கிண்டியில் மிகப் பெரிய பூங்கா
அண்ணாகண்ணன்
கிண்டியில் ரேஸ்கோர்ஸிடமிருந்து திரும்பப் பெற்ற 118 ஏக்கர் நிலத்தில் மிகப் பெரிய பூங்காவும் பசுமை வெளியும் அமைக்க உள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அங்கே நீர்நிலையுடன் கூடிய பூங்கா உருவாக்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் மையப் பகுதியில் உள்ள இந்த இடத்தில் பேருந்து நிலையத்தைக் கொண்டு வர முன்பு யோசனை தெரிவித்தனர். ஆனால், ஆயிரக்கணக்கான பேருந்துகள் வந்து சென்றால், இதன் சுற்றுவட்டாரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே, அது பரிசீலிக்கப்படவில்லை.
பூங்கா அமைப்பதால், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். அதே நேரம் பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் வந்து செல்லலாம். நடைப்பயிற்சி, ஓட்டப் பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். சுற்றுலாத் தலமாகவும் வளரும்.
அருகில் உள்ள கிண்டி சிறுவர் பூங்கா, ராஜ் பவன், ஐஐடி, அண்ணா பல்கலை உள்ளிட்ட பகுதிகள், ஆயிரக்கணக்கான மரங்களுடன் பசுமையாகப் பராமரிக்கப்படுகின்றன. உட்லண்ட்ஸ் டிரைவ் இன் இருந்த இடத்தில் செம்மொழிப் பூங்கா அமைந்துள்ளது.
கிண்டிக்கு அருகில் தாங்கல் ஏரி, வேளச்சேரி ஏரி உள்ளிட்டவை அமைந்துள்ளன. மிக அருகில் அடையாறு நதி ஓடுகிறது. அடையாற்றின் கரை முழுவதையும் நீண்ட பூங்காவாக, வனமாக வளர்த்தெடுக்கலாம். இதன் மூலம் கரைகள் பலப்படும். மண் சரிவு ஏற்படாமல் இருக்கும். இதன் மூலம் வெள்ள அபாயத்தையும் தவிர்க்கலாம்.
புதிதாக அமைய உள்ள ரேஸ்கோர்ஸ் பூங்காவுடன் இணைத்து, இதர பசுமை வளங்களையும் ஒருங்கிணைத்து ஒரு பெருந்திட்டத்தை முன்னெடுக்கலாம். கேபிள் கார் முதலானவற்றை அமைக்கலாம். பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தடை விதிக்கப்பட்ட இடங்களைத் தவிர, இதர இடங்களை மேலிருந்தும் சுற்றிப் பார்க்கலாம்.
ரேஸ்கோர்ஸ் இடத்தில் மிகப் பெரிய கூட்ட அரங்கினை உருவாக்கலாம். சென்னையில் பெரிய அரங்குகள் இல்லை என்ற குறையைத் தீர்க்கலாம்.
இந்த இடத்தின் ஒரு பகுதியில், சேப்பாக்கத்தைப் போல் ஒரு கிரிக்கெட் மைதானத்தையும் உருவாக்கலாம்.
இந்த இடத்தினை வேறு எந்த வகையில் பயன்படுத்தலாம்? உங்களுக்கு ஏதும் யோசனை தோன்றுகிறதா?