Blog

  • தமிழரின் நனிநாகரிகம்

    -முனைவர் இராம. இராமமூர்த்தி

    முகப்புரை: உலகில் தோன்றிய பல்வேறு இனக்குழுக்களுள் முதன்முதலாக நாகரிகம் பெற்ற இனக் குழுக்கள் மிகச் சிலவே. அவ்வினக் குழுவினரை வரலாற்றாய்வாளர்கள் அவர்தம் மொழிப்பெயரான் சுட்டுவர். ஓரினத்தைக் குறிக்க மற்றெல்லாவற்றினும் மேம்பாடுடைய மொழியே முதன்மையானது. அத்தகைய மூத்த மொழிகளாக மட்டுமல்லாமல் செம்மொழிகளாகவும் விளங்கிய, சிறப்புடைய மொழிகளாகக் கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், பாரசீகம், சமற்கிருதம், தமிழ், சீனம் என்பவனவற்றை மொழியியற் பேரறிஞர் ச. அகத்தியலிங்கம் சுட்டுவார். இதனை எண்ணுங்கால் தமிழர்கள் உலகின் மூத்த குடிகள் மட்டுமல்லர்; நாகரிகத்தால் மேம்பட்டவருமாவர். இதனைக்,

    கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
    முன்தோன்றி மூத்த குடி.
    (புறப். வெண்பா மாலை. கரந்: 14) எனக் கூறுகின்றது புறப்பொருள் வெண்பா மாலை.

    அவ்வடையாளக் கூறுகளை அகம், புறமென இருபாற்படுத்தி இக்கட்டுரைக்கண் காணலாம். இக்கட்டுரை சுருங்கியதாகலின் ஒரு சில சான்றுகளே காட்டப்படுகின்றன. உலக மொழிகள் எல்லாம் எழுத்திற்கும், சொல்லிற்கும் மட்டுமே இலக்கணங்களைக் கண்டன. எம் தமிழ்மொழியோ இவற்றொடு வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்த பெருமையுடையது. அதுவே பொருளிலக்கணமாம். எழுத்து, சொல், பொருள் என மூன்று பகுதிக்கும் முழுமையாக இலக்கணம் உரைத்த நூல் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியமாகும்.

    அகத்திணை காட்டும் வாழ்வியற் கூறுகள்: தொல்காப்பியர் வாழ்வை அகம், புறமென இருபாற்படுத்துவர். அகமாவது, கைக்கிளை முதலாப் பெருந்திணை ஈறா எழுவகைப்படும். கைக்கிளை என்பது முதிராக் காதலெனவும், ஒருபாற் காதலெனவும், சிறுமை பற்றிய உறவெனவும் விளக்குவர்; பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். ஏனைய முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்பன அன்பின் ஐந்திணைகளாகும். இத்திணைப் பாகுபாடு நிலத்தின் அடிப்படையில் அமைந்தது; ஒழுக்க இயல்பினையும் விளக்குவது.

    இத்திணைகள் முதல், கரு, உரி என மூவகைப்படுத்தப்படுகின்றன. நிலமும் காலமும் முதற்பொருள்; தெய்வம், உணவு, மக்கள் முதலியன கருப்பொருள்; ஒழுக்கமே உரிப் பொருளாம். இவ்வொழுக்கத்தினைப் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என வகைப்படுத்துவர் இலக்கணிகள். ஒத்த தலைவனும், தலைவியும் ஒருங்கிணைந்து இன்புற வாழ்வது அகமாம். இவையெல்லாம் ஆரியர் முதலாய பிற தேயத்தார் அறியாதன.

    இக்காதல் வாழ்வைக் களவெனவும், கற்பெனவும் இருவகைக் கைகோளாகக் காட்டுவர். திருமணம் செய்துகொண்டு இணையராக வாழ்வதற்கு முன்னர்த் தலைவனும், தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு, காதலித்து வாழ்வது களவொழுக்கமெனப்படும் (களவு = மறைவான ஒழுக்கம்). ஊரும், தமருமறிய மணம் செய்துகொண்டு வாழ்வது கற்பொழுக்கம். களவின்றியும் மணம் கூடுதல் உண்டு. மணவிழாக்கள் (வதுவைச் சடங்குகள்) பின்னர்த் தோன்றியன.

    “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
    ஐயர் யாத்தனர் கரண மென்ப”
    என்பது தொல்காப்பியம்.

    திருமணச் சடங்குகள்: வதுவைச் சடங்குகள் பற்றிய விரிவான செய்திகள் தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் இடம்பெறவில்லை. எனினும், அகம் 86-ஆம் பாடலில் நல்லாவூர் கிழார், தமிழர் திருமணமுறையைச் சுட்டியுள்ளார். அது வருமாறு:

    …புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
    வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
    கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
    பெற்றோற் பெட்கும் பிணையை யாகென
    நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி

    பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
    வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்
    கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
    பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர….(அகம்: 86)

    இவ்வகப்பாடல் பண்டை நாளைத் தமிழர் திருமணமுறையை நன்கு விளக்கும்.

    இத்திருமணத்தில் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டுதலும், தீவலம் வருதலும், மங்கலநாண் அணிவித்தலுமாகிய வடவர் மணமுறை இடம்பெறவில்லை என்பது காண்க. இந்நிகழ்வுகள் முதன்முதலாகச் சிலம்பில்தான் முகங்காட்டுகின்றன. இனி, வேறுசில செய்திகளோடு அகப்பகுதியை நிறைவு செய்வோம்.

    சில வழக்கவொழுக்கங்கள்: இல்லுறை மகளிர் மாலைக் காலத்தில் தம் இல்லங்களில் நறுநெய்பெய்து அகல்விளக்கேற்றினர். இல்லுறை தெய்வங்களை நெல்லும் மலரும் தூவி வழிபட்டனர். போர் காரணமாகவோ, பிறவாற்றானோ தலைவனைப் பிரிந்த தலைவி பிரிவாற்றாமையான் வருந்தும்போது முதுபெண்டிர் அவளுக்கு இன்சொல்கூறி ஆற்றுவிப்பர். பண்டை நாளில் நெல், கழங்கு முதலியவற்றான் கட்டுவிச்சி குறி கூறுதலும், நற்சொல் (விரிச்சி) கேட்டலும் (இன்னே வருகுவர் தாயர்: முல்லைப் பாட்டு) இவைபோல்வன பிறவும் தமிழர் வாழ்வில் இடம்பெற்றுள்ளன.

    புறம் காட்டும் வாழ்வியற் கூறுகள்: காதலும் போருமே தமிழர்தம் அடையாளங்கள் என்பர். ஆயினும், புறமென்பது போரை மட்டும் குறிப்பதில்லை. அரசு, வாணிகம், கல்வி, கொடை, அறமென வேறுபல் செய்திகளையும் உள்ளடக்கியதே புறமெனப்படும். முதலில் தமிழர்தம் போர்ப் பண்பினைக் காண்போம்.

    puram.4போர் முறைகள்: போர் பற்றிய செய்திகளைத் தொல்காப்பியர் புறத்திணையியலில் ஏழு திணைகளாக வகுத்துக் கூறியுள்ளார். அவை, வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், காஞ்சி என்பன. தமிழர்களின் போர் முறை அறநெறிப்பாற்பட்டது. போரால் தீங்குகள் நேராமல் காக்கப்படவேண்டியவர்களது பட்டியலைப் புறம் விரிவாகக் கூறுகின்றது.

    ”ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
    பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
    தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
    பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
    எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென…”
    (புறம்: 9)

    அத்தொடு போர் முறையில் வடவாரியர்க்கும் எம் தமிழர்க்கும் மிகப் பெரிய வேறுபாடுள்ளது. வடவர்கள் போர் தொடங்கும் முன்னும், போரில் வெற்றிபெற வேண்டியும் பல்வேறு வேள்விகளைச் செய்து பலிதருவர். மேலும், இந்திரன், அக்னி, வருணன், பிரமன், விஷ்ணு போன்ற தேவர்களிடம் பகையை வெல்லப் பிரம்மாஸ்திரம், நாகாஸ்திரம் போன்ற போர்ப்படைகளை வேண்டிப் பெறுவர். (காண்க: இராமாயணம், மாபாரதம் போன்ற நூல்கள்). இம்முறை தமிழ் மறவர் அறியா ஒன்றாகும். நம் புறநூல்களில் தமிழர் போர் முறையை நன்கறியலாம். தமிழர்கள் தம் தோள்வலியையும், வாள்வலியையும் நம்பியே போர்மேற்சென்றனர்; வெற்றியும் பெற்றனர்.

    நடுகல் வழிபாடு: போரில் இறந்துபட்ட வீரர்கள் நினைவாகக் கல்நட்டு, Nadukalஅக்கல்லில் இறந்தாரின் பீடும் பெயரும் பொறிப்பர். அதற்குக் கள் முதலியவற்றை வைத்துப் படைத்து வழிபாடு செய்வர். இதனடிப்படையிலேயே சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கல்லெடுத்து நீர்ப்படுத்தி வழிபாடாற்றப் பத்தினிக்கோட்டம் அமைத்தான். இதனையே ஆசிரியர் தொல்காப்பியரும், “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல், சீர்த்த மரபில் பெரும்படை வாழ்த்தலென்று” (தொல்:பொருள்: புறத்: 5) விளங்கக் கூறுவார். இதுவே இற்றை நாளில் ’கல் நிறுத்துதல்’ எனும் ஈமச்சடங்காக மாறியுள்ளது.

    கல்விச் சிந்தனை: தமிழர், கற்றோரையும் புலவர் பெருமக்களையும் பெரிதும் போற்றியுள்ளனர் என்பதனைப் புறநானூறு, பதிற்றுப்பத்து போன்ற நூல்களான் அறியலாம். பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்” எனத் தொடங்கும் புறப்பாடலில் (எண்:183) கல்வியின் சிறப்பைப் பரக்கக் கூறியுள்ளான். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வஞ்சினங்கூறும் காலை, “புலவர் பாடாது வரைகவென் னிலவரை” (புறம்: 72) எனக் கூறியுள்ளதை எண்ணுக. புலவரைப் போற்றும் பண்பு நலனை இப்பாடல் நன்கு புலப்படுத்தும். மேலும், “சான்றோர் சான்றோர் பால ராப” என்ற அடியும், “செறுத்த செய்யுள் செய்செந் நாவின், வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்” என்ற அடிகளும் அந்நாளைய தமிழ் மாந்தர் கல்வியின்மாட்டு எத்துணை மதிப்புக் கொண்டிருந்தனர் என்பதைத் தெள்ளிதிற் புலனாக்கும்.

    கொடைப் பண்பு: பொதுவாகத் தமிழரும், குறிப்பாகத் தமிழ் மன்னர்களும் கொடைநலம் வாய்க்கப் பெற்றவர் என்பதனைச் சங்க நூல்கள் அனைத்தும் கூறுகின்றன. தமிழர்கள், கொடையை வாணிக நோக்கிலோ, பயன்கருதியோ செய்தாரிலர்.

    ”இம்மைச் செய்தன மறுமைக் காமெனும்
    அறவிலை வாணிகன் ஆஅய் அலன்…”   
    (புறம்: 134)

    ”எத்துணை யாயினும் ஈதல் நன்றென             avvai
    மறுமை நோக்கின்றோ அன்றே
    பிறர், வறுமை நோக்கின் றவன்கை வண்மையே.”
    (புறம்: 141)

    ”செல்வத்துப் பயனே ஈதல்” (புறம்: 186)

    ”ஈயென விரத்த லிழிந்தன் றதனெதிர்
    ஈயே னென்ற லதனினு மிழிந்தன்று
    கொள்ளெனக் கொடுத்த லுயர்ந்தன் றதனெதிர்
    கொள்ளே னென்ற லதனினு முயர்ந்தன்று” (புறம்: 204)

    மேலே காட்டிய புறப்பாட்டடிகள் தமிழர்தம் கொடைச் சிறப்பினை நன்கு புலப்படுத்தும்.

    பிற செய்திகள்: தமிழர்கள் புகழெனின் உயிரும் கொடுப்பர்; பழியெனின் உலகே பரிசிலாகக் கிட்டினும் அச்செயலைச் செய்யார். வலியரென வழிமொழியார்; மெலியரென மீக்கூறா இயல்பினர். மக்கட்பேற்றினைப் பெரிதும் மதிப்பவர். மன்னரேயாயினும் அவர் செய்யும் தவற்றினைக் கண்டிக்கும் திறமுடையார் தமிழர். நட்புச் செய்தாரைப் போற்றும் திறனர் நம்மனோர். இன்னோரன்ன இனியநற் பண்புகளான் தமிழர் வாழ்வு பொலிவு பெற்றது.

    முடிப்புரை: ஈண்டுக் காட்டப்பட்டவை தமிழர்தம் நற்பண்புகளில் மிகச் சிலவே. கூறாது விடப்பட்டனவே மிகுதியானவை. தமிழர்தம் நனிநாகரிகத்தைக் கண்டறிய நம் பண்டைத் தமிழ் நூல்கள் பெரிதும் துணை நிற்பன. அவற்றைக் கற்போம்; அவனியில் நீடுபுகழ் சேர்ப்போம்.

    வெல்க தமிழர் நாகரிகம்!

     

    Share
  • தேடித் தேடிக் காத்திருந்தேன்…

    -கவிஞர் காவிரிமைந்தன்

     

    arror dossவசனகர்த்தா – ஆரூர் தாஸ்

    நாயகி – ஒரு பெண்ணை அடிமையாக்கக்கூடிய இத்தனை பலம் ஒரு ஆணுக்கு எங்கிருந்து வந்தது?

    நாயகன் – ஒரு ஆணைக் கோழையாக்கக்கூடிய இவ்வளவு சக்தி ஒரு பெண்ணுக்கு எப்படி வந்தது?

    மேற்கண்ட வசனம் இப்பாடலின்முன் இடம்பெறுகிறது.  உணர்ச்சிமிகு நடிப்பின் உயரம் தொடுகிறார்கள் ஜெமினி கணேசன் அவர்களும் அபிநய சரஸ்வதி சரோஜா தேவியும்.

    gemini sarojadevi‘காதல் சரீரத்தில் இல்லை; ஆத்மாவில் இருக்கிறது’ என்ற தத்துத்தைச் சொன்னேன்; அது மக்களைச் சென்று அடையவில்லை. ஒரே ஒரு படத்தை இயக்கப் போனதால் 10 சிவாஜி படங்களையும், 10 எம்.ஜி.ஆர். படங்களையும், 10 ஏனைய படங்களையும் இழக்க நேரிட்டது என்கிறார் வசனகர்த்தா ஆரூர்தாஸ்.  இவர் இயக்கிய ஒரே படம் இதுதான்.

    ஒரு தேடலின் முடிவில் நாயகனைச் சரணடைகிறாள் நாயகி!  உணர்வின் உந்துதலால் அங்கே இரண்டு இதயங்கள் அன்பைப் பரிமாறி விம்மலும் விசும்பலும் என ஒன்றிணையும் கட்டத்தில் உருவாக்கப்பட்ட பாடல்! இயற்றியிருக்கிறார் கவிஞர்  கண்ணதாசன். ஏ.எல்.எஸ். தயாரிப்பில் 1967ல் வெளியான படம்.

    பெண் என்றால் பெண் திரைப்படத்திற்காக, ஜெமினி கணேசனுடன் சரோஜாதேவி  இணைந்து நடித்த பாடல்!

    மலருக்கெல்லாம் வாயிருந்தால் என் மன்னவன் புகழ்பாடும் என்று தற்குறிப்பேற்ற அணி கொண்டு வரிகளை வரைந்திருக்கிறார்.

    மேகம்போல ஆடையிட்டு சோகம்பாடு வீணைதனை
    பால்போல
    சேலையிட்டு பார்த்தாய் என் தெய்வமே!

    சோகத்தில் சொந்தம் கொண்டாடியிருந்த எனக்குச் சொர்க்கத்தைத் தந்த தலைவனே… என்று அவன் காலடியில் சுகம் காணுகிறாள் நாயகி.

    எண்ண மலர்களை எழுத்துவடிவில் தரும் திறமையுள்ள கவிஞர்களால் இப்படிச் சூழ்நிலைகளையும் பாடல் வரிகளாக்க முடியும் என்பதற்கு இப்பாடல் சாட்சி!  வருடிக் கொடுக்கும் இசை வார்த்தைகளை அலங்கரித்துத் தருகிறது. இனிய குரல்களால் நம் செவிகளைச் சென்றடைகிறார்கள் டி.எம்.எஸ். மற்றும் பி.சுசீலா.

    தேடித் தேடிக் காத்திருந்தேன்…
    தெய்வம் என்னைப் பார்க்கவில்லை…
    ஆதாரம் வேண்டியடைந்தேன்
    ஐயா
    உன் காலடியில்…

    மலருக்கெல்லாம் வாயிருந்தால் என் மன்னவன் புகழ்பாடும்
    மஞ்சளுடன்
    குங்குமமும் உன் மடியில் விளையாடும்
    மேகம்போல
    ஆடையிட்டுச் சோகம்பாடு வீணைதனை
    பால்போலச்
    சேலையிட்டு பார்த்தாய் என் தெய்வமே!

    ஊஞ்சலிலே நாயகனின் உருவம் விளையாட
    ஓர்விழியால்
    முகம்பார்த்து நாயகி இசைபாட
    வானமீன்கள்
    பூச்சொரிய வந்த தென்றல் தாலாட்ட
    ஆனந்தம்கோடி
    கண்டேன் ஐயா உன் மடியினில்…

    http://www.youtube.com/watch?v=rjL-3Rlc4fQ

     

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 18

    கே.ரவி

    ஷோபனாவும், விஜயாவும், அவர்கள் வகுப்புத் தோழியர் பலருடன், ஒரு பெரிய பெண்கள் பட்டாளமாகவே வந்து சிந்தனைக் கோட்டத்தில் சேர்ந்து கொண்டனர். முதலில், பெண்களைச் சேர்க்கக் கூடாது, புத்த மதம் நிலைகுலைந்ததே அதனால்தான் என்றெல்லாம் என் நண்பர்கள் சிலர் தடுத்தும், சிவமும் நானும் வாதாடி, அவர்களைச் சமாதானம் செய்து பெண்களைச் சிந்தனைக் கோட்டத்தில் சேர்த்துக் கொண்டோம். அதற்கு முன் வள்ளியக்கா என்ற ஆசிரியை மட்டுமே சிந்தனைக் கோட்டத்தின் ஒரே பெண் உறுப்பினர். ஏற்கனவே எதிர்ப்புகளுக்கு இடையில் பெண்களைச் சேர்த்துக் கொண்டதால், ஷோபனாவிடம் நான் ஒரு தொலைவை அனுசரித்தேன். என்னிடமே எனக்கு பயம்! ஆனால், சிந்தனைக் கோட்டத்துக்காக நான் ஒரு பாட்டெழுத, ஷோபனா அதைப் பாடினாள்:

    சிந்தனைக் கோட்டம் வாழ்க செந்தமிழ் மணமே சூழ்க

    சேர்ந்திருக்கும் யாவருமே பாச உணர்ச்சியில் ஆழ்க

    அதே போல் ஒரு புத்தாண்டுத் திருநாளன்றும் என் பாடல் ஒன்றை அவர் பாடினார்:

    புத்தாண்டுத் திருமகளே பூரிக்க வைப்பவளே

    புன்னகையே தூவி வரவேற்கின்றோமே

    புத்துணர்வு நல்க வரம் கேட்கின்றோமே

    இந்த நெருக்கம் ஒரே ஆண்டுதான் நீடித்தது. அந்தப் பெண்கள் கூட்டம் வேறு வேறு கல்லூரிகளில் சேர்ந்து விடவும், என்னையும், சிவத்தையும் தவிர மற்ற நண்பர்கள் வெவ்வேறு கல்லூரிகளுக்குப் போய் விடவும், சிந்தனைக் கோட்டமும் மெல்லச் செயலிழந்து போனது. நானும் ஷோபனாவும் பிறகு ஓராண்டுக் காலம் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புக் கிட்டவில்லை.

    1971-ஆம் ஆண்டு மீண்டும் ஷோபனா தன் தோழி மங்களசுந்தரியோடு ஏதோ நிமித்தமாக பலாத்தோப்பு வீட்டுக்கு வந்து என்னைச் சந்தித்தாள். நவராத்திரி நாளொன்றில், அவளும், மங்களசுந்தரியும் வந்து என் வீட்டில், “மலரின் மேவு திருவே” என்ற பாரதி பாடலைப் பாடும் போதுதான், என் உள்மனத்தின் ஓசையை நான் உற்றுக் கேட்டேன். ஷோபனா என் இதயத்துக்குள் நுழைந்து அமர்ந்து விட்டதை அந்தக் கணத்தில் நான் உணர்ந்தேன்.

    அவளும், மங்களசுந்தரியும் கேட்டுக் கொண்டபடியே நான் ‘மாணவரிஸம்’ என்ற மாத இதழ் தொடங்கினேன். அதன் ஆசியராக நானும், இணையாசிரியராக ஷோபனாவும் பொறுப்பேற்றுக் கொண்டோம்.

    நானும் மங்களசுந்தரியும் பேசிக் கொண்டே இருப்போம். ஆனால், ஷோபனா அதிகம் பேச மாட்டாள். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ! நாங்கள் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகச் சொல்லிக் கொண்டதே இல்லை. திடீரென்று ஒருநாள் அவளிடம், “நம் திருமணம் இன்னும் 3 வருடங்களுக்குப் பிறகுதான் என்று நான் சொன்னதும், அது பற்றி அவள் மறுப்பு எதுவும் சொல்லாமல் இருந்ததும், வெரி கேஷுவல், நோ ப்ரோபஸல்! 25 ஆண்டுகளுக்குப் பிறகு நான் எழுதிய ஒரு கவிதை வரி நெஞ்சில் எதிரொலிக்கிறது: “மனமும் மனமும் தழுவிக் கொள்ள மௌனம் போதாதா!”

