நேசமித்ரன்

அன்புள்ள மணிமொழிக்கு

நலம் ! விழைவதும் அதுவே ….

தாமரைத்தண்டில் மூச்சு விட்டபடி நண்டூரும் சேற்றில் அளைந்த நம் விரல்கள் இன்று இரு வேறு உலகங்களின் வெவ்வேறு வேர்கள். நித்தியமும் பிரார்த்தனைக்குப் பின் ஒரு கவளம் எடுத்து வைத்து விட்டு உண்ணும் வழக்கம் இன்னும் உனக்கு மாறி இருக்காது. கடல் பார்ப்பது மாதிரி எனக்கு உன் கண்கள் சலிப்பதே இல்லை என்ற உன் வரியை சமீபமாய் பழநி யானைப்பாதையில் இறங்க முடியாமல் மண்டியிட்ட யானை அருகே அமர்ந்து அழுத பாகனின் கேவலில் கேட்டேன். வதுவை என்ற வார்த்தை மீது உனக்கு அவ்வளவு ப்ரேமை. பாரதி எவ்வளவு அழகா பயன்படுத்தி இருக்கான் பாரேன் என்பாய்.

கடைசியாய் முதல் முத்தம் பகிர்ந்த ட்யூஷன் எடுத்த பழநிச்சாமி வாத்தியார் வீட்டுக்கு போகப் பார்த்தேன். அவர் அந்த வீட்டை விற்று விட்டாராம். வெள்ளை அடித்து அந்த எண்ணெய்க் கறைகளில் செதுக்கிய பெயர்களெல்லாம் அழிந்து விட்டன. ஆனால் இன்னும் சிட்டுக்குருவிகள் நெல் பொறுக்க வருகின்றன பென்னிட்டா.

பனங்காய் சக்கரங்களில் இன்னும் யாரோ ஒருவன் இழுத்துச் செல்ல எவளோ சிறுமி ஓட்டைப் பல் தெரிய செல்லக் கூச்சல் இட்டபடி சரளைப் பாவாத சாலையில் அலைகிறாள். சரண்யாவுக்கு இரண்டாம் குழந்தை பிறந்திருக்கிறது. ரவி ரேடியோக்கடையில் இன்னும் தூங்காதே தம்பி தூங்காதே பாட்டோ தேவனின் கோவில் மூடிய நேரம் பாட்டோ கேட்டுக் கொண்டிருக்கிறது.

பெரியாற்றில் நீ குளித்து விட்டு வந்தபோது பூ கொடுத்து செபாஸ்டியனை அறைந்த அதே புங்க மர நிழலில் யாரோ கலவிக் கிடந்தார்கள் ஒருமுறை. பென்னி, செபாஸ்டியனை நீ மன்னித்திருக்கலாம். பிறகொரு நாள் முருகன் தியேட்டருக்கு பின்புறம் கஞ்சா அடித்து விழி செருகி கடந்தவனை போலீஸ்காரர்கள் இழுத்துப் போனதற்கு பிறகு யாரும் அவனை பார்க்கவில்லை என்கிறார்கள் .

நம் செல்வி மிஸ்ஸுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. சொல்ல மறந்து விடப் போகிறேன். நீ இன்னுமொருமுறை வந்தால் ஜெனிபரின் கல்லறைக்கு ஒருமுறை விளக்கேற்று. ஆம் யாருக்காக உன் காதலைத் தியாகம் செய்து விட்டு பிரிந்து போனாயோ அந்த ஜென்னிதான் இறந்து போனாள் நாம் நினைப்பது மாதிரியா எல்லாம் நடக்கிறது.

என்றென்றைக்குமான  காதலின் நேயத்துடன்

நேசமித்ரன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.