காற்று வாங்கப் போனேன் – பகுதி 17
கே.ரவி
ஒருநாள், 1969 என்று நினைக்கிறேன், சிவம் வீட்டுக்குப் பரபரப்பாகப் போகிறேன். நம்ம சுகி சிவம்தான்!
‘உடனே என்னுடன் வா. பி.எஸ்.ஹைஸ்கூலுக்குப் போகிறோம்” என்று சிவத்தை என் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு மயிலை பி.எஸ்.உயர்நிலைப் பள்ளி வளாகத்துக்குப் போகிறேன். அங்கே, . . . !
அப்போது சிவம், அமிர்தலிங்கம் (அதாங்க, வசந்தப்பிரியன்), சீனி சுந்தரராஜன், சசீந்திரநாதன் என்ற சசி, வள்ளி, நான் ஆகிய ஆறு பேரும் மற்ற சில நண்பர்களோடு சேர்ந்து சிந்தனைக் கோட்டம் என்ற இலக்கிய அமைப்பை நிறுவி, நடத்தி வந்தோம். (இத்தொடரின் 12-ஆவது பகுதியில் உள்ள புகைப்படத்தில் அமிர்தலிங்கம் தவிர மற்ற ஐவரையும் காணலாம். அதில் சிவமும், நானும் இருக்கிறோம் என்று நாங்கள் சத்தியம் செய்தால் கூட நீங்கள் நம்புவது கடினம்தான்!). முதன்முதலாக பாரதியாரின் வரலாற்றை முழுநூலாக எழுதி “பாரதி லீலை” என்ற பெயரில் வெளியிட்ட சக்திதாசன் சுப்பிரமணியத்தின் ஒரே மகன் சசி.
அந்தச் சமயத்தில் அமராராகியிருந்த டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார் பெயரில் “சிதம்பரநாதனார் சிந்தனைக் கோட்டம்” என்றுதான் முதலில் தொடங்கினோம். அவர் அமிர்தலிங்கத்தின் தாய்மாமன். சில நாட்களுக்குப் பிறகு, அது பொதுப்படையான நிறுவனமாக இருக்க வேண்டும் என்று கருதிச் ‘சிந்தனைக் கோட்டம்’ என்றே தொடர்ந்து நடத்தி வந்தோம். அப்படியோர் இலக்கிய அமைப்பை நிறுவி நடத்த வேண்டும் என்று எங்களைத் தூண்டியவர் எங்கள் தமிழாசான் சிதம்பரம் சுவாமிநாதன்.
“செந்தமிழ்த் தோட்டம் சிந்தனைக் கோட்டம் சேவையில் நாட்டம் செலுத்துவோர் கூட்டம்” என்று தனக்கே உரிய அடுக்குமொழி வசனத்தில் அந்த மன்றத்தின் கொள்கையை அவரே வரையறை செய்து தந்திருந்தார்.

நான் ஏழாம் வகுப்பில்தான் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். என் தந்தை விஸ்வம்தான் சேர்த்து விட்டார். அவருக்கு என் சரியான பிறந்த தேதி கூட நினைவில்லை. தவறாக, 09-01-1952 என்று தந்து விட்டார், ஓராண்டும் நாலு நாட்களும் கூடுதலாக! அவர் வாழ்நாள் முழுதும் ஆசிரியராகவே பணியாற்றியவர். ஆசிரியர் தொழில், நாடகங்கள் எழுதி நடிப்பது இந்த இரண்டும்தான் அவருடைய வாழ்க்கையே. இவை தவிரக் குடும்ப விவகாரங்களில் எப்பொழுதுமே அதிக ஈடுபாடு செலுத்த மாட்டார். ஆனால் தாம் சிரமப்பட்டு ஈட்டும் பணத்தையெல்லாம் குடும்பத்துக்கே தந்து விடுவார். அவருக்கு நாடகம் தவிர வேறு கெட்ட வழக்கங்கள் கிடையாது,(நாடகக்காரர்கள் மன்னிக்கவும்). நாடகமே வாழ்க்கை என்று இருந்த அவருக்கு வாழ்க்கையில் நாடகமாடத் தெரியவில்லை. மற்றவர்களைப் புகழும் வழக்கம் மட்டும் அவருக்கு இருந்திருந்தால் அவர் சினிமாவில் பெரிய நடிகராகவோ, இயக்குநராகவோ வந்திருக்கக் கூடும். மற்றவர்களைப் புகழ்வதில்லை என்பதை அவர் ஒரு விரதமாகவே பயின்று வந்தார்.
திருச்சியில், 1940-50 களில் லேடி விஸ்வம் என்றால் எல்லாருக்கும் தெரியும். நாடக

மேடைகளில் பெண் பாத்திரத்திலேயே அவர் அதிகம் நடித்திருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பின்னாளில் இருந்த பழனியாண்டி, வீனஸ் ரத்னம் அய்யர் (இயக்குநர் மணிரத்னத்தின் தந்தை) மற்றும் சிலரோடு விஸ்வம் திருச்சியில் விடாமல் நாடகம் நடத்தி வந்ததும், அவர்கள் எல்லாரும் தினமும் நாடக ஒத்திகை முடிந்து இரவு 11 மணிக்கு மேல் எங்கள் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டியவுடன் என் அம்மா, அதாவது என் வளர்ப்புத் தாயார் (என் வளர்ப்புத் தந்தை கல்யாணராமனின் இரண்டாவது மனைவி ‘அலங்காரம்’) அவர்களுக்கெல்லாம் உணவு பரிமாற, அவர்கள் உண்டு விட்டுத் திண்ணையில் உறங்கிய கதையும் நூறுமுறை என் வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அவருடைய நாடகக் குழுவில் பயின்ற ஒரு நடிகர் கடைசிவரை அவரை ‘வாத்தியார்’ என்றே அழைத்து வந்தார். 1972-ல் ஒருநாள், ஏ.வி.எம். ஸ்டூடியோவில் அந்த நடிகரும், இயக்குநர் ச்ரீதரும் அமர்ந்திருந்த போது நான் அங்கே சென்று என்னைக் கல்யாணராமனின் மகன் என்று அந்த நடிகரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். எங்கள் குடும்ப விவகாரம் முழுதும் தெரிந்து வைத்திருந்த அந்த நடிகர், ” வாத்தியார் செளக்கியமா” என்று கேட்டார். நான் திகைத்த போது, “உன் தந்தை விஸ்வம் சாரைத்தான் குறிப்பிடுகிறேன்” என்று விளக்கினார், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் நான் சேரும் போது எனக்குத் தமிழ் சரியாக எழுத வராது. முதலில் மந்தைவெளியில் உள்ள ‘பான்செகர்ஸ்’ என்ற கான்வெண்ட் பள்ளியிலும், பிறகு செயிண்ட் பீட்டர்ஸ் என்ற ஆங்கிலோ இந்தியப் பள்ளியிலும் 6-ஆம் வகுப்பு வரை பயின்றதால், தமிழ்ப் பயிற்சி இல்லாமல் இருந்தேன். ஆனால், செயிண்ட் பீட்டர்ஸில் ஜேம்ஸ் மிஸ் என்ற ஆசிரியை ‘மான்விழி’ என்றொரு நாடகம் போட்டபோது, எங்கள் வகுப்பில் எல்லாரையும் தமிழ் படிக்கச் சொல்லிக் கேட்டு, மான்விழி என்ற கதாநாயகியாக நடிக்க என்னைத் தேர்வு செய்தார். ‘உன் தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது’ என்று பாராட்டினார். அதுதான் நான் தமிழ் ஆர்வம் கொள்ள என் நெஞ்சில் தூவப்பட்ட முதல் விதை. அப்போது நான் சுமார் பத்து வயதுச் சிறுவன். சிறுவர் அரங்கில் (பின்னாள் கலைவாணர் அரங்கம்) நடந்த குழந்தைகள் தினவிழா நாடகப் போட்டியில் ‘மான்விழி’ நாடகத்தில் நடித்து நான் முதற் பரிசு பெற்றதும் என் தந்தை விஸ்வம் பூரித்துப் போய்விட்டார், தனக்கு ஒரு கலைவாரிசு வந்து விட்டது என்று.
ஏழாம் வகுப்பில் சாந்தோம் பள்ளியின் ஆங்கில மீடியத்தில் நான் சேர்ந்த புதிதில், சிதம்பரம் சுவாமிநாதன்தான் எங்கள் தமிழாசிரியர். நான் விடைத்தாளில் கோழி என்பதைக் ‘கேழி’ என்று எழுதியிருந்ததைப் பார்த்துக் கோபத்தோடு அதைக் கசக்கி என் முகத்தின் மீது விட்டெறிந்தார். மற்ற மாணவர்கள் முன்னால் எனக்கு அவமானமாக இருந்தது. ஏழாம் வகுப்பு முடிந்ததும், கோடை விடுமுறையில் நான் தினமும் சென்னை, மவுண்ட் ரோட்டில் இருந்த மத்திய நூலகத்தில் 3, 4 மணிநேரம் செலவிட்டுத் தமிழ் இலக்கிய நூல்களை எடுத்துப் படித்தேன். வாய்விட்டுப் படித்தேன், நூலகப் பணியாளர் ‘உஸ்’ என்று அடக்கும் வரை. நளவெண்பா, கலிங்கத்துப் பரணி, பாரதிதாசன் பாடல்கள், சிலப்பதிகாரம் என்று என் தமிழ் இலக்கியப் பயிற்சி வளர்ந்தது. கூடவே நன்னூல் இலக்கணத்தையும் பயின்றேன். இரண்டு மாதங்களில் எப்படி நான் அவ்வளவு படித்தேன்? இப்பொழுது நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு வெறி என் பிடறியைப் பற்றி உந்தியதை உணர முடிந்தது.
8-ஆம் வகுப்புப் படிக்கும் போது, சிவம், சீனி சுந்தரராஜன், சசி, போன்ற நண்பர்களுக்குக் கலிங்கத்துப் பரணியின் கடைத்திறப்பு அதிகாரத்தைப் படித்துக் காட்டி விளக்கிப் பாடம் எடுத்தது இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளது. அந்த அதிகாரத்தில் உள்ள சிருங்கார ரசப் பாடல்கள் அந்த வயதில் எங்களை ஈர்த்ததில் வியப்பொன்றும் இல்லையே!
மதுர மானமொழி பதற வாள்விழி சிவப்ப வாயிதழ் வெளுப்பவே
அதர பானமது பான மாகவறி வழியும் மாதர்கடை திறமினோ
— — —
வருவார் கொழுநர் எனத்திறந்தும்
வாரார் கொழுநர் என அடைத்தும்
திருகும் குடுமி விடியளவும்
தேயும் கபாடம் திறமினோ
இப்படிப் பல பாடல்கள் பல்கி வரும் கடைத்திறப்பு அதிகாரம் முழுவதையும், படித்தோம்.
நானும் கவிதை எழுதத் தொடங்கினேன். என் வகுப்பு நண்பர்கள் சேர்ந்து, சீனி சுந்தரராஜன் கைவண்ணத்தில், ‘தமிழ்ச்சங்கு’ என்ற கையெழுத்துப் பத்திரிகை தொடங்கினோம். மூன்று, நான்கு இதழ்கள் வந்தன. அதில்தான், என் முதல் கவிதை வெளியானது. அதன் தொடக்க வரிகள் மட்டும் இன்னும் என் நினைவில் இருக்கின்றன:
அகத்திய முனிவரின் அகத்தினில் உதித்தவள்
என்ன பொருத்தம் பார்த்தீர்களா?
“தழல்புரை சுடர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான்” என்று கவிச்சக்கரவர்த்தி போற்றிய அகத்திய மாமுனிவரின் அருளோடு என் கவிதைப் பயணம் தொடங்கியது. அந்தக் காலக் கட்டத்தில் எழுதிய கவிதைகள் நிறைய தொலைந்தும், மறந்தும் போய்விட்டன. ஒன்றிரண்டு மட்டும் நினைவுப் பேழையில் நீங்கா இடம் கொண்டன:
ஒளிதந் தெரியும் விளக்கின் திரியும்
கரியா கத்தான் திரியும் – நெஞ்சக்
களிப்பை நல்கும் வெடியின் திரியும்
கரியா கிப்போய் மறையும் – ஆனால்
விளக்கில் உள்ள திரியின் நல்ல
சேவை உலகில் நிறையும் – இந்த
விளக்கம் தன்னை ஆய்ந்து பார்த்தால்
விந்தை வாழ்வு புரியும்
என்றும் வாழும் விளக்கின் திரிகள்
ஏசு புத்தர் காந்தி
பொன்றும் வெடியின் திரியே மற்ற
பொல்லா உயிர்கள் எல்லாம் – இந்த
உண்மை தன்னை உணர்ந்து நல்ல
விளக்கின் திரிபோல் நாமே
வண்மை கொண்டு மனிதராக
வாழ்வோம் வாழ்விப் போமே
முதலில் சொன்னேனே, 1969-ல் ஒருநாள் சிவத்தை அழைத்துக் கொண்டு பி.எஸ்.உயர்நிலைப் பள்ளி வளாகத்துக்குப் போனேன் என்று; அதற்குக் கொஞ்ச நாட்களுக்கு முன், நான் சைக்கிளில் போய்க்கொண்டிருக்கும் போது, பள்ளி மாணவி ஒருத்தி நடுத்தெருவில் என்னை வழிமறித்தாள். அவள் சொன்னாள்: “என் பெயர் விஜயா. செயிண்ட் ஆண்டனீஸ் உயர்நிலைப் பள்ளி மாணவி. நானும் என் வகுப்புத் தோழிகளும் தமிழில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளோம். நீங்கள் ஏதோ மன்றம் நடத்துவதாகக் கேள்விப் பட்டோம். அதில் சேர விரும்புகிறோம்.”
“பார்க்கலாம்” என்று சொல்லி விட்டு நான் நகர்ந்து விட்டேன். அவள் மீண்டும் என்னைச் சந்தித்தாள். “நானும் என் தோழியும் ஒரு பேச்சுப் போட்டியில் கலந்து கொள்கிறோம். நீங்கள் வந்து பார்க்கலாமே” என்று அழைத்தாள். சரியென்றேன்.
விஜயா சொன்ன நாளும் வந்தது.
ஒரே வினாடியில் காலச் சுவடியின் பக்கங்களை வேகமாக ஒரு நொடிக்குள் சுமார் முப்பது ஆண்டுகள் பின்னோக்கிப் புரட்டிப் பார்த்துவிட்டு, மீண்டும் 1969-ஆம் ஆண்டுக்கே மீண்டுவிட்டேன். பி.எஸ்.உயர்நிலைப் பள்ளி அரங்கம்; என் அருகில் சிவம். அரங்கத்தில் விஜயா குறிப்பிட்ட அவள் தோழி, குருநானக் தேவரைப் பற்றி உரையாற்றிக் கொண்டிருக்கிறாள். அவள் குரலொலி எனக்குக் கேட்கவில்லை, முகவொளி நெஞ்சை நிறைத்திருப்பதால். பிறகு சிவத்துக்கும், எனக்கும் அந்தத் தோழியை விஜயா அறிமுகம் செய்து வைக்கிறாள்: “இவள் பெயர் ஷோபனா!”
அந்தக் காட்சியின் மின்னல் அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை, நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆகியும்!
(தொடரும்)