    நானும் ஷோபனாவும் தினமும் சந்தித்துக் கொள்வதும், நண்பன் சசியும், தோழி மங்களசுந்தரியும் எப்போதும் எங்களுடன் சுற்றுவதும், ஏன் ஷோபனாவுக்குப் பிறந்தநாள் பரிசு வாங்க என் சகோதரி மாலினியே வந்து பரிசைத் தேர்வு செய்ய உதவியதும், ஒருநாள் ஷோபனா படித்த கல்லூரியில், அவளுடைய ஆங்கில இலக்கியத்துறை மாணவிகள் கோனே நீர்வீழ்ச்சிக்கு மறுநாள் சுற்றுலா போக இருப்பதைக் கேள்விப்பட்டு, அதிகாலை 7 மணிக்கெல்லாம் அவள் படித்து வந்த ராணி மேரிக் கல்லூரி வாசலுக்குக் காரில் சென்று அந்தக் கல்லூரிப் பேருந்தில் ஏறிவிட்ட ஷோபனாவை இறங்கச் சொல்லி, என் காரில் ஏற்றிக் கொண்டு மஹாபலிபுரத்துக்குக் கடத்திச் சென்றதும், மாலை அவள் வீட்டுக்குப் போன பிறகு கோனே ஃபால்ஸ் எப்படியிருந்தது என்று அவள் அம்மா கேட்ட கேள்விக்கு நேரில் பார்த்தது போல் பதில் சொல்லி அவள் கதையளந்ததும், அதெல்லாம் ஒரு பொற்காலம்!

    சென்னை வானொலியில் “எந்தன் காதலி” என்ற தலைப்பில் கவிதையே படித்து விட்டேன் என்றால் அதைவிட ஊருக்கெல்லாம் பறையறைந்து சொல்ல என்ன இருக்கிறது. அந்தக் கவிதை ஏட்டிலும் இல்லை, என் நினைவிலும் முழுமையாக இல்லை என்பதால், இப்படிப்பட்ட கவிதைகளையும் சேகரித்து வைத்திருக்கும் நண்பன் சு.ரவியிடமிருந்து அதைப் பெற்று இங்கே தருகிறேன்:

    எந்தன் காதலி எப்படி இருப்பாள்

    என்பதை இங்கே இயம்பிட வந்தேன்

    நடனத் தினவை நடையிற் காட்டி

    நாடகப் பார்வையில் நளினமும் பூட்டி

    மாடத்தில் உலவும் மாருதம் போலென்

    இதயத் துள்ளே இலங்கும் தேவதை

    மதனன் விடுத்த மலர்க்கணை இன்பப்

    பதத்தில் இறக்கிய பாகு பழகும்

    விதத்துக் கேயொரு விளக்கம் ஆவாள்

    புன்னகை என்றொரு புதுப்பெய ராலே

    ஜலத ரங்கத்தின் சப்தம் எழுப்பும்

    அலங்காரக் கோயில் அவள்நுதல் நல்ல

    மங்கலத் தாமரை மலர்ந்த தடாகம்

    எங்குசென் றாலும் எந்தன் நெஞ்சின்

    நிழல்போல் வருவாள் நித்திலக் குவியல்

    தழலிடை இருப்பது போலத் தோன்றும்

    சிரித்த வாயால் சிணுங்கி மகிழ்வாள்

    கோலம் இழைத்த குளிர்நில வேபோல்

    நாணம் படர்ந்த கன்னக் கனிகள்

    தளிர்க்கரத் தாளின் தனிச்சிறப் பாகும்

    அவளுடல் அசைவுகள் அருங்கலை விளக்கம்

    சுவையூட்டும் அந்தச் சுந்தரச் சிற்பம்

    அடிக்கடி நெற்றியில் விழும்குழல் ஒதுக்கலை

    எப்படிப் புகல்வது அதுவொரு புதுக்கலை

    விழியின் சுழற்சி விந்தை முயற்சி

    அழியா அழகின் அனுபவக் கவர்ச்சி

    நேரிழை யாளிவள் நெளிகுழல் போல

    நெருங்கிய உறவும் நீடிய வாழ்வும்

    எம்மிரு வர்க்கும் என்றும் இருக்கும்

    இவ்வித மாக இருக்கும் அந்தச்

    செவ்விதழ்க் கொடியுடன் சேர்ந்து

    இன்பக் கனவில் எனைமறப் பேனே

    அந்தக் காலக் கட்டத்தில் எத்தனைக் காதல் கவிதைகள் ஊற்றெடுத்து வந்தன! ஒருநாள் வருகிறேன் என்று சொல்லி விட்டு அவள் வரமுடியாமற் போனதும் எழுதிய கவிதையின் சில அடிகள் மட்டும், அங்கொன்றும் இங்கொன்றுமாக, இன்னும் நினைவில் இருக்கின்றன:

    வடமிட் டிழுத்தால் வராத தேருண்டா

    புடமிட்ட பொன்னே புரிந்து கொள்ளடி

    . . . . . . .

    நீவர வேண்டாம் நான்வரு கின்றேன்

    நேரம் கடந்தால் நேற்றைய கதைதான்

    முதல்நாள் கடற்கரையில் சந்தித்துக் கொண்டோம். கடற்கரையை விட்டால் இளம் காதலர்களுக்குப் புகலிடம் வேறு உண்டோ? மறுநாள், அந்த நிகழ்வுகளை நினைத்துக் கொண்டேன்.

    சோகத்தில் இழைகின்ற இசையைப் போல

    சொப்பனத்தில் இழைத்திட்ட பொழுதைப் போல

    மேகத்தில் தோன்றுகிற வண்ணம் போல

    மேல்வண்ணம் இல்லாத ஏகாந் தத்தில்

    மோகத்தீ கொளுத்தியதில் மூழ்கி மூழ்கி

    முத்தமழை பொழிகின்ற இருவர் காம

    யாகத்தில் உணர்கின்ற இன்ப மெல்லாம்

    யாருக்கும் புரியாத விந்தை யன்றோ

     

    ஆடையெலாம் அர்த்தத்தை இழந்து விட்ட

    ஆனந்த நிலையினிலே ஆழ்ந்தி ருந்து

    வாடையினால் வாட்டமுடி யாத வண்ணம்

    வடவத்தீ போல்வெம்மை விளையச் செய்து

    பூடகமாய் இருந்தசில புதிர்க ளெல்லாம்

    புரிந்துவிட்ட நினைப்பினிலே புல்ல ரித்து

    கூடலிலே தமிழ்தானா வளரும் இன்பம்

    கூடத்தான் வளருமென்று கூறிக் கொண்டு

     

    நாடகமாய் நாமிருந்த நிலைமை தன்னை

    நள்ளிரவில் நினைத்தாயா நடுங்கி னாயா

    சூடுவதற் கரியதொரு மலரே வெய்யில்

    சுடுவதற்கும் அரிதான அல்லி நீதான்

    பாடுவதற் கொருராகம் வேண்டும் இன்பம்

    பரிமளிக்க நீயெனக்கு வேண்டும் பக்தர்

    தேடுகின்ற தெய்வங்கள் நமக்கு வேண்டாம்

    தெளிவான காதல்தான் நமது தெய்வம்

    போட்டி, பலத்த போட்டி! ஆம், நான் விவேகானந்தா கல்லூரியில் தத்துவம் இளங்கலை மாணவனாக இருந்த போது நிறைய படித்தேன். ப்ளேடோ முதல் கார்ல் மார்க்ஸ் வரை, ப்ரும்ம சூத்திரங்கள் முதல் ராதாகிருஷ்ணன் வரை எல்லா அறிவு மூலங்களையும் படித்துப் பயில வேண்டுமென்ற தாகம் ஒரு புறம், காதல் வயப்பட்ட வாலிபத்தின் தாக்கம் ஒருபுறம், சமுதாயத்தைச் சீர்திருத்தி நல்லுலகம் காணத் துடித்த நோக்கம் ஒருபுறம், இப்படிப்பட்ட போட்டிகளுக்கு நடுவில் சிக்கிக் கொண்டேன். ஒரு கவிதையில் இந்தப் போட்டியை இப்படித்தான் குறிப்பிட்டிருந்தேன்.

    கம்பன் வந்து கதவை இடிக்கிறான்

    வாத்ஸ்யா யனனோ வம்புக் கிழுக்கிறான்

    அசந்தர்ப்ப மாக அவசரப் பட்டு

    வசந்தம் வந்தெனை வரவேற் கின்றது

    மனத்தில் உண்மையான ஆனந்தம் குதூகலமாகப் பொங்கிப் பெருகும் தருணங்கள் எவர் வாழ்விலும் அடிக்கடி நிகழ்வதில்லை. எப்பொழுதேனும், சில கணங்களே அப்படி அமைகின்றன. அந்தக் கணங்களைச் சிதைக்கவோ, ஆனந்த அனுபவங்களைத் தடுக்கவோ வேறு யாருக்கும் உரிமை கிடையாது. காதற் கணங்கள் கடவுளின் பரிசுகள். நல்ல வேளை எங்கள் இருவர் வீட்டிலுமே எங்கள் காதலுக்குத் துளிக்கூட எதிர்ப்பு எழவில்லை. அது எங்கள் மேல் பெரியவர்கள் வைத்திருந்த நம்பிக்கையின் வெளிப்பாடு.

    1973-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் நாள், எங்கள் பால்ய விவாகம், எனக்கு 20, அவளுக்கு 19, சென்னை, ஹேமமாலினி திருமண மண்டபத்தில், திருமதி எம்.எல்.வி. கச்சேரியுடன், அன்றைய தமிழ்நாடு ஆளுநர் உட்பட, அத்தனைப் பெரியவர்களும் வந்து வாழ்த்த, மிகச்சிறப்பாக நடந்தேறியது.

    ravi

    என் திருமண வரவேற்பில், என் அத்தனை நண்பர்களுக்கும் நடுவே சிவம் மட்டும் இல்லை. ஏன் என்று எனக்கும் புரியவில்லை. வரவேற்பு முடியும் தருணம், சிவம் வேகமாக மண்டபத்துக்குள் நுழைகிறான். அவன் கையில் ஒரு பெரிய கதவு, இல்லை, கதவு அளவில் கண்ணாடி பிரேம் போட்ட வாழ்த்து மடல். “இதுக்குத்தான் இவ்வளவு நாழியாகி விட்டது” என்கிறான். அதில் இருந்த ஒரு கவிதை, அவ்வளவு கூட்ட நெருக்கடியிலும், ஷோபனாவைப் போலவே என் நெஞ்சில் நுழைந்து நீங்கா இடம் பெற்று விட்டது:

    ஒருநாள் கண்டாய் மறுநாள் நின்றாய்

    உயிரே அவர்தான் என்கின்றாய் – அவர்

    வருநாள் தானே திருநாள் என்று

    மனமே எனையேன் தின்கின்றாய்

    சிவத்தின் கவிதை ரசனையை மிகவும் ரசித்தேன். அந்தக் கவிதையை எழுதியவர், “இரவு பகல் மாலை எழுதுவதே வேலை” என்று கவிதையில் பிரகடனம் செய்த டாக்டர் மின்னூர் சீனிவாசன்.

    25 ஆண்டுகளுக்குப் பிறகு, ஷோபனா எழுதிய கண்ணன் பாடல்கள், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், வாணி ஜெயராமும் பாட, ரெஹானின் பின்னணி இசையோடு பதிவாகி, “கிரிதாரி” என்ற இசைப்பேழையாகத் தயாரானது. அதை வாணி மஹாலில் வெளியிட்டுப் பேசும்போது, எங்கள் திருமண வைபவத்தை மறவாமல் நினைவு கூர்ந்து, அதில் நாங்களும், எங்கள் தோழர், தோழியர் கூட்டமுமாக எப்படி அது ஒரு கோலாகலமான இளமைத் திருவிழாவாக இருந்தது என்று குறிப்பிட்டு, அதைத் தாம் கண்டு களித்ததைப் பகிர்ந்து கொண்டார் கவியரசி செளந்தரா கைலாசம் அம்மையார்.

    (தொடரும்)

    Share
  • திருமால் திருப்புகழ் (136)

    கிரேசி மோகன்

    Santhanagopalam: Glory of the Supreme person  - Keshav
    Santhanagopalam: Glory of the Supreme person – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)
    ——————————————————-

    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ————————————————–

    Krishna for today - Rajagopala. Oil on canvas. - Keshav
    Krishna for today – Rajagopala. Oil on canvas. – Keshav

    அரிமுகம் கண்டேன், அறிமுகம் கொண்டேன்,
    பரிமுகப் பெம்மான் பெயரால், -திருமகள்,
    செய்யாள் மடியிருக்க, அய்யா அயக்ரீவா,
    கையால் அனுக்கிரஹம் காட்டு….(332)

    கீழ்கொவள வீடில், குடியேறப் போகின்ற,
    ஆழ்கல்விக்(கு) ஈசா அயக்ரீவா, -கூழ்கவலை,
    போக்கதனைப் போக்க, பிராட்டியுடன் ஏளினோய்,
    காப்பெனக்கு உந்தன் குளம்பு….(333)

    ஆனவரை பெய்த, அடைமழையில் ஆயர்கள்,
    காணவரை ஏந்திய கண்ணனிடம், -நாணமுற,
    வானவர்கோன் தோற்று, வளைந்தான் சமாதான,
    வானவில்லாய் அம்புவிக்கு விட்டு….(334)

    அற்புதம் செய்ய, அவதரித்த ஆய்குலத்தோன்,
    பொற்பதம் போற்றிப் பணிந்திட, -கற்பூரம்,
    மூச்சில் மணத்திடும், மூடக் கழுதைக்கும்,
    ஆச்சரியம் கண்ணன் அருள்….(335)

    மீண்டும் உரலிழுத்து, மாமருதம் சாய்த்தரவத்,
    தாண்டவம் ஆடி, தயிருண்டு, -வேண்டிய,
    ராதையை காதலித்து, போதனையாய் கீதையை,
    யாதவா வந்திங்(கு) எழுது….(336)

    திரும்ப சிறையில், பிறந்து சிரித்து,
    விரும்பி வ்ரஜமண் விரைந்து, -கறந்த,
    பசுக்கள் பால்மடி, பச்சிளங் கன்று
    ருசிக்கும்முன் உண்ணகண்ணா ரா…(337)

    ———————————————————————————————————

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/2013_04_01_archive.html

     

    Share
  • ஆகிராவின் பிறந்தநாள் வாழ்த்து!!

     

    அன்பிலே பூக்கின்ற எந்த உள்ளமும்
    நன்மையே செய்திடும் நானிலத்தில்!
    அவ்வழி நடந்திடும் ஆகிராவும்..
    அரும்பல செயல்கள் புரிகின்றார்!

    மழலைகள் புகழ்பாட இணையதளம்
    மகிழ்வோடு நடத்துகின்ற நண்பரிவர்!
    தினமொரு பாடல் எனும்பகுதி..
    இவரிடம் சேர்த்தது எனைத்தானே!!

    தமிழிசை மேல்கொண்ட காதலினால்
    அமுதெனப் பரிமாறி நிற்கின்றார்!
    திரையிசை அறிஞர்கள் வரிசையிலும்
    சரியான பார்வையை செலுத்துகின்றார்!!

    கோவையில் வாழ்கின்ற கொங்குநாட்டார்..
    கொள்கையில் வழுவாமல் நடைபோட்டார்!
    தேவைகள் பெரிதெனக் கொள்ளாமல்.. பிறர்
    வாழ்விற்கும் அர்த்தங்கள் தருகின்றார்!!

    இலக்கணம் எல்லாம் தெரிந்தாலும்
    தலைக்கணம் இல்லாம் வாழுகின்றார்!
    தலைமுறை நலனைக் கருத்தில்கொண்டு
    தக்கதோர் செயல்புரிய இணைகின்றார்!!

    இவருக்கு அகவை அறுபத்து ஒன்றாம்!
    இல்லை இல்லை எண்கள் மாற்றி வைப்போம்!
    பதினாறு வயது இளைஞர்போல்.. பகலிரவு
    உழைக்கின்றார் பாருங்கள்!!

    பிறந்தநாள் தனதையும் பொருளாக்கி..
    சிறந்தநாள் அதையே சீர்படுத்த..
    தமிழ்மகள் கலைமகள் அருள்கேட்டு..
    தாள்பணிகின்ற திருமகன் வாழ்க!! வாழ்க!!

    அன்புடன்
    காவிரிமைந்தன்
    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்
    பம்மல், சென்னை 600 075.

    Share
  • திருமால் திருப்புகழ் (135)

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)
    ———————————————————
    ”கண்ணன் வெண்பாக்கள்’’
    —————————————————

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    வந்தனம் கேசவா, நந்த குமாரனே,
    உன்தன மங்கை உடனிருக்க, -வந்துநம்,
    வீட்டில் எழுந்தருளி, ஊட்டியதை உண்டுநான்
    காட்டியக் கீக்கிடத்தில் குந்து….(326)

    ஏகமே ஏராள, போகமே எண்ணாதோர் ,
    தாகமே, தீர்க்கும்மால் மேகமே, -நாகம்மேல்,
    தூங்கும் விழிப்புணர்வே, தேங்கும் எனக்குள்ளே,
    ஓங்கிப் புலனளந்து ஓட்டு….(327)

    சொல்லாகத் தோன்றி, சுவைபொருளாய் ஊன்றியிக்,
    கல்லாத மூடனுக்குக் கற்பித்தாய், -எல்லாமும்,
    ஆனாலும் தேறாத, நானாளும் சிந்தையை,
    மீனாளின் அண்ணனே மாற்று….(328)

    உய்யும் அறிவின்றி, பையப் பதுங்கினேன்,
    கையைப் பிடித்திழுத்துக் காட்டினாய், -அய்யா,
    திருவிண் நகராளும், தாத்தன் உனதருளால்,
    பெருவிண் நகராளப் பேணு….(329)

    கனவினில் ஈன்று, நனவினில் காத்து,
    உணவாய் உலகேழை உண்டு, -பணஅரவில்,
    பள்ளிகொண்ட ரங்கா, பதுமைகளாய் எங்களை,
    எள்ளிநகை ஆடுவது ஏன்….(330)

    ஊது வேய்ங்குழல், ஒய்யாரக் கொண்டையதன்,
    மீது மயிற்பீலி மருங்கில்,- பீதகம்,
    காது விரித்திளங், கன்றுகள் சூழ்ந்திட,
    போது பரம்பொருளின் போக்கு”….(331)

    ————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/2012_06_01_archive.html

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஜூலை 7, 2014

    சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர்

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு  திரு. செண்பக ஜெகதீசன்  அவர்கள்

    Shenbaga Jagatheesan
    இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்  சுசீந்திரத்தில் உள்ள  காசித்திருமடம், ஆசிரமத்தின் மேலாளராகப் பணியாற்றி வரும் திரு. செண்பக ஜெகதீசன்.  சென்றவாரம் வல்லமை வாசகர்களுடன் இவர் பகிரிந்து கொண்ட  “தடை தகர்த்து…”  என்ற தன்னம்பிக்கையூட்டும் கவிதைக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

    தற்பொழுது நிர்வகிக்கும் காசித்திருமடப் பணிக்கும் முன்னர் நெல்லையப்பர் திருக்கோவிலின் நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றிய இவர் தன்னைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது,  “இரைதேடுவதுடன் இறையும் தேடும் அரசுப்பணி”யாற்றுவதாகக் குறிப்பிடுகிறார்.  இதுவரை ஆறு கவிதை நூல்களை வெளியிட்டுள்ள இவர் சற்றேறக்குறைய எட்டு ஆண்டுகளாகப் பற்பல மின்னிதழ்களில் எழுதி வருகிறார்.  அவற்றில் சில:  வல்லமை, வார்ப்பு, பதிவுகள், முத்துக்கமலம், திண்ணை, நந்தலாலா.

    இவர் கவிதைகளின் கருப்பொருளாகக் கொண்டவை; இயற்கை, தத்துவம், எழுச்சியூட்டும் தன்னம்பிக்கை போன்றவையாகும்.   கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக வல்லமை வாசகர்களுடன் தனது கவிதைகளை பகிர்ந்து வருகிறார் இக்கவிஞர்.  இவருடைய இவ்வாரக் கவிதை, வாழ்வில் ஏற்படும் சோதனைகளைக் கண்டு துவளுதல் கூடாது, அவற்றை எதிர் கொண்டாலே அவை வழங்கும் படிப்பினை மூலம் திறமை  மிக்கவராக மாறலாம் என்ற தன்னம்பிக்கையூட்டும் கருத்தினை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.

    தடை தகர்த்து…

    சீறிப் பாயும் கடலலைதான் – மிகச்                                    
         சிறந்த மாலுமி உருவாக்கும்,
           மாறிடும் வானிலை  காட்டிடுமே – திறமை           
         மிகுந்ததோர் ஓட்டியை வானூர்தியில்,
    கீறிடும் கல்நிறை சாலையேதான்- சுட்டிக்
         காட்டிடும் சிறந்த ஓட்டுநரை,
    ஏறிடும் இடர்களை எதிர்கொள்வோர் – வாழ்வில்
         ஏற்றம் என்றும் பெறுவாரே…!

    இவர் எழுதி வல்லமையில் வெளிவந்த மேலும் சில கவிதைகள் கீழே…..

    கிடக்கட்டும் குப்பைகள்…

    குறைசொல்ல ஒரு
    கூட்டம் உள்ளவரை,
    நிறைய வருகின்றன
    நீ வெற்றிபெற சந்தர்ப்பங்கள்..

    உறங்கவிடமாட்டார்கள்
    உன்னை,
    உறங்கிடவும் மாட்டார்கள்-
    உன்மீது
    பொறாமை கொண்டவர்கள்..

    உரிய சமயமிது,
    உணர்ந்துகொள்
    உழைத்திடு
    உயர்ந்திடு..

    உதாசீனப்படுத்திடு
    குறைசொல்லும் அந்தக்
    குப்பைகளை…!

    __________________________________________

    கலங்காதே…

    கலங்குவதில்லை மலர்,
    காய்ந்து
    கீழே விழுவதற்கு…

    காரணம் இதுதான்-
    அதன்
    கனி உதிர்க்கும்
    விதை முளைத்து
    மீண்டும்
    மரமாகும் நம்பிக்கை…!

    கலங்கி நிற்கிறாயே
    மனிதா,
    மரணத்தைத் தினம்
    மனதில் எண்ணி…!

    __________________________________________

    ரேகை

    போடும் ஒரு நெல்லுக்காக
    கிளி எடுத்த
    பொய்யான சீட்டை வைத்துப்
    புளுகுவதை நம்பாமல்,
    கைரேகைக்
    கதைகளையும் நம்பாமல்,
    கைரேகை தேயக்
    கடும் உழைப்பு உழைத்தால்
    உன்ரேகை (அடையாளம்) தெரியும்
    உயர்வாக…!

    __________________________________________

    இக்கவிதைகளுக்கும் மேலாக செண்பக ஜெகதீசன் கையெடுக்கும் மற்றொரு கவிதை முயற்சியை இதுவரை பிறர் கையாண்டு பார்த்ததில்லை.  இவை கவிதைகள் வடிப்பதில் முற்றிலும் ஒரு புதிய முயற்சி.  வியக்க வைக்கும் கோணமென்றும் கூறலாம்.

    இன்றுவரை திருக்குறளுக்கு எண்ணிலடங்கா விளக்க உரைகள் தோன்றிய வண்ணம் உள்ளது.  செண்பக ஜெகதீசன் தனது “குறளின் கதிர்களாய்…” கவிதைத் தொடர் வரிசையில்  திருக்குறள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து,  அதன் விளக்கத்தை பல்வேறு கவிதை பாணிகளில் வடிப்பது  இவர் கவிபுனையும் திறமையைக் காட்டுகிறது.  எடுத்துக்காட்டாக, “பீலிபெய் சாகாடும் ” என்ற குறளை இவர் புதுக்கவிதை, குறும்பா, மரபுக் கவிதை, புதுப்பா, கிராமிய பாணி என பல்வேறு கவிதை பாணிகளில் வழங்குவதைக் கீழே காணலாம்….

    குறளின் கதிர்களாய்…

    பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
    சால மிகுத்துப் பெயின்…!
    -திருக்குறள்-475(வலியறிதல்)

    புதுக்கவிதையில்…

     மலரினும் மெல்லிதென்று
    மயிலிறகைச் சேர்த்து
    வண்டியில்
    மனம்போல ஏற்றிவைத்தால்,
    முறிந்துவிடும் அச்சாணி..
    மிஞ்சாது எதுவும்
    அளவை
    மீறினால் எதிலும்…!

    குறும்பாவாய்…

    குடைசாய்க்கும் வண்டியை, பாரம்
    கூடினால் மயிலிறகும்..
    கதையிதுதான் வாழ்க்கை…!

    மரபுக் கவிதையில்…

    வண்டியில் ஏற்றும் பாரமது
    வலிமை யில்லா மென்பொருளாம்
    கொண்டல் கண்டால் ஆடிநிற்கும்
    கோல மயிலின் இறகெனிலும்,
    உண்டே யதற்கும் அளவதுவும்,
    உயர்ந்தால் வண்டி உடைந்திடுமே,
    கண்டிடு வாழ்வில் கதையிதுவே
    கொண்டிடு அளவதைக் கருத்தினிலே…!

    புதுப்பாவில்…

    மெல்லிய பொருள்தான்
    மயிலிறகு,
    மிதமிஞ்சி ஏற்றினால் வண்டியில்,
    அதுவும் உடைந்து
    மிஞ்சுவதில்லை எதுவுமே..

    நல்லதுக்கு
    எதிர்மறைப் பலன்தான்
    எதுவும் அளவுக்கு மிஞ்சினாலே…!

    கிராமிய பாணியில்…

    ஏலேலோ ஐலசா
    ஏத்து பாரம் ஐலசா..
    அளவாப் பாரம் ஐலசா
    அளந்து ஏத்து ஐலசா..
    மயிலுப் பீலி ஆனாலும்
    மிஞ்சா வண்டி ஒடையுமே..
    மனுசங் கதயும் இதுதானே
    மனசில கொள்ளு இதத்தானே..
    ஏலேலோ ஐலசா
    ஏத்து பாரம் ஐலசா…!

    சிந்தனையைக் கவரும் கவிதைகளை வழங்கி, கவிதை இலக்கிய மரபில் புதுமை புரிந்து வல்லமை வாசகர்களை மகிழ்விக்கும்   செண்பக ஜெகதீசன்  அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    முகநூலில் செண்பக ஜெகதீசன்: https://www.facebook.com/jagatheesa.perumal.3?ref=tn_tnmn

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • குறளின் கதிர்களாய்…(33)

    செண்பக ஜெகதீசன்…

     

    hair-care_24_07_2013

    தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்

    நிலையி னிழிந்தக் கடை.

          -திருக்குறள் -964(மானம்)

     

    புதுக் கவிதையில்…

     

    தலையில் இருக்கும்வரைதான்

    தலைமுடிக்கு மதிப்பு,

    தரையில் வீழ்ந்தால்

    தாழ்ந்திடும் குப்பையாய்..

     

    மண்ணில் மனிதரும் தாழ்ந்தால்

    உயர்நிலையிலிருந்து,

    உதிர்ந்த

    மயிர்போலாவர் மதிப்பில்…!

     

    குறும்பாவில்…

     

    மண்ணில் வீழ்ந்த மயிர்போலாவான்

    மனிதன்,

    தன்நிலை தாழ்ந்திடும் போதில்…!

     

     மரபுக் கவிதையில்…

     

    எண்ணெய் தேய்த்துத் தலைசீவி

         எத்தனை அழகாய் வைத்தாலும்,

    மண்ணில் வீழ்ந்தால் மயிரதற்கு

         மதிப்பு எதுவும் கிடையாதே,

    எண்ணிப் பார்த்திடு இதையேதான்-

         ஏற்றம் வாழ்வில் பெற்றோரும்

    கண்ணியம் தவறித் தாழ்ந்திட்டால்,

         கருதப் படுவரிம் மயிர்போலே…!

     

    லிமரைக்கூ…

     

    முடியின் மதிப்பது இருக்கும்வரை தலையில்,

    மதிப்பிதுதான் மனிதனுக்கும்

    மேலிருந்து கீழே தாழ்துவிட்டால் நிலையில்…!

     

    கிராமிய பாணியில்…

     

    தலமுடி நல்ல தலமுடி

    தலயில அலபோல் தலமுடி,

    எண்ண தேச்சிக் குளிச்சி

    எடுத்துச் சீவுன தலமுடி..

     

    அது

    கீழ உழுந்தா கேப்பாரில்ல

    குனிஞ்சி அதயே பாப்பாரில்ல,

    தலயில இருந்தா மதிப்புத்தான்

    தரையில உழுந்தா குப்பதான்..

     

    மனுசங் கதயும் இப்புடித்தான்,

    நல்ல நெலயில இருந்தவுனும்

    நெலம மாறித் தாந்திட்டா

    எல்லா மதிப்பும் போயிருமே

    உழுந்த முடிகத ஆவிடுமே…!

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 126

    மலர் சபா

     

    மதுரைக் காண்டம் – 02. வேட்டுவ வரி

    ஐயையின் கோட்டத்தில் ஒரு பக்கத்திலே கோவலன் முதலிய மூவரும் இளைப்பாறி இருத்தல்alar

    பலவித நறுமணங்களுடன் முடிக்கப்பட்ட
    கூந்தலையுடைய கண்ணகி,
    கடுங்கதிர் வீசிய சூரிய வெப்பத்தால் உண்டான
    துன்பத்தால் வருந்தினாள்.
    அவள்தம் சிறு பாதங்கள் சிவந்து தளர்ந்ததால்
    அடிக்கடி மூச்சு வாங்கினாள்.
    அத்துன்பத்தைத் தணிக்கும் வண்ணம்
    ஐயைக் கோட்டத்தின் ஒரு புறம்
    யாரும் பார்க்கா வண்ணம்
    சென்று அமர்ந்தனர் அம்மூவரும்.

    சாலினி ஆவேசம் கொண்டு மறக்குடி மக்களுக்கு அறிவுறுத்தல்

    அவர்கள் அமர்ந்த இடத்தின் அருகே
    எயினர்கள் வாழும் பகுதியிருந்தது.
    அம்பினை வழங்குகின்ற வில்லை ஏந்திய,
    பகைவராய் இருந்தாலும்
    வில்லை வழங்குகின்ற கொடைத்தன்மையுடைய,
    பெரிய கையையுடைய
    மறவர் குடியில் பிறந்த உரிமை உடையதால்
    கொற்றவைக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் முகமாய்
    ‘சாலினி’ எனும் பெண்ணொருத்தி,
    தன் மீது தெய்வம் வந்து ஏறப்பெற்றவளாய்,
    காண்பவர் எல்லாம் வியக்கும் வண்ணம்
    உடம்பின் முடிகள் எல்லாம் சிலிர்த்து நிற்க,
    கைகளை உயர்த்தி ஆடியவளாய்
    முள்வேலியால் சூழப்பட்ட அந்த ஊரின் நடுவே
    மறவர்கள் கூடியுண்ணும் ஊர் மன்றத்தில்
    அடியெடுத்து வைத்து
    மிகுந்த ஆவேசத்துடன் ஆடத் தொடங்கினாள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 01 – 19
    *http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html*
    படத்துக்கு நன்றி

    http://dosa365.wordpress.com/2012/10/23/76/kannagi-kovalan-kavunthi-adigal/

    Share
  • மாஇசை கொடுத்து நின்றார்

     
    எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் 

    dr-m-balamuralikrishna-thiruvananthapuram-january-2008
    சுந்தரத் தெலுங்கென்று
    சுவைபடக் கூறிநின்றான்
    செந்தமிழ்ப் புலவனவன்
    சிறப்பான பாரதியும்

    பாரதியின் கூற்றறிந்த
    பாலமுரளி கிருஷ்ணாவும்
    பாட்டாலே எம்மையெலாம்
    பதப்படுத்தி வைத்தாரே

    தெலுங்கோடு பிறந்தாலும்
    தீராத காதலுடன்
    பலமொழிகள் தான்கற்று
    பாட்டிசைத்து நின்றாரே

    இசையோடு தானிணைந்து
    ஈடில்லா முயற்சிசெய்து
    தனியான இசைகண்டு
    தரணிதனில் உயர்ந்தாரே

    புதுராகம் பலகண்டார்
    புத்துணர்வு கொண்டெழுந்தார்
    அதிமேதை என்றவரை
    அனைவருமே போற்றுகின்றார்

    மற்றவரைப் பாராது
    மனத்தோடு ஒன்றிநின்று
    வெற்றிச் சிரிப்புடனே
    விதம்விதமாய்ப் பாடுகிறார்

    பொட்டுவைத்துச் சபையேறி
    புன்சிரிப்புத் தவழஅவர்
    தொட்டுநின்ற ராகமெலாம்
    சுவைததும்பி நிற்கிறதே

    மிருதங்கம் வயலீனை
    விட்டுவிடின் பாட்டில்லை
    என்றெண்ணும் எண்ணத்தை
    இல்லையென ஆக்கியவர்

    தாளத்தை மட்டுமவர்
    தன்கையில் எடுத்தபடி
    சளைக்காமல் கச்சேரி
    சபையதிரச் செய்தாரே

    பிரமித்து நின்றார்கள்
    பெருங்கலைஞ்ஞர் எல்லாரும்
    ஒருமித்த குரலெடுத்து
    உயர்ந்ததெனப் பகர்ந்தார்

    தேசியவிருதை வென்றார்
    திசையெலாம் புகழநின்றார்
    மாஇசை கொடுத்துநின்றார்
    மதுரமாய்க் குரலினாலே

    பாரததத்தின் விருதையெல்லாம்
    பாட்டாலே பெற்றுநின்றார்
    பாரதிரப் பாடிநின்று
    பரிமளிக்கச் செய்கின்றார்

    பாலமுரளி கிருஷ்ணா
    பலவிதமாய்ப் பாடுவதால்
    பாரிலுள்ளோர் மனமெல்லாம்
    பக்குவமாய் நிறைந்துவிட்டார்

    காலமுள்ள வரைக்குமவர்
    கானமழை பொழிந்திடுவார்
    கந்தருவக் குரலோனை
    கண்மணியாய்க் காத்திடுவோம்

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 17

    கே.ரவி

    ஒருநாள், 1969 என்று நினைக்கிறேன், சிவம் வீட்டுக்குப் பரபரப்பாகப் போகிறேன். நம்ம சுகி சிவம்தான்!

    ‘உடனே என்னுடன் வா. பி.எஸ்.ஹைஸ்கூலுக்குப் போகிறோம்” என்று சிவத்தை என் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு மயிலை பி.எஸ்.உயர்நிலைப் பள்ளி வளாகத்துக்குப் போகிறேன். அங்கே, . . . !

    அப்போது சிவம், அமிர்தலிங்கம் (அதாங்க, வசந்தப்பிரியன்), சீனி சுந்தரராஜன், சசீந்திரநாதன் என்ற சசி, வள்ளி, நான் ஆகிய ஆறு பேரும் மற்ற சில நண்பர்களோடு சேர்ந்து சிந்தனைக் கோட்டம் என்ற இலக்கிய அமைப்பை நிறுவி, நடத்தி வந்தோம். (இத்தொடரின் 12-ஆவது பகுதியில் உள்ள புகைப்படத்தில் அமிர்தலிங்கம் தவிர மற்ற ஐவரையும் காணலாம். அதில் சிவமும், நானும் இருக்கிறோம் என்று நாங்கள் சத்தியம் செய்தால் கூட நீங்கள் நம்புவது கடினம்தான்!). முதன்முதலாக பாரதியாரின் வரலாற்றை முழுநூலாக எழுதி “பாரதி லீலை” என்ற பெயரில் வெளியிட்ட சக்திதாசன் சுப்பிரமணியத்தின் ஒரே மகன் சசி.

    அந்தச் சமயத்தில் அமராராகியிருந்த டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார் பெயரில் “சிதம்பரநாதனார் சிந்தனைக் கோட்டம்” என்றுதான் முதலில் தொடங்கினோம். அவர் அமிர்தலிங்கத்தின் தாய்மாமன். சில நாட்களுக்குப் பிறகு, அது பொதுப்படையான நிறுவனமாக இருக்க வேண்டும் என்று கருதிச் ‘சிந்தனைக் கோட்டம்’ என்றே தொடர்ந்து நடத்தி வந்தோம். அப்படியோர் இலக்கிய அமைப்பை நிறுவி நடத்த வேண்டும் என்று எங்களைத் தூண்டியவர் எங்கள் தமிழாசான் சிதம்பரம் சுவாமிநாதன்.

    “செந்தமிழ்த் தோட்டம் சிந்தனைக் கோட்டம் சேவையில் நாட்டம் செலுத்துவோர் கூட்டம்” என்று தனக்கே உரிய அடுக்குமொழி வசனத்தில் அந்த மன்றத்தின் கொள்கையை அவரே வரையறை செய்து தந்திருந்தார்.

    விஸ்வம்
    விஸ்வம்

    நான் ஏழாம் வகுப்பில்தான் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். என் தந்தை விஸ்வம்தான் சேர்த்து விட்டார். அவருக்கு என் சரியான பிறந்த தேதி கூட நினைவில்லை. தவறாக, 09-01-1952 என்று தந்து விட்டார், ஓராண்டும் நாலு நாட்களும் கூடுதலாக! அவர் வாழ்நாள் முழுதும் ஆசிரியராகவே பணியாற்றியவர். ஆசிரியர் தொழில், நாடகங்கள் எழுதி நடிப்பது இந்த இரண்டும்தான் அவருடைய வாழ்க்கையே. இவை தவிரக் குடும்ப விவகாரங்களில் எப்பொழுதுமே அதிக ஈடுபாடு செலுத்த மாட்டார். ஆனால் தாம் சிரமப்பட்டு ஈட்டும் பணத்தையெல்லாம் குடும்பத்துக்கே தந்து விடுவார். அவருக்கு நாடகம் தவிர வேறு கெட்ட வழக்கங்கள் கிடையாது,(நாடகக்காரர்கள் மன்னிக்கவும்). நாடகமே வாழ்க்கை என்று இருந்த அவருக்கு வாழ்க்கையில் நாடகமாடத் தெரியவில்லை. மற்றவர்களைப் புகழும் வழக்கம் மட்டும் அவருக்கு இருந்திருந்தால் அவர் சினிமாவில் பெரிய நடிகராகவோ, இயக்குநராகவோ வந்திருக்கக் கூடும். மற்றவர்களைப் புகழ்வதில்லை என்பதை அவர் ஒரு விரதமாகவே பயின்று வந்தார்.

    திருச்சியில், 1940-50 களில் லேடி விஸ்வம் என்றால் எல்லாருக்கும் தெரியும். நாடக

    லேடி விஸ்வம்
    லேடி விஸ்வம்

    மேடைகளில் பெண் பாத்திரத்திலேயே அவர் அதிகம் நடித்திருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பின்னாளில் இருந்த பழனியாண்டி, வீனஸ் ரத்னம் அய்யர் (இயக்குநர் மணிரத்னத்தின் தந்தை) மற்றும் சிலரோடு விஸ்வம் திருச்சியில் விடாமல் நாடகம் நடத்தி வந்ததும், அவர்கள் எல்லாரும் தினமும் நாடக ஒத்திகை முடிந்து இரவு 11 மணிக்கு மேல் எங்கள் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டியவுடன் என் அம்மா, அதாவது என் வளர்ப்புத் தாயார் (என் வளர்ப்புத் தந்தை கல்யாணராமனின் இரண்டாவது மனைவி ‘அலங்காரம்’) அவர்களுக்கெல்லாம் உணவு பரிமாற, அவர்கள் உண்டு விட்டுத் திண்ணையில் உறங்கிய கதையும் நூறுமுறை என் வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

    அவருடைய நாடகக் குழுவில் பயின்ற ஒரு நடிகர் கடைசிவரை அவரை ‘வாத்தியார்’ என்றே அழைத்து வந்தார். 1972-ல் ஒருநாள், ஏ.வி.எம். ஸ்டூடியோவில் அந்த நடிகரும், இயக்குநர் ச்ரீதரும் அமர்ந்திருந்த போது நான் அங்கே சென்று என்னைக் கல்யாணராமனின் மகன் என்று அந்த நடிகரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். எங்கள் குடும்ப விவகாரம் முழுதும் தெரிந்து வைத்திருந்த அந்த நடிகர், ” வாத்தியார் செளக்கியமா” என்று கேட்டார். நான் திகைத்த போது, “உன் தந்தை விஸ்வம் சாரைத்தான் குறிப்பிடுகிறேன்” என்று விளக்கினார், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

    சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் நான் சேரும் போது எனக்குத் தமிழ் சரியாக எழுத வராது. முதலில் மந்தைவெளியில் உள்ள ‘பான்செகர்ஸ்’ என்ற கான்வெண்ட் பள்ளியிலும், பிறகு செயிண்ட் பீட்டர்ஸ் என்ற ஆங்கிலோ இந்தியப் பள்ளியிலும் 6-ஆம் வகுப்பு வரை பயின்றதால், தமிழ்ப் பயிற்சி இல்லாமல் இருந்தேன். ஆனால், செயிண்ட் பீட்டர்ஸில் ஜேம்ஸ் மிஸ் என்ற ஆசிரியை ‘மான்விழி’ என்றொரு நாடகம் போட்டபோது, எங்கள் வகுப்பில் எல்லாரையும் தமிழ் படிக்கச் சொல்லிக் கேட்டு, மான்விழி என்ற கதாநாயகியாக நடிக்க என்னைத் தேர்வு செய்தார். ‘உன் தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது’ என்று பாராட்டினார். அதுதான் நான் தமிழ் ஆர்வம் கொள்ள என் நெஞ்சில் தூவப்பட்ட முதல் விதை. அப்போது நான் சுமார் பத்து வயதுச் சிறுவன். சிறுவர் அரங்கில் (பின்னாள் கலைவாணர் அரங்கம்) நடந்த குழந்தைகள் தினவிழா நாடகப் போட்டியில் ‘மான்விழி’ நாடகத்தில் நடித்து நான் முதற் பரிசு பெற்றதும் என் தந்தை விஸ்வம் பூரித்துப் போய்விட்டார், தனக்கு ஒரு கலைவாரிசு வந்து விட்டது என்று.

    ஏழாம் வகுப்பில் சாந்தோம் பள்ளியின் ஆங்கில மீடியத்தில் நான் சேர்ந்த புதிதில், சிதம்பரம் சுவாமிநாதன்தான் எங்கள் தமிழாசிரியர். நான் விடைத்தாளில் கோழி என்பதைக் ‘கேழி’ என்று எழுதியிருந்ததைப் பார்த்துக் கோபத்தோடு அதைக் கசக்கி என் முகத்தின் மீது விட்டெறிந்தார். மற்ற மாணவர்கள் முன்னால் எனக்கு அவமானமாக இருந்தது. ஏழாம் வகுப்பு முடிந்ததும், கோடை விடுமுறையில் நான் தினமும் சென்னை, மவுண்ட் ரோட்டில் இருந்த மத்திய நூலகத்தில் 3, 4 மணிநேரம் செலவிட்டுத் தமிழ் இலக்கிய நூல்களை எடுத்துப் படித்தேன். வாய்விட்டுப் படித்தேன், நூலகப் பணியாளர் ‘உஸ்’ என்று அடக்கும் வரை. நளவெண்பா, கலிங்கத்துப் பரணி, பாரதிதாசன் பாடல்கள், சிலப்பதிகாரம் என்று என் தமிழ் இலக்கியப் பயிற்சி வளர்ந்தது. கூடவே நன்னூல் இலக்கணத்தையும் பயின்றேன். இரண்டு மாதங்களில் எப்படி நான் அவ்வளவு படித்தேன்? இப்பொழுது நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு வெறி என் பிடறியைப் பற்றி உந்தியதை உணர முடிந்தது.

    8-ஆம் வகுப்புப் படிக்கும் போது, சிவம், சீனி சுந்தரராஜன், சசி, போன்ற நண்பர்களுக்குக் கலிங்கத்துப் பரணியின் கடைத்திறப்பு அதிகாரத்தைப் படித்துக் காட்டி விளக்கிப் பாடம் எடுத்தது இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளது. அந்த அதிகாரத்தில் உள்ள சிருங்கார ரசப் பாடல்கள் அந்த வயதில் எங்களை ஈர்த்ததில் வியப்பொன்றும் இல்லையே!

    மதுர மானமொழி பதற வாள்விழி சிவப்ப வாயிதழ் வெளுப்பவே

    அதர பானமது பான மாகவறி வழியும் மாதர்கடை திறமினோ

    — — —

    வருவார் கொழுநர் எனத்திறந்தும்

    வாரார் கொழுநர் என அடைத்தும்

    திருகும் குடுமி விடியளவும்

    தேயும் கபாடம் திறமினோ

    இப்படிப் பல பாடல்கள் பல்கி வரும் கடைத்திறப்பு அதிகாரம் முழுவதையும், படித்தோம்.

    நானும் கவிதை எழுதத் தொடங்கினேன். என் வகுப்பு நண்பர்கள் சேர்ந்து, சீனி சுந்தரராஜன் கைவண்ணத்தில், ‘தமிழ்ச்சங்கு’ என்ற கையெழுத்துப் பத்திரிகை தொடங்கினோம். மூன்று, நான்கு இதழ்கள் வந்தன. அதில்தான், என் முதல் கவிதை வெளியானது. அதன் தொடக்க வரிகள் மட்டும் இன்னும் என் நினைவில் இருக்கின்றன:

    அகத்திய முனிவரின் அகத்தினில் உதித்தவள்

    என்ன பொருத்தம் பார்த்தீர்களா?

    “தழல்புரை சுடர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான்” என்று கவிச்சக்கரவர்த்தி போற்றிய அகத்திய மாமுனிவரின் அருளோடு என் கவிதைப் பயணம் தொடங்கியது. அந்தக் காலக் கட்டத்தில் எழுதிய கவிதைகள் நிறைய தொலைந்தும், மறந்தும் போய்விட்டன. ஒன்றிரண்டு மட்டும் நினைவுப் பேழையில் நீங்கா இடம் கொண்டன:

    ஒளிதந் தெரியும் விளக்கின் திரியும்

    கரியா கத்தான் திரியும் – நெஞ்சக்

    களிப்பை நல்கும் வெடியின் திரியும்

    கரியா கிப்போய் மறையும் – ஆனால்

    விளக்கில் உள்ள திரியின் நல்ல

    சேவை உலகில் நிறையும் – இந்த

    விளக்கம் தன்னை ஆய்ந்து பார்த்தால்

    விந்தை வாழ்வு புரியும்

    என்றும் வாழும் விளக்கின் திரிகள்

    ஏசு புத்தர் காந்தி

    பொன்றும் வெடியின் திரியே மற்ற

    பொல்லா உயிர்கள் எல்லாம் – இந்த

    உண்மை தன்னை உணர்ந்து நல்ல

    விளக்கின் திரிபோல் நாமே

    வண்மை கொண்டு மனிதராக

    வாழ்வோம் வாழ்விப் போமே

    முதலில் சொன்னேனே, 1969-ல் ஒருநாள் சிவத்தை அழைத்துக் கொண்டு பி.எஸ்.உயர்நிலைப் பள்ளி வளாகத்துக்குப் போனேன் என்று; அதற்குக் கொஞ்ச நாட்களுக்கு முன், நான் சைக்கிளில் போய்க்கொண்டிருக்கும் போது, பள்ளி மாணவி ஒருத்தி நடுத்தெருவில் என்னை வழிமறித்தாள். அவள் சொன்னாள்: “என் பெயர் விஜயா. செயிண்ட் ஆண்டனீஸ் உயர்நிலைப் பள்ளி மாணவி. நானும் என் வகுப்புத் தோழிகளும் தமிழில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளோம். நீங்கள் ஏதோ மன்றம் நடத்துவதாகக் கேள்விப் பட்டோம். அதில் சேர விரும்புகிறோம்.”

    “பார்க்கலாம்” என்று சொல்லி விட்டு நான் நகர்ந்து விட்டேன். அவள் மீண்டும் என்னைச் சந்தித்தாள். “நானும் என் தோழியும்shoba1 ஒரு பேச்சுப் போட்டியில் கலந்து கொள்கிறோம். நீங்கள் வந்து பார்க்கலாமே” என்று அழைத்தாள். சரியென்றேன்.

    விஜயா சொன்ன நாளும் வந்தது.

    ஒரே வினாடியில் காலச் சுவடியின் பக்கங்களை வேகமாக ஒரு நொடிக்குள் சுமார் முப்பது ஆண்டுகள் பின்னோக்கிப் புரட்டிப் பார்த்துவிட்டு, மீண்டும் 1969-ஆம் ஆண்டுக்கே மீண்டுவிட்டேன். பி.எஸ்.உயர்நிலைப் பள்ளி அரங்கம்; என் அருகில் சிவம். அரங்கத்தில் விஜயா குறிப்பிட்ட அவள் தோழி, குருநானக் தேவரைப் பற்றி உரையாற்றிக் கொண்டிருக்கிறாள். அவள் குரலொலி எனக்குக் கேட்கவில்லை, முகவொளி நெஞ்சை நிறைத்திருப்பதால். பிறகு சிவத்துக்கும், எனக்கும் அந்தத் தோழியை விஜயா அறிமுகம் செய்து வைக்கிறாள்: “இவள் பெயர் ஷோபனா!”

    அந்தக் காட்சியின் மின்னல் அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை, நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆகியும்!

    (தொடரும்)

    Share
  • காதல் நாற்பது – 11: துன்ப மயமான இசை !

    –சி. ஜெயபாரதன்.

     

    elizabeth-browning1-150x150

    காதல் நாற்பது 11: துன்ப மயமான இசை !
    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    காதல் வெட்க மறியா தென்றால்
    தகுதி இல்லையென நான்
    ஒதுக்கப்பட மாட்டேன் !
    கன்னங்கள் வெளுப்பது உனது
    கண்ணுக்குத் தெரிகிறது !
    காதல் கனத்த நெஞ்சின் பளுவைத்
    தாங்க முடியாமல் நடுங்கி
    முறிந்து போயின
    முழங் கால்கள் !

    ஒரு காலத்தில் பெருமை தந்து,
    களைத்து விட்ட இந்த
    கவித்துவ வாழ்க்கை எப்படியோ
    கால மேட்டில் ஏறிடும் !
    காட்டு வெளியே
    கோலக் குயில் ஒலிக்கும்
    துன்ப மயமான குழலிசையைக்
    கேளாம லிருப்பது அபூர்வம் !

    எதற்காக நான் இப்படி
    உழல வேண்டும் ?
    அந்தோ என் இனியவனே !
    உந்தன் ஒப்பிலா அறிவுக்கும்,
    உயர்ந்த அரங்குக்கும்,
    நிகரில்லை நான் என்பது
    வெளிப்படை !

    நானுனை இன்னும் நேசிப்பதால்
    நளின முடன் பலிவாங்கும்
    அரிய என் காதலே
    உரிமை ஆக்கிடும் உன்னை !
    அந்தக் காதல் உணர்விலே
    இன்னும் நான் வாழ்வது
    வீண்தான் !
    உனக்கு வெகுமதி வழங்க
    என்னை அர்ப்பணம் செய்வேன்
    நின்னெழில் முகத்துக்கு  !

    ********************

    Poem -11
    Sonnets from the Potuguese
    By: Elizabeth Browing

    And therefore if to love can be desert,
    I am not all unworthy. Cheeks as pale
    As these you see, and trembling knees that fail
    To bear the burden of a heavy heart,–
    This weary minstrel-life that once was girt
    To climb Aornus, and can scarce avail
    To pipe now ‘gainst the valley nightingale
    A melancholy music,–why advert
    To these things? O Beloved, it is plain
    I am not of thy worth nor for thy place!
    And yet, because I love thee, I obtain
    From that same love this vindicating grace,
    To live on still in love, and yet in vain,–
    To bless thee, yet renounce thee to thy face.

    **********

    Share
  • நிரந்தரமானவன் அழிவதில்லை !

    — எஸ் வி வேணுகோபாலன்.

    கண்ணதாசன்

    நிரந்தரமானவன் அழிவதில்லை !

     

    0 R‘முத்து என இட்டபெயர் முத்தாகவிலை என்று முறையீடு செய்யவிலையோ…’ என்ற கவியரசு வரிகளை ஆனைக்கட்டி ரவிதான் எனக்குச் சொன்னது.  முத்தையா என்பதுதான் கண்ணதாசனின் இயற்பெயர். வாலியைப் போலவே கண்ணதாசன் குறித்த சிலாகிப்பும் என் அண்ணனது கல்லூரித் தோழன் ரவி மூலம் தான் தொற்றிக் கொண்டது. பாடலைச் சும்மா கேட்டுக் கொண்டிருந்த காலம்போய் அதன் நுட்பத்தில் உள்ளத்தைப் பறிகொடுக்கத் தொடங்கிய காலம் பள்ளிக்கூடப் படிப்பு நேரம்.  எத்தனை கொடுத்து வைத்த இளமைப் பருவம்! தொலைக்காட்சிக் கருவிகளைக் காலம் கடந்து கண்டுபிடித்த விஞ்ஞானிகள், அவற்றை நிதானமாகத் தமிழகத்திற்குக் கொண்டு சேர்த்தவர்கள் யாவரும் நீடூழி வாழட்டும். வானொலியில் பாடலை ஒலிபரப்பிக் கொண்டிருப்போர் என்றென்றும் அமரத்துவம் எய்தட்டும்.

    கண்ணதாசனைக் கேட்கவும், படிக்கவும் ஒரே நேரத்தில் சாத்தியமாயிற்று. ஒன்று நூலகத்தில் சிக்கிய அவரது கவிதைத் தொகுப்புகள். மற்றொன்று அப்போது வாராவாரம் குமுதம் இதழில் வந்து கொண்டிருந்த அவரது கவிதைகள்.

    ‘பூவினைக் காடுகள் புன்னகைக் கோடுகள் பொன்னிறப் புள்ளிமான் கூட்டம், காவியப் பேடுகள் கண்மயர்க் கூடுகள் காதலே என்மனத் தோட்டம், நாவினால் மென்மொழி நாட்டுவாள் பைங்கிளி நாடுவேன் நாடுவேன் நானே, பாவியேன் நெஞ்சினைப் பற்றுமோர் பெண்மையைப் பார்க்கிலேன் கண்ணபிரானே’ என்ற அவரது வரிகளில் துள்ளிய ஆசிரிய விருத்தம் எல்லா வருத்தங்களையும் தீர்க்கும் ரசமாக என்னுள் இறங்கிய வேட்கைப் பருவமது.

    கண்ணதாசன் கவிதைத் தொகுதிகளை நான் பள்ளிக்கூடப் படிப்பு மேற்கொண்டிருந்த காஞ்சிபுரத்திலும், எனது பெற்றோர் இருந்த வேலூரிலும் நூலகங்களில் தேடித் தேடி வாசித்துக் கொண்டிருப்பேன்.  அவரது அரசியல் உணர்விலும், இறை நம்பிக்கையிலும் ஏற்பட்ட மாற்றங்களின் பிரதிபலிப்புகள் அவரது தொகுதிகளில் பயணம் செய்பவர்களுக்குப் பளிச்சென்று தெரிந்துவிடும்.

    கம்பனில் ஆழ்ந்த ரசனையை அவர் வளர்த்துக் கொண்டதை, அர்த்தமுள்ள இந்து மதம் என்ற தலைப்பில் அவர் பேசி வந்த சொற்பொழிவுகளில் நேரே கேட்கும்போது கிறங்கிப் போகிற அளவு அந்த சந்தங்களை சொல்லிக் காட்டுவார். தனது எந்தப் பாடலை எந்தத் தனிப் பாடலின் தாக்கத்தில், எந்தக் கம்பன் கவியின் வேகத்தில் எழுதினேன் என்று விவித்பாரதி அலைவரிசையில் சிறப்பு தேன்கிண்ணம் பகுதியில் அவரே எடுத்துச் சொல்வதை எழுபதுகளின் பிற்பகுதியில் வானொலி நேயர்களாக இருந்தோர் அறிந்திருப்பர்.

    அகலிகை சாப விமோசனம் நிகழ்ந்த பரவசத்தில், விசுவாமித்திரர் ராமனைப் புகழ்ந்து, தாடகையை எதிர்த்த போரில் உன் கை வண்ணம் கண்டேன், இங்கே கல்லை மிதித்து அதைப் பெண்ணாக மாற்றியதில் உன் கால் வண்ணம் கண்டேன் என்று சொல்வார். ‘பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்’ என்பது கண்ணதாசன் எழுதிய (பாசம்) திரைப்படப் பாடல் வரிகள்!

    சூர்ப்பணகை வருகையைக் கொஞ்சிக் கொஞ்சி கம்பன் வருணித்த, ‘பஞ்சியொளிர் விஞ்சுகுளிர்’ என்ற அருமையான செய்யுள், ‘வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்’ என்று முடிவதைத் தான், ‘வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்..’ என்ற கண்ணதாசனின் அற்புதப் பாடலாக சி எஸ் ஜெயராமன் அவர்களது தனித்துவக் குரலில் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருப்பது.

    ‘கண்வழி சொரியும் உப்பு கடவுளால் வருவதல்ல, மண் வழி வரலாம் பெற்ற மகன் வழி வரலாம் சேர்ந்த பெண் வழி வரலாம் செய்த பிழை வழி வரலாம் ஆனால் நண்பர்கள் வழியிலேதான் நான் கண்ட கண்ணீர் உப்பு’ என்பது அவரது கவிதை! இதே கருத்து, ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா என்ற அவரது திரைப் பாடலிலும் வரும் (அவன்தான் மனிதன்).

    உருக்கமான கவிதைக்கு அவரிடம் குறைவு இருக்க இயலுமா, என்ன! உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையைப் பார்த்து அவர் எழுதிய ஒரு கவிதை மிகவும் பரவலாக அறியப்பட்டது: ‘ அவனை எழுப்பாதீர் அப்படியே தூங்கட்டும் ஆழ்ந்த துயிலினிலே அமைதியினைக் காணட்டும்’ என்று தொடங்கும் அந்தக் கவிதையை அவர் எழுதிய பிறகு, காய்ச்சல் கண்டிருந்த அவரது உறவுக்காரர் ஒருவரின் அந்தக் குழந்தை மரித்துவிட்டது. அதிர்ந்து போனார் கவிஞர். பின்னர், ‘அறம்பாடி விட்டேனோ அறியேன் யான் சிறுகுருவி திறம் பாடமாட்டாமல் செத்த கதை பாடுகிறேன்’ என்று எழுதினார்.

    திருமகள் என்ற இதழில்  வெளியான ‘ காலை குளித்தெழுந்து கருஞ்சாந்துப் பொட்டுமிட்டு’ என்று தொடங்கும் கவிதைதான் கவியரசரின் பிரசுரமான முதல் கவிதை. இந்த சொல்லாட்சி, வேகம், எளிமை அவரது திரைப்படங்களில் ஆட்சி செய்து அசத்தியது.

    ‘நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே’ என்று சவாலே சமாளி படத்தில் வரும் பாடலின் கடைசி சரணம் அதிகம் வானொலியில் ஒலிபரப்பு ஆகாதது: ‘ தங்கம் எடுத்த கை அது தங்கம் பார்த்ததா, தர்மம் காத்த கை சமதர்மம் கண்டதா…’ என்று போகும் அந்த ஆவேச வரிகள், ‘ஆலயம் செய்வோம் அங்கே அனுமதி இல்லை, நீ அந்தக் கூட்டமே இதில் அதிசயமில்லை’ என்று சிகரத்தை எட்டும்.

    கதையின் சுருக்கத்தை மிகத் திறம்பட தனது பாடல் வரிகளில் சொற்செட்டாக வடித்துக் கொடுக்கும் பேராற்றல் அவருக்கிருந்தது. அவர்கள் படத்தில் வரும் ‘இப்படியோர் தாலாட்டு பாடவா’ என்ற பாடலின் சரணம்  ‘அன்றொரு நாள் மீராவும் கண்ணனை நினைந்தாள் ஏனோ அவளுடைய தலையெழுத்து மன்னனை மணந்தாள்’ என்று சொல்லிச் செல்லும் கதாநாயகி, ‘அதுவரைதான் தன்கதையை என்னிடம் சொன்னாள் நான் அப்படியே என் கதையை உன்னிடம் சொன்னேன்’ என்று தனது கதையை அங்கே இணைத்துவிடும் அழகை எப்படி விவரிக்க!

    ராஜபார்ட் ரங்கதுரை படத்தில், ‘அம்மம்மா தம்பி என்று நம்பி’ என்ற பாடலை வேறு யார் எழுதி இருக்க முடியும்? ரோஜாவின் ராஜா படத்தின், ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான் என்ற பாடலில் பி சுசீலாவின் அற்புதக் குரலில், ‘நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை, அவள் மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீர் மறைத்தும் மறையவில்லை’ என கசியும் தவிப்பு வரிகளை வேறு யார் தொடுத்திருக்கக் கூடும்?

    காவியத் தலைவி படத்தில் வரும் ‘ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்’ என்ற பாடல் யாரைத் தான் உருக வைக்காது! அதுதான் மேதைமை.  காதல் (நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான் – பூவும் போட்டும்), பாசம் (மலர்ந்தும் மலராத – பாச மலர்), சோகம் (கண்கள்   இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ – மன்னாதி மன்னன்), வேதனை (கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் – வானம்பாடி), கழிவிரக்கம்  (உள்ளத்தில் நல்ல உள்ளம் – கர்ணன்), சுய பரிதாபம் (பாலூட்டி வளர்த்த கிளி – கௌரவம், மனிதன் நினைப்பதுண்டு – அவன் தான் மனிதன்), தாபம் (நாலு பக்கம் வேடருண்டு – அண்ணன் ஒரு கோவில்)….எந்த உணர்வைக் கேட்டாலும் அந்த வகைப்பட்ட பாடலை அவரது பேனா எழுதி இருக்கவே செய்யும்.

    தனக்கான இரங்கல் கவிதையைத் தானே யாத்துக் கொண்ட ரசனை மிக்க கவி அவர். வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை நீங்கி வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை (கருப்பு பணம்) என்றெழுதிய அவரது படைப்பில், கவிதைகளாக மலர்ந்த பலவும் அதிகம் பேசப்படாதிருப்பது. சொல்லப் போனால் இணையத்தில் அவரது தனிக் கவிதைகள் ஏற்றப்படாதிருப்பது வியப்புக்குரியது.

    குமுதம் இதழில் வந்த அவரது சிறப்பான கவிதை ஒன்று இப்படி தொடங்குகிறது:

    சாலையிலே ஒரு முடவனைக் கண்டுகைத் தாங்கலில் கொண்டுவிட்டேன்
           தனிமையில் வாடிய குருடனை அணைத்துநற் சாதமும் ஊட்டிவிட்டேன்
    வேலையில்லாதவன் வெம்பசி தீர்ந்திட விருந்தொடு காசுமிட்டேன்
          வேண்டிய கல்வி கொடுத்தொரு பிள்ளையை மேற்படி ஏறவிட்டேன்
    ஓலையில்லாதொரு பாவிகள் குடிசைக்கு ஓலையும் போட்டுவைத்தேன்
          உறவினரற்ற பிணத்தை எடுத்தெரி யூட்டி முடித்துவிட்டேன்
    காலைதொடங்கி நள்ளிரவு வரையில் என் கடமைகள் தொடர்கின்றன
          கண்களை மூடிக் கனிந்ததும் அற்புதக் கனவுகள் வருகின்றன…..

    இந்தப் பொது சிந்தனை, உதவும் உள்ளம், பரந்த பார்வைதான் கண்ணதாசனை இறவாக் கவியாக உயர்த்தியிருப்பது. மறைந்த பிறகும் பிறந்தநாளைக் கொண்டாட வைத்திருப்பது!

    (ஜூன் 24 அன்று அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது)

    ************
    நன்றி:வண்ணக்கதிர்: ஜூலை 6. 2014

    Share
  • எனக்கொரு காதலி இருக்கின்றாள்…

    –கவிஞர் காவிரிமைந்தன்.

    enakoru kathali

    ஏதோ ஒரு சில பாடல்களில் மட்டும்தான் இசையும் கவிதையும் தங்களைப்பற்றி சிலாகித்துக்கொள்ளும் இதுபோல! எடுத்த எடுப்பிலேயே.. கவிதையே பல்லவியாகிறது பாருங்கள்!

    எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்.

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து பாடும்நிலா பாலசுப்பிரமணியனுடன் இணைந்து பாடிய பாடல்! இசையமைத்த பின் எழுதப்பட்டதா.. எழுதிய பின் இசையமைத்தார்களோ.. எதுவாயினும் கவிஞர் வாலியின் கற்பனா சக்தியும் மெல்லிசை மன்னரின் இசைப் பிரவாகமும் இங்கே நம்மை ஈர்க்கும் சக்தியைப் பெற்றுவிடுகின்றன!

    அருமையான வயலின் இசைக்கோர்வையோடு தொடங்குகிறது பாடல்!  ஜெய்கணேஷ் மற்றும் தேங்காய் சீனிவாசன் ஆகியோரின் நடிப்பில்.. இசையால் நடத்தப்பட்டுள்ள திருவிழா!  குரல்கள் மென்மையாக ஒன்றும் கம்பீரமாக ஒன்றும்!!

    ராகங்களில் உள்ள பெயர்களையும்கூட பாடலில்கொண்டுவந்து வைக்கிற உக்தி கவிதாஞானம் பெற்றவர்களுக்கே கைவரக்கூடும்!  இசையைப்பற்றியும் அங்கே எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது.. அதே நேரம் காதலிக்கும் பொருந்திவருகிறது!  அர்த்தபுஷ்பங்களின் அர்ச்சனையில் ஆலாபனை செய்யப்பட்ட பாடலாக..

    காதல் உணர்வை கவிதையில் பதிக்க கவிஞர்களுக்கா சொல்லிக் கொடுக்க வேண்டும்!  அதுவும் இசையும் அதற்கேற்ப வளைந்துகொடுக்க.. குரல்களின்வழியே இன்பகங்கை வழிகிறது கேளுங்கள்!!

    முத்தான முத்தல்லவோ திரைப்படத்திற்காக விளைந்த முத்தான முத்தல்லவோ இந்தப் பாடல்!

    காணொளி: http://www.youtube.com/watch?v=ILzy6ev7Y4c

    திரைப் படம் : முத்தான முத்தல்லவோ (1976)
    பாடியவர்கள் :S P B , M S  விஸ்வனாதன்
    பாடல்: வாலி
    இசை:M S விஸ்வனாதன்
    நடிப்பு:  ஜெய்கணேஷ், சுஜாதா, தேங்காய் சீனிவாசன்
    இயக்கம்: R விட்டல்

    எனக்கொரு காதலி இருக்கின்றாள்
    அவள் ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்

    காம பத நிஸறிஸ நினி ஸ நித தப மஸ  மக கப

    ஆஹ ஹா ஹோ ஹோ ஹோ

    எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
    ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்
    கீதம் அவளது வளையோசை
    கீதம் அவளது வளையோசை
    நாதம் அவளது தமிழோசை
    தமிழோசை

    எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
    ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்
    கீதம் அவளது வளையோசை
    கீதம் அவளது வளையோசை
    நாதம் அவளது தமிழோசை
    தமிழோசை

    எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
    ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்

    பஞ்சமம் பேசும் பார்வையில் என்றும்
    பஞ்சமம் பேசும் பார்வையில் என்றும்
    பஞ்சணை போடும் எனக்காக
    தெய்வதம் என்னும் திருமகள் மேனி
    கைகளை அணைக்கும் இனிதாக
    இனிதாக

    எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
    ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்

    என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
    என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
    மெல்லிசையாகும் என்னாளும்
    வையகம் யாவும் என் புகழ் பேச
    கைவசம் ஆகும் எதிர் காலம்
    எதிர் காலம்
    எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
    ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்

    தேன் சுவைக் கிண்ணம் ஏந்திய வண்ணம்
    நான் தரும் பாடல் அவள் தந்தாள்
    மோகனம் என்னும் வாகனம் மீது
    தேவதை போலே அவள் வந்தாள்
    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

    எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
    ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்
    கீதம் அவளது வளையோசை
    நாதம் அவளது தமிழோசை
    தமிழோசை

    Share