குறளின் கதிர்களாய்…(504)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(504)
பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
-திருக்குறள் – 532 (பொச்சாவாமை)
புதுக் கவிதையில்…
நிற்கமல்
நித்தம்வரும் வறுமை
ஒருவனது
அறிவைக் கொல்வதுபோல்,
ஒருவனது மறதி
அவனுடைய
புகழையே கொன்றுவிடும்…!
குறும்பாவில்…
நித்த வறுமை ஒருவனின்
அறிவை அழித்திடுவது போல, மறதி
அவனது புகழைக் கெடுத்துவிடும்…!
மரபுக் கவிதையில்…
நித்தம் வாழ்வில் நிரந்தரமாய்
நில்லா திடராய் வரும்வறுமை
சத்த மிலாதே யொருவன்தன்
சார்ந்த அறிவைக் கெடுத்தேதான்
சித்தம் மயங்கச் செய்வதுபோல்,
சிந்தை கொள்ளும் மறதியது
புத்தி கெடவே வைத்தொருவன்
புகழை யழித்து விட்டிடுமே…!
லிமரைக்கூ…
தினமும் வந்திடும் வறுமை
ஒருவனின் அறிவை அழித்தல்போல், மறதி
ஆக்குமவன் புகழை வெறுமை…!
கிராமிய பாணியில்…
கொடியது கொடியது
மகாக் கொடியது,
மனுசனுக்கு மறதி
மகாக் கொடியது..
மனுச வாழ்க்கயில
மாறாத வறும வந்தா
ஒருத்தனோட
அறிவயே அழிச்சிப்புடும்,
அதுபோல
மறதி ஒருத்தனுக்கு வந்தா
அது அவனோட
பேரு பொகழயெல்லாம்
போக்கடிச்சிடுமே..
அதால,
கொடியது கொடியது
மகாக் கொடியது,
மனுசனுக்கு மறதி
மகாக் கொடியது…!