற்றிற்கான அறத்தை வலியுறுத்தி நிற்கும் இந்நூல் தரும் சூட்சமங்களைப் பின்பற்றினால் உலகை வென்று, நல்ல மனிதராக வாழலாம். சீன மண்ணின், சீன மக்களின், சீனமொழியின் ரகசியம் என்பது இந்நூல் தரும் சூட்சமங்கள்தான் இந்தச் சூட்சமங்களே சீனாவை உலகில் தனித்தனியாகக் காட்டுகிறது. இந்நூல் தமிழ் அறநூல்களோடு ஒப்பிடத்தக்கது. இந்நூலை மறுபதிப்பு செல்வதால் தமிழுலகம் பயன்பெறும்.
குறிப்புகள்
- வெ.சாமிநாதசர்மா, 2001, சீனாவின் வரலாறு, விடியல் பதிப்பகம், கோவை
- சோ.ந.கந்தசாமி, 2013, சீன இலக்கியம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
- தன்னைப் பண்படுத்திக் கொள்ளுதல் (Personal cultivation) மனித உறவுகளின் வழியாக உண்டாகும் சிறப்பும் பண்பொழுக்கமும் அகியவற்றைக் கற்பிக்கும் நடைமுறைக்கு ஒத்த நீதித்தத்துவமாக விளங்கிய கன்பூசியம் சீனத்தின் தேசியப் பண்பினை வடிவமைத்ததுடன் சீனச் சமூகம், குடும்பம், இலக்கியம், கலைகள் ஆகியவற்றின் ஒவ்வொரு கூறிலும் ஊடுருவியுள்ளது. விரிவான பொருளில் கூறுவதெனில் சீன இலக்கியங்களில் பெரும்பகுதி கன்பூசிய இலக்கியமே [In a broad sense, much by Chinese literature is confucious] Liu-Wu-Chi, An Introduction to Chinese Literature, Bloomington Indiana, p.3
- Ibid, pp.4-5
- பயணி, 2012, (இ.ப.), வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், நாகர்கோயில், பக்.138-139
- எம்.ஆர்.ஜம்புநாதன், 1928, சீனவேதம் அல்லது சகத்தின் சூட்சமம், சூடன்கோ, மதராஸ் 1928
- மனிதகோடி முமுழுவதையும் அன்புடன் எண்ணி பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொருவரும் உன்னதநிலையை அடையலாமென உரைத்த பெரியோர்கள் சிலரேயாவர். அவர்களுள் தலைசிறந்து விளங்குகிறவர்கள் புத்தபகவானும் கன்பூசியஸ் மகானுமேயாவார்கள். பிறகு நவீனமாய்த் தோன்றிய தயானந்தராகும் (மேலது., ப.3)
- ஹிந்து சமயத்தில் அபிமானங்கொண்ட தன் தம்பியினால் தன்னுடைய சமயத்திற்கே தீங்கு வருமென எண்ணியே ஔரங்கசீப் அவனைக் கொன்றார். முகம்மதிய மதத்தின் பெயரால் கணக்கற்ற ஹிந்துக்கள் மாய்ந்தனர் (மேலது., ப.11)
-
குறளின் கதிர்களாய்…(234)
செண்பக ஜெகதீசன்
பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்ப ரொள்ளி யவர்.
-திருக்குறள் -487(காலமறிதல்)
புதுக் கவிதையில்…
பகைவர்
தமக்குக் கேடு செய்தாலும்,
அறிவுடையோர்
அவரறியச் சினம் கொள்ளார்..
அவரை வெல்லும்
காலம் பார்த்து
அப்போதுதான் சினம் கொள்வர்…!
குறும்பாவில்…
பகைவரின் தவறுகண்டு கோபம்கொள்ளாமல்,
அவரை வெல்லும் காலம்பார்த்துக்
கோபத்தைக் காட்டுவர் அறிவுடையோர்…!
மரபுக் கவிதையில்…
எதிரி செய்யும் கேடுகண்டே
எடுத்த வுடனே அவரறிய
எதிர்த்தே சினமதைக் காட்டாரே
ஏற்றம் மிக்க அறிவுடையோர்,
பதிலா யவரும் சினம்கொள்வார்
பகைவரை வெல்லும் காலமதை
மதியா லறிந்தே யவர்பகையை
முடிக்கச் செல்லும் போதினிலே…!
லிமரைக்கூ…
பகைவரறியக் காட்டாத சினத்தை,
அறிவுடையோர் காட்டுவர் தெரிந்தபின்
பகைவரைவெல்ல ஏற்ற தினத்தை…!
கிராமிய பாணியில்…
செய்யணும் செய்யணும்
காலம்பாத்துக் காரியம்செய்யணும்,
சரியான
காலம்பாத்துக் காரியம்செய்யணும்..
எதிரி செய்யிற
எடஞ்சலப்பாத்து அவரறிய
அறிவுள்ளவன் ஒடனே
கோவத்தக் காட்டமாட்டான்..
எதிரிய அழிக்க
சரியான நேரம்பாத்து
அப்பதான் காட்டுவான்
அவனோட கோவத்த..
அதுனால
செய்யணும் செய்யணும்
காலம்பாத்துக் காரியம்செய்யணும்,
சரியான
காலம்பாத்துக் காரியம்செய்யணும்…!
செண்பக ஜெகதீசன்…
-
இரட்டைக் காப்பியங்கள் காட்டும் கனவுகளும் நம்பிக்கைகளும்
-த.அமுதஜோதி
மனித வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளைக் கற்பனை கலந்த சுவையோடு கூறுபவை காப்பியங்கள். இக்காப்பியங்களில் வரும்
கனவுகளும் நம்பிக்கைகளும் மக்கள் சமுதாயத்தில் காலங்காலமாக நடைபெற்று வரும் வழக்கமாக உள்ளது. இவை அவர்களது வாழ்வியலின் பிரதிபலிப்பாக விளங்குகின்றன. இத்தகைய கனவு மற்றும் நம்பிக்கைகள் இன்றும் மக்களின் வாழ்வில் இடம்பெறும் பாங்கினை காண்பதாக இக்கட்டுரை அமைகின்றது.கனவுகள்
உடல் துயின்றாலும் உள்ளம் துயில்வதில்லை. ஆழ்ந்த உறக்கமில்லாத நிலையில் மனத்திரையில் தோன்றும் காட்சி தான் கனவு. மானிட வாழ்க்கையில் கனவு காணாத மனிதர்களே இல்லை எனலாம். மனிதனின் எண்ணத்தில் உயிர்த்தெழும் கனவுகள், உள்ள உணர்வுகளைப் பிரதிபலித்துக் காட்டுகின்றன. எதிர்கால விழைவுகளையும் தொடர்புபடுத்திக் காட்டுகின்றன.
கனவு சிலருக்குப் பித்த நோயாலும், உண்ட உணவு செரிக்காமையாலும் வரக் கூடும். இது விழிப்பு நிலைக்கும் உறக்க நிலைக்கும் இடையில் உணர்வு தோய்கிறபோது உண்டாகும். அடிமனத்தில் தோய்ந்த எண்ணங்களும் எண்ணங்களின் விளைவுகளும் இடைவிடாத நினைவுகளும் கனவுகளாக வரும் என்பர் ச.தண்டபாணி தேசிகர்.
கனவுகளை நல்லகனவு, கெட்ட கனவு எனவும் பகற் கனவு, இரவுக்கனவு எனவும் பிரிப்பர். மக்களுக்கு நன்மையோ, தீமையோ வருவது கனவு மூலம் தெரிந்துவிடும். என்று நம்புகின்றனர்.
கனவு-விளக்கம்
கனவு என்ற சொல்லின் வேர்ச்சொல் கனாகாணுதல் என்பதாகும். கனவு பற்றித் தொல்காப்பியர்,
கனவும் உரித்தால் அவ்விடத்தான (தொல்,பொருள்,நூ-195)
நாணல் துஞ்ச லரற்றுக் கனவெனாஅ (தொல், பொருள்,நூ-256)
கண்துயில் மறுத்தல் கனவொடு மயங்கல் (தொல்,பொருள்,நூ-266)
எனும் நூற்பாக்களில் கூறியுள்ளார். இதன் மூலம் தொல்காப்பியர் காலம் தொட்டு கனவு பற்றிய சிந்தனை இருந்தமையை உணர முடிகின்றது.
சிலம்பில் கனவுகள்
சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் கனவு, கோவலனின் கனவு, பாண்டிமாதேவியின் கனவு என மூன்று வகை கனவுகள் கூறப்பட்டுள்ளன. இக்கனவுகள் பின்வரும் நிகழ்வுகளை முன் உணர்த்திய உளவியல் விருப்பங்கள் மற்றும் நிமித்தங்கள் ஆகும். பழங்காலப் புராணங்களிலும் காவியங்களிலும் சரித்திர நாயகர்களின் கனவுகளைப் பற்றியும் அவற்றால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றியும் எழுதியுள்ளனர். பெரும்பாலும் கனவுகள் எதிர்காலத்தைப் பற்றியே வருவதுண்டு. கனவானது நல்ல செய்திகளைக் கூறுவதை விட எதிர்காலத்தில் நடக்க கூடிய தீமையை உணர்த்துகின்றது. இதைப்போன்ற கனவுகள் எச்சரிக்கை ஊட்டுவதாக அமைகின்றன.
கண்ணகியின் கனவு
சிலம்பில் கண்ணகியின் கனவு எதிர்காலத்தில் நடக்கப் போவதைக் கூறுவதாக அமைகின்றது. ஆகையால் இக்கனவை எச்சரிக்கைக் கனவாகவும் ஏதோ ஒரு குறியீட்டை மையமாக வைத்து அமைந்ததாகவும் கூறலாம். கண்ணகி தோழி தேவந்தியிடம் தான் கண்ட கனவினைப் பற்றிக் கூறும்பொழுது
கடுக்கும் என்நெஞ்சம் கனவினால் (சிலம்பு,9-4)
என்று அச்சத்துடனே ஆரம்பிக்கின்றாள். இதன் மூலம் கனவு அச்சத்தை ஏற்படுத்தும் என்ற உளவியல் கருத்து இங்கு கூறப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. கோவலனுக்கு எதிர்காலத்தில் தீங்கு வரப்போகிறது என்றும் புகாரை விட்டு வேறு ஊருக்குச் சென்று அங்கு அரசன் முன் வழக்குரைப்பதாகவும் கனவு கண்டதாக கூறுவதனை ,
….. இடுதேள் இட்டு என்தன் மேல்
கோவலற்கு உற்றது ஓர்தீங்கு என்று அதுகேட்டுக்
காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன் (சிலம்பு,9-48-50)எனும் பாடலடிகள் மூலம் அறியமுடிகின்றது.
கோவலனுக்குப் பின்னர் நிகழப் போகிற நிகழ்வை முன்கூட்டியே கனவின் மூலம் உணர்ந்து தன் தோழியிடம் கூறுகின்றாள். கண்ணகியின் கனவு நிகழ்ந்த பிறகு தேவந்தி, வாழ்த்துக் காதையில்,
செய்தவம் இல்லாதேன்
தீக்கனாக் கேட்டநாள் எய்த உணராதிருந்தேன் (சிலம்பு ,29-5)என்று கூறிப் புலம்புகிறாள். இதன் மூலம் காணும் கனவுகள் பலிக்கும் என்ற உண்மையை இளங்கோவடிகள் எடுத்தியம்பியுள்ளார். எனும் உண்மையை அறிய இயல்கின்றது.
கோவலன் கனவு
கோவலன் கனவைக் குறியீட்டுக் கனவாகவும், பின் வரக்கூடியதை முன்பே கூறுவதாகவும் கொள்ளலாம். கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்து வந்த சமயத்தில் தான் கண்ட கனவு பற்றி மாடல மறையோனிடம்,
மாமலர் வாளிவறு நிலத்து எறிந்து
காமக் கடவுள் கையற்று ஏங்க (சிலம்பு,15 101-102)என்று கூறுகின்றான். இக்கனவு மூலம் கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்து வந்தமையால் காமக்கடவுள் கையற்று ஏங்கி அழுவதாகவும் தன் வாழ்வின் வீழ்வுக்கு காமமே காரணம் என்றும் கருதுவதாக அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது. கோவலன் மாதவியோடு ஊடல் கொண்டதும், மதுரைக்குப் புறப்பட்டதும் புகாரில் துன்பம் நேரும் என்ற பயத்தின் காரணமாகவே என்பதைப் புலியூர்க் கேசிகன் தரும் உரை விளக்கத்தால் அறியலாம்.
கோவலனுக்கு எதிர்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியை முன்கூட்டியே கனவில் உணர்த்துவதாக அமைந்திருப்பதனை,
கூறைக் கோள் பட்டுக் கோட்டுமா ஊரவும்
அணித்தகு புரிகுழை ஆயிழை தன்னொடும்
பிணிப்பு அறுத்தோர் தம் பெற்றி எய்தவும் (சிலம்பு,15.98-100)எனும் பாடலடிகள் வாயிலாக உணர முடிகின்றது. கோவலன் ஆடை பிறரால் பறிக்கப்பட்ட நிகழ்ச்சியின் மூலம் அவன் மீது பொய்க்குற்றம் சுமத்தப்படும் என்பதையும், எருமைக் கடாவின் மீது ஊர்ந்து செல்வதின் மூலம் எமனின் வாகனம் எருமை என்பதையும், கோவலன் அவமானப்பட்டு இறக்கப் போகிறான் என்பதையும் இக்கனவு நிகழ்ச்சி எடுத்தியம்புகின்றது. மேலும் “கோட்டுமா ஊரவும்” என்று கனவில் கொம்பு வைத்த பன்றி வந்ததாகவும் கூறுகின்றான்.
இவ்வாறு கனவில் பன்றி வந்தால் அரசனால் ஆபத்து உண்டாகும் என்று கனா நூல் கூறுகின்றது. அதேபோல் பாண்டிய மன்னனால் கோவலனுக்கு ஆபத்து உண்டாகின்றது. இக்கனவு நிகழ்வைப் பெரிதுபடுத்தாமல் மதரைக்குச் சென்ற கோவலன் கொலையுண்டான். இதன் மூலம் கனவில் நிகழும் நிகழ்வுகள் எதிர் காலம் பற்றிய பயத்தை மக்கள் மனதில் விதைத்துள்ளது என்பது தெரியவருகின்றது.
கோப்பெருந்தேவியின் கனவு
கோவலன் கொலையுண்ட அடுத்த நாள் பல தீய சகுனங்கள் நடப்பது போல ஒரு தீக்கனவு காண்கிறாள் கோப்பெருந்தேவி. வெண்கொற்றக்குடை கீழே விழுதல், கடைமணியானது இடைவிடாது ஒலி எழுப்புதல், திசைகள் எங்கும் அதிர்ச்சி, ஞாயிற்றை இருள் விழுங்குதல் போன்ற பல்வேறு சகுனங்கள் நடைபெறுவதாகத் தோழியிடம் அரசி கூறுகிறாள்.
இக்கனவின் மூலம் பாண்டியனுக்கும் மதுரை நகரத்திற்கும் ஏதோ தீங்கு நடைப்பெறப் போகிறது என்பதை இளங்கோவடிகள் குறிப்பால் உணர்த்தியுள்ளமையை உணரமுடிகிறது. பாண்டிமாதேவியின் கனவு இயற்கைக்கு மறுதலையான நிகழ்ச்சிகளால் தீய நிமித்தங்களாகக் காட்டப்பட்டுள்ளன.
வெண்கொற்றக் குடையோடு கோல்விழுந்து கடைமணி ஓசை எழுப்புவது- பாண்டிய மன்னனின் அரசாட்சிக்கு வருகின்ற தீமையை முன்கூட்டியே உணர்த்துவதாக அமைந்துள்ளது. கதிரை இருள் விழுங்கல் என்பது-பாண்டிமாதேவியின் நிலையை உணர்த்துவதாகக் கொள்ளலாம். திசை அதிர்தல், பகலில் விண்மீன் விழல், வானவில் இரவில் தெரிதல் ஆகியவை இயற்கையின் மாற்றங்களாகி நாட்டிற்கு வரும் துயரையும், நகருக்கு வரும் அழிவையும் சுட்டுவனவாகக் கருதப்படுகிறது.
இக்கனவை இளங்கோவடிகள் கருப்பம் என்று கூறி மறுபடியும் தந்திருப்பதால், முழுக்க முழுக்க தீயநிமித்ததைக் குறிப்பதாகும். அரசு உடனடியாக விழப்போகிறது என்பதை இந்நிமித்தங்கள் வழியாக உணர்த்தியுள்ளார்.
இவ்வாறு மூன்று கனவுகளும் எதிர்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை விளக்கிக் காட்டுவனவாக அமைந்துள்ளன. இன்றும் கனவுகள் பற்றிய நம்பிக்கை மக்களிடையே வழக்கத்தில் உள்ளன. கனவில் நல்லவை நிகழக் கண்டால் தீங்கு நிகழும் எனவும், தீயவைக் கண்டால் நல்லது நடக்கும் எனவும் கூறிவருகின்றனர்.
நம்பிக்கைகள்
மக்கள் சமுதாயத்தில் ஒவ்வொரு இனமும் தனக்கெனச் சில பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் கொண்டுள்ளன. இன்றைய அறிவியல் உலகில், பழந்தமிழ் மக்களின் நம்பிக்கைகள் அறிவுக்குப் பொருந்தாதனவாகத் தோன்றலாம். எனினும் ஒரு நாட்டின் வரலாற்றில் இத்தகைய நம்பிக்கைகள் பல அவர்களின் வாழ்வோடு இரண்டறப் பின்னிப்பிணைந்து கிடக்கின்றன எனும் உண்மையை மறுக்க இயலாது.
நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் பண்பாட்டு வளர்ச்சியின் படிக்கற்கள் எனப்படுகின்றன. அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட எண்ணங்களையே நம்பிக்கைகள் என்பர்.
இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களை உணராத பொழுதும், மனித வாழ்வில் ஏற்படும் சில நிகழ்ச்சிகளுக்குக் காரணம் கற்பிக்க இயலாத பொழுதும் மனித மனமானது சிலவற்றைப் படைத்துக் காரணம் கற்பித்துக் கொள்கிறது. அவைகளே நம்பிக்கைகளாக உருவாகின்றன.
நம்பிக்கைகள் காலம் காலமாக ஒரு தலைமுறையினடமிருந்து மற்றொரு தலைமுறையினருக்குப் பரவி வருகின்றன. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரைப் பலவிதமான நம்பிக்கைகளைக் கொண்டுள்ளன. நம்பிக்கைகளே மனித வாழ்வினை இயக்குகின்றன. என்ற வகையில் காப்பியங்களில் இந்நம்பிக்கைகள் இடம் பெற்றுள்ளன.
தொல்காப்பியர் காலம் முதல் நல்ல சகுனம் பார்த்தல் நல்லச் சொற்களைக் கேட்டபின்பு போருக்குச் செல்லுதல் ஆகிய நம்பிக்கைகள் வழக்கில் இருந்தன என்பதை,
படையியங்கு அரவம் பாக்கத்து விரிச்சி (தொல்,பொருள்,-61)
எனும் நூற்பா வழிஅறியலாம். போருக்குச் செல்வதற்கு வீரர்கள் வெட்சி மாலையை அணிந்து கொண்டு தயராகும் போது காரி எனும் பறவை ஒலி எழுப்பினால் அது நல்ல சகுனமாகக் கருதப்பட்டது என்பதை,
வெட்சி மலைய விரவார் மணிநிரைக்
கட்சியுள் காரி யெழும் (புறப்.வெட்சி-3)எனும் பாடலடிகளால் அறியலாம். பண்டைக் காலத்தில் காட்டிடையே மக்கள் செல்லும்பொழுது ஆறலை கள்வர் மிகுந்த தொல்லை கொடுத்துக் கொண்டேயிருப்பர். ஆறலை கள்வர் நடமாட்டத்தைக் “கணத்துள்” என்ற பறவை சத்தம் எழுப்பி மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த செய்தியை சங்க இலக்கியத்தில்
ஆற்றயலிருந்த இருந்தோட் டஞ்சிறை
நெடுங்காற் கணத்துள் ஆளறி வுறீஇ
ஆறு செல் வம்பலர் படைதலை பெயர்த்து (குறுந்,-350)எனும் குறுந்தொகைப் பாடலடிகள் மூலம் அறியலாம்.
கூகை அலறினால் சாவு வரும் என்ற நம்பிக்கை பண்டைத் தமிழரிடையேயும் இன்றும் தமிழகத்தில் நிலவி வருவதனை அறியலாம். இதனைப் புறநானூறு அஞ்சுவரு குராஅல் குரலுந் தூற்றும் (புறம்-280)
எனும் பாடலடி மூலம் எடுத்தியம்புகின்றது. காகம் கத்தினால் விருந்தினர் வருவார் என்பது அக்காலம் முதல் இக்காலம் வரை தமிழரிடையே நிலவி வரும் நம்பிக்கையாகும். இதனை,
மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
அன்புடை மரபின் கிளையோ டார (குறுந்-250)எனும் குறுந்தொகைப் பாடலடிகள் மூலம் அறிய முடிகின்றது. இவ்வாறு பழந்தமிழர்களின் நம்பிக்கைகளைத் தொல்காப்பியர் காலம் முதல் சங்க இலக்கியங்கள் வழி அறியமுடிகின்றது. இரட்டைக்காப்பியங்களிலும் பல நம்பிக்கைகள் இடம்பெற்றுள்ளன. அந்நம்பிக்கைகளை இன்றும் மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
தெய்வம் உறுதல்
தெய்வம் உறுதல் என்பது குலதெய்வத்திற்கு படையலிட்டுப் பூசை செய்யும் பொழுது ஏதேனும் செய்ய வேண்டிய முறைகளை மறந்து விட்டால் அக்குலத்தில் உள்ள வயதில் மூத்தப் பெண்ணின் மீது தெய்வம் வந்து அக்குறையை தீர்க்கும் பொருட்டு தெய்வமுற்று கூறுதல் ஆகும். இதனை அருள் கூறுதல் என்றும் சாமியாடுதல் என்றும் கூறுவர். அவ்வகையில் சிலப்பதிகார வேட்டுவவரியில் மறவர் குலத்தில் பிறந்தப் பெண், அக்குலத்தின் நேர்த்திக் கடனை தீர்க்கும் பொருட்டு தெய்வம் உற்றனள்.
அவள் உடம்பின் மயிர்கள் குத்திட்டு நின்றன. கைகளை அகல எடுத்து மேலே உயர்த்தினாள். கானவர் வியந்து நின்றனர். அவ்வூர் நடுவிலே, அவர்கள் கூட்டுணவு உண்ணும் ஊர்மன்றம் இருக்கும். அம்மன்றத்தில் அவள் அடிபெயர்த்து வைத்து தெய்வம் உற்றவளாகி வெறியாடினாள் . பகைவர்களின் ஊர் ஆரவாரம் மிகுந்துள்ளது. ஆநிரைகள் திரண்டுள்ளன. வலிய வில்லினை உடைய இம்மன்றமோ பாழ்பட்டு விட்டது. மறக்குடியில் வழிப்பறியால் வளம் ஏதும் வரவில்லை. அறக்குடியினரைப் போல் யாவரும் உணவு மறந்து செயலிழந்து அடங்கினர்.
கலையமர் செல்வி கடன்உணின் அல்லது
சிலையமர் வென்றி கொடுப்போர் அல்லாள்
மட்டுஉண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின்
கட்டுஉண் மாக்கள் கடந்தரும் (சிலம்பு,12, 16-19)என்று தெய்வமுற்றப் பெண் முழங்கினாள். இதன் மூலம் கொற்றவைக்குத் தரவேண்டிய நேர்த்திக் கடனை முறைப்படி தாருங்கள் என்று கூறியதை அறிய முடிகின்றது. இன்றும் இவ்வழக்கம் நடைமுறையில் உள்ளது. குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யும் பொழுது இவ்வாறு சாமியாடுவதைக் காணமுடிகின்றது. மக்கள் காலங்காலமாக உணர்வாலும் செயலாலும் ஒன்றுபட்டுள்ளனர் என்பதை உணர இயல்கின்றது.
கண்துடித்தல்
கண்துடித்தல், பல்லி கத்துதல் போன்றவைகளின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதை இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. உடம்பிலுள்ள ஒரு பகுதி துடிப்பது கொண்டு எதிர்காலத்தைக் கணிப்பது உண்டு. பெண்களுக்கு வலக் கண் துடிப்பது நல்லது என எட்கர் தெர்ஸ்டன் கூறுவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இந்திர விழாவின் போது கண்ணகியின் கருங் கண்ணும் மாதவியின் செங்கண்ணும் தத்தம் உள்ளத்தின் நினைவை மறைத்துத் தத்தம் எண்ணத்தை உள் ஒளிக்க முயன்று நீர் வடித்தன. கண்ணகிக்கு கோவலனை பிரிந்த துயரால் இடக் கண் துடித்தது. மாதவிக்கு ஆனந்தம் மிகுதியால் வலக் கண் துடித்தது. என்பதை
கண்ணகி கருங்கண்ணும் ,மாதவி செங்கணும்
உள்நிறை கரந்து ,அகத்து ஒளித்து, நீர் உகுத்தன
எண்ணுமுறை,இடத்தினும் வலத்தினும் துடித்தன
விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்து (சிலம்பு,5. 236-240)எனும் பாடலடிகள் மூலம் அறிய முடிகின்றது. இவ்வாறே சீவகனின் தாய் விசயை, விடியற்காலையில் கனவொன்று கண்டேன். என் வலக்கண்ணும் துடிக்கின்றது. பல்லியும் நல்ல இடத்தில் கத்துகின்றது .என் மகன் வருவானோ என்று எண்ணும் போதே சீவகன் சென்று நின்றான். என்று கூறப்பட்டிருப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கைகளை அறிய முடிகின்றது.
பேய் நம்பிக்கை
குழந்தை பெற்ற பெண்கள், ஈன்ற பத்தாவது நாளில் பெண்கள் சூழச் சென்று, இரவிலே ஈன்ற துன்பம் தீரக் குளத்து நீரில் நீராடுவது மரபு. அப்போது அவர்களை பேய்தீண்டாதிருக்க வேப்பிலையையும் வெண்சிறுகடுகையும் தடவிக்கொண்டு செல்வர் என்பதை,
அரவாய்க் கடிப்பகை, ஐயவிக் கடிப்பகை
விரவிய மகளிர் ஏந்திய தூமத்துப்
புதல்வரைப் பயந்த புனிறுதீர் கயக்கம்
தீர்வினை மகளிர் குளனாடு அரவமும் (மணி,7: 73-79)எனும் பாடலடிகள் வழி அறிய முடிகின்றது.
இதன்மூலம் குழந்தை பெற்ற பெண்களைப் பேய் தாக்கும் என்ற உண்மையை உணரமுடிகின்றது. இன்றும் குழந்தைபெற்ற மகளிர் மற்றும் பூப்படைந்த பெண்குழந்தைகள் வெளியில் செல்லும் பொழுது கையில் வேப்பிலையைக் கொண்டு செல்வதை நாம் காணலாம்; இச்செய்திகளின் மூலம் பேய் பற்றிய நம்பிக்கை காலங்காலமாக இருந்து வருவதனைக் காணமுடிகின்றது.
தொல்காப்பியர் காலம் முதல் இன்று வரை இக்கனவுகளும் நம்பிக்கைகளும் மக்கள் வாழ்வில் முக்கிய இடம் பெற்றிருப்பதனைக் காண முடிகின்றது. நாம் நினைக்கும் நினைவுகளே கனவுகளாக வெளிவருகின்றன. ஆகவே எதிர்மறையான எண்ணங்களை எண்ண வேண்டாம். நல்ல எண்ணங்களையே எண்ண வேண்டும் எனும் சிந்தனையை மக்களிடம் விதைத்துள்ளது காப்பியங்கள். குழந்தைபெற்ற மகளிரையும் பூப்படைந்த பெண் குழந்தைகளையும் தொற்று நோய்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள கிருமிநாசினியாக வெண்சிறு கடுகையும் வேப்பிலையையும் நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்ற அறிவியல் உண்மையை அறியமுடிகின்றது.
துணைநூற் பட்டியல்
- சிலப்பதிகாரம் – புலியூர்க்கேசிகன்
- மணிமேகலை – புலியூர்க்கேசிகன்
- தொல்காப்பியம் – இளம்பூரணர்
- திருக்குறள் உரை வளம் காமத்துப்பால் – ச. தண்டபாணிதேசிகர்
- குறுந்தொகை – புலியூர்க்கேசிகன்
- புறநானூறு – புலியூர்க்கேசிகன்
*****
கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, தஞ்சாவூர். -
சங்கப் பாடல்களில் கூற்றும் / கதைசொல்லியின் குரலும்
முனைவர் ஆ.சந்திரன்
உதவிப்பேராசிரியர்
தமிழ்த் துறை
தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)
திருப்பத்தூர்
வேலூர்
பண்டைக்கால புலவர்களின் உணர்வின் வெளிப்பாடுகளை நமக்கு உணர்த்தி நிற்பவை சங்கப் பாடல்கள். ஏறக்குறைய ஐந்நூறு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகால அளவில் பரந்து விரிந்த தமிழ் நிலப்பரப்பில் புலவர்களின் தன்னுணர்ச்சிப் பாக்களாக உருவான அப்பாடல்கள் பின்னர், அகம் – புறம், திணை – துறை, கூற்று என்று பல நிலைகளில் பகுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன. புறப்பாடல்களில் கூற்று என்பது புலவர் பெயரால் அமைகிறது. ஆனால் அகப்பாடல்கள் கூற்று என்று வரும் போது தலைவன், தலைவி, தோழி என்று கற்பனை பாத்திரத்தின் பொதுப் பெயராக அமைகிறது. இங்கு கவனிக்க வேண்டிய அம்சம் ஒன்று உண்டு. அது அகப்பாடல் பற்றியது. அதாவது அகப்பாடல்கள் புறப்பாடல்கள் போல் புலவர்களால் பாடப்பட்டிருந்தாலும் பாடலைப் பாடியவராகத் தலைவனோ, தலைவியோ, தோழியோ அல்லது வேறு ஏதோ ஒரு பாத்திரமாகவோ கருதப்படுகிறது. அதாவது பாடலாசிரியன் வேறு – பாடலில் வெளிப்படும் குரல் வேறு என இது அமைகிறது.
பாடப்பட்டுள்ள பாடல்களின் சில அடையாளங்களைக் கொண்டுதான் இது தலைவன் குரல், இது தோழி குரல், இது தலைவி குரல் என்று இனங்காணமுடிகிறது. இத்தகைய ஒரு சிந்தனை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர் கொண்டிருப்பது வியப்பான ஒன்று. என்றாலும், அவ்வாறு அவர்கள் வகுத்துச் சென்ற கூற்று என்ற வரையறை அனைத்தும் சரியாக அமைந்துள்ளனவா? அவற்றில் மாற்றம் செய்ய இடமுள்ளதா? மாற்றம் செய்ய வேண்டிய தேவை உள்ளதா? என்பன போன்ற கேள்விகளை இன்று சிலர் எழுப்புகின்றனர். அப்பாடல்களின் நுட்பமான பொருளை அறிந்தால் இம்மாதிரியான கேள்விகளுக்குப் பதில்சொல்ல முடியும்.
“கதைசொல்லியின் குரல்” என்ற புதிய சிந்தனை பாடலின் நுட்பப் பொருளை அறிய உதவும் என நம்பலாம். யார் இந்தக் கதை சொல்லி. கதாசிரியருக்கும் இந்தக் கதை சொல்லியின் குரலுக்கும் என்ன உறவு என்பது பற்றிய விளக்கம் இங்கு அவசியமாகிறது. ”எல்லா இலக்கியப் படைப்புகளும் –எழுத்து ரூபத்தில் இருப்பதால் – அடையாள ரீதியாக சிலவற்றைச் சொல்லும்” இந்த அடையாளங்களில் ஒன்றாக ஒரு குரல் வருவதுண்டு. இந்தக் குரல் ஆசிரியன் குரல் அல்ல. கதைசொல்லியின் குரல்” (தமிழவன்). இந்த விளக்கத்தின்படி பார்க்கும்போது கதை, கதாசிரியனைத் தாண்டி நின்று ஒலிக்கும் குரலாகக் கதைசொல்லி அமைவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
“கதைசொல்லியின் குரல்” என்ற சிந்தனையை முன்னிருத்தி தமிழவன், முனைவர் ஆ. முத்தையன் முனைவர் ஆ.சந்திரன் முதலானோர் நாவல்கள் மற்றும் சிறுகதைகளில் சில புதிய கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். இவை இயல்பான வாசிப்பில் காண இயலாதவை. இத்தகயை ஒரு முயற்சி அதாவது, “கதைசொல்லியின் குரல்” என்ற சிந்தனையை முன்நிறுத்தி சங்கப் பாடல்களை வாசிக்கும் முயற்சி இதுவரை நடந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அதே வேளை சிவத்தம்பியின் சில கருத்துகள் இம்மாதிரியான அடையாளக் குரலைக் காணமுடியும் என்பதற்கு வழிகாட்டியாக அமைகிறது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
புறநானூற்றுப் பாடலின் கதையாடலைக் கட்டவிழ்க்கும் அவர் “மாவாராதே மாவாராதே எனும் பாடலில் வரும் சோகம் பற்றியோ, கைம்மை காரணமாகச் சாணி மெழுகிய நிலத்தில் போடப்பெற்ற வீரன் ஒருவனின் உடலை எரிப்பதா புதைப்பதா எனக் கேட்கப்பெறும் வினாவின் உக்கிரத்தையோ அன்றேல் ‘துடியன், கடம்பன் பாணன் பறையனென்று இந்நான்கல்லது குடியுமில்லை‘ என்ற பாடலில் காணப்படுகின்ற புதிய மரபு நிராகரிப்பையோ நன்கு விளங்கிக் கொண்டவர்களாக மாட்டோம். புறத்திணைப் பற்றி விதந்துரைக்கப்படாத பல அமிசங்கள் புறநானூறு ஏறத்தாழ 250 ஆவது பாடலுக்குப் பின்னரே பெரும்பாலும் காணப்படுகின்றன” (தமிழின் கவிதையியல். பக்: 12, 13) என்று கூறும் சிவத்தம்பி, தலைவனின் பிரிவால் வாடும் பெண்ணின் அங்கலாய்ப்பாய் அமையும் அப்பாடல் புறத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். அத்துடன், குறிஞ்சிப்பாட்டின் தோழி வெளிப்படுத்தும் (குறிஞ்.பா.26-29) கருத்தை ஐயப்படும் அவர், “சங்க அகமரபைப் போன்று இல்லாமல் பிற்கால கோவை இலக்கியங்களில் வரும் தோழி பேசுவது போல் அக்கருத்து அமைவதாகக்” (தொல்காப்பியமும் கவிதையியலும்.பக்: 23, 24) குற்றம் சாட்டுகிறார். இவ்விரு கருத்துகளும் அவருடைய நுட்பமான வாசிப்பின் வெளிப்பாட்டால் உருவானவை. இவை பாடலின் கருத்தோ அல்லது கதாசிரியன் கருத்தோ எனில், இவை கதைசொல்லியின் குரலை அடையாளங் கண்டுகொண்டதால் உருவான கருத்து என்பது புனலாகும். அதனால் கதைசொல்லியின் குரல் என்ற சிந்தனையை அவர் முன்வைத்தார் என்பது அல்ல இங்கு பொருள். அச்சிந்தனையைத் தமிழ் இலக்கியத்தில் பரிசோதித்தவர் தமிழவன். அதே நேரம் சிவத்தம்பியிடம் அப்படிப்பட்ட சிந்தனை இருந்துள்ளது என்பதும் இங்குக் கவனிக்கத்தக்து.
சங்கப்பாடல்கள் அனைத்தையும் இந்தக் கோணத்தில் ஆராய்ந்தால் அகம் – புறம் என்பதைத் தாண்டிய தனிமனித உணர்வுகள் பலவற்றை வெளிக்கொணரமுடியும் என நம்பலாம். அந்த முயற்சியின் துவுக்கமாக எட்டுத்தொகையில் இடம்பெற்றுள்ள அகப்பாடல்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு அவற்றின் அடையாளக் குரல் – அது முன் வைக்கும் கருத்து ஆகியனவற்றை ஆராய முயல்கிவது இக்கட்டுரையின் நோக்கமாகிறது.
நற்றிணை 124 ஆம் பாடல் தன்னுடைய துணை பிரிந்த போது வருந்தும் அன்றில் பறவை போன்ற தனிமைத் துயர் தரும் பருவம் இது எனவே இப்போது நீங்கள் என்னை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டாம் என்ற பொருளைத் தருகிறது. ஆனால் “பிரிவுணர்த்தப் பட்ட தோழி தலைவர்க்கு உரைத்தது” என்று இப்பாடலுக்கு கூற்று வரையறுக்கப் பட்டுள்ளது. இது பொருத்த முடையதாகத் தோன்ற வில்லை.
பொதுவாக தலைவன் கார் காலத்தின் தொடக்கத்தில் வருவேன் என்று கூறிச் செல்வான். தலைவி அப்பருவம் வரும்வரை ஆற்றியிருப்பாள். கார்காலம் வந்தும் அவன் வர தாமதமானால் வருந்துவாள். முல்லை மலர் அவள் வாட்டத்தை அதிகரிக்கும். வாடைத் துயர் அவளை அதிகம் வாட்டும். இவ்வாறு பிரிவு பற்றிய பாடல்கள் அமையும். ஆனால் இப்பாடலில் தலைவன் பிரியக் கருதிய காலம் தலைவியின் ஆற்றாமையை அதிகரிக்கும் கூதிர் பருவம். அதாவது தலைவன் திரும்பி வரவேண்டிய பருவத்தில் பிரியக் கருதுகிறான். அவ்வாறன சூழலைத்தான் பாடல் புலப்படுத்துகிறது. அப்பாடலின் விளக்கம் வருமாறு.
“தன் துணை பிரிந்த காலத்து மற்றோர் அன்றிற்பறவை ஆற்றாது இறந்துபடுதல் போலத் தனிமையுற்று இருக்கும் துன்பமான வாழ்வினை யானும் ஆற்றவியலாது இருக்கும் தன்மையானேன். ஈங்கையின் அரும்பும், மல்லிகை மலரும் உயர்ந்த மணலால் அமைந்த திடலில் உதிர்கின்றன. மான்கள் வன்மையான குளம்புகளினால் மிதித்து அழுத்துகையினால், வெள்ளியை உருக்கிச் சாய்க்கும் கொள்களத்தை ஒத்து வடியும் தெளிந்த நீர்க்குமிழியையுடைய தண்ணீரைப் பெற்றதாகக் கூதிர்ப்பருவம் வந்துவிட்டது. இப்பருவமே யான் ஆற்றாதிருப்பதற்குக் காரணம் ஆகும். ஆதலின் ஐயனே! என்னை விட்டு நீங்காது இருப்பாயாக. நீ நெடுங்காலம் வாழ்வாயாக!” (நற். 124)
மேற்கண்ட பாடலில் “புன்கண் வாழ்க்கை”- “யானும் ஆற்றேன்” “அதுதான் வந்தது” என்பன தலைவியன் துன்பத்தை வெளிப்படுத்துகின்றன. அதாவது தலைவன் பிரிவைத் தாங்க இயலாமல் தவிக்கும் தலைவியின் குரல் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆக இப்பாடல் தலைவி கூற்றுப் பாடல் என்று கொள்வதே சரியாக இருக்கும்.
அடுத்து நற்றிணை 132 பாடலைப் பார்ப்போம். “பெரிதாய் விளங்கும் இவ்வூரின்கண் உள்ள யாவரும் துயில்கின்றனர். விழித்திருப்பவர் என ஒருவரும் இல்லை” (நற்.132-1) என்று தொடங்கும் இப்பாடல் அதன் பிறகு மழை பொழிவு, ஊரில் இரவு வேளையில் புரியும் கடுங்காவல் பற்றி விவரிக்கிறது. அவ்வாறு இரவு முழுவதும் காவல் கடுமையாக இருப்பதால் தலைவி தலைவனைச் சந்திக்க வாய்ப்பில்லாமல் போகிறது. அதனால் அவள் ”இன்றுகொல் அளியேன் பொன்றும் நாளோ” (நற்132-11) என்று புலம்புகின்றாள் என்று முடிகிறது. இப்பாடலில் தோழி பற்றிய குறிப்பு இல்லை. தோழியிடம் தலைவி பேசுவதாகப் பொருள்கொள்ளவும் இடமில்லை என்பது பாடலில் தெளிவாகப் புலப்படுகின்றது. அப்படி இருக்க இப்பாடல் தோழி கூற்றுப்பாடல் என்று கூற்று வரையறை செய்யப்பட்டுள்ளது.
நற்றிணை 36 ஆம் பாடல் “இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது” என்று கூற்று வரையறுக்கப்பட்டுள்ளது.
குறுங்கை இரும் புலிக் கோள்வல் ஏற்றை,
பூ நுதல் இரும்பிடி புலம்ப, தாக்கி,
தாழ்நீர் நனந்தலைப் பெருகளிறு அடூஉம்
கல்லக வெற்பன் சொல்லின் தேறி,
யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்துஅலர்வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி,
புரைஇல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து,
ஆனாக் கௌவைத்துஆக,
தான் என் இழந்தது, இவ் அழுங்கல் ஊரே! (நற். 36)இப்பாடல் தோழி கூற்றுப் பாடல் என்று கொள்ள இடமிருப்பதாகத் தெரியவில்லை. “தலைவனின் சொல்லை நம்பி யாம் எம் நலனை இழந்தோம்” (நற்.36) என்று வருந்தும் தலைவி “இவ்வூர் எதை இழந்தது இப்படி என்னைப் பழி கூறிக் கொண்டுள்ளது” (நற்.36) என்று புலம்புகிறாள். இது பாடலில் தெளிவாக உள்ளது. அப்படியிருக்க இது எவ்வாறு தோழி கூற்றாக அமையும் என்பது கேள்விக்குறி.
ஆனால் “தலைவன் இரவுக்குறியிடத்தே வந்து நிற்க, அதனை அறிந்த தோழி அவன் விரைவில் வரைந்து கொள்ளுதல் வேண்டித் “தலைவனின் சொல்லை நம்பி யாம் எம் நலனை இழந்தோம். ஊர் அலர் தூற்றுகிறது. எம்மைப் போல் இந்த ஊரும் துயிலாது அமைய எதனை இழந்தது” என்று கூறு முகத்தால் “ஊர் உம்மைக் கண்டு கொள்ளும் எனவே வரைந்து கொள்க“ என்று வற்புறுத்துவதாக கூற்று விளக்கம் வலிந்து கூறுவதாகத் தோன்றுகிறது.
தலைவனை அடைய இயலாது தவிக்கும் தலைவியின் உள்ளக் குமுறல் என்பது தான் இப்பாடல் தரும் பொருள். அப்படி வாசிக்க பொருள் தெளிவாகும் நிலையில் வலிந்து பொருள் கொள்ள வேண்டுமா என்பது சிந்திக்க வேண்டியதே. இவ்வாறு கூற்று முறையில் மாற்றம் கோரி நிற்கின்ற பாடல்கள் பல இந்நூலில் உள்ளன.
கதைசொல்லியின் குரல் முன்வைக்கும் கருத்துகள் சில
“பூவின் அன்ன நலம் புதிது உண்டு
நீ புணர்ந்தனையேம் அன்மையின் யாமே
நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி
மாசு இல் கற்பின் மடவோள் குழவி
பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு
சேணும் எம்மொடு வந்த
நாணும் விட்டோம் அலர்க இவ் ஊரே” (நற்.15)
தலைவியின் நலத்தைக் களவில் நுகர்ந்தான் எனினும் வரைவுக்கு அவன் உடம்படவில்லை என்ற தன் மனவருத்தத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது இப்பாடல். இது தலைவனால் ஏமாற்றப்பட்ட ஒரு தலைவியின் ஆதங்கத்தின் வெளிப்பாடு. அப்படி இருக்க இப்பாடல் தோழிக் கூறுவதாக இதற்கு கூற்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் ஆதங்கக் குரலாக வெளிப்படையாகத் தெரியும் இது ஆய்வுக்குரிய ஒன்று.
அதே வேளையில் காதலிப்பதற்கு முன்பு ஆணின் பண்புகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற சிந்தனையையும் இக்குரல் முன்வைக்கிறது. பெண்ணைக் காதலித்து பின் கைவிடும் செயல் அக்காலத்தில் இருந்துள்ளதை இது வெளிப்படுத்துகிறது.
அகநானூற்றுப் படலில் தோழியின் குரலாக வெளிப்படும் கதைசொல்லியின் குரல் இக்கருத்தை வெளிப்படையாகவே கூறுகிறது. “நெறி தவறிய அறமிலி ஒருவன் இளம்பெண் ஒருத்தியின் அழகிய பெண்மை நலத்தை கவர்ந்து கொண்டான். பின்னர் அவளை அறியேன் என்று அறவோர் முன்னர் அறமற்ற பொய்ச் சூளும் உரைத்தான். அவர் தம் சேர்க்கையை அறிந்தார் வாய்க் கேட்டறிந்த அவையத்தார் அவன் செய்த அடாச் செயலை உண்மையெனத் தெளிந்து தளிர்கள் கொண்ட பெரிய மரத்தின் கவர்த்த கிளையில் அவனை இருகக் கட்டி வைத்து அவன் தலையில் நீற்றினைப் பெய்தனர்” (அகம். 256.13 – 21).
இப்பாடலில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான மற்றொரு அம்சம் இந்தச் செய்தி பரத்தையருடன் தலைவன் நீராடிய போது எழுந்த அலருக்கு உவமையாகத் தோழியால் கூறப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று மறுப்பவனுக்கு தண்டனை வழங்கப்படும். ஆனால் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு பரத்தையர் எத்தனைப்பேருடன் வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம். இது அக்கால சமூக முரண் பாட்டை நமக்கு உணர்த்துகிறது. வழக்கமாகப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தமிழாசிரியா்கள் கூறும் “ பண்டைத் தமிழர் வாழ்வு ஒருவனுக்கு ஒருத்தி என அமைந்திருந்தது“ என்ற கூற்றை இது மறுக்கிறது.
இவ்வாறு பெண்ணின் ஆதங்கம் அகப்பாடல்கள் பலவற்றில் வெளிப்படுவதைக் காணமுடிகிறது. அவ்வாறான பாடல்கள் சிலவற்றைக் காண்போம்.
“காட்டில் உள்ள மயிலானது பாறையில் ஈன்ற முட்டைகளைக் கருங்குரங்கின் விளையாடும் குட்டிகள் உருட்டி விளையாடும் குன்றுகளையுடைய நாடன்” (குறு.38) என்று தலைவியின் குரலாக வெளிப்படும் கதைசொல்லி, பெண்ணின் (தலைவியின்) நெஞ்சம் பற்றி அறியாமல் அவளை ஒரு போகப்பொருளாக மட்டும் பார்க்கிறான் ஆண் (தலைவன்) என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது. குரங்கு உயிருள்ள முட்டையை கல்லாக நினைத்து விளையாடுவது போல ஆண் பெண்ணின் உடலை நினைக்கிறான். தனக்கும் மனம் உண்டு. அதில் ஆசைகள், ஏக்கங்கள் உண்டு. அவற்றைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தன் உடலை மட்டும் விரும்புகின்ற ஆணின் சுயநல சிந்தனையைத் தோலுரித்துக் காட்டுகிறது இந்தப் பெண்ணின் குரல்.
குரங்கின் பண்பை வைத்து சமூகத்தின் இன்னொரு பண்பினை வெளிப்படுத்துகிறது மற்றொரு பாடல். அப்பாடல் குறுந்தொகை 69 ஆம் பாடல். “இருளில் தாவுதலையுடைய ஆண்குரங்கு இறந்துவிட்டது. கணவனை இழந்து வருந்தும் பெண்குரங்கு கைம்மை வாழ்வினை விரும்பவில்லை. தலைவனைப் போன்ற தொழிலை இன்னும் கற்காத தன்குட்டியைச் சுற்றத்தவரிடம் ஒப்படைத்துவிட்டு உயரந்த மலை சிகரத்திலிருந்து விழுந்து இறந்துபோனது” (குறு.69) என்று வெளிப்படும் கதைசொல்லியின் குரல் கவனிக்கத்தக்கது. “தாவுதலைத் தன்குட்டி கற்கவில்லை. ஆனால் அதன் தந்தை அதைக் கற்றிருந்தது. அதனால் அது இறந்தது. தான் கைம்மை நிலைக்குத் தள்ளப்பட்டதால் இனி நான் வாழ தயாரில்லை. எனவே என் குட்டியை அதன் தந்தையைப் போல் வளர்க்க வேண்டாம் என்று கூறி உயிர் துறக்கிறது.
இப்படலில் கூறப்படும் கருங்குரங்கு என்பதை ஆணின் குறியீடாகக் கொள்ள இடமுள்ளது. இப்படி கொண்டால், மந்தி என்பது பெண்ணைக் குறிக்கிறது. குட்டி குழந்தையைக் குறிக்கிறது. இப்படிக் கொண்டால் இப்பாடல் ஆணால் கைவிடப்பட்ட பெண் தன் குழந்தையை நல்ல முறையில் (தந்தையைப் போல் அல்லாமல்) வளர்க்குமாறு கூறி இறந்துபோவது இயல்பாக நடைபெற்றுள்ளதை அறியமுடிகிறது. இவ்வாறு கணவனால் ஏமற்றப்பட்ட பெண்கள் வயிற்றிலிருந்த தம் குழந்தை பிறக்கும் வரை அவர்களுக்காக உயிர் வாழ்தனர் என்பதும், அக்ககுழந்தைகளின் எதிர்காலத்தை உறுதிசெய்த பின்னர் தம் உயிரைத் துரந்தனர் என்பதும் புலனாகிறது. இது அச்சமூகத்தில் நிலவிய ஒன்றாக விளங்கிக்கொள்ளமுடிகிறது.
இது மாதிரியான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதை மற்றொரு குறுந்தொகைப் பாடலும் கூறுகிறது. “தலைவியின் நோய்க்குக் காரணம் குறிஞ்சி நிலத்தலைவன் தகுதியில்லாதவன் போலக் கட்டுவிச்சி இது தெய்வத்தால் வந்தது என்று தீமை பயக்கும் மொழிகளை உரைத்தாள்…. வலிய குட்டியின் தந்தையாகிய கடுவனும் அக்கொடிய தலைவனை அறியும். அது தன் கண்களால் கண்ட நிகழ்ச்சியைக் கண்டிலேன் எனப் பொய் கூறாது” (குறு.26) என்று தோழியின் குரலாக வெளிப்படும் கதைசொல்லி ஆணின் தகுதி- பெண்ணின் துயரம் பற்றிய பதிவுகளை நமக்குத் தருகிறது. இப்பாடலில் கூறுப்படும் ஆண் பெண்ணுக்குத் தகுதியில்லாதவன். அதனால் குறிசொல்லும் பெண் இது தெய்வத்தால் வந்தது என்று பொய் சொன்னாள் என்கிறது கதைசொல்லி. அடுத்து அவர்களுடைய காதலை அறிந்தது ஒரு குரங்கு. அதனால் “இவ்விருவரும் காதலித்தார்கள்“ என்று கூறமுடியாது. எனவே தலைவியின் வேதனை அவள் உள்ளத்தை வருத்திக்கொண்டுள்ளது. வருந்துவதைத் தவிர அவளால் வேரென்ன செய்யமுடியும்.
” கதைசொல்லியின் குரல் என்ற அடையாளத்தைக் கொண்டு சங்கப்பாடல்களை வாசிக்கும் போது இவ்வாறு பல புதிய செய்திகளை நாம் அறியமுடியும். அத்துடன் வரையறை செய்துள்ள கூற்று என்ற அமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவர முடியும். அகம் என்ற போர்வையில் மறைந்திருக்கும் பல உண்மைகளை மீட்டெடுக்க முடியும் என்று எதிர்பார்க்கலாம்.
அடுத்து நாம் கவனிக்கவேண்டிய ஒன்று குழந்தை பேய் என்ற வெளிப்பாடுகள். “குழந்தையைக் கவர்ந்து கொண்ட பேயை என்ன செய்யமுடியும்? அதுவாக வந்து கொடுத்தால் தான் உண்டு. இல்லையென்றால் போனது போனதுதான் என்று விட்டு விடவேண்டியதுதான்“. அதைத்தவிர வேறேதும் செய்யமுடியாது என்று வெளிப்படும் கதைச்சொல்லியின் குரல் அகமரபை விட்டு வெளியேறிய நிலையைக் காட்டுவதாக உள்ளது. அதாவது இனி தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்ணின் அவலத்தை இது புலப்படுத்துகிறது.
தலைவனே! நேற்று உன்னோடு தங்கி உறங்கியவள்…. பூந்துகள் கமழும் கூந்தல் விளங்கிய வகையில் அசையுமாறும், இடையிற் கட்டிய உடை சரியவும், நெருங்கிய வளை ஒலிக்கவும் கண்ணால் பெயர்த்து நோக்கியபடி எமது தெருவில் சென்றாள்… அவள் உன்னுடைய தழுவலிலிருந்து நீங்கி எமது தெருவில் சென்றாள். அத்தகைய இளம் பருவமுடைய பரத்தையை நான் கண்டேன். அவள் உன்னோடு நீடு வாழ்வாளாக” (நற்.20) என்ற கதைசொல்லியின் குரல் இங்கு கவனிக்கத்தக்கது. தன்னை விட்டு நீங்கினாலும் பரவாயில்லை. நீ விரும்பிய – உன்னை விரும்பிய இளம் பெண்ணிடமாவது நீ சேர்ந்து வாழ் என்று தன்னைப் போன்ற வேறொரு பெண்ணுக்காகத் தன் வாழ்வைத் தியாகம் செய்யத் தயாரக இருக்கும் பெண்ணின் பண்பையும், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளும் ஆணின் பண்பையும் விளக்குகிறது இப்பாடல். பாடல் இவ்வாறு பொருள் தர, “பரத்தையரோடு இருந்து மீண்டவன் ‘யாரையும் அறியேன்‘ என்று கூற, அதற்கு பதில் கூறுவதாக இப்பாடல் அமைகிறது என்றும் தோழி வாயில் மறுத்தது என்றும்” இதற்கு வகுக்கப்பட்டுள்ள வரையறை மறுபரிசீலனைக்கு உரியது.
இவ்வாறு ”கதைசொல்லியின் குரல் என்ற அடையாளத்தைக் கொண்டு சங்கப்பாடல்களை வாசிக்கும் போது பாடலின் பின்புலத்திலுள்ள செய்திகளை நாம் அறியமுடியும். அத்துடன், வரையறை செய்துள்ள “கூற்று“ என்ற அமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவர முடியும். அகம் என்ற போர்வையில் மறைந்திருக்கும் மக்களின் வாழ்வியல் உளப்பாங்கை மீட்டெடுக்க முடியும்.
பயன்பட்ட நூல்கள்
- செயபால். முனைவர் இரா., அகநானூறு மூலமும் உரையும், 2004 (முதல் பதிப்பு), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை – 600 098.
- பாலசுப்பிரமணியன். முனைவர் கு. வெ., நற்றிணை மூலமும் உரையும், 2004 (முதல் பதிப்பு), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை – 600 098.
- மோகன். முனைவர் இரா., பத்துப்பாட்டு மூலமும் உரையும், 2004 (முதல் பதிப்பு), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை – 600 098.
- நாகராசன். முனைவர் வி., குறுந்தொகை மூலமும் உரையும், 2004 (முதல் பதிப்பு), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை – 600 098.
- சிவத்தம்பி. கா, தமிழின் கவிதையியல், 2007 குமரன் புத்தக இல்லம், சென்னை – 600 026.
- ………………… தொல்காப்பியமும் கவிதையியலும், 2007, குமரன் புத்தக இல்லம், சென்னை – 600 026 .
- தமிழவன், அமைப்பியலும் அதன் பிறகும் (ஸ்ட்ரக்சுரலிசம் நூலின் விரிவாக்கப்பட்ட பதிப்பு), 2008, அடையாளம், 1205 / 1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி – 621 310.
- …………………, பழந்தமிழ் அமைப்பியல் மற்றும் குறியில் ஆய்வுகள், 2009 (முதல் பதிப்பு), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 600 113.
- சந்திரன். முனைவர் ஆ., சங்கப்பாடல்களும் கதைசொல்லியின் குரலும், புதிய அவையம் மின்னிதழ், http://shcpub.edu.in/shc/publish_paper/?name=Puthiya+Aaviayam
- …….. மாதொரு பாகன் கதைசொல்லியின் குரல், சிற்றேடு தமிழ் காலாண்டிதழ், 2016, volume 2 issue 5 பக் 45 – 48.
- முத்தையன் முனைவர் ஆ., நடனக்காரியான 35 வயது எழுத்தாளர், சிற்றேடு தமிழ் காலாண்டிதழ், 2016, volume 3 issue 2, பக் 36 – 39.
- ………….. மொழிதல் கோட்பாட்டு நோக்கில் பன்றிக்குட்டி, சிற்றேடு தமிழ் காலாண்டிதழ், 2018, volume5 issue 1 பக் 48 – 51
-
காழிப்பிள்ளைக்கு சேக்கிழார் பாடிய பிள்ளைத்தமிழ்!
மீனாட்சி பாலகணேஷ்
‘தவம் பெருக்கும் சண்பையிலே தாவில்சரா சரங்களெல்லாம்
சிவம்பெருக்கும் பிள்ளையார் திருஅவதா ரஞ்செய்தார்,’ என்பது ஆளுடைப்பிள்ளையாராகிய திருஞானசம்பந்தப் பெருமானின் அவதாரம் பற்றி சேக்கிழார் பெருமான் இயற்றியருளிய பெரியபுராணப் பாடல். பெரியபுராணத்தினூடே இழைந்திலங்கும் பிள்ளைத்தமிழ் போன்ற ஓரமைப்பையும் சேக்கிழார் பெருமான் படைத்திருக்கிறார்! அதனை ஒரு சிறிய பிள்ளைத்தமிழாகவே நாம் கருதவும் இடமிருக்கிறது.
காப்பியத்துக்குள் ஒரு சிற்றிலக்கியம்!
*****
அந்த இளங்காலைப் பொழுதில் சண்பை (சீர்காழி) எனப்படும் அவ்வூரில் பல நற்சகுனங்கள் தென்பட்டன. சிலுசிலுவென்ற இளங்காற்று வீசி, மரங்களிலிருந்து மலர்கள் தெருவெங்கும் உதிர்ந்தன. வீடுகளின் வாயிலில் பவழமல்லிகை மலர்கள் அங்கு வசிப்பவர்களை ஆசிர்வதிப்பதுபோலச் சொரிந்தன. பறவைகள் இனிமையாகப் பாடின; இனிய நறுமணம் எங்கும் கமழ்ந்தது. தோணியப்பர் திருக்கோவில் மணி கணீரென முழங்கியது. மங்கல வாத்தியங்களின் ஒலி எங்கணும் பரந்து எழுந்து திசைகளனைத்தையும் நிறைத்தது. சிவபாத இருதயரின் வீட்டை நோக்கிப் பெண்டிர் விரைந்தனர்.
சிவபாத இருதயர், தமது வீட்டின் திண்ணையிலமர்ந்து சிவநாமத்தில் ஆழ்ந்திருந்தார். கண்களை மூடிக்கொண்டு நிட்டையில் ஆழ்ந்திருந்தார் அவர்.
சிறிதுநேரத்தில் பிறந்த பச்சிளம் மகவின் இனிய குரலொலி வீட்டின் உள்ளிருந்து கேட்டது. கோவில் கோபுரத்தை நோக்கி அவரின் கரங்கள் தானாகவே தலைக்குமேல் குவிந்தன. அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.
“சைவம் தழைக்க ஒரு திருமகன் அவதரித்துள்ளான்; அம்மையப்பன் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்து விட்டான்,” என மனதில் எண்ணிக் கொண்ட அவரின் உடலும் உள்ளமும் ஒருசேரச் சிலிர்த்தது. இக்குழந்தை வளர்ந்து எவ்வாறு சைவத்தொண்டு செய்வான் என அவர் சிறிதும் அறிந்திருக்கவில்லை; அதற்காகக் கவலைப்படவுமில்லை. இறைவன் அருள் புரிவான், வழிநடத்துவான் எனும் அசையாத நம்பிக்கை!
*****
அடுத்த பத்து தினங்களும் குழந்தை பிறந்ததும் அந்தணர் வீடுகளில் செய்யப்படும் நற்சடங்குகளில் கழிந்தன. உலகம் நன்மை பெறுவதற்காக இத்தகைய மகவைப் பெற்ற சிவபாதஇருதயர் தம் திருமாளிகையாகிய பவனத்தின் முன்றிலில் பலவிதமான அலங்காரங்களைச் செய்வித்தார்.
‘இரும்புவனம் இத்தகைமை எய்தஅவர் தம்மைத்
தரும்குல மறைத்தலைவர் தம்பவன முன்றில்
பெருங்களி வியப்பொடு பிரான்அருளி னாலே
அருந்திரு மகப்பெற அணைந்தஅணி செய்வார்,’ என்கிறார் சேக்கிழார் பெருமான்.
அவர் மகப்பேற்றின் பின்பு ஏற்படும் ‘தீட்டு’ முதலானவை நீங்க எண்ணெய் பூசி நீராடும் நெய்யாட்டு விழாவினைச் செய்து மகிழ்ந்தார்; இதனை ‘மங்கல ஸ்நானம்’ என்பது வடமொழி வழக்கு. மங்கல ஓசைகள் முழங்கும் சமயத்தில் சாதகன்மம் முதலான பல சடங்குகளையும் அந்தணர்கள் குலதருமப்படி செய்தார் அவர். ஆண்குழந்தை பிறந்தால் 16 விதமான சடங்குகளைச் செய்வர். இதனுள் குழந்தை பிறந்த நாள், கோள்களின் நிலை பற்றிய குறிப்பைப் பதிந்து வைத்தலை சாதகம் (ஜாதகம்) என்பர்.
‘சாதக முறைப்பல சடங்குவினை செய்வர்.’
வாராது வந்த மாமணியன்றோ இம்மகவு? உறவினப் பெண்டிர் அனைவரும் குழுமி பல மங்கலச் செயல்களைச் செய்து மகிழ்ந்தனர். அவை என்னென்ன தெரியுமா?
மயில்போலும் சாயல்கொண்ட அம்மகளிர், தூமணி விளக்கொடு தாம் அணிந்துள்ள அணிமணிகளும் சுடர்க்குழைகளும் மின்னி ஒளிவீச அழகான மாளிகையை மேலும் அழகு செய்தனர்.
வாசனைப்பொடியாகிய சுண்ணத்தை எங்கும் தூவினர்;
முளைப்பாலிகைகளை மேடைகள் தோறும் வைத்தார்கள்.
மணமுடைய புண்ணிய நீர் நிரப்பப்பட்ட பொற்குடங்களை வரிசையாக மேடைகள்தோறும் வைத்தனர்.
குழந்தை பிறந்ததும் பொன் முதலான பொருட்களை தானம் வழங்கி மகிழ்கிறார் தந்தை. அதுமட்டுமல்ல; சிவநேசச் செல்வரான அவர் சிவனடியார்களுக்கு இடையறாது அமுது செய்வித்த வண்ணம் இருந்தார். மற்றும் உடனிருந்தோர் அழகான மலர்மாலைகளை அவற்றில் மொய்க்கும் வண்டுகளுடன் சேர்த்துக் கட்டி ஆங்காங்கே தொங்கவிட்டனராம். பச்சிளம் மகவு பிறந்திருக்கும் இல்லத்திற்குக் காப்பாக வேம்பின் இலைகளை மாளிகையின் பகுதிகளில் ஆங்காங்கே செருகுவார்கள் சிலர். இதனை,
‘செம்பொன்முத லானபல தானவினை செய்வார்
நம்பரடி யாரமுது செய்யநல முய்ப்பார்
வம்பலர் நறுந்தொடையல் வண்டொடு தொடுப்பார்
நிம்பமுத லானகடி நீடுவினை செய்வார்’ என்கிறார் புலவர்.
வெண்கடுகு முதலான பண்டங்கள் சேர்த்துச் செய்யும் புகைகொண்டும், நெய், அகில் இவற்றின் புகையினைச் சேர்த்தும், பல வேள்விகள் செய்வதனால் எழும் புகையாலும் தெய்வமணம் கமழும் செயல்களைச் செய்கின்றனர். பின் மறைவிதிப்படி அக்குழந்தைக்கு ‘ஆளுடைய பிள்ளையார்’ எனத் திருநாமம் சூட்டி தொட்டிலில் இடும் சடங்கினைச் செய்தனர்.
இவ்வாறு பத்துநாள் சடங்குகளை வருணித்து மற்றவைகளை நயத்துடன் சேக்கிழார் கூறும் அழகே அழகு. சிவபிரானின் திருவடிகளில் தாம் கொண்ட அன்பே அன்னை பகவதியாரின் திருக்கொங்கைகளில் பாலாகச் சுரந்திட அதனைத் தன் திருக்குமாரனுக்கு அவர் உண்பித்தாராம்.
பிறந்த குழந்தை வளர்வதனை இனி வரும் பாடல்களில் சேக்கிழார் உரைக்கிறார். பிள்ளைத்தமிழ்ப் பருவங்களனைத்தும் அழகுற வரிசைப்படுத்தப்பட்டு, சிலசொற்களோ, வரிகளோ, பாடல்களோ ஆயினும் கற்பனைநயம் மிகக் கூறப்படுகின்றன.
சிவபிரான் திருவருளால் உதித்த குழந்தையாதலால், பலவிதமான காப்புகள் மிகையாகும், அவை தேவையில்லை எனக்கருதி அவை எதையும் விரும்பாது, குழந்தையின் நெற்றியில் திருநீற்றைப் பூசிக் காப்புச் சடங்கினைச் செய்தனர். “மந்திரமாவது நீறு,” எனப் புகழ்ந்து பாடப்போகும் ஞானக் குழந்தையல்லவா இவர்? இதனைவிடத் தகுதியான காப்பு வேறுண்டோ? இதனால் முதல்மாதத்தில் பாடப்படும் காப்புப்பருவம் கூறப்பட்டது.
தமிழுடன் சைவமும் சிறப்புப்பெற வந்துதித்தவர் காழிப்பிள்ளையார் பெருமான். ஆகவே, அவரைப் பெரிதும் போற்றும்வண்ணம் தாயார் தன் மடித்தலத்தும், மணித்தவிசிலும், தூய்மையான விரிப்பைக் கொண்ட தொட்டிலிலும், மலர்ச் சயனத்திலும் கண்வளர்த்தி நாயகனைத் தாலாட்டி நலம்பல பாராட்டினார். ஏழாம் மாதத்தில் பாடப்படும் தாலப்பருவம் இவ்வாறு கூறப்பட்டது.
ஆளுடைய பிள்ளையார் தவழத்துவங்கி, தமது தலையை மேலெடுத்து முகத்தை அசைத்துச் செங்கீரை ஆடினார். இதனைச் சேக்கிழார் பெருமான் அருமையான தமது கற்பனையை ஏற்றி, தற்குறிப்பேற்றமாகப் பொருள் நயத்துடன் பாடியுள்ளமை சுவைபட உள்ளது. இதனைத் தன்மையணி என்பர்.
‘வருமுறைமைப் பருவத்தில் வளர்புகலிப் பிள்ளையார்
அருமறைக டலையெடுப்ப ஆண்டதிரு முடியெடுத்துப்
பெருமழுவர் தொண்டல்லால் பிறிதிசையோ மென்பார்போல்
திருமுகமண் டலமசையச் செங்கீரை ஆடினார்,’ என்கிறார்.
வரிசையாக வரும் பிள்ளைப்பருவங்களுக்கு உரியவாறு வளர்ந்துவரும் ஆளுடைப் பிள்ளையார், ஐந்துமுதல் ஏழுமாத அளவில் செய்யும் குழந்தைகள் செய்யும் செங்கீரையாடலைச் செய்தார் என்பது நிகழ்வு. தலையை உயர்த்தி நோக்கிக் குழந்தைகள் தவழும்; காழிப்பிள்ளையார் சைவம் தழைத்தோங்க அவதரித்தவர். ஆகவே அவர் தலையெடுத்து நிமிர்ந்தது ‘அரிய வேதங்கள் தலை எடுக்கும்படிச் செய்யவே தலையணையிற் பதிந்த திருமுடியை மேலெடுத்தார்’ என்பது போன்றிருந்தது என்றார் சேக்கிழார். மேலும், தவழும் குழந்தை முகத்தைப் பக்கவாட்டிலும், மேலும் கீழும் அசைக்கும்; அது, ‘சிவபிரானுடைய தொண்டைத்தவிர பிறிதொன்றினையும் செய்யோம்’ என்பது போல இருந்தது என்கிறார்.
அற்புதமான, பொருத்தமான கற்பனை!
ஒன்பதாம் மாதம் ஆளுடைப் பிள்ளையார் சப்பாணி கொட்டுவதனைப் புலவர்பெருமான் பாடுகிறார். சப்பாணிப்பருவத்துப் பாடுபொருள் குழந்தையின் கைகள்தாம். “நாம் சைவமன்றி மற்ற பரசமயங்களை அறியமாட்டோம். ஆதலின் எம்மருகே வாராது தொலைவில் சென்றுவிடுங்கள்,” என்று கூறுவதுபோன்று சிறுகைகளை இணைத்துச் சப்பாணி கொட்டினாராம். “அளவுமீறி எம்மருகே வந்து தீங்கு விளைக்காமல், தூரத்தே சென்று விடுங்கள்,” எனக்கூறுவது போன்றிருந்ததாம். மேலும் கைகளைச் சேர்த்து ஒத்தியெடுத்துச் சப்பாணி கொட்டியது சிவபெருமானிடத்துப் பிற்காலத்தில் கைத்தாளம்பெற வேண்டியதனைப் போலும் இருந்ததாம்!
‘நாமறியோம் பரசமயம் உலகிலெதிர் நாடாது
…………………………………………. புனிதன்பால்
காமருதா ளம்பெறுதற் கொத்துவதும் காட்டுவபோல்
தாமரைச் செங்கைகளினால் சப்பாணி கொட்டினார்.’ என்பது சேக்கிழார் பாடல்.
இவையனைத்தும் சைவம் தழைக்க வந்துதித்த பிள்ளையாருக்கு சேக்கிழார் பெருமானின் பக்தியில் உதித்தெழுந்த கவியுக்தி செறிந்த கற்பனைகள்.
தொடர்ந்து காழிப்பிள்ளையார் தவழ்தலைக் கூறியவர், அடுத்து வருகைப் பருவத்தைக் குறித்துப் பாடுகிறார். தவழும் குழந்தை எழுந்து தளர்நடை நடக்க விழைந்து தாயும் தந்தையும் மற்றோரும் வேண்டுவதனை அடுத்த பாடலில் விளக்கியருளுகிறார்.
மறைக்குலத்தைச் சார்ந்த பெண்டிரும், தாதிமார்களும் பலவிதமாகக் குழந்தையை ‘எம்மிடம் வருக’வென அழைக்கின்றனர். “சீர்காழி நகர்வாழ் மக்களுக்கு சிறப்புச்செய்ய உதித்த செல்வமே!” என்றும், “கவுணிய குலத்தோரின் கற்பகமே!” என்றும் விளித்தனர். இவ்வாறு அழைத்தவர்களின் முகத்தை நிமிர்ந்து நோக்குகின்றார் காழிப்பிள்ளையார். அவருடைய திருமுகத்தில் குறுநகை மலர்ந்து பொலிகின்றது. காண்போர் உள்ளங்களும் பெரும்களி கொள்கின்றன.
அது மட்டுமா?
பத்துப் பதினொன்று மாதங்கள் நிரம்பிய சிறு மகவான பிள்ளையார், ஓடோடி வந்து தம் தாய் பகவதி அம்மையைத் தழுவிக் கொள்கின்றார்; புறம் புல்குகின்றார்; இறுக அணைத்துக் கொள்கின்றார். தாயின் உள்ளமும் உடலும் சோர, உணர்வு உருகிக் கரைய, பேரின்பம் பெருக்கெடுக்கின்றது. தம் பால் வந்த மகவினை அன்னையும் மற்றவரும் இவ்வாறெல்லாம் போற்றுகின்றனர்.
‘திருநகையா லழைத்தவர்தம் செழுமுகம்கண் மலர்வித்தும்
வருமகிழ்வு தலைசிறப்ப மற்றவர்மேல் செலவுகைத்தும்
உருகிமனம் கரைந்தலைய உடனணைந்து தழுவியும் முன்
பெருகிய இன்புறவளித்தார் …………….’ என்கிறார் சேக்கிழார் பெருமான்.
இங்ஙனம் குழந்தை செய்யும் செய்கைகளால் தாயும் மற்றோரும் எவ்வாறு இன்புற்றனர் எனச் சிறப்பாகக் கூறியுள்ளார்.
பெரியாழ்வார் ஒருவரால் மட்டுமே பாடப்பட்ட பருவமான தளர்நடை நடப்பதையும் புலவர் பாடியுள்ளார். சைவம் தழைக்க வந்துதித்த பிள்ளையாரின் சிறப்பை ஒவ்வொரு பாடலிலும் சிறப்பாக எடுத்துரைத்துள்ளதொன்றே சுவையாக உள்ளது. கிளரும் ஒலியினைக் கால்களில் அணிந்த கிண்கிணிகள் எழுப்புமாறு ‘கீழ்நெறிகளைக் காட்டும் சமயங்கள் தள்ளாடி நீங்கும்படி’, தனது திருமேனி அசையும் தோறும் தனது சுருண்ட குஞ்சியும் நெற்றியில் அலைய, தாமும் தளர்நடையிட்டு அருளினார் என்கின்றார்.
வளர்ந்து வரும் குழந்தையைப் பாடும்போதில், ஆண்பால் பிள்ளைத்தமிழின் கடைசிப் பருவங்களான சிறுதேர், சிற்றில் ஆகியனவற்றையும் கூறாமல் இருக்க இயலுமா?
அழகான சிறுதேரைப் பற்றிக் கொண்டு பிள்ளையார் உருட்டிச் செல்கிறார். மணலைக் கொழித்து, சிற்றில் எனும் சிறுவீடுகளை இழைத்து விளையாடும் பேதைச்சிறுமியர் இருக்குமிடங்கள்தோறும் ஓடியும் நடந்தும் சென்று அவற்றைக் காலால் தொடர்ந்து அழித்து விளையாடினார். இவ்வாறு விளையாடியதனால் மேனி முழுதும் வியர்வைத்துளிகள் அரும்பின. அதனுடன் திருநீற்றைப் பூசிய கோலமும் ஒருசேர வீதிமுழுதும் திருவொளி பரப்ப வளர்ந்து வந்தார் எனக்கூறி, ஆளுடைய பிள்ளையாரின் மழலைப் பருவத்தினை அழகுறப் பாடியருளியுள்ளார் சேக்கிழார் பெருமான்.
‘சிறுமணிதேர் தொடர்ந்துருட்டிச் செழுமணல் சிற்றில்களிழைக்கும்
நறுநுதற்பே தையர்மருங்கு நடந்தோடி அடர்ந்தழித்தும்,
குறுவியர்ப்புத் துளியரும்பக் கொழுப்பொடியா டியகோல
மறுகிடைப்பே ரொளிபரப்ப வந்து வளர்ந்தருளும்……’ என்பது பாடல்.
பிள்ளைத்தமிழின் இனிமையை, சுவையைக் கொண்டிலங்குகின்றன இப்பாடல்கள் என்பது மிகையேயில்லை!
————————-
பிள்ளையைத் தமிழால் பாடுவது எனும் பொருளில் அமைந்தது பிள்ளைத்தமிழ் என்னும் தனித்தன்மை வாய்ந்த ஒப்பற்றதொரு சிற்றிலக்கியம். இறைவி, இறைவன், பெரியோராகிய இறையடியார்கள், வள்ளல்கள், அரசர்கள், ஆசிரியர்கள் ஆகியோருள் ஒருவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு கற்பனை பலவற்றை அமைத்து இச்சிற்றிலக்கியம் பாடப்படும். இவர்களின் அரும்பெரும் செயல்களை காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபறை எனும் ஆண்பால் பிள்ளைத்தமிழின் பத்துப் பருவங்களில் நயமாக இணைத்துப்பாடி மகிழ்ந்தனர் புலவர்கள்.
‘குழவி மருங்கினும் கிழவதாகும்,’ எனத் தொல்காப்பியம் இதற்கு இலக்கணம் வகுக்கின்றது. தொல்காப்பியத்திற்குப் பின் 1000 ஆண்டுகள் கழித்து, 9-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெரியாழ்வார், கிருஷ்ணனைக் குழந்தையாக்கி ‘திருமொழி’ பாடினார். மேற்கூறிய பருவங்களுள் பல இதில் நயமுறப் பாடப்பட்டுள்ளன. இதுவே பிற்காலத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது எனலாம்.
இருப்பினும் இடைப்பட்ட காலத்தில், 6- 11ம் நூற்றாண்டுகளில் பெரும்வளர்ச்சியடைந்த சைவ, வைணவ சமயநூல்களிலும் அக்கடவுள்களின் மீதோ அல்லது அரசர்கள்மீதோ, தனிப்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்கள் பாடப்படவில்லை. சைவம் சிவபிரானையே முழுமுதற் கடவுள் எனப்போற்றினாலும், அவன் ஒரு தாய் வயிற்றிற் பிறவாத பிறப்பிலிப் பெருமான் ஆதலால் அவன்மீது பிள்ளைத்தமிழ் பாடலாகாதென்பது நியதி; ஆகவே சைவசமயக் குரவர்கள் எவரும் பிள்ளைத்தமிழ் பாடவில்லை.
இக்காலத்தையடுத்து முதன்முதலாக ஒரு பிள்ளைத்தமிழ் நூல் மன்னன் அநபாயசோழன் எனும் இரண்டாம் குலோத்துங்கன் மீது ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டுள்ளது. இவர்கள் காலம் 12-ம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். குலோத்துங்கனின் அவையை அலங்கரித்த அவனுடைய அமைச்சரும், சைவ அடியாருமான சேக்கிழாரால் இதே காலகட்டத்தில் பெரியபுராணம் இயற்றப்பெற்றுப் பெரும்புகழையும் சிறப்பையும் அடைந்தது.
ஒட்டக்கூத்தர் எனும் பெரும்புலவரின் ‘குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்’ எனும் நூலின் நயத்தில் ஆழ்ந்ததனாலோ என்னவோ, சேக்கிழார் பெருமானும் தாமியற்றிய திருத்தொண்டர் புராணமெனும் பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தர் வரலாற்றைப் பாடும்போது அதில் சம்பந்தர் எனும் குழந்தை அவதரித்து பிள்ளைத்தமிழின் பருவங்களுக்கேற்ப அழகாக நன்கு வளர்ந்ததனை 27 பாடல்களில் மிக அழகாக வருணனை செய்துள்ளார். அதுவே நாம் மேற்கண்ட செய்திகளாகும்.
இங்கு ஒரு கருத்தைச் சிறிது ஆழ்ந்து நோக்க வேண்டும். சேக்கிழார் பெருமான் ஒட்டக்கூத்தர் காலத்தவர். அதே அரசவையில் அமைச்சராக இருந்தவர். ஒட்டக்கூத்தர் குலோத்துங்கனின்மீது இயற்றிய பிள்ளைத்தமிழின் தாக்கம், அச்சிற்றிலக்கியத்தின் பல கூறுகள் ஆகியன காழிப்பிள்ளையாரின் வளர்ப்பினை விவரிக்கும் பகுதியிலும் காணப்படுவது அருமையான ஒற்றுமை எனலாம். முறையாக எழுந்த முதல் பிள்ளைத்தமிழ் நூல் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழே. தம் காலத்துச் சக புலவர் ஒருவரைப் போற்றும் விதமாகவும் அவர் பாடிய முதல் சிற்றிலக்கிய நூலொன்றின் கூறுகளைத் தாமியற்றிய காப்பியத்திலும் இணைத்தது சேக்கிழார் எனும் புலவர்பெருமானின் பெருந்தன்மையைச் சுட்டுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. திருஞானசம்பந்த நாயனார் புராணத்தில் நிகண்டுகள் வகைப்படுத்தும் பிள்ளைத்தமிழின் பருவங்களான, காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, வருகை, சிற்றில், சிறுதேர் இவற்றுடன் இடையே விரவி வரும் சில பருவங்களான அன்னையை அணைத்துக் கொள்ளுதல், புறம் புல்குதல், தளர்நடை நடத்தல் ஆகிய பருவங்களும் காணப்படுகின்றன. இப்பருவங்கள் ஒன்பதாம் நூற்றண்டுக் காலத்தவரான பெரியாழ்வார் ஒருவரால் மட்டுமே பாடப்பட்ட பருவங்களாகும் (இவை நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் உள்ளவை). ஆகவே சேக்கிழாருக்கு வைணவ இலக்கியங்களிலும் பரிச்சயம் இருந்தது எனக் கொள்ளலாமா?
எது எவ்வாறாயினும், நாம் ஆன்மீகம் சார்ந்த இலக்கியங்களைப் படிக்கும்போழ்து அவற்றின் பொருட்சுவை, பக்திச்சுவை, கற்பனைவளம், சமகாலப் புலவர்களின் தாக்கம் ஆகியனவற்றை வியந்து பாராட்டாமல் இருக்கவியலாது. சேக்கிழார் பெருமானின் காப்பியத்துள் திகழும் சிற்றிலக்கியக் கூறுகள் இவை. இறையருள் ஒன்றினாலேயே இத்தகு புலமை கைகூடும் என்பது கண்கூடு!
இதுதவிர, ஞானசம்பந்தப்பெருமான் மீது பிற்காலத்தில் ஐந்து பிள்ளைத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டுள்ளன என அறிகிறோம்.
- திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்- திருவாவடுதுறை ஆதீனத்து மகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ
மாசிலாமணித் தேசிக சுவாமிகள்- 17ம் நூற்றாண்டு.
- நால்வர் பிள்ளைத்தமிழ்- காரைக்குடி ராம. சொ. சொக்கலிங்கச் செட்டியார்
- திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்- தணிகைமணி செங்கல்வராய பிள்ளை.
மற்ற இரண்டினைப் பற்றிய செய்திகள் கிட்டவில்லை.
பிள்ளைத்தமிழின் கூறுகளைக் கொண்டமைந்த சேக்கிழார் பெருமானின் இப்பெரியபுராணப் பாடல்கள் பிற்காலப் பிள்ளைத்தமிழ் நூல்களில் காணும் சொல்நயம், கருத்துவளம், கற்பனை அனைத்திலும் சிறந்து விளங்குகின்றன எனக் கண்டோம்; மகிழ்ந்தோம்.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
————–
ஆய்வுக்கு உதவிய நூல்கள்:
பன்னிரு திருமுறைகள்: பெரிய புராணம்- வர்த்தமானன் பதிப்பகம், சென்னை. 1998.
-
பதினெண்கீழ்க்கணக்குப் பதிப்பு உருவாக்கம் – பரவல் – பதிப்பரசியல்
முனைவர் ப.திருஞானசம்பந்தம்
முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இரத்தின நாயகர் சன்ஸ், மர்ரே நிறுவனம், திருநெல்வேலி சைவ சிந்தாந்த நூற் பதிப்புக் கழகம் ஆகியன தனிநபர் சார்ந்து, பதிப்புக்குழுவை உருவாக்கிப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை வெளியிட்டன. இருபதாம் நூற்றாண்டின் இறுதித் தொடங்கி இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதிகளில் பாட நூல்கள் சார்ந்து பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பதிப்பிக்கப்பட்டன. இவை பெரிதும் வணிக நோக்கத்தினை முதன்மையாகக் கொண்டிருந்தது. மேலும் எளிமைப்படுத்துதல் என்ற தன்மையில் சுருக்கமான உரைகளைக் கொண்ட பல பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. இன்றும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு வெளிவரக் கூடிய கீழ்க்கணக்குப் பதிப்புகள் குறித்துத் தனியொரு சூழலில் விவாதிக்க வாய்ப்புண்டு. இரத்தின நாயகர் சன்ஸ், மர்ரே, கழகம் ஆகியவற்றின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பதிப்புச் செயல்பாடுகள், பதினெண்கீழ்க்கணக்கின் தொகுப்பு முறைகள், பதினெட்டு நூல்களின் எண்ணிக்கை குறித்த வரையறைகள் மட்டும் இங்குக் கவனப்படுத்தப்படுகின்றன.
இரங்கசாமி நாயக்கர் 1870இல் சென்னைத் துறைமுகம் அருகே உள்ள கந்தகோட்டத்தில் ஒரு புத்தகக் கடையைத் தொடங்கினார். இது 1920இல் பி.இரத்தின நாயக்கர் ஸன்ஸ் பதிப்பகமாக உயர்வு பெற்றது. இப்பதிப்பகத்தின் மூலம் ஆத்திசூடி, சித்தர் ஞானக்கோவை, தனிப்பாடற்றிரட்டுகள், சித்த மருத்துவம் தொடர்பான நூல்கள் வெளியிடப்பட்டன. 1838ஆம் ஆண்டு திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர், திருக்குறளின் பரிமேலழகர் உரையைத் தழுவி, பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும் எழுதிப் பதிப்பித்துள்ளார். இப்பதிப்பினைக் களத்தூர் வேதகிரி முதலியார் மீள்பதிப்பாகப் பி.இரத்தின நாயக்கர் சன்ஸ் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டதாக ஒரு குறிப்பு கிடைக்கின்றது. புத்தகங்களில் இடம்பெற்றிருந்த சிறிய எழுத்துகள் வாசிப்பதற்கு ஏற்றதாக இல்லாத காரணத்தால் எழுத்துக்கள் பெரியதாக இடம்பெறும் வகையில், பெரிய எழுத்து கருட புராணம் பெரிய எழுத்து மகாபாரதம் என்று அட்டைகளில் அச்சிட்டு புத்தகங்களை வெளியிட்டனர். இதனைப் பிற பதிப்பகங்களும் பின்பற்றியுள்ளன. மேலும் கர்ண மோட்சம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட தெருக்கூத்து நாடகப் பிரிதிகளையும் இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1934இல் இரத்தின நாயகர் ஸன்ஸ் நிறுவனம் திருமகள் விலாச அச்சியந்திரசாலையின் மூலம் நாலடியார் மூலத்தையும் களத்தூர் வேதகிரி முதலியார் இயற்றிய உரையையும் சேர்த்து வெளியிட்டுள்ளது. இந்நூலின் முகவுரையில் பதினெண்கீழ்க்கணக்கின் பெயர்களைச் சுட்டும் பழம் பாடல், பன்னிரு பாட்டியல் கூறும் கீழ்க்கணக்கு என்பதற்கான விளக்கம் ஆகியன இடம்பெற்றுள்ளன.
நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ(டு) ஏலாதி யென்பவே
கைந்நிலையொ டாங்கீழ்க் கணக்கு.
இப்பாடலின் பின்னிரண்டு அடிகள், முந்தைய பதிப்பாசிரியர்கள் கொண்ட அடிகளில் இருந்து மாறுபட்டுள்ளன. ஆனால் பொருண்மை கொள்ளல் முறையில் மாற்றமில்லை. பதினெட்டு நூல்களின் பெயர்களை வேதகிரி முதலியார் தமது நாலடியார் பதிப்பில் தந்ததோடு, அவற்றுள் ஒன்றாகக் கைந்நிலையினைக் குறிப்பிடுகின்றார். இன்னிலையினைக் குறிப்பிடவில்லை.
பதினெண் கீழ்க்கணக்கின் நூல்களாவன:-
- நாலடியார் 9. திணைமொழி ஐம்பது
- நாண்மணிக்கடிகை 10. திணைமாலை நூற்றைம்பது
நால் நாற்பது 11. முப்பால்
- இனியவை நாற்பது 12. திரிகடுகம்
- இன்னா நாற்பது 13. கோவை ‘ஆசாரக்கோவை’
- கார்நாற்பது 14. பழமொழி
- களவழி நாற்பறது 15. மாமூலம் ‘சிறுபஞ்சமூலம்’
நால் ஐந்திணை 16. காஞ்சி ஷமுதுமொழிக்காஞ்சி|
- ஐந்திணை ஐம்பது 17. ஏலாதி
- ஐந்திணை எழுபது 18. கைந்நிலை என்பன.
(களத்தூர் வேதகிரி முதலியார்: 1934 : 4).
கீழ்க்கணக்கின் பெயர்களைச் சுட்டும் பழம் பாடலில் உள்ள கோவை, முப்பால் ஐந்தொகை என்ற தொடர்களுக்குரிய பொருள் கொள்ளல் முறையைக் குறித்தும் வேதகிரி முதலியார் தெளிவாக விளக்கியுள்ளார். கோவை, காஞ்சி என்பதற்குப் பொருள் – திருக்கோவையார், மதுரைக்காஞ்சி. முப்பாலுக்குத் திருக்குறள் அல்லாது வேறு நூல். ஐந்திணை என்பதற்கு ஐந்தொகை எனப் பாடங்கொண்டு வேறு ஐந்து நூல்கள் என இவர் காலத்து வழக்கிலிருந்த தொகை முடிபுகளை வேதகிரி முதலியார் மறுத்துரைக்கின்றார்.
வேதகிரி முதலியாருக்குக் கீழ்க்கணக்கைச் சார்ந்து கைந்நிலை என்ற தெளிவான கருத்திருந்ததை மேற்கண்ட கூற்றின் மூலம் அறிந்து கொள்ளமுடிகின்றது.
மர்ரே ராஜம் ஆங்கிலேயர்கள் நடத்தி வந்த ஏல நிறுவனத்தில் கணக்களாராகப் பணியாற்றினார். பின்னர் அந்நிறுவனத்தை ஏற்று நடத்தினார். ஏலத் தொழிலின் மூலம் பல்வேறு அறச்செயல்களைச் செய்து வந்த இவருக்குச் ச.வையாபுரிப்பிள்ளையோடு 1940இல் தொடர்பு ஏற்பட்டது. பல்வேறு அறச்செயல்களைச் செய்வதுபோல் நூல்களை அச்சிட்டு வழங்குவதும் அறக்கொடை எனச் ச.வையாபுரிப்பிள்ளை ராஜத்திடம் கூறுகின்றார். தமிழ்மொழி மீது ஈடுபாடு கொண்ட இவர் தமிழ்நூல்களைப் பதிப்பிக்கும் பொறுப்பைச் ச.வையாபுரிப்பிள்ளை அவர்களிடமே கொடுக்கின்றார். இதன்மூலம் தமிழ் இலக்கியங்கள் பல சந்தி பிரித்து எளிமையாக வாசிப்பதற்கு ஏற்றவாறு அச்சிட்டு வெளியிடப்பட்டன. திவ்ய பிரபந்தம், திருவாசகம், சிலப்பதிகாரம், மணிமேகலை, அட்டபிரபந்தம், கல்லாடம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பாட்டும் தொகையும், கம்பராமாயணம், பதினெண்கீழ்க்கணக்கு, வில்லிபாரதம் உள்ளிட்ட நூல்களை மர்ரே நிறுவனம் சந்தி பிரித்த பதிப்பாக வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றுள் பதினெண்கீழ்க்கணக்கு நூற் பதிப்பு முயற்சி குறித்தும், பதினெட்டு நூல்கள் எவை என்பது குறித்தும் முன்வைக்கப்பட்ட கருத்துகள் இங்கு விவாதத்திற்கு உட்படுத்தப்படுகின்றன.
செவ்விலக்கிய நூல்களையும் பிற நூல்களையும் தனித்தனி நூல்களாக வெளியிட்ட மர்ரே நிறுவனம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை ஒரே தொகுதியாகப் பதிப்பித்தது. இப்பதிப்புப் பணியில் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை, வி.மு.சுப்பிரமணியம், மு.சண்முகம் மூவரும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். பல்வேறு பிரதிகளை ஒப்புநோக்கி ஆராய்ந்து பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பதிப்பை உருவாக்கினர். இப்பதிப்பிற்குரிய ஆலோசனைகளைப் பெ.நா.அப்புஸ்வாமி, ரா.பி.சேதுப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், வேங்கடராஜுலு ரெட்டியார். கி.வா.ஜாகநாதன், அ.ச.ஞானசம்பந்தன், சா.கணேசன் ஆகியோர் வழங்கியுள்ளனர். இப்பதிப்பின் பதிப்புரையில் கீழ்க்கணக்கு என்ற சொல்லுக்கான விளக்கம், பதினெட்டு நூல்கள் குறித்த விவாதங்கள், பதினெட்டு நூல்களிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை, ஆழ்வார் திருநகரியின் ஏட்டுப் பிரதிக் குறிப்பு, பதினெட்டு நூல்களின் காலம், பதினெட்டு நூல்களின் பொருண்மை அடிப்படையிலான பகுப்பு மற்றும் விளக்கம் உள்ளிட்ட பல செய்திகளை விரிவாக அறிந்துகொள்ள முடிகின்றது. பதினெட்டு நூல்களுள் ஒன்றாகக் கைந்நிலையையே மர்ரே பதிப்பு கொண்டுள்ளது. இதற்குக் காரணம் மர்ரே பதிப்பு முயற்சியில் முன்னோடி நிலையில் செயல்பட்டவர் ச.வையாபுரிப்பிள்ளை. இப்பின்புலத்திலேயே மர்ரே பதிப்பு கைந்நிலையைப் பதினெண்கீழ்க்கணக்கின் ஒன்றாகச் சேர்த்து, இன்னிலையைச் சேர்க்கவில்லை.
பதினெண்கீழ்க்கணக்கின் பல்வேறு பிரதிகளை ஒப்புநோக்க உதவி மூவருள் ஒருவரான மு.சண்முகம் பிள்ளை பிற்காலத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்குப் பதவுரை எழுதிய வெளியிடும்போது இன்னிலையைச் சேர்த்து வெளியிட்டுள்ளார். இது இங்குக் கவனத்திற் கொள்ளத்தக்கது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தமிழின் பல்வேறு பொருண்மை சார்ந்த நூல்களை உரைகளோடு வெளியிட்டது. அவற்றுள் பதினெண்கீழ்க்கணக்குப் பதிப்பும் ஒன்று. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்கு ந.மு.வேங்கடசாமி நாட்டார், தி.பாலசுந்தனார், சி.புன்னைவனநாத முதலியார், சங்குப் புலவர் உள்ளிட்ட அறிஞர்கள் உரையெழுதியுள்ளனர். அவ்வுரைகளின் முன்னுரையில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகளைப் பதிவுசெய்துள்ளனர். இதில் கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூல் கைந்நிலையா? இன்னிலையா? என்பது குறித்த விரிவாய் விவாதித்துள்ளனர். அவற்றைப் பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.
- இன்னிலையை ஏற்பவர்கள் – ந.மு.வேங்கடசாமி நாட்டார், தி.சு.பாலசுந்தரனார் (இளவழகனார்)
- கைந்நிலையை ஏற்பவர் – சி.புன்னைவனநாத முதலியார்
- இன்னிலை, கைந்நிலை இரண்டையும் குறிப்பிட்டு இதில் எதை ஏற்பது என்ற தெளிவில்லாதவர் – சங்குப் புலவர்
- திணைமாலை – மணி.திருநாவுக்கரசு
பதினெண்கீழ்க்கணக்கைச் சேர்ந்த பதினெட்டு நூல்கள் எவையெவை என்பது குறித்த தெளிவு கிடைத்த பிறகும் 20ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வெளிவந்த கழகப் பதிப்புகள் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தின. திருநெல்வேலி சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம்வழி வெளிவந்துள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூற்பதிப்புகளில் ஒன்றாக இன்னிலை தொகுக்கப்படவில்லை (பக்.345). இக்குறிப்பை நெ.சுப்பையா பிள்ளை ‘பதினெண்கீழ்க்கணக்குச் சொற்பொழிவுகள்| என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பிற்காலங்களில் வெளிவந்த பதினெண்கீழ்க்கணக்குப் பதிப்புகளில் இன்னிலை, கைந்நிலை இரண்டும் சேர்த்து பதிப்பிக்கப்பட்டுள்ளன. கழகப் பதிப்புகளை உருவாக்கிய பதிப்பாசிரியர்கள் சிலர், தொடக்ககால பதிப்பாசிரியர்கள் முன்னெடுத்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த விவாதங்களைத் தொடர்ந்துள்ளனர். இதன்மூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த சில குழப்பமான முடிவுகளைத் தங்களது பதிப்புகளில் முன்வைத்துள்ளனர் என்பதை அறிய முடிகின்றது. இதில் குறிப்பிடத்தக்கவர்கள் ந.மு.வேங்கடசாமி நாட்டார், பு.சி.புன்னைவனநாத முதலியார், வா.மகாதேவ முதலியார், அ.நடராசப் பிள்ளை ஆகியோர்.
ந.மு.வேங்கடசாமி நாட்டார் கீழ்க்கணக்கின் கார்நாற்பது (1925), களவழி நாற்பது (1924, 1935), இன்னா நாற்பது (1935), இனியவை நாற்பது (1936) என்னும் நான்கு நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். இவற்றை ‘நானாற்பது மூலமும் உரையும்| என்று ஒரே தொகுப்பாக்கி கழகம் வெளியிட்டுள்ளது. இவற்றின் முகவுரைகளில் பதினெட்டு நூல்களுள் ஒன்றாக இவர் இன்னிலையினைச் சுட்டுகின்றார். கைந்நிலையினை ஏற்கவில்லை. ஆனால் இவர் கீழ்க்கணக்கு நூல்கள் எவை என்பதைக் குறிப்பிடும் பழம்பெரும் வெண்பாவைக் காட்டி அதற்குக் கீழ் நால், ஐந்திணை, என்ற தொடரின் அடிப்படையில் எழுந்த விவாதங்களையும் சேர்த்து பதிவு செய்கின்றார்.
நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி ஆகிய நூல்களுக்குத் தி.பாலசுந்தரனார் இயற்றிய உரையோடு கழகம் வெளியிட்டுள்ளது. இதில் நான்மணிக்கடிகையின் பதிப்புரையில் கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டாவன எவை என்று கூறும்போது இவர் இன்னிலையினைச் சேர்த்து குறிப்பிட்டுள்ளார். கைந்நிலையினைக் குறிப்பிடவில்லை (தி.சு.பாலசுந்தரம்: 2007: iii). பிற நூல்களின் பதிப்புரையில் அந்நூல்கள் குறித்த செய்திகளை மட்டுமே சுட்டியிருக்கின்றார். பாலசுந்தரனார் கீழ்க்கணக்கு நூல்களுக்கு உரை எழுதிய காலத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் இன்னிலை பதிப்பு பரவலாகப் புழக்கத்தில் இருந்தது. இக்காரணத்தினால் இன்னிலையை இவர் கீழ்க்கணக்கில் ஒன்றாகக் குறித்திருக்க வேண்டும்.
திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை, ஐந்திணையைம்பது, ஐந்திணையெழுபது, திணைமாலை நூற்றைம்பது முதலிய நூல்களுக்குச் சி.புன்னைவனநாத முதலியார் இயற்றிய விருத்தியுரையோடு கழகம் வெளியிட்டுள்ளது. இப்பதிப்புகளின் முகவுரையில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எவை என்பது குறித்த தமது கருத்துகளைச் சி.புன்னைவனநாத முதலியார் முன்வைத்துள்ளார். குறிப்பாகத் திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஐந்திணையைம்பது ஆகிய நூல்களின் முகவுரைகளில் கைந்நிலையினைப் பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்னிலையினை இவர் குறிப்பிடவில்லை. பிற நூற்பதிப்புகளின் முகவுரையில் இவ்வெண்ணிக்கைப் பற்றிய கருத்து எதையும் கூறாமல் அந்நூற்களின் அமைப்பு, பாடல்களின் சிறப்பு ஆகியவற்றை மட்டுமே விளக்கிச் சென்றுள்ளார். பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எவை எவை என்பதைப் பட்டியலிட்டுக் காட்டும்போது கைந்நிலையினைக் குறிப்பிட்டாலும், கழக உரையாசிரியர்களில் மற்றவர்களுக்கு இருந்த கருத்துத் தெளிவு சி.புன்னைவனநாத முதலியாருக்கும் இல்லை. (2007: xvv). இக்கருத்தையே சிறுபஞ்சமூலத்தின் நூன்முகத்திலும் (2007:v) இவர் குறிப்பிட்டுள்ளார்.
கழகத்தார் இன்னிலை, கைந்நிலை இரு நூல்களுக்கும் சங்குப்புலவரை உரையெழுதச் சொல்லி இரு நூல்களையும் அடுத்தடுத்து வெளியிட்டுள்ளனர். அவற்றின் பதிப்புரையில் இவற்றில் எதை நீக்கி எதைக் கொள்ளுவது என்ற மயக்கம் கழகத்திற்கு ஏற்பட்டதாகச் சங்குப்புலவர் குறிப்பிடுகின்றார். ‘‘பதினேழு நூல்களைக் காண்பீர்கள்: பதினெட்டாவது நூல் இன்னது எனத் துணிவின்றிப் புலவருலகம் மயங்குகிறது. ‘நாலடி நான்மணி’ என்ற வெண்பாவின் பாடவேறுபாடு இம்மயக்கத்திற்குக் காரணமாம். இதனை இந்நூலின் முன்னுரையிற் காண்க. துணிவாக ஒன்றைத் தேர்ந்தெடுத்த பின்னர் உரையெழுதி வெளியிடக் கருதிக் காலந் தாழ்த்திருந்தும் பயனின்றாய் முடிந்தது. இன்னிலையும், கைந்நிலையும், பதினெட்டாம் நூல் எனப் புலவருலகம் எண்ண ஏட்டிலிருந்து கொண்டுவந்து காட்டிப் பதித்து வெளியிட்டனர் இருசான்றோர். எதனைக் கொள்ளுவது எதனைத் தள்ளுவது என மயங்கி நிற்கும் காலம் இது” (இன்னிலை – கைந்நிலை, பதிப்புரை, ப.3). அடுத்து ‘கைந்நிலை வரலாறு’ என்ற தலைப்பில் இ.வை.அனந்தராமையரின் கைந்நிலை பதிப்பு முயற்சிகள், கிடைக்கும் கைந்நிலை ஏட்டுச் சுவடியில் உள்ள பாடல்களின் சிதைவு நிலை, ரா.இராகவையங்காரின் ஆலோசனை மற்றும் அவரிடம் இருந்து பெற்ற கைந்நிலை ஏட்டுச் சுவடியினை ஒப்புநோக்கிப் பதிப்பித்த இ.வை.அனந்தராமையாரின் கருத்து விளக்கம் ஆகியவற்றை விரிவாக எடுத்துக்காட்டுகின்றார். மேலும் கைந்நிலையின் பாடல்கள் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், நாற்கவிராச நம்பி ஆகிய உரையாசிரியர்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளமையினை எடுத்துக்காட்டி கைந்நிலையினைப் பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்தது என்று நிறுவ முயல்கின்றார். ஆனால் இறுதியாக இன்னிலை, கைந்நிலை இரு நூல்களில் எது பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்தது என்ற தெளிவினைச் சங்குப்புலவர் கூறவில்லை. மாறாக இதைத் தமிழ்ப்புலவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டுச் செல்கின்றார்.
“இன்னிலை, கைந்நிலை என்ற இரு நூல்களிற் பதினெண்கீழ்க்கணக்கின் இறுதியாக நிற்கத்தக்க நூலைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது இனித் தமிழ் மொழிப் புலவர் கடமையாம்; இவ்விரு நூல்களுக்கும் விளக்கவுரை வரைவித்து அச்சிற்பதித்து வெளியிடுவது நம் கடமையாம் எனக் கழகத்தார் கருதினர். இவ்விரு நூல்களுக்கும் உரையெழுதும் கடமை எனக்குரிய தாயிற்று. கழகப் பணியாளர்களில் ஒருவனாதலின் மறுத்தற்கு வழியின்றி ஏற்று என் சிற்றறிவிற் கெட்டியவாறு உரை வரைந்து தந்தேன்”
(சங்குப் புலவர், 2007: 9, 10).
கழகத்தாரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இரு நூல்களுக்கும் சங்குப்புலவர் உரையெழுதியதை மேற்சுட்டிய கருத்தின் வழிப் புரிந்துகொள்ள முடிகின்றது.
மணி.திருநாவுக்கரசு முதலியார் ‘நாலடி நான்மணி’ என்று தொடக்கும் வெண்பாவில் ‘மெய்ந்நிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே’ என்ற பாடத்தைக் கொண்டு பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தொடர்பான விவாதத்தினை முன்னெடுக்கின்றார். பதினெட்டு நூல்களுள் இன்னிலையை ஒரு சாராரும், கைந்நிலையை ஒரு சாராரும், திணைமாலையை ஒரு சாராரும் உடன்படுகின்றனர் என்று குறிப்பிடுகின்றார். இவர் ஒரு சாரார் கருத்தை மட்டும்; பதிவுசெய்வது இங்குக் கவனத்திற்குரியது. “இனியொரு சாரார் மேலே சுறியவாறு ஐந்து திணை நூல்களையும் உடன்பட்டு, அதனோடு ‘இன்னிலை’, ‘கைந்நிலை’ என்னும் இரு நூல்களையும் கூட்டிக் கீழ்க்கணக்கு நூல்கள் இன்னின்னவெனக் கூறும் வெண்பாவின்கண் தொகை வரையறை காணப்படாமையின், பதினெட்டுக்குமேலும் இருபது நூல்கள் கீழ்க்கணக்கைச் சார்ந்தனவெனக் கொள்ளுதற் கண் வரக் கடவதாய இழுக்கென்னை என்பர். அது பொருந்தாமை மேலே காட்டிய பேராசிரியர் உரையான் இனிது உணரப்படும். அதனுள் அவர் பதினெண்கீழ்க்கணக்கெனத் தெளிவுறக் கூறியிருத்தல் காண்க” (மணி. திருநாவுக்கரசு முதலியார்: 2007: 5). திணைமாலை என்ற பெயரிலான நூலை ஐந்திணை நூல்களோடு சேர்த்து இவர் கணக்கிட்டு கொள்கின்றார். இன்னிலை, கைந்நிலை ஆகிய இரண்டு நூல்களையும் சேர்க்க இருபது நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கைச் சேர்ந்தது என்று கருத்து இருந்தது இதன்மூலம் புலனாகின்றது.
தொகுப்பாக
இரத்தின நாயகர் ஸன்ஸ், மர்ரே நிறுவனப் பதிப்புகளில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் எண்ணிக்கை குறித்த தெளிவாகக் கருத்துகள் இருந்ததைப் பார்க்க முடிகின்றது. திருநேல்வேலி சைவ சித்தாந்த நூற் பதிப்பு கழகப் பதிப்புகள் சைவ சமயப் பற்றினை வெளிப்படுத்தும் வகையில் உரையினை எழுதிய ந.மு.வேங்கடசாமி நாட்டார், இளவழகனார், சி.புன்னைவனநாத முதலியார், சங்குப் புலவர், மணி.திருநாவுக்கரசு முதலியார் ஆகியோர் இன்னிலையினைக் கீழ்க்கணக்கினைச் சேர்ந்த நூல் என்று அடையாளப்படுத்த முயன்றுள்ளனர். இன்னிலை ஒரு போலி நூல், கற்பித நூல் என்று தெளிவான முடிபுகள் கண்ட பிறகும் இவ்வாறு இவர்கள் செயல்பட்டது மிகுந்த ஆச்சரியத்தைத் தருகின்றது.
பதினெண்கீழ்க்கணக்கு என்ற எண்ணிக்கை வரையறையில் உள்ள குழப்பமான முடிவுகளுக்குத் தெளிவுகள் காணப்பட்ட பின்பும், மீண்டும் தெளிவைத் தேடிக் குழப்பங்கள் உருப்பெற்று வருகின்றன. இவ்வகையான குழப்பங்களுக்கு வெகுசனத் தளத்தில் பதினெண்கீழ்க்கணக்கின் பதிப்புகளைக் கொண்டு சென்ற பதிப்பு நிறுவனங்களே காரணமாக அமைகின்றன. இவை தொடக்க காலத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைத் தனித்தனியே பெரும் புலவர்களைக் கொண்டு உரையெழுதச் செய்து பதிப்பித்தன. பின்னர்ப் பொருண்மை வாரியாக இவற்றைத் தொகுத்துப் பதிப்பித்தன. அதன் பின்னர் ஒட்டுமொத்தமாக உரையோடு கூடிய பதிப்பு, மூலப் பதிப்பு எனப் பல நிலைப்பட்ட பதிப்பாக்க முயற்சியில் ஈடுபட்டன. இத்தகைய செயல்பாடுகளின் மூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை மக்களிடையே பரவலாகக் கொண்டு சேர்த்தனர். இதுபோல் கல்வி நிறுவனங்களில் பயிலும் பாடமாகக் கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல்கள் தொடக்க காலம் முதல் இடம் பெற்றிருந்தன. எளிய உரை நோக்கிய மாணவர்களின் செயல்களால் பதிப்பு நிறுவனங்கள் பலரையும் உரையெழுதச் செய்து அதை அச்சிட்டு வழங்கலாயின. இம்முயற்சிகளே பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல்கள் எவை என்பதை மறுவாசிப்பு செய்யக் காரணமாயின. இந்த வாசிப்பினால் தொடக்க காலப் பதிப்பாசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் முன்வைத்த கருத்துகளை இவர்கள் மீண்டும் புதியனவாகத் தாங்கள் முன்வைப்பதைப்போல் முன்வைத்து ஒரு மாயத் தோற்றத்தினைக் கட்டமைக்க முயன்றிருக்கின்றனர். இவ்வகையான முயற்சிகளில் கீழ்க்கணக்கைச் சார்ந்தது கைந்நிலையா? இன்னிலையா? திணைமாலையா? என்ற குழப்பம் மீண்டும் தலைத்தூக்கியது.
சான்றாதார நூல்கள்
1925 ந.மு.வேங்கடசாமி நாட்டார், நானாற்பது மூலமும் உரையும் (கார்நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது) திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம், சென்னை.
1934 சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் மூலமும் வேதகிரி முதலியார் இயற்றிய உரையும், பி.இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை.
1956 பதினெண்கீழ்க்கணக்கு – காஞ்ச யேலாதி கோவை பதவுரை விளக்கங்களுடன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்தாந்த நூற் பதிப்புக் கழகம், சென்னை
1981 பதினெண்கீழ்க்கணக்கு, பதிப்பு – ஆசிரியக் குழுவினரால் பல பிரதிகளை ஒப்புநோக்கி வெளியிடப்பட்டது, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, இரண்டாம் பதிப்பு.
1982 வேம்பத்தூர் முத்துவேங்கடசுப்ப பாரதியார், பிரபந்த தீபிகை, பதிப்பாசிரியர்கள்: ச.வே.சுப்பிரமணியன், அன்னிதாமசு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
2007 பதினெண்கீழ்க்கணக்கு மூலமும் உரையும் (திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம்), திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்தாந்த நூற் பதிப்புக்கழகம், சென்னை.
2007 பதினெண்கீழ்க்கணக்கு மூலமும் உரையும் (இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார்நாற்பது, களவழி நாற்பது), கழக வெளியீடு, சென்னை.
2007 பதினெண்கீழ்க்கணக்கு (ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, இன்னிலை – கைந்நிலை), கழக வெளியீடு, சென்னை.a
-
தொல்தமிழரின் சகுன நம்பிக்கைச் சுவடுகள்
முனைவர் ம. தமிழ்வாணன்
முதுநிலை ஆய்வு வல்லுநர்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
தரமணி, சென்னை – 113
பொதுவாகச் சகுனம் அல்லது நிமித்தம் என்பது மக்களின் வாழ்வியல் மரபுகளில் ஒன்றாக விளங்குகிறது. பண்டைத் தமிழக மக்களிடையே மரபாகச் சில நம்பிக்கைகள் நிலவி வந்திருக்கின்றன. நம்பிக்கை என்பது நம் நாட்டில் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு நாட்டிலும் பன்னெடுங்காலமாக வேரூன்றிக் கிடக்கின்றது. அவ்வகையில், தமிழர்களின் பண்பாடு சார்ந்த நம்பிக்கைகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன. உலகில் வாழும் எல்லா இன மக்களுக்கும் அவர்கள் சமயம் சார்ந்த நம்பிக்கைகள் இருப்பது இயல்பு. பழந்தமிழர்கள் தங்கள் வாழ்வில் பின்பற்றிய நம்பிக்கைகள் பலவிதமானவையாகும். அவற்றில் சிலவற்றை இன்றும் வழக்கொழியாமல் பாதுகாத்து பின்பற்றி வருகின்றனர். தங்களது எண்ணத்திற்குத் தக்கபடி ஏற்படுகின்ற குறிப்பிற்குத் தக்கவாறு நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். அக்குறிப்புகள் நன்மை சார்ந்ததாகவோ அல்லது தீமை சார்ந்ததாகவோ இருப்பதாகப் பழந்தமிழர்கள் கருதியும் வந்துள்ளனர். தமிழர்களது இலக்கியங்களான செவ்விலக்கியத்தில் காணக்கிடைக்கின்றன. இவை பற்றிச் சுருக்கமாக ஆராய்வோம்.
சகுனம்(நிமித்தம்)
சகுனம் அல்லது நிமித்தம் என்ற சொல்லுக்குக் காரணம், சகுனம், அடையாளம், பொருட்டு ஆகிய பொருள்கள் உள்ளன. சகுனம் என்பது இயற்கையின் மொழி! ஒரு வழிகாட்டலாக இயற்கை எவ்வாறு பேசுகிறது, தாவரங்கள், விலங்குகள் எவ்வாறு பேசுகின்றன என்பதைக் கொண்டு எதிர்வரும் பலன் அறிவதாகும். மனிதன் எவ்வளவோ நவீன வாழ்க்கை முறைகளுக்கு போயிருந்தாலும் தவிர்க்க முடியாதவைகளாக சில விடயங்கள் இருக்கவே செய்கின்றன. அவற்றில் சகுனங்கள் மற்றும் நிமித்தங்களுக்கு நிச்சயம் இடம் உண்டு. மூட நம்பிக்கை என்று பலவற்றையும் ஒதுக்குபவர்கள் கூடச் சகுனங்கள், நிமித்தங்கள் ஆகியவற்றில் தங்களை அறியாமலே நம்பிக்கை வைத்திருப்பார்கள். நிமித்தங்கள் என்பவை நாம் எதிர்பாராமல் சுற்றுப்புறத்தில் நடப்பவை, நம்மை எதிர் நோக்கி இருப்பவை, கேட்கக்கூடிய சப்தங்கள் ஆகியவையாகும். இவற்றை இரண்டாகப் பகுப்பர் அவை, 1. சுபசகுனங்கள் 2. அசுப சகுனங்கள் ஆகும்.
சுபசகுனங்கள்
மக்களால் சுபசகுனமாகக் கருதப்படுவது வீணை, புல்லாங்குழல், மேளம், சங்கு, இவைகளைப் பார்ப்பதும், இவைகளின் ஒலிகளைக்கேட்பதும் ஆகும். அழகிய பெண்கள், நாட்டியப் பெண்கள், தயிர், மஞ்சள் கலந்த அரிசி(அட்சதை) கரும்பு, அருகம்புல், நீர் நிரம்பிய குடம், பூக்கள், மாலைகள், கன்னிப் பெண்கள், கருடன், ஆலயமணி ஓசை, விளக்கு, தாமரைப்பூ, நாய் தன் உடலைச் சிலிர்ப்பது, பிணம் எதிரே வருவது, பசு மாடுகள் போன்றவைகளாகும்.
அசுப சகுனங்கள்
மக்களால் அசுபசகுனமாகக் கருதப்படுவது அணையும் விளக்கு, தண்ணீர் பாத்திரம் சாய்ந்து நீர் வெளியேறுவது, உடுத்திய ஆடை கிழிவது, செருப்பு அறுந்து போதல், அமங்கல வார்த்தை, ஒற்றைத் தும்மல், சத்தமான வார்த்தைகள், வீட்டில் மரம் முறிதல், பல்லி இடப்புறம் கத்துவது, பன்றி, பாம்பு, குதிரையைக் காண்பது, சத்தமிடல், எண்ணெய்க் குடம், விளக்குமாற்றை கையில் வைத்திருப்பது, தன் நட்சத்திரத்துக்கு உரிய பட்சி இடமிருந்து வலமாகச் செல்வது, விருட்சம் சாய்வது, மிருகம் இறந்து விட்டதாகக் கேட்பது, எருமை மாடு ஆகியவையாகும்.
சகுனங்களாகக் கருதப்படுபவை எப்படிப்பட்டதாக இருந்தாலும், சென்ற காரியத்தில் வெற்றி கிடைத்தால், அதை நாம் நினைப்பதில்லை. தோல்வியில் முடியும்போதுதான் இந்த ஆராய்ச்சியில் இறங்குகிறோம். சகுனங்களால் எந்தச் செயலும் கெடுவதில்லை. வெற்றியோ தோல்வியோ அவற்றின் அறிகுறிதான் சகுனம் என்கிறார்கள். நிமித்தம் என்ற சொல்லானது தொல்காப்பியத்தில் காரணம், நிமித்தம், கூட்டம் ஆகிய பொருட்களில் பயின்று வந்துள்ளது. சங்க இலக்கியத்தில் இச்சொல்லாட்சி வழங்கப்படவில்லை. ஆனால் புள்(பறவை) என்ற சொல் நிமித்தம் என்ற பொருளில் பலவிடங்களில் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. அக்காலத்தில் புள் பெரும்பான்மையும் நிமித்தத்திற்கு உரிய பொருளாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். இதற்கேற்பவே பறவை புள் நிமித்தமாக தொல்காப்பியத்தில் சுட்டப்பட்டுள்ளது. [தொல்காப்பியம் பொருளதிகாரம் 88:16-17] சிலப்பதிகாரத்தில் நிமித்தம் என்ற தற்காலப் பொருளில் இச்சொல் பயின்று வந்துள்ளது.[ சிலப்பதிகாரம் 16-165-169]
செவ்விலக்கியத்தில் சகுனச் செய்திகள்
அங்கத்துடிப்புகள்
தமிழிலக்கண நூலான தொல்காப்பியத்தில்,
“ஆவொடுபட்ட நிமித்தம் கூறலும்.
செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும்” (தொல்.கற்பு.36:3-4)
என்று தொல்காப்பியர் பதிவிட்டுள்ளார். தலைவன் வெளியூருக்குப் போக இருக்கிறான். அந்தச் செய்தி கிடைக்கும் நேரம் பசு ஒன்று பால் நிறைய(மிகுதியாக) கறந்திருக்கிறது என்ற செய்தியும் கிடைக்கிறது. அதனால் தலைவனுக்கு நல்லது நடக்கும் என்று கருதி மகிழ்வுடன் விடை கொடுத்து தலைவி அனுப்பி வைத்தாள் என்பதை அடிகள் சுட்டக்காணலாம்.
இரவு நேரங்களில் நிமித்தங்கள் (சகுனங்கள்) வெளிப்படத் தெரியாது. அதனால் பிறர் பேசும் வார்த்தைகள், பறவைகளின் ஒலி போன்றவற்றைக் கேட்டு சுபமா? அசுபமா? என அறிந்து பலனைக் கண்டறிந்துள்ளனர். இதனை,
“படை இயங்கு அரவம் பாக்கத்து விரிச்சி” (தொல்.புறத்.3:1)
என்னும் தொல்காப்பிய அடி வெளிப்படுத்துகின்றன. ஆண்களுக்கு வலதுபுறமும் பெண்களுக்கு இடது புறமும் கண், புருவம், தோள் முதலியன துடித்தல் நல்ல சகுனமாகும்.
“பொலந் துடிக்கு அமை மருங்குல்போல், கண்களும், புருவமும், பொன்-தோளும்,
வலம் துடித்தன; மாதிரம் துடித்தன; தடித்து இன்றி, நெடு வானம்
கலந்து இடித்தன; வெடித்தன, பூரண மங்கல கலசங்கள்.” (கம்ப,சுந்தரகாண்டம்.202:2-4)
மற்றொரு பாட்டில் பெண்களுக்கு இடக்கண்ணும் ஆண்களுக்கு வலக்கண்ணும் துடித்தால் நன்மை என இன்றும் நம் தமிழர்களின் வழக்குகளில் இருப்பதைக் காண்கிறோம். சிலப்பதிகாரம் இதற்குச் சான்று தருகின்றது.
“கள்ளுக நடுங்குங் கழுநீர் போலக்
கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
உண்ணிறை கரந்தகத் தொளித்துநீர் உகுத்தன
எண்ணுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன
விண்ணவர் கோமான் விழவுநா ளதன்” (சிலம்பு. இந்திரவிழா ஊரெடுத்த காதை 236-240)
இதில், கண்ணகி கோவலனைப் பிரிந்து வருத்தமுற்றிருந்தபோது, இந்திர விழாவில் கோவலனும் மாதவியும் கலந்து இன்புற்றிருக்கின்ற அவ்வேளையில், கண்ணகிக்கு வலக்கண்ணும் அதே நேரத்தில் மாதவிக்கு இடக்கண்ணும் துடித்தன என இளங்காவடிகள் கூற்றின் மூலம் பழந்தமிழர் வாழ்வில் நீண்ட பழக்கத்தில் இருந்திருத்தல் வேண்டும். எனினும் ஏனைய செவ்வியல் நூல்களில் இதனைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கச் செய்தியாகும்.
கனவும் விளைவும்
பொதுவாகக் கனவு என்பது குறிப்பிட்ட ஒரு நிகழ்வினை உணர்த்துவதாக இருக்கின்றன என இலக்கியங்களின் வாயிலாக நாம் பல்வேறு இடங்களில் காணலாம். புறநானூற்றிலும் கனவினால் ஏற்பட்ட ஓர் அச்சத்தைப் பற்றிப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“எயிறுநிலத்து வீழவும் எண்ணெய் ஆடவும்
களிறுமேல் கொள்ளவும் காழகம் நீப்பவும்
வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்
கனவின் அரியன காணா நனவின்” (புறம்.41:8-11)
இப்பாடலால் சோழன் கிள்ளிவளவனின் பகைவர்களுக்கு வற்றிய மரம் தீப்பிடித்து எரிவது போலவும் எரிகொல்லி விழுவது போலவும் யாரோ ஒருவர் தன் தலையில் எண்ணெய் வார்ப்பது போலவும் தன் படையானது முழுமையாக வீழ்ந்தன போலவும் கனவு கண்டதாக புலவர் கோவூர் கிழார் பதிவு செய்திருத்தலின் மூலம் கனவில் நிகழ்ந்த நிகழ்வு அவர்களது எதிர்கால வினைகளுக்குக் குறிப்புணர்வாக அமைந்திருப்பதனை இங்கே காணமுடிகிறது. மேலும் கனவு நிகழ்வின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பது விளக்கப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரத்தில் கோவலனின் கனவில் கட்டிய ஆடையை பறிக்கொடுத்தல் மற்றும் கோட்டுமா உண்தல் ஆகிய நிகழ்வல்லாத செயல்களும் (சிலம்பு.15:97-98) கோப்பெருந்தேவியின் கனவில் இயற்கைக்கு ஒவ்வாத செயல் நிகழ்வுகளும் (சிலம்பு.20:1-7) தீய நிமித்த குறிகளாக காட்டப்பட்டுள்ளன. இராமாயணத்தில் சீதைக்கு இடம் துடித்ததினால் ஏற்படப்போகும் நன்மையை திரிசடை வாயிலாகக் கூறும் பாடல்வரிகள் கொண்டும் அறியலாம். பொன்வண்டு ஒன்று செவியினிடத்தில் இன்னிசையைப் பாடிச் சென்றதன் வாயிலாகவும் சிங்கம் கூட்டத்தோடு வந்து சீதையை அழைத்துச் செல்வது போல் கண்ட கனவின் வாயிலாகவும் சீதைக்கு நன்மை ஏற்படப்போகிறது என்பதனைத் திரிசடை உணர்த்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. திரிசடையின் கனவில் தனது பத்துத்தலைகளிலும் இராவணன் எண்ணெய்த்தேய்த்துக் கொண்டு கழுதையும் பேயும் பூட்டியத் தேரின் மீதேறி இரத்த ஆடையுடன் தென் திசை நோக்கி செல்வது போல் கண்ட நிகழ்ச்சிகள் தீ நிமித்தக்குறியாக சொல்லப்பட்டுள்ளது.
கணியரும் கணித்தலும்
தொல்தமிழ் மக்கள் நாள், கிழமைப் பார்த்து தங்களது செயலினைத் தொடங்கியுள்ளனர். செவ்வியல் நூலில் போர் தொடங்குவதற்குமுன் நல்ல நாள் பார்த்தனர் என்றும் அதற்கென அரண்மனை கணியர் என அழைக்கப்படும் கணியர் நாளைக் கணித்துக் கூறினர் என்றும் புறநானூற்றுப் பாடல் சொல்கின்றது.
புலவர்களும் மன்னர்களைப் பாடிப் பரிசில் பெறவேண்டி, நாளையும் கோளையும் பார்த்துச் சென்றனர் என புறநானூறு மூலம் நாம் அறியலாம்.
“நாளன்று போடிப், புள்ளிடைத் தட்பப்
பதனன்று புக்குத், திறனன்று மொழியினும்,” (புறம்.124:1-2)
இதற்கு தொல்காப்பிய நூலிலும் சான்று உள்ளது. “குடையும் வாளும் நாள்கோள்”(தொல்.பொருள்.புறத்.11:1) என கூறுவதன் மூலம், போர் தொடுத்து செல்ல வேண்டிய திசையை நோக்கி, நல்ல நாளில் தன் வலிமையான வாளினை வலம் வரச் செய்தனர் என்றும் அறிந்து கொள்ள முடிகிறது. நல்ல வேளையை முழுத்தும் என அழைத்தனர். அதுவே தற்போது சுபமுகூர்த்தம் என அழைக்கப்படுவதைக் காணலாம்.
குடைநாட் கோள்
மறவர் எல்லாரும் நற்சகுனம் பார்த்துப் போர்க்கெனப் புறப்படுதல் என்பது இயலாதது. ஆதலின், குடை, வாள், முரசு ஆகியவற்றை நல்ல நாளில் நல்ல முழுத்தத்தில் புறவீடு செய்வதென்ற வழக்கம் வந்தது. அவ்வழக்கம் பற்றிக் குடையைப் புறவீடு செய்த இந்நிகழ்வு குடைநாட் கோள் என்பதாயிற்று.
“சென்று அடையார் மதில் கருதிக்
கொற்ற வேந்தன் குடைநாள் கொண்டன்று.” (புற.வெண்பா.6:96)
(அடையார் = பகைவர்)
வாள்நாட் கோள்
முன்பு கூறியது போலவே நல்ல நாளில் நல்ல முழுத்தத்தில் வாளினைப் புறவீடு செய்தலின் வாள்நாட் கோள் எனப் பெற்றது.
“கலந்துஅடையார் மதில்கருதி
வலம்தருவாள் நாட்கொண்டன்று” (புற.வெண்பா.6:97)
(வலம் = வெற்றி)
தொல்தமிழர்கள் தங்கள் இல்லத்தில் நடைபெறும் திருமணங்களைத் திங்களும் உரோகினியும் கூடிய நாளில் நடத்தி வைத்துள்ளனர்.
“கனையிருள் அகன்ற கவின்பெறு காலை
கோல்களால் நீங்கிய கொடு வெண்டிங்கள்
கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென” (அகம்.86:5-7)
நல்லாவூர் கிழார் பாடிய இவ்வடிகளில் “வெண்டிங்கள் (திங்கள்) மற்றும் கேடில் விழுப்புகழ் (உரோகினி) நாடலை” என்னும் சொற்கள் உணர்த்தும் பொருளின் வழி அறிந்து கொள்ளலாம். மற்றொரு அகப்பாடலிலும் விற்றூற்று மூதெயினனார் பதிவு செய்துள்ளமை சுட்டத்தக்கது.
“இருவிசும்பு விளங்கத் திங்கள்
சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்
கடிநகர் புனைந்து கடவுட் பேணி
படுமண முழவோடு பரூஉப்பணை இமிழ” (அகம்.136:4-7)
மக்கள் திங்களும் உரோகினியும் கூடிய நாளை குற்றமற்ற நன்னாள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தனர் என்றும் அத்தகைய நாளிலேயே பெரும்பாலான திருமணங்கள் நடைபெற்றன என்பதைத் தெளிவுபடுத்துகிறது. (திங்கள் சகடம் மண்டிய துகள் தீர் – திங்களை உரோகினி கூடிய நன்னாள்).
வெள்ளியும் பிறவும்
தூமகேது (கரந்துறை கோள் எனவும் கூறுவர்) என்னும் கோளின் தோற்றம் உலகிற்கு பெருந்தீங்கு என்பர். மைம்மீன் ஆனது சனிக்கோளைக் குறிப்பதாகும். புறநானூற்றில் பாரி மன்னனின் பண்புகளைப் பாடுகின்றபோது, ‘சனிமீன் புகையினும்’ – எல்லா திசையிலும் புகை தோன்றி, வெள்ளி தெற்கே நோக்கி ஓடினால் உன் நாட்டில் மழை தவறாது பொழியும் என்று புலவர் கபிலர் போற்றிக் கூறியுள்ளதன் மூலம் இத்தகைய நம்பிக்கை இருந்துள்ளது என அறிவிக்கின்றன.
“மைம்மீன் புகையினும் தூமந் தோன்றினும்
தென்திசை மறுங்கின் வெள்ளி ஓடினும்” (புறம்.117:1-2)
செவ்விலக்கியத்தில் ஒன்றான முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்திலும் இளங்கோவடிகள் மேற்கூறிய கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
“கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்” (சிலம்பு.நாடுகாண்.102-103)
இதனால் இந்நம்பிக்கையானது வாழ்வியலில் தொடர்ந்து வந்துள்ளதை அறிய முடிகிறது.
புள்ளின ஒலிகள்
ஓர் தனிமனிதப் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் காலப்போக்கில் மாற்றம் பெறலாம். ஆனால் ஒரு சமுதாயத்தின் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் என்றும் மாற்றம் பெறாது. நற்றிணை முல்லைத்திணைப் பாடலொன்றில் பறவை நிமித்தத்தைக் கூறும் தலைவன் நம் வருகையைக் காக்கை முதலிய புள்ளினங்கள் அவருக்கு அறிவுறுத்தினவோ என்று கூறுவதாக அமைந்துள்ளது.
“தோள்வழி யாப்ப ஈண்டுநம் வரவினைப்
புள்அறி வுறீஇயின கொல்லோ” (நற்.161:8-9)
அக்காலத்தில் தன்னுடைய இல்லத்தருகிலே காகம் கரைந்தால் விருந்தினர் வருவர் என்ற நம்பிக்கை இருந்தது இதனைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாட்டில் காணலாம். இன்றும் கிராமப்புறங்களில் அந்த நம்பிக்கை நீங்கா இடம்பெற்று விளங்குவதைக் காணமுடியும்.
“பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.” (குறுந்.210:5-6)
தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் விரைவில் வந்து சேருவான் என முன்னமையே தெரிவிக்கும் செயலாகக் குயில் கூவுதல் பார்க்கப்படுகிறது. இதில் குயில் கூவுதல் நல்ல சகுனமாகக் கருதப்படுகிறது. இதனை நற்றிணைப் பாடலில் காப்பியஞ்சேந்தனார் குறிப்பிடுகிறார்.
“மனைமா நொச்சி மீமிசை மாச்சினை
வினைமான் இருங்குயில்; பயிற்றலும் பயிற்றும்” (நற்.246:3-4)
வீரர்கள் போருக்குச் செல்லும்போது சில பறவைகளின் ஒலியைக் கேட்டும் சகுனம் பார்த்தார்கள். அவை வீரர்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளன. இதனைக் கபிலர் பாட்டிலும் கழைதின் யானையார் பாட்டிலும் காணலாம்.
“புள்ளிடைத் தட்ப” (புறம்.124:1)
“புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை” (புறம்.204:10)
பதிற்றுப்பத்து பாடல் கரிக்குருவியின் ஒலி அழிவுக்கு அறிகுறியாகக் கருதப்பட்டதைக் காட்டுகின்றது. ஆந்தையின் அலறலை தீய சகுனம் என நம்பினர்.
“கருங்கண் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க
நேய்த்தோர் தூஉயநிறை மகிழ் இரும்பலி
எறும்பும் மூலசா இறும்பூது மரபின்
கருங்கண் காக்கையொடு பருந்து இருந்துஆர
ஓடாப் புட்கை ஒண்பொறிக் கழல்கால்” (பதிற்.30:36-40)
முரசுக் கடவுளுக்கு பலிகொடுத்து அவற்றை காக்கையும் பருந்தும் உண்டால் பெரும் வெற்றி கிட்டும் எனவும், மேலும் பேய் பற்றிய நம்பிக்கையைக் கொண்டிருந்தனர் எனவும் “கருங்கண் பேய் மகள் கைபுடைய” எனும் வரியின் மூலம் நாம் அறியலாம்.
குறிகூறும் கட்டுவிச்சி
கட்டுவிச்சியிடம் குறி கேட்கும் வழக்கம் தொல்தமிழ் மக்களிடம் இருந்து இன்று வரை வழக்கில் இருக்கின்றது. குறி சொல்கின்றவர்கள் தெய்வத்தின் உதவியினால் உண்மையை அறிந்து உரைக்கின்றனர் என நம்பினார்கள். குறி சொல்லும்போது குலதெய்வத்தை வழிபட்டுக் சொல்கின்ற முறை இருந்திருக்கிறது. குறுந்தொகைப் பாட்டில் குறி சொல்கின்ற பெண்டிரைக் கட்டுவிச்சி என்று அழைத்தமையை ஒளவையார் விளக்குகிறார்.
“அகவன் மகளே! அகவன் மகளே!
மனக் கோப்பு அன்ன நல்நெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே” (குறுந்.23:1-3)
இப்பாட்டில் தெய்வத்தை அழைத்துப் பாடுகின்ற கட்டுவிச்சி என்ற கருத்து அழகாகச் சுட்டப்பட்டுள்ளது.
பல்லியின் ஒலிபலன்
பல்லி எழுப்பும் ஒலியை நற்சகுனமாகக் கருதுவது வழக்கமான ஒன்றாகவே கருதப்படுகிறது. செவிலக்கியத்தில் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவி தலைவன் வரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து நல்ல பலனை எதிர்நோக்கும்போது பல்லியும் ஓசை எழுப்பி அதற்கு இணக்கமான நல்ல நிமித்தத்தை அறிவித்ததாம்.
“முன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல்
வருவம் என்னும் பருவரல் தீரப்
படும்கொல் வாழி நெடுஞ்சுவர்ப் பல்லி” (நற்.169:1-3)
பன்றியும் பல்லி சகுனம் பார்த்துத் தனக்கு இடையூறு நேரும் என்று குகையில் பதுங்குவதை அகநானூற்றில் 9, 88, 151, 289, 351 ஆகிய பாடல்களும் நற்றிணையில் 98ஆம் பாடலும் 169, 246 ஆகிய பாடல்களும் சகுனத்தை உணர்த்தி நிற்கின்றன. ஆண் பல்லி ஒன்று தன் துணையை அழைக்க ஒலி எழுப்பிய செய்தியையும் குறிப்பிடப்படுகின்றது. இதனை,
“உகிர்நுதி புரட்டும் ஓசை போல
செங்காற் பல்லி தன்துணை பயிரும்
அம்காற் கள்ளி அம்காடு இறந்தோரே” (குறுந்.16:3-5)
என்று புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ பாடியுள்ளார். பல்லியின் ஒலியைக் கேட்டு சகுனம் பார்த்தல், இன்றும் நம்மிடையே தொடர்ந்து வருகிறது. தற்காலத்தில் அதற்கென பஞ்சாங்க நூல்கள் கூட விற்கப்படுகின்றன. அவற்றில் மேனியில் பல்லி விழுகின்ற இடத்தினைப் பொறுத்து பஞ்சாங்கத்தில் அதன் பலன்கள் விளக்கப்பட்டுள்ளன. அகநானூற்றின் 389ஆம் பாடல் பல்லியின் சொல் கேட்டு தன் பயணத்தைச் சிறிது நிறுத்தி பின்னர் பயணத்தைத் தொடர்ந்தனர் எனவும் தெரியவருகின்றது.
விரிச்சியும் உன்னமும்
ஒரு குறிக்கோளை அடையும் பொருட்டு ஒரு செயலை தொடங்குகின்ற பொழுது பிறர் கூறும் சொற்களையே சகுனமாகக் கொள்வதாகும். இவ்வழக்கம் தொல்தமிழரின் வாழ்வியலில் இருந்துள்ளமையை அறிந்துகொள்ள முடிகிறது. விரிச்சி என்பதன் பொருள் நற்சொல் கூறுதல் என்பதே ஆகும்.
“நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்
செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா” (புறம்.280:6-7)
மற்றொரு செவ்வியல் நூலான முல்லைப்பாட்டிலும் இதற்கான சான்று காணப்படுகின்றன.
“நாழி கொண்ட நறுவீ முல்லை
அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப” (முல்.9-11)
தற்காலத்திலும் தமிழர் இல்ல நிகழ்ச்சிகளில் முதலில் வாழ்த்துபவர்களாக முதுமை, வயதான பெண்களே ஆவர். ஒரு செயலைத் தொடங்கும் முன் பெரியோர்களிடம் ஆசிபெறுதல் இதனுடன் தொடர்புடையதாகும். இம்முறை இன்றும் வழக்கத்தில் இருந்துவருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
உன்னம் என்பது ஒருவகை மரம் ஆகும். இம்மரம் தழைத்து வளர்ந்திருக்குமாயின் தாங்கள் தொடங்க இருக்கின்ற செயல் வெற்றி பெறும் எனவும் வாடி இருக்குமாயின் தீய செயலில் முடியக்கூடும் எனவும் குறிப்பு உணர்த்துவதாக நம்பப்பட்டது.
“பொன்னி னன்ன பூவிற் சிறியிலைப்
புன்கால் உன்னத்துப் பகைவன் எம்கோ” (பதிற்.61:5-6)
மேற்குறிப்பிட்ட செய்திகளின் வாயிலாகத் தொல்தமிழ் மக்களிடத்தே சகுனம் பார்க்கும் வழக்கம் வாழ்வியலோடு இணைந்து பிரிக்க முடியாத அங்கமாக இருந்ததை நன்கு தெளிவுபடுத்துகிறது. மேலும் தொல்தமிழர்களின் நம்பிக்கைகளிலிருந்து அவர்கள் வானியல் சார்ந்த அறிவியலிலும் சிறந்து விளங்கியிருந்தனர் என்பதற்குக் கோள்களைக் கொண்டு ஆராய்ந்தறியும் திறனையும் பெற்றிருந்தனர் என்பதையும் நம்மால் மறுத்துவிடமுடியாது. எனவே தொல்தமிழரின் நம்பிக்கைகள் பல நம்மையும் அறியாமலேயே நம்முடன் தற்போதும் தொடர்ந்து வருகின்றன. அவற்றிற்குச் சான்றாகச் செவ்வியல் நூல்களின் வாயிலாக நம்பத்தகுந்த சான்றுகளின் மூலம் நாம் அறிந்தும் அவற்றினை அனுபவ ரீதியிலும் காண்கிறோம். இப்பழக்கங்கள் பன்னெடுங்காலமாக தமிழர்களின் வாழ்விலும் தொடர்ந்து வருபவை என இங்கே அறியவும் முடிகிறது. எனினும் எதற்கெடுத்தாலும் சகுனம் பார்த்து நேரத்தைக் கழிப்பதை விட தான் மேற்கொள்ளும் செயலில் ஈடுபாடும் ஆர்வமும் இருந்தால் மட்டுமே வெற்றிக்கனி கிட்டும். நல்ல குணத்துக்கு சகுனம் ஒரு பொருட்டல்ல. “தீதும் நன்றும் பிறர்தர வாரா”(புறம்.192:2), “இடரிலும் தளரினும்” (தேவாரம்.ஆவடுதுறைப் பதிகம்.10) சகுனமானது அதை நம்பக் கூடியவனையும் அதற்குப் பயப்படக் கூடியவனையும் தான் பாதிக்கும். ஆனால் யார் அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லையோ அவனை ஒரு பொழுதும் பாதிக்காது.
துணைநூற்கள்
- வையாபுரிப்பிள்ளை, ச., சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), பாரி நிலையம், சென்னை வெளியீடு, முதற் பதிப்பு 1940
- இராமநாதன், லெ.ப.கரு, சங்ககாலத் தமிழர் வாழ்வு,. வெள்ளையன் பதிப்புக் கழகம்,. இராமநாதபுரம்,. 2ஆம் பதிப்பு,. 1958
- சுப்பிரமணியன்.ச.வே.(ப.ஆ.), தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மூலம் முழுவதும், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை சென்னை. 2008
- தட்சிணாமூர்த்தி, அ., தமிழர் நாகரிகமும் பண்பாடும். ஐந்திணைப் பதிப்பகம், சென்னை
-
சமூக மேம்பாட்டுச் சிந்தனைகளை எடுத்துரைக்கும் கு.நா. கவின் முருகுவின் சுவரெழுத்து
முனைவர். சு. செல்வகுமாரன்
தமிழ் உதவிப் பேராசிாியர்,
அரசு கலைக்கல்லுாாி ,
பரமக்குடி – 623701
யாப்பின் “பா” வகைகளை அடியொற்றி எழுதப்பட்டு வந்த தமிழ்க்கவிதை பாரதிக்குப்பின் வசனக்கவிதை என்றும், புதுக்கவிதை என்றும் ஒருவித உரைநடைச் சாயலில் வெளிவரத் துவங்கின. இக்கவிதைகள் புதிய பாடு பொருட்களில் சமூக அவலங்களை எடுத்துரைப்பினும் தனது கவிதைத் தன்மையினை இழந்து விட்டன என்றே சொல்ல வேண்டும். “தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் என்பது போல” எனும் பழமொழிக்கிணங்க இன்று நாம் எல்லோரும் கவிஞர்களாகி விட்டோம். ஆம் கவிதைக்கான அழகியலற்ற உரைநடைக் கவிதையின் கவிஞர்களாகி விட்டோம். காலம் மரபுக் கவிதைகள் /கவிதையினை மறுத்து இன்னொரு தளத்தில் வேகமாக ஓடத் தொடங்கியிருக்கிறது. ஆனால் கவிஞர் கு.நா. கவின் முருகு இன்றும் மாறவில்லை. தமிழ்க் கவிதையின் தடம் மாறாமல் நின்று தமது கவிதைகளை பெரிதும் ஆசிரிய விருத்தப்பாவினால் யாத்து தந்துள்ளார். இயல்பாகவே மிக எளிய இசை வடிவத்தோடு எளிய மக்களையும் கவிதையை வாசிக்கத்தூண்டும் ஒரு வடிவமாகும் இது. இன்னும் சொல்லப் போனால் மொழியின் அழகியல் தன்மையினையும் இவரது கவிதைகள் நிரம்பக் கொண்டுள்ளன.
“சொற்களிலும் சொற்றொடர்களிலும் மேலும் சற்று விரிவான பகர்வுகளிலும் செய்யப்படுகின்ற அல்லது நிகழ்கின்ற வித்தியாசப் படுத்தல்கள் மொழியை அழகுறுத்திக் கலையாக ஆக்கி விடுகின்றன. உவமம், உருவகம், எச்சம், குறிப்பு, உள்ளுறை, இறைச்சி முதலியவை மொழியின் இயல்பு வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவை. இலக்கியம் என்ற மொழிசார் கலை, மொழியின் பிரத்தியேகப் பண்புகளை இயன்ற மட்டும் தனக்குரியதாக்கிக் கொள்கின்றது. இலக்கியத்திற்கு இது ஒரு விசேடத் தன்மையைத் தந்து விடுகிறது. இத்தகைய தன்மைதான் கவிதைத்தனம் அல்லது இலக்கியத் தனம் (Poeticalness / Literariness) என்று பேசப்படுகிறது. இதனால் மொழி சார்ந்த பொருள், மொழி சார்ந்த கலையாகி விடுகின்றது” (தமிழ் அழகியல், பக் – 25,26)
என்று தி.சு. நடராசன் சொல்வது போல ஒரு குறிப்பிட்ட நிலையில் கவின்முருகுவின் கவிதைகள் அழகியல்நிரம்பிய கவிதையாக மாற்றம் பெறுகின்றது. எல்லா படைப்புகளும் அழகியல்ரீதியில் முழுமை பெறுவதில்லை என்பதும் இங்கு கவனத்திற்குரியது. தனது முதல் கவிதையிலேயே அம்மா, அப்பா, ஆசானை எப்படி மறப்பேன் என கேள்வி எழுப்பும் கவின்முருகு அவர்களை மறக்கப்படக் கூடியவர்கள் அல்ல என்பதை சுட்டுவதோடு, அவர் மறக்கவில்லை என்பதும் நாமும் இவர்களை மறக்கக் கூடாது என்ற அறிவுறுத்தலையும் தருகின்றன. ஆக கவிதை முழுமையும் கலைத்துவத்தை அழகியலை மீறி சீர்கெட்டு போகும் இன்றைய சமூகத் தேவையைப் பூர்த்தி செய்யும் அரிய கருத்துக்களின் பெட்டகமாக விளங்குகின்றன.
‘தந்தை சொல்லை மந்திரமாய் கொள்வேன் யானே’ என்று தந்தைக்கு கட்டுப்படும் மகனின் கூற்றாகவும், ‘அழுக்காடை நானுடுத்த மனந்தாளாதாள்’ என்னும் அம்மாவின் பாசத்தை யதார்த்தப்படுத்தும் ஒரு பிள்ளையின் குரலாகவும்,
“பொல்லாங்கும் அழுக்காறும் இல்லாக் கல்வி
பூத்திடவெ கற்பிக்கும் ஆசான்…” (சுவரெழுத்து, ப – 21)
என்பதோடு
“வல்லமையை நாட்டிடவே எழுதும் பாட்டில்
வந்தமர்ந்து சொல்தருவார் புனைய நற்பா” (சுவரெழுத்து, ப – 21)
என ஆசானின், ஆசிரியரின் பெருமையை ஆற்றலை எடுத்துரைக்கும் நல் மாணவனின் சொல்லாகவும் விளங்குகிறது சுவரெழுத்து. மேலும் அழியாத, அழியக் கூடாத கல்வெட்டெழுத்தாகவும், மக்கள் மனதில் பதிய வேண்டிய சுவரில் சித்திரப்படுத்தப்பட்ட விளம்பர எழுத்தாகவும் சுவரெழுத்து விளங்குகின்றது என்றால் மிகையல்ல.
நூலில் தமிழ் வணக்கம் துவங்கி தமிழுக்கென்றே சில கவிதைகளை படைத்தளித்துள்ளார். இவை கவிஞரின் தமிழ்ப்பற்றை, தமிழ் ஈடுபாட்டை வெளிக்காட்டி நிற்கின்றன. மட்டுமல்லாது இறைத்துதியாய் சிவத்துதியை அமைத்திருப்பதும் அவர்தம் இறை நம்பிக்கையை அடையாளப்படுத்தும் இடமாய் அமைகின்றது. “தனித்தமிழ் வாழ்க” எனும் கவிதை தனித்தமிழின் தேவையை, தாய் மொழியின் முக்கியத்துவத்தை புலப்படுத்தும் முதன்மையான கவிதையாக உள்ளது.
“தனித்தமிழின் ஆட்சியிங்கு வேண்டும், எல்லாம்
தமிழென்ப தாகிடவே வேண்டும், இன்பம்!
இனித்தமிழ்த்தாய் பேசிடவே தமிழும் ஓங்கும்
இன்பமாகித் திளைத்திடவே இனிது காப்போம்!
தனியாட்சி செய்திடவே மொழியும் உண்டு!
தமிழின்றி நமக்கென்று என்ன உண்டு!
கனியாகப் பகிர்ந்திடுவோம் அலைகள் தாண்டி
கருநமக்கே அடையாளம் தமிழே என்போம்!” (சுவரெழுத்து, ப – 72)
மேலும் இக்கவிதையின் தொடர்ச்சியாய் நம் தேசம் தமிழ் தேசம் மறக்க வேண்டாம் என்பதும், தமிழ் மட்டுமே நம் சொத்து அதனை இழக்க வேண்டாம் என்பதாகவும் வலியுறுத்தி பேசுகின்றார். அத்தோடு “பைந்தமிழே”, “தமிழைக் காப்போம்” போன்ற கவிதைகளின் வழி தமிழை உயரத்தில் ஏற்றிவிடும் ஏணியாகவும், உலகத்தின் ஒளி நல்கும் பொருளாகவும் பார்ப்பதும், தமிழை தாய் போல காத்திடவே உயிரும் ஈவோம். தமிழ் மணக்கும் சாம்பலாவோம் உயிரையேயீந்து என்று குறிப்பிடுவதும், கு.நா. கவின் முருகுவின் அடர்த்தியான தமிழ்ப்பற்றை உணர்த்தி நிற்கிறது. இதன் நீட்சியாகவே “தனி மாநிலம் தமிழ் மாநிலம்” கவிதையும் ஒலிப்பதைக் காண முடிகிறது.
“பேசிடவே தமிழென்ற மொழியின் பாலே
பெருமையுண்டாம் நாட்டிற்கும் தமிழ் நாடென்றால்
தேசியத்தில் தனித்து நிற்கத் தமிழ் நாடென்று
தீவிரமாய் தனி மாநிலமாகச் செய்ய
மாசில்லாத் தலைவர்கள் ஈந்த நாளாம்
மகிழ்கின்றோம் இந்நாளில் தமிழனென்று
பேசிடவும் வாழ்ந்திடவும் தமிழேயென்போம்
பிரிவினைகள் இல்லாத நிலையில் நின்று” (சுவரெழுத்து, ப -90)
மட்டுமின்றி வணக்கம் தமிழே, இனிமைத் தமிழே, ஈடில்லாத் தமிழ் மொழி, தமிழுக்கு ஏற்றமுண்டு, தமிழே ஆளும், செந்தமிழால் வாழ்வு என்பதாய் பொருள்பட “தமிழே நம் ஆளுமை” என்பதாய் பதிவாகியுள்ள கவிதையும் தமிழ் மொழி – இனம் – நாடு என்ற நிலையில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.
“எந்தாயின் தமிழ்ப்பாலால் வாழும் நாங்கள்
ஈடில்லா எம்மொழியால் உலகாள்வோரும்” (சுவரெழுத்து, ப -56)
மேற்சுட்டிய நிலையில் தமிழ், தமிழனின் மேம்பாட்டிற்காய் அரண் அமைக்கும் சுவரெழுத்து அத்தோடு நின்று விடவில்லை. மாறாகத் தமிழ்ச்சமூகம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ச்சிகாண சாதி மத வேறுபாட்டை களையவும், அகிம்சையை, அறத்தை நிலை நிறுத்தவும், தீது கண்டால் ரௌத்திரம் கொள்ளவும், நாளையப்பொழுதை நமதுபொழுதாய் மாற்றவும் கவிதைவழி முயற்சிக்கின்றது.
கவிஞர் தமிழின் சிறப்பை கற்பிப்பது போலவே சாதியின் அவலங்களை எதிர்த்தும் அயராது குரல் கொடுக்கின்றார். தம் சுயச்சிந்தனையை சாதி எதிர்ப்புக்காய் முன்னெடுப்பதோடு, பாரதி போன்ற போராளிகளின் செயலினையும், சொல்லையும் தம் துணைக்கு அழைக்கின்றார். இனியொரு பிறவி வேண்டாம் எனும் கவிதையில்
“இழி குலத்தில் பிறப்பெடுக்கும் பிறவி வேண்டாம்
இன்னல்கள் தேற்றிடும் சாதி வேண்டாம்
அழிகின்ற உடல் தானே என்றும் ஈதாம்
அதிலென்ன சாதியென்றும் மதங்களென்றும்
பழிசொல்லக் கீழ்சாதி மட்டுமென்ன
பரத்தையரை வன்புணர நீங்கள் யாரோ
ஒழித்திடவே நினைக்கின்ற எண்ணம் உண்டேல்
உறித்தெறிய ஆணவமும் உடைகள் தானே” (சுவரெழுத்து, ப – 31)
என்று சாதிஒழிப்பு குறித்த கருத்தியலை முன்னெடுக்கின்றார். இங்கு ஒழித்திடவே நினைக்கின்ற எண்ணம் உண்டேல் உரித்தெறிய ஆணவமும் உடைகள்தானே என அடையாளப்படுத்துவதன் மூலம் மனமிருந்தால் மார்க்கம்உண்டு என்பதையும் நினைவுபடுத்துகின்றார். ஆனால் இங்கு துரதிருஷ்டவசமாய் சாதியை ஒழிக்கின்ற மனம்தான் யாரிடமும் இல்லை என்பதை கவிதை நிறுவுகிறது.
“தீமையை எரித்திடு” எனும் கவிதையில் தீயோர்களை நாட்டுக்கு கிடைத்த சாபப் பொருளாகப் பார்ப்பதும், ஆயுதமில்லாத தேசம் காண அன்பு அடிப்படைத் தேவையாக இருப்பதையும் அதற்கு ஆலயங்கள் சென்று வழிபட்டால் போதுமென்பதும், அவரின் நம்பிக்கை, அனுபவங்கள் சார்ந்ததாக மிளிர்கிறது. மேலும் மரங்களின் சிறப்பை பேசும் கவிதை, சமூகத்தின் அவலங்களை எடுத்துரைக்கும் “முற்றுப்புள்ளி” உள்ளிட்ட பல கவிதைகள் கவிஞரின் சமூக ஈடுபாட்டை கவிதை வழி மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.
இன்றைய நவீன வாழ்வில் மனிதனின் வாழிடம், வாழ்க்கை முறை, கலை, கலாச்சாரம், பண்பாடு, நம்பிக்கை, சடங்கு என எல்லாமே மாறிப் போயுள்ளன. குறிப்பாக மக்கள் இன்று பெரிய அளவில் பணத்தின் மீது ஆசை கொண்டவர்களாக புதிய நுகர்வுப் பொருட்களின் மீது அசை உள்ளவர்களாக விளங்குகின்றனர். உண்மையான மனமகிழ்வை விட்டு போலிகளை நாடிச் சென்று தம் வாழ்வை தொலைத்துக் கொண்டு இருக்கின்றனர். அதனை பதிவு செய்யும் கவிதை,
“யாரிடந்தான் தேடுவதோ நேர்மை தன்னை
யாரைத்தான் நம்புவதோ ஞாலந்தன்னில் ”
என்பதும்
“நீதி சொல்லும் நிலையுமற்றுப் போனாரிங்கே
நியாயங்கள் சவக்கிடங்குகள் பிணமாய்த் தூங்க”
“வன்புணர்வு களவு கொலை கொள்ளை யென்றே
வகையற்றுப் போகின்றார் மனிதரிங்கே” (சுவரெழுத்து, ப -54)
என்பதாகக் கூறி மனம் வருந்துகின்றார். மேலும் நிலமழித்து நிலம் விற்று மனைகள் கட்டி. நேர்த்தியான மாளிகைகள் வானுயரக்கட்டி கலங்களின்றி குவித்து விட்ட நெல் மணிகளின்றி உழவுத் தொழில் அழிந்து போகும் அவலத்தை புலப்படுத்துகின்றார்.
கவிதையில் சாதிமத பேதங்களை கடுமையாகச் சாடும் அவர் ஓதி வைத்த மதநெறிகள் மறந்ததேனோ என மதநெறிகளின் மீது நம்பிக்கை கொள்வதும், கடவுள் வாழ்த்திற்காக சிவத்துதியை அமைத்திருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். மேலும் தன்மானம் அற்ற மக்கள் உலகையாள இவர்களுக்கென சரித்திரம் எழுத என்ன இருக்கிறது என்பதாக சிந்திப்பதும், நிகழும் தவறினை சுட்டி என்னவென்று கேட்க யாருமில்லாத நிலையில் ஏமாற்றும் பித்தர்களே நலமாக வாழ்வதனையும் பேசும் கவிதை தன்மானம் காத்திட இந்த சமூகம் முடிவெடுத்து தரணியில் இவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறது.
ஆக மேற்சுட்டியவாறு மனிதம் அவலமாகிப் போயுள்ளதை பேசும் சூழலில் விதைக்க மறந்த மனித நேயம் என்றே ஒரு கவிதையில் என் தேசம் எங்கே போகிறது என கேள்வி கேட்கும் அவர் இழிநிலை நோக்கி போகத்தான் மனிதம் போல என தனக்குத் தாமே பதிலை இயலாமையாகத் தருகின்றார். கல்வி சந்தையாக்கப்பட்டு திருட்டுக் கொள்ளைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதை உணாத்துகின்றார். மேலும் சாதி மதம் குறித்து விவாதிக்கின்ற போது இனி உதிக்கும் சூரியனும் மதங்கள் சாதி பார்த்துத் தான் தோன்றும் போல என ஐயுறுகின்றார். இறுதியாக அடுக்கடுக்காக மனித அவலங்களை வரிசைப்படுத்தும் கவி இறுதியாக மானமற்றுக் கேவலமாய் உலகில் வாழ மக்களாகிப் போனவர்கள் தான் இன்றைய மக்கள் என்பதாக உரைப்பது காலரீதியில் குறிப்பிடத்தக்கப் பதிவாகும்.
வள்ளுவரின் அறத்துப்பாலை போதிக்கையில் கொன்றார்க்கும் உய்வில்லை செய்த நன்றி கோமகற்கும் அதுவேயாகும் மாற்றம் இல்லை என்பதும், அகிம்சையை கற்பிக்கையில்
“வாய்மையது வீழ்வதில்லை என்றும் எங்கும்
வந்தனையும் செய்வார்கள் யாரோ நம்மில்
மாய்ந்திடினும் மறவாமல் காக்க வேண்டும்
மனிதருக்குள் அகிம்சை என்றும் உயிராய் மேவும்” (சுவரெழுத்து, ப -69)
என்றும், மேலும் வாழ்வில் நம்பிக்கை பயக்கும் விதமாகவும், சிந்தனையோடு வழங்கியிருப்பதையும் பார்க்கமுடிகிறது.
“எட்டிவிடும் தூரம்தான் வானம் என்றால்
இனியென்ன மிச்சங்கள் இருக்குதிங்கே!
இட்டுவிடு உச்சத்தில் கனவை வான
எல்லைக்கே அப்பாலும் இல்லை உலகு
தொட்டுவிடு நினைவாகும் கனவை உன்னுள்
தொடரட்டும் செயலாக்கம் வெல்லும் நினைவு” (சுவரெழுத்து, ப -82)
தொகுப்பின் இறுதியாக “அவளென்பா” எனும் அருமையான ஒரு சிறுகாதல் காவியத்தையும் தந்துள்ளார். பாரதிபோல், பாரதிதாசன் போல் அதில் பயின்று வரும் மொழியின் அழகோ அழகு. தமிழ்ப் பண்பாட்டு மரபுக்குள் நின்று அவர் கவிதையில் கொண்டு சேர்க்கும் சொற்கள் மிக இனிமை. ஒரு ஆண் காதலில் ஒரு பெண்ணிடம் தோற்றுப் போகும் இடத்தை சுட்டும் வரிகள் வாசிக்கின்ற போது ஒரு ஆண்மகனை திரும்பி பார்த்து அசை போட வைக்கின்ற இடமாகிறது.
“விழி தொடுக்கும் அம்புகளே போர்வாள் என்றால்
வீழ்ந்திடுவேன் உன் மடியில் தோற்ற பின்னே
மொழி தொடுத்தே இனிதாக்கி செப்பியாங்கு
மோசத்தை விளைத்திட்ட விந்தை யாது
பழித்தாலும் என் செய்வேன் பருவச் சீற்றம்
பந்தியிட்டு முன்வருதே காதல் சொல்ல
அழித்தாலும் அழியாது எழுதி வைத்த
அன்பிற்கினிய காதல் என்று மென்னுள்” (சுவரெழுத்து, ப – 93)
தொடர்ந்து வாடையிலே வீசுதுங்க குளிர்ந்த காற்று வசமாக வந்து சேர்ந்தா மாமன் பொண்ணு. சாடையிலே பேசுறாளே சமஞ்சபொண்ணு. கொசுவத்த இடுப்போடு செருகிவச்சா. ஓடையிலே தப்பி வந்த மீன் போல ஓசையற்று துள்ளுறேனே என்ன செய்ய என காதல் தன்னை ஆட்கொண்டுள்ள இயல்பை விவரிக்கின்றார். மட்டுமின்றி காதலின் அன்பையும், அதற்கு எழும் எதிர்ப்பையும் பதிவு செய்யும் அவர் உரிய நேரத்தில் ஓலை வைச்சி ஊருக்கு சொல்லிவிடுவேன் பரிசம் போட என்கிறார்.
“யாருக்குச் சொல்வாயோ கனிந்த அன்பை
யார் யாரும் சுடுவாரே தீஞ்சொல் கொண்டு
போருக்கு எழுவாரே கொன்று வீழ்த்த
பூவுக்கும் வேரறுக்க அஞ்சிடாரே
தேருக்கு வடங்கட்டி இழுக்க யாரோ
தேவதைக்கே அத்தை மகள் நானே தானே
ஊருக்குச் சொல்லி விட நேரம் வந்தா
ஓலை வச்சி சொல்லி விடுவேன் பரிசம் போட” (சுவரெழுத்து, ப -94)
இவ்வாறாக பல்வேறு வர்ணனைகளோடு தொடரும் காவியத்தில் இறுதியாக இடைவளைய செங்கமம் எய்த அம்பாய் இன்மனத்தில் இன்னல்கள் தந்த பெண்ணாய் குடை விரிந்த வானமென மழையாய் பெய்து குணவதியாய் பூத்தாளே மனதில் நின்று என்பதாய் நிறைவடையச் செய்கிறார்.
ஆக சுவரெழுத்து முற்றிலும் சமூகமேம்பாடு சார்ந்தும் இயற்கை, காதல், தமிழ், இறை சார்ந்தும் போலித்தன்மையற்ற கோட்பாட்டு கொண்டாட்டங்களற்ற தமிழ்மொழி, இலக்கியம், பண்பாட்டு, வாழ்வியல் மரபுக்குட்பட்ட நல்ல பல கவிதைகளை ஆக்கித் தந்துள்ளார். இதனை அவரது தமிழ்ச்சமூக கரிசனத்தின் வெளிப்பாடு என கொண்டாடலாம்.
துணை நூற்பட்டியல்
- கு.நா. கவின்முருகு – சுவரெழுத்து, பூவரசி, முதல் பதிப்பு – 2017
- தி.சு. நடராசன் – தமிழ் அழகியல், காலச்சுவடு பதிப்பகம், முதல் பதிப்பு – 2012
- சாந்தன் – இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம், மூன்றாவது மனிதன், முதல் பதிப்பு – 2015
- மிலிட்டரி பொன்னுசாமி (தமிழில்) – கலையின் அவசியம், பாரதி புத்தகாலயம், முதல் பதிப்பு – 2014.
- தி.சு. நடராசன், க.பஞ்சாங்கம் – தமிழில் திறனாய்வு பனுவல்கள், முதல் பதிப்பு – 2014.
-
நீண்ட ஆயுளைப் பெறும் வழிகள்
முனைவர்.த.பாலமுருன்
உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-20
மனித உடலில் இரத்தம் ஓட்டம் இருந்து கொண்டே இருக்கும். அவ்வொட்டம் சீராகவும் மாறியும் ஓடும். இவ்வாறு ஓடும் ஓட்டத்தினை கருதல் அளவையால் ஆராய்ந்து கணக்கிடும் முறைக்கு நாடி எனலாம். நாடிகளின் செயலால் உடல் இயக்கம் நடைறுகிறது. மனித உடலில் எழுபத்து ஈராயிரம் நாடிகள் உள்ளன எனச் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். மூலாதாரத்திலிருந்து எழுபத்து இரண்டாயிரம் நாடிகள் கிளம்பி உடல் முழுவதும் பரவி,பெருக்கின்றன.
நாடிகள் 72000 என்றும் அவற்றுள் முக்கியமானவை 500 என்றும் அவற்றுள் சிறந்தவை 10 என்றும் அவற்றுள் மிகச் சிறந்தவை மூன்று எனத் திருமூலர் கூறுகிறார். இதனை,
“கால்- அது ஐந்நூற்று ஒருபத்து மூன்றையும்
கால்- அது எண்மடி கொண்ட இவ்வாறே1”
என்னும் பாடலின் மூலம் அறியலாம்.
சிவயோகச் சாரம் ஒவ்வொரு மனிதர்களுக்கும் நாடிகள் எழுபத்திராயிரம் இருக்கின்றன என்று கூறுகிறது.2 அவற்றுள் முக்கியமானது இருப்பது நான்கு. இந்நாடிகள் எப்பொழுதும் உறங்கிக் கொண்டே இருக்கின்றன. குண்டலி என்னும் சக்திக்கு நடுவில் பத்து நாடிகள் மேலாகவும், பத்து நாடிகள் கீழ்ழாகவும் இரண்டு நாடிகள் ஒரு பக்கத்திலும் இரண்டு நாடிகள் மற்றொரு பக்கத்திலும் இருக்கின்றன. இந்த இருபத்து நான்கு நாடிகளுள் பத்து நாடிகளை முக்கியமானதாகக் கூறுகின்றது.
மனித உடலில் எழுபத்து ஈராயிரம் நாடிகள் இருப்பதாகவும் அவற்றில் பத்து நாடிகள் மட்டும் சிறந்தவை எனத் திருமூலர் கூறுகின்றனர். இதனை,
“எற்றியே எண்ணிடில் எழுபத்து ஈராயிரம்
மற்றதில் பத்து வளமான நாடியே.3”
என்னும் பாடலால்அறியலாம்.
அவை, 1. இடகலை 2. பிங்கலை 3. சுழுமுனை 4. புருடன் 5. காந்தாரி 6. அத்தி 7. அலம்புருடன் 8. சங்குனி 9. சிங்குவை 10. குரு என்பனவாகும். இந்த பத்து நாடிகளுள் மூன்று நாடிகளைச் சியோகச்சாரம் முக்கியமானதாகவும் கருதுகின்றது.4 அவை, இடகலை, பிங்கலை, சுழுமுனை என்பனவாகும்.
மூவகை நாடிகளின் தோற்றம்
திருமூலர் கருக்கிடை வயித்தியம் 600 என்னும் நூலில் மூவகை நாடிகள் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. இதனை,
“பாரும் இடைகலை பின்கலை மாறியே
தாரும் பெருவிரல் காலொடு தானேறி
காரும் கழுத்தில் கபாலம் வரை நின்று
வாரும் இடமாய் வலக்கரம் சாருமே5”
என்னும் பாடலால் அறியலாம்.
- இடக்கலை நாடி வலது கால் பெருவிரலிலிருந்து மேல் எழுப்பி மூலாதாரம் வழியாய் இதயத்துக்கு இடப்பக்கமாய் ஓடிகத்திரிக்கோலைப் போல் மாறித் தலையின் இடது பக்கமாய் நின்று, பின் இடது கையில் நிற்கும்.
- பிங்கலை நாடி இடது கால் பெருவிரலிலிருந்து மேல் எழும்பி மூலாதாரத்தின் வழியாக இதயத்துக்கு வலப்பக்கமாய் ஓடிகத்தரிக்கோலைப் போல் மாறிக் தலையின் வலது பக்கமாய் நின்று, வலது கையில் நிற்கும்.
- சுழுமுனை நாடியானது முதுகெலும்புத் தண்டுவடத்தின் வழியாக மூலாதாரத்திலிருந்து தலையின் உச்சி வரை பாய்ந்து நிற்கும். இதனை,
“வலக்கரம் தன்னில் வளமான பின்கலை
நிலைத்த இடக்கரம் நின்றது இடைகலை
துலக்க நடுமையச் சுழிமுனை ஓடிடும்
பிலக்க இவை மூன்றால் பிறந்தது தாதுவே6”
என்னும் பாடலின் வாயிலாக அறியமுடிகிறது.
மேற்கண்ட பாடலின் மூலம் இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூவகை நாடிகளின் இருப்பிடத்தை அறியமுடிகிறது.
மூன்று நாடிகள்
நாடிகள் இயக்கத்தினால் ஒருவனின் வாழ்நாள் அதிகமாகவும் குறையவும் செய்யும். அதனால் அந்நாடிகளின் இயக்கத்தை ஒழுங்குப்படுத்துவதற்கு மூச்சை சீராக இயக்க வேண்டும். நாடிகளின் இயக்கம், வாயுக்களைப் பொறுத்தே அமையும் எனலாம்.
- பத்து நாடிகளில் இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்றும் சிறந்த நாடிகள். இவற்றின் வழியாய் மூச்சு (சுவாசம்) ஓடுகிறது.
- இடகலை என்பது இடது மூக்கு வழியாக ஓடும் மூச்சு ஆகும். இதனைச் சந்திரக்கலை என்பர்.
- பிங்கலை என்பது வலது பக்க மூக்கில் வரும் மூச்சு ஆகும். இதனைச் சூரியக்கலை என்பர்.
- சுழுமுனை என்பது நடுநாடியாகும். இதனை அக்கினிக் கலை எனக்கூறுவர். இது இரண்டு நாசியிலும் பரவியோடும்.
இடகலை என்னும் சந்திரக்கலையைப் பெண் எனக் குறிப்பிடுவர். இதன் நிறம் கருமையாகும். பிங்கலை என்று சொல்லப்படும் சூரியக்கலையை ஆணாகக் கூறுவர். இதன் நிறம் வெண்மை ஆகும். சுழுமுனை எனப்படும் நாடியை அலி நாடி எனவும் கூறுவர்.
இடகலை
இந்நாடியில் சுவாசம் வரவும் போகவும் இருக்கும். இடகலையில் சுவாசம் சரிவர நடந்தால் உடல் நலத்துடன் இருக்கலாம்; இடகலையில் சுவாசம் நடக்கும் பொழுது, தாகம் நீர்விருத்தி, தீர்மானம் செய்தல், வேலை செய்தல், நகை செய்தல், நகை அணிந்து கொள்ளுதல், கோயில் கட்டுதல், தருமம் செய்தல், புதிய வீட்டிற்குக் குடிப்போகுதல் போன்ற செயல்களைச் செய்யும் பொழுது பயன்களைப் பெறலாம்.
பிங்கலை
பிங்கலை என்பது வலப்பக்க நாசி, இந்நாடியில் சுவாசம் வரவும் போகவும் செய்யும். இந்நாடியில் சுவாசம் வரவும் போகவும் இருக்கும் பொழுது செய்யத்தக்கவையாக ஞானச்சர நூல் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறது.7
குருவின் உபதேசம் பெறல், ஒருவரை வணங்குதல், எதிரியின் படையைத் துரத்தல், பயிர் விளைவித்தல், வியாபாரம் செய்தல், திருடல், தோடல், சவாரிப் போதல், சங்கீதம் பாடல் போன்ற செயல்களைச் செய்தால் நன்மை விளையும். இடகலை அல்லது பிங்கலையில் செல்லும் மூச்சின் அளவைப் பொறுத்து ஒருவரின் ஆயுள் நீளவோ அல்லது குறையவோ செய்கிறது. திருமூலர் கூறும் இச்செய்தியினைத் தெளிவாக அறியலாம்.8
இடகலை அல்லது பிங்கலை
வழி இயங்கும் மூச்சின் அளவு ஆயுள்
- 4 விரல் கட்டை அளவு உயிர் இறைவனாகும் (ஆயுளை
நிர்ணயிக்க இயலாது)
- 5 விரல் கட்டை அளவு 100 ஆண்டு
- 6 விரல் கட்டை அளவு 80 ஆண்டு
- 7 விரல் கட்டை அளவு 60 ஆண்டு
- 8 விரல் கட்டை அளவு 50 ஆண்டு
- 9 விரல் கட்டை அளவு 33 ஆண்டு
- 10 விரல் கட்டை அளவு 28 ஆண்டு
- 15 விரல் கட்டை அளவு 25 ஆண்டு
சுழுமுனை
சுழுமுனை நாடி என்பது இரண்டு நாசியிலும் வரும் சுவாசம், இதனை அக்கினிக் கலை என்றும் குறிப்பிடுவர். இதனின் நிறம் சிவப்பு. இந்நாடியை அஃறிணைப்பால் அல்லது அலி எனக் குறிப்பிடுவர். இந்த நாடியில் சுவாசம் நடக்கும் பொழுது சுவாசத்தைக் கட்டினால் (அளவு குறைந்தால்) மனத்திற்கும் உடலுக்கும் இன்பம் உண்டாகும். இந்நாடியில் சுவாசம் நடக்கும் பொழுது சமாதி யோகம் செய்தால் நன்மை நடக்கும், எனச் ஞானச்சார நூல் குறிப்பிடுகின்றது.9
சிவவாக்கியர் நாடிகள் பற்றிக் குறிப்பிடும் பொழுது இடகலை, பிங்கலை சுழுமுனை என்னும் மூன்று நாடிகளுக்குள் இடகலை பிங்கலை என்னும் நாடிகள் மட்டும் நாகப் பிணையில் போலப் பின்னிக் கிடக்கும் என்றும் இவற்றின் நடுவே சுழுமுனை நாடி செல்லும் எனவும் கூறுகின்றார். இடகலை, பிங்கலை நாடிகள் சங்கின் ஒசைப் போலவும் சுழுமுனை நாடி தாரை போலவும் நீளமாக இருக்கும் எனவும் கூறுகின்றார். இதனை,
“சங்கு இரண்டு தாரையென்று சன்ன பின்னல் ஆகையால்
மங்கிமாளு தேஉலகில் மானிடங்கள் எத்தனை
சங்கு இரண்டை யும்தவிர்த்து தாரையூத வல்லிரேல்
கொங்கை மங்கை பங்கரோடு கூடிவாழ்லா குமே10”
இடகலை, பிங்கலை நாடிகளைத் தவிர்த்து சுழுமுனை நாடி வழியாகச் சுவாசத்தை வரவும் போகவும் செய்தால் சிவனுடன் அதாவது இறைநிலையை அடையலாம் எனவும் கூறுகிறார். இடகலை, பிங்கலை என்றும் இரண்டு நாடிகளையும் தவிர்த்து சுழுமுனை நாடியில் சுவாசம் நடக்கும் பொழுது இறைவனைக் காணலாம் எனத் திருமூலரும் குறிப்பிடுகிறார்.
சுழுமுனை நாடியின் பயன்
சுழுமுனை நாடியில் சுவாசம் நடக்கும் பொழுது ஓர் ஒளித் தோன்றும். அந்த ஒளியை நான்கு நாழிகை நேரம் உள்ளே நிறுத்தினால் முதியவர்களும் இளையவர் ஆவர். அப்பொழுது இறைவனைக் காணலாம். இது உண்மை உண்மை எனச் சிவவாக்கியர் வலியுறுத்திக் கூறுகிறார். அதனை,
“மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாலுநாழி உம்முளே நாடியே யிருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலமுண்ட கண்டராணை யம்மை யாணை யுண்மையே11”
என்னும் பாடலால் அறியலாம்.
நீண்ட நாள் உயிர் வாழ பன்னிரு அங்குலக் கனம் உள்ள மூச்சுக்காற்றை அடக்கி இடகலை என்னும் சந்திரக்கலையின் அமுதத்தை உண்ணக் கூடியவர் உடல், அழியாமல் நீண்ட காலம் இருக்கும் எனத் திருமூலர் கூறுகின்றார். எனவே, அந்நாடிகளை அறிந்து அந்நாடிகள் வழியாக மூச்சுக் காற்றினைச் செலுத்தினால் நீண்ட ஆயுளைப் பெறலாம். ஆறு விரற்கடை அளவு மூச்சுக் காற்று வெளியேறினால் எண்பது ஆண்டு ஆயுள் அமையும். ஏழு விரற்கடை மூச்சுக் காற்று வெளியேறினால் அறுபதாண்டு வாழலாம். இதனை,
“ஏறிய ஆறினில் எண்பது சென்றிடும்
தெறிய ஏழில் சிறக்கும் வகை எண்ணில்
ஆறு ஒரு பத்தாய் அமர்ந்த இரண்டையும்
தெறியே நின்று தெளி இவ்வகையே12”
என்னும் பாடலின் வழி அறியலாம்.
எனவே, நாடிகளை அறிந்து அந்நாடிகள் வழியாகச் சுவாசத்தைச் செலுத்தினால் நீண்ட ஆயுளைப் பெறலாம். சுழுமுனை நாடி வழியாகச் சுவாசம் இயங்கினால் ஏற்படும் விளைவுகளைக் காணலாம்.
சுழுமுனை இயங்கும்
நாட்கள் பயன்கள்
- 2 நாள் அபானனும், சந்திரனும் உயிருக்கு உதவும்
- 3 நாள் விந்து செயம் உண்டாகி ஆயுள் நீளும்
- 4 நாள் நாதம், சிவம், விந்து, சக்தி, ஆகிய
நான்கும் அருவமாக உடல் தோன்றும்
- 5 நாள் சதாசிவம், பரசிவம், பராசத்தி காணலாம்
- 10 நாள் பராசத்தியுடன்,பரசிவத்தையும்
தரிசிக்கலாம்
- 15 நாள் ஏகசிவத்தைக் காணலாம்
- 20 நாள் சகஸ்காரத்தையும், ஆறு
ஆதாரங்களையும் காணலாம்
- 25 நாள் மூலாதாரம், சுவாதிட்டானம் என்ற
இரண்டையும் கடந்து பிறவற்றில்
அனுபவம் பெறலாம்
- 26 நாள் விசுத்தி, ஆக்ஞை என்ற இரண்டின்
அனுபவம் எய்தும்.
- 27 நாள் சிவத்தைப் பிறருக்குக் காட்டலாம்
- 28 நாள் ஆன்மா, சிவத்தோடு கலந்திருக்கப்
பிறருக்கு உணர்த்தலாம்.
நாடியும் கிழமையும்
ஒருவனுக்குச் சுவாசத்தின் இயக்கத்தைப் பொருத்து ஆயுள் வரையறை செய்யப்படும். அதனால் சுவாசத்தை ஒழுங்குப்படுத்தி எந்நாளுக்கு எந்நாடியில் சுவாசத்தின் இயக்கம் இருக்க வேண்டும் என அறிந்து, அந்நாட்களுக்குத் தகுந்த சுவாசத்தின் இயக்கம் இருந்தால் ஆயுள் நீளுவதுடன் இறைவனையும் அடைய வழி கிடைக்கும்.
- இடகலை நாடியின் சுவாசம் வெள்ளி, திங்கள், புதன் ஆகிய கிழமைகளில் இருக்க வேண்டும்.
- பிங்கலை நாடியின் சுவாசம் சனி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய கிழமைகளில் இருக்க வேண்டும்.
- வளர்பிறை வியாழனில் இடகலையிலும் தேய்பிறை வியாழனில் பிங்கலையிலும் சுவாசத்தை இயக்க வேண்டும்.
மேற்குறித்த நாட்களில் நாடிகளின் சுவாச இயக்கம் இருந்தால் நன்மைகள் பெறலாம் என்பது வெளிப்படை.
அடிக்குறிப்பு
- திருமந்திரம், பா. 687.
- பெரிய ஞானக் கோவை, சிவயோகச்சாரம், ப.267.
- திருமந்திரம், பா.890.
- பெரிய ஞானக் கோவை, சிவயோகச் சாரம், ப. 268.
- திருமூலர் கருக்கிடை வயித்தியம் 600, பா. 20.
- மேலது. பா. 21.
- பெரிய ஞானக் கோவை, ஞானச்சர நூல், ப. 36.
- திருமந்திரம், பா.658.
- பெரிய ஞானக் கோவை, ஞானச்சர நூல், ப. 369.
- சிவவாக்கியர், பா. 21.
- பெரிய ஞானக் கோவை, சிவவாக்கியர், பா. 70.
- மேலது. பா. 767.






