குறளின் கதிர்களாய்…(503)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(503)
பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின்
மருங்குடைகுடையார் மாநிலத் தில்….!
-திருக்குறள் -526(சுற்றந்தழால்)
புதுக் கவிதையில்…
ஒருவன்
பெரிய கொடையாளியாகவும்,
சினத்தைச்
சிறிதும் விரும்பாத
சிறந்த குணமுடையவனாகவும்
இருந்தால்,
அவனைப்போல் சுற்றத்தாரையுடையவன்
அவனியில்
வேறு யாருமில்லை…!
குறும்பாவில்…
கொடையாளியாய், கோபம் விரும்பாத
குணவானாய் ஒருவன் இருந்தால் அவனைப்போல்
சுற்றமுடையோர் உலகில் வேறில்லை…!
மரபுக் கவிதையில்…
இல்லை யெனவே மறைக்காமல்
இருக்கும் வரையில் கொடுக்கின்ற
நல்ல குணமாம் கொடைத்தன்மை
நாளும் இயல்பாய்க் கொண்டவனாய்,
பொல்லாக் கோபம் கொள்ளாமல்
பொறுமை பேணும் ஒருவன்போல்
வல்ல சுற்றம் பெரிதுடையோர்
வையம் தன்னில் வேறிலரே…!
லிமரைக்கூ…
கொடையாளியாய், கொடிய குற்றம்
கோபம் கொள்ளா ஒருவனுக்குபோல் வேறெவர்க்கும்
அமையாது பெரிய சுற்றம்…!
கிராமிய பாணியில்…
வேணும் வேணும்
ஒறவு வேணும்,
விட்டு வெலகாத
குடும்ப ஒறவு வேணும்..
கொடயாளியாவும்
கோவப்படாதவனாயும்
ஒருத்தன் இருந்தா
அவனப்போல
குடும்ப ஒறவுகள்
கூடுதலா உள்ளவனா
ஒருத்தனுமில்ல..
அதால
வேணும் வேணும்
ஒறவு வேணும்,
விட்டு வெலகாத
குடும்ப ஒறவு வேணும்…!