பறக்கும் முத்தம்
அண்ணாகண்ணன்
தூக்கம் வந்தால் தூங்கிவிடு
தும்மல் வந்தால் தும்மிவிடு
அழுகை வந்தால் அழுதுவிடு
சிரிப்பு வந்தால் சிரித்துவிடு
ஆசைப் பட்டால் அடைந்துவிடு
அதற்காய் நீயும் உழைத்துவிடு
உணர்வை அடக்கிக் குறுகாதே
ஒளித்து வைத்து மருகாதே
தெரிந்தால் தெரியும் என்றுசொல்
தெரியாது என்றால் அதையும்சொல்
புரிந்தால் புரிந்தது என்றுசொல்
புரியாவிட்டால் அதையும்சொல்
பிடித்தால் பிடித்தது என்றுசொல்
பிடிக்காவிட்டால் அதையும்சொல்
வேண்டாம் என்றால் விட்டுவிடு
வேண்டும் என்றால் மொட்டுவிடு
அப்படி நடந்தால் அதுவும்சரி
இப்படி நடந்தால் இதுவும்சரி
எப்படி நடந்தாலும் சரியேதான்
எல்லாம் நமக்கு நன்மைதான்
அதிகம் யோசித்துக் குழம்பாதே
உள்ளம் சொல்வதைக் கேட்டுநட
திரும்பிப் பார்க்க நேரமில்லை
வேட்டையாடு விளையாடு
காதலில் கற்பனை அதிகமப்பா
கனவைக் கலைத்து எழுந்துவா
நிஜத்தைப் பேசு நேருக்குநேர்
நிலைப்பது நிலைக்கும் நீயேபார்
வெற்றிகளாலே நீபேசு
வேண்டியதெல்லாம் பின்தொடரும்
ஆக வேண்டிய வேலையைப் பார் – இந்தா
பறக்கும் முத்தம் பற்றிக்கொள்
————————————-
Photo by Mahdi Chaghari from Pexels