சங்கர் சுப்ரமணியன்

அன்புள்ள மணிமொழிக்கு

அன்பு மகளே எப்படியிருக்கிறாய் . இங்கு அனைவரும் நலம். எப்பொழுதும் எங்கள் ஞாபகங்களில் நீதான் நிறைந்து கொள்கிறாய். நீ என்னோடு பேசும் பொழுதெல்லாம் ஞாபகப்படுத்துகிறாய். என்னை பார்க்க வேண்டும், அல்லது அவசரமாக தகவல் அனுப்ப வேண்டும் என்றால் என் பேஸ்புக் பக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்று. என் கடிதம் உன்னுடைய நண்பர்கள் மத்தியில் இலேசான வெட்கத்தை ஏற்படுத்துவதாக கூறியிருந்தாய். ஆனால் மணிமொழி இப்படியாககடிதம் எழுதும் பொழுதுதான் என்னுடைய முழுமையான உணர்வுகள் வார்தைகளில் வெளிப்படுவதாகவும், மற்ற எந்தவிதமான தொடர்புகளும் முழுமையில்லாமல், இன்னமும் கொஞ்சம் அழகாக தெரியப்படுத்தி இருக்கலாமோஎன்ற ஆதங்கத்தில் முடிவதாகவே எனக்கு தோன்றுகிறது.

நேற்று நம் வீட்டுக்கு பொதுமக்கள்  மனதில்  நிறைந்து  இருக்கும் அண்ணன் கோபால்சாமி வந்திருந்தார். யாருக்கும் உதவுவதற்கு எந்த சமயத்திலும் தயாராக காத்திருப்பவர் அவர். என்னுடைய அப்பாவின் நெருங்கிய நண்பர் . நான்தான் என்னுடைய வாழ்க்கை தேடலில் கொஞ்சமாக தள்ளியிருந்துவிட்டேன் அவரிடமிருந்து. நம் வீடு தேடி மறுபடியுமாக அவர் வந்தது எனக்கு பெருமைதான். அவர் ஏதோ உடம்பு முடியாமல் நீ படிக்கும் ஆஸ்பத்திரியில் சேர்ந்திருந்ததும், அங்கு உன் அனுகுமுறையும் , சேவையும் கண்டு வியந்து போய் உன்னை விசாரித்து, நீ என் அப்பாவின் பேத்தி என தெரிந்ததும் இங்கே மறுபடியுமாக வந்திருந்தார். “ துளி கூட கலப்படமில்லாத அன்பினில் நிறைந்த அந்த மனம், வாழ்க்கையையும் சேவையையும் இருவேறாக பிரிக்காத அந்த பக்குவம். எவருடைய மனத்தையும் எப்பவுமே கஷ்டப்படுத்தாமல் வெளிவரும் வார்த்தை . உன் அப்பாவின் மாற்றமில்லாத பிரதியாகத்தான் அவளைப் பார்த்தேன். அத்தோடு அவளோடு ஒட்டிக்கோண்ட அறிவும், அவள் ஈடுபாடும்…” என  இன்னமும் பலவாறாக உன்னை நம் சொந்தங்களின் முன்னே பெருமையுடன் பேசிவிட்டு, படிப்பு முடிந்ததும் கண்டிப்பாக தெரியப்படுத்து . இனியாவது எங்களிடமிருந்து ஒதுங்காமல் வீட்டிற்கு வா … என்று கூறி, மறுக்காமல் மதிய உணவையும் நம் வீட்டிலேயே முடித்து விட்டு சென்றார். என் மனத்திற்குள் பிடிபடாத பெருமை இன்னமும் நிறைந்து வழிகிறது. என் தந்தையையும் உன்னையும் பற்றி நான் பெருமையாக கேட்கும் பொழுதெல்லாம் இப்படித்தான் வார்த்தைகளற்று என் மனம் சந்தோசத்தில் நிறைகிறது.

