சடுதியில் உருப்படியாக முடிச்சவிழ்க்க…[1]

இன்னம்பூரான்

unnamed

ஆளுமையில் இருப்பவர்கள், அரசு/தனியார்/கூட்டு யாதாயினும் சரி, அவிழ்க்குமுன் இறுக்கமாகவே முடிச்சுப் போட்டு விட்டு, தீர்வு காணப்போவதாக பாவ்லா காட்டும் காட்சிகள் கூடி வருகின்றன. பங்குச்சந்தை சகுனிகளுக்கு தீனி போடுவது நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த அற்பாசை பாமரர்கள். தரகு பிடிப்பது அரசு/தனியார்/கூட்டு ‘பெருந்தகைகள்’. சில மந்திர சொற்களை முதலில் புரிந்து கொள்வோம்.

CBI ~புலனாய்வுத்துறை [1]

SEBI ~பங்குச்சந்தை கண்ட்ரோலர் [2]

MCX-SX ~ ஆரூட பங்குச்சந்தை [3]

FTIL -ஜிக்னேஷ் ஷா நிறுவிய Financial Technologies India Ltd [4]

முடிச்சு 1: [2]வின் மாஜி தலைவர் சி.பி.பவே/ மாஜி அங்கத்தினர் கே.எம். அப்ரஹாம் மீதும், [1] குற்ற விசாரணை துவக்கியுள்ளது. குற்றம்: [3] க்கு 2008, 2009, 2010 ஆகிய வருடங்களில் ஆரூடாட்டம் ஆட அனுமதி அளித்தது. ஆரூடாட்டம் என்பது அன்றாட பங்குச்சந்தை வரத்துப்போக்கை விட மாபெரும் பகடையாட்டம். தங்கம், வெள்ளி, உளுந்து, கடுகு, புண்ணாக்கு, அன்னிய நாட்டு துட்டு எல்லாவற்றையும் பற்றி வருங்கால விலையை பற்றி ஆடும் ஆடு புலியாட்டம். எல்லா நாடுகளிலும் இது இருக்கிறது. நாணயமற்ற அரசு/தனியார்/கூட்டு ‘பெருந்தகைகள்’ உம்மையும் எம்மையும் நிர்க்கதியாக்க துணிவார்கள். ஆகவே, இந்த விசாரணையின் பயங்கர பின்னணியை நாம் அறிந்துகொள்வது நலன் பயக்கலாம். முதலில் இந்த விசாரணை மீதே குற்றம் சாட்டுபவர்கள் யார்? ~ திருவாளர்கள் வினோத் ராய்: தணிக்கை புகழ் சீஏஜி, என்.விட்டல்: கண்காணிப்பு புகழ் மாஜி தலைமை விஜிலன்ஸ் கமிஷனர். ஈ.ஏ.எஸ். சர்மா & ஜி.சுந்தரம்: வாய்மை புகழ் மாஜி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். அவர்கள் நால்வரும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கண்ணியத்துக்கு நற்சான்று அளிக்கிறார்கள். சச்சரவுக்கு உள்ளானாது [1] என்ரும், அதன் வாய்மை கேள்விக்குறி ஆகிவிட்டது என்கிறார், என்.விட்டல். குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிலைப்பாடுகள் யோக்கியமானதாக இருந்திருந்திருந்தால், அவர்களுக்குக் கவசம் தேவை என்கிறார், சர்மா. ஓய்வு பெறும் வரையில் காத்திருந்து, இறுதி நாளன்று அம்பு வீசுவதை கண்டித்தார், திரு. சுந்தரம்.

இது இவ்வாறு இருக்க, சில பின்னணிகள்:

மாசிலாமணி என்று கருதப்பட்ட திரு. அப்ரஹாம் 2011ல் அரசு/தனியார்/கூட்டு ‘பெருந்தகைகள்’ ஆடிய பேயாட்டம் பற்றி, குறிப்பாக நிதி அமைச்சரகத்திலிருந்து, பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார். [2]யை அவர்கள் பலவீனம் செய்ததை கூறினார். அது ‘யதாஸ்தானம்பிரதிஷ்டயாமி’ என்று நிதி அமைச்சரகத்தை சரணடைந்து தகனம் செய்யப்பட்டது. அக்காலத்து நிதி அமைச்சர் தற்காலம் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட ஜனாதிபதி. அந்த அதிகாரிகள் ராஷ்ட்ரபதி பவனில் பணி புரிவதால், அவர்களுக்குக் கவசம்.

சஹாராதிபதியின் ஊழலை கண்டித்து, அடக்கி வைத்து, அவரை தற்காலத்து இற்செறிப்புக்கு வழி வகுத்தவர் தான் திரு.அப்ரஹாம்.

நில்லா நிலக்கரி இலாக்கா காரியதரிசி திரு. பி.சொ.பரேக் அவர்களுக்கும் அதே அதோகதி, நிரூபணம் இல்லாமல். உச்ச நீதிமன்றம் அந்த வழக்கில் தற்கால தலைமை கண்காணிப்பு கமிஷனர் பேசாமடந்தை என்று கேலி செய்தது. சொல்ல நிறைய இருக்கிறது. ஆனால், வலிக்கறதே.

இந்தியா? உன் முடிச்சுகளின் நாமாவளி பகரவா? இல்லை, வாசகாதிபதிகள் மவுனம் சாதிப்பார்களா?

Image credit: http://img.designswan.com/2010/01/knot/10.jpg

[தொடரும்]

 இன்னம்பூரான்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க