இந்த வார வல்லமையாளர்!

இந்த வார வல்லமையாளர்!

ஜூலை 7, 2014

சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர்

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு  திரு. செண்பக ஜெகதீசன்  அவர்கள்

Shenbaga Jagatheesan
இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்  சுசீந்திரத்தில் உள்ள  காசித்திருமடம், ஆசிரமத்தின் மேலாளராகப் பணியாற்றி வரும் திரு. செண்பக ஜெகதீசன்.  சென்றவாரம் வல்லமை வாசகர்களுடன் இவர் பகிரிந்து கொண்ட  “தடை தகர்த்து…”  என்ற தன்னம்பிக்கையூட்டும் கவிதைக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

தற்பொழுது நிர்வகிக்கும் காசித்திருமடப் பணிக்கும் முன்னர் நெல்லையப்பர் திருக்கோவிலின் நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றிய இவர் தன்னைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது,  “இரைதேடுவதுடன் இறையும் தேடும் அரசுப்பணி”யாற்றுவதாகக் குறிப்பிடுகிறார்.  இதுவரை ஆறு கவிதை நூல்களை வெளியிட்டுள்ள இவர் சற்றேறக்குறைய எட்டு ஆண்டுகளாகப் பற்பல மின்னிதழ்களில் எழுதி வருகிறார்.  அவற்றில் சில:  வல்லமை, வார்ப்பு, பதிவுகள், முத்துக்கமலம், திண்ணை, நந்தலாலா.

இவர் கவிதைகளின் கருப்பொருளாகக் கொண்டவை; இயற்கை, தத்துவம், எழுச்சியூட்டும் தன்னம்பிக்கை போன்றவையாகும்.   கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக வல்லமை வாசகர்களுடன் தனது கவிதைகளை பகிர்ந்து வருகிறார் இக்கவிஞர்.  இவருடைய இவ்வாரக் கவிதை, வாழ்வில் ஏற்படும் சோதனைகளைக் கண்டு துவளுதல் கூடாது, அவற்றை எதிர் கொண்டாலே அவை வழங்கும் படிப்பினை மூலம் திறமை  மிக்கவராக மாறலாம் என்ற தன்னம்பிக்கையூட்டும் கருத்தினை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.

தடை தகர்த்து…

சீறிப் பாயும் கடலலைதான் – மிகச்                                    
     சிறந்த மாலுமி உருவாக்கும்,
       மாறிடும் வானிலை  காட்டிடுமே – திறமை           
     மிகுந்ததோர் ஓட்டியை வானூர்தியில்,
கீறிடும் கல்நிறை சாலையேதான்- சுட்டிக்
     காட்டிடும் சிறந்த ஓட்டுநரை,
ஏறிடும் இடர்களை எதிர்கொள்வோர் – வாழ்வில்
     ஏற்றம் என்றும் பெறுவாரே…!

இவர் எழுதி வல்லமையில் வெளிவந்த மேலும் சில கவிதைகள் கீழே…..

கிடக்கட்டும் குப்பைகள்…

குறைசொல்ல ஒரு
கூட்டம் உள்ளவரை,
நிறைய வருகின்றன
நீ வெற்றிபெற சந்தர்ப்பங்கள்..

உறங்கவிடமாட்டார்கள்
உன்னை,
உறங்கிடவும் மாட்டார்கள்-
உன்மீது
பொறாமை கொண்டவர்கள்..

உரிய சமயமிது,
உணர்ந்துகொள்
உழைத்திடு
உயர்ந்திடு..

உதாசீனப்படுத்திடு
குறைசொல்லும் அந்தக்
குப்பைகளை…!

__________________________________________

கலங்காதே…

கலங்குவதில்லை மலர்,
காய்ந்து
கீழே விழுவதற்கு…

காரணம் இதுதான்-
அதன்
கனி உதிர்க்கும்
விதை முளைத்து
மீண்டும்
மரமாகும் நம்பிக்கை…!

கலங்கி நிற்கிறாயே
மனிதா,
மரணத்தைத் தினம்
மனதில் எண்ணி…!

__________________________________________

ரேகை

போடும் ஒரு நெல்லுக்காக
கிளி எடுத்த
பொய்யான சீட்டை வைத்துப்
புளுகுவதை நம்பாமல்,
கைரேகைக்
கதைகளையும் நம்பாமல்,
கைரேகை தேயக்
கடும் உழைப்பு உழைத்தால்
உன்ரேகை (அடையாளம்) தெரியும்
உயர்வாக…!

__________________________________________

இக்கவிதைகளுக்கும் மேலாக செண்பக ஜெகதீசன் கையெடுக்கும் மற்றொரு கவிதை முயற்சியை இதுவரை பிறர் கையாண்டு பார்த்ததில்லை.  இவை கவிதைகள் வடிப்பதில் முற்றிலும் ஒரு புதிய முயற்சி.  வியக்க வைக்கும் கோணமென்றும் கூறலாம்.

இன்றுவரை திருக்குறளுக்கு எண்ணிலடங்கா விளக்க உரைகள் தோன்றிய வண்ணம் உள்ளது.  செண்பக ஜெகதீசன் தனது “குறளின் கதிர்களாய்…” கவிதைத் தொடர் வரிசையில்  திருக்குறள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து,  அதன் விளக்கத்தை பல்வேறு கவிதை பாணிகளில் வடிப்பது  இவர் கவிபுனையும் திறமையைக் காட்டுகிறது.  எடுத்துக்காட்டாக, “பீலிபெய் சாகாடும் ” என்ற குறளை இவர் புதுக்கவிதை, குறும்பா, மரபுக் கவிதை, புதுப்பா, கிராமிய பாணி என பல்வேறு கவிதை பாணிகளில் வழங்குவதைக் கீழே காணலாம்….

குறளின் கதிர்களாய்…

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்…!
-திருக்குறள்-475(வலியறிதல்)

புதுக்கவிதையில்…

 மலரினும் மெல்லிதென்று
மயிலிறகைச் சேர்த்து
வண்டியில்
மனம்போல ஏற்றிவைத்தால்,
முறிந்துவிடும் அச்சாணி..
மிஞ்சாது எதுவும்
அளவை
மீறினால் எதிலும்…!

குறும்பாவாய்…

குடைசாய்க்கும் வண்டியை, பாரம்
கூடினால் மயிலிறகும்..
கதையிதுதான் வாழ்க்கை…!

மரபுக் கவிதையில்…

வண்டியில் ஏற்றும் பாரமது
வலிமை யில்லா மென்பொருளாம்
கொண்டல் கண்டால் ஆடிநிற்கும்
கோல மயிலின் இறகெனிலும்,
உண்டே யதற்கும் அளவதுவும்,
உயர்ந்தால் வண்டி உடைந்திடுமே,
கண்டிடு வாழ்வில் கதையிதுவே
கொண்டிடு அளவதைக் கருத்தினிலே…!

புதுப்பாவில்…

மெல்லிய பொருள்தான்
மயிலிறகு,
மிதமிஞ்சி ஏற்றினால் வண்டியில்,
அதுவும் உடைந்து
மிஞ்சுவதில்லை எதுவுமே..

நல்லதுக்கு
எதிர்மறைப் பலன்தான்
எதுவும் அளவுக்கு மிஞ்சினாலே…!

கிராமிய பாணியில்…

ஏலேலோ ஐலசா
ஏத்து பாரம் ஐலசா..
அளவாப் பாரம் ஐலசா
அளந்து ஏத்து ஐலசா..
மயிலுப் பீலி ஆனாலும்
மிஞ்சா வண்டி ஒடையுமே..
மனுசங் கதயும் இதுதானே
மனசில கொள்ளு இதத்தானே..
ஏலேலோ ஐலசா
ஏத்து பாரம் ஐலசா…!

சிந்தனையைக் கவரும் கவிதைகளை வழங்கி, கவிதை இலக்கிய மரபில் புதுமை புரிந்து வல்லமை வாசகர்களை மகிழ்விக்கும்   செண்பக ஜெகதீசன்  அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

முகநூலில் செண்பக ஜெகதீசன்: https://www.facebook.com/jagatheesa.perumal.3?ref=tn_tnmn

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

 1. நன்றி.. மிக்க நன்றி…!
  என்னை இவ்வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்த
  ‘வல்லமை’ குழுவைச்சார்ந்த வல்லமைமிகு
  திருவாளர்கள், அண்ணா கண்ணன், பவள சங்கரி, தேமொழி ஆகியோருக்கு
  மிக்க நன்றி…!

                        -செண்பக ஜெகதீசன்…

 2. வல்லமையாளராக தேர்வு செய்யப்பட்ட செண்பக ஜெகதீசனை  கரகோஷம் செய்து பாராட்டி  மனமார மகிழ்கிறேன். வல்லமையாளர் விருதுக்கு வல்லமையில் தொடர்ந்து எழுதி வரும் இவர் இந்த விருதுக்கு மிகப்பொருத்தமானவர்.

  நான் வல்லமைக்கு வாசகனானதிலிருந்து இவரின் குறளின் கதிர்கள் தொடர்ந்து படிக்கிறேன். இவர் உலக தமிழ் இலக்கியமாம் திருக்குறளுக்கு புதிதாக எந்த பொருளுரையும் எழுதி விடவில்லை. ஆனால் யாருமே செய்யாத புதுமையாக பல வகை கவிதைகள் வழி பொருளுரை தரும் பொழுது பிரமிப்பை உண்டாக்குகிறார். அவரின் அந்த அபரிதமான திறமையை எப்படி பாராட்டினாலும் போதாது.

  அவரை தேர்வு செய்த தேமொழி அவர்களுக்கும் வல்லமை மின்னிதழுக்கும் நெஞ்சம் நிறைந்து பாராட்டுகிறேன்.

 3. இந்த வார வல்லமையாலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நண்பர் திரு.செண்பக ஜெகதீசன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நண்பர் திரு.அமீர் குறிப்பிட்டுள்ளது போல தங்களின் “குறளின் கதிர்களாய்” கவிதைகளைத் தொடர்ந்து படித்து ரசித்து வருகிறேன். தங்களது எழுத்துப்பணி மென்மேலும் சிறப்புடன் தொடர அன்புடன் வாழ்த்துகிறேன்.

 4. பாராட்டி வாழ்த்திய நண்பர்கள், அமீர், சச்சிதானந்தம் ஆகியோருக்கு
  மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published.