தாராள  மனமும்,  சமுதாய  அக்கறையும் கம்பீரமும் கொண்டவர் என் பணக்கார தந்தை. எங்கள் வீட்டு கதவு அதிக நேரம் உதவிகள் கேட்டே தட்டப்படும்.  மற்றவர்களுக்கு உதவி செய்வது தர்மம் அல்ல கடமை என்றே என்  தந்தை கூறுவார்.  எங்கள் கார் எங்கள் குடும்பத்தை சுமந்ததை விட, இக்கட்டமான தருணங்களில் சுற்றியருக்கும் கிராமமக்களை சுமந்து சென்றதே அதிகம். மருத்துவமனை இல்லாத சுற்றியுள்ள கிராமங்களின் மருத்துவ சேவைக்காக என்னை மருத்துவனாக்குவது என்பதில் உறுதியாக  இருந்தார். ஆனால்  தடுமாறிய காலசக்கரத்தில், எதிர்பாராத ஒரு அதிகாலை வேளையில், அம்மாவின் அலறல் சத்தம் கேட்டு ஒடிச்சென்று பார்த்தால், சிரித்தமுகத்துடன் என் தந்தை  இறந்து கிடந்தார் அவர் அறையில். அழுகுரல், கதறல் எல்லாம் எங்கோ தொலைதூரத்தில் கேட்கும் சத்தம் போல் இந்த உலகமே வெகுவேகமாக சுற்ற நான் மயங்கி விழுந்தேன். என்னால் தாங்கவே முடியாத தந்தையின் இழப்பை என்  மனமே முழுமையாக உணர்வதற்குள் சுயநலமிக்க மனிதர்களால் பணம் சொத்து என எல்லாம் நான் இழக்க… மிஞ்சியது இந்த வீடும் எனை சுற்றி பயமுறுத்தும் அழுகுரலும்தான். நான் வாழ்க்கையின் புரியாத தத்துவத்தில் செய்வதறியாது திகைத்து போனேன். என் அன்பு தந்தை, எனக்கு எல்லாமுமானவர் அன்று என்னோடு இல்லை என்று தெரிந்த தனிமையில், முட்டி கொண்டு  வந்தது பேரழுகை.

மனத்தை ஒருமுகப்படுத்தி, தந்தையின் ஆசியுடன், உத்வேகம், உறுதி என்ற இரு வார்த்தைகளில் என் மனதை இருத்தி உழைத்தேன். பெரும் வெற்றிகள் என் வசப்படவில்லை எனினும் நான் நம் ஊரில் மதிக்கதக்க வகையில் முன்னேறி வந்ததை விட நான்  மிகவும் மகிழ்ந்தது. என்னுடைய வற்புறுத்தல்கள் எதுவுமின்றி, நீ படிப்பில் எல்லாருக்கும் முன்நின்று என் தந்தையின் கனவை மறுபடியுமாக உறுதிப்படுத்தியதும்தான். நீதான் முதல் மார்க் என்று எனக்கு தெரிந்ததும், சந்தோசத்தில் மிதக்கும் என் மனம். இன்னமுமாக உன்னை சந்தோசப்படுத்தி பார்ப்பதெற்கென்றே,  “அந்த மீனா ரொம்ப மினுக்குவாளே, அவா ஒருத்திக்குதான் கணக்கு வருமுன்னு, அவளையும் விடவா… நீ கணக்கில் கூட வாங்கியிருக்கிறாய்…” என்று நான் கேட்டதும். “ஆமாம் அப்பா எனக்கே தெரியலை, நான் எப்படி அவளை முந்தினேன்னு … மேக்ஸ் மிஸ் ரொம்ப பாரட்டினாங்க தெரியுமா …” என்றபடி உன்முகம் சந்தோசத்தில் மிளிர… என் மனம் சந்தோசத்தின் எல்லை தொட்டு… கீழிறங்காமல் உயரே… உயரே.. பறப்பதாக தோன்றிய உணரச்சிகளில் மிதந்தபடியே நண்பர்கள், சொந்தங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தி பெருமை கொள்வேன்.

அப்படியாக பள்ளிப்படிப்பை முடித்து மாவட்டங்களில் முதலாவதாக நீ வந்து, உனக்கு மருத்துவப்படிப்புக்கு அழைப்பு வந்த அந்த தருணம் . எப்பொழுதும் நாம் கும்பிடும் அந்த ஆத்தா வண்டிமலைச்சியே, வானத்திலிருந்து இறங்கி வீடு வந்தது போல், மறுபடியுமாக என் தந்தை இவ்வுலகம் வந்து சிறுபிள்ளையான என்னை கைப்பிடித்து ரோட்டுக்கடைக்கு அழைத்து செல்வது போல், வசப்படாத சநதோசத்தில் மனம் துள்ளி குதித்தது. தெரிந்த அத்தனை ஜோசியரையும் பார்த்து நல்ல நாள் குறித்து நம் குலதெய்வத்திக்கு பூஜை வைத்து நாம் கிளம்பி போய், நீ கல்லூரியில் சேர்ந்ததும். மனமுழுவதும் நிரம்பிய சந்தோசத்தில் கண்களில் நிறைந்த கண்ணீரை யாருமறியாமல் துடைத்துக்கொண்டே இருந்தேன் அன்று  மட்டுமல்ல, அதை நான் எப்பொழுது  நினைத்தாலும்.

வாழ்க்கையில் அதேபோல் எப்பொழுதுமே என்னால் மறக்கமுடியாத  தருணங்கள்.  அந்த  கஷ்ட காலத்தில்  வியாபாரத்திற்காக  நான்  சுற்றியுள்ள கிராமத்திற்கு சென்றால்,  கிராமமே திரண்டு வந்து  என் முன்னால்  நின்று “ஐயா.. உங்க  அப்பா  எங்க  குலசாமி அய்யனாராகவே  வாழ்ந்துட்டு  போய்ட்டாக. அவுகளோட குடும்பமே கஷ்டப்படயில, நமக்கு கஞ்சி ஒரு கேடான்னுட்டு.. நாங்க இப்பல்லாம்  இராத்திரிக்கு  கஞ்சி  குடிக்காமலேயே  படுத்துருவோம். எங்க அய்யனார் சாமிகிட்ட போய் நீ மட்டும் இருக்கிறது நெசம்ன்னா..எங்க ஐயாவோட குடும்பம் நல்லாயிருக்கனும்னு. எல்லாருமே ஒருதரமாவது வேண்டாம வேலைக்கு போகமாட்டோம். உங்களுக்கு பணக்கஷ்டம் ஏதாவது இருந்தா சொல்லுக, தலைக்கு வரி போட்டு பிரிச்சு கொடுக்கிறோம்.  உங்கள அப்பா தனியா விட்டு போய்ட்டத நினைக்காதீக. நாங்கெல்லாம் உசுரோடதான் இருக்கோம்” அவர்கள்  என்னுடனே  வந்து  பணிவாக  கேட்பார்கள். இப்பொழுது வரை  எவ்வளவு பெரிய  மணிதர்கள் அவர்களின்  கிராமத்திற்கு  வந்தாலும்  எனக்கு  பிறகே  அவர்களுக்கு  மரியாதை  அளிப்பார்கள். அப்பொழுதெல்லாம்  என்  தந்தை  என்னில்  உயர்ந்து  என்  இதயம்  நிறைத்து  கொள்வார்.  அவர்கள்  குலசாமி  அய்யனாரோ, என் தந்தை  குலசாமியாக வந்தோதான், யாரிடமும் கைநீட்டி உதவி பெறாமலே என் வாழ்க்கை உயர்ந்தது என்பதாகவே  எனக்கு  எப்பொழுதும் தோன்றும்.

மணிமொழி… சமீபகாலமாகத்தான்  நான்  உன்னில்  தடுமாற்றங்களை  பார்க்கிறேன்.  அதுவும்  உன்னை  நான்  பார்க்க  வந்த சமயம்,  உன்  நண்பன்  என்று ஸ்டீபனை  அறிமுகப்படுத்திய பிறகு தான்.  ஸ்டீபன்  என்னிடமே  பேசினான். அவன்  பேச்சு முழுவதும், அளப்பில்லாத  உன்  திறமையை  அவன்  நாடு எப்படியாக கொண்டாடும்  என்பதாகவே  இருந்தது. எப்படியாவது  உன்னை  அவன்  நாட்டிற்கு  அழைத்து  செல்லும்  நோக்கிலே  அவன்  இருப்பதாகவே எனக்குபட்டது.  இப்பொழுதெல்லாம்  நான் சுற்றியுள்ள  எந்த  கிராமத்திற்கு  சென்றாலும்  அவர்கள் “ஐயா.. அம்மா அப்படியே உங்க அப்பா சாடை… அவுகளைப்  பார்த்தால்  எங்க அய்யனாரையே மறுபடியுமாக  நேர்ல பார்க்கிற  மாதிரியே  இருக்கு.  அம்மா  எப்போ  படிப்பு  முடிச்சு  வருவாக……” என்று என்னிடம்  கேட்கும் பொழுதெலலாம்  என்  நெஞ்சம்  நெகிழ்ந்து  என் தந்தையின்  நினைவுகளில்  என் இதயம்  நனைகிறது.   எனக்கென்று  என் தந்தை பதித்து  போன  கனவு   ஒன்றே ஒன்றுதான்,  இன்னமும்  இப்படியாக  அப்பழுக்கில்லாத  அன்பினில்  வாழும்  இந்த  மனிதர்களுக்கு  காவல் தெய்வம் அய்யனாராக  ஒரு சில மனிதர்கள்  வருவார்கள் என்பதுதான். நானும்  இந்த  ஐனங்களுடன்  சேர்ந்து  அப்படியான  காவல்  தெய்வமாகத்தான்  உன்னை பார்க்கிறோம், என் தந்தை மாதிரி…….!    ஆகவே  மணிமொழி…  உன்  தடுமாற்றங்களை  தள்ளி விட்டு  என்  அப்பாவைப்போல்  காவல்  தெய்வம் அய்யனாராக அவர்களுக்கு நீ  வரவே….. என் மனம்  ஆத்தா  வண்டிமலைச்சியை  வேண்டி  நிற்கும்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அன்புள்ள மணிமொழிக்கு

  1. சங்கர், அருமை! படித்ததில்  எனக்கு உங்கள் மடல் மிகவும் பிடித்தது.

  2. //மற்றவர்களுக்கு உதவி செய்வது தர்மம் அல்ல கடமை//

    அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *