படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 30 [கவிக்கோ துரை. வசந்தராசனின் “சுருக்குப்பை”]

0

முனைவர் ச. சுப்பிரமணியன்

முன்னுரை

இலக்கணத்திலும் கவிதைகளிலும் பேரார்வம் நிறைந்தது என் வாழ்வு. இந்த எண்பது வயது காலத்தில் கவிதை எனக்கு அமைதியைத் தருகிறது. என்னை நானே புதுப்பித்துக் கொள்வதற்கும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதற்கும் கவிதைகளே தலையாய காரணம். என்னைப் பொருத்தவரையில் அது ஒரு வினைவேக மாற்றியாகவே செயல்படுகிறது. அதனால்தான் கவிதைகளை அடையாளம் காண்பதில் என் மனம் அவ்வளவு எளிதாக அமைதியடைவதில்லை. எந்தக் கவிதையொடும் நான் எளிதாகச் சமரசம் செய்து கொள்வதில்லை.  நூல்களில் படிப்பதைக் காடடிலும் முகநூல் கவிதைகளைக் கண்டு மகிழ்வதில் எளிமையை உணர்கிறேன். அத்தகைய சிறப்பு வாய்ந்த முகநூலில் கவிதைப் பணி செய்துவருவோர் பலர். அவருள் என்னுள்ளம் கவர்ந்த படைப்பாளர் கவிக்கோ துரை வசந்தராசன் அவர்களாவார். படைப்புவழி என்னால் அடையாளம் காணப்பட்டவர். கவிதை மாதிரி எழுதிக் கொண்டு ‘இதுதான் கவிதை’ என்று சாதிப்பவர் அல்லர். கவிஞனாகப் பிறந்ததால் கவிதை எழுதுகிறவர். அண்மையில் முகநூலில் அவர் எழுதி என்னுள்ளம் கவர்ந்த ‘சுருக்குப்பை’ என்னுந் தலைப்பில் அமைந்த கவிதைபற்றிய கலையியல் திறனாய்வாக இக்கட்டுரை அமைகிறது.

பாடுபொருளால் சிறக்கும் ‘சுருக்குப்பை’

தற்காலக் கவிதைகளில் பெரும்பாலன காதல் சார்ந்தன அல்லது தங்களுக்குப் பிடித்தமான தலைவர்களைப் பாடித் தீர்ப்பன. கண்ணாகிய உறுப்பின் தொழில் பார்வை. அது மனத்தோடு இயைந்தவழி நோக்காக மாறுகிறது. ‘நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள்’ என்றுதான் வள்ளுவர் பாடுவார். ‘பார்த்தாள் பார்த்து இறைஞ்சினாள்’ என்று எழுதமாட்டார். பார்வையில் இறைஞ்சுவது தெரியாது. நோக்கத்தில் புலப்படும். கவிஞர்கள் நோக்கிற் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். தான் வாழுகிற சமுதாயத்தை உற்று நோக்காத யாரும் கவிதையாக்கத்தில் வெற்றிபெற முடியாது. ‘சந்திர மணடலத்தியல் கண்டு தெளிவோம் தெரு சந்திப் பெருக்கும் நல்ல சாஸ்திரம் கற்போம்’ என்னும பாரதி வரி அவன் தெருப்பெருக்கும் தொழிலாளியைக் கூட நோக்கியிருக்கிறான் என்பதைத் தெளிவு படுத்துகிறது.

தற்காலக் கவிஞர்களைப்போல் அக்காலக் கவிஞர்களுக்குப் பாடுபொருள் பஞ்சம் வந்ததில்லை. ஐவகைத் திணைகளிலும் உள்ள கருப்பொருள்களை அவர்கள் சிறப்பாகப் பாடியிருக்கிறார்கள். பாரதிதாசன் பூசணிக்காயைப் பாடியிருக்கிறார். சுரதா வாழைத்தண்டைப் பாடியிருக்கிறார். பொன்னடியான் சோப்பைப் பாடியிருக்கிறார். காமராசன் திருநங்கைகளைப் பாடியிருக்கிறார். மேத்தா அரளிப்பூவைப் பாடியிருக்கிறார். சிற்பி கிராமத்து நதியைப் பாடியிருக்கிறார். வைரமுத்து பல்லாங்குழியைப் பாடியிருக்கிறார். கவிமணி சொறிசிரங்கைப் பாடியிருக்கிறார். காளமேகம் நாயைப் பாடியிருக்கிறார். ஔவை எருமை மாட்டைப் பாடியிருக்கிறார். கவித்துவத்தால் பாடுபொருள் சிறப்படைகிறதே தவிர பாடுபொருளால் கவிஞன் சிறப்படைவதில்லை.

உற்று நோக்குந் திறனை இயல்பாகவே கொண்ட கவிஞர் வசந்தராசன் மூதாட்டியொருத்தியின் சுருக்குப்பையை நோக்கியிருக்கிறார். அவளுக்கும் அந்தப் பைக்குமான உறவை நோக்கியிருக்கிறார். அதற்குள் புதைந்து கிடந்த “புதையலை” நோக்கியிருக்கிறார். அந்த மூதாட்டி கவிஞரின் அப்பத்தாவாக இருக்கலாம். அம்மாச்சியாகவும் இருக்கலாம். உறவுக்காரராகவும் இருக்கலாம். சந்தையில் கண்டிருக்கலாம். சாலையில் சென்றிருக்கலாம். இவரிடத்திலெல்லாம் கவிஞன் அவர்தம் இடுப்பிலிருந்த அந்தச் சுருக்குப் பையைத்தான் நோக்கியிருக்கிறான். இளம்பெண்ணின் இடுப்புச் சுருக்கங்களைப் பாடுகிறவருக்கிடையே இந்தக் கவிஞன்தான் மூதாடடியின் இடுப்பில் செருகியிருக்கும் சுருக்குப்பையைப் பாடியவனாக இருக்க வேண்டும். கவிதையின் வெற்றிக்குப் பாடுபொருள் தேர்வு செம்பாகம் அன்று, பெரிது.

உத்திகளால் சிறக்கும் சுருக்குப்பை

இந்தக் கவிதை ‘சுருக்குப்பை தன்வரலாறு எழுதுவதாகப்’ படைக்கப்படவில்லை. மூதாட்டியின் சுயசரிதையாக அமையவில்லை. கவிதைக் களத்தில் படைப்பாளனே முன்னிற்கிறான். இந்தக் கவிதையை வேறு உத்தியில் சொல்லியிருந்தால் ‘இருட்டுக்கடை அல்வா போல் இனிக்கும்’ என்னும் உவமம் பயின்றுவந்திருக்காது. ‘மெல்லவிழ்ந்து சுவாசிக்கும் என்னும் சுருக்குப்பையின் நுரையீரல் வெளிப்பட்டிருக்காது. என்னதான் சுருக்குப்பையும் மூதாட்டியுமே பேசியிருந்தாலும் படைப்பாளனின் கற்பனைகளையும் உத்திகளையும் படிமங்களையும் சொல் நேர்த்தியையும் கவிதையில் கொண்டு வந்திருக்க முடியாது. வடிவமும் ஓர் உத்திதான். வெளிப்பாட்டு முறையும் ஓர் உததிதான். மூதாட்டியின் உள்ளத்திலும் சுருக்குப்பைக்கு உயிரூட்டிய உள்ளத்திலும் புகுந்துகொணடு பேசுவதைவிட தானே கண்டு வியந்த சுருக்குப்பைக் களஞ்சியத்தைக் கவிஞனே நேரடியாகப் பாடியிருப்பது மிகப் பொருத்தமாகும்.

உணர்ச்சியின் மொழிவடிவமே கவிதை

கவிதைக் கூறுகள் நான்கனுள் தற்காலக் கவிதைகளில் உணர்ச்சி தலையாயது. சங்கக் காலத்தில் அதனைத் தொடர்ந்து வந்த காலத்திலும் உள்ளடக்கம் தலையானதாகக் கருதப்பட்டது. பக்தி இலக்கியக் காலத்திற்குப் பின் கவிதை இலக்கியங்களில் உணர்ச்சியே கண்காணிக்கப்பட்டது. வியப்பிடைச் சொற்களே கவிதையாகும் விந்தையைக் கம்பன் செய்து காட்டினான். தனிப்பாடல்கள் சிலவும் இயல்பு நவிற்சியணியால் உணர்ச்சியைக் காட்சிப்படுத்தின. கவிதையாக்கின. பின்னாலே வந்த வள்ளற்பெருமானும் மகாகவி பாரதியும் பாரதிதாசனும் கண்ணதாசனும் உணர்ச்சியின் பிழம்பாகவே கவிதையுலகில் அடையாளம் காணப்பட்டனர். இந்தப் பின்புலத்தில் சுருக்குப்பையைக் காணவேண்டியதிருக்கிறது.

மன்னரின் மணிமகுடத்தைப் பாடுபொருளாக்குவதைவிட ஒரு வீரனின் கைவாளைப் பாடுபொருளாக்குவதில் கவிஞனின் நோக்கு புலப்படும். கவிதையின் வெற்றி உறுதி செய்யப்படும். கலிங்கத்துப் பரணி என்னும் இலக்கியத்துள் இராசபாரம்பரியம் என்னும் மன்னரின் வரலாற்றுப் பகுதியைவிட போர்பாடியது, களம்பாடியது என்னும் பகுதிகளே அந்த இலக்கியத்தைத் தூக்கிப்பிடிக்கின்றன என்பதை அறியலாம்.

கவிஞன் இந்தக் கவிதையில் நவநாகரிக மங்கையின் கைப்பையைப் பாடாமல் முடிந்துபோன நீண்ட நெடிய மரபின் இறுதி அடையாளமாகிய மூதாட்டியின் சுருக்குப்பையைப் பாடியிருக்கிறான். அதாவது அவன் நோக்கை அந்தச் சுருக்குப்பை ஈர்த்திருக்கிறது. ‘சுருக்குப்பை’ என்னும் சொல்லே நமக்கு அவலத்தைத் தூண்டுவதாக அமைந்துவிடுகிறது. சுருங்கச் சொன்னால் தலைப்பிலேயே அவலச்சுவையை பரிமாறிவிடுகிறார் எனலாம்.

“அடகுச் சீட்டாய் கல்கம்மல் மாறியதன் அடையா ளங்கள்!”

சுருவாட்டுக் காசில் வாங்கிய பொடி நகைகளையெல்லாம் அடகு வைக்கும் அவலம். சுருக்குப்பையில் நகையாக இருந்தவை (உண்மையில் அவை நகைகள் அல்ல. மூக்குத்தியைச் சங்கிலிக்கு ஈடாக யாரும் கருதுவதில்லை. பெண்ணுக்குச் சீதனம் கொடுக்கிறபோது கூட கம்மல், மூக்குத்தி, கால்கொலுசு இவைகளைத் தனியாகக் கணக்கிடுகிற பழக்கம் தமிழ்நாட்டில் இல்லை) நகைகள் அடகுச் சீட்டுக்களாக!. அந்த அடகுச்சீட்டுக்களைக் காணுகிறபொழுதெல்லாம் வைத்த நகைகள் அல்லவா நினைவுக்கு வரும்? அவள் எவ்வளவுக்கு வைத்திருப்பாள் சுருக்குப்பைக் காலத்தில்? அதிக பட்சம் ஐம்பது ரூபாய்க்கு வைத்திருப்பாளா? அவ்வளவுதான்! அதனால்தான் கவிஞன் அடகுப் பொருளைக் ‘கல்கம்மல்’ என்கிறான். கல்வைத்த நகைக்கு மதிப்பு குறைவு. கவிஞன் கண்ட கிழவியின் கம்மல் தங்கத்தில் வைக்கப்ட்ட வைரக்கல் நகையன்று. கண்ணாடிக் கல் நகை. எல்லாவற்றையும் தொகுத்து நோக்கினால் ‘அடகுச் சீட்டாய் கல்கம்மல் மாறியதன் அடையாளங்கள்!’ என்னும் வரியில் அடங்கியிருக்கும் வலியை உணர முடியும்.

சுருக்குப்பை சுவாசிக்கிறதாம்.

சுருக்குப்பையின் சுவாசத்தை இப்படிப் பாடுகிறார் கவிஞர். .“மெல்லவிழ்ந்து சுவாசிக்கும் சுருக்குப் பைகள்” மூதாட்டி திறந்து மூடும் நொடிக்குள் சுவாசித்துத் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறதாம் சுருக்குப்பை. சுருக்குப்பைக்கு பிராணவாயு தருவதே மூதாட்டியின் விரல்கள்தானாம். “எப்போது திறப்பாள்? என்னும் சுருக்குப்பையின் ஏக்கத்தை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  தனக்கு வாழ்வளிக்கும் சுருக்குப்பைக்குத் தான் வாழ்வளிக்கிறாளாம் மூதாட்டி! அருமையான அழகியல் கற்பனை!

தன்மை நவிற்சி அணி

புனைந்துரை ஏதுமின்றி உள்ளதை உள்ளவாறே கவிதையில் பதிவு செய்வதனைத் தன்மை நவிற்சியணி அல்லது இயல்பு நவிற்சியணி என்பார்கள் இலக்கணக்காரர்கள். சிலப்பதிகாரத்தில் உயர்வு நவிற்சியணியும் தன்மை நவிற்சியணியும் ஒரே இடததில  இயல்பாக அமைந்திருக்கும் இலக்கிய அதிசயத்தைக் காணலாம்.

பாண்டியனின் அரண்மனை வாயிற்காவலன் கண்ணகியைக் காண்கிறான். அவன் பார்வைக்கு அவளுடைய தோற்றம் எப்படி இருந்தது என அவன்  பாண்டியனிடத்தில்  காட்சிப்படுத்தியதை அடிகள் இப்படிப் பதிவு செய்கிறார்.

“அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந் துணிப்
பிடர்த் தலைப் பீடம் ஏறிய மடக்கொடி,
வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை அல்லள்;
அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை
ஆடல் கண்டருளிய அணங்கு, சூர் உடைக்
கானகம் உகந்த காளி, தாருகன்
பேர் உரம் கிழித்த பெண்ணும், அல்லள்;”

காளியாகக் காவலனுக்குக் காட்சியளித்த கண்ணகி பாண்டியனுக்கு எப்படித் தோன்றினாள் என்பதை இயல்பு நவிற்சியால் காட்சிப்படுத்துகிறார் அடிகள்.

மெய்யில் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச் சிலம்பும் கண்ணீரும் வையைக் கோன்
கண்டளவே தோற்றான், அக்காரிகைதன் சொற்செவியில்
உண்டளவே தோற்றான் உயிர் ‘

பாண்டியன் தோற்றத்தில் காணப்படும் கண்ணகியின் வண்ணனையில் அடிகள் எதனையும் புனைந்துரைக்கவில்லை என்பதை நோக்குதல் வேண்டும். சில நொடிகள் இடைவெளியில் வாயிற்காவலன் பார்வைக்கும் நாட்டு மன்னனுடைய பார்வைக்கும் உள்ள வேறுபாட்டினை அடிகள் புலப்படுத்து:ம் திறன் திறனாய்வுக்கு அப்பாற்பட்டது. சுருக்குப்பையில் புதையுண்ட பொருட்களைக் கவிஞன் காட்சிப்படுத்துகிறான்.

“பல்குச்சி, வெற்றிலைப்பாக் குச், சுண் ணாம்பு
புகையிலையின் சிறுதுண்டு, பழைய ஊக்கு
பல்திறத்துப் பைநிறைந்து வீழ்ந்து விட்ட
பழங்கலம்போல் உள்ளிருப்பு! அடகுச் சீட்டாய்
கல்கம்மல் மாறியதன் அடையா ளங்கள்!
கயிறணிந்து பதுங்கியுள வீட்டுச் சாவி! “

நோக்கின் சிறப்புப்பற்றி முன்னரே கூறப்பட்டது. இங்கே கவிஞன் சுருக்குப்பையின் அடைக்கலப் பொருள்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அடைச்சொற்களை நோக்கினால் அவனுடைய கவிநோக்கு புலப்படும்.

பல்குச்சி, வெற்றிலை சுண்ணாம்பு” என்கிறார். வெற்றிலை என்பது வெற்றிலை பாசிலையைக் குறித்ததன்று. வெற்றிலைச் சருகைக் குறித்தது. சுண்ணாம்பு என்பது சுண்ணாம்பு கரண்டவத்தைக் குறித்தது. தகரத்தினால் ஆன மிகச் சிறிய குழல்வடிவத்தில் இருப்பதுதான் சுண்ணாம்பு கரண்டவம். இந்தத் தெளிவு இல்லாமல் போனால் கவிதையை உள்வாங்கிச் சுவைக்க முடியாது. .

‘புகையிலையின் சிறுதுண்டு’ என்கிறார். ஒன்றரை அங்குல புகையிலைத் துண்டை ஒருவாரம் வைத்துப் பயன்படுத்துகிறவர்தான் அந்த மூதாட்டி. புகையிலைக்குத் தேய்பிறை உண்டு. வளர்பிறை கிடையாது. அந்தத் தேய்பிறைப் புகையிலையைத்தான் சிறுதுண்டு என்கிறார். ஊக்கைக் கூட ‘பழைய ஊக்கு’ என்கிறார். சுருக்குப்பையின் கயிறு இற்று அறுந்துவிடுமானால் அந்த ஊக்கு கயிறாக அவதாரம் எடுக்கும். கீழே கிடந்த ஊக்காகவும் இருக்கலாம். மூதாட்டி தமிழச்சியாதலாலும் சுருக்குப்பை தமிழ்ப்பண்பாட்டின் அடையாளம் ஆனதாலும் பாடுபொருளோடு அனைவரும் ஒன்ற வேண்டும் என்பதாலும் தாக்குறவுக்கு ஆளாகவேண்டும் என்பதாலும் HOOK  என்னும் ஆங்கிலச் சொல்லையே பயன்படுத்தியிருக்கிறார் என்று அமைதியடையலாம். .

கயிறணிந்து பதுங்கியுள வீட்டுச் சாவி! அந்தச் சுருக்குப்பையில் இருந்ததாம். KEY CHAIN அறிந்த இன்றைய சமுதாயத்திற்குச் சாவிக்குத் தாலிகட்டிய அந்தச் சடங்கு தெரியாது.

உயிர்பெற்று எழுந்துவரும் இறந்தகாலம்

இறந்து போன காலத்திற்குத்தான் இறந்தகாலம் என்று பெயர். மூதாட்டியின் உடைமைகளும் அவைசார்ந்த சிந்தனைகளும் வரலாறுகளும் இறந்த காலம். ஆனால் அவை அந்தச் சுருக்குப்பையில் இருப்பதால் நிகழ்காலம்.

“முடங்கினாலும் தன்னுயிரைப் பூட்டி வைக்கும்
முந்தானை முடிச்சிடுப்புப் பெட்ட கங்கள்!”

இடுப்பில் செருகியிருக்கும் சுருக்குப்பையோடு முந்தானை முடிச்சையும் துணையாக்குகிறார் கவிஞர் அந்த முடிச்சில் காசுகள் இருக்கலாம். சாவிகள் தொங்கலாம். சில நேரம் நோட்டுக்களும் இருக்கலாம். அந்தச் சுருக்குப்பையும் இந்த முந்தானை முடிச்சும் மூதாட்டிக்குப் பெடடகங்களாகத் தோன்றுகின்றன. சுருக்குப்பை காணாமல் போனாலோ, முந்தானை முடிச்சவிழ்க்கப்பட்டிருந்தாலோ மூதாட்டியின் உயிர் போய்விடும். அவற்றுக்குள் இருக்கும் பொருள்கள் அவருடைய உயிர். எனவே அந்தப் பெட்டகங்களில்தாம் அவள் உயிர் இருக்கிறது. அவள் உயிரை அந்தப் பெட்டகங்கள் பூட்டிவைத்துக் கொண்டிருக்கிறது.

கீழடியாய் மாறிய சுருக்குப்பை

படைப்பாளனுக்குச் சமகாலச் சமுதாயப் பார்வையும் சமுதாயச் சிந்தனையும் வரலாற்று நோக்கும் இயல்பாகவே இருத்தல் வேண்டும். வரலாற்று நோக்கில் இன்று இந்தியாவை அசைத்துக் கொண்டிருப்பது தமிழ்நாடடில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிகள். கீழடி முதலிய இடங்களில் கிடைக்கும் சில பொருள்கள் ஒரு பழைமையான நாகரிகத்தை வரலாற்றின் முன் கிடத்திக்கொண்டிருக்கின்றன. மூதாட்டியின் சுருக்குப்பை இறந்த காலப் பெட்டகம். இறந்த காலச் செல்வங்களைத் தன்னுள் மறைத்துக் கொண்டிருக்கும் கீழடியாய்த் தோன்றுகிறது கவிஞனுக்கு.

“உடைமைகளின் கீழடிகள்!”

மூதாட்டியின் சுருக்குப்பையில் கிடக்கும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு கீழடி. அதனால்தான் கவிஞன் கீழடிகள் எனப் பன்மையில் கூறுகிறான்.

“தோண்டத் தோண்ட
உயிர்பெற்றே எழுந்துவரும் இறந்த காலம்! “

இந்தக் கவிதையைக் காலத்துக்கும் தூக்கி நிறுத்தும் தொடர் இது. மிக இலாவகமாகக் கவிஞர் கையாண்டிருக்கிறார். வேறுவகையாகச் சொன்னால் அவரையும் அறியாமல் வந்து விழுந்த சொற்கள்.

பொதுவாகத் தோண்டுதல் என்ற சொல்லை இரண்டு இடங்களில்தாம் பயன்படுத்துவார்கள். ஒன்று ஏதாவது ஒன்றினைப் புதைக்கத் தோண்டுவார்கள். இரண்டு ஏதாவது ஒன்றினைக் கண்டெடுக்கத் தோண்டுவார்கள்.  தெளிவாகச் சொன்னால் பிணத்தைப் புதைக்கத் தோண்டுவார்கள். புதையல் இருக்குமிடத்தைக் கண்டறியத் தோண்டுவார்கள். கீழடியில் இறந்து போன எச்சங்களைத் தோண்டுகிறார்கள். ஆனால் அங்கே கிடைக்கும் பொருள்கள் உயிருள்ள ஒரு நாகரிகத்தின் அடையாளங்கள். என்ன அதிசயம்? இறந்த காலத்தை அறியத் தோண்டுகிறார்கள். நிகழ்காலமல்லவா கிடடுகிறது? இறந்து போய்த்தான் அவை கிடந்தன. தோண்டுவதனாலே உயிர் பெற்றனவாம். :தோண்டத் தோண்ட உயிர்பெற்று எழுந்தது”! நிலச்சரிவில் சிக்கி மாண்டுபோயிருப்பான் என நம்பப்பட்ட ஒருவன் மண்ணை அப்புறப்படுத்தும்போது உயிரோடு வந்தால் என்ன அனுபவம் கிட்டுமோ அந்த அனுபவமல்லவா நமக்கு? கவிதை இப்படி இருக்க வேண்டும்!

“படைவரினும் இதுவொன்றே வாளென் றென்னும்
பாசாங்கே இல்லாத நம்பிக் கைகள்! “

எல்லாராலும் கைவிடப்பட்ட மூதாட்டி எதிர்காலத்தின் திசையறிய முடியுமா என்ன? நடப்பது நடக்கட்டும் என்னும் நம்பிக்கையோடு நாள்களைக்; கடத்துகிறாள். கடத்துகின்ற நாள்களுக்கு அவளுக்குத் துணையாக வருவது அந்தச் சுருக்குப்பையாம். வாழ்க்கைக் கவலைகளில் அவள் விட்ட பெருமூச்சுக்கள் கடற்கரைக்குப் போயிருந்தால் கப்பல்கள் கவிழ்ந்திருக்கும்!. அந்த வாழ்க்கைக் கவலைகள் எல்லாம் எதிர்நாட்டுப் படைகளாம். இவள் தனனந்தனியே அவற்றை எதர்க்கிறாளாம். கையில் ஆயுதம் வேண்டுமல்லவா? அந்த ஆயுதம்தான் ;இந்தச் சுருக்குப்பையாம்! அதனுள் பள்ளிகொண்டிருக்கும் பொக்கிஷங்களாம். அவை தருகின்ற நம்பிக்கைகளாம்! அச்சுறுத்தும் எதிர்காலமாகிய எதிரியைத் தனியொருத்தியாகக் களம் காண்பதற்கு அவளுக்குத் துணையாக இருப்பது இந்தச் சுருக்குப்பை தரும் நம்பிக்கையாம்! எவ்வளவு அழகான படிமம்?

“கடந்தகால ஜீபூம்பா பூதம் தன்னைக்
கட்டிவைத்த சிறைக்கூடம் !

ஜீபூம்பா என்பது கடந்த கால நினைவுகளுக்கான குறியீடு. அந்நினைவுகள் நேர்முகமாகவோ எதிர்மறையாகவோ மகிழ்ச்சியைத் தருவனவாகவோ வருத்தத்தைத் தருவனவாகவோ அமைந்திருக்கலாம். அத்தனையையும் பூட்டி அந்தப் பைக்குள் கட்டி வைத்திருக்கிறாளாம். மூதாட்டியின் வாழ்நாள் டைரியே அதுதான் என்றும் புரிந்து கொள்ளலாம்.

அங்கத்தின் உறுப்பில் ஒன்று

வாழ்க்கையின் அவலப் பகுதிகளைப் பாடுகிறபோது அழகியலும் கற்பனையும் சற்று தூக்கலாக அமையும் அமையவேண்டும். . சிலப்பதிகார மதுரைக்காண்டத்தின் இறுதிப்பகுதியும் கம்பராமாயணத்தின் யுத்தகாண்டமும் இந்தக் கருத்தினை உறுதி செய்யும். விரிப்பின் பெருகும். முதுமை வாழ்க்கையின் இறுதிப் பருவம். சுருக்குப்பை அதன் அடையாளம். இவை அவலப்பகுதிகள். அவலக்கூறுகள். இவற்றைப் பாடுகிறபோது அங்கே கற்பனையும் அழகியலும் கவிஞனுக்குத் தெரியாமலேயே வந்து உட்கார்ந்து கொள்ளும்  அது நல்ல கவிதையாக இருந்தால்!

கயிறவிழ்க்கும் கைவிரலே கண்ணாய் மாறும்!
கைநகத்தின் நுனிபுதையல் எடுத்து மீளும்!

உலகத்தை உறறு நோக்கியிருக்கிறார் வசந்தராசன்! ‘கையறி மடமை’ என்பார்கள். சமையல் செய்யும் போது மற்றவர்களிடம் பேசிக்கொண்டே சமையற் பொருளுக்கான அளவைப் பார்க்காமலேயே எடுத்துப் போடுவதைப் பாரத்திருக்கலாம். கண்ணின் துணையிலலாமலேயே கை செய்யும் பணி அது. ஓட்டுநர் கண் சாலையில் இருக்கும். அவருடைய கால்கள் பிரேக்கில் இருக்கும். அது தானாகச் செயல்படும். தட்டச்சு செய்வர்கள் திரையைத்தான் பார்ப்பார்கள். விசைப் பலகையை விரல்கள்தாம் பார்க்கும். பூக்கடடுகிற பெண்களைப பார்த்திருக்கலாம். விரல்கள தொடுக்கும். விழிகள் அலைபாயும். இவைபோலவேதான் மூதாட்டி சுருக்குப்பையின் திறப்புவிழா நடைபெறுகிறது. ‘கைவிரலே கயிறவிழ்க்கும்! விரல்கள் கண்ணாய் மாறும்! சுருக்குப்பையின் திறப்புவிழாவில் நேரில் கலந்து கொள்ளாதவர்கள இந்த வரியை அவ்வளவாகச சுவைக்க முடியாது.

உயிரவிழ்த்து பத்திரமாய் அதனுள் பொத்தி
வைத்ததுபோல் அடிக்கடியே திறந்து மூடும்!

தேடிவைத்த செல்வங்கள் இருக்கின்ற சுருக்குப்பை அது!. மயிலிறகு குடடிப் போடுகிறதா என்று பார்க்கும் குழந்தைகள் போல அந்தப் பையை அடிக்கடி திறந்து மூடுதற்குக் கவிஞன் ஒரு காரணத்தைச் சொல்கிறான். அவள் உயிர் அதற்குள் இருக்கிறதாம். பைக்குள் இருக்கிற உயிரைப் பாதுகாக்கிறாளாம் மூதாட்டி. உயிர் பாதுகாப்பாக இருக்கிறதா என்று பார்ப்பதுபோல திறக்கிறாளாம். பாரக்கிறாளாம் மூடுகிறாளாம். தற்குறிப்பேற்ற அணியை விளக்கம் ஆசிரியப் பெருமக்களின் கவனத்திற்கு வரவேண்டிய வரிகள்.

துயில்நடுவே கைதடவத் தானாய்ப் போகும்!
துக்கமகிழ் வெல்லாமே அதனுள் வாழும்!

தூக்கத்தில் கூட தன்னையறியாது தன்னருகில் தன் குழந்தை படுத்திருக்கிறதா என்று கைதடவி அறிந்து கொள்ளும் தாயைப் போலச் சுருக்குப்பையைத் தடவிக்கொண்டு உறங்குகிறாளாம் மூதாட்டி! இறந்தகாலத் துக்கமும் நிகழ்கால் மகிழ்ச்சியும் அந்தப் பைக்குள்ளே வாழுகிறதாம். மூதாட்டியின் துக்கத்தையும் மகிழ்ச்சியையும் சுருக்குப்பையின் புதையல்கள் அடையாளப்படுத்துகின்றனவாம். ‘துக்கமகிழ்வெலலாமே அதனுள் வாழும்!

அயலல்ல அங்கத்தின் உறுப்பி லொன்று!
அருங்காட்சி யகம்தோற்க வெல்லும் நின்று!
என்னும் வரிகளில் சுருக்குப்பையின் உள்ளீட்டை அடிபபடையாகக் கொண்டு அதனை அருங்காட்சியகம் என்கிறார். ‘அருங்காட்சியகம் என்னும் சொல் ஏதோ மோனைக்காககப் போடப்பட்டதன்று. பொருள் பொதிந்த சொல். அருங்காட்சியகம் என்பது கழிந்தவைகளின் மண்டபம். பழைமைப் பெட்டகம். இன்று கரண்டவம் கிடையாது. வெற்றிலைச் சருகு கிடையாது. புகையிலைக் காம்பு கிடையாது. எட்டாக மடிக்கப்பட்ட நோட்டு கிடையாது. சிலலரைக் காசுகள் கிடையாது. ஊக்கு கிடையாது. பல்குச்சி கிடையாது. சுருக்குப் கிடையாது இவ்வளவு ஏன்? மூதாட்டிகளே கிடையாது. இருப்பார்களேயானால் அவர்கள முதியோர் இல்லத்தில் அல்லது காப்பகத்தில்! எனவேதான மேற்கண்டவற்றைப பார்க்க வேண்டுமென்றால் எங்கோ ஓர் மூதாட்டியிடம் தான் காணமுடியும். அதனால் அது அருங்காட்சியகம். கீழடிக்கு நாம் சென்றுதான் பார்க்க வேண்டும் கீழடி நம்மை நோக்கி வராது.

பெருக்கலுக்கே கூட்டலெனும் குறுக்குப் பாதை
போடுகிற கிழமுதுமை மாங்கல் யப்பை!

என்னும் இரண்டு வரிகளும் முதல் விருத்தத்தில் இருந்தாலும் மாலை மாற்று என்பதுபோல இறுதி வரியாகவும் கொள்ளலாம். இங்கே ஒரு வித்தையைச் செய்து காட்டுகிறார் கவிஞர். கூட்டலின் சுருக்கம்தான் பெருக்கல். பெருக்கலின் சுருக்கம் கூட்டல் அன்று. ஆனால் பெருக்கலுக்கே கூட்டலெனும் குறுக்குப் பாதை போடுகிற கிழ முதுமை” என்கிறார்.  இளமை முதுமையாகும். ஆனால் முதுமை இளமையாகாது. சுறுசுறுப்பாகச ;செயல்பட்ட காலம் ஒன்று உண்டு. இன்று அது பின்னமாகி நிற்கிறது. சில நொடிகளில் திறக்க வேண்டிய சுருக்குப்பையைத் திறக்க இரண்டு நிமிடம் தேவைப்படுகிறது. ஒரு வெற்றிலைச் சருகின் காய்ந்து போன காம்பினைக் கிள்ள சில நிமிடம் தேவைப்படுகிறது. கரண்டவத்தைத் திறந்து ஆட்காட்டி விரலால் சுண்ணாம்பு தடவிக்கொள்ள சில நிமிடங்கள். இப்படி முதுமையில் ஒவ்வொரு நொடிச்செயலையும் நிமிடக்கணக்கில் நிகழ்த்துகிறார் மூதாட்டி. இங்கே பெருக்கல் கூட்டலாகிறது. நிமிடங்கள் நொடிகளாவது இளமை. நொடிகள் நிமிடங்களாவது முதுமை. அதனால்தான் பெருக்கலின் சுருக்கம் கூட்டல் ;என்று முரணமைத்துக் காட்டுகிறார் கவிஞர்!. அழகான ஆழமான சிந்தனையல்லவா? எண்ணிப் பார்க்கத் தூண்டும் கற்பனையல்ல்வா? என்னதான் திறனாய்வு என்றாலும் கத்தியால் அறுக்கப்பட்ட மாம்பழத் துண்டைவிட பற்களால் கடித்துத் தின்னும் மாம்பழத்தின சுவையே தனி. வாசகர்கள் சுருக்குப்பை பற்றிய இந்த நான்கு விருத்தங்களையும் படித்து உணர வேண்டும். உணர்ந்து படிக்க வேண்டும். உள்ளத்தில் இருத்த வேண்டும். கவிதையைச் சுவைப்பது பசு அசைபோடுவதைப் போல!

சுருக்குப்பை வாய்திறந்தால் வேர்வை வாசம்!
சுண்டுகிற ‘நாணயங்கள்’ நின்று பேசும்!
கருக்கல்வாய்த் தாம்பூலப் புதையல் கொஞ்சம்
இருட்டுக்கடை அல்வாபோல் இனிக்கும் நெஞ்சம்!
சுருக்கிவைத்த செலவினத்தின் எச்சம் மிஞ்சும்!
சுற்றளவில் இடைசிறுத்து இடுப்பில் தொங்கும்!
பெருக்கலுக்கே கூட்டலெனும் குறுக்குப் பாதை
போடுகிற கிழமுதுமை மாங்கல் யப்பை!

பல்குச்சி வெற்றிலைப்பாக் குச்சுண் ணாம்பு
புகையிலையின் சிறுதுண்டு பழைய ஊக்கு
பல்திறத்துப் பைநிறைந்து வீழ்ந்து விட்ட
பழங்கலம்போல் உள்ளிருப்பு! அடகுச் சீட்டாய்
கல்கம்மல் மாறியதன் அடையா ளங்கள்!
கயிறணிந்து பதுங்கியுள வீட்டுச் சாவி!
மெல்லவிழ்ந்து சுவாசிக்கும் சுருக்குப் பைகள்
மூவுலகை முடக்குகின்ற திறவு கோல்கள்!

முடங்கினாலும் தன்னுயிரைப் பூட்டி வைக்கும்
முந்தானை முடிச்சிடுப்புப் பெட்ட கங்கள்!
உடைமைகளின் கீழடிகள்!தோண்டத் தோண்ட
உயிர்பெற்றே எழுந்துவரும் இறந்த காலம்!
படைவரினும் இதுவொன்றே வாளென் றென்னும்
பாசாங்கே இல்லாத நம்பிக் கைகள்!
கடந்தகால ஜீபூம்பா பூதம் தன்னைக்
கட்டிவைத்த சிறைக்கூடம் ! சுருக்குப் பைகள்!

கயிறவிழ்க்கும் கைவிரலே கண்ணாய் மாறும்!
கைநகத்தின் நுனிபுதையல் எடுத்து மீளும்!
உயிரவிழ்த்து பத்திரமாய் அதனுள் பொத்தி
வைத்ததுபோல் அடிக்கடியே திறந்து மூடும்!
துயில்நடுவே கைதடவத் தானாய்ப் போகும்!
துக்கமகிழ்ச்சி எல்லாமே அதனுள் வாழும்!
அயலல்ல அங்கத்தின் உறுப்பி லொன்று!
அருங்காட்சி யகம்தோற்க வெல்லும் நின்று!

நிறைவுரை

பாடுபொருளின் தேர்ச்சியும் ஒரு கவிதை வெற்றி பெறுவதற்கான காரணிகளில் ஒன்று என்பதை இந்தக் கவிதை உறுதி செய்திருக்கிறது. அகம் புறம் என்னும் பழந்தமிழ்க் கவிதைப் பாகுபாட்டிலும் முதுமை ஒரு பாடுபொருளாக இருக்கவில்லை. நீதிகளை மையமாக வைத்த காப்பியங்களிலும் முதியவர்கள் பாத்திரங்களாக வந்து போனார்களே தவிர, முதுமையின் அவலம் பாடுபொருளாகவில்லை. இடைக்காலத்திற்குப் பிறகுதான் பருவநிலைகள் பாடுபொருளாக்கப்பட்டன. நல்குரவு என்று ஒற்றைச் சொல்லில் வள்ளுவர் பாடினார். இளமையின் பரப்பினைப் பாடிய அளவுக்கு முதுமையின் சுருக்கங்களைத் தமிழ்க்கவிதையுலகம்  பாடவில்லை.  சிலம்பு, குண்டலகேசி, வளையாபதி, மணிமேகலை, சிந்தாமணி என்று மங்கையின் உறுப்பணிகளைப் பெயர்களாக வைத்த புலவர் பெருமக்கள் பார்வையில் சுருக்குப்பை படவேயில்லை! அவர்களுக்கு இடுப்பின் மேகலை தெரிந்தது. சுருக்குப்பை தெரியவில்லை. அவலம் என்பது இந்தச் சுருக்குப்பையின் படிமம்.  “கிழ முதுமையின் மாங்கல்யப் பை’ என்னும் படிமத்தில் சுருக்குப்பையை மணமகளாகவும் கயிற்றை மாங்கல்யமாகவும் காடடியிருக்கும் கவித்திறன் எண்ணி வியக்கத்தக்கது. கற்பனை, உணர்ச்சி, கருத்து என்னும் கவிதைக் கூறுகள் நான்கனுள் எண்சீர் விருத்தம் என்பது மிகச் சாதாரணமான வடிவம். ஏனைய மூன்று கூறுகளிலும் முழுமை பெற்று நிற்கும் இந்தக் கவிதையில் கவிஞனின் கூரிய நோக்கும் புதுமை பாடும் போக்கும் சமுதாய தாக்குறவும் கலந்த நிலையில் ஓர் அழகியல் தன்னையே ஓவியமாகத் தீட்டி வைத்திருப்பதைக் காணலாம்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.