குறளின் கதிர்களாய்…(502)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(502)
செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை
காணிற் கிழக்காந் தலை.
-திருக்குறள் -488(காலமறிதல்)
புதுக் கவிதையில்…
வெல்ல நினைக்கும் வேந்தர்
தம் பகைவர்
அழியும் காலம் வரும்வரை
அவரைக் கண்டால்
அவரிடம்
பணிவுடையவராய் செயல்படவேண்டும்,
காலம் வந்தால்
அப்பகைவர்
கட்டாயம் அழிவார்…!
குறும்பாவில்…
வெல்ல விரும்பும் அரசர்
பகைவர்முன் பணிக, காலம் வரும்போது
நிச்சயமாய்ப் பகைவர் அழிவார்…!
மரபுக் கவிதையில்…
வெல்ல விரும்பும் வேந்தரவர்
வெறுக்கும் பகைவர் அழிந்தொழியும்
நல்ல காலம் வரும்வரையில்
நயமாய்ப் பணிக அவர்முன்னே,
வெல்ல இதுவும் வழிமுறைதான்
வெற்றி எளிதில் பெற்றிடவே,
பொல்லாப் பகைவர் அழிந்திடுவார்
பொருந்திக் காலம் வருகையிலே…!
லிமரைக்கூ…
வெல்ல விரும்பும் மன்னர்
பகைவர்முன் பணிக, காலம் வரும்போதவர்
நிச்சயமாய் அழிவர் பின்னர்…!
கிராமிய பாணியில்…
செயல்படணும் செயல்படணும்
நல்லா அறிஞ்சி செயல்படணும்,
செயல்படுறதுக்கு முன்னால
சரியான காலமறிஞ்சி செயல்படணும்..
பகயாளிய செயிக்கணுண்ணா
அவனுக்கு
அழிவு காலம் வாறவரைக்கும்
ராசா அவங்கிட்ட
கொஞ்சம்
பணிவாத்தான் போகணும்,
காலம் வரும்போது அவனுக்குக்
கட்டாயம்
அழிவு வந்திடும்..
அதால
செயல்படணும் செயல்படணும்
நல்லா அறிஞ்சி செயல்படணும்,
செயல்படுறதுக்கு முன்னால
சரியான காலமறிஞ்சி செயல்படணும்…!