Blog

  • ஹடினெலன்டு – திரை விமர்சனம்

    ஹடினெலன்டு – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    ஹடினெலன்டு (Hadinelentu / Seventeeners) என்ற கன்னடப் படத்தைப் பார்த்தேன். 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவனும் மாணவியும் பள்ளி வகுப்பறையிலேயே உறவு கொண்டு, அதை அவர்களே நிகழ்படமாக எடுக்கிறார்கள். பிறகு அது இணையத்தில் கசிந்து பரவுகிறது. அதைத் தொடர்ந்து பள்ளியிலும் நீதிமன்றத்திலும் நடைபெறும் பரபரப்பான விசாரணைகளும் திருப்பங்களுமாகப் படம் விறுவிறுப்பாகச் செல்கிறது.

    இதில் சாதி, வயது, சட்டங்கள், அணுகுமுறைகள் உள்ளிட்ட பலவும் ஒரு சம்பவத்தை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகின்றன என்பதை இயல்பாகக் காட்டியுள்ளார்கள்.

    படத்தின் தொடக்கத்தில் பள்ளி முடிந்ததும் ஒருவர் எல்லா வகுப்பறைகளையும் பூட்டுகிறார். பெண்மணி, வகுப்பறை வராண்டாக்களைப் பெருக்கித் தூண்மை செய்கிறார். மாணவனை அழைத்துக்கொண்டு மாணவி, ஒரு வகுப்பறையின் உள்ளே நுழைகிறார். புகுந்து கதவையும் ஜன்னலையும் மாணவியே உள்புறமாகச் சாத்துகிறார். தங்கள் பைகளை இறக்கி வைக்கிறார்கள். மாணவன், ஐ லவ் யூ என எழுதிய சங்கிலியை மாணவிக்குப் பரிசளிக்கிறார். அடுத்து, மாணவன் தன் ஆடைகளைக் களைய முயல்கிறார். அதை அந்தப் பெண்ணே தன் செல்பேசியில் வீடியோ எடுக்கத் தொடங்குகிறார். மாணவன் அந்தச் செல்பேசியைப் பறித்து, நீ முதலில் என்று அந்தப் பெண் உடை களைவதை வீடியோ எடுக்கிறார்.

    இப்போது இந்தக் காட்சியை நாம் ஆராயலாம்.

    படத்தின் பெரும்பகுதி நம்பகத்தன்மையுடனும் லாஜிக் எனப்படும் தருக்கத்தின் அடிப்படையிலும் அமைந்துள்ளது. ஆனால், படத்தின் ஆதாரமான இந்தக் காட்சியில் நம்பகத்தன்மை இல்லை.

    மாணவி, அந்த மாணவனை அழைத்துக்கொண்டு செல்வது ஏன்? உறவு கொள்ளும் முயற்சியை மாணவி முன்னெடுக்கிறாரா? அவ்வளவு சகஜமாக, சாதாரணமாக வகுப்பறையின் கதவு, ஜன்னல்களை மூடுவது எனில், இது பழகிய இடமா? சிறிய அச்சமோ தயக்கமோ இல்லையே. ஏற்கெனவே இவ்வாறு செய்துள்ளார்களா? இதை மாணவி ஏன் வீடியோ எடுக்க வேண்டும்? இது திட்டமிட்ட செயலா? இந்த அறையை ஏன் அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்? இந்த அறையைப் பணியாளர்கள் பூட்டாதது ஏன்? மாணவர்கள் வெளியேறிச் செல்லும்போதும் பள்ளியில் யார் கண்ணிலும் படவில்லையா?

    இதில் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தேடினால், படத்தின் பலவீனம் புரியும். இந்த வீடியோ, இணையத்தில் வைரல் ஆகிறது. பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். ஆனால், யாரும் இதைப் பற்றிக் கேட்கவில்லை. பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம், காவல் துறை, நீதிமன்றம் உள்ளிட்டவை, இந்தக் கேள்விகளை நுணுக்கமாக எழுப்பவில்லை.

    தாங்கள் செய்யும் விளைவுகள் குறித்து, இதில் ஈடுபட்ட மாணவர்களுக்குத் தெரியாதா? இதை வீடியோ எடுப்பதும் பகிர்வதும் எத்தகைய சிக்கல்களைக் கொண்டு வரும் என்று அவர்களுக்குத் தெரியாதா? வீடியோ கசிந்தது ஒரு விபத்தாக இருக்கலாம். ஆனால், பெண் இயல்பிலேயே விழிப்புணர்வுடன் இருப்பவள். பட்டப் பகலில் உறவு கொள்வதை அவரே வீடியோ எடுக்கிறார். அல்லது அப்படி கேமரா எதிரில் உறவு கொள்ளச் சம்மதிக்கிறார் எனில் இது நம்பும்படியாகவா இருக்கிறது?

    படத்தின் முடிவிலும் ஒரு லாஜிக் சிக்கல் இருக்கிறது. மாணவன், தானே அதை ஒரு பேஸ்புக் நண்பருடன் பகிர்ந்ததாகச் சொல்லிவிட்டுப் பிறகு மறுக்கிறான். மாணவியின் வழக்கறிஞர், இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுகிறார். மாணவனின் பேஸ்புக் கணக்கை ஆராய்ந்தால் (அது நீக்கப்பட்டிருந்தாலும்) பகிர்ந்தாரா, இல்லையா என்பது தெரிந்துவிடும். இதை ஏன் அவர் செய்யவில்லை?

    படத்தின் மையச் சிக்கல், பதின் பருவத்தினர் உறவுகொள்வதையும் அதை வீடியோ எடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்பதை மையப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், இதில் ஈடுபடுவோரின் வயதே பிரதான சிக்கல் என்பதாகப் போய் முடிகிறது. கதை, வசனம் எழுதி இயக்கிய பிரித்வி கோனனூர், இந்தச் சிக்கல்களைத் தவிர்த்திருந்தால், வேறு வகையில் கையாண்டிருந்தால், இன்னும் சிறப்பாக இந்தப் படம் வந்திருக்கும்.

    எனினும், இது தரமான படம். பதின்ம வயது இளைஞர்களுக்கு இந்தப் படம், நல்ல பாடம் புகட்டும். ஷெர்லின், நீரஜ் மேத்யூ, ரேகா குட்லிகி, பவானி பிரகாஷ் உள்பட நடித்தவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். எனவே தமிழிலும் இதர மொழிகளிலும் மொழிமாற்றி வெளியிடலாம்.

    முழுப் படமும் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் இடைவெளியிலும் இறுதியிலும் கியூ ஆர் குறியீடுகள் காட்டப்படுகின்றன. வாய்ப்புள்ளவர்கள் நன்கொடை அளிக்கலாம்.

    Share
  • வைரமுத்து சறுக்கிவிட்டாரா?

    வைரமுத்து சறுக்கிவிட்டாரா?

    அந்நியன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ சுகுமாரி’ பாடலை நேற்று வானொலியில் ஒலிபரப்பினார்கள். அப்போதுதான் கவனித்தேன். இந்த வரிகள் என்னை உறுத்தின.

    காதலை மறைத்தால்
    கனம் தாங்காமல்
    என்னுயிர் செத்துப்போகும் இல்லையா!

    காதலைச் சொல்லி
    இல்லையென்று மறுத்தால்
    காதலே செத்துப்போகும் இல்லையா!

    காதலின் வலியைச் சொல்லும் இடத்தில், ‘செத்துப்போகும்’ என்ற வார்த்தை வந்திருக்கக் கூடாது. இது கேட்கும்போது, அமங்கலமாய் இருக்கிறது. மேலும், அந்தக் காதல் உணர்வுக்குப் பொருந்தும் வகையிலும் இல்லை. காதலி ஏற்க மறுத்தால், காதல் எப்படிச் செத்துப் போகும்? அது காதலனிடம் அப்படியே தானே இருக்கும்? வைரமுத்து இங்கே சறுக்கிவிட்டாரா?

    Share
  • குறளின் கதிர்களாய்…(505)

    குறளின் கதிர்களாய்…(505)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(505)

    கடுஞ்சொல்லன் கண்ணில னாயி னெடுஞ்செல்வம்
    நீடின்றி யாங்கே கெடும்.

    -திருக்குறள் – 566 (வெருவந்த செய்யாமை)

    புதுக் கவிதையில்…

    எல்லோரிடமும்
    கடுஞ்சொல் சொல்பவனாய்,
    இரக்க குணம்
    இல்லாதவனாய்
    அரசன் அமைந்துவிட்டால்,
    அவனது பெருஞ்செல்வமும்
    அவனிடம் நிலைத்து நிற்காமல்
    அப்பொழுதே
    அழிந்துபோகும்…!

    குறும்பாவில்…

    கடுஞ்சொல் சொல்பவனாய் இரக்கமே
    இல்லாதவனாய் அரசன் இருந்தால், அவனது
    பெருஞ்செல்வமும் நிலைக்காதே அழியும்…!

    மரபுக் கவிதையில்…

    நாட்டை யாளும் மன்னனவன்
    நல்ல வார்த்தை பேசாமல்
    காட்ட மான கடுஞ்சொல்லைக்
    கனிவே யின்றி உரைப்பவனாய்,
    காட்டும் நெஞ்சில் இரக்கமது
    கடுகின் அளவும் இலாதவனாய்
    நாட்டுக் கமைந்தால் அவன்செல்வம்
    நலிந்தே அழியும் நிலைக்காதே…!

    லிமரைக்கூ…

    சொல்பவனாய்க் கடுமையான சொல்லை,
    இரக்கம் இல்லாதவனாயும் மன்னன் இருந்தால்
    அவன்செல்வம் நிலைத்திருப்பதே யில்லை…!

    கிராமிய பாணியில்…

    செய்யணும் செய்யணும்
    நல்லதே செய்யணும்
    நாட்டு ராசா,
    மக்களுக்கு
    நன்ம தராதத
    செய்யாம இருக்கணும்..

    கடுஞ்சொல்லு
    சொல்லுறவனாயும்
    எரக்கமே இல்லாதவனாயும்
    ராசா இருந்தா
    அவனோட பெருஞ்செல்வமும்
    அவங்கிட்ட நெலச்சி நிக்காம
    அழிஞ்சியே போவும்..

    அதால
    செய்யணும் செய்யணும்
    நல்லதே செய்யணும்
    நாட்டு ராசா,
    மக்களுக்கு
    நன்ம தராதத
    செய்யாம இருக்கணும்…!

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 31 [கவிஞர் பொன்மணிதாசனின் கவியாளுமை]

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 31 [கவிஞர் பொன்மணிதாசனின் கவியாளுமை]

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    கவிஞர் பொன்மணிதாசனின் கவியாளுமை

    முன்னுரை

    கவிஞர்கள் வறுமைக்கு ஆட்பட்டிருந்தபோது கவிதைகள் செழுமையாய் இருந்தன. அவர்கள் கொஞ்சம் வசதியாய் வாழ்கிறபோது கவிதைகள் வாடிப்போயிருக்கின்றன. இது பெரும்பான்மை பற்றிய கருத்து. ‘சேர்ந்தே இருப்பது புலமையும் வறுமையும்’ என்பது பொருளற்ற தொடர் அன்று. மகாகவி பாரதியைத் தொடர்ந்து பாவேந்தர் தமிழ்க்கவிதையுலகைத் தன்னாட்சிக்கு உட்படுத்தினார். அவருக்குப் பிறகு பெருஞ்சித்திரனார், சுரதா, வாணிதாசன், முடியரசன், கண்ணதாசன், கம்பதாசன், தமிழ்ஒளி ஆகியோர் தமிழ்க்கவிதையுலகைத் தம் கவிதைகளால் அலங்கரித்தனர். ஆட்சி செய்தனர். அவர்களுக்கும் பின்னாலே அதாவது இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அப்துல்ரகுமான், மீரா, முருகுசுந்தரம், தமிழன்பன், மேத்தா, சிற்பி, பொன்னிவளவன், தணிகைச் செல்வன், தாராபாரதி வரை இது நீண்டது. கலைஞர் ஆற்றல்மிக்க அரசியல்வாதியாக இருந்து கொண்டே தமிழ்க்கவிதையின் சாரங்களை அவ்வப்போது தாம் தலைமையேற்கும் கவியரங்கங்களுள் பிழிந்து வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் என்ன ஆனதோ தெரியவில்லை. இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கம் தமிழ்க் கவிதைகளுக்கு அஸ்தமன காலமாகியிருக்கிறது. ஆறு கோடி தமிழர்கள் என்றால் ஏழு கோடி கவிஞர்கள் இருக்கிறார்கள். எட்டு கோடி பட்டங்கள் இருக்கின்றன. ஏழரைக்கோடி விருதாளர்கள் இருக்கின்றன. கவிதைதான் ஒன்று கூடக் கண்டபாடில்லை. “இந்த நிலையை மாற்ற வேண்டும்.  மீண்டும் தமிழ்க்கவிதை மக்கள் இயக்கமாக மாறவேண்டும்” என்று எண்ணுபவர்கள் எண்ணிக்கையில் சிலர். அந்தச் சிலருள் நாகை பொன்மணிதாசனும் ஒருவர். இவருடைய கவிதைகளை நான் தொடர்ந்து முகநூலில் படித்து வருகிறேன். அவருடைய கவியாளுமையை ஒரு சில சான்றுகளால் இந்தக் கட்டுரை விளக்க முற்படுகிறது.

    கவிதைகள் அருகிப் போனது ஏன்?

    கவிஞர்கள் அருகிக் கவிதைகள் சிறக்குங்காலம் கவிதைக்கு வசந்த காலம். கவிஞர்கள் பெருகிக் கவிதைகள் அருகிப்போவது நசிந்த காலம். இலக்கணத்தைச் செய்யுள் வழியாகக் கற்ற காலம் ஒன்றிருந்தது, மக்கட்தொகை குறைந்த காலத்து, ஆழ்ந்த படிப்பும் தெளிவான சிந்தனையும் உடையவர்கள் கவிதைகளுக்கான சட்ட வரம்புகளைத் தகுந்த தகுதியான சான்றோர்களிடம் கற்றறிந்த காலம் அது. கவிதைகளுள் செழுமையும், அடர்த்தியும் அழகியலும் ஆழ்ந்த கருத்தும் பன்முக நுண்ணியமும் கலந்து கவிதை மிளிர்ந்ததற்கு அந்தச் சூழல்தான் காரணம். அந்தப் பழக்கம் சிறுகச் சிறுகக் குறைந்து பின்னாலே அதாவது தற்காலத்தில் யாப்பறிந்த சிலபேர் பொருள்நோக்கத்தோடு யாப்பிலக்கணத்தை முழுமையான பார்வையின்றி, விதிவிலக்குகள் பற்றி அறியாது, ஒழிபியலை நோக்காது தங்களுக்குத் தோன்றியவாறே இலக்கணம் என்ற பெயரில் எதையெதையோ கற்பித்து வருகின்றனர். இதனைவிடக் கொடுமை என்றால் யாப்பிலக்கணந்தான் கவிதை அதாவது ஒரு கருத்து யாப்பில் வந்து அமைந்து விடுமானால் அது கவிதையாகிவிடும் என்ற தவறான புரிதல் காழ்கொண்டு விட்டதாகும். யாப்பு ஒரு கருவி என்னும் நிலைப்பாட்டிலிருந்து விலகி அதுதான் மூலப்பொருள் என்ற நிலைக்குச் சென்று விட்டது, படிக்கின்ற பழக்கம் குறைந்து போனது. மலிந்து போன உணர்ச்சிகளைப் பாடுபொருளாக்குவது. தலைவர்களைப் பாடுவதையே பிறவிப்பயன் என எண்ணிவிடுவது இப்படிப் பல காரணங்களால் கவிதைகள் சவலைகளாகிவிட்டன.  இயற்கை அசைவுகளுக்கும கவிதைகளுக்கும் இருக்கும் இசைவை உணர்ந்து அனுபவித்தவர்கள் எண்ணிக்கையில மிகவும் குறைவு என்பதும் ஒரு முக்கியமான காரணம்.  ‘அழகின் சிரிப்பு’ போல ஒரு பாவியத்தை இனித் தமிழில் காணமுடியுமா என்பது விடைகாண முடியாத வினாவாக நிற்கிறது. சிறந்த தத்துவஞானியாக இல்லாதவன் கவிஞனாக முடியாது என்னும் கோட்பாட்டைப் புறக்கணித்ததும், தத்துவப் பார்வையே இல்லாமல் போனதும் கவிதைகள் அருகிப் போனதற்கு இன்றியமையாக் காரணிகள் ஆகும். பட்டினத்தாரையோ, பாரதியையோ பாரதிதாசனையோ, கண்ணதாசனையோ தமிழ்க்கவிதை உலகம் எதிர்காலத்தில் காணும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. எல்லாவற்றையும் விட தலைமைக் காரணம் ஒன்றுண்டு. அது தற்புகழ்ச்சி!. தஙகளைத் தாங்களே புகழ்ந்து கொள்வதும் அல்லது தங்களைப் புகழ்வதற்காகவே முகநூலில் ஒரு குழுமத்தை உருவாக்கிக் கொள்வதும் வெகுசாதாரணம். இவரை அவர் பாராட்டுவதும் அவரை இவர் பாராட்டுவதுமாகப் போய்விடுவதால் கவிதையின் கசடுகள் கண்ணுக்குத் தெரிவதில்லை. தூர்வாராக் கேணிகள் சுரப்பது எப்படி;?

    முகநூலில் பொன்மணிதாசன்

    பொழுதின் பொன்னான நேரங்களைக் கவிதையில் கழிக்கிறார், கவிதைக்காகவே கழிக்கிறார் பொன்மணிதாசன். நடப்பியல் வாழ்க்கைச் சிக்கல்கள் பல இருப்பினும் நாளும் முகநூலில் அவர் கவிதைகள் வெளிவருவது தடைபடுவதில்லை. தனக்குத் தெரிந்ததைத் தெரிந்து என்று ஒத்துக் கொள்வதைவிடத் தனக்குத் தெரியாததைத் தெரியாது என ஒத்துக் கொள்வதில் அவரிடம் ஒரு பக்குவத்தைக் காணமுடிகிறது.  மரபுவழியான சந்தங்களையும் புதிய சந்தங்களையும் தமது கவிதையாக்கத்தில் கொண்டு வருவதில் முனைப்புக் காட்டி வருபவர். யார் தம்முடைய படைப்பினை எப்படித் திறனாய்வு செய்தாலும் மெய்ப்பொருள் காணுகிற தெளிவு இவருக்கே உரிமை. எழுபது வயது நிரம்பிய இந்த இளைஞரின படைப்புக்கள் சமுதாயத்தின் அனைத்துத் தளங்களிலும் இயங்கும் வல்லமை கொண்டவை.

    வித்தியாசமான தமிழ்த்தாய் வணக்கம்

    தமிழ்க்கவிஞர்கள் பொதுவாகப் பாடுவது தமிழ்த்தாய் வணக்கம்! தமிழைக் கன்னித் தமிழ் ;என்றாலும் அவளைத் தாயாக எண்ணிப் போற்றுவதே தமிழ்க்கவிதை மரபு.

    “பொன்னும் ;பொருளுமொரு மண்ணில் வைரமலை
    என்னை மயக்கவில்லை தாயே! — கேள்!
    பண்ணும் பரதமொடு இன்னும் பலவிருந்தும்
    என்னை மயக்கவில்லை தாயே! — அட
    மின்னல் விழியிரண்டில் கன்னல் மொழியிருந்தும்
    என்னை மயக்கவில்லை தாயே! — நீ
    தன்னந் தனியே வந்து என்னை ஈர்த்துவிட்டாய்
    தாள்களிலே நான் பணிந்தேன் தாயே!”

    என்பது கவிக்கோ துரை வசந்தராசனின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாகும். தாயும் காதலியும் பெண்ணாக இருந்தாலும் தாயன்பிற்கு முன்னால் அவள் பாசத்திற்கு முன்னால் அவள்மீது கொணட பக்திக்கு முன்னால், அவள் தன்மீது வைத்திருக்கும் நேசத்திற்கு முன்னால் கன்னிப் பெண் கடைக்கண் பார்வை எடுபடுவதில்லை என்பதை அழகியல் மீது{ரப் பாடியிருக்கிறார் துரை.வசந்தராசன். அந்த மரபைப் பின்பற்றி,  மரபு வழிச் சிநதனையாளரான பொன்மணிதாசன

    “ஆசையில் மிதக்குமென் அழகான உள்ளத்தை
    நேசிக்கும் நெஞ்சம் கொண்டாள்
    ஓசைக்கும் நயத்துக்கும் ஓருங்கிய உள்ளத்தில்
    உறையத்தான் ஆசை கொண்டாள்”

    தமிழைப்பாடும் பேரவா கொண்ட தன்னுடைய அழகான கள்ளம் கபடமற்ற உள்ளத்தைத் தமிழ்த்தாய் நேசிப்பதாகவும் சந்த நயமும் பொருள் நயமும் நிறைந்த தம் பாடல்களில் தமிழ்த்தாய் விரும்பி வந்து உறைகிறாள் என்று பாடுகிறார். தமிழைத் தேடிப் பாடிவரும் உலகில், தமிழை முன்னிலைப்படுத்திப் பாடிவரும் உலகில், கவிஞனைத் தேடித் தமிழ்த்தாய் வருகிறாள் என்பது கொஞ்சம் வேறுபட்ட சிந்தனை. “தசைநாறு என்புக்கும் தானமாய் தன்னையே தமிழாளும் தந்து நின்றாள்” என்னும் அடியில் தன் எலும்பிலும் சதையிலும் தமிழே கரைந்து நிற்கிறது என்பதை உணர்ச்சி மேலிடப் பாடுவதைக் காணமுடிகிறது.

    காலந்தோறும் வேண்டும் கவிஞர்கள் 

    பரந்துபட்ட உள்ளம் கொண்ட கவிஞன் இயற்கையை நேசிப்பதிலும் மானுடத்தை மதிப்பதிலும் சாதாரண மனிதர்களிடமிருந்து வேறுபடுகிறான். அப்படி வேறுபட்டால்தான் அவன் கவிஞன். அவன் கவிதையில் அவன் உள்ளம் எதிரொளிக்க வேண்டும்.  தனக்கான வேண்டுதலை ஒழித்துச் சமுதாயத்திற்காக வேண்டிக்;கொள்ளும் பரிணாமம் அவனுக்குப் படிப்படியாகக் கிட்டுகிறது, சமுதாயத்தின் கரிசுகளைத் தன்னுடைய பாவங்களாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அவனுக்கு வந்துவிடுகிறது, குழந்தைக்கு எது தேவை என்பதறிந்து ஊட்டும் தாயைப் போலத் தான் வாழும் சமுதாயத்திற்கு என்ன தேவை என்பதைக் கண்டறிந்து கொடுப்பவனே கவிஞனாவான்.  கணவனால் வணங்கப்பட்ட காரைக்காலம்மையார் இறைவனிடம்

    “இறவாத இன்ப அன்பு
    வேண்டிப்பின் வேண்டுகின்றார்
    பிறவாமை வேண்டும் மீண்டும்
    பிறப்புண்டேல் உன்னை என்றும்
    மறவாமை வேண்டும்!”

    என வேண்டுகிறார். இதனைத் தொடர்ந்து வந்து சமரச சுத்த சன்மார்க்கம் கண்ட வளளற் பெருமான்

    “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
    உத்தமர்தம் உறவு வேண்டும் !
    உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
    உறவு கலவாமை வேண்டும்!”

    என மானுடம் மனமாசினின்று விடுதலையடைய வேண்டும் என்பதைத் தன் விருப்பமாகக் கூறுவதைக் காணமுடிகிறது. பல்லாயிரம் கவிதைகளை எழுதிக் குவித்த மகாகவி பாரதி தனக்கு என்ன வேண்டும் என்பதையும் கேட்கிறான். உலகியல் வாழ்க்கைக்கான

    “மனதிலுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்!
    நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
    கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்;
    தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும்.
    கண் திறந்திட வேண்டும், காரியத்தில் உறுதி  வேண்டும்;
    பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும்,
    மண் பயனுற வேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும்;
    உண்மை நின்றிட வேண்டும்.”

    மனிதன் கவிஞனாக முடியாமல் இருக்கலாம். ஆனால் கவிஞன் மனிதனாக இருந்தே ஆக வேண்டும். மனிதனாகவே ஆக முடியாதவன் கவிஞனாகவே முடியாது. மகாகவியின் கூரிய தீஞ்சொற்கள் ஒவ்வொரு தனிமனிதனின் சமுதாயக் கடமையைப்; பட்டியலிடுவதாகவே கருத வேண்டும்.

    இந்த நெடிய மரபில் வந்த பாவேந்தர்  அவர் காலத்திய சமுதாய நிலை நோக்கி மனம் வருந்திப் பாடுகிறார்.

    “வீழ்ச்சியுறு தமழகத்தில் எழுச்சி வேண்டும்
    விசையொடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்
    சூழ்ச்சிதனைப் பொறாமைதன்னை வஞ்சகத்தைத்
    தொகையாக எதிர்நிறுத்தித் தூள் தூளாக்கும்
    காழ்ச்சிந்தை மறச்செயல்கள் மிகவும் வேண்டும்
    கடல்போலச செந்தமிழைப் பெருக்க வேண்டும்

    எனத் தன் உள்ளத்து வேணவாவைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். மேலே சுட்டப்பட்ட கவிஞர்கள் மாறுபட்ட சமுதாயச் சூழல்கள நிலவிய காலங்களைச சார்நதவர்கள். அவர்கள் படைப்பின் நோக்கமும் மாறுபட்டது. இருந்தாலும் ஏதோ ஒருவகையில் மானுடம் பாடுவதில் ஒன்றுபட்டு நிற்பதைக் காணமுடிகிறது. இந்த இழைதான் மரபு. இதுதான் மரபியல் சிந்தனை.

    “எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் — இங்கு
    இல்லாமை இல்லாத நிலை வேண்டும்!
    வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை – நீங்கி
    வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை”

    தன்னை மனிதனாகவும் கவிஞனாகவும் ஏற்றுக் கொண்டிருக்கும் மானுடப் பரப்பின் நலம் நோக்கியதே கவிஞனின் பார்வையாக அமைந்திருக்கிறது . அமைய வேண்டும்.  அந்த வழியில் பொன்மணிதாசன் பாடுகிறார்

    “உள்ளறை அழுக்கது உறையாது நீக்கிட
    உணர்வினில் தூய்மை வேண்டும்

    கல்லுறை வல்லமை கலவாது இருந்திட
    கனிவுறும் மனமும் வேண்டும்

    முள்ளது தைக்காது மொழிந்திட சொற்களை
    முனைப்போடு தேட வேண்டும்

    வெள்ளமாம் இன்பம் விழல் நீருமாகாமல்
    வினையது ஆற்ற வேண்டும்!

    நல்லதோர் தோழமை நாடியே நாமதன்
    நலமாக நடத்தல் வேண்டும்

    பல்லதும் தெரிந்திடின் பலரதும் போற்றவே
    பணிந்தது கொள்ள வேண்டும்

    உள்ளமா கோவிலில் உறையவே தெய்வமும்
    உத்தமத் தெளிவு வேண்டும்

    நல்லறம் தழைத்திட நமதறம் செழித்திட
    நமக்கென பொறுப்பு வேண்டும்!

    வாழுதற் கரியஓர் வாழ்வினை பெற்றநாம்
    வாழ்வதை வாழ்த்த வேண்டும்

    ஊழ்வினை பயனதை உணர்ந்தது வரமென
    உளமார ஏற்றல் வேண்டும்

    தாயுமானவரின் பராபரக் கண்ணிபோல் அமைந்த இந்த அடிகளில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இருக்க வேண்டிய பண்பு நலன்களைத் தன்னுடைய வேண்டுதலாகக் கூறும் ஒரு மானுடக் கவிஞனைக் காணமுடிகிறது. இன்றையச் சமுதாயச் சூழலில் எந்த மனநிலையில் கவிஞன் இருந்திருந்தால் இப்படிப் பாடியிருப்பான் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.  உணர்வினில் தூய்மை, அறிவினில் தெளிவு, பழக்கத்தில் பணிவு, நல்ல நட்பு, வினைத்தூய்மை, பொறுப்புணர்வு என்பனவற்றையெல்லாம் வற்புறுத்திய கவிஞன்  இந்த வாழ்க்கையை வாழத்த வேண்டும் என்று முத்தாய்ப்பாகக் கூறியிருப்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  இந்த வாழ்க்கை மிகவும் இனியது என்பது மகாகவியின் பார்வை.  பாரதிக்கு முன்பே அப்பர் பெருமான் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ என்று மானுடத்தின் மகத்துவத்தைப் பாடியிருக்கிறார்.  “மானுடம் வென்றதம்மா” என்பது கவச்சக்கரவர்த்தியின் வியப்பு! தமிழின் நீண்ட நெடிய கவிதை மரபில் மானுடத்தைப் போற்றுவதும் அதன் பெருமை பேசுவதும் அதனை வாழ்த்துவதும் அதனை வலியுறுத்துவதும் ஒரு சங்கிலித் தொடராகத் தொடர்ந்து வருவதைக் காணவேண்டும். தமிழிலக்கியத்தின் சாரம் மானுடம் பாடுவதே! பொன்மணிதாசன் அதனைத்தான் செய்திருக்கிறார்.

    பொன்மணிதாசனின் தத்துவப் பார்வை

    தத்துவஞானி கவிஞனாயிருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால் கவிஞன் உறுதியாகத் தத்துவஞானியாகத்தான் இருக்க வேண்டும். தத்துவஞானியாய் இல்லாதவன் கவிஞனாக இருக்க முடியாது. “No man was ever yet a great poet without being at the same time a profound philosopher” – Coleridge)

    குட்டி ஆடு தப்பிவந்தா குள்ளநரிக்குச் சொந்தம்
    குள்ளநரி மாட்டிகிட்டா கொறவனுக்குச் சொந்தம்
    தட்டுகெட்ட மனிதர்கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்
    சட்டப்படி பார்க்கப் போனா எட்டடிதான் சொந்;தம்

    என்னும் வரிகளை ஒரு இருபத்தேழு வயதுடைய இளைஞன் எழுதியிருப்பான் என்பதை எத்தனைப் பேர் நம்புவார்கள்? பிறவியிலேயே கவித்துவமும் தத்துவப்பார்வையும் இணைநதவன் எழுதிய வரிகள் இவை.

    “எறும்புத் தோலை உரித்துப் பார்க்க
    யானை வந்ததடா! என்
    இதயத்தோலை உரித்துப் பார்க்க
    ஞானம் வந்ததடா!”

    என்று ஒரு சாதாரண திரையிசைப்பாடலிலேயே மாபெரும் தத்துவத்தைப் பதிவு செய்யும் ஆற்றல் கண்ணதாசனுக்கு இயல்பாகவே அமைந்திருந்தது.  “தொட்டபின் பாம்பு என்றும்  சுட்டபின்நெருப்பு என்றும் பட்டபின் தேறலே” கண்ணதாசனின் பழக்கமென்றானதால் வந்த முதிர்ச்சி அவனை ஒரு தத்துவ ஞானியாக்கியது.

    “எத்தனை பேருக்கு இரவு விடியும்
    இதற்கு விடையேது?
    அத்தனை பேருக்கும் அமைந்த இரவும்
    அதனை அறியாது!”

    எனத் தத்துவம் பேசுகிறார் பொன்மணிதாசன்! விடியலை நோக்கியதுதான் இரவின் பயணம்! ஆனால் வாழ்வியலில் எத்தனைப் பேருக்கு எப்போது விடியும் என்பதே தெரியவில்லை. அது மட்டுமன்று அந்த விடியல் எப்போது வருமென்று பயணிக்கிற இருட்டுக்கே தெரியவில்லை.

    “இறப்பு பிறப்பு இதனதன் மறைப்பு
    இயல்பின் பெருங்கூற்று
    சிறப்பு என்பது இறப்பின் பின்னே
    பிறக்குமொரு ஊற்று!
    மறக்கும் நிலையே மனித குலத்துக்கு
    மருந்தெனில் பொய்யில்லை
    மறக்கா நிலையில் மனிதன் வாழ்வெனில்
    மனிதம் மெய்யில்லை!”

    கடந்த காலத்தை மறந்து எதிர்கால இலட்சிங்களோடு பயணிப்பதுதான் மானுடத் தத்துவம். அந்த மறதி இல்லாவிடின் வாழ்க்கை தடுமாறும். கடந்த காலத்திலேயே உழன்று கொண்டிருந்தால் நிகழ்காலமும் குழம்பும். எதிர்காலமும் விளங்காது.  நம்பிக்கைதான் வாழ்க்கையின் அச்சாணி என்பதை இந்த அடிகள் காட்டுகின்றன. படித்துத் தத்துவம் பேசுவது வேறு. பட்டறிந்து தத்துவம் பேசுவது வேறு. பொன்மணிதாசன் பட்டறிந்து தத்துவம் பேசுகிறார். மானுடத்தின் மீது கொண்ட தான் கொண்டிருக்கும் மாறாக் காதலால் தத்துவம் பேசுகிறார். தத்துவம் பேசுகிற கவிஞனைத் தத்துவக் கவிஞன் என்று அழைப்பதே பொருத்தமற்றது. கவிஞனே தத்துவஞானிதான்.

    சாதிப்பிணக்குகளும் தமிழ்க்கவிஞன் தத்துவமும்

    இனக் குழுக்களே சாதிகளாகப் பிரிந்தன என்பதுதான் ஆய்வாளர் முடிவு. தெளிவாகச் சொன்னால் சமயத்திற்கும் சாதிக்கும் தொடர்பேயில்லை. இருந்திருக்குமானால் தொடர்பற்ற பல சாதி மக்கள் எப்படி ஒரே சமயத்தைப் பின்பற்ற முடியும்? சாதிக் கரணைகளைச் சமயச் சங்கிலி பிணைத்திருப்பதன் பின்னனி என்ன? சாதிக்குப் பின்னால்தான் சமயம் ஒளிந்து கொள்கிறது. அகச்சமயங்களில் நிலவிய இந்தக் கொடுமை புறச்சமயங்களிலும் இன்று ஊடுருவியிருப்பதும் பொருளதார மற்றும் வேலை வாய்ப்புக்காகச் சாதிகளையே மாற்றிக் கொள்வதும் மதங்களையே மாற்றிக் கொள்வதும் நேர்மை என்னும் உயரிய பண்பின் வேரில் வெந்நீர் ஊற்றும் செயலாகும். “சாதிகள் இல்லையடி” என்னும் பாரதியின் வாக்கில் ‘இல்லை’ என்னும் சொல் வெகு ஆழமானது, உள்பொருள்களான மனிதநேயத்தைப் புறந்தள்ளி, இல்பொருளான அதாவது அருவப்பொருளான சாதியை முன்னெடுப்பது ஒரு வளர்நிலைச் சமுதாயத்தின் பின்னடைவுக்குக் காரணமாகும் என்பதுதான் பாரதியின் சாரம்

    ஓரிடம் பிறந்து ஓடும் ஒப்பற்ற நதிகளெல்லாம்
    வேறிடம் சென்றபோதும் சேர்வது ஓரிடந்தான்!
    ஆறுடன் சென்ற நீரும் அதனிலே பிரிந்த நீரும்
    மாறியே நடந்தால் கூடமறவாமல் கடலைக் கூடும்!

    என எல்லாரும் அறிந்த இனிய எளிய உவமத்தால் சாதி வேறுபாடு களைய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறார். சாதி ஒரு வகையான தற்காலிக அமைதியைத் தரலாம். உலகின் எதிர்காலம் பொருளாதாரத்தைச் சார்ந்திருப்பதால் சாதி என்னும் அருவப்பொருள் நடப்பியல் வாழ்க்கைக்கு முட்டுக் கொடுத்துவிட முடியாது. பாவ புண்ணியம் என்பன மறுமைக்கு உரியது. மகாகவி பாரதி குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்றதன் மூலம் அதனை மறுமைக்குரிய பாவமாகவே கருதுகிறான் ஒரு மரபுவழிச் சிந்தனையாளரான பொன்மணிதாசன் அதனை வழிமொழிகிறார் எனலாம்.

    மரணம் மட்டுமே உண்மை!  

    இந்த உலகில் யாராலும மறுக்க முடியாத நடப்பியல் என்பது மரணந்தான். மரணத்தை வென்றவர் எப்படி இல்லையோ அப்படியே மரணத்தைத் தடுத்தவரும் இல்லை. “மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்நதிடலாம் கண்டீர்” எனக் கூறிச்சென்ற வள்ளற் பெருமானும் இளம் வயதிலேயே மறைந்தார் என்பதுதான் வரலாறு. மரணத்தை நிஜமாக்கியதற்குப் பின்னால் புரியாத பல உண்மைகள் உண்டு. ஆனால் அது நிஜமெனத்  தெரிந்தும் மனிதனின் ஆணவம் குறைந்தபாடில்லை. தான் என்னும் அகப்பற்றும் தனது என்னும் புறப்பற்றுமே மானுடச் சிதைவுக்கான காரணங்கள். இந்த இரண்டு காரணங்களையும் அகற்றுவதற்கான ஒரே வழி மரணம் பற்றிய  உண்மையை உணர்வதுதான். காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே எனச் சித்தர்கள் பாடியதற்கும் அதுதான் காரணம். நந்த வனத்தில் ஓராண்டி அவன நாலாறு மாதமாய் குயவனை வேண்டிக் கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி என்று அவர்கள் பாடியதற்கும் அதுதான் காரணம். பத்ரகிரியார், பட்டினத்தார் போன்ற பெருமக்கள் உலகியலைத் துறந்து போனதற்கும் அவர்கள் மரணம் பற்றிய தெளிவைப் பெற்றிருந்தனர். “இருப்பது போய் போவது மெய்”

    “அஞ்சினால் விலகிப்போமோ?  அகற்றவும் செய்யவாமோ?
    நெஞ்சிலே பாரம்கூடும் நினைவிலே மரணம்நின்றால்
    கெஞ்சினால் தரவாக் கூடும்?  கேட்டுயிர் நிலைப்பதற்கு
    விஞ்ஞானம்கூடத் தோற்கும் விந்தையே மரணமென்பேன்!

    மரணமே இல்லாவாழ்வு மண்ணுயிர்க்கேது உண்டு
    பிறப்பது உள்ளமட்டும் இறப்பது இருந்தேதீரும்
    வரவது அறியாவண்ணம் வாழ்க்கையில் சிறப்பே என்றால்
    இறப்பது ஒன்றேயன்று இல்லையே சொல்லுதற்கு!

    நடப்பதை நடத்தத்தானே நாயகன் உள்ளானிங்கு!
    நடைபேறும் நாடகத்தில் நாளுமே முடிவும் உண்டு!
    கிடைத்தது அரியதென்று கிடைத்ததை மகிழ்ச்சியாக்கு
    உடைகின்ற நாளும் வந்தால் பானையும் உடைந்திடாதா?

    நேற்று இருந்தது இன்றைக்கு இல்லை என்பது நிலையாமை அன்று. முற்கணம் பிறந்தது இக்கணம் இல்லாது ஒழிவதுதான் நிலையாமை. இந்த வாழ்க்கையை நீர்க்குமிழி என்றதற்கும் அதுதான் காரணம். ‘இருப்பது போய் போவது மெய்’ என்பார்கள் சித்த்ர்கள். ‘நான்கு விலங்குகளில் நாட்டியமாடுகிறோம்’ எனபார் கண்ணதாசன்! பிறப்பு இறப்பை நோக்கியது என்பது உண்மை இந்த உண்மை தெரிந்த பின்னும் மானுடப் பண்புகள் ஏதுமின்றி, மானுடம் சிறக்க வேண்டிய நோக்கங்கள் இன்றி ‘வெந்தது தின்று விதிவந்தால் மரணம்’ என்பது பொருளுடையது அன்று.  பிறந்த நாள்கள் என்பன கழித்தல். பலபேர் அதனைக் கூட்டல் என்று கருதி மயங்குகிறார்கள். பிறந்த நாள் தெரிந்தவர்களுக்கு இறக்கப்போகும் நாள் தெரியாமல் போனதுதான் இறைவனின் சூத்திரம். அல்லது இயற்கையின் மந்தணம். நீண்ட நெடிய தமிழ்க்கவிதைகளின் உள்ளடக்கச்சாரமே நிலையாமைதான். பொன்மணிதாசனும் தன் கவிதையில் அந்தச் சாரத்தைப பிழிந்திருக்கிறார

    வாழ்வியல் சூழல்

    மனிதன் ஒரு சமுதாய விலங்கு. இச்சமுதாயத்தின் ஒவ்வொரு அசைவும் அது நேர்முகமாக இருந்தாலும் எதிர்மறையாக இருந்தாலும் அவனைப் பாதிக்கிறது, படித்த அறிவாலும் பட்டறிவாலும் பக்குவப்பட்ட எவனுக்கும் தானே தனித்துச் செயல்படுத்துவதற்கான ஆக்கப் பூர்வமான நம்பிக்கையான ஒரு வாழ்வியல் சூழல் இங்கே நிலவவில்லை. எதிர்மறைப் பண்புகளை அறிமுகம் செய்து கொள்வதும். அதற்கு நியாயம் கற்பிப்பதும் பின்னால் அதனையே வழக்கமாக்கிக் கொள்ளுவதும் இங்கே வாழ்வியல் நெறி ஆகிப்போனது. பொன்மணிதாசன் பாடுகிறார்

    “உண்ண உணவு உடுத்த உடை
    இன்னும் கிடைக்கல
    எண்ணப்படி இன்னு மிங்கே
    எதுவும் நடக்கல
    கன்னம் சாத்தும் கால மிங்கு
    இன்னும் மறையல
    கண்ணு முன்னே கற்ப ழிப்பு
    ஒண்ணும் தொலையல!”

    “ஆட்கள் வளர்ந்த அளவுக் கின்னும்
    அறிவு வளரல
    ஆளுக்காளு அமுக்க நினைக்கும்
    ஆசை மறையல
    சொல்லும் செயலும் வேறு வேறு
    சொல்ல முடியல
    சொல்லப் போனா சுதந்திரப் போர்
    வெல்ல முடியல!”

    “நாளுக்கு நாள் சட்டம் போட்டும்
    நாடு விடியல
    நாளைக் கென்ன சட்டம் வரும்
    நமக்கும் புரியல
    ஆளுக்கு ஆள் கட்சி கண்டார்
    ஆளத் தெரியல
    ஆள வந்தார் அதி காரத்தால்
    மீள முடியல!”

    மக்களோடு மக்களாகப் பழகி, பாமரத் தமிழறிவு இருந்தாலே உணர்ச்சியுள்ள எவனும் கவிஞனாகலாம் என்பதை  நிருபித்திருக்கிறார் பொன்மணிதாசன்.!

    “நீ அமுதசுரபியைத்தான்
    கொடுத்துவிட்டுச் சென்றாய்!
    எங்கள் கையில் இருப்பதோ
    பிச்சைப் பாத்திரம்”

    என்பார் மேத்தா. அது புதுக்கவிதை என்பார்கள்.

    “சொல்லப் போனா சுதந்திரப் போர்
    வெல்ல முடியல!”

    என்று இன்னும் ஆழமாகச் செதுக்கியிருக்கும் இந்தக் கவிதை மரபுக்கவிதையா? புதுக்கவிதையா?

    “நாளுக்கு நாள் சட்டம் போட்டும்
    நாடு விடியல
    நாளைக் கென்ன சட்டம் வரும்
    நமக்கும் புரியல!

    நாடு விடுதலையடைந்ததிலிருந்து அண்ணல் காந்தி அவர்கள் படமும் இந்த நாடும் மட்டுந்தான் சட்டத்திற்குள் இருக்கின்றன. அந்தச் சட்டங்கள் மக்கள் வாழ்வியல் முன்னேற்றத்துக்கானது என்றால் இன்னும் சட்டம் ஏன்? எழுபத்தைந்து ஆண்டுகள் ஆன பின்பும் இன்றும் சட்டம், நாளையும் சட்டம் என்றால் வாழ்வியலில் அமைதி நிலவுவது எப்போது என்னும் விடைகாண முடியாத வினாவிற்குப் பதில் சொல்லப்போவது யார்? எப்படி ஆள்வது என்று ஆள்வோருக்குத் தெரியவில்லை! எப்படி வாழப்போகிறோம் என்பது மக்களுக்குத் தெரியவில்லை!.

    “ஆளுக்கு ஆள் கட்சி கண்டார்
    ஆளத் தெரியல
    ஆள வந்தார் அதி காரத்தால்
    மீள முடியல!”

    நடப்பியல் அரசியலை இதனைவிடத் தெளிவாக்கிவிட முடியுமா? அதுவும் கவிதையில்! ஆள்வதற்காகக் கட்சி தொடங்கியவர்களுக்கு ஆளத் தெரியவில்லையாம்!. தெரிந்து அதிகாரத்திற்கு வந்து விட்டவர்களுக்கு அந்த அதிகாரப் போதையிலிருந்து விடுபட முடியவில்லையாம்! யோக்கியனாகத்தான் ஒருவன் வாழ எண்ணுகிறான். சூழல் எதிர்மறையாகிப போனது. பத்தினியாகத்தான் வாழ நினைக்கிறாள். சூழல் எதிர்மறையாகிப் போனது. பொதுப்பணி செய்யத்தான் விரும்பி வருகிறான். வந்தபின் அறிந்து கொள்கிறான் சூழல் தனக்கு எதிராக இருப்பதை.

    காலத்தால் அழியாத காதல்

    கவிதையின் பாடுபொருளை அகம் புறம் எனச செம்பாதியாகத் தமிழ்ச் சான்றோர்கள் பிரித்திருந்தாலும் தொண்ணூறு விழுக்காடு இலக்கியங்கள் அகம் சார்ந்ததாகவே அமைந்துள்ளன. அல்லது அது சார்ந்த பாடல்களே கிட்டியிருக்கின்றன. காதல் மிகவும் மென்மையான பாடுபொருள். பிரிவு துன்பம் தரும். ஆனால் அதுபற்றிய கவிதை இன்பம் தரும். மலரினும மெல்லிது காமம் என்பார் வள்ளுவர்.  இங்கே காமம் என்பது பருப்பொருளால் நுகர்கின்ற காம இன்பத்தினையும் உணர்வுகளால் நினைக்கப்படும் காதல் நினைவுகளையும் குறிக்கும். கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலன் பறறித் திருக்குறள் பேசுவதால் அது பருப்பொருளால் நுகரப்படும் இன்பம். ‘நெஞ்சத்து காதலவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து எனத் தலைவி தயங்குவதால் அது ஓர் தனித்த உணர்வு. இரண்டையும் ஒரு சேரக் கலந்து கவிதை படைப்பாரும் உண்டு ஒரு பாடல் கண்டேன்!

    “எங்கே உனைக் கூடடிச் செல்ல?
    சொல்வாய்! என்றன் காதில் மெல்ல!”

    “என் பெண்மையும இளைப்பாறவே
    உன் மார்பில் இடம் போதுமே!”

    உன்னை எங்கே கூட்டிச் சொல்ல வேண்டும் சொல் என்று தலைவன் கேட்கிறான். எங்கேயும் வேண்டாம். என் பெண்மை இளைப்பாற மார்பு போதும் என்று தலைவி விடைதருகிறாள்.  ஆபாசமில்லாமல் காதலைப் பாடுவது சங்கச் சான்றோர்களுக்கு கைவரப் பெற்றதாக இருந்தது. அதற்குப் பின்னால் அந்த நிலை இன்று வரை கைகூடுவதற்கு அருமையாக இருக்கிறது.  ஈர்ப்பு, மோகம், காதல், பக்தி, வழிபாடு, பித்து, மரணம் என்னும் உணர்ச்சிகளின் பரிணாமம்தான் காதல். உண்மைக்காதல்  இப்படித்தான் தொடங்கி இப்படித்தான் முடிகிறது. இத்தகைய பாடல்களைச் சிந்தித்து எழுதுவதற்குப் பொன்மணிதாசன் முயல்கிறார் என்பது அவரது பதிவுகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது, கொஞ்சம் சிரமமான வேலைதான். ஏனைய பாடுபொருள்களைக் கவிஞன் பாதிக்கிறான். ஆனால் காதல் என்னும் உணர்வுதான் கவிஞனைப் பாதிக்கிறது. அனுபவம்தான் கவிதை என்பது காதலுக்குப் பொருந்துவதைப் போல மற்ற பாடுபொருளுக்கு அவ்வளவாகப் பொருந்துவதில்லை. தொடர்பில்லாத உணர்வுகளை மனத்தில் கொண்டு வந்து நிறுத்தி தலைவனாகவும் தலைவியாகவும் தன்னை எண்ணிக் கொண்டு காதல் பாடல்கள் எழுதுவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றன்று.

    “நின்னை நினைக்கும் நினைவை விதைத்தாய்
    நிறைய விளைச்சல் ஏக்கம
    நின்னால் நித்தம் நீங்கிப் போனது
    நிலவில் தானடி தூக்கம்!
    கண்களில் நிறைய கனவுகள் வந்தன!
    கனலாயத் தானே மூசசும்!
    கன்னா பின்னா காதல் மொழிகள்
    கணக்கில் அடங்காப் பேச்சும்!
    தப்பும் தவறும் கூடிப் போச்சு
    தவிப்பில் இப்ப நானும்!
    தப்பித் தவறி உண்ணுகிறேன் என்
    தழைத்த உடலைக் காணோம்!
    எப்போதிருந்து இப்படி என்றே
    என்னை  மருத்துவர் கேட்டார்!
    எப்படிச் சொல்வேன நீதான் என்று
    இடிப்பார் எங்கள் வீடடார்!
    …………………………………………………………………………………………
    இலலையெனக்கு வாழ்வே இலலை
    இதுதான் முடிவு! தோழா!
    கடிதம் இதனைக் கண்ணீர் கசிய
    காணாதாரும் எழுதி
    விடியுமுனே விடுத்தேன் அஞ்சல்
    விடையும் உடனே தருக!
    இடியாய்ப் பதிலும் இருக்க வேணடாம்!
    இனிப்பாயனுப்பு மகிழ்வேன்!
    ஏறுக்கு மாறாய் இருந்தால் பதிலும்
    இன்றே நானும மடிவேன்!

    எனத் தனிமனிதக் காதல் உணர்ச்சிகளை மந்தணமாகவும் மென்மையாகவும் பாடும் திறன் பெற்ற பொன்மணிதாசன் சமுதாய மட்டத்தில் பெண்ணின் பெருமையைத் தூக்கிப் பிடிப்பதில் ஒரு மாபெரும் சமுதாய ஆர்வலராகவே காட்சியளிக்கிறார்.

    “ஆசை வச்சேன் உம்மேலே! அரளி வச்சேன் கொல்லையிலே!
    பாத்தேனடா ஒம்மொகத்த! பகைச்சேனடா எஞ்சனத்தை!”

    என்பது வாய்மொழி இலக்கியம். படைப்பிலக்கியங்களைவிட காதல் உணர்ச்சி சற்று தூக்கலாக இருப்பது நாட்டுப்புற இலக்கியங்களில்தான் என்பது ஆய்வாளர் கருத்து, உணர்வுப்பூர்வமான காதலை வாய்மொழி இலக்கியங்கள் உணர்த்துவதுபோலப் படைப்பிலக்கியங்கள் உணர்த்துவதில்லை. காரணம் படைப்பிலக்கியங்களில் உணர்வுக்கு மொழியின் வரி வடிவம் ஊடகமாகப் பயன்படும் போது, கூச்சமும் தயக்கமும் ஏற்படுவது இயல்பு. அவ்வாறின்றி உணர்வுகளுக்கு ஆடைகட்டாமல் அப்படியே பாடப்படும் வாய்மொழி இலக்கியங்கள் நேராக நெஞ்சுக்குள் சென்று தைக்கின்றன.  எனவேதான் படைப்பிலக்கியக் கரத்தாக்களும் வாய்மொழி இலக்கிய வடிவத்தைத் தங்கள் படைப்புக்களில் பயன்படுத்துகிறார்கள். பொனமணிதாசன்

    “இடியாய்ப் பதிலும் இருக்க வேணடாம்!
    இனிப்பாயனுப்பு மகிழ்வேன்!
    ஏறுக்கு மாறாய் இருந்தால் பதிலும்
    இன்றே நானும மடிவேன்”

    என்று வாயமொழி இலக்கியச் சாயலில் பாடுவதற்கு இதுதான் காரணம். பெண்ணைக் காதற் கருவி என்று மட்டும் கருதாமல் வணங்கத்தக்க மானுடத்தின் அடையாளம் என்பதிலும் பொன்மணிதாசன் உறுதியாய் இருக்கிறார்.

    “பெண்ணை நீ போற்றிப் பாடு!
    பெருமையைத் தூக்கிப் பாடு!
    பெண்ணிலா தேசந்தன்னைப்
    பெயர்த்துமே கடலில் போடு!
    பெண்களே நமது கண்கள்!
    பெண்ணின்றேல் ஆண்கள் இல்லை!!
    பெண்களே குடும்பச் சொத்து
    பெண்ணன்றோ இன்ப முத்து!

    பெண்ணின் பெருமையைத் தமிழ்த்தென்றல் திரு.வி.க உரைநடையில் பேசியதைப் பொன்மணிதாசன் கவிதையில் பேசுகிறார்.  தனிமனித உணர்ச்சிகளை எளிய தமிழில் பாடும் பொன்மணிதாசன் சமுதாயச் சிந்தனைகளையும் தன்னைப் பாதிக்கும் நிகழ்வுகளையும் கவிதையில் கொண்டுவருவதில் சுணக்கம் காட்டுவதில்லை. அங்கதமும் அழகியலும் காதலும் கடமையுணர்வும் மொழிப்பற்றும் நாட்டுப் பற்றும் இறையுணர்வும் தத்துவப் பார்வையும் அவருடைய முகநூல் கவிதைகளில்  அங்கிங்கெனாதபடி எங்கும் இழையோடுகின்றன.

    நிறைவுரை

    கவிதை யாப்புக்குள் இல்லை! சமுதாயத்திலிருந்து இதயத்திற்குப் பயணமாவது. பாதிப்பிலிருந்து தன பயணத்தைத் தொடங்குவது. ஒப்பாரிக்கும் தாலாட்டுக்கும் தகுதி தேவைபடாதது போலவே எழுதப்படுகிற கவிதைக்கும் ஏந்தத் தேவையில்லை. தன்னைப் பாதிக்கின்ற அலலது தான் பாதிக்கின்ற பொருண்மைகளைப் பாடுவதுதான் கவிதையின் நதிமூலம். பாதிப்பின்றிக் கவிதை வராது. வந்தால் அது கவிதை இல்லை.  வாசலில் அழகிய கோலம் இடுவதற்கும் அதற்கு அடிப்படையான புள்ளிகளை வைப்பதற்கும் அடிப்படை வரைபடப் புலமை தேவையில்லை. அழகியல் உணர்ச்சி மட்டுமே!.  அளவுகோலை வைத்துக் கொண்டு புள்ளிகளை வைத்தால் கோலம் அலங்கோலமாகும். முகநூல் கவிதைகளும் படைப்பிலக்கிய வகையைச் சேர்ந்ததாகக் கொள்ளப்படுதலின் பிழையின்றி எழுதினால் போதும். எந்தப் பொருளைப் பற்றியும் எழுதலாம். இன்றைக்கு முகநூல் வெகுமக்களை இணைக்கின்ற சமுதாய ஊடகமாகப் பெரிதும் பயன்படுகிறது, பொன்மணிதாசனின் கவிதைகள் இணைப்புச் சங்கிலியாகவும் பயன்படுகிறது. தன்னுடைய கவியாளுமை மூலம் எல்லாருடைய கவனத்தையும் பெறுவதாகவும் அமைந்திருக்கிறது. தமிழ்க்கவிதை உலகிற்கு இவரை அறிமுகம் செய்வதில் ‘வல்லமை’ பெருமைப் பட போதுமான காரணங்கள் இருப்பதாகவே நான் கருதுகின்றேன்!

    (தொடரும்)

    Share
  • உயர்கல்வி அமைச்சர் கோவி. செழியன்

    உயர்கல்வி அமைச்சர் கோவி. செழியன்

    இன்று உயர்கல்வி அமைச்சராகப் பதவியேற்றுள்ள கோவி. செழியன் அவர்களுக்கு வாழ்த்துகள்

    படத்தில்: கோவி செழியன், அண்ணாகண்ணன், ஹாஜா கனி

    நாங்கள் மூவரும் 2011ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒரே மேடையில் முனைவர் பட்டம் பெற்றோம்.

    திமுகவில் வாரிசு அரசியல் கோலோச்சினாலும் உழைக்கும் தொண்டர்களுக்கும் உயர்வு உண்டு என்பதைக் கோவி.செழியனின் நியமனம் காட்டுகின்றது.

    Share
  • தமிழ்நாட்டில் ஓர் ஆச்சரியம்

    தமிழ்நாட்டில் ஓர் ஆச்சரியம்

    அண்ணாகண்ணன்

    நுகர்வோர் ஆணையிட்ட பொருள்களைக் கொண்டு சேர்க்கும் (டெலிவரி) துறையில் ஒரு புது நிறுவனத்தின் பெயரைக் கண்டேன். பின்னால் பெரிய பெட்டியுடன் இருசக்கர வாகனத்தை இளைஞர் ஓட்டி வந்தார். அருகில் உள்ள வீட்டுக்கு டெலிவரி செய்ய வந்திருந்தார். அந்த இளைஞரிடம் பேசினேன். ஆச்சரியம், அவர் 12ஆம் வகுப்புப் படிப்பதாகக் கூறினார்.

    இன்னும் 18 வயது ஆகியிருக்காதே. இந்த நிறுவனத்தில் எப்படிச் சேர்ந்தீர்கள் என்று கேட்டேன். என் அண்ணனின் சான்றிதழ்களைக் கொடுத்துச் சேர்ந்துவிட்டு, அன்றாடப் பணிகளை நான் எடுத்துச் செய்கிறேன் என்றார். பள்ளி முடிந்த பிறகு, மாலையில் இவ்வாறு டெலிவரி செய்யப் போவதாகக் கூறினார்.

    ஓர் இடத்தில் டெலிவரி செய்தால் தனக்கு 28 ரூபாய் கிடைக்கும். ஒரு நாளைக்கு 40 டெலிவரி செய்தால் 1120 கிடைக்கும் என்றார். சுவிக்கி, ஸொமேட்டோ போன்று உணவும் டெலிவரி செய்வது உண்டு. அவர்கள் ஒரு கிலோ மீட்டருக்கு இவ்வளவு எனக் கொடுக்கிறார்கள் என்றார். அது சற்றே குறைவாக இருக்கும் என்றார்.

    பெரிய டெலிவரி நிறுவனங்களுக்குக் கீழே அவர்களின் பணிகளை எடுத்துச் செய்ய, சிறு நிறுவனங்கள் பலவும் ஆங்காங்கே தோன்றியுள்ளன. இவர்கள், துணை ஒப்பந்தம் (சப்-கான்ட்ராக்ட்) மூலம் பணிகளை எடுத்துச் செய்கிறார்கள். இப்படி உள்ள நிறுவனத்தில் வேலை செய்ய, ஆட்கள் அதிகம் கிடைப்பதில்லை. எனவே தான் அவர்கள் வாகனம் வைத்திருக்கும் துடிப்பான பள்ளி மாணவர்களையும் வேலைக்கு எடுக்கிறார்கள்.

    பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்பே மாதம் ரூ.30 ஆயிரத்துக்கும் மேல் சம்பாதிக்க முடிவதைத் திறமை என்பதா? இதைத் தமிழ்நாட்டின் பொருளாதார வளம் என்பதா? இப்படிச் சம்பாதிக்க வேண்டிய குடும்பச் சூழல் இருக்கிறது எனக் கருதுவதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    Share
  • போட்டோகிராப் – திரை விமர்சனம்

    போட்டோகிராப் – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    போட்டோகிராப் (Photograph) என்ற இந்திப் படத்தைப் பார்த்தேன். இப்படி ஒரு கவித்துவமான படத்தை, அண்மையில் நான் பார்க்கவில்லை. மும்பை கேட் வே ஆப் இந்தியா பகுதியில் சுற்றுலாப் பயணிகளைப் படமெடுத்துத் தரும் நிழற்படக் கலைஞர், நவாசுதீன் சித்திக். படமெடுத்து அங்கேயே அச்சிட்டுக் கொடுக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.30 வாங்குகிறார்.

    கேட் வே ஆப் இந்தியாவில் சான்யா மல்ஹோத்ரா நடக்கும்போது, அவரை உடனடிப் படம் எடுத்துத் தருகிறேன் என நவாசுதீன் சித்திக் பின்தொடர்ந்து கேட்கிறார். வேண்டாம் என்று சான்யா சொல்ல, இன்று நீங்கள் என்னிடம் படம் எடுத்தால், உங்கள் முகத்தில் விழும் சூரிய ஒளியையும் உங்கள் கூந்தலை இந்தக் காற்று கலைப்பதையும் பின்னொரு நாள் பார்க்கும்போது காண்பீர்கள் என்பார். இங்கே கேட்கும் அனைத்துக் குரல்களையும் அப்போது கேட்பீர்கள் என்பார். உடனே சான்யா சம்மதிக்கிறார். அவர் சி.ஏ. படிக்கும் மாணவி. சற்றே வசதியானவர். அவசரத்தில் நிழற்படத்துக்கு அந்த 30 ரூபாய் கொடுக்காமல் சென்றுவிடுகிறார்.

    நவாசுதீன் சித்திக்கின் பாட்டி, இவரைக் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லி நச்சரிக்கிறார். மருந்து சாப்பிடவும் மறுக்கிறார். அவரைச் சமாதானம் செய்ய, பாட்டிக்கு இவர் ஒரு பொய்க் கடிதம் எழுதுகிறார். இங்கே நான் ஒரு பெண்ணைப் பார்த்தேன். எனக்காக அவளை நீயே தேர்ந்தெடுத்தது போல் உணர்ந்தேன். அவள் கண்கள், கேள்விகளால் நிரம்பியிருந்தன. ஆனால், பதில்களாலும் நிரம்பியிருந்தன. அவள் புன்னகையைக் கண்டால், எல்லாத் துக்கமும் துயரமும் பறந்தோடிவிடும். நமது நிலத்தில் விழுந்த முதல் மழை, உனக்கு நினைவிருக்கிறதா? அதே போல் இருந்தது அவளது சிரிப்பு. அவளது பெயரும் அழகானது என எழுதுகிறார். அந்த நேரத்தில் தொலைவில் ஓ நூரி நூரி என ஒரு திரைப்படப் பாடல் ஒலிக்கிறது. எனவே, நூரி என்றே அவளுக்குப் பெயர் சூட்டிவிடுகிறார். பாட்டி, இவர்களைப் பார்க்க ஊரிலிருந்து வருகிறார்.

    பணம் கொடுக்காமல் சென்ற சான்யாவை நவாசுதீன் சித்திக் மீண்டும் சந்திக்கிறார். பாட்டிக்காக, தன் காதலியாக நடிக்க முடியுமா எனக் கேட்கிறார். சான்யா அதற்குச் சம்மதிக்கிறார். இவர்களை ஒருசேரப் படம் எடுக்குமாறு பாட்டி கேட்கிறார். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ஒரே தட்டில் ரசகுல்லாவும் குலாப் ஜாமூனும் இருப்பது போல் இருக்கிறது எனச் சொல்வது ருசிகரம். பாட்டி ஊரிலிருந்து வரும்போது உடன் வரும் கர்ப்பிணிப் பெண், ரயிலில் குழந்தை பெறுகிறாள். அவளுக்கு ரயில் மலர் எனப் பெயர் சூட்டினார்களாம். பாட்டி இரவெல்லாம் கண்விழித்திருந்து கோமதி நதி வரும்போது அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வீசி எறிந்தாளாம். இதையெல்லாம் பாட்டியே சொல்கிறார்.

    சான்யா இளம் வயதில் கெம்ப கோலா குடித்தது பிடிக்கும் என்கிறார். இப்போது உற்பத்தியை அந்த நிறுவனம் நிறுத்திவிட்டது என்றாலும் நவாசுதீன் சித்திக், அந்த உற்பத்தியாளரைத் தேடிச் செல்கிறார். உன்னைப் போல் முன்னர் ஒருவர் தேடி வந்தார். அவருக்கு இந்த பார்முலாவை நான் கொடுத்தேன். அவர் வீட்டில் அதை இன்றும் தயாரிக்கிறார் என நினைக்கிறேன் என்கிறார். அந்த இன்னொருவரைத் தேடிச் சென்று ஒரு புட்டி கெம்ப கோலாவை வாங்கி வருகிறார். இது உன் சிறப்பு நண்பருக்காக எனச் சொல்லிக் கொடுக்கிறார்.

    நடிக்க வந்த சான்யா, உண்மையிலேயே நவாசுதீன் மீது காதல் வயப்படுகிறார். தன் வீட்டில் பார்க்கும் அமெரிக்க மாப்பிள்ளையை மறுத்துவிட்டு, இவருடன் பழகுகிறார். படத்தின் முடிவை வெளிப்படையாகச் சொல்லாமல், பார்ப்பவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறார்கள். பாட்டியாக நடித்திருக்கும் பரூக் ஜாபர் கலக்கியிருக்கிறார்.

    படத்தில் ஆங்காங்கே கவித்துவமான காட்சிகள் வருகின்றன. ஆனால், இது கலைப்படம் போன்று மெதுவாக நகர்கிறது. உரையாடல், ஒளிப்பதிவு, பின்னணி ஒலிகள், நடிப்பு அனைத்தும் இயல்பாகவும் ரசிக்கும்படியும் உள்ளன. ஆனால், நிறையப் படங்களைப் பரபரப்பாகவே பார்த்துப் பழகிவிட்டதால், இயல்பாகச் செல்லும் இந்தப் படம், மெதுவாக நகர்வது போல் தெரிகிறது.

    இயக்குநர் ரிதேஷ் பாத்ராவின் திரைமொழி, மேம்பட்ட ரசனை உள்ளவர்களுக்கானது. வணிகத் திரைப்படமாக எடுத்து வருவாயை வாரிக் குவிக்க நினைக்காமல், தரமான படத்தினை அளித்துள்ளார். இயல்பான திரைப்படங்களை விரும்புவோர், இதை வரவேற்றுக் கொண்டாடுவார்கள்.

    Share
  • அண்ணாகண்ணன் யோசனைகள் – 55

    அண்ணாகண்ணன் யோசனைகள் – 55

    அண்ணாகண்ணன்

    முன்னர் ஒரு யோசனை தெரிவித்திருந்தேன். ஒவ்வொரு நெல்மணிக்கும் பருப்புக்கும் விளைபொருளுக்கும் அது விளையும் இடத்திலேயே குறியீடு கொடுத்து, பின்தொடர வேண்டும் என்பதே என் யோசனை. ஒரு பொருள் எங்கே, எப்போது விளைந்தது, பயிரிட்டவர் யார், எந்த எந்த விற்பனையாளர்கள் வழியே வாடிக்கையாளரை அடைகிறது, வாடிக்கையாளர் வீட்டில் அது எவ்வளவு காலமாக இருக்கிறது என யாவற்றையும் கண்டறிய வேண்டும். அது இயற்கை உரத்துடன் அல்லது செயற்கை உரத்துடன் வளர்ந்ததா? அதன் மேலே செயற்கைச் சாயம் பூசப்பட்டள்ளதா? விளைபொருளின் தரம் என்ன? அது கெட்டுப் போகாமல் இருக்கிறதா? என அறிய வேண்டும். ஒரு ஸ்கேன் செய்தாலே அதன் மரபணுச் சோதனை நிகழ வேண்டும். அந்தப் பொருளின் உண்மை விவரங்கள், நுகர்வோருக்குத் தெரிய வேண்டும்.

    ஒரு பொருளின் வடிவம் மாறும்போது, இந்தக் குறியீடு அதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எண்ணெய் வித்துகளிலிருந்து எண்ணெய்யாக மாறும்போது தரப் பரிசோதனை செய்து, வேறு குறியீடு உருவாக்கலாம். இத்தகைய சூழலில் ஒன்றுக்கு மேற்பட்ட குறியீடுகளையும் விளைபொருள்கள் கொண்டிருக்கலாம்.

    காய்கறி, பழம், கீரை உள்ளிட்டவை எப்போது பயிரிடப்பட்டன என்பதுடன் எப்போது அறுவடை செய்யப்பட்டன? எந்த இடத்திலிருந்து இங்கே வந்திருக்கின்றன? என்றெல்லாம் அறிய வேண்டும். இப்போது, இந்த யோசனையைக் கஞ்சாவுக்கும் விரிவுபடுத்தலாம் என நினைக்கிறேன்.

    கஞ்சா வைத்திருந்தார் எனக் குற்றம் சுமத்திப் பலரும் கைது செய்யப்படுவதைப் பார்க்கிறோம். இந்தச் சிக்கலைத் தொழில்நுட்ப ரீதியில் தீர்க்க முடியும் எனத் தோன்றுகிறது. ஒவ்வொரு கஞ்சா இலைக்கும் செடிக்கும் அடையாளக் குறியீடு உருவாக்க முடிந்தால், அதன் வரலாறு முழுவதையும் அதிலிருந்து எடுத்துவிட முடியும். அது எங்கே பயிரானது, எந்த இடங்களுக்குப் பயணித்தது என்பதை ஜிபிஎஸ் மூலம் கண்டறியலாம். இன்னார் வீட்டுக்கு அது எப்போது வந்தது என்பது வரை பின்தொடரலாம். குறிப்பிட்ட நாளில் அது வந்தது எனில், அது எப்படி வந்தது, யார் மூலம் வந்தது என்பதையும் ஒரு மோப்ப நாயின் உதவியுடன் கண்டறியலாம்.

    மேலும், கஞ்சா வைத்திருந்தார் என்பது ஒரு பகுதி குற்றச்சாட்டு தானே? அந்தக் கஞ்சாவை அவர் யாரிடமிருந்து, எப்போது, எப்படிப் பெற்றார் என்பதைக் காவல் துறை உறுதிப்படுத்த வேண்டும். இந்தத் தகவல் இல்லாவிட்டால், குற்றத்தை நிரூபிப்பது எப்படி? கஞ்சா விற்றவருக்குத் தண்டனை பெற்றுத் தருவது எப்படி? எனவே, மேற்சொன்ன வேரினைத் தேடல், காவல் துறைக்கும் பெருமளவு உதவும்.

    மனிதர் அனைவருக்கும் மரபணுச் சோதனை நடத்தலாம் என முன்னர் தெரிவித்திருந்தேன். வயது வந்தவர் எனில் அவரது இசைவு அல்லது 18 வயதுக்குக் கீழ் உள்ளவர் எனில் அவரது பெற்றோரின் இசைவு பெற்றிருக்க வேண்டும் என்பதை ஒரு விதிமுறையாகச் சேர்க்கலாம் என்றேன். இதிலாவது மனிதர்களின் தனியுரிமை பாதிக்கப்படும் என்ற அச்சம் இருக்கிறது.

    ஆனால், தாவரங்கள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட இதர உயிர்கள் அனைத்திற்கும் மரபணுக் குறியீடு உருவாக்குவது நீண்ட கால நோக்கில் பயனுள்ளது. கலப்படத்தைத் தவிர்க்கவும் உண்மையைக் கண்டறியவும் சில சிக்கல்களின் வேரினைக் கண்டறியவும் இந்த மரபணு அடையாளம் நமக்கு உதவும்.

    இது மிகப் பெரிய பணிதான். ஆனால், செய்ய முடியாத பணி இல்லை. முயன்றால் முடியும். முயற்சி திருவினையாக்கும்.

    Share
  • விசேஷம் – திரை விமர்சனம்

    விசேஷம் – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    விசேஷம் (Vishesham) என்ற மலையாளப் படத்தைப் பார்த்தேன். இரண்டாம் திருமணத்தில் இணையும் இருவர், ஒரு குழந்தைக்காகக் காத்திருப்பதும் அந்தக் கருவுறுதலுக்கான போராட்டங்களுமே கரு. படம் நெடுக எதார்த்தமான நகைச்சுவை மிளிர்கிறது. சிரிப்புடன் சேர்த்துச் சிந்திக்கவும் வைக்கிறார்கள்.

    நாயகனாக நடித்திருக்கும் ஆனந்த் மதுசூதனன், அப்பாவியாக, வழுக்கைத் தலையுடன், ரகளை செய்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அடிபொலியாக ஈர்க்கிறார். கழுகு சிறகடிப்பது போல் கைவீசி, இன்னும் இன்னும் உயரப் பற எனத் தன்முனைப்பு வகுப்பு நடத்துகிறார். இயற்கை விவசாயியாகக் களத்திலும் உழைக்கிறார். இவரது முதல் திருமணத்தில், தாலி கட்டிய அடுத்த நிமிடம், இவர் கண்ணெதிரே மனைவி தன் காதலனுடன் ஓடிப் போகிறார். மனம் தளராமல் ஆனந்த், அடுத்த திருமணத்திற்குத் தயாராகிறார். பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது, போராட்டக்காரர்கள் மீது விழ வேண்டிய அடி, ஒதுங்கி, ஒளிந்து நின்ற இவருக்கும் விழுகிறது. அடித்து விளாசிய காவல் துறை அம்மணியே இவருக்கு இரண்டாவது மனைவியாக வருகிறார்.

    ஆனந்தின் இரண்டாவது மனைவியாக வரும் சின்னு சாந்தினி நாயர், படத்தின் மிகப் பெரிய சுவாரசியம். பெண் காவலராக லத்தியைச் சுழற்றுவது ஆகட்டும், ஏதும் விசேஷம் உண்டா என நச்சரிக்கும் பாட்டியிடம் சிங்கமெனச் சிலிர்த்துச் சண்டைக்குப் போவது ஆகட்டும், காதல் காட்சிகளில் குழைவது ஆகட்டும், குழந்தைக்காக ஏங்கிச் சோகத்தில் ஆழ்வது ஆகட்டும்… நவரசங்களையும் வாரி வழங்கியிருக்கிறார். காவல் உடுப்பில் நீ செக்சியாக இருக்கிறாய் என ஆனந்த் உணர்ந்து சொல்கிறார். இப்படி புஷ்டியாக இருப்பதும் சிலருக்கு அழகைத் தருகிறது. நடிப்பிலும் மிரட்டுகின்ற சின்னு சாந்தினி நாயருக்கு விருதுகள் காத்திருக்கின்றன.

    கருவாக்க மருத்துவமனைகளின் வேறு முகத்தைப் படத்தில் காட்டுகிறார்கள். பணமே குறியாக இயங்கும் இத்தகைய நிறுவனங்கள் குறித்துப் படம் விழிப்புணர்வு ஊட்டுகிறது. தன்னைக் கொடுமைப்படுத்திய முதல் கணவரைப் பழிதீர்க்கவே காவல் துறையில் இணைந்ததாக, சின்னு சாந்தினி நாயர் கூறுகிறார். ஆனால், காவலர் ஆன பிறகும் தானாகவே அவர் மீது புகார் கொடுக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை. ஏதோ ஒரு வழக்கில் அந்த முதல் கணவர் சிக்கி, இவரது காவல் நிலையத்துக்கு வரும் வரைக்கும் காத்திருக்கிறார். இது சற்றே இடிக்கிறது. மற்றபடி, சிறப்பான படம். அத்புதமே அத்புதமே என்ற பாட்டு, மிக அருமை (ஆனந்த் மதுசூதனன், இந்தப் படத்தின் இசையமைப்பாளரும் கூட).

    புதுமணத் தம்பதிகளிடம் ஏதும் விசேஷம் உண்டா என்றும் தம்பதிகளிடம் உங்களுக்கு எத்தனைக் குழந்தைகள் என்றும் கேட்பதைத் தடுத்து நிறுத்துவதே இந்தப் படத்தின் விசேஷம்.

    Share
  • கிண்டியில் மிகப் பெரிய பூங்கா

    கிண்டியில் மிகப் பெரிய பூங்கா

    அண்ணாகண்ணன்

    கிண்டியில் ரேஸ்கோர்ஸிடமிருந்து திரும்பப் பெற்ற 118 ஏக்கர் நிலத்தில் மிகப் பெரிய பூங்காவும் பசுமை வெளியும் அமைக்க உள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அங்கே நீர்நிலையுடன் கூடிய பூங்கா உருவாக்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையின் மையப் பகுதியில் உள்ள இந்த இடத்தில் பேருந்து நிலையத்தைக் கொண்டு வர முன்பு யோசனை தெரிவித்தனர். ஆனால், ஆயிரக்கணக்கான பேருந்துகள் வந்து சென்றால், இதன் சுற்றுவட்டாரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே, அது பரிசீலிக்கப்படவில்லை.

    பூங்கா அமைப்பதால், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். அதே நேரம் பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் வந்து செல்லலாம். நடைப்பயிற்சி, ஓட்டப் பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். சுற்றுலாத் தலமாகவும் வளரும்.

    அருகில் உள்ள கிண்டி சிறுவர் பூங்கா, ராஜ் பவன், ஐஐடி, அண்ணா பல்கலை உள்ளிட்ட பகுதிகள், ஆயிரக்கணக்கான மரங்களுடன் பசுமையாகப் பராமரிக்கப்படுகின்றன. உட்லண்ட்ஸ் டிரைவ் இன் இருந்த இடத்தில் செம்மொழிப் பூங்கா அமைந்துள்ளது.

    கிண்டிக்கு அருகில் தாங்கல் ஏரி, வேளச்சேரி ஏரி உள்ளிட்டவை அமைந்துள்ளன. மிக அருகில் அடையாறு நதி ஓடுகிறது. அடையாற்றின் கரை முழுவதையும் நீண்ட பூங்காவாக, வனமாக வளர்த்தெடுக்கலாம். இதன் மூலம் கரைகள் பலப்படும். மண் சரிவு ஏற்படாமல் இருக்கும். இதன் மூலம் வெள்ள அபாயத்தையும் தவிர்க்கலாம்.

    புதிதாக அமைய உள்ள ரேஸ்கோர்ஸ் பூங்காவுடன் இணைத்து, இதர பசுமை வளங்களையும் ஒருங்கிணைத்து ஒரு பெருந்திட்டத்தை முன்னெடுக்கலாம். கேபிள் கார் முதலானவற்றை அமைக்கலாம். பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தடை விதிக்கப்பட்ட இடங்களைத் தவிர, இதர இடங்களை மேலிருந்தும் சுற்றிப் பார்க்கலாம்.

    ரேஸ்கோர்ஸ் இடத்தில் மிகப் பெரிய கூட்ட அரங்கினை உருவாக்கலாம். சென்னையில் பெரிய அரங்குகள் இல்லை என்ற குறையைத் தீர்க்கலாம்.

    இந்த இடத்தின் ஒரு பகுதியில், சேப்பாக்கத்தைப் போல் ஒரு கிரிக்கெட் மைதானத்தையும் உருவாக்கலாம்.

    இந்த இடத்தினை வேறு எந்த வகையில் பயன்படுத்தலாம்? உங்களுக்கு ஏதும் யோசனை தோன்றுகிறதா?

    Share
  • வல்லமைக்கு நன்கொடை தாரீர்

    வல்லமைக்கு நன்கொடை தாரீர்

    அன்பு நண்பர்களுக்கு,

    வணக்கம்.

    வல்லமை மின்னிதழ், 15ஆம் ஆண்டில் நடை பயில்கிறது. இது வரை 19,735 ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இவற்றுக்கு 13945 பின்னூட்டங்கள் வரப் பெற்றுள்ளோம். ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வறிஞர் மதிப்புரையுடன் வெளியிடும் தமிழின் முதல் ஆய்விதழ் என்ற பெருமையைப் பெற்றுள்ளோம். தொடர்ந்து பங்களித்து வரும், ஆதரித்து வரும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    படைப்பாளர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள், தங்கள் படைப்புகளை மனமுவந்து அனுப்பி வருகிறார்கள். ஆய்வறிஞர்கள், மதிப்பாய்வு செய்து உதவுகிறார்கள். முனைவர் சுரேஷ், ஆக்கங்களை வெளியிடுவதில் உதவி வருகிறார். எல்.கார்த்திக், வலைமேலாண்மை செய்து வருகிறார். தன்னார்வலர்களின் உதவியுடன், ஒத்துழைப்புடன் வல்லமையை எளிமையாக நடத்தி வருகிறோம். இதைத் தொடர்வதற்கு உங்கள் உதவி தேவை.

    வல்லமையின் வழங்கிக் கட்டணத்தை 2026 ஆகஸ்டு வரை கட்டியுள்ளதால், இப்போது உடனடிச் செலவு இல்லை. கடந்த ஆண்டு பெற்ற நன்கொடையில் எஞ்சிய தொகையில், வல்லமையின் தளப்பெயரை மேலும் ஓராண்டுக்குப் புதுப்பித்துள்ளோம். இப்போது, வல்லமையின் வலைமேலாளருக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டியிருக்கிறது.

    வல்லமைக் குழுமத்தில் இந்த அறிவிப்பினை வெளியிட்ட உடன் பேராசிரியர் கண்மணி, ரூ.2500 அனுப்பியுள்ளார். முனைவர் நா.கணேசன், ரூ.5,000 அனுப்ப இசைந்துள்ளார். இந்த ஆண்டுச் செலவுக்கு இன்னும் ரூ.4500 தேவை. அன்பர்களின் நன்கொடையை வரவேற்கிறோம்.

    உங்கள் நன்கொடைகளைக் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்புங்கள்.

    Account Name: Annakannan K
    Account No: 602701508602
    Bank Name: ICICI Bank
    Bank Address: No-101, 3rd Ave, A Block, Anna Nagar, Chennai, Tamil Nadu 600102
    IFSC Code: ICIC0006027
    Swift Code: ICICINBBNRI

    PhonePe / Google Pay / UPI மூலமாகப் பணம் அனுப்ப: annakannan@okicici

    உங்கள் பங்களிப்பு மூலமாக வல்லமையை வலிமைப்படுத்துங்கள்.

    அன்புடன் என்றும்
    அண்ணாகண்ணன்
    நிறுவனர் & முதன்மை ஆசிரியர்
    வல்லமை மின்னிதழ்
    செல்பேசி: 9841120975

    Share
  • ஜமா – திரை விமர்சனம்

    ஜமா – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    ஜமா திரைப்படத்தை அண்மையில் பார்த்தேன். பாரி இளவழகன், சேத்தன், ஸ்ரீகிருஷ்ண தயாள், அம்மு அபிராமி ஆகியோரின் நடிப்பு நன்று. நீயிருக்கும் உசரத்துக்கு நானும் எப்போ வருவதம்மா என்ற பாடல், மிக அருமை.

    இந்தப் படம், கூத்துக் கலையை உயர்த்திப் பிடிப்பதாக, அந்தக் கலைக்கு வலிமை சேர்ப்பதாகப் பலரும் எழுதியிருந்ததைப் பார்த்தேன். கூத்துக் கலையை விட, அந்தக் கலைக்குள் இருக்கும் அதிகாரப் போட்டியே இந்தப் படத்தில் அதிகம் வெளிப்படுகிறது. கூத்துக் கலையை முழுமையாக நேசிப்பதை விட, அதில் அர்ஜுனன் வேடம் கட்டுவதையே இலக்காக நாயகனும் எதிர் நாயகனும் நினைக்கிறார்கள். தாங்கள் ராஜாவாக, கதாநாயகனாக மக்கள் முன் நிற்க வேண்டும் என்ற வேட்கையே இதன் முக்கிய நடிகர்களுக்கு இருக்கிறது. அந்த வேடத்தைக் கட்டிய பிறகு அதைத் தக்க வைக்க வேண்டும் என்று போராடுகிறார்கள். வாத்தியார் ஆக வேண்டும், ஜமா நடத்த வேண்டும் என்ற விருப்பங்கள் அனைத்தும் அதிகார மையம் என்ற புள்ளியை நோக்கியே செல்கின்றன.

    இதற்காக, எந்தத் தியாகத்தையும் செய்யக் கல்யாணம் என்ற நாயகன் தயார் ஆகிவிடுகிறான். தன்னை நாடி வந்து காதலிக்கும், அரவணைக்கும் பெண்ணை உதறுகிறான். அம்மாவிடம் இருக்கும் ஒரே நிலத்தை அவளிடம் பொய்சொல்லி அவள் கையொப்பத்தைப் பெற்று விற்று, ஜமாவில் பங்கேற்பவர்களுக்கு முன்பணம் கொடுக்கிறான். அப்படிப் பணம் பெற்றவர்கள் வராமல் போய்விடுகிறார்கள். ஒரே ஆதாரமான நிலத்தை இழந்தது அறிந்த அம்மாவும் இறந்துவிடுகிறார். முட்டாள்தனமாகக் கல்யாணம் அலைகிறான்.

    நிலத்தையும் அம்மாவையும் அடுத்தடுத்து இழந்த கல்யாணத்தின் மீது எனக்குக் கோபமே ஏற்பட்டது. அப்பாவைப் போல ஜமா நடத்த வேண்டும், அப்பாவைப் போல அர்ஜுனன் வேடம் கட்ட வேண்டும் என நினைப்பவன், அப்பாவைப் போன்ற தோற்றப் பொலிவையும் கம்பீரத்தையும் வளர்த்துக்கொள்ளவில்லை. பணிந்து, வளைந்து நிற்கிறானே தவிர நிமிர்ந்து நிற்கவில்லை. பெண்வேடம் போடுவதை ஒரு காரணமாகக் கூறினாலும் உள்ளுக்குள் ஒரு தழல் எரியவில்லை. அதற்காகக் கடுமையாக உழைக்கவில்லை. இலக்கிற்கு ஏற்ப, தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளாதவனுக்கு அந்த வாய்ப்பு எப்படி அமையும்?

    கடைசிக் காட்சியில் குந்திதேவியின் வேடத்தில் கல்யாணத்தின் நடிப்பு, தாண்டம் என்ற எதிர்நாயகன் காலில் விழுந்து சாகும் அளவுக்கு எல்லாம் இல்லை. குந்தியே வந்து அந்த இடத்தில் இறங்கியிருக்க வேண்டாமா? கல்யாணமே அங்கே நின்றுகொண்டிருந்தான். அதன் பிறகு அர்ஜுனன் வேடத்திற்காக, தீப்பந்தங்களுக்கு நடுவில் ஆடுவது நன்று. ஆனால், இங்கும் அர்ஜுனனின் தரிசனம் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை.

    எனவே, இதை கூத்துக் கலை பற்றிய படம் எனச் சொல்வது பொருத்தமற்றது. வளரும் கலைஞனின் மனோரதம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

    Share
  • நம் கல்வித் துறையின் போதாமைகள்

    நம் கல்வித் துறையின் போதாமைகள்

    அண்ணாகண்ணன்

    கண்டுமூட்டே (Gantumoote) என்ற கன்னடப் படத்தைப் பார்த்து முடித்தேன் (Amazon Prime). இயல்பான, அழகான, உணர்வுப்பூர்வமான காதல் கதை. நாயகியாக நடித்த தேஜூ பெலவாடி, இதில் வாழ்ந்திருக்கிறார்.

    இதில் ஒரு வசனம் வருகிறது. பள்ளி மாணவர்களிடம் ஆசிரியர் சொல்லியிருக்கிறார். ‘தேர்வில் நீங்கள் பர்ஸ்ட் கிளாஸ் மார்க் எடுத்தால், உங்கள் வாழ்க்கை பர்ஸ்ட் கிளாஸாக இருக்கும். நீங்கள் செகண்ட் கிளாஸ் மார்க் எடுத்தால், உங்கள் வாழ்க்கை செகண்ட் கிளாஸாக இருக்கும்’ என்று. இந்த மாணவன், ‘நான் பெயில் ஆகிவிட்டேன். வாழ்க்கையிலும் இனி நான் பெயில் தான்’ என்று தவறான முடிவு எடுத்துவிடுகிறான்.

    ஆசிரியர்களோ, பெற்றோர்களோ, மதிப்பெண்களுக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கவே கூடாது. அவர்கள் போகிற போக்கில் சொல்லும் ஒரு சொல் கூட, மாணவர்களிடம் மிக அழுத்தமான பாதிப்பை / தாக்கத்தை ஏற்படுத்திவிடும். மேலும், நிஜ வாழ்க்கையில் மதிப்பெண்கள் பெரிய முக்கியத்துவம் பெறுவதில்லை.

    ஒருவர், 60 சதம் எடுத்தாலே முதல் வகுப்பில் தேர்ச்சி பெறலாம். இப்படி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் வாழ்க்கையில் முதல் நிலையிலும் இல்லை. குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் அனைவரும், வாழ்க்கையில் கீழ் நிலையிலும் இல்லை. எனவே, இந்தக் கண்ணோட்டத்தை எந்த இடத்திலும், நிலையிலும் விதைக்கக் கூடாது.

    இதில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களை வேடிக்கையாக ஒப்பிடுவதோ, பொதுமைப்படுத்துவதோ கூடாது. மதிப்பெண் பெற்றால் தான் இதைச் செய்வேன் எனப் பேரம் பேசக் கூடாது. மேலும், அடிக்கடி தேர்வுகள் வைத்து மன அழுத்தத்தை உருவாக்குவதும் மதிப்பெண்களை வைத்து மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வை வளர்ப்பதும் மதிப்பெண்களைச் சாதனை எனக் கொண்டாடுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.

    மாணவர் மனம் என்பது பச்சை மண். அதில் எதை விதைத்தாலும் அழுத்தமாகப் பதிந்துவிடும். எனவே, ஆரோக்கியமான செய்திகளை மட்டுமே சிந்திக்க வேண்டும். சில பாடங்களை மட்டும் முன்வைத்து, அதில் இவர் இன்ன மதிப்பெண் என அறிவிக்கும் முறையை மாற்ற வேண்டும். ஒவ்வொருவரிடமும் என்ன திறமை இருக்கிறதோ, அதைக் கண்டறிந்து வளர்த்து, இன்னார் இன்ன திறமை கொண்டிருக்கிறார் எனச் சான்றிதழ் அளிக்க வேண்டும். இவரிடம் இன்ன திறமை இல்லை எனச் சான்றிதழ் அளிப்பதைக் கைவிட வேண்டும். கல்வித் துறையில் அடிப்படை மாற்றங்களை உருவாக்குவதே இத்தகைய சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.

    #gantumoote #amazonprime #education

    Share
  • ஜி.டி.நாயுடு பற்றி அறிஞர் அண்ணா பேச்சு

    ஜி.டி.நாயுடு பற்றி அறிஞர் அண்ணா பேச்சு

    1968ஆம் ஆண்டு, சென்னையில் நடைபெற்ற ஜி.டி.நாயுடு 75ஆவது பிறந்தநாள் விழாவில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பறக்கும் முத்தம்

    பறக்கும் முத்தம்

    அண்ணாகண்ணன்

    தூக்கம் வந்தால் தூங்கிவிடு
    தும்மல் வந்தால் தும்மிவிடு
    அழுகை வந்தால் அழுதுவிடு
    சிரிப்பு வந்தால் சிரித்துவிடு
    ஆசைப் பட்டால் அடைந்துவிடு
    அதற்காய் நீயும் உழைத்துவிடு
    உணர்வை அடக்கிக் குறுகாதே
    ஒளித்து வைத்து மருகாதே

    தெரிந்தால் தெரியும் என்றுசொல்
    தெரியாது என்றால் அதையும்சொல்
    புரிந்தால் புரிந்தது என்றுசொல்
    புரியாவிட்டால் அதையும்சொல்
    பிடித்தால் பிடித்தது என்றுசொல்
    பிடிக்காவிட்டால் அதையும்சொல்
    வேண்டாம் என்றால் விட்டுவிடு
    வேண்டும் என்றால் மொட்டுவிடு

    அப்படி நடந்தால் அதுவும்சரி
    இப்படி நடந்தால் இதுவும்சரி
    எப்படி நடந்தாலும் சரியேதான்
    எல்லாம் நமக்கு நன்மைதான்
    அதிகம் யோசித்துக் குழம்பாதே
    உள்ளம் சொல்வதைக் கேட்டுநட
    திரும்பிப் பார்க்க நேரமில்லை
    வேட்டையாடு விளையாடு

    காதலில் கற்பனை அதிகமப்பா
    கனவைக் கலைத்து எழுந்துவா
    நிஜத்தைப் பேசு நேருக்குநேர்
    நிலைப்பது நிலைக்கும் நீயேபார்
    வெற்றிகளாலே நீபேசு
    வேண்டியதெல்லாம் பின்தொடரும்
    ஆக வேண்டிய வேலையைப் பார் – இந்தா
    பறக்கும் முத்தம் பற்றிக்கொள்

     

    ————————————-

    Photo by Mahdi Chaghari from Pexels

    Share