காழிப்பிள்ளைக்கு சேக்கிழார் பாடிய பிள்ளைத்தமிழ்!

மீனாட்சி பாலகணேஷ்

            ‘தவம் பெருக்கும் சண்பையிலே தாவில்சரா சரங்களெல்லாம்

          சிவம்பெருக்கும் பிள்ளையார் திருஅவதா ரஞ்செய்தார்,’ என்பது ஆளுடைப்பிள்ளையாராகிய திருஞானசம்பந்தப் பெருமானின் அவதாரம் பற்றி சேக்கிழார் பெருமான் இயற்றியருளிய பெரியபுராணப் பாடல். பெரியபுராணத்தினூடே இழைந்திலங்கும் பிள்ளைத்தமிழ் போன்ற ஓரமைப்பையும் சேக்கிழார் பெருமான் படைத்திருக்கிறார்! அதனை ஒரு சிறிய பிள்ளைத்தமிழாகவே நாம் கருதவும் இடமிருக்கிறது.

காப்பியத்துக்குள் ஒரு சிற்றிலக்கியம்!

                                                            *****

            அந்த இளங்காலைப் பொழுதில் சண்பை (சீர்காழி) எனப்படும் அவ்வூரில் பல நற்சகுனங்கள் தென்பட்டன. சிலுசிலுவென்ற இளங்காற்று வீசி, மரங்களிலிருந்து மலர்கள் தெருவெங்கும் உதிர்ந்தன. வீடுகளின் வாயிலில் பவழமல்லிகை மலர்கள் அங்கு வசிப்பவர்களை ஆசிர்வதிப்பதுபோலச் சொரிந்தன. பறவைகள் இனிமையாகப் பாடின; இனிய நறுமணம் எங்கும் கமழ்ந்தது. தோணியப்பர் திருக்கோவில் மணி கணீரென முழங்கியது. மங்கல வாத்தியங்களின் ஒலி எங்கணும் பரந்து எழுந்து திசைகளனைத்தையும் நிறைத்தது. சிவபாத இருதயரின் வீட்டை நோக்கிப் பெண்டிர் விரைந்தனர்.

            சிவபாத இருதயர், தமது வீட்டின் திண்ணையிலமர்ந்து சிவநாமத்தில் ஆழ்ந்திருந்தார். கண்களை மூடிக்கொண்டு நிட்டையில் ஆழ்ந்திருந்தார் அவர்.

            சிறிதுநேரத்தில் பிறந்த பச்சிளம் மகவின் இனிய குரலொலி வீட்டின் உள்ளிருந்து கேட்டது. கோவில் கோபுரத்தை நோக்கி அவரின் கரங்கள் தானாகவே தலைக்குமேல் குவிந்தன. அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

            “சைவம் தழைக்க ஒரு திருமகன் அவதரித்துள்ளான்; அம்மையப்பன் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்து விட்டான்,” என மனதில் எண்ணிக் கொண்ட அவரின் உடலும் உள்ளமும் ஒருசேரச் சிலிர்த்தது. இக்குழந்தை வளர்ந்து எவ்வாறு சைவத்தொண்டு செய்வான் என அவர் சிறிதும் அறிந்திருக்கவில்லை; அதற்காகக் கவலைப்படவுமில்லை. இறைவன் அருள் புரிவான், வழிநடத்துவான் எனும் அசையாத நம்பிக்கை!

                                                            *****

            அடுத்த பத்து தினங்களும் குழந்தை பிறந்ததும் அந்தணர் வீடுகளில் செய்யப்படும் நற்சடங்குகளில் கழிந்தன. உலகம் நன்மை பெறுவதற்காக இத்தகைய மகவைப் பெற்ற சிவபாதஇருதயர் தம் திருமாளிகையாகிய பவனத்தின் முன்றிலில் பலவிதமான அலங்காரங்களைச் செய்வித்தார்.

            ‘இரும்புவனம் இத்தகைமை எய்தஅவர் தம்மைத்

          தரும்குல மறைத்தலைவர் தம்பவன முன்றில்

          பெருங்களி வியப்பொடு பிரான்அருளி னாலே

          அருந்திரு மகப்பெற அணைந்தஅணி செய்வார்,’ என்கிறார் சேக்கிழார் பெருமான்.

            அவர் மகப்பேற்றின் பின்பு ஏற்படும் ‘தீட்டு’ முதலானவை நீங்க எண்ணெய் பூசி நீராடும் நெய்யாட்டு விழாவினைச் செய்து மகிழ்ந்தார்; இதனை ‘மங்கல ஸ்நானம்’ என்பது வடமொழி வழக்கு. மங்கல ஓசைகள் முழங்கும் சமயத்தில் சாதகன்மம் முதலான பல சடங்குகளையும் அந்தணர்கள் குலதருமப்படி செய்தார் அவர். ஆண்குழந்தை பிறந்தால் 16 விதமான சடங்குகளைச் செய்வர். இதனுள் குழந்தை பிறந்த நாள், கோள்களின் நிலை பற்றிய குறிப்பைப் பதிந்து வைத்தலை சாதகம் (ஜாதகம்) என்பர்.

            ‘சாதக முறைப்பல சடங்குவினை செய்வர்.’

            வாராது வந்த மாமணியன்றோ இம்மகவு? உறவினப் பெண்டிர் அனைவரும் குழுமி பல மங்கலச் செயல்களைச் செய்து மகிழ்ந்தனர். அவை என்னென்ன தெரியுமா?

            மயில்போலும் சாயல்கொண்ட அம்மகளிர், தூமணி விளக்கொடு தாம் அணிந்துள்ள அணிமணிகளும் சுடர்க்குழைகளும் மின்னி ஒளிவீச அழகான மாளிகையை மேலும் அழகு செய்தனர்.

            வாசனைப்பொடியாகிய சுண்ணத்தை எங்கும் தூவினர்;

          முளைப்பாலிகைகளை மேடைகள் தோறும் வைத்தார்கள்.

          மணமுடைய புண்ணிய நீர் நிரப்பப்பட்ட பொற்குடங்களை வரிசையாக மேடைகள்தோறும் வைத்தனர்.

            குழந்தை பிறந்ததும் பொன் முதலான பொருட்களை தானம் வழங்கி மகிழ்கிறார் தந்தை. அதுமட்டுமல்ல; சிவநேசச் செல்வரான அவர் சிவனடியார்களுக்கு இடையறாது அமுது செய்வித்த வண்ணம் இருந்தார். மற்றும் உடனிருந்தோர் அழகான மலர்மாலைகளை அவற்றில் மொய்க்கும் வண்டுகளுடன் சேர்த்துக் கட்டி ஆங்காங்கே தொங்கவிட்டனராம். பச்சிளம் மகவு பிறந்திருக்கும் இல்லத்திற்குக் காப்பாக வேம்பின் இலைகளை மாளிகையின் பகுதிகளில் ஆங்காங்கே செருகுவார்கள் சிலர். இதனை,

            ‘செம்பொன்முத லானபல தானவினை செய்வார்

          நம்பரடி யாரமுது செய்யநல முய்ப்பார்

          வம்பலர் நறுந்தொடையல் வண்டொடு தொடுப்பார்

          நிம்பமுத லானகடி நீடுவினை செய்வார்’ என்கிறார் புலவர்.

            வெண்கடுகு முதலான பண்டங்கள் சேர்த்துச் செய்யும் புகைகொண்டும், நெய், அகில் இவற்றின் புகையினைச் சேர்த்தும், பல வேள்விகள் செய்வதனால் எழும் புகையாலும் தெய்வமணம் கமழும் செயல்களைச் செய்கின்றனர். பின் மறைவிதிப்படி அக்குழந்தைக்கு ‘ஆளுடைய பிள்ளையார்’ எனத் திருநாமம் சூட்டி தொட்டிலில் இடும் சடங்கினைச் செய்தனர்.

            இவ்வாறு பத்துநாள் சடங்குகளை வருணித்து மற்றவைகளை நயத்துடன் சேக்கிழார் கூறும் அழகே அழகு. சிவபிரானின் திருவடிகளில் தாம் கொண்ட அன்பே அன்னை  பகவதியாரின் திருக்கொங்கைகளில் பாலாகச் சுரந்திட அதனைத் தன் திருக்குமாரனுக்கு அவர் உண்பித்தாராம்.

            பிறந்த குழந்தை வளர்வதனை இனி வரும் பாடல்களில் சேக்கிழார் உரைக்கிறார். பிள்ளைத்தமிழ்ப் பருவங்களனைத்தும் அழகுற வரிசைப்படுத்தப்பட்டு, சிலசொற்களோ, வரிகளோ, பாடல்களோ ஆயினும் கற்பனைநயம் மிகக் கூறப்படுகின்றன.

            சிவபிரான் திருவருளால் உதித்த குழந்தையாதலால், பலவிதமான காப்புகள் மிகையாகும், அவை தேவையில்லை எனக்கருதி அவை எதையும் விரும்பாது, குழந்தையின் நெற்றியில் திருநீற்றைப் பூசிக் காப்புச் சடங்கினைச் செய்தனர். “மந்திரமாவது நீறு,” எனப் புகழ்ந்து பாடப்போகும் ஞானக் குழந்தையல்லவா இவர்? இதனைவிடத் தகுதியான காப்பு வேறுண்டோ? இதனால் முதல்மாதத்தில் பாடப்படும் காப்புப்பருவம் கூறப்பட்டது.

            தமிழுடன் சைவமும் சிறப்புப்பெற வந்துதித்தவர் காழிப்பிள்ளையார் பெருமான். ஆகவே, அவரைப் பெரிதும் போற்றும்வண்ணம் தாயார் தன் மடித்தலத்தும், மணித்தவிசிலும், தூய்மையான விரிப்பைக் கொண்ட தொட்டிலிலும், மலர்ச் சயனத்திலும் கண்வளர்த்தி நாயகனைத் தாலாட்டி நலம்பல பாராட்டினார். ஏழாம் மாதத்தில் பாடப்படும் தாலப்பருவம் இவ்வாறு கூறப்பட்டது.

            ஆளுடைய பிள்ளையார் தவழத்துவங்கி, தமது தலையை மேலெடுத்து முகத்தை அசைத்துச் செங்கீரை ஆடினார். இதனைச் சேக்கிழார் பெருமான் அருமையான தமது கற்பனையை ஏற்றி, தற்குறிப்பேற்றமாகப் பொருள் நயத்துடன் பாடியுள்ளமை சுவைபட உள்ளது. இதனைத் தன்மையணி என்பர்.

            ‘வருமுறைமைப் பருவத்தில் வளர்புகலிப் பிள்ளையார்

          அருமறைக டலையெடுப்ப ஆண்டதிரு முடியெடுத்துப்

          பெருமழுவர் தொண்டல்லால் பிறிதிசையோ மென்பார்போல்

          திருமுகமண் டலமசையச் செங்கீரை ஆடினார்,’ என்கிறார்.

            வரிசையாக வரும் பிள்ளைப்பருவங்களுக்கு உரியவாறு வளர்ந்துவரும் ஆளுடைப் பிள்ளையார், ஐந்துமுதல் ஏழுமாத அளவில் செய்யும் குழந்தைகள் செய்யும் செங்கீரையாடலைச் செய்தார் என்பது நிகழ்வு. தலையை உயர்த்தி நோக்கிக் குழந்தைகள் தவழும்; காழிப்பிள்ளையார் சைவம் தழைத்தோங்க அவதரித்தவர். ஆகவே அவர் தலையெடுத்து நிமிர்ந்தது ‘அரிய வேதங்கள் தலை எடுக்கும்படிச் செய்யவே தலையணையிற் பதிந்த திருமுடியை மேலெடுத்தார்’ என்பது போன்றிருந்தது என்றார் சேக்கிழார். மேலும், தவழும் குழந்தை முகத்தைப் பக்கவாட்டிலும், மேலும் கீழும் அசைக்கும்; அது, ‘சிவபிரானுடைய தொண்டைத்தவிர பிறிதொன்றினையும் செய்யோம்’ என்பது போல இருந்தது என்கிறார்.

            அற்புதமான, பொருத்தமான கற்பனை!

            ஒன்பதாம் மாதம் ஆளுடைப் பிள்ளையார் சப்பாணி கொட்டுவதனைப் புலவர்பெருமான் பாடுகிறார். சப்பாணிப்பருவத்துப் பாடுபொருள் குழந்தையின் கைகள்தாம். “நாம் சைவமன்றி மற்ற பரசமயங்களை அறியமாட்டோம். ஆதலின் எம்மருகே வாராது தொலைவில் சென்றுவிடுங்கள்,” என்று கூறுவதுபோன்று சிறுகைகளை இணைத்துச் சப்பாணி கொட்டினாராம். “அளவுமீறி எம்மருகே வந்து தீங்கு விளைக்காமல், தூரத்தே சென்று விடுங்கள்,” எனக்கூறுவது போன்றிருந்ததாம். மேலும் கைகளைச் சேர்த்து ஒத்தியெடுத்துச் சப்பாணி கொட்டியது சிவபெருமானிடத்துப் பிற்காலத்தில் கைத்தாளம்பெற வேண்டியதனைப் போலும் இருந்ததாம்!

            ‘நாமறியோம் பரசமயம் உலகிலெதிர் நாடாது

          …………………………………………. புனிதன்பால்

          காமருதா ளம்பெறுதற் கொத்துவதும் காட்டுவபோல்

          தாமரைச் செங்கைகளினால் சப்பாணி கொட்டினார்.’ என்பது சேக்கிழார் பாடல்.

            இவையனைத்தும் சைவம் தழைக்க வந்துதித்த பிள்ளையாருக்கு சேக்கிழார் பெருமானின் பக்தியில் உதித்தெழுந்த கவியுக்தி செறிந்த கற்பனைகள்.

            தொடர்ந்து காழிப்பிள்ளையார் தவழ்தலைக் கூறியவர், அடுத்து வருகைப் பருவத்தைக் குறித்துப் பாடுகிறார். தவழும் குழந்தை எழுந்து தளர்நடை நடக்க விழைந்து தாயும் தந்தையும் மற்றோரும் வேண்டுவதனை அடுத்த பாடலில் விளக்கியருளுகிறார்.

            மறைக்குலத்தைச் சார்ந்த பெண்டிரும், தாதிமார்களும் பலவிதமாகக் குழந்தையை ‘எம்மிடம் வருக’வென அழைக்கின்றனர். “சீர்காழி நகர்வாழ் மக்களுக்கு சிறப்புச்செய்ய உதித்த செல்வமே!” என்றும், “கவுணிய குலத்தோரின் கற்பகமே!” என்றும் விளித்தனர். இவ்வாறு அழைத்தவர்களின் முகத்தை நிமிர்ந்து நோக்குகின்றார் காழிப்பிள்ளையார். அவருடைய திருமுகத்தில் குறுநகை மலர்ந்து பொலிகின்றது. காண்போர் உள்ளங்களும் பெரும்களி கொள்கின்றன.

            அது மட்டுமா?

            பத்துப் பதினொன்று மாதங்கள் நிரம்பிய சிறு மகவான பிள்ளையார், ஓடோடி வந்து தம் தாய் பகவதி அம்மையைத் தழுவிக் கொள்கின்றார்; புறம் புல்குகின்றார்; இறுக அணைத்துக் கொள்கின்றார். தாயின் உள்ளமும் உடலும் சோர, உணர்வு உருகிக் கரைய, பேரின்பம் பெருக்கெடுக்கின்றது. தம் பால் வந்த மகவினை அன்னையும் மற்றவரும் இவ்வாறெல்லாம் போற்றுகின்றனர்.

            ‘திருநகையா லழைத்தவர்தம் செழுமுகம்கண் மலர்வித்தும்

          வருமகிழ்வு தலைசிறப்ப மற்றவர்மேல் செலவுகைத்தும்

          உருகிமனம் கரைந்தலைய உடனணைந்து தழுவியும் முன்

          பெருகிய இன்புறவளித்தார் …………….’ என்கிறார் சேக்கிழார் பெருமான்.

            இங்ஙனம் குழந்தை செய்யும் செய்கைகளால் தாயும் மற்றோரும் எவ்வாறு இன்புற்றனர் எனச் சிறப்பாகக் கூறியுள்ளார்.

            பெரியாழ்வார் ஒருவரால் மட்டுமே பாடப்பட்ட பருவமான தளர்நடை நடப்பதையும் புலவர் பாடியுள்ளார். சைவம் தழைக்க வந்துதித்த பிள்ளையாரின் சிறப்பை ஒவ்வொரு பாடலிலும் சிறப்பாக எடுத்துரைத்துள்ளதொன்றே சுவையாக உள்ளது. கிளரும் ஒலியினைக் கால்களில் அணிந்த கிண்கிணிகள்  எழுப்புமாறு ‘கீழ்நெறிகளைக் காட்டும் சமயங்கள் தள்ளாடி நீங்கும்படி’, தனது திருமேனி அசையும் தோறும் தனது சுருண்ட குஞ்சியும் நெற்றியில் அலைய, தாமும் தளர்நடையிட்டு அருளினார் என்கின்றார்.

            வளர்ந்து வரும் குழந்தையைப் பாடும்போதில், ஆண்பால் பிள்ளைத்தமிழின் கடைசிப் பருவங்களான சிறுதேர், சிற்றில் ஆகியனவற்றையும் கூறாமல் இருக்க இயலுமா?

            அழகான சிறுதேரைப் பற்றிக் கொண்டு பிள்ளையார் உருட்டிச் செல்கிறார். மணலைக் கொழித்து, சிற்றில் எனும் சிறுவீடுகளை இழைத்து விளையாடும் பேதைச்சிறுமியர் இருக்குமிடங்கள்தோறும் ஓடியும் நடந்தும் சென்று அவற்றைக் காலால் தொடர்ந்து அழித்து விளையாடினார். இவ்வாறு விளையாடியதனால் மேனி முழுதும் வியர்வைத்துளிகள் அரும்பின. அதனுடன் திருநீற்றைப் பூசிய கோலமும் ஒருசேர வீதிமுழுதும் திருவொளி பரப்ப வளர்ந்து வந்தார் எனக்கூறி, ஆளுடைய பிள்ளையாரின் மழலைப் பருவத்தினை அழகுறப் பாடியருளியுள்ளார் சேக்கிழார் பெருமான்.

            ‘சிறுமணிதேர் தொடர்ந்துருட்டிச் செழுமணல் சிற்றில்களிழைக்கும்

          நறுநுதற்பே தையர்மருங்கு நடந்தோடி அடர்ந்தழித்தும்,

          குறுவியர்ப்புத் துளியரும்பக் கொழுப்பொடியா டியகோல

          மறுகிடைப்பே ரொளிபரப்ப வந்து வளர்ந்தருளும்……’ என்பது பாடல்.

            பிள்ளைத்தமிழின் இனிமையை, சுவையைக் கொண்டிலங்குகின்றன இப்பாடல்கள் என்பது மிகையேயில்லை!

————————-

            பிள்ளையைத் தமிழால் பாடுவது எனும் பொருளில் அமைந்தது பிள்ளைத்தமிழ் என்னும் தனித்தன்மை வாய்ந்த ஒப்பற்றதொரு சிற்றிலக்கியம். இறைவி, இறைவன், பெரியோராகிய இறையடியார்கள், வள்ளல்கள், அரசர்கள், ஆசிரியர்கள் ஆகியோருள் ஒருவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு கற்பனை பலவற்றை அமைத்து இச்சிற்றிலக்கியம் பாடப்படும். இவர்களின் அரும்பெரும் செயல்களை காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபறை எனும் ஆண்பால் பிள்ளைத்தமிழின் பத்துப் பருவங்களில் நயமாக இணைத்துப்பாடி மகிழ்ந்தனர் புலவர்கள்.

            ‘குழவி மருங்கினும் கிழவதாகும்,’ எனத் தொல்காப்பியம் இதற்கு இலக்கணம் வகுக்கின்றது. தொல்காப்பியத்திற்குப் பின் 1000 ஆண்டுகள் கழித்து, 9-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெரியாழ்வார், கிருஷ்ணனைக் குழந்தையாக்கி ‘திருமொழி’ பாடினார். மேற்கூறிய பருவங்களுள் பல இதில் நயமுறப் பாடப்பட்டுள்ளன. இதுவே பிற்காலத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது எனலாம்.

            இருப்பினும் இடைப்பட்ட காலத்தில், 6- 11ம் நூற்றாண்டுகளில் பெரும்வளர்ச்சியடைந்த சைவ, வைணவ சமயநூல்களிலும் அக்கடவுள்களின் மீதோ அல்லது அரசர்கள்மீதோ, தனிப்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்கள் பாடப்படவில்லை. சைவம் சிவபிரானையே முழுமுதற் கடவுள் எனப்போற்றினாலும், அவன் ஒரு தாய் வயிற்றிற் பிறவாத பிறப்பிலிப் பெருமான் ஆதலால் அவன்மீது பிள்ளைத்தமிழ் பாடலாகாதென்பது நியதி; ஆகவே சைவசமயக் குரவர்கள் எவரும் பிள்ளைத்தமிழ் பாடவில்லை.

            இக்காலத்தையடுத்து முதன்முதலாக ஒரு பிள்ளைத்தமிழ் நூல் மன்னன் அநபாயசோழன் எனும் இரண்டாம் குலோத்துங்கன் மீது ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டுள்ளது. இவர்கள் காலம் 12-ம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். குலோத்துங்கனின் அவையை அலங்கரித்த அவனுடைய அமைச்சரும், சைவ அடியாருமான சேக்கிழாரால் இதே காலகட்டத்தில் பெரியபுராணம் இயற்றப்பெற்றுப் பெரும்புகழையும் சிறப்பையும் அடைந்தது.

            ஒட்டக்கூத்தர் எனும் பெரும்புலவரின் ‘குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்’ எனும் நூலின் நயத்தில் ஆழ்ந்ததனாலோ என்னவோ, சேக்கிழார் பெருமானும் தாமியற்றிய திருத்தொண்டர் புராணமெனும் பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தர் வரலாற்றைப் பாடும்போது அதில் சம்பந்தர் எனும் குழந்தை அவதரித்து பிள்ளைத்தமிழின் பருவங்களுக்கேற்ப அழகாக நன்கு வளர்ந்ததனை 27 பாடல்களில் மிக அழகாக வருணனை செய்துள்ளார். அதுவே நாம் மேற்கண்ட செய்திகளாகும்.

            இங்கு ஒரு கருத்தைச் சிறிது ஆழ்ந்து நோக்க வேண்டும். சேக்கிழார் பெருமான் ஒட்டக்கூத்தர் காலத்தவர். அதே அரசவையில் அமைச்சராக இருந்தவர். ஒட்டக்கூத்தர் குலோத்துங்கனின்மீது இயற்றிய பிள்ளைத்தமிழின் தாக்கம், அச்சிற்றிலக்கியத்தின் பல கூறுகள் ஆகியன காழிப்பிள்ளையாரின் வளர்ப்பினை விவரிக்கும் பகுதியிலும் காணப்படுவது அருமையான ஒற்றுமை எனலாம். முறையாக எழுந்த முதல் பிள்ளைத்தமிழ் நூல் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழே. தம் காலத்துச் சக புலவர் ஒருவரைப் போற்றும் விதமாகவும் அவர் பாடிய முதல் சிற்றிலக்கிய நூலொன்றின் கூறுகளைத் தாமியற்றிய காப்பியத்திலும் இணைத்தது சேக்கிழார் எனும் புலவர்பெருமானின் பெருந்தன்மையைச் சுட்டுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. திருஞானசம்பந்த நாயனார் புராணத்தில் நிகண்டுகள் வகைப்படுத்தும் பிள்ளைத்தமிழின் பருவங்களான, காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, வருகை, சிற்றில், சிறுதேர் இவற்றுடன் இடையே விரவி வரும் சில பருவங்களான அன்னையை அணைத்துக் கொள்ளுதல், புறம் புல்குதல், தளர்நடை நடத்தல் ஆகிய பருவங்களும் காணப்படுகின்றன. இப்பருவங்கள் ஒன்பதாம் நூற்றண்டுக் காலத்தவரான பெரியாழ்வார் ஒருவரால் மட்டுமே பாடப்பட்ட பருவங்களாகும் (இவை நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் உள்ளவை). ஆகவே சேக்கிழாருக்கு வைணவ இலக்கியங்களிலும் பரிச்சயம் இருந்தது எனக் கொள்ளலாமா?

            எது எவ்வாறாயினும், நாம் ஆன்மீகம் சார்ந்த இலக்கியங்களைப் படிக்கும்போழ்து அவற்றின் பொருட்சுவை, பக்திச்சுவை, கற்பனைவளம், சமகாலப் புலவர்களின் தாக்கம் ஆகியனவற்றை வியந்து பாராட்டாமல் இருக்கவியலாது. சேக்கிழார் பெருமானின் காப்பியத்துள் திகழும் சிற்றிலக்கியக் கூறுகள் இவை. இறையருள் ஒன்றினாலேயே இத்தகு புலமை கைகூடும் என்பது கண்கூடு!

            இதுதவிர, ஞானசம்பந்தப்பெருமான் மீது பிற்காலத்தில் ஐந்து பிள்ளைத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டுள்ளன என அறிகிறோம்.

  1. திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்- திருவாவடுதுறை ஆதீனத்து மகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ

                 மாசிலாமணித் தேசிக சுவாமிகள்- 17ம் நூற்றாண்டு.

  1. நால்வர் பிள்ளைத்தமிழ்- காரைக்குடி ராம. சொ. சொக்கலிங்கச் செட்டியார்
  2. திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்- தணிகைமணி செங்கல்வராய பிள்ளை.

மற்ற இரண்டினைப் பற்றிய செய்திகள் கிட்டவில்லை.

            பிள்ளைத்தமிழின் கூறுகளைக் கொண்டமைந்த சேக்கிழார் பெருமானின் இப்பெரியபுராணப் பாடல்கள் பிற்காலப் பிள்ளைத்தமிழ் நூல்களில் காணும் சொல்நயம், கருத்துவளம், கற்பனை அனைத்திலும் சிறந்து விளங்குகின்றன எனக் கண்டோம்; மகிழ்ந்தோம்.

            தென்னாடுடைய சிவனே போற்றி!

            எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

                                                ————–

ஆய்வுக்கு உதவிய நூல்கள்:

            பன்னிரு திருமுறைகள்: பெரிய புராணம்- வர்த்தமானன் பதிப்பகம், சென்னை. 1998.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “காழிப்பிள்ளைக்கு சேக்கிழார் பாடிய பிள்ளைத்தமிழ்!

  1. நயமான கட்டுரை . கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *