குறளின் கதிர்களாய்…(33)

செண்பக ஜெகதீசன்…

 

hair-care_24_07_2013

தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்

நிலையி னிழிந்தக் கடை.

      -திருக்குறள் -964(மானம்)

 

புதுக் கவிதையில்…

 

தலையில் இருக்கும்வரைதான்

தலைமுடிக்கு மதிப்பு,

தரையில் வீழ்ந்தால்

தாழ்ந்திடும் குப்பையாய்..

 

மண்ணில் மனிதரும் தாழ்ந்தால்

உயர்நிலையிலிருந்து,

உதிர்ந்த

மயிர்போலாவர் மதிப்பில்…!

 

குறும்பாவில்…

 

மண்ணில் வீழ்ந்த மயிர்போலாவான்

மனிதன்,

தன்நிலை தாழ்ந்திடும் போதில்…!

 

 மரபுக் கவிதையில்…

 

எண்ணெய் தேய்த்துத் தலைசீவி

     எத்தனை அழகாய் வைத்தாலும்,

மண்ணில் வீழ்ந்தால் மயிரதற்கு

     மதிப்பு எதுவும் கிடையாதே,

எண்ணிப் பார்த்திடு இதையேதான்-

     ஏற்றம் வாழ்வில் பெற்றோரும்

கண்ணியம் தவறித் தாழ்ந்திட்டால்,

     கருதப் படுவரிம் மயிர்போலே…!

 

லிமரைக்கூ…

 

முடியின் மதிப்பது இருக்கும்வரை தலையில்,

மதிப்பிதுதான் மனிதனுக்கும்

மேலிருந்து கீழே தாழ்துவிட்டால் நிலையில்…!

 

கிராமிய பாணியில்…

 

தலமுடி நல்ல தலமுடி

தலயில அலபோல் தலமுடி,

எண்ண தேச்சிக் குளிச்சி

எடுத்துச் சீவுன தலமுடி..

 

அது

கீழ உழுந்தா கேப்பாரில்ல

குனிஞ்சி அதயே பாப்பாரில்ல,

தலயில இருந்தா மதிப்புத்தான்

தரையில உழுந்தா குப்பதான்..

 

மனுசங் கதயும் இப்புடித்தான்,

நல்ல நெலயில இருந்தவுனும்

நெலம மாறித் தாந்திட்டா

எல்லா மதிப்பும் போயிருமே

உழுந்த முடிகத ஆவிடுமே…!

 

Share

Comments

2 responses to “குறளின் கதிர்களாய்…(33)”

  1. அமீர்

    இந்த வாரம் வல்லமையாளர் எழுதியது அத்தனையும் சுவை.

  2. Shenbaga jagatheesan

    கருத்துரை வழங்கிச் சிறப்பித்த நண்பர்,
    அமீர் அவர்களுக்கு மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *