கே.ரவி

ஷோபனாவும், விஜயாவும், அவர்கள் வகுப்புத் தோழியர் பலருடன், ஒரு பெரிய பெண்கள் பட்டாளமாகவே வந்து சிந்தனைக் கோட்டத்தில் சேர்ந்து கொண்டனர். முதலில், பெண்களைச் சேர்க்கக் கூடாது, புத்த மதம் நிலைகுலைந்ததே அதனால்தான் என்றெல்லாம் என் நண்பர்கள் சிலர் தடுத்தும், சிவமும் நானும் வாதாடி, அவர்களைச் சமாதானம் செய்து பெண்களைச் சிந்தனைக் கோட்டத்தில் சேர்த்துக் கொண்டோம். அதற்கு முன் வள்ளியக்கா என்ற ஆசிரியை மட்டுமே சிந்தனைக் கோட்டத்தின் ஒரே பெண் உறுப்பினர். ஏற்கனவே எதிர்ப்புகளுக்கு இடையில் பெண்களைச் சேர்த்துக் கொண்டதால், ஷோபனாவிடம் நான் ஒரு தொலைவை அனுசரித்தேன். என்னிடமே எனக்கு பயம்! ஆனால், சிந்தனைக் கோட்டத்துக்காக நான் ஒரு பாட்டெழுத, ஷோபனா அதைப் பாடினாள்:

சிந்தனைக் கோட்டம் வாழ்க செந்தமிழ் மணமே சூழ்க

சேர்ந்திருக்கும் யாவருமே பாச உணர்ச்சியில் ஆழ்க

அதே போல் ஒரு புத்தாண்டுத் திருநாளன்றும் என் பாடல் ஒன்றை அவர் பாடினார்:

புத்தாண்டுத் திருமகளே பூரிக்க வைப்பவளே

புன்னகையே தூவி வரவேற்கின்றோமே

புத்துணர்வு நல்க வரம் கேட்கின்றோமே

இந்த நெருக்கம் ஒரே ஆண்டுதான் நீடித்தது. அந்தப் பெண்கள் கூட்டம் வேறு வேறு கல்லூரிகளில் சேர்ந்து விடவும், என்னையும், சிவத்தையும் தவிர மற்ற நண்பர்கள் வெவ்வேறு கல்லூரிகளுக்குப் போய் விடவும், சிந்தனைக் கோட்டமும் மெல்லச் செயலிழந்து போனது. நானும் ஷோபனாவும் பிறகு ஓராண்டுக் காலம் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புக் கிட்டவில்லை.

1971-ஆம் ஆண்டு மீண்டும் ஷோபனா தன் தோழி மங்களசுந்தரியோடு ஏதோ நிமித்தமாக பலாத்தோப்பு வீட்டுக்கு வந்து என்னைச் சந்தித்தாள். நவராத்திரி நாளொன்றில், அவளும், மங்களசுந்தரியும் வந்து என் வீட்டில், “மலரின் மேவு திருவே” என்ற பாரதி பாடலைப் பாடும் போதுதான், என் உள்மனத்தின் ஓசையை நான் உற்றுக் கேட்டேன். ஷோபனா என் இதயத்துக்குள் நுழைந்து அமர்ந்து விட்டதை அந்தக் கணத்தில் நான் உணர்ந்தேன்.

அவளும், மங்களசுந்தரியும் கேட்டுக் கொண்டபடியே நான் ‘மாணவரிஸம்’ என்ற மாத இதழ் தொடங்கினேன். அதன் ஆசியராக நானும், இணையாசிரியராக ஷோபனாவும் பொறுப்பேற்றுக் கொண்டோம்.

நானும் மங்களசுந்தரியும் பேசிக் கொண்டே இருப்போம். ஆனால், ஷோபனா அதிகம் பேச மாட்டாள். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ! நாங்கள் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகச் சொல்லிக் கொண்டதே இல்லை. திடீரென்று ஒருநாள் அவளிடம், “நம் திருமணம் இன்னும் 3 வருடங்களுக்குப் பிறகுதான் என்று நான் சொன்னதும், அது பற்றி அவள் மறுப்பு எதுவும் சொல்லாமல் இருந்ததும், வெரி கேஷுவல், நோ ப்ரோபஸல்! 25 ஆண்டுகளுக்குப் பிறகு நான் எழுதிய ஒரு கவிதை வரி நெஞ்சில் எதிரொலிக்கிறது: “மனமும் மனமும் தழுவிக் கொள்ள மௌனம் போதாதா!”

நானும் ஷோபனாவும் தினமும் சந்தித்துக் கொள்வதும், நண்பன் சசியும், தோழி மங்களசுந்தரியும் எப்போதும் எங்களுடன் சுற்றுவதும், ஏன் ஷோபனாவுக்குப் பிறந்தநாள் பரிசு வாங்க என் சகோதரி மாலினியே வந்து பரிசைத் தேர்வு செய்ய உதவியதும், ஒருநாள் ஷோபனா படித்த கல்லூரியில், அவளுடைய ஆங்கில இலக்கியத்துறை மாணவிகள் கோனே நீர்வீழ்ச்சிக்கு மறுநாள் சுற்றுலா போக இருப்பதைக் கேள்விப்பட்டு, அதிகாலை 7 மணிக்கெல்லாம் அவள் படித்து வந்த ராணி மேரிக் கல்லூரி வாசலுக்குக் காரில் சென்று அந்தக் கல்லூரிப் பேருந்தில் ஏறிவிட்ட ஷோபனாவை இறங்கச் சொல்லி, என் காரில் ஏற்றிக் கொண்டு மஹாபலிபுரத்துக்குக் கடத்திச் சென்றதும், மாலை அவள் வீட்டுக்குப் போன பிறகு கோனே ஃபால்ஸ் எப்படியிருந்தது என்று அவள் அம்மா கேட்ட கேள்விக்கு நேரில் பார்த்தது போல் பதில் சொல்லி அவள் கதையளந்ததும், அதெல்லாம் ஒரு பொற்காலம்!

சென்னை வானொலியில் “எந்தன் காதலி” என்ற தலைப்பில் கவிதையே படித்து விட்டேன் என்றால் அதைவிட ஊருக்கெல்லாம் பறையறைந்து சொல்ல என்ன இருக்கிறது. அந்தக் கவிதை ஏட்டிலும் இல்லை, என் நினைவிலும் முழுமையாக இல்லை என்பதால், இப்படிப்பட்ட கவிதைகளையும் சேகரித்து வைத்திருக்கும் நண்பன் சு.ரவியிடமிருந்து அதைப் பெற்று இங்கே தருகிறேன்:

எந்தன் காதலி எப்படி இருப்பாள்

என்பதை இங்கே இயம்பிட வந்தேன்

நடனத் தினவை நடையிற் காட்டி

நாடகப் பார்வையில் நளினமும் பூட்டி

மாடத்தில் உலவும் மாருதம் போலென்

இதயத் துள்ளே இலங்கும் தேவதை

மதனன் விடுத்த மலர்க்கணை இன்பப்

பதத்தில் இறக்கிய பாகு பழகும்

விதத்துக் கேயொரு விளக்கம் ஆவாள்

புன்னகை என்றொரு புதுப்பெய ராலே

ஜலத ரங்கத்தின் சப்தம் எழுப்பும்

அலங்காரக் கோயில் அவள்நுதல் நல்ல

மங்கலத் தாமரை மலர்ந்த தடாகம்

எங்குசென் றாலும் எந்தன் நெஞ்சின்

நிழல்போல் வருவாள் நித்திலக் குவியல்

தழலிடை இருப்பது போலத் தோன்றும்

சிரித்த வாயால் சிணுங்கி மகிழ்வாள்

கோலம் இழைத்த குளிர்நில வேபோல்

நாணம் படர்ந்த கன்னக் கனிகள்

தளிர்க்கரத் தாளின் தனிச்சிறப் பாகும்

அவளுடல் அசைவுகள் அருங்கலை விளக்கம்

சுவையூட்டும் அந்தச் சுந்தரச் சிற்பம்

அடிக்கடி நெற்றியில் விழும்குழல் ஒதுக்கலை

எப்படிப் புகல்வது அதுவொரு புதுக்கலை

விழியின் சுழற்சி விந்தை முயற்சி

அழியா அழகின் அனுபவக் கவர்ச்சி

நேரிழை யாளிவள் நெளிகுழல் போல

நெருங்கிய உறவும் நீடிய வாழ்வும்

எம்மிரு வர்க்கும் என்றும் இருக்கும்

இவ்வித மாக இருக்கும் அந்தச்

செவ்விதழ்க் கொடியுடன் சேர்ந்து

இன்பக் கனவில் எனைமறப் பேனே

அந்தக் காலக் கட்டத்தில் எத்தனைக் காதல் கவிதைகள் ஊற்றெடுத்து வந்தன! ஒருநாள் வருகிறேன் என்று சொல்லி விட்டு அவள் வரமுடியாமற் போனதும் எழுதிய கவிதையின் சில அடிகள் மட்டும், அங்கொன்றும் இங்கொன்றுமாக, இன்னும் நினைவில் இருக்கின்றன:

வடமிட் டிழுத்தால் வராத தேருண்டா

புடமிட்ட பொன்னே புரிந்து கொள்ளடி

. . . . . . .

நீவர வேண்டாம் நான்வரு கின்றேன்

நேரம் கடந்தால் நேற்றைய கதைதான்

முதல்நாள் கடற்கரையில் சந்தித்துக் கொண்டோம். கடற்கரையை விட்டால் இளம் காதலர்களுக்குப் புகலிடம் வேறு உண்டோ? மறுநாள், அந்த நிகழ்வுகளை நினைத்துக் கொண்டேன்.

சோகத்தில் இழைகின்ற இசையைப் போல

சொப்பனத்தில் இழைத்திட்ட பொழுதைப் போல

மேகத்தில் தோன்றுகிற வண்ணம் போல

மேல்வண்ணம் இல்லாத ஏகாந் தத்தில்

மோகத்தீ கொளுத்தியதில் மூழ்கி மூழ்கி

முத்தமழை பொழிகின்ற இருவர் காம

யாகத்தில் உணர்கின்ற இன்ப மெல்லாம்

யாருக்கும் புரியாத விந்தை யன்றோ

 

ஆடையெலாம் அர்த்தத்தை இழந்து விட்ட

ஆனந்த நிலையினிலே ஆழ்ந்தி ருந்து

வாடையினால் வாட்டமுடி யாத வண்ணம்

வடவத்தீ போல்வெம்மை விளையச் செய்து

பூடகமாய் இருந்தசில புதிர்க ளெல்லாம்

புரிந்துவிட்ட நினைப்பினிலே புல்ல ரித்து

கூடலிலே தமிழ்தானா வளரும் இன்பம்

கூடத்தான் வளருமென்று கூறிக் கொண்டு

 

நாடகமாய் நாமிருந்த நிலைமை தன்னை

நள்ளிரவில் நினைத்தாயா நடுங்கி னாயா

சூடுவதற் கரியதொரு மலரே வெய்யில்

சுடுவதற்கும் அரிதான அல்லி நீதான்

பாடுவதற் கொருராகம் வேண்டும் இன்பம்

பரிமளிக்க நீயெனக்கு வேண்டும் பக்தர்

தேடுகின்ற தெய்வங்கள் நமக்கு வேண்டாம்

தெளிவான காதல்தான் நமது தெய்வம்

போட்டி, பலத்த போட்டி! ஆம், நான் விவேகானந்தா கல்லூரியில் தத்துவம் இளங்கலை மாணவனாக இருந்த போது நிறைய படித்தேன். ப்ளேடோ முதல் கார்ல் மார்க்ஸ் வரை, ப்ரும்ம சூத்திரங்கள் முதல் ராதாகிருஷ்ணன் வரை எல்லா அறிவு மூலங்களையும் படித்துப் பயில வேண்டுமென்ற தாகம் ஒரு புறம், காதல் வயப்பட்ட வாலிபத்தின் தாக்கம் ஒருபுறம், சமுதாயத்தைச் சீர்திருத்தி நல்லுலகம் காணத் துடித்த நோக்கம் ஒருபுறம், இப்படிப்பட்ட போட்டிகளுக்கு நடுவில் சிக்கிக் கொண்டேன். ஒரு கவிதையில் இந்தப் போட்டியை இப்படித்தான் குறிப்பிட்டிருந்தேன்.

கம்பன் வந்து கதவை இடிக்கிறான்

வாத்ஸ்யா யனனோ வம்புக் கிழுக்கிறான்

அசந்தர்ப்ப மாக அவசரப் பட்டு

வசந்தம் வந்தெனை வரவேற் கின்றது

மனத்தில் உண்மையான ஆனந்தம் குதூகலமாகப் பொங்கிப் பெருகும் தருணங்கள் எவர் வாழ்விலும் அடிக்கடி நிகழ்வதில்லை. எப்பொழுதேனும், சில கணங்களே அப்படி அமைகின்றன. அந்தக் கணங்களைச் சிதைக்கவோ, ஆனந்த அனுபவங்களைத் தடுக்கவோ வேறு யாருக்கும் உரிமை கிடையாது. காதற் கணங்கள் கடவுளின் பரிசுகள். நல்ல வேளை எங்கள் இருவர் வீட்டிலுமே எங்கள் காதலுக்குத் துளிக்கூட எதிர்ப்பு எழவில்லை. அது எங்கள் மேல் பெரியவர்கள் வைத்திருந்த நம்பிக்கையின் வெளிப்பாடு.

1973-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் நாள், எங்கள் பால்ய விவாகம், எனக்கு 20, அவளுக்கு 19, சென்னை, ஹேமமாலினி திருமண மண்டபத்தில், திருமதி எம்.எல்.வி. கச்சேரியுடன், அன்றைய தமிழ்நாடு ஆளுநர் உட்பட, அத்தனைப் பெரியவர்களும் வந்து வாழ்த்த, மிகச்சிறப்பாக நடந்தேறியது.

ravi

என் திருமண வரவேற்பில், என் அத்தனை நண்பர்களுக்கும் நடுவே சிவம் மட்டும் இல்லை. ஏன் என்று எனக்கும் புரியவில்லை. வரவேற்பு முடியும் தருணம், சிவம் வேகமாக மண்டபத்துக்குள் நுழைகிறான். அவன் கையில் ஒரு பெரிய கதவு, இல்லை, கதவு அளவில் கண்ணாடி பிரேம் போட்ட வாழ்த்து மடல். “இதுக்குத்தான் இவ்வளவு நாழியாகி விட்டது” என்கிறான். அதில் இருந்த ஒரு கவிதை, அவ்வளவு கூட்ட நெருக்கடியிலும், ஷோபனாவைப் போலவே என் நெஞ்சில் நுழைந்து நீங்கா இடம் பெற்று விட்டது:

ஒருநாள் கண்டாய் மறுநாள் நின்றாய்

உயிரே அவர்தான் என்கின்றாய் – அவர்

வருநாள் தானே திருநாள் என்று

மனமே எனையேன் தின்கின்றாய்

சிவத்தின் கவிதை ரசனையை மிகவும் ரசித்தேன். அந்தக் கவிதையை எழுதியவர், “இரவு பகல் மாலை எழுதுவதே வேலை” என்று கவிதையில் பிரகடனம் செய்த டாக்டர் மின்னூர் சீனிவாசன்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு, ஷோபனா எழுதிய கண்ணன் பாடல்கள், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், வாணி ஜெயராமும் பாட, ரெஹானின் பின்னணி இசையோடு பதிவாகி, “கிரிதாரி” என்ற இசைப்பேழையாகத் தயாரானது. அதை வாணி மஹாலில் வெளியிட்டுப் பேசும்போது, எங்கள் திருமண வைபவத்தை மறவாமல் நினைவு கூர்ந்து, அதில் நாங்களும், எங்கள் தோழர், தோழியர் கூட்டமுமாக எப்படி அது ஒரு கோலாகலமான இளமைத் திருவிழாவாக இருந்தது என்று குறிப்பிட்டு, அதைத் தாம் கண்டு களித்ததைப் பகிர்ந்து கொண்டார் கவியரசி செளந்தரா கைலாசம் அம்மையார்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “காற்று வாங்கப் போனேன் – பகுதி 18

  1. If the word IPPADIPPATTA is substituted with the word PAZAIYA, the sentence should be ok. Sorry for the error. K Ravi

  2. Dear Ravi
    No need to feel sorry..
    I was just commenting jovially..
    You know how I cherish these possessions as ” pokkishangkaL” – both physica & in my deep memory!

    Su.Ra

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *