படக்கவிதைப் போட்டி – 189
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
பார்கவ் கேசவன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (01.12.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
இலட்சியப் பாதை
இருமருங்கிலும் பசுமை
இதமான தென்றல்
இனிமையான சூழல்
இளமையின் தேடலுக்கு
இயற்கையின் கொடை
இன்றுதான் பிறந்தோமோவென
இதயங்களைப் பூரிப்பாக்கும்
இன்பக் கனவுகளை
இதழோரம் இசைக்கவைக்கும்
இல்லங்களின் இன்பவுலா
இங்கல்லவோ முழுமையடையும்
இலக்கியங்களின் இயற்கையையும்
இணையற்றதாக்கிடுமே
இலட்சியப் பாதை இத்தகையதோவெனில்
இல்லையென்றே இயம்பிட இயலும்
இருளும் இடர்களும்
இடையூறாக நெருக்கிடினும்
இறை பேராற்றலுடன்
இடையறாது இயன்றால்
இறுதிவரை உறுதியாக
இலட்சியப்பாதை இனித்திடுமே…
முனைவர் மு.புஷ்பரெஜினா
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, தஞ்சாவூர்.
நேர்மறை எண்ணம்..!
===================
நேரான பாதைபோல் நேர்மறை எண்ணம்கொள்.!
சீரான சிந்தையைச் சிந்தியே..! – போராடி
வாழ்க்கையில் பெற்றநல் வெற்றியே நிற்குமது
வாழ்க்கைக் குதவும் வழி..!
============================
இரு விகற்ப நேரிசை வெண்பா
============================
எங்கே போகிறோம்
______________________
போய்சேரும் இடம் அது தெரியாமல்
சாலை அது சிறப்பாய் இருந்து பயன் இல்லை
நோக்கம் அது இல்லா வாழ்வும் என்றும்
சிறப்பாய் இருக்க சாத்தியம் இல்லை
தொலைநோக்கும் பார்வை ஒன்று வேண்டும்
அதை நோக்கி பாதை போட வேண்டும்
வழி நடத்தி செல்ல
யாரையும் எதிர்பார்த்து நீ இருந்தால்
அவர் பாதையில் நீ நடக்க
கொண்ட நோக்கம் அது மாறிப்போகும்
பகுத்தறிவோடு நீ இருந்து
கொண்ட நோக்கம் தனை நோக்கி
புதிய பாதையை நீ அமைத்திடு
எழுச்சி ஒன்று நெஞ்சில் வேண்டும்
கணவாய் அது தோன்ற வேண்டும்
இயற்கையோடு கை கோர்த்து தினம் போராடு
மரங்களின் நிழல் கூடஒளியாய் உன்னை தொடர்ந்திடும் பாரு
புகைப்படத்தில் தோன்றும் பாதையில் கூட
இரு புறம் இருக்கும் மரத்தின் நிழலது
இடைவெளி விட்டு தோன்ற ஏணிப்படிகளாய் தோன்றியதே
முன்னேறும் பாதை இது என்று உணர்த்தி
தடை ஏதும் இன்றி முன்னேறி வர அழைப்பு விடுத்தனவே
பயம் அதை போக்கிடு இன்றோடு
தைரியமாய் முன்னேறு வெற்றி தொடர்த்திடும் உன் பின்னோடு
பாதை காட்டும் வாழ்வியல்..!
பாதையென் ருந்தாலே பள்ளமும் மேடுமுண்டு
காதையும் தீட்டியே கண்ணையும் பாதைமேல்
வைத்தால்தான் உண்டுநல் வாழ்க்கைப் பயணம்.!
அனுபவத் தால்நீ அறி..!
==============================
பல விகற்ப இன்னிசை வெண்பா
==============================
மகிழ்ச்சிப் பாதை
_________________
கட்டிடக் காடுகள்
கணிசமாகிப் போன நகரில்
ஆரவாரத்துடன் காலையில்
அவசரமாகக் கிளம்பி
வாகன நெரிசலிலே
வகையாகச் சிக்குண்டு
அலுவலகம் சென்றமர்ந்து
அலுக்காமல் பணி செய்து
மாலை வேளையிலே
மரங்களற்ற சாலையிலே
மாசுபட்ட காற்றால்
மனம் துயர் படும்போது
தெவிட்டாத இன்பமூட்டம்
தெளிவான இப்படம்
நல்ல காற்றை சுவாசிக்க
நானும் நண்பர்களும்
கடந்த வருட விடுமுறையில்
கண்டுவந்த மலைப்பாதை
கைபேசியில் இப்போ
காட்சியாய் கண்முன்னே
காலத்தால் அழியாது
கடுகளவும் மாறாது
நிழலாகத் தொடரும்
நிஜமான இப்பாதை.
– நாங்குநேரி வாசஸ்ரீ
(பத்மா ஸ்ரீதர்)
இயற்கையின் அன்னையின் குமுறல்
————————————————————
கரடு முரடாய் காடாய் களிப்போடு
சுதந்திரமாய் நான் இருந்தேன்
என்னை கடப்பது கடினம் என்று
சுலபமாய் சென்று வர
சாலைக்கு சம்மதித்தேன்
சாலையோரம் நான் இருந்து
களைப்பாற நிழல் தந்தேன்
போக்குவரத்துக்கு பெருகிட
பல வழி சாலை அமைத்திட
என்னை அழித்திட முயன்றாயே
வானம் பார்த்த பூமியாய் ஆகாமல்
உன்னை காத்து நிற்பேன் சாமியாய்
நான் இருக்கும் காலம் வரை என்று
உரைத்து நின்றதோ இயற்கை அன்னை
அழிக்காதீர்…
காட்டுப் பகுதிச் சாலையிதைக்
கண்டு களிப்பீர் மானிடரே,
வேட்டை யாடும் நீங்களிந்த
வனப்பை யழித்திட வேண்டாமே,
காட்டுப் பாதையை விரித்திடவே
கரையில் மரத்தை வெட்டவேண்டாம்,
போட்டது போதும் வனமழித்து
போட வேண்டாம் வறட்சிவழியே…!
செண்பக ஜெகதீசன்…
வாழ்க்கைப் போராட்டம்..!
===========================
நேரான பாதை நெடும்பயண வாழ்க்கையை
போராடி வெல்லப் புறப்படு..! – போராட்டம்
இன்றியே வாழ்க்கையும் இல்லை புரிந்தபின்
என்று மெதுவும் எளிது..!
===============================
இரு விகற்ப நேரிசை வெண்பா
===============================
கஜா புயல் ஓர் விபத்து..
=====================
தெளிவான பாதையிலே தென்னை மரமும்
புளியமரம் வீழ..! புயலால் – எளியோர்
குடிசைகளும் சாய்த்துக் கொலையும் புரிய
விடியலில் நேர்ந்த விபத்து.!
============================
இரு விகற்ப நேரிசை வெண்பா
============================