Blog

  • சடுதியில் உருப்படியாக முடிச்சவிழ்க்க…[1]

    இன்னம்பூரான்

    unnamed

    ஆளுமையில் இருப்பவர்கள், அரசு/தனியார்/கூட்டு யாதாயினும் சரி, அவிழ்க்குமுன் இறுக்கமாகவே முடிச்சுப் போட்டு விட்டு, தீர்வு காணப்போவதாக பாவ்லா காட்டும் காட்சிகள் கூடி வருகின்றன. பங்குச்சந்தை சகுனிகளுக்கு தீனி போடுவது நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த அற்பாசை பாமரர்கள். தரகு பிடிப்பது அரசு/தனியார்/கூட்டு ‘பெருந்தகைகள்’. சில மந்திர சொற்களை முதலில் புரிந்து கொள்வோம்.

    CBI ~புலனாய்வுத்துறை [1]

    SEBI ~பங்குச்சந்தை கண்ட்ரோலர் [2]

    MCX-SX ~ ஆரூட பங்குச்சந்தை [3]

    FTIL -ஜிக்னேஷ் ஷா நிறுவிய Financial Technologies India Ltd [4]

    முடிச்சு 1: [2]வின் மாஜி தலைவர் சி.பி.பவே/ மாஜி அங்கத்தினர் கே.எம். அப்ரஹாம் மீதும், [1] குற்ற விசாரணை துவக்கியுள்ளது. குற்றம்: [3] க்கு 2008, 2009, 2010 ஆகிய வருடங்களில் ஆரூடாட்டம் ஆட அனுமதி அளித்தது. ஆரூடாட்டம் என்பது அன்றாட பங்குச்சந்தை வரத்துப்போக்கை விட மாபெரும் பகடையாட்டம். தங்கம், வெள்ளி, உளுந்து, கடுகு, புண்ணாக்கு, அன்னிய நாட்டு துட்டு எல்லாவற்றையும் பற்றி வருங்கால விலையை பற்றி ஆடும் ஆடு புலியாட்டம். எல்லா நாடுகளிலும் இது இருக்கிறது. நாணயமற்ற அரசு/தனியார்/கூட்டு ‘பெருந்தகைகள்’ உம்மையும் எம்மையும் நிர்க்கதியாக்க துணிவார்கள். ஆகவே, இந்த விசாரணையின் பயங்கர பின்னணியை நாம் அறிந்துகொள்வது நலன் பயக்கலாம். முதலில் இந்த விசாரணை மீதே குற்றம் சாட்டுபவர்கள் யார்? ~ திருவாளர்கள் வினோத் ராய்: தணிக்கை புகழ் சீஏஜி, என்.விட்டல்: கண்காணிப்பு புகழ் மாஜி தலைமை விஜிலன்ஸ் கமிஷனர். ஈ.ஏ.எஸ். சர்மா & ஜி.சுந்தரம்: வாய்மை புகழ் மாஜி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். அவர்கள் நால்வரும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கண்ணியத்துக்கு நற்சான்று அளிக்கிறார்கள். சச்சரவுக்கு உள்ளானாது [1] என்ரும், அதன் வாய்மை கேள்விக்குறி ஆகிவிட்டது என்கிறார், என்.விட்டல். குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிலைப்பாடுகள் யோக்கியமானதாக இருந்திருந்திருந்தால், அவர்களுக்குக் கவசம் தேவை என்கிறார், சர்மா. ஓய்வு பெறும் வரையில் காத்திருந்து, இறுதி நாளன்று அம்பு வீசுவதை கண்டித்தார், திரு. சுந்தரம்.

    இது இவ்வாறு இருக்க, சில பின்னணிகள்:

    மாசிலாமணி என்று கருதப்பட்ட திரு. அப்ரஹாம் 2011ல் அரசு/தனியார்/கூட்டு ‘பெருந்தகைகள்’ ஆடிய பேயாட்டம் பற்றி, குறிப்பாக நிதி அமைச்சரகத்திலிருந்து, பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார். [2]யை அவர்கள் பலவீனம் செய்ததை கூறினார். அது ‘யதாஸ்தானம்பிரதிஷ்டயாமி’ என்று நிதி அமைச்சரகத்தை சரணடைந்து தகனம் செய்யப்பட்டது. அக்காலத்து நிதி அமைச்சர் தற்காலம் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட ஜனாதிபதி. அந்த அதிகாரிகள் ராஷ்ட்ரபதி பவனில் பணி புரிவதால், அவர்களுக்குக் கவசம்.

    சஹாராதிபதியின் ஊழலை கண்டித்து, அடக்கி வைத்து, அவரை தற்காலத்து இற்செறிப்புக்கு வழி வகுத்தவர் தான் திரு.அப்ரஹாம்.

    நில்லா நிலக்கரி இலாக்கா காரியதரிசி திரு. பி.சொ.பரேக் அவர்களுக்கும் அதே அதோகதி, நிரூபணம் இல்லாமல். உச்ச நீதிமன்றம் அந்த வழக்கில் தற்கால தலைமை கண்காணிப்பு கமிஷனர் பேசாமடந்தை என்று கேலி செய்தது. சொல்ல நிறைய இருக்கிறது. ஆனால், வலிக்கறதே.

    இந்தியா? உன் முடிச்சுகளின் நாமாவளி பகரவா? இல்லை, வாசகாதிபதிகள் மவுனம் சாதிப்பார்களா?

    Image credit: http://img.designswan.com/2010/01/knot/10.jpg

    [தொடரும்]

     இன்னம்பூரான்

    Share
  • திருமால் திருப்புகழ் (30)

    கிரேசி மோகன்

    Tamil-Daily-News-Paper_17914545537

     

    தனன தனதான தனன தனதான
    தனன தனதான தனன தனதான -தனதான….

     
    “சகட னொடுவானின் முகடு வரையேகி httpwww.chanadanadharmam.blogspot.com 2
    தவிடு பொடியாகி தரையில் அவன்வீழ -மெதுவாக
    படிகள் தவழ்ந்தேறி கபடு அறியாத
    சவலை சிசுவாக கடையும் நவநீத -ருசிகாண
    விகட முகமோடு வெகுளி இடைமாது
    புடவை முடிபோட புகும வனின்லீலை -புரியாத
    அகட முறைமாமன் அழிய ,வசுதேவர்
    அபலை தனைமீட்க அவனி அவதார -பெருமாளே”
    ———————————————————————————————————

    படத்திற்கு நன்றி:

    http://news-amanushyam.blogspot.in/2013/01/blog-post_3612.html

    Share
  • அன்புள்ள மணிமொழிக்கு

    நேசமித்ரன்

    அன்புள்ள மணிமொழிக்கு

    நலம் ! விழைவதும் அதுவே ….

    தாமரைத்தண்டில் மூச்சு விட்டபடி நண்டூரும் சேற்றில் அளைந்த நம் விரல்கள் இன்று இரு வேறு உலகங்களின் வெவ்வேறு வேர்கள். நித்தியமும் பிரார்த்தனைக்குப் பின் ஒரு கவளம் எடுத்து வைத்து விட்டு உண்ணும் வழக்கம் இன்னும் உனக்கு மாறி இருக்காது. கடல் பார்ப்பது மாதிரி எனக்கு உன் கண்கள் சலிப்பதே இல்லை என்ற உன் வரியை சமீபமாய் பழநி யானைப்பாதையில் இறங்க முடியாமல் மண்டியிட்ட யானை அருகே அமர்ந்து அழுத பாகனின் கேவலில் கேட்டேன். வதுவை என்ற வார்த்தை மீது உனக்கு அவ்வளவு ப்ரேமை. பாரதி எவ்வளவு அழகா பயன்படுத்தி இருக்கான் பாரேன் என்பாய்.

    கடைசியாய் முதல் முத்தம் பகிர்ந்த ட்யூஷன் எடுத்த பழநிச்சாமி வாத்தியார் வீட்டுக்கு போகப் பார்த்தேன். அவர் அந்த வீட்டை விற்று விட்டாராம். வெள்ளை அடித்து அந்த எண்ணெய்க் கறைகளில் செதுக்கிய பெயர்களெல்லாம் அழிந்து விட்டன. ஆனால் இன்னும் சிட்டுக்குருவிகள் நெல் பொறுக்க வருகின்றன பென்னிட்டா.

    பனங்காய் சக்கரங்களில் இன்னும் யாரோ ஒருவன் இழுத்துச் செல்ல எவளோ சிறுமி ஓட்டைப் பல் தெரிய செல்லக் கூச்சல் இட்டபடி சரளைப் பாவாத சாலையில் அலைகிறாள். சரண்யாவுக்கு இரண்டாம் குழந்தை பிறந்திருக்கிறது. ரவி ரேடியோக்கடையில் இன்னும் தூங்காதே தம்பி தூங்காதே பாட்டோ தேவனின் கோவில் மூடிய நேரம் பாட்டோ கேட்டுக் கொண்டிருக்கிறது.

    பெரியாற்றில் நீ குளித்து விட்டு வந்தபோது பூ கொடுத்து செபாஸ்டியனை அறைந்த அதே புங்க மர நிழலில் யாரோ கலவிக் கிடந்தார்கள் ஒருமுறை. பென்னி, செபாஸ்டியனை நீ மன்னித்திருக்கலாம். பிறகொரு நாள் முருகன் தியேட்டருக்கு பின்புறம் கஞ்சா அடித்து விழி செருகி கடந்தவனை போலீஸ்காரர்கள் இழுத்துப் போனதற்கு பிறகு யாரும் அவனை பார்க்கவில்லை என்கிறார்கள் .

    நம் செல்வி மிஸ்ஸுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. சொல்ல மறந்து விடப் போகிறேன். நீ இன்னுமொருமுறை வந்தால் ஜெனிபரின் கல்லறைக்கு ஒருமுறை விளக்கேற்று. ஆம் யாருக்காக உன் காதலைத் தியாகம் செய்து விட்டு பிரிந்து போனாயோ அந்த ஜென்னிதான் இறந்து போனாள் நாம் நினைப்பது மாதிரியா எல்லாம் நடக்கிறது.

    என்றென்றைக்குமான  காதலின் நேயத்துடன்

    நேசமித்ரன்

    Share
  • அன்புள்ள மணிமொழிக்கு

    சங்கர் சுப்ரமணியன்

    அன்புள்ள மணிமொழிக்கு

    அன்பு மகளே எப்படியிருக்கிறாய் . இங்கு அனைவரும் நலம். எப்பொழுதும் எங்கள் ஞாபகங்களில் நீதான் நிறைந்து கொள்கிறாய். நீ என்னோடு பேசும் பொழுதெல்லாம் ஞாபகப்படுத்துகிறாய். என்னை பார்க்க வேண்டும், அல்லது அவசரமாக தகவல் அனுப்ப வேண்டும் என்றால் என் பேஸ்புக் பக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்று. என் கடிதம் உன்னுடைய நண்பர்கள் மத்தியில் இலேசான வெட்கத்தை ஏற்படுத்துவதாக கூறியிருந்தாய். ஆனால் மணிமொழி இப்படியாககடிதம் எழுதும் பொழுதுதான் என்னுடைய முழுமையான உணர்வுகள் வார்தைகளில் வெளிப்படுவதாகவும், மற்ற எந்தவிதமான தொடர்புகளும் முழுமையில்லாமல், இன்னமும் கொஞ்சம் அழகாக தெரியப்படுத்தி இருக்கலாமோஎன்ற ஆதங்கத்தில் முடிவதாகவே எனக்கு தோன்றுகிறது.

    நேற்று நம் வீட்டுக்கு பொதுமக்கள்  மனதில்  நிறைந்து  இருக்கும் அண்ணன் கோபால்சாமி வந்திருந்தார். யாருக்கும் உதவுவதற்கு எந்த சமயத்திலும் தயாராக காத்திருப்பவர் அவர். என்னுடைய அப்பாவின் நெருங்கிய நண்பர் . நான்தான் என்னுடைய வாழ்க்கை தேடலில் கொஞ்சமாக தள்ளியிருந்துவிட்டேன் அவரிடமிருந்து. நம் வீடு தேடி மறுபடியுமாக அவர் வந்தது எனக்கு பெருமைதான். அவர் ஏதோ உடம்பு முடியாமல் நீ படிக்கும் ஆஸ்பத்திரியில் சேர்ந்திருந்ததும், அங்கு உன் அனுகுமுறையும் , சேவையும் கண்டு வியந்து போய் உன்னை விசாரித்து, நீ என் அப்பாவின் பேத்தி என தெரிந்ததும் இங்கே மறுபடியுமாக வந்திருந்தார். “ துளி கூட கலப்படமில்லாத அன்பினில் நிறைந்த அந்த மனம், வாழ்க்கையையும் சேவையையும் இருவேறாக பிரிக்காத அந்த பக்குவம். எவருடைய மனத்தையும் எப்பவுமே கஷ்டப்படுத்தாமல் வெளிவரும் வார்த்தை . உன் அப்பாவின் மாற்றமில்லாத பிரதியாகத்தான் அவளைப் பார்த்தேன். அத்தோடு அவளோடு ஒட்டிக்கோண்ட அறிவும், அவள் ஈடுபாடும்…” என  இன்னமும் பலவாறாக உன்னை நம் சொந்தங்களின் முன்னே பெருமையுடன் பேசிவிட்டு, படிப்பு முடிந்ததும் கண்டிப்பாக தெரியப்படுத்து . இனியாவது எங்களிடமிருந்து ஒதுங்காமல் வீட்டிற்கு வா … என்று கூறி, மறுக்காமல் மதிய உணவையும் நம் வீட்டிலேயே முடித்து விட்டு சென்றார். என் மனத்திற்குள் பிடிபடாத பெருமை இன்னமும் நிறைந்து வழிகிறது. என் தந்தையையும் உன்னையும் பற்றி நான் பெருமையாக கேட்கும் பொழுதெல்லாம் இப்படித்தான் வார்த்தைகளற்று என் மனம் சந்தோசத்தில் நிறைகிறது.

    தாராள  மனமும்,  சமுதாய  அக்கறையும் கம்பீரமும் கொண்டவர் என் பணக்கார தந்தை. எங்கள் வீட்டு கதவு அதிக நேரம் உதவிகள் கேட்டே தட்டப்படும்.  மற்றவர்களுக்கு உதவி செய்வது தர்மம் அல்ல கடமை என்றே என்  தந்தை கூறுவார்.  எங்கள் கார் எங்கள் குடும்பத்தை சுமந்ததை விட, இக்கட்டமான தருணங்களில் சுற்றியருக்கும் கிராமமக்களை சுமந்து சென்றதே அதிகம். மருத்துவமனை இல்லாத சுற்றியுள்ள கிராமங்களின் மருத்துவ சேவைக்காக என்னை மருத்துவனாக்குவது என்பதில் உறுதியாக  இருந்தார். ஆனால்  தடுமாறிய காலசக்கரத்தில், எதிர்பாராத ஒரு அதிகாலை வேளையில், அம்மாவின் அலறல் சத்தம் கேட்டு ஒடிச்சென்று பார்த்தால், சிரித்தமுகத்துடன் என் தந்தை  இறந்து கிடந்தார் அவர் அறையில். அழுகுரல், கதறல் எல்லாம் எங்கோ தொலைதூரத்தில் கேட்கும் சத்தம் போல் இந்த உலகமே வெகுவேகமாக சுற்ற நான் மயங்கி விழுந்தேன். என்னால் தாங்கவே முடியாத தந்தையின் இழப்பை என்  மனமே முழுமையாக உணர்வதற்குள் சுயநலமிக்க மனிதர்களால் பணம் சொத்து என எல்லாம் நான் இழக்க… மிஞ்சியது இந்த வீடும் எனை சுற்றி பயமுறுத்தும் அழுகுரலும்தான். நான் வாழ்க்கையின் புரியாத தத்துவத்தில் செய்வதறியாது திகைத்து போனேன். என் அன்பு தந்தை, எனக்கு எல்லாமுமானவர் அன்று என்னோடு இல்லை என்று தெரிந்த தனிமையில், முட்டி கொண்டு  வந்தது பேரழுகை.

    மனத்தை ஒருமுகப்படுத்தி, தந்தையின் ஆசியுடன், உத்வேகம், உறுதி என்ற இரு வார்த்தைகளில் என் மனதை இருத்தி உழைத்தேன். பெரும் வெற்றிகள் என் வசப்படவில்லை எனினும் நான் நம் ஊரில் மதிக்கதக்க வகையில் முன்னேறி வந்ததை விட நான்  மிகவும் மகிழ்ந்தது. என்னுடைய வற்புறுத்தல்கள் எதுவுமின்றி, நீ படிப்பில் எல்லாருக்கும் முன்நின்று என் தந்தையின் கனவை மறுபடியுமாக உறுதிப்படுத்தியதும்தான். நீதான் முதல் மார்க் என்று எனக்கு தெரிந்ததும், சந்தோசத்தில் மிதக்கும் என் மனம். இன்னமுமாக உன்னை சந்தோசப்படுத்தி பார்ப்பதெற்கென்றே,  “அந்த மீனா ரொம்ப மினுக்குவாளே, அவா ஒருத்திக்குதான் கணக்கு வருமுன்னு, அவளையும் விடவா… நீ கணக்கில் கூட வாங்கியிருக்கிறாய்…” என்று நான் கேட்டதும். “ஆமாம் அப்பா எனக்கே தெரியலை, நான் எப்படி அவளை முந்தினேன்னு … மேக்ஸ் மிஸ் ரொம்ப பாரட்டினாங்க தெரியுமா …” என்றபடி உன்முகம் சந்தோசத்தில் மிளிர… என் மனம் சந்தோசத்தின் எல்லை தொட்டு… கீழிறங்காமல் உயரே… உயரே.. பறப்பதாக தோன்றிய உணரச்சிகளில் மிதந்தபடியே நண்பர்கள், சொந்தங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தி பெருமை கொள்வேன்.

    அப்படியாக பள்ளிப்படிப்பை முடித்து மாவட்டங்களில் முதலாவதாக நீ வந்து, உனக்கு மருத்துவப்படிப்புக்கு அழைப்பு வந்த அந்த தருணம் . எப்பொழுதும் நாம் கும்பிடும் அந்த ஆத்தா வண்டிமலைச்சியே, வானத்திலிருந்து இறங்கி வீடு வந்தது போல், மறுபடியுமாக என் தந்தை இவ்வுலகம் வந்து சிறுபிள்ளையான என்னை கைப்பிடித்து ரோட்டுக்கடைக்கு அழைத்து செல்வது போல், வசப்படாத சநதோசத்தில் மனம் துள்ளி குதித்தது. தெரிந்த அத்தனை ஜோசியரையும் பார்த்து நல்ல நாள் குறித்து நம் குலதெய்வத்திக்கு பூஜை வைத்து நாம் கிளம்பி போய், நீ கல்லூரியில் சேர்ந்ததும். மனமுழுவதும் நிரம்பிய சந்தோசத்தில் கண்களில் நிறைந்த கண்ணீரை யாருமறியாமல் துடைத்துக்கொண்டே இருந்தேன் அன்று  மட்டுமல்ல, அதை நான் எப்பொழுது  நினைத்தாலும்.

    வாழ்க்கையில் அதேபோல் எப்பொழுதுமே என்னால் மறக்கமுடியாத  தருணங்கள்.  அந்த  கஷ்ட காலத்தில்  வியாபாரத்திற்காக  நான்  சுற்றியுள்ள கிராமத்திற்கு சென்றால்,  கிராமமே திரண்டு வந்து  என் முன்னால்  நின்று “ஐயா.. உங்க  அப்பா  எங்க  குலசாமி அய்யனாராகவே  வாழ்ந்துட்டு  போய்ட்டாக. அவுகளோட குடும்பமே கஷ்டப்படயில, நமக்கு கஞ்சி ஒரு கேடான்னுட்டு.. நாங்க இப்பல்லாம்  இராத்திரிக்கு  கஞ்சி  குடிக்காமலேயே  படுத்துருவோம். எங்க அய்யனார் சாமிகிட்ட போய் நீ மட்டும் இருக்கிறது நெசம்ன்னா..எங்க ஐயாவோட குடும்பம் நல்லாயிருக்கனும்னு. எல்லாருமே ஒருதரமாவது வேண்டாம வேலைக்கு போகமாட்டோம். உங்களுக்கு பணக்கஷ்டம் ஏதாவது இருந்தா சொல்லுக, தலைக்கு வரி போட்டு பிரிச்சு கொடுக்கிறோம்.  உங்கள அப்பா தனியா விட்டு போய்ட்டத நினைக்காதீக. நாங்கெல்லாம் உசுரோடதான் இருக்கோம்” அவர்கள்  என்னுடனே  வந்து  பணிவாக  கேட்பார்கள். இப்பொழுது வரை  எவ்வளவு பெரிய  மணிதர்கள் அவர்களின்  கிராமத்திற்கு  வந்தாலும்  எனக்கு  பிறகே  அவர்களுக்கு  மரியாதை  அளிப்பார்கள். அப்பொழுதெல்லாம்  என்  தந்தை  என்னில்  உயர்ந்து  என்  இதயம்  நிறைத்து  கொள்வார்.  அவர்கள்  குலசாமி  அய்யனாரோ, என் தந்தை  குலசாமியாக வந்தோதான், யாரிடமும் கைநீட்டி உதவி பெறாமலே என் வாழ்க்கை உயர்ந்தது என்பதாகவே  எனக்கு  எப்பொழுதும் தோன்றும்.

    மணிமொழி… சமீபகாலமாகத்தான்  நான்  உன்னில்  தடுமாற்றங்களை  பார்க்கிறேன்.  அதுவும்  உன்னை  நான்  பார்க்க  வந்த சமயம்,  உன்  நண்பன்  என்று ஸ்டீபனை  அறிமுகப்படுத்திய பிறகு தான்.  ஸ்டீபன்  என்னிடமே  பேசினான். அவன்  பேச்சு முழுவதும், அளப்பில்லாத  உன்  திறமையை  அவன்  நாடு எப்படியாக கொண்டாடும்  என்பதாகவே  இருந்தது. எப்படியாவது  உன்னை  அவன்  நாட்டிற்கு  அழைத்து  செல்லும்  நோக்கிலே  அவன்  இருப்பதாகவே எனக்குபட்டது.  இப்பொழுதெல்லாம்  நான் சுற்றியுள்ள  எந்த  கிராமத்திற்கு  சென்றாலும்  அவர்கள் “ஐயா.. அம்மா அப்படியே உங்க அப்பா சாடை… அவுகளைப்  பார்த்தால்  எங்க அய்யனாரையே மறுபடியுமாக  நேர்ல பார்க்கிற  மாதிரியே  இருக்கு.  அம்மா  எப்போ  படிப்பு  முடிச்சு  வருவாக……” என்று என்னிடம்  கேட்கும் பொழுதெலலாம்  என்  நெஞ்சம்  நெகிழ்ந்து  என் தந்தையின்  நினைவுகளில்  என் இதயம்  நனைகிறது.   எனக்கென்று  என் தந்தை பதித்து  போன  கனவு   ஒன்றே ஒன்றுதான்,  இன்னமும்  இப்படியாக  அப்பழுக்கில்லாத  அன்பினில்  வாழும்  இந்த  மனிதர்களுக்கு  காவல் தெய்வம் அய்யனாராக  ஒரு சில மனிதர்கள்  வருவார்கள் என்பதுதான். நானும்  இந்த  ஐனங்களுடன்  சேர்ந்து  அப்படியான  காவல்  தெய்வமாகத்தான்  உன்னை பார்க்கிறோம், என் தந்தை மாதிரி…….!    ஆகவே  மணிமொழி…  உன்  தடுமாற்றங்களை  தள்ளி விட்டு  என்  அப்பாவைப்போல்  காவல்  தெய்வம் அய்யனாராக அவர்களுக்கு நீ  வரவே….. என் மனம்  ஆத்தா  வண்டிமலைச்சியை  வேண்டி  நிற்கும்.

    Share
  • மன்னர்களும் இசையும்!….

    விசாலம்

    காலம் காலமாக இசையில் மன்னர்களும் ஈடுபட்டு இசையை ஆதரித்து வந்தனர்முகலாயமன்னர் சக்கர்வத்தி அக்பர் ஹிந்துஸ்தானி இசையை ஆதரித்து தன் அவையில் அடிக்கடி இசை தர்பார் நடத்தினார்.அதில் முக்கிய பங்கு வகித்த தான்சன் மஹராஜை மறக்கமுடியாது. அவர் இசையில் பெரிய ஐஸ் பாறையும் உருகிவிடும். குப்தர்கள் வம்சத்தில் பலர் இசையில் வல்லுனராக இருந்தனர் சக்கரவர்த்தி சமுத்திரகுப்தா வீணை மிக அழகாக வாசிப்பாராம் அவர் ஆண்ட போது அவர் யாழ் வாசிக்கும் உருவத்தில் காசுகள்அடிக்கப்பட்டன. மேவார் நாட்டு மன்னர் மீராபாயின் கணவர் ராணாவும் இசையில் தேர்ச்சி பெற்றவர்.நடனக்கலையும் அறிந்தவர்.”சங்கீத மிமாம்சா “என்ற புத்தகம் எழுதியிருக்கிறார்.

    தஞ்சாவூரை ஆண்ட பல அரசர்கள் இசையில் தேர்ச்சிப்பெற்று பல புத்தகங்கள் எழுதியிருக்கின்றனர்.சரபோஜி மன்னரும் நன்கு பாடுவாராம் ரகுநாத நாயக் என்ற மன்னர் “சங்கீத சுதா’ என்ற புத்தகம் எழுதியிருக்கிறார்.மிதிலையின் மன்னர் நன்யபூபாலா “சரஸ்வதி ஹிருதயலங்காரா’ என்னும் பெரிய புத்தகத்தை எழுதியிருக்கிறார். ஷாஜி மஹராஜா “பல்லகி சேவா பிரபந்தம் “என்னும் நூலை எழுதியிருக்கிறார்.

    தென் இந்தியாவில் மஹாராஜா திரு ஸ்வாதி திருநாள் அவர்களின் கிருதிகள் அபூர்வமானவை. திருவாங்கூரை ஆண்ட அரசர்கள் பலர் பல பாடல்களை இயற்றினர்.அதில் திரு ஸ்வாதிதிருநாள் ஆண்ட காலத்தில் இசை சிகரத்தைத் தொட்டது.

    மன்னர் ஸ்வாதித்திருநாளுக்கு பல பெயர்கள் உண்டு.பத்மநாபதாசர் ஸ்ரீராமாவர்மா குலசேகர பெருமாள்.வாஞ்சிபலர் , ஆகியவை…..இவர் பிறந்த நட்சத்திரம் சுவாதி ஆனதால் இவர் சுவாதிதிருநாள்: என்று அழைக்கப்பட்டார்.இவர் பிறந்த் இரண்டாண்டுகளிலேயே இவரது அன்னை லட்சுமி பாய் இயற்கை எய்தினார்.தந்தை திருராஜராஜவர்மா தனித்துவிடப்பட்டார்.

    மன்னர் சுவாதித்திருநாளுக்கு பல மொழிகள் தெரியும் முக்கியமாகசம்ஸ்கிருதம் பார்சீயமொழி.கன்னடம் மராத்தி உருது ஆங்கிலம் ,மலையாளம், தெலுகு ,நன்கு பேச எழுத முடிந்தது இந்தமொழிகளில் அவர் பாடல்களும் இயற்றியிருக்கிறார். இவருடைய இசையினாலேயே திருவாங்கூர் இசையில் முதன்மை இடத்தைப்பிடித்தது.

    இவரது ராகமாலிகை ‘பன்னகேந்தரசயனா “எட்டு ராகங்கள் கொண்டது கேட்க மிகவும் ரஞ்சகமாக இருக்கும் இவருடைய வர்ணங்க்ளில் அடதாள வர்ணங்கள் “விரிபோணி பைரவி ராகம் வனஜாட்சி கல்யாணி ராகம். ‘கனகாங்கி’ தோடி ராகம் பல கச்சேரிகளில் ஆரம்பமாக இருக்கும். அதன் அழகையும் நடையையும் ஸ்வரபிரஸ்தாரங்களையும் சொல்ல வார்த்தைகள் இல்லை.

    இப்பவும் திருவனந்தப்புரத்தில் அவர் பெயரில் ஸ்வாதித்திருநாள் விழா நடத்தப்பட்டு அதில் பல பிரதான வித்துவான்கள் அவருடைய பாடல்களைப்படி கௌரவிக்கின்றனர்.குழந்தைகளே இசையில் நாட்டம் கொள்ளுங்கள்.குரல் வளமும் ஆர்வமும் இருந்தால் போதும்.ஒரு நல்ல குரு மூலம் சிரத்தையாகக் கற்றுக்கொள்ளுங்கள்/ மனதுக்கு அமைதியும் ஆனந்தமும் கொடுப்பது இந்த இசைதான்.. பலர் இசையினால் தனக்குப்பிடித்த இறைவனை தரிசித்திருக்கின்ற்னர.உம் மீராபாய். ஸ்ரீ தியாகராஜர். ஸ்ரீ முத்துசுவாமி தீட்சதர். ஸ்ரீ சியாம சாஸ்த்திரி.ஸ்ரீ புரந்தரதாசர்.ஸ் அன்னம்மாசார்யா. என்று அடுக்கிக்கொண்டே போகலாம் சும்மா டிவியில் சீரியல் மட்டும் பார்க்காமல் நிறைய இசை சம்பந்தப்பட்ட படைப்பையும் பாருங்கள்…

    Share
  • நரகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள விபூஷிகா எனும் சகோதரி

    கஸுன் மகேந்திர ஹீனடிகல63341_10203341156391284_866522752_n1912068_479616398833526_454922784_n
    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

     

    ஒரு தகவல் : காணாமல் போன தனது சகோதரனைத் தேடியழுத 13 வயதுச் சிறுமி விபூஷிகா, கடந்த 14.03.2014 அன்று அவளது வீட்டுக்கு வந்த இராணுவத்தினரால் பட்டப்பகலில் கிராமத்தவர் முன்னிலையில் கடத்திக் கொண்டு செல்லப்பட்டாள்.

    கவிதைக்கான குறிப்பு : எப்பொழுதும் தனது சகோதரனைக் கேட்டு அழுது ஓலமிட்ட அத் தமிழ் சகோதரி இப்பொழுது கடத்தப்பட்டிருக்கிறாள். காவல்துறைத் தலைமையகம் அறிவித்திருப்பதைப் போல அதனை மனிதாபிமானக் கடத்தலா எனத் தீர்மானிப்பது உங்கள் கையிலிருக்கிறது.

    விமானத்தைக் காணவில்லை
    உலக வரைபடமே இங்கே பார்
    யோசனைகளோடு விம்மியழுது
    உதித்த சூரிய மகள் எங்கேயெனச் சொல்

    அண்ணன்மார் மூவருக்கு இளையவள்
    அன்னையின் விழிகளோ அன்பின் உறைவிடம்
    அதுதான் ஐயாக்களே தமிழனின் பாசம்
    அதுவன்றி வாழ்க்கையே போராட்டம் தங்கையே

    கொடிய கனவொன்றைப் போல
    மூத்தவர்கள் இருவர் மரித்திட
    முப்பொழுதும் பார்த்திருந்த
    இளைய அண்ணனும் கடத்தப்பட
    பனையழகு எல்லாம் அழிந்த பூமியில்
    ஸ்வரம் இழந்த பாடலானாள்
    இரட்சகனைத் தேடியதால் – நரகத்துக்கு
    கொண்டு செல்லப்பட்டுள்ள சகோதரியொருத்தி

    கற்றறிந்த சிலுவைக் குறிகளுக்கு
    சத்தியத்தில் இடமில்லை
    குரலெழுப்பிப் பூத்த மலரொன்று
    சிதைகிறது இரகசியமாக

    அவளுமொரு சிறுமி
    இருந்திருக்கக் கூடும்  கனவுகள் ஆயிரம்
    இன்னும் கண்டிருக்கக் கூடும்
    எப்பொழுதாவது ஒரு புன்னகைத் துளியை

    உலகம் ஒரு சிறைக்கூடம்
    நலிந்தவர்கள் மட்டும் சிக்கிக் கொள்ளும் சதி பீடம்
    இன்றும் வலி தந்திருக்கக் கூடும்
    ஒரு கொடியவனின் பார்வை

    வேண்டுமென்றே கடத்தப்பட்டாள் கறுப்புத் திலகமிட்டவள்
    உருவழித்து தீப்பற்றியெரிகிறது எனது இருதயம்
    உருகவில்லையா செவிமடுக்கையில் உம் மனங்கள்

    நரக நதியினின்றும் மீண்டிட
    நீந்திடு விபூஷிகா!

    Share
  • ஐயப்பன் திருப்புகழ்

    சு. ரவி 

     

    god-ayyappa-wallpapers-3

    1-b

    படத்திற்கு நன்றி:

    http://www.penmai.com/forums/temples-gods-goddess/49621-a.html

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • அன்புள்ள மணிமொழிக்கு

    சங்கர் சுப்ரமணியன்

    அன்புள்ள மணிமொழிக்கு

    எப்படி இருக்கிறாய்..! என்று என் இதயத்திலிருந்து எழும் மெல்லியதொரு கேள்வி குரல், என் மெளனம் கலைக்காமல் வெளிவந்து காற்றோடு உனை தேடி பயணிக்கிறது. கண்கள் இலேசான கண்ணீரில் திரையட்டு கொள்ள, என் நினைவுகள் எனைக் கேளாமல் நம்முடைய நினைவுப்புத்தகத்தின் பக்கங்களை திறக்கிறது.

    நம் முதல் சந்திப்பில் நான் எப்படியாக உன்னை உணர்ந்தேன் என்பதுதான், என்னை நானே பலமுறையாக கேட்டுக் கொள்ளும் கேள்வி… அந்த இளந்தென்றல் வீசிய மாலைப்பொழுதில், ஒரு துாரத்து சொந்தத்தின் திருமணவிழாவில், நீ எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டாய், இலேசான கேலியுடன், புத்தக புழு..! என்று . ஆச்சரியங்களுடன் நான் உன்னை பார்க்க, அடக்கமான புன்னகையுடன் ஏற்றுக்கெண்டாய். ஏதாவது பேசலாம் என்று வார்த்தைகள் தேட, மறுப்பு இல்லா புன்னகையுடன் நீ இடம் மாறிக்கொண்டாய் . யாரிடமும் பெரியதொரு வார்த்தை பரிமாற்றம் இல்லாமல், பெரும்பாலும் மெளனமாகவே…. திருமணம் முழுவதும், ஆனால் ஏதாவது காரியங்கள், யாராலோ கட்டளையிடப்பட, அதை நீயும் மாறாத புன்னகையுடன் நிறைவேற்றி கொண்டிருக்க, என் பார்வை உன்னை என்னில் முழுமையாக பதிக்க முயற்சித்து கொண்டே இருந்தது, அந்த நாள் முழுவதும்.

    இயல்பாகவும் நானாகவும் ஏற்படுத்திக் கொண்ட அடுத்தடுத்த சந்திப்புகள் நம் எண்ண அலைகளை நேர் வரிசையில் கொண்டு செல்ல, என் எண்ணங்களில் நீ பவனி வருவது அதிகமாகிக் கொண்டே போக, உன்னில் தடுமாற்றங்களை தாண்டி என்னுடைய நினைவுகள் பதிந்ததை நீ அழுத்தமாக எனக்கு வெளிப்படுத்தியதும், நான் நானற்றுப்போய் என்னுள் நீ முழுமையாக வியாபித்துக்கெண்டாய். உன் முகம், உன் நினைவு, உன் கனவு என என்னுடைய தினங்களின் அத்தனை கணங்களிலும் நீயே நிறைந்து, எப்பொழுதும் குதுாகலிக்கும் மனம், எல்லாவற்றையும் ஆழமான இரசிப்புடன் பார்க்கும் பார்வை என என்னையறியாமலே நான் முழுமையாக மாறிப்போக…!, இப்பவும் என் மனம் அந்த காலகட்டத்தின் எப்பக்கம் திறப்பினும் இதயபக்கமெல்லாம் நிறைந்து வழியும் உன் நினைவுகள்…

    மயக்கம், மயக்கமின்மை என இரண்டும் கலந்து போன நிலையில், இரவுகள் நீண்டு கொண்டே போகும் உன் நினைவுகளுடன் நித்திரையில்லாமல் படுக்கையில். இருளும் வெளுப்புமில்லாத அந்த அதிகாலை வேளையில் , உன் எண்ணங்களோடு நான் நடந்து போக, எனை கடக்கும் அத்தனை பேரையும் அடையாளங்களற்ற உருவங்களாகத் தான் என் மனம் உணரந்தது. கண்டு கொண்ட சந்தோசத்தில், ஆர்ப்பரித்து வேகத்துடன் தொடவரும் அலைகளின் கரையோரம் அமர்ந்திருந்த, என் அருகாமையில் நெருக்கமாக அமர்ந்து , தோள் சாய்ந்து நீ விடும் மூச்சு காற்றில் கலந்து வரும் உன் உயிர் , தென்றலாக இதயம் தடவி என் உயிர் தீண்டியதும். சத்தமில்லாத மௌனத்தில் இந்த உலகமே இயங்க மறந்து நின்று போக, எனைக் கேளாமல் என்னிலிருந்து பிரிந்த என்னுயிர் உன்னில் கரைந்து கானாமல் போனது. அப்படியாக….. இப்பொழுது நினைத்தாலும் என்னால் மீளமுடியாத சந்தோசத்தில் என் இதயத்தை நிறைத்து கொள்ளும், பல…! மறக்க முடியாத தருணங்கள்.

    எண்ணமும், வாழ்க்கையின் நிஜங்களும் எப்பொழுதுமே ஒரே நேர் கோட்டில் பயணிப்பதில்லை. வாழ்க்கை விளையாட்டு என்ற விதி சாஸ்திரம், எதிர்பதங்களை வைத்து சோதிக்கவே விரும்புவதாக எனக்கு எப்போழுதுமே தோன்றும். அப்படியான அந்த காலகட்டத்தில், என்னை நிலைப்படுத்தி கொள்ள நான் எடுத்த அத்தனை முயற்சிகளுக்கும் தோல்வி முடிவு எழுதி, எனைப்பார்த்து விதி நகைத்த அதேவேளை, மன அகங்காரங்கள் என்ற மாய வலையில் வீழ்ந்த உன் குடும்பம் , உன்னை சுற்றி எழுப்பிய தடைகளை நீ எதிர்க்க முடியாமல், எதிர்த்து கூட்டி செல்வேன் என்று எதிர்பார்த்த என்னாலும் எதுவும் முடியாமல், திணறிப் போராடிய உனக்கும்… மிஞ்சியது உடல் வலிகளும் மனவலிகளும்தான்.

    வார்த்தைகள், விவாதங்கள், போராட்டங்கள், சோர்வுகள் என மாறிமாறி, நம்மை கலங்கடித்த, அத்தனை சந்தர்ப்பங்களும்  நமக்கு எதிர் நின்று, கட்டுப்பாடில்லா ஆழங்களுக்கு நம்மை தள்ளிப்போனது. மீளமுடியாமல் இருவரும் கண்ணீரும்,  அழுகையும், கடவுள்  நம்பிக்கையும் என பிடிமானத்திற்கு சிறு கொடி தேடி, தவித்து , கலைத்து போனோம். இன்னமும் அழிக்க முடியாத சாட்சியாக நினைவில் நிலைத்திருக்கிறது, அந்த கடைசி நேர சந்திப்பு…

    எப்பொழுதும் மடைதிறந்த வெள்ளம் போல் பாயும் உன் வார்த்தைகளை, என் மௌனத்தின் வாயிலாகவே இரசித்து, என் மெளனப்புன்னகையே உன் வார்த்தைகளுக்கு அர்த்தமான பதிலாக வெளிப்படுத்தும் நான், அன்று பதில்களற்ற மெளனத்தில் கரைய, நீயோ வார்த்தைகளற்ற மெளனத்தி்ல் அமர்ந்திருந்தாய் என் பக்கத்தில். கலையாத அந்த நிசப்தம் நம் உள் மனதை அசைத்து திருப்ப, கண்ணீரில் நிறைந்தன  நம் இருவருடைய கண்களும்

    வார்த்தைகள் தேடித்தேடி கலைத்தது நம் இருவரது மனமும், தாங்கமுடியாத ஒரு கணத்தில் என் கையை எடுத்து உன் கைகளுக்குள் வைத்து இறுகப்பற்றி கொள்ள, பிரபஞ்சம் தாண்டிய உலகத்தில் நாம் இருவர் மட்டும் காற்றில் பறப்பதாகத் தான் எனக்கு தோன்றியது.  விட்டு வெளிவர முடியாமல் கணங்கள் நீண்டுகொண்டே போக, நம்முடைய உலக இருத்தல் இந்த கணமோடு மடிந்து விடாதா.. என்ற ஏக்கங்கள் மட்டுமே நெஞ்சில் நிறைந்திருந்தது. கடினப்பட்ட மனதுடன், தளும்பிய கண்ணீருடன் வருகிறேன்.. என்று, உன் கைகளை சடெக்கென்று விடுவி்த்து, திரும்பி பார்க்கவும், தைரியமின்றி நீ ஓடிச்சென்றாய்…..

    அந்த வானம் மொத்தமாக நழுவி என் தலையில் விழுந்த மாதிரியான , தாங்கமுடியாத கனத்துடன் என் இதயம் நொறுங்கி போனது. நானும் இந்த உலகமும் வேறுவேறாக பிரிந்து, பிடித்தரமற்ற உயரத்திலிருந்து, தலைகீழாக நேர்பாதையில், வேகத்துடன் கீழ் நோக்கி பயணிப்பதாகத்தான் தோன்றியது. எப்படியாவது என்னிலிருந்து என் உயிர் நழுவாமல் தக்க வைத்து கொள்ள போராடித் தவித்த அந்த கணங்கள், என்னால் எப்பொழுதுமே மறக்க முடியாத, இப்பொழுது நினைத்தாலும் மனம் கனத்து கண்களில் கண்ணீர் திரையிட்டு நான் எனை மறந்து போகும் கணங்கள்.

    ஒவ்வொறு முறையும் உன் ஞாபகங்களில் என்னைத் தேடும் பொழுதெல்லாம், என்னுள் நிகழும் மாயாஜாலங்களில் எழும் அத்தனை உணர்வுகளையும் வார்த்தைகளுக்குள் அடக்கி, அழகாக அந்த வார்த்தைகளை கோர்த்து, உன்னிடம் மடலாக சமர்ப்பிக்கவே விரும்புகிறேன். ஆனால் மணிமொழி இருவேறு துருவங்களாக மாறிப்போன நம் வாழ்க்கை பாதையில்,  நீயோ எங்கோ ஒரு தூர தேசத்தில், தேடிவரமுடியாத தொலைதூரத்தில் உயிர் வாழ, என்னால் எப்பவுமே சமர்ப்பிக்க முடியாத இந்த மடல்கள்தான், என் உயிர் வாழ்க்கையின் ஆதாரமாக, என் இதய பக்கங்களில் நிறைந்து  கிடக்கிறது.

    Share
  • சிறுகை அளாவிய கூழ் – 10

    இவள் பாரதி

     

    பசியிலெழுந்து

    பக்கம் ஊர்ந்து

    உறங்கும் தாயை எழுப்புகிறது

    குழந்தை

     

    கனவிலிருந்து

    பதறியெழுந்து

    உன்னைப் பார்க்கிறேன்.. (more…)

    Share
  • காசிக்குப் போன வைகாவூர் வைத்தா

    தஞ்சை வெ.கோபாலன்

    வைகாவூர் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். அங்குள்ள சிவன் கோயிலையொட்டி இருந்த வடக்கு மடவளாகத் தெருவில் பத்துப் பதினைந்து வீடுகள், அவை அத்தனையும் இன்றோ நாளையோ கீழே விழத் தயாராக இருப்பது போல காட்சி தந்து கொண்டிருக்கிறன. அதில் ஒரு வீட்டின் திண்ணையில் பொழுது விடிந்து சூரியன் சுள்ளென்று சுடும் வரை வாயில் திண்ணையில் படுத்துறங்கிக் கொண்டிருந்த வைத்தா என அழைக்கப்படும் வைத்தியநாதன் அப்போதுதான் கண் விழித்து எழுந்தான்.

    இந்த வைத்தாவைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். இவனுக்கு முப்பது வயதுக்கு மேல் இருக்கலாம். சரியாக அவனுக்கும் தெரியாது, அந்த ஊர்க்காரர்களுக்கும் தெரியாது. அப்பா, அம்மா, சகோதர சகோதரிகள் யாரும் கிடையாது. அவனுக்குச் சுமார் பத்து வயதிருக்கும்போது அவனுக்கு உறவு என்று இருந்த அவன் அம்மாவும் காலமாகிவிட்டாள். அவனுக்கென்று அந்த பாழடைந்த வீட்டைத் தவிர வேறு சொத்து பத்து என்று எதுவும் கிடையாது. அந்த வீடும் திண்ணையும் அதன் உட்புறம் அமைந்துள்ள ரேழி, காமரா உள் தவிர வீட்டின் மற்ற பகுதிகள் கூடம் தாழ்வாரம் அனைத்தும் கீழே விழுந்து ஓடுகள் சரிந்து பாழடைந்து போய் கிடந்தது. அதை எடுத்து திரும்ப கட்ட பணத்துக்கு எங்கே போவது? அவன் பிழைப்பே அன்றாடம் கையேந்திப் பிழைக்கும் பிழைப்பு.

    அவன் பள்ளிக்கூடம் போனதாகவோ, படித்ததாகவோ அவனுக்கே நினைவில்லை. அம்மா இருந்தவரை அவள் யார் வீட்டுக்காவது சமையல் வேலைக்குப் போவாள். அருகிலுள்ள டவுனுக்கு அந்த அம்மாள் அடிக்கடி கல்யாணம், கார்த்தி, தெவசம் என்று எங்கெல்லாம் கூப்பிடுகிறார்களோ அங்கெல்லாம் போய் சமையல் வேலை செய்து சம்பாதித்து மகனைக் காப்பாற்றி வந்தாள். பள்ளிக்கூடம் போகாமல் அம்மாவோடு சமையல் வேலைக்கு உதவி செய்து கொண்டு இவனது பால பருவம் ஓடிவிட்டது. அந்த அம்மாள் இறந்து போன பிறகு இவன் டவுனில் உள்ள கல்யாண காண்ட்டிராக்ட் சமையல்காரர்கள் விசேஷ தினங்களில் பரிமாறுவதற்கென்று ஆட்களைக் கொண்டு வருவார்கள். அப்படி பரிமாறுவதற்காகச் சென்று வரும் பரிஜாரகக் கோஷ்டியில் வைத்தாவும் ஒருவனாக இருந்து பிழைப்பு நடத்தி வந்தான்.

    கல்யாண முகூர்த்த நாட்கள் அனைத்திலும் அவனுக்கு வேலை இருக்கும். வெளியூர்களுக்கெல்லாம் சென்று வருவான். அப்போதெல்லாம் அவனுக்கு சாப்பாட்டுக் கவலை இல்லை. ஆடி மாதமும், மற்ற மாதங்களில் முகூர்த்தம் இல்லாத நாட்களிலும் யார் வீட்டில் என்ன வேலை சொன்னாலும் செய்துவிட்டு அவர்கள் வீட்டிலேயே சாப்பாட்டையும் முடித்துக் கொண்டு அவனுடைய பூர்வீக இடிந்த வீட்டின் திண்ணைக்கு வந்துவிடுவான் படுத்துறங்க.

    இன்று அவனுக்கு வேலை இல்லை, ஆகையால் நிதானமாக உறங்கி எழுந்தான். திண்ணையைவிட்டு கீழே இறங்கி ஒரு முறை சோம்பர் முறித்தான். அப்போது மிராசுதார் சாமா ஐயர் வந்து கொண்டிருந்தவர் இவன் இந்த நேரத்தில் இங்கு இருந்தால் வேலை கிடையாது என்று அர்த்தம் என்பதைப் புரிந்து கொண்டு, “எலே! வைத்தா, நம்மாத்துல மாமி மச்சுலேர்ந்து பித்தளை சாமான்களையெல்லாம் கீழே இறக்கி சுத்தம் செய்யணும்னு சொல்லிண்டுருக்கா, போய் பார்த்து அதுக்கு உதவி பண்ணு. அப்படியே மத்தியானம் நம்மாத்துலேயே சாப்பிட்டுக்கோ” என்று சொன்னார்.

    “சரி மாமா! நான் போய் பார்த்துக்கறேன்” என்று இன்றைய பிரச்சனை முடிந்தது என்று மனதுக்குள் மகிழ்ந்தான்.

    அப்போது அந்த ஊர் வாத்தியார் சுப்பிரமணியன் வந்து வைத்தாவிடம், “என்னடா வைத்தா! இன்னிக்கு வேலை இல்லியா?” என்றார்.

    “பரிஜாரக வேலை இல்லை, சாமா ஐயராத்துல பாத்திரம் இறக்கணும் போகணும்” என்றான்.

    “சரி சரி, நீ என்னவோ காசிக்கு போகணும்னு சொல்லிண்டு இருந்தியே, எப்போ போகப்போறே?” என்றார் சுப்பிரமணியன்.

    “நீங்க சொல்லிட்டேள். என்னால உங்களை மாதிரியெல்லாம் நெனச்ச உடனே காசிக்குப் போகணும்னா முடியுமா? எத்தனை ஏற்பாடுகள் பண்ணனும். முதல்ல பணம் காசு வேணும். அப்புறம் அங்க எனக்கு யாரைத் தெரியும், போனா அங்கே தங்க ஏற்பாடு பண்ணணும். எத்தனை வேலை இருக்கு” என்றான் வைத்தா.

    “டேய் வைத்தா! உனக்கு ஒரு விஷயம் சொல்றேன் கேளு. கோடியாத்துல பார்வதி பாட்டி இருக்காளோல்லியோ? அந்த பாட்டி காசிக்குப் போறாளாம். துணைக்கு யாராவது இருந்தா தேவலாம்னு சொல்லிண்டு இருக்கா. போயி அந்தப் பாட்டிய பாரு. அவகிட்ட நெறைய பணம் காசு இருக்கு உனக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கிடுவா. காசிக்கு போனா, அங்கே அந்த பாட்டிகூடவே நீயும் தங்கிக்கலாம். ஒரு வயசான கிழவிக்கு உதவினா மாதிரியும் இருக்கும், உன்னோட காசியாத்திரை முடிஞ்ச மாதிரியும் இருக்கும்” என்றார் சுப்பிரமணியன்.

    அப்போது அந்தத் தெரு இளைஞர்கள் சிலர் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் வைத்தாவிடம் சுப்பிரமணியன் பேசியதைக் காதில் வாங்கிக் கொண்டார்கள். அவர்களில் ஒருவன் சுப்பிரமணியனிடம் கேட்டான் “என்ன சார், வைத்தா காசிக்கு போறானா?” என்று.

    “ஆமாம்” என்றார் சுப்பிரமணியன்.

    “போகட்டும், அங்கேதான் நரேந்திர மோடி இந்த தேர்தல்ல போட்டி போடப்போறாராம். வைத்தா போனா அவருக்குக் கூடமாட ஒத்தாசை செய்யலாம், நிறைய பணமும் கிடைக்கும், இரண்டு மாசம் பொழப்பும் நடக்கும். ஒரு கல்லுல ரெண்டு மாங்காய். காசி யாத்திரையும் நிறைவேறும், மோடிக்கு உதவி செஞ்சா இவனுக்கு நல்ல பணமும் கிடைக்கும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.

    அவர்கள் போனபிறகு வைத்தா சாமா ஐயர் வீட்டுக்குப் போய் அந்த வீட்டு அம்மாள் சொன்ன வேலைகளையெல்லாம் செய்துவிட்டு, அவர்கள் வீட்டு கிணற்றடியிலேயே இரண்டு வாளி இறைத்துத் தண்ணீர் ஊற்றி குளித்துவிட்டு அன்றைய சாப்பாட்டை முடித்துக் கொண்டான்.

    மறுநாள் செய்தித் தாள்களில் எல்லாம் செய்தியொன்று வெளியாகியிருந்தது. வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட தமிழ்நாட்டிலிருந்து வைகாவூர் வைத்தா என்பவர் காசி போகிறார்” என்பது செய்தி. தெருவில் பலரும் செய்தித் தாள்களோடு வந்து வைத்தாவை குசலம் விசாரித்தனர்.

    “என்னடா வைத்தா இது. ஆனானப்பட்ட மோடியை எதிர்த்து நீ தேர்தல்ல நிக்கப் போறியாமே. அதுவும் காசில போய். இதெல்லாம் என்னடா கூத்து?” என்றனர் ஊரார்.

    வைத்தா திகைத்துப் போய் வாயடைத்து நின்றான். என்ன ஆயிற்று? யார் செய்த வேலை இது. நேற்று வந்த பசங்கதான் ஏதோ விஷமம் பண்ணியிருக்கான்கள் என்று அவர்களில் ஒருவனை அழைத்து “என்னடா இது நீங்க ஏதாவது சொல்லி தொலைச்சீங்களா, இப்படி பேப்பர்ல வந்திருக்கே” என்று கேட்டான்.

    அவன் சொன்னான், அவர்களில் ஒருவனுடைய உறவுக்காரன் பக்கத்து டவுனில் பத்திரிகை நிருபராம். அவனிடம் விளையாட்டா எங்க ஊர்லேருந்து வைத்தா காசிக்குப் போறான். அங்கே எலக்ஷனுக்கு நிக்கற மோடிக்கு எதிரா நாமினேஷன் போடப்போறான் என்று சொன்னான். அதை அவன் நியூசா போட்டுட்டான் போல இருக்கு” என்றான்.

    சரி நடப்பது நடக்கட்டும் என்று வைத்தா கோயில் திருக்குளத்துக்குக் குளிக்கப் போய்விட்டான். குளித்து முடித்துவிட்டு இடுப்பில் மடித்துக் கட்டிய ஈர வேட்டியும், தலைக்கு மேலே விரித்த குடைபோல துண்டை காயவைத்துக் கொண்டு மடவளாகத் தெரு திரும்பினான், அங்கே அவன் கண்ட காட்சி அவன் கண்களை நம்பவே முடியவில்லை.

    அவன் வீட்டுக்கு எதிரில் நாலைந்து வேன்கள் மோட்டார் பைக்குகள் வீட்டு வாசலில் காமிரா, மைக் சகிதமாக ஏழெட்டு பேர் நிற்பதையும் கண்டான். போச்சு, இன்னிக்கு என்ன ஆகப்போகுதோ, எவனோ போய் என்னவோ கொளுத்திப் போட இப்போ இத்தனை பேர் என்னை தேடி வந்துட்டாங்களா? என்ன பதில் சொல்லுவது என்று கவலையடைந்தான் வைத்தா.

    வைத்தா வீட்டை நெருங்கவும், நிருபர்கள் கூட்டம் மைக்கை நீட்டிக் கொண்டு அவனை மொய்த்துக் கொண்டார்கள்.

    “சார்! நீங்கதானே வைகாவூர் வைத்தா? வாரணாசில மோடியை எதிர்த்து தேர்தல்ல நிக்கப் போறீங்களாமே?”

    “எந்த கட்சி சார்புலசார் நிக்கப் போறீங்க”

    “மோடிக்கு எதிரா நின்னா, ஏராளமா செலவு செய்ய வேணுமே, உங்களால முடியுமா சார்”

    “அங்கெல்லாம் இந்திதான் பேசுவாங்க. உங்களுக்கு இந்தி தெரியுமா சார்”

    இப்படி மூச்சு விடாம நிருபர்கள் கேள்வி அம்புகளை வீச, வைத்தா ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். சரி, கடவுள் நமக்கு ஏதோ வழி காட்டத்தான் இப்படியொரு அக்கப்போர்ல நம்ம சிக்க வைச்சிருக்கார். இந்த மனிதர்கள் தள்ளுகிற பாதையில் போய்த்தான் பார்க்கலாமே என்ன நடக்குதுன்னு என்று மனதை திடப் படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தான் வைத்தா.

    “எல்லோரும் கேளுங்க! நீங்க கேட்ட கேள்விக்கெல்லாம் ஒரே பதில்ல எல்லாத்தையும் சொல்றேன். நான் காசிக்குப் போறது வாஸ்தவம். அங்கே மொடி தேர்தல்ல நின்னா, அவருக்கு எதிரா நான் நாமினேஷன் ஃபைல் பண்ணப் போறேன். சுயேச்சையாதான் நிப்பேன். எனக்கு பணம் கொடுத்து எல்லா ஒத்தாசையும் பண்றேன்னு அங்க சில பணக்காரா பிராமிஸ் பண்ணியிருக்கா. அதனால அங்கே போகப்போறேன். அங்க நம்ம தமிழ் நாட்டுக்காரா நெறய பேர் இருக்காங்களாம். அவுங்க ஓட்டு எல்லாம் எனக்குத்தான் விழும். அது தவிர மோடியை எதிர்த்துத் தோத்தாலும், அதிலயும் எனக்கு பேர் கிடைக்குமில்லையா. இந்த சின்ன வைகாவூர்ல இருந்துண்டு பரிஜாரகனா வேலை பார்க்கறதைக் காட்டிலும் ஒரு பெரிய தலைவரை எதிர்த்து நின்னா நானும் பிரபலமாயிடுவேன். அப்புறம் சாதாரண கல்யாணத்துக்கு எல்லாம் போயி பரிஜாரகனா வேலை செய்யறதை விட்டுட்டு கோடீஸ்வரன் வீட்ல நடக்கற விசேஷங்கள்ள யூனிபாரம் போட்டுணு பரிஜாரகம் பண்ணுவேன்” என்றான் பெருமையோடு வைத்தா.

    எல்லோரும் அவனை புகைப்படம் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். மறுநாள் எல்ல செய்தித் தாட்களிலும், தொலைக்காட்சிகளிலும் வைத்தா பற்றிய செய்திதான். ஊர் பேர் தெரியாம வைகாவூர் மடவளாகத் தெருவில் முடங்கிக் கிடந்த வைத்தா இன்று நாடு முழுக்கவும் தெரிந்த வி.ஐ.பி.யாக மாறிவிட்டான். எல்லா பத்திரிகையில் கட்டுரைகள், தலைப்புச் செய்திகள். ஒரு தமிழ்நாட்டு பிராமண பரிஜாரகன் மோடியை எதிர்த்துப் போட்டியாம். வைத்தாவுக்கு வானத்தில் பறப்பது போன்ற உணர்ச்சி.

    இதற்கடுத்த சில நாட்கள் கழிந்து கொடிகட்டிய பெரிய கார்கள் சில வைகாவூர் மடவளாகத்துள் நுழைந்தது. கண்ணில் தென்பட்டவர்களிடம் அந்தக் காரில் வந்தவர்கள் இங்கே யார் வைத்தா என்பது என்று விசாரித்தார்கள். ஊர் பெரியவர்கள் வந்தவர்களை அழைத்துச் சென்று, அவன் நேற்றே கோடிவீட்டு பார்வதி பாட்டியோடு காசிக்குக் கிளம்பிச் சென்றுவிட்டான் என்று செய்தி சொன்னார்கள். வந்தவர்கள் ஏதோவொரு அரசியல் கட்சிக்காரர்கள் போலிருக்கிறது. இவனைப் பற்றி முழுவதும் விசாரித்துவிட்டு அலட்சியமாக இவனெல்லாம் என்ன செய்துவிட முடியும் என்று போய்விட்டார்கள்.

    பார்வதி பாட்டியோடு வாரணாசியில் போய் இறங்கிய வைத்தாவுக்கு அங்கு மக்கள் பேசும் மொழி புரியவில்லை. அங்கு உலாவும் மக்கள் தோற்றத்திலும் மொழியிலும் மாறுபட்டவர்களாக இருந்தார்கள். ஒரு டோங்கா வண்டியை பாட்டி பிடித்து ஹனுமான் காட் போகச்சொன்னாள். டோங்கா அங்கு காமாட்சி அம்மன் கோயில் எதிரில் இருந்த ஒரு சாஸ்திரிகள் வீட்டு வாசலில் போய் நின்றது. தமிழ் நாட்டிலிருந்து வரும் யாத்திரிகர்களுக்கு தேவைப்பட்ட காரியங்கள் செய்து கொடுக்க அங்கு தமிழ்நாட்டு சாஸ்திரிகள் பலர் இருந்து வந்தனர். அப்படிப்பட்ட ஒருவர் வீட்டில் பார்வதி பாட்டி தங்க ஏற்பாடு செய்திருந்தாள்.

    அன்று மாலை அந்த வீட்டின் சாஸ்திரிகளின் மகன் வந்து வைத்தாவிடம் “நம்ம ஊர்லேர்ந்து யாரோ ஒருத்தர் வைகாவூர் வைத்தாவாம் இங்கே போட்டியிடும் நரேந்திர மோடிக்கு எதிரா எலக்ஷன்ல நிக்கப்போறாராம், இங்கே பேப்பர்ல சேதி வந்திருக்கு” என்றான்.

    அதற்கு வைத்தா, “வைகாவூர் வைத்தாங்கறது நாந்தான். அப்படி யாரோ நம்ம ஊர்ல கிளப்பி விட்டிருக்காங்க. அது இந்த ஊர் வரையில செய்தி வந்தாச்சா, சரிதான்” என்று சொல்லவும், அந்த இளைஞர் வெளியே ஓடிவிட்டான். சற்று நேரத்தில் ஒரு பெரிய கூட்டம் வாயில் வந்து நின்றது.

    கூட்டத்தினர் வைகாவூர் வைத்தாவைப் பார்க்க வேண்டுமென்று கூச்சலிட்டார்கள். வைத்தா பயந்து கொண்டே போய் வாசலில் நிற்கவும், கூட்டத்தில் ஒருவர் வந்து ஒரு காந்தி குல்லாயை வைத்தாவின் தலையில் கவிழ்த்துவிட்டு “வைகாவூர் வைத்தா ஜிந்தாபாத்” என்று குரலெழுப்பினார். கூட்டத்தினரும் கோஷமிட அங்கு சாஸ்திரிகள் வீடு களைகட்டிவிட்டது.

    சிறிது நேரத்தில் மோடி கட்சியினர் கூட்டங்கூட்டமாக வந்து வாசலில் குழுமத் தொடங்கினர். இவர்களெல்லாம் மோடி கட்சிக்காரர்கள். எதிர்த்து போட்டி போட வந்திருக்கும் வைத்தாவைப் பார்க்கணுமாம் என்று அந்த வீட்டுப் பையன் சொன்னான். சாஸ்திரிகள் வீட்டில் இருப்பவர்கள் கதிகலங்கிப் போயிருந்தனர். இது என்ன சங்கடம். பார்வதியம்மா, உங்களுக்கு இடம் கொடுத்தா, இப்படியொரு ஆளையும் எதுக்குக் கூடவே கூட்டிண்டு வந்தீங்க, இப்ப பாருங்க, கூட்டம் வாசலில் வந்து நிக்கறத. இங்க ஏதாவது ஏடாகூடமா நடந்துட்டா நாங்க என்ன செய்யறது. நாங்களே பொழைக்க வந்தவா, அரசியல், தேர்தல் இதெல்லாம் நமக்கு எதுக்கு, நீங்க எதுக்கும் வேற இடம் பார்த்துண்டு போறது நல்லது” என்று அவர்கள் சொல்லிவிட்டார்கள்.

    தலையில் கவிழ்த்த காந்தி குல்லாயோடு வெளியே போனான் வைத்தா. வெளியில் நின்றிருந்த கூட்டம் அவனை அப்படியே மொய்த்துக் கொள்ள, கூட்டத்தில் வைத்தாவையும் காணோம், அவன் போட்டிருந்த குல்லாவையும் காணோம். சிறிது நேரம் நடந்த கசமுசா தள்ளுமுள்ளுவை அடுத்து தெருவில் கூட்டம் கலைந்து வெரிச்சோடியது. வைத்தாவை வீட்டின் உள்ளேயும் காணோம், வெளியேயும் காணோம். அப்போது கங்கையில் தண்ணீர் மிகக் குறைவாக ஓடிக் கொண்டிருந்தது. அனுமான் காட்டிலிருந்து சற்று தொலைவில் தண்ணிரிலிருந்து மெல்ல வெளியே வந்த வைத்தா கையை நீட்டிக் கொண்டு, “ஐயா, என்னை யாராவது காப்பாத்துங்களேன். தண்ணீல போட்டு முக்கி முக்கி எடுத்துட்டாங்க. மூச்சு முட்டுது. எனக்கு தேர்தலும் வாணாம், காசி யாத்திரையும் வாணாம். எங்க ஊருக்கே போயிடறேன். அங்க உள்ள பரிஜாரக வேலையே பொதும், என்ன காப்பாத்துங்க ஐயா” என்று அலறிக் கொண்டிருந்தான்.

    தமிழ் தெரிந்த ஒரு சிலர் அவனது பரிதாப நிலையைப் பார்த்து ஓடிவந்து அவனைக் கரையேற்றி, மாற்று உடைகொடுத்து, டிக்கெட்டும் வாங்கிக் கொடுத்து, சென்னைக்கு ரயிலேற்றி விட்டுவிட்டுச் சொன்னார்கள் “தம்பி வைத்தா, இனிமே இதுபோல அசட்டுக் காரியம் எதையும் பண்ணி வைக்காதே. ஊருக்குப் போயி ஒழுங்கா உன் சமையல் தொழிலை கவனி. விரலுக்குத் தக்கபடிதான் வீங்கணும். புலியப் பாத்து பூனை கோடு போட்டுண்ட புலியாயிடுமா என்ன? அது தவிர இதெல்லாம் உன்னைப் போலவங்களுக்கு எதுக்குப்பா, வேளா வேளைக்கு வயித்துப் பாட்டுக்கு என்ன பண்றதுன்னு பாத்துகிட்டு இருக்கற இடத்துல இரு. இப்படி வந்து இனிமே எங்கேயும் மாட்டிக்காதே. ஏதோ உங்க அம்மா செஞ்ச புண்ணியம், உசுரோடு திரும்பறே. ஜாக்கிரதை என்ன சரியா?” என்று புத்திமதி சொல்லி ஊருக்குத் திருப்பி அனுப்பினார்கள். காசிக்குப் போன வைத்தா கைகால்களோடு முழுசா ஊருக்குத் திரும்பினான்.

    Share
  • குப்பாச்சுலு VS கோடபட்ரி-நாடகம் கிரேசி மோகன்….

    கிரேசி மோகன்

    மறைந்த அமரர். எழுத்தாளர் திரு.’’கோமல் ஸ்வாமிநாதன்’’(இவரது ‘’தண்ணீர் தண்ணீர்’’ நாடகத்தால் மேடை மேதையாய் ஆயிற்று…) அவர்கள் ‘’குங்கும்’’ ஆசிரியராய் இருந்த சமயத்தில் ஃபோனில் என்னை அழைத்து’’ வழக்கமான அப்பா, அம்மா, தாத்தா,பாட்டி என்றில்லாமல் , வித்தியாசமான நாடகம் ஒன்று எழுதித் தாயேன்’’ என்று அன்புக் கட்டளையிட்டார்….எனக்குத் தெரிந்து கல்தோன்றி மண்தோன்றா காலத்திலிருந்து மாறாது இருப்பது சினிமா, டிராமா, பத்திரிகைக் கதைகள்தான்….என்ன…களம் வேறுபட்டு, நடையில் நவீனம் காட்ட கதையும் புதுசாகத் தோன்றுகிறது….இப்படி யோசித்துக் கொண்டிருந்த எனக்கு ஏன் ‘’கல்தோன்றி மந்தோன்றா’ காலத்தைக் களமாக வைத்து, இன்றுவரை பிரபலமான ‘’மாமியார்-மாட்டுப்பெண்’’ யுத்தத்தை, எழுதக் கூடாது! என்று விபரீதமாகத் தோன்றியது….அதன் விளைவே இந்த நாடகம் ‘’குப்பாச்சுலு vs கோடபட்ரி’’….குங்குமத்தில் வந்ததை சிலபல மாற்றங்களோடு பகிர்ந்துள்ளேன்….கிரேசி மோகன்
    ————————————————————————————————————————–

    குப்பாச்சுலுvsகோடபட்ரி

     —————————— 

    மாமியாரும்-மருமகளும் 

    ——————————

     பிற மொழி நாடகம்
    மூலம்-மூதாதையன் ”இன்கமோ சிரேகி”
    தமிழில்-”கிரேசி” மோகன்….

    காட்சி 1 :

    காலம் : பாறாங்கற்காலம் (கற்காலத்திற்கும் முந்திய காலம்.)

    இடம் : மிருக நடமாட்டமே இல்லாத பயங்கரமான காட்டின் ஒரு பகுதி. (மிருக நடமாட்டம் இல்லாததற்குக் காரணம்… இங்கு அவைகளைவிட பயங்கரமான நமது மூதாதையர்கள் இருந்தார்கள்.)

    பாத்திரங்கள் : கதாநாயகி ‘பிடாரி’யின் தந்தை ‘இடும்பன் காட்டேரி, ‘கதாநாயகியை ஐம்பது மாதம் வயிற்றில் சுமந்து பெற்ற (நமது மூதாதையர்கள் நம்மைவிட எதிலும் ஐந்து மடங்கு அதிகமாகவே இருந்தார்கள்.) தாய் ‘இருளச்சி,’ மற்றும் அக்கம்பக்கத்து காட்டு மிராண்டிகள். இது தவிர இவர்கள் செல்லமாக வளர்க்கும் யானை, மலைப்பாம்பு, காண்டாமிருகம், டயனாசரஸ் போன்ற மிருகங்கள் அங்கு சுவாதீனமாக அலைந்து கொண்டிருந்தன.

    கதாநாயகியின் தந்தை ‘இடும்பன் காட்டேரி’ தாழ்வான ஒரு மரக்கிளையில் கன்னத்தில் கைவைத்தபடி தலைகீழாகத் தொங்கிக்கொண்டு முன்னும் பின்னும் சோகமாக ஆடிக் கொண்டிருக்கிறான்.

    தனது எஜமானரின் சோகமான மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாத, ஐந்தறிவு படைத்த நீர்யானை ஒன்று அப்போது அங்குவந்து ‘இடும்பன்காட்டேரி’யை விளையாட்டாகச் சீண்டிவிட, அதனால் கோபமுற்ற இடும்பன் காட்டேரி நீர்யானையின் கன்னத்தில் பளாரென்று அறைய நீர் யானை அழுதுகொண்டே கண்ணீர் யானையாக மாறி ஓட்டம் பிடித்தது.

    கணவனுக்காக ஆசையாக ஒரு முழு காட்டெருமையை அலட்சியமாகக் கொம்பைப் பிடித்தவண்ணம் காட்டுத் தீயில் ‘ரோஸ்ட்’ செய்து கொண்டிருந்த இடும்பன் காட்டேரயின் மனைவி இருளச்சி – நீர்யானையின் அழுகுரல் கேட்டு ஓடிவருகிறாள்.

    இருளச்சி : (பூமி அதிர ஓடி வந்து) இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கு? ஏன் இப்படி காலைலேந்து சிடுசிடுனு இருக்கீங்க. அக்கம்பக்கத்துல உள்ளவங்கள்ளாம் தப்பா நெனைச்சுக்கப்போறாங்க… (என்று அவளால் முடிந்த வரையில் தாழ்வான
    குரலில் கேட்க, அந்த சத்தத்திற்குப் பயந்தே பறவைகள் எல்லாம் சிறகடித்து கூட்டுக்குள் ஒளிந்தன.)

    இடும்பன் காட்டேரி : என்னை ஒண்ணும் கேக்காத. எனக்கு மனசு சரியில்லை! (என்று கோபமாகக்  கூறிவிட்டு தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தவன் மணிக்கு முந்நூறு கிலோமீட்டர் வேகத்தில் முன்னும் பின்னும் வெறித்தனமாக ஊஞ்சலாட அவனது ஆட்டத்தைத்தாங்க முடியாமல் அந்த பிரும்மாண்டமான ஆலமரம் வேரோடு பிடுங்கிக் கொண்டு கீழே சாய்ந்தது.)

    இருளச்சி : கீழே விழுந்த ஆலமரத்தை ‘நாளை அடுப்பெரிக்க உதவும்’ என்ற எண்ணத்தில் அதை நான்காக உடைத்து ஒரு ஓரமாகப் போட்டுவிட்டு, கீழே விழுந்ததால் கணவனின் உடம்பில் படிந்த புழுதியைத் தட்டிவிட்டவண்ணம்) உங்களுக்கு மனசு சரியில்லேன்னு எனக்கு அப்பவே தெரியும்…

    இடும்பன் காட்டேரி : எப்படி? (என்று உரத்த குரலில் கர்ஜிக்க,)

    இருளச்சி : (கணவனின் கூச்சல் தாங்காமல் தனது இரு செவிகளிலும் உடைந்த ஆலமரக் கிளையை நுழைத்துக்கொண்டு) சேச்சேச்சே… ஏன் இப்படி காட்டுமிராண்டியாட்டம் கத்தறீங்க?  உங்க கவலை என்ன? மொதல்ல அதைச் சொல்லுங்க.

    இடும்பன் காட்டேரி : என்ன இருள்… ( இருளச்சியை செல்லமாக இருள் என்று சந்தோஷத்தில் அழைப்பது வழக்கம்) நீயும் புரியாம பேசற… வர வைகாசியோட நம்ப பொண்ணு பிடாரிக்கு (கதாநாயகி) நூத்து ஐம்பது வயசு முடியறது. அவளை பொறுப்பா ஒத்தன்கிட்ட கல்யாணம் கட்டிவச்சுட்டா நானும் மீதி இருக்கிற சொச்சநச்ச இருநூறு வருஷத்தைத் தள்ளிட்டு கண்ணை மூடலாம்னு பாத்தா, பிடாரிக்கு ஒரு வழி பொறக்க மாட்டேங்குதே, அதான் கவலையாயிருக்கு…

    இருளச்சி : பூ… இவ்வளவுதானா (என்று கூறி காரித் துப்புகிறாள். அப்பொழுது அவள் துப்பிய உமிழ் நீர் அங்கு ஒரு ஓடையாக மாறி ஓடுகிறது.

    அப்பொழுது கதாநாயகி பிடாரி தனது இரு கைகளாலும் ஒரு காட்டு யானையின் தும்பிக்கையைப் பிடித்து கரகரவென்று தட்டாமாலை சுற்றிக்கொண்டே வருகிறாள்.

    பிடாரி, மாதா பிதாவைப் பார்த்த சந்தோஷத்தில் வேகமாகச் சுற்றிக் கொண்டிருந்த யானையின் தும்பிக்கையை விட, யானை எட்டு மைல் தள்ளி அதே வேகத்தில் போய் விழுகிறது.)

    இடும்பன் காட்டேரி : என்னம்மா பிடாரி, இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி விளையாட்டுப்  பொண்ணா இருக்கப் போற… உன்னை கல்யாணம் பண்ணிக் கொடுத்து ஒத்தன் கைல ஒப்படைச்சுடறதா நானும் உங்கம்மாவும் முடிவு பண்ணியிருக்கோம். நீ என்ன சொல்ற?

    பிடாரி : போப்பா… எனக்கு வெக்கமா இருக்கு. (ஏற்கனவே அட்டைக்கரியாய் இருந்த அவள் முகம் நாணத்தால் மேலும் கருக்க, தனக்குத் திருமணம் என்று பெற்றோர்கள் தன் எதிரிலேயே குறிப்பிட்டதால் உண்டான கூச்சத்தில் அந்த இடத்தை விட்டு எழுந்து ஓட ஆரம்பித்தாள்.)

    இடும்பன் காட்டேரி : ம்… பாவம் அறியாப்பொண்ணா இருக்கா நம்ம பிடாரி. நாளைக்கு புருஷன் வீட்டுல போய் எப்படித்தான் குப்பை கொட்டப் போறாளோ! ம்… (என்று கூறி பெருமூச்சுவிட, அவன் நாசியிலிருந்து புறப்பட்ட சுவாசக்காற்று அங்கு தற்காலிகப் புயலாகச் சில நிமிடங்கள் வீசுகிறது.)

    இருளச்சி : ஏண்ணா… உங்க பிரண்டு ஒத்தர் பக்கத்து காட்டுல இருக்காரே அவர் பேர் என்ன?

    இடும்பன் காட்டேரி : யாரைச் சொல்ற? (குழப்பத்தால் தனது பரட்டைத் தலையை அவன் சொரிந்து கொள்ள, தலைமுடிக் கொத்திலிருந்து பல்லி, தேள், கரப்பான்பூச்சி போன்ற சிறு சிறு ஜந்துக்கள்  குதித்து ஓடுகின்றன்.)

    இருளச்சி : அதாங்க… ஆளுகூட குள்ளமா முப்பது அடி உசரத்துக்கு தக்கூனூண்டுக்கு இருப்பாரே….

    இடும்பன் காட்டேரி : யாருடி நம்ப பிரம்மராட்சஸனை சொல்றியா?

    இருளச்சி : அவரேதான். அவர் பையன்கூட கோரஸ்வரூபன்கற பேருக்கேத்த மாதிரி பாக்க லட்சணமா இருக்கான். மத்த பசங்க மாதிரி தறுதலையா இல்லாம சமத்தா தினமும் வேட்டையாடி கைநெறைய புலி, சிங்கம், கரடினு சம்பாதிக்கறான். நம்ப பிடாரியை அவனுக்கு கட்டி வச்சா பொருத்தமா இருக்கும்.

    இடும்பன் காட்டேரி : நீ சொன்னா சரிதான். தோ இப்பவே போய் பிரம்மராட்சஸனைப் பாத்து கல்யாணம் பேசி  முடிச்சுடறேன். சுபஸ்ய சீக்கிரம்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க… (என்று கூறிவிட்டு இருந்த இடத்திலிருந்தே ஒரு குதி குதித்து இடும்பன் காட்டேரி பக்கத்துக் காட்டிற்குத் தாவுகிறான்.)

    காட்சி – 2

    இடம் : உயரமான ஒரு ஆலமரத்தின் உச்சியில் பிரம்மராட்சஸனின் வீடு.

    பாத்திரங்கள் : பிரம்மராட்சஸன், அவன் மனைவி அசுரபுஷ்டி நாயகி, இடும்பன் காட்டேரி.
    (திருமணப் பேச்சு வார்த்தை நடக்கிறது.)

    இடும்பன் காட்டேரி : முடிவா நீங்க என்ன சொல்றேள்?

    அசுரபுஷ்டிநாயகி : தோ பாருங்கோ, உங்க பொண்ணுக்கு என் பையனை தரதுல எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனா நீங்க வரதட்சணையா நாப்பத்துரெண்டு யானை, முப்பத்துநாலு புலி தரணும். இது தவிர கல்யாணத்துக்கு எம் புள்ளையோட பிரண்ட்ஸ்லாம் வருவா. அவாளுக்கு மட்டும் எப்படியாவது முகூர்த்தத்தும்போது தனியா பந்திபோட்டு ‘நரமாமிசம்’ போட்டுடுங்கோ. ஜான்வாசம் ரத்தவிளாரி அம்மன் கோவில்லேந்து வச்சுக்கறதா இருக்கோம். ஜான்வாச ஊர்வலம்னா மெதுவாகத்தான் நகரணும். எப்படியாவது சிரமப்பட்டு கடல் ஆமையை ஊர்வலத்துக்கு அழைச்சிண்டு வந்துடுங்கோ.

    இடும்பன் காட்டேரி : நீங்க சொன்னதெல்லாம் எப்படியாவது தலையை அடமானம் வச்சாவது தந்துடறேன். அந்த வரதட்சணையை மட்டும் நீங்க குறைச்சுக்கணும். இப்ப இருக்கற வெலைவாசில இருபத்தி நாலு புலி கொஞ்சம் கஷ்டம்னு எனக்குப் படறது. நானும் எம் பொண்ணு கல்யாணத்துக்காக எப்படியோ கஷ்டப்பட்டு வேட்டையாடி நீங்க சொன்ன யானை, சிங்கம்லாம் சேர்த்து வச்சுட்டேன். புலி வேட்டை இப்பல்லாம் ரொம்ப அபூர்வமா போயிடுத்து உங்க புருஷனுக்கே தெரியும். என்கிட்ட இப்பசத்திக்கு இருபது புலி இருக்கு. மீதி நாலு புலிக்கு பதிலா எட்டு காட்டுப் பூனையை தந்துடறேன். பாக்க புலிமாதிரியே இருக்கும்.

    அசுரபுஷ்டிநாயகி : அதாவது சுத்தி வளைச்சு அசல் புலிக்கு பதிலா எவர்சில்வர் புலியை என் தலைல கட்டப்
    பாக்கறீங்க, இல்லியா. தோ பாருங்கோ, நான் சொன்னதெல்லாம் கொடுக்கற பட்சத்துல
    நாம மேற்கொண்டு கல்யாணத்தைப்பத்தி பேசலாம். அப்புறம் உங்க இஷ்டம். (தனது
    கோபத்தைக் காட்ட பல்லை நரநரவென்று கடித்து ஒஸிபிஸா சத்தம் உண்டாக்குகிறாள்.)

    இடும்பன் காட்டேரி : மன்னிச்சுக்கணும். தெரியாம பேசிட்டேன். எப்படியாவது இருபத்துநாலு புலியை
    கல்யாணத்துக்குள்ள தேத்திடறேன்! (என்று கூறிவிட்டு தாழ்வான குரலில் தனக்கு மட்டும்
    கேட்கும்படி பேசுகிறார். சேத்தரி… என்னிக்குத்தான் இந்த வரதட்சணைக் கொடுமை
    ஒழியுமோ!

    காட்சி – 3

    இடம் : வசதி படைத்தவர்கள் மட்டும் திருமணம் நடத்தும் ‘பாழும் குகைச் சத்திரம்’.

    பாத்திரங்கள் : மணமக்கள், அவர்களுடைய பெற்றோர்கள், மற்றும் அண்டை அசல் காட்டிலிருந்து
    திருமணத்திற்கு வந்துள்ள காட்டு மிராண்டிப் பெரியவர்கள்…

    பிடாரி-கோரஸ்வரூபன் திருமணம் நடக்கிறது. வந்தவர்கள் எல்லோரும் தங்கள் சக்திக்கேற்ப ஆடு, மாடு, புலி, கரடி என்று மணமக்களுக்கு பரிசாக ‘மொய்’ எழுதுகிறார்கள்.

    மணமகள் பிடாரியின் கழுத்தில் தாலி கட்டி மூன்று முடிச்சு போடும் சமயத்தில் மணமகன் கோரஸ்வரூபன் மூன்றாவது முடிச்சை சுபாவமான வெறியில் இறுக்கமாகப் போட, அதனால் மூச்சுத் திணறிய பிடாரி ‘குய்யோ முறையோ’ என்று மங்களமாகக் கூவுகிறாள்.

    காட்சி – 4

    இடம் : கோரஸ்வரூபன் வீடு.

    பாத்திரங்கள் : கோரஸ்வரூபன், புது மனைவி பிடாரி, பிடாரியின் மாமியார்க்காரி அசுரபுஷ்டி நாயகி.(கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே ஆரம்பித்துவிட்ட மாமியார்-மாட்டுப்பெண் மோதல்இங்கும் அவர்களுக்கே உரிய பாணியில் நடக்கிறது.

    கோரஸ்வரூபன், அறையின் நடுவில் கோடரியால் வெட்டப்பட்டவனின் மரண ஓலம் போல பயங்கரமான சப்தத்தோடு குறட்டை விட்டவண்ணம் ஆழ்ந்த நித்திரையிலிருக்கிறான். அப்போது அவனது தாய் அசுரபுஷ்டிநாயகி தலைவிரிகோலமாக ஓடி வந்து தனது மகனை ஒரு உதை உதைத்து எழுப்புகிறாள்.)

    அசுரபுஷ்டிநாயகி : அடேய் கோரஸ்வரூபா! உம் பொண்டாட்டி செஞ்ச காரியத்தை பாத்தியா… என் தலைல குட்டிட்டாடா! (தலையைக் காட்டுகிறாள். பிடாரி குட்டிய இடத்திலிருந்து ரத்தம் பெருகி ஓடுகிறது.)

    பிடாரி : (ஓடிவந்து) ஒண்ணுமில்லை. நான் லேசா குட்டினதுக்கே உங்கம்மா இப்படி அமக்களம் பண்ணறாளே! இவங்க செஞ்ச சில்மிஷத்தை பாருங்கோ! (என்று கூறி உள்ளங்கையைக் காட்டுகிறாள். அதில் பிடாரியின் அறுந்த காது இருக்கிறது.) உங்கம்மா என் காதை அறுத்துட்டாண்ணா! (என்று கூறி ஓலம் இடுகிறாள்.)

    அசுரபுஷ்டிநாயகி : நான் என்ன வேணும்னா இவ காதை அறுத்தேன். எம் முதுகுல இவ கத்தியால குத்திட்டாடா.

    பிடாரி : நம்பாதீங்கோ. உங்கம்மா பொய் சொல்றா.

    அசுரபுஷ்டிநாயகி : எனக்குத் தெரியும். நீ இப்படிச் சொல்லுவேன்னுதான் நான் முதுகுல குத்தின கத்தியை எடுக்காம அப்படியே வச்சிருக்கேன். நீயே பாரு! (என்று கூறி முதுகைக்காட்ட அங்கு மூன்று அங்குல ஆழத்திற்கு ஒரு பிச்சுவா பதிந்திருக்கிறது.)

    கோரஸ்வரூபன் : சேச்சே…. பொழுது விடிஞ்சு பொழுது போனா எப்பப் பாரு உங்க சண்டையைக் கேட்டுக் கேட்டு புளிச்சுப் போச்சு. ஏண்டா வீட்டுக்கு வரோம்னு இருக்கோம். இதெல்லாம் பாக்கறச்சே பேசாம ‘ஆபீசே’ கதின்னு அங்கயே பழியா கிடந்துடலாம் போலருக்கு.

    அசுரபுஷ்டிநாயகி, பிடாரி (இருவரும் ஒரே சமயத்தில்) ஆபீசா! அப்படீன்னா என்ன அர்த்தம்?

    கோரஸ்வரூபன் : எவனுக்குத் தெரியும் அர்த்தம். ஏதோ விரக்தில சொல்லணும்னு தோணித்து சொன்னேன்.

    பின்குறிப்பு – கோரஸ்வரூபன், மாமியார் – மாட்டுப்பெண் சண்டையால் வெறுத்து உச்சரித்த ‘ஆபீஸ்’ என்ற வார்த்தை நாளடைவில் பிரபலமாகி பலராலும் பேசப்பட்டது. வீட்டில் பிடுங்கல் காரண்மாக நிம்மதியாகத் தூங்க முடியாமல் தவித்த மனிதன் அன்று முதல் வெளியில் ‘ஆபீஸ்’ என்ற பெயரில் ஒரு ரம்மியமான இடத்தைத் தோற்றுவித்து பகல் நேரங்களில்
    செளக்கியமாகத் தூங்க ஆரம்பித்தான்.

    (முடிவு)
    ——————————————————————————————————————————

    Share
  • காலத்தின் கோலம்

    சி. ஜெயபாரதன்unnamed

    காலக் குயவன் ஆழியைச் சுற்றி,
    ஞாலம் உருவாக்கி
    கோலம் போட்டுக்
    பாலம் அமைத்தான் வரலாற் றுக்கு
    ஜாலம் பண்ணி !
    காலவெளி,
    பிரபஞ்சத்தின் பருவம் காட்டும்
    கைக் கடிகாரம் !
    கடவுளின் பயணக் குதிரை
    காலப் பறவை !
    பின்னே செல்லாது
    முன்னோடும் அகிலத்தின்
    முழு மூச்சு !
    அரங்கத்துக்கு ஏற்றபடி
    கரகம் ஆடும் காலம்
    தாளம் மாறும் !

    கடந்த காலம்
    விடிந்தது !
    நிகழ்காலம் நடை கற்குது !
    எதிர்காலம் தூங்குது !
    குதிரை மாயை என்றால்
    தேரோட்டியும்
    ஓர் மாயை தான்.
    இந்த வையகம்  பொய்யா?
    இந்தக் காயம் பொய்யா ?
    தாய், தந்தையர்
    பொய்யா ?
    சிவமும் சக்தியும் மாயையா ?
    காலம் மாயை என்றால்
    ஒளியும் மாயையா ?
    காலக் குதிரை
    முதுகில் சுமக்கும்
    இம்மூன்றும்
    நிஜமா ?  நிழலா ? கானல் நீரா ?

    Share
  • காலமகள் கண் திறப்பாள் சின்னையா..

    கவிஞர் காவிரி மைந்தன்

    காலமகள் கண் திறப்பாள் சின்னையா.. – ஆனந்த ஜோதிக்காக கவியரசு கண்ணதாசன் எழுதி விஸ்வநாதன் ராமமூர்த்தி அமைத்த இசையில் பி.சுசீலாவின் குரலில்..

    ஆனந்த ஜோதிக்காக கவியரசு கண்ணதாசன் எழுதி விஸ்வநாதன் ராமமூர்த்தி அமைத்த இசையில் பாடல்கள் அனைத்தும் தேனாமிர்தம்! தமிழ்த்தாய்க்கு மகுடம் சூட்டும் ஒருதாய் மக்கள் நாம் என்போம்.. நினைப்பு என்பது இருக்கும் வரை மனதில் இருக்கும் பாடலாக.. நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா? கவிதை என்பதே பொய்யானது என்னும் கூற்றுக்கு மாற்றுசொல்ல.. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே.. காதல் நதியில் காலமெல்லாம் பயணம் செல்ல.. பனியில்லாத மார்கழியா.. என்று படையெடுத்துவரும் பாடல்களுக்கு மத்தியில் மனதிற்கு மிக மிக நெருக்கமாக.. உருக்கமாக.. உள்ளத்தில் உள்ள காயங்களுக்கு மருந்திடும் வகையில் அமைந்த ஒரு பாடலும் இப்படத்தில் உண்டு. இந்தப் பாடலில் தேவிகாவுடன் உலக நாயகன் கமலஹாசன் (சிறுவயதில்) இணைந்து நடிக்க.. பி.சுசீலாவின் குரலில் என்ன இருக்கிறது .. மனதை வருடிக்கொடுக்கும் சுபபந்துவராளி ராகத்தில் கானமாக வருகிறது கேளுங்கள்..

    மனதில் சுமையிருந்தால் இறக்கி வையுங்கள்.. இப்பாடலைக் கேளுங்கள்.. நிம்மதியின் சன்னதி திறக்கும்! கவலையைப் பற்றிய கவலைக்கு கொஞ்சம் விடுமுறை தாருங்கள்.. காலம் கனியும் என்று காத்திருங்கள்.. நம்பிக்கைதரும் வரிகளை மனனம் செய்யுங்கள்..

    கல்லிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை தந்த தெய்வம்
    கனியிருக்கும் வண்டுக்கெல்லாம் துணையிருந்த தெய்வம்
    நெல்லுக்குள்ளே மணியை நெருப்பிலே ஒளியை
    உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம் உனக்கு இல்லையா
    தம்பி நமக்கு இல்லையா தம்பி நமக்கு இல்லையா

    பாடல் : காலமகள் கண் திறப்பாள் சின்னையா..
    படம் : ஆனந்தஜோதி
    எழுதியவர் : கண்ணதாசன்
    இசை ; விஸ்வநாதன் ராமமூர்த்தி
    கால மகள் கண்திறப்பாள் சின்னையா

    நாம் கண்கலங்கி .. கவலைப்பட்டே என்னையா
    நாலு பக்கம் வாசல் உண்டு நில்லையா
    அதில் நமக்கும் ஒரு வழியில்லையா சொல்லையா
    சின்னச்சின்ன துன்பமெல்லாம் எண்ண எண்ண கூடுமடா
    ஆவதெல்லாம் அகட்டுமே அமைதிகொள்ளடா
    ஒரு பொழுதில் துன்பம் வரும் மறுபொழுதில் இன்பம் வரும்
    இருளிலும் ஒளி இருக்கும் ஏக்கம் ஏனடா
    தம்பி தூக்கம் கொள்ளடா
    தம்பி தூக்கம் கொள்ளடா ..( காலமகள்)

    கல்லிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை தந்த தெய்வம்
    கனியிருக்கும் வண்டுக்கெல்லாம் துணையிருந்த தெய்வம்
    நெல்லுக்குள்ளே மணியை நெருப்பிலே ஒளியை
    உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம் உனக்கு இல்லையா
    தம்பி நமக்கு இல்லையா தம்பி நமக்கு இல்லையா
    (காலமகள்)
    ஆ ஆஆ ஆஆ ஆ… ஆ அ அ ஆ …
    ஆ அ அ ஆஆ.. ஆ அ அ ஆஆ…

    Share
  • பார்வை

    பத்மநாபபுரம் அரவிந்தன் images

    அதிகாலை எழுந்து
    குளிர் பனியில்
    நடுங்கி தெருவினில்
    போட்ட பூக்கோல அழகில்
    திளைத்து ஆசையுடன்
    அவனுக்கும் காட்ட எண்ணி
    தூங்குமவனை எழுப்பி
    கையோடு அழைத்து வர
    தூக்கம் போன சோகத்தில்
    கண் கசக்கி அவன் பார்த்தது
    கோலத்தின் மேல் வடித்து செல்லும்
    கழிவு நீர் நிறைந்த டேங்கர் லாரியை மட்டுமே..

    Share
  • அணு உலை எதிர்ப்பாளி ஞாநி ​ சங்கரன்​ பரப்பி வரும் தவறான கருத்துக்களுக்கு எனது பதில்

    சி. ஜெய பாரதன்
     

    கல்பாக்கம் இந்திரா காந்தி அணுவியல் ஆய்வுக் கூடம்


    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    முன்னுரை:  1945 இல் ஜப்பானில் அணுகுண்டுகள் வீழ்ந்து ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்கள் தரை மட்டமாகி லட்சக் கணக்கான ஜப்பானியர் கதிரியக்கத்தால் பேரளவு பாதிக்கப் பட்ட பிறகும், அமெரிக்காவில் 1979 இல் திரிமைல் தீவு ஊரில் அணுமின் உலை விபத்து நேர்ந்து அணுவியல் எருக்கோல்கள் உருகிய போதினும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் செர்நோபில் அணுமின் உலை வெடித்துப் பலர் மரித்து பலர் கதிரியக்கத்தால் நோயுற்ற போதும், 2011 மார்ச்சில் ஜப்பான் நிலநடுக்கச் சுனாமியால் நிறுத்தமான அணுமின் உலைகள் நான்கில் வெப்பத் தணிப்பின்றி சில எருக்கோல்கள் உருகி ஹைடிரஜன் வாயு சேர்ந்து, அணு உலை மேற்கட்டடத்தில் ரசயான வெடிப்புகள் நேர்ந்த போதினும், உலகநாடுகள் தாம் இயக்கி வரும் 430 மேற்பட்ட அணு உலைகளை நிரந்தரமாய் நிறுத்தம் செய்ய வில்லை.  மாறாகப் புதிய பாடங்களைக் கற்றுக் கொண்டு, தமது அணு உலைகளை மீளாய்வு செய்து, அபாய வெப்பத் தணிப்பு முறைகளை மிகையாக்கிச் செம்மைப் படுத்தித் தொடர்ந்து இயக்கி வருகிறார்.

    இந்த நோக்கில் சிந்திக்க வேண்டியது தற்போது ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்கள் சுத்தம் செய்யப் பட்டு புத்துயிர் பெற்று எழுந்து முன்னை விடக் கட்டமைப்பு செய்யப்பட்டு முற்போக்கு நகராக மாறி விட்டன.  அதே போக்கில் புகுஷிமாவின் பழுதான நான்கு அணுமின் உலைகளும் சுத்தமாகப் பட்டு உருகிய எருக்கோல்கள் நீக்கப்பட்டு கவசத் தொட்டி களுக்குள் மூடப்பட்டு புதைக்கப்படத் தயாராகும்.  அணு உலைக் கலங்கள் சீர் செய்யப்பட்டு நீக்கப்படும்.  அந்த இடத்தில் புது டிசைன் அணு உலை கட்டப்படும்.  அதற்கு ஆகும் செலவு மிகையானால் புது அணு உலை அமைப்பு நிராகரிக்கப்படும்.  பழைய அணு உலைகள் நிரந்தரமாய் மூடப்படும்.

    இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளாய் அடுத்தடுத்து இயங்கிவரும் 20 அணுமின் உலைக் கதிரடியால், இதுவரை யாரும் புற்று நோயிலோ மற்ற நோயிலோ மரிக்கவில்லை.  அணுமின் உலைச் சூழ்வெளியில் டாக்டர் புகழேந்தி, ஞாநி பயமுறுத்தி வருவதுபோல் யாருக்கும் ஆறாவது முளைத்ததாக நிரூபிக்கப்பட வில்லை.

     

    கல்பாக்க அணுமின் சக்தி பற்றி  ஞாநியின் தவறான கருத்துகள்

    எழுத்தாளர் ஞாநி கடந்த எட்டு ஆண்டுகளாக கல்பாக்க அணு உலைகள் மீது தவறாக எழுதி வருகிறார்.  அவர் எழுதிய ‘கான்சர் கல்பாக்கம்’ என்ற 2003 ஏப்ரல் திண்ணைக் கட்டுரையில் கதிர்வீச்சின் கொடிய இன்னல்களைக் குறிப்பிட்டு, நிர்வாகத் துறைகளில் உள்ள ஓட்டைகளை எடுத்துக் காட்டி, மாநில அரசா அல்லது மத்திய அரசா எது அபாயப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் என்று கேட்ட கேள்வி வரவேற்கத் தக்கதே ! ஆனால் அவர் மக்களைப் பயமுறுத்தக் கூறிய சில கடுமையான நோய் விளைவுகள் அணு உலைக் கதிர்வீச்சால் மெய்யாக நிகழ்ந்தவையா என்பது ஐயப்பாட்டுக் குரியன! மற்றும் அவரது சில கதிர்வீச்சுக் கருத்துக்கள் உயிரியல் விஞ்ஞானத்துக்கு முரண்பட்டவை என்பது எனது கருத்து!  இந்திய அணுமின் உலைகளைக் கட்டி இயக்குவதும், கண்காணிப்பதும், பராமரிப்பதும் இந்திய அரசுக்குக் கீழிருக்கும் அணுசக்தித் துறையக /நியூகிளியர் பவர் கார்பொரேசன் (DAE, Dept of Atomic Energy / NPCIL Nuclear Power Corporation of India Ltd) ஆணையகங்கள்தான்.

    கல்பாக்கம் அணு உலைப் பணியாளிகளுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் புற்று நோய் உண்டாகும் வாய்ப்புகள் மிக அதிகம் என்ற தவறான கருத்தைப் பரப்பி வருவது, நியாயமான எச்சரிக்கை ஆகாது! கல்பாக்கத்தில் பணிசெய்து குறைந்த அளவுக் கதிரடி பெற்றுப் புற்று நோய் வந்து செத்துப் போனவர், ஊனக் குழந்தை பெற்றவர், பிறப்புறுப்பில் புற்று நோய் பெற்றவர், ரத்தப் புற்று நோய் பெற்றவர், குடல் புற்று நோய் அணு உலைக் கதிர்வீச்சால் உண்டானவை என்று மெய்ப்பிக்காமல் அழுத்தமாகப் பறை சாற்றுவது உயிரியல், மற்றும் கதிரியல் விஞ்ஞானத்துக்கு [Biological & Radiological Science] ஒவ்வாத வாதங்கள்!  ஓரளவு கதிரடியால் புற்றுநோய் வரலாம் என்று உயிரியல் விஞ்ஞானம் கூறினும், கல்பாக்க அணு உலைக் கதிரடியால் ஆங்கு வாழ்வோர் புற்று நோய் வந்து சாகிறார் என்பது இதுவரை நிரூபிக்கப் பட வில்லை.

     

    ஞாநியின் 2003 ஏப்ரல் திண்ணைக் கட்டுரையில் வந்த தவறான சில கருத்துக்கள்

    1. ஞாநியின் கருத்து:

    கல்பாக்கத்தில் ஒரு விபத்து நேர்ந்தால் போதும்! சென்னை நகரம் அவ்வளவுதான்! செர்நோபில் கதி ஏற்படும்!

    எனது விளக்கம்:

    செர்நோபிள் வெடி விபத்துக்குக் காரணங்கள்:  சோதனையின் போது அடுத்தடுத்து நிகழ்ந்த பல மனிதத் தவறுகள், மூல டிசைன் கோளாறுகள், எப்போதும் கனலாக இருக்கும் திரள்கரி அடுக்கு [Moderator Graphite Pile] மிதவாக்கியாகப் பயன்பட்டது, கதிரியக்கப் பொழிவுகளை உள்ளடக்கும் கோட்டை அரண் இல்லாதது! அவ்விதக் கோர விபத்து பாரதத்தின் எந்த அணு உலையிலும் நிகழவே நிகழாது! கல்பாக்க அணுமின் உலையில் கனநீர் மிதவாக்கியாகப் பயன்படுகிறது! மேலும் நாலடித் தடிப்பு கொண்டு உறுதி யாக்கப்பட்ட, முன்முறுக்கப் பட்ட இரும்புக் கம்பி கான்கிரீட் கோட்டை அரண் [4 feet thick Pre-stressed Reinforced Concrete Cotainment] உள்ளதால், விபத்து நேர்ந்தாலும் கதிரியக்கப் பொழிவுகள் கோட்டையை விட்டு வெளியே தாண்டவே தாண்டா.

    விபத்துக்கள் பலவிதம்! சிறு விபத்து, பெரு விபத்து, பாதுகாப்பு விபத்து, கதிர்வீச்சு விபத்து, வெப்பத் தணிப்புநீர் இழப்பு, அணு உலைக் கட்டுப்பாடு இழப்பு, அபாய கால மின்சாரம் இழப்பு இப்படிப் பல விதங்கள். கல்பாக்க அணுமின் உலையில் பெரு விபத்து நிகழ்ந்தாலும், சென்னை நகரம் அழியாது! மகாபலிபுரமும் அழியாது!  கனநீர் இயல் யுரேனிய அணு உலைகளில் சக்தி அளிப்பவை மித வேக நியூட்ரான்கள்.  அணு குண்டுகளில் வெடிப்புச் சக்தியை உண்டாக்குவது அதிவேக நியூட்ரான்கள்.

    2. ஞாநியின் கருத்து:

    பயங்கர வாதிகளுக்கு அணு உலைகள் சிட்டிங் டக் [Sitting Duck] என்று சொல்லக் கூடிய எளிமையான இலக்குகள்! அதன் மீது விமானத்திலிருந்து ஒரு குண்டு போட்டால் போதும்! அணுக்கதிர் இயக்கம் சென்னையை அழித்துவிடும்!

    எனது விளக்கம்:

    நாலடித் தடிப்பு கொண்டு உறுதி யாக்கப்பட்ட, முன்முறுக்கப் பட்ட இரும்புக் கம்பி கான்கிரீட் கோட்டை அரண் [4 feet thick Pre-stressed Reinforced Concrete Cotainment] மீது குண்டு போட்டுத் துளையிடுவது எளிதல்ல.  விமானத்திலிருந்து குண்டு போட்டால், அணு உலை வெடிக்காது! அணு உலைத் தானாக நிறுத்தம் ஆகி, வெப்பத்தைத் தணிப்பு ஏற்பாடு இயங்கும். அது முடங்கி போதிய நீரில்லாது போனால், எரிக்கோல்கள் உருகி, கோட்டை அரணில் சேரும்.  அரணில் ஓட்டை நேர்ந்தால் கதிரியக்கம் காற்றடிக்கும் திசையில் பரவும். சென்னையிலும், மகாபலிபுரத்திலும் கதிரியக்கப் பொழிவுகள் பெய்து, மாந்தர் கதிர்த் தீண்டலில் தாக்கப் படுவர். ஆனால் சென்னை நகரம் கதிர்வீச்சால் அழியவே அழியாது!  கதிர்மானிகளைக் கொண்டு கதிர்கள் தீண்டிய [Radioactive Contaminations] இடங்களைக் கண்டு பிடித்து, அவை நீக்கப் பட வேண்டும்! ஆங்கு வாழும் மாந்தரில் கதிரடி பட்டோரும் இருப்பார்! கதிரடி படாமல் தப்பினோரும் இருப்பார்! ஆனால் சென்னையில் உள்ள கட்டடங்கள், வீடுகள் சேதமடையா!

    விமானத்திலிருந்து குண்டுகள் விழுந்தால் அந்த வெடிப்பில் மடிபவர் கதிரியக்கக் கசிவில் காயப் படுபவரை விட அதிகமாய் இருக்கும்.

    3. ஞாநியின் கருத்து:

    கல்பாக்கத்தில் விபத்து நடந்தாலே போதும்! விபத்து எதுவும் நடக்காது என்று எந்த உத்தரவாதமும் கிடையாது! அப்படி நடந்தால் அதற்கு யார் பொறுப்பு ? கல்பாக்கத்தில் கதிரியக்கத்தால் சுற்று வட்டாரங் களில் புற்று நோய் அதிகரித்தால், அதற்கு யார் பொறுப்பு ?

    எனது விளக்கம்:

    அணுமின் நிலையத்தில் விபத்து நேர்ந்தாலும் சரி, சுற்று வட்டாரத்தில் புற்று நோய் அதிகரித்தாலும் சரி, அவற்றை நேரடியாகக் கவனிப்பது, மத்திய அரசைச் சேர்ந்த அணுசக்திக் கார்பொரேஷன் [Nuclear Power Corporation of India Ltd (NPCIL)] ஒன்றுதான். NPCIL அதை முறையாகக் கையாள மேற்பார்வை செய்வது, தனித்தியங்கும் ‘அணுசக்திக் கட்டுப்பாடு வாரியம் ‘[Atomic Energy Regulatory Board (AERB)]. ஆராயப் பட்ட தவறுகள் முற்றிலும் திருத்தப்படும் வரை, அணுமின் உலை இயக்க அனுமதி லைசென்ஸை முறிக்க AERB வாரியத்துக்கு முழு அதிகாரமும் உள்ளது.

    4. ஞாநியின் கருத்து:

    கல்பாக்கம், கூடங்குளம் திட்டங்கள் எல்லாமே பஸ்மாசுரனுக்கு வரம் கொடுக்கும் திட்டங்கள்தான் என்பதை நிரூபிக்க அறிவியல் ஆதாரங்கள் உண்டு!

    எனது விளக்கம்:

    அறிவியல் ஆதாரங்களை ஞாநி ஏனோ தர வில்லை! ஞாநி அவற்றையும் காட்டி யிருக்கலாம்!  அணுசக்தி விஞ்ஞானம் பஸ்மாசுரன் காலத்தில் முளைக்க வில்லை! படிக்காததால், அவனும் புதிய அணு உலை களை முடுக்கத் தெரியாமல் திருதிருவென்று விழிப்பான்! அவனுக்கும் முதலில் பயிற்சி தேவை! கல்பாக்க அழுத்தக் கனநீர் இரட்டை அணு உலைகள் சிறந்த பாதுகாப்புத் தன்மைகளைக் கொண்டவை. கல்பாக்க வேகப் பெருக்கி சோதனை அணு உலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதாததால், ஆற்றல் குறைக்கப் பட்டு 25% [10 MWt] ஆற்றலில்தான் இப்போது இயங்கி வருகிறது!

    மீண்டும் ‘கல்பாக்கம் ஞாநி ‘ [செப் 18, 2003] திண்ணைக் கட்டுரையில் அணுமின் நிலையங்கள் மீது புகார் செய்திருக்கிறார்.  ‘இந்தியாவில் அணுசக்தித் துறை என்பதே மின்சாரத்துக்கானது அல்ல. அணுமின்சாரம் இதுவரை எந்த மூலையிலும் மின்சாரப் பற்றாக் குறையைத் தீர்க்கவில்லை’ என்று தவறான கருத்தைப் பரப்பி வருகிறார். பெரும்பான்மையான இந்திய அணுமின் நிலையங்கள் எவ்விதம் சீரும் சிறப்பாக இயங்கி மின்சக்தி பரிமாறி வருகின்றன என்று மெய்யான செய்திகளை முழுமையாக அறியாது, கண்களை மூடிக் கொண்டு புளுகுத் தகவலைத் தமிழ் நாட்டிலும், அகிலவலை மூலம் தமிழ் உலகிலும் ஒரு பத்திரிகை ஆசிரியர் பரப்பி வருவது வியப்பாக இருக்கிறது!

    1.  http://en.wikipedia.org/wiki/Nuclear_Power_Corporation_of_India

    2.  http://www.npcil.nic.in/

    செப் 18, 2003 திண்ணைக் கட்டுரையில் நான்கு தனிப்பட்ட தகவல்களைக் குறிப்பிட் டுள்ளார். அவற்றில் சில பிழையானவை.

    1.  ஞாநியின் கருத்து

    மின்சார உற்பத்திக்கு அணுசக்தி சரியான வழியல்ல. இந்தியாவில் அணுசக்தித் துறை என்பதே மின்சாரத்துக்கானது அல்ல. அணுமின்சாரம் இதுவரை எந்த மூலையிலும் மின்சாரப் பற்றாக் குறையைத் தீர்க்கவில்லை.. பல தலைமுறைகளுக்கு ஆபத்தான கழிவுகளைத்தான் உற்பத்தி செய்யும்.

    எனது விளக்கம்

    http://www.npcil.nic.in/ இந்திய அணுமின் உலைகளின் இயக்கம் பற்றி இந்த வலைப்பகுதியில் உள்ளது

    2.  ஞாநியின் கருத்து

    வல்லரசு வேடங்கட்டி ஆடுவதற்காக அணு ஆயுதத்துக்கான புளுடோனியத்தை எடுத்து, அணுகுண்டு தயாரிப்பவர்கள்தான் உண்மையான பயங்கரவாதிகள்.

    எனது விளக்கம்.

    இந்தியப் பாதுகாப்புக்குத் தேவையானால் பயன்படுத்த ஓர் எச்சரிக்கை ஆயுதமாக அரசாங்கம் அணு ஆயுதங்களைக் கொலுப் பெட்டியில் வைத்துள்ளது.

    3.  ஞாநியின் கருத்து

    கல்பாக்கம் அணு உலைகள் நிரந்தர ஆபத்தாக இருந்து அங்குள்ள ஊழியர்களுக்கு உடல்நல விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

    எனது விளக்கம்

    இது தவறானது. அவர் குறிப்பிடும் விபத்து எரிக்கோல் மீள்சுத்திகரிப்புத் தொழிற்கூடத்தில் நிகழ்ந்தது.  அதனால் யாரும் பாதிக்கப் படவில்லை.  கல்பாக்க அணு உலைகளில் நிரந்தர ஆபத்துக்கள் இல்லை.  நேர்ந்த கனநீர்க் கசிவு விபத்துக்களில் நோயுற்றோர் யாருமில்லை.

    4.  ஞாநியின் கருத்து

    கல்பாக்கம் அணு உலகளைக் கட்டி முடிக்கவே 15 ஆண்டுகள் ஆகின. இயங்கத் தொடங்கிய முதல் ஐந்து ஆண்டுகளில் 200 முறை பிரச்சினைகளினால் நிறுத்தப் பட்டன. [அதாவது ஆண்டுக்கு 40 தடவை நிறுத்தம், மாதம் ஒன்றுக்கு 3-4 நிறுத்தம்].

    எனது விளக்கம்.

    கல்பாக்கம் அணுமின் உலைகள் பல இந்தியச் சாதனங்கள் புதியதாக உற்பத்தி செய்து இந்தியர் கட்டி இயங்குவது.  முன்னோடிச் சோதனை அணுமின் உலைகளில் இத்தனை நிறுத்தங்கள் ஆரம்பத்தில் நேர்வது ஒன்றும் பெரிதல்ல !

    இந்தியச் சாதனங்கள் 70%, அன்னியச் சாதனங்கள் 30% கொண்டு கல்பாக்கத்தில் தயாரியான முன்னோடி அணு உலைகள் இவை. இந்தியா தன்காலில் நின்று முதன் முதலில் அணுமின் நிலையச் சாதனங்களைத் தயாரித்துச் சுயதேவைப் பூர்த்திக்குக் கட்டி இயக்கும் போது, 15 ஆண்டுகள் நீடித்ததில் ஒன்றும் தவறில்லை. ஆரம்ப காலத்தில் விஞ்ஞானிகளும், எஞ்சியர்களும் புது அணு உலையை இயக்கும் போது மாதம் ஒன்றில் 3-4 நிறுத்தம் ஏற்பட்டதும் ஏற்றுக் கொள்ள வேண்டியதே.

    இந்திய அணுமின் நிலையங்களின் மகத்தான சாதனைகள்

    இந்திய அணுசக்திக் கார்பொரேஷன் [Nuclear Power Corporation of India Ltd (NPCIL)] தனது அகிலவைப் பின்னலில் [www.npcil.org] 1995 முதல் 2002 ஆண்டுவரை அணுசக்தி பரிமாறி வந்த மொத்த யூனிட்களையும் [Generation Units], நிலையங்கள் இயங்கிய திறத்தகுதி

    ​ ​

    களையும் [Capacity Factors] விளக்கமாகத் தந்துள்ளது. அவை யாவும் மெய்யான எண்ணிக்கைகள்! புளுகு எண்ணிக்கைகள் அல்ல! அதே எண்ணிக்கைகளை அணுசக்தி கார்பொரேஷன் வியன்னாவில் உள்ள அகிலநாட்டு அணுசக்திப் பேரவைக்கும் [International Atomic Energy Agency (IAEA)] இதுவரை அனுப்பி வந்துள்ளது. 

    அணுசக்தித் துறையின் புதிய 2003 ஆம் ஆண்டு அறிக்கையில் (ஏப்ரல் 2002-மார்ச் 2003) தற்போதைய நிதியாண்டில் பரிமாறிய மின்சாரம் 19200 மில்லியன் யூனிட் [1 Unit=1 KWh (Kilo Watt Hour)] என்றும், பெற்ற இலாபம் ரூ.1438 கோடி என்றும் அறியப்படுகிறது. அடுத்து ஏப்ரல்-ஜுன் 2003 மூன்று மாதத்தில் மட்டும் அடைந்த இலாபம் ரூ 545 கோடி! ஏழாண்டுகளில் (1995-2002) இந்திய அணுமின் நிலையங்கள் சராசரி 13590 மில்லியன் யூனிட் மின்சாரத்தை, சராசரி 74% திறமைத்தகுதியில் [Capacity Factor: 74%] பரிமாறி வந்துள்ளன.

    கல்பாக்கம் முன்னோடி அணுமின் உலைகள் கடந்த நான்கு வருடங்கள் [1998-2002] சராசரி 82% திறமைத் தகுதியில் சராசரி 1183 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரித்துள்ளன. அதே சமயம் வட இந்தியாவில் ஓடும் புதிய அணுமின் நிலையங்கள் 2002 ஆம் ஆண்டில் புரிந்த மகத்தான மின்சார உற்பத்திகள் பாராட்டுக் குரியவை.

    கக்ரபார் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 92% … பரிமாற்றம்: 1735 மில்லியன் KWh

    கெய்கா அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 78% … பரிமாற்றம்: 1500 மில்லியன் KWh

    நரோரா அணுமின் நிலையங்கள்: திறமைத்தகுதி: 88% … பரிமாற்றம்: 1664 மில்லியன் KWh

    ராஜஸ்தான் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 80% … பரிமாற்றம்: 1525 மில்லியன் KWh

    கல்பாக்கம் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 78% … பரிமாற்றம்: 1122 மில்லியன் KWh

     

    அணு உலைகளில் ஏற்படும் அபாய நிகழ்ச்சிகள், விபத்துகள்.

    உலக நாடுகளில் இயங்கும் அணுமின் நிலையங்களில் விபத்துகள் நிகழ்ந்ததுபோல், இந்திய அணு உலைகளிலும், அணுஎருச் சுத்தீகரிப்புத் தொழிற் கூடங்களிலும் சில அபாயங்கள் நேர்ந்துள்ளன! மனிதர் கவனமின்மை, மனிதத் தவறுகள், பாதுகாப்புப் பணிநெறிகளைப் பின்பற்றாமை, சீரான மேற்பார்வை இன்மை, கண்காணிப்பு இன்மை ஆகிய ஒழுங்கீனங்

    ​ ​

    களால் தொழிற்சாலைகளில் விபத்துகள் உண்டாகும். அவற்றைத் தவிர்ப்பது, தடுப்பது அல்லது குறைப்பது இயக்குநரின் முக்கிய கடமையாக இருத்தல் அவசியம். அணு உலைகளில் பெரும்பான்மையான விபத்துகள் மனிதத் தவறுகளால் ஏற்படுகின்றன. மனிதத் தவறுகள், கண்காணிப்பட்டு குறைக்கப்பட வேண்டும். குறைந்து குறைந்து மனிதத் தவறுகள் பூஜியமாக்கப்பட வேண்டும். விபத்துகளின் மூல காரணங்கள் ஆழ்ந்து உளவப்பட்டு, மீண்டும் அவை ஏற்படாதிருக்க தடுப்பு முறைகள், பாதுகாப்பு நெறிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அணு உலைகளின் பிரச்சனைகளைக் கண்டு மிரளாமல், அவற்றைத் தீர்க்க வழிகள் வகுக்கப்பட வேண்டும். அணு உலைகளே நாட்டின் மின்சாரப் பற்றாக்குறையை நீக்கும் என்று ஆணித்தரமாக நம்பி, மக்கள் அறியும்படி அவர்களுக்குக் கல்விப் பயிற்சிகள் அளித்து, அணுத்துறைக் கண்காட்சி சாலைகள் அமைக்கப்பட வேண்டும். 

    தற்போதைய தொழில்யுகம் [Industrial Age] தோற்றுவித்த யந்திர, இராசயனத் தொழிற்

    ​ ​

    சாலைகள், போக்கு வரத்துகள் [இரயில் தொடர், கார், கப்பல், ஜெட் விமானம், ராக்கெட் விண்கப்பல்], மின்சார நிலையங்கள், ஆய்வுக்கூடங்கள் அனைத்திலும் அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் ஒளிந்துள்ளன! எப்போதாவது விமானம் ஒன்று விழுந்து நூற்றுக் கணக்கான பேர் மடிகிறார்!  ஆனால் விமானப் பயணங்கள் உடனே நிறுத்தப் படுகின்றனவா ? இல்லை. இரயில் வண்டி தடம் பெயர்ந்து உருண்டு அநேக நபர் உயிரிழக்கிறார்; பலர் காயமடைகிறார்! ஆனால் இரயில் பயணங்கள் நிறுத்தப் படுகின்றனவா ? இல்லை.  காரணம் பாதிக்கப் பட்டாலும் மக்கள், அவற்றின் அபாயங்களை எதிர்பார்த்து அவ்விபத்துகள் ஏற்பட்டால் பாடம் கற்றுச் செம்மைப் படுத்திய விமானங்களில் பயணம் செய்ய முன்வருகிறார். 

    ஆனால் கடந்த 50 ஆண்டு அனுபவத்தில் இந்தியாவின் 20 அணு உலைகளில் இதுவரை யாரும் கதிரடியால் மரணம் அடைய வில்லை! பாதுகாப்புக்கு மீறிய அளவுக் கதிரடிச் சிலர் வாங்கி யிருந்தாலும் மருத்துவச் சிகிட்சையில் அவர்களைக் குணப்படுத்த முடியும்!  அணுமின் உலைக் கதிரடியால், இதுவரை யாரும் புற்று நோயிலோ மற்ற நோயிலோ மரிக்கவில்லை.  அணுமின் உலைச் சூழ்வெளியில் டாக்டர் புகழேந்தி, ஞாநி பயமுறுத்தி வருவதுபோல் கல்பாக்கத்தில் யாருக்கும் ஆறாவது முளைத்த தாக எவரும் நிரூபிக்க வில்லை.

    நான் 45 ஆண்டுகளுக்கு மேல் இந்திய & கனடா அணுமின் உலைகளில் நேரடியாக வேலை செய்து அனுபவன் பெற்றவன்.  எனது இரண்டாவது புதல்வி கனடாவில் உள்ள பிக்கரிங் அணுமின் நிலையத்தில் திட்ட எஞ்சினியராகப் பணி செய்து வருகிறாள்.  அவளது கணவரும் அருகில் உள்ள டார்லிங்டன் என்னும் வேறோர் அணுமின் நிலையத்தில் திட்ட எஞ்சினியராகப் பணி செய்கிறார்.  அவருக்குப் புதல்வர் இருவர்.  அணு உலையில் வேலை பார்த்து வந்த எங்களில் யாருக்கும் இதுவரை ஆறாவது விரல் முளைக்க வில்லை.  கதிரியக்கத்தால் புற்று நோயோ, மற்ற நோயோ எங்களைத் தாக்க வில்லை !  அணுமின் உலைகள் அருகிலே பல்லாண்டு காலம் வசித்து, அங்குள்ள சூழ்வெளிக் காற்றைச் சுவாசித்து, நீரைக் குடித்து, உண்டு, உறங்கி, உறவாடி நலமுடன் வாழ்ந்து வருகிறோம்.  எங்களைப் போல் ஆயிரக் கணக்கான மாந்தர் இந்தியாவிலும், கனடாவிலும் அணுமின் உலைகள் அருகிலே பல்லாண்டுகள் பாதுகாப்பாக ஆரோக்கியமாய் வசித்து வருகிறார்.
    ++++++++++++++

    தகவல்:
    1.  http://www.npcil.nic.in/index.asp  [Nuclear Power Corporation of India Ltd Website for Nuclear Power Updates]

    2. http://pib.nic.in/release/release.asp?relid=20878  [President Dr. Abdul Kalam Speech on Kudungulam (Sep 22, 2006)]

    3. http://www.stratmag.com/issue2Nov-15/page03.htm
    [Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]

    4.  World Nuclear Association – WNA
    Radiological Protection Working Group – RPWG (Official List – July 20, 2006)
    http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

    5. World Nuclear Association – WNA
    Waste Management and Decommissioning Working Group – WM&DWG (Official List – July 25, 2006)    http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

    6. http://www.candu.org/npcil.html  [Indian Heavywater Nuclear Power Plants]

    7. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

    8. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

    9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708091&format=html  Letter By R. Bala (August 9, 2007)

    10. http://www.wano.org.uk/WANO_Documents/What_is_Wano.asp  [World Association of Nuclear Operation Website]

    11 IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction)

    12.  கேன்சர் கல்பாக்கம்: (திண்ணையில் ஞாநியின் கட்டுரை) (4/19/03)

    இந்திய அணுசக்தித் துறைகளின் தகவல்கள்:

    1. Atomic Power Plants Performance Reports www.npcil.org [Updated Sep 22, 2003]

    2. Kalpakkam Nuclear Site www.igcar.ernet.in [Updated Sep 1, 2003]

    3. Bhabha Atomic Research Centre, Bombay www.barc.ernet.in [Updated Sep 19, 2003]

    4. Atomic Energy Regulatory Board [AERB] Regulations www.aerb.gov.in [Updated Sep 17, 2003]

    4. R. Chidambaram, Former Indian Atomic Energy Commission Report [Sep 20, 2000] http://pib.nic.in/feature/feyr98/fe0798/PIBF2207982.html

    5. Dr. Anil Kakodkar, Present Chairman Indian Atomic Energy Commission, IAEA Repot [Sep 17, 2003]http://www.dae.gov.in/gc/gc2003.htm

    6. Indian Radiation Safety Division Reports http://www.aerb.gov.in/T/Divisions/RSD/RSD.html

    7. Atomic Energy Regulatory Board, Bombay Annual Report [2001-2002] http://www.aerb.gov.in/T/annrpt/annr2k2/annrpt.pdf

    12. http://www.world-nuclear.org/info/inf53.html  (World Nuclear Association Report on Indian Nuclear Power)  (February 2012)

    13. http://jayabarathan.wordpress.com/kudankulam-vver-reactor/

    14. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40303233&format=html

    [கூடங்குளம் அணுமின் உலைப் பாதுகாப்பு ஆய்வுகள்]

    15. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40607071&format=html

    [செர்நோபிள் விபத்துபோல் கூடங்குளத்து அணுமின் உலையில் நிகழுமா ?]

    16. http://en.wikipedia.org/wiki/Nuclear_Power_Corporation_of_India  (Nuclear Power Corporation of India) (March 12, 2012)

    17. http://www.npcil.nic.in/  (Nuclear Power Corporation of India)

    ******************

    S. Jayabarathan [jayabarat@tnt21.com] March 24, 2012

    ​ [Revised]​
    